Thursday, November 10, 2022

வன்பாற்கண் வற்றல் மரம் - சபரிநாதன் ; தாஸ்தேயெவ்ஸ்கியின் ’நிலவறை குறிப்புகள்’


வன்பாற்கண் வற்றல் மரம்

தாஸ்தேயெவ்ஸ்கியின் நிலவறை குறிப்புகளைக் குறித்து சில குறிப்புகள்

 

[மு.கு:தமிழில் இப்படைப்பு இன்னும் வெளிவராத காரணத்தால் தவிர்க்க இயலாமல் கதைப்பகுதிகள் சற்று விவரிக்கப்பட்டுள்ளன]

        -சபரிநாதன்

காரண அறிவிற்கு அறிமுகமே இல்லாத காரணங்கள் இதயத்திற்கு உண்டு

 -ப்ளேஸ் பஸ்கால்

 

சமூகம் ஒரு மானுட உருவாக்கம். மனிதன் ஒரு சமூக விளைபொருள்.இவை ஒன்றையொன்று மறுக்கும் இருவேறு முன்மொழிவுகள் அன்று மாறாக இடையறாத சமூக நிகழ்வின் முரணியக்கப் பான்மையைப் பிரதிபலிப்பவை. ஒவ்வொரு சுயசரிதையும் சமூகவரலாற்றின் துமி.அதற்கு வெளியே அசப்பில் அவை புவியியல் நிகழ்வுகள் தாம். மாந்த வாழ்வைத் தாண்டி வெளியே சமூகத்திற்கும் முகாம்கள் இல்லை. சமூகச் செயல்பாட்டில் பங்கெடுப்பதன் மூலம் மட்டுமே தனிஉயிரியானது தனிமனிதன் ஆக முடியும். மறுதலையாக சமூக மதிப்பீடுகளோ விளையாட்டு விதிகளைப் போல மைதானத்துள் மட்டுமே செல்லுபடியாகும். இப்பார்வையின்படி தனிமனிதன் சமூகமனிதன் என்ற எதிரீடுகளே அடிப்படையற்றவை எனலாம்.அப்படி இருப்பின் அவரிருவரும் ஒருவரே.

 


மனித உயிர் தவிர ஏனைய அநேக உயிர்கள் தம் பிழைப்பிற்குத் தேவையான இயல்புணர்ச்சித் தொகுப்புடனும் வடிவமைக்கப்பட்ட இயற்கருவிகளுடனும் பிறக்கின்றன. காக்கைக் கூட்டில் கண் திறக்கும் குயில்குஞ்சு ஒரு கட்டத்தில் தானே வெளியேறி தன்னினத்தோடு சேர்ந்து கொள்கிறது. ஆழாழியில் ஜனித்த நீர்வாழ் ஜீவிக்குத் தானே தெரிந்துள்ளது தன் இரை எதுவென்று, தான் தப்பியோட வேண்டிய பேர்வழி யாரென்று. இவற்றோடு ஒப்பிடுகையில் மனித உயிர் கிட்டத்தட்ட நிராதரவான நிலையில் உலகிற்குள் நுழைகிறது. சொல்லப்போனால் அதற்கென வரையறுக்கப்பட்ட உலகென்று ஒன்றில்லை. மாறாக பெரும்பாலான ஜீவராசிகளின் உலகம் குறிப்பிட்ட காலநிலைகளாலும் சூழமைவினாலும் வகுத்துக்கொள்ளவியன்ற தூண்டுகைகளாலும் நெய்யப்பட்டுள்ளதைக் காணலாம். உதாரணத்திற்கு மலையடிவாரத்தில் ஊறும் எறும்புகளை மலங்காடுகளில் காணமுடியாது.மலங்காட்டு மரத்தின் கீழ்க்கொப்பில் வாழும் விலங்கு மர உச்சிக்குச் செல்வதில்லை.சில பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் மைல்கள் பயணிப்பது சுதந்திர தாகத்தினால் அல்ல.மேற்கொண்டாக வேண்டிய புனித யாத்திரைக்காக அவற்றுள்ளே இயற்றப்பட்டுள்ள நிரலின் பொருட்டே.ஆனால் மனித குமாரனுக்கோ தலைசாய்க்க பிரத்யேகமாக ஓரிடமில்லை.மனிதக்கருவின் சினைவளர்காலமோ குறுகியது வளர்பருவமோ மிகநெடியது.நிலைமை இவ்வாறிருக்க தன் பேரினத்தின் மாட்சிமை மிக்க கடந்த காலத்தையும் அழிவா அற்புதமா எனத் தெரியாதபடி குழம்பிக்கிடக்கும் எதிர்காலத்தையும் சற்று எண்ணிப்பார்க்க முடிந்தால்,கூடவே தனது கதியற்ற நிலையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஒரு மனிதச்சிசு கதறி  அழுவதைத் தவிர வேறெதுவும் செய்வதற்கில்லை.இந்நூலில் ஓரிடத்தில் சரியாகவே வர்ணிக்கிப்படுகிறது மனிதன் நகைப்புக்குரிய விலங்கு என.

 

மனிதக்குழந்தை நுழைவது திறந்த உலகிற்குள்.கணக்கற்று விரியும் தேர்வுகளின் முன்னே.ஒரு தருணத்தில் எடுக்கப்படும் செயல் தேர்வானது அதற்கடுத்த அனைத்து தேர்வுகளின் முழுத்திறளையும் மாற்றியமைக்கிறது. இதன் காரணமாகவே மனித மனம் நிரந்தரமான ஒரு சமநிலையின்மையில் வதிய வேண்டியுள்ளது. இத்தகு மனித இருப்புக்கு ஏதோ ஒரு வித சமநிலையை வழங்க முயன்றதே சமூக உருவாக்கத்தின் தேவை எனலாம்(தேர்வு முறைகளை முறைப்படுத்தி சிறப்பான தேர்வுமுடிவுகளைத் தொகுத்துக் கொள்வது தான் திட்டம்)இவ்வுள்ளார்ந்த திடமின்மையின் காரணமாக, மனிதன் தன்னுள்ளே தானமைந்து வாழ்வு முடிக்கும் உயிராகத் தொடரமுடிவதில்லை.அவன் தன்னை சதா வெளியே சிதறடிக்கத் தேவைப்படுகிறது,புற நடவடிக்கைகள் வாயிலாகவும் சிந்தனையின் மூலமாகவும்.மனித இருப்பென்பதே தனக்கும் உலகிற்குமான தொடர்ந்த ஒரு சமன் தேடும் செய்கை தான்.அறுபடாத இச்செய்கையின் மூலம் அவன் தனக்கானவோர் உலகைச் சமைக்கிறான்.இந்த உலகுருவாக்கத்தின் ஊடாக அவன் தன்னையும் உருவாக்கிக் கொள்கிறான்.அத்தகைய உலகில் தான் அவன் தன் இருப்பை ஊன்ற முடியும்.இவ்வுலகுருவாக்கம் எப்போதும் கூட்டு நடவடிக்கையாகவே இருந்து வந்துள்ளது.அவன் சமைத்த பிரதேயக உலகைக் கலாச்சாரம் எனக் கொண்டால் அது ஒரு சமூகமாகவே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

ஆனால் ஆர்வமூட்டும் விதமாக மனிதனால் சமைக்கப்பட்ட உலகம் அதாவது சமூக கலாச்சாரம் அவனது ஆளுகையையும் புரிதலையும் கடந்து சென்று, தானே ஒரு தன்னிருப்பாக, புறவய எதார்த்தமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.நள்ளிரவில் சிங்கவால் குரங்கு ஒன்று அடைமழையை வேடிக்கை பார்ப்பதைப் போல மனிதன் சமூகத்தை வெறித்துப் பார்க்கிறான்.அவன் உண்டு செய்த ஒன்று அவனது கட்டுப்பாட்டை மீறி அவனது நோக்கத்தையும் கடந்த ஒன்றாக மாறிவிடுகிறது.இது உலகின் பௌதிக அபௌதிக  கூறுகள் இரண்டிற்குமே பொருந்துபவை.காட்டாக மொழியை உருவாக்கிய மனிதனது பேச்சு மட்டுமின்றி சிந்தனையுமே அம்மொழியின் அடித்தளப் பொறியமைவில் சிக்கிக்கொண்டதைக் கூறலாம்.விழுமியங்களை உண்டு செய்தவன் அதை நம்பி ஏற்று வாழ்கிறான்.பின்  பல இரவுகள் அதே விழுமியங்கள் அவனைத் தூங்கவிடுவதில்லை.தவிர ஓரெல்லைக்கு மேல் சமூகம் தன் மூர்க்கக் கரங்களைக் கொண்டு மனிதனுக்கு ஆணையிடவும் மீறினால் ஒறுக்கவும் செய்கிறது.இத்தகைய மீறல்களாலும் புதிய சாத்தியங்களாலும் முன்னறியாத தேவைகளாலும் சில விபத்துக்களினாலும் கூட மனிதனின் உலகம் இயலுலகைப் போல நிலையானதாக இருப்பதில்லை.முடிவில் தன் சமனின்மையை, அதை நிவர்த்திக்கும் பொருட்டு தோற்றுவித்த உலகின் மீதே கடத்திவிடுகிறான்.என்பதால் மனிதனின் சமன் தேடும் படலம் முடிவுறாது போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் சமூகக் கலாச்சாரத்தின் புறவய இருப்புத் தோற்றத்தை அவன் நிராகரிக்க முடியாது.ஏனெனில் தனக்கு புறவயமாகத் தயார் செய்யப்பட்ட எந்த நிலைத்தளமும் இல்லை என்பதால் தான் உலகுருவாக்கப்பணியே தொடங்கப்பட்டது. பண்பாட்டின் இத்தனியிருப்பு ஓரு கூட்டுமாயையாய் இருப்பினும் இச்செயற்கையான சமூக அமைப்புகள் தான் அவனது அடித்தளம்.இதன் ஆதார சுய இருப்பை கேள்விப்படுத்துவது அமர்ந்துள்ள கிளையையே வெட்டிக்கொள்வதற்குச் சமானம்.அப்படி செய்யின் நீங்கள் சமூக நிதர்சனத்தில் இருந்து வெளியேறி ஆகவேண்டும், எப்படி இலக்கண விதிகளை ஏற்கமாட்டேன் என்பவர் மொழிச்செயல்பாட்டில் பங்கேற்க முடியாதோ அதே போல.

 

இயற்கையாக அமையாத திடத்தன்மையை சமூகமும் கலாச்சாரமும் இரண்டு வழிகளில் வழங்குகின்றன.ஒன்று இயற்கையை மனிதாயப்படுத்துதல் இரண்டு சமூகக்கலாச்சாரத்தை இயற்கையாக்கல். முதல் நடவடிக்கையின் உதாரணமாய் பழங்குடிக் கதைகள் மீள மீள பிரபஞ்ச இயக்கவியலை கதைப்படுத்துவதைக் கூறலாம். இரண்டாவது நடவடிக்கை பெரும்பாலும் சட்டத்தாலும் முக்கியமாக மதத்தினாலும் உருப்பெறும் கதையாடல்களால் அமைக்கப்படுகிறது.சட்டங்கள் யாவும் கடவுளுடன் முடிச்சிடப்பட்டாக வேண்டும். ஒருவர் தாயோடு உறவு கொள்வதை அரசனும் விரும்பவதில்லை கடவுளும் ஏற்றுக்கொள்வதில்லை. இவ்வாறு மதம் அரசு இனக்குழு குடும்பம் என ஒவ்வொரு சமூக நிறுவனமும் கதையாடல்களாலேயே நிறுவப்பட்டுள்ளன. கதைமாந்தர்கள் எப்படி கதையை விட்டு வெளியேற முடியாதோ அதே கதி தான் சமூகப்பாத்திரங்களுக்கும். இத்தகைய பல்வேறு கதையாடல்களின் வலைப்பின்னல் தான் சமூகக் கலாச்சாரம் என்பது.

 

இதில் துணுக்குறச் செய்யும் உண்மை என்னவெனில் எவை நம்மைக் கட்டுப்படுத்துகின்றனவோ அவையே நமக்கு அர்த்தம் அளிக்கின்றன,ஒரு பருப்பொருளின் எல்கைகளே அதன் வடிவத்தைத் தீர்மானிப்பது போல.கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் அரசு,மதம்,குடும்பம் போன்ற அமைப்புகளின் கதையாடலில் இருந்து வெளியேறுகையில் ஒருவர் அநர்த்ததிற்குள் நுழைய நேர்கிறது. ஆகையால் தான் கைதிகளோ விவாகரத்தானவர்களோ சட்டென ஒரு அபத்தத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஊர் விலக்கம் செய்வது குற்றவாளிக்கு ஊரின் உதவிகளை மறுப்பது மட்டுமல்ல.அவனை அர்த்தமின்மைக்குள் விழச்செய்வது தான் நோக்கம்.என்ன இருந்தாலும் நாம் ஏன் இந்நிறுவனங்களைச் சகித்துக்கொள்கிறோம் எனில் இவை நமக்கு ஒரு கதையைச் சொல்வதின் மூலம் அதில் பங்கெடுக்க அனுமதிப்பதன் மூலம் வாழ்விற்கு ஒருவகை அர்த்தத்தை அளிக்கின்றன.

 

அர்த்தம் எனும் கருதுகோளே கதைசொல்லல் எனும் செயல்பாட்டில் இருந்து தான் வந்திருக்கவேண்டும். ஒரு கதை, விழுமியங்களுக்கு ஒத்திசைவாக பயணிப்பதைப் போல முடிவில் ஒரு மரபார்ந்த நீதியை வலியுறுத்துவது போல அல்லது அழிவிலா பெருவாழ்வை நினைவூட்டியவாறு சுபமாக முடிவதைப் போல தன் வாழ்வும் நிறைவேற விரும்புகிறான் ஒவ்வொரு மனிதனும்.பெரும்பாலும் அது சாத்தியம் இல்லையாகையால் பொருளின்மை குறித்த கேள்வியோடு இறக்கிறான்.

 

சமூகக் கதையாடல்கள் வெறும் நாளிதழில் வந்துபோகும் நிகழ்வுகளாக இருந்திருந்தால் அதை மீறிச்செல்வது இத்தனை கடினமானதாக இருந்திருக்காது. ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் மானுட அனுபவத்திலும் நினைவின் படுகைகளிலும் ஊடுருவியுள்ளதால் இக்கதைகள் தொன்ம மொழிபுகள் ஆகின்றன. இச்சமூகப்பாத்திரங்கள் வெறும் நாடக வேடங்கள் அன்றி தொல்படிமப் பாத்திரங்களாக உருவேறியவை.இவற்றை ஏற்று நடப்பதற்கான கட்டளை சமூக ஆணையத்தில் இருந்து மட்டுமல்ல கூட்டு நனவிலியின் உள்ளடுக்குகளில் இருந்தும் எழுபவை. ஆக இப்பணிகளை மேற்கொள்ளாத ஒருவனை சமூகம் ஏளனமாக நடத்துவது பெரிய விஷயமல்ல அவனுள்ளேயே ஏதோ ஒன்று அது குறித்த ஆழ்ந்த நலமின்மையை உருவாக்குகிறது. தமது கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வரை அவனை ஓயவிடுவதில்லை தொன்மங்கள்.

 

சமூகத்தை விட்டு வெளியேறுவது வெறுமையை பரிசளிக்குமெனில் துறவியின் தேர்வை எவ்வாறு வகுப்பது? அவருக்கு எது பொருள் அளிக்கிறது?துறவு என்பது மதக்கதையாடலின் உபகதையா அல்லது சமூக இருப்பைத் தாண்டி அதியனுபவம் ஏதும் உள்ளதா நம்மவரின் நோக்கம் அதுதானா? அப்படியானால் துறவி கலாச்சாரத்திற்கு உள்ளே இருக்கிறாரா வெளியே இருக்கிறாரா.’போதிதர்மர் ஏன் கிழக்கே கிளம்பினார் கொரியத் திரைப்படத்தில் ஒரு காட்சி:மீண்டும் இல்லறத்திற்கு திரும்ப முடிவெடுத்த சிஷ்யன் தன் குருவைப் பார்த்து கேட்கிறான்நீங்கள் ஏன் மலையில் இருக்கிறீர்கள் அதற்கு அவர் சொல்கிறார்வெகுதூரத்தில் நட்சத்திரங்கள் வானத்தை சமன் படுத்துகின்றன என.என்பதால் தான் துறவி என்பவர், மிக மிக ஆர்வடமூட்டக்கூடிய நபராகவும் கவர்ச்சிகராமனவராகவும் தென்படுகிறார்.

 

ஆயின் சமூகத்திற்கு வெளியே கால்கொண்டவன் போலத் தோற்றமளிக்கும் நிலவறை மனிதன் கட்டாயம் கவரக்கூடியவன் இல்லை.

 

*

இக்குறுநாவல் எதிர்பாராத விதமாகத் துவங்குகிறது:’நான் ஒரு நோயுற்றவன், வசீகரமற்றவன், வெறுப்பு மிக்கவன்.எடுத்த எடுப்பிலேயே கதைசொல்லி தன் இருக்கையை வாசகருக்கு எதிராக நகர்த்திக் கொள்கிறான். நிலவறை மனிதன் எனப் பெயரிட்டு சுயஅறிமுகம் செய்து கொள்ளும் அவன் தன்னை எல்லா விதத்திலும் கீழானவனாகக் காட்டிக்கொள்கிறான்.வாசகர் அவனை விரும்ப மாட்டார், ஆனாலும் அவனைத் தவிர்க்க முடியாது.ஏனெனில் அவன் ஒரு எதிர்நாயகன்.நூலின் இறுதியில் அவனே சொல்கிறான்ஒரு நாவலுக்கு நாயகன் தேவை ஆனால் இங்கு வேண்டுமென்றே  எதிர்நாயகனின் எல்லா பண்புநலன்களும் ஒன்றுகூட்டி வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

 

ஜோசப் காம்பெல்லின் பிரபலமானஆயிரம் முகம் கொண்ட நாயகன் நூலில் நாயகனின் பொதுவான பயணம், சாமான்ய உலகில் இருந்து கிளம்பிச் சென்று அமானுஷ்ய உலகில் நுழைந்து அற்புத சவால்களை வென்று அதன் மூலம் வரம் ஒன்றைப் பெற்று அதை தன் குலத்தாரோடு பகிர்ந்துகொள்வதாக சித்தரிக்கப்படுகிறது. புத்தரின் தொன்மக்கதை கச்சிதமாகக் பொருந்தக்கூடியது இதற்கு.ஆனால் இவை கதைப்பாடல்களையோ புராணக் கதைகளையோ விளக்குவதற்குத் தான் பெரிதும் பயன்படும்.பொதுவாக நாயகனின் பாத்திரம் அவனது காலகட்டத்தின் தனித்தன்மைக்குத் தக மாறிவந்துள்ள ஒன்று.முக்கியமாக கலை இலக்கியத்தில்.ஆனால் நாயகனின் இருப்புக்கு அவசியமான தேவை அவனது நாயகமும் செயற்கரிய செய்கையும் வெளிப்படுவதற்கு ஏற்ற சூழல்.நவீன காலகட்டமானது இத்தகையை சூழலை யாருக்கும் வழங்கவில்லை.ஒருவகையில் நாயகர்கள் தேவையிலாது போகும் நிலவரத்தை நோக்கித் திட்டமிட்டு பயணிக்கும் காலம் இது.எனவே இக்காலகட்ட நாயகர்களை செவ்வியல் தொனியில் நாயகர்கள் என்றே சொல்ல முடியாது.தோராயமான செவ்வியல் வரையறை என்றால் நாயகன் என்பவன் அபாராமான செயல்திறனுடன் இக்கட்டைக் கடப்பவன் எனலாம்.சற்று நடைமுறை வாதியான அரிஸ்டாட்டில் தனது பாணியில்  சராசரிக்கு மேலானவன் என்கிறார்.ஆனால் நவீன இலக்கியப்படைப்புகள் அக்காலகட்டத்தின் பெருங்கேள்விகளை சாமான்யனின் பிரதிநிதியாக நின்று பேசும் நபர்களையே நாயகனாக்குகிறது.ஏனெனில் நவீனம் ஜனநாயக யுகம்.இப்பிரதிநிதிகள் நாயகர்கள் இல்லை அவர்கள் முதன்மைப் பாத்திரங்கள்.ஆனால் நிலவறை மனிதன் ஓர் நாயகன்..ஏனெனில் இவன் சாமான்ய பிரதிநிதி அல்ல.சராசரிக்கு மேலானவனும் இல்லை சரியாகச் சொன்னால் கீழானவன்.எனவே தான் அநேகமாக நவீன இலக்கியத்தின் முதல் எதிர்நாயகனாக கருதப்படுகிறான் அவன்.எதிர் நாயகனை வில்லனில் இருந்து பிரித்துப் பார்க்கலாம். வில்லனின் படைப்பு நோக்கே நாயகனின் பிம்ப உயரத்தை கூட்டுவதற்காக உருவாக்கப்பட்டது தான்.நாயகனை மேலானவனாகத் தோன்றச்செய்ய அவனது செயல்திறனை மேம்படுத்தவே வில்லன் தோன்றுகிறான்.ஆனால் எதிர்நாயகன் தன்னளவில் ஒரு நாயகனே. நாயகனிடம் இருந்து அவன் வேறுபடுவது முன்வைக்கும் விஷயங்களைப் பொறுத்தே.நாயகன் மரபு வழிப்பட்ட நியதிகளையும் சமகால மதிப்பீடுகளையும் எதிர்நாயகன் அவற்றுக்கு எதிரானவற்றையும் தேர்கின்றனர்.மற்ற பெரும்பாலான நவீனப்பொதுமையின் பிரதிநிதிகளோ(முதன்மைப் பாத்திரங்கள்) விழுமியவெளியில் தேர்வு செய்ய இயலாமல் இரண்டிற்கும் நடுவே அல்லாடுபவர்கள்.எதிர்நாயகனும் நாயகனைப் போல வாசகனை ஆட்கொள்கிறான் வயப்படுத்துகிறான்.வாசகரால் அவனோடு தன்னை பொருத்திப் பார்க்க இயலாது.வெறுக்கக் கூட செய்யலாம்.ஆனால் அவனுக்கு காதுகொடுப்பதை நிறுத்த இயலாது.ஏனெனில் எதிர்நாயகன் வாசகனின் இருட்திசைககளில் கணப்பு மூட்டுபவன்.

 

நவீனயுகம் அறவியலை சார்பியவாதத்துடன் அணுகுவதால் நன்மை தீமை எனும் திட்டவட்ட தனியிருப்புகள் இல்லாது போகையில் தீமைக்கெதிரான போராட்டமானது அடிப்படையில் குழப்பமடைய கதாநாயகர்களின் குறிக்கோள் என்பதே என்னவென்று தெரிவதில்லை.நெப்போலியனின் முடிவிற்குப் பிறகு கற்பனாவாத நாயகனும் காலியாக இரண்டாம் உலகப்போருக்கு பின் விரக்தியுற்ற குழப்பவாதியான பல் பிடுங்கப்பட்ட எதிர்நாயகன் எதிர்படத் துவங்கினான்.ஆனால் நிலவறை மனிதன் பல்பிடுங்கப்பட்டவனல்ல. ’அந்த பல் வலியெடுத்தாலும் கூட அதைப் பிடுங்க சம்மதிக்கமாட்டான்.ஓரிடத்தில் அவன் சொல்கிறான்இறுதியில் சோப்புக் குமிழியும் நிலைமமும்.செவ்வியல் நாயகன் செயல்திறன் மிக்கவன் எனில் செயலின்மையின் தூதரான நிலவறை மனிதன் எதிர்நாயகர்களின் கதாநாயகன்.

 *

தாஸ்தேயெவ்ஸ்கியின் படைப்புலகை இரண்டு காலகட்டங்களாக பிரிப்பது விமர்சன மரபு.இருபத்து நான்கு வயதில் அவர் எழுதியபாவப்பட்டவர்கள் நாவலில் இருந்து சைபீரியாவிற்கு நாடு கடத்தப்படும் வரை அவர் எழுதியவற்றை முதற்கட்டமாக பிரிக்கலாம்.அதில்டபுள் குறுநாவலும் பலகீன இருதயம் உட்பட பல சிறுகதைகளும் அடங்கும்.சிறைவாசத்திலும் சைபீரிய வாழ்விலும் பிரதானமான பத்தாண்டுகளைக் கழித்துவிட்டு மீண்டும் எழுதத் தொடங்கியதிலிருந்து அவரது இறுதி நாவலான கரமாசோவ் சகோதரர்கள் வரையான படைப்புகளை இரண்டாம் கட்டமாக வகுக்கலாம்.இந்த இரண்டாம் கட்ட படைப்பு வாழ்க்கையில் தான் தாஸ்தேயெவ்ஸ்கி தன் மகத்தான ஆக்கங்களைப் படைக்கிறார்.முதல் பகுதியில் ரஷ்ய இயல்புவாத எழுத்து மற்றும் கோகலின் தாக்குறவு ஆகியவற்றால் ஆளான கற்பனாவாத எதார்த்த எழுத்தாளராக இருந்தவர் இவ்விரண்டாம் பாதியில் தனித்த தலைசிறந்த செவ்வியல் ஆசிரியர்களில் ஒருவராகிறார்.

 

எரிக் ஹாப்ஸ்வாம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியையும் ஓருசேரபுரட்சியின் நூற்றாண்டு என்கிறார். அமெரிக்க புரட்சி,ஐயர்லாந்து புரட்சி,பிரெஞ்சு புரட்சி,லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலை என ஒரு பெரிய நிலைமாற்றத்தின் கொதிகலனாக இருந்தது அக்காலகட்டம்.இக்கொந்தளிப்புக்கான பொருளியல் சூழலை உருவாக்கியது இங்கிலாந்தில் கருக்கொண்ட தொழிற்புரட்சி என்றால் கருத்தியல் உந்தத்தை வழங்கியது பிரெஞ்சு புரட்சியை ஒட்டி நடந்த விவாதங்களும் மேற்கு ஐரோப்பிய சிந்தனையாளர்களின் தத்துவ வெளியீடுகளும் எனக் கூறுகிறார் ஹாப்ஸ்வாம்.இப்புரட்சிகர சிந்தனைகள் சிறு சிறு வித்தியாசங்களுடன் புதிய புதிய நாமகரணங்களில் ஏறத்தாழ உலகமெங்கும் சமூக அரசியல் சூழலில் வெப்பநிலையை ஏற்றிக்கொண்டிருந்தன.இந்தப் பின்புலத்தில் தான் மார்க்ஸ்கம்யூனிசம் எனும் பூதம் ஐரோப்பாவை ஆட்டிபடைத்துக்கொண்டிருக்கிறதுஎன்றெழுதினார். கம்யூனிசம் என்ற பெயரை பலவேறு புரட்சிகர சிந்தனைகளுக்கான வெகுஜன கூட்டுப்பதமாகவே குறிப்பிட்டார் அவ்விடத்தில்.

 

பீட்டரது சீர்திருத்தங்களின் காலத்தில் மெதுமெதுவாக ஐரோப்பாவை நோக்கி நகரத்துவங்கிய ரஷ்யா அதுவரை ஆசியாவின் ஒரு பின் தங்கிய பெரிய நாடாகவே இருந்து வந்தது.மற்ற மேலை நாடுகள் தொழிற்புரட்சியின் விளைவால் நவீனயுகத்திற்குள் நூறு கால்களில் முன்னேகிக்கொண்டிருக்க ரஷ்யாவில் 1860 வரை கூட பண்ணையடிமை முறை அதன் மூலவடிவிலேயே கடைபிடிக்கப்பட்டு வந்தது.மணிமுடியை உருட்டுவது,அரியணையை இடமாற்றுவது,அரண்மனையைக் கொளுத்துவது என ஐரோப்பாவே ஒரு சரித்திர நாடக அரங்காக மாறிக்கொண்டிருந்த நேரத்தில் அன்னை ரஷ்யா அப்பட்டமான ஒரு நிலபிரப்புத்துவ மன்னராட்சியாக தொடர்ந்து கொண்டிருந்தது.இந்தப் பின்னணியில் சீர்திருத்தங்கள் வாயிலாக ரஷ்யாவில் ஒரு மிகமுக்கியமான திருப்பம் உருவாகிறது.அதாவது பிரபு வம்சத்தினரிடையேயும் மேல்நடுத்தரவர்க்கத்தினரிடையேயும் மெல்ல உருவாகி வந்த அறிவுஜீவி வர்க்கத்தின் தோற்றம்.இவர்கள் ஐரோப்பிய கல்வி கற்று பிரஞ்சு மொழி பேசி மேலையர்களது உடைகளை மட்டுமின்றி கொள்கைகளையும் உடுத்தியிருந்த ஒரு சிறிய வர்க்கம். பெரும்பாலும் வளமிக்க முக்கியமான குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள். ரஷ்ய இலக்கியத்திற்கும் கலையெழுச்சிக்கும் வித்திட்ட ஆதார முரண்பாடு இது தான் என்கிறார் தாஸ்தேயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றாசிரியரான ஜோசப் பிராங்க்.

 

அதாவது ஐரோப்பிய அறிவார்த்தமும் அணுகலும் கொண்ட ஒரு சிறு பகுதியினர் ஒருபுறம், அவர்களின் இலட்சிய நாட்டத்திற்கு சற்றும் பொருந்திப்போகாத அல்லது அவர்களது துடிப்பிற்கு ஏதுவற்ற மிகவும் பின் தங்கிய பெரும்பான்மை ரஷ்யா மறுபுறம்.ரஷ்ய செவ்வியல் படைப்புகளில் ஏதோ ஒரு புள்ளியில் இம்முரண்பாட்டை உரசிச் செல்லாத படைப்புகளே இல்லை எனலாம்.(தோற்றத்தில் இந்திய மறுமலர்ச்சி இலக்கியங்களோடு ஒப்பிட்டு பார்க்கலாம் இதை).இது இரண்டு வழிகளில் செயல்பட்டது.ஐரோப்பிய மறுமலர்ச்சியின் கருத்துக்களை குடியானவ மக்களிடையே கடத்தி அந்த இலட்சியங்களை நோக்கிச் செல்ல அவர்களைத் தூண்டுவது.இன்னொன்று அம்மண்ணிற்கே உரிய மரபார்ந்த பண்புநலன்களை,அப்பண்பாட்டின் மூலகங்களை சுவீகரித்தல் அதாவது ருஷ்ய ஆன்மாவைப் புரிந்துகொள்வது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் அனைத்து ரஷ்ய படைப்புகளையும் இவ்விரு துருவங்களுக்கிடையே வைத்துப்பார்க்க இடமிருக்கிறது.

           

தாஸ்தேயெவ்ஸ்கி இரண்டு வகை கற்பனாவாதத்தால் ஆகர்ஷிக்கப்பட்டவர்.இரண்டுமே பத்தொன்பாதாம் நூற்றாண்டின் முற்பாதியில் மேற்கு ஐரோப்பாவில் கிளைத்தவை.ஒன்று ஜெர்மானிய கருத்துமுதல்வாதத்தால் ஊட்டம் பெற்ற மீமெய்மை கற்பனாவாதம்.மற்றொன்று பிரெஞ்சு அறிஞர்களான ஃபூரியர் போன்றோரால் முன்வைக்கப் பட்ட சமூகக் கற்பனாவாதம்.ஒன்று உள்முகமாகத் திரும்பியது.ஆன்மா முழுமுதல் பொருள் என்றும் அதன் எல்லையற்ற சாத்தியங்களை நோக்கி உயர்வதே வாழ்வின் நோக்கம் என்றும் வலியுறுத்தியது.மற்றொன்று வெளிநோக்குடையது.மனித சாத்தியங்கள் எல்லயற்றவை அன்று மாறாக சமூக அழுத்தங்களால் வரையறுக்கப்பட்டது எனக்கூறியது. இரண்டுமே கற்பனாவதங்கள்.தாஸ்தாயெவ்ஸ்கி இரண்டில் இருந்தும் தாக்கத்தைப் பெற்றார்.சிந்தனையாளர்களிடம் இருந்தல்ல படைப்பிலக்கிய வாதிகளிடம் இருந்து. ஷில்லர்,கதே இடமிருந்து ஜெர்மானிய கற்பனாவாதத்தை.பால்சாக்,ஹியூகோ இடம் இருந்து பிரஞ்சு சமூக கற்பனாவதத்தை.சொல்லப்போனால் இறுதிவரை இரண்டில் ஒன்றை அவரால் தேர முடியவில்லை.இரண்டையும் கைவிடவும் முடியவில்லை.ஏனெனில் அக்காலத்திய எல்லா ரஷ்ய அறிவாளிகளைப் போல அவரும் அவ்விரண்டையும் கிறித்தவத்தோடு ரகசியமாக முடிச்சிட்டிருந்தார்.எந்த அறிவியக்கமாய் இருந்தாலும் ரஷ்யாவில் அது கிறித்துவத்தின் கேள்வியை சந்தித்தே ஆகவேண்டும் என்கிறார் ஜோசப் பிராங்க்.ரஷ்ய நாத்திகவாதிகள் கூட கிறித்துவ மதத்தை மறுதலித்தாலும் கிறிஸ்து என்ற பிம்பத்தை தம் கட்சியைச் சார்ந்த ஒருவராகவே காட்டிக்கொள்ள முயன்றனர்.பிராயம் முதலே கிறித்தவத்தில் பெரும்பிடிப்பு கொண்டிருந்த தாஸ்தாயெவ்ஸ்கியின் ஆர்த்தடாக்ஸ் பித்து பிரசித்தமானது.ஆயினும் அவர் எதிர்கொண்டவை அவரது காலகட்டத்தின் ஆதாரக் கேள்விகளையே.அவரது எல்லா நாவல்களையுமே சமூக உளவியல் நாவல்கள் என வகைப்படுத்த வாய்ப்புள்ளது.

 


ஆனால் அவர் சமகாலத்தின் கேள்விகளை சந்தித்தது நடப்புச் செய்திகளின் மேற்தளத்தில் அல்ல.அவற்றை அடிப்படையான மனித இயல்பினது உள்முரண்களாக மாற்றிக்கொள்கிறார். அதனால் சமூகவாதங்களின் தீர்வுகளைப் பெரிதாக நம்புவதில்லை அவர்.எந்தவொரு புதிய தரப்பையும் உள்ளுணர்வின் தடத்தில் நிரந்தப் புதிரின் ஒரு பரிமாணமாக உருமாற்றுகிறார்.ஒரு கருத்தை அதன் எல்லைக்குக் கொண்டு செல்கிறார்.எதைக் கையாளும் போதும் தன் தேடலின் பாதையினின்று கண்ணெடுப்பதில்லை.மறுதலையாக மானுடத்தின் அடிப்படை வினாக்களை விசாரிக்க, மனிதன் எனும் புதிரை விடுவிக்க சமூக நிகழ்வுகளை பயன்படுத்திக் கொண்டார் என்றும் கூறமுடியும்-அவருக்குத் தெரியும் திராட்சைகள் அழுகிவிடும் ஒயினுக்கு அழிவில்லை என்று.

 

*

இயற்கையில் கடவுள் வசித்தது ஒரு காலம்.சூர்,முருகு,அணங்கு என நீர்நிலைகளிலும் மலையிடுக்குகளிலும் வாழ்ந்து வந்தது.பின் மின்னலையும் புயல்களையும் பெருங்கடவுள்கள் தம் திறலை நிலைநாட்டப் பயன்படுத்தின.திடுமென இவை அனைத்தையும் தெய்வதம் இன்றியே விளக்க முடிந்தால் இவை எல்லாம் என்ன ஆகும்?முடிவற்ற மூர்ச்சையாக்கும் ஒரு பொருட்தொகுதி என்று ஆகிவிட்டால்,நாம் நம் இருப்பிலேயே ஓர் அழையா விருந்தினரெனத் தானே உணர முடியும்.

 

கருத்தை பின்னந்தலையில் சூடிக்கொள்ளலாம்;வாயில் போட்டு சவைக்கலாம். ஆனால் தாஸ்தாயெவ்ஸ்கி செய்வது அதையல்ல.ரஷ்ய விமர்சகர் ஸ்ட்ரக்கோவ் குறிப்பிட்டதைப் போல அவர் கருத்தை உணர்கிறார்.அக்கருத்து தன்னுள்ளே ஊடுருவிச் செல்ல அனுமதிக்கிறார்.அவரது கதாபாத்திங்கள் ஒரு கருத்தின் பிரதிநிதியாக வாதாடுபவை எனக் கூறப்படுவதுண்டு.ஆனால் உண்மையில் அவரது பாத்திரங்கள் ஒரு கருத்தால் பீடிக்கப்பட்டவை.அவை அக்கருத்துக்குக்காக வாதிப்பவை அன்று அக்கருத்தின் நாவாகி விடுபவை.அவரது ஒரு மகத்தான படைப்பின் பெயரேபீடிக்கப்பட்டவர்கள்(அல்லது பேய்கள்).கருத்தால் பீடிக்கப்பட முதலில் அதை உணர வேண்டும்.அக்கருத்துக்கு கடத்தியாக செயல்பட வேண்டும்.அப்படி அல்லாமல் அதை மூளைப்பயிற்சிக்கான சாமானாகக் கொண்டால் எளிதாகக் கடந்துசென்றுவிடலாம்.காட்டாக கடவுள் இல்லை என்ற கருத்தை அப்படி எளிதாகக் கடந்து விடலாம் தான்.நாத்திகன் முற்போக்குவாதி போன்ற அடையாளங்களை சட்டைப் பையில் குத்திக்கொள்வது இப்போது கடினமான விஷயமல்ல.ஆனால் அக்கருத்தை ஒருவர் தன் தண்டுவடத்தில் உணர்ந்தாரெனில் அதன் முனகலை அடிவயிற்றில் கேட்டாறெனில் அவர் பீடிக்கப்பட்டவரைப் போலவே நடந்துகொள்வார்.அப்படித் தான் ஒரு கருத்தின் முகடுகளையும் பாதாளத்தையும் காணமுடிகிறது அவரது பாத்திரங்களால்.அப்படித் தான் தாஸ்தாயெவ்ஸ்கி சிந்தனைகளின் பாரதூர பின்விளைவுகளை அறியக்கூடியவரானார்.அப்படித் தான் அவர் புஷ்கினின்தீர்க்கதரிசிஆனார்.

 

நியுட்டோனிய இயற்பியல் பிரபஞ்ச இயக்கத்தை சில இயந்திர விதிகளின் அடிப்படையில் பொருள் கொண்டு வரையறுத்தது.இதே போல வரலாற்றுவாதமும் பரிணாமக் கொள்கையும் ஒட்டுமொத்த உயிர்கோள செயல்பாட்டையும் அதனூடாக மனித சமூக வளர்ச்சியையும் முழுமையாக விளக்கிக்காட்ட முயற்சித்தது.இந்தப் பின்னணியில் தான் ஏற்கனவே தத்துவத்தில் நிலவிவந்த நிர்ணயவாதம், பொருண்மய நிர்ணயவாதமாக(Material determinism) வலுவாக நிறுவிக்கொண்டது.இதனோடு தொடர்புடைய ஒரு கொள்கையை ரஷ்ய அரசியல் விமர்சகரான நிக்கோலாய் செர்னிஷெவ்ஸ்கி Rational Egoism என்ற பெயரில் முன்னெடுத்தார்.அது மனித இச்சைகளையும் அவனது செயல்பாட்டையும் நோக்கத்தையும் பகுத்தறிவின் மூலம் நேர்த்தியாகக் கரைப்படுத்திக் கையாளமுடியும் என வலியுறுத்தியது.இக்கோட்பாட்டை இயக்கிக் செய்துகாட்டும் முகமாக செர்னிஷெவ்ஸ்கி எழுதிய நாவலின் பெயர்செய்ய வேண்டியது என்ன?’. மனித பகுத்தறிவில் நம்பிக்கை கொண்ட கதாபாத்திரங்கள் மூலம் சமூக மாற்றத்தை நிகழ்த்துவதாக அமைந்தது அந்த நாவல்.கலைத்தரமான வெற்றியடையாவிடினும் ரஷ்யாவில் முன்னுதாரணமற்றதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது அப்புத்தகம்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் புரட்சியாளர்களிடையே பைபிள் போல வாசிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.இப்படைப்பால் பலமாக ஊக்கமடைந்த லெனின்செய்ய வேண்டியது என்ன?’ என்ற பெயரிலேயே இன்னொரு பிரசித்தி பெற்ற நூலை மார்க்ஸிய அடிப்படையில் எழுதினார்.டால்ஸ்டாயும் இந்த பெயரைப் பயன்படுத்தி தன் சொந்த விழுமியங்களுக்கு உருக்கொடுத்தார்.

 

நிலவறை குறிப்புகள் நாவலையே செர்னிஷெவ்ஸ்கியின் நாவல் மீதான தாக்குதலாகவும் நையாண்டியாகவும் வாசிக்க முடியும் என்கிறார் ஜோசப் ப்ராங்க்.’செய்ய வேண்டியது என்ன என்ற பேரே நாவலில் நேரடியாகக் குறிப்பிடப்படுகிறது.அந்நாவலின் பல தருணங்களும் பாத்திரங்களும் கேலி செய்யப்படுகிறது.ஆனால் நிலவறைக்குறிப்புகளை அப்படிக் குறுக்கிவிட முடியாது.ஏனெனில் புரட்சிகரக் குழுக்களில் நேரடியாகப் பங்கேற்றிருந்த அதனால் நாடுகடுத்தப்பட்ட தாஸ்தாயெவ்ஸ்கிக்கு அக்கருத்தியலின் உள்முரண்களையும் இடைவெளிகளையும்  கண்டறிவதில் பெரிய சிரமம் இருந்திருக்காது.ஆனால் அவர் அஞ்சியது அக்கருத்தியல் வாதத்தின் தர்க்க பலகீனத்தை அல்ல மாறாக அதன் கவர்ச்சிகரத்தை.அதன் மூலம் நடக்கச் சாத்தியமான ஆபத்தை. இக்கருத்தியலின் தவிர்க்கமுடியாத விபத்து தான் நிலவறை மனிதன் எனச் சுட்டிக்காட்ட விரும்பினார்.ஆனால் இந்நூல் அப்பின்புலத்தை மிக எளிதாகவே தாண்டிவிட்டது.நிர்ணயவாதமும் பகுத்தறிவாண்மையும் விசாரத் தளத்தை மீறி இன்று நவீனத் தொழில்நுட்பம் மற்றும் முதலாளித்துவத்தின் கதையாடல்கள் வழியாக பொதுப்புத்தியின் நாளங்களுக்குள் ஊடுருவி விட்டன என்பதால் நிலவரை மனிதனை வெறும் சிறப்பு கதாபாத்திர வகையாக சுருக்கிவிட முடியாது.நவீன மனிதனின் அருவருப்பான மறு பக்கத்தை ஒளிநகல் எடுப்பதால் நிலவறை மனிதன் தன்னளவிலேயே ஒரு நவீனத் தொன்மம் ஆகிறான். இந்நாவலின் தொடக்கத்திலேயே அடிக்குறிப்பில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்இக்குறிப்புகளும் இவற்றின் ஆசிரியரும் கற்பனையே.ஆயினும் இத்தகைய ஆட்கள் இருக்க முடியும் என்பது மட்டுமல்ல நம் சமூக உருவாக்கத்தின் பின்புலங்களை கருத்தில் கொண்டால் இத்தகையோர் இருந்தே ஆக வேண்டும்.’

 

பல்பிடுங்கப்பட்ட எதிர்நாயகன் வேறு யாருமில்லை இருத்தலியல் கதாநாயகன் தான்.நூற்றம்பைது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இந்தப் புத்தகம் தான் முதல் இருத்தலியல் படைப்பாகக் கருதப்படுகிறது.அதற்குப் பிறகு போன நூற்றாண்டில் எல்லா மொழிகளிலுமே இருத்தலிய வெள்ளப்பெருக்கு ஓடிமுடித்து அந்நியமாதல் என்ற வார்த்தை கிட்டத்தட்ட குடும்பச் சொற்பிரயோகமாக மாறிவிட்டது.ஆனால் இப்போது வாசிக்கும் ஒரு தீவிர வாசகனையும் பிடதியில் அடித்துக் கிடத்தும் வல்லமை கொண்டது இக்குறுநாவல்.

 

*

கூட்ஸியின் பீட்டர்ஸ்பர்க் நாயகனில் ஒரு காட்சி.தனது மனைவியின் சடலத்தின் அருகே அமர்ந்தபடி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெறிபிடித்தவாறு தாஸ்தேயெவ்ஸ்கி எழுதுவுதாக.தாஸ்தாயெவ்ஸ்கியின் இப்படைப்பு அக்காலத்திய விமர்சகர்களால் அவரது சொந்த அவஸ்தையின் வெளிப்பாடாகவும் அவரது சொந்த சரிவின் கதையாகவுமே எடுத்துக்கொள்ளப்பட்டது.அதனாலேயே அதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் தவறவிட்டனர். உண்மையில் அது போன்ற சூழலில் தான் அவர் இதை எழுதவும் செய்தார்.அவரது முதல் மனைவியும் அவருக்கு பேருதவியாய் இருந்துவந்த சகோதரனும் மரணத்தருவாயில் இருக்க அவரது வலிப்புநோயும் சூதாட்டப் பித்தும் தீவிரமான சமயத்தில் மோசமான ஒரு காதல் விவாகரத்தின் முடிவிலும் பெரும் நிதிநெருக்கடியிலும் குடும்பச்சுமையிலும் தான் இதை எழுதுகிறார்.ஆனால் யுங் சொல்வது போலஒரு கலைஞனின் வாழ்வை மட்டும் கொண்டு அவன் கலையை விளக்க முடியாது.எல்லா பெருங்கலைப்படைப்பும் கூட்டு நனவிலியில் வரவிருக்கும் மாற்றங்களை உள்ளுணர்வின் வழியாகப் புரிந்துகொள்பவையே.எனவே இது அவரைப் பற்றியது என வாசிக்கும் ஒருவர் அடிப்படையையே தவறவிடுகிறார் என்று தான் சொல்லவேண்டும்.

 

இந்நாவலில் ஒரு வரி பீட்டர்ஸ்பர்கைஉலகிலேயே அருவமான முன் தீர்மானிக்கப்பட்ட நகரம்என வர்ணிக்கிறது.மகா பீட்டரின் காலத்தின் போது சதுப்பு நிலப் பகுதி ஒன்றில்ஐரோப்பாவை நோக்கி ஒரு சாளரமாக நிர்மாணிக்கப்பட்டது பீட்டர்ஸ்பர்க் நகரம்.பழங்காலம் முதலே ரஷ்யாவின் தலைநகராய் இருந்து வந்த மாஸ்கோவோ தேசத்தின் மரபையும் தொன்மையையும் பிரதிபலிக்கும் கலாச்சார மையங்களும் பற்பல தேவாலயங்களும் நிரம்பிய இடம்.மாறாக பீட்டர்ஸ்பர்க் நவீன யுகத்தின் குறியீடாக அரசதிகாரத்தின் முகங்களான அலுவலகங்களும் புதுச்சந்தைகளும் ஒளிரும் செயற்கையான நகரம்.தாஸ்தாயெவ்ஸ்கி தன் பல படைப்புகளுக்கு இந்நகரைக் கதைக்களமாகக் கொண்டது அங்கு அவர் அதிகமாக வாழநேர்ந்தது மட்டும் காரணமாக இருக்க முடியாது.எழுந்து வந்த புதிய ரஷ்யாவின் பொருளற்ற பகட்டையும் அபரிமிதமான அசமத்துவத்தையும் அதனினும் மேலாக ஆன்மிக வறுமையையும் குறிப்புணர்த்த பீட்டர்ஸ்பர்கின் அழுக்கான தெருக்களும் இருண்ட சந்துகளும் போல வேறெந்த ரஷ்ய நகரமும் பயன்பட்டிருக்காது.மேலும் தாஸ்தாயெவ்ஸ்கியின் பீட்டர்ஸ்பர்க் உண்மையான பீட்டர்ஸ்பர்க்காகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லையே.அவது பல நாயகர்களைப் போல நிலவறை மனிதனும் பீட்டர்ஸ்பர்கின் ஒதுக்குப்புறத்தில் மலிவான அழுக்கடைந்த நாற்றமடிக்கும் இருண்ட குடியிருப்பில் வசிக்கிறான்.அவனது மொழியில் சொல்வதென்றால்மூலையில்.அவன் ஒரு அநாதையாக வளர்ந்தவன்.அவனே சொல்வது போலநண்பர்கள் எனக் கூறிக்கொள்ள யாருமில்லை அவனுக்கு குடும்பம் இல்லை காதலி இல்லை அக்கம்பக்கத்தவர் இருப்பது போல் கூடத் தெரியவில்லை. செய்து வந்த  வேலையையும் தூரத்து உறவினரின் இறப்பு மூலம் வந்த பிதிரார்ஜிதத்தின் காரணமாக ராஜினாமா செய்துவிடுகிறான்.நிதர்சனத்தில் அவன் எந்த சமூகத் தொன்மப் பாத்திரங்களையும் ஏற்கவில்லை.அவனது முதல் அடையாளமே இந்த அடையாளமின்மை தான்.சமூகக் கதையாடல்களில் பங்கேற்க முடியாததே அவனது பிரதிக்குரலின் அடிநாதத்திற்கு காரணம்.

 

இக்குறுநாவல் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.முதல் பகுதி நிலவறை மனிதனின் தற்கூற்று மொழிதலாகவே அமைந்துள்ளது.தான் யார் என்பதையும் என்ன நோயால் பீடிக்கப்பட்டுள்ளான் என்பதையும் விவரிக்கிறான். அவன் எந்தக் கருத்தியலையும் முன்வைக்கவில்லை.எந்தக் கோட்பாட்டு பள்ளியிலும் அவனைச் சேர்க்க முடியாது.அதற்கான தர்க்க ஒழுங்கும் தெளிநோக்கும் அவனுக்குக் கிடையாது.(ஒருவேளை தர்க்கத்தால் கோர்க்கப்பட்டிருந்தால் இம்முதற்பகுதி ஒரு கருத்தியல் ஆவணமாகவே எஞ்சியிருக்கும்.ஆனால் தாஸ்தாயெவ்ஸ்கியின் எந்தப் படைப்பையும் அப்படி குறுக்கிவிட முடியாது.ஏனெனில் தர்க்கத்தை விட உள்ளுணர்வின் முடுக்கங்களே அவரது புனைவின் திசையைத் தீர்மானிக்கின்றன.)அவனது தற்கூற்று முழுதுமே சிதறிய சுயமொன்றின் கொடூர உண்மைகள்.ஆயினும் இத்தகைய கொந்தளிப்பின் சிதறல்களையும் தத்தளிப்புகளையும் கருத்தில் கொண்டால் மட்டுமே நிலவறை மனிதனின் பாத்திரப்படைப்பு பூர்த்தி அடையும்.


அவனது சுய அறிமுகமே குழப்பமூட்டுவதாக உள்ளது.தனது நோயைக் குறித்து தனக்கு எல்லாம் தெரியும் என்கிறான் ஆனால் எந்த உறுப்பு பாதிப்புற்றள்ளது என்பதில் தெளிவில்லை.நோயாளி எனினும் மருத்துவரைக் காணச்செல்ல மறுக்கிறான்..வாசகனிடத்தில் பிரதானமாக அவன் பாவிப்பது நிச்சிரத்தையை.’நீங்கள் சிரித்துக்கொள்ளுங்கள் எனக்கு அதைப்பற்றி கவலையில்லைநீங்கள் என்ன வேண்டுமானாலும் எண்ணிக்கொள்ளலாம் அதைக் குறித்து எனக்கொன்றும் இல்லை இவ்வாறெல்லாம் கூறியவன் தான் உங்களுக்காக எழுதவில்லை என்கிறான்.தன்னைக் குணப்படுத்திக் கொள்ளவே பேசுவதாக சொல்கிறான்.ஆயினும் மீண்டும் மீண்டும் வாசகரை நோக்கிஜெண்டில் மேன் எனத் தேய்வழக்கில் பேச்சைத் துவங்குகிறான்.இந்த விதமான பொருட்டின்மை(Indifference) நிலவறை மனிதனின் ஆதார குணாம்சம்.இதற்கு காரணமாக அவன் ஓரிடத்தில் கூறுகிறான்:’.பீட்டர்ஸ்பர்கின் வானிலை என் உடல்நிலைக்குப் பாதகமானது.ஆனாலும் நான் பீட்டர்ஸ்பர்க்கை விட்டு வெளியேற மாட்டேன் - ..நான் வெளியேறினாலும் வெளியேறாவிட்டாலும் அது ஒரு பொருட்டே இல்லை.அப்படியானால் அந்நகரின் பொருட்டின்மையே அவனையும் தொற்றியுள்ளது எனலாம்.பொருட்டின்மை என்பது முகமூடி தான்.உள்ளே இருப்பதோ வெறுப்பு.செல்ல இடமில்லாத போது அவ்வெறுப்பு தன் மீதே பாய்ந்துகொள்கிறது.எதுவும் இல்லாத இடத்தில் வெறுப்பு  குடியேறும் என்பது தாஸ்தாயெவ்ஸ்கியின் கண்டுபிடிப்புகளில் ஒன்று.தனது நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிந்தும் அவன் மருத்துவரிடம் செல்லாததுவெறுப்பினால் தான் என்கிறான்.ஆனால் மருத்துவரை அணுகாததால் அவன் தண்டித்துக் கொள்வது தன்னையே தான்.அதீத கூருணர்ச்சி, சுய-அழிவு மனோபாவத்திற்கு இட்டுச்செல்லும் இடம் தாஸ்தாயெவ்ஸ்கி தவறவிட விரும்பாத ஓரிடம்.என்பதால் தனது எதிர்நாயகனை, இழப்பதற்கு ஏதுமற்ற தற்கொலை படையினரில் ஒருவராகவே பேச வைத்திருக்கிறார்.

 

நிலவறை மனிதன் தன்னைப் பீடித்துள்ள நோயாகக் கருதுவது அதீத பிரக்ஞையை.ஓரிடத்தில் பிரக்ஞையே பிணி தான் என்கிறான்.இந்த அதீத பிரக்ஞை காரணமாக அவனுக்கு எதார்தத்தில் உள்ள முரண்களும் விரிசல்களும் சட்டென கண்ணில் படுகின்றன.அதை விட மோசமாக தன் உள்ளே மொய்க்கும் எதிர்வுகள் மற்றும் பிறழ்வுகளில் இருந்து பார்வையை அகற்ற முடிவதில்லை.இவ்விதத்தில் ஒவ்வொரு பொருண்மையும் தருணமும் தனக்கெதிரான கூறைக் தன்னுள்ளேயே கொண்டுள்ளதை காணமுடிகிறது அவனால்.இதனால் முன்னிற்கும் தேர்வுகள் ஒன்றை ஒன்று தாமே நிராகரித்து அவனது செயல்பாட்டை ரத்து செய்து முடிக்கிறது.ஒவ்வொரு செயலுக்கு முன்னும் அவன் அதற்கான தடைகளையும் அதிலுள்ள அற்பத்தனத்தையும் காண்கிறான்.எனவே ஒவ்வொரு செயலில் இருந்தும் பின்வாங்குகிறான். ஒவ்வொரு கணத்திலும் உள்ள எதிர்சாத்தியங்களின் புலத்தோற்றம் முடமாக்குகிறது அவனை