Tuesday, April 4, 2023

நீங்காத பாசிகள் (இராஜேந்திரசோழனின் மூன்று கதைகள்)

 

நீங்காத பாசிகள்

(இராஜேந்திரசோழனின் மூன்று கதைகள்

நல்லுணர்ச்சி மனிதப்பண்புகளில் தலையாயது தானா? சுயநலனே மனிதனின் ஆதார உணர்ச்சியா? போன்ற வினாக்களை எளிய மனிதர்கள் முதற்கொண்டு பெரிய கலைஞர்கள் வரை எழுப்பி இருக்கின்றனர். மரணவீட்டில் வாழ்க்கை குறித்து சாதாரணர்கள் எழுப்பும் பலமான கேள்விகளெல்லாம் அவர்கள் இல்லம் திரும்பி தலைநீராடியவுடன் அந்த நீருடன் அடித்துச் செல்லப்பட்டுவிடும். ஆனால் கலைஞர்கள் அதை அறியவும் பின் தொடரவும்  அந்த ஓட்டை உடைத்து உட்செல்லவும் போராடுவார்கள். இதை தன் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றுடனோ அல்லது தான் வளர்ந்த சூழலில் சாத்தியமில்லாத எனவே புதிய வாழ்க்கையாகவோ காணும் வாசகருக்கு தன் கண்பட்டைகளைக் களையவும் ஒற்றை வழித்தடங்களிலான தன் பாதைகளை உதறவும்  அவை பேரளவு துணைநிற்கின்றன எனச் சொல்ல முடியும்.




அன்றாட பத்திரிகைச் செய்திகளில் நகைமுரண் போல அருகருகே அமையப்பெற்ற இருவேறு செய்திகளை அவ்வப்போது பலருமே கண்டிருக்கலாம். சில தினங்களுக்கு முன் அவ்வாறான இரு வேறு செய்திகள் கண்ணில் பட்டன. தெருப் பெருக்கும் தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு சாலையில் கைப்பை அகப்படுகிறது. அதைப் பிரித்துப் பார்க்கும் போது உள்ளே ரூபாய் தாள்கள். பார்த்ததுமே முதலில் அச்சமேற்பட்டிருக்கலாம். எவருமே அருகிலில்லை எனும் போது அதை தனதாக்கி கொள்ள ஆசையும் தோன்றியிருக்கலாம். அது தவறுமில்லை. மனிதர்கள் தானே? ஆனால் அந்த அம்மாள் காவல்நிலையம் சென்று அதைக் கொடுத்திருக்கிறார். உள்ளே ஐம்பதாயிரத்தை நெருங்கும் ரொக்கம் இருந்திருக்கிறது. அதற்கு மேலே இன்னொரு செய்தி. பட்டா வழங்குவதற்கு 5000ரூபாய் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரி கைது. ஏழைகள் நல்லவர்கள். பணம் இருப்பவர்கள் தீயவர்கள் என்கிற கருப்பு வெள்ளை சட்டகத்திற்குள் இதைக் காண வேண்டாம். ஆனால் ஒருவர் பொருளீட்ட படும் அல்லல்களை, வசதி படைத்தோரை விடவும் அதே வரிசையில் அல்லது அதற்கும் கீழே உள்ளவர்கள் மிக நன்றாக உணர்ந்திருப்பார்கள். ஏனெனில்வெள்ளத்தனைய மலர் நீட்டம்.’ இலக்கியம் இரண்டையுமே வெவ்வேறு களன்களில் சந்தித்திருக்கிறது. அசாத்திய வலிமையுடன் அணுகியுமிருக்கிறது. பேரளவு சாதனைகளைப் புரிந்துமிருக்கிறது.


இயல்பாகவோ சூழலின் பொருட்டோ நல்லுணர்ச்சிக் கதைகள் ஏகதேசமாக எளியவர்களை மையமிட்டே எழுதப்பட்டிருக்கின்றன. ‘பாம்பின் கால் பாம்பறியும்என்பதலா..! ஆனால் அதிலும் .மாதவன் போன்றவர்கள் தன் வறுமைநிலை காரணமாக பெற்ற தாயையே உணவில் நஞ்சூட்டிக் கொல்லும் கதையை (தூக்கம் வரவில்லை) எழுதியிருக்கிறார்கள். அதில் மேற்படி பாத்திரத்திற்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இருப்பதில்லை. மாறாக அமைந்த வண்ணநிலவனின் கதைகளின் வரிசை கண்முன் ஓடுகிறது. மனிதனுக்கும் நல்லெண்ணத்துக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கும் இடத்தில் வெற்றிலைச் செல்லத்தோடு புதுமைப்பித்தன் அமர்ந்திருக்கிறார். கீழ்மைகளை எழுதிக்காட்டிய ஜானகிராமனின் எழுத்துக்களில் நல்லியல்புகளின் வற்றாத சிற்றாறு அமைதியாக ஓடுகிறது. இவர்களில் இராஜேந்திரன் சோழன் கதையுலகில் விலைமாதர்கள் இடம்பெறும் (அவருடைய உலகம் மேலும் விரிவும் நானாவித சலனங்களும் கொண்டது) கதைகளை மட்டும் வைத்துக் கொண்டு அந்த நல்லுணர்ச்சியை அணுக முயற்சிக்கலாம்.  ஜி. நாகராஜனின் உலகிலுள்ள விபச்சாரிகளுக்கும் இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. போலவே ஜெயகாந்தன் கதைகளில் வருகிற எளிய மனிதர்களும் இராஜேந்திரசோழனின் வருகிற சாதரணர்களுக்கும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர்.   அது எவ்வாறு என வேறொரு இடத்தில் விரிவாக எழுதலாம். இங்கு அல்ல.   


1972ல் அதாவது சரியாக அரைநூற்றாண்டுக்கு முன் லாட்ஜ் வாடகை மூன்று ரூபாய் இருக்கும் காலகட்டத்தில் இராஜேந்திரசோழனால் ஒரே ஆண்டில் எழுதப்பட்ட மூன்று கதைகளில் குடும்ப அங்கத்தினர்களாகத் திகழும் பெண்கள்கிராக்கிகிடைக்குமா என்கிற நப்பாசையால், தங்கள் அன்றாட ஜீவிதத்திற்காக அலையும் கதைகள் பாசிகள், ‘சில சந்தர்ப்பஙகள்’. அதே பெண்கள் கிடைக்கிற கிராக்கியுடன் எவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை நேரடியாகக் காட்டியபடியே அதனடியில் நுட்பமாக புள்ளிகளை வைத்தவாறு நகரும் கதைவானம் வெளிவாங்கி. இன்னொரு கதையும் இருக்கிறது. அதை இங்கு சொல்வது பொருந்தாது என்பதால் தவிர்த்து விட்டேன். காயாத வயிறுகளுக்காககிராக்கிதேடித் திரிபவை முதலிரண்டு கதைகள்.


இராஜேந்திரசோழனின் படைப்புலகில் டாக்ஸிகள் இடம்பெறும் கதைகளே ஐந்தாறு இருக்கும் என நினைக்கிறேன்.  பாசிகள்அதிலொன்று. ஊரிலிருந்து வரும் நண்பனை தனக்கருகில் அமர்த்திக் கொண்டு சவாரி போவது அவன்  வழக்கம். அன்று வாடிக்கை ஏதும் அமையவில்லை. அப்படியே ரவுண்ட் அடிக்கும் போது இருவர் தட்டுப்படுகின்றனர். கண்டதுமே டாக்ஸிக்காரன் சொல்லி விடுகிறான்  சாமான்.  நண்பனுக்கு ஒப்புக் கொள்ள மனமில்லை. அங்கு நிற்கும் இரு பெண்கள் தடித்த உருளை மாதிரியும் ஒல்லியாகவும் இருக்கிறார்கள். அம்மாவும் பெண்ணும். ஏறியதும் கேட்டு விடுகிறான்எதுனா கிடைச்சுதா?’.  அருலிருப்பனுக்கோ அச்சம். ஆனால் டாக்ஸிக்காரனின் கேள்விகள் அடுத்தடுத்து விழ விழ அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். குழந்தைகளை ஆறு வயதில் விட்டுவிட்டு கணவன் போனதும் அம்மா இந்த மாதிரி கிடந்து அலைந்து தான் குடும்பத்தையே ஒப்பேற்றி இருக்கிறாள். பையன்களுக்கும் மணம் முடித்து வைக்கிறாள். அவர்களுக்கு குடும்பம் என ஆன பின் தன் அம்மாவையோ தங்கையையோ காண மறுக்கிறார்கள். எனவேதொழிலு’க்கு வந்தாகிவிட்டது. ஆனாலும் ஆட்டோக்காரன் சுறுக்கென்று பேசுவதில் வல்லவன் (’இதுல ருசி கண்டவங்க விட மாட்டாங்க).


இன்னொரு கதையானசில சந்தர்பங்களிலும் இதே போல தான். சவாரியே கிடைக்காமல் லோல் படுகிறான் டாக்ஸிக்காரன் ஒருவன். அகஸ்மாத்தமாக முன்னர் பனிரெண்டு ரூபா பாக்கி சொல்லி போனவள் அகப்படுகிறாள். உடன் வேறு ஒருவன். அது கஸ்டமர் என இவனுக்குப் புரிந்து விடுகிறது. விரட்டிச் செல்வதற்குள் அவனோடு பேருந்து ஏறி விடுகிறாள். ஏமாற்றமும் கோபமும் கனல திரும்பும் போது அந்த பனிரெண்டு ரூபாய் கதை வாசகருக்குச் சொல்லப்படுகிறது. அவன் யாருமில்லாமல் அலைந்த இரவொன்றில் இவள் ஏறி பீச்சுக்கு விடச் சொல்கிறாள். அங்குமட்டுமல்ல கிட்டத்தட்ட அந்தப் பகுதி முழுக்கவுமே ஆட்டோவில் சுற்றுகிறாள். அவள் கிராக்கி பிடிக்கத் தான் இந்த பாடுபடுகிறாள் என அவனுக்குத் தெரிகிறது. கூச்சமும் அவமானமும் அடைந்தாலும் அவளுக்காக மனமிரங்கி கூடவே அலைகிறான். சொகுசு ஓட்டலுக்கருகே கிடைத்த வெளிநாட்டுக்காரனுடன் வண்டிக்குள்ளேயே சில்மிஷங்கள் நடக்கின்றன. முதலில் துட்டு என இவள் காட்டிய கறார்த்தனத்தால் அவன் பத்து ரூபாயை எறிந்து விட்டு பாதியிலேயே விட்டுவிட்டு சென்று விடுகிறான். அவளுக்கு அன்று துரதிஷ்ட நாள். டாக்ஸிக்காரனை அண்ணா என அழைத்து தன் நிலையை எடுத்துக் கூறி பாக்கி சொல்லிப் போகிறாள்.




மேற்சொன்ன இரு கதைகளிலுமே டாக்ஸிக்காரன் அந்த பெண்களிடம் அட்ரஸ் கேட்கிறான். இருவருமே வேண்டாம் என மறுக்கிறார்கள். ஆனால் பாக்கி சொன்னவள்(சில சந்தர்ப்பங்கள் கதையில்) மிகத் தயங்கி முகவரி தந்து விட்டு போகிறாள். அதை வைத்துக் கொண்டு அந்த வீட்டைக் கண்டுபிடிக்கிறான். 12 ரூபாய் பாக்கி சொன்னவள் பெயர் விமலா. வறுமையின் கூரையின் கீழ் நைந்து போன அவள் அம்மா அந்த ஒண்டுக்குடித்தனத்திற்குள் அமர்ந்திருக்கக் காண்கிறான். பள்ளி விட்டு மூன்று வாடிய குழந்தைகள் நுழைகின்றன. அவளுடன் பிறந்தவர்கள். அவர்களின் முகங்களே எப்படிப்பட்ட வாழ்க்கை அங்கு கழிகிறது என அறிய போதுமானதாக இருக்கிறது. அந்த அம்மாவிடம் சாதாரண விசாரிப்புடன் திரும்பி வந்து மீட்டரைத் திருப்பும் போது விமலா சாலையிலிருந்து ஓடி வந்து அவனிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு பணத்தை நீட்டுகிறாள்.


முதல் கதையில் அந்த அம்மா 70 பைசாவுக்கு ஒரு ரூபாயாகத் தருகிறது. பாக்கித் தேடும் போதுபரவாயில்லை என்கிறது. ‘உன் காசு எதுக்கு? என்கிறான் வெடுக்கென்று. அக்கேள்வி அவமானப்படுத்தல் என அந்த அம்மாவும் அவன் நண்பனும் முகம் சுண்டிப்போகிறார்கள். ஆனால் அது சிறுமைப்படுத்தல் அல்ல.

பாவம் அவளே வருமானம் இல்லாம போறா..அவகிட்ட போய் அந்த காசை ஏன் வாங்கணும்னு தான்.’


இரண்டாவது கதையில் விமலா பதினைந்து ரூபாயாக அவனிடம் தருகிறாள்.

இந்தாங்கண்ணா..’

அவள் அவனிடம் நீட்டினாள்.

ஈரப்பசையோடு பளபளக்கும் அவள் கண்களையும் முகத்தையும் காண ஏதோ குற்ற உணர்வுக்கு ஆட்பட்டவன் போல தலையைத் திரும்பி தெருவை நோக்கினான்.

எதிலிருந்தோ விடுபட முனைபவனைப் போல தலையை உலுப்பி உதறிக் கொண்டு பதினைந்து ரூபாயோடு நீளும் அவளது சிவந்து மெலிந்த கையை ஒதுக்கி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

-------------------


இவ்விரண்டிலிருந்து வேறுபட்டதுவானம் வெளிவாங்கி..’ வண்ணதாசனின் முதல் தொகுப்பின் முதல் கதையானமிச்சம்லாட்ஜும் பெண்ணும் உதிரி மனிதர்களும் வருகிறார்கள் என்றாலும் இது அதற்கும் முன்பே எழுதப்பட்டது. முற்றிலும் வேறானது.

நண்பர்களுடன் அறையெடுத்து தங்கிஉல்லாசம்’ புரிந்து விட்டு செல்லும் ஆசையுடன் வந்து லாட்ஜில் அறையெடுக்கிறான். அவர்கள் மாலை வரக்கூடும். அதற்குள் அறை போட்டாகிவிட்டது. ரூமுக்கு போகும் வழியிலேயே கிராக்கி உட்கார்ந்திருக்கிறது. நுழைந்ததும் இருவர் வருகின்றனர். இவன் சிவந்தவளைத் தேர்ந்தெடுக்கிறான். பேரம் நடக்கிறது. அரைமணிக்கு இவ்வளவு, ஒருமணிக்கு இவ்வளவு, அவளை எங்கெங்கெல்லாம் தொடலாம். கூடாது என்பது போல. இருவருக்குமாக மது வாங்க ஆளை அனுப்பிய பின்பும் பேரம் நடக்கிறது. ரேட் படிகிறது. அவளுடன் காதலி போல சில சம்பாஷணைகள். பிறகு அவளுடனான  சோலி’ முடிந்து விடுகிறது. களைப்பு. சொன்ன நேரத்திற்கும் குறைவாகவே அவள் அனுமதித்திருக்கிறாள். ஏமாற்று நடக்கிறது என அவனுக்குப் புரிகிறது. அவள் சென்றதுமே மூன்று நான்கு பேர் நுழைகிறார்கள்.

’ஏதாவது வேணுமா..’ என்றாள் மூவரில் ஒருத்தி.

வேண்டாம். இப்பத் தானே போட்டேன்என்றான்.

போட்டா என்ன திரும்ப போடக் கூடாதாஎன்றாள்.

இவன்வேணாஎன்றான்.

வற்புறுத்தல் தொடர்கிறது. அவன் மறுக்கிறான்.ஒருமணி நேரத்துக்கு புக் பண்ணுங்க’ என்கிறாள் அவர்களில் ஒருத்தி. ’உங்களைப் போல உள்ளவங்க அஞ்சு ஆறு எடுக்கறாங்க. இதுக்கே டயர்ட் ஆகிட்டீங்கஎன்கிற தூண்டுதல். ‘சின்னவளைப் பாருங்களேன்என்ற தூண்டில்.


பலவிதமாகப் பேசிப் பார்க்கிறார்கள். எப்படியிருந்தாலும் அவுட் ஆகிறவரைக்கும் இருக்கணுமில்ல. நீங்க கூட கொஞ்ச நேரம் வோணும்னா கூடம் எடுத்துக்குங்க..’ என்ற இறைஞ்சுதல்.


இரவு பார்த்துக்கொள்ளலாம் என்கிறா தப்பிக்கும் பொருட்டு. ரைட்டு வரும், இல்லாம வீட்டுக்குப் போகணும் என்பதே அவர்களின் பதில். அங்கு இந்த வருமானத்தை நம்பி எத்தனை பேர் அமர்ந்திருக்கிறார்களோ..! எனவே அவர்கள் மீண்டும் அதே கேள்வியுடன் பார்க்கிறார்கள்.


அவன் பிடிவாதமாக வெளியேறுவிடுகிறான். இதில் பெண்களின் சாமர்த்தியத்தையும் அவர்கள் இத்’தொழிலு’க்குள் எத்தனைக் காலம் உழன்று கொண்டிருக்கிறார்கள். என்ன பேசினாலும் குலவினாலும் காசு மேல் அத்தனை கண்ணாக இருப்பதெல்லாம் உள்ளோட்டமாக வரிகளுக்கிடையே உணர்த்தப்படுகிறது. இத்தனைக்கும் நடுவே அந்தப் பெண்ணுடன் அவன் இயங்கியதை ஜன்னல் சந்து வழியாகப் பார்க்கும் லாட்ஜ் பையன்களின் சிரிப்புச் சத்தம் வேறு காட்டப்படுகிறது(’இவனுகளுக்கு இது தான் வேலையா..’என்றான். ’சின்னப்பசங்க தானா..’ என்றாள்).


அவர்களிடமிருந்து விடுவித்துக் கொண்டு வெளியே வந்து வேர்க்கடலை வாங்கிக்கொரிக்கும் போது சில்லறையை ரூமிலேயே வைத்து விட்டது நினைவுக்கு வருகிறது. அவள்களில் ஒருத்தியும் அதை எடுத்து தரவில்லை என்பதைக் காணுங்கள். அந்தச் சூழல், அவர்கள் தந்த நெருக்கடி, இக்கட்டு, விடுதலை, ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து கத்த வேண்டும் போல அவனுக்கிருக்கிறது.


அதற்காக வெளி வாங்கிய வானம் நோக்கி நடக்கத் தொடங்கும்  அவனுடன் ஓர் இணைமனமாக வாசகரும் சேர்ந்து கொள்வதைத்  தவிர வேறு வழியில்லை.  ஏனெனில் அதே உணர்வுக்கே வாசிப்பவரும் ஆட்படும் ரசவாதம் அங்கு நிகழ்ந்திருக்கிறது.

இராஜேந்திரசோழன் கதைகள் - தமிழினி பதிப்பகம்.