Wednesday, July 21, 2021

உதிராத நட்சத்திரம்

 

உதிராத நட்சத்திரம் 

"என்ன வாசிக்கறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது எப்படி வாசிக்கறோம் என்பது..”

-பழனி சுப்ரமணிய பிள்ளை




மரபானக் குடும்பங்களிலிருந்து பரம்பரையாகத் தொன்றுத் தொட்டு வருகிற கிளையொன்றிலிருந்து தோன்றுகிறவர்களுக்கே இசையின் வாயில்கள் திறக்கும் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவ்வாறில்லாமல்  சங்கீதத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாத குடும்பம் ஒன்றிலிருந்து வந்த ஒருவர், இன்று வரை தொடர்கிற ஓர் இசை மரபின் காரணகர்த்தராக விளங்கினார் என்பது ஆச்சரியமான ஆனால் உவப்பூட்டுகிற உண்மை.

சோழர்கள் காலந்தொட்டு பின் வந்த நாயக்கர், மாராட்டிய மன்னர்கள் காலம் வரையில் தஞ்சையில் கலைகளைப் போஷித்து வளர்த்ததன் பேறாக நெடிய வரிசையில் அமைந்த பெருங்கலைஞர்கள் உருவாகினர். போலவே அதை வெட்டிபுதுக்கோட்டை வழிஎன்ற ஒன்று உருவானது. அஃது தோல் வாத்தியத்தை அடிப்படையாகக் கொண்டது (நாதஸ்வரத்துடன் இசைக்கப்பட்ட தவில் இதற்கு வழிவகுத்தது).

இதன் மூலாதார வித்து அரண்மனையில் லாந்தர் விளக்குச் சேவை செய்பவரிடமிருந்து தோன்றியது என்றால் நம்ப முடிகிறதா? வரலாற்றில் பல்வேறு திருப்புமுனைகள் எளிய ஆனால் தீவிரமானத் தொடக்கத்தைக் கொண்டிருப்பது நினைவுக்கு வருகிறது. அவர் பெயர் மான்பூண்டியா பிள்ளை (பிள்ளை என்பதை இசை வேளாளர் எனக் கொள்க). விளக்கு சுமப்பது தொழில் என்றாலும் அவர் மனம் கேட்ட கச்சேரியிலேயே லயித்திருக்கிறது. ஊசலாட்டங்களுக்குப் பிறகு மாரியப்ப தவில்காரரிடம் குருகுல வாசத்தில் சேர்கிறார். பிள்ளை டேப் அடிப்பதில் வல்லவர். கணக்குகள் அவரிடம் சுத்தமாகப் பேசின. அவரது திறனைக் கண்ட மாரியப்பா அந்தடேப் அடிப்பதைஒட்டி ஒன்றை செய்து கொள்ளச் சொல்கிறார். பல முயற்சிகளுக்கு பின் அவர் தயாரித்ததேகஞ்சிரா. அதில் பல சொற்களும் பயின்று வரும்படி தேர்ச்சி அடைகிறார். பிறகு அதையெடுத்துக் கொண்டு தஞ்சை, கும்பகோணம், சென்னை என அலைந்து சங்கீத விற்பன்னர்களிடம் வாசித்துக் காட்டி  உச்சிமுகரும் பாராட்டுகளுடன் நிறைகிறார். மிகக் கடினமான ஓர் சவாலிலுமே கூட வெல்கிறார் பிள்ளை. அவர்களால் மான்பூண்டியாவின் கஞ்சிராவுக்கு மகுடம் சூட்டப்படுகிறது. பிறகு சுபாவமாகவே சிஷ்யர்கள் இணைகிறார்கள். அவர்களில்மிருதங்க மேதைதட்சிணாமூர்த்தி பிள்ளை மிகவும் முக்கியத்துவமுடையவர். இவருக்கு பின்னணியிலும் மரபேதுமில்லை. அரண்மணையில் காவல்காரராக இருக்கிறார் பிள்ளையால் ஈர்க்கப்பட்டு அவரிடம் வந்து சேர்க்கிறார்.  இன்றுமே சில கலைஞர்கள் இரட்டை வாத்தியங்களில் தேர்ந்தவர்களாக இருப்பதை பலரும் அறிந்திருக்கலாம். கஞ்சிரா, தவில், மிருதங்கம் என தோல்கருவிகளை லய சுத்தத்துடன் கடினமானக் கணக்குகளை தங்கள் பயிற்சியால் ஈடேற்றிய இக்கலைஞர்கள் கச்சேரிக்கென்று பிரத்யேகமாக தன் மனோதர்மத்திற்கு உகுந்த வாத்தியத்தையே தேர்ந்தெடுத்திருக்கின்றனர் (இது போக பழனி சுப்ரமணியப் பிள்ளை நன்றாகப் பாடுவார். ஜி.என்.பி. அவர் பாடிக் கேட்பதை விரும்பி இருக்கிறார்). அவ்வகையில் தட்சிணாமூர்த்தியும் அதன் பின் வந்தவர்களும் மிருதங்கத்தின் விரல்களாக இருப்பதையே பெரிதும் விரும்பி இருக்கின்றனர். கச்சேரி செய்ய ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே  உச்சத்திற்குச் சென்றவாராம் தட்சிணாமூர்த்தி. இவரிடம் சேர்ந்த முத்தையா பிள்ளையின் முயற்சியாலேயே மான்பூண்டியாவுக்கு கோவில் எழுப்பப்பட்டிருக்கிறது.

உள்ளேஅவ்வளவாக ஏதும் இல்லாதவர்களை அல்லது அதற்கான அடிப்படை விருப்பம் வாய்க்கப்பெறாதவர்களை பிறர் எத்தனை புளி போட்டு துலக்கினாலும் புடம் போட்டாலும் கூட கலை அவர்களுக்கு தன் ஓரக்கண்ணைக் கூடக் காட்டாது போலும். முத்தையா பிள்ளையின் மூத்த தாரத்தின் இரண்டாவது மகனான பழனி சுப்ரமணிய பிள்ளை இடது கை பழக்கம் உடையவர். அது கலைக்கு சம்பிரதாய விரோதமாகக் கருதப்பட்டதால் தந்தையால் தூஷணையுடன் ஒதுக்கி வைக்கப்பட்டார். இளைய தாரத்து மகனுக்கு மிருதங்க பயிற்சிகள் நடக்கின்றன. ஆனால் அவனுக்கோ விளையாட்டிலேயே நாட்டம் அதிகம். மாறாக விலக்கப்பட்டவனுக்கு இன்னும் கொஞ்சம் வாசித்தலென்ன என்கிற வேட்கை. அதற்காக உடல் தண்டனைகள் கூட கிடைக்கிறது. விரோத பாவத்துடன் நடத்தப்படுகிறார். ஆனாலும் மிருதங்கத்தின் மீது தனக்குள்ள அடங்காத தாபத்தை தணிக்க அவனால் இயலவில்லை. அந்த இடதுகைக்காரனான சுப்ரமணியபிள்ளை வாசிக்க அனுமதி வாங்கித் தந்தவர் அதே தட்சிணமூர்த்தி தான். அபாரமான மேதையாக உருவாகக் கூடியவன் எனக் கணித்தவரும் அவரே.



அதே இடக்கையைக் காரணம் காட்டிக் கச்சேரி மறுக்கப்படுகிற போது இயற்கையாகவே அவருக்கான நாற்காலி அமைந்து வந்தது. பாலக்காடு மணி ஐயருடன் (மதுரை மணி ஐயர் அல்ல) செம்பை வைத்தியநாத பாகவதருக்கு ஏற்பட்ட மனத்தாங்கல் அவரிடத்தில் பிள்ளையை அமர வைத்தது. பிறகு பிள்ளைக்கு வாசிப்பிலிருந்த அபாரமான ஞானம் அவரை பெரிய இடங்களுக்குக் கொண்டு போய் சேர்த்தது. ஜி.என்.பி, மதுரை மணி ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள் போன்றோரின் கச்சேரிகளுக்கு பக்கவாத்தியத்துக்கு அவருக்கே அழைப்பு வந்தது. வாய்ப்புகளுக்காக தன் வாசிப்பு முறையை ஒரு போதும் மாற்றிக் கொள்ளாதவர், இரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதற்காக சில உருப்படிகளை சேர்க்காதவர், சமரசம் செய்து கொள்ளாதவர் சுப்ரமணிய பிள்ளை  என்பது தான் அவரை மட்டற்ற கலைஞராகக் காலத்தில் நிறுத்துகிறது. ஏனெனில் தட்சிணாமூர்த்தி பிள்ளையிடம் இணைந்தே இவர் கச்சேரிகள் செய்திருக்கிறார். அவரது சொந்த மகனை விடவும் இவரிடமே பிரியமாக இருந்திருக்கிறார்.

மேலும் இரு நிகழ்ச்சிகள் மூத்த மற்றும் சக கலைஞர்களுக்கு பிள்ளையிடமிருந்த பெரும் மதிப்பை காட்டுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் நிகரற்ற கலைஞர்களுள் ஒருவரான பாலசரஸ்வதியின் நட்டுவனர் கந்தப்ப பிள்ளையை பழனியின் வாசிப்பு வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. பழனியை பல ஜதிகள்  வாசிக்கச் சொல்லி அதற்கேற்ப பாலாவை ஆடச் செய்வாராம கந்தப்பா. சிகரம் வைத்தாற்போலவீணைதனம்மாள் போன்ற பெரிய மேதை பழனியின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்திருக்கிறார். மற்றொன்று எம்.எஸ்ஸுடன் ஆனது. “பழனி ஒரு பல்லவியையை நாட்டைக் குறிஞ்சி ராகத்தில் பாடிக் காட்டினார். “ரொம்ப கச்சிதமா அழகா இருக்கேஎன்று சொன்னதும் உடனிருந்த திருவாலங்காடு சுந்தர்ரேச ஐயரோகுஞ்சம்மா இன்னைக்கு கச்சேரியில இதைப் பாடிடேன்என்றார்..எனக்கு வெலவெலத்து விட்டது. பிறகு பழனியை மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டு பல்லவியை பாடம் செய்தேன். அன்று முன் வரிசையில் பழனி அமர்ந்திருக்க நான் நாட்டைக் குறிஞ்சியில் ராகமும் தானமும் பாடினேன்…’ என்று விட்டுஎப்படியோ தவறு வராமல் பாடி ஒப்பேற்றி விட்டேன்என்று எம்.எஸ் சொன்னாராம்(பக்.176).



தொடக்கக் காலச் சோதனைகளுக்கு ஆற்றுப்படுத்தும் முன்னிலையாக விளங்கியவர் கோலார் ராஜம்மாள். முதல் மணவுறவு முறிந்து கச்சேரியும் அமையாமல் விரக்தியில் கிடந்தவரை தேற்றி மேலேற்றிய முக்கியமான கரம் இவருடையது. பழனி மீது வெளிச்சம் படரக் காரணமானவர் செம்பை.

ஒரு காலத்தில் வாழ்ந்த இரு மேதைகள் எவ்வாறு தங்களுடன் பரஸ்பரம் மேலதிக மதிப்புக் கொண்டிருந்தனர் என்பதன் உதாரணம் பழனி சுப்ரம்ணிய பிள்ளைபாலக்காடு மணி ஐயர் இருவருக்குமான உறவு ஆகும்பாடகர் பாடுவதைப் போலவே மிருதங்கத்தில் வாசிப்பது மணி ஐயரின் சிறப்புஇதில் இவரது உள்ளுணர்வு வெகுவாகச் சிலாக்கியத்திற்குள்ளாகியிருக்கிறது. ஆனால் பழனி சங்கதிக்கு சங்கதி வாசிக்காமல் பாடலுக்கு பொருத்தமான நடைகளை சொற்கட்டுகளை வாசிப்பார். பெரும்புகழில் மணி ஐயர் இருந்த போதும் பழனி தன் பாணியை மாற்றிக் கொள்ளவே இல்லை. மேலுமொன்று வாசிப்பில் சறுக்கல் நேர்ந்தால் பழனி திரும்பவும் முதலிருந்து வருவார் என்றால் மணி ஐயரோ சறுக்கினால் திரும்பாது தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் இயல்புடையவர். இருவருமே மேதைகள் என்பதால் எது சிறந்தது என்கிற அரட்டை தேவையற்றதாகும். வாத்தியத்தின் மீது மோகம் கொண்ட மணி ஐயருக்கு பழனியின்தொப்பிபோல தன்னுடையது வரவில்லை என்கிற மனக்குறை இருந்திருக்கிறது. அதற்காக கருவியில் பல வேலைகள் பார்த்துமிருக்கிறார். பிறகு பழனியின்கும்கிகளை வேறு எவரும் அவரளவிற்கு கையாளவுமில்லை. பழனி, மணி ஐயரின் மிருதங்கக் கச்சேரிகளுக்கு கஞ்சிரா வாசித்திருக்கிறார்.  ‘இன்று மிருதங்கம் வாசிப்பவர்கள் எல்லோருமே பழனியின் பாதையிலேயே 90% பின்பற்றுகின்றனர் (பக்.135) என்கிற நூலிலுள்ள வரிகளை முத்தாய்ப்பாகச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மணி ஐயருக்கு கிடைத்த அங்கீகாரங்கள், விருதுகள் ஏதும் பழனியின் பக்கம் திரும்பவில்லை. இதற்கு பிராமணர்*பிராமணர் அல்லாதவர் என்கிற பாகுபாடு அன்றி வேறு காரணம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. முடிவெடுக்கும் சபைகளில் யார் கை ஓங்கியிருக்கிறதோ அது தானே பேசும். அதுவும் கர்நாடக சங்கீத உலகம் என்றால் கேட்கவும் வேண்டுமா? நூலாசிரியர் லலித்ராம் அதை ஒப்புக் கொண்டாலுமே கூட அதற்கு வேறு சில சமாதானங்களையும் சொல்கிறார். அது சமாதானம் என்கிற அளவில் மட்டுமே ஏற்புடையதாகும்.

ஓர் நூலுக்குதுருவ நட்சத்திரம்எனப் பெயரிட்டு விட்டால் போதுமா? அது ஏன் என வாசிப்பவர் உணர வேண்டாமா? உணர்வது மட்டுமல்ல நூலாசிரியருக்கு நன்றிக்கடன் பட்டவராகவும் வாசிப்பவரை எண்ண வைப்பது சாதாரணமானதல்ல. லலித்ராமின் தேடலும் ரசனையும் உழைப்பும் ஓர் மேதை மேல் கொண்டிருக்கும் அளப்பரிய பற்றுதலும் ஈடுபாடும் இந்நூலில் வெளிப்படுகிறது. பலரையும் கண்டு கேட்டு எழுதியிருக்கிறார். லலித்ராம் முறையாக இசை கற்றுக் கொண்டவர். இசையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறவர். ஓர் துறைச்சார்ந்தவர்கள் மட்டுமே அறிந்து போற்றி அப்படியே காலத்தில் மறைய விடுகிற மேதைகளை, கலைஞர்களை பொதுசமூகத்திடம் முன் வைப்பவர் இவர். லலித்ராம் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். அவற்றின் வழி அவருக்கு மொழி படிந்து வருகிறது. அது இந்நூலிலும் தொழிற்பட்டிருக்கிறது. இன்னும் மொழி செறிவுடன் இருக்கலாம். குறையாக ஓரிடத்தை மட்டும் சுட்டிக் காட்டத் தோன்றுகிறது. ’இவர்களுடைய புகழ் திறமையான முதலீட்டாளிடம் கிடைத்த மூலதனத்தைப் போன்றது. வருடங்கள் ஆக ஆக பெருகுமேயன்றி குறையாது(பக்.142) என எழுதியிருக்கிறார். கலையுலக மேதைகளைக் குறித்து எழுதும் போது இது போன்ற லெளகீக உலகின் உவமைகளைத் தவிர்ப்பது நல்லது. அதற்கிணையான உவமைகளைத் தேடிக் கண்டடைந்து எழுதலாம். பழனியின்தொப்பியை பலரும்புறா குமுறுவது போல..’ என்று சொல்கிறார்களே, அது போல. என்னவொரு அழகிய உவமை..!



லலிதாராம் இசை சார்ந்து எழுதும் கட்டுரைகள், நேர்காணல்கள், சிறு குறிப்புகள் என எதையுமே விட்டுவிடாமல் பின் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவன் என்கிற வகையில் இந்நூலை அதே விருப்பத்துடன் வாசித்தேன். மெச்சத்தக்க போற்றதல்குரிய பணியாகும். அதற்குரிய தரத்துடன் அமைந்துமிருக்கிறது. அவரை இன்னும் பல கலைஞர்களின் வாழ்க்கைகளை அவர்கள் தம் மேதமைகளை எழுத வேண்டும் எனக் கோருகிறேன்.

துருவ நட்சத்திரம் –லலிதாராம் – முதல் பதிப்பு 2011 . சொல்வனம்பெங்களூருபக்கம். 224 ; விலைரூ.150/.

*நூலிலிருக்கும் புகைப்படங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்த லலிதாராமுக்கு நன்றி.