Sunday, June 29, 2014

”உயிர் எழுத்து” முதல் 12 இதழ்கள்



விமர்சனக் கட்டுரை

மேலும் ஒரு சாளரம்




                                                           சிற்றிதழ்களுக்கு இன்றுள்ளதுபோலப் பரவலான கவனம் இல்லாத நேரங்களில், இதழ் தபாலில் வரும் நாளுக்காக, அவற்றின் தோற்றம் மற்றும் உள்ளடகத்தின் வகை மாதிரிகளை மனத்தில் கற்பனைசெய்தபடி காத்திருந்தது ஒரு காலம். பிறகு, காலம் உருமாறி வழவழப்பான முன்னட்டைகளோடு கடைகளில் தொங்கும் அளவிற்கு இவ்விதழ்கள் மெல்ல, ஆனால், பலமான வாசக கவனம் பெறத் துவங்கின. இந்த வளர்ச்சியினூடாகவே இன்று பத்துக்கும் குறைவில்லாத சிற்றிதழ்கள் (மாதந்தோறும்) வெளிவருகின்றன. இலக்கியத்தை ஆத்மார்த்தமான ஒன்றாக கருதும்  ஆசிரியர் குழுக்களால் இவை இதழுருப் பெறுகின்றன. முன்னர் எழுத்தாளனுக்கிருந்த பிரசுரம் சார்ந்த தயக்கங்கள், தடைகள் அனைத்தும் இன்று ஒன்றுமேயில்லால் ஆகிவிட்டன. இச்சூழலில் விழிபிதுங்கி நிற்பவன் வாசகன். சகலத்தையும் வாசித்து முடிக்கும் முன்னரே காலண்டரில் தேதிகள் பறக்கும் வேகத்தில் அடுத்த மாதத்தின் முதற்கிழமை தலைநீட்டிவிடுகிறது. பேச்சினிடையே நாஞ்சில் நாடன் ஒருமுறை, "வாங்குற புஸ்தகத்தையெல்லாம் படிக்கணும்னு ஆசைப்படறது ஒரு வகையில சாகாவாரம் கேட்கற மாதிரி" என்றது நினைவுக்குவருகிறது. இத்தருணத்தில் உயிர் எழுத்து பன்னிரெண்டு இதழ்கள் வெளியாகி ஓராண்டுக் காலத்தை நிறைவுசெய்திருக்கிறது.








                                                            ஏற்கனவே வழங்கிவந்து நிலைபெற்றிருக்கும் உள்ளடக்கத்தோடே இதழ்கள் அமையப்பெற்றிருப்பினும் அவற்றின் வடிவமைப்பு நேர்த்தியைக் குறிப்பிட்டுக் கூறத்தோன்றுகிறது. குறைந்தபட்சம் நான்கு சிறுகதைகளின்றி இதழ் வெளியாவதில்லை. மிகக் குறைந்த இடைவெளியில் நாற்பதுக்கும் மேற்பட்ட கதைகளைப் பிரசுரித்திருப்பதை ஒரு சாதனை எனத் தயக்கமின்றிக் கூறலாம். இவற்றில் பலவும் பல்வேறு பின்னணிகளையுடைய புதிய எழுத்தாளர்களுடையவை. சிறுகதைகளும் கவிதைகளும் தேக்கமுற்று அவற்றில் ஒருவித மந்தத்தன்மை நிலவுவதாகவே விமர்சகர்கள் பலரும் கருதுகிறார்கள். இக்கூற்றில் ஓரளவுக்கேணும் உண்மையுள்ளது. படைப்பிலக்கியத்தில் தன்னுடைய எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டிவிட்ட செயலாகவே இவையுள்ளன. நவீனத் தமிழ்ச் சிறுகதையில் உச்சபட்ச சாதனைகள் நிகழ்த்தப்பட்டுவிட்டன. எதன் பொருட்டும் அழியாச் சுவடுகளை அவை விட்டுச் சென்றிருக்கின்றன. அதனை எதிர்கொண்டு எழுதுவது இன்றைய எழுத்தாளனின் திறன் சார்ந்தது. இன்றைய எழுத்தாளன் கதையின் எல்லைகளைத் தன் பேனாவின் நிழலுக்குள்ளாகவே வைத்துக்கொள்கிறான். அவனது சுயபிரக்ஞையின் கடிவாளம் பூட்டப்பட்டு அவனது விரலசைப்புகளின் திசையில் கதையைச் செலுத்துகிறான். கதைகளின் முடிவற்ற பெருவெளியில் பாத்திரங்களைத் தன்னியல்பாக அவற்றிற்கேயுரிய சுதந்திரத்துடன் புழங்கவிட்டு, ஒரு நுட்பமான கணத்தில் தன் ஆளுமையால் அதைக் கலைப்படைப்பாக மாற்றும் வல்லமை கொண்ட படைப்பாளியின் ஆக்கங்கள் மூலமே வாசகன் புத்தொளி பெற்று விகாசம் அடைய இயலும். நன்கறியப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளுடன் இளந்தலைமுறையினரின் கதைகளும் வெளியாகியிருப்பினுங்கூட இவ்விரு தலைமுறையினரின் கதைகளிலும் நுட்பமானதும் நுட்பத்தைத் தவறவிட்டுப் பலவீனங்கொண்டவையுமான கதைகளைக் காண முடிகிறது. குறிப்பிட்டுக் கூறும்படியான கதைகளைக் கூற இயன்றாலும் ஆகச்சிறந்த கதைகள் எனச் சுட்ட இவற்றில் ஏதுமில்லை. ஆனால், சோடைபோகக்கூடிய சிறுகதை எதையுமே உயிர் எழுத்து வெளியிடவில்லை. காலத்தால் முன்னகரக்கூடிய எதுவும் - படைப்பும் படைப்பாளியும் ஆரம்ப காலத் திணறல்களைச் சந்தித்தே ஆக வேண்டும். பின் அது அவற்றிலிருந்து சிறுகச்சிறுகக் கற்றுத் தன்னை மேம்படுத்திக்கொண்டு வந்திருப்பதை முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் தொடக்ககால எழுத்துக்களைக் காணும்போது இந்த உண்மை புலப்படும்.




                                                             எழுதத் தொடங்கும் பலரும் கைவைக்கும் முதல் இடம் கவிதை. அதனாலேயே அவற்றின் நெரிசல் தமிழில் மிக அதிகம். மேலோட்டமானவை, புழக்கத்திலிருப்பதை நகல் செய்தவை, ஒருவித இயந்திரத்தனமாக சொற்சேர்க்கைகள் கொண்டவையே பெரும்பாலும் வெளிவருகின்றன. விதிவிலக்குகள் அபூர்வமாகவே நிகழ்கின்றன. சொற்களை அதன் பழைய அர்த்த கூண்டுகளிலிருந்து வெளியேற்றி அதற்கு சிறகுகளை தருபவன் கவிஞன். எனவே தான் வாசித்த ஏதேனும் ஒரு கவிதையின் வரி பல நாட்களுக்குப் பின்னும் தந்திக் கருவியின் நரம்பொன்றைச் சுண்டியது போன்ற ரீங்காரத்தை மனத்தில் எழுப்புகிறது. கவிதைக்கு அழகு அல்லது கவிதையைக் காலத்தால் அழியாது நிற்கச் செய்யும் வலிமை அதன் படிமங்கள், உருவங்கள், உவமைகளுக்கு உண்டு என்ற நம்பிக்கையை இன்றைய கவிகளும் தொடர் கிறார்கள் என்பதுபோல இவ்விதழ்களில் வெளியான கவிதைகள் உள்ளன. இவ்விதழ்களில் உள்ள பல கவிதைகளின் சராசரித்தனம் சலிப்பை உருவாக்குகிறது. ஆனால், சில கவிதைகள் கொண்டுள்ள அழகுணர்ச்சி திடுமெனப் பரவசப்படுத்தவும் தவறுவதில்லை. "அழகுணர்ச்சியில்லாத ஒருத்தன் எழுத்தாளன் ஆகறதுக்கு வாய்ப்பேயில்லை" எனப் புன்னகைத்தபடியே சு. ரா. ஒருமுறை கூறியது நினைவில் அலைகிறது. பல புதிய கவிஞர்கள் உயிர் எழுத்து மூலமே நவீன இலக்கியத்திற்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். முதல் முயற்சி எனும் நோக்கில் சில குறைகள், சொற்களைக் கையாளுவதில் நேரும் குழப்பங்கள் தவிர்க்க முடியாதவை. தொடர்ந்து எழுதி எழுதியே ஒருவர் தனக்கான பாதையைக் கண்டடைய முடியும்.



                                                                        முன்பிருந்தே எழுதி வந்திருப்பவர்களது கட்டுரைகளே இவற்றிலும் உள்ளன. புதிய கட்டுரையாளரைத் தேடிக் காண்பது அரிது. சூழலில் கவிஞர்களின் மொத்த எண்ணிக்கையில் ஐந்து சதவீதம்கூட இருக்கமாட்டார்கள் எனத் தோன்றுகிறது. விரிவான, அடிப்படைத் தரவுகளைக் கொண்ட எஸ். வி. ராஜதுரையின் கட்டுரைகள் மேலான பங்களிப்பை இவ்விதழ்களுக்கு வழங்குகின்றன. எனினும், ஒரு படைப்பை அவர் எடுத்துப் பேசும்போதுகூட அதன் கலை மதிப்பு குறித்த அவதானிப்புளைக் காட்டிலும் அவற்றின் அரசியல் சமூகம் சார் பக்கங்களைப் பற்றியே தீவிரமாக உரையாடுகிறார். (ஜோஸ் ஸரமாகோ, கூகி வா தியாங்கோ குறித்த கட்டுரைகள்). பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் அதன் பதிப்பு சார்ந்த ஆராய்ச்சிகளில் தன் கடும் உழைப்பைச் செலுத்திவருபவர் பெருமாள்முருகன். இத்துறை சார்ந்து இனிப் பயின்று வரும் புதிய தலைமுறைக்கு அவர் இவ்விதழ்களில் எழுதியுள்ள கட்டுரைகள் ஒரு ஆவணமாக மாறக்கூடும். மிகையான புகழாரங்களால் தூக்கப்பட்ட சுஜாதாவின் பிம்பத்தை முருகேசபாண்டியனின் கட்டுரை கேள்விக்குட்படுத்துகிறது. அவர் தன் கட்டுரைகளைச் சாதாரண மொழி நடையில் கூறிச்செல்வது ஒரு குறையாகவே சுட்டத் தோன்றுகிறது. கி.ரா. குறித்த சு.வேணுகோபாலுடைய கட்டுரையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். உயிர் எழுத்து இதழ்களில் வெளியான ஆக்கங்களில் ஆகப் பெரிய பலம் கொண்டவை கட்டுரைகள்தாம் என்று படுகிறது.




                                                                       நிகழ்த்துகலையாக இருப்பதனாலேயே இதழ்களில் போதியளவு இடந்தரப்படாத ஒரு கலைவடிவம் நாடகம். ஆனால், இரண்டு நாடகங்களை உயிர் எழுத்து பிரசுரித்திருக்கிறது. பிரதி உருவாக்கும் காட்சியை எவ்வளவுதான் தனது கற்பனையின் வழியாக வாசிப்பவன் அடைய முயன்றாலும் அதன் நுட்பமான ஒளி, ஒலி மாறுபாடுகள் மற்றும் நடிகனின் உடல்மொழியில் அது உருவாக்க முயலும் தீவிரத்தை வாசகன் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்துசென்று தொட முடியாது. பார்வையாளனின் நுட்பத்தைக் கோருவதுபோல முருகபூபதியின் நாடகப்பிரதி இருக்கிறது.

                                                                     மேலும் ஒரு சாளரம் திறந்ததுபோல ஓராண்டு உயிர் எழுத்துச் செயல்பாடுகள் உள்ளன. புதியவர்களுக்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததையும் அவர்கள் இலக்கியத்திற்குள் நுழையத் தடையற்ற வெளியை உருவாக்கியதையும் உயிர் எழுத்தின் முக்கியச் செயல்பாடாகக் கூறலாம். இருந்தபோதிலும்கூட அவை பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கும் படைப்புகளில் கூடுதல் அக்கறையும் கவனமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், பயணங்களின் முக்கியத்துவத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல அவை பாதைகளில் உருவாக்கவிருக்கும் மாற்றங்களும் பாதிப்புகளும்.


(நன்றி - காலச்சுவடு ஆகஸ்ட் 2008)




No comments:

Post a Comment