Monday, January 5, 2015

சுகுமாரனின் “வெல்லிங்டன்” நாவல்- மதிப்புரை



 சுகுமாரனின் “வெல்லிங்டன்”
          
                                  

                                  “பூக்களில் வழியும் ரத்தத்துக்கும்
                துடைக்க நீளும் சுட்டுவிரலுக்கும்
                இடையில்
                பறந்து தடுமாறுகிறது கிளி
                          -பக்.50(பூமியை வாசிக்கும் சிறுமி)


                                     
                            கவிஞர்கள் உரைநடையாளர்கள் ஆவது ஒன்றும் புதிதல்ல.அதற்கு பாரதி,பிச்சமூர்த்தி என தமிழில் தொடர்ந்து வரும் ஒரு மரபு உண்டு.கவிதையின் சிக்கனமும் அர்த்தச்செறிவும் ஒரு படைப்பாளியை வசிகரிப்பது போலவே உரைநடையின் வகைமாதிரிகளும் அதன் விஸ்தீரணமும் அவனை ஆட்கொள்வதில் வியப்பொன்றுமில்லை.ஒரே மனதில் துளிர்க்கும் அல்லது புரிந்து கொள்ளும் அனுபத்தில் அது தன்னை வெளிபடுத்திக் கொள்ள எந்த வடிவத்தை தேர்ந்தெடுக்கிறது என்பது படைப்பாளியே அறிந்து கொள்ள விழைகிற ரகசியங்களில் ஒன்று.ஏனெனில் இரண்டிற்குமான பின்னணிகளும் அலகுகளும் வழித்தடங்களும் வெவ்வேறானவை.ஆனால் ஒரு முரண்நகை ஆச்சரியமூட்டுகிறது.இன்று எழுதப்படுபவைகளில் ஒன்று மற்றொன்றின் வேடத்தை புனைந்து கொள்ள ஆவல் கொண்டிருக்கிறது.தற்போது எழுதப்படும் கவிதைகள் (பெரும்பாலும்)  உரைநடையில் கவித்துவத்தை எட்ட முயல்கையில் உரைநடையோ படிமங்கள்,உருவகங்கள்,உவமைகள் என பழைய கவிதையின் தோற்றத்தோடு வாசகன் முன் வருகிறது. இவ்விரண்டு பற்றியும் நுட்பமான புரிதல் கொண்ட ஒருவனுக்கே இலக்கிய பயணம் சாத்தியம். இவை எல்லாவற்றிற்குமான அடிப்படை மனநிறைவின்மை தான்.அதை உணரும் மனம் தான் கலையை கையிலெடுத்துக் கொள்கிறது.ஆனால் மொழியை திருகுவதன் மூலம் அதை நவீனப்படுத்தி விட முடியும் என்ற தப்பெண்ணத்தை விட்டு விலகியாக வேண்டும். கவிஞராக முப்பது ஆண்டுகளும் மேல் தீராத ஆர்வத்தோடு செயல்பட்டு வரும் சுகுமாரனின் உரைநடை தனித்துவம் கொண்டது.அவர் “உயிர்மையில் எழுதிய பத்திகளும் கட்டுரைகளும் அதற்கு சாட்சியாக நம் முன் இருக்கிறது.தன் இலக்கிய வாழ்வின் ஆகச்சிறந்த கட்டுரைகளை அதற்கு பின்பே சுகுமாரன் எழுதியிருக்கிறார் என்பது என் கருத்து.வாழ்க்கையும் வாசிப்பும் அளித்த அனுபவத்தை பேசுபொருட்களை கொண்டிருக்கும் அவை பல்வேறு காரணிகளால் முக்கியத்துவமுடையவை.அதில் “தனிமையின் வழிஒரு கிளாஸிக்.அவரது அடுத்த நகர்வு நாவலை நோக்கி சென்றிருக்கிறது.அவரது முதல் நாவல் “வெல்லிங்டன்”.




                                 வெல்லிங்டன் யதார்த்த நாவல் வகையைச் சார்ந்தது.பலரும் தங்கள் முதல் நாவலை சுயவாழ்வையும் சுய அனுபவத்தையும் பின்னணியாக கொண்டு எழுதியிருப்பது போலவே சுகுமாரனும் இந்நாவலை படைத்தளித்துள்ளார்.வெல்லிங்டன்என்னும் ராணுவ பயிற்சி மையம் இந்நாவலுக்கு மையமாக இருந்தாலும் அதிலிருந்து கிளைபிரிந்து சென்று அங்கு வாழும் மனிதர்களை பற்றியே இந்நாவல் அக்கறையுடன் பேசுகிறது.இந்நாவலுக்குள் ஆசிரியரின் குரலையோ தலையீட்டையோ எங்கும் உணரமுடியவில்லை.ஒரு சிறுவனின்(பாபு) கண்வழி செவிவழி விரியும் இந்நாவலில், உதகமண்டலத்தின் கண்டுபிடிப்பாளனாகிய ஜான் சல்லிவானைப் போலவே  அச்சிறுவனும் புதிய இடங்களை நோக்கிச் செல்வது நுட்பமாக நாவலுக்குள் உணர்த்தப்பட்டுள்ளது.இதற்கும் முன்னும் சிறுவர்களை முதன்மையாக கொண்டு எழுதப்பட்ட பூமணியின் “வெக்கை”, ராஜ் கெளதமனின் “சிலுவை ராஜ் சரித்திரம்” , யூமா வாசுகியின் “ ரத்த உறவு” ,பெருமாள் முருகன் முதல் மூன்று நாவல்கள் ஆகியவை உண்டெண்றாலும் அவற்றிலிருந்து இந்நாவலை தனித்து காட்டுவது சிறுவன் பாபுவின் இருப்பு.அவன் கண்ணில் படுவதும் அவன் கிரகித்துக் கொள்வதுமே நாவலில் முக்கியமான பகுதிகளாக உள்ளன. பாபுவின் வருகைக்கு பிறகு நாவலின் சகல இடங்களிலும் அவனது இருப்பை வாசகன் உணர்ந்து கொண்டேயிருக்க முடியும். 


             நாவல் மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது.மூன்றுக்கும் வெவ்வேறான மொழிநடைகளை நாவலாசிரியர் கையாண்டிருக்கிறார்.சூரியன் அஸ்தமிக்காத ராஜ்ஜியத்தின் அதிகாரியான ஜான் சல்லிவன் மலைகளின் அரசியை தன் சகாக்களோடு கண்டடைந்து வழித்தடங்களை நிர்மானித்து அதை குடியிருப்புகளாக மாற்றி அமைப்பது முதல் பகுதி.கொடிய குணங்கள் கொண்டவர்களாக பொதுபுத்தியில் அறியப்பட்டிருக்கும் ஆங்கிலேயே அதிகாரிகளுக்கு மாற்றாக சல்லிவன் பாத்திரம் அமைந்திருக்கிறது.உள்ளூர்வாசிகளால் மதிப்புகுரியவராக அவர் இருப்பினும் கூட “வோட்கமண்டல்க்குள் நுழைந்ததும் அம்மண்ணில் தன் ராணியின் கொடியையே முதலில் நட்டு வைத்து சாம்ராஜ்யத்தின் விஸ்தரிப்பை அறிவிக்கிறார்.எப்போதுமே அவர்கள் ராஜாங்கத்தின் விசுவாசிகள் தானே?மலையை கண்டடைய அவர் வகுக்கும் திட்டங்களும் அவரது ஆர்வமும் வழித்தடம் கிட்டிய பின் அவர்கள் மேற்கொள்ளும் பயணமும்  நாவலில் நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது.சல்லிவன் குடும்பமும் குழந்தையுமாக ஆகி அவர்களில் சிலரை அம்மண்ணிலேயே நிரந்தர உறக்கத்திற்குள் ஆழ்த்தி விட்டு நாடு நீங்கிச் செல்கிறார்.மலைக்கிராமங்களின் பூர்வ குடிகளான படுகர்களின் நிலங்கள் அவர்கள் அறிந்தும் அறியாமலும் கையகப்படுத்தப்படுவது ,தேயிலையும் மலைநிலங்களில் விவசாயமும் நிலைபெறுவது போன்றவை நாவலுக்குள் இடைகலந்து சொல்லப்படுகிறது.இம்மலை சல்லிவன் மீது ஏற்படுத்திய தாக்கத்தையும் ,மக்களின் மனங்களில் சல்லிவன் பெற்றிருக்கும் செல்வாக்கையும் ஒரு சேர வாசகனிடத்திலும் கடத்தி விடுவது நாவலாசிரியரின் வெற்றி என்றே படுகிறது.மேலும் சல்லிவன் இல்லாது நாவல் சுதேசி மக்களின் வாழ்வியலை நோக்கி நகர்ந்த பின்பும் அவரது இன்மையை பாபுவின் நுழைவு வரை நம் மனம் உணர்ந்தபடியே இருக்கிறது.
                     
                   
                நாவலில் பாபுவின் வருகைக்கு பிறகு அதன் மொழிநடை முற்றிலும் வேறானதாக அமைந்திருக்கிறது.இது ஆசிரியரின் பிரக்ஞைபூர்வமான செயல்பாடு.பாபு எப்போதும் யாருடனேனும் இருந்து கொண்டே இருக்கிறான்.பாபு தனித்திருப்பதேயில்லை.அவன் பிறந்த இடத்திலிருந்து  பிடுங்கி நடப்பட்ட செடி.தான் வளரும் வீட்டில் ஒட்டுதல் இன்றி (அவனை வளர்க்கும் அத்தை தன் மீது ப்ரியம் சுரக்க பள்ளிவாசலுக்கு கூட்டிச் சென்று தகடு எழுதி கூட்டி வருகிறார்)  வளர்கிறான்.அதற்கெல்லாம் சேர்த்து அந்த தெருவெங்கும் அதன் அத்தனை வீடுகளுக்குள்ளும் புகுந்து அவர்களுக்குள் ஒருவனாகவே –வயது பேதமின்றி-சுற்றுகிறான்.அவனுடைய கால்தடங்களின் சுவடுகள் நாவல் முழுக்க காணமுடிவதற்கு அது ஒரு காரணமாக இருக்கக் கூடும்.நாவலுக்குள் சிறுவர்களின் உலகம் (தன் அத்தை அவளது நெருங்கிய தோழியான தேவகியேட்டத்தியுடன் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது கழண்டு விழும் சவுரி முடியை  பாபு எடுத்து அவளிடம் நீட்டுகிறான்) அவர்களது விளையாட்டுகள்,சேட்டைகள்,துடுக்குத்தனங்கள் என நாவல் விரியும் போது அவர்கள் அந்த வயதை மீறிய பெரிய மனுஷத்தனங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.போலீஸ் நிலையத்தில் எபநேசருக்கு ஆதரவாக பாபு சாட்சி சொல்வதும் மம்மூது கை வெட்டுப்பட்டு கிடக்கும் போது அவனைக் காணச் செல்வதும்  அவர்களின் அந்த வயதை மீறிய செயல்பாடாகவே தோன்றுகிறது.

                         

       
                 அத்தை அம்முவும், மாமா கண்ணனும் பாபுவை வளர்ப்பு பிள்ளையாக தூக்கிவந்து வளர்ப்பதிலிருந்து நகரும் பக்கங்களை இரண்டாம் பகுதியாக கொண்டிருக்கும் இந்நாவல் அதன் சில பக்கங்களுக்குப் பின் வெல்லிங்டனை ஒட்டியுள்ள அவர்கள் குடியிருக்கும் தெருவையும் அத்தெருவின் மனிதர்களையும் பற்றி பேசத் தொடங்கி விடுகிறது.பிற தெருவாசிகள் நாவல் ஓட்டத்தின் ஊடாக அவரவர்களது வாழ்க்கைகளோடு அறிமுகமாகிறார்கள்.பிற வீடுகளின் குடியேற்றம் சொல்லப்படுவதில்லை.பாபுவின் அலைதல் மூலம் அறிமுகமாகும் இடங்கள் அவனாக கண்டு கொண்டவை.சல்லிவன் கண்டடைந்தவை நீலகிரியின் ஒரு பகுதி என்றால் பாபு அறிந்து கொண்டவை அதன் மற்றொரு பகுதி என புரிந்து கொள்ள முடியும்.


                      
              மேலோட்டமான வாசிப்பில் ஒரு நிலத்தை அதன் குறிப்பிட்ட மக்களை பற்றிய நாவலாக தோன்றும் இப்புதினம் அந்த மனிதர்களின் வாழ்வியலைப் பற்றி அவர்களின் பலதரப்பட்ட வாழ்க்கையின் வகைமாதிரிகளாக குறித்து பேசிச் செல்கிறது.இதற்குள் எண்ணற்ற கதாபாத்திரங்கள் வந்தும் நின்றும் விலகியும் மறைந்தும் போகிறார்கள்.தொழில் நகரமொன்று உருவாகி வரும் சித்திரத்தினூடாக பலதரப்பட்ட வாழ்க்கைகளை நுட்பமாக சொல்லும் குறிப்பிடத்தகுந்த ஆக்கம் எம்.கோபாலகிருஷ்ணனின் “மணல் கடிகை”.இவ்விரண்டுற்குமுள்ள வேறுபாடென நாவலாசிரியர்கள் காலத்தை கையாள்வதை சொல்ல வேண்டும்.கோபாலின் நாவலில் நகரின் உருப்பெருக்கத்திற்கிணையாக சிறுவர்களும் வளர்ந்து மேலேறி சரிந்து வீழ்கிறார்கள்.இந்நாவலில் காலம் சில ஆண்டுகளுக்குள்ளாக பயணம் செய்யும் ஒன்றாக இருக்கிறது.நாவல் நிகமும் காலத்தை அறிந்து கொள்ள நேருவின் வருகை,அப்போதைய பேருந்தின் பெயர் (மூக்கு வைத்த எம்.சி.எஸ்.கம்பெனி பஸ்) ,உபயோகப்படுத்தும் பொருட்கள்,அதன் விலை,சினிமாக்கள்,நடராஜ குருவை பாபுவும் ,அவன் மிகப் பிரியம் கொண்டிருக்கும் கெளரியேச்சியும் காண நேர்வது  ஆகியவை நாவலின் ஓட்டத்தில் இடம்பெறும் போது அக்காலகட்டத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.அதே போல தமிழ்,ஆங்கிலம்,மலையாளம்,எழுத்துரு இல்லாத வாய்மொழியாக மட்டுமே வாழ்ந்துவரும் படக பாஷை,தெலுங்கு என நாவலுக்குள் விதவிதமான மொழிகள் கையாளப்பட்டிருக்கின்றன.
                  

