Monday, July 7, 2014

சுந்தர ராமசாமிக்கு எழுதிய கடிதமும் அவர் எழுதிய பதில் கடிதமும்

                                                 
                                                               02.11.04
அன்புள்ள சுந்தர ராமசாமிக்கு
                      

                      வணக்கம்,உங்கள் 27.10.04 கடிதம் கிடைத்தது.சென்ற முறை போல உடல் அசெளகரியத்தோடு அல்லாமல்,இருவரும் நலத்துடன் திரும்பி வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
                    
                                         ”இதம் தந்த வரிகள்படித்தேன்.படைப்புக்கு முன்னும் பின்னும் இதற்கு வெளியிலும் ஒரு படைப்பாளி அடைகிற உந்துதல்களுக்கும்,அன்பு கலந்த நெகிழ்வுக்கும் ,படைப்பு சார்ந்த திட்டங்களுக்கு ஊக்கிகளாகவும் கடிதங்கள் இருந்திருக்கின்றன என்பதை அறிந்தேன்.கு.அழகிரிசாமியிடமிருந்து கம்பராமாயணத்தையும் உங்களிடமிருந்து அந்த எள்ளலையும் பிரித்து விட முடியும் என்று தோன்றவில்லை. முக்கியமாக “கடம்பொடு வாழ்வுஊர் பற்றிய எள்ளல் குறிப்புகள்.அந்த பெயரே வித்தியாசமாக இருந்தது. ‘முட்டைக்காரிஎழுதிய ஆண்டுக்குப் பிறகு உங்கள் மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள் கடிதங்களிலும் பிரதிபலிக்கிறது.ராஜமார்த்தாண்டனின் முன்னுரை நன்றாக இருந்தது. ‘புதுமைப் பித்தன் கதைகளுக்கு ரா.ஸ்ரீ.தேசிகனின் முன்னுரையும் ‘கிருஷ்ணன் நம்பி கதைகளுக்கு உங்களுடைய முன்னுரையும் படைப்பாளியின் குணங்களையும் படைப்பின் தன்மைகளையும் பற்றி பேசுபவை.அப்படிப்பட்ட முன்னுரைகளை காண்பதே அபூர்வமாக இருக்கிறது.
               
                       சி.சு.செல்லப்பாவுடனான நட்பில் விழுந்த இடைவெளி அவரது செயல்பாடு சார்ந்து எழுந்த விமர்சனத்தினால் தான் என்றாலும் அவரை விட்டுக் கொடுக்காமல் பேசியிருப்பதும் முக்கியமாக படுகிறது.பல இடங்களில் சி.சு.செல்லாப்பாவை க.நா.சு வோடு ஒப்பிட்டு இருவரின் நிறைகுறைகளைப் பற்றி பேசியிருப்பினும் இன்றும் உங்கள் மனம் க.நா.சு பக்கமே சாய்ந்திருக்கிறது.சி.சு.செல்லப்பாவுடனான நட்பை முறித்துக் கொள்ளக் கூடாது என்று நீங்கள் எடுத்த முடிவு சரியானதே.க.நா.சு பதிவில் உருவான க.நா.சு பற்றிய சித்திரத்தின் தொடர்ச்சி இப்பதிவிலும் தொடந்திருக்கிறது.பின்பாதியில்  சி.சு.செ-யின் முக்கியப் பங்களிப்புகளை எந்த மிகையுமில்லாமல் பதிவு செய்திருப்பது சிறப்பான விஷயம்.இப்போது,உழைப்பிற்கான உத்வேகத்தை இவரிடமிருந்து பெற்றுக் கொண்டது குறித்து பேசியிருப்பது அவருக்கு உங்கள் மனதில் இருக்கும் மதிப்பையே காட்டுகிறது.நான்கு பதிவிலும் எனக்கு மிகப் பிடித்தது நம்பி பற்றிய பதிவு தான்.
                

                   சமீபத்திய மூன்று சிறுகதைகளில் (காலம் இதழில் வெளிவந்ததையும் சேர்த்து) இரண்டு கதைகள் யதார்த்தவாதத்தையும் ஒன்று நவீனத்தன்மையும் பெற்றிருப்பவை.சுய அனுபவங்களிலிருந்து துலங்கி வருவது தான் யதார்த்த கதைகள் என்றாலும் இந்த இரண்டிலும் பெயர்கள்,சம்பவங்கள்,இடங்கள்  பற்றி அவ்வளவு வெளிப்படையாக எழுதியதற்கு ஏதேனும் காரணம் உண்டா?மூன்று கதைகளிலும் மிகச் சிறப்பானதாக உணர்ந்தது ‘ஒரு ஸ்டோரியின் கதை’.
                 
                   காஃகாவின் ‘விசாரணைமொழி சார்ந்து பெற்றிருக்கும் நுட்பத்திலும் மனிதர்களை , இடங்களை குறிப்பிடுவது பற்றிய கூர்மையிலும் மொழியினூடாக மனதையும் விகாசப்படுத்திற்று.ஒரு அறை மாறி மாறி ஒருவனுக்கு எவ்வளவு நெருக்கடியை உருவாக்குகிறது!இதோடு ‘உருமாற்றத்தையும் இணைத்துப் பார்த்தால் காஃகாவின் சிக்கலே இந்த சுவர்களும் இந்த அறைகளும் தான் என்று தோன்றுகிறது.உருமாற்றத்தைவிட சிறப்பான நாவல்.இரண்டுமே மேலான மொழிபெயர்ப்பு.
             
                        ஊர் நூலகத்தை திருப்பிப் போட்டு  உலுக்கியதில் ‘மெளனி கதைகள் கிடைத்தது.மறுவாசிப்பில் அவரது கதைகள் ,முழு அர்த்தத்துடன் முழுமைபெறா வாக்கியங்களாகவும் அவர் மனதில் நினைத்தற்கும் வந்துவிட்ட மொழிக்குமான சிறு இடைவெளியையும் கொண்டிருப்பதாகத் தோன்றியது.அதனை இப்போதைய வாசிப்பில் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்றாலும் தமிழின் மொழி பற்றிய சோதனைகள் அவரிடமிருந்து தான் தொடங்குகின்றன என்பதால் அவரது கதைகளுக்கும் அவருக்குமான இடம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.இக்கதைகளின் சமீப பதிப்பு பெரிய எழுத்துருவில் மோசமாக இருந்தது.
           
                    வேலையிலும் நேரநெருக்கடிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன்.ஒன்றை இந்த நாளுக்குள் வாசித்து விடமுடியும் என்ற கணக்கையும் தாண்டி இரண்டு மூன்று நாட்கள் கூடுதலாகவே ஓடிவிடுகின்றன.
              
                முன்பு போல இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஆர்வம் குறைந்து விட்டது.நான்கு  கூட்டங்களுக்கு அழைப்பு வந்தால் ஏதேனும் ஒரு வாரத்தின் கூட்டத்திற்கு மட்டுமே போய்க்கொண்டிருக்கிறேன்.
            
                     சத்தியமங்கலத்தில் நடந்த ‘காலச்சுவடுகூட்டத்தில் கலந்து கொண்டு கட்டுரை படித்தேன்.கண்ணனும் நாஞ்சில் நாடனும் கலந்து கொண்டவர்களும் ஒரு விஷயத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது வழக்கமான மார்க்சியர்களின் வறட்டுக் கேள்விகள் நேரத்தில் பாதியை விழுங்கி விட்டன.அவர்களது இடையூறுகள் மோசமான கட்டத்தை அடைந்த போது வெளியில் போய்விட்டேன்.
             
           ‘காலச்சுவடுக்கு ஒரு கதை எழுதி அனுப்பி இருக்கிறேன்.உங்களுக்கனுப்பி பரிசோதித்த பின் அனுப்பலாம் என்றிருந்தேன்.நீங்கள் ஊரில் இல்லாததால் நேரடியாக அனுப்பி விட்டேன்.
               
             தினமும் வீட்டிற்கு காலில் சேறோடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்.அந்தளவிற்கு நாள் தவறாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.
           
             குடும்பத்திலுள்ள அனைவருக்கும் என் அன்பைத் தெரிவியுங்கள்.

அன்புடன்
செந்தில்

(இக்கடிதத்தில் என் சொந்த வாழ்க்கை குறித்த பகிர்தல்களாக இடம் பெற்றிருந்த சில வரிகளை நீக்கி இருக்கிறேன்.பொதுவானவர்கள் அது பற்றி அறிய வேண்டியதில்லை என்பதே காரணம்.ஆனால் சு.ரா எனக்கு எழுதிய பதில் கடிதத்தை கீழே அப்படியே தந்திருக்கிறேன்)

11.11.04

அன்புள்ள செந்தில்,

உங்கள் கடிதம் கிடைத்து நாளாகிவிட்டது. நவம்பர் மாதத்திற்குள் நான் ஐந்து புத்தகங்களை அச்சுக்கு அனுப்பும்படி இறுதிப் பார்வை செய்ய வேண்டியிருக்கிறது. கடினமான வேலை தான். அதிக நேரம் அதையே செய்கிறேன்.

என் எழுத்துப் பற்றி உங்கள் அபிப்பிராயங்களையெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறீர்கள். படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. என் எழுத்துக்கள் சார்ந்த முரண்பாடுகள், ஏமாற்றங்கள், கருத்து வேற்றுமைகள் பற்றியும் வெளிப்படையாக நீங்கள் என்னுடன் பகிர்ந்துகொள்ளலாம். என் வளர்ச்சிக்கு அவை பயன்படும். தவறாக எண்ணிக்கொள்ள மாட்டேன். ஒருவர் மாறுபட்ட கருத்தைச் சொல்கிறபோது அவருடைய நோக்கம் எனக்கு முக்கியமானது. அவருடைய நோக்கத்தில் நான் நம்பிக்கை கொள்ளவில்லையென்றால் அவரை எதிர்கொள்ளும் முறை முற்றிலும் வேறு விதமாக இருக்கும்.

சாகித்திய அகாதெமிக்காக கிருஷ்ணன் நம்பி பற்றி ஒரு சிறு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதை ஒரு அறிமுகம் என்று சொல்ல வேண்டும். நவம்பர் மாதத்தில் அதை முடித்துத் தரவேண்டும்.

காலம்இதழில் நீங்கள் படித்த என் கதையை மறந்துவிடுங்கள். அது தப்பும் தவறுமாக அச்சேறிவிட்டது. இப்போது நான் எழுதியுள்ள பதின்மூன்று கதைகளைத் தொகுத்துக்கொண்டிருக்கிறேன். அந்தத் தொகுப்பு வெளிவந்ததும் மீண்டும் அந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்.

சில கதைகளை பெயர்கள், இடம் ஆகியவற்றை மாற்றாமல் ஏன் அப்படியே சொல்லிவிடுகிறேன் என்பதற்குக் காரணம் தெரியவில்லை. முன்னால் அப்படிச் செய்தது நினைவில்லை. அனுபவ உலகத்திலிருந்து கதை உலகத்திற்கு மாறும்போது ஒருவரின் பெயரை மாற்றக்கூட (முக்கியமாகப் பெண்களின் பெயரை) ஏதோ ஒரு மனத்தடை வந்துவிடுகிறது.


என் சிறுகதை எழுத்தில் நான் அடுத்த இடத்திற்குப் போகவேண்டும் என்ற துடிப்பு என் மனதிற்குள் வெகுவாக இருக்கிறது. அந்த இடத்திற்குப் போவதற்கான முயற்சியிலேயே பழைய பார்வை சார்ந்த சில கதைகள் எழுதத் தேவைப்பட்டுவிட்டது. இந்த வருடம் நான் எழுதியிருக்கும் கூடி வந்த கணங்கள்’, ‘மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’, ‘களிப்பு’, ‘பிள்ளை கெடுத்தாள் விளை’, ‘ஈசல்கள்’, ‘கிட்னி’ (எல்லாம் அச்சேற்றம் பெறாதவை) ஆகிய கதைகள் வித்தியாசமானவை என்று நினைக்கிறேன். இவற்றிலும் ஈசல்கள்’, ‘கிட்னி’, ‘மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’, ‘கூடி வந்த கணங்கள்ஆகிய கதைகள் புதிய தளத்திற்கு வந்திருக்கின்றன என்று ஒரு எண்ணம். நீங்கள் பின்னால் படித்துப் பார்த்து எனக்கு எழுதுங்கள்.

நீங்கள் காஃப்கா, மௌனி என்று கனமான ஆசிரியர்களைத் தேடிப் படிப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. எழுதும் காரியத்தையும் நீங்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மிகச் சிறப்பாக உங்களால் எழுத முடியும். மற்றொன்று ஆங்கில வாசிப்பில் தேர்ச்சி பெறுவது. பெரிய வித்தையில்லை. தினமும் அரைமணிநேரம் செலவழித்தால் போதுமானது.

நம் கல்வி மிகவும் சீர்கெட்டது. ஆனால் வேலைக்குப் போவதற்கு இந்தச் சுவரில்தான் முட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் அதில் தீவிர கவனம்கொள்ள வேண்டும். தமிழ்ச் சூழலில் உங்கள் எதிர்காலம் உறுதியாக இருந்தால்தான் நீங்கள் உருப்படியான காரியத்தைச் செய்வதற்கான ஆசுவாசத்தையும் மனநிம்மதியையும் பெறுவீர்கள்.

இலக்கியக் கூட்டங்களையெல்லாம் நீங்கள் தேர்வுசெய்துதான் போக வேண்டும். புத்தகங்களைத் தேர்வு செய்வது போலவே. இல்லையென்றால் நேரம் வீணாகிவிடும். அவசியமானவர்களைச் சந்திப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவசியமற்றவர்களைச் சந்திக்காமலிருப்பதும். நேரத்தைச் சேமிப்பதில் கண்ணும் கருத்துமாக இருங்கள்.

சத்தியமங்கலத்தில் நடந்த காலச்சுவடு கூட்டத்தில் நீங்கள் கலந்துகொண்டது நிறைவு தந்த விஷயம். கண்ணனிடமிருந்து அந்தக் கட்டுரையை வாங்கிப் படித்துப் பார்க்கிறேன். அதுபற்றி உங்களுக்கும் எழுதுவேன்.

காலச்சுவடுக்கு பிரசுரம் செய்வதற்கு வரும் விஷயங்களை நான் பொதுவாகப் படிப்பதில்லை. அவர்கள் சுதந்திரமாக இயங்க என்னால் முடிந்தளவுக்கு ஒதுங்கி இருக்கிறேன். முடிந்தளவுக்குத்தான்.

உங்கள் அம்மாவுக்கும் உங்களுக்கும் நன்றாக ஒத்துப்போகும் என்றால் அவர்களுடன் நீங்கள் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொள்ளலாம். பல விஷயங்களை வெளிப்படையாகவே பகிர்ந்துகொள்ள வேண்டும். இல்லாத வரையிலும் நட்பு நெருங்காது.

இப்போது நான் முடிக்க முனைந்துகொண்டிருக்கும் புத்தகங்கள் 1. மொழி பெயர்ப்புக் கவிதைகள் (99 கவிதைகள்) 2. என் சிறுகதைத் தொகுப்பு (தலைப்பு இன்னும் சூட்டவில்லை) 3. என் கட்டுரைத் தொகுப்பு (தலைப்பு: ஆளுமைகள் மதிப்பீடுகள்) 4. கேள்வி பதில்கள் (தலைப்பு வைக்கவில்லை. தீராநதியில் வெளிவந்தவை) 5. சாகித்திய அகாதெமிக்காக கிருஷ்ணன் நம்பியைப் பற்றி ஒரு அறிமுக நூல். இந்த வேலைகள்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன். இவற்றை முடித்துவிட்டு செய்ய மனதில் பல வேலைகள் இருக்கின்றன. அவற்றை முடிக்க ஆயுளில் செஞ்சுரி அடிக்க வேண்டும். எல்லாம் முடிந்த வரையிலும்தான்.

மிக்க அன்புடன்,
சு.ரா.

(சு.ரா வின் இக்கடிதம் காலச்சுவடு ஆகஸ்ட் 2011 இதழில் சு.ரா பக்கங்கள் பகுதியில் பிரசுரமாகியிருக்கிறது)


No comments:

Post a Comment