Tuesday, July 22, 2014

எம்.கோபாலகிருஷ்ணனின் “ மணல் கடிகை”



மதிப்புரை




ஒளிரும் ஒவ்வொரு விளக்கிலும் இப்படியொரு வேண்டாத ஒரு வலி தன்னையே வருத்தித் தந்துகொண்டிருக்குமோ? (பக்.146)

      ஒரு நகரத்தைப் பற்றி நமக்கிருக்கும் கற்பனைகள் நகரின் இயல்பிற்கு மாறாக,மிகைப்படுத்தப் பட்டதாகவோ,குறைத்து சொல்லப்படுவதாகவோ இருக்கலாம். அது நகரமாக மாற்றமடைவதற்கு எவற்றையெல்லாம் நசுக்கி அடியில் போட்டு மிதித்து மேலேறி நகரமாக உருக்கொண்டிருக்கிறது என்ற கேள்வியை அலட்சியப்படுத்தி ஒதுக்கி விட முடியாது. அது போலவே இம்மாற்றம் வாழ்வின் மீது எவ்விதம் பிரதிபலிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது? இவற்றை மனித மனங்கள் செரித்துக் கொண்டனவா?என்ற வினாவை எளிதில் புறமொதுக்கிவிட முடியாது. ஏனெனில் அவ்வாறு செரித்துக் கொண்டவர்களின் சமரசங்கள்,தங்களுடைய சுயநலன்களுக்காக எப்பக்கமும் சரியக்கூடும். பிடி கொடுக்க மறுத்து திமிருபவர்களுக்கு கிடைப்பது,இறக்கி வைக்க இயலாத பாரங்கள் மட்டுமே.இவை தவிர்த்து எண்ணற்ற கிளைக் கேள்விகளோடு நம்மை நெருக்குகிறது எம்.கோபாலகிருஷ்ணனின் “ மணல் கடிகை”.



           
     
 இளம் வயதின் விட்டேற்றித்தனமும் குதூகலமும் நிரம்பிய ஐந்து நண்பர்கள்,சுதந்திரமான மனநிலையில் தங்கள் எதிர்காலத்தை திட்டமிடுவதினூடாக இந்நூல் தொடங்குகிறது. இந்த ஐவரோடு மட்டும் நாவல் முடங்கிப் போய்விடாமல் இவர்கள் புழங்கும் உலகத்தில் நுழைந்து வெளியேறுகிறவர்கள்,வெளியேறாது நின்று விடுகிறவர்கள் என அனைவரையும் நோக்கி விரிகிறது இந்நாவல்.




           பாரங்கள் ஏதும் அழுத்தாது வெற்றுக் கைகளோடு பயணப்படும் இவர்கள்,ஒவ்வொரு காலத்திலும் அக்காலம் தரும் தழும்புகளை சுமந்து கொண்டு,இந்நகரத்தின் இயந்திரங்களோடு மற்றுமொரு இயந்திரமாக உருமாறி வளர்ந்து, வீழ்ந்து,சிதைந்து,அலைவுற்று சோர்ந்து கடந்த காலங்களின் கசப்புகளோடு நிற்கையிலும் அவர்கள் கைகளில் ஏதுமில்லை. ஆனால் பாரங்கள் மட்டும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக வதைத்து பின்தொடர்ந்தபடியே இருக்கிறது.



   
        தற்போது புற்களைப் போல தெருவெங்கும் சீரற்று முளைத்து,இந்நகரத்தை ஆட்டிப்படைத்து குலைத்துக் கொண்டிருக்கும் கம்பெனிகளின் தொடக்க காலத்தில்,வெவ்வேறு குடும்பப் பின்னணிகளையுடைய சிவராஜும் ,அன்பழகனும் பரந்தாமனும் நுழைகிறார்கள். திரு, தன் மாமாவின் அணைப்பில் சீட்டுக் கணக்குகளைக் கற்றுக் கொள்ள தொடங்குகையில்,சண்முகம் பாதசாரியின் காசி போன்ற கதையை எழுதிவிட்டு செத்துப்போக ஆசைப்படுகிறான்.கம்பெனிக்குள் நுழைந்த கணத்திலிருந்தே அவற்றின் ஒவ்வொரு பிரிவுகளையும் தங்களுடைய கடும் உழைப்பால் நுணுக்கத்தோடும் நுட்பத்தோடும் கற்றுக்கொள்ள கற்றுக் கொள்ள அவை அவர்களின் கரங்களுக்கு வசப்படுகின்றன. ஒவ்வொரு அடியையும் நிதானத்தோடும் கவனத்தோடும் வைக்கிற சிவாவுக்கு வெற்றியின் கதவுகள் திறக்கின்றன. ரத்தனவேலு செட்டியாரின் முதலீட்டோடு கூட்டு நிர்வாகியாகிற சிவா,கூட்டாளியான ரவியை வெளியேற்றி விடுவதற்கும் ஆரம்ப காலந்தொட்டு நட்பு கொண்டிருக்கிற விமலாவை தன் இச்சையை தணிக்க மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும்,செல்வத்தின் ஒளியோடு மணவாழ்வில் இருந்து பிரிந்திருக்கும் அருணாவை மற்றொரு விட்டிலாக விழச்செய்வதற்கும் நொடிந்த குடும்பத்தின் அழகி சித்ராவை மணந்து கொளவதற்கும் அவனிடத்திலிருக்கும் சுயநலமான காய்நகர்த்தல்களும் சமரசங்களுமே போதுமானவையாக இருக்கின்றன. பிடிவாதத்தின் இறுக்கத்தால் சிதலப்பட்டு அலைக்கழிப்பிற்குள்ளாகும் அன்பழகனும் பரந்தாமனும் சிவாவை விடவும் தொழிற்திறன் மிக்கவர்கள். ஆனால், இவர்கள் தோல்விகளையும் காயங்களையும் திரும்ப திரும்ப சந்தித்து துவண்டு லெளகீகத்தில் பின்வாங்கி நிற்கிறார்கள். இரண்டு திருமணங்களாலும் –காதலித்து மணந்த முதல் மனைவியின் பிரிவாலும் இரண்டாவது மனைவியின் தற்கொலையாலும் – பரந்தாமனுக்கு நிம்மதி கிட்டுவதில்லை.ஏமாற்றப்பட்டு நஷ்டமனைந்து விபத்தில் சிக்கி அடிபட்டு மீளும் வரைக்கும் (அதற்கு முன்பும் பின்னரும் கூட) அன்பழகனுக்கு மகிழ்வான தருணத்தை காலம் தாமதித்தும் கூட தந்துவிடுவதில்லை. ஏறுமுகத்தின் பயணம் கொண்ட திரு கூட,எஞ்சியது எதுவும் இல்லாது வீழ்வது விதியின் விசித்திரமான ஆசை போலும். எழுத ஆசைப்பட்டு முயன்று தோல்வியடையும் சண்முகம் தன் மற்றொரு பாதியாக பெண்களை விழத்தட்டுவதில் முனைப்பு கொண்டவனாக இருக்கிறான்.
       

        
          இவர்களைத் தவிர ‘கம்யூனிஸ்ட்ராஜாமணி,சுப்பிரமணியம் என்று தொடங்கி பல்வேறு மாறுபட்ட வாழ்நிலைகளைக் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து வந்து நின்று மறைந்து போகிறார்கள். அவரவர்களுக்கான கிளைக் கதைகள் நாவலுக்குள் விரிகின்றன. நாவலின் மையத்திலிருந்து வெளியேறி விடுபவர்களாகவும் அதன் ஓரங்களுக்கு நகர்ந்து விடுபவர்களாகவும் பலரும் இருக்கிறார்கள். குறிப்பாக உமாவும் விமலாவும்.அது போலவே நாவலிம் ஓரத்திலிருந்து கொண்டிருக்கும் மலைக்கோயில்கள் இறுதிவரை கூடவே வந்து கொண்டிருக்கின்றன.




           ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் இந்நாவலில் ஒவ்வொரு பகுதியிலும் முதல் அத்தியாயத்தில் ஏதேனுமொரு மலைகோயில் இடம் பெற்று விடுகிறது. நண்பர்கள் இங்கு வந்து மாற்றங்க்ளின் நீட்சியில் கடக்க நேர்ந்து விட்ட காலம் குறித்து உரையாடி மீண்டும் அக்காலத்திற்குள் நுழைவதினூடாக-அது அவர்களால் முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும் என்றாலும் –சற்றேனும் அவர்களுகளின் மனங்கள் ஆசுவாசம் கொள்கின்றன.


            தோராயமாக நாவல் இருப்பத்தைந்து ஆண்டுகளை உள்ளடக்கியிருக்கிறது. நாவல் இயங்கும் ஆண்டுகளைக் கணக்கிட்டுக்கொள்ள அக்காலத்தில் வெளியான திரைப்படங்கள்,சுவரொட்டிகள்,கவிதை நூல்கள்,அரசியல் தகவல்கள் போன்றவை நாவலின் போக்கில் சொல்லப்படுகின்றன.இந்நகரம் பற்றிய வரைபடம் ஒரு பகுதியும் மிச்சமின்றி சாலைகள்,தெருக்கள் போன்றவை-அதே பெயருடன் – வெளிப்படையாகவே கூறப்பட்டு நாவல் முழுக்க நீண்டபடியே செல்கிறது.அதுபோலவே நகரின் அசுரத்தனத்தைப் பற்றி பலரும் விவாதித்தபடியே இருக்கிறார்கள்.




         இந்நாவலில் சிக்கலானதும் மோதலுக்குச் சாத்தியங்கள் கொண்டதுமான இடங்கள் நழுவ விடப்பட்டிருக்கின்றன. முக்கியமாக நண்பர்கள் கூடி மதுவருந்தும் இடங்கள்.போதையின் மிதப்பில் வெளிப்படும் பேச்சுகள் எந்த நிமிடத்திலும் மோதலுக்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு நிகழ்ந்திருக்குமெனில் நாவல் வேறுவகையாக உருவாகியிருக்கும்.




              சமூகத்தின் விதிச்சட்டகங்களுக்குள் பொருந்தி வராத ஒழுக்க மீறல்களுக்கான வாயில்கள் இங்கு அகலத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. நிர்பந்தத்தாலோ இயல்பாகவோ அவரவர்களுக்கேற்ப உறவுகள் அமைந்துவிடுகின்றன. நேரத்தைத் துரத்துவதற்கிடையில் கிடைக்கும் நேரத்தில்  உடல்கள் முயங்கித் தீர்க்கின்றன. நாவலுக்குள் வரும் பெண்கள் துயரத்தின் சாயையைக் கொண்டிருக்கிறார்கள். மனம் நிறைந்து புன்னகைக்கக் கூட முடியாத துரதிஷ்டசாலிகள் இவர்கள்.
             


             
          ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றும் இந்நகரம் பிறகு அவனுடைய இருப்பை எந்தவிதத்திலும் பொருட்படுத்துவதில்லை. அவன் ஏற்கனவே மாறிவிட்டவர்களுள் கலந்துவிட்ட மற்றுமொரு இயந்திரம் அவ்வளவே. அலுப்பு நீங்க மணம் மேட்டில் ஒரு நிமிடம் கண்ணயர்ந்து விட்டு பயந்தபடியே எழுந்தோடும் சிறுவன்,மனதிற்குள்ளாக எழுப்பும் கேள்விகளை ஒரு நாளேனும் நேரடியாக இந்நகரம் எதிர்கொண்டேயாக வேண்டும்.

            நாவலுக்குள் ஐவரைத் தவிர்த்து மேலேழும்படியாக ஒருவரும்-பாத்திரவார்ப்பில்-உருவாக்கப்படவில்லை. மாறுபட்ட நெருக்கடிகளை எதிர்கொள்பவர்களும் உச்சத்தில் இருப்பவர்களும் ஏதேனுமொரு வகையில் இவர்களின் வட்டத்திற்குள் வந்து சேர்ந்துவிடுகிறார்கள். பல்வேறு வகைமாதிரிகளாக வேறுபட்டு கிடக்கும் உள்ளங்களை ஒரு நாவலில் காட்டிவிடுவது என்றும் முடியாத காரியமே. ஆனால் அதற்கான முயற்சியை கோபாலகிருஷ்ணன்  எடுத்திருக்கிறார். சொல்லித் தீராத துக்கங்களையுடையவர்களின் கதைகள் நகரின் திசைகளெங்கும் மூச்சுவிடக்கூட திராணியற்று அமிழ்ந்து கிடக்கின்றன.


               வெளிப்பூச்சுகளுக்களுக்கிடையில் ஒளிந்து கொண்டிருக்கும் சாதிய மனோபாவம் எவ்வேளையிலும் வெளிப்படக்கூடும். அன்பழகனின் சாதியை விசாரிக்கையில் அவன் ஒடுங்கிப் போவது அதன் ஒரு வகை மட்டுமே. உடலுறவிற்கான தவிப்பை தணித்துக் கொள்ளும் வேளையின் போது மட்டுமே சாதிய அடையாளங்கள் விலக்கி வைக்கப்படுகின்றன.
மேலோட்டமான பார்வையில் ஆரம்பகாலத்தின் நகரின் வசமிருந்தவர்கள் தற்போது மெதுவாக நகரத்தை தங்கள் கைகளுக்குள் சுருட்டிக் கொண்டிருப்பது போலத் தோன்றக்கூடும்.

          ஆனால் அவர்களை அவ்வாறு செய்வித்து ஒரு கட்டத்தில் அந்நகரத்தில் நிறுத்திவிட்டு ஓரத்தில் நின்று சிரித்து கொண்டிருக்கும்,இந்நகரம்-சிவாவிற்கு நேர்ந்ததைப் போல. கணகற்றவர்களின் இரத்தத்தை உறஞ்சிப் பிழைக்கும் நேர்மையற்ற முதலாளிகளை ஒரு நாளேனும் தூக்கத்தை மறந்த குழந்தைகள் எதிர்த்து நின்று கேள்விகேட்கும் காலம் ஒன்று வரும். அது வரையில் அவர்களுக்கு விமோசனமில்லை.அதற்காக வைக்கப்பட்ட முக்கியமான அடி இந்நாவல்.




          வாசிப்பில் எந்த இடத்திலும் அலுப்பு தோன்றாமல் நாவல் முழுக்க ஈர்ப்பை உண்டாக்கும் மொழியைக் கையாண்டிருக்கிறார் எம்.கோபாலகிருஷணன். தமிழில் வெளிவந்த முக்கியமான ஆக்கங்களுள் ஒன்று இந்நாவல் எனத் தயக்கமின்றிச் சொல்லலாம்.

     தமிழினி இந்நூலை அழகியலோடு உருவாக்கியிருக்கிறது.

நன்றி :புதிய புத்தகம் பேசுது - ஆகஸ்ட் 2005

மணல் கடிகை-நாவல்- எம்.கோபாலகிருஷ்ணன் - தமிழினி வெளீயீடு

குறிப்பு : சூத்ரதாரியான கோபாலை சேலத்தில் முதன்முதலில் சந்தித்த போதிருந்து அவருடனான நட்பு தொடர்கிறது. அன்று அலுவலக நிமித்தம் கோவைக்கு செல்லும் போதெல்லாம் அவரை அலுவலத்தில் காணும்படிக்கு நேரத்தை திட்டமிட்டுவிடுவேன். விவாதிக்கும் போது எதையும் வலியுறுத்தி பேசாத, ஆனால் தன் தரப்பை உறுதியாக முன்வைக்கும் அவரது பேச்சு பிடித்திருந்தது முக்கியமான காரணம். அவர் எங்களூர்காரர் என்பது மற்றொரு காரணம். எப்போதும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் பேச்சு அவருடையது. அவர் படிக்க கொடுத்த புத்தகங்களும் அவர் வழி அறிமுகமான நண்பர்களும் இன்றும் அதே நட்புடன் தொடர்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் நாஞ்சில் நாடனைக் கண்டு பேச வேண்டும் என சொன்ன போது கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தவர் கோபால் தான். என் முதல் கதையை பிரசுரத்திற்கு அனுப்பிய பின் அதை அப்படியே அவரிடம் சொல்லியிருக்கிறேன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.
         அதற்கு முன் ’கனவு’ இதழில் பத்துவரிகளில் நூல் பற்றிய பார்வைகளை எழுதியிருந்தேன் என்றாலும்  ’மணல் கடிகை’ நாவல் தான் நான் முதன்முதலாக மதிப்புரை எழுதிய பெரிய ஆக்கம். அன்று அது அளித்த நம்பிக்கை மிகப்பெரிது. நாவலை கோபால் அனுப்பி வைத்து அதை அலுவலகத்தில் வைத்து பிரித்து போது சகாக்கள் நாவலின் கனத்தைப் பார்த்து “இவ்ளோ பெரிய புக்கை படிக்க போறீங்களா?” என்று கேட்டனர். அந்த வயதிற்கே உரிய உற்சாகத்துடன் “ஆமா..படிக்க போறது மட்டுமில்ல. இதயப் பத்தி எழுதவும் போறேன்” என்று சிரித்தபடியே பதில் சொன்னது நேற்று போல துல்லியமாக மனக்கண்ணில் தெரிகிறது. அந்தச் சிரிப்பில் இருந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கோபாலோடும் பிற நண்பர்களோடும் இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.


Friday, July 18, 2014

க.மோகனரங்கனின் “சொல் பொருள் மெளனம்”

                  
சொற்களின் அழகு மிளிரும் மதிப்புரைகள்

    

                
                முன்னெப்போதைவிடவும் சூழல் கொண்டிருக்கும் ஆரோக்கியத்தின் காரணமாக, பதிப்பகங்கள் வளம் பெற்று தங்களுடைய இயக்கத்தை முடுக்கிவிட்டிருக்கின்றன.பெரும் அளவில் குவியத் துவங்கியுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை மலைப்பையும் தேர்ந்தெடுப்பதில் சிரமத்தையும் ஒரு சேரத் தந்து கொண்டிருக்கின்றன.நுண்ணிய மனம் கொண்ட வாசகன் தான் விமர்சகன் என்பதால் இங்கு அவனுடைய பணியை நாம் கூர்ந்து நோக்க வேண்டியவர்களாகயிருக்கிறோம்.ஏற்கனவே உருவாகிவிட்ட தராசுத் தட்டுகளில் படைப்பை நிறுத்தி,அவற்றை பழைய எடைக்கற்களால் அளவிடுவதல்ல விமர்சகனின் பணி.அதற்கு படைப்பு,பண்டமோ சரக்கோ அல்ல.புதிய வெளிச்சங்களை படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் வழங்குவதோடல்லாமல் பின்தங்கிய படைப்புகளை நிர்தாட்சண்யமாக ஒதுக்கிவிடுவதுமே அவன் செய்யக்கூடிய முதன்மையான, தலையாய காரியமாக இருக்கும்.
             



                     விஸ்தீரமான களத்தைக் கொண்டிருக்கிற பரந்துபட்ட சாத்தியங்களை உள்ளடக்கிய நாவல் கலையில் அவற்றின் ஊடுபாவுகளை உள்வாங்கி அது ஏந்தி நிற்கும் சவால்களுக்கு ஈடுசெய்யக்கூடிய வகையில்,வெளியான நாவல்கள் தமிழில் குறைவு என்று விமர்சகர்கள் கணிப்பதுண்டு.இது விமர்சகர்களின் எண்ணிக்கைக்கும் பொருந்தும்.குறைந்த அளவிலான விமர்சகர்களுக்குள்ளும் கூட,படைப்பாளிகளே அதிக அளவில் விமர்சகனாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இதன் மூலம் விமர்சனம் எதிர்கொள்ளும் சிக்கலான இடங்களை நுட்பமாக நுஃமான் ,சுந்தர ராமசாமியின் “காற்றில் கலைந்த பேரோசைநூலின்  மதிப்புரையில் தொட்டுக்காட்டுகிறார்.அவ்வளவாகப் பயிற்சியற்ற,முன் முடிவுகள் ஏதுமின்றி ஒரு நூலுக்குள் கலந்து ஒன்றாகி பின் மீளும் போதிய ஆர்வமற்ற வாசகனுக்கு, வாசிப்பின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள விமர்சகனின் நுண்ணிய மனமும் கூரிய அவதானிப்புமே பக்கபலமாக இருக்கும்.அதே போல படைப்பாளி,விமர்சனம் மூலம் அடையும் செழுமையும் எழுத்து சார்ந்த பரிசீலனையும் தான்,சூழலை புத்துயிர்ப்போடு முன்னகர வழி செய்யும்.இவ்வாறு இருவருக்குமான வெளியை உருவாக்கும் விமர்சனமே மதிப்பைக் கொண்டது.அவ்வகையில் வெளியாகியிருக்கும் “சொல் பொருள் மெளனம்நூல் ஒரு முக்கியமான வரவு.
           

                        
                    ஒரு நூலை மதிப்பிட,அந்நூலுக்கு முன் பின்னாக இருக்கும் படைப்பு வரலாற்றோடு அந்நூலை இணைத்து, அதன் நீட்சியில் அந்தப் படைப்பும் அப்படைப்பாளியும்   கடந்து சென்றிருக்கும் புள்ளியைத் தொட்டுக்காட்டுவதோடல்லாமல் ,எவையெல்லாம் சூழலுக்கு உள்ளும் புறமும் கொடையை வழங்கியிருக்கின்றன என்பதை எந்தத் தத்துவச் சார்பற்றும் கோட்பாட்டுப் பின்னணியற்றும் அதற்கேயுரிய திறந்த மனதுடன் மோகனரங்கன் முன்வைத்திருக்கிறார்.ஜெயமோகனின் முன்னோடிகள் குறித்த மொத்த விமர்சன நூலையும் வாசிக்க இயலாதவர்களுக்கு அல்லது அப்படைப்பாளிகள் பற்றிய அறிமுகமோ போதுமான புரிதலோ கொண்டிருக்காதவர்களுக்கு அந்நூலின் சாரத்திலிருந்து தொகுத்துத் தந்துவிட்டு அவற்றைத் தன்னுடைய வாசிப்போடு ஒப்பிட்டு வரையறுத்து ஏற்கவும் மறுக்கவுமான நிதானத்தோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டிருக்கிறார்.இதன் தொடர்ச்சியாக “நவீன இலக்கியம் என்பது நவீனத்துவ இலக்கியங்களேஎன்னும் ஏற்கத்தக்க வாதத்தை எழுப்பிவிட்டு,அதற்குரிய காரணங்களை தர்க்கப்பூர்வமாக அடுக்கியிருக்கிறார்.மேலும் மரபைப் புறக்கணித்து,தனி மனித துக்கங்களுக்குரிய வடிவமாக  படைப்புருவத்தைக் கையாண்ட படைப்பாளிகள் குறித்த விமர்சனமும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.வாழ்வின் புறத்திலும் உள்மனங்களிலும் துக்கத்தைப் பெருமளவில் எதிர்கொண்டவர்கள் அவர்கள்.எனவே தான்,அவை படைப்புகளின் மீது பாவனையாக பிரதிபலிக்காமல் ஆழமாகவே நிலைகொண்டிருக்கிறது.அவர்களின் தோல்விகள் தான் படைப்பு வெற்றிகளாகியிருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.யதார்த்த்ததை நிலைநிறுத்த,பல நூற்றாண்டுகள் ஆதிக்கம் செலுத்திய மரபைத் தவிர்க்கவும் மறுக்கவுமான நிலைபாட்டையும் அவர்கள் எடுத்திருக்க்க்கூடும்.தொடர்ந்து மீண்டும் மீண்டும் மரபைப் புறக்கணித்த்தையும் ஆன்மீகத்தைப் பொருட்படுத்தாது இருந்ததிலும் மொழிக்கும் சிந்தனைக்கும் ஏற்பட்ட இழப்புகள் குறித்துப் பேசப்பட்டுள்ளது.




துக்கத்தை அதிகம் பேசாத அல்லது அதையும் புன்னகையோடு கூறும் இயல்புடைய முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் மீது இவர் மனம் கவிந்துவிட்டிருப்பதை அவர் பற்றிய கட்டுரையில் தெரிகிறது.முத்துலிங்கத்தின் கதையுலகு பல இடங்களில் வெளிக்காட்டிச் செல்வது இவர் கூற்றிற்கு நெருக்கமாகவே இருக்கிறது.அவரது புகைவண்டி இந்த தண்டவாளங்களின் மீது சொந்த ஊருக்கும் வேற்று நாட்டிற்கும் கண்டங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்வதையும் இங்கு நினைவு படுத்திக் கொள்ளலாம்.இதனாலேயே இவர் உலகு மற்றெல்லோருக்குமான ஈர்ப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
     

                     
                இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் கவிதை குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளும் கவிதை நூல்களின் விமர்சனமும் ஒரு பகுதியாக இருக்க,மற்றொன்றில் கவிதை அல்லாத பிற படைப்புகளின் மீதான நுட்பமான பார்வையோடு கூடிய மதிப்பீடு என தொகுக்கப்பட்டுள்ளது.அவற்றின் குணங்கள் மற்றும் தன்மைகள் சார்ந்து பொது மற்றும் தனித்த அடையாளங்களைக் கண்டுகொள்ள இது துணை செய்கிறது.காடுநாவல் பற்றிய கட்டுரையில் அந்நாவலை மட்டுமேயல்லாது மொழியின் அழகியல் மற்றும் படைப்பின் உள்ளோட்டங்களைத் தன்னுடைய பார்வை சார்ந்து விளக்கியிருப்பது வாசகனின் முந்தைய மதிப்பீட்டையும் அவன் அணுகியிருந்த கோணத்தையும் பரிசீலித்துக் கொள்வதற்கான வாய்ப்பைத் தந்திருக்கின்றன.குறிப்பிடத் தகுந்த,ஆனால் கவனிக்காது தவறவிட்ட புள்ளிகளை நோக்கி விமர்சகனின் மனம் குவியும் போது,படைப்பின் திக்குகளை அறிந்து கொள்வதன் மூலம் ஒருவித மேலான உணர்வு உண்டாகிறது.பின் தொடரும் நிழலின் குரல்நாவலில் ஆண்களின் பதட்டங்களுக்கும் சரிவுகளுக்கும் நேரெதிராக பெண்களின் ஆளுமை வகிக்கும் பங்கு குறித்த அவதானிப்பை இவ்வாறே புரிந்துகொள்ள வேண்டும்.


                

                    
                 எந்த நூலையும் சுலபமாக நிராகரித்து விடாமல் அவற்றின் இருப்புக்கு குறைந்த பட்சமான, ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் மோகன்.ஜீவனாம்சம்போன்ற நாவலிலிருந்து வெகுதூரம் நாம் வந்துவிட்டிருந்தாலும் கூட ஒரு பெண்ணைக் கொண்டு அன்றைய சூழலில்,நினைவோடை உத்தியை உபயோகித்திருந்த நாவல் என்ற அளவில் அதற்கு ஒரு வரலாற்றுக் காரணத்தை வழங்கி மறுதலிக்காததைப் போலவே மன ஊசலின் நேர்மையான பதிவிற்காக ‘கிடங்கு தெருநாவலையும் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கிறார்.கூளமாதிரிநாவல் எழுதப்பட வேண்டியதன் வரலாற்றுப்பின்னணி மற்றும் தமிழில் அதன் தேவை குறித்து கச்சிதமாகவே எழுதப்பட்டிருக்கிறது.சுதந்திரம் என்றோ.கட்டுக்குள் அடங்காத எல்லை என்றோ வசதிக்காக குறிக்க முயன்றாலும் இக்குறிப்பையும் விஞ்சி நிற்பதே ‘வெளி’. அவ்வாறான வெளியில் ஒரு நாளின் முக்கால் வீதத்தையும் கழிக்க வேண்டியிருப்பினும் கூட,அவ்வெளியே புலப்படாத ஒரு சிறையாக ஆகி கவனத்தைக் கடுகளவும் திருப்ப இயலாத ஒரு சிறுவனைப் பற்றியதான ‘கூளமாதிரிநாவலை மதிப்பிட்டிருப்பதில் போதாமை தென்படுகிறது.
            

               
                வடிவம்,சொல்லுதலில் நூதனம் போன்றவை ஒரு நாவலின் இலக்கியத் தகுதியை நிர்ணயிக்கத் துணை செய்யக்கூடியவை தானே தவிர,அதுவே இறுதியானதல்ல. எம்.ஜி.சுரேஷின் “சிலந்தி “, “37ஆகிய நாவல்கள் அவ்வகையானதே.மேலோட்டமாகச் சற்று அதிகமாக புகழ்ந்து விட்டது போல தோற்றத்தைத் தந்தாலும் ஆழத்தில் அவை பற்றிய விமர்சனம் கூர்மையாகவே வெளிப்பட்டிருக்கிறது. “37 நாவல் விமர்சனத்தில் பின் நவீன எழுத்து குறித்து குழப்பமில்லாத  தொனியில் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.


           

                 

                  சொற்களோடு ஆகக்கூடிய நெருக்கமான உறவைக் கொண்டிருப்பது கவிதையே.அது ஸ்தூலமாகவோ, அரூபமாகவோ வெளியீடு கொள்ளக் கூடும்.கவிஞனின் ஆளுமையின்பாற்பட்டது அது.மனதில் உண்டாமும் உணர்ச்சியின் தீவிரத்தை,காட்சிகளின் ஓட்டத்தைச் சற்றும் இடைவெளியின்றி தான் விரும்பும் விதத்தில் தாளுக்கு நகர்த்திவிடுவதே கவிஞனின் பிரதானமான நோக்கமாக இருக்கும்.உணர்ச்சி.வெளிப்பாடு இவை இரண்டிற்கும் இடைவெளியே இல்லாமல் ஆக்கும் விசாரத்தின் குமிழ்கள் அவன் மனதின் இரு கரைகளிலும் திருப்தியுராது அலைந்தபடியே இருக்கும்.சொற்களையும் அது கொண்டிருக்கும் முந்தைய அர்த்தங்களையும் தன் பயன்பாட்டின் மூலம் மாற்றியமைப்பதினூடாகவோ (பிரமிள்,நகுலன்),எளிய புழக்கத்திலிருக்கும் மொழியை நேர்த்தியாக கைகொள்வதினூடாகவோ (ஆத்மாநாம்,கலாப்ரியா) வேற்று முயற்சிகளினூடாகவோ கவிதையின் முகம் பன்முகம் பெற்றிருக்கிறது.கவிதைகள் மீது கொண்டிருக்கும் ஆழமான விரிவான வாசிப்பை அவற்றை வெளிக்கொணர மோகன் தேர்ந்தெடுத்திருக்கும் சொற்கள் உறுதிப்படுத்துகின்றன.மொழி சிறப்பான கணங்களை நூலின் பல இடங்களில் அடைந்திருக்கிறது.[உ.தா : “அர்த்த பிரவாகத்தில் சொற்களின் பிரசன்னம் நீரில் மிதக்கும் விளக்கின் ஒளிப்பிம்பம் போன்றதே”(பக்.161)].கவிதைகளின் மீதான ஆசிரியரின் பார்வையைத் திரட்டிக் கொண்டால்,படிமங்களின் அவசியத்தை அவர் மெளனமாக வற்புறுத்துவது தெரியும்.பிரமிள், ராஜசுந்தரராஜன் , பா.வெங்கடேசன் போன்ற கவிஞர்களின் தொகுப்புக்கு எழுதப்பட்ட மதிப்புரைகளிலும்,சமீபத்தில் மனுஷ்யபுத்திரனின் மணலின் கதைதொகுப்புக்கு ‘இந்தியா டுடேயில் எழுதிய விமர்சனத்திலும் அதைத் தெளிவாக நாம் காண இயலும்.இன்றைய நவீன கவிதை படிமங்களை உதற வெகுவாக பிரயத்தனப்படும் சூழலில் இது விரிவான விவாதத்தை தோற்றுவிக்கக்கூடும்.எழுத்துவிலிருந்து இன்றைய சிற்றிதழ் வரையிலான கவிஞர்கள் பலரைப்பற்றியும் விரிவாகவும் குறிப்புகளாகவும் இந்நூலில் மோகம் எழுதியிருக்கிறார்.மரபைத் துண்டித்துக் கொண்டதன் மூலம் நவீன கவிதைக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை யூமா.வாசுகியின் நூல் முன்னுரையில் மோகன் சற்று விரிவாகவே எடுத்துரைத்திருக்கிறார்.கவிதையைப் பற்றி ஒட்டுமொத்தமான பார்வையில் அணுகாமல் தனிப்பட்ட காரணகாரிய விளைவுகளைக் கொண்டே அதன் நிறைகுறைகளை அணுகியிருப்பது வாசகனின் பொறுப்புகளை மேலும் அதிகமாக்கியிருக்கிறது.இதில் “நவீன கவிதையின் சிந்தனைப் போக்குகள்முக்கியமான கட்டுரை.




             இந்நூலின் குறை வெளிப்படையான கறார் தன்மை இல்லாதது தான்.ஒன்றை மறுக்கும்போது கூட அந்நூலின் சாதக அம்சங்களைச் சுட்டிவிட்டு அதனடியில் அவற்றிற்கான விமர்சனம் மொழியினால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் உத்தி எந்தளவிற்கு பலமோ அதே அளவிற்கு பலவீனமும் ஆகும்.மறைந்து கிடப்பதைக் கண்டறியாத வாசகன்,அதிலிருக்கும் எதிர்மறையான அர்த்தத்தைத் தவறவிடக் கூடும்.(எம்.ஜி.சுரேஷின் எழுத்துக்கள்)





                 
ஒற்றைவரி அபிப்ராயங்களை முற்றாகத் தவிர்த்துவிட்டு பாரபட்சமற்ற அணுகுமுறையால் எழுதப்பட்டிருக்கும் இந்த விமர்சனங்கள் நம் வாசிப்பை மறுபரிசீலனை செய்துகொள்ள துணைபுரிவதோடல்லாமல் அவற்றினூடாக இக்கருத்துகள் சார்ந்து முரண்பட்டு விவாதத்தை உண்டாக்கவும் நம்மைத் தூண்டக்கூடும்.அதற்கான ஒரு வெளியும் இதில் இருக்கிறது.ஒரு உண்மையான விமர்சனத் தொகுப்பு செய்யும் மேலான காரியம் இது.இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்நூலை வாசிப்பது மட்டுமே.

நன்றி :தீராநதி நவம்பர் 2006

சொல் பொருள் மெளனம் – க.மோகனரங்கன் – யுனைடெட் ரைட்டர்ஸ் வெளியீடு.


குறிப்பு: இந்நூல் திருப்பூரில் யுவன் சந்திரசேகர் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன்.அந்நாளில் அது பெரிய சந்தோஷத்தையும் நம்பிக்கையையும்  அளித்தது.உடனடியாக நூலைப் படித்து மோகனுக்கு கடிதம் எழுதினேன்.அது பற்றி விரிவாக அவரிடம் பேசினேன்.அதன் விளைவாகவே இம்மதிப்புரையை எழுதினேன்.

Monday, July 14, 2014

பா.திருச்செந்தாழையின் ”வெயில் நண்பன் பிராத்தனை ஒரு பிரதேசம் ”




மதிப்புரை                




               

                                                      படைப்புக்கலையில் ஆக நுட்பமானதும் கூடுதல் கவனத்தைக் கோருவதுமான கலைவடிவம் சிறுகதையே.ஏனெனில் இங்கு தான் சில,  பல          பக்கங்களுக்குள் வாழ்க்கையின் சாரத்தை அதன் நெருக்கடியை       படைப்பாளி தான் கைகொள்ளும் மொழியின் வழியே வாசகனுக்கு    விளக்கிக்காட்டாமல்    உணர்த்திக்காட்ட      வேண்டிய கட்டாயத்தில்   இருக்கிறான்.  நவீன   தமிழில்   வளமான  சாதனைகள் நிகழ்ந்துள்ள வடிவமும் சிறுகதைதான்.முன்னோடிகள் அவர்களின் தனித்த வாழ்க்கைப்  பார்வையின்  மூலம்  உருவாக்கி    விட்டுச்சென்றிருக்கும் சிறுகதைகள் எந்த உலகமொழியின் சாதனைக்கதைகளுக்கும் நிகரானவை. இன்று எழுத வருபவனின்  முன் நிற்கும் சாவல்களில் முதன்மையானது அவற்றை எதிர்கொள்வதும்தன் படைப்பாற்றலால் அதை முன்னெடுத்துச் செல்வதும்  தான்.   மாறாக  அவர்கள்  கட்டியெழுப்பிய  கோட்டையின் பாதிப்பில் அதையே  போலச்செய்வதும்   அவற்றின் சுவர்களுக்கு  நமது புதிய  சாயத்தை  அடித்து  நம்முடையது      எனக்காட்டிக் கொள்ளவும் துவங்கினால் அவை வெளிறிப் போக நீண் நாட்கள் ஆகாது.எனவே தான் கருப்பொருள்  சார்ந்து  தேர்ந்த  பார்வையும்  மொழி மேல் ஆளுமையும் விரிந்த கனவும் கொண்டவனையே நாம் படைப்பாளி என அழைக்கிறோம்.
              

               


          இரண்டாயிரத்துக்குப் பின் எழுத வந்தவர்களில் நம்பிக்கையளித்த இளம் படைப்பாளியான பா.திருச்செந்தாழையின் 12 கதைகள் கொண்ட முதல் தொகுப்பு “வெயில் நண்பன் பிராத்தனை ஒரு பிரதேசம்”. யதார்த்தபாணிக் கதைகளும் அதை மீறிச் செல்ல ஆசை கொண்ட கதைகளுமுள்ள குறிப்பிடத்தகுந்த தொகுப்பு இது.
              


                   மரபிலிருந்து வேர்விட்டு காலப்போக்கில் பக்கவாட்டில் (செங்குத்தாக அல்ல)கிளைத்து பரவி நவீனமாக ஆகிய மொழியில் தன் கதைஉலகை பின்னத் தொடங்கும் படைப்பாளிக்கு கதையின் கூறுமுறை சார்ந்த நுட்பங்கள் வசப்படும் போதும் வசப்படாத போதும்  அவனுள் நிகழும்  பிரதானமான போராட்டம்  தன் முன் புன்னகையுடன் நிற்கும் மொழியை தன் உலகிற்க்குள் சப்பைக்கட்டு கட்டாமல் நிமிர்ந்தெழச் செய்து ஒளியூட்டுவது தொடர்பானது தான்.செந்தாழையின் கதைகளில் மொழி சார்ந்த நகர்வைக் கொண்ட கதையென ‘ஓவியத்தை வனைந்து பார்ப்பவள்கதையைச் சுட்டலாம்.மொழியின் துணை கொண்ட புதுமையான விவரிப்புகளையும் மீறி அவை அனுபவத்தின் மேல் கட்டியெழுப்பபட்டிருக்கவில்லையெனில் அவை வாழும் காலத்திலேயே பின்னகர்ந்து விடும்.அது போலவே இன்னும் சற்று முனைந்திருந்தால் நன்றாக வந்திருக்க கூடும் என்ற எண்ணத்தை தரும் கதை ‘மழை மஞ்சள் மரணம்’.கதை நிகழும் மையம் சார்ந்த ஓட்டம் குறுகி விடுவதாலேயே அது சென்று சேர வேண்டிய இடத்திற்கும் முன்பாகவே நின்று விடுகிறது.வாசகன் இட்டு நிரப்பிக் கொள்ள மெளன இடைவெளிகள் அவசியமானது தான்.அந்த  இடைவெளியின் தூரம் வாசகன் தன் மனதால் ஓடிக் கடக்கும்படி இருந்திருந்தால் இக்கதை மேலதிகத் தரத்துடன் வந்திருக்கும்.மேலும் “மரணத்தின் இதழ்களை ஒவ்வொன்றாக கிழித்து அவர்களுடைய இன்றைய தினத்தின் மீது மிதக்க விட்டான்”(பக்.81.)போன்ற வரிகளை செந்தாழை பரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.


             
   இத்தொகுப்பின் சிறந்த கதைகளென கோடைப்பகல்,பிம்பச்சிதைவு,ஆண்கள் விடுதி எண்.12 ஆகிய மூன்று கதைகளையும் குறிப்பிடத் தகுந்த கதையென ஜேசுதாஸின் காதலி கதையையும் சுட்டுவேன்.வாழ்வின் இல்லாமை சார்ந்த துக்கத்தை அதன் கோலங்களை கலைப்பூர்வமான கதைகளாக ஆக்கியவர் வண்ணநிலவன்.அவரது எஸ்தர்,மிருகம் போன்ற கதைகள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன.திருச்செந்தாழையின் ‘கோடைப்பகல்கதையில் வெக்கையும் வறுமையும் பற்களைக் காட்டித் திரியும், காலியாகிக் கொண்டிருக்கிற ஊரில் அழகுவை தன் அன்பாலும் காமத்தாலும் திணறடிக்கிற சங்கிலி ஒரு நாளில் அவளை விட்டுச் சென்று விடுகிறான்.பசியின் பொருட்டு “செத்துக் கிடக்கின்ற பல்லியின் சாயலாய் தோன்றுகின்றவனை கவனிக்கும் வேலையை அவளாக முன்வந்து ஏற்கிறாள்.அவர்களுக்குள் காமம் இடைகலக்கிறது.ஆனால் இருவருக்குமான காமம் சார்ந்த அர்த்தங்களோ வெவ்வேறானவை.பசியின் வலியில் அவனை நோக்கி வீசிச் செல்லும் சொல்லில் அக்காமம்,தன்னை தோலுரித்துக் காட்டுகிறது.அதனை சட்டெனக் கடந்து விடுவதாலேயும் மனதில் உள்ளோடியிருக்கும் கூறுகளை நுட்பமாக உணர்த்தி விடுவதாலேயும் இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.
                          
           யதார்த்தச் சித்தரிப்பின் ஊடாக விரியும் ‘பிம்பச்சிதைவுகதையை கசாப்புக்கடையை பின்னணியாகக் கொண்டு படைத்திருக்கிறார்.காந்தத்தின் இயலாமை சார்ந்த கோபங்கள் அதனால் மனதில் எழும் பழி வாங்குதல் சார்ந்த உணர்வு அது வேறோரு இடத்தில் வெளிபடும் விதம்,அதன் சீற்றம் போன்றவை கச்சிதமாகச் சொல்லப்படுதிறது.செந்தாழை விட்டுச் செல்லும் இடங்களை உளவியலின் துணையோடு வாசித்து நம்மால் இக்கதையை மேலும் நெருங்க முடியும்.
             
                   அறைத் தனிமையின் வெக்கை பீடித்த பொழுதுகள்,அதை எதிர்கொள்கையில் நேரும் தடுமாற்றம்,அடிவயிற்று பிரசவத்தழும்புகளைமுத்தமிடுமளவிற்கு மனதை நிறைக்கும் பெண்ணுடனான உடலுறவு,பின் மீண்டும் அதே தகிக்கும் அறையென கதையின் பயணத்தில் நம் மனதில் குமிழியிடும் எண்ணங்கள்,செந்தாழையின் சில நுட்பமான அவதானிப்புகள்,அதன் மூலம் கதை கொள்ளும் சலனம் ஆகியவை “ஆண்கள் விடுதி: அறை எண்.12கதையை மேலே கொண்டு செலுத்துகிறது.
            
                 பொருத்தமற்ற இரு மனங்களின் இணைப்பில் ஒரு மனதின் அபிலாஷைகளை,ரசனைகளைக் கண்டு கொள்ளும் சூட்சமமற்ற மற்றோரு மனதால் அந்த “ஜேசுதாஸின் காதலிகாயமுறும் போது குரூரமான எண்ணத்துடன் ஆனால் நிதானமாக அவனைச் சீண்டுகிறாள்.அப்போதும் அவனிடமிருக்கும் அமைதி அவளை மேலும் உசுப்ப குற்ற உணர்ச்சி கலந்த தொனியில் எரியம்பு போல கேள்வியை எறிய அவர் அதை முன்பை விடவும் நிதானமாக கடந்து செல்வது நன்றாக வந்துள்ளது.ஜேசுதாசுக்கும் அவளுக்குமான உறவின் நிலைகள் போல அவருக்கும் அவளுக்குமான உறவின் நிலைகள் இன்னும் விரிந்திருந்தால் கதை கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கும் எனத் தோன்றுகிறது.தொகுப்பில் குறிப்பிட்டுக்கூற வேண்டிய மற்றோரு கதை “அத்தை”.



            
                   ஏற்கனவே வாசித்த அனுபவத்தை தரும் கதையாகவே “மழைப்பொழுதில்இருக்கிறது. முக்கோணம்,பெயரற்றவன்,வெயில் நண்பன் பிராத்தனை ஒரு பிரதேசம் போன்ற கதைகளும் தொகுப்பில் உள்ளன.தொகுப்பிற்கு இவ்வளவு நீளமாக தலைப்பு வைப்பது பற்றியும் செந்தாழை யோசிக்க வேண்டும்.வாசகன் அதை எவ்வாறு தன் நினைவில் வைத்திருப்பான்? 
         

                 
                 திருச்செந்தாழையின் சிறுகதைகளை வாசிக்கையில் அவர் பல இடங்களில் உரைநடையை கவிதையாக மாற்ற , சற்றே பூடகமாகக் கூற முன்னுகிறாரோ எனத் தோன்றுகிறது. தோலுரிக்கப்பட்ட பிரியத்தின் நாற்றத்திலுருந்து...”(பக்.59)போன்ற சொற்ச்சேர்க்கைகள் ஆயாசத்தையே தருகின்றன.உரைநடையில் கவித்துவ உச்சத்தை அடைந்தாலும் அப்போதும் அது உரைநடை தான்.ஏனெனில் கவிதையின் அலகுகள் வேறு.உரைநடையின் வீச்சு வேறு.மொழியை அதன் ஜடத்தன்மையிலிருந்து மீட்டு தீவிரத்தன்மைக்கு கொண்டு செல்ல மெய்யான படைப்பாளி முழுஈடுபாட்டுடன் நிகழ்மொழியின் மீது குறுக்கீட்டை நிகழ்த்தி அதை திசைமாற்றம் செய்ய  எப்போதும் முயன்றபடி இருப்பான்.நவீன தமிழில் அது கவிதையில் பிரமிள் மூலமும் உரைநடையில் சுந்தர ராமசாமி மூலமும் நிகழ்ந்தது.இத்தலைமுறை சார்ந்த திருச்செந்தாழைக்கு சில திணறல்கள் இருக்க்க்கூடும்.அது இயல்பானதும் கூட. திருச்செந்தாழை தன் அடுத்தடுத்த கதைகளில் அதை தாண்டிச்செல்வார் என நம்புவதற்கான தடயங்களை இத்தொகுப்பு கொண்டிருக்கிறது.
           
            முதல் தொகுப்பிற்குப் பின் எங்குமே செந்தாழையின் கதைகளை காணவோ வாசிக்கவோ வாய்க்கவில்லை.மீண்டும் அவர்  தன் கதை உலகை நம்பிக்கையுடன் உருவாக்க வேண்டும்.

நன்றி : கல்குதிரை வேனிற்காலங்களின் இதழ்


வெயில் நண்பன் பிராத்தனை ஒரு பிரதேசம்- பா.திருச்செந்தாழை-காலச்சுவடு பதிப்பகம்

Monday, July 7, 2014

சுந்தர ராமசாமிக்கு எழுதிய கடிதமும் அவர் எழுதிய பதில் கடிதமும்

               



                                  
                                                               02.11.04
அன்புள்ள சுந்தர ராமசாமிக்கு
                      

                      வணக்கம்,உங்கள் 27.10.04 கடிதம் கிடைத்தது.சென்ற முறை போல உடல் அசெளகரியத்தோடு அல்லாமல்,இருவரும் நலத்துடன் திரும்பி வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
                    
                                         ”இதம் தந்த வரிகள்படித்தேன்.படைப்புக்கு முன்னும் பின்னும் இதற்கு வெளியிலும் ஒரு படைப்பாளி அடைகிற உந்துதல்களுக்கும்,அன்பு கலந்த நெகிழ்வுக்கும் ,படைப்பு சார்ந்த திட்டங்களுக்கு ஊக்கிகளாகவும் கடிதங்கள் இருந்திருக்கின்றன என்பதை அறிந்தேன்.கு.அழகிரிசாமியிடமிருந்து கம்பராமாயணத்தையும் உங்களிடமிருந்து அந்த எள்ளலையும் பிரித்து விட முடியும் என்று தோன்றவில்லை. முக்கியமாக “கடம்பொடு வாழ்வுஊர் பற்றிய எள்ளல் குறிப்புகள்.அந்த பெயரே வித்தியாசமாக இருந்தது. ‘முட்டைக்காரிஎழுதிய ஆண்டுக்குப் பிறகு உங்கள் மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள் கடிதங்களிலும் பிரதிபலிக்கிறது.ராஜமார்த்தாண்டனின் முன்னுரை நன்றாக இருந்தது. ‘புதுமைப் பித்தன் கதைகளுக்கு ரா.ஸ்ரீ.தேசிகனின் முன்னுரையும் ‘கிருஷ்ணன் நம்பி கதைகளுக்கு உங்களுடைய முன்னுரையும் படைப்பாளியின் குணங்களையும் படைப்பின் தன்மைகளையும் பற்றி பேசுபவை.அப்படிப்பட்ட முன்னுரைகளை காண்பதே அபூர்வமாக இருக்கிறது.
               
                       சி.சு.செல்லப்பாவுடனான நட்பில் விழுந்த இடைவெளி அவரது செயல்பாடு சார்ந்து எழுந்த விமர்சனத்தினால் தான் என்றாலும் அவரை விட்டுக் கொடுக்காமல் பேசியிருப்பதும் முக்கியமாக படுகிறது.பல இடங்களில் சி.சு.செல்லாப்பாவை க.நா.சு வோடு ஒப்பிட்டு இருவரின் நிறைகுறைகளைப் பற்றி பேசியிருப்பினும் இன்றும் உங்கள் மனம் க.நா.சு பக்கமே சாய்ந்திருக்கிறது.சி.சு.செல்லப்பாவுடனான நட்பை முறித்துக் கொள்ளக் கூடாது என்று நீங்கள் எடுத்த முடிவு சரியானதே.க.நா.சு பதிவில் உருவான க.நா.சு பற்றிய சித்திரத்தின் தொடர்ச்சி இப்பதிவிலும் தொடந்திருக்கிறது.பின்பாதியில்  சி.சு.செ-யின் முக்கியப் பங்களிப்புகளை எந்த மிகையுமில்லாமல் பதிவு செய்திருப்பது சிறப்பான விஷயம்.இப்போது,உழைப்பிற்கான உத்வேகத்தை இவரிடமிருந்து பெற்றுக் கொண்டது குறித்து பேசியிருப்பது அவருக்கு உங்கள் மனதில் இருக்கும் மதிப்பையே காட்டுகிறது.நான்கு பதிவிலும் எனக்கு மிகப் பிடித்தது நம்பி பற்றிய பதிவு தான்.
                

                   சமீபத்திய மூன்று சிறுகதைகளில் (காலம் இதழில் வெளிவந்ததையும் சேர்த்து) இரண்டு கதைகள் யதார்த்தவாதத்தையும் ஒன்று நவீனத்தன்மையும் பெற்றிருப்பவை.சுய அனுபவங்களிலிருந்து துலங்கி வருவது தான் யதார்த்த கதைகள் என்றாலும் இந்த இரண்டிலும் பெயர்கள்,சம்பவங்கள்,இடங்கள்  பற்றி அவ்வளவு வெளிப்படையாக எழுதியதற்கு ஏதேனும் காரணம் உண்டா?மூன்று கதைகளிலும் மிகச் சிறப்பானதாக உணர்ந்தது ‘ஒரு ஸ்டோரியின் கதை’.
                 
                   காஃகாவின் ‘விசாரணைமொழி சார்ந்து பெற்றிருக்கும் நுட்பத்திலும் மனிதர்களை , இடங்களை குறிப்பிடுவது பற்றிய கூர்மையிலும் மொழியினூடாக மனதையும் விகாசப்படுத்திற்று.ஒரு அறை மாறி மாறி ஒருவனுக்கு எவ்வளவு நெருக்கடியை உருவாக்குகிறது!இதோடு ‘உருமாற்றத்தையும் இணைத்துப் பார்த்தால் காஃகாவின் சிக்கலே இந்த சுவர்களும் இந்த அறைகளும் தான் என்று தோன்றுகிறது.உருமாற்றத்தைவிட சிறப்பான நாவல்.இரண்டுமே மேலான மொழிபெயர்ப்பு.
             
                        ஊர் நூலகத்தை திருப்பிப் போட்டு  உலுக்கியதில் ‘மெளனி கதைகள் கிடைத்தது.மறுவாசிப்பில் அவரது கதைகள் ,முழு அர்த்தத்துடன் முழுமைபெறா வாக்கியங்களாகவும் அவர் மனதில் நினைத்தற்கும் வந்துவிட்ட மொழிக்குமான சிறு இடைவெளியையும் கொண்டிருப்பதாகத் தோன்றியது.அதனை இப்போதைய வாசிப்பில் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்றாலும் தமிழின் மொழி பற்றிய சோதனைகள் அவரிடமிருந்து தான் தொடங்குகின்றன என்பதால் அவரது கதைகளுக்கும் அவருக்குமான இடம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.இக்கதைகளின் சமீப பதிப்பு பெரிய எழுத்துருவில் மோசமாக இருந்தது.
           
                    வேலையிலும் நேரநெருக்கடிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன்.ஒன்றை இந்த நாளுக்குள் வாசித்து விடமுடியும் என்ற கணக்கையும் தாண்டி இரண்டு மூன்று நாட்கள் கூடுதலாகவே ஓடிவிடுகின்றன.
              
                முன்பு போல இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஆர்வம் குறைந்து விட்டது.நான்கு  கூட்டங்களுக்கு அழைப்பு வந்தால் ஏதேனும் ஒரு வாரத்தின் கூட்டத்திற்கு மட்டுமே போய்க்கொண்டிருக்கிறேன்.
            
                     சத்தியமங்கலத்தில் நடந்த ‘காலச்சுவடுகூட்டத்தில் கலந்து கொண்டு கட்டுரை படித்தேன்.கண்ணனும் நாஞ்சில் நாடனும் கலந்து கொண்டவர்களும் ஒரு விஷயத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது வழக்கமான மார்க்சியர்களின் வறட்டுக் கேள்விகள் நேரத்தில் பாதியை விழுங்கி விட்டன.அவர்களது இடையூறுகள் மோசமான கட்டத்தை அடைந்த போது வெளியில் போய்விட்டேன்.
             
           ‘காலச்சுவடுக்கு ஒரு கதை எழுதி அனுப்பி இருக்கிறேன்.உங்களுக்கனுப்பி பரிசோதித்த பின் அனுப்பலாம் என்றிருந்தேன்.நீங்கள் ஊரில் இல்லாததால் நேரடியாக அனுப்பி விட்டேன்.
               
             தினமும் வீட்டிற்கு காலில் சேறோடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்.அந்தளவிற்கு நாள் தவறாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.
           
             குடும்பத்திலுள்ள அனைவருக்கும் என் அன்பைத் தெரிவியுங்கள்.

அன்புடன்
செந்தில்

(இக்கடிதத்தில் என் சொந்த வாழ்க்கை குறித்த பகிர்தல்களாக இடம் பெற்றிருந்த சில வரிகளை நீக்கி இருக்கிறேன்.பொதுவானவர்கள் அது பற்றி அறிய வேண்டியதில்லை என்பதே காரணம்.ஆனால் சு.ரா எனக்கு எழுதிய பதில் கடிதத்தை கீழே அப்படியே தந்திருக்கிறேன்)





11.11.04

அன்புள்ள செந்தில்,

உங்கள் கடிதம் கிடைத்து நாளாகிவிட்டது. நவம்பர் மாதத்திற்குள் நான் ஐந்து புத்தகங்களை அச்சுக்கு அனுப்பும்படி இறுதிப் பார்வை செய்ய வேண்டியிருக்கிறது. கடினமான வேலை தான். அதிக நேரம் அதையே செய்கிறேன்.

என் எழுத்துப் பற்றி உங்கள் அபிப்பிராயங்களையெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறீர்கள். படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. என் எழுத்துக்கள் சார்ந்த முரண்பாடுகள், ஏமாற்றங்கள், கருத்து வேற்றுமைகள் பற்றியும் வெளிப்படையாக நீங்கள் என்னுடன் பகிர்ந்துகொள்ளலாம். என் வளர்ச்சிக்கு அவை பயன்படும். தவறாக எண்ணிக்கொள்ள மாட்டேன். ஒருவர் மாறுபட்ட கருத்தைச் சொல்கிறபோது அவருடைய நோக்கம் எனக்கு முக்கியமானது. அவருடைய நோக்கத்தில் நான் நம்பிக்கை கொள்ளவில்லையென்றால் அவரை எதிர்கொள்ளும் முறை முற்றிலும் வேறு விதமாக இருக்கும்.

சாகித்திய அகாதெமிக்காக கிருஷ்ணன் நம்பி பற்றி ஒரு சிறு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதை ஒரு அறிமுகம் என்று சொல்ல வேண்டும். நவம்பர் மாதத்தில் அதை முடித்துத் தரவேண்டும்.

காலம்இதழில் நீங்கள் படித்த என் கதையை மறந்துவிடுங்கள். அது தப்பும் தவறுமாக அச்சேறிவிட்டது. இப்போது நான் எழுதியுள்ள பதின்மூன்று கதைகளைத் தொகுத்துக்கொண்டிருக்கிறேன். அந்தத் தொகுப்பு வெளிவந்ததும் மீண்டும் அந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்.

சில கதைகளை பெயர்கள், இடம் ஆகியவற்றை மாற்றாமல் ஏன் அப்படியே சொல்லிவிடுகிறேன் என்பதற்குக் காரணம் தெரியவில்லை. முன்னால் அப்படிச் செய்தது நினைவில்லை. அனுபவ உலகத்திலிருந்து கதை உலகத்திற்கு மாறும்போது ஒருவரின் பெயரை மாற்றக்கூட (முக்கியமாகப் பெண்களின் பெயரை) ஏதோ ஒரு மனத்தடை வந்துவிடுகிறது.






என் சிறுகதை எழுத்தில் நான் அடுத்த இடத்திற்குப் போகவேண்டும் என்ற துடிப்பு என் மனதிற்குள் வெகுவாக இருக்கிறது. அந்த இடத்திற்குப் போவதற்கான முயற்சியிலேயே பழைய பார்வை சார்ந்த சில கதைகள் எழுதத் தேவைப்பட்டுவிட்டது. இந்த வருடம் நான் எழுதியிருக்கும் கூடி வந்த கணங்கள்’, ‘மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’, ‘களிப்பு’, ‘பிள்ளை கெடுத்தாள் விளை’, ‘ஈசல்கள்’, ‘கிட்னி’ (எல்லாம் அச்சேற்றம் பெறாதவை) ஆகிய கதைகள் வித்தியாசமானவை என்று நினைக்கிறேன். இவற்றிலும் ஈசல்கள்’, ‘கிட்னி’, ‘மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’, ‘கூடி வந்த கணங்கள்ஆகிய கதைகள் புதிய தளத்திற்கு வந்திருக்கின்றன என்று ஒரு எண்ணம். நீங்கள் பின்னால் படித்துப் பார்த்து எனக்கு எழுதுங்கள்.

நீங்கள் காஃப்கா, மௌனி என்று கனமான ஆசிரியர்களைத் தேடிப் படிப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. எழுதும் காரியத்தையும் நீங்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மிகச் சிறப்பாக உங்களால் எழுத முடியும். மற்றொன்று ஆங்கில வாசிப்பில் தேர்ச்சி பெறுவது. பெரிய வித்தையில்லை. தினமும் அரைமணிநேரம் செலவழித்தால் போதுமானது.

நம் கல்வி மிகவும் சீர்கெட்டது. ஆனால் வேலைக்குப் போவதற்கு இந்தச் சுவரில்தான் முட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் அதில் தீவிர கவனம்கொள்ள வேண்டும். தமிழ்ச் சூழலில் உங்கள் எதிர்காலம் உறுதியாக இருந்தால்தான் நீங்கள் உருப்படியான காரியத்தைச் செய்வதற்கான ஆசுவாசத்தையும் மனநிம்மதியையும் பெறுவீர்கள்.

இலக்கியக் கூட்டங்களையெல்லாம் நீங்கள் தேர்வுசெய்துதான் போக வேண்டும். புத்தகங்களைத் தேர்வு செய்வது போலவே. இல்லையென்றால் நேரம் வீணாகிவிடும். அவசியமானவர்களைச் சந்திப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவசியமற்றவர்களைச் சந்திக்காமலிருப்பதும். நேரத்தைச் சேமிப்பதில் கண்ணும் கருத்துமாக இருங்கள்.

சத்தியமங்கலத்தில் நடந்த காலச்சுவடு கூட்டத்தில் நீங்கள் கலந்துகொண்டது நிறைவு தந்த விஷயம். கண்ணனிடமிருந்து அந்தக் கட்டுரையை வாங்கிப் படித்துப் பார்க்கிறேன். அதுபற்றி உங்களுக்கும் எழுதுவேன்.

காலச்சுவடுக்கு பிரசுரம் செய்வதற்கு வரும் விஷயங்களை நான் பொதுவாகப் படிப்பதில்லை. அவர்கள் சுதந்திரமாக இயங்க என்னால் முடிந்தளவுக்கு ஒதுங்கி இருக்கிறேன். முடிந்தளவுக்குத்தான்.

உங்கள் அம்மாவுக்கும் உங்களுக்கும் நன்றாக ஒத்துப்போகும் என்றால் அவர்களுடன் நீங்கள் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொள்ளலாம். பல விஷயங்களை வெளிப்படையாகவே பகிர்ந்துகொள்ள வேண்டும். இல்லாத வரையிலும் நட்பு நெருங்காது.

இப்போது நான் முடிக்க முனைந்துகொண்டிருக்கும் புத்தகங்கள் 1. மொழி பெயர்ப்புக் கவிதைகள் (99 கவிதைகள்) 2. என் சிறுகதைத் தொகுப்பு (தலைப்பு இன்னும் சூட்டவில்லை) 3. என் கட்டுரைத் தொகுப்பு (தலைப்பு: ஆளுமைகள் மதிப்பீடுகள்) 4. கேள்வி பதில்கள் (தலைப்பு வைக்கவில்லை. தீராநதியில் வெளிவந்தவை) 5. சாகித்திய அகாதெமிக்காக கிருஷ்ணன் நம்பியைப் பற்றி ஒரு அறிமுக நூல். இந்த வேலைகள்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன். இவற்றை முடித்துவிட்டு செய்ய மனதில் பல வேலைகள் இருக்கின்றன. அவற்றை முடிக்க ஆயுளில் செஞ்சுரி அடிக்க வேண்டும். எல்லாம் முடிந்த வரையிலும்தான்.

மிக்க அன்புடன்,
சு.ரா.

(சு.ரா வின் இக்கடிதம் காலச்சுவடு ஆகஸ்ட் 2011 இதழில் சு.ரா பக்கங்கள் பகுதியில் பிரசுரமாகியிருக்கிறது)