சாம்பல்
சவ அடக்கத்துக்கு வந்தவர்களிடம் காணப்பட்ட எதிர்ப்பார்ப்பும் ஆவலும் அவர்களது கண்களில் பதுங்கி இருந்தாலும் பேச்சினிடையே சூசகமாகவும் நடவடிக்கைகளிடையே பளிச்சென்றும் தெரிந்து விட்டிருந்தது.
ஆறுமுகத்தை அழைத்து வர ஆள் போயிருக்கிறது. அவரைக் கூட்டி வருவதற்குள் சொத்து விவரங்களைத் திரட்டும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தன. பரந்து விரிந்து கிடந்த அந்தச் சாம்ராஜ்யத்தில் ஒவ்வொரு நிறுவனத்தின் மேலாளர்களையும் தலைமை மேற்பார்வையாளர்களையும் கூட்டி வந்து
கடைசி அறைக்குள் ரகசியமாக அடைத்து வைத்தாயிற்று. கொஞ்சம் சத்தமாகத் தும்மினாலே பயந்து விவரங்களைக் கொட்டி விடக் கூடியவர்கள் தான். இருப்பினும் அது போதாதே..!
இறந்தவரின் உடைமைகளிலிருந்த வில்லங்கங்களை முறித்து அந்த உரிமைதாரர் சொன்னபடி செய்து கொடுத்த வழக்கறிஞர்களும் கணக்கில் காட்டியவையும் கணக்கில் வராமல் திரண்டு நிற்பவையுமான எண்ணிலடங்கா செல்வங்களை அறிந்திருக்கும் ஆடிட்டர்களும் இளநீரை கையில் ஏந்தியபடி ஆளாளுக்கு ஒரு மூலையில் அமர்ந்திருந்தனர். அங்கு வந்திருந்தவர்களில் யார் எவருக்கு என்ன உறவு? யாரிடம் எதை எப்படி ஆரம்பிப்பது? என்பதை அறிய வழியின்றி அவர்கள் குழம்பிப் போயிருந்தனர். ஏனெனில் இது சாதாரணமாக முடியாது என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. சூழ்ந்து நிற்கும் திமிங்களங்களுக்கிடையே இந்த சற்றே பெரிய மீன்கள் என்ன செய்து விட முடியும்? கடந்து செல்பவர்களின் சிரிப்பே பல விஷயங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்வது போலிருந்தது. பின்னாலுள்ள தோப்புகளில் பரிமாறத் தொடங்கிவிட்ட மதுவகைகளையும் இறைச்சிகளையும் வயிற்றுக்குள் கொட்டிக் கொண்டிருப்பவர்கள், தங்கள் விசுவாசத்தைக் காட்ட எந்த எல்லைக்கும் செல்லக் கூடும். இவ்வளவு இருந்தும் என்ன? அடுத்தடுத்து விழுந்த இரு பெரிய சாவுகளுக்குப் பின்னர் கூட நெஞ்சுருக்கி அழும் ஒரு முகத்தைக் கூட இதுவரை அங்கு பார்க்க முடியவில்லை. செய்தி கேட்டு ஆத்மார்த்தமாகத் திரண்டு வந்து சேர்ந்த எண்ணற்ற ஜனங்களை உள்ளே விடாமல் தடுக்க தடியர்கள் பூதங்கள் போல வெளிக் கதவின் முன் நிறுத்தப்பட்டிருந்தனர். அந்த திரளின் கண்ணீர் தான் அந்த தம்பதிகள் சேர்த்த உண்மையான, நிகரற்ற செல்வம் எனத் தோன்றியது. எனவே தான் வெளியேயிருந்து கற்கள் பறந்து வந்து முன் வாசலில் விழுந்த சிறிது நேரத்திலேயே கண்ணாடிப் பேழையைச் சுற்றி வந்து வணங்கி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். குறிப்பிட்ட சதவீதம் பங்கு தந்து விட வேண்டும் என்கிற பேரம் படிந்த குஷியில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ எவரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாதென உத்தரவு பிறப்பித்திருந்தார். கல் விழுந்த சத்தம் கேட்டு மேல் தளத்திலிருந்து பார்த்த போது மலைத்து விட்டார். தான் தன் கட்சிக்கு இவ்வளவு கூட்டத்தைத் திரட்ட ஒவ்வொருமுறையும் பணத்தை நீராகச் செலவழிக்க வேண்டி வருமே என்கிற ஆதங்கம் சூடான பெருமூச்சாக வெளியேறிற்று. இங்கு அது தன்னியல்பாக நடந்திருக்கிறது..! சூழ்நிலையை உணர்ந்து தலையசைத்த பின்னர் நுழைவாயில் திறக்கப்பட்டது.
காக்கிகளின் தொடர் கண்காணிப்பினால் தான் இதுவரை அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. இருபுறத்துச் சொந்தங்களும் கோச்சை சேவல் போல திமிறிக் கொண்டு கச்சைக் கட்டியபடி யாருக்கு அதிக பங்கு?அதை எப்படி எடுத்துக் கொள்வது? போன்றவற்றை காரசாரமாக முழங்கியபடி சச்சரவிட்டுக் கொண்டிருந்தனர். விஷயம் மிகவும் சிக்கலுக்குரியதாக நிமிடத்துக்கு நிமிடம் மாறிக் கொண்டிருந்தது. அது பூதாகரமாக வெடிப்பதற்கான முஸ்தீபுகளுடன் முறைத்தபடியே அவர்கள் அலைவது கண்ணில் பட்டது. அவர்களில் ஒருவன் தான் ஆறுமுகத்தை அழைத்து வர போயிருக்கிறான். அவன் காரைக் கிளப்பித் திரும்பிய வேகத்தைப் பார்த்தவர்களுக்கு, அங்கு குழுமியிருப்பவர்களின் மனதிற்குள் நொதித்துக் கிடப்பது என்ன என ஏகதேசமாகத் தெரிந்திருக்கும். பேராசையின் அலை அவர்களை நிலத்தில் கால் பாவவிடாமல் செய்திருந்தது. சொத்து மதிப்பைத் தோராயமாக கணக்கிட்டுப் பார்த்த, கணக்கில் தற்குறிகள் கூட பரவசத்தில் சில அடிகள் வளர்ந்திருக்கவும் பூரிப்பில் கிலோக்கணக்கில்
கலோரிகள் பெருகியிருக்கவும் கூடும். அதனால் தான் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் செல்லும் ஆறுமுகத்தை அத்தனை கண்களும் விடாமல் பின் தொடர்கின்றனவோ..!
அரசாங்க கோப்புகளுக்கிடையே பல பத்தாண்டுகள் வாழ்ந்து , பத்திரங்களில் ஓடும் எழுத்துக்களின் மேல் ஒருமுறை கண்களை ஓட்டினால் சம்பந்தப்பட்ட அசையும் அசையா ஆஸ்திகளின் வரைப்படத்தைத் துல்லியமாகக் காணும் ஆற்றல் கொண்டவர் 'பெரியப்பா' எனப் பலராலும் (அந்த பட்டப்பெயர் கிடைத்தக் கதை சுவாரஸ்யமும் வேடிக்கையுமானது) அழைக்கப்பட்ட ஆறுமுகம். அவற்றின் தற்பொதைய சந்தை மதிப்பை எந்தக் கணக்கீட்டுக் கருவிகளின் துணையுமின்றி பைசா சுத்தமாக கூறியபின் தன் கால்களுக்குக் கீழே சுழலும் பூமியை பரிதாபமாகப் பார்த்தபடி தடித்த கண்ணாடியை கழட்டி அதில் படிந்திருக்கும் தூசியை வேட்டி ஓரத்தில் மெதுவாகத் துடைப்பார். காதலியின் காதுமடலை பிரியத்துடன் வருடுவது போல அது இருக்கும். அத்தகைய சூரரே இரண்டு தடவைக்கும் மேல் காகிதத்தில் அடித்தல் திருத்தல்களுடன் போராடிய பின்னும் போதிய திருப்தியற்று மீண்டும் குனிந்து புள்ளிகளும் வரைபடக்கோடுகளும் ஆக்கிரமித்திருக்கும் தன் தாளுக்குள் நிரம்பியிருக்கும் எண்களின் குளத்தில் நிதானமாக இறங்க வேண்டி வந்தது.
அப்படிப்பட்ட ராஜாங்கத்தைக் கட்டி ஆண்ட அதிபதியான குப்பண்ணன் மூப்பில், இரண்டாவது இருதய அடைப்பில் போய் சேர்ந்த கால்மணி நேரத்தில் , அவரது சொல்லுக்குள் ஓர் உலகை சமைத்து அவரது நிழலுக்குள் தன் எல்லையை வகுத்து வாழ்ந்து வந்தவளும் மணம் முடித்து வருகையில் தன் பங்குக்கு பாதி ஊரையே கொண்டு வந்தவளுமான பழனியம்மாள் நிறைந்த மஞ்சள் குங்குமம் அழியாதவளாக அவருடன் துணை சேர்ந்தாள். இவர்களுக்கிருந்த ஒற்றை வாரிசு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நாற்பதாண்டுகள் ஆகிவிட்டன. கன்னிகழியாத தன் மகனை சுடுகாட்டுக்குத் தொட்டில் கட்டித் தூக்கிச் செல்லக் கிழித்துத் கொடுத்த சேலையின் மிச்சத்தை தான் நேற்று வரை
தலைமாட்டில் வைத்து தூங்கினாள். அவரோ தான் ஈட்டிய வெற்றிகள் ஒவ்வொன்றும் கொழித்த செல்வமாகப் பெருகிய போது அவற்றை தன் மகன் பெயரால் துலங்கச் செய்தார். அதுவரை அந்த இல்லத்திற்குள் காற்று நுழைந்தால் அது பின் வாசல் வழியே வெளியேறிச் செல்லக் குறிப்பிட்ட நேரம் பிடிக்கும்படியான விஸ்தீரனமான வீட்டில் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்த மகனின் பெயர் அவர் கால்பதித்து நின்ற ஊர்களிலும் நகரங்களிலும் ஒரே நாளில் பல நூறு தடவைகள் எதிரொலிக்கும்படி ஆயிற்று.
பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளின் லட்சிணையாக தன் மகன் யானை மீது அமர்ந்திருக்கும் படத்தையே பயன்படுத்தினார். பருவ காலத்து மழையென அவரது தயாள குணம் ஊரின் இண்டு இடுக்குகளிலெல்லாம் பரவி நிறைத்தது. ஈகையினால் அவர் பெயர் நகரத்தின் ஓர் அடையாளமாகவே மாறியது. வரவேற்பறையில் அமர்ந்து குழைந்து நெளிந்த கோவில் தர்மகர்த்தாக்களை அவர் நம்பாமல் நேரடியாகவே திருப்பணிகளை மேற்கொண்டார். பத்து விரல்களாலும் அள்ளிக் கொடுத்த நன்கொடைகளைப் பெற்றுக் கொண்ட கட்சிகள் அவரை அமைச்சராக்கும் யோசனையை பணிவுடன் சொன்ன போது வெடித்த சிரிப்புடன் எழுந்து போய் காறித் துப்பிய பின் வந்தமர்ந்து கனைத்தப்படியே 'ம்ம்ம்...' என உறுமினார். கரைவேஷ்டிகள் தலை தூக்காமல் எழுந்து போயினர். அவர்கள் மிரட்டிப் பார்க்கத் தலைப்பட்ட போது அவர் அளித்த தொகையைப் பகிரங்கமாக வெளியே கசிய விட்டார். பிறகு அந்த அதட்டல்கள் புஸ்வானமாகி மறைந்தன. தன் அம்மா வழி தாத்தாவின் உயரமும் தன் தந்தையின் உடல்வலுவும் கொண்டிருந்த குப்பண்ணன் ஓங்கு தாங்காக வந்து நின்றால் அதுவரை வெற்றுக் காற்றில் வாள் வீசியப் பேசிக்கொண்டிருந்த எதிராளிகளின் குரல்கள் இருந்த இடந்தெரியாமல் பம்மி பதுங்கிவிடும். அவர் தான் சலனமின்றி குளிரூட்டப்பட்ட பேழையில் கிடக்கிறார்.
அவரது இறப்புச் செய்தி பரவிய கொஞ்ச நேரத்தில் அந்த ஊருக்குள் நுழையும் வழித்தடங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. சுற்றுவட்ட ஊர்களுக்கு பொது விடுமுறையை அறிவிக்கும்படி கலெக்டருக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்த அரைமணி நேரத்தில் சாலைகளெங்கும் மாணவர்களும் அவர்களைக் கூட்டிச் செல்ல வந்த பெற்றோர்களுமாக சிற்றாறு உருவாகி தேங்கி உறைந்து நின்றது. ஹாரன்களின் பேரிரைச்சல் குழந்தைகளை அழ வைக்க மட்டுமே பயன்பட்டது.
கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறையையடுத்து திரையரங்க வாசல்களில் குவிந்த இளையோர்கள், முன் கேட்டில் சிறிய சரடு கோர்த்து அவரச அவரமாக ஒரு வித கிறுக்கலுடன் எழுதப்பட்ட 'காட்சிகள் ரத்து' அட்டையைக் கிழித்தெறிந்து கூக்குரலிட்டனர். சிவப்புக் கொண்டை சைரனை அலறவிட்டபடி வரும் வாகனத்தின் சத்தத்தைக் கேட்டதுமே அந்த இடமே துடைக்கப்பட்டது போல சில நிமிடங்களில் வெறிச்சோடிப் போயிற்று.
பொது நிகழ்ச்சிகளில் குப்பண்ணன் எத்தனை ஆர்வமாகக் கலந்து கொண்டாரோ அதற்கு முற்றிலும் மாறாக தன் சொந்தங்களிடமும் சுற்றங்களிடமும் முற்றாக விலகி சென்றார். தன் மகனின் அகால மரணத்திற்குப் பிறகு நம்பிச் சேர்த்துக் கொண்ட சில உறவுகளின் பச்சை முகத்தைப் பார்த்த பிறகு அவர்களை மொத்தமாக தலை முழுகினார். அவருக்கு வைத்து சென்ற சோற்றை வயிற்றுக்கோளாறால் அவரது செல்லக் கோம்பை நாய்க்கு வைத்து விட்டு படுக்கச் சென்றார். காலையில் மனைவியின் அலறல் தான் அவரை எழுப்பியது. அந்த நாய் நுரை தள்ள கண்கள் சொருகி கால்கள் பின்ன உயிரற்றுக் கிடந்ததைப் பார்த்தார். இரவு அதன் தட்டில் கறிச் சோற்றைப் போடுவதற்குள் அவர் கைகளை ஓயாமல் நக்கியபடி அவரை தன்னோடு இருத்திக் கொள்ள முன்னங்கால்களால் இடுப்போடு அணைத்துக் கொண்ட ஜீவன் அது. மடியில் போட்டுக் கொண்டு அழுதார். எச்சரிக்கையடைந்து அதை வெளியே காட்டாமல் உளவு பார்க்க ஆரம்பித்தார். அவர் தோப்பில் சுருட்டுப் புகைத்தவாறு யோசனையுடன் நின்ற போது எங்கிருந்தோ விழுந்த எச்சத்தை துடைத்தபடியே சற்று நகர்ந்தார். தென்னையின் உச்சியிலிருந்து காய்கள் சற்று முன் அவர் நின்ற இடத்தில் சராமாரியாக விழுந்தன. பிறகு மட்டைகளும். இரண்டுமே குறிப்பிட்ட தினங்களுக்குள் நடந்திருந்தன. அது ஒரு சதி. யார் என்பதை அறிந்தார்.
சம்பந்தப்பட்டவர்களை ஆட்களிடம் சொல்லி அங்கஹீனர்களாக்கி நெடுந்தொலைவு சென்று விட்டு விட்டு வரச் சொன்னார். பிறகு பந்தமென்று ஒரு குஞ்சு கூட அந்த வளாகத்திற்குள் நுழைய முடியவேயில்லை.
தவிர்க்கவே முடியாத சுப/துக்க நிகழ்ச்சிகளுக்கு மனைவியை அனுப்பி வைப்பதோடு சரி. அவள் பிறவிச் செவிட்டூமை போல பாவனை செய்தபடி அங்கு உலவி விட்டு திரும்பி வருவாள். அன்றிரவு உணவு பரிமாறும் போது அங்கு கண்டவற்றையும் அறிந்தவற்றையும் ஒரு படம் போல கண்முன் ஓட்டிக் காட்டுவாள். அவள் தொடுத்துக் காட்டும் நிகழ்ச்சிகளின் லட்சணங்களுக்கேற்ப அவரது முகபாவம் மாறும். அவருக்கு எவரைப் பற்றியேனும் ஐயங்கள் இருந்தால் அது கேள்விகளாக உதிரும். சில சமயங்கள் பதிலுரைப்பாள். சில பொழுது அங்கிருந்து நகர்ந்து விடுவாள். அவருக்கும் புரிந்து விடும். கோம்பையின் நினைவிலிருந்து மீள ஏழெட்டு நாய்களை வளர்க்க ஆரம்பித்தார். ஐந்தாறு பங்காளிகள் தங்கள் குழந்தைகள் எவரையேனும் தத்தெடுக்கச் சொல்லி தூது அனுப்பியதற்கான பதில் அது. அவை அவ்விருவரென்றால் மூச்சு இரைய ஓடி வந்து நிற்கும். எங்கேனும் புதிய ஆளின் தும்மல் கேட்டால் கூட காற்றில் முகத்தைத் தூக்கி ஆட்களை தேட ஆரம்பித்து விடும். 'நாயா கொல்லி வைக்கப்போகுது..?' எனும் கிண்டல் செய்பவர்களுக்கும் 'எவந் திங்கறதுக்கு இப்படி சேத்தி வைக்கணும்னு கேக்கறேன். த்தூ..த்தெரிக்க..' என வசவைக் கொட்டுபவர்களுக்கும் பதில் சொல்வது போல ஒவ்வொரு ஆண்டும் நிறுவனங்களை அதிகப்படுத்தியபடியே வந்தார். மனைவியிடம் புதிய பத்திரங்களைத் தருந்தோறும் அவள் தயங்கி நிற்பதைக் கண்டு சுவர் முழுக்க நிறைந்திருக்கும் மகனின் படத்தின் முன் வைத்து விட்டுச் சென்று விடுவார். அவள் ‘சாமீ…எந்தங்கமே..’ என நெக்குருகி ஏதோ நேற்று இறந்தவனுக்கு அழுவது போல குமுறி கண்ணீர் வடிப்பாள். படத்தை எட்டி கைகளால் அவன் கன்னத்தை வருடி முத்தமிட்ட பின் புது தெம்புடன் நடந்து செல்வாள்.
பல்வேறு மட்டங்களில் குப்பண்ணன் கொண்டிருந்த தொடர்புகள் குவிந்து கொண்டேயிருந்த மாலைகளாலும் சொகுசுக் கார்களை நிறுத்த இடமற்று
வெகுதொலைவில் கிடைத்த இடத்தில் சொறுகிவிட்டு நடந்து வரும் பிரமுகர்களாலும் வெளிச்சத்துக்கு வந்தது. அந்தச் சாவு வீடு அல்லோலகல்லோலப்பட்டது. பழைய மாலைகளை எடுத்துச் செல்ல மட்டும் நால்வர் அருகிலேயே காத்திருந்தனர். மேளங்களை நெருப்பில் காட்டும் இடைவெளிகளில் மட்டும் தான் பிறர் என்ன பேசுகிறார்கள் என்பதே மற்றவர்களுக்கு கேட்டது.
ஆறுமுகத்துக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் சில உறவினர்களுக்கு பிடிக்கவேயில்லை. ஆனால் அவரது முதிர்ந்த அனுபவத்தின் முன் பலரும் அமைதியாக அமர வேண்டி வந்தது. ஓய்வு பெற்ற பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக நில அளவீடுகளுக்கும் அதனால் ஏற்பட்ட தகராறுகளுக்கும் தீர்வை அளிப்பவராக அதன் மூலம் கிட்டும் வருவாயை குடித்து காலி செய்பவராக இருந்தார். குப்பண்ணன் குவித்து வைத்துள்ள செல்வங்கள் ஒவ்வொன்றின் இன்றைய மதிப்பை தன் தொடர்புகள் மூலம் கேட்டு அறிந்த பின் அவருக்கு வியர்வை ஊற்றுப் போல பெருகிற்று. எப்படி சாத்தியம் என்கிற மலைப்பு விலகவேயில்லை. அது அவர் நினைத்திருந்ததற்கும் பல மடங்கு மிகுந்திருந்தது.
இத்தனைக்கும் அவரது பாட்டானர் இலவசமாக எழுதிக் கொடுத்த மூன்று இடங்களில் தான் இன்று அரசாங்க கல்லூரியொன்றும் இரு மேல்நிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன. அவை நகரின் மையத்திலுள்ளவை. அந்த தானசெட்டில்மெண்ட் போக குப்பண்ணன் கணக்கின்றி செய்த உதவிகளையும் மீறி இத்தனையென்றால் அவருக்குக் கடவுள் மீது கட்டுக் கடங்காத கோபம் மூண்டது. தினமும் இரண்டு மணி நேரம் பூஜை செய்பவர் அவர். இறந்த பெரியவரை கோவிலில் பார்த்த நினைவே அவருக்கில்லை. கட்சிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என நினைத்தார். கமிஷனைக் கூடுதலாக கறாராகப் பேசி வாங்கி விட வேண்டும்.
ஆறுமுகமும் தன் வாழ்க்கையில் சொத்துசுகத்திற்காக ஆலாய் பறப்பவர்களை தினுசு தினுசாகப் பார்த்தவர் தான். ஒரு அடி நிலத்துக்காக வெட்டுகுத்துகள் நடந்து கொலைபாதகங்களில் முடிந்தவை ஏராளம். நாளிதழ்களில் அவை தான் நிறைந்திருக்கின்றன.
சொத்துப் பங்கீடுகளில் உரியவர்களிடையே தீ பற்றுவதற்கு முன் தன் நான்கு வன்மையால் சமரசங்கள் ஏற்படுத்தி கலவர மேகங்களை கலைத்தும் விட்டிருக்கிறார். அவையெல்லாம் மிஞ்சினால் நான்கைந்து நபர்கள் சம்பந்தப்பட்டவையாக இருக்கும். குலதெய்வங்களின் பேரில் சத்தியம் பெற்றப் பின்னரே பத்திரங்களை கையில் வாங்குவார். அளவுகளும் மதிப்புகளும் கணக்கிட்ட பின் மாற்று அபிப்ராயம் இருந்தால் ஒரு தரப்பிலிருந்து ஒருவர் மட்டும் பேச வேண்டும். அவர் கூறும் துல்லியமான பதிலால் மறுகேள்விக்கு அங்கு வேலையே இருக்காது. எந்த பக்கத்திலிருந்தும் சாதகமாகப் பேச ஒரு பைசா கூட வாங்க மாட்டார்.
ஆனால் இங்கு முற்றிலுமே தலைகீழாக இருப்பதைக் கண்டார். ஆறு முழுத்தாள்களில் நிறைத்த பின்னரும் ஓரங்களில் குறிப்பு போல எழுதி வைக்க வேண்டி இருக்குமளவுக்கு குப்பண்ணன் ஆட்சி செய்திருக்கிறார். போதிய படிப்பறவு அற்றவர் எப்படி இந்தளவுக்கு அபாரமான நிர்வாகியாக செயலாற்ற முடிந்தது என்கிற வியப்பை பெருமையாகவும் புலம்பலாகவும் பொறாமையுடனும் பேசிக் கொண்டே இருப்பதைக் கேட்டார். மிகப் பெரிய வம்பில் வந்து மாட்டிக் கொண்டோமோ என அச்சமடைந்தார். குப்பண்ணன் தரப்பிலிருந்தும் பழனியம்மாள் கிளையிலிருந்தும் தரப்பட்ட உரிமைகோரலுக்குரியவர்களின் எண்ணிக்கை 63ஆக இருந்தது. அந்த பட்டியலில் ஆறு மாதக் குழந்தையும் 90ஐ கடந்த மூன்று கிழங்களின் பெயர்களும்
உச்சபட்சமாக இன்னும் இரு மாதங்களில் பிறக்கவிருக்கிற சிசுவும் இருந்தன. இறந்தவர்களுக்கு எந்த வகையில் உறவு அதன் வழி அவர்கள் பெற வேண்டியது எவ்வளவு முதற்கொண்டு அதில் எழுதப்பட்டிருந்தது. வாசித்தபடியே வந்தவர் உள்ளுணர்வு உந்த மிகப்பெரிய பிழையொன்றை செய்தார். ஆனால் அதை செய்யாமல் தீர்வை எட்ட முடியாது என்றும் தோன்றியது. இரு தரப்பையும் அழைத்து தாள்களைப் பரஸ்பரம் கை மாற்றிக் கொடுத்தார். அதுவரை ஊரார் பேச்சுக்கு பயந்து பிணங்களின் அருகில் அமர்ந்திருந்த பெண்கள் மிக வேகமாக கிளம்பி மேல் தளத்துக்கு வந்தார்கள். கதவுகள் அடைக்கப்பட்டன. ஒரு சதவீதம் கூட பாத்யதை அற்ற, இந்த காசுக்கு ஒரு இணுங்கைக் கூட கிள்ளிப் போட்டிருக்காதவர்களின் முகங்களில் தெரிந்த ஆவேசம் பீதியூட்டுவதாக இருந்தது.
ஆச்சரியகரமான விஷயம் அந்த அம்மாள் நகையென்று எதையுமே வைத்திருக்கவில்லை. கழுத்தில் போட்டிருக்கும் தாலிக்கொடி ஆறேழு பவுன் வரக்கூடும் என முன்னர் அங்கிருந்த ஒருத்தி அவர்களுக்குச் சொன்னாள். பிறகு முப்பது நாற்பது சுங்கடி சேலைகள். அவ்வளவே தான். அந்த வீடு இரண்டாகப் பிளந்து விடும் எனும்படிக்கு கடைசித் துண்டு இறைச்சிக்கு நாய்கள் குற்றுயிரும் குலையிருமாக அடித்துக் கொள்வது போல மூர்க்கமாகச் சண்டையிடத் தொடங்கினார்கள். கட்சிக்காரர்கள் சொல்லியும் கேட்பதாகயில்லை.
மெதுவாக அங்கிருந்து நழுவிய ஆறுமுகம் தோப்புக்குள் நுழைந்து கழுத்துவரைக்கும் குடித்து விட்டு தள்ளாடியபடியே திரும்பிய பிறகும் இரைச்சல் அடங்கியிருக்கவில்லை. ஒரு மணி நேரம் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப பேசிய பின்பும் முடிவுக்கு வராமல் தங்கள் தரப்பை நிலைநிறுத்துவதற்கான ஆற்றலை கொடுக்கமளவுக்கு பணம் எத்தனை வீரியம்மிக்க வஸ்து என்பதை மீண்டுமொருமுறை உணர்ந்தார். கீழே வந்து செல்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்கிற இங்கிதமெல்லாம் எப்போதோ காற்றில் போய்விட்டது. பிணத்தை எடுத்து விட்டால் செல்லக்காசாகி விடுவோம். அதற்குள் முடிவு கட்டி விட வேண்டும் என தீர்மானித்தவர்களாக வசவுகளைப் பொழிய ஆரம்பித்தார்கள். சடங்கு செய்யும் உரிமை யாருக்கு என்பதில் நிலவிய பேதங்கள் இப்போதைக்கு முடிவுக்கு வரும் என்று தோன்றவில்லை. பங்காளிகள் எடுத்து வந்த கோடித்துணிகள், வண்ணார்களின் நெய் பந்தங்கள் நெடுநேரமாகக் காத்திருக்கின்றன.
வசமாக வந்து இவர்கள் கையில் சிக்கிக் கொண்டு விட்டோம் என்று தோன்றியது. ராஜபோதையானாலும் மிக நிதானமாக தெளிவுடன் பேசும் பழக்கம் கொண்டவர். ஆனால் அன்று மிகவும் உணர்ச்சிவயப்பட்டிருந்தார். குப்பண்ணனின் உறவுமுறைகளுக்கு தான் வலுவான அதிகாரம் இருப்பதாக வாய் தவறிச் சொல்லி விட்டார். ஏன் அதை சொன்னோம் என மறுவினாடியே சுதாகரித்தும் பயனிருக்கவில்லை. அதைச் சரிகட்டி இன்னொரு தரப்பை குளிர்வித்துச் சமாதனமாக்கக் குரலெடுப்பதற்குள் அவரை யாரோ சுவற்றோடு சேர்த்து அடித்தார்கள். காதுக்குள் பேரொலியொன்று கேட்பது போல அவருக்குத் தோன்றியது. அவர் விரும்பி ஊற்றிய சரக்கை பிடுங்கிக் கொண்டு சென்றவன் அந்த அம்மாளின் உறவுக்காரன். அந்த கோபத்தில் அப்படிச் சொல்லியிருப்போமோ என நழுவி கீழே விழும்போது தோன்றியது. ஆனால் அதற்கு எந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை. தன் அப்பாவின் விரல்பிடித்து பள்ளிக்கு சென்ற முதல் நாள் அவர் நினைவுக்கு வந்தது. அப்படியே கண்களை மூடினார். உயிர் அடங்கிற்று. அந்த வீட்டில் மூன்றாவது பிணம் விழுந்தது.
தகவல் பரவியதும் ஒரு கட்சிக்காரர் கூட அங்கிருக்கவில்லை. சொந்தங்களில் மூவரைக் கைது செய்து கொண்டு சென்றனர். திடீரென்று எங்கிருந்தோ மழை கொட்டத் தொடங்கியது. இடி முழங்க பார்வையை பறிக்கும் வெளிச்சத்துடன் மின்னல்கள் பளீரென ஒளிர்ந்து அடங்கின. அந்த மழை நிற்கவேயில்லை. ஆறு நாட்கள் சிறிதும் இடைவெளியின்றி கொட்டித் தீர்த்தது. இரு காவலர்கள் மட்டும் அந்த வீட்டை காபந்து செய்து கொண்டிருந்தார்கள். பாக்கியுள்ளவர்கள் அந்த கொலை நடந்த மறுநாள் வெளியேற்றப்பட்டு விட்டிருந்தனர். மொத்த நிர்வாகத்தையும் அதையொட்டிய சொத்துகளையும் அரசு கையகப்படுத்துவதாக உத்தரவு வெளியிட்டது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தவர்கள் அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடையைப் பிறப்பித்தார்கள். நீதிமன்ற கண்காணிப்பில் செயல்பட அறிவிப்பு வெளியாயிற்று.
ஏழாம் நாள் வானம் வெறிச்சிட்டு விட்டது. நான்காம் நாள் கிளம்பிச் சென்ற காவலர்கள் திரும்பி வரவேயில்லை. எனவே அந்த இருவரும் நடு வீட்டில் அனாதைப் பிணங்கள் போலக் கிடந்தனர். ஊர் முழுக்க மழையால் இருண்டு கிடந்த போது அந்த பெரிய வீடு முழு வெளிச்சத்துடன் திகழ்வதை பலரும் வியப்புடன் பார்த்து சென்றனர். உள்ளூர் காவல் அதிகாரி, தாசில்தார், வழக்கறிஞர், மருத்துவர் முன்னிலையில் அந்த இருவரின் உடல்களும் ஏழாம் நாள் மதியம் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது. அந்த மகனின் விஸ்வரூப புகைப்படத்தின் முன் இரு தீபங்களை ஏற்றி வைத்தது யார் என அங்கிருந்தவர்களால் அறிய முடியவேயில்லை. அந்த சிறிய சுடர் எப்படி மொத்த வீட்டையும் ஒளிரச் செய்யும் என்கிற புதிரும் விளங்கவில்லை. நிலவறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர்களது செல்ல நாய்கள் வாயிலின் முன்னாலும் வீட்டைச் சுற்றிலும் படுத்தபடியும் நடந்தபடியும் இருப்பதைக் கண்டனர். அவர்கள் நுழையும் போது அந்த கண்ணாடிப் பேழை நான்கடிக்கு மேலே மிதப்பது போல காணப்பட்டதற்கு எந்த அறிவியல் விளக்கங்களிலும் பதில் இருக்கவில்லை. மேலும் அவ்விருவரின் உடம்பிலிருந்து துளி நாற்றம் கூட எழவில்லை. அவை ஊதிப் பெருத்து போயிருக்கவுமில்லை. விபரீதங்களின் அணிவகுப்பை உணர்ந்து அங்கிருந்து வெளியேறினால் போதும் என ஆளாளுக்கு கிளம்பிச் சென்றனர்.
அன்றிரவு நடுநிசி தாண்டி காவல் நிலையத்துக்கு தகவல் வந்து கிளம்பிப் போய் சேர்வதற்குள் அந்த வீடு பிரம்மாண்டமான சொக்கப்பனை கொளுத்தப்பட்டது போல வானுயர்த்திற்கு கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதையே அவர்களால் பார்க்க முடிந்தது. அந்த நாய்கள் ஏதோ வளையத்திற்குள் குதிப்பது போல அந்த நெருப்பிற்குள் சென்று விழுந்தன. நெருப்பை அணைக்க எடுத்த போராட்டங்களுக்கு எந்த பயனும் இருக்கவில்லை. அந்த பத்திரங்கள் தாஸ்வேஜாக்கள் அவற்றைக் கொண்டு ஆறுமுகம் கணக்கிட்டு கொடுத்த தாள்கள் இன்னபிற ஆவணங்கள் அனைத்துமே
வீட்டின் ஒரு அறைக்குள் தான் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த அறையிலிருந்து தான் முதலில் தீ கிளம்பி மொத்த வீட்டையும் ஆட்கொண்டதை ஒருவரும் அறிந்திருக்கவில்லை.
***************