Tuesday, July 22, 2014

எம்.கோபாலகிருஷ்ணனின் “ மணல் கடிகை”



மதிப்புரை




ஒளிரும் ஒவ்வொரு விளக்கிலும் இப்படியொரு வேண்டாத ஒரு வலி தன்னையே வருத்தித் தந்துகொண்டிருக்குமோ? (பக்.146)

      ஒரு நகரத்தைப் பற்றி நமக்கிருக்கும் கற்பனைகள் நகரின் இயல்பிற்கு மாறாக,மிகைப்படுத்தப் பட்டதாகவோ,குறைத்து சொல்லப்படுவதாகவோ இருக்கலாம். அது நகரமாக மாற்றமடைவதற்கு எவற்றையெல்லாம் நசுக்கி அடியில் போட்டு மிதித்து மேலேறி நகரமாக உருக்கொண்டிருக்கிறது என்ற கேள்வியை அலட்சியப்படுத்தி ஒதுக்கி விட முடியாது. அது போலவே இம்மாற்றம் வாழ்வின் மீது எவ்விதம் பிரதிபலிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது? இவற்றை மனித மனங்கள் செரித்துக் கொண்டனவா?என்ற வினாவை எளிதில் புறமொதுக்கிவிட முடியாது. ஏனெனில் அவ்வாறு செரித்துக் கொண்டவர்களின் சமரசங்கள்,தங்களுடைய சுயநலன்களுக்காக எப்பக்கமும் சரியக்கூடும். பிடி கொடுக்க மறுத்து திமிருபவர்களுக்கு கிடைப்பது,இறக்கி வைக்க இயலாத பாரங்கள் மட்டுமே.இவை தவிர்த்து எண்ணற்ற கிளைக் கேள்விகளோடு நம்மை நெருக்குகிறது எம்.கோபாலகிருஷ்ணனின் “ மணல் கடிகை”.



           
     
 இளம் வயதின் விட்டேற்றித்தனமும் குதூகலமும் நிரம்பிய ஐந்து நண்பர்கள்,சுதந்திரமான மனநிலையில் தங்கள் எதிர்காலத்தை திட்டமிடுவதினூடாக இந்நூல் தொடங்குகிறது. இந்த ஐவரோடு மட்டும் நாவல் முடங்கிப் போய்விடாமல் இவர்கள் புழங்கும் உலகத்தில் நுழைந்து வெளியேறுகிறவர்கள்,வெளியேறாது நின்று விடுகிறவர்கள் என அனைவரையும் நோக்கி விரிகிறது இந்நாவல்.




           பாரங்கள் ஏதும் அழுத்தாது வெற்றுக் கைகளோடு பயணப்படும் இவர்கள்,ஒவ்வொரு காலத்திலும் அக்காலம் தரும் தழும்புகளை சுமந்து கொண்டு,இந்நகரத்தின் இயந்திரங்களோடு மற்றுமொரு இயந்திரமாக உருமாறி வளர்ந்து, வீழ்ந்து,சிதைந்து,அலைவுற்று சோர்ந்து கடந்த காலங்களின் கசப்புகளோடு நிற்கையிலும் அவர்கள் கைகளில் ஏதுமில்லை. ஆனால் பாரங்கள் மட்டும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக வதைத்து பின்தொடர்ந்தபடியே இருக்கிறது.



