Thursday, October 26, 2023

பதில்


பதில்


                                                                                   

அம்மாவை இழுத்து அருகில் உட்கார வைத்துக் கொண்டு முன்சீட்டின் கம்பியைப்பற்றி பாதி எழுந்து நின்று வனிதாவுக்கும்  குழந்தைகளுக்கும் இடம் கிடைத்து விட்டதா என்று பார்த்தான். அம்மாவை அவளுக்கருகில் விட்டிருந்தால்! உள்ளே நடுங்கமெடுத்து அடங்கியதுவனிதா மூன்றாமவளுக்கு அரைடிக்கெட் எடுக்கத் தோதாக மடியில் கிடத்தியிருப்பது தெரிந்தது. ஜன்னல் அருகில் அமர மூத்தவளுக்கும் இரண்டாமவளுக்கும் வாக்குவாதம் முற்றி நகத்தால் பிராண்டியும் கிள்ளி வைத்தும் வழக்கமான ரகளையைத் தொடங்கியிருந்தனர். மூன்றாமவள் மடியிலிருந்து நழுவி இன்ஜின் அருகில் கம்பி போல நீண்டிருப்பது என்ன எனச் சோதிக்க  வழுக்கி, இறங்க கை கால்களை உதறி அடம் பிடித்தாள். கூட்டம் நெரிபட்டுக் கொண்டிருந்தது. புழுக்கம் வேறு. யாருக்கு விழுகிறது என்பது தெரியாமல் மாறி மாறி மூவரையும் விளாசினாள். எவ்வளவு அடி வாங்கினாலும் முதலாவது  அழுதால் சத்தமே வராது. இரண்டாவது நேர் மாற்றி. கிடைப்பதையெல்லாம் எறியும். இப்போது கையிலிருந்த பிஸ்கட்டை கோபத்துடன் வெளியே வீசிற்றுகீழே மணிக்கட்டைத் திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிந்த கண்டக்டர் பீடி இழுத்தபடி நிற்கும் டிரைவரிடம் ஜாடை காட்டினான். அவன் ஏறியதும் வீசிய பீடி நாற்றத்தால் முகத்தை வெடுக்கென்று வனிதா சுளித்தபடி திரும்பினாள்அன்னாச்சிப் பழத் துண்டுகளை மகனும் அம்மாவும் தின்று கொண்டிருப்பது ஆட்களுக்கிடையே தெரிந்த சிறுசந்து வழியாகத் தெரிந்தது. அவன் தண்ணீர்புட்டியின் மூடியைத் திருகித் தயாராக வைத்திருந்தைக் கண்ட எரிச்சலில் மடியிலிருந்து மீண்டும் நழுவியவதற்கு அடி விழுந்தது.


குழந்தைகளின் கத்தல் கேட்டதுமே அவ்வளவு கூட்டமும் இரைச்சலுடன் மோதி நிற்பதை மறந்துஅடியேய்கொன்னுகின்னு போடாதவலத்தியிருக்கறா பாரு.. த்தூ..நானுந்தான் பெத்தேன்.. உட்காருனா உக்காரோணும்..கொண்டுட்டு வான்னா வெட்டிக்கிட்டு வரோணும்..’ என்றாள்.


வீடாக இருந்தால் நிலைமை கட்டுக்கடங்காமல் போயிருக்கும். நல்லவேளை வனிதாவுக்கு கேட்கவில்லை என நினைத்து கிருஷ்ணன் அம்மாவின் கையை அழுத்திசும்மா இரு…’ என இறைஞ்சும் குரலில் கெஞ்சினான்.


ஆமாஎன்னிய அடக்குஅவள ம்-ன்னு ஒரு வார்த்தை கேட்ராதபொண்டாட்டி பொச்சுக்கு பின்னாலயே திரிஞ்சுக்கிட்டிரு..’ அங்கேயே பஸ்ஸை நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொள்ளலாமா என்று தோன்றியது. அருகிலிருந்தவர்களின் நமட்டுச் சிரிப்புகள் உயிரையே பிடுங்குவது போலிருந்தன. பீறிட்டு வந்த காற்று முகத்தில் அறைந்ததும் சட்டையின் மேல் பட்டனை கழற்றி விட்டுக் கால்களைத் தளர்த்தி இவை ஏதும் கேட்காத இடத்திற்கு போய்விட நினைத்தவன் போல கண்களை மூடிக் கொண்டான்.


பொத்தென மடியின் மேல் எதுவே விழுவது போலிருந்தது. வனிதா மூன்றாமவளைக் கூட்டத்தை விலக்கி ஒற்றைக் கையாலேயே தூக்கி வந்து அவன் மேல் போட்டிருந்தாள். நெற்றியெங்கும் ஊறிய வியர்வையில் முடிகள் ஒட்டிக் கொண்டிருந்ததும்  பொட்டு சற்றே அழிந்திருந்ததும் அவளுக்கு விளக்க முடியாத அழகைத் தந்திருந்தன. சிரித்தபடியே ஜாடை காட்டுவதற்குள் அம்மாவின் காதருகே குனிந்துமூடிட்டு வாஒன்ர பவுசையெல்லாம் ரோட்ல இழுத்து வுட்டுப் போடுவன்..’ என்ற பிறகு அவனை முறைத்தபடியே முன்னால் சென்றாள்.


பயந்து மறுபடியும் சுற்றிலும் பார்த்தான். அம்மா கண் விழித்துஎன்ன சொன்னாஇப்ப வந்து என்னமோ சொன்னாளே..மூடு கீடுன்னு…’ எனச் சண்டை போய்விடுமோ எனத் துழாவினாள். இந்த வயதிலும் காது என்னவொரு துல்லியம். அதிலும் மல்லுக்கட்ட என்றால் எப்படி தான் கேட்குமோ..! ஸ்ஸப்பா..  இப்போது சரியாக கேட்கவில்லை போலநல்லவேளை.. தூங்கி விட்டாளா! ’ஒன்னுமில்லை. உன்ற வாயில போயிறப் போகுது. மூடித் தூங்கச் சொல்லுங்கனுட்டு போறா..’என்றான். சமாளித்து விட்டோம் என்ற நிம்மதி.


என்ற வாயில என்ன யானை கூட போகும் உனக்கென்னடீ…’ என மீண்டும்  சத்தம் போட்டாள். ஹாரன் ஒலி அதை அமுக்கியது. டிரைவர் திரும்பி பார்த்து விட்டு கியரை மாற்றினார்.


இந்த எட்டு வருடங்களில் வனிதா சீராடி சென்றவையனைத்துமே அம்மாவின் ஏச்சுகளை பொறுக்க முடியாமல் தான். சமாதானப்படுத்திக் கூட்டி வந்தாலும் சில தினங்கள் மட்டும் அமைதி நிலவும். பிறகு அம்மாவே அவளை வைவது போலபழைய குருடி கதவைத் திறடி..’ கதை தான். கடிந்து பேசினால் தெருவிலுள்ள வீடெங்கும் போய் அமர்ந்து அவனை வளர்த்து ஆளாக்கினக் கதையை அழுகையினிடையே ஒப்பாரி போல இழுத்து இழுத்து பேசிக் கொண்டிருப்பாள். ஐந்து வயதில் முண்டச்சியாக நல்லது கெட்டதுக்கு போகாமல் ஆலும் பாலும் தின்னாமல் ஆளாக்கின அதே கதை. செல்போனில் சொந்தங்களுக்கெல்லாம் அழைத்து இப்படி ஆகிப் போனேனே என பிலாக்கணம் வைப்பாள். வாய் தான் அவளை வாழ வைத்தது. வெவ்வேறு ஊர்களின் சந்தையில் அந்த வாயால் தான் வியாபாரம் பிடித்தாள். ஒரே மகனை கால்களுக்கிடையில் சொறுகி வைத்துக் கொள்வாள். வனிதாவின் வீட்டில் சொன்ன நகையை விட இரண்டு பவுன் குறைவாகச் செய்ததிலிருந்து தொடங்கியது. ஆனால் இவ்வளவு சண்டைகளுக்கிடையிலும் வீட்டில் அவள் வேலைகளை சேலையை கால் முட்டி வரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நொட்டை சொன்னவாறே பாதி செய்து தருவதும் இதே அம்மா தான். அரசு பேருந்தில் நடத்துனருக்கு ஆள் எடுக்கிறார்கள் என்றதும் அலைந்து திரிந்து விசாரித்து வந்து ஐந்து லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள் எனச் சொன்னான். மறு பேச்சே இல்லாமல் எங்கோ வாங்கிப் போட்டிருந்த இடத்தை விற்று அந்த வேலை கைக்கு வர ஏற்பாடு செய்தாள். ஆனால் வேலை முடிந்து வந்தால் வீடு நரகம் போலிருக்கும். சட்டை கழற்றுவதற்குள் புகார் படலம் ஆரம்பம் ஆகும். பல சமயம் பாதிச் சோற்றிலேயே எழுந்து போனதுமுண்டு. உடன் வண்டி ஓட்டுபவரிடம் புலம்பிய போது


ரெண்டு பக்கமும் சரின்னு கேட்டுக்கோ..காது கேட்கலைன்னு நினைச்சுக்கோ..யாருக்காவது சப்போர்ட் பண்ணிட்டேன்னா அவ்லோ தான். குடும்பத்தை ஓட்டறதுன்னா பஸ்ல டிக்கெட் கொடுக்கற மாரி சுளுவுன்னு நினைச்சுட்டயா...அம்மாவ அதட்டுனாலும் போச்சாது. ஆனா கட்டுனவகிட்ட ரொம்ப மொரண்டு பேசிறாதேஅப்பறம் ராத்திரி கையை போட்டா வெடுக்குன்னு தட்டி வுட்ருவா..’ எனக் கூறிச் சிரித்த பிறகு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டுஎன்னயெல்லாம் போர்வை கால்ல சிக்கிருச்சுன்னு சொல்லியே எவ்ளோ தடவை ஒதைச்சிருக்கான்னு தெரியுமா..அப்பறம் நானும் தெரியாதவன் மாரி அவள இந்த பக்கம் புடுச்சு இழுத்து ஆக வேண்டிய சோலிய பாக்கறது தான்..’ எனக்  கண்ணடித்தார்.




அதையும் செய்து பார்த்தாகிவிட்டது. ஆனால் இரண்டில் ஒன்று நெருப்பாக இருந்தால் நீர் தெளிக்கலாம். ஆனால் கச்சை கட்டிய சேவல் போல கொக்கரித்து கொத்த திரிந்தால்!  வீட்டிற்கே போகாமல் ஊரே உறங்கிய பின் கதவை தட்ட வேண்டியது தான். இதில் கசந்து ஏதேனும் சொல்லி விட்டால் அவ்வப்போது கோபித்துக் கொண்டு அம்மா கோவில் வாசலில் எதிர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொள்வாள். காலில் விழாக்குறையாகக் கூட்டிக் கொண்டு வர வேண்டும். உறவினர் வீடுகளில் விட்டு வந்தால் இரண்டாவது நாளே பையோடு வீட்டில் உட்கார்ந்திருப்பாள். ஒரு சொல்லும் தாளாதவள். ஏதோ சொல்லிவிட்டாள் என்பதற்காக சொந்த தங்கையிடம் பேச்சை மட்டுமல்ல உறவையே முறித்துக் கொண்டவள்.


இரண்டு பெண் பிள்ளைகளையடுத்து மூன்றாவதைச் சுமந்த போது அச்சம் கிருஷ்ணனின் ஒவ்வொரு மயிர்காலிலும் ஊடுருவியது. இதுவும் பெண்ணாக இருந்தால்! வனிதாவுக்கு அதை நினைக்கவே முடியவில்லை. நித்தமும் சொல்லாலேயே சாகடித்து விடுவாள். கலைத்து விடலாம் எனக் கெஞ்சினாள். அவன் இருவரது ஜாதகத்தையும் தூக்கிக் கொண்டு போனான்.


பையனா இருந்தா அப்பன் உசுருக்கு ஆபத்து. பொண்ணுனா ஐஸ்வரியம் தான். ..’ என்றார். பிறகு அதை எப்படி தன்னால் கேட்க முடிந்தது என திகைக்கக் கூடியதை அவனையறியாமலேயே கேட்டு விட்டான், ‘அம்மாக்கு அப்பப்போ ஒடம்புக்கு கேடு வந்திருது(பொய்)..ஆஸ்பத்திரி செலவு வேற ஆகிட்டே இருக்கு(மாபெரும் பொய்)..’ என்றதும் மனது ஆயத்தமாகிவிட்டதை உணர்ந்தான். பிறகு மெல்லஆயுசு எப்படி?’ என இழுத்தான்.


ஒடம்புக்காஅப்படியொன்னும் தெரியலையேஇன்னும் பத்து பதினைஞ்சு வருஷம் கின்னு இருப்பாங்க. பேரன் பேத்தி பாத்துட்டு தான் கண்ணை மூடுற யோகம்..’


அவன் ஏதும் பேசாமல் எழுந்து வந்தான். பெண் பிறந்து இல்லாத சண்டைகளெல்லாம் நடந்தாகிவிட்டது. அதன் பிறகு தான் அவனுக்கு அரசு வேலையும் வாய்த்தது. அதை சொன்ன போது கொஞ்சம் சமாதானம் ஆகி விட்டாள் என்று பட்டது. இந்த அலங்கோல வாழ்க்கையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதொன்றே அவனது முதற் கவலை. பேருந்துகளில் மருமகள்களின் அருகில் அமர்ந்து பேசியபடியே வரும் மாமியார்களைப் பார்த்தால் அவர்களுக்கு டிக்கெட் கொடுக்கக் கூட மனது வராது. ஆசையுடன் பார்த்துக் கொண்டே நிற்பான்.


சென்ற வாரம் நடந்த ரகளையில் தெருவே வீட்டின் முன் திரண்டு விட்டது. பல மாதங்கள் யோசித்து வைத்திருந்ததை , தயங்கிக் கொண்டிருந்ததை செய்வதைத் தவிர வேறு வழியேயில்லை. ஒவ்வொரு முறையும் அத்திட்டம் மனதில் வரும் போது உடம்பே நடுங்கும். அம்மாவின் மேல் அளப்பரிய அன்பும் பற்றுதலும் ஏற்பட்டுவிடும். எனவே உடனடியாக விட்டு விடுவான்.

-----------------------------


தை மாத கிருத்திகையில் பழனியே குலுங்கிக் கொண்டிருந்தது.  பேருந்திலிருந்து இறங்கியதும் மடியில் முடிந்து வைத்திருந்த அன்னாசித் துண்டை மூத்தவளைத் தேடிப் பிடித்துக் கொடுத்தாள். வாங்காமல் சினுங்கியதும் கன்னத்தை இடித்துகாத்துல போற மாரி இருக்கற..அதையும் இதையும் தின்னா தான ஓடி ஆடி வெளையாட முடியும். ‘ என வாய்க்குள் வைத்துத் தினித்தாள். துப்பினால் என்ன நடக்கும் என்பது தெரியும். எனவே மென்று விழுங்கினாள். வனிதா கண்டுகொள்ளாமல் கூட்டத்தை விலக்கி போய்க் கொண்டிருந்தாள்.


மனித சமுத்திரத்தில் கால் வைக்கக்கூட இடமின்றி தவித்துக் கொண்டிருந்தனர். தீர்த்தக் குடங்கள், காவடிகள், பாத யாத்திரைக்காரர்களின் நெரிசல், அரோகரா கோஷங்கள்.  அம்மாஇங்கேயே இருக்கறன். நீங்க போய்ட்டு வாங்க..’ என குதிரை வண்டிகள் நிறுத்தியிருந்த இடத்திலிருந்த நிழலில் உட்கார போனாள். அவன் வின்ச் இருக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றான். அலை அலையாக ஆட்கள் நின்று கொண்டிருந்தனர். கூச்சல்கள், சண்டைகள், வசவுகளின் திருவிழாவாக இருந்தது. மூன்று மணி நேரத்திற்கு பின் மேலே சென்று முடித்து வருவதற்குள் பொழுதே போய்விட்டது. அங்கும் கூட அவனுக்குள் ஊசலாட்டம் இருந்து கொண்டு தான் இருந்தது. மை தீட்டிய, முத்துகள் கட்டிய கொலுசுடன் ஓட முயன்ற குழந்தையைப் பார்த்துபுள்ளய புடிங்க..’ என வனிதா கத்தினாள். அக்குழந்தையின் அம்மாபுள்ள இல்லபையன் தான்..’ என பெருமையோடு தூக்கி மேலே போட்டுக் கொண்டாள். கிழவிக்குக் கேட்டிருக்கக் கூடாதே முருகாஎன இருவரும் மனதிற்குள் வேண்டுவதற்குள், ‘அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்..சும்மா நானும் தண்டமா பொறந்துட்டன்னா ஆச்சா..’ என வெடுக்கென கேட்டாள். நரகத்திலிருப்பவள் சிரிப்பது போல பிறரை பார்த்து வனிதா பற்களைக் காட்டினாள். ஆனால் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது. பெண் பிள்ளை என்றில்லை மூன்றுமே பையன்களாக இருந்திருந்தாலும் அம்மாவின் குணம் இப்படியே தான் இருந்திருக்கும், அதை உறவினர் வீடுகளில் அவள் நடந்து கொண்ட முறையை வைத்து தெரிந்து கொண்டனர்.





தரிசனம் முடித்து வெளியே வந்ததும் அம்மா தன் கையிலிருந்த திருநீரை முருகனை வணங்கி ஒவ்வொருவருக்கும் பூசி விட்டாள். வனிதாவுக்கு பூசும் போது பிராத்தனைகள் பலமாக இருந்திருக்கும் போல. சில நிமிடங்கள் பிடித்தன. ‘போதும் அத்தைஎன்ற போது அவளுக்கு நாக்கு தளுதளுத்துக் கொண்டது. இறங்குவதற்குள் அதே நாக்கால் மனதிற்குள் திட்டும்படி அம்மா நடந்து கொண்டாள்.


பசியால் பிள்ளைகள் துவண்டு போயிருந்தன. அடிவாரத்தில் சுமாராக இருந்த ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பேருந்து நிறுத்தத்திற்கு ஆட்டோ பிடித்தான். முன்னதில் வனிதாவையும் குழந்தைகளையும் அனுப்பி விட்டு அடுத்த ஆட்டோவுக்கு கை காட்டுவதற்குள் கட்டணக் கழிப்பிடம் நோக்கி அம்மா செல்வதை பார்த்தான். இதை விட்டால் இனி அமையாது என நினைத்தவனாகத் தனியாக ஆட்டோவில் ஏறினான். திரும்பி போய் கூப்பிட்டுக் கொள்ளலாமா என்கிற ஊசலாட்டம் அவனை அலைகழித்தது. ஆனால் போதும் என கண்களை மூடிக் கொண்டான். தேம்பி தேம்பி அழுபவனை ஆட்டோக்காரன் ஏதும் கேட்கவில்லை.


அவன் வந்து சேரக் கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இறங்கியதும் வனிதா கேட்டவைகளுக்கு பதிலே சொல்லவில்லை. பேருந்துகளில் இடமேயில்லை. இப்போது அம்மா என்ன செய்து கொண்டிருப்பாள் என ஓடும் எண்ணத்தை அறுத்தெறிந்தான். மெதுவாக வனிதாவுக்கு புரிவது போலப் பட்டது. அவள் பையை அங்கேயே வீசி எறிந்து,


‘படுபாவி..என்னத்த பண்ணி வைச்சுருக்க...வூட்டுக்கு பெரிய மனுஷி இல்லாம இதுகள எப்படி வளத்தறது..? நான் கட்டியிருக்கற சேலை உன்ற அம்மா வாங்கிக் கொடுத்தது தான். இதா மூணுகளும் மொட்டை அடிச்சு காது குத்தறதுக்கு பணம் போட்டு வைச்சுக்கறா அந்த கிழவி..போன வாரம் தான் சொல்லிக்கிட்டு கிடந்தா...எப்படி ஒனக்கு மனசு வந்துச்சு..எங்கயா இருந்தாலும் கூட்டிக் கொண்டாந்து நிறுத்துனா தான் இடத்தை வுட்டு நகருவேன்..எனப் பேசிக் கொண்டே போனாள்.


அவளும் குழந்தைகளை இழுத்துக் கொண்டு அவனுடன் தொத்தியபடியே திரும்பவும் அடிவாரத்துக்கு வந்தாள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கூட்டம் மோதிக்கொண்டே இருந்தது. அரைமணி நேரம் கழித்து வின்ச் உள்ள இடத்திற்கு அருகே கால் நீட்டி கண்ணீருடன் அம்மா அமர்ந்திருப்பதைப் பார்த்தான்.


போலீஸ்காரன் அவனைக் கண்டதும்எங்க போனப்பாதேடு தேடுன்னு தேடி துடிச்சு போயிருச்சுப்பா இந்த அம்மா..நான் தான் கூப்புட்டு உட்கார வைச்சிருக்கறன்..’ என்றதும் அவரை நோக்கிக் கை கூப்பினான்.


அம்மா வருவாளா என்கிற திகில். ஆனால் கையைப் பற்றி எழுந்துபோலாம்..’ என்றபடியே அருகில் வந்ததும்ஒனக்கு பாரமா போயிட்டனா சாமி..’ என்றாள். அவனது சமாதானங்கள் பொய்கள் எதுவும் அவள் காதில் ஏறவேயில்லை.


வீடு சேரும் வரை ஒருவரும் பேசிக் கொள்ளவுமில்லை. பதற்றத்தில் ஓயாமல் அவன் தான் பேசிக் கொண்டே இருந்தான். குழந்தைகள் சோர்ந்து தூங்கி விட்டிருந்தன. வழக்கமாக அம்மாவின் அருகில் படுக்கும் இரண்டாமவள் கூட அவர்களுடனேயே உறங்கி விட்டாள். அவனும் வனிதாவும் உறங்கவேயில்லை. பட்டென்று விளக்கு போடுவது தெரிந்தது.  அங்கே உறங்கிக் கொண்டிருந்தவர்களை பார்த்துக் கொண்டே அம்மா நிற்பதை போர்வையின் துளை வழியே பார்த்தான். அணைக்கப்பட்டதும் கண் மூடினான்.


காலையில் அவனே அம்மாவுக்கு காப்பி எடுத்துக் கொண்டு கதவைத் திறந்தான். உறங்குகிறாள் போலும். தொட்டு எழுப்பினான். அம்மாவின் உடல் குளிர்ந்து கிடந்தது.

(என் ‘விருந்து’ கதைத்தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது)