Friday, September 10, 2021

உலகெலாம் உணர்ந்து..

 

உலகெலாம் உணர்ந்து..


அறுபதாண்டுகளை எட்டியிருக்கும் முத்துலிங்கத்தின் எழுத்து வாழ்க்கையில் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருப்பினும் (1965 லிருந்து 1994வரை முப்பதாண்டுகள் அவர் ஏதும் எழுதவில்லை) அவற்றில் மூன்று தொகுதிகளின் சமர்ப்பணக் குறிப்புகளிலிருந்து தொடங்கலாம் என்று தோன்றுகிறது.

”இடருற்று அவதிப்படுவது மனிதர்கள் மாத்திரமல்ல. இந்தப் பூலோகத்தில் அழிவின் எல்லையில் பல விலங்கினங்கள், பறவைகள், ஏன் தாவரங்கள் கூட உண்டு.

மற்ற உயிரினங்களுக்கு தீங்கிழைப்பது வேறு யாருமல்ல. ஆறறிவு படைத்த மனிதன் தான்.இந்த மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக மன்னிப்பு கேட்டு இந்நூலை இடருற்ற உயிரினங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்”

-      ’வடக்கு வீதி’ (மணிமேகலை பிரசுரம் – 1998)

 

”கடல் ஆமையின் வாழ்க்கை விசித்திரமானது. பெண் ஆமைகள் இரவில் நீந்திவந்து கடற்கரை மணலில் குழி பறித்து முட்டைகள் இட்டுவிட்டுப் போய்விடும். அதற்கு பிறகு அவை திரும்பிப் பார்ப்பதேயில்லை.

சூரிய வெப்பத்தில் இந்த முட்டைகள் பொரிக்கும். வெளியே வந்த குஞ்சுகள் நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கும். தண்ணீரின் திசை அறிந்து வழி தேடி கடலில் போய் சேர்ந்து கொள்ளும்.

நான் எழுதிக் கொண்டே இருக்கிறேன். எங்கோ ஒரு வாசகர், என் எழுத்தை முற்றிலும் உணர்ந்தவர், காத்திருக்கிறார். என்னுடைய படைப்புகள் எப்படியோ வழி தேடி அவரிடம் போய்ச் சேர்ந்துவிடும். அப்படி நம்பிக்கை.

இந்த நூல் அந்த வாசகருக்கு, அந்த உலகத்துக்கு.”

-      ’மகாராஜாவின் ரயில் வண்டி’ (காலச்சுவடு பதிப்பகம் -2001)

 

“சமர்ப்பணம் என்றால் வழக்கத்தில் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒருவருக்கு நன்றி கூறும் முகமாக இருக்கும். இது பிராயச்சித்தம். ஆப்பிரிக்கக் காட்டில் எனக்கும் என் நண்பன் ஒருவனுக்கும் மட்டுமே தெரிந்த சங்கதி. நீண்ட ‘பாம்’ மரத்தின் உச்சியிலே ஒரு காகம். அவ்வளவு தூரத்திலும் மொழுமொழுவென்று கொழுத்துக் காணப்பட்டது. எங்கள் உயரத்திலும் பார்க்க நிழல்களின் நீளம் குறைந்து காணப்பட்டது. ஒரு மினுமினுப்பான வெய்யில் நேரம். நண்பன் என்னைப் பார்க்க நான் மெள்ள தலையசைத்தேன். அவன் துப்பாக்கியை செங்குத்தாகத் தூக்கிச் சுட்டான். அந்த பறவையின் பெரியபாதி பொத்தென்று காலடியில் விழுந்தது. அதை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் நண்பனின் குறிபார்க்கும் வல்லமையில் எனக்கு அமோகமான நம்பிக்கை இருந்தது. அந்தக் காகம் ஒரு குற்றமும் செய்யவில்லை. அது செய்ததெல்லாம் அந்த நாட்டிலே உள்ள அத்தனை காடுகளிலும் அந்தக் காட்டிலே உள்ள அத்தனை மரங்களிலும் அந்த மரத்திலே உள்ள அத்தனை ஓலைகளிலும் உள்ள வளைந்த ஓலையைத் தேர்வு செய்து அங்கே தன்பாட்டுக்கு உட்கார்ந்திருந்தது தான். இந்தப் புத்தகம் ஒரு பாவமும் அறியாத அந்தப் பறவைக்கு பிறக்காமல் போன அதன் சந்ததிகளுக்கு. ”

-      -’அ.முத்துலிங்கம் கதைகள்’ ( தமிழினி வெளியீடு- 2004)

 

இம்மூன்றிலுமே ஒருவித தொடர்ச்சி காணப்படுவது மட்டுமல்ல, அவரது படைப்புலகிலும் மன உலகிலுமுள்ள பிரத்யேக அம்சங்களில் சிலதேனும் துலங்கி வந்திருக்கின்றன. இதன் மூலம் முத்துலிங்கத்தின் ஆக்கங்களுக்குள் செல்ல இச்சொற்களின் ஊடாகத் துல்லியமாக இல்லையென்றாலும் தோராயமாக ஆனால் ஏமாற்றாத வழியை உருவாக்கி கொள்ள முடியும்.


மூன்றாவது குறிப்பைக் காணுங்கள். அதுகாறும் எழுதிய முக்கால் சதக் கதைகளும்(75)  இறந்து போன காகத்துக்கும் பிறக்காத அதன் சந்ததிகளுக்கும் என்கிறார். இத்தனைக்கும் அது பழகினது கூட இல்லை. அப்போது தான் அவ்விருவருமே அதை காண்கின்றனர். மேலும் அந்த ‘கொழுத்த காகம்’ அமர்ந்திருந்த மரத்தின் வேர் புதைந்திருப்பது ஆப்பிரிக்க வனாந்தரத்தில். அதைச் சுட்டு வீழ்த்தியவரைக் கடிந்து கொள்ளவோ குற்றம் சாட்டும்  தொனியோ கீழான பார்வையையோ அவர் வெளிப்படுத்தவில்லை. நண்பர் என்றே சுட்டுகிறார். இக்குறிப்பை ஒளிரச்செய்வது ஆசிரியரின் தன்னியல்பான பண்பு தான். இதில் சுயபுகழ்ச்சியின் தம்பட்டமோ மிகையுணர்ச்சியோ பச்சாதாபமோ தென்படவில்லை. அஃதொரு இயல்பான சுபாவமாகவே வெளிப்பட்டிருக்கிறது. ஒருவேளை இதற்காக தான் சிறிது காலத்திற்கு (’’வடக்கு வீதி’யின் சமர்ப்பணம்) முன்பே மனிதகுலம் சார்பாக மன்னிப்பும் கேட்டு விட்டாரோ என்னவோ..!


‘பெயர் அறியாத வாசகருக்கு..’ என்று முடிகிறது மற்றுமொரு குறிப்பு. இதில் புதுமை ஏதுமில்லை. புதுமைப்பித்தன் ‘வாழையடி வாழை’யாக வரும் வாசகருக்கு எனச் சொன்னதன் எதிரொலியே இது. ஆனால் அந்த இடத்திற்கு வருவதற்கு அவர் தரும் தகவலும் அதைக் கூற வந்த விஷயத்துடன் பொருத்தமாக இணைத்து விடுகிற லாவகமும் அக்குறிப்பை சுவாரஸ்யமுடையதாக மாற்றி விடுகிறது. நிறம் உதிர்ந்த சுவரில் வண்ணம் அடித்ததைப் போல பளிச்சென காட்டுகிறது. கதையென்றாலும் கட்டுரையென்றாலும் அதில் சுவாரஸ்யத்தை முக்கியமாகக் கருதுவதாக தான் அளித்த செவ்வியொன்றில் கூறியுமிருக்கிறார். அதுவொன்றும் பாதகச் செயலும் அல்லவே. அது எந்தளவுக்கு எழுத்துக்குள் வினையாற்றுகிறது என்பதன் பொருட்டு அணுகப்பட வேண்டியதாகும். ஏனெனில் சுஜாதாவின் முதன்மை இலக்கும் சுவாரஸ்யமே. இருவரையும் பிரிக்கும் எல்லைக்கோடுகளுள் ஒன்று முத்துலிங்கத்தின் கதைகள் ’ஏகதேச’மாக உலகு தழுவியவை என்பது. கடல், கண்டங்களைக் கடந்து பயணிக்கும் அவரது கதைகளின் மனிதர்கள் எவரையுமே தன் பார்வை சார்ந்து எடை போடவோ முற்றான தீர்ப்பை அளிக்கவோ ஒருபோதும் விரும்பாதவர். ஓர் பண்பாடு தனக்கு முற்றிலும் அந்நியமான சம்பந்தமற்ற வேறொரு பண்பாட்டுடனும் கலாச்சாரத்துடனும் உரையாட அல்ல சந்திக்க நேர்ந்தாலே மனதில் வேற்றுமையுணர்ச்சிகள் , பாகுபாடுகள், தாரசுத் தட்டுகளின் ஆட்டங்கள், இளக்காரங்கள் குமிழியிடுவது இயல்பு. அது ஆசிரியனே அறியாத விதத்தில் எழுத்திற்குள் பிரதிபலித்து விடுவதையும் தவிர்த்து விட முடியாது. ஆனால் அதன் கால்நகத்தின் நிழல் கூட முத்துலிங்கத்திடம் இல்லை. அவரது உலகு தழுவிய நோக்கும் வியப்பும் தன்னை முன்னிருத்தி ஏதொன்றையும் மதிப்பிடாத தன்மையுமே அவரை இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருத வைக்கிறது. இக்கூற்றுக்கு பலம் சேர்ப்பது போல ஓர் நூலின் முன்னுரையில் ‘ஒரு நாட்டு மக்களின் அழகுணர்ச்சியையோ கலைவெளிப்பாட்டையோ சரியாக எடை போடுவதற்கு எனக்கு என்ன யோக்யதை இருக்கிறது என்ற எண்ணம் வலுத்தது’ என்று எழுதியிருக்கிறார். சுஜாதாவுடன் அவரைச் சேர்த்து வைப்பது மொழியில் ஆங்காங்கே அவர் தடவுத் தரும் இனிப்புகளே. கதையின் சில பகுதிகளைக் கடக்கும் அந்த நிமிடத்தில் மட்டும் இவர் ‘இலக்கிய சுஜாதா’வோ என எழும் நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை.  கதைசொல்லிகள் வாய்பேச்சின் வித்தகர்களுக்கு தங்கள் படைப்புகளில் பெரிய இடமளிப்பவர்களாகவே இருப்பார்கள். இதில் கி.ராஜநாராயணனை முன்னோடியாகக் கொள்ளலாம் என்றால் சமகாலத்து உதாரணமாக யுவன் சந்திரசேகரைச் சொல்லலாம். எனவே முத்துலிங்கத்தின் மாந்தர்களும் பேச்சில் சலிக்காதவர்கள். சுவாரஸ்யம் குன்றாமல் தன் பாட்டுக்கு கதையை வளர்த்திக் கொண்டு செல்பவர்கள்.  வெளித் தோற்றத்திற்கு மிகச் சரளமாக எழுதிச் சென்றிருப்பதாகத் தோன்றும் இவ்வெழுத்திலும் நாகாசுகள், செதுக்கல்கள், மேற்கொள்ளப்பட்டிருக்கும். ஏன் அந்த சரளமே திரும்ப திரும்ப பிரதியைத் திருத்திய பின் உருவானதாக இருக்கலாம் (எளிமையும் சரளமும் கொண்ட பஷீரின் ஆக்கங்கள் பல தடவை வெட்டி சீர்படுத்தித் திருத்தி எடுக்கப்பட்டவையே). இந்த கதைசொல்லிகள் பாத்திரங்களின் பேச்சில் ரசம் கூட்டி வக்கணையை சேர்க்க விரும்புகிறவர்களாகவே இருப்பார்கள். அதனால் தான் கி.ராஜநாராயணன் காட்டும் கரிசல் மனிதர்களை விடவும் பூமணியின் உலகத்தவர்களே அம்மண்ணிற்கு  மிகவும் நெருக்கமானவர்களாக இருக்கின்றனர்.  அங்கேயே முளைத்தவர்கள் போலுள்ளனர். நண்பர்களின் அரட்டை கூட எப்படி கதையாக மாற முடியும் என்பதற்கு முத்துலிங்கத்தின் ‘குங்கிலிய நாயனார்’ போன்ற கதைகள் எடுத்துக்காட்டாக கூறலாம். ஆனால் செட்டான சொற்களில் எழுதப்பட்ட கச்சிதமான கதைகளும் அவர் படைப்புலகில் உள்ளன. வடிவத்தை முதன்மை நோக்கமாக கொண்டிருக்காமல் எங்கும் தொடங்கி தாவி வேறொன்றுக்குச் சென்று மீண்டும் திரும்பி முடிக்கும் முத்துலிங்கம் தன் கதைகளை வெவ்வேறு வடிவ மாதிரிகளில் எழுதிப் பார்ப்பவராகவும் இருக்கிறார். முத்துலிங்கத்தின் கவச குண்டலம் தகவல்கள். அதன் பிறகு சித்தரிப்பு உத்திகள். 
இக்கட்டுரையே பறவையினம் ஒன்றிலிருந்து தொடங்கலாம் என நினைத்து அல்ப்ராஸ் என்னும் பறவை குறித்து தகவல்களைத் திரட்டி இருந்தேன். ஆனால் அதை பற்றியும் ஓர் கதையினுள் எழுதி விழி பிதுங்க வைத்துவிட்டார். வரலாறு, விலங்குகள், பறவைகள் என அவர் எடுத்தாளும் தகவல்கள் கதைகளுக்கு மேலதிக அர்த்தங்களை அளிக்கின்றன. சில சமயங்களில் துருத்திக் கொண்டுமிருக்கின்றன. மேலும் பறவைகளும் பிராணிகளும் விலங்குகளும் இவர் உலகில் தவிர்க்க முடியாத பிரஜைகள்.


சூழல் மற்றும் பாத்திரச் சித்தரிப்பிலுள்ள முனைப்பு, தகவல்களை எப்படியேனும் கதையினுள் சொல்லிவிட வேண்டும் என்பதிலும் இருக்கிறது. அவை  பொது அறிவு களஞ்சியம் எனச் சொல்லத் தக்க அளவில் படைப்புகளில் நிறைந்திருக்கின்றன. இவற்றை மட்டும் தனியாகப் பொறுக்கி எடுத்து தொகுத்து மனனம் செய்தால்  அரசாங்க போட்டி தேர்வுகளைக் (குரூப்–IV) கூட வெற்றி பெற்று விடலாமோ என்னவோ..! நீளமான வாக்கியங்களே முத்துலிங்கத்திடம் காண முடியாது. அப்படி அமைந்தாலுமே கூட அவற்றை வெட்டி ஒட்டி துண்டுக்கி விடுவார் போலும். சுஜாதாவிடமிருந்து பிரிக்கும் மற்றொரு முக்கியமான பண்பும் இதுவே. நறுக்குத் தெறித்தாற் போலச் சுருங்கக் கூறும் உரைநடை ஸ்ரீரங்கத்தவருடையது. இவர் முன் லட்சக்கணக்கான ரசிகர்களின் முகங்கள் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். அவர்களுக்குக் களிப்பூட்ட வேண்டிய, தோதாக நடனங்களை அமைத்துக் கொள்ள வேண்டிய தேவை சுஜாதாவின் எழுத்திற்கு  இருந்து கொண்டே இருந்தது. எனவே இலக்கிய தரம் நான்காம் பட்சம் தான். முத்துலிங்கம் தன் எழுத்தை என்றேனும் தன்னை தேடி வரும் வாசகனுக்கு என்கிறார். இருப்பினும் கூட அவரால் வெகுஜன ஊடகத்திலும் சிறுபத்திரிகையிலும் சமமான அளவில் வாசகரை அடைந்து விட முடிகிறது. சுவாரஸ்யமும் நுட்பமும் குறிப்புணர்த்தலும் கூடிய அவரது கதைகள் அவரவர்களுக்கான வாயில்களை தன்னகத்தே திறந்து வைத்திருக்கின்றன.


ஈழக்கவிதைகளிலும் புனைவெழுத்துகளிலும் பெரும்பான்மையானவற்றை போர் இலக்கியங்களாகப் பாவித்துக் கொள்வதில் பிழையில்லை. தாயகத்து மக்களின் நிம்மதியற்ற வாழ்வும் புலம்பெயர்ந்தவர்களின் அகதி அடையாளம் அளிக்கிற துயரக்கதைகளும் போர் சுட்டுத் தீர்த்த சாம்பல்களின் எச்சங்களே. இந்த உக்கிரம் ஏதும் முத்துலிங்கத்தின் எழுத்திற்குள் இல்லை. ஏன் இல்லை என்கிற வினாவை எழுப்ப தேவையுமில்லை. தெரிவு படைப்பாளருடையதல்லவா..! ஆனால் மிக நேரடியாக இல்லை என்றாலுமே கூட மறைபொருளாக கதையினுள் சற்றே உள் நுழைந்து அணுகினால் அத்துயரங்களுக்கு இடமிருப்பதைக் கண்டு கொள்ளலாம். எழுதுகிறவனுக்கெனத் தனியாக சுயசரிதைகள் தேவையில்லை. ஏற்கனவே அதை தான் தினுசான முறைகளில் எழுதிக் கொண்டிருக்கிறானே..! நேரடியான எளிய கூறு முறை கொண்ட கதைசொல்லிகளின் உலகில் இரத்தச் சொந்தங்கள்,  சுற்றங்கள் என பலரும் சிறிய புனைவு வேடத்தைத் தரித்துக் கொண்டு அவர்களது படைப்புலகினுள் நிறைந்திருப்பார்கள். உதாரணமாக முத்துலிங்கத்தின் ஒட்டுமொத்த படைப்புலகையும் அணுகினால் அவரது சொந்தக் குழந்தைகள் சிறுவர்களாகி இளைஞர்களாக வளர்ந்து பின் அவர்களது குழந்தைகளும் கதையினுள் இடம்பெறும் வம்சவரலாறு ஒன்று இடைகலந்து ஓடிக் கொண்டே இருப்பதை உணரலாம். தன்வரலாறு இன்றி கதைசொல்லிகள் இல்லை போலும்.  இத்தகைய கதைகளில் எப்போதுமே வந்து விடுகிற அவரது மனைவி ‘பிள்ளை கடத்தல்காரன்’ தொகுதியில் இரு கதைகளில் மட்டுமே வருகிறார். மீதமுள்ள 18 கதைகளும் பிறரது அனுபவங்களை சொல்லக் கேட்டவையும் பார்க்கக் கிடைத்தவையுமே. இவற்றின் நிகழிடம் மிகுதியும் கனடா. ஒன்றிரண்டு இலங்கையில் நடக்கின்றன. பிறகு அவரது பெரும்பான்மைக் கதைகளின் விளைநிலமான  ஆப்பிரிக்கா இத்தொகுதியில் ஒரே கதையில் மட்டும் வருகிறது. பாக்கி இருக்கும் இரண்டை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆளுக்கொன்றென  பிரித்துக் கொடுத்திருக்கிறார்.  


திரும்புகிற திசையெங்கும் அந்நியமாகத் தோன்றுகிற நிலப்பரப்பை நோக்கி, எங்கே கொண்டு போகப் போகிறது எனத் தெரியாத கப்பலில் உயிருக்கு எவ்வித உத்தரவாதமுமில்லாத ஒருவித சாகசப் பயணம் மேற்கொண்டு ஓர் கரையை காண்கிறார்கள். அங்கே கனேடிய துப்பாக்கி அவர்களை வரவேற்கிறது. அகதியாகத் தஞ்சமடைகிறவர்களின் கையறுநிலையின் கண்ணீரை முன்னரே ஈழ படைப்புகளின் வழி உணர்ந்திருந்தாலுமே கூட மண்ணெண்ணெய் என்றால் என்னவென புரிந்து கொள்ள முடியாத தேசத்தில்  அவர்களுக்கு அதை விளக்கிச் சொல்ல மொழி தெரியாமல் பிதுங்கி நிற்பவனை தீவிரவாதி என நீதிமன்றம் கருதி ஐந்தாண்டு சிறைத் தண்டனையெனத் தீர்ப்பளிக்கிறது (மண்ணெண்ணெய் கார்காரன்). மாறாத நிரல்களை கொண்ட ஒருபடித்தான அன்றாடங்களில் அமிழ்ந்து கிடப்பவர்கள் இந்த ஏதுமறியாத சனங்களை, தங்கள் விம்மல்களை அடக்கியபடியே வெறித்து தான் பார்க்க முடிகிறது. ஒப்புநோக்க இத்தொகுப்பு கதைகளில் அகதிகளின் குடியேறிகளின் கடைநிலை வாழ்க்கைகள் அதிகமாகவே பேசப்பட்டிருக்கின்றன. பெண்களின் முகங்கள் அணிவகுத்து வருமளவிற்கு அவர்களால் ஆன தொகுதி என்றும் கூறிவிடலாம். நாடிழந்து சென்றிறங்கிய இடத்தில் பிழைக்கப் போராடும் ஏதிலிகள் இப்பெண்களால் கொஞ்ச நாட்களேனும் சொர்க்கத்தை எட்டிப் பார்க்கிறார்கள். ஒன்றுமற்றவர்களுக்கு அதுவேனும் கிட்டுகிறதே..! இதற்கு காரணம் வேறொன்றுமில்லை. அவள் பெண். இவன் ஆண். அவ்வளவு தான். ஒரு அர்த்தத்தில் காதலை உள்ளடக்கமாக கொண்ட கதைகளாகவும் இவை உள்ளன.


பசியால் துவண்டு வழியேயில்லாமல் உழன்றுகொண்டிருப்பவனுக்கு வேலை கிடைக்கிறது. மரம் அறுக்கும் போதும் ரயிலில் கண்ட பெண்ணே நினைவில் மிதக்கிறாள். அவனது நிராகரிக்கப்பட்ட குடியுரிமை விண்ணப்பத்திற்கிடையிலான பொழுதுகளிலும் அவள் மீது கொண்ட மையலே ஒரே ஆறுதல் (ரயில் பெண்). ஹோட்டலில் மேசை துடைத்து பிளேட் கழுகிறவனின் மனது, அங்கு வருகிற சிறிய அழகிய பெண்ணிடம் தானாகவே சென்று விடுகிறது. 60 மேசைகளையும் தனி ஆளாகத் துப்புறவு செய்வதை எண்ணிப் பாருங்கள். அவளால் ஒரு முறை வேலை பறிபோய் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுகிறான். தன் திறனால் பணி உயர்த்தப்படும் போது ஓர் ஆர்டர் வந்து சேர்கிறது. முடித்துத் தரவேண்டும். ஆனால் அப்பெண்ணிடமிருந்து செய்தியும் வருகிறது. இவன் தயக்கமேயில்லாமல் முடிவெடுத்து அந்த செய்தியின் பின்னால் போய்விடுகிறான்(கடவுளை ஆச்சரியப்படுத்து). இன்னும் பல வேலைகளை அவன் இழக்கவும் கூடும். ஓர் பெண்ணின் அழைப்புக்கு முன், அந்த ஆர்டரை கடவுளே கொடுத்திருந்தாலும் அவர் துச்சமானவர் தானே..! கனடா போக இருந்த ஒருவனை ஏஜெண்ட் சென்னையில் தங்க வைக்கிறான். வீட்டுக்காரம்மாவின் மகள் ரூபத்தில் வருகிறது வினை. அவளது அடுத்தடுத்த துரோகங்களால் ஏமாற்றப்படும் போது கூட அவனது ஒரே லட்சியம் அவளை மணமுடிப்பது மட்டுமே. இறுதி வரை கொண்ட கொள்கையில் வழுவாத முன் மாதிரி அவன்(நான் தான் அடுத்த கணவன்).  மேலோட்டமாக அவளது சொல்லுக்காக மொத்த உடம்பையும் சுமந்தலையும் ஏமாளியொருவனை குறித்ததான நகையுணர்வு கொண்ட கதையென தோன்றக் கூடும். மேல் தளத்தில் பெண் சார்ந்த மோகத்தின் அலைகழிப்பாகத் தோன்றினாலுமே கூட இதையொட்டி கதையினுள் திகார் சிறைச்சாலையும் அதன் நானாவித கைதிகளும் அவர்களது நம்பவியலாத பின்னணிகளும் கதைகளும் முகத்திலறைவது போல சொல்லப்படுகின்றன. அதைக் கூறுவதற்கான நிமித்தம் தான் இக்காதல் கதையோ என்கிற எண்ணமும் எழமாலில்லை.


மரங்கொத்தி மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும். அப்படி தன் கதைகளைத் திரும்ப திரும்ப பலமுறை திருத்தி எழுதுகிறவர்களுள் ஒருவர் முத்துலிங்கம். பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும். அப்படி எழுதுகிறவன் மனதளவில் அதற்குரிய ஆயத்தங்களுடனேயே அறிந்தும்/அறியாமலும் இருந்து கொண்டிருப்பது இயல்பு. எனவே தான் சிறிய விஷயங்களுக்கடியில் கூட கதையின் முட்டை ஒளிந்திருப்பதைக் கண்டுகொள்ளும் சாமர்த்தியம் அவனுக்கு வாய்க்கிறது. அதைக் கூறுகிறவனுக்கு அது ஓர் செய்தி, அது பேச்சை நீட்டிக்க கிடைத்த வஸ்து. அவ்வளவே. அப்படி பிறரது முட்டைகளின் மீதமர்ந்து அடைகாத்து பொரிக்கப்பட்ட குஞ்சுகள் ஆரோக்கியமாக இருக்கின்றன என்பது தான் விசேஷம். அவ்வாறு சொல்லப்பட்டதின் புனைவாக்கமே ‘அது நான் தான்’. புலம்பெயர்த்தலில் உணவும் இடமும் முற்றிலும் சம்பந்தமற்ற சீதோஷ்ணநிலையும் மனிதர்கள் கிடைக்காதிருப்பதும் தான் ஆகக் கூடிய அவலம் என்கிற நினைப்புக்கு மாறாக இவை கிடைத்தவனுக்கு ஆசைப்பட்ட பெண் மனைவியாவதும் அதிர்ஷ்டத்தைச் சார்ந்தது தான் போலிருக்கிறது. தாயகம் வந்து மனம் முடித்தவள் ஒருத்தி, 2 ஆண்டுகளுக்கு பின் குடும்பம் நடத்த கனடா வந்திறங்குபவள் வேறொருத்தி. நம்ப முடிகிறதா? இதற்கு தலைகீழாக ஊருக்குள் மகிழ்ச்சியோடு சுற்றி திரிந்தவளை கனடாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். கணவன் அங்கு காத்திருக்கிறான். ஆனால் மகிழ்ச்சி இல்லை. மட்டந்தட்டி முடங்கச் செய்வது தான் நடக்கிறது. அவருக்கு பாடம் புகட்ட அவளுக்கு தெரிந்துமிருக்கிறது(லூக்கா 22:34). இவ்விரு பெண்களுகளுக்கும் சம்பந்தமில்லாத விசித்திரமான நடவடிக்கைகளால் ஆனவளை பற்றியது ‘உன் கால அவகாசம் இப்போது தொடங்குகிறது’. சித்தரிப்புகளில் உவமைகளில் அதிகம் மெனக்கெடுபவர் முத்துலிங்கம். உதாரணமாக


“ஐந்து டொலர் நோட்டில் இருக்கவேண்டிய முகம் அவளுக்கு..”


“மீனின் உடம்பில் தலையிருப்பது போல கழுத்தே தெரியாமல் இருந்தார்”


“சிரிக்கும் போது எல்லா பற்களிலும் சிரிப்பார்”


“படம் எடுத்த பின்னர் சிரித்தது போல எனக்கு ஏமாற்றமாகிவிட்டது”


இது அப்படியே தொடர்ந்து சிறிய முகம் என்பதை உணர்த்த எந்தளவிற்கு செல்கிறார் எனக் காண்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. கொஞ்சம் சிரித்துக்கொள்ளவும் தோன்றுகிறது.


“இரண்டு கண்கள், ஒரு வாய் இவற்றுக்கு மட்டுமே போதுமான அளவு முகம்”.


‘கடவுச் சொல்’, ‘இலையுதிர் காலம்‘ போன்றவை பழகிய பழைய நெடியுடனேயே இருக்கின்றன. ஆனால் கதைகள் நிகழும் அந்நியச்சூழலும் அதன் பின்னணியும் தரப்படுகிற அபூர்வமான தகவல்களும் அந்த பழைமையை விலக்கி வைக்கின்றன. சுவாரஸ்யத்துடன் புதிய ஆச்சரியமான தகவலொன்றை சலிப்பு குன்றாத மொழிநடை மூலம் அறிந்து கொண்டோம் என்பதையும் கடந்து ‘ஆதிப்பண்பு’ வேறெதையும் அளிக்கவில்லை. வெவ்வேறு சம்பவங்களைச் சேர்த்து அடுக்கிக் கோர்த்த ‘சின்ன சம்பவம்’ ஓர் வாடகை டாக்ஸி ஓட்டுனன் நம்மிடையே பகிர்ந்து கொள்ளும் பலதரப்பட்ட அனுபவங்களின் கதம்ப மாலை போலுள்ளது.


போராளிக்குழு என்ற பெயரில் அதன் பின்னணியில் நடக்கும் பகடிகளை எள்ளலுடன் ஷோபாசக்தி கதைகளில் கண்டிக்கிறோம் என்றாலும் இத்தொகுப்பில்  ‘பதினோரு பேய்கள்’, ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ ஆகிய கதைகளை முத்துலிங்கம் அவருக்கே உரித்தான அங்கதத்துடன் எழுதியிருக்கிறார்.


வேகமான எழுத்தாளன் இல்லை நான் என்கிறார் முத்துலிங்கம். ஆனால் இரண்டாவது சுற்றை ஆரம்பித்த பிறகு அவர் நிற்கவேயில்லை. சீரான வேகத்தில் ஏன் சற்று தீவிரமாகவே படைப்பாகத்திற்குள் இருந்து கொண்டே இருக்கிறார். அவரது சமகாலத்தவர் எவரைக் காட்டிலும் மிகுதியான கதைகள் அவரிடமிருந்து வந்துள்ளன. நெருப்பு கோழி ஒரு சமயத்தில் நூறு முட்டைகள் வரை போடும் சக்தி கொண்டது. கடற்புறா மிதந்து கொண்டே தூங்கும் இயல்புடையது. இரண்டுக்குமே உதாரணம் காட்ட நம்மிடையே எழுத்தாளர்கள் உள்ளனர். நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவையான புறா ஆயிரம் கிலோமீட்டர் வரை எங்குமே நிற்காமல் ஓய்வெடுக்காமல் பறக்கக் கூடிய ஆற்றல் கொண்டதாகும். எழுத்தாளனிடம் உள்ள கதைகளை எழுதி முடிக்க பத்து ஆயுள் இருந்தாலும் போதாது என ஒரு நேர்காணலில் சொல்கிறார் முத்துலிங்கம். அவர் பறக்க வேண்டிய தொலைவு இதுவரை பறந்து அமர்ந்து அடைந்ததை விடவும் அதிகமாகவே இருக்கலாம். அதற்கு கட்டியம் கூறுவது போல இத்தொகுப்பிற்கு பின் இரண்டு தொகுதிகள் வந்துவிட்டன. அவர் எழுதிக் கொண்டிருப்பவையும் மேலும் எழுத வேண்டியவையும் மனதில் ததும்பியபடியே இருக்கக்கூடும். அது இயல்பானது தான். ஏனெனில் விரிந்த உலகெங்கும் அலைந்த சுவாரஸ்யமான கதைசொல்லியல்லவா அவர்.

பிள்ளை கடத்தல்காரன் – அ. முத்துலிங்கம் (முதல் பதிப்பு ஜுலை 2015 )பக் ;190 ; விலை – ரூ.175/-  காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். 

நன்றி : அகழ் மின்னிதழ்