   
        தற்போது புற்களைப் போல தெருவெங்கும் சீரற்று முளைத்து,இந்நகரத்தை ஆட்டிப்படைத்து குலைத்துக் கொண்டிருக்கும் கம்பெனிகளின் தொடக்க காலத்தில்,வெவ்வேறு குடும்பப் பின்னணிகளையுடைய சிவராஜும் ,அன்பழகனும் பரந்தாமனும் நுழைகிறார்கள். திரு, தன் மாமாவின் அணைப்பில் சீட்டுக் கணக்குகளைக் கற்றுக் கொள்ள தொடங்குகையில்,சண்முகம் பாதசாரியின் காசி போன்ற கதையை எழுதிவிட்டு செத்துப்போக ஆசைப்படுகிறான்.கம்பெனிக்குள் நுழைந்த கணத்திலிருந்தே அவற்றின் ஒவ்வொரு பிரிவுகளையும் தங்களுடைய கடும் உழைப்பால் நுணுக்கத்தோடும் நுட்பத்தோடும் கற்றுக்கொள்ள கற்றுக் கொள்ள அவை அவர்களின் கரங்களுக்கு வசப்படுகின்றன. ஒவ்வொரு அடியையும் நிதானத்தோடும் கவனத்தோடும் வைக்கிற சிவாவுக்கு வெற்றியின் கதவுகள் திறக்கின்றன. ரத்தனவேலு செட்டியாரின் முதலீட்டோடு கூட்டு நிர்வாகியாகிற சிவா,கூட்டாளியான ரவியை வெளியேற்றி விடுவதற்கும் ஆரம்ப காலந்தொட்டு நட்பு கொண்டிருக்கிற விமலாவை தன் இச்சையை தணிக்க மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும்,செல்வத்தின் ஒளியோடு மணவாழ்வில் இருந்து பிரிந்திருக்கும் அருணாவை மற்றொரு விட்டிலாக விழச்செய்வதற்கும் நொடிந்த குடும்பத்தின் அழகி சித்ராவை மணந்து கொளவதற்கும் அவனிடத்திலிருக்கும் சுயநலமான காய்நகர்த்தல்களும் சமரசங்களுமே போதுமானவையாக இருக்கின்றன. பிடிவாதத்தின் இறுக்கத்தால் சிதலப்பட்டு அலைக்கழிப்பிற்குள்ளாகும் அன்பழகனும் பரந்தாமனும் சிவாவை விடவும் தொழிற்திறன் மிக்கவர்கள். ஆனால், இவர்கள் தோல்விகளையும் காயங்களையும் திரும்ப திரும்ப சந்தித்து துவண்டு லெளகீகத்தில் பின்வாங்கி நிற்கிறார்கள். இரண்டு திருமணங்களாலும் –காதலித்து மணந்த முதல் மனைவியின் பிரிவாலும் இரண்டாவது மனைவியின் தற்கொலையாலும் – பரந்தாமனுக்கு நிம்மதி கிட்டுவதில்லை.ஏமாற்றப்பட்டு நஷ்டமனைந்து விபத்தில் சிக்கி அடிபட்டு மீளும் வரைக்கும் (அதற்கு முன்பும் பின்னரும் கூட) அன்பழகனுக்கு மகிழ்வான தருணத்தை காலம் தாமதித்தும் கூட தந்துவிடுவதில்லை. ஏறுமுகத்தின் பயணம் கொண்ட திரு கூட,எஞ்சியது எதுவும் இல்லாது வீழ்வது விதியின் விசித்திரமான ஆசை போலும். எழுத ஆசைப்பட்டு முயன்று தோல்வியடையும் சண்முகம் தன் மற்றொரு பாதியாக பெண்களை விழத்தட்டுவதில் முனைப்பு கொண்டவனாக இருக்கிறான்.
       

        
          இவர்களைத் தவிர ‘கம்யூனிஸ்ட்ராஜாமணி,சுப்பிரமணியம் என்று தொடங்கி பல்வேறு மாறுபட்ட வாழ்நிலைகளைக் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து வந்து நின்று மறைந்து போகிறார்கள். அவரவர்களுக்கான கிளைக் கதைகள் நாவலுக்குள் விரிகின்றன. நாவலின் மையத்திலிருந்து வெளியேறி விடுபவர்களாகவும் அதன் ஓரங்களுக்கு நகர்ந்து விடுபவர்களாகவும் பலரும் இருக்கிறார்கள். குறிப்பாக உமாவும் விமலாவும்.அது போலவே நாவலிம் ஓரத்திலிருந்து கொண்டிருக்கும் மலைக்கோயில்கள் இறுதிவரை கூடவே வந்து கொண்டிருக்கின்றன.




           ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் இந்நாவலில் ஒவ்வொரு பகுதியிலும் முதல் அத்தியாயத்தில் ஏதேனுமொரு மலைகோயில் இடம் பெற்று விடுகிறது. நண்பர்கள் இங்கு வந்து மாற்றங்க்ளின் நீட்சியில் கடக்க நேர்ந்து விட்ட காலம் குறித்து உரையாடி மீண்டும் அக்காலத்திற்குள் நுழைவதினூடாக-அது அவர்களால் முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும் என்றாலும் –சற்றேனும் அவர்களுகளின் மனங்கள் ஆசுவாசம் கொள்கின்றன.


