Sunday, January 16, 2022

ஆடிப்பெருக்கு, அந்தி

 

ஆடிப்பெருக்கு


நான்கைந்து குருவிகள் ஏககாலத்தில் கத்துவது போல ஒலித்த கைபேசி அலாரத்தின் வாயை சதீஷ் அடைத்த போது மணி 4.30. அது பல தடவைகள் ஏமாற்றியது போலில்லாமல் இம்முறை துல்லியமாக அலறி கைக் கொடுத்திருக்கிறது. ஆனால் மனதின் எச்சரிக்கை மணி இப்படி அலாரம் வைக்கும் இரவுகளில் தான் மிகவும் விழிப்புடன் இருக்கும். பல முறை முன்பே எழுந்து கைபேசியின் கடவு எண்ணை உறக்கச் சடவில் தவறுதலாக அழுத்தி மணி பார்த்துவிட்டு தன்னையே திட்டிக் கொண்டு புரண்டு படுப்பதே அதிகமாக நடந்திருக்கிறது. இப்போது சாவகாசமாக எழுந்தமர்ந்து இன்று திட்டமிட்டிருக்கும் நிகழ்ச்சிநிரலில் ஒன்று கூட தப்பக் கூடாதென்ற உறுதியுடன் , 'ஏய் பத்து எந்திரிடி..' என நடுங்கும் இதயத்துடன் உலுக்கினான். வாஸ்தவத்தில் அவள் இரவு முழுக்க உறங்கவேயில்லை. போலியான சலிப்புடன் மெல்ல எழுந்து அவிழ்ந்த முடியை முடிச்சிட்டபடியே தங்கள் இருவருக்குமிடையில் உக்கிரமான முகத்துடன் உறங்கும் இரு பெண் பிள்ளைகளின் கலைந்து கிடந்த தலைமுடியை காதோரத்திற்கு ஒதுக்கித் தள்ளிச் சரி செய்தபின் அவன் கன்னத்தை மெதுவாகப் பிடித்திழுத்து முத்தினாள்.






கதவுகளை இருமுறை ஆட்டிப் பார்த்துவிட்டு முன்வாசல் கேட்டைப் பூட்டி வீட்டிலிருந்து காரைக் கிளப்பும் போது மணி 6.30. வழியெங்கும் அவன் பேசவும் அவள் 'ம்..' கொட்டவுமாகயிந்தாலும் இருவரின் மனங்களும் வேறெதிலோ சஞ்சரித்துக் கொண்டிருந்தன. பின் சீட்டில் பிள்ளைகள் மிஞ்சமிருந்த தூக்கத்தை தீர்த்துக் கொண்டிருந்தன. கார் நின்று அவர்களை எழுப்புவதற்குள் ஓடி வந்துவிட்டிருந்த அவன் அண்ணன் மகனும் மகளும் அவர்களை உசுப்பி கிச்சுக்கிச்சு மூட்டியதும் சிணுங்கலுடன் விழித்து முகத்தைக் கண்டு சந்தோஷக் குமிழ்களுக்கு நடுவே குதித்தாடியபடி சென்றனர். அன்று ஆடி 18. தோட்டத்து மரத்தில் அப்போது தான் கயிறு கட்டி முடிக்கப்பட்டிருந்தது. சாக்குகளை எடுத்துக் கொண்டு பறந்தனர். ஆடிய தூரியில் அவர்களின் கால்கள் ஏற்கனவே கலைந்து சென்ற மேகங்களை இன்னும் கொஞ்சம் கலங்கடித்து விட்டுத் திரும்பி வந்தன. சில தடவை மண்ணில் விழுந்து உடைகள் அழுக்கான போதும் ஆட்டம்  அடங்கவேயில்லை. தட்டில் ஆறிப் போய்க் கொண்டிருக்கும் இட்லிக்காக பாட்டி அதட்டும் சத்தம் எட்டாத உலகத்தில் இருந்தனர். விளாறை எடுத்து வந்து அண்ணன் மேல் பெரியப்பா விளாசுவதைப் பார்த்து அலறியபடியே மூவரும் மிதமான சூட்டிலிருந்த இட்லிகள் முன் அமரும் போது மணி 9.35.



எவ்வளவு வற்புறுத்தியும் சதீஷின் பாக்கெட்டில் அண்ணன் பணத்தை வைத்தார். வேண்டாம் என தலையாட்டினாலும் முகத்தில் மறுப்பு இல்லை. அண்ணி, பத்மாவுக்கு பூ வைத்து விட்டு மிச்சங்களை அவரது மகளும் சேர்த்து மூன்று பெண் குழந்தைகளுக்கும் தலையில் சொறுகி விட்டாள். சதீஷ் தன் அண்ணன் மகனை அருகழைத்துக் கட்டிக் கொண்டான். அதை தவறுதலாகப் பையனில்லாத குறை என நினைத்த அவன் அம்மா, 'அதான் ரெண்டு ராஜகுமாரிகளை பெத்திருக்கயே கண்ணு..' என்றாள். அவன் மனதில் ஓடியது வேறு. ஆனால் அதை மறுக்காமல் உள்ளிருந்துப் பொங்கி வந்த  தழுதழுப்பை விழுங்கிக் கொண்டு அம்மாவின் காலில் விழுந்தான்.



'
நல்லாரு சாமி..எஞ்சாமி..எந்தங்கத்துக்கு வந்த கொறையெல்லாம் காத்தோட போச்சு...இனிமேத்தைக்கு நல்ல காலந்தான்னு நெனச்சுக்கடா என்ன பெத்தவனே...' என அவள் சொல்லி முடிப்பதற்குள்  சதீஷின் கண்கள்  கலங்கி விட்டன. அண்ணன் துண்டால் வாய்பொத்தி உடம்பு குலுங்குவதைக் கண்ட குழந்தைகள் அந்த இறுகிய நிமிடங்களுக்கிடையே பேதைகள் போல செய்வதறியாது தவித்து நின்றன.



பத்மா, 'ஏம் மாமா..அவர் தான் அப்படின்னா..நீங்களுமா..' என சதிஷின் அண்ணனை மட்டுப்படுத்தி அவனை 'பேசாம இரு மாமா..' என அடக்கியதும் மின்சாரம் வந்தது. டிவி பாடலுடன் அலற, மின்விசிறி உச்சபட்ச வேகத்தில் சுழன்றது. மணிக்கட்டைத் திருப்பினான். மனதிலிருந்த கணக்கை விட அரைமணி நேரம் தாமதம் என்று தோன்றியது. அவர்கள் கிளம்பிய போது பிள்ளைகளின் கண்கள் வெறுமனே அசைந்து கொண்டிருந்த தூரியின் மீதே நிலைத்து நின்றன. திரும்பித் திரும்பி பார்த்தபடியே அம்மாவின் பின்னால் நடந்தன. 'டா..டா' காட்டும் அண்ணனும் அக்காவும் இனி போய் விளையாடுவார்கள் என்கிற நினைப்பு பிள்ளைகளின் முகத்தைச் சுண்டிப் போகச்செய்திருந்தன.


மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் கார் நிறுத்த இடமின்றி தவித்து ஒருவழியாக உள்ளே சென்ற போது மணி 11.10. எங்கும் தலைகளே தென்பட்டு நெரிபட்டக் கூட்டத்திற்கிடையே நுழைவது சுலபமாகயில்லை. அன்றைய அபிஷேக அலங்காரத்திற்கு ஏற்கனவே புக் செய்த ரசீதைக் காட்டியதும் அவர்களைச் சிறப்பு வழியில் கூட்டிச் சென்று அம்மன் முன் நிறுத்தினர். பல சந்தர்ப்பங்களில் அம்மனின் முகத்தில் சீற்றத்தைக் கண்டு அச்சத்துடன் வணங்கி நகர்ந்தவன், அன்று அவள் முகத்தில் சாந்தம் தவழ்வதைப் பார்த்ததும் உடம்பெல்லாம் சொல்ல முடியாத குளிர் ஓடி அடங்குவதை உணர்ந்தான். உச்சிபூஜையில் மனம் லயித்து பிச்சை கேட்பது போல இரு கைகளையும் ஏந்தி மணியோசைகளின் முழக்கத்தில் முட்டி போட்டு வெறும் மேலோடு நின்றவனின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. பத்மா மூக்கை உறிஞ்சி தன்னை வெகுவாகக் கட்டுப்படுத்தியபடி அவன் தோளை அழுத்தினாள். சின்னவளுக்கு அப்பாவைப் பார்த்துச் சிரிப்பு வந்தது. மூத்தவள் பயந்து அம்மாவின் கால்களைக் கட்டிக் கொண்டாள். கிடாய் வெட்டும் , கோழி அறுப்பும் முடிந்து முட்டிய கூட்டத்திற்கிடையே பிரசாதத்துடன் வந்து காரில் அமர்ந்ததும் அனிச்சையாக மணி பார்த்தான். 1.30. திட்டத்தில் அடுத்து மலையேற்றம். எனவே மிதமான உணவுடன் காரை ஊட்டி செல்லும் பாதையில் திருப்பி அழுத்தினான்.



பர்ளியாறு டீக்கடைகளைத் தாண்டியதும் வந்த செக் போஸ்ட்டில் நின்றிருந்த காவலர்களைக் கண்டதும் பகீர் என்றது. அவன் அதுவரை சேர்த்து வைத்திருந்தவை, மட்டுமல்லாது அபரிமிதமாகக் கடன் பெற்றவை என மொத்தமாகச் சேர்த்து தன் வியாபாரித்திற்காக வாங்கியவை அனைத்தும் 'திருட்டு நகைகள்' என போலீஸ் அவனை முற்றுகையிட்ட போது பதற்றத்திலும் அச்சத்திலும் காலோடு வந்தது. கழிவறைக்குப் போய்விட்டு வந்த பின்பே அது கனவல்ல எனப் புரிந்தது. ஸ்டேஷன், ஜெயில், ஜாமீன், செலவிடப்பட்ட தொகை..! எப்படியேனும் மீண்டு விட வேண்டும். ச்சைய்.. இன்றாவது அதையெல்லாம் நினைக்காமல் இருக்கத் தானே வெளியே வந்தோம்..! செல்போன் காலையிலேயே அணைத்து வைக்கப்பட்டுவிட்டது. அந்த செக் போஸ்டை சாதாரணமாகக் கடந்ததும் சிறிய விசில் அடித்து பாடலின் ஒலியை அதிகப்படுத்தினான்.




குன்னூர் தாண்டியதும் குளிர் சன்னமாக உறைத்தது. அவன் வளவளத்து ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்த போதும் பத்மா தன் பிள்ளைகளின் முகத்தைத் தடவி விடுவதிலும் பறக்கும் முடிகளைச் சீர்செய்வதிலுமே அக்கறை காட்டினாள். 'ம்..ஆமா, இல்ல..' தவிர வேறு பதில்களேயில்லை. முன்பே அழுத்தக்காரி. அந்தச் சம்பவத்துக்குப் பின் மேலும் குறைத்துக் கொண்டாள்.

திருமணத்திற்கு பின் வருடத்திற்கொருமுறையும் அதற்கு முன் அவ்வப்போதும் வந்து சென்ற நீலகிரியின் குளிர் லவ்டேலைத் தாண்டியதும் நினைவுகளைக் கிளர்த்தியது. ஸ்டேரிங்ஙை ஒரு கையில் பற்றி இடது கையில் அவள் தோளை பிடித்து தன் பக்கம் இழுத்தான். 'ச்சீய்..' என பொய்யாகச் சிணுங்கிக் கையை தட்டி விட்டாள். சேரிங் கிராஸ் பலகையை பார்த்த போது அவளே சொன்னாள், '3 மணி ஆச்சு'. சிரித்து அவள் கன்னத்தைப் பிடித்து இழுத்தான். மழை வருமோ என்பது போல மூட்டம். மறுவினாடியே படர்ந்தது வெயில். அசைவ ஹோட்டலுக்குச் சென்று வகைவகையான உணவுகளுக்கு ஆர்டர் கொடுத்தபடியே இருந்தான். நடப்பவை, பறப்பவை, நீந்துபவை என தட்டுகள் நிறைந்திருந்தன. அவன் எண்ணியிருந்ததற்கு மாறாக பத்மா அகோர பசி கொண்ட ராட்சசி போல அவற்றை மிச்சமின்றி காலி செய்து கொண்டிருந்தாள். பிள்ளைகளுக்கு ஊட்டி விடுவதைக் கூட மறந்து விட்டிருந்தாள். தனியாக அவை அள்ளியெடுத்து மேலெல்லாம் சிந்த மென்று கொண்டிருந்தன. அவள் முடித்ததும் பிள்ளைகளின் வயிற்றை நிரப்ப ஆயத்தமானாள். எவருக்கு எது பிடிக்கும் என வாங்கி குஷிப்படுத்தினாள். கைக்கு இரண்டாக ஐஸ்கிரீம்களுடன் வெளியே வந்த போது 4.30 ஆனதைக் கண்டு அவர்களை முடுக்கினான். கார்டன்கள், முகடுகள், வ்யூ பாயிண்டுகள், பஜார்கள் என சுற்றி இழுத்துக் கொண்டு சுற்றினான். ஆறைத் தாண்டியதும் தூறல்கள் விழத்தொடங்கின.வேகமாகக்கீழிறங்கினான்.

கோபிசெட்டிபாளையம் எல்லைக்குள் புகுந்து கச்சேரிமேட்டில் திரும்பி பத்மாவின் தங்கை வீட்டில் காரை நிறுத்தியதும் குழந்தைகள் அவர்களுக்கு முன் வீட்டிற்குள் ஓடின. சித்தி என்றால் அத்தனை உயிர். அவள் அம்மாவும் தங்கையுடன் தானிருந்தாள். சதீஷ் தன் சகலையுடன் அமர்ந்து மிதமாகக் குடித்து இரவுணவை முடித்ததும் அவர்கள் காலையில் கிளம்ப எவ்வளவோ வற்புறுத்தியும் பலமுறை எடுத்துச் சொன்ன பிறகும் கூட பிடிவாதமாக உள்ளே அமர்ந்து ஹாரன் அடித்தான். தூங்கிய பெண் குழந்தைகளை ஆளுக்கொருவராக தூக்கி வந்து படுக்கையில் கிடத்தியதும் அவன் திட்டமிடலைத் தாண்டி அரைமணி நேரத்திற்கும் மேல் சென்று விட்டிருந்தது. 11.40. பிறகு இருவருக்குமிடையே மிக நீண்ட சம்போகம். அவன் தளர்ந்த போதும் அவள் எழுப்பினாள். ஒன்றல்ல. மூன்று முறை. அவள் விடவேயில்லை, பிறகு அவனும். இருவருக்கும் ஆவேசம் கூடிய புணர்ச்சி.



மறுநாள் ஒன்பது மணிக்கு மேலாகியும் அவ்வீட்டுக் கதவு திறக்கப்படாதது கண்டு பலரும் கூடி முடிவெடுத்து ஓயாமல் நால்வரின் பெயரை சொல்லிக் கதவைத் தட்டிக் கொண்டே இருந்தனர். வழியின்றி உடைத்துத் திறந்தனர். வாயில் நுரை தள்ள கையொரு பக்கமும் காலொரு பக்கமுமாக இழுத்துக்கிடக்க வெற்று உடல்களாக விறைத்துக் கிடந்தனர். விஷயம் தீ போல ஊருக்குள் பரவியது.



அவர்கள் இருவரும் தங்கள் உடலைப் பார்த்தபடியே நாற்காலியில் அமர்ந்திருந்தனர். அதற்குள் ஒருவன் சதீஷின் பாக்கெட்டிலிருந்த கடிதத்தை எடுத்து விட்டிருந்தான். சதீஷ் அவளிடம் சொல்லாமல் நேரே தன் கடைக்குச் சென்றான், 'ஐஸ்வர்யம் தங்க மாளிகை'. நேற்று காலையில் அவன் ஷட்டரில் ஒட்டி விட்டுப் போன 'இன்று விடுமுறை' கிழித்தெறியப் பட்டிருந்தது. கடன்கார்கள் வசவுகளுடன் குவிவதைப் பார்த்து கூசிப் போனவனாக வீட்டிற்குத் திரும்பினான். வீட்டிற்குள்ளும் வெளியிலுமே கடன்காரர்களின் சீற்றம் மிகுந்த முகங்களே தென்பட்டன. ஆக்ரோஷத்துடன் அவர்களில் சிலர் வீட்டின் சகல இடங்களையும் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்தனர். காவலர்கள் அந்த கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் போதும் பத்மா அமைதியாக அதே நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவள் யாருக்கோ காத்திருக்கிறாள் என்று பட்டது. இன்னொரு காவலர் அந்த குழந்தைகளிடம் அசைவு இருப்பதைக் காட்டினார். மொத்தச் சூழலும் புரட்டிப் போடப்பட்டது போன்ற அதிர்ச்சிக்குள்ளாகி விட்டது.


அந்த சமயத்தில் அவள் அம்மாவும் தங்கையும் தெருவிலிருந்தே ஊளையிட்டபடி வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு வந்து அந்த உடல்களின் மேல் விழுந்து கதறினர்.

சதீஷ் மாளாத பிரியத்தை குழந்தைகளிடம் வைத்திருந்தான். எனவே நேற்று முழுவதும் அவர்களிடமிருந்து விலகியே இருந்தான். அதற்கு முற்றிலும் மாறாக பத்மா குழந்தைகளிடம் மிகவும் நெருங்கி பிரியத்தைப் பொழிந்து கொண்டே இருந்ததை நினைவு கூர்ந்தான்.

நேற்றிரவு அவள் தன் குழந்தைகளுக்கு நஞ்சூட்டியிருக்கவில்லை. தனியே அழைத்துப் போய் இருமலுக்கு தரும் டானிக்கை இரண்டு மூடிகள் அதிகமாக விழுங்க வைத்துக் கூட்டி வந்தாள். சாதாரணமாகவே சொக்க வைக்கும் தூக்கத்தைத் தரும் டானிக் அது. உறக்கத்திலிருந்து பிள்ளைகள் எழுந்து விட்டன. துடிக்கும் ஆத்மாவுடன் சதீஷ் செய்வதறியாது திகைத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த போது அவள் மெதுவாக எழுந்து தன் அம்மாவிற்குள் நுழைவதைக் கண்டான். பிறகு அக்குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெளியே போனாள். சதீஷ் பின்னாலேயே ஓடினான். அங்கு தன் தங்கை உறவினர்களிடம்,

'
விடிகாலீல கனவுல வந்து நீ தான் எஞ் செல்லங்களை பாத்துக்கோணும்னு சொன்னா இந்த பாவி முண்ட..பதறி அடிச்சுட்டு எந்திரிச்சா இந்த ஆளு வாய தொறந்துட்டு தூங்குது. எங்கம்மாவை எழுப்பி சொல்றதுக்கும் பயம்..உசுர கையில் புடுச்சுட்டு இருந்தனக்கா..இந்த பாழாப்போன முண்ட இப்படி செய்வான்னு இத்தூணூண்டு கூட நினைக்கலக்கா..காலீல போவீங்களாமான்னு தலயா தண்ணி குடிச்சனக்கா..ம்ம்...முடியாது..கோட்டையை புடிக்கறேனுட்டு கூட்டியாந்தானக்கா அந்த பொழைக்க வக்கீல்லாத நாயீ..இவனுக்கு கொடுக்கும் போதே வேண்டாம்னு தான் சொன்னேன்.. எங்கப்பனும் எங்கம்மாளும் ஒரேமுட்டா கட்டி வைச்சாங்க. இப்ப பாரு என்ன கதிக்கு ஆளாக்கி வைச்சிருக்கான்னு..' என அழுகைக்கிடையே ஒப்பாரி போல விளம்பிக் கொண்டிருந்தாள்.

அம்மாவுக்கு ஏது இவ்வளவு பலம் எனத் தோன்றிய அதிர்ச்சியில் உறைந்து பேச்சை நிறுத்தி எழுந்து நின்றாள். அந்த கண்களில் அவள் எதையோ உணர்ந்தாள். முதுகு சொடுக்கியது. குழந்தைகளில்லாத அவளிடம் அந்த இரு பெண் பிள்ளைகளையும் கொடுத்து,

'
இதுகளுக்கு இனி நீ தான் அம்மா, ஆத்தா, அப்பன், பொறந்தது..நல்லது கெட்டது எல்லாமே..இதுகள காபந்து பண்ணி கரையேத்தறது உன்னோட சேர்ந்தது.. ' என்றாள். மாறி மாறி அவர்களுக்கு முத்தமிட்டதும் அப்படியே மயங்கினாள். 'ஐய்யோ..என் பத்துக்குட்டி..பொன்னுமயிலு...' என தன் அக்காவை நினைத்து அவள் எழுப்பிய கூக்குரல் அந்த தெருவையே கிடுகிடுக்கவைத்தது.

உலுக்கப்பட்டவனாக சதீஷ், பத்மாவின் காலில் விழுந்து மன்னிக்கும்படி இறைஞ்சினான். அதற்குள் தெருமுனையில் ஆம்புலென்ஸ் அலரும் ஒலி கேட்டது. அவனை விட்டுவிட்டு முன்னால் சென்ற பத்மா திரும்பி வந்து இன்னும் அழுது முடிக்காதவனின் முதுகை நீவி சமாதானப்படுத்தினாள். 'பேசாம வாங்க' என்றதும் எழுந்து சிறுபையன் போல அவள் பின்னாலேயே போனான். கைகளைக் கோர்த்துக் கொண்டதும் அவனது கைகளை முத்தினாள். பிறகு அவனைக் கூட்டிக் கொண்டு காற்றிலேறி மறைந்தாள்.

 

-------------------------------------------

 அந்தி


"வூட்டு சாவியெ அண்ராய்யர்ல போட்டுக்கிட்டு துப்புக்கெட்ட ஆம்பள.. குடிச்சுப்போட்டு இப்படி வேட்டி நழுவுனது தெரியாம.." அவள் பிடிப்பதற்குள் அவன் ரோட்டிற்கு நடுவே மீண்டும் சென்று விட்டிருந்தான்

 

கால்மணி நேரத்திற்கும் மேலாக இந்த இழுபறி முடிவுக்கு வராமல் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது

 

"அதய எம்.ஜி.ஆர்கிட்ட குடுத்துட்டுட்டனே..". அவனிடமிருந்து வெடித்த சிரிப்பொலி. பிறகு ஆகாயத்தை நோக்கி பலமாக விசில் அடித்தான். 'தலைவ்வ்வா..' என சாலையே அதிரும்படியான கூக்குரல். இரு கைகளையும் இயேசு போல விரித்து நகரும் மேகங்களை பார்த்து கண்ணடித்து ஒரு பறக்கும் முத்தம். இப்போது அவன் முகத்தில் அது தன் தலைவனிடம் சேர்ந்திருக்கும் என்கிற திருப்தி தென்பட்டது

 

அவனை ஒரு வசீகர வளைவு எனக் கருதிய வாகனோட்டிகள் புன்னகையுடன் கடந்து சென்று கொண்டிருந்தனர். சட்டென அபாயகரமான வேகத்துடன் வந்தவனை நேர்கொண்டு நின்று மறிக்க கால்களை அகட்டி நின்றான். வேடிக்கையாளர்கள், பாதசாரிகள் குலைநடுங்கும் பயத்துடன் அதைப் பார்த்தனர். சிலர் முகத்தை திருப்பிக் கொள்ள மற்றவர்கள் கண்களை இறுக மூடி மனதிற்குள் 'ஐய்யோ..' என அலறினர். மிகச்சிலர் அவனை நோக்கி ஓடினர். அதற்குள் எழுந்த மாபெரும் 'க்ரீச்'சுக்கு மொத்தச் சாலையும் பணிந்தது. மூர்க்கமாக சிறிது தூரம் இழுத்துச் சென்று சறுக்கிய பைக்கிலிருந்து உயிரச்சத்துடன் கைகால்கள் நடுங்க வந்தவன் 'குடிகார தாயோளி..' என்றபடியே ஆவேசமாக முன்னேறி வந்தான். கீழே கிடந்தவன் சிறு சிராப்புமின்றி நிதானமாக எழுந்து காறி உமிழ்ந்து, காலர் அழுக்காகாத மீசையற்ற அந்தக் கனவானைத் துச்சமாகப் பார்த்துப் பின்புற மண்ணைத் தட்டி விட்டபடி, 'உங்ஙொம்மாளக்க..யாரடா தாயோளின்ற...உங்ஙொயாலாக்கா..வாடா சில்ற புண்ட..' என எச்சில் தெறிக்க நிற்காமல் பொழிந்தான். அந்த கனவான் அந்த அடியை எதிர்பார்க்கவில்லை. அச்சத்தை மறைத்தவனாக பிறரிடம் முறையிட ஆரம்பித்தான்

 

'ஊரெல்லாம் திருடுவானுக..வெளியில் மினுமினுன்னு வேஷம் போடுவானுக..எப்படி பளபளன்னு இருக்கான் பாரு..த்தூ...தெறி..இவனுக ரூம்மை தாள் போட்டுக்கிட்டு பொண்டாட்டிக்கு தெரியாம தண்ணிய போட்டுட்டு எவளையோ நினைச்சுக்கிட்டு உருவி விட்டுக்கிட்டே படுத்துக் கெடப்பானுக..வெட்கங்கெட்ட தாயோளிக..' 

 


அங்கு நடக்கும் எதுவுமே தன்னை பாதிக்கவில்லை என்பது போல எப்போதோ அவனருகில் வந்து சேர்ந்து விட்டிருந்தவள், வேட்டியை அவன் வயிற்றின் மேல் கோணல்மானலாகச் சுற்றியவாறே பிறர் முகத்தைக் காணக் கூசியவளாக அவனை மீண்டும் சாலையின் ஓரத்திற்கு இழுத்துச் செல்ல மல்லுக்கட்டினாள். அவன் அலட்சியமாக அவளை உதறித்தள்ளி, 'என்னடா மயிறு இவ்ளோ ஸ்பீடு..ரோடு உங்ஙொம்மா போட்டதாடா..இல்ல இது உம் பொண்டாட்டி தொடைன்னு நினைச்சுக்கிட்டயா...ம்ம்..' என அதட்டிய பிறகு நினைவு வந்தவனாக 'ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்..' என பாட ஆரம்பித்தான்

 

கறுத்துப் போயிருந்த வேட்டி ரோட்டில் கிடக்க அவன் விலகிச் செல்ல எரிச்சலுடன் ஹாரனை ஒலிக்க விட்டு நிற்பவனிடம் கடன் கேட்கப் போகிறவன் போல தயங்கியபடியே மெதுவாகச் சென்றான். சாராய வாடையைத் தாங்க முடியாமல் முகம் திருப்பிய இடைவெளியில் அந்த வண்டியின் சாவியைப் பிடுங்கி தூர எறிந்தான். அவள் ஓடிச் சென்று அதை எடுத்து அவரிடம் கொடுத்து கை கூப்பினாள். எரிச்சல் மண்ட ஆங்கிலத்தைக் கடித்துத் துப்பினார். அவன் அந்த பைக்கின் முன் சக்கரத்தை தன் இரு கால்களுக்கிடையில் நுழைத்து மக்கேட்டின் மேல் அமர்ந்து,

 

'கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா...' இதைச் சொல்லிட்டு தான் இங்கிருந்து கிளம்பணும். சற்றுமுன் குழறலாகப் பேசிக் கொண்டிருந்தவனா என்கிற ஐயம் வரும்படி உச்சரிப்புத்துல்லியத்துடன் கனீரென அவன் குரல் ஒலித்தது

 

'சொல்றா..இங்கிலீஷ் உங்ஙாயாவா..உன்ற ஙொப்பானா..இல்ல நான் கேக்கறன்..ம்ம்..சொல்லுங்க தொரை..' என ஹெக்கெக்கேவென வயிறு குலுங்க சிரித்தான். எங்கிருந்தோ விசில் அடிக்கும் சத்தம் கேட்டது. இவன் உற்சாகமாகி 

 

'ஏன் குடித்தேன்...எதற்காக குடித்தேன்..நயவஞ்சகர்கள் சூழ்ந்த இந்த உலகத்தில்...' எனத் தொடங்குவதற்குள் அவள் அவனை வலுக்கட்டாயமாக இழுத்தாள். அதே தொனியில் 'போடி தேவிடியா முண்ட..' என அவளை தள்ளினான். சகலமும் மரத்துப் போனவளுக்கு காதுகள் மட்டும் உயிருடன் இருக்குமா என்ன? அவனிடம் மீண்டும் நெருங்கினாள். நேரம் மாலையை நெருங்கிக் கொண்டிருந்தது. கலைந்த சேலையை சரிசெய்தவாறே மஞ்சள் வானத்திற்குக் கீழே நிற்பவளை நோக்கி வெட்கச் சிரிப்புடன், 'மஞ்சள் வானம்..தென்றல் சாட்சி.. உனக்காகவே நான் வாழ்கிறேன்..' என அந்த வரியை மஞ்சள் வானத்தில் சென்று முடிக்க விரும்புபவனைப் போல கையை மேலே தூக்கி அப்படியே நின்றிருந்தான். அவ்வளவு அவமானகரமான நிமிடத்திலும் அவள் முகத்தில் மெல்லிய குறும்புன்னகை ஒரு கோடாக தோன்றி மறைந்ததா..?! அதை மறைக்க தான் முந்தானைதால் வாயைத் துடைப்பது போல பாவனை செய்தாளா..?! 

 

கீழே விழுந்த ஆரஞ்சு பழங்களைப் பொறுக்கிக் கொண்டிருந்த அந்த கனவான் அவன் கண்ணில் மீண்டும் பட்டு விட்டான். ' வில்  கால் போலீஸ்..' என ஒருவித நடுக்கத்துடன் எச்சரிக்கும் வகையில் விரலை மிரட்டுவது போல ஆட்டினான். 'ரஜினி பாட்டு...' ' என பின்னாலிருந்து அலறுவது போல முறையிடும் சத்தம் கேட்டது. அதை கேட்டும் கேக்காதவனாக 'போடா..' என்ற பிறகு 'மை நேம் ஈஸ் பில்லா..' என்பதற்குள் அவனைக் குண்டுகட்டாகத் தூக்க ஆட்கள் நான்குபுறமும் நெருங்கினர். இல்லாத வாளை இடுப்பிலிருந்து உருவி 'கமான்..' என்றபடியே வேகமாகச் சுழன்று வாள் வீசி நான்கு புறமும் காறிக் காறித் துப்பிக் கொண்டுருந்தான். விலகி ஓடினர். அவள் தன் மேல் தெறிப்பதை பொருட்படுத்தாமல் அங்கிருந்து அவனை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தாள். என்ன பேசினாலும் பத்து மடங்கு வசவுடன் திரும்பி வரும் என்பதால் அவனது குடி மிகும் சமயங்களில் செவிட்டூமை வேடத்தையே அவள் போட்டுக் கொள்வாள். வாங்கிய சம்பளத்தின் மிச்சம் அந்த அண்டர்வேரில் தான் இருக்கும். அதை கைப்பற்ற வேண்டும். அது தான் அடுப்பிலிருக்கும் பூனையை விரட்டும் ஒரே ஆயுதம். பசித்த வயிறுகள் அவள் முன் பல்லிளித்து நிற்பதாகத் தோன்றியது. அத்தனை நேரத்தில் அப்போது தான் 'உசுர வாங்காம வாய்யா..மனுஷா..' என பிறருக்குக் கேக்காதவாறு அவன் காதோரம் சென்று முனகினாள். அவள் மேல் காறி துப்பினான். அது எங்கோ விழுந்து அதன் திவலைகள் முகத்தில் அவள் மீது தெறித்தன. 'புருஷங்காரனோட இத்தன பேர் சண்டைக்கு வர்றாங்க..எனக்கு சப்போர்ட் பண்ணாம நிக்கறயேடி நாயே.. நீயெல்லாம் பத்தினியாடி..' என்பதற்குள் அவனுக்கு மூச்சு வாங்கியது. 'எந்திரிடா சில்லற நாயே...மானங்கெட்ட மயிராண்டி..உங்கொம்மா எந்த நேரத்தில் காலை விரிச்சாளோ உங்கப்பன் எப்போ கோவணத்தை அவுத்தானோ...இப்படி நடுரோட்டுல ரோஷம் ஈஷு இல்லாம பொரண்டுக்கிட்டு கிடக்கற தெல்லவாரி..' ஆனால் அவனை விட்டு அவள் நகரவேயில்லை. வாகனங்களில் கணவனுக்கு பின் அமர்ந்திருந்த பெண்கள் இப்போது காதை பொத்திக் கொண்டனர். அவர்களில் ஒருத்தி அவனது மயிர் அடர்ந்த மார்பையே யாருக்கும் தெரியாமல் அவ்வப்போது ஓரக்கண்ணால் வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவை பின்னிக் கொண்ட கம்பளிப்பூச்சிகள் போல உடம்பெங்கும் கருகருவெனச் சுருண்டிருந்தன

 

வாளைச் சுழற்றியதில் கால் தடுக்கி விழுந்து கிடந்தவனை தூக்க முடியாமல் கிட்டத்தட்ட தரையோடு இழுத்தாள். அவள் உடம்பின் மீது அவளுக்கு கவனமே இல்லை. பிதுங்கிய மடிப்பிகளிலிருந்து கண்ணெடுக்க முடியாதவன் ஓயாமல் ஹாரனை அமுக்கி அலற விட்டுத் தன் ஆவேசத்தைத் தணித்துக் கொள்ள முயன்றான். போஷாக்கான உணவுகள் அவளுக்குப் பற்றாக்குறையின்றி கிடைத்தால் ஒரே மாதத்தில் வெளிறிய உடம்பை சதை மூட பேரழகியாக மாறிவிடுவாள் என்று அந்தச் சபலக்காரனுக்குத் தோன்றியது

 

அவள் சொன்னதெல்லாம் இப்போது தான் அவனை எட்டி இருக்கும் போல. அவனது புழுத்த வசவுகள் கலைக்கபட்டத் தேன் கூடு போல அங்கிருந்த சகலரையும் தேடித் தேடிச் சென்று கொட்டின

 

இந்தக் களேபரங்களை ஒரு அற்புத பொழுதுபோக்காகக் கருதி ஓரங்களில் நின்று கொண்டிருந்தவர்கள் அவளுக்கு உதவ ஓடி வந்தனர். மாலை மங்கிக் கொண்டிருந்தது. சிலரோ இன்னும் கொஞ்ச நேரம் நீடித்தால் என்ன என்பது போல ஆவலுடன் கண்கள் மின்ன முடியாத சிரிப்புடன் கால் மாற்றி நின்றனர். திடீரென அவளைக் கண்டுகொண்டவன் போல 'டார்லிங்' என சிரித்தான். 'சாப்டயா..?' என தள்ளாட்டத்திற்கிடையிலும் கேட்டான். இறுகிய கற்சிலை போன்ற முகத்துடன் அவனை பிறரது தயவால் இழுத்துச் சென்று கொண்டிருந்தாள். அவனுக்கு கொஞ்சம் இறங்கிவிட்டது. எங்காவது அமர்ந்து ஏற்றிக் கொண்டால் தேவலாம் போல இருந்தது. புறங்கழுத்தில் படீரென அடி விழவும் அவனைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அச்சத்துடன் விலகி நிற்பதும் அங்கிருந்து நழுவுவதுமாக ஆயினர். அந்த கனவானுக்கு அருகில் போலீஸ்காரன் நின்று கொண்டிருந்தான். சட்டென நிமிர்ந்து நின்று அவன் சல்யூட் அடித்தான். அந்த கனவானுக்கு இளக்காரமான இன்னொரு சல்யூட். அதன் பொருளை போலீஷ்காரன் அறிவான் என்பதால் சிரித்தபடியே ஆனால் இரக்கமின்றி ஓரத்திற்கு அவனை இழுத்துச் சென்றான்.

 

'தண்ணிய கலந்து டூபிளிகேட் சரக்கை விக்கறானுக சார். மப்பு சீக்கிரம் எறங்கிருது. அவனுகளை செக்ஷன் டூ-பி, -ஒன், நய்யன்-சி (எல்லாமே பஸ் நம்பர்கள். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்) பிரகாரம் ஏக்ஷன் எடுங்க சார்' என்றான். போலீஸ்காரனிடம் அந்த சிரிப்பு மறைந்தது. தனக்கு கட்டளையிடும் சாமானியனை அதுவும் குடிகாரனை கீழே தள்ளி ஷூவை அவன் கால் பெருவிரல் மீது வைத்து அழுத்தினான். வலி தாங்காது போட்ட கூப்பாடு வெறுமனே காற்றில் கலந்தது. அவர்கள் ஓரத்திற்கு வந்து விட்டிருந்தனர்.

 

அந்த ட்ராஃபிக் திறந்து விடப்பட்ட தண்ணீர் போல சாலை முழுவதும் பரவி மெதுவாக சீரடைந்தது. நகரும் வேறுபட்ட வாகனங்களிலிருந்த பல நூறு பேர் ஆர்வத்துடன் அந்தச் சாலையோரக் காட்சிக்குள் தங்கள் தலையை விட்டு முக்கி எடுத்து சென்று கொண்டிருந்தனர்.

 

கூடவே வந்து கொண்டிருந்த அந்த கனவான், 'பனிஷ் பண்ணுங்க சார் இந்த நாய்யை..' என பல்லைக் கடித்தான். இப்போதும் அது ஒரு கட்டளை போல தான் ஒலித்தது. ஆனால் தன் கோபத்தை விழுங்கிக் கொண்டு 'நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்..' என்ற போதும் அக்கனவான் நகராமல் நிற்பதைக் கண்டு கீழே கிடந்தவனை இரண்டு உதைகள் விட்ட பிறகு திரும்பி முறைத்து , 'எங்க சார் உங்க ஹெல்மெட்..வண்டி புக் எடுத்துட்டு வாங்க .' எனக் கடுமையானக் குரலில் உத்தரவிட்டான். பிறகு அந்த கனவானை அங்கு காணவில்லை.

 

குடித்தவன் மிக பலகீனமானவன். அறைவது போல ஆபத்து பிறதில்லை. தலையில் தாக்கவே கூடாது. எனவே கால்களின் மீதும் முதுகிலும் லத்தியால் விளாசி 'எந்திரிச்சுப் போடா தாயோளி..தாலி அறுக்கறதுக்குன்னே வர்றானுக' என லத்தியை ஓங்கினார்.

 

'சார்ர்ர்ர்ர்...' என்றபடியே காலை நீட்டி அண்டர்வேரைத் தளர்த்தி 2 ஐம்பது 2 நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினான். சூழ நிற்பவர்களைக் கண்டதும் அந்த போலீஸ்காரன் கடும் சினத்துடன் அவனை மீண்டும் விளாசி அவர்களை விரட்டினான். அந்த அடியில் சற்றே மென்மை இருந்தது. அவனும் வேண்டுமென்றே வலிப்பது போல நடித்தான். எவரும் அங்கில்லை எனத் தெரிந்ததும் அந்த நோட்டுகளைப் பிடுங்கினான். அருகில் செத்துப்போன முகத்துடன் நின்றிருந்தவளைக் காட்டி

 

'யார்ரா இவ..?' என அதட்டும் குரலில் கேட்டான்.

 

'என் கட்டுனவ சார்..அக்கா மவ..ஆசப்பட்டு கட்டுனது சார். கூலிக்காரனுக்கு தர மாட்டேன்னு என் மச்சான் சொல்லிட்டாரு. அவளுக்கும் எம் மேல பிரியம் தான் சார். சலுப்புல் தூங்கீட்டு இருந்தவன எங்கம்மா உலுக்கி எழுப்புது. பதறி எந்திரிச்சா 3 மணி. அந்நேரத்திக்கு கையில மஞ்சப்பையோட வாசல்ல நிக்கற சார். ஒன்னும் புரியல. ஏம்புள்ளனு கேட்டேன். ..ன்னு அழுகுறா சார்...' தொடர்வதற்குள் 'உங்கதய எவண்டா கேட்டான்.மூட்றா..' என்றதும் கப்சிப் என அடங்கிவிட்டான்

 

'இங்க வாம்மா..' என அவளை அழைத்து அந்த நோட்டுகளில் ஒரு ஐம்பதையும் ஒரு நூறையும் அவளிடம் கொடுத்துவிட்டு இன்னொரு ஐம்பதையும் நூறையும் பாக்கெட்டில் சொறுகிக் கொண்டான். சிறிது தூரம் சென்றவன் திரும்பி வந்து இன்னொரு ஐம்பதை அவள் கையில் திணித்து விட்டு குறுக்காக பைக்கை ஓட்டி வந்தவனால் தேங்கிய வாகனங்களைச் சீர்செய்ய விசில் ஊதியபடியே ஓடினான்

 

இன்னும் பணம் அவனிடம் இருக்கும் என அவளுக்குத் தெரியும். வலிக்கும் இடத்தை நீவி விட்டுக் கொண்டிருந்தவன்

சீருடையுடன் கடந்து செல்லும் சிறார்களை நோக்கி 'தங்கங்களே நாளை தலைவர்களே..' என மீண்டும் ஆரம்பித்தான். அவளுக்கு பகீரென்றது. பள்ளி முடித்து திரும்பிய பிள்ளைகள் பூட்டிய வீட்டின் முன் அமர்ந்திருக்குமே..! 'ஐய்யோ..பாவி..' என கத்தினாள். யார் எது கொடுத்தாலும் வாங்குத் தின்னும் பழக்கமும் இல்லை. பெண் பிள்ளையாவது பரவாயில்லை. பையன் பயந்து இன்னேரம் அழ ஆரம்பித்திருப்பானே..! 

 

கோபத்தில் அவன் முடியை பற்றி ஆட்டித் தள்ளி 'வூட்டு சாவியக் கொட்றா..' என்பதற்குள் கண்ணீர் வந்துவிட்டது. அவனுக்கு கண்கள் சொறுகிக் கொண்டன. வலது பக்க அண்டர்வேர் பாக்கெட்டில் துழாவினாள். ஏதுமில்லை. இடதுபக்கத்தை அவன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். போராட்டம் தோல்வியில் முடிந்தது. அருகிலிருந்த கல்லைத் தூக்கினாள். மறுவினாடியே கையைத் தளர்த்தி பூட்டை உடைக்க பயன்படும் என்பது போல அந்த கல்லை மடியில் கட்டிக் கொண்டாள்.

 

தான் சென்ற கொஞ்ச நேரத்தில் எழுந்து மறுபடியும் குடிக்க போகாமல் இருக்க வேண்டுமே..! சாலையோரத்தில் கிடந்த மண்ணை எடுத்து கொஞ்ச நேரம் விரலிடுக்கில் வைத்தபடியே எங்கோ நெடுங்காலம் உறங்கிக் கொண்டிருக்கும் தெய்வங்களிடம் முறையிட்டு அவன் நெற்றியில் திருநீறு போல பூசி விட்டு எழுந்து ஓடினாள். மனம் அடித்துக் கொள்ள மெதுவாகத் திரும்பி பார்த்த போது கொசுக்கள் உடம்பின் மீது எப்போது இறங்கலாம் என்பது போல அவன் தலைக்கு மேல் சுழன்று கொண்டிருந்தன.