Monday, October 17, 2016

கடலோரம் அழியாக் காலடிச் சுவடு மற்றும் முதல் சந்திப்பு.

கடலோரம் அழியாக் காலடிச் சுவடு


’எழுதணும்ன்னு ஆசைப்படுறேன் சார்..’ இரண்டாவது சந்திப்பின் போது சுந்தர ராமசாமியிடம் சொன்னேன். ’நல்ல ஆசை தானே’ என்றார். சிரித்தேன். அவர் சிரிக்காமல் ஆமாம் என்பது போல தலையசைத்தார். சிறு இடைவெளி விட்டு ‘பயமா இருக்கு’ என்றேன். இப்போது மெல்ல சிரித்தார். ’என்ன பயம்..எழுத்து மேலயா..?

’இல்ல. எழுதுவது நல்லா வருமான்னு’

’ஓ..அது இன்னும் விஷேசம் ஆச்சே.! ஆனா எழுத்து மேல பயம் இருந்தா ஒண்ணுமே செய்ய முடியாது. காலம் ஓடிடும்’ மேலும் மனதளவில் நெருங்கி அமர்ந்தேன். ‘எழுதுகிற வரைக்கும் அப்படியெல்லாம் பலதும் தோணும். ஆனா உட்கார்ந்து எழுத ஆரம்பிச்சிடணும். இப்போ எழுதுறதுக்கே பயந்தா பின்னாடி எல்லாம் இன்னும் பயம் வந்திடும். நாளைக்கு எழுதற பத்தி இன்னைக்கே ஆசை படணும். என்னென்ன திட்டம் இருக்கு. எப்படி அதை செயல் படுத்துறதுன்னு யோசனை ஓடணும்.’ 

பெரிய விஷயமெல்லாம் சின்ன பையனிடம் பேசுவதாகத் தோன்றியது. ஆனால் அவர் சம அளவில் வைத்தே எப்போதும் உரையாடுபடுவராக இருந்தார். ‘ரைட்டிங்கிறது ஒரு ட்ரீம் இல்லையா.. ஆனா அது பகல் கனவா போயிடமா பாத்துக்கணும்’ என்று கூறி கண்ணாடிக்குள் உருளும் கண்மணிகளை மேலும் சிறியதாக்கி பற்கள் தெரியாமல் உதடு விரித்தார். அந்த ’ட்ரீம்’ என்னும் சொல் ஏனோ அந்தச் சூழல், சொன்ன தொனி போன்றவற்றால் மனதில் அப்படியே தங்கிவிட்டது. ‘ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா பிரசுர நோக்கத்தில கவனமா இருக்காம எதையாவது எழுதிப்பார்த்துக்கிட்டே இருங்க. சொல்ல வந்ததை சரியா சொல்ல முடியுதான்னு பார்த்தா உங்களுக்கே தெரியும்.’ என் முகத்தை பார்த்த பிறகு இன்னும் பொறுமையாக ’நீங்க வழியில பார்க்கிற மனிதர்கள், இயற்கை, பாதிக்கிற சம்பவம்ன்னு எழுதிப் பார்க்கலாம். அப்பறம் இதழ்களுக்கு கடிதம் எழுதறது, படிச்ச புத்தகத்தை பத்தி மதிப்புரை மாதிரி எழுதப்பார்க்கறது எல்லாம் நல்ல பயிற்சி’. அவரைச் சந்தித்து திரும்பும் போதெல்லாம் இது போன்ற சொற்களை எடுத்து வந்திருக்கிறேன். கைகளில் கூழாங்கற்களை உருட்டுவது போல பயணம் தோறும் அவற்றை மனதிற்குள் உருட்டுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது.

பின்னால் இருக்கும் இரண்டை எடுத்துக் கொண்டேன். இலக்கிய இதழ்களுக்கு கடிதங்கள் -குறிப்பாக அவற்றில் வெளியான சிறுகதைகள் குறித்து- அவ்வப்போது எழுதினேன். நூல்களை மதிப்பிட்டு எழுதியதும் நல்ல பயிற்சியாக அமைந்தது. மேலும் ஒன்று சொன்னார் ‘விடாம வாசிக்கணும். எழுத்தாளனுக்கு இலக்கியம் வாசிச்சா மட்டும் போதும்ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு. அப்படியில்ல. அறிவுலகத்தில் இது தான் வாசிக்கணும்ன்னு இல்லை. வேற வேற துறையில் இருக்கிறதையும் வாசிக்கலாம். அது எப்போ எங்கே உங்களுக்கு யூஸ் ஆகும்ன்னு சொல்லவே முடியாது.’ கொஞ்சம் இடைவெளி விட்டு ‘அப்படி யூஸ் ஆகாம போனத் தான் என்ன? ஒண்ணைக் கத்துக்கிட்டீங்க இல்லயா.! பிறகு எதைப் படிக்கணும்ங்கறது அவங்க அவங்க டேஸ்ட்டைப் பொறுத்தது. ஆனா படிக்கணும். தொடர்ச்சியா வாசிக்காத ஒருத்தன் நல்லா எழுதறான்னு சொன்னா அதை நம்ப மாட்டேன்.’ என்று நிறுத்தினார். அவர் தேர்ந்த உரைநடையாளர்(Stylist) என்ற போதும் மனதையும் மொழியையும்  புத்துணர்வு கொள்ளச் செய்வது கவிதையே என்று சொல்லிவந்தார். அவரது பல உரைநடைகள் இன்று எழுதப்படும் கவிதை போலவே இருப்பதைக் காணலாம். ஆனால் அவர் எழுதிய கவிதைகளில் சிலவற்றைத் தவிர்த்து மீதியுள்ளவைகளில் தன் உரைநடையில் தொட்ட இடங்களை விடவும் குறைவே. அதை அ.கா.பெருமாளுக்கு அளித்த நேர்காணலில் அவரே ஒப்புக் கொள்ளவும் செய்திருக்கிறார். ஆனால் உரையாடலிலும் கடிதங்களிலும் அக்கவித்துவத்தை அவர் விட்டுவிடவேயில்லை. ஒரு இசை ஆல்பத்தைக் கேட்ட பிறகு அது குறித்து தன் நண்பரிடம் சொல்லும் போது ‘அது மனதைப் பிடுங்கி ஆகாயத்தில் எறிந்தது’ என்று சொல்லியிருக்கிறார்.  

நான் போய் சந்தித்த ஆண்டுகளில் அவருக்கு நேரம் என்பது குறைவானதாக போதுமானதாக இருக்கவில்லை. ஆறு மாதங்கள் அமெரிக்காவில் இருப்பார். அவருடைய பழைய நண்பர்கள் அவரை விட்டு விலகியிருந்த நாட்கள் அவை. அப்போது அவருடன் தொடர்ச்சியான கடித தொடர்பில் மூவர் மட்டுமேயிருப்பதாக ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார்.  மூவரில் மற்ற இருவரும் நல்ல வாசகர்களே. ’பொள்ளாச்சி’ கோபாலகிருஷ்ணன், ’தடா’ சிறைக்கைதி ஏழுமலை. இவர்களில் கோபாலையும் என்னையும் அறிமுகப்படுத்தி வைத்து கடிதத்தொடர்புக்கு வழிகோலினார். நாங்கள் இருவரும் கடிதங்கள் எழுதிக் கொண்டோம். அந்த வயதில் ஒன்று நினைவுக்கு வந்தது. சு.ராவைக் க.நா.சுவின் பாத்திரத்திலும் எங்கள் இருவரையும் சு.ரா கிருஷ்ணன் நம்பி பாத்திரத்திலும் இருப்பதாக கருதினேன். என்னை விட வயதில் மூத்தவர் என்பதால் நான் கிருஷ்ணன் நம்பியாக இருந்து கொள்கிறேன், கோபால் சு.ராவின் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளட்டும் என நினைத்தேன். ஆனால் தலைகீழாக சு,ரா நம்பியைப் பார்க்க அவிநாசிக்கு வந்திருந்தார். கையில் க.நா.சு எழுதிய கடிதம் இருந்தது. பேசிய பிறகு கடிதத்தை கோபால் தந்தார். அதில் சு.ரா ‘உங்களுக்குள் நட்பு மலர்ந்தது சந்தோஷத்தைத் தந்தது. நேரம் இருக்குமென்றால் இருவருக்கும் மத்தியில் இருக்கும் ஊரில் பத்து நாட்கள் தங்கி இருந்து உங்களுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறேன்’ என்னும் பொருளில் அவருக்கு எழுதியிருந்தார். அவரது பணிகளுக்கு இடையே அது சாத்தியமேயில்லை தான். ஆனால் அப்படியொன்று அவருக்குத் தோன்றியதே..! முடியுமென்றால் அதை செய்துமிருப்பார். ’அவராகவெல்லாம் ஆக முடியாது’ என்று இருவரும் பேசிக் கொண்டோம். ’ஆகாமல் போனால் தான் என்ன?’ என்று தோன்றுவதற்கு மேலும் சில ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால் அது வேறு தலைமுறை. கசப்புகள் எல்லா காலகட்டங்களிலும் இலக்கியத்திற்குள் இருந்து கொண்டு தான் இருந்தன. அதைக் கடந்து அவர் பாஷையில் சொல்வதென்றால் அப்போது ‘கொஞ்சம் சொரணை இருந்தது’.   ’வழவழப்பு மட்டும் இல்லாம பாத்துக்கணும்’ என்று எழுத்து பற்றிய வேறொரு உரையாடலில் சொன்னார். ‘கச்சிதம் பத்தி சொல்றீங்களா’ என்றேன். ‘அதுவெல்லாம் எழுதி முடிச்ச பிறகு..ரைட்டிங்குள்ளயே அது வராம இருக்கிறது நல்லது. அதுவும் ஆரம்பத்துலயே அதுல கவனமா இருந்தா பின்னால சிரம படவேண்டியதேயில்லை’ என்றார். அவருக்கு எழுதும் கடிதங்களில் வாசித்த நூல்கள் அது பற்றிய என் கருத்துக்களை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதில் தவறாமல் சென்று வந்த இலக்கிய கூட்டங்களைக் குறிப்பிடுவேன். ஒரு பதிலில்  ’அதையெல்லாம் தெரிவு செய்து தான் செல்ல வேண்டும். அது தான் ஆரோக்கியத்துக்கு நல்லது’. என்றிருந்தார். அன்று அவ்வரிகள் புரிந்த  உதவி மிகப் பெரிது.

சுந்தர ராமசாமியிடம் பேசும் போதும் கடிதத்திலும் முதலில் எப்போதும்  அவர் கேட்கும் கேள்விகள்  ’சமீபத்தில் என்ன புத்தகம் வாசித்தேன்?’ ’ஏதேனும் புத்தகம் வேண்டுமா? தேவையெனில் நூலகத்திலிருந்து அனுப்பச் சொல்கிறேன்.’ என்பதாகவும் தான் இருந்திருக்கிறது. அவர் மறைவுக்கு ஒரு மாதத்திற்கு முன் அவருக்கு எழுதிய கடிதத்தில் அதே கேள்வியைக் கேட்டிருந்தேன். ’நேரம் குறைவு. பல மரத்தைக் கண்ட தச்சன் ஒன்றையுமே வெட்ட மாட்டான்’ என்பது போல போய்க் கொண்டிருக்கிறது’ என அமெரிக்காவில் இருந்து பதில் எழுதினார். ஆனால் அவர் முன்னர் வெட்டிச் சீராக்கி வைத்திருக்கும் மரங்கள் கண் முன்னே ஆயிரக்கணக்கான பக்கங்களாக விரிந்திருக்கின்றன. நாம் ஆசைப்பட்டு ஆனால் வெட்டப்படாமல் இருக்கும் மரங்கள் நம் நினைவை ஊடறுக்கின்றன. இவையே இந்த நினைவுக் கட்டுரையின் செய்தியாக இறுதியில் எஞ்சி இருப்பதாகக் கருதுகிறேன்.   

நன்றி : தி இந்து நாளிதழ்

16.10.2016 அன்று நாளிதழில் இந்து நாளிதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்.
--------------------------------------------------------------------------------------------------------------------

முதல் சந்திப்பு

சுந்தர ராமசாமி மறைவுக்குப் பின் அவர் குறித்து எழுதப்பட்ட நினைவுக் கட்டுரைகளில் அவரை முதன் முதலில் சந்திக்கச் சென்றது பற்றிய குறிப்பு பெரும்பாலும் இடம்பெற்றிருந்தது. அவற்றில் ஏழோ எட்டோ கட்டுரைகளில் ஒரு பகுதி ஒன்று போலவே இருந்ததைக் கண்டிருக்கிறேன். நேராக நாகர்கோவில் கிளம்பிச் செல்வார்கள். பிறகு சுதர்சன் கடையைத் தேடிக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் பலரும் உள்ளே போக மாட்டார்கள். கடையின் முன் கொஞ்ச நேரம் அப்படியே நடப்பார்கள். வந்து பார்த்தால் கண்ணாடி ரேக்கிற்குப் பின் சு.ரா அமர்ந்திருப்பதைக் காண்பார்கள். பிறகும் நடந்து பார்த்து விட்டு வந்தால் அப்போதும் உள்ளே உட்கார்ந்திருப்பார். ‘என்ன இது?’ என்னும் தயக்கத்துடன் திரும்பி சென்று விடுவார்கள். பிறகொரு நாள் தான் அச்சந்திப்பு நிகழ்ந்ததாக எழுதியிருப்பார்கள். மலையாள எழுத்தாளர் சி.ஜே.தாமஸை காணச் சென்றதை ‘என் கடவுள் கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்துத்’ திரும்பி வந்து விட்டதாக சு.ரா எழுதியிருந்தது அப்போது நினைவுக்கு வந்தது. அது போலவே எம். கோவிந்தனைப் பார்க்கப் போய் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த போது காகத்தின் எச்சம் மேலே விழுந்ததை சாக்காக வைத்துக் கொண்டு திரும்பி விட்டதாக சு.ரா எழுதியிருப்பார். மேற்கண்ட கட்டுரைகளில் ஒன்றிரண்டு பேர் உண்மையைத் தவிர எழுத்தில் வேறெதுவும் பேசாதவர்கள். அவர்களைத் தவிர பிறர், கட்டுரை ‘அப்படியே ஸ்டைலாக’ வர வேண்டும் என்பதற்காக ’அப்படி’ எழுதியிருப்பார்களோ என்னும் ஐயம் எனக்கிருக்கிறது. அது ஐயம் தான் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

கடிதம் எழுதிக் கேட்ட பின்பு, சுமார் ஆறு மாதக் கடிதத் தொடர்புக்கு பின்(வாரத்துக்கு இரண்டு கடிதங்கள் வீதம்) அவரைக் காண என் இருபத்தியொன்றாவது வயதில் கிளம்பினேன். அப்போது கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு இரவு இரயில் கிடையாது. ’பகல்நேர பாசஞ்சரில்’ தான் போக வேண்டும். சுமார் 12 மணிநேரப் பயணம். போய் இறங்கியதும் அழைக்கச் சொல்லி எழுதியிருந்தார். குரல் எப்படி இருக்கும் என்ற கற்பனையுடன் ரயிலடியிலிருந்து தொலைபேசினேன். மென்மையான குரலில் அவர் பெயரைச் சொல்லாமல்  பக்கத்து வீட்டு டாக்டர் பெர்யரையும் எதிர்புற அடையாளத்தையும் சொல்லி முகவரி சொன்னார்.  ஆட்டோக்காரர் இறக்கி விட்ட போது இரவு ஒன்பது இருக்கும். நானும் உள்ளே எட்டிப்பார்த்து அந்த ரோட்டில் ’கேட் வாக்’ செய்திருக்கலாம் தான். ஆனால் அது போல இந்த கே.பி.சாலை இருக்கவில்லை. ‘உன்னப்புடி..என்னப்புடி’ வேகத்தில் வாகனங்கள் குறுக்கு மறுக்காக பாய்ந்து கொண்டிருக்கும். நானும் போகலாமா வேண்டாமா என்னும் யோசனையில் அங்கு முன்னும் பின்னும் நடந்திருந்தால் என் உயிரை அவர் வீட்டின் எதிரேயிருக்கும் வேட்டாளி அம்மனால் கூட காப்பாற்றியிருக்க முடியாது.

’சாப்பிட்டேனா’, ‘பாத்ரூம் போகிறீர்களா’ என்றெல்லாம் கேட்டுவிட்டு ’பயணமெல்லாம் எப்படி இருந்திச்சு..ரொம்ப நேர உட்கார்ந்துக்கிட்டே வரணுமே’ என்றார்.

’ஆமா சார்..ஆனா டிக்கெட் விலை ரொம்ப கம்மி சார். திருப்பூர்ல இருந்து இங்க வர வரைக்கும் முப்பத்தி மூணு ரூபா தான் சார்” (முப்பத்தி மூணா அறுபத்தி ஆறா எனக் குழப்பமாக இருக்கிறது)

”ஓ..அதனால் தான் இதுல வந்தீங்களா..”

‘அதுவும் ஒரு காரணம் தான் சார்..ஆனா சார்..”

”யென்ன?”

”நாகர்கோவில் வர்றதுக்கு முப்பத்து மூணு ரூபா..ஆனா ஸ்டேசன்ல இருந்து இங்க வர்றதுக்கு ஆட்டோக்கு இருபது ரூபா சார்”

’கொடுத்துட்டீங்க இல்லயா..’

அது கிண்டல் எனத் தெரியாமல் ‘ஆமா சார். கொடுத்துட்டு தான் கீழே இறங்கினேன். ஆனா அவர் கிட்ட நீங்க சொன்ன அட்ரஸ சொல்லல. ராமவர்மபுரத்துல சுந்தர ராமசாமி வீடுன்னு தான் கேட்டேன். தெரியாதுன்னு சொல்லிட்டார் சார். இவ்வளவு வருஷமா எழுதிக்கிட்டு இருக்கீங்க..” சட்டென இடைமறித்து அதில் அக்கறை காட்டாதவராக மீண்டும்

”சாப்பிட்டீங்களா..” என்றார். அப்போது ஒல்லியும் உயரமுமாக குச்சி மாதிரி இருப்பேன். எனக்கு முன்னரே பொள்ளாச்சியிலிருந்து கோபாலகிருஷ்னன் என்னும் என்னை விட ஆறேழு வயது மூத்தவர் அவருக்கு அறிமுகமாகி நட்புடனும் கடிதத் தொடர்புடனும் இருந்தார். கோபாலுக்கு திக்குவாய் இருந்தது. அதற்கு சில ஆண்டுகள் கழித்து சு.ரா எழுதிய ’ஒரு ஸ்டோரியின் கதை’யில் வரும் இரு வரிகள் எங்களுக்கானது என நம்புகிறேன். ‘மூங்கில் கழி போல வளர்ந்திருந்த அந்த வயசாளி’ என்பது எனக்கானதாகவும் ‘பிறவியிலிருந்தே திக்கத் தொடங்கியிருந்த வயசாளி’ என்னும் வரி (வரிகளை நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன்) கோபாலுக்கானதாகவும் கருதினேன். இதை கோபாலிடம் சொன்னேன். சு.ராவிடம் ’சரி தானா சார்? எனக் கேட்க கூச்சமாக இருந்தது. எனவே கேட்கவேயில்லை.


அதுவரை இருந்து கொண்டிருந்த கூச்சம் புதிய இடம் பற்றிய தயக்கம் எல்லாம் சிறிது சிறிதாக அகன்று கொண்டிருந்தது.

”திருநெல்வேலில டிரெயின் அரைமணி நேரம் நின்னுச்சு சார். அந்த ஸ்டேசன்ல புரோட்டா சாப்பிட்டேன்.”

’ஆனா அவருக்கு உங்க பேரு தெரியாதது வருத்தமாக இருந்துச்சு சார்…’ என்றேன் மீண்டும்.

சட்டென தலையை நேர் தூக்கிப் பார்த்து நிமிர்ந்து அமர்ந்து தானாக தலையை அசைத்த பிறகு ”காலேஜ் ப்ரோபசர்களுக்கே என் பேர் தெரியாது. என்னையும் தெரியாது..” என் முகத்தைப் பார்த்த பின் ”அதிர்ச்சியா இருக்கா.. போக போக இதெல்லாம் உங்களுக்கே தெரியவரும்” என்றார்.

உள்ளே இருந்து கமலாம்மா வந்தார். அறிமுகப் படுத்தினார். எழுந்து நின்று வணக்கம் சொன்னேன். சுரா பற்கள் தெரியாமல் சிரிக்க கமலாம்மா ‘மோர் குடிக்கறேளா’ என்றார்.

‘என்னது மோரா..! நைட் ஒன்பது மணிக்கா..! வெயிலுக்குத் தானே மோர் குடிப்பாங்க.’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் அப்படி ஒரு அம்மா வந்து கேட்டால் எப்படி வேண்டாமென்பது? தலையாட்டினேன்.

அதிர்ச்சியாகும் விதமாக சு.ரா கேட்டார் ‘வீட்ல சொல்லீட்டுத் தானே வந்தீங்க’

பயந்த முகத்துடன் ’ஆமா.. ஏன் சார்?”

’இல்ல. அவ்வளவு தூரத்துல இருந்து என்னப் பார்க்க மட்டும் தான் வந்தீங்களா? வீட்ல எதுவும் சொல்லலயா’  என அடுத்த கேள்வியைக் கேட்டார்.

மேலும் பயமாகி ’உங்க லெட்டர் எல்லாம் வருதே சார். அவங்களுக்குத் தெரியும். போற வர்ற இடமெல்லாம் சொல்லீட்டு தான் வருவேன். உங்களப் பத்தியெல்லாம் அவங்க கிட்ட சொல்லியிருக்கேன் சார்’ என்றேன். ஆனா ஏனோ அந்தக் கேள்வியை மறுபடியும் கேட்டார். அப்போது புரியாமலும் குழப்பமாகவும் இருந்தது. மேலும் சில ஆண்டுகள் கழித்து பிற எழுத்தாளர்கள் எழுதியிருந்ததை வாசித்த பின்பே தெளிவு பிறந்தது. இரண்டாவது முறையும் ’என்னைப் பார்க்கத் தான் இந்த வயசுல அங்க இருந்து வந்தீங்களா?’ எனக் கேட்ட போது ’ஆமாம்’ என்று சொன்னதில் இருந்த உறுதி இன்றும் நினைவில் அசைகிறது.

என்னை ஒரு மாதிரி சகஜநிலைக்கு கொண்டு வந்துவிட்டிருந்தார். நானும் பயணத்திலும் வீட்டிலும் ”அவரிடம் என்ன பேச வேண்டும்?” ”என்ன கேட்க வேண்டும்” என்பதையெல்லாம் யோசித்தபடியே இருந்ததை நினைவுக்கு கொண்டு வந்து கொண்டிருந்தேன். யாரும் அவரிடம் அவர் படைப்பைப் பற்றிக் கூறாத ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் துடிப்புடனும் உற்சாகத்துடன் அந்த வயதிற்கேயுரிய முதிர்ச்சியில்லாத உடல் அசைவுகளுடன் தயார் ஆகிக் கொண்டிந்தேன். இலக்கியம் பேசுவதென்றால் அவர் படைப்பைப் பற்றித் தானே இருக்க முடியும் என்னும் நம்பிக்கையில் மூளையில் திரட்டிக் கொண்டிருந்தேன். இலக்கியம் சம்பந்தமாக முதல் கேள்வியை, நேரடியான உரையாடலைத் தொடரும் பொருட்டான முதல் கேள்வியாக

‘புதுமைப்பித்தனைப் படிச்சிருக்கேளா?’ என்றார்.