Friday, October 4, 2019

இரண்டு பேட்டிகள்





(கே.என்.செந்திலின் 'அரூப நெருப்பு' தொகுப்பை முன்வைத்து)


சந்திப்பு: சங்கரநாராயணன், .ராஜன்


கேள்வி: தற்காலத்தில் வெகுஜன எழுத்திற்கும் இலக்கியத்திற்குமான இடைவெளி திட்டமிட்டுக் குறைக்கப்பட்டு வருவதாகத் தோன்றுகிறது. வெகுஜன எழுத்தின் தரம் இலக்கியத் தரத்திற்கு நெருங்குவதாய் இல்லை. வெகுஜன எழுத்து இலக்கியமாக முன்வைக்கப்படுகிறதோ? இந்த போக்கு குறித்து?


பதில்: இந்தக் கேள்விக்குரிய மதிப்பு காலாவதியாகி விட்ட காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் என சிலர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் எப்போதையும் விட இன்றைய காலகட்டத்தில் தான் இக்கேள்வி தீவிரமாக எழுப்பப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல அது சார்ந்த கூர்மையான உரையாடல்கள் நிகழ வேண்டும் என விரும்புகிறேன்.

ஒரு பொழுதுபோக்கியை (Entertainer) எழுத்தாளராகக் கருதிய சூழலிலிருந்து தான் இந்தக் கேடுகள் தொடங்குகின்றன. சாரு நிவேதிதாவும் அவரதுதத்துப் பிள்ளைகளுமே இவை இரண்டிற்குமான அகண்ட இடைவெளியை அழிப்பதில் பிரதானமானவர்கள். அராத்து, சரவணன்சந்திரன் போன்றோரை படைப்பாளிகளாகக் கருதும் சூழல் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூட இருந்திருக்குமா? பட்டுக்கோட்டை பிரபாகருக்கு இலக்கியத்தில் என்ன இடமோ அதுவே இவ்விருவரின் இடமும். இந்த இருவரைக் குறித்து மட்டுமல்ல, ஜி.கார்ல் மார்க்ஸ், கணேசகுமாரன் போன்ற மேலோட்டமான எழுத்தாளர்களையும் கூட சாரு விதந்தோதியிருப்பதைக் கண்டால் முகச்சுளிப்பும் குமட்டலுமே மிஞ்சும், கூடவே லஷ்மி சரவணகுமாரையும்


விநாயக முருகன், ஆத்மார்த்தி போன்ற மொழியைக் கையாளத் தெரியாத இலக்கியம் கிஞ்சித்தும் கைவரப்பெறாத நபர்கள் சூழலை மாசுபடுத்துகிறார்கள். இவர்களின் பெரும்பாலானோரின் பதிப்பாளர் என்ற அளவில் இந்தக் கேட்டிற்கு முக்கியமான காரணகர்த்தராக மனுஷ்யபுத்திரனைச் சொல்வேன். .முருகேச பாண்டியன் போன்றஇலக்கிய விமர்சகர்கள்இவர்களின் நூல் குறித்து விளம்பும் சொற்களையும் பரிந்துரைக்கும் பெயர்களையும் கண்டால் அவை அவரைக் குறித்து இருந்த பழைய மதிப்பீடுகளை விரட்டி அடிக்கின்றன. மேலும் இலக்கியமே அல்லாத ஒன்றை இலக்கியமாக முன்நிறுத்தும் போக்கும் இதே கேட்டில் வந்து சேர்கிறது. சீனிவாசன் நடராஜனின்விடம்பனம்நாவலை(?) இதற்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.


இணையம் முக்கியமான ஊடகமாக ஆன பிறகு - இரண்டாயிரத்தின் மத்தியில் - இது போன்ற உள்ளீடற்றவர்கள் எதையேனும் எழுதி பிரசுரித்து இலக்கியம் என முன் வைத்தனர். தமிழில் எழுதத் தெரிந்தால் அவர் எழுத்தாளராகிவிடும் சூழ்நிலையின் தொடக்கப்புள்ளி. ஃபேஸ்புக்கில்மொண்ணைவரிகளுக்கு இடப்படும் நூற்றுக்கணக்கான விருப்பக்குறிகள் தன்னைக் குறித்த மிகுதியான கற்பனைகளுக்கு வழிகோலுகின்றன போலும். இப்படியான இடத்திலிருந்து தான் கடங்கநேரியான் போன்ற வெத்துவேட்டுபோலிக் கலகக்காரர்கள்உருவாகி வருகிறார்கள்.


மகத்தானஎன்ற சொல்லே மயக்க நிலையை அடைந்திருக்கக்கூடும். இல்லையெனில் வணிக சமன்பாடுகளுக்கு ஏற்ப தன் சரக்கை அவிழ்த்து வைத்த சுஜாதா போன்றவர்கள் எவ்வாறுமகத்தான படைப்பாளியாக ஆக முடியும்? அவர் உதிர்த்த சில தீவிர எழுத்தாளர்களின் பெயர்கள் சம்பந்தமான புல்லரிப்புகளுக்கு அளவில்லை. ஊரெல்லாம் சாராயம் காய்ச்சி விற்ற நபர் அது தந்த பெயரிலும் பணத்திலும் புகழிலிலும் சில நல்ல காரியங்கள் செய்வார். கொஞ்ச காலம் கழித்து அவரேநகரத் தந்தைஎன்றோகல்வித் தந்தைஎன்றோ அழைக்கப்படுவார். அதற்கு சற்றும் குறைந்தல்ல சுஜாதாவின் பிம்பம். அவர் நூலுக்கு நவீன அட்டையுடன் நல்ல பதிப்பு வந்தால் அவர் மகத்தானவர் ஆகிவிடுவாரா? கதர் வேட்டி, சட்டை போட்டவரெல்லாம் காந்தியவாதி என தன்னைக் கருதிக் கொள்வது போன்றது இது. ஃபேஸ்புக் எங்கும் குறைபட்ட சுஜாதாக்கள் ஆயிரக்கணக்கில் அலைகிறார்கள். இன்று அவர் இருந்திருந்தாரென்றால் தன் முகமூடி அணிந்த ஆயிரக்கணக்கான நபர்கள் தனக்கு விருப்பக்குறியிடுவதைக் குறித்து உள்ளூர விருப்பத்துடன் சுவாரசியமான கட்டுரையொன்றை எழுதியிருக்கக்கூடும். தீவிரமான மனநிலையுடன் உள்ளே வந்த .சீ.சிவக்குமார் போன்ற ஆட்களுக்கு கூட வெகுஜன இதழில் இடம் கிடைத்து சுஜாதா ஆகிவிட மாட்டோமா என்ற விருப்பம் தான் இருந்திருக்கிறது. சுஜாதாவின் நவீனமான உரைநடையே தமிழுக்கு தேவையானது. மற்றபடி அவரது பிம்பம் தீவிர வாசகரிடம் ஊதிப் பெருக்கப்பட்டதே.


ஏன்வாசகசாலையே இந்த இடைவெளிகளைக் குறைக்கும் செயலில் இறங்கி இருக்கிறதே! தமிழ்ச் சிறுகதையின் நூற்றாண்டையொட்டி பல அமர்வுகளை ஒருங்கிணைத்த வாசகசாலை, மகத்தான நாவல் வரிசைக்கும் அவ்வாறான கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்ததைப் பார்த்தேன். அந்த வரிசையில் திடுமென வைரமுத்துவின்கள்ளிக்காட்டு இதிகாசம்முளைத்திருந்தது. தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் நாவல்களும் மகத்தானவை, ஒன்றுக்கும் ஆகாதகள்ளிக்காட்டு இதிகாசமும்மகத்தானவை என்றால் அதன் அளவுகோல் தான் என்ன? மகத்தானவைகளின் வரிசையில் அவர் எப்போது வந்து சேர்ந்தார்? அவருக்கும் மகத்தான நாவலுக்கும் என்ன உறவு? சாகித்ய அகாதமி வாங்கியது தான் அளவுகோல் என்றால் ஞானபீடம் வாங்கிய அகிலனின்சித்திர பாவையை ஏன் தவிர்த்தீர்கள்? கோவி.மணிசேகரனை ஏன் விட்டு விட்டீர்கள்?


இக்கேள்விக்கு வேறொரு வகையில் தொடர்புள்ள விஷயமொன்றையும் இத்துடன் இணைத்தே பார்க்க விரும்புகிறேன். தமிழகத்திலும் தென்னிந்திய, இந்திய அளவிலும் உலகமெங்கும் நடந்த இலக்கிய அமர்வுகள், இலக்கிய முகாம்கள் எவ்வளவு என்று கணக்கிட்டீர்கள் எனில் அதில் ஏன் சிலர் தொடர்ந்து அழைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. சல்மா போன்ற ஒருவர் கடந்த ஐந்தாண்டுகளில் மேற்சொன்ன நிகழ்வுகளில் பத்துக்கும் மேற்பட்டவற்றில் தமிழ் மொழியின் பிரதிநிதியாக பங்கேற்றிருப்பார். ஏன் அவர் மட்டும் திரும்ப திரும்ப அழைக்கப்படுகிறார்? அவ்வாறு தொடர்ந்து அழைக்கப்படுவதற்குரிய தகுதி கொண்டவர் அல்ல அவர். வேறு ஒரு எழுத்தாளாருக்கு கிடைக்க வேண்டிய இடத்தை இவர் போய் எடுத்துக் கொள்கிறார். அடைத்து விடுகிறார். இந்த முகமே நவீன தமிழிலக்கியத்தின் முகமாக புரிந்து கொள்ளப்படாதா? சல்மா முன்னிறுத்தப்படுவது தமிழ் இலக்கியம் சார்ந்த சராசரியான முடிவுகளுக்கே பிற மொழிக்காரர்களைக் கொண்டு சேர்க்கும். சோ.தர்மன் போன்ற ஒருவர் இது போன்ற இலக்கிய அமர்களிலும் முகாம்களிலும் பங்கேற்பாளராகச் செல்லக் கூடிய நேரம் எப்போது தான் வரும்?


கேள்வி: ஒரு நாவல் என்பதுகதைஎன்ற ஒன்றைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது பல்வேறு விதங்களிலும், வடிவங்களிலும் சொல்லப்படலாம். சிறுகதை என்று வரும் போது, ‘கதைஎவ்வளவு அவசியமாகிறது?


பதில்: ’கதையிலிருந்து கதையை வெளியேற்றுவது குறித்து சா.கந்தசாமி தன் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். அவரைப் போலவே வேறு சிலரும் யோசித்திருக்கிறார்கள். ஆனாலும் எஞ்சுவது கதையே. அசோகமித்திரன் இவ்வாறானவற்றை எழுதிப் பார்த்திருக்கிறார். அவரதுநூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்ற போதுஎன்னும் சிறுகதையில்கதைஎன்ற ஒன்று இல்லை. கிட்டத்தட்ட கட்டுரையின் வகைப்பாட்டில் வைக்க கூடிய படைப்பு அது. ஆன போதும் அதிலுள்ள மறைபொருளும் உணர்த்த விரும்பும் விஷயமும் புனைகதையின் தீவிரத்தோடு இருப்பதை உணரலாம். ஒன்றே போல தோன்றக்கூடிய கதைகளின் சலிப்பிலிருந்து இக்கேள்வி வருவதாகத் தோன்றுகிறது. சுந்தர ராமசாமி ஒரு கதை போல பிறிதொன்றை எழுதியவரல்ல. ‘பிரசாதம்தொகுப்பு பெரும் கவனிப்பு பெற்ற போதும் அது போன்றதொரு கதையை பிறகெப்போதும் அவர் எழுதவில்லை. மாறாகபல்லக்குத் தூக்கிகள்கதையிலிருந்து அவர் படைத்த ஆக்கங்கள் முற்றிலும் புதியதாக கருப்பொருளில் ஒன்றுக்கொன்று வித்தியாசமானதாக இருந்தது. ஒன்றை எழுதி அது நன்றாக வந்தவுடன் மீண்டும் மீண்டும் அதே போல எழுதிக் கொண்டிருக்காததும் அதற்கு ஒரு காரணமாக இருக்ககூடும். அவரது மொத்தக் கதைத் தொகுதியை மீள்வாசிப்பு செய்கையில் மீண்டும் உறுதிப்பட்ட விஷயம் இது.

நாவலில் மட்டுமல்ல கதைகளிலும் முந்தைய உடலிலிருந்து வெளியேறுவதற்கான முயற்சிகள் நடந்துள்ளன. வேறு வேறு மாதிரியாகக் கதைகளைச் சொல்லிப் பார்ப்பது, ’மொந்தையான கதையாக முன்வைக்காமல் இருப்பது போன்றவை நடந்துள்ளன. ஜெயமோகனின்ஆயிரங்கால் மண்டபம்தொகுப்பில் உள்ள சில கதைகள் அவ்வாறானவை. எஸ்.ராமகிருஷ்ணனின்தாவரங்களின் உரையாடல்தொகுப்பு மாறுபட்ட கதைகளைக் கொண்டிருக்கும். ஆனால் மீண்டும் வாழ்க்கையின் அச்சில் சுழலும் மனிதர்களைக் கொண்ட கதைகளே முக்கியத்துவம் பெறுகின்றன. ’கதைஎன்பதன் அவசியம் அவசியமின்மை குறித்து, எழுதபவர்களுக்குத் தனித்த அபிப்ராயங்கள் இருக்கலாம். கதையின் சாத்தியங்களை விஸ்தரிக்கலாமே அன்றி கதையற்ற படைப்புக்கு என் கதையுலகில் இடமில்லை.


கேள்வி: எட்டு சிறுகதைகளிலிருந்து 'அரூபநெருப்பு' என்பதைத் தொகுப்பின் தலைப்பாக தேர்ந்தெடுத்ததற்கான காரணம்?


பதில்: ‘அரூப நெருப்புகதை பிரசுரமானதுமே அடுத்தத் தொகுப்பொன்று வரக்கூடுமெனில் அதன் தலைப்பு இதுவாகவே இருக்கட்டும் என முடிவெடுக்கப்பட்ட விஷயம் அது. ஏனெனில் அதற்கு முன்பு எழுதிய சுமார் பத்துக் கதைகளிலிருந்து (’இரவுக்காட்சிதொகுப்பிலுள்ள கதைகளையும் சேர்த்து) மொழியிலும் கருப்பொருளிலும் சொல்லல் முறையிலும் இக்கதை வெகுவாக முன்னகர்ந்து சென்றிருப்பதாக நினைத்தேன். அடுத்த கட்டம் இது என நம்பினேன். இக்கதையிலிருந்து எழுதப்பட்ட பிற கதைகளை வாசித்தால் உங்களுக்கே அது தெரியவரும். பிறகு வேடிக்கையாக எனக்குள்ளாகவே சொல்லிக்கொள்ளும் காரணம் ஒன்று உண்டு. எழுத்து என்பதே உள்ளே கிடக்கும் நெருப்பு தான். அது ஒரு போதும் அணையலாகாது. ஆனால் அது நேரடியாக தெரியவும் செய்யாது. அரூபமானது. எனவே எழுத்து சார்ந்த முறையிலுக்கும் (Process)  இத்தலைப்பு பொருந்துகிறது என நினைத்துக் கொள்வேன். இன்று வரை இத்தொகுப்புக்கு இந்த தலைப்பு போல நெருக்கமான வேறொன்றை எண்ணியதில்லை.


கேள்வி: அடியாளாக வேலை செய்பவன், பிணத்துடனும் பன்றியுடனும் படுத்துறங்குபவன், எச்சில் இலை பொறுக்குபவன், லாட்டரி விற்பவன், இறைச்சி உண்பதே தனது ஆகப்பெரிய சந்தோஷமாகக் கருதுபவன், முத்தம் தந்து மகிழ்விப்பதைத் தவிர தன் மனைவிக்காக வேறேதும் செய்ய இயலாத பொருளாதார சிக்கலில் உழல்பவன் என விளிம்பு நிலை மாந்தர்களின் வாழ்வை கதைக்களமாக தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இதற்கான காரணம்?


பதில்: உண்மையிலேயே எனக்குத் தெரியாது. எழுத வரும் முன் ஐயமாக இருந்த ஒன்று சில கதைகளை எழுதிய நேரத்திலேயே துலக்கமாகி விட்டது. நவீன தமிழ் இலக்கியத்தின் சாதனைகள் சிறுகதைகளிலேயே நிகழ்ந்துள்ளன என்பதே அது. எனவே பிறர் எப்போதும் கையாளும் கதைக்கருக்களைக் கதாபாத்திரங்களைக் கைகொள்ள வேண்டாம் என நினைத்தேன். இல்லையெனில் இந்நேரத்தில் நான்கைந்து சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கலாம். இவையெல்லாம் கதையை எழுதும் முன் யோசிக்கையில் தோன்றுபவை. ஆனால் எழுத அமர்ந்தால் அது இழுத்துச் செல்லும் திக்குகளுக்கே செல்வது வழக்கம். அதிலிருந்தே புதிய பாதைகளும் வெளிச்சங்களும் கிட்டியிருக்கின்றன. இக்கதைகளில் எதுவும் என் சுய அனுபவங்களின் - மிகச் சில தவிர்த்து - விளைநிலத்திலிருந்து பயிர் செய்தவை அல்ல. முற்றிலும் சம்பந்தமில்லாத வேறொரு உலகத்தைச் சார்ந்த மனிதர்களிடமிருந்து வந்தவையே. இந்தக் கதைகளின் வழியாக நான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருபடித்தான நிரல்களைக் கொண்ட லெளகீக வாழ்க்கையிலிருந்து தாவி வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடிகிறது.


இத்தொகுதியிலிருக்கும் ஒரு கதையின் கரு அல்லது எண்ண ஓட்டம் எங்கிருந்து தொடங்கியது என்பதைச் சொல்வதன் மூலம் உங்கள் கேள்விக்கு தோராயமான பதிலை அளிக்க முயல்கிறேன். பலராலும் குறிப்பிடப்பட்ட பிணக்கிடங்கில் வேலை செய்கிறவனைப் பற்றியவாசனை’.


அப்போது கல்லூரி முடிந்திருந்தேன். எல்லோர் மீதும் ப்ரியம் கொண்ட சிரிப்பில் துயரத்தை மறைக்கும் சந்திரா அக்கா குடும்ப பிரச்சனையால் நான்கு வயது மகனை விட்டுவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாள். அச்செய்தி நடுஇரவு எங்கள் குடும்பத்திற்கு வந்து சேர்ந்தது. அதிகாலை கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்தோம். பலரும் தடுக்க ஏதோ ஒரு தூண்டுதலில் துக்கத்தை ஏற்றக்கூடும் என்பதை மறந்து அந்தச் சிறிய அறைக்குள் நுழைந்தேன். நைட்டியுடன் சந்திரா அக்கா நாக்கு வெளித்தள்ளக் கிடந்தாள். அவள் சுருக்கிட்ட சேலையின் முனை இன்னொரு பிணத்தையொட்டிய இடத்தில் அசைந்தது. அங்கே ஒரு சிறுவனும் ஒரு குழந்தையும் உடல் கிழிந்து பிணமாக கிடந்தனர். அப்போது கடும் சாராய வாசத்துடன் அந்த அதிகாலையில் உள்ளே நுழைந்த ஆட்கள் சாவகாசமாக பேசியபடி அவற்றை இழுத்து ஒழுங்குபடுத்தியதைக் கண்டு குமட்டலுடன் வெளியே வந்ததும் உறவினர்களின் பெருத்த அழுகையொலி என்னை மோதியது. அதை சில மாதங்களில் மறந்து விட்டேன் என்றே நினைத்திருந்தேன்.


அந்த உலகை எழுத வேண்டும் என்ற உந்துதல் திடீரென்று ஏற்பட்டு எழுத அமர்ந்ததுமே அக்காட்சியை அவ்வளவு துல்லியமாக மனதால் கண்டேன். வேறு சில செவிவழி கண்வழி அனுபவங்களுடன் இணைந்து இவ்வளவு விஷயங்கள் எழுந்து வந்ததை நானே வியப்புடனேயே பார்த்தேன். அதை வைத்துக் கொண்டு முழுக்கதையையும் எழுத முடித்தேன். சில ஐயங்களை மட்டும் நண்பர்களிடம் கேட்டுத் தெளிந்தேன். அந்தப் பொறி இவ்வளவு நாட்கள் அணையாமல் மனதிற்குள் கிடந்ததையே எழுத போது தான் உணர்ந்தேன். இவ்வளவு தான் கூற இயலும். ஏனெனில் எழுதும் போது வேறொன்று நடக்கிறது. அதை விளக்கக் கருவிகள் என்னிடம் இல்லை.


கேள்வி: அருகில் இருந்து பார்த்து எழுதியதைப் போல அவ்வளவு நெருக்கமாக இருக்கிறது. உங்களை அறியாதவர்கள் யாரேனும் இத்தொகுப்பை வாசித்தால் ஒரு ரௌடியாக உங்களை நினைத்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் ஏராளம். அவர்களின் வாழ்வு எந்த அளவிற்கு உங்களுக்கு பரிட்சயம்?


பதில்: முந்தைய கேள்விக்கு அளித்த பதிலே இதற்கு பொருந்தும். உள்ளுணர்வை நம்பி செலுத்தப்பட்ட கலன்களே இக்கதைகள். ‘அம்மா வந்தாள்முன்னுரையில் தி.ஜானகிராமன்நான் பார்த்த பத்து பெண்களின் கலவையான வார்ப்பே அலங்காரத்தம்மாள்’ (இதே வரியல்ல, இப்படி பொருள் தரும் வரி) எனச் சொல்கிறார். அவ்வாறு தான் ஒரு பாத்திரத்தின் மேல் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்களின் குணநலன்கள் கலந்திருக்கும். இன்னும் சொல்வதென்றால் கதையில் அங்குமிங்கும் எழுத்தாளனின் மனப்போக்குகள் கூட ஊடாடிவரும். அவற்றை திரட்டினால் படைப்பாளியின் ஒருவகை சுயசரிதை அதற்குள் இருப்பதை அறியலாம். இதன் பொருள்நானும் ரௌடி தான்என்பதல்ல. எங்கெங்கோ கண்ட பல்வேறு வகையான மனிதர்களின் இயல்புகள் சட்டென ஒரு கதைக்குள் இணைந்து விடும். இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் இத்தன்மையை கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.


கேள்வி: இரண்டு கதைகளைத் தவிர பிற அனைத்தும் தன்னிலையில் எழுதப்பட்டிருக்கின்றன. தன்னிலையில் கதை சொல்கையில் சில வரையறைக்குள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் எழுத்தாளனுக்கு உருவாகின்றது. நேரடியாகவோ மறைமுகமாகவோ கதையின் எல்லா வரிகளிலும் கதைசொல்லியின் இருப்பு அவசியமாகின்றது. வர்ணனைகளுக்கு இங்கே இடமில்லை. கதைசொல்லி கேட்பதையும் நினைப்பதையும் தாண்டி வெளியே பிரவேசிக்க முடியாது. இப்படி இருக்கையில் தன்னிலையில் கதை சொன்னது ஏன்?


பதில்: ஏனென்றால் அதை எழுத முடிவு செய்த போதே அப்படித் தான் அமைந்தது. தன்னிலையில் கதை சொல்வது வசதியானதல்ல. பாத்திரத்தின் மனநிலைகள், அவன் வாழ்க்கை போன்றவற்றை எழுதுபவனுடையது என வாசகர் நினைத்துக் கொள்ளும் சாத்தியம் அதிகமுள்ளது. எனவே இடக்கரக்கடலுடனேயே எழுதத் தலைப்பட நேரலாம். தொடக்கத்தில் அப்படியான சில தயக்கங்கள் இருந்துண்டு. மிக விரைவாகவே அதிலிருந்து வெளியேறிவிட்டேன். ஆகவே என் கதைகளில் எவ்வித உணர்வுகளை அந்த கதாபாத்திரங்கள் அடைகின்றனவோ அதற்கு கடிவாளம் போடவோ குறுக்கே நின்று சமாதானப்படுத்தவோ முயலவேயில்லை. பிறகு கதைசொல்லி கேட்பதையும் நினைப்பதையும் தாண்டி பிரவேசிக்க முடியாது என்கிறீர்கள். உண்மையில் படர்க்கையில் கதை சொன்னாலும் அது தானே நடக்கும். வரையறையென்பது அக்கதைகள் அளிப்பவை தானே அன்றி வேறில்லை. எழுதுபவனின் வரையறை அவனது உலகம் சம்பந்தபட்டது. சிலர் சில விஷயங்களையே மீண்டும் மீண்டும் வேறு தொனிகளில் எழுதுவதை கண்டிருக்கலாம். அதைத் தான் வரையறை என நினைக்கிறேன். மற்றபடி இந்த தன்னிலை, படர்க்கை போன்றவை கதையின் வசதி கருதி அதன் ஓட்டம் சார்ந்து அமைவது தானேயன்றி அதை ஒரு குறையாக சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.


கேள்வி: சிறுகதைக்கு காலமும், இடமும் (அது நிகழும்) முக்கியம் என்பது முக்கியமான விதிகளுள் ஒன்று. சிறுகதைக்கென விதவிதமான வரையறைகளைக் காணமுடிகிறது. சிறுகதைக்கான தங்களின் இலக்கணம் என்ன?


பதில்: சிறுகதைக்கு என்றில்லை, எந்த படைப்புருவத்துக்கும் விதி, இலக்கணம் என ஏதுமில்லை. அவ்வாறு இருக்குமென்றால் அதை மீறிச் செல்வதே இலக்கியம். காலமும் இடமும் முக்கியமென கருதுகிறீர்கள் என்றால் அதிலும் ஒரு தெளிவுக்கு வரவேண்டியிருக்கிறது. காலம் என சில மணி நேரங்களையும் சொல்லலாம். பல வருடங்களையும் சொல்லலாம். அது போலவே இடமும். பிரத்யேகமான நிலப்பகுதிக்குள் கதை நிகழ்வதாக இருக்குமெனில் அதன் வட்டார வழக்குக்குள் சென்றாக வேண்டும். மேலும் காலத்தால் நகராமல் ஒரே இடத்தில் நடக்கும் கதைகள் வாசிப்பில் சுணக்கத்தை உருவாக்குவதில்லை. நல்ல வாசிப்பையே அளித்திருக்கின்றன. உதாரணமாக வண்ணநிலவனின்பலாப்பழம்’. ஒரே அறைக்குள் சில மணிநேரங்களில் நடக்கும் கதை தானே அது. தமிழின் மிக நல்ல கதைகளுள் ஒன்றாக அதைச் சொல்லலாம்


ஆனால் நாவலில் இடமும் காலமும் நகராமல் இருந்தால் அது வாசிப்பவருக்கு சலிப்பை அளித்து விடும். பெருமாள் முருகனின்நிழல்முற்றம்’, ‘கூளமாதாரிபோன்றவை தரும் அயர்ச்சிக்கு இதுவே முதன்மையான காரணம்.


கேள்வி: அரூப நெருப்பிலுள்ள கதைகளில் பலவும் நெடுங்கதைகளாகவும், குறுநாவல்கள் போலவும் உள்ளன. நீங்களே அதை உங்கள் உரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்குக் காரணமாக சென்ற கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள காலமும், இடமும் இருக்கின்றன என்றால் அது சரியா? உதாரணமாகவெஞ்சினம்கதையில் கதைசொல்லி ஒரு கொலை செய்வதாய் தொடங்கி அவனே இறந்து போவதாய் முடிகிறது. இக்கதையின் வளர்ச்சி அவன் ஏன் அவ்வாறு செய்கிறான் என்பதற்கு அவன் பால்யத்திலிருந்து தொடங்கி, படிப்படியாக எவ்வாறு உருமாறுகிறான் என்று எல்லாவற்றையும் சொல்கிறது. அவன் போய்ச் சேர்ந்த குழுவில் அவனுக்கும் அதில் உள்ள இன்னொருவனுக்கும் இருக்கும் போட்டியை, அவன் குழுத்தலைவனுக்கு இருக்கும் சந்தேக புத்தியை அதற்கான காரணத்தை என எல்லாவற்றையும் படம்பிடிக்கிறது. இவ்வாறு பலகிளைகளை விரிக்கும்போது இது நெடுங்கதையாகவோ, குறுநாவல் தன்மை உடையதாகவோ ஆகிறதென்றால் அது சரியா?


பதில்ஆமாம். உண்மை தான். சில கதாபாத்திரங்கள் அதன் வழியாக ஒரே கதை, அக்கதை சுற்றும் மையபுள்ளி என ஆனதல்ல இக்கதைகள். எழுதும் போது கதைகளிலிருந்து உருவாகிவரும் பல மனிதர்களின் வாழ்க்கை மைய பாத்திரத்துடனோ அல்லது மைய பொருளுடனோ (.தா: ‘அரூப நெருப்பில் நாற்காலி, ‘நிலையில் வீடு) உறவு கொண்டிருக்கின்றன. எனவே அவை பெரிய அளவில் சொல்லப்பட வேண்டியதாக இருந்தது. அப்போது அவை சட்டென்று கிளைபிரிந்து சென்று விடுகின்றன. பல வாழ்க்கைகளின் குலைவுகளிலிருந்து எழுதப்படுவதால் இவை குறுநாவல்களின் தோற்றத்தை அடைந்து விடுகின்றன. சில கதைகளை வாசித்த நண்பர்கள் ஏன் நாவலாக ஆக வேண்டியதைப் பாதியிலேயே நிறுத்தி விட்டீர்கள்? எனக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அக்கதைகளை அங்கே முடித்தது தான் சரி என்று எனக்குப் பட்டிருக்கிறது. தேவையில்லாமல் நீட்டிச் சென்றால் நீர்த்துப் போய்விடும். இக்கதைகள் நாவல் எழுதுவதற்கான பயிற்சியா என என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்தந்த சந்தர்ப்பங்களில் மனநிலைக்குத் தக்கவாறு ஆம், இல்லை என இரு பதில்களையும் சொல்லிக்கொள்வேன்


இக்கதைகளில் காலமும் இடமும் நகர்ந்தபடியிருப்பதைத் தொகுப்பை வாசித்தவர்கள் உணர்ந்திருக்கக்கூடும். நேர்கோட்டில் சொல்லப்படாமல் காலம் எப்போதும் முன்பின்னாகவே கையாளப்பட்டிருப்பதையும் நீங்கள் கண்டிருக்கலாம்


கேள்வி: இக்கதையை ஒட்டி இன்னுமொரு கேள்வி. இக்கதை சரியான திட்டமிடலுடன் எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு கொலை, அதை யார் செய்தது, அவன் வரலாறு என்ன, கதாப்பாத்திரங்களின் அறிமுகம், பின்கொலைக்கான காரணம், முடிவு. இதைப் போன்ற தெளிவான கட்டமைப்பு சிறுகதைக்கு எவ்வளவு முக்கியம்?


பதில்: ‘வெஞ்சினம்கதையைப் பற்றிப் பேசுவதால் மட்டுமல்ல, திட்டமிடல் இல்லாமல் ஒரு கதையை எழுத முடியுமா எனத் தெரியவில்லை. எங்கே செல்கிறது என்பது வேண்டுமானால் தற்கணத்தின் உடைப்பிலிருந்து நிகழலாம். ஆனால் எங்கே முடிக்க வேண்டும் என்பதோ அதை எந்த வடிவத்தில் பிரசுரிக்க வேண்டுமென்பதோ திட்டமிடலுடன் சம்பந்தப்பட்டது தான். இக்கதை வெளிவந்த மறுநாளே தமிழின் முக்கியமான கவிஞர் ஒருவர் அழைத்துஇக்கதையின் உலகம் பற்றி பிறகு பேசலாம். ஆனால் இக்கதை அதன் மொழியாலும் சொல்முறையாலும் நிற்கும்என்று சொன்னார். இன்றும் பொருந்திப்போகும் அவதானிப்புகளுள் ஒன்று எனத் தோன்றுகிறது. ‘கொலைபற்றி பேசும் போது இதன் மைய பாத்திரத்துக்கு ஒரு ரவுடிக்கும்பலின் முக்கியமான இடத்திலுள்ள பாத்திரத்துக்கு நாயைக் கண்டால் பயம். அவ்வளவு பெரிய இடத்துக்கு வந்த பிறகும். ஒரு வித பதட்டம் கொண்டவன் அவன். அவன் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நிமிடத்தில் எங்கோ ஒலிக்கும் நாயின் ஊளையொலியைக் கேட்டு கூட அஞ்சுகிறான். இங்கிருந்தும் இக்கதையை வாசித்துப் பார்க்கலாம்.


எங்கு எவை குறைவாகச் சொல்லப்படலாம்? சேர்க்க வேண்டிய பகுதி எங்கேயிருக்கிறது? ஆகியவற்றை திட்டமிடலின்றி எப்படிச் செய்ய முடியும்? ஒரு ஆக்கம் முழுமையாக எழுதப்பட்டு விட்டதாகத் தோன்றியவுடன் முதல் வாசகராக அமர்ந்து எதிர்பாராமல் வந்தமர்ந்த வரிகளையும் இடங்களையும் சிலாகித்துக் கொள்ளும் அதே மனநிலையுடனேயே தேவையற்ற பகுதிகளைக் கத்தரித்து எறிவதற்கும் தயங்க வேண்டியதில்லை. ஆனால் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவ்வளவு கச்சிதமாக ஒரு கதை அமைய வேண்டுமா என்னும் ஐயம் எனக்கிருக்கிறது.  


கேள்வி: வெஞ்சினம், வெறி, பழிதீர்க்கும் மூர்க்கம், மறுக்கப்பட்ட உரிமை, நிராசை, பொருளாதார சிக்கல் என இத்தொகுப்பின் கதைமாந்தர்கள் அனைவர்களுக்குள்ளும் நெருப்பு எரிந்தபடியே இருக்கின்றது. 'திரும்புதல்' கதையில் ஓரிரு இடங்களில் மட்டுமே நகைச்சுவை வெளிப்படுகின்றது. எளியவர்களின் வாழ்வில் இடம்பெறும் மகிழ்வான தருணங்களைத் தவிர்த்ததற்கான காரணம்?


பதில்: நீங்கள் சொல்கிற கூறுகளோடு அந்த பாத்திரங்களின் மனதில் நெருப்பு எரிவது உண்மை தான். என்றாலும் இன்னும் கொஞ்சம் ஆழமாக நோக்கினால் அவமானப்படுத்தப்படுவதன் வழியாகவே அதை ஆற்றுப்படுத்த முடியாமல் அவர்கள் ஆகிவிடுவதை உணரலாம். அது ஒரு ஆறாக்காயமாக, எரிதழல் போல அவர்களின் உள்ளங்களை பொசுக்குவதன் வெம்மை தாளாமல் தான் அந்த மூர்க்கத்தை கைகொண்டுவிடுகிறார்களோ என அச்சாகி வந்த பிறகு ஒரு சேர நிதானமாக மீளவும் ஒரு தடவை வாசித்த போது தோன்றியது.


வாழ்க்கையின் உக்கிரமானத் தருணங்களின் மீது கதை நிகழும் போது அதற்குள் நகைச்சுவையை வைத்தால் அந்த தீவிரம் மழுங்கிவிடக்கூடுமல்லவா? மேலும் அந்த பாத்திரங்களுக்கே நகைச்சுவை உணர்வு இல்லாமல் இருக்கையில் எழுதுபவன் வீணே அவர்களுக்கு கிச்சுகிச்சு மூட்டி நெளிய வைக்கக் கூடாது. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வில் கொண்டாட்டங்களும் நகைச்சுவை உணர்வுக்கும் பஞ்சமில்லை. இங்கு அதை செய்ய இடமில்லை என நினைத்தேன். முந்தைய தொகுப்பில் உள்ளமேய்ப்பர்கள்கதையை வாசித்திருந்தீர்களெனில் அது துயரக்கிடையிலும் மகிழ்வின் தருணங்களையும் கொண்டிருப்பதைக் கண்டிருக்கலாம்.


கேள்வி: பொதுவாக இலக்கியம் துயரங்களைப் பேசுவதற்கான உளவியல் என்னவாக இருக்குமென நினைக்கிறீர்கள்?


பதில்: அது ஒட்டுமொத்த சமூக உளவியலின் பிரதிபலிப்பாக இருக்கலாம். சந்தோஷம் எப்போது வேண்டுமானாலும் தீர்ந்து விடக்கூடிய பானமுள்ள கோப்பையாக இருக்கும் போது துயரம் ஊற்று போல மனிதர்கள் வாழ்வில் வற்றாமல் கிடக்கும் என்பதையே பேரிலக்கியங்களும் மகத்தான ஆக்கங்களும் சில விதிவிலக்குகள் நீங்கலாக மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழில் நவீனத்துவ இலக்கியங்கள் நிலைபெற்று கோலோச்சிய காலகட்டத்திலிருந்து இங்கு மேலும் அது வலுவானது. இவற்றிலிருந்து தப்பியவர் .முத்துலிங்கம் போல வெகுசிலரே. மற்றொருவனின் துயரத்தில் - தனக்கு அவன் சம்பந்தமுள்ளவானகவோ இல்லாதவனாகவோ இருக்கும் பட்சத்திலும் - தன்னுடைய பங்கு மிகச்சிறு அளவேனும் இருக்கக்கூடுமோ! என தோன்றுவதும் காரணமாக இருக்கலாம். ஏனெனில் அவன் நம்சக ஹிருதயன்அல்லவா? மேலே ஒட்டிக்கொள்ளும் புன்னகையின் பூச்சுகளைக் கடந்து ஒட்டுமொத்தமாக மானுட வாழ்க்கை துயரத்தால் ஆனதாகவே தோன்றுகிறது


கேள்வி: ‘மாறாட்டம்கதை ஒரு முக்கியமான கதையாக தோன்றுகிறது. கணவனால் நேசிக்கப்படும் ஒரு பெண், அவ்வளவு வறுமையெல்லாம் இல்லை, செக்ஸ் வாழ்க்கையில் குறையேதுமில்லை. இருப்பினும் வேறொரு ஆணுடன் தவறான உறவில் இருக்கிறாள். அதை அறியும் அவளைக் கொலை செய்து விடுகிறான். இக்கதையில் எந்த ஒரு விசயமும் ரொமான்டிஸைஸ் செய்யப்படவில்லை. ஏன் தொகுப்பில் இருக்கும் எல்லா கதைகளிலுமே அது இல்லை. உதாரணமாக புவனா ஏன் வேறொரு ஆணுடன் உறவில் ஈடுபடுகிறாள் என்பதற்கு சேலைகள் மட்டும் ஒரு காரணமாக காட்டப்பட்டாலும் அது வலுவானதாக இல்லை. ஏனென்றால் கதையின் எந்த இடத்திலும் வறுமையை முன்னிலைப் படுத்துதலோ அதனால் பொருட்கள் மீது ஆசை கொண்டவளாகவோ புவனாவைக் காட்டுவதோ நிகழவில்லை. பரமு அவளை அடிக்கிறான். அதனால் அவள் வேறொரு ஆணின் அன்புக்கு ஏங்கி போவதாகவும் இல்லை. அவனின் வன்முறையை ஒருவாறு ஏற்றுக்கொண்டவளாகவே வருகிறாள். இருந்தும் முறையற்ற தொடர்பில் உள்ளாள். லாட்டிரி சீட்டு விற்பவனாக பரமு வருகிறான். அவனின் குணநலன் சிறப்பான முறையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. திடீர் திடீரென கோபம் கொள்பவனாகவும், பின் உடனே சமாதானம் அடைபவனாகவும் வருகிறான். இக்கதையை அவன் பார்வையில் பார்த்தால் தவறான நடத்தை கொண்ட மனைவியைக் கணவன் கொன்றான் என்று சுருங்கி விடுகிறது. இக்கதை கொலையையோ, முறையற்ற உறவையோ நியாயப்படுத்தவில்லை. அதேசமயம் எதை முன்வைக்கிறது?


பதில்: எதையுமே முன்வைக்கவில்லை. சிலவற்றைத் திறந்து காட்ட முயன்றிருக்கிறது. பிறகு சில கற்பிதங்கள் இருக்கின்றன. மணவாழ்க்கையில் வேறொரு உறவை ஆணோ பெண்ணோ நாடிச் செல்ல யாரேனுக்கேனும் குறையிருக்க வேண்டும், அதிருப்தி நிலவ வேண்டும் என்பதெல்லாம் இல்லை. சில சமயம் அது ஒரு காரணமாக இருக்குமென்றாலும் பெரும்பாலும் இவையெல்லாம் சரியாக அமையப்பெற்றவர்களே மற்றொரு உறவுக்குள் இருப்பது சாதாரணமாக நடக்கிறது


அக்கதையை விளக்கிக்காட்ட விரும்பவில்லை. அந்தச் சேலை எவ்வாறு கொலைக்கான மனநிலைக்கு அவனை இட்டுச் செல்கிறது என்ற இடம் உளவியலின் துணையால் மேலும் துலக்கமாகும். ஒரு தடவை கவிஞர். ராஜசுந்தர்ராஜன் இக்கதையை குறிப்பிட்டுஅவளைக் கொல்லாமல் விட்டிருக்கலாம்என்றார். அந்தக் குரலையே இன்னும் சிலரும் ஒலித்தார்கள். இக்கதை எழுதப்படும் காலம் இருபத்தொன்றாம் நூற்றாண்டு. கடந்த நூற்றாண்டின் மதிப்பீடுகள் மனித வாழ்க்கைக்குள்ளும் வீழ்ச்சியையே சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கையில் தி.ஜானகிராமனோ, சுந்தர ராமசாமியோ, அசோகமித்திரனோ அவளை மன்னித்திருக்கலாம். இந்த நூற்றாண்டின் எழுத்தாளன் கருணையற்ற காலத்தை கண்முன்னால் கண்டு கொண்டிருப்பவன். புதுமைப்பித்தன்கருணை கிழங்கு வர்த்தகத்தில் முடிந்து விட்டதுஎன்று எழுதி ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுகள் ஆகி விட்டன என்பதை கவனிக்க வேண்டுகிறேன்


கேள்வி: நாடகீயமான முடிவுகள், சிறுகதைக்கு பலமா? பலவீனமா


பதில்: அது அந்தச் சிறுகதை தேர்ந்து கொண்ட விஷயத்தில் தானே இருக்கிறது! ஆனால் நாடகத்தனமாக முடிவுகள் கொண்ட கதைகளிலிருந்து விலகி வந்து விட்ட காலத்தில் இருக்கிறோம் என நினைக்கிறேன்.


கேள்வி: உங்கள் கதைகளில் கொலை குறித்த காட்சிகள், வர்ணனைகள் சினிமாத்தனமாக இருப்பதாக விமர்சனம் வைக்கப்படுகிறது. சமீபத்தில் இதையே ஜீ.முருகன் எழுதியதாக ஞாபகம். இந்த விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?


பதில்: இந்த விமர்சனத்தை ஏற்கவில்லை. ஜீ.முருகன் வேறொரு நூலை விமர்சக்கும் போது ஒரு வரியாக இதைச் சேர்த்திருக்கிறார். அதை வாசித்தேன். தனிப்பட்ட உரையாடலொன்றில் அவருக்குச் சொன்ன பதிலையே இங்கும் சொல்ல விருபுகிறேன். அவை சட்டென அதிர்ச்சிக்காக நிகழ்வதில்லை. உள்ளூர ஊறிக்கிடக்கும் மூர்க்கம் வெளிப்படும் தருணத்திலேயே நடக்கின்றன. அந்த பாத்திரம் அந்த முடிவை எடுப்பதற்கான பின்னணிகள் உளவியல் காரணங்கள் அக்கதைக்குள்ளேயே மறைந்திருக்கின்றன. அவ்வளவு தான்.


நன்றி : வாசகசாலை இணையதளம் ஜுலை 2017. 

 
                                     =============================

இரண்டு பேட்டிகள்


படைப்புச் செயல்பாட்டில்வாசகர் கதவுக்கு அப்பால் நிறுத்திவைக்கப்பட வேண்டியவர்!”

சந்திப்பு : விஷ்ணுபுரம் சரவணன்


சிறுகதை எழுதுகையில் வாசகர் பற்றிய பிரக்ஞை எந்தளவு 
உங்கள் மனதில் இருக்கும்?

சிறிதளவு கூட இருக்காது. சிறுகதை என்றில்லை, வேறெந்த படைப்புருவத்தை எழுதத் தேர்ந்தாலும் வாசகர் மூன்றாம் நபரே. படைப்பின் முறையியலின் (Process) ஊடாக வாசகரை நினைவு கூர்ந்து கொள்வது போல ஆபத்து பிறிதில்லை. எங்கிருந்தோ வந்து வெற்றுத்தாளை ஆக்கிரமித்து நிரப்பும் பாத்திரங்களின் போக்குகளை எண்ணி வியப்புடனும் பரவசத்துடனும் இன்னொரு உலகை (அது எங்கிருந்து எப்படித் தொடங்கி நீள்கிறது என்னும் புதிருடன்) நிர்மாணிக்கத் திணறலுடன் முயன்று கொண்டிருக்கும் எழுத்தாளரல்வாசகரை எவ்வாறு நினைத்துக் கொள்ள முடியும்? ஆனால் பிரதியின் இறுதியும் அறுதியுமான உடைமையாளர் வாசகரே. ஆயினும்படைப்புச் செயல்பாட்டில் தாழிடப்பட்டக் கதவுக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட வேண்டியவர் அவர். எழுதும் போதே அவரை உள்ளே அழைத்து இருக்கையும் தந்து பேசவும் அனுமதிப்பீர்களென்றால் நீர்த்துப்போக கையெழுத்திடுகிறீர்கள் என்றே பொருள். அதற்குதமிழில் ஜெயகாந்தனிலிருந்து (பிற்கால கதைகள்) எஸ்ராமகிருஷ்ணன் வரை( கடந்த பத்தாண்டு கால கதைகள்) உதாரணங்கள் உண்டு.

சிறுகதையில் வட்டார வழக்குக்கு இடம் எவ்வளவு?

அது எழுதுகிறவரையும் அவர் எழுதும் நிலப்பரப்பையும் சார்ந்தது.உதாரணமாக பா.வெங்கடேசனின் படைப்புகள் நிகழுமிடங்கள் பெயராகத் தான் வருமேயன்றி அவற்றில் அந்நிலமக்களின் பேச்சுமொழிக்கு இடமேயில்லை. உரையாடல்கள் கூட பொதுமொழியிலேயே அமைந்திருக்கும். மாறாக வட்டார வழக்கிலிருந்து பிரிக்கவே முடியாதவர் கண்மணி குணசேகரன். இவர் ’நடுநாட்டுச் சொல்லகராதியை தனியொருவராக உருவாக்கியவர். இது உயந்தது அது தாழ்ந்தது என்னும் பேதங்கள் இதன் பொருட்டு உருவாகவேண்டியதில்லை. ஆனால் வாழும் மண் மீது படைப்பாளி கொண்டிருக்கும் ஆழமான பிணைப்பையும் நேசத்தையும் உறுதி செய்பவை வட்டார வழக்குச் சொற்கள் புழங்கும் ஆக்கங்களே.

நல்ல சிறுகதைக்கான உங்களின் வரையறை என்ன?

வரையறை என்பதெல்லாம் வசதிக்காக சொல்லிக் கொள்பவை தான். எந்த ஒன்றுக்கும் வரையறை என ஏதுமில்லை. ஒரு காலகட்டத்தில் கோலோச்சும் படைப்புகள் சார்ந்து விமர்சகர்களால் ரசனை, அழகியல் மற்றும் கோட்பாடுகளால் முன் வைக்கப்படுபவை அவை. யதார்த்தம் , நவீனத்துவம், மேஜிக் ரியலிசம், பின் நவீனத்துவம் என ஒவ்வொரு காலகட்டங்களில் ஏதேனுமொரு அலை வீசி ஓய்ந்திருக்கிறது. இவற்றிற்கு மொழியாக்கங்களே பிரதான காரணியாக இருந்திருக்கின்றன. ரஷ்ய இலக்கிய மொழியாக்கங்களின் போது யதார்த்தவாதம், பிறகு .நா.சு கொண்டு வந்த அயலக படைப்புகள் அதன் பின் இலத்தின் அமெரிக்க இலக்கியத்தின் வழி எழுந்த மேஜிக் ரியலிசம் குறித்த உரையாடல்கள், போன்றவற்றை இங்குள்ளவர்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். கோட்பாடுகளை, இசங்களை முன்னிருந்தி வந்த படைப்புகள் அதன் செயற்கைத்தனம் மற்றும் நகலெடுத்தல் காரணமாக நகைப்புக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாயின. ஆன போதும் கோட்பாடு சார்ந்த எழுத்துக்களையும் பேச்சுகளையும் விவாதங்களையும் எழுத்தாளன் கவனத்துடன் பின் தொடர்தல் அவசியம். தொண்ணூறுகளின் மத்தியில் மராட்டியிலிருந்து வெளிவந்த தலித் சுயசரிதை மொழிபெயர்ப்புகளுக்குப் பின் மீண்டும் யதார்த்தவாதம் இங்கு செல்வாக்குப் பெற்றது நினைவிருக்கலாம். ஒன்றின் காலகட்டம் முடிந்து அல்லது அது போதாமல் ஆகும் போது அதை உடைத்து அடுத்த கட்டம் வேறொன்றை உருவாக்கும். ஏனெனில் அடிப்படையிலேயே இலக்கியத்திற்கு தான் இலக்கணம். அப்படி வரையறுக்கப்படும் எல்லைகளை மீறிச் செல்வதே இலக்கியம்.

வாசித்த ஐந்து நல்ல சிறுகதைகளை சட்டென்று சொல்லச் சொன்னால்?

அபு ஹுசைனின் குகைக்குள் சென்ற அலிபாபா போல திகைத்து நிற்க வேண்டியது தான். அவ்வளவு செல்வ வளம் மிக்க மகத்தான கதைகள் கொட்டிக் கிடக்கும் கஜானா நம்முடையது. சட்டென்று என்றாலே ஐம்பதைச் சொல்லி விட முடிகிற நிலையில் ஐந்து என்பது கடைந்தெடுத்தக் கஞ்சத்தனம். பலராலும் எப்போதுமே பட்டியலிடப்படுகிறவற்றை ஒதுக்கி வைத்து விட்டு சமகால எழுத்தாளர்களின் ஆக்கங்களிலிருந்து உடனடியாக மனதில் தோன்றுகிற ஆனால் மிக நல்ல கதைகளைச் சொல்கிறேன். பா.வெங்கடேசனின் ‘ராஜன் மகள்’ , ஜெயமோகனின் ‘வாரிக்குழி, தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு, ஜே.பி. சாணக்யாவின் ‘ அமராவதியின் பூனைகள்,ஷோபாசக்தியின் ‘கண்டிவீரன், இமயத்தின் ‘ஈசனருள். (கணக்கில் ஒன்று கூடிவிட்டது, பொறுத்தருள்க).

ஒரு சிறுகதை வாசகருக்கு எவ்வாறு இறங்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? வாழ்வின் அனுபவமாக அல்லது மொழியின் அனுபவமாக?

ஒன்றை மற்றொன்று இட்டு நிரப்பி நிறைவு செய்யக்கூடியவை தான். இரண்டுக்குமே வலுவான ஆதாரங்களைச் சொல்லி நிறுவிவிட முடியும். ஆனால் வெறும் மொழியால் மட்டும் படைப்பு நிற்கும் என நம்பவில்லை. ஈராயிரம் மரபு கொண்ட மொழியிலிருந்து எழுத வந்திருக்கிறேன் என்ற போதம் மிகத் தேவையானது. அனுபவ வெம்மையின் முன் மொழியின் அழகியல் நடனங்கள் பின்னொதுங்கி விடும். என்றபோதும் எழுதுபவனின் தனித்த காலடிகளின் முதுகெலும்பு அவனது மொழியே. மொழியின் வசீகரித்தால் ஈர்க்கும் ஆக்கங்களில் கூட அதன் கலைமதிப்புக்கு உள்ளட்டகத்திற்கே முன்னுரிமையளிக்கப்படுவதைக் காணலாம். இன்றைய சூழலில் பத்திரிகையாளனின் நடையில் எழுதப்படும் படைப்புகள் பெருகிவருவதும் அவர்களை படைப்பாளிகள் என நம்புவதும் கூட மொழி பற்றிய கூருணர்வு மங்கி வருவதால் தான். ஒருகட்டத்திற்கு பின்னும் மொழி குறித்த பிரக்ஞையை வளர்த்துக் கொள்ளாமல் எழுதிக்கொண்டே இருப்போமெனில் ஆவணக்காப்பகத்துக்கு ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்றே ஆகும்.

நன்றி : விகடன் தடம் ஆகஸ்ட் 2019 இதழ்.

=============================

Saturday, August 10, 2019

அரூப நெருப்பு



அரூப நெருப்பு






ரசத்திற்குள் சோற்றுப்பருக்கைகள் மிதக்கப் பாதித் தட்டில் நிரம்பியிருந்த அதன் சாறைக் கைகளால் தூர் வாரி ஒன்று சேர்த்துப் பிழிந்து, கிட்டிய பருக்கைகளை அவளைப் பார்த்தபடியே மென்றேன். நாகு, என் தொடையில் பலமாக அடித்துச் “சத்தம் போடாம சாப்புட்றா . . . ஏன்டா பன்னி மாறி சாப்பிடும்போது சப்சப்னு சவுண்ட் கொடுக்கற” என்றான். அவன் டீயைக் கழுநீர் குடிக்கும் மாடுபோல உறிஞ்சிக் குடிப்பதை எண்ணிக்கொண்டேன். விஜயா அசையாமல் நின்றுகொண்டிருந்தாள். அவள் உதடு மட்டும் எதையோ கணக்கிடுவதுபோலப் பதற்றத்துடன் துடித்தது. உள்ளே அப்பாவின் அறையிலிருந்து பசிய இலையின் வீச்சம் காற்றுக்கு வேகமாக வந்து தாக்கிற்று. பிருஷ்டத்தில் சூட்டுக் கொப்புளம் வந்து அவரை மேலும் படுத்திக் கொண்டிருந்தது. அக்கதவை அடைத்துவிட்டு வேகமாகச் சமையலறைக்குள் சென்று திரும்பிய அலமேலு அம்மா, “ஏன்டீ சிலை மாதிரி நிக்கற?” என்று அவளைத் தள்ளி விலக்கிவிட்டு வந்து மீன்துண்டுகளை அவர்களுக்கு வைத்தாள். தலைதூக்கிப் பார்த்ததும் “தீஞ்சு போச்சுடா கணேசு” என்றாள். நாகு பொன்னிறத்தில் முறுகலாகத் தன் தட்டில் குப்புற விழுந்து கிடக்கும் மீனை லாவகமாகப் பிட்டு கண்ணை மூடிச் சுவைத்தான். பின்னே, அவள் மகன் அல்லவா! நான் ஒண்ட வந்தவன்தானே? விஜயா நாகுவிடம் எதையோ கூற எண்ணி வாய் திறந்து, என்னைக் கண்டதும் எச்சில் தட்டுகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.


ஈர்க்குச்சியைச் சிறுதுண்டாக உடைத்துப் பல்லைக் குத்தி நாக்கால் துழாவியபடியே விஜயாவை நோக்கி “யேன்ன் நாள் தள்ளிப் போயிருச்சா?” என்றேன். அவள் மலைத்து நின்று என்னைப் பார்த்தபோது வேண்டுமென்றே அவள் கண்களை ஊடுருவுவது போல நோக்கினேன். “கணேசா” என்றாள் தழுதழுத்த குரலில். நான் நன்றாகச் சாய்ந்து “சொல்லு குட்டீ” என்றேன் உதடுக்குள் புன்னகையைத் தேக்கியபடி. நான் செல்லம் வைத்து அழைப்பதை அவள் வெறுக்கிறாள் என உணர்ந்ததும் அவளை இம்சிக்கவே குரலில் குழைவுடன் அவ்வாறு அழைத்தேன். அதில் சீண்டப்பட்டவளாக “ஆமாண்டா, நீ பாடையில போறதுக்கு நாள் தள்ளிப் போயிடுச்சு” என்றாள். உற்சாகமாய் நிமிர்ந்து “அடிச்சக் கேன்னானாம்! என்னோட கருமாதிக்காவது நல்லா மீன வறுத்து வைய்டீ” என்றேன். உள்ளே சாமான்கள் விழுந்து புரளும் சத்தம் கேட்டது. “த்தூ” என வராத எச்சிலைத் துப்ப முயன்றாள். என் மீது அது தெறித்ததில் கோபமுற்று, அதை வெளிக்காட்டாமல் “குட்டீயோட எச்சிலையும் அமுதமா நெனைக்க நானொன்னும் நாகு இல்ல” என்றேன். “விஷம்டா கணேசா, உன் ஒடம்பெல்லாம் விஷம்” என்றாள் கண்களை அகலத் திறந்து. “என்னோட உடம்பப் பத்தி உனக்கெப்படிடீ தெரியும். அதுக்குத்தான் ஒருத்தன் உனக்கு இருக்கானே” என்றேன் இளக்காரமாக. அம்மா இருவரையும் நின்று பார்த்துக் கடந்தபோது அவள் கண்மணிகள் பயந்த சுண்டெலி போல அங்குமிங்கும் அலைந்து, என்னை அங்கிருந்து அகற்ற விளக்குமாறை எடுத்து இல்லாத குப்பையைப் பெருக்கித் தள்ளினாள். கைலியின் பின்புறம் ஒட்டிய குப்பையைத் தட்டியபடியே மெல்ல எழுந்து அவளை நோக்கிக் குனிந்து “எப்போ கௌம்பறீங்க?” என்றேன். அவள் சீமாரைக் கீழே போட்டுவிட்டு உள்ளே ஓடினாள்.




விஜயாவை அப்பா கூட்டிக்கொண்டு வந்து நிறுத்திய பின்மாலையில் மழை பெய்து ஓய்ந்து சொட்டிக்கொண்டிருந்தது. பெரும் சிரமப்பட்டு அம்மாவிடம் அப்பா விஷயத்தை அவிழ்த்தபோது தன் தலையில் இரு கைகளாலும் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டு அம்மா கதறினாள். நாகு, அப்பாவை எரிப்பது போலப் பார்த்தான். அவன் அம்மாவிடம் சென்று “இந்தாம்மா” என ரூபாயைத் தந்து “போயி மருந்து வாங்கிட்டு வா. குடிச்சிட்டு இப்படியே செத்துப் போயிரலாம்” என்றான். அப்பா முடிவுக்கு வந்தவர் போல விஜயாவை உள்ளறையில் அமரச் செய்துவிட்டு வெளியே வந்து நடுங்கும் தன் கைகளால், அம்மாவின் கைகளைப் பற்றி மௌனமாகத் தலை கவிழ்ந்து நின்றார். அவள் முகத்தைப் பட்டெனத் திருப்பிக் கைகளைத் தட்டிவிட்டாள். எனக்குச் செய்தி எட்டி மூச்சு வாங்க நடந்துவந்து சேர்ந்தபோது வீட்டின் ஜன்னல்களுக்கருகிலும் கதவுகளுக்குப் பக்கத்திலும் பெண்கள் கூட்டமாக நின்று குசுகுசுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அம்மா சவக்களை படிந்த முகத்துடன் “நீயேன்டா ராஜா சாகற? அசிங்கத்த மிதிச்சவங்களே அதய வாயிக்குள்ள உட்டுக்கும்போது நமக்கென்னடா?”என்றாள். நான் உள்ளே நுழைந்ததும் வீட்டின் தோற்றத்தைக் கண்டு பெரும் நிம்மதியுடன் நாகு அமரும் நாற்காலியை நோக்கிச் சென்று அமராமல் தூணோடு சேர்ந்து சாய்ந்து அமர்ந்தேன். நாகு சுண்டிய முகத்துடன் அமர்ந்திருந்ததை ரசிக்கும் இடைவெளியில் குறுக்கிட்ட “கணேசா, உங்கப்பஞ் செஞ்ச காரியத்தப் பாத்தியாடா” என்ற அம்மாவின் பெருங்குரலுக்குப் பதில் சொல்ல எழுந்தேன். வீட்டிற்கு வெளியிலிருந்து குரல்களின் சலசலப்பு கேட்டவுடன் தெருவே கேட்கும் குரலில் “இங்கயென்ன என்னோடத அறுத்து வச்சிருக்குன்னு, அதைய பாக்கறதுக்காடீ தொண்டு முண்டைகளா இப்புடி அலையறீங்க? அவ அவ பொழப்புக்குள்ள அடிக்கற நாத்தம் எனக்குத் தெரியாதுன்னு நெனைச்சீங்களா?” என்றாள். அப்போது பட்டுப்போன மரத்தின் கிளையொன்று முறிவது போன்ற ஒலியுடன் கதவு மெல்லத் திறந்தது. அவள் குரல் அப்படியே அடங்கி மூச்சிரைப்பு மட்டும் பலமாக வெளிப்பட்டது. ஒரு சிறுவன் உள்ளிருந்து வந்த அதட்டலுக்கு நிற்காமல் அலமேலு அம்மாவின் அருகில் வந்து “அவ்வா” என்றான். மூவருமே அக்கணத்தில் உறைந்து போனோம். எனக்குள்ளேயே “மனவாடா!” எனக் கூறிக்கொண்டபோது அம்மாவும் அதையே உச்சரித்திருக்கக்கூடும் என உதடுகளின் அசைவு காட்டியது. அம்மா முகத்தைத் திருப்பித் தெலுங்கில் கூசும்படியான வசவொன்றை எங்கள் மூவருக்கும் கேட்கும் குரலில் சொன்னாள்.


அப்பா, அம்மாவை நோக்கிப் பலமாக ஒரு எட்டு வைத்து அம்மாவின் கண்களிலிருந்த கனலைக் கண்டு அப்படியே தன் குரலை இறக்கி “அலமேலு . . . அலமேலு” என மன்னிப்புக்காக இறைஞ்சி நின்றார். அவர் பக்கம் திரும்பாமலேயே “பையன் தலையெடுத்து நிக்கிறான். இந்தாளுக்கு கூத்தியா கேட்குதா?” என்றாள் என்னை நோக்கி. உள்ளிருந்து விஜயா சூறைக் காற்று போல நொடியில் அம்மாவின் எதிரில் வந்து நின்று பேச வாயெடுப்பதற்குள் “போடீ உள்ள” என அப்பா விஜயாவைப் பார்த்துக் கத்தினார். அவள் அச்சிறுவனை இழுத்துச் சென்று பலமாக அடித்தாள். அவன் அவளிடமிருந்து விடுபட்டு அழுது வீங்கிய முகத்துடன், அலமேலு அம்மாவின் பக்கமாகச் சென்று வயிற்றைப் பிடித்துச் சோர்வாக, “ஆயிலிகனி” என்றான். அம்மா நிலைதடுமாறி நாகுவின் முகத்தைப் பார்த்தாள். நாகு ஏற்றுக்கொள்வானோ? என ஒருகணம் அஞ்சினேன். “பட்டினியில சாகட்டும்” என்று கறுவினான். நாகு, அப்பாவின் முன்னால் தலையைக் கூடத் தூக்கத் துணிவற்றவன். அவர் முன்னாலேயே இப்படித் துள்ளுகிறான். அளவற்ற மனநிறைவுடன் அச்சிறுவனை நோக்கி “இக்கட ராரா” என்றேன். காத்திருந்தவன் போல, நாகுவின் கூரிய பார்வையை அலட்சியம் செய்தவனாக வந்து என் மடியில் அமர்ந்துகொண்டு மீண்டும் அதையே சொன்னான். அந்நொடியில் பால்ய நினைவுகளின் சுழலில் சிக்கித் தவித்துக் கரையேறி அங்கு வந்து சேர்ந்தேன். ரேக்கின் தடுப்புக் கண்ணாடியை நகர்த்தி இரண்டு பழங்களை அவனுக்குத் தந்து “நீ பேரேமிரா?” என்றபடியே அவனை மடியில் நன்றாக இருத்திக்கொண்டேன். “வெங்கடகிருஷ்ணன் மாமா” எனக் கூறியதும் அவளது அம்மா இருந்த அறையை அச்சத்துடன் பார்த்துவிட்டு “வெங்கி மாமா, வெங்கி மாமா” என்றான். அது அப்பாவின் அப்பாவுடைய பெயராயிற்றே? அம்மாவின் உடல் கோபத்தால் நடுங்கியது. அங்கு நிற்கக் கூசியவளாக உள்ளே வேகமாகப் போனாள். “சரி . . . சரி அதி அவ்வா காதுரா . . . நீ பெத்தம்மா” என்றேன் நாகுவுக்குக் கேட்கும்படியாக. அவன் எனக்கருகாக வந்து “இப்போ இந்தத் தாயோலியக் கொன்னாலும் என்னோட ஆத்திரம் அடங்காதுடா” என்று தமிழில் கத்தினான். அந்தப் பையனை இறுக அணைத்தபடி “ஒரு மயிரும் புடுங்க முடியாது போடா” என்றேன். நாகு அந்தப் பதிலடியை ஒரு அடிமையிடமிருந்து எதிர்பார்த்திருக்கவேயில்லை என்பதை அவன் முகத்தில் வெடிக்கும் நெருப்பில் அறிந்தேன். அவன் விடுவிடுவென வெளியே சென்றான். “ஐயோ . . . ஐயோ” என அப்பா இப்போது தலையிலடித்துக் கொண்டு அழுதார். அம்மா அங்குப் பார்க்காமல் தன்னருகே வரும் பூனையின் மேல் கைக்குக் கிட்டிய எச்சில் தம்ளரை எடுத்து வீசினாள். அது பயந்து கண்களை ஒருமுறை அகலத் திறந்து சிமிட்டிய பிறகு வெளியே குதித்து ஓடிற்று. அப்பா கலைந்த தலைமுடியை ஒதுக்காமல் வெளியே போனார். அப்போது தன் முதுகுக்குப் பின்னே தெருவே திரண்டு கேலி செய்வதாக எண்ணிக் கொண்டார். அவர் தலை தாழ்ந்து தன் காலடிகளுக்குச் சற்றுத் தள்ளி விழும் தன் நிழலைப் பார்த்துக் காறித் துப்பினார்.


வெங்கி இரண்டாவது பழத்தையும் சாப்பிடுவதற்குள் “இந்த வூட்ல நிம்மதிய கெடுத்துட்டியேடி பாவி முண்ட” என விஜயாவின் அறையை நோக்கி ஆங்காரமாகக் கத்தி இரத்தக் கொதிப்பு உச்சத்திற்குச் சென்று அம்மா மயங்கி விழுந்தாள். மாத்திரைகள் தந்து படுக்கச் செய்த பிறகுகூட உள் அறையில் எந்தச் சலனமும் ஏற்படாதது கண்டு விஜயாவை எண்ணி அஞ்சினேன். நாகுவை ஒடுக்க இவளைப் போன்றவள் தான் வேண்டும் என நினைத்தபடியே வெங்கியைத் தூக்கித் தோள்மேல் போட்டுக் கொண்டு சந்தோஷத்தில் குதித்துக் குதித்து அவனுக்குச் சிரிப்பு மூட்டினேன்.




அம்மாவுக்கும் விஜயாவுக்கும் மௌன யுத்தமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அவளது புடவைகளை வீட்டின் பின்புறமாக அலசி உலர்த்தியது கண்டு அவைகளின் விலை பற்றிய ஐயத்தை ரசம் வாங்க வந்த புவனாவிடம் கேட்டு அம்மா மலைத்துவிட்டாள். அப்பா ஒருநாளும் அம்மாவிற்கு அது போன்ற வாழ்வை அளித்தவரல்ல. அம்மாவின் கத்தல்கள் எதையுமே கேளாதவள் போல உள்ளறையில் மொறு மொறுப்பாகக் காய்ந்துபோன அப்புடவைகளை விஜயா மடித்துக்கொண்டிருந்தாள். விஜயாவின் மௌனம் உடைந்த அன்று அம்மாவுக்கு மேலும் கூடுதல் சத்துள்ள இரத்தக் கொதிப்பு மாத்திரைகளை வாங்க வேண்டியிருந்தது. அவர்கள் இருவரும் ஜாடைப் பேச்சுகளில் அப்பாவையும் அவரவர்களின் அந்தரங்கத்தையும் நிர்வாணமாக உரித்து வதம் செய்தனர். காத்திருந்த காதுகள் அவைகளில் மேலும் சில சங்கதிகளைச் சேர்த்துப் பொடி தூவித் தெருவெங்கும் உலவவிட்டன. அதற்குப் பயந்து நாகு குறுக்கு வழியில் வீட்டிற்கு வந்து செல்லத் துவங்கினான். அவன் தொட்ட தொழில்கள் எல்லாம் அவனைக் கைவிட்டன. அந்த எரிச்சலில் ஒருநாள் அம்மாவை நாகு அதட்டி அடக்கினான். பின் ஆச்சரியமாக விஜயாவும் அமைதியாகிவிட்டாள்.


அம்மா குளிர்க்காய்ச்சலில் விழுந்து வீடு அலங்கோலமாக மாறிக்கொண்டிருந்த வேளையில் விஜயா உள்ளறையிலிருந்து தனது எல்லைகளை மெல்ல மெல்ல விரிவாக்கி வீடு முழுக்கக் கையில் எடுத்துக்கொண்டாள். வெளியே உண்டபடியே சில நாட்கள் நீடித்த நாகுவின் ரோஷம் வயிற்றைப் புரட்டிய இரவோடு முடிவுக்கு வந்தது. நான் அம்மாவுக்கு மாத்திரைகள் வாங்கி வீட்டினுள் நுழைந்த சமயத்தில் விஜயாவால் சமைக்கப்பட்டு மூடிவைக்கப்பட்ட தட்டுகளை விலக்கி நாகு உண்பதைக் கண்டு, அவன் என்னைப் பார்ப்பதற்குள் அகன்றுவிட்டேன். நாகுவின் நாக்கு அறிந்திராத ருசியுடன் விஜயாவின் கைவண்ணம் இருந்தது. அம்மாவின் மறதி அவளது சமையலைப் பசிக்கானதாக மட்டும் ஆக்கியிருந்தது. வெளியே கூறாமல் நாகு தனக்குள்ளாக அச்சமையலைச் சிலாகித்தபடியிருந்தான். வெங்கியைக் கண்டுவிட்டால் மட்டும் நாகு சீறினான். அது ஏன் என அவனுக்கே குழப்பமாகயிருந்தது. பின்னர் அறிந்தான். நேற்றுவரை தன்னுடையவையாகயிருந்த அனைத்திற்கும் கூறுபோட்டு இரண்டாக்க, திடீரென முளைத்தவன் அவனென. “தேவிடியாப்பையா” என முனகினான். அக்கணமே விஜயாவின் சமையலில் முடி விழுந்துகிடந்தது துல்லியமாக நினைவில் எழுந்தது. “த்தூ” என்றான். அம்மா எப்போதும் சுத்தக்காரி. இந்த இரு நாய்களையும் உடனே விரட்டவேண்டும் என யோசிக்கத் தொடங்கினான். அவன் உள்மனதிற்குத் தெரியும். அதைத் தான் செய்யப் போவதில்லை என்பதும், அவளது புன்னகைக்காகக் காத்திருப்பவன் தானே நான் என்றும். நோயிலிருந்து மீண்டு அம்மா வந்த பிறகு அம்மாவுக்கும் விஜயாவுக்குமிடையே இருந்த சினமும் மௌனமும் தயக்கமும் மெல்ல அழிவதைக் கண்டேன். கழுத்து மூடிய கோட்டுடன் தலைப்பாகை வைத்து நிற்கும் தாத்தாவின் புகைப்படத்துக்குக் கீழே தன் பெயர் இருப்பது கண்டு வெங்கி துள்ளித் திண்ணையிலிருந்து கீழே குதித்துக் கால் சுளுக்கி அழுதது கேட்டு அம்மா பதறியபடியே ஓடிவந்து அவனைத் தூக்கித் தன்மேல் போட்டுக்கொண்டாள். விஜயா எவ்விதக் கூச்சமுமின்றிச் சிரித்தவாறே வந்து அம்மாவின் கையிலிருந்த கரண்டியைக் “கொடுங்கக்கா. நா பாத்துக்கிறேன்” என வாங்கி சமையற்கட்டினுள் நுழைந்தபோது ஒரு அதிகாரம் நுட்பமாகக் கைமாறிவிட்டிருந்ததை உணர்ந்து திடுக்கிட்டு நின்றேன். அவளது ஜாதியும் குலமும் அறிந்து கொண்டபிறகு அம்மாவோடு பூஜையறை வரை சென்று வரத் தொடங்கினாள்.


அம்மா இல்லாத வேளைகளில் நாகு விஜயாவோடு சிரித்தபடி பேசுவதும் அவள் அருகிலுள்ளபோது இருவருமே தரை நோக்கிக் கண்களைத் தாழ்த்திக் கொள்வதுமாக இருந்தனர். விஜயா என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அம்மாவே சொல்லக்கூசும் வேலைகளுக்கு அனுப்பினாள். அவள் தைக்கத் தந்திருந்த ஜாக்கெட்டுக்கு அளவு ஜாக்கெட்டாகச் சாயம் போகத் தொடங்கிய ஒன்றைக் கொடுத்து “முதுகுல கொஞ்சம் கீழிறக்கச் சொல்லு. பட்டன் வேண்டாம், ஊக்குப் போதும். கையக் கொஞ்சம் மேல ஏத்தி டைட்டா தைக்கச் சொல்லு” என்றாள். கோபத்துடன் தலைதூக்கியதும் அவள் அங்கிருந்து எப்போதோ சென்றுவிட்டிருப்பதை உணர்ந்தேன். “தேவிடியா முண்ட” என மனதிற்குள் திட்டியபடியே வெளியே ஆளற்ற இடத்தில் அதை விரித்து நோக்கினேன். அதற்குள் நெரியும் முலைகள் மனக்கண்ணில் வந்து நின்றன. அவளது இளமையும் அழகும் அவள் சிற்றன்னை என்பதை மறக்கச் செய்திருந்ததை உணர்ந்தேன். அப்போது நாகுவின் தங்கை வாணியின் ஞாபகம் மேலெழுந்து வந்தது. சூட்டுக் காலோடு நகர முடியாமல் கிடக்கையில் நாகுவின் மிரட்டலையும் மீறி மருந்திட்டவள் அவள். பதின்பருவத்தில் நான் அவளை மோகித்து அலைந்தபோது நெடுநாள் காத்திருப்புக்குப் பின் உப்புச் சுவையூறிய உமிழ்நீரை அவள் வாயினுள் இருந்து உறிஞ்சி முத்தங்கள் பரிமாற அனுமதித்தாள். அப்போது வாணியின் விரைத்த மார்பகங்களைத் தழுவித் தழுவி மேலும் சூடேற்றினேன். பின் தொடுகைகளும் முத்தங்களும் அணைப்புகளுமாக அது தொடர்ந்தது. அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்ல அவள் அனுமதிக்கவில்லை. வாணி மணமாகி வழியனுப்பப்பட்ட அன்று அழுது சிவந்த கண்களோடு நின்றிருந்த என்னை நோக்கிப் “பொட்டியத் தூக்கி டிக்கீல வையி” என்றாள் சாதாரணமாக. நான் கற்பனையில் அவள் மேல் காறி உமிழ்ந்து மிதித்துக்கொண்டிருந்தேன். அப்பாவின் குரலுக்கு மீண்டு அந்தப் பைகளை வைத்துவிட்டுப் பலவீனமானவனாக நின்று கொண்டேன். வாணி அவள் கணவனுடன் வெளிநாடு செல்லக் காரினுள் அமர்ந்து அனைவருக்கும் தலையாட்டிப் புன்னகையுடன் விடைபெறும்போதுகூட என் பக்கமே அவள் தலையைத் திருப்பவில்லை. அந்த வடு தீக்காயம் போல அழியாமல் பளிச்சென என் மனதில் கிடக்கிறது. விஜயா கொடுத்த அந்த மஞ்சள் ஜாக்கெட்டை கண்ணை மூடி அழுத்தியபோது வாணியின் “ஸ்ஸ் . . . ம்மா . . . மெதுவாடா” என்ற கிறங்கிய குரல் என்னுள் ஒலித்தது.


அப்பா - அப்படித்தான் எனைப்பெற்ற அம்மா சொன்னாள் - உள்ளே நுழைந்ததும் அவர் வாங்கி வந்திருந்த பொட்டலங்களை என்னிடம் பிரியத்துடன் கொடுப்பார். அப்போது அவரின் வயிற்றின் மேல் என் நெற்றி முட்டும் அளவு நெருங்கி, முளைக்கத் தொடங்கிய அரை பல் காட்டிச் சிரிப்பேன். அவரும் புரிந்துகொண்டு தரும் சில்லறைகளை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்து வெளித்திண்ணையில் கிடப்பேன். அவர் வந்தபின்தான் பூனை உறங்கிய அடுப்படி புழக்கத்திற்கு வந்தது. மேல்ச்சட்டையின்றித் திரிந்து பையன்களின் கேலியையும் அடியையும் சட்டை செய்யாமல் தின் பண்டங்களுக்காக அவர்களின் வாய் பார்த்து நின்ற நாட்கள் முடிவுக்கு வந்தன. என் கிழிந்த அரை நிஜாருக்குப் பின்னால் தபால் போடக் கத்தியபடியே ஓடி வருபவர்கள் இல்லாமல் ஆயினர். அம்மா என்னை அடித்துத் துன்புறுத்தும் குணத்தைக் கைவிட்டாள். இந்த அப்பா வீட்டிற்குள் நுழைந்ததும் தரித்திரம் பின்வாசல் வழியாக ஓட்டமெடுத்துவிட்டிருந்தது. ஆனால் அவர் வந்தாலே அம்மா என்னை வெளியேற்றிவிடுகிறாள். அன்று வருமானத்துக்கு அவர் வாங்கித் தந்திருந்த பசுமாடுகளை நனைந்தபடியே மேய்த்துவிட்டு வந்து முளையில் கட்டி வீட்டினுள் நுழைந்ததும் அம்மா அவருடன் கிடந்த கோலத்தைக் கண்டு உலுக்கப்பட்டு, எதுவும் பேசாமல் பேய் மழையில் வந்து சத்தமிடாமல் நின்றேன். இறந்துபோன என் அப்பாவுக்காகத் தேம்பித் தேம்பி அழுதேன். அது மழைநீரில் விழுந்து கரைந்து ஓடிற்று. அம்மாவைப் புரிந்துகொள்ளத் துவங்கினேன். வயதுக்கு மீறிச் சென்ற யோசனைகளை எண்ணி ஒருகணம் நானே வியந்து போனேன். பிறகு எப்போதும் அப்பா சென்ற பிறகே வீட்டினுள் நுழைவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அவள் என்னைக் கட்டிக்கொண்டு அழுவாள். அப்போது அவள் குளித்துவிட்டு வந்திருப்பதை அறிந்து அவளை விலக்கி விட்டு அப்பா வாங்கிவந்திருந்த பொட்டலங்களைப் பிரித்து நொறுக்கித் தள்ளுவேன். அவளுக்குக்கூட அதில் மிச்சம் வைக்க எண்ணியதில்லை. உறங்கும்முன் இருளில் என் முகத்தைத் துழாவி இரு கைகளால் ஏந்தி, “பத்திரமா பொழச்சுக்க சாமி . . . யாரோட நிழலையும் நம்பாம பொழச்சுக்க கண்ணு” என அவளோடு சேர்த்து அணைத்துக்கொள்வாள். அவள் என் முதுகைத் தட்டிவிட்டபடி ஏதேதோ கூறத் தொடங்குவாள். நான் எப்போதோ உறங்கிவிட்டிருப்பேன்.


நடுக்கூடத்தில் அமர்ந்து அலமேலு அம்மா சொல்லும் அடுத்த வீட்டுக் கதைகளுக்கு வெங்காயத்தைத் தொலித்தபடி விஜயா “ம்” கொட்டிக்கொண்டிருந்த முன்மதியத்தில் கோவிந்தன் வாசலில் நிற்பது கண்டு இருவரும் எழுந்தனர். விஜயாவை அவர் நேர் கொண்டு நோக்காமல் அலமேலுவிடம் பிரயாணப் பையைத் தந்துவிட்டு அவள் உள்ளே போனதும் விஜயாவின் கன்னத்தைத் தட்டியபடியே சட்டையைக் கழற்றித் தந்தார். வெங்கியை விஜயாவிடம் கேட்டபடியே அந்த நாற்காலியில் அமர்ந்து கண் மூடினார். சர்க்கரை அவரது சக்தியை உறிஞ்சி விட்டிருந்தது. வீட்டில் விஜயாவை விட்டுவிட்டு வடக்கே சென்று சுற்றியலைந்து இருவாரம் கழித்து அப்பா மொட்டைத் தலையோடு திரும்பியிருந்தார். மேலிருந்து நான் கீழே போடும் இளநீர், அதிர விழுந்து உருள்வது கண்டு கைத்தட்டிச் சிரித்துக் கொண்டிருந்த வெங்கி அப்பாவைக் காண ஓடினான். பின் தொடர்ந்து சென்று, உடலில் வழியும் நீரைத் துடைத்தபடியே “உங்க மேலதான் உசிரா இருக்கான்” என்றவாறே விஜயாவை மெல்ல நோக்கினேன். அவர் ஆமோதிப்பது போலத் தலையசைத்தார். அவள் வெடுக்கென மறைந்தாள். வெங்கி அவரிடம் “கணேசன் ரொம்ப நல்லவம்பா” என்றான் அவரின் கழுத்தைக் கட்டியபடி.

“டேய், அவன் உங்கண்ணன்டா வெங்கி” என்றார்.

“கொழந்த தானுங்க அப்பா” என்றேன். பூரிப்புடன் என்னை நோக்கி “கணேசன் அப்பாவிடா வெங்கி” என அவனை முத்தினார். அப்போது உள்ளே பாத்திரங்கள் மடமடவென விழுந்து உருண்டு அடங்கிற்று. கிணற்றடியில் நீர்வாளி இறைத்துக் கால் கழுவும் சத்தம் கேட்டதும் வெங்கி அவர் மடியிலிருந்து நழுவி என் நிழலுக்கடியில் ஒதுங்கினான். கோவிந்தனைப் போலவே நாகுவும் நல்ல உயரம். முன் தாழ்வாரத்தில் அவனால் தலை மோதிக்கொள்ளாமல் நுழைவது சிரமம். அலமேலு அம்மாவின் நிறம் அவனுக்கு. நான் கறுப்பிலும் களையாக இருப்பதாக வாணி சொல்வாள். சுருள் சுருளான முடிகளை எண்ணெய் போட்டு வாரி ஒதுக்கியிருந்ததில் அது நாகுவின் முகத்திற்கு மினுமினுப்பை ஏற்றியிருந்தது. அவனைக் காண அப்பா அருகில் சென்று நின்றதும் அவன் உடல் கோபத்தால் துடிப்பதைக் கண்டு அவன் கையைத் தொட்டார். அவர் அப்படிச் செய்யக்கூடியவரே அல்ல. நீண்ட பல நாட்களுக்குப் பிறகான அவரது ஸ்பரிசம் சூட்டுக்கோலை நீரில் முக்கி எடுத்ததுபோல அவனைக் குளிர்வித்தது. இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மௌனம் எவ்வளவு ஆழமும் குரூரமும் கொண்டது என உணர்ந்தனர். ஆறாத வசவுச் சொல்லை விடவும் மௌனம் வஞ்சகம் நிரம்பியது எனக் கோவிந்தன் உணர்ந்த தருணம் இது. ஈயக்குண்டு போலக் கனத்து வந்த அந்த நிமிடங்களை உடைத்து அவர் “நாகு” என்றார் தழுதழுத்த குரலில். முதன்முறையாக அவரை நேருக்குநேர் நோக்கினான். அவர் தலைகவிழ்ந்து நின்றார். அவர் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் கதவைப் படீரென அறைந்து விட்டுச் சென்றான். அப்படியே வெகுநேரம் சுயபோதமற்றுக் கோவிந்தன் நின்றுகொண்டிருந்தார். பின் அவர்கள் ஒரு சொல்கூட எப்போதும் பேசிக்கொண்டதில்லை.


நாகு அன்று வீட்டிலேயே கிடந்தான். அவன் தொடங்கிய கெமிக்கல் வியாபாரம் அவனைக் கைவிட்டுவிடும் நிலையில் இருந்தது. அனுபவமின்மையா? அல்லது வணிகத்தில் சூழ்ச்சி போதவில்லையா? என யோசித்துக் கிடந்தான். அப்போது வெங்கி அவனைக் கடந்து நிற்காமல் ஓடினான். தோட்டத்திற்குப் போகக்கூடும். அங்குதானே கணேசன் இருப்பான் என எண்ணிக்கொண்டான். வாலை அசைப்பதைத் தவிர வேறெதுவும் தெரியாத வீட்டு நாய் அன்று எவ்வளவு துள்ளியது? அப்பாவின் கைப்பற்றி அவரின் நிழலில் ஒதுங்கி ஒண்ட வெட்டிய தலைமுடியுடன் கணேசன் வந்தது துல்லியமாக நினைவிலிருக்கிறது. அப்பாவின் அடிகளால் மனம் வெதும்பி உடல் வலியால் அழுத நாட்களில் அவனை வதைப்பதன் மூலமே நாகு சமநிலையை அடைவான். கணேசன், தான் போட்டுக் கிழித்த துணிகளுக்கும் ஒதுக்கி வைத்த உணவுக்கும் சிக்கிய ஆளென்ற எண்ணம் நாகுவிற்கு இருந்தது. வாணியோடு அவன் பேசுவதே நாகுவுக்குப் பிடிக்காமல் ஆயிற்று. நாகு தன் தாத்தாவின் இயல்பைக் கொண்டு பிறந்திருந்தான். அந்தச் சாய்வான நாற்காலியில் அமர்ந்து வெற்றிலைப் பணிக்கத்தைத் தன் காலடியில் வைத்தபடியே தாத்தா முடித்து வைத்த பஞ்சாயத்துக்களை அவரின் மடிமேல் அமர்ந்து கேட்டு வளர்ந்தவன் அவன். அந்த நாற்காலியின் வழுவழுப்பேறிய கைப்பிடியைத் தொட்டு அமர்ந்தபோது காலம் குழம்பி நாகுவைத் தாக்கிற்று.


அப்பாவின் சோம்பல் தாத்தாவிற்குச் சற்றும் பிடித்திருக்கவில்லை. லௌகீகக் காரியங்களில் அவர் காட்டிய அலட்சியத்தையும் ஷோக்குகளில் கொண்டிருந்த ஆர்வத்தையும் தாத்தாவால் ஏற்கவே முடியவில்லை. ஒன்றுக்குமாகாத நண்பர்களுடன் தெருமுனையில் யானைக்கால் பேண்ட் அணிந்து நின்று சார்மினார் புகைக்கும் மகனை அவர் தந்திரமாக வழிக்குக் கொண்டு வந்தார். தன் தங்கை மகளையே மருமகளாக்கிக் கொண்டதும் கோவிந்தன் அலமேலுவைப் பிரிய மனமின்றி வீட்டையே வளைய வரத் தொடங்கினார். தாத்தா போய்ச் சேர்ந்த பிறகு அவரின் அந்த நாற்காலி புனித வஸ்துவாக மாறிற்று. அம்மா அதைத் தொட்டு வணங்காத நாட்கள் மிகக்குறைவு. நாகு அதில் அமர்ந்தே அம்மாவின் கதைகளுக்கு “ம்” கொட்டி உறங்கிப் போயிருக்கிறான். கணேசன் இங்கு வந்த புதிதில் அதன்மேல் ஏறியமர்ந்து கீழே குதித்து மீண்டும் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான். நாகு குஷியுடன் அம்மாவிடம் போய்ச் சொன்னான். அவள் வந்து பார்த்து “போக்கத்தப்பயலுக்கு நெனப்பப் பாத்தியா” என்றவாறே சூட்டுக்கோலைப் பழுக்கக் காய்ச்சினாள். கணேசன் விளையாடிக் கொண்டேயிருந்தான். நாகுவிடம் அலமேலு “பெட்றா வான்னீ . . .” என்றாள். நாகு அவனைப் பிடித்தான். கணேசன் திமிற முயன்றபோது அம்மா அவனை ஓங்கி ஓங்கி அடித்தாள். நாகுவும் குத்தினான். வாணி மட்டும் “வேண்டாம்மா . . . வேண்டாம்மா” என்று கெஞ்சியபடி நின்றாள். அப்பா எழுதும் பேனாவின் நீளத்திற்குக் கணேசனின் கெண்டைக்காலில் அம்மா சூடிழுத்தாள். வலி தாங்காமல் பின்திண்ணையில் அவன் அழுதபடி படுத்திருந்தபோது வாணிதான் மருந்திட்டாள்.


கணேசன் இல்லாமல் திரும்பி வந்த வெங்கி அதில் அறியாமல் ஏறி அமர்ந்தது கண்டு அம்மா “கீழே இறங்குடா மொதல்ல” என்றாள் உரத்த குரலில். அவளது கