Sunday, September 24, 2017

வருகை-சிறுகதை

வருகை


சிறுகதை


அடிகுழாயின் கைப்பிடிமேல் அமர்ந்து அரைக் கண்ணை மட்டும் மூடி நின்று ஒண்ணுரெண்டுநாலுஏழு என இளங்கோ எண்ணிக் கொண்டிருந்தபோதேஎளிதில் அகப்பட்டுவிடாத இருளான இடங்களை நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தோம். எட்டு மணிக்கு மேல் அதில் தண்ணீர் வராது. அவனை ஐஸ்” அடிப்பதற்கு வாகான இடத்தில் ஒளிந்த சமயத்தில் தூரத்தில் அப்பா பீடி எறிவதைப் போலவே ஒருவர் எறிவதைப் பார்த்தேன். பகீரென்றது.அது அவரல்ல என உணர்ந்து சமனப்பட்டபோது நடுத் தெருவிற்கு அம்மா வந்து நின்று ஓங்கிய குரலில்,“சேகரூ... ரூ... டேய்... கல்லெண்ணய வாங்கீட்டு விசுக்குன்று ஒடியா... வூட்ல வேல நெறயக் கிடக்கு” என்றாள்.

தண்ணீரில்லாத தொட்டியிலிருந்து மெல்லக் கண்களை மட்டும் உயர்த்தியதில் அம்மாவின் பின்னால் முந்தானையை ஆட்டியவாறே விஜி நிற்பது தெரிந்தது. பதுங்கிய இடங்களை இளங்கோ அலசிக்கொண்டிருந்தான். தொட்டியைக் கைநீட்டி விஜி சேர்ரு... சேர்ரு” என்றது. துள்ளலான நடையுடன் இளங்கோ எனை நோக்கி வந்தான்.

ஏம்மா இப்புடிக் கத்தற... காது கேக்குதெடு” என்றவாறே இளங்கோவைக் காணாதது போல அம்மாவிடம் சென்றேன். அவன் என் முதுகில் குத்தி  

ஒண்ணு... ஒண்ணு” எனக் குதித்தான்.

நானு ஆட்டத்துக்கு வரல” என்றேன்.

என்னையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தபின் பயந்த பேடி பாப்பரான்டீ... எங்க வூட்டுச் சாம்பராணி” என இடைவெளியின்றிக் கூவியவாறே ஓடினான்.

கோபமாக அம்மாவிடம் திரும்பி வெளையாடீட்டு வர்றக்குள்ள அப்புடியென்ன அவிதி உனக்கு” என்றேன்.

நீ வர்றக்குள்ள பட்டணம் விடிஞ்சி பாழாப் போயிரும்.

யேன்... நீ போனாத் தரமாட்டேனுடாங்களா?”

அப்பறம் உன்னய என்னத்துக்குப் பெத்தது?”

எண்ணய வாங்கத்தான் பெத்தயா?”

ஏதுபயம் வுட்டுப் போச்சாட்டயிருக்குது... பதிலுக்குப் பதில் வருது... கம்பியக் காச்சி வாய் மேல இழுத்துறுவேன். ஜாக்கரதை!” என்றாள்.

எரிச்சலுடன் விஜியின் அருகம்புல் ஜடையைப் பிடித்து மேல்நோக்கி இழுத்தேன். சிணுங்கினாள்போடாக் கழுவாட்டு நாயி... எப்பப் பாத்தாலும் புள்ளகூட ஓரியாட்டங் கட்டீட்டு” என்றாள் அம்மா.

வெடுக்கெனக் கூடையைப் பிடுங்கி பாக்கிய நா வச்சுக்குவேன்” என்றேன்வந்து கைகாலக் கழுவீட்டுப் படிக்கற ஜோலியப் பாரு... இல்லீன்னா உங்கப்பங்கிட்ட சொல்லீருவேன்.
அப்பாவுக்கு அவர் வரும்போது புத்தகத்தின் முன் அமர்ந்திருக்க வேண்டும்.

என்ன அய்யாவுக்கு ஊர் சுத்தற ஜோலியே தீராது போலிருக்கு” என்பார்.

இல்லீங்கப்பா.

அப்புறமெப்பிடிடா கால் முச்சூடும் புழுதியாக் கிடக்கு?” என்று கையை ஓங்கி உச்சந்தலை முடியைப் பிடிக்க ஆவேசமாக வருவார்.
தப்பித்து அம்மாவின் கால்களுக்குள் புகுந்து கொள்வேன். வெளியே இழுக்க எவ்வளவு முயன்றாலும் அம்மா தன் தொடைகளுக்கிடையே இறுக்கிக் கொள்வாள். சேலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன்.

எல்லாமும் நீ கொடுக்கற செல்ல மயிரு தாண்டீ” என அம்மாவின் முதுகில் அடிவிழும் சத்தத்தைக் கால்களுக்குள் சிக்கி நடுங்கியபடியே கேட்டிருப்பேன். இன்று சனிக்கிழமை. அப்பாவின் சம்பள நாள். பழைய சனிக்கிழமைகளின் நினைவுகள் துடிப்புள்ள மூளையின் மீது தடித்த பிரம்பால் அடிப்பதைப் போன்று தாங்க முடியாத வலியைத் தந்தவையாக இருந்திருக்கின்றன.

வெறும் வாணலி காய்ந்துகொண்டிருந்தது. அதில் எண்ணெய் ஊற்றியதும் புஸ்” என வந்த சத்தத்தில் சிரித்துக் கைகளைத் தட்டிக்கொண்டே விஜிஅம்மாவின் பின்னால் போய் நின்றாள். அவள் சிரிக்கையில் கண்கள் உள்ளே போய்விடும். அம்மா அவளை வளைத்து மடியில் போட்டுக்கொண்டாள். பாதியில் விட்டு வந்த விளையாட்டில் மனம் ஓடிக்கொண்டிருந்தது. சுமையாக மடியில் புத்தகம் கனத்தது. மணலை அரைத்துத் தேய்க்கும் செருப்பின் சத்தமோ... அடித் தொண்டையிலிருந்து கோழையை இழுத்துஅதை ஓசையோடு காறித் துப்பும் சத்தமோ கேட்கிறதா எனச் செவியைக் கூர்மையாக்கிக் கேட்டேன். அவரது வருகையை முன்னறிவிப்பவைகளாக இவை இருந்தன. அடியைத் தவிர வேறொன்றும் அறியாத குடிகாரத் தகப்பனால் அப்பா வளர்க்கப்பட்டாரென அம்மா சொல்லியிருக்கிறாள்.பாதி எரிந்திருந்த கொள்ளிக்கட்டைகளை அம்மா நன்றாக உள்ளே திணித்துவிட்டாள். மஞ்சளும் செந் நிறமுமாக அடுப்பு எரிவதை விஜி கண் எடுக்காமல் பார்த்து அமர்ந்திருந்தாள். அம்மா காகிதத்தை உள்ளே எறிந்தாள். நெருப்பு நீலமாக மாறிச் செந்நிறத்தோடு கலந்தது. எதையோ கூற வாயெடுத்துக் கைநீட்டிப் பின் அதை வாய்க்குள் வைத்து அம்மாவைப் பார்த்தாள். கடுகை அள்ளி எண்ணைக்குள் இட்டதும் படபட’ வெனப் பொரிந்தது. இடது காலைத் தட்டி நானு நானு” என மடியிலிருந்து திமிறித் துள்ளினாள்.

எந்தங்கமெங்கமயிலுக் குட்டியப் புடி புடி புடி ...” என என்னை நோக்கினாள்.

உடனே தலைகவிழ்த்து வையத்துள் வாழ்வாங்கு”, “வையத்துள் வாழ்வாங்கு” என முன்னும் பின்னும் ஆடியபடியே குறளை மனப்பாடம் செய்ய முயன்றேன். ஒன்றையே பத்துத் தடவைகளுக்கு மேல் திருப்பிக் கூறாவிட்டால் தலையில் ஏறாது.

விஜியை வெளியேவிட்டு டேய் இவகிட்ட விளையாட்டக் காட்டுஅதுக்குள்ள கிளறி இறக்கி வைச்சர்றேன் என்றாள்முட்டு... முட்டு... முட்டு” எனக் கூறியபடியே அவள் தலையில் மெதுவாக முட்டினேன். அடக்க முடியாமல் சிரித்ததில் வாயிலிருந்து நீர் ஒழுகி அவள் கைகளில் வழிந்தது. முத்தங்கள் பொழிந்து மடிமீது இருத்தி வேறு புத்தகங்களிலிருக்கும் படங்களைக் காட்டியபடியே இருந்தேன்.

எப்போதும் மெதுவாகத் தின்பது என் வழக்கம், “வளர்ற பையன் திங்கறதப்பாரு... தலைநிமிராம அள்ளி அள்ளிப் போடுடா” என அம்மா அவளுக்கிருந்ததிலும் எடுத்து எனக்குப் போட்டாள்.

விஜி பின்னாலிருந்து காலைத் தூக்கி முதுகில் வைத்தாள்.

பொட்டச்சிக்குக் கொழுப்பப் பாத்தயா... ஆம்பளப் பையன் மேலே கால ஓங்கி நிக்கறத” எனப் பட்டென அடித்தாள். அடுப்பின் தழலைக் காண்பதுபோல அம்மாவைப் பார்த்தாள். கோபத்தில் முகம் சிவந்து விட்டிருந்தது. வீறிட்டு அழத்தொடங்கினாள்.

ஊளை போடாதா... வாய மூடு... மூடு வாய” என அவளை அள்ளி இடுப்பில் போட்டு நா வர்றக்குள்ள வட்டல் காலியாயிருக்கோணும்” என விஜியின் வாயின் மேல் அடித்தபடியே வெளியே போனாள்.

இரண்டு மூன்றுமுறை புரட்டியதும் வாயோரம் ஒழுகிய எச்சிலைத் துடைத்தபடியே கண்களைத் திறக்க முடியாமல் திறந்து எழுந்தமர்ந்தேன். கட்டிவந்திருந்த ஓட்டுப் பக்கடாவும் மிக்சரும் பிரிக்கப்பட்டு அதற்கு பின்னால் வெற்றுடலுடன் அப்பா சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தார். சட்டையைக் கழட்டியபடியே வீட்டினுள் நுழைவது அவர் வழக்கம். முழுக்கைச் சட்டையை முழங்கைக்கும் மேலாகச் சுருட்டிவிட்டுச் சட்டையின் முதல் பொத்தானைப் போடாமல் எப்போதும் பீடி புகைத்தபடியே இருப்பார்.எடுத்துத் தின்னுட்டுப் பட்றா” என்றார். நன்றாகச் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தார். கண்கள் சொருகியிருந்தன.

பொட்டப்புள்ளீங்கற நெனப்பில்லாமக் கால அகட்டிப் படுத்திருக்கறதப் பாத்தயா” என அம்மா வேகமாக ஓடிவந்து விஜியின் கவுனை நன்றாக இறக்கிவிட்டாள்.

புள்ளயத் தொடாதடீ ... எங்கம்மாவே அவ ரூபத்துல வந்து எனக்குப் பொறந்திருக்கறா” எனக் கண்களை மூடியபடியே பேசினார்.

ப்பேவ்...வ்” என்ற ஏப்பத்தோடு மெதுவாக நிமிர்ந்து நெஞ்சை நன்றாக நீவிக்கொண்டார். வெறும் வாயை மென்று கண்களை இறுக்கி மூடி எச்சிலை விழுங்கினார்டாய்.. ய்ய... என்னிய ஒருத்தனும் அசைக்க முடியாது” எனக் கட்டை விரலைத் தூக்கி ஆட்டிக் காட்டினார். அது எதிர்ச் சுவரில் பூதாகரமான நிழலாக அசைந்தது. மீண்டும் தரையில் கையூன்றி ஏப்பத்துக்கு முயன்றார். கொசுக்கள் அவர் உடலைச் சுற்றிவந்து அமர்ந்தன.

ங்ஙோத்தா... கான்ட்ரேக்ட் தாயோளி. டேய்... சுண்டக்கா சைஸ் இருக்குமாடா உன்னோடது. நானு மிஷினேறித் தைக்கவந்து பதினஞ்சு வருஷங்கழிச்சுத் தாண்டா நீயி உங்கம்மாவோட கால்வழியா வந்திருப்ப ... நாந் தைச்ச பீஸ மிஸ்டேக்குங்குறயா திருட்டுத் தேவிடியாப்பையா டேய்...” என ஆவேசமாகக் கத்தினார்.

கொழந்தைக இருக்கைல விவஸ்தையோட பேசுறயா” என்றாள்.

உங்கூட்டுக்குக் குப்பைகூட்ட வந்தவன்னு நெனச்சயா... நீயி நானுங்கற... மரியாதையாப் பேசு இல்லீன்னா பல்லப் பேத்துருவேன்” என முஷ்டியை ஓங்கினார். அம்மாவின் பின்னால் நெஞ்சு உதற மூத்தரப்பை கூசும் அளவிற்குப் பயந்து நின்றிருந்தேன்.

ரேட்டுக் கட்டாதுன்னா பீசுக்கு ஐஞ்சு பைசாவக் கம்மி பண்ணு ... பத்துப் பைசாவ... ஏன்டா களவாணித் தாயோளிக் கம்மி பண்றஏன்னு கேட்ட எம் பீஸ மிஸ்டேக்குங்கற” என மூச்சுவாங்கினார்.

கைகாலெல்லாம் அத்துப்போச்சுடா... எட்டு வயசுலேர்ந்து தைக்கறன்டா... கூலியத் திருடி மலையாளச்சிக்குப் புடவ எடுத்துத் தர்றயா... கேப்மாரித் தாயோலி. நீ நாசமாப் போயிருவேடா” எனத் தரையில் ஓங்கி அடித்தார்.

ஏட்டா ஏட்டான்னு அவ கூப்பிட்டதும் ஒண்ணுந் தெரியாதவன் மாரி ஸ்டோர் ரூமுக்குள்ள போய் அவ மேல ஏற்றான். அவோ முதலாளியோட எச்சையடா. எச்சக்கலைத் தாயோலி” எனக் கத்திவிட்டு அமைதியாகக் கிடந்தார்.

உன்ற மொதலாளியோட பூர்வீகந் தெரியுமாடாபீஸத் திருடி வித்தான். செகன்ட்ஸ் பீஸ் யேவாரியக் கைக்குள்ள போட்டுக்கிட்டுக் கமிஷன் அடிச்சான். எங்கிட்ட அண்ணேஅண்ணேன்னு ஓசி பீடி வாங்கிக் குடிச்சவன்டா அந்தத் திருட்டு முண்ட மவன்.

உனக்குக் கைலாகிலீன்னா அவன யேன் கரிச்சுக் கொட்டற” என்றாள்.


அடுத்தவனோட பொழப்ப எனக்குக் கெடுக்கத் தெரிலீயே... அடுத்தவங் குடியில மண்ண அள்ளிப் போட்டவன்... நம்புனவுங்களுக்குத் துரோகம் பண்ணவனெல்லாம் இன்னிக்குப் பனியன் கம்பெனி முதலாளி... அவனுக்கு கார்... பங்களா... கூத்தியா... அவனோடத ஊம்பறததுக்கு இவன மாரிச் சுத்தியும் பத்துப் பேரு... த்தூ.. மானங்கெட்ட நாய்களா” எச்சில் சுவரில் விழுந்து வழிந்தது.

விஜி பயந்து அழுதது கண்டு, “தூக்கீட்டு வெளியில போயிட்டு வா” என அம்மா அழுதுகொண்டே எழுந்து வைத்திருந்ததை அப்பாவுக்குத் தட்டத்தில் போட்டாள். நடுநிசியில் வெளியே வந்தேன். பெட்டை நாயின் பின்னால் உர்... உர்” என நான்கைந்து ஆண் நாய்கள் ஓடிக்கொண்டிருந்தன.

வீடெங்கும் உப்புமா சிதறிக் கிடந்தது. முழங்கையை ஊன்றித் தலை தொங்கிப்போய்க் கிடந்தார். அவர் வாயிலிருந்து நூல்போல எச்சில் தரைக்கு இறங்கிக் கொண்டிருந்தது. அம்மாபொறுக்கிக் கூட்டியெடுத்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் செத்துப்போயிருந்தது.

மொதலாளி வந்தா அவனோட வயிறுவரைக்கும் குனியற நாய் மாரிக் குறுக்கீட்டுப் பதில் சொல்ற... காசு வேணும்னா அவனோடதப் புடிச்சுச் சப்புடா நீயி... எங்க பாவத்தை ஏன்டா கொட்டிக்கற... வூட்டுக்கு வந்தா இந்தப் பாழாப்போன முண்ட ரவயக் கௌறி வைச்சிருக்கறா... நல்லதையெல்லாம் கள்ளப் புருஷன் வந்து மேஞ்சுட்டுப் போயிட்டானான்னு கேக்கறன்.

மயிரப் புடுங்கி.. வாய மூடறயா... இந்த எளவெடுத்த தண்ணி உள்ள போச்சுன்னாபுத்தி ரோட்ல கெடக்கறதயா திங்கப்போயிருச்சு” என்றாள் அடக்க மாட்டாத கோபத்தோடு.

எழ முடியாமல் எழுந்து முதுகில் ஓங்கி உதைத்தார்குப்” எனச் சத்தம் கேட்டதுஅம்மா... அம்மா” என முனகிச் சுவரோடு விஜியைப் பிடித்தபடி நின்றேன்”. அவள் அழுது அழுது சோர்ந்துபோயிருந்தாள்.


கொன்னுரு ... பாவி... என்னயக் கொன்னு போடு. இந்த நரகத்துலேர்ந்து அப்பத்தான் விமோசனம் கிடைக்கும் போலிருக்கு” எனத் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். முடிகள் முகத்தின் மீது கலைந்து விழுந்துகிடக்கமூக்கிலிருந்து நீர் ஒழுகியபடியே இருந்தது.அவர் மீண்டும் அடிக்க எழுந்து ஒரு படத்தைக் கண்டு சற்று நின்ற பிறகு அப்படியே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். அங்கு மஞ்சள் கோட்டும் மஞ்சள் பேண்டும்.... அணிந்து நடுநெற்றியில்சுருட்டிவிடப்பட்டிருந்த முடி விழுந்திருக்க இடுப்பில் கைவைத்துப் புன்னகையுடன் நிற்கும் எம்.ஜி.ஆரின் நல்லநேரம்” படம் மாட்டப்பட்டிருந்தது.அனாதையா வுட்டுட்டுப் போயிட்டியே தலைவா... அல்லாரும் ஏமாத்து நாயிக... ஒன்னக் கொடுத்து ஒம்பதச் சுருட்டிக்கறவனுங்க... தர்மம் தலகாக்கும் சொன்னியே உன்னயக் காக்கலயே...” எனத் தலையைத் தரையில் அடித்துக் கதறினார்.

ரோஸ் கலர்ல அன்பே வா”  வந்து நின்னயே... அய்யோ அத்தனையும் மண்ணுத் தின்னு போடுச்சே....” பரட்டைத் தலையோட சிகரெட்டநாயி பிஸ்கோத்தக் கவ்வற மாரி வாயில கவ்வறவனெல்லாம் தலைவனா... இந்தக் காலக் கொடுமையக் கண்டு எங்க போய் முட்டிக்கிட்டு அழுகறதுண்ணே தெரியிலியே என்ற படியே எழுந்து எம்.ஜி.ஆரின் படத்துக்கு முத்தம் தந்துவிட்டு பேவ்...வ் என ஏப்பமிட்டு மன்னிச்சுக்க... தெய்வமே... மன்னிச்சுக்க... தெரியாமக் குடிச்சுப் போட்டேன். இனிமே குடிச்சுட்டு உம் பக்கத்துல வர மாட்டேன்” என எம்.ஜி.ஆரின் காலைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டார்.அம்மாவைப் பார்த்தேன். தலையில் கைவைத்து வெறித்துப் பார்த்திருந்தாள்.

அந்த மலையாளச்சியும் உன்ன மாதிரித்தான் தலைவா. எடுப்பான கலரு... அவ கண்ணிருக்கே சிலுக்கு’ மாதிரி. அதப் பாத்தாவே மப்பு வந்துரும். ஒரே முந்தானைல முதலாளியையும் அவம் பையனையும் கான்ராக்ட் காரனையும் வளைச்சிருக்கான்னா சும்மாவா.... இல்ல நாங்கேக்கறன்.
தள்ளாடியபடியே வந்து அம்மாவின் சேலையைப் பற்றி இழுத்தார்.

ச்சீய்... அந்தால போ” எனச் சீறினாள்.

திரும்பி நின்று நானென்ன செவுத்துலயா தேய்ச்சுக்கறது” என்றார்.

அய்யோ... சண்டாளா குழந்தீகள வச்சுட்டு இப்புடிப் பேசுறியே... இந்தத் தங்கங்களை எப்படிக் கரைசேத்தப் போறேனோஇதுக உன்னோடது நீதான் காப்பாத்தி ஒப்பேத்தணும்” எனக் கடவுளின் படத்தின் முன் இயலாமையுடன் கண்ணீர் பெருக முறையிட்டு நின்றாள். அம்மா பிறந்ததிலிருந்து வேலையைத் தவிர வேறொன்றையும் அறிந்தவளல்ல. வாய் ருசித்து வயிறு நிறையத் தின்றதுமில்லை. அவளது கல்யாணத்திற்கு முந்தைய மதியம்கூட எருவுக்காகச் சாணம் அள்ளச் சென்றதாகக் கூறியிருக்கிறாள். விஜியைக் கொஞ்சும்போது மட்டும்தான் அவள் சிரிப்பதைப் பார்த்திருக்கிறேன். விஜி துவண்டுபோய் அசதியில் உறங்கிவிட்டிருந்தது.

ஏப்பம் நடுவழியிலேயே தங்கி அப்பாவின் நெஞ்சு அடைத்துக்கொண்டதுடேய் சேகரூ ஏறி மிதிடா” என ஈனஸ்வரத்தில் கூறிவிட்டுக் குப்புறப்படுத்துக் கொண்டார். அவர் முதுகில் ஏறிக் கழுத்திலிருந்து இடுப்புவரை நடந்தபடியே மிதித்தேன்தம்பி மெதுவா மிதி” என அம்மா அருகில் வந்து சொன்னாள். வாயிலும் பின்பக்கத்திலும் காற்று மாறி மாறி வெளியே வந்தது. திடீரென அப்படியே புரண்டார். கீழே விழாமல் சுவரைப் பிடித்துக்கொண்டேன்.

நார்த் ஃபூல எடுடா” என்றவாறே அமர்ந்து மீண்டும் எச்சிலை விழுங்கினார். அவர் பாக்கெட்டில் தேடினேன். பாபின்களுக்கும் நூல்களுக்கும் இடையில் இரண்டு துண்டாக அது கிடைத்தது. உடைக்காத பீடிக்கட்டும் சில பத்து ரூபாய்த் தாள்களும் இருந்தன. நூறு ரூபாய்களை அவர் உள்பாக்கட்டில்தான் வைத்திருப்பார். பொத்தானை விலக்கி அதிலிருந்து அம்மாவுக்குப் பணம் எடுத்துத் தருவதைப் பலமுறை கண்டிருக்கிறேன். அவர் அண்டர் வேரில் லாட்டரிச் சீட்டுகள் இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

பெருங்குரலெடுத்து வாங்கீட்டு வாடா” என்றதும் தரையில் சரிந்தார்.
தம்பி பாத்துப் போ...” எனச் சொல்லிவிட்டு வெளியே வந்து நான் போவதையே பார்த்து நின்றாள்.

இரண்டாம் ஆட்டம் விட்டுக் கூட்டம் கலையும் வரைக்கும் சில கடைகள் அடைக்கப்பட்டிருக்கமாட்டா. போகும் வழியில் சாத்தப்பட்டிருந்த கோவில் முன் நின்று இனிமேல சனிக்கிழமையே வரக் கூடாது” என அழுதுகொண்டே வேண்டிக்கொண்டேன். ரோட்டோரத்தில் அப்பாவைவிடவும் வயதானதலையெல்லாம் வெளுப்பேறின ஆள் முனகியபடியே போதையில் புரண்டுகொண்டிருந்தார். இன்னுமொரு முறை திரும்பினால் சாக்கடைக்குள் விழுந்துவிடுவார் எனத் தோன்றியது. கடைக்காரனுக்கு அவன் வேடிக்கைப் பொருளாக இருந்தான். திரும்புகையில் அந்த அய்யா வூட்டுக்கு நல்லபடியாப் போயிரோணும் சாமி” என்று மனத்திற்குள் கூறியபின் நிற்காமல் வீட்டிற்கு ஓடினேன். சிகரெட்டை அடுப்புத் திட்டுமீது வைக்கையில் வீட்டின் பாதியளவிற்கு வாந்தி நிறைந்திருந்ததைப் பயத்துடன் பார்த்தேன். இடுப்பில் வேட்டியின்றி ஓவ்...” என எக்கிச் செம்மண் நிறத்தில் மீண்டும் அதன் மேலேயே வாந்தி எடுத்தார். விஜி மணிக்கட்டால் மூக்கைத் தேய்த்தபடி புரண்டு படுத்தது. இருளில் நிற்கும் சிலை போல உணர்ச்சியற்ற முகத்துடன் குடத்திலிருந்த தண்ணீரை எடுத்து அதன் மேல் வேகமாக ஊற்றினாள். கட்டுப்படுத்த முடியாமல் என்னைக் கட்டிக்கொண்டு ” வெனக் கதறி அழுதாள்.


எஞ்செல்வமே... இப்படிப்பட்ட மனுஷனோட இந்த உலகத்துல எப்புடிப் பொழைக்கப் போறேன்னே தெரியலயே” என வயிற்றில் அடித்து அழுதாள். விஜி கால்களை அசைத்ததும் வாயைப் பொத்திக்கொண்டே வெளியே ஓடினாள்.

அப்பா சோர்ந்துபோய்க் கைகால்களை விரித்தபடி சுவரில் நன்றாகச் சாய்ந்துவிட்டிருந்தார். விளக்குமாறு கொண்டு நீர் ஊற்றிக் கழுவுகையில் அது அப்பாவின் காலடியில் போய்த் தேங்கி நின்றது. அம்மா தலைதூக்கிப் பார்த்தாள். அவர் அமர்ந்தபடியே வாய் திறந்து குறட்டையிட்டுக்கொண்டிருந்தார்.

(காலச்சுவடு மே 2009)

சில ஓவியங்கள் : நன்றிபொன்வண்ணன் (இதழிலிருந்து  எடுக்கப்பட்டவை)

(‘இரவுக்காட்சி’ எனும் முதல் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை இது)