Monday, August 25, 2014

கண்மணி சேகரன் ” அஞ்சலை”கண்மணி குணசேகரனின் அஞ்சலை


துயரத்தின் சாப நிழல்
               சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே யதார்த்தவாதம் தமிழில் உருவாகி வளர்ந்திருந்தாலும் நாவல் உலகில் அதுவரை மிகச் சொற்பமாக வந்து போயிருப்பவர்கள்,படைப்பின் ஓரங்களில் ஒதுக்கப்பட்டிருந்தவர்கள் தொண்ணூறுகளுக்குப் பின்னான காலங்களிலேயே படைப்பின் ஆக முக்கியமான இடத்திற்கு வந்து சேர முடிந்தது.அதற்கு மாராட்டியத்திலிருந்தும் வேற்று மொழிகளிலிருந்தும் தமிழுக்கு வந்து சேர்ந்த தலித் படைப்புகளின் மொழியாக்கங்களின் பங்கு அளப்பரிது.அதன் தாக்கத்தை பிற மொழிகளை விடவும் தமிழில் அதிகமாகவே காண முடியும்.ஜீவாதாரத்திற்கான அடிப்படைக் காரணிகளக் கூட எட்ட முடியாமல் வாழ்வு மாறாமல் தலைமுறை மட்டுமே மாறிவந்திருப்பவர்களைப் பற்றிய படைப்புகள் இக்காலங்களுக்குப் பின்பே ஊக்கத்துடன் வெளிவரத்துவங்கின.தொய்வடைந்திருந்த யதார்த்தவாதம் மறுமலர்ச்சி கண்டதும் அப்போது தான்.அவர்கள் உலகை கண் முன் நிறுத்துவதுஅல்லது அப்படியே எழுதுவதுஅல்ல படைப்பாளியின் பணி.அப்படி எழுதப்படுவது ஆவணமாகத் தான் இருக்கமுடியுமே தவிர படைப்பாக அல்ல.அங்கு எஞ்சியிருப்பதும் தொகுப்பாளன் மட்டுமே.வாழ்வின் அறிய முடியாத ஊடுபாவுகளின் இழைகளால் ஆன அவனது படைப்பில் அவன் தேர்ந்தெடுக்கும் வண்ணங்கள் கொண்டு நெய்வதின் வழி அவன் காட்டும் உள்ளத்தின் ரகசியங்கள் அதன் நுட்பங்கள் அப்போது வெளிப்படும் அவனது படைப்பு நோக்கு போன்றவையே அவனது ஆளுமையை தீர்மானிக்கும் முதன்மையான காரணியாக இருக்கும்.யதார்த்தவாதம் போலவே இயல்புவாத எழுத்தின் ஊடாகவும் செழுமையடைந்த மொழி நம்முடையது.அவ்வகையில் முந்திரி காடுகள் நிறைந்திருக்கும் மண்ணிலிருந்து வந்திருக்கும் கண்மணி குணசேகரனின் அஞ்சலைஅம்மனிதர்களின் வாழ்க்கையை தன் எழுத்து ஆளுமையால் நம்மோடு ஒன்றச் செய்கிற முக்கியமான ஆக்கம். தமிழில் இயல்புவாத எழுத்தின் முக்கியமான படைப்பாளி கண்மணி.
                  


                  எவ்வளவு வாழ்க்கைப் பாடுகளுக்கிடையிலும் ஒரு பெண் வாழ நேர்ந்தாலும் அவளது மனதில் விழுந்த ஆண் உருவத்தின் மீதான-சிவந்த நிறம்,சுருட்டை முடி,கட்டை மீசை- ஈர்ப்பின் சுடர் ஒருநாளும் அணையாது என்பதை மூர்க்கமாகச் சொல்லியிருக்கும் நாவல் அஞ்சலை.பகிர்ந்து கொள்ள முடியாத அந்தரங்க கனவுகள் போன்றவை மனதின் ரகசிய ஆசைகள்.அது நிறைவேறாத போதும் கூட ஏதேனும் காரணங்கள் சொல்லி மனம் சமாதானம் அடையக்கூடும்.ஆனால் அவை கண்முன்னே வேறொன்றாகச் சிதைந்து போவதை அதனால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.தன்னைப் பெண் பார்க்க வந்திருக்கும் சேதி கேட்டு வயற்பரப்பினிடையே ஈரம் சொட்ட அவள் வீட்டிற்கு வருவதிலிருந்து மணம் முடிவது வரையிலும் அஞ்சலையை நடத்திச் செல்வது அந்த ஆசைகளே.அஞ்சலையின் அக்காள் கணவரின் தந்திரங்களின் வழி மனதின் கீழ்மையை நுட்பமாக கண்மணி தொட்டுக் காட்டி விடுகிறார். அவள் மனதிலிருக்கும் ஆணின் படிமத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத நேரெதிரானவனோடு அஞசலைக்கு மணம் முடிகிறது.பின் அது அவளுக்கு எப்போதும் ஏமாற்றத்தின் சுவரிலேயே முட்டிக் கொள்ளும்படியாக  ஆகிவிடுகிறது.இரண்டாவது முறையும் தனது சின்ன அக்காளின் காரணமாக ஏமாற்றப்பட்டு திரும்பும் போது விசித்திரமான மனப்புதிர்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன.மணமாகி விட்ட போது கூட கூத்தின் போது மேளம் அடிக்கும் தன் கணவனின் அண்ணனுக்காக ஏக்கம் கொண்டு தவிக்கும் அஞ்சலை தான் ,தனது இரண்டாவது கணவனுக்கு தன் அக்காளோடு தொடர்பிருப்பதை அறிந்து வெடித்து அழுது ஓலமிடுகிறாள்.அஞ்சலைக்கும் அவ்வாறான வாய்ப்புக் கிடைத்திருக்குமெனில் அதை பயன்படுத்திக் கொண்டிருப்பாள் என்பதற்கான குறிப்புகள் நாவலிலேயே இருக்கின்றன.
             

             
              பெண்ணின் மனம் தடாகம் என்றால்,அவளது மனதை தைத்த ஆணின் பிம்பம் ஆகாயம் போல.அது எவ்வளவு சலனமுற்றாலும் கலங்கினாலும் நீருள்ள வரை தடாகத்தில் ஆகாயம் மிதந்து கொண்டே தான் இருக்கும்.நுட்பமான உள்விரிவுகள் கொண்ட பாரத்தில் ஒரு காட்சி உண்டு.அம்புபடுக்கையில் பீஷ்மர் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறார்.வாழ்வு முழுவதுமே ஓயாது துரத்தும் சந்தேகங்களை பலரும் அவரிடம் கேட்டுத் தெளிகின்றனர்.பிறகு பஞ்சபூதங்களின் நேரம்.அவற்றிலொன்றான நெருப்பு அவரை கேட்கிறது.
    
      “எப்போதும் நான் காற்றால் அலைகழிக்கப்படுகிறேன்.எனக்கென்று சுயபற்றுதல்கள் இல்லை.என் திசைகளை காற்று தான் தீர்மானிக்கிறது.
             
     பீஷ்மர் நிதானமான மெல்லிய குரலில்
    
   “ஒரு பெண்ணின் மனதில் ஆசையின் சுடராக மாறிவிடு.பின் உனக்கு சலனமில்லை.அழிவுமில்லைஎன்கிறார்.
     
      பீஷ்மர் ஒரு பிரம்மச்சாரி என்பதையும் அதற்கு காரணமான பின்புலத்தையும் நாம் அறிவோமென்றால் இவ்வாக்கியத்தை சொல்லத் தகுந்தவர் அவர் தான் என்பதை எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக் கொள்வோம்.இதை இடைச்செருகல் என்னும் விமர்சகர்களின் கருத்தை ஆராய்ச்சியாளர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.நாம் கவித்துவமான அந்த உணமையான நோக்கி நகர்வோம்.
             
         

அஞ்சலை எனும் பெண்ணின் வாழ்வையே இந்நாவல் மையப்படுத்தி அதனைச்சுற்றியே தன் இழைகளைப் பின்னியிருப்பினுங்கூட அவற்றினூடாக கண்மணி குணசேகரன் சமூகத்தின் கடைநிலை மக்களின் வகைபேதமானதும் கண்ணீரின் துவர்ப்பைக் கொண்டதுமான வாழ்வை அவர்களது நிலப்பின்னணி சார்ந்து கூர்மையான அவதானிப்புகளூடாக உருவாக்கியிருக்கிறார்.நாவலில் அஞ்சலையின் பாடுகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல அவளது அம்மாவின் துயரங்கள்.நாவல் முழுதும் அவளுக்கேற்ப அமையும் உறவு வள்ளி மூலம் மட்டுமே.அது போலவே தன் மூத்த மகள் நிலாவுடனும் அஞ்சலைக்கு சந்தோஷ கணங்கள் அமைகின்றன.
         சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களின் திசையில் அஞ்சலையின் வாழ்வு இல்லை.நிலைகொள்ளாது அலைந்து குழம்பிமறியும் பயணம் அவளுடையது.அவமானங்களும் ஏச்சுக்களும் நிரம்பிய பாதை அது.மனதின் அழைப்புகளுக்கு அவளது கால்கள் தாமாகவே எவ்வித தயக்கமுமின்றி நகர்கின்றன.அதற்காக நாம் அவள் மீது கோபமோ வெறுப்போ கொள்வதில்லை.மாறாகச் சூழலைப் புரிந்து கொள்ள முயல்கிறோம்.இப்புள்ளியிலிருந்தே படைப்புக்கும் நமக்குமான உறவு தொடங்கி விடுகிறது.
       
           எப்போதும் மெளனத்தின் திரைக்குப் பின்னே அஞ்சலை ஒளிந்து கொள்வதில்லை.தன் மீதான பழிச் சொற்களுக்குக்கெதிராக ஆங்காரத்துடன் அம்மண்ணின் வசைச் சொற்களுடன் பதில் சொல்கிறாள்.இருப்பினுங்கூட தன் ஸ்திதி பற்றி அவளுக்கே ஒருவித குற்றவுணர்வு இருந்து கொண்டே இருக்கிறது.முதற்கருவைச் சுமக்கும் காலத்தில் அக்குழந்தை தன்னை இக்கட்டுகளிலிருந்து மீட்கும் கனவைக் காணும் சில நொடிகளுக்குள்ளாகவே,தன் நிலைபற்றி அறிந்து அது என்ன நினைக்குமோ?என அவளது மனம் தாவுவது அக்குற்றவுணர்வின் வெளிப்பாடே.அவளுக்கும் சந்தோஷமான காலங்கள் உண்டென்றாலும் அதுவும் சொற்பக் காலமே.

         

  

உறவுகளின் சதியால் சீரழியும் அஞ்சலையின் வாழ்வில் மூத்த மகளின் எதிர்காலம் பற்றிக் கொண்டிருக்கும் ஆசைகளே அவளை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.அதுவும் சிதறும் போது காலத்தின் மீதான மனிதனின் கணக்குகள் பற்றியும் அவற்றின் புதிரான வலைப்பின்னல்கள் குறித்தும் வியப்பே ஏற்பட்டது.
         


மொழியின் சிடுக்கோ சொற்களின் நெருக்குதலோ கொண்டு எழுதப்பட்டதல்ல இந்நாவல்.மாறாக மண்ணிலிருந்து அம்மண்ணின் மொழியின் மூலமே வெளிவந்திருப்பது.வயற்பரப்புகளும் முந்திரி காடுகளும் உள்ள மண்  அது.மண்ணின் உழல்பவர்களைப் பற்றி பேசியிருக்கும் இந்நாவலில் மேல்சாதியின் ஒடுக்குதல்கள் மிகக்குறைவாகவே வெளிப்பட்டிருக்கின்றன.நாவலின் களத்தை கவனத்தில் கொள்கையில் இதை ஒரு குறையாகவே தோன்றுகிறது.சார்ந்திருப்பதன் மூலமே பெண்களின் மேல் அதிகாரம் செலுத்தப்படுவதும் அதன் மூலம் அவர்கள் சுயமான குரலற்று இருப்பதும் நேர்கிறது.இதிலிருந்து விதிவிலக்குப் பெற்றவர்கள் மண்ணில் உழைக்கும் பெண்கள்.அவர்களது பொருளாதார விடுதலையே அவர்களின் மனோதைரியத்திற்கு வேராக இருக்க முடியும்.விவசாயப் பின்னணி கொண்ட இந்நாவலில்,வரும் பெண்களில் முக்கால் வீதம் உடல் உழைப்பாளர்கள்.அங்குமிருக்கும் பாலியல் சீண்டல்களை சங்கேத அழைப்புகளை நுட்பமாக கண்மணி மண்ணின் மொழியிலேயே சித்தரித்திருக்கிறார்.மண்ணிலிருந்து எழும் நாவல்கள் அம்மண்ணின் மொழியையே கொண்டிருப்பது இயல்பு.அஞ்சலையின் மண்ணைப் பற்றி அதன் வழக்குச் சொற்கள் பற்றிய பொருளைப் பின்னிணைப்பாக  கொடுத்திருக்கலாம்.அம்மண் குறித்து போதுமான அறிதல்கள் இல்லாதவர்களுக்கு அது கூடுதலாகவே உதவி புரிந்திருக்கும்.
    


 இந்நாவலை “யுனைடைட் ரைட்டர்ஸ்சிறப்பாக வெளியிட்டிருக்கிறது.
             
குறிப்பு :இந்த நூல் விமர்சனம் 2006 இறுதியிலோ அல்லது 2007 தொடக்கத்திலோ எழுதப்பட்டது.

Wednesday, August 13, 2014

மார்க்கேஸ் நேர்காணல்- ரவிக்குமார்


காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸ்
அறிமுக உரையும் நேர்காணல் மொழிபெயர்ப்பும் : ரவிக்குமார்                    
 காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸ்
          
             1982ல் தனது ஐம்பத்து நான்காவது வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற மார்க்கேஸ்,லத்தீன் அமெரிக்காவின் தனித்துவம் மிக்கப் படைப்பாளிகளுள் ஒருவர்.

                  தனது பதினேழாவது வயதில் ஃப்ரான்ஸ்   காஃகாவின் “மெட்டமார்ஃபசிஸ்என்ற படைப்பைப் படித்தவுடன் தனது பாட்டி சொன்ன கதைகள் நினைவு வர நாவல் படிப்பதில் ஆர்வம் உண்டானதெனக் கூறும் மார்க்கேஸின் அடிப்படையான ஆர்வம் கவிதை. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும்  கவிஞனென  பாப்லோ  நெருதாவைக் குறிப்பிடும் மார்க்கேஸ், நெருதா , - மிதாஸ் போல – அவர்  தொட்டதெல்லாம் கவிதையாகி விட்டது” என்கிறார்.ஜிபாக்குரா என்னும் இடத்தில் தான் படித்த மோசமான கவிதைகளின்  காரணமாகத்  தான்  இலக்கியத்தில்  ஆர்வமேற்பட்டது. அப்போது  ஒருபக்கம் அந்தப் கவிதைகளையும்  மறுபக்கம் தனது வரலாற்று  ஆசிரியர் ரகசியமாகத் தரும் மார்க்சியப் புத்தகங்களையும் தான் படித்ததாக்க் குறிப்பிடுகிறார்.
   

             

       தங்களது யுத்த அனுபவங்களை மட்டுமே நினைவுகூர்ந்து பேசிக் கொண்டிருக்கும் கிழவர்களால் சூழப்பட்ட தாத்தா;தங்களது சவத்துணிகளைத் தாங்களே நெய்து கொள்ளும் அத்தைகள்;இறந்தவர்களின் ஆவிகளோடு உரையாடிக் கொண்டிருக்கும் பாட்டி;ஆவிகள் பெருமூச்செறியும் யாருமற்ற படுக்கையறைகள்;தோட்டத்து மல்லிகை மரம்;வாழைப் பழங்களை ஏற்றிச் செல்லும் புகை வண்டிகள்;பழந்தோட்டங்களினூடே பாயும் குளிர்ந்த நீரோடைகள்-மார்க்கேஸின் சிறிய பிராயத்தைச் சூழ்ந்திருந்த இவைகளின் தடயங்களை இன்றும் கூட அவரது எழுத்துக்களில் பார்க்க முடியும்.தனக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த “ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சொலிட்யூட்நாவலை அவ்வளவு சிறந்த ஒன்றாகத் தான் கருதவில்லை என்கிற அவர் The Autumn  of the Patriarch நாவலைத் தனது படைப்புகளில் சிறந்ததென மதிப்பிடுகிறார்.அதை உரைநடைக் கவிதை எனவும் வர்ணிக்கிறார்.
           
           தனது படைப்புகளின் அத்தனை வாக்கியங்களும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை என்கிற அவர்,நாவலில் வெளிப்படும் யதார்த்தம் என்பது கனவில் வெளிப்படும் யதார்த்தத்தை ஒத்தது என்கிறார்.


            
        ஸ்டாலினிசத்தை அதிகாரத்துவத்தைக் கடுமையாக வெறுக்கும் மார்க்கேஸ் தற்போதும் ஃபிடல் காஸ்ட்ரோவை ஆதரித்து வருவது ஒரு வியப்பான விசயம்.க்யூபாவைச் சேர்ந்த இன்ஃபாந்தே,அரேன்ஸ் போன்ற எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட/விமர்சிக்கப்படுகிற காஸ்ட்ரோவை மிக சமீபத்தில் கூட சந்தித்தார்.கியூபாவிலிருந்து ஏராளமான பேர்கள் அமெரிக்காவுக்குத் தப்பிச் செல்வதையொட்டி ஓரிரு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட கலவரமான சூழலின்போது தான் காஸ்ட்ரோவை மார்க்கேஸ் சந்தித்தது.
        
              இளமையில் வறுமையை அனுபவத்தவர் மார்க்கேஸ்.தான் தங்கியிருந்த விபச்சார விடுதியையொத்த ஹோட்டலில் அறையின் வாடகைப் பணத்தைத் தர முடியாமல் தனது நாவலின் கையெழுத்துப் படிகளை அடகு வைத்திருக்கிறார்.தங்குவதற்கு இடமின்றி இரவுகளில் தெருக்களில் அலைந்திருக்கிறார்.பாரீஸ் நகரின் மெட்ரோவில் ஒருமுறை பிச்சை கூட எடுத்திருக்கிறார்.தனக்குக் காசு போட்டவன் தான் சொன்ன காரணத்தைக் கேட்காமலே போனது தான் மிகவும் சோகமானது என்றூ கூறும் மார்க்கேஸ் முதன் முதலில் மெக்ஸிகோவில் பத்திரிக்கையொன்றில் உதவி ஆசிரியராகச் சேருவதற்குப் போன போது தனது ஷுவில் கீழ்பாகம் பிய்ந்து ஓட்டையாகிவிட்டதை நினைவுகூர்கிறார்.

          “ஒரு எழுத்தாளனின் கடமை-(இதைப் புரட்சிகரமான கடமையென்று கூட நீங்கள் சொல்லலாம்)-நன்றாக எழுதுவது தான்என்பது மார்க்கேஸின் உறுதியான நம்பிக்கை.ஒரு நாட்டின்,ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் யதார்த்தத்துக்கு மட்டுமே கடமைபட்டிருப்பதல்ல எழுத்தாளனின் பணி.இந்த உலகம் முழுமைக்குமான யதார்த்தத்துக்கே எழுத்தாளன் கடப்பாடு கொண்டவனாயிருக்க வேண்டும்என்கிறார் மார்க்கேஸ்.
                   --------------------------------------

நேர்காணல் :


        நல்ல நாவல் என்பது யதார்த்தத்தை 
   
     கவித்துவத்தோடு மாற்றியமைப்பதுகாப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸ்

என்னுடைய தொடர்ச்சியான,பிரகாசமான நினைவுகள் மனிதர்களைப் பற்றியவையல்ல.அரகாடகாவில் நான் என்னுடைய தாத்தா,பாட்டியுடன் வாழ்ந்த அந்த வீட்டைப் பற்றியவை.அது மீண்டும் மீண்டும் வருகிற கனவு,இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது.ஒவ்வொரு நாளும் உண்மையான கற்பனையோ நன் அந்தப் பெரிய பழைய வீட்டில் இருப்பது போன்று ஒரு கனவு கண்ட மாதிரி ஒரு உணர்வோடு தான் விழித்துக் கொள்கிறேன்.நான் அங்கே திரும்பிப் போன மாதிரி இல்லை.அங்கேயே நான் இருப்பது போல-குறிப்பான காலமோ,குறிப்பான காரணமோ இன்றி-அங்கிருந்து நான் வரவே இல்லை என்பது போல ஒரு உண்ர்வு.இன்றும் கூட என் கனவுகளில் எனது குழந்தைப் பிராயத்தின் போது வரப்போகும் கெடுதலைப் பற்றி இரவு நேரங்களில் ஏற்படும் முன்னுணர்வைப் போன்றதொரு உணர்வு என்னை அலைக்கழிக்கிறது.அது கட்டுப்படுத்த முடியாத ஒரு உணர்வு நிலை.ஒவ்வொரு நாளும் மாலையில் தொடங்கி விடியலின் கிரணங்கள் என் கதவிடுக்குகள் வழியே வந்து எழுப்பும் வரை தூக்கத்தில் என்னை அரித்துத் தின்கிறது.என்னால் அதை சரிவர விவரிக்க முடியவில்லை.பாட்டியின் ஆவியும் உற்பாதங்களும் வேண்டுதல்களும் உருப்பெற்று உலவுவதோடு தொடர்புடையதென எனக்குத் தோன்றுகிறது.அத்தகையது எங்கள் உறவு.கண்ணுக்குப் புலப்படாத ஒரு இழை எங்கள் இருவரையும் அதீத உலகத்தோடு பிணைத்து வைத்துள்ளது.பகல் வேளைகளில் எனது பாட்டியின் மாந்திரீக உலகம் என்னை வசீகரிக்கும்.என்னை உறிஞ்சிக் கொள்ளும்,அதுவே என் உலகமாக இருக்கும்.ஆனால் இரவு வந்துவிட்டால் அது என்னை பயமுறுத்தும்.இன்றும்கூட உலகில் ஒரு பகுதியில் ,ஏதோ ஒரு அறிமுகமற்ற ஓட்டலில் தனியே தூங்கும் போது நான் அலறி விழித்துக் கொள்கிறேன்.இருளில் தனியே இருப்பதால் உண்டாகும் பயத்தினால் அப்படி எழுந்துகொண்ட பிறகு மீண்டும் நான் அமைதியடைந்து தூங்குவதற்கு நெடுநேரமாகிவிடும்.என்னுடைய தாத்தாவோ இதற்கு நேர் எதிரானவர்.எனது பாட்டியின் நிலையற்ற உலகில் என் தாத்தா முழுமையான பாதுகாப்பின் குறியீடாக இருந்தார்.அவர் இருந்தால் எனது பதற்றம் தணிந்துவிடும்.திடமான தளத்தில் நிற்பதுபோல மீண்டும் யதார்த்த உலகிற்குத் திரும்பிவிட்டது போல நான் உணர்வேன்.வேடிக்கை என்னவென்றால் நான் எனது தாத்தாவைப்  போல-யதார்த்தமாக,வீரமாக,பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றே விரும்பினேன்.ஆனால்,எனது பாட்டியின் உலகத்தினுள் எட்டிப் பார்க்க வேண்டும் என்ற இடைவிடாத தூண்டுதலை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

உங்கள் தாத்தாவைப் பற்றி சொல்லுங்கள் : அவர் என்னவாக இருந்தார்?அவரோடு உங்களுக்கிருந்த உறவு எத்தகையது?

கலோனெல் நிக்கோலஸ் ரிக்கார்டோ  மார்க்கேஸ் மெஜியா-அது தான் அவரது முழுப்பெயர்.நான் எனது வாழ்நாளில் சந்தித்ததிலேயே மிகவும் சிறந்த மனிதர் அவர்.எங்களுக்குள் மிகச் சிறப்பான புரிதல் நிலவியது.ஆனால் ஐம்பது ஆண்டுகள் கழித்து இப்போது அதை நினைத்துப்பார்க்கையில் அவர் அந்தப் புரிதலைப் பூர்த்தி செய்யவில்லை எனத் தோன்றுகிறது.ஏனென்று எனக்குத் தெரியவில்லை.ஆனால் எனது இளம் பருவத்தில் தோன்றிய இத்தகைய எண்ணம் எப்போதும் என்னைச் செயலிழக்கச் செய்கிறது.அது மிகவும் சோர்வு தரும் விஷயம்.அரித்துத் தின்கின்ற, தீர்க்க முடியாத குழப்பத்தோடு வாழ்வது போல அது.ஏனென்றால் எனக்கு எட்டு வயதாகும் போது எனது தாத்தா இறந்து விட்டார்.அவர் இறக்கும்போது நான் பார்க்கவில்லை.அந்தச் சமயம் அரகாடகாவிலிருந்து வெகு தூரத்திலுள்ள வேறொரு நகரத்தில் நான் தங்கியிருந்த வீட்டில் அந்தச் சாவு பற்றிப் பேசிக் கொண்டார்கள்.அந்த நேரத்தில் அது எனக்குள் எவ்விதத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை.ஆனால் இன்று எனக்கு ஏதாவது நடக்கும் போது-குறிப்பாக நல்லது நடக்கும் போது –இதைத் தெரிந்து கொள்ள தாத்தா இல்லையே என்று நினைத்துக் கொள்கிறேன்.எனவே எனது ஒவ்வொரு சந்தோஷ கணமும் இந்தத் துக்க உணர்வால் சற்றே கெட்டுப் போகிறது.இனிமேலும்கூட இப்படித்தான் இருக்கும்.


உங்கள் படைப்புகளில் எந்தப் பாத்திரமாவது அவரைப் போல உள்ளதா?

எனது கதைகளில் எனது தாத்தாவின் சாயலில் இருக்கிற ஒரேயொரு பாத்திரம் Leaf storm ல் வரும் அந்தப் பெயரில்லாத கலோனெல் பாத்திரம் மட்டும் தான்.உண்மையில் அந்தப் பாத்திரம்-அவரது ஆளுமை,அவர் வாழ்க்கையைப் பார்த்தவிதம் ஆகியவற்றை நுணமையாக விவரித்து செய்யப் பட்ட “காப்பிஎன்றே கூறலாம்.ஒருவிதத்தில் இது எனது தனிப்பட்ட முடிவு தான்.அந்த நாவலில் அந்தக் கதாபாத்திரம் சரியாக விவரிக்கப்படவில்லை.வாசகர்கள் அந்தப் பாத்திரத்தைப் பற்றி உருவாக்கிக் கொள்ளும் படிமம் என்னுடையதிலிருந்து வேறுபட்டதாகவும் இருக்கக் கூடும்.

உங்கள் நண்பர்களைப் பற்றிக் கூறுங்கள்.உங்களது வாழ்க்கையில் அவர்கள் ஆற்றிய பங்கு என்ன?உங்களது ஆரம்ப கால நட்புகளை நீங்கள் இப்போதும் தொடர்ந்து காப்பாற்றி வருகிறீர்களா?

சில நண்பர்கள் பாதி வழியிலேயே உதிர்ந்துவிட்டனர்.ஆனால் முக்கியமான நண்பர்களோ எல்லாவிதமான குழப்பங்களையும் மீறித் தொடர்கின்றனர்.இது யதேச்சையானதல்ல.என் வாழ்நாள் முழுவதும் சூழல் எப்படியிருப்பினும் நான் என் நண்பர்களுடனான உறவைக் கவனமாகக் காப்பாற்றி வளர்த்து வருகிறேன்.நான் பலமுறை கூறியிருப்பது போல-எனது நட்பும் எனது ஆளுமையின் பகுதியாக அமைந்துள்ளது.நான் வேண்டாத விரும்பாத புகழ் என் மீது கழிந்து விட்டபின் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைக் காப்பாற்றுவதைத் தான் கடினமான வேலையாகக் கருதுகிறேன்.நம்மைப் புரிந்துகொள்ளாத ஒரு நண்பன்,நண்பனே அல்ல என்பது என் அபிப்ராயம்.நட்பில் நான் பால்பேதம் பார்ப்பதில்லை.ஆனால் ஆண் நண்பர்களை விட பெண் நண்பர்களே பழகுவதற்கு இனிமையாக உள்ளனர்.அவர்களோடு தான் சுமுகமான உறவு கொள்ள முடிகிறது.எப்படியோ எமது நண்பர்களின் சிறந்த நண்பனாக என்னை நான் கருதிக் கொள்கிறேன்.அது மட்டுமின்றி எனது நண்பர்களுக்குள் நான் சாதாரணமான அன்பு செலுத்தும் ஒருவர் மீது நான் கொண்டிருக்கும் நேசத்தை விட அதிகமான நேசத்தை அவர்களில் யாரும் என் மீது செலுத்தவில்லை என்பது என் நம்பிக்கை.

நான் எழுதத் தொடங்கியது மிகவும் யதேச்சையானது.எனது தலைமுறையும் எழுதாளர்களை உருவாக்க முடியும் என்பதை ஒரு நண்பனுக்கு நிரூபிப்பதற்காகவே எழுதுவது என்கிற பொறியில் சிக்கிக் கொண்டேன்.இந்த உலகில் எழுதுவதைக் காட்டிலும் அதிகமாக நான் நேசிப்பது எதுவுமில்லை என்பதைக் கண்டுபிடித்து அந்தப் பொறிக்குள் அடுத்த்தாக வந்து சிக்கிக் கொண்டேன்.எழுதுவது இன்பமானது என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.எழுதுவது மிகவும் துன்பகரமானது எனவும் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.எது தான் அது?

இரண்டும் உண்மை தான்.தொடக்கத்தில்,எப்படி எழுதுவது என்பதைப் பயின்று கொண்டிருந்த காலத்தில் நான் சந்தோஷமாக எழுதுவேன்.எந்தவிதப் பொறுப்புமில்லாமல்.எனக்கு நினைவிருக்கிறது.அந்த நாட்களில் விடிகாலை இரண்டு மூன்று மணிக்கு செய்தித்தாள் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு அதற்குப் பிறகு நான்கு ஐந்து பக்கங்கள் கூட எளிதாக எழுதிவிடுவேன்.ஒரு சமயம்,ஒரு சிறுகதை முழுவதையும் ஒரே அமர்வில் நான் எழுதியிருக்கிறேன்.

இப்போது?

இப்போதெல்லாம் ஒரு நாள்  முழுவதும் உழைத்து ஒரு பத்தி எழுதினாலே அதிர்ஷ்டம் தான்.காலம் போகப்போக எழுதுவது என்பது மிகவும் கஷ்டமானதாக மாறிவிட்டது.

ஏன் உங்கள் திறமை அதிகரிக்க அதிகரிக்க எழுதுவது மிகவும் எளிதாகிவிடுமென நீங்கள் நினைக்கவில்லையா?

என்ன நடந்த்தென்றால்,உங்களுடைய பொறுப்புணர்ச்சி அதிகமாகிவிடுகிறது.நீங்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் இப்போது மிகவும் கனமுள்ளதாக மாறிவிடுகிறது.அது ஏராளமான மனிதர்களைப் பாதிக்கிறது.இதை நீங்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிடுகிறீர்கள்.ஒரு புத்தகத்தை நீங்கள் எழுதத் தொடங்கும் புள்ளி எதுவெனச் சொல்ல முடியுமா?

ஒரு விஷுவல் இமேஜ்”.மற்ற எழுத்தாளர்களுக்கு ஒரு கருத்தாக்கம்.ஒரு ‘ஐடியாஅது தான் துவக்கப் புள்ளியாக இருக்குமென நினைக்கிறேன்.நான் எப்போதுமே  ஒரு இமேஜில் இருந்து தான் தொடங்குகிறேன்.என்னுடைய சிறுகதைகளிலேயே சிறந்ததென நான் கருதும் ‘ட்யூஸ்டே சியஸ்டா’(Tuesday Siesta) என்ற கதை.ஒரு பெண்மணியும் ஒரு இளம் பெண்ணும் கறுப்பு உடையணிந்து கறுப்புக் குடையை பிடித்துக் கொண்டு யாருமற்ற நகரத்தில் வாட்டியெடுக்கும் வெயிலில் நடந்து போனதைப் பார்த்ததால் தான் தோன்றியது.ஒரு கிழவர் தனது பேரனை அழைத்துக் கொண்டு சவ ஊர்வலமொன்றில் போனதைப் பார்த்து லீஃப் ஸ்டார்ம்(Leaf Storm) தோன்றியது.பராங்குல்லாவின் மார்க்கெட் பகுதியில் விசைப்படகு வருவதற்காக காத்திருந்த ஒரு ஆளைப் பார்த்தது தான் “நோபடி ரைட்ஸ் டு தி கலோனல்(No Body Writes to the  Colonel) எழுதுவதற்கான தூண்டுதல்.அந்த ஆள் ஒருவித அமைதியோடும் ஏக்கத்தோடும் காத்திருந்தான்.சில ஆண்டுகள் கழித்து பாரீஸில் நானே அப்படிக் காத்திருந்தேன்.ஒரு கடிதத்துக்காக-சரியாகச் சொன்னால் ஒரு மணி ஆர்டருக்காக-அதேவிதமான ஏக்கத்தோடு.அப்போது அந்த மனிதனைப் பற்றிய நினைவுகளோடு என்னை நான் அடையாளம் கண்டு கொண்டேன்.

நீங்கள் எப்போதுமே புத்தகத்தின் முதல் வாக்கியத்துக்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறீர்கள்.சில சமயங்களில்,புத்தகம் முழுவதையும் எழுதுகிற நேரத்தை விட அதன் முதல் வாக்கியத்தை எழுதுவதற்கு அதிகநேரம் எடுத்துக் கொண்டதாக நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.ஏன் அப்படி?

ஏனென்றால் ஒரு புத்தகத்தின் நடையை,அதன் அமைப்பை,அதன் நீளத்தையே கூட சோதித்துப் பார்ர்கும் பரிசோதனைக் கூடமாக அதன் முதல் வாக்கியமே அமைந்துள்ளது.

நீங்கள் குறிப்புகள் எடுப்பதுண்டா?

கிடையவே கிடையாது.நீங்கள் குறிப்பு எடுக்க ஆரம்பித்தால் அப்புறம் அந்தப் புத்தகத்தைப் பற்றி நினைப்பதில்லை.குறிப்புகளைப் பற்றியே தான் யோசிப்பீர்கள்.இதை எனது அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

உங்கள் படைப்புகளை நீங்கள் திருத்தம் செய்ததுண்டா?

என்னுடைய படைப்புகள் பல்லேறு மாற்றங்களைப் பெற்றுள்ளன.இளம் வயதுக்காலத்தில் ஒரேயடியாக எழுதி விடுவேன்.அப்புறம் பிரதியெடுப்பேன்.மீண்டும் அதைத் திருத்தி எழுதுவேன்.ஆனால் இப்போது நான் எழுதும் போதே வரிக்குவரி திருத்தி எழுதுகிறேன்.நாளின் கடைசியில் பிரசுரத்திற்கு ஏற்ற அடித்தல் திருத்தலில்லாத துல்லியமான ஒரு பக்கம் என் கையில் கிடைத்துவிடும்.

பல பக்கங்களை நீங்கள் கிழித்துப் போடுவீர்களா?

நம்பவே முடியாது.அந்த அளவுக்குக் கிழித்தெறிவேன்.ஒரு பக்கத்தை டைப் பண்ண ஆரம்பித்தவுடன்.....நீங்கள் எப்போதும் டைப் தான் செய்கிறீர்களா?

ஆமாம்.எலெக்ரிக் டைப்ரைட்டரில் அடிப்பேன்.நான் அடிப்பது தப்பாகி விட்டாலோ,ஒரு வார்த்தை பிடிக்கவில்லையென்றாலோ ஒரு சின்ன பிழை நேர்ந்தாலோ ஏதோ ஒரு கிறுக்குத்தனம் உடனே அந்தப் பேப்பரை உருவும்படிச் சொல்லும்.புதிதாகத் திரும்பவும் ஆரம்பிப்பேன்.ஒரு பன்னிரெண்டு பக்கக் கதை எழுத நான் ஐநூறு காகிதங்கள் வரை கூட வீணடித்திருக்கிறேன்.டைப் அடிக்கும் போது ஏற்படும் ஒரு சிறு பிழையைக் கூட படைப்பாக்கம் குறித்த தீர்ப்போடு போட்டுக் குழப்பிக் கொள்ளும் இந்தப் பைத்தியக்காரத்தனத்திலிருந்து என்னால் மீளவே முடியவில்லை.

எழுதுவதற்கு சிறந்த இடமென்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

நான் இதைப் பற்றிய பல முறை கூறியிருக்கிறேன்.காலை நேரத்தில் யாருமற்ற ஒரு தீவு.இரவு நேரத்தில் ஒரு மிகப் பெரிய நகரம்.காலையில் எனக்குத் தேவை அமைதி,மாலையில்-குடிப்பதற்குக் கொஞ்சம்,பேசுவதற்குச் சில நண்பர்கள்.எனக்கு எப்போதுமே மக்களோடு தொடர்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும்.உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.வில்லயம் ஃபாக்னர் சொன்னதொடு இது பொருந்துமென்று நினைக்கிறேன்.அவர் சொன்னார் : எழுதுவதற்குப் பொருத்தமான இடம் “விபச்சார விடுதி தான்”.ஏனென்றால் காலை வேளையில் அது அமைதியாக இருக்கும்.ஒவ்வொரு இரவிலும் கோலாகலமாய் இருக்கும்.

நீங்கள் எழுதப் பழகியதில் யார் உங்களுக்கு அதிகம் உதவியது?

என்னுடைய பாட்டி.முதலில் அவர்களைத் தான் குறிப்பிட வேண்டும்.மிகவும் கொடூரமான விசயங்களைப் பற்றி அவர்கள் ஏராளமான கதைகள் சொல்வார்கள்.அப்போது தான் பக்கத்திலிருந்து பார்த்து விட்டு வந்தது போல சொல்வார்கள்.சந்தேகமே பட முடியாதபடி அவர் அவற்றைச் சொல்கிற விதமும் அவர் பேச்சில் காணப்படும் படிமங்களின் செறிவும் அவரது கதைகளை மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக மாற்றின என்று நினைக்கிறேன்.நான் , ‘ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சொலிட்யூட்நாவலை எனது பாட்டியின் யுக்திகளின் அடிப்படையில் தான் எழுதினேன்.

உங்கள் பாட்டியின் வழியாகத்தான் நீங்கள் எழுத்தாளராகப் போவதை கண்டுபிடித்தீர்களா?

இல்லை.அதை நான் கண்டுபிடித்தது காப்ஃகாவின் வழியாகத் தான்.எனது பாட்டி நினைவுகூர்ந்து சொல்வது போலவே அதே முறையில் அவர் ஜெர்மனியில் எழுதியிருந்தார்.நான்,மெட்டாமார்பஸியை எனது பதினேழாவது வயதில் படித்த போது நானும் ஒரு எழுத்தாளனாக வர முடியும் என்பதை உணர்ந்தேன்.காஃப்காவைத் தவிர எழுத்தின் சூட்சமங்களை உங்களுக்குக் கற்றுத் தந்த வேறு எழுத்தாளர்கள் எவருமுண்டா?

ஹெமிங்வே.

ஆனால் அவரை ஒரு நல்ல நாவலாசிரியராக நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

ஆமாம்.ஆனால் அவர் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர்.அவர் கூறும் அறிவுரைகளில் உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன்.ஒரு சிறுகதை என்பது பனிப் பாறையைப் போல.அதைத் தாங்கிக் கொண்டிருப்பது எதுவென வெளியே தெரியக் கூடாது.உங்களது எண்ணங்கள்,நீங்கள் படித்த படிப்பு,சேகரித்த விவரங்கள் எல்லாமே கதையில் நேரடியாகப் பயன்படுத்தப்படக்கூடாது.ஆமாம்,ஹெமிங்வே நிறையவே கற்றுத் தந்திருக்கிறார்.ஒரு பூனை,ஒரு மூலையில் எப்படித் திரும்பும் என்பதை விவரிப்பதைக் கூட அவர் சொல்லித் தந்திருக்கிறார்.

வேறு ஏதேனும் அறிவுரை ஞாபகம் இருக்கிறதா?

டொமினிக்கன் எழுத்தாளர் யுவான் பாஷ் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு காரகஸில் ஒரு முறை கூறியது நினைவுக்கு வருகிறது.எழுத்தின் நுட்பங்களை இளம் வயதிலேயே கற்றுக் கொண்டுவிட வேண்டும்.எழுத்தாளர்கள் கிளிகளைப் போல.வயதாகி விட்டால் நாம்,பேசுவதற்குக் கற்றுக் கொள்ள முடியாதுஎன்றார் அவர்.உங்களது இலக்கியப் பணிக்கு ஜர்னலிசம் ஏதும் உதவியுள்ளதா?

ஆமாம்.ஆனால் சில சமயங்களில் சொல்லப்பட்ட்து போல,அது மொழியைக் காத்திரமாகப் பயன்படுத்துவது எப்படியென அது எனக்குக் கற்றுத் தரவில்லை.எனது கதைகளுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வழிமுறைகளை ஜர்னலிசம் எனக்குக் கற்றுத் தந்தது.

நீங்கள் சினிமா பார்ப்பதில் அதிகம் நாட்டம் கொண்டவர்.ஒரு எழுத்தாளருக்கு சினிமா உபயோகமான நுணுக்கங்களைக் கற்றுத் தருமா?

தெளிவான பதிலை இதற்கு என்னால் கூறமுடியவில்லை.என்னைப் பெறுத்தவரை சினிமா உதவியாகவும் இருக்கிறது உபத்திரமாகவும் இருக்கிறது.பிம்பங்களின் வாயிலாக எப்படி யோசிப்பது என்பதை அது எனக்குக் கற்றுத் தந்துள்ளது.ஆனால் அதே நேரத்தில் காட்சிகளை,பாத்திரங்களை,காட்சி ரூபப் படுத்துவதில் ஒரு மிகையான ஆர்வம் என்னிடம் தென்படுவதை நான் கவனிக்கிறேன்.காமிரா கோணங்களின்பால் ஒருவிதமான வெறியே உண்டாகி விட்டது.ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சொலிட்யூட்நாவலுக்கு முன்னே எழுதிய எல்லா புத்தகங்களிலும் இதை நீங்கள் பார்க்க முடியும்.உங்கள் படைப்புகளில் உரையாடலுக்கு நீங்கள் அதிகம் முக்கியத்துவம் தருவதில்லையே ஏன்?

ஏனென்றால் ஸ்பானிஷ் மொழியின் உரையாடல் எழுத்தில் சரியாக ஒலிப்பதில்லை.அந்த மொழியில் எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும்  இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது.நிஜ வாழ்க்கையில் நன்றாக இருப்பதாகத் தெரியும் ஸ்பானிஷ் உரையாடல் ஒரு நாவலுக்குள் வரும்போது அப்படித் தெரிவதில்லை.ஆகவே தான் நான் அதைக் குறைவான அளவில் பயன்படுத்துகிறேன்.

நீங்கள் எழுதத் தொடங்கும் முன்பே அந்தப் பாத்திரங்களுக்கு என்ன ஆகப்போகிறது என்பது உங்களுக்குத் தெரிந்துவிடுமா?

பொதுவாகச் சொன்னால்,தெரியும்.எழுத்தின் போக்கில் எதிர்பாராதவையும் நடந்துவிடும்.

இன்ஸ்பிரேஷன் என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள்? அப்படியொன்று இருக்கிறதா?

அது ரொமாண்டிக்குகளால் நாசமாக்கப்பட்ட ஒரு வார்த்தை.அதை ஒரு அனுக்கிரக நிலையாகவோ அல்லது சொர்க்கத்திலிருந்து வரும் உயிர்மூச்சு என்பதாகவோ நான் நினைப்பதில்லை.அது ஒரு தருணம்.நீங்களும் நீங்கள் எழுத நினைக்கும் கதைக்கருவும் ஒன்றிப் போகிற ஒரு கணம் என்றே நான் நினைக்கிறேன்.நீங்கள் ஒரு விஷயத்தை எழுத விரும்பியதும் ஒருவிதமான பரஸ்பர டென்ஷன் உங்களுக்கும் உங்கள் கதைக்கருவுக்கும் இடையே தோன்றிவிடுகிறது.நீங்கள் அந்தக் கருவை நெருக்குகிறீர்கள்.அது உங்களை நெருக்குகிறது.அப்போது ஒரு கணத்தில் தடைகள் எல்லாமே கரைந்து போய் எல்லா மோதல்களும் தீர்ந்து போய் நீங்கள் கனவுகூட காணாத அந்த விசயம் உங்களுக்கு நிகழ்கிறது.அந்தக் கணத்தில் எழுதுவதைத் தவிர வேறு எதுவுமே இந்த உலகத்தில் கிடையாது என நினைப்பீர்கள்.அதைத் தான் நான் ‘இன்ஸ்பிரேஷன்என்று குறிப்பிடுகிறேன்.

ஒரு நூலை எழுதும் போது எப்போதேனும் இத்தகைய நிலையை நீங்கள் இழந்ததுண்டா?

ஆமாம்.அதன் பிறகு ஆரம்பத்திலிருந்து யோசிக்கத் தொடங்கிவிடுவேன்.இப்படியான சமயங்களில் தான் நான் ஸ்க்ரூ ட்ரைவரை எடுத்துக் கொண்டு வீட்டிலுள்ள எல்லா ப்ளக்குகளையும் பூட்டுகளையும் சரிசெய்வது,கதவுகளுக்குப் பெய்ண்ட் அடிப்பது.ஏனென்றால் யதார்த்தம் பற்றிய பயத்தைப் போக்குவதில் உடலுழைப்பு சில சமயம் உதவி செய்யும்.

அது எந்தமாதிரி பிரச்சனை?

வழக்கமாக அது நாவலின் அமைப்பு பற்றிய பிரச்சனையாகத் தான் இருக்கும்.அது அவ்வளவு சீரியஸான பிரச்சனையாக மாறிவிடுமா?

சில சமயங்களில் அப்படி ஆகிவிடும்.திரும்பவும் முதலில் இருந்து எழுதவேண்டி வரும்.The Autunm of the Patriarch  நாவலில் ஏறத்தாழ முன்னூறு பக்கங்களை எழுதி முடித்த பிற்பாடு நான் நிறுத்தும்படி ஆயிற்று.அந்த நாவலின் முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர் மட்டும்தான் பாக்கியிருந்தது.1962-ல் மெக்ஸிகோவில் இருந்தபோது அதை நிறுத்தினேன்.1968-ல் பார்ஸிலோனாவில் மீண்டும் அதை ஆரம்பித்தேன்.ஆறு மாதங்கள் வரை அதில் உழைத்தேன்.மீண்டும் நிறுத்தினேன்.ஏனென்றால் நாவலின் மையமான பாத்திரமான ஒரு வயதான சர்வாதிகாரியான குண இயல்புகள் சரியாகப் பிடிபடவில்லை.இரண்டு ஆண்டுகள் கழித்து ஆப்பிரிக்காவில் வேட்டையாடுவது பற்றி ஒரு புத்தகத்தை வாங்கினேன்.ஏனென்றால் அதற்கு ஹெமிங்வே முன்னுரை எழுதியிருந்தது எனக்கு ஆர்வம் தந்தது.ஆனால் அந்த முன்னுரை அவ்வளவு முக்கியமானதாகப்படவில்லை.மேலே நூலைப் படித்தேன்.அப்போது தான் எனது நாவலின் பிரச்சனைக்கான தீர்வு எனக்குக் கிடைத்தது.எனது நாவலில் வரும் கொடுங்கோலனின் குண இயல்புகளை அந்த நூலில் குறிப்பிட்டிருந்த சிலவகை யானைகளின் பழக்கங்களில் நான் கண்டுபிடித்தேன்.

நீங்கள் எழுதும் புத்தகம் முடிவுக்கு வந்ததும் என்ன செய்வீர்களா?

ஒரேயடியாக அதன் மீதிருந்த ஆர்வமெல்லாம் போய்விடும்.ஹெமிங்வே சொல்வது போல அது, செத்துப்போன ஒரு சிங்கத்தைப் போல ஆகிவிடும்.

எந்தவொரு நல்ல நாவலும் யதார்த்தத்தை கவித்துவத்தோடு மாற்றியமைத்ததன் வடிவம் தான் என்று கூறுகிறீர்கள்.இந்தக் கருத்தாக்கத்தை விவரிக்க முடியுமா?

ஆமாம்.நாவல் எனபது ரகசிய சமிக்ஞைகளின் மூலமாக முன்வைக்கப்படும் யதார்த்தம் என நான் கருதுகிறேன்.அது உலகைப் பற்றிய ஒரு புதிர் என்றும்கூட சொல்லலாம்.நீங்கள் நாவலில் எதிர்கொள்கிற யதார்த்தமென்பது நிஜ வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது.அது நிஜ வாழ்க்கையில் தான் வேரூன்றியுள்ளது என்ற போதிலும்கூட,கனவுகளைப் பற்றிய உண்மையும் இது தான்.


நீங்கள் உங்கள் படைப்புகளில் யதார்த்த்த்தைக் கையாளுகிற முறையை குறிப்பாக One Hundred Years of Solitude,The Autumn of Patriarch ஆகிய நாவல்களில் கையாண்டுள்ள முறையை மாஜிக்கல் ரியாலிசம்என்கிறார்கள்.உங்களது ஐரோப்பிய வாசகர்கள் உங்கள் கதைகளில் வரும் மாஜிக்கைப் புரிந்து கொள்கிறார்கள்.ஆனால் அதற்குப் பின்னாலிருக்கிற யதார்த்த்த்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

யதார்த்தம் என்பது முட்டை,தக்காளி-இவற்றின் விலைகளைப் பற்றிய விசயத்தோடு முடிந்து விடுவதில்லை.இதைப் புரிந்து கொள்வதை அவர்களது பகுத்தறிவுவாதம் தடுத்து விடுகிறது.லத்தீன் அமெரிக்காவின் தினசரி வாழ்க்கையோ யதார்த்தம் என்பது மிகவும் அசாதாரணமான விசயங்களைக் கொண்டது என்பது நிரூபித்துக் கொண்டிருக்கிறது.இந்த விசயத்தை விளக்க அடிக்கடி நானொரு உதாரணத்தைச் சொல்வதுண்டு.எஃப்.டபிள்யூ-உஃப் டே க்ராஃப் என்பவர் அமேஸான் காடுகளுக்கூடாக ஒரு பயணத்தை மேற்கொண்டார்.போன நூற்றாண்டின் இறுதியில் அமேஸான் காடுகளுக்குள் வெந்நீர் ஆறு ஒடுவதை அவர் கண்டார்.மனிதர்களின் பேச்சொலியால் மழை பெய்வதைப் பார்த்தார்.அர்ஜெண்டினாவின் தென்கோடியிலுள்ள கொமோடோர்ரோ ரிவாடாவியா என்ற இடத்தில் ஒரு முறை பலத்த சூறாவளி அடித்ததில் ஒரு சர்க்கஸ் கூடாரத்தோடு பறந்து போய்விட்டது.மறுநாள் மீனவர்களின் வலைகளில் செத்துப் போன சிங்கங்களும் ஒட்டகச் சிவிங்கிகளும் அகப்பட்டன.Big Mama’s Funeral  என்ற கதையில் சாத்தியமேபடாத கற்பனைகூட செய்யமுடியாத ஒரு பயணத்தைப் பற்றி விவரித்திருந்தேன்.அதில் போப்பாண்டவர் ஒரு கொலம்பிய கிராமத்துக்குப் போவார்.அவரை வரவேற்கும் அதிபரை குள்ளமாக,வழுக்கையாக சித்தரித்திருந்தேன்.அப்போது அதிபராக இருந்தவர் ஒல்லியாக உயரமாக இருப்பார்.அவரிடமிருந்து வேறுபட்டைருக்க வேண்டும் என்பதற்காகவே கட்டையாக சொட்டையாக சித்தரித்திருந்தேன்.அந்தக் கதையெழுதி பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு போப்பாண்டவர் நிஜமாகவே கொலம்பியாவுக்குப் போனார்.அவரை அங்கு வரவேற்ற அதிபர் எனது கதையில் வருவது போலவே கட்டையாக சொட்டையாக இருந்தார்.நீங்கள் நாளேடுகளைத் திறந்தால் போதும்.நம்பமுடியாத விசயங்கள் தினமும் எவ்வளவு  நடக்கின்றன என்பது தெரிந்துவிடும். ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சொலிட்யூட் நாவலை சாதாரணமான சனங்கள் கவனமாக சந்தோஷமாகப் படித்தார்களென்பதும் எனக்குத் தெரியும். ஏனென்றால் நான் எழுதியவற்றில் அவர்களது சொந்த வாழ்க்கையில் நடக்காத விசயம் எதுவுமே கிடையாது.

ஆக,உங்கள் படைப்புகளில் காணப்படுபவை யாவுமே நிஜ வாழ்க்கையை அடிப்படையாக்க் கொண்டவைதானா?

எனது நாவல்களில் ஒரே ஒரு வரிகூட யதார்த்த்த்தை அடிப்படையாகக் கொள்ளாமல் எழுதப்பட்டதில்லை.


உதாரணத்துக்கு ஒன்றை கூறமுடியுமா?

உதாரணமாக ,ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சொலிட்யூடில் வரும் மவுரிசியோ பாபிலோனியோ என்ற பாத்திரத்தைக் கூறலாம்.எனக்கு ஐந்து வயதாக இருக்கும் போது ஒரு நாள் எலக்ரிஷியன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்.அரகாடகாவில் உள்ள வீட்டில் ஒரு மீட்டரை மாற்றுவதற்காக அவர் வந்தார்.அது நேற்று நடந்ததைப் போல அவ்வளவு சரியாக நினைவிருக்கிறது.ஏனென்றால் மின்சார கம்பத்தில் ஏறும் போது அவர் உபயோகித்த தோல் பெல்ட் என்னை ஈர்ப்பதாகயிருந்தது.அப்படி அவர் இன்னொரு சமயம் வந்தபோது எனது பாட்டி ஒரு பட்டாம்பூச்சியை விரட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.என் பாட்டி சொன்னார்:இந்த ஆள் எப்போ வந்தாலும் இந்த மஞ்சள்நிற பட்டாம்பூச்சியும் வந்திடுது.நாவலில் வரும் மவுரிசியோ பாபிலோனியோவின் பாத்திரத்துக்கு அது தான் கரு.

நீங்கள் திரும்பத் திரும்ப வாசிக்கும் எழுத்தாளர்கள் யார்?

ஜோசப் கொன்ராட்,செய்ந்த் எக்சுபரி.

ஏன்?

திரும்பத் திரும்ப ஒருவருடைய எழுத்துக்களை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் அவை முதலில் உங்களுக்குப் பிடித்திருக்க வேண்டும்.நான் கொன்ராடையும் செய்ந்த் எக்சுபரியையும் விரும்ப காரணம் அவர்கள் இருவரிடமும் பொதுவானதாகக் காணப்படும் ஒரு அம்சம்-யதார்த்தத்தை அவர்கள் அணுகுகிற விஷேசமான ஒரு முறை.மிகவும் சாதாரணமான விஷயமும் கூட அவர்களது அணுகுமுறையில் கவித்துவமானதாகத் தென்படும்.

டால்ஸ்டாயைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் அவரது நாவல் எதையும் வைத்திருக்கவில்லை.ஆனால் இதுவரை எழுதப்பட்டுள்ள நாவல்களிலேயே மிகச் சிறந்த நாவல் அவருடைய “போரும் சமாதானமும் “ தான் என்பதென் நம்பிக்கை.

ஆனால் மேலே சொன்ன எழுத்தாளர்கள் எவரது சாயலையும் உங்கள் எழுத்துக்களில் விமர்சகர்கள் கண்டு சொன்னதில்லையே?
யாரைப் போலவும் இருக்கக் கூடாது என்பதற்காக நான் கடுமையாகப் பாடுபடுகிறேன்.நான் விரும்புகிற எழுத்தாளர்களைக் காப்பியடிப்பதை விடவும் அவர்களது தாக்கத்திலிருந்து தப்பிக்கவே நான் முயற்சிக்கிறேன்.

உங்களுடைய மிகச் சிறந்த வாசகர் என் நீங்கள் யாரைக் குறிப்பிடுவீர்கள்?

எனது ரஷ்ய நண்பர் ஒருவர் ஒரு பெண்மணியைச் சந்தித்தாராம்.வயதான பெண்மணி. அவர் என்னுடைய “ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சொலிட்யூட்நாவலைக் கையால் பிரதியெடுத்துக் கொண்டிருந்தாராம்.என் நண்பர்,ஏன் அப்படி பிரதியெடுக்கிறீர்களென அந்தப் பெண்மணியைக் கேட்டாராம்.ஏனென்றால் உண்மையான பைத்தியம் இதை எழுதியவனா? அல்லது நானா? என்பதை நான் கண்டுபிடித்தாக வேண்டும்.அதைக் கண்டறிய ஒரே வழி இந்தப் புத்தகத்தைத் திரும்பவும் எழுதிப் பார்ப்பது தான்என்றாராம் அந்தப் பெண்மணி.அந்தப் பெண்மணியை விட மிகச் சிறந்த வாசகரை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

பாலியல் சுதந்திரத்துக்கு ஏதேனும் எல்லைகள் இருக்க வேண்டுமென நினைக்கிறீர்களா?

நாம் எல்லோரும் நம்முடைய முன் முடிவுகளின் பிணைக் கைதிகளாய் இருக்கிறோம்.ஒரு சுதந்திர சிந்தனையாளன் என்கிற விதத்தில் பாலியல் சுதந்திரத்துக்கு எல்லைகள் எதுவும் இருக்கக் கூடாது என்பதைக் கோட்பாட்டு ரீதியாக ஏற்றுக் கொள்பவன் நான்.நடைமுறையிலோ என்னுடைய கத்தோலிக்கப் பின்னணி,பூர்ஷ்வா சமூகம் ஆகியவற்றின் முன் முடிவுகளிலிருந்து என்னால் தப்பிக்க முடியாது.நம்மில் பலரையும் போலவே நானும் இரட்டை வேட்த்துக்குப் பலியானவன் தான்.
வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் இருப்பது போன்ற ஜனநாயகம் மூன்றாம் உலக நாடுகளுக்கு சரிப்பட்டு வருமென நம்புகிறீர்களா?

அந்த நாடுகளில் இருக்கும் ஜனநாயகம் அவர்களுடைய வளர்ச்சியின் விளைவு.அதை அப்படியே வேறுபட்ட கலாச்சாரங்கள் கொண்ட மூன்றாம் உலக நாடுகளில் பொருத்தப் பார்ப்பது யதார்த்தமானது அல்ல.சோவித் ரஷ்யாவின் மாதிரியை மற்ற நாடுகளில் பிரயோகிக்க நினைத்தது போலவேத்தான் இதுவும்.

அரசியல் தொடர்பான எழுத்துக்களை முதன் முதலில் நீங்கள் எங்கே படித்தீர்களென்று உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?

ஜிபாக்குராவில் நான் பள்ளியில் படிக்கும்போது,1930களில் அல்ஃபோன்சோ லோபேஸின் இடதுசாரி அரசாங்கத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் மார்க்சியம் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் நிரம்பிய பள்ளிக்கூடம் அது.அல்ஜீப்ரா ஆசிரியர் இடைவேளை நேரங்களில் வரலாற்றுப் பொருள் முதல் வாதம் பயிற்றுவிப்பார்.வேதியியல் ஆசிரியர் லெனின் எழுதிய புத்தகங்களைக் கொடுப்பார்.வர்க்கப் போராட்டம் பற்றிக் கூறுவார்.உறைய வைக்கும் சிறை போன்ற அந்தப் பள்ளிக் கூடத்தை  விட்டு வெளியேறும் போது எனக்கு தெற்கும் தெரியவில்லை.வடக்கும் தெரியவில்லை.ஆனால் இரண்டு விசயங்களில் உறுதியான முடிவு இருந்தது.முதல் விஷயம்: நல்ல நாவல் என்பது யதார்த்தத்தை கவித்துவத்தோடு மாற்றி அமைப்பது.அடுத்த விஷயம் : மனித குலத்தின் உடனடியான எதிர்காலம் சோஷலிசத்தில் இருக்கிறது.

உங்கள் நாட்டில் எந்த மாதிரியான அரசாங்கம் வரவேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்?

ஏழை மக்களை மகிழ்ச்சியோடு வைத்திருக்கிற அரசாங்கம்,அது எதுவாக இருந்தாலும் சரி.
                   


                       *************************

மார்கேஸின் நண்பரும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவருமான ப்ளினியோ அபுலியோ மெண்டோஸா என்பவர் எடுத்த நேர்காணலின் சில பகுதிகள்.

நன்றி : The Fragrance of Guava Verso,1983
              ---------------------------------


நன்றி :உரையாடல் தொடர்கிறது-பேட்டிகளும் படைப்புகளும்- 

தமிழில்-ரவிக்குமார்- விடியல் பதிப்பகம் (முதல் பதிப்பு 

டிசம்பர் 1995)


குறிப்பு: இங்கு இடம்பெற்றிருக்கும் மார்க்கேஸின் அறிமுக உரையும் நேர்காணல் மொழிபெயர்ப்பும் ரவிக்குமாரின் உரையாடல் தொடர்கிறது என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.முக்கியமான ஆளுமைகளின்(உம்பர்தோ எக்கோ,மார்க்கேஸ்,அகஸ்தோ போவால்,எட்வர்டு செய்த்,மிஷேல் ஃபூக்கோ) அறிமுக குறிப்புகள்,அவர்களது நேர்காணல்,அவர்களுடைய ஆக்கங்களின் ஒரு பகுதி என உருவாக்கப்பட்ட , இந்த நூலுக்கு ஏன்  மறுபதிப்பு வரவில்லை எனப் புரியவில்லை. இதில் எட்வர்டு செய்த் பற்றி மட்டும் ரவிக்குமாரால் விரிவாக எழுதப்பட்ட நூல் தனியாக வெளிவந்திருக்கிறது.இதே போல மறுபதிப்பு வராத மற்றொரு  நூல் எஸ்.வி.ராஜதுரை-வ.கீதாவின் “அந்தோனியோ கிராம்சி : வாழ்வும் சிந்தனையும்”.
                   --------------------------------