           
              நாவலை நடத்தி செல்பவர்களாக சிறுவர்களும் பெண்களுமே இருக்கிறார்கள்.ஆண்கள் வெறும் நிமித்தங்கள் மட்டுமே. நாவலுக்குள் வரும் குடும்பங்கள் ஒன்றில் கூட நிம்மதியில்லை.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு.ஏமாற்றப்பட்டவர்களாக உறவுகளுக்காக ஏங்குபவர்களாக கண்ணீரால் வலியை ஒத்திப்போடுபவர்களாக இந்த பெண்கள் இருக்கிறார்கள்.அவர்கள் பெரிய லெளகீக ஆசைகள் கொண்டவர்களிலில்லை.இருக்கும் வாழ்வை இன்னும் கொஞ்சம் சந்தோஷமானதாக ஆக்கிக் கொள்ள ஆசை கொண்டிருப்பவர்கள்.சற்று மேலே செல்ல சாத்தியமாகக் கூடிய கனவுகளை சுமந்திருப்பவர்கள்.ஆனால் அது கூட அவர்களுக்கு கைகூடுவதில்லை.கைகூடாமல் போனால் கூட பாதகமில்லை.வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்திதியிலிருந்து சரிந்து போகிறார்கள்.ஒவ்வொருவராக அந்த தெருவை காலி செய்துவிட்டு வேற்றிடம் நோக்கிச் செல்கிறார்கள்.ஏன் பெரும்பாலான படைப்பாளிகள் தங்கள் ஆக்கங்களில் வாழ்வின் மகிழ்ச்சிகரமான தருணங்களை பற்றி பேசுவதில் ஆர்வம் கொள்ளாமல் தொடர்ந்து மனிதனின் அவன் வீழ்ச்சியை படைப்பின் பக்கங்களில் இறக்கி வைக்கிறார்கள்.?ஏனெனில் சந்தோஷங்கள் மேலோட்டமானவை என்றும் எப்போதும் மனதின் அடியில் ஓடிக் கொண்டிருக்கும் நதியின் சுவை கண்ணீரின் துவர்ப்பையே கொண்டிருக்கும் என்னும் உண்மையை அறிந்து கொண்டிருப்பவன் படைப்பாளி
           

         
           தன்னோடு ஒட்டாமல் சுற்றுகிறான் என்ற ஏமாற்றமும் ஏக்கமுமாக புலம்பும் அத்தை,பாபுவின் கெளரியேச்சி தன் தங்கையின் உடன்போக்கு பின்பு வெளிக்காட்டாத ஏமாற்றத்துடன் மெளனத்தில் ஆழ்கிறாள்.தன் வளர்ப்பு மகளான வசந்தியிடம் தேவகியேட்டத்தி கொண்டிருக்கும் நேசம் அவளிடமிருந்து கிட்டாமல் தன் சொந்த அன்னையை வசந்தி காணச் செல்லும் போது கண்ணீரோடு சொந்த ஊருக்கே தேவகி பேருந்தேருகிறாள்.சொந்த மகளான வசந்தியை காண முடியாமல் தெரேசா வேறொரு பக்கம் தவிக்கிறாள்.விமலாவுக்கு அவள் ஆசை கொண்டிருக்கும் ராணுவ வீரனான சந்திரன் சண்டையில் காணாமல் போன செய்தி வீடு வந்து சேர்கிறது. சரஸ்வதி டீச்சர் மணம்புரிய இருந்த சங்கரனை அவளது தங்கை சாந்தா மணம் முடித்ததும் டீச்சர் தனிமையின் சுவருக்குள் தன்னை முடக்கிக் கொள்கிறாள்.அதே போல பிரபாகரனை மனம் முழுக்க சுமக்கும், சர்க்கஸிலிருக்கும் ஜானக்கா  அடைவது ஏமாற்றத்தையே.பாபு மனநெருக்கம்(அவனே அறியாத பொழுது அவளாக காட்டும் உடல் நெருக்கமும்) கொண்டிருக்கும் சகுந்தலா(எ) சக்குவை அவளது காதலனான பாலாஜி கைவிட்டு செல்லும் போதும் காலந்தோறும் பெண்களின் துயரே அணைக்க முடியாத நெருப்பாக வாழ்வின் பக்கங்களில் எரிந்து கொண்டிருக்கிறது என்னும் உண்மையை மீண்டும் நாம் உணர்கிறோம்.அது போலவே நாவலில் குடும்பங்கள் ஒவ்வொன்றாக வெளியேறிச் செல்வதும் குறிப்புணர்த்திச் சொல்லப்படுகிறது.டீச்சர் தனித்துச் செல்வதும்,கெளரி வேலைநிமித்தம் ஊரை விட்டு செல்வதும்,விமலாவின் அப்பா ஊரைவிட்டு கிளம்புவதும்,மீரான்பாய்,தேவகி ஆகியோர் சொந்த ஊருக்கு பயணமாவதும் அவர்களது விழ்ச்சியின் குறியீடாகவே உள்ளன.
      


                  
          நாவல் யதார்த்த தளத்திலிருந்து மீறிச் செல்வதும் சில இடங்களும் உண்டு.தொன்மகதையாக நாவலுக்குள் வரும் இரு சம்பவங்கள் அவை.ஒன்றில் ஏழு சகோதரர்களும் அவர்களது தங்கையை (தன்கூந்தலை கயிறாக்கி ஓடும் கன்றை அடக்கி நிறுத்துகிறாள்) துருக்க ராஜாவிடமிருந்து காக்கும் பொருட்டு  கொள்ளும் பயணத்தில் அவர்கள் வந்து சேர்வதும் அவர்களே அம்மலையின் பூர்வகுடிகளாக ஆவதுமான ஒரு கதை.மற்றொன்று அவர்களின் தெய்வமான ஹெத்தம்மா பற்றியது.மம்மூது வரும் பகுதியெல்லாம் மஞசள் பட்டாம்பூச்சி பறப்பதையும் இங்கு குறிப்பிடத் தோன்றுகிறது.
               
         நாவலில் சிறுவர்களின் விளையாட்டுகள் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன.இந்தப் பகுதிகளில் நாவலாசிரியர் சிறிது தணிக்கையை கையாண்டிருக்கலாம்  என்றே தோன்றுகிறது.அது போலவே சல்லிவன் உருவாக்கிய எதிர்பார்ர்பில் நாவல் நகரும் போது அதற்கு பிந்தைய பக்கங்களில் வேறொரு உலகம் எழுந்து வருகையில் உருவாகும்  ஏமாற்றத்தையும் தவிர்க்க முடியவில்லை.நாவல் ஆசிரியர் அறியாத உணராத ஒன்று நாவலுக்குள் இல்லை.இதையே இதன் பலமாகவும் குறையாகவும் சுட்டத் தோன்றுகிறது.
                

         
           தன் முதல் நாவலை கலையமைதியுடனும் வாசிக்க தடையில்லாத சுவாரஸ்யமான மொழிநடையுடனும்  சுகுமாரன் உருவாக்கியிருக்கிறார்.மலையும் மலைசார்ந்த இடத்தையும் பற்றி பாடுவதை குறிஞ்சித் திணை என்கிறோம்.அவ்வகையில், ஒரு அர்த்த்த்தில் இந்நாவலையும் குறிஞ்சித்திணையின் வகைப்பாட்டுக்குள் வைக்க முடியும்.ஒரு படைப்புக்குள் பொதிந்திருக்கும் மெளனங்களை கண்டு கொள்பவனே அதன் ஆகச் சிறப்பான வாசகன்.அப்படிப்பட்டவனின் வாசிப்பே புதிய அர்த்தங்களை அதற்கு வழங்குகிறது.அவனது வருகையை எதிர்நோக்கியிருக்கிறது இந்நாவல்.

நன்றி : அடவி டிசம்பர் 2014
       
(06.07.14 அன்று மதுரையில் நடந்த வலசை உரையாடல் அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில படங்கள் சுகுமாரனின் ’வாழ்நிலம்’ வலைப்பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.