Tuesday, November 9, 2021

இருள் நிறைந்த வீடு

 

இருள் நிறைந்த வீடு

மு.குலசேகரன்


சிறுகதை வடிவமானது வாசிப்பை குவிமையப்படுத்துவதற்காக ஒருமைப் பண்பைக் கொண்டிருக்கிறது எனலாம். அதனால் முடிந்தளவு ஒரு காலம், இடம் என்பவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. அதற்காக ஆரம்பம், நடு, முடிவு என்ற இயங்கு முறையையும் வைத்திருக்கிறது. அதன் நோக்கம் ஒற்றைத் தன்மையிலிருந்து பன்முகப் பார்வையை அடைவதுதான். இப்போது உலகமயமாகிவிட்ட சூழலில் மனிதர்களுக்கிடையிலான இடைவெளி சுருங்கிவிட்டது. மனிதனுக்கு தனியாக மொழியும் கலாச்சாரமும் நிலமும் இல்லாமலாகிக்கொண்டிருக்கின்றன. எனவே அவன் நிகழ்கணத்தில் வாழ்கின்ற நிலையிலிருக்கிறான்.  தன் இருப்பைப் பற்றி சிந்தித்தாக வேண்டும். இந்த சிக்கலான நிலையை படைப்பிலும் காட்ட வேண்டியதாகிறது.




அதனால் இன்றைய சிறுகதை ஒருமைப் பண்பை இழக்கிறது. வாழ்க்கையை புறவயமாகவும் அகவயமாகவும் சேர்த்தே பார்க்கிறது. பாத்திரங்களை ஒரே சமயத்தில் விலகியும் உள் நோக்கியும் படைக்கிறது. சிறுகதை பிற எல்லா இலக்கிய வடிவங்களையும் போல காலத்துக்கேற்ப மாறிக்கொண்டிருக்கிறது. அவசர வாழ்க்கையின் தேவைக்கு ஒருமை மிகுந்த உடனடிக் கதைகள் எழுதப்படுகின்றன. அவற்றிலிருந்து விடுபட சிறுகதைகள் பல கதைத் தன்மையுள்ளவையாக விரிகின்றன. இன்றைய ஆசிரியன் கதைக்குள் தன்னுடைய இடத்தை உறுதிபடுத்திக்கொள்ள முயலுகிறான். அவனும் ஒரு கதைசொல்லியாக பிரதியில் குறுக்கீடுகளை நிகழ்த்துகிறான். தன் படைப்பில் வாசகப் பார்வையை கொள்வதால் இது சாத்தியமாகிறது. அது புனைவாக இருப்பதால் கருத்துகளால் உருவாகும் அதிகாரமும் தடுக்கப்படுகிறது. இப்போது சிறுகதை உருவத்திலும், உள்ளடக்கத்திலும் முழு சுதந்திரமானதாயிருக்கிறது. அதில் ஒரு வாக்கியத்தை நீக்கினால் குலைந்துவிடும் என்ற நம்பிக்கையில்லை. துப்பாக்கி தொங்கினால் வெடித்தாக வேண்டும் என்ற கட்டுப்பாடும் கிடையாது. கதையை எங்கு வேண்டுமானாலும் தொடங்கி வாசித்துவிடலாம். அது பல கதைகள் உருவாகும் நிகழ்வுகள் கொண்ட தொகுப்பாகிறது. அல்லது தொடர் நினைவுகளின் பரப்பாக இயங்குகிறது. அங்கு சம்பவங்களைக் காட்டிலும் மொழிச் செயல்பாடு முக்கியமாயிருக்கிறது.



கே.என். செந்திலின் முதல் சிறுகதைத் தொகுப்பான "இரவுக் காட்சி' 2009இல் வெளியாகியிருக்கிறது.  இரண்டாவது  தொகுப்பு "அரூப நெருப்பு' 2013இல் வெளியானது.  இரண்டு தொகுப்புகளுக்கும் அடிப்படைப் பார்வையில் பெரிய வேறுபாடுகள் இல்லை என்றுபடுகிறது. இரண்டிலும் அவருடைய கதைகள் அன்றாடச் செயல்களால் பின்னப்பட்டிருக்கின்றன. அந்த சூழலிலிருந்து பாத்திரங்களின் குணச் சித்திரங்கள் உருவாகின்றன. அதற்கு ஏதுவாக காலத்தின் முன், பின்னான வேறுபாடுகள் அழிந்து தொடர் நிகழ்வாகிறது.. ஆசிரியர் பாத்திரங்களின் மனவோட்டங்களை நிகழ்ச்சிகளின் வழியாக கவனமாகப் பின்தொடர்கிறார். அவற்றால் மனிதனை இயக்குபவற்றை அடையாளப்படுத்த முயலுகிறார். பொருண்மையான உலகை மனதில் பிரதிபலிக்க செய்து அனைத்துக்கும் அர்த்தங்களை தேடுகிறார். மனிதனின் அடிப்படை இயல்புகளை கண்டறிவதற்காகத்தான் அவர் பெரிதும் விளிம்புநிலையாளர்களை எழுதுகிறார் என்று தோன்றுகிறது. கள்ள டிக்கெட் விற்பவர், பிணவறை வேலையாள், அடியாள்,  கடை நிலைத் தொழிலாளி, லாட்டரிச் சீட்டு விற்பவர், லாட்டரிச் சீட்டு வாங்குபவர் போன்றவர்கள்தான் கதைசொல்லிகளாகிறார்கள். அந்த அடித்தட்டு மனிதர்கள்தான் ஆதி குணங்களை மறைக்காமல் வெளிப்படுத்துபவர்கள். அங்கு கண்டடையப்படுவது தீமை, இச்சை, சாகசம். வாழ்வதொன்றுதான் இயல்பான நியதி. மிகையான மெல்லுணர்வுகளுக்கு இடமில்லை. அங்கு வாழ்க்கையைப் பற்றிய பெரும் விழுமியங்களுமில்லை.


ஆசிரிய அவதானிப்புகள்தான் கதையை இலக்கியமாக்குகிறது. அவை கதைப் படிமங்களாகி முழு வாசிப்பனுபவத்தை தருகின்றன. அவ் வகையில் கே.என். செந்தில் நனவோட்டங்களால் பாத்திரங்களின் பண்பை உருவாக்குகிறார். அதனால் அவருடையதும் அவருடைய பாத்திரங்களுடையவையும் கலந்து உலகைப் பற்றிய தனித்த பார்வை எழுகிறது. அவருடைய நுண்ணோக்கு அவர் கதைகளின் முக்கிய அம்சமாகிறது. அப்படியாக இக்கதைகளில் வெளிப்படும் அதிகப்படியான சூட்சுமத் தகவல்களின பெறுமதி என்ன? ஒரு  கதையில், வாயில் ஊற்றப்படும் பால் துளிகள் கழுத்திலும் காதுப்புறத்திலும் வழிவதை சாகக் கிடக்கிறவருடைய பிள்ளைகளின் விலகலுக்கு பொருத்தலாம். ரசத்தில் சோற்றை தூர் வாரி  ஒரு பெண்ணைப் பார்த்தபடி ஒருவன் சாப்பிடுவதில் "அரூப நெருப்பு" கதை தொடங்குவது மொத்தக் கதையின் போக்கையும் காட்டுகிறது.  "திரும்புதல்" கதையில் பிரம்புக் கூடையில் ஒன்றின் மேல் ஒன்றாக ஏறி விளையாடிக்கொண்டிருக்கும் விற்பனைக்கான வண்ண மய கோழிக்குஞ்சுகளின் சித்திரம் வருகிறது. அவற்றில் இரண்டை அண்டை வீட்டுப் பெண் அவனுக்கு வாங்கித் தருகிறாள். குஞ்சுகளின் மெல்லிய கால் தடம் பழைய நினைவுகளாக தோற்றமளிக்கிறது. அக் கதையின் மலைகளைப் போன்ற குப்பைகளின் குவியல்கள், ஊரிலிருந்து விலக்கப்பட்ட இடத்தின் படிமமாகத் தோன்றுகிறது. அது இருள் உலகின் ஒரு வகை மாதிரியாகப் படுகிறது. பசித்த சிறுவர்கள் பிழைப்புக்காக குப்பை பொறுக்குகிறார்கள். கூடவே விளையாடவும் செய்கிறார்கள். அங்கு வாழ்க்கையின் பசி, காமம், குரோதம், வன்மம், போராட்டம், இரக்கம், அன்பு எல்லாமும் வெளிப்பட்டுவிடுகின்றன. "மாறாட்டம்" கதையிலும் மனைவியைத் தாக்குகையில் கண்ணாடிச் சில்லுகளில் படியும் ரத்தமும் தெரியும் கண்ணும் கணவனை மேலும் தூண்டுகின்றன. துரோகத்துக்கான அடையாளமென காணப்படும் சேலை ஒரேயடியாக கொல்ல வைத்துவிடுகிறது.   

      

அவர் எழுப்பும் உருவகங்கள், செயற்கையானவையாயில்லாமல், கதையின் போக்கில் அடையப்பட்டவையாயிருக்கின்றன. சிலவற்றின் பட்டியல் :


ஒரு கட்டிடத்தின் நிழல் எதிர்க்கட்டிடத்தின் மீது கிழவி கால் நீட்டியுள்ளதை போல் படர்ந்திருக்கிறது.


நிலத்தில் குழி பறிப்பதை போல் கிழவன் நிலத்தை தேய்த்து நடக்கிறான்


நாற்றம் பழகிய நாயை போல் வந்து முகர்ந்து விட்டு மேலே செல்கிறது.


யானையின் மேற்செல்லும் பாகனை போல் எருமையின் கொம்பின் மீது அமர்ந்து காகம் ஆடி அசைந்து போகிறது.


செம்மறியாடுகள் சரிவில் இறங்குவதை போல்.


அப்பா பீடி எரிவதை போல் ஒருவர் எரிவதை பார்த்தேன்.


கோணிப்பையை எறிந்தது போல் நாய் சாக்கடைக்குள் விழுந்தது.


மர வேர்களை போல் கை நரம்புகள்.


(இரண்டாவது தொகுப்பில்) : பட்டுப்போன மரத்தின் கிளையொன்று முறிவது போன்ற ஒலியுடன் கதவு மெல்லத் திறந்தது.


ஒரு பெண் இடைவெளியின்றிக் கத்துகையில் பாலத்திற்கே வாய் முளைத்துக் கத்துவதை போலிருந்தது என்றும், கொலுசு ஓசையைக் கேட்கையில் மௌனத்தின் ஆழத்துக்கு சென்று திரும்பிவருவார் என்றும், முழங்கால் வரை மீன் செதில்கள் படிந்து அவனே மீனாகிவிட்டதை போலிருந்தது என்றும் எழுதுகையில் சூழல் மற்றும் பாத்திரங்களின் சாரம் வந்துவிடுகிறது.


அதே போல் பாத்திர உரையாடல்கள் கதையின் மூலங்கள். அவை இலகுவான வாசிப்புக்கும் உகந்தவை. ஆனால் பெரிதும் உரையாடல்களாலான கதைகள் எளிய கட்டமைப்பை உடையவையாகத் தோன்றுகின்றன. உரையாடல்கள் என்பவை முழுவதும் பாத்திரங்களின் இயல்புக்கேற்றவை. அதனால் ஆசிரியனுக்கும் வாசகனுக்கும் இடமளிக்காதவையாகின்றன.  கே.என். செந்திலின்  பல கதைகள் தன்னிலையிலிருந்து நமக்கு சொல்லப்பட்ட நீண்ட உரையாடல்கள்தான். அவற்றில் பாத்திரங்களின் பேச்சு குறைவு. அவை பெரும்பாலும் நினைவுகளில் திளைப்பவை.  அப்படி கதாபத்திரங்கள் பேசினால் அவை தாம் வாழ நேர்ந்த இடத்தை அழுத்தமாக வெளிப்படுத்திவிடுகின்றன. இக் கதைகளின் சொற்ப பேச்சுகள் கதைக்கு முழு பிரதேசத் தன்மையை வழங்கிவிடுகின்றன. அவை இலக்கிய உலகம் அறிந்த கொங்குப் பகுதியின் செழுமையான வட்டார வழக்குகள்.  எடுத்துக்காட்டாக சில உரையாடல்கள் :


யோசனை என்ன மயித்த நொட்றது. நோட்டா இருந்தென்ன சிலுவானமா இருந்தென்ன. அந்த ஈர வெங்காயமே வேண்டா.


ஒக்காந்துக்கிட்டே கிடக்கெறவங்களுக்கென்ன? அங்காருந்து வெயில்ல உன்னப்புடி என்னப்புடின்னு வர்றதுக்குள கண்ணாமுளி திருகீருது.


கே.என். செந்தில்  தன்னிலையில் கதையெழுதுதலை சவாலாக கருதுபவர். ஆனால், எல்லா வித கதை சொல்லலும் தத்தமக்குரிய சிக்கல்களைக்கொண்டுதானிருக்கின்றன.  இரண்டாவது தொகுப்பின் கதைகள் பெரும்பாலும் ஒற்றைத் தன்னிலையில் கூறப்படுபவை.  அருப நெருப்பு கதை இரட்டைத் தன்னிலையில் சொல்லப்பட்டதால் அது ஒரு கதையின் இரு பக்கங்களைக் காட்டுகிறது.


எழுத்தாளர் சுந்தரராமசாமியிடம், மனித உடல் இயக்கங்களை ஓர் இயந்திரத்தினுடையவை போலாக்கிச் சொல்வதாயிருக்கும். கூடவே பெரும் மனித விசாரமுமிருக்கும்.  அவற்றையொத்தவை போல் கே.என். செந்திலின் பாத்திர நடவடிக்கைகளும் அமைகின்றன. உதாரணங்கள் : சொடக்குகள் தெறித்தன / கண்ணீரின் சொட்டுகள், கைகள் உடம்பில் விழுந்தன / கால்களால் பூமியை பின்னுக்குத் தள்ளி ஓடுதல் /  மயக்கத்தில் தொங்கிப்போயிருந்த முகத்தை தோள் தாங்கியிருந்தது / மனிதச் சதைகள் காலில் மிதிபட்டன.




கே.என். செந்திலின் கதையமைப்புகள் மிக அதிகமாக குடும்பம் என்னும் சமூக நிறுவனத்தை சுற்றியிருக்கின்றன.  ஏனெனில் அது விளிம்புநிலையாளர்கள் செயல்படும் பிரத்யேக வெளி. அந்த குடும்ப அமைப்புக்கு வாழ்க்கையைத் துய்ப்பது ஒரு நோக்கமென்றால் மற்றொன்று அதை மறுஉற்பத்தி செய்வது. அது இறுகிப்போயிருப்பதால் அதில் அதிகப்படியான அதிகாரமும், வன்முறையும், சுயநலமும் வெளிப்படுகின்றன. குடும்பத்துக்கு தலைவனாயிருப்பவன் பிற உறுப்பினர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறான். அவன் பிற அமைப்புகளில் பெற்ற வன்முறையையும் சுரண்டலையும் பிரதிபலிப்பவனாயிருக்கிறான். கடைசிக் கண்ணியாயிருப்பவள் மனைவி. அவள் பொருளாதாரம் சார்ந்தும் ஒழுக்கம் சார்ந்தும் ஒடுக்கப்படுகிறாள். குடும்ப அங்கத்தினர்கள் படிநிலையில் கீழுள்ளோர் மீது முடிந்தளவு அதே அதிகாரத்தை பரப்புகிறார்கள். அதிகாரமும் வன்முறையும் சுரண்டலும் கூடுதலாக புலனாகும் இடம், சமூகத்தின் அடிக் கட்டுமானமாயுள்ள குடும்பம்தான். அது சிதைந்துகொண்டிருப்பதின் சித்திரங்கள் இக் கதைகள். இவற்றை வாசிக்கையில் நமக்குள் உறைந்திருக்கும் வன்முறையானது தலையெடுக்கக்கூடுமென்ற அச்சம்  தவிர்க்கவியலாததாகிறது. 


"வருகை' கதை ஒரு சிறுவனின் நோக்கில் சொல்லப்படுவது. கதை சிறுவனுடைய நிகழ் காலமென்றால், அப்பா, அம்மாவினுடையது இறந்த காலமாகவும், சிறுமியினுடையது எதிர்காலமுமாகிறது. முதலில் சிறுவனின் இயல்புத்தன்மையான விளையாட்டு, குடும்பத்தால் தடைபடுவதால் அவன் தோற்றவனாகிறான்.  அவனுடைய சுய முன்னேற்றக் கருவியான கல்வியும் குடும்பத்தால் பாதிக்கப்படுகிறது. அப்பா குடித்துவிட்டு நனவிலியிலுள்ளவற்றையெல்லாம் கதைப்படுத்துகிறார். வேலை செய்யும் பனியன் தொழிற்சாலை தொடர்பான அவரின் பொருளியல் உலகமும், அவருடைய எம்ஜிஆர் உதிரி அரசியலும், அவருக்குள் அழுத்தப்பட்ட வெள்ளைத் தோல் சம்மந்தப்பட்ட காம உணர்வுகளும் ஒன்றோடொன்று பிணைந்து, சிறுவனுக்கு அவராலேயே வெளிப்படுத்தப்படுகின்றன. தெருவில் குடித்துவிட்டு விழுந்து கிடப்பவர் வீடு திரும்ப வேண்டுமென சிறுவன் வேண்டிக்கொண்டாலும் அவனும் எதிர்காலத்தில் தன் அப்பாவை போல் ஆவான். ஏனெனில் அவனும் அப்பாவை போல் அடியைத் தவிர வேறொன்றும் அறியாமல் வளர்பவன். ஆனால் அவனுடைய அம்மாவின் வேண்டுதல்கள் அவனை வேறாக்கவும் செய்யலாம். இரண்டுக்கான வாய்ப்புகளையும் கதை திறந்து வைத்திருக்கிறது.


"மதில்கள்' என்ற கதையில், மஞ்சுளாவின் குடிகாரக் கணவன் பெயர் மது. குழந்தைப் பேறில்லாதது அவளுக்கு வேண்டுமானால் குறையாயிருக்கலாம், அவனுக்கு இழப்பாயில்லை என்று படுகிறது. அவன் குடித்து, சூதாட்டத்திலும் தோற்று வீட்டுக்கு வந்து மனைவியை தாக்குகிறான். எதெல்லாம் வீட்டிலுள்ளதோ அத்தனையாலும். முக்காலி, முருகன் படம், நிலைக் கண்ணாடி.  மஞ்சுளா குழந்தை வரம் வேண்டி கருட தரிசனத்துக்கு காத்திருக்கிறாள் என்னும் தகவல் போகிற போக்கில் கதை நடுவில் வருகிறது. முடிவில் அதே கருடன் தோன்றுகையில் அவளால் வணங்க முடிவதில்லை.


"வாக்குமூலம்' கதையின் முக்கிய பாத்திரங்களெல்லாம் பெயரற்று பொதுப்படையாயிருக்கின்றன.  ஆனால் உதிரி பாத்திரங்கள் அத்தனையும் பழனிச்சாமி, ராஜேந்திரன், பாலன், மரகதக்கா, மகாதேவன் சார், பத்மநாபன் அண்ணா, சுந்தரியக்கா என்ற பெயர் அடையாளங்களுடனிருக்கின்றன. இக் கதையை நிகழ்த்துபவன் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரத்துடன் கொலையும் செய்து போதையில் பெற்றோரை நினைத்தபடி தற்கொலைக்காளாகிறான். கிணற்றை நோக்கி உள்ளாடையுடன் நடக்கிறான். நீரில் மிதக்கையில் நிர்வாணமாக மிதக்கிறான். இது போன்ற இடங்கள் வாசிப்பால்தான் நிரப்பப்பட்டாக வேண்டும். இப்படி அனைத்தையும் கூறிவிட்ட மேற்தோற்றத்துடன் கதைகள் இயங்கினாலும் உள்ளே வாசிப்பதற்கு நிறைய  இடைவெளிகளை கொண்டிருக்கின்றன.


"இரவுக் காட்சி' கதையில் இருவர் இரவுக்காட்சி திரைப்படம் செல்கிறார்கள். அவர்கள் மேம்பாலத்தின் அடியில் திரும்ப வேண்டியதாகிறது. அங்கு மேலேயுள்ள வெளிச்ச உலகம் தலைகீழாக்கப்பட்டது போல் தோன்றுகிறது. பிச்சைக்காரர்கள் வருவாயை கணக்கிட்டுக்கொண்டிருக்கிறார்கள். பாலியல் தொழில் மும்முரமாக நடக்கிறது. ஒரு சிறுவன் கத்தியைக் காட்டி இவர்களை கொள்ளையடிக்க முயலுகிறான். இவை எல்லாவற்றிலும் கதைசொல்லி வெறும் பார்வையாளனாக மட்டுமில்லாமல் பங்கேற்பவனுமாகிறான். பிச்சைப்பாத்திரத்தை பிடுங்கி வீசுகிறான். சிறுவனை எதிர்க்கிறான்.  பாலியல் உறவு கொள்ள விழைகிறான். பாலியல் தொழிலாளியை இரவில் தாக்கியதோடு மட்டுமில்லாமல் பகலிலும் கண்டுபிடித்து தாக்குகிறான். நகரில் காவல் துறையின் தீவிரக் கண்காணிப்பு அமுலாக்கப்பட்டிருந்தது என்று கதையில் ஒரு வரி வருகிறது. அது கதையின் அச்சாகிறது. கடும் ஒழுக்க விதிகள் மறுமுனையில் எல்லையற்ற மீறலைதான் உருவாக்கும் போலும்.


இரண்டாவது தொகுப்பிலுள்ள "அரூப நெருப்பு' கதையும் குடும்பமெனும் அமைப்பு தன்னை மறு உற்பத்தி செய்துகொள்வதைக் காட்டுகிறது. அதன் கதை சொல்லியால் ஓர் உதிரியாக இருக்கமுடியவில்லை. குடும்பம் தரும் குறைந்தபட்ச பாதுகாப்பை பெற விரும்புகிறான். அதற்குத் தடையாகவுள்ள சக குடும்ப மனிதர்களை இயல்பான தந்திரத்தால் நீக்குகிறான். இறுதியில் அவனால் அக் குடும்பத்துக்கு தலைமையேற்கவும் முடிகிறது. அது, குடும்பத்தின் ஓர் அங்கமாக மாறினால்தான் ஒருவரால் பிற நிறுவனங்களிலும் பங்கு பெற முடியும் என்ற நிலையிருப்பதை காட்டுகிறது. அப்போதுதான் வாழ்க்கை இன்பத்தை சுலபமாக துய்க்க முடியும் என்பதையும்.


இரண்டாவது தொகுப்பின் மற்றொரு கதை "வாசனை'. பொதுவான கதைகளிலிருந்து மிகவும் வித்தியாசமான பிணவறையின் பின்புலத்தைக் கொண்டது.  பிணவறை என்பது ஒரு வீட்டை ஒப்பீடு செய்துவிடுகிறது. அதன் பணியாளன் இரண்டுக்குமான சங்கிலிப் பிணைப்பு. பிணம் ஈறு தெரிய அவன் இருப்பை நோக்கி கேலியாக நகைப்பதையும் நுண்மையாக காட்டுகிறது. அவன் சொல்லலில் மனைவி உணர்ச்சியற்ற பிணத்தை ஒத்திருக்கிறாள். அதனால் சவங்கள் அவனுக்கு உடன் வாழும் உறுப்பினர்களாகிறார்கள்.  அவளுடைய கூறலில் கணவன் பிணங்களுடன் வாழ்பவன். அவளுடைய உயிர்ப்பான குடும்ப உலகில் பிணமான அவனுக்கு இடமில்லை.


"தங்கச் சிலுவை" கதை ஆரம்பம் ஏறக்குறைய அனைத்து பாத்திரங்களையும் தத்தம் தனமைகளுடன் அறிமுகப்படுத்திவிடுகிறது. கிறிஸ்துமஸ் நாளில் ஃபாதர் பிரான்சிஸின் ஆசிகளைப் பெற அவருடைய வீட்டுக்கு கேத்ரீன் இனிப்பு எடுத்துவருகிறாள். அப்போது அங்கு ஆபிரகாம் ஒளிந்திருப்பதாக தோன்றுகிறது. பின்னால் அதே ஆபிரகாம்தான் குற்றவாளியாகி, கேத்ரீனும் காரணமாயிருக்க மனம் திருந்தி, ஃபாதர் பிரான்ஸிஸிடம் தங்கச் சிலுவையை ஒப்படைப்பவனாயிருக்கிறான். அப்படியான நகர்வை அடைய ஆபிரகாமுக்கு உள்ளார்ந்த ஒரு காரணமுமிருக்கிறது. பெரும்பாலான கே.என். செந்திலின் கதைகள் வாழ்க்கைப் பிரவாகமாமாயிருக்கும். அவற்றில் வெளிப்படையான உள மாற்றங்கள், திருப்பங்கள் இருக்காது. அவை இயல்பான போக்குகளாயிருக்கும். ஒரு கை ஓட்டத்தலிருந்து அள்ளிக் காட்டப்படுபவதில் பெரும் மாறுதலைக் காணலாம். முன்பு தொடக்கத்தில் ஓடிய நீரல்ல அது.


"மாறாட்டம்" கதையும் கே.என்.செந்திலின் பாணிக் கதைதான். பரமு, புவனா, ராஜேஷ், குழந்தைகள், காஜா, லாட்டரிச் சீட்டு வாங்குபவன் என்று நிறைய பாத்திரங்கள். அனைவரும் கதையின், நகர்த்தும்,  விடுபட முடியாத கண்ணிகள்தான். அன்றாடம் செய்தித்தாள்களில் கிடைக்கும் மண வாழ்க்கைக்கு அப்பாலான பாலுறவு சிக்கலால் விளையும் பெண் கொலைதான் மையம். அதன் காரண காரியங்களை கணவன், மனைவி, கூடவே காரணமானவன் என அவர்களின் பார்வைகள் வழியாக தீவிரமாக விசாரிக்கிறது. ஒவ்வொரு முடிச்சாக இறுகிக்கொண்டு வந்து கொலையுறுவதில் முடிகிறது. கொலை செய்யப்படுபவனுக்கு கடைசிவரையிலும் கூட கொல்ல வேண்டும் என்ற உந்துதல் இருப்பதில்லை. அது திட்டமிட்டக் கொலையே அல்ல. அவ்வாறு இயல்பானதொரு சூழலில் நிகழ்ந்தேறிவிடுகிறது. அதை கதையும் திடீர் திருப்பமாக கொள்வதில்லை. சிறு சம்பவங்கள் வழியாக சென்று கொலையையும் மற்றொரு சாதாரணமான சம்பவமாக மழுப்பிக் காட்டுவதே கதையின் வெற்றியாகிறது. இதுகாறும் அழுத்தமாகக் சித்தரித்துக் காட்டப்பட்ட குழந்தைகளுடன் நாம் முடிவில் அனாதையாக நிற்கிறோம்.     


இக்கதைகள் பெரும்பாலும் இயல்பு முடிவுகளைக் கொண்டிருப்பவை. அவை எப்போதும் திடீர்த் திருப்பங்களோடிருப்பதில்லை. எளிய மனிதர்களின் கதைகளாதாலால் சாதாரண முடிவுகள் என்கிற வெளித் தோற்றத்தைக் கொண்டிருப்பவை. எழுத்தாளர் வண்ணநிலவனின்  பல கதைகள்  இயற்கையின் சிறு சலனங்களின் முத்தாய்ப்புகளுடன் முடிகின்றவை. அவை பிரபஞ்ச இயக்கத்தை பிரதிபலிப்பதின் சிறு படிமங்களாகும். அவ்வாறு கே.என். செந்திலின் "மீட்சி" கதை, "பெரிய மழை பெய்வதற்கான முஸ்தீபுகளோடு தூறல்கள் சடசடவென விழத்தொடங்கின' என்று முடிகிறது. இரண்டாவது தொகுப்பிலுள்ள "வெஞ்சினம்', "மாறாட்டம்" முதல் தொகுப்பிலுள்ள "கதவு எண் 13/78', "காத்திருத்தல்', "வாக்குமூலம்' போன்ற கதைகள், வாழ்க்கையின் இறுதியாயிருக்கும் மரணத்தில் போய் முடிகின்றன. வேறு சில கதைகள் நாவல்களினுடையவை போல் தன்னியல்பான முடிவுகளைக் கொண்டிருக்கின்றன. அவை நெடிய வாழ்வின் அடுத்த அத்தியாயத்துக்கான தொடக்கமாயிருக்கின்றன போலும்.




இக் கதைகளில், ஒரு பாத்திரம் பூமியை உதைத்து மிதிக்கிறது.  நந்தி எழுந்து நிற்கும்போது உலகம் அழியுமென்றால் அது நிற்க வேண்டுமென மற்றொரு பாத்திரம் விரும்புகிறது.  இப்படி மனித மனதினடியில் உறைந்துள்ள தீமைகள், அழிவுகள், சிதைவுகள் போன்றவற்றைதான் கதைகள் தரிசனமாக முன்வைக்கின்றன. திருடனை நோக்கி ஒரு குழந்தை பறக்கும் முத்தத்தை வழங்குவது, தெருவில் குடித்துவிட்டு வீழ்ந்திருப்பவர் வீடு திரும்ப வேண்டுமென ஒரு சிறுவன் நினைப்பது, திருடிய தங்கச் சிலுவையை திரும்ப ஒப்படைப்பது போன்றவை அபூர்வமான தருணங்கள். அப்படி தம்மிலிருந்து முளைத்தெழுபவற்றையே இக் கதைகள் மறைமுகமாக உணர்த்த நினைக்கின்றன.