சிறுகதை
வாக்குமூலம்
நிழலுருவங்களின்மீது வெளிச்சம் படர்ந்து அதனதன்
தோற்றங்கள் துலங்கியபடியே வந்த புலர்காலையில், வாரச் சந்தைக்குக் கொண்டு வந்த தேங்காய் மூட்டைகளை
இறக்க பழனிச்சாமி அவனைத் தேடினார். குறும்புத்தனமான அடையாளமொன்றைக்
கூறிக்கத்தியும் பதிலில்லாததால் அவரே வண்டியிலிருந்து சிரமப் பட்டு கீழே
தள்ளிவிட்டபின், ஒன்றுக்கிருக்க
மாட்டிறைச்சி வெட்டும் பாலன்
கடைக்கு அருகிலிருந்த புளியமரத்தின் பின்புறம் சென்றார். நாக்கு உள்நோக்கித்
திரும்பிக் குழறிப் பேச மறந்து சந்தைப் பேட்டையை விட்டு வெளியே ஓடி, பிடரியைத் தொட நெருங்கிவரும் அபாயத்தின்
சங்கொலி போன்ற காற்றின் ஒலியைக் கேட்டு நடுங்கியவாறே டீக்கடையின் முன் வந்து
மயங்கிவிழுந்தார்.
இருட்டுக்குள் அவன் மனதில் கூர் தீட்டி
வைத்திருந்த திட்டங்களுடன் நடக்க ஆரம்பித்தான். செடிகளுக் கிடையில் கிடக்கும்
காய்ந்த முட்கள் செருப்பில்லாத அவனது கால்களால் சுள்ளிபோல ஒடியும் சத்தம் அவனை
நிம்மதி கொள்ளச் செய்தது. அந்தச் சுற்றுவட்டத்தின் வழிகள், ரேகைகள் போல அவனது உள்ளங்கைக்குள் இருந்தன.
பாதையோரங்களிலிருந்து வரும் சில்வண்டின் ஒலியை அவை நின்று பின் மீண்டும் ஒலிக்கத்
தொடங்கும் நிமிடத்தை அளந்தபடியே சென்றான். அங்கு அமர்ந்து ஓயாமல் கத்திக்
கொண்டிருக்கும் தவளைகள் அவனது வேகத்தில் நசுங்கிக் கூழாயின. முடிவின்றி
நீண்டுசெல்லும் அவனது ஏக்கத்தின் சுனையில் இன்று அவன் நீர் அருந்துவான். அது
கைகூடாமல் ஏமாற்றமே மிஞ்சுமெனில், அந்தக்
கொதிப்பு உயர்ந்து ஆவேசமாக வெடிக்கும். நாயின் குரைப்பொலி ஊளையாக நீண்டு சென்றது.
சிறுவயதில் நாய்களின் கோரப்பற்களும் அவற்றிடையில் தொங்கும் நாக்கையும்
பிஸ்கட்டுகளைக் கண்டால் வெறித்தனமான அவற்றின் பாய்ச்சலையும் கண்டு ஒடுங்கிக் கொள்வான். இங்கு வந்த புதிதில் அவனைச்
சுற்றிலும் நாய்கள் வட்டமிட்டுநின்று இடைவிடாது குரைத்தன. செய்வதறியாது, முன்னோக்கி வந்து கொண்டிருந்த நாயின்மேல்
தட்டையான கனத்த கல்லை விட்டெறிந்தான். உடைந்த தேங்காய்ச் சில்லுகள் போல அவை சிதறி
ஓடின. வெகுநேரம் ஒன்றையொன்று மாறிமாறி குரைத்தபடி யேயிருக்கும் சத்தம் மட்டும் கேட்டது. மறுநாள் முன்னங்கால்
ஒன்றைத் தூக்கியபடி கசாப்புக் கடையின் முன் அந்த நாய்களில் ஒன்றைப் பார்த்தான்.
அவை அவனைக் கண்டால் விலகி ஓடின. நிற்பவை அவனிடம் சினேகம் பாராட்டத் தொடங்கின.
டார்ச் விளக்கின் ஒளிச் சிதறல் பாதையை மெதுவாக மேய்ந்தபடி வருவதைக் கண்டதும் கத்தியை
இடுப்பில் சொருகிக் கொண்டான். அங்கு சொற்பமாக இருக்கும் வீடொன்றிலிருந்த கிழம்
மலம் கழிக்கப் போய்க் கொண்டிருந்தது. அடிவயிற்றிலிருந்து எக்கிக்கத்தினால்கூடக்
கேட்க முடியாத தூரத்தில் வீடுகள் சிதறிக் கிடந்தன. அதன் நிசப்தம் துள்ளலையும் பீதியையும் ஒரே சமயத்தில் தந்தது. அவனது அடுத்த
குறிக்கு இலக்காகியிருக்கும் சூப்பர் வைசர் மொபட்டைக் கிளப்பிச் சென்றதும்
அவன்வீட்டின் முன் நின்று கொந்தளிப்பு அடங்கியபின் மெதுவாகக் கதவைத் தட்டினான்.
ஆரோக்கியமற்ற பரதேசி போலவும் சற்று கர்வம்
கொண்ட பிச்சைக்காரனைப் போலவும் அவன் இந்த சந்தைப் பேட்டைக்கு, ஒரு சந்தைத் தினத்தின் அதிகாலைக்
கருக்கிருட்டில் லாரியில் முட்டைக்கோஸ்
மூட்டைகளோடு ஒன்றாகக் குலுங்கி நசுங்கி ஆடியபடியே வந்து சேர்ந்தான். அதற்கு
முன் போக்கிடமின்றி பசியும் அழுக்குமாக அவனது அலைச்சல் தெரு நாயைக் காட்டிலும்
கேவலமும் அரு வருப்பும் கொண்டது. மனப்பிறழ்வு கொண்டவனைப்போல தீர்க்கமான
கண்களுடனும் சோர்வுற்ற உடலுடனும் அவன் அப்போது இருந்தான். முன்பு அழகனாக
இருந்ததற்கான தடயங்களைக் காலம் அழித்து வற்றிப் போனவனாக்கியிருந்தது. அங்கு
படுதாவைக் கட்டிக் கொண்டிருந்த
தேவியக்கா மிச்சம் வைத்த டீயை அவள் திரும்புவதற்குள் தீர்த்தான்.
அவனைக் கூர்மையாகப் பார்த்தபின், டம்ளரை
எடுக்கவந்த ஓட்டை விழுந்த பனியனும் அழுகேறிய கைலியுடனுமிருந்த கிழவனிடம்,
"உன்னோரு டீ கொண்டா" என்றாள். அதையும் காலி
செய்தான்.
அன்று அவளுக்கு வந்த வாழைத்தார் லோடு
முழுக்கவும் அவனே சுமந்து இறக்கினான். மதியம் சோறு கிடைத்தது. அவன் நகராமல்
அமர்ந்திருந்தான். அவளுக்கு எரிச்சலும் கோபமுமாக இருந்தது.
"எந்த ஊரப்பா நீயி?"
பதிலில்லை.
அன்று கிளம்புகையில் கூடவே நிழல்போல வந்தான்.
சிறிது யோசித்த பின் "சொல்றத கேட்டுக்கிட்டு ஒழுங்கா இருப்பியா?"
அவளுக்கும் ஒரு கை தேவைப்பட்டது.
"இருப்பங்க" என்றான்.
"நாங்கூட ஊமையோன்னு நினைச்சிட்டேன். சரி
வா" என அழைத்துச் சென்றாள்.
அவனுடைய அம்மாவுக்கு சினிமாவின்மேல் அடங்காத
மோகம் இருந்தது. பால்யத்தின் பெரும்பாலான நாட்களில் பக்கத்து வீட்டு அக்காள்களின்
மடியில் இருந்து வளர்ந்தான். ஊரில் கூரைவேயப்பட்ட மூன்று கொட்டகைகள் இருந்தன.
சுவரொட்டியில் பெயர் மாற்றியது கண்ணில் பட்டதும் அவள் தனக்குள்ளாகச் சிரித்து
அப்படத்தின் பாடலை மெல்ல முணுமுணுப்பாள். டீக்கடைக்காரன் ரேடியோவில் அலைவரிசை
மாற்றி, பாட்டு ஒலிக்க விடும்போது
அவள் காலிக்குடங்களைத் தூக்கிக் கொண்டு குழாயடிக்குச் செல்வாள். ஒளியும் ஒலியும்
பார்க்க ஒண்டியாக மகாதேவன் சார் வீடு வரைக்கும் போய் வாசலோரம் பையன்களுக்கு நடுவே
அமர்ந்து எட்டிப்பார்த்து களித்து விட்டு வருவாள். வாரத்திற்கொரு முறையோ இருமுறையோ
அப்பா வந்து உறங்கிச் செல்வார். அவர்
மாநிலங்களைச் சுற்றும் லாரி ஓட்டுனராக இருந்ததால் எப்போதும் கண்கள் வீங்கி
முகம் உப்பிப்போயிருக்கும். அவர் வரும் கிழமைகளில் அவரை விட்டு அம்மா நகரமாட்டாள்.
கோழிக் குழம்பின் வாசமும் மல்லிகைப் பூவின் மணமும் வீடெங்கும் அலையும். அன்றிரவு
மரகதக்காவின் அருகில் அப்பா வாங்கி வந்திருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளைக்
கட்டிப்பிடித்தபடியே படுத்துறங்குவான். கொஞ்சிக்குழாவி அழுது கரைந்து
அப்பாவிடமிருந்து பாதிப்பணத்தைப் பிடுங்கித் தலையணைக்கடியில் வைத்திருந்து
காலையில் எழுந்ததும் ரவிக்கைக்குள் திணித்துக் கொள்வாள்.
விடிகாலையில் பெருஞ்சிரிப்போடு
அவ்வீட்டிலிருந்து அவனை அள்ளித் தூக்கியபடியே நுழைந்து அவனுக்கு முத்தியவாறே
"சாமி. . .டேய் எங்கண்ணு" என எச்சில் தெறித்த வாயுடன் மேலும் முத்தி
"எம் பையன ராஜாவாட்டம் வளத்தோணும்டீ" என்பார்.
அவள் முகம் சற்றே சுருங்கி பின்
இயல்பாகிவிடும்.
அவளை அவர் அறிந்திருந்ததால், "நீ மட்டுமென்ன, மகாராணிதாண்டீ" என்று கன்னத்தைக் கிள்ளுவார்.
உள்ளுக்குள் மலர்ந்து அதை முகத்தில் காட்டாமல்
"கழுத்துல ஒரு பொட்டுத் தங்கம் இல்ல. . .
மகாராணீன்னு வெளில சொல்லீராத. . . வெட்கக்கேடு" என்றாள்.
ஆத்திரத்தை அடக்காமலேயே, "நாஞ் சம்பாதிக்கறதெல்லாம் உங்க ரெண்டு
பேருக்குத் தாண்டீ" என்றார்.
"சம்பாரிச்சு கிழிச்ச" என்று கையில்
வைத்திருந்த பாத்திரத்தை நிலம் அதிர வைத்தாள்.
வாய்ச்சண்டையில் அழுகிய
புழுப்போல வார்த்தைகள் வந்து வெளியே விழுந்தன. அம்மா கதவைச் சாத்திக்
கொண்டு கத்தினாள். "இந்த தொண்டு முண்டைக்கு எத்தனய கொட்டுனாலும் பத்தாது"
என வேடிக்கை பார்க்க நின்றவர்களிடம் கூறியபடியே கிளம்பிச் சென்றார். அவர்
சென்றதும் அவனது பழைய குறும்புகளை மீண்டும் கூறி ஈர்க்குச்சியை உருவி கை கால்கள்
தடித்துச் சிவக்கும் வரைக்கும் அடிப்பாள். ஒவ்வொரு சுவர் மூலைக்கும் மாறிமாறி
ஓடிச்சென்று தாழிடப்பட்ட வீட்டினுள் கதறி அழுது அப்படியே உறங்கிப்போவான்.
சந்தனப் பவுடரின் வாசனையும் நாளுக்கொருவிதமாக
மின்னும் ஸ்டிக்கர் பொட்டுகளுடனும் அவளது நளினம் பிறரை பொறாமை கொள்ளச் செய்யும்.
அவள் எடுக்க மறந்துபோன ஒட்டுப்பொட்டுகள் குளியலறையில், கண்ணாடியில், படுக்கை விரிப்புகளில் அப்படியே இருக்கும்.
"ஏஞ் சாவித்திரி, கை ரெண்டும் மூளியா கிடக்குதே. . ரெண்டு வளையலத்தான்
வாங்கிப்போடறது" என்றாள் மரகதக்கா.
"இவங்கப்பன் தங்கத்துல போடறேன்னு
சொல்லீருக்குதுக்கா" என்றபடி அம்மன் கோவிலில் தந்த சிவப்புக் கயிறு
கட்டப்பட்டிருந்த மணிக்கட்டை ஆர்வமாகத் தூக்கிப் பார்த்து சோர்வு கொண்ட மூச்சுடன்
தொங்க விட்டாள்.
கட்டின்றித் திரிந்து கொண்டிருந்த அப்பாவை
சுற்றியிருந்தவர்களின் கவனவட்டத்துக்குள் நிறுத்தியதில் அம்மாவின் பங்கு
அசாதாரணமானது. வயிற்றிலிருந்த குழந்தையோடு மண்ணெண்ணெய்யூற்றிப் பற்ற முயன்ற
இரவிலிருந்து அவர் தன்னுள் மூழ்கியவராக அலைந்தார். நிலையின்றிக் குழம்பிக் கிடந்த
அவரது ஸ்திதியில் அன்று உருவாகிய பேரச்சம், அவரை எளிய குடும்ப மனிதனாக ஆக்கிற்று.
அப்போது அவர் மேல் இரண்டு வழக்குகள் நிலுவையில் இருந்தன. அடிதடிக்குப் பேர்
போன ஆள். கட்சிப் பிரமுகர்கள் பலருக்கும் அவர் இடக்கையாக இருந்தார். கட்சியில் அவர் பேதம் பார்ப்பதில்லை. சகல
கட்சிகளின் ரவுடிக்கும் பலுடன் அவருக்குத் தொடர்பிருந்தது. தலைவரின்
வருகையையொட்டி தட்டிகளும் சுவரொட்டிகளும்
பேனர்களும் ஊரையே நிறைத்திருந்தது. இரண்டு நாட்களுக்குமுன் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டும் அதிலிருந்த
தலைவரின் முகத்தில் சாணியடிக்கப்பட்டும்
இருந்தது கண்டு கைகலப்பு உருவாகி அடங்கிவிட்டிருந்தது. நகரத் துணைச் செயலாளர்,
தலைவர் வந்து செல்லும்வரை இரவு
ரோந்துக்கு இவரைப் பணித்து சைக்கிளையும் தற்காலிகமாகத் தந்திருந்தார். ரூபாய்கள்
விளையாடியது. இளம்போதையில் மிதித்தபடியே போனபோது பேனருக்கருகில் உருவம்
நிற்பது தெரிந்தது. இறங்கி
பீடிபற்றவைத்து ஒன்றுக்கு
ஒதுங்கும்போதும் அதனிடம் அசைவில்லை. மணியடித்துப் பார்த்தார். அதட்டிக் கொண்டே
அருகில் சென்றபோது அது பெண் என அறிந்தார்.
அழுது கொண்டிருந்தது. காரணத்தைத் தேம்பியபடியே குழந்தை போல அவள் சொன்னாள்.
"ஏறி உட்காரு"
அவரது அம்மா இறந்தபின் பூட்டிக்கிடந்த வீட்டை
உடைத்து அவர்கள் இருவரும் குடிபுகுந்தனர்.
கதவு திறக்கப்பட்டதும் குண்டு பல்பின் மங்கிய
மஞ்சள் ஒளியில் அவிழ்ந்த கூந்தலோடு வந்து பாப்பா நின்றாள். "பசிக்குது"
என்றான். சிறிது நேரம் நின்று நினைவில்மூழ்கி, கதவை அடைத்தாள். அடுத்த வினாடியே கதவைத்திறந்து
"உள்ள வா" என்று சோர்வாக நடந்து எச்சில் கையால் புரோட்டாக்களைப்
பிய்த்துப் போட்டு, குழம்பை மேலே
ஊற்றி, முழுக்க ஊறிய துண்டொன்றை
எடுத்து மென்றாள்.
"சட்டீல சோறு கிடக்கு. வடிச்சுதின்னுட்டு
வெளியில கெடந்து உறங்கு" என்றாள்.
அவன் குத்தவைத்து அமர்ந்து அவளையே
பார்த்தபடியிருந்தான். அவளது ஜாக்கெட்டின் கடைசிப் பொத்தான் போடாமலேயே கிடந்தது.
மற்றொரு துண்டை எடுக்கையில் அது அசைந்து
நெகிழ்வதைப் பார்த்தான். ஒரேயொருமுறைதான்
அவளைத் தொட அனுமதித்திருக்கிறாள். "என்னா?" என்றாள்.
அவளைப் பார்த்தபடியே நகர்ந்து சோற்றுநீரை
வடித்துக் குடித்த பின் மஞ்சள் பூசியிருக்கும் சோற்றில், எறும்புகள் மிதக்கும் கடும் புளிப்புக் கொண்ட மோரை
ஊற்றித்தின்றான். அவள் எச்சில்
பொட்டலத்தை அமர்ந்தபடியே ஜன்னலில் விசிறியபோது அதிலிருந்த
எச்சங்கள் அவன் மேல் விழுந்தன. அவன் அடுத்த கவளத்தை உள்ளே தள்ளினான்.
தேவியக்காவின் மணம் முடிந்த சிலமாதங்களில்
அவளைத் தனியாக விட்டு வீட்டை விட்டு ஓடிப்போன அவள் கணவன் அவளை நிரந்தர சுமங்கலி
ஆக்கியிருந்தான். குங்குமமும் வெற்றிலைச்சாறும் சாந்தமான பேச்சும் அவளது
அடையாளங்கள். அவளது சொல்லுக்கு அவனது
செயல்கள்தான் பதில்களாக இருந்தன. அவளது வீட்டின் இரண்டாவது நாயாக இருந்து
சிறுகச் சிறுக உள்ளே நுழைந்து அவளது செல்லப் பூனையாக மாறினான். ஒருமுறை முரண்டு
பிடித்த வியாபாரியை அவள் வெகுண்டு சீறி சரமாரியாக வசவுகளைப் பொழிந்தாள். அதன்பின் அவன் மிகுந்த கவனத்துடனும்
பணிவுடனும் நடந்து கொண்டான். சந்தை
முடிந்த இரவுகளில் அவள்
குளிக்கும்போது அவன் படலைச்
சாத்திவிட்டுவந்து பாப்பாவை எண்ணியபடியே சுயமைதுனம் செய்து அப்படியே உறங்கிப்
போவான்.
சாயம்போன குடைகளை விரித்து அதனடியில்
அமர்ந்திருக்கும் பூட்டு வியாபாரிகளையும் கொத்துகளிலிருந்து மாற்றுச் சாவியை
ராவிக் கொண்டிருக்கும்
ரிப்பேர்காரர்களையும் கடந்து, பழுதடைந்து
துருப்பிடித்த அலங்கார வளைவில் நுழைந்ததும் காலியான இடத்தைத் தாண்டி
பாய்வியாபாரிகளும் ஜவுளிக்காரர்களும் அமர்ந்திருப்பார்கள். அந்தக் காலியிடம் நேரம்
செல்ல செல்ல கூவிவிற்கும் ஜட்டி பனியன்காரர்கள் வந்ததும் நிரம்பிவிடும். பின்னர்
பலதரப்பட்ட குரல்கள் கலந்து பேரிரைச்சல் கொண்ட, நான்கு பக்கமும் மூங்கில் கழி நட்டி கருங்கல்லில்
செஞ்சாந்து பூசி மேடாக்கியிருக்கும், வழியெங்கும் தக்காளிகளும் வெங்காயச் சருகுகளும் அழுகிய
முட்டை கோசுகளும் பழத்தொலிகளும் கலந்து கிடக்கும் சந்தையின் கதம்ப முகம்
நெருங்கிவரும். காலையில் மொத்த வியாபாரிகள் வாங்கிச்சென்றபின் மதியம் ஈயாடி சொற்பமான
தலைகளே தென்படும். அப்போது அவனை அமர வைத்துவிட்டு காலையில் படித்த பேப்பரை
விரித்து அதன்மேலேயே படுத்து வியாபாரிகள் குட்டித் தூக்கம் போடுவார்கள்.
எழுந்ததும் டீ வாங்கித் தந்துவிட்டு மீதியை எண்ணிப் போட்டுக் கொள்வான். அவனை
அதட்டலாம். ஆனால் வசவு வைத்தால் உள்ளே கொதிக்கும் நெருப்பை சிரிப்பில் அணைத்து
மீண்டும் அவர்களிடம் வரவேமாட்டான்.
ஒருமுறை கசந்து குமட்டிய டீயை பாதி
உறிஞ்சிவிட்டு அந்த எச்சிலைத் தந்து
அவனிடம் "டேய் இதைய வாயில ஊத்தீட்டு கழுவி வச்சிரு" என்றார் வெங்காய
வியாபாரி.
அவன் கீழே ஊத்திவிட்டு கழுவி வைத்தான்.
"ஏன் அவளோட மூத்திரத்தத் தான் குடிப்பியா?"
நின்றவர்கள் பற்கள் வெளியே தெரிந்தன.
அன்று மாலை அவருக்கு லோடு வந்தபோது அவனுக்குச் சொல்லியனுப்பியும் அவன்
போகவேயில்லை.
சூரியன் மேற்காக இறங்கிச் செல்லச் செல்ல
கூட்டம் நெரிபட்டுப் பரபரப்படைந்துவிடும். அது ஒரு கணக்கு. இருள் கவியத்
தொடங்கும்போது விலைசரிந்து கேட்டவிலைக்கு சாமான்கள் மடியில் வந்து விழும். பேரம்
படியாமல் வெற்றுக் கூடைகளோடு பெண்கள் அடுத்தடுத்த
கடைகளுக்கு நகர்வார்கள். அக்காவின் முதுகுக்குப்பின் கத்தியோடு நிற் பான்.
மடிக்கப்பட்ட கோணிப்பைக்குள் ரூபாய்களை எறிந்ததும் தொங்கும் வாழைத்தாரிலிருந்து,
சதையைப் பிடித்தபடியே மற்றொரு சதையை
அறுக்கும் ஆட்டிறைச்சிக் கடை வெங்கடாசலம்
போல, ஒரு சீப்பை மட்டும் எதுவும்
உதிராமல் தனியாக அறுத்தெடுப்பான். கறிக்கடைக்காரர்களிடமும் குதிரைவண்டிக்காரர்களிடமும் மட்டும்தான் அவன்
பீடி வாங்கிப் புகைப்பது. தார்லோடு இறக்கும் போது அவன் விலா எலும்புகள்
இடுப்பெலும்போடு ஒட்டிக் கொண்டதுபோல வயிறு உள்நோக்கி மடங்கி விடும். புஷ்டியாக
வளர்ந்த ஆளைத் தூக்கித் தோளில் வைப்பது போன்ற பருமன் அதற்குண்டு. அவன் உடைகள்
முழுக்கவும் வாழைக்கறை படிந்து பரவியிருக்கும். அங்கு அமர்ந்து குனியும் பெண்களின்
முலைகளைக் கண்டு அவற்றை கனவுகளில் கவ்வுவதும் வருடுவதும் கசக்குவதுமாக உள்ளாடையை
நனைப்பான். பழங்களைத் தொட்டுப் பார்க்கும் மஞ்சள் பூசிய தடித்த, குச்சிபோன்ற, வெடித்த பல நூறு விரல்களையும், கைபடாமல் மொக்குகள் நிமிர்ந்தும் உள்சுருங்கியும்
இருக்கும் இளமுலைகளையும் மூளையில் வழியும் எச்சிலை மனதால் நக்கி கண் அசைக்காமல்
கண்டு அவற்றைத் துல்லியமாக நினைவு கூரும்
இரவுகளில் அவன் ஆண்மை அவர்களிடையே பிரவாகமெனச் சுழித்தோடும். முகப்பூச்சு
வியர்வையில் நனைந்து வெளிறி காய்ந்து வெண் திட்டுக்களாக மாறியிருக்கும்
அவர்களின் முகங்களையே அவன்
காண்பதில்லை. சில்லறை முறித்து வர அனுப்பினால் நெரிசலில் திணறும் பெண்களின்
பின்புறத்தைத் தேய்த்த படியும், முழங்கையில்
முலைகளை உரசியபடியே செல்லும்போதும் நரம்புகள் துடித்து ரத்தம் சூடாகப் பரவிச்
செல்வதை உணர்வான். அப்போது அவன் பாப்பாவை நினைத்துக் கொள்வான். அவள் மீது
கொண்டிருந்த பிரியம் வளர்ந்து அடங்காத ஆசையாக மாறி வெறியாகவே ஆகி விட்டிருந்தது.
இங்கு வந்த புதிதில் தாவணியில் துள்ளியபடியிருந்தாள். அபூர்வமாகவே சந்தையின்
பக்கம் எட்டிப் பார்ப்பாள்.
தேவியக்காவின் தங்கைக்கு அடுத்தடுத்து பிறந்த
நான்கு பெண் குழந்தைகளில் கடைக்குட்டியைத் தூக்கிவந்து 'பாப்பா' எனச்
செல்லம் கொஞ்சி விளையாட, சற்று
வளர்ந்த பின் அதுவே நிலைத்துவிட்டது. கேட்குந்தோறும் மீளமுடியாத சொப்பனத்திற்குள்
ஆழ்த்தும் சிரிப்பு அவளுடையது. வேரோடு
நிலத்தில் குப்புறச் சாய்ந்த மரம்போல அவன் அதில் வீழ்ந்தான். அவள் குளிக்கையில்
தெறிக்கும் நீரின் ஒலியைக் கேட்டபடியே ஏகாந்தத்திற்குள் மூழ்கிப் போவான். பனியன்
கம்பெனிக்குச் சென்று கொண்டிருந்தாள்.
அவன் கனவுகள் சிதைய, இரவுகளில்
வீட்டு வாசலில் அவளை இறக்கிவிட்டுப் போகும்
சூப்பர்வைசரோடு ஓடிப் போனாள். கடலோர மாவட்ட மொன்றிலிருந்து வந்தவன் அவன்.
ஏற்கனவே மணமாகி ஊரில் குழந்தைகள் இருந்தது வெகுதாமதமாகத் தெரியவந்தது. திண்ணையில் குந்தியிருந்தவனை
நோக்கி,
"பாழப் போச்சுடா. . . இந்த முண்டை அவ தலையில
அவளே மண்ணை வாரிப் போட்டுட்டாளே" அவள் மூக்கிலிருந்து வழிந்த சளி அவள்
வாய்க்குள் சென்றது. அதை வழித்து எறிந்து விட்டு வேகமாக,
"அடங்காமத் திரிஞ்சவளுக்கு . . . அடங்காமத்
திரிஞ்சவளுக்கு. . ." என மூச்சு வாங்கக் கூறி அடுத்த வார்த்தை சிக்காமல்
பக்கத்திலிருந்த செருப்பை உள்ளே எறிந்தாள். அது எங்கோ மோதி சத்தமின்றி விழுந்தது.
அடிபொறுக்காமல் உள்ளே சோர்ந்து கிடந்தாள்.
இரண்டு மூன்று மாதங்கள் வீட்டிலேயே இருந்தாள். தேவியக்கா இல்லாத
சமயத்தில்,
"டேய் சித்தநேரம் காலப்புடுச்சுவுடு” என பாப்பா அழைத்தாள்.
இரவுகளில் அவனது உறக்கம் கலைத்த அவள் பற்றிய
கற்பனைகள் நிமிர்ந்து நின்றன. அவளது தொப்புள் குழிக்குள் கறுப்பாக அழுக்கு அப்பிக்
கிடந்தது. ஈரத்தரையில் கால்வைப்பது போல அவ்வளவு மெதுவாக அவள் கால் மேல் கைவைத்து
அமுக்கிய போது, தேனீருள்ள
கண்ணாடித் தம்ளரைப் பிடித்ததுபோல அவள் உடல் மிதமான சூட்டில் இருந்தது. மெதுவாக
முன்னேறி அவள் தொடைகளுக்கு நடுவில் கை
வைத்தான். கண் திறந்து நடப்பதை உணர்ந்து ஓங்கி உதைத்தாள்.
".
. ச்சீய். . . எச்சக்கலை நாய்க்கு நெனப்ப
பாத்தியா. . . நாயக்குளிப்பாட்டி நடுவூட்ல வச்சாலும் புத்தி பீ திங்கத்தானே
போகும். . "
காயப் போட்டிருந்த அவளது பாவாடையிலிருந்து நீர்
அவன் மேல் சொட்டியபடியிருந்தது.
அவன் மேல் காறித்துப்பி "மூஞ்சீல
முழிச்சறாத. . .வூட்டுப் பக்கமும் வந்தராத. . . பாத்தன்னா அறுத்து கைல
குடுத்துருவேன். . .எல்லா அவோ குடுக்கற எடந்தானே வரட்டும் வச்சுக்கறேன்"
என்று அவனை நெட்டித் தள்ளித் தாழிட்டுவிட்டாள். அவன் பேசாமல் எழுந்து
பக்கத்திலிருந்த தோட்டத்திற்குள் சென்று
பம்ப் செட்டிலிருந்து நீர் விழுவதையே வெகுநேரம் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அவனது அப்பாவுக்கு நரம்புகள் தளர்ந்து இரத்தம்
சுண்டத் தொடங்கியிருந்தது. அவர் இளம் வயதில்
கொண்டிருந்த தீயபழக்கங்களால் அவரது மனதின் ஆசைக்கு உடம்பு ஒத்துழைக்க
மறுத்தது. கோழிக்குழம்பு வாரத்திற்கொருமுறை மணத்த போதும் மல்லிகைப்பூவின் மணம்
எப்போதேனும் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தது. விபத்தில் கால் முட்டு விலகி
வீட்டோடு அப்பா வந்து சேர்ந்தார். அம்மாவை விட்டு கண்களை அவர் எடுக்கவேயில்லை.
அவளது நடவடிக்கைகளை அப்போதுதான் நிதானமாக அருகிலிருந்து பார்த்தார்.
கண்ணாடியின் முன் அவள் நிற்கும் போதெல்லாம் வலி எடுப்பது போலக் கத்துவார். அவள்
ஓடி மூக்கைச் சுளிக்கவைக்கும் எண்ணெய் கொண்டு அவர் காலில் மெதுவாக ஊற்றுவாள். அந்த
எண்ணெய் வீச்சம் வீட்டோடு ஒட்டிக் கொண்டுவிட்டது. அவள் கண்ணீரோடு நின்ற அந்த
இரவுக்கு அவரை மனம் அழைத்துப் போயிற்று. அவள் முகம் கழுவுவதும் கண்ணாடியைக்
கடக்குந்தோறும் ஒரு கணம் நின்று நகர்தலும் அவருக்கு ஆத்திரமூட்டிற்று.
அப்பாவிற்குக் கீழே படுக்கை விரித்துவிட்டுச் சினிமாவிற்குச் செல்ல ஆயத்தமானாள். அவரது
கால்வலி அவரைப் படுத்திக்கொண்டிருந்தது. கம்பைக் கொண்டு சிறிது தூரம் நடக்க
முடிந்தது.
"ஏன்டீத் திருட்டுமுண்ட. . . அவுசாரி மாரி நைட்
ஷோ போறயே. . கேக்கறதுக்கு ஆளில்லைன்னு
நெனப்பா"
"பகலெல்லாம் உன்னபோட்டு அழுகறதுக்கே
நேரஞ்செரியாப் போயிருது"
"அடித் தேவிடியா. . . அன்னைக்கு அப்படியே
உட்ருக்கோணும்டி. . . எவங்கைலயாவது சிக்கி சீரழுஞ்சி சின்னாபின்னப்பட்டிருப்ப. .
. நன்னியில்லாத தொண்டு. . . "
"எவென் ஏதுன்னு இல்லாம கூப்பிட்டொன்னீமும் ஏறி
உட்காந்து வந்தம் பாரு. . . என்னீய பழய
செருப்பாலயே அடிக்கோணும்"
அப்போது அவனுக்கு ஆறாம் வகுப்பு அரையாண்டுத்
தேர்வு நடந்து கொண்டிருந்தது. குண்டு
பல்பின் வெளிச்சத்தில் பாடத்தை உருப்போட்டுக் கொண்டிருந்தான்.
அவளால் போகாமல் இருக்க முடியாது என்பதை அவள்
அறிந்தாள். 'விதி' படம் ஓடிக்கொண்டிருந்தது. நீர் எடுத்து
வரும்போது 'இன்றே கடைசி' ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்திருந்தாள்.
ஏற்கனவே ரேடியோவில் ஒலிச்சித்திரத்தில் கிளைமேக்ஸ் வசனம் கேட்டிருந்தாள். மெதுவாக
நழுவிவிட்டாள். மோகனை அவளுக்குப் பிடிக்கும். அவனுடைய தெற்றுப்பல். அப்படிப்பட்ட
ஒருவனை நம்பித்தான் அவள் வீட்டைவிட்டு வந்தாள். அவன் அறையெடுத்து இரவைக் கழிக்கலாம் என்றான்.
செலவுக்குக் கைவளையலைக் கழட்டித் தந்திருந்தாள். எழுந்தபோது, தான் தவிக்கவிடப்பட்டிருந்ததையும், பொட்டுத் தங்கம் கூட இல்லாமலிருப்பதையும்
அறிந்தாள்.
அவனை பக்கத்துவீட்டில் சென்று படிக்குமாறு
கூறிவிட்டு சுந்தரியக்காவோடு முருகன் தியேட்டருக்குச் சென்றாள்.
ஒன்றரை மணிக்குத் திரும்பி விளக்குப் போடாமல்
வந்து, பாயில்படுத்து
இறுதிக்காட்சி வசனத்தை மனதில் ஓட்டிப் பார்த்தபடியே உறங்கிப் போனாள். சத்தமின்றி
அவர் எழுந்து அவள்மீது மண்ணெண்ணெயைக் கொட்டினார். வாசம் நுகர்ந்து
சுதாரிப்பதற்குள் உரசிய தீக்குச்சி அவள் மீது விழுந்தது. தெரு நடுங்கும் அலறலில்
வீடெங்கும் கத்தியபடி நடந்து தடுமாறி அப்பாமீது விழுந்தாள். அவனைக் கண் பொத்தி
அணைத்து அங்கிருந்தவர்கள் வேறுவீட்டின் உள்ளறைக்கு இழுத்துப் போனார்கள். மரம்
பற்றியெரிவது போல அவள் எரிவதைப்
பார்த்தான். கயிற்றுக்
கட்டிலுக்கடியிலிருந்த மூத்திரம் காய்ந்துபோன சாக்கைக் கொண்டு இருவரையும் மூடி
நெருப்பை வளர விடாமல் மரகத்தக்காவும் பத்மநாபன் அண்ணாவும் முயன்றுகொண்டிருந்தார்கள். கரிக்கட்டையாக அம்மா கோரமாக
இறந்து கிடந்தாள். தோல் வெந்து கருகி பச்சைப்புண்ணோடு ஆஸ்பத்திரியில்
கேட்பாரற்றுக் கிடந்து இரண்டாவது நாள் மதியத்தில் அப்பா இறந்துபோன செய்தியை
ராஜேந்திரன் அண்ணா வந்து சொன்னார். அப்போது அவன் பத்மநாபன் அண்ணா வாங்கித் தந்த
பன்னைப் பிய்த்து பாலில் நனைத்து தின்று கொண்டிருந்தான். அன்றைய இரவு பத்மநாபன்
அண்ணாவீட்டில் படுத்திருந்தான். நடுநிசியில் எழுந்து கிளம்பி கால்கள் இலக்கற்று,
நீண்ட பாதைகளின் வழியே தன்னிச்சையாகப்
போய்க் கொண்டேயிருந்தது.
இரண்டு நாட்கள் அந்தப் பக்கமே போகாமல்
எங்கெங்கோ சுற்றி அலைந்தான். பாப்பாவின்மேல் கொண்டிருந்த கட்டற்ற மோகம் அவனைத்
தத்தளிக்கச் செய்தது. உடைமாற்று கையில் கண்ட நிர்வாணத்தில், புதை சேற்றில் சிக்கிய உடல்போல அவன் மனம் வெளியேற
முடியாமல் திணறிற்று. அது பல்கிப்பெருகி அவன் மேல் பாய்ந்தது. மழை ஓய்ந்திருந்த
அந்தகாரத்தில் சுயபோகம் செய்து அந்த சுயகழிவிரக்கத்தில் சோர்ந்து கிடந்தபோது
தகவல்போல அது காதில் விழுந்தது.
"டேய். . .அக்காவ பாம்பு கொத்திருச்சு. . .
"
வாழைக்குலைகளை எண்ணிச் சரிபார்த்திருந்த
சமயத்தில் சுருண்டு கிடந்த சர்ப்பம் சலசலப்புக்கு பயந்து தீண்டி மறைந்தது.
உடலெங்கும் தடித்து வீங்கி ஆஸ்பத்திரியில்
அக்கா கிடந்தாள். அவன் அப்பாவை அவ்வாறான
கட்டிலொன்றில்தான் கடைசியாகப்
பார்த்தான். பால்ய நினைவுகள் குழம்பி அவனைக் கொந்தளிக்கச் செய்தது. அவனுக்குப்
பெற்றவர்கள் நினைவு எழும்நேரங்களில் ஓயாமல் நடப்பான். இரவுகளில் கஞ்சா புகைப்பான்.
கனமான ஏதோவொன்றின் மீது தலையை பலமாக மோதிக்
கொள்வான். மீண்டும் கஞ்சா புகைப்பான். அப்போதும் அடங்காதிருந்தால் அவன் கையை அவனே வெறி அடங்கும் மட்டும் பலமாகக்
கடிப்பான்.
அக்காபோய்ச் சேர்ந்தபின் அந்தக் கம்பெனி
சூப்பர்வைசரின் பைக் அங்கு அடிக்கடி தட்டுப்படத் தொடங்கி பின் குடித்தனம் நடந்தது.
போக்கிடமின்றி அலைந்து பசியில் மயங்கிச் சரியும் தருவாயில் பாப்பாவின் நினைவு
வந்தது. கூடவே அவளது வனப்பும் அந்தச் சிரிப்பும். மூளை இயங்கிய அசாதாரண வேகத்தில்
திட்டங்கள் உருப்பெற்றன. வேண்டும் மட்டும் நீரைக் குடித்துப் பசியைத் தனித்த
பின்பு இருட்டுக்குள் ஆவேசமாகக் கத்தியோடு சென்றான்.
பெரிய கொட்டாவியோடு புரண்டு படுத்த பாப்பா,
திடுமென எழுந்து "நீ இன்னும் போகலயா?"
என்றாள். அவள் கண்களில் பயம் தேங்கி
நிற்பதாக அவனுக்குத் தோன்றியது.
அவன் மெதுவாக எழுவதுபோல பாவனை செய்கையில்,
அவள் சிறுகுச்சியை முதுகுப்பக்கமாக
ரவிக்கைக்குள் விட்டு சொறிந்தாள். அம்முலைகள் குலுங்காமல் ஏறி இறங்கிற்று. குருதி
பாய்ந்து விறைப்படைந்த ஆண்மை அவனை உசுப்பிற்று.
இமைக்கும் வேகத்தில் அவள் பின்னால் சென்று இடுப்பைப் பற்றித் தூக்கி வலது
கையால் வாயைப் பொத்தினான். பின்புறத்தில் குறியை வைத்து அழுத்தினான். அது மடங்கி
மீண்டும் எழுந்தது. அவள் திமிறினாள். குதித்தாள். காய்த்துப்போன விரல்களை
விலக்கும் வலிமை அவளுக்கிருக்கவில்லை. வேகமாக இடதுகையை கச்சைக்குள்
விட்டபடியே பொத்தான்களை அவுத்தான். ஓங்கி
வாயின் மேல் அடித்தான். உதடுகளும் பற்களும் ரத்தத்தில் நனைந்தது. அவளைக் கட்ட
கயிற்றை எடுக்க எட்டியபோது அவள் அவனுடைய விதையைப் பிடித்து அழுத்தினாள். வலிப்பு
கண்டவனைப் போல நரம்புகள் சுருண்டு அதைப் பிடித்தபடியே அமர்ந்தான். வலியிலிருந்து
மீண்டபோது அவளது சேலை மட்டும் அவனுக்குள்
கிடந்தது. நட்சத்திரங்கள் ஒளிர்ந்து
கிடக்கும் நடு இரவில்
புளியமரத்தின் பின்னால் அவளது உருவம்
பதுங்கி நிற்பதைக் கண்டான்.
சத்தமின்றிச் சென்று குரல்வளையை
நெரித்துக் கீழே தள்ளி, உதறும் அவள் கால் மேல்
அவன் முழுங்காலை ஊன்றி பாவாடையைத்
தூக்கி கையைத் தொடைகளுக்கிடையில் விட்டுத் தேய்த்தான். முலைகளை அவன் இடது கை
கசக்கிக் கொண்டிருந்தது. தொண்டை அடைத்து இருமல் ஓய்ந்து,
"உங்கம்மாவப் போய் ஓல்றா தொண்டுத் தாயோலிக்குப்
பொறந்த அவுசாரி நாயி" என்றாள்.
அவன் சகல புலன்களும் ஸ்தம்பித்து உள்வாங்கின.
அம்மாவைப் பற்றிய நினைவுகள் ஓங்கி வளர்ந்தது. வெறிபிடித்த நாய்போல அவள் மேல்
பாய்ந்து,
"சாவுடீ கண்டாரோலி" என்றபடியே பெரிய கல்லை
எடுத்து அவன் தலையில் பலமாக அடித்தான். ரத்தம் செடிகள் முளைத்த மண்தரையில் ஒழுகி
ஓடிற்று. கத்தியை வயிற்றில் செருகினான். அவள் சில நொடிகளில் விறைத்துப் பிணமானாள்.
குதிரை வண்டிக்காரனிடம் வாங்கிய கஞ்சாத்தூள்
கொண்ட சுருட்டைப் புகைத்தான். முதல் இழுப்பில் அவன் மேகங்களுக்கிடையில்
மிதந்தபடியே வெகு ஆழத்தில் மரங்களைக் கண்டான். அதற்கும் கீழே வீடுகள். அதற்குக்
கீழே மண். அதனிடையில் பாப்பாவைப் பார்த்தான். மீண்டும் இழுத்தான். இப்போது அவன் அம்மா தொலைவில் பற்றியெரிவது
தெரிந்தது. "ஓ" எனக் கத்தியவாறு உள்ளாடையோடு ஓடினான். நடந்தான்.
தலையிலடித்தபடியே அழுதான். பின் மீண்டும் அடக்கமுடியாத சிரிப்பு
வந்தது. அப்படியே நடந்து
தோட்டத்திற்குப் போய்விட்டான். அங்கு
கட்டிலில் கிடக்கும் அப்பாவை நெருங்கிச் சென்று அணைத்தான்.
ஒன்றுக்கிருக்க புளியமரத்திற்குப் பின்புறம்
வந்த பழனிச்சாமி பயந்து மிரண்டு மயங்கி விழுந்தார். அவரைத் தெளியவைத்து கும்பலாக
அங்கு வந்தபோது கோரமாக பாப்பா இறந்து கிடந்தாள். அவள் மேல் உடலெங்கும் கால்கள்
கொண்ட கம்பளிப்பூச்சி ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
பக்கத்திலிருந்த தோட்டத்திலிருந்து நாய்
குரைத்தது. சந்தைக்கு வந்த வியாபாரிகளும் கொள்முதல்க்காரர்களுமாக பெருங்கூட்டம்
அங்கு கூடிவிட்டது. புண்மேல் ஈக்கள்
மொய்ப்பதுபோல கிணற்றைச் சுற்றிலும்
கூட்டம் கூடி எட்டிப் பார்த்து விழிகளை மூடாமல் நின்றது.
அதிலிருந்து மேலேறிய இரும்புக் குழாயில் அவனது ரத்தம் காய்ந்து
விட்டிருந்தது. நீரின்மேல் குப்புறவிழுந்து நிர்வாணமாக அவன் மிதந்து
கொண்டிருந்தான்.
நன்றி:உயிர்மை இதழ் (மார்ச் 2009)
(முதல் தொகுப்பான “இரவுக்காட்சி”யில் இடம்பெற்றுள்ள சிறுகதை)