            தோராயமாக நாவல் இருப்பத்தைந்து ஆண்டுகளை உள்ளடக்கியிருக்கிறது. நாவல் இயங்கும் ஆண்டுகளைக் கணக்கிட்டுக்கொள்ள அக்காலத்தில் வெளியான திரைப்படங்கள்,சுவரொட்டிகள்,கவிதை நூல்கள்,அரசியல் தகவல்கள் போன்றவை நாவலின் போக்கில் சொல்லப்படுகின்றன.இந்நகரம் பற்றிய வரைபடம் ஒரு பகுதியும் மிச்சமின்றி சாலைகள்,தெருக்கள் போன்றவை-அதே பெயருடன் – வெளிப்படையாகவே கூறப்பட்டு நாவல் முழுக்க நீண்டபடியே செல்கிறது.அதுபோலவே நகரின் அசுரத்தனத்தைப் பற்றி பலரும் விவாதித்தபடியே இருக்கிறார்கள்.




         இந்நாவலில் சிக்கலானதும் மோதலுக்குச் சாத்தியங்கள் கொண்டதுமான இடங்கள் நழுவ விடப்பட்டிருக்கின்றன. முக்கியமாக நண்பர்கள் கூடி மதுவருந்தும் இடங்கள்.போதையின் மிதப்பில் வெளிப்படும் பேச்சுகள் எந்த நிமிடத்திலும் மோதலுக்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு நிகழ்ந்திருக்குமெனில் நாவல் வேறுவகையாக உருவாகியிருக்கும்.




              சமூகத்தின் விதிச்சட்டகங்களுக்குள் பொருந்தி வராத ஒழுக்க மீறல்களுக்கான வாயில்கள் இங்கு அகலத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. நிர்பந்தத்தாலோ இயல்பாகவோ அவரவர்களுக்கேற்ப உறவுகள் அமைந்துவிடுகின்றன. நேரத்தைத் துரத்துவதற்கிடையில் கிடைக்கும் நேரத்தில்  உடல்கள் முயங்கித் தீர்க்கின்றன. நாவலுக்குள் வரும் பெண்கள் துயரத்தின் சாயையைக் கொண்டிருக்கிறார்கள். மனம் நிறைந்து புன்னகைக்கக் கூட முடியாத துரதிஷ்டசாலிகள் இவர்கள்.
             


             
          ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றும் இந்நகரம் பிறகு அவனுடைய இருப்பை எந்தவிதத்திலும் பொருட்படுத்துவதில்லை. அவன் ஏற்கனவே மாறிவிட்டவர்களுள் கலந்துவிட்ட மற்றுமொரு இயந்திரம் அவ்வளவே. அலுப்பு நீங்க மணம் மேட்டில் ஒரு நிமிடம் கண்ணயர்ந்து விட்டு பயந்தபடியே எழுந்தோடும் சிறுவன்,மனதிற்குள்ளாக எழுப்பும் கேள்விகளை ஒரு நாளேனும் நேரடியாக இந்நகரம் எதிர்கொண்டேயாக வேண்டும்.

            நாவலுக்குள் ஐவரைத் தவிர்த்து மேலேழும்படியாக ஒருவரும்-பாத்திரவார்ப்பில்-உருவாக்கப்படவில்லை. மாறுபட்ட நெருக்கடிகளை எதிர்கொள்பவர்களும் உச்சத்தில் இருப்பவர்களும் ஏதேனுமொரு வகையில் இவர்களின் வட்டத்திற்குள் வந்து சேர்ந்துவிடுகிறார்கள். பல்வேறு வகைமாதிரிகளாக வேறுபட்டு கிடக்கும் உள்ளங்களை ஒரு நாவலில் காட்டிவிடுவது என்றும் முடியாத காரியமே. ஆனால் அதற்கான முயற்சியை கோபாலகிருஷ்ணன்  எடுத்திருக்கிறார். சொல்லித் தீராத துக்கங்களையுடையவர்களின் கதைகள் நகரின் திசைகளெங்கும் மூச்சுவிடக்கூட திராணியற்று அமிழ்ந்து கிடக்கின்றன.


               வெளிப்பூச்சுகளுக்களுக்கிடையில் ஒளிந்து கொண்டிருக்கும் சாதிய மனோபாவம் எவ்வேளையிலும் வெளிப்படக்கூடும். அன்பழகனின் சாதியை விசாரிக்கையில் அவன் ஒடுங்கிப் போவது அதன் ஒரு வகை மட்டுமே. உடலுறவிற்கான தவிப்பை தணித்துக் கொள்ளும் வேளையின் போது மட்டுமே சாதிய அடையாளங்கள் விலக்கி வைக்கப்படுகின்றன.
மேலோட்டமான பார்வையில் ஆரம்பகாலத்தின் நகரின் வசமிருந்தவர்கள் தற்போது மெதுவாக நகரத்தை தங்கள் கைகளுக்குள் சுருட்டிக் கொண்டிருப்பது போலத் தோன்றக்கூடும்.

          ஆனால் அவர்களை அவ்வாறு செய்வித்து ஒரு கட்டத்தில் அந்நகரத்தில் நிறுத்திவிட்டு ஓரத்தில் நின்று சிரித்து கொண்டிருக்கும்,இந்நகரம்-சிவாவிற்கு நேர்ந்ததைப் போல. கணகற்றவர்களின் இரத்தத்தை உறஞ்சிப் பிழைக்கும் நேர்மையற்ற முதலாளிகளை ஒரு நாளேனும் தூக்கத்தை மறந்த குழந்தைகள் எதிர்த்து நின்று கேள்விகேட்கும் காலம் ஒன்று வரும். அது வரையில் அவர்களுக்கு விமோசனமில்லை.அதற்காக வைக்கப்பட்ட முக்கியமான அடி இந்நாவல்.




          வாசிப்பில் எந்த இடத்திலும் அலுப்பு தோன்றாமல் நாவல் முழுக்க ஈர்ப்பை உண்டாக்கும் மொழியைக் கையாண்டிருக்கிறார் எம்.கோபாலகிருஷணன். தமிழில் வெளிவந்த முக்கியமான ஆக்கங்களுள் ஒன்று இந்நாவல் எனத் தயக்கமின்றிச் சொல்லலாம்.

     தமிழினி இந்நூலை அழகியலோடு உருவாக்கியிருக்கிறது.

நன்றி :புதிய புத்தகம் பேசுது - ஆகஸ்ட் 2005

மணல் கடிகை-நாவல்- எம்.கோபாலகிருஷ்ணன் - தமிழினி வெளீயீடு

குறிப்பு : சூத்ரதாரியான கோபாலை சேலத்தில் முதன்முதலில் சந்தித்த போதிருந்து அவருடனான நட்பு தொடர்கிறது. அன்று அலுவலக நிமித்தம் கோவைக்கு செல்லும் போதெல்லாம் அவரை அலுவலத்தில் காணும்படிக்கு நேரத்தை திட்டமிட்டுவிடுவேன். விவாதிக்கும் போது எதையும் வலியுறுத்தி பேசாத, ஆனால் தன் தரப்பை உறுதியாக முன்வைக்கும் அவரது பேச்சு பிடித்திருந்தது முக்கியமான காரணம். அவர் எங்களூர்காரர் என்பது மற்றொரு காரணம். எப்போதும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் பேச்சு அவருடையது. அவர் படிக்க கொடுத்த புத்தகங்களும் அவர் வழி அறிமுகமான நண்பர்களும் இன்றும் அதே நட்புடன் தொடர்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் நாஞ்சில் நாடனைக் கண்டு பேச வேண்டும் என சொன்ன போது கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தவர் கோபால் தான். என் முதல் கதையை பிரசுரத்திற்கு அனுப்பிய பின் அதை அப்படியே அவரிடம் சொல்லியிருக்கிறேன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.
         அதற்கு முன் ’கனவு’ இதழில் பத்துவரிகளில் நூல் பற்றிய பார்வைகளை எழுதியிருந்தேன் என்றாலும்  ’மணல் கடிகை’ நாவல் தான் நான் முதன்முதலாக மதிப்புரை எழுதிய பெரிய ஆக்கம். அன்று அது அளித்த நம்பிக்கை மிகப்பெரிது. நாவலை கோபால் அனுப்பி வைத்து அதை அலுவலகத்தில் வைத்து பிரித்து போது சகாக்கள் நாவலின் கனத்தைப் பார்த்து “இவ்ளோ பெரிய புக்கை படிக்க போறீங்களா?” என்று கேட்டனர். அந்த வயதிற்கே உரிய உற்சாகத்துடன் “ஆமா..படிக்க போறது மட்டுமில்ல. இதயப் பத்தி எழுதவும் போறேன்” என்று சிரித்தபடியே பதில் சொன்னது நேற்று போல துல்லியமாக மனக்கண்ணில் தெரிகிறது. அந்தச் சிரிப்பில் இருந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கோபாலோடும் பிற நண்பர்களோடும் இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.


2 comments:

  1. மணல் கடிகை... அருமை..

    ReplyDelete
  2. ஐந்து நண்பர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை, திருப்பூர் தொழில் வளர்ச்சியையும் இணைத்து, இயல்பான நடையில் எழுதிய m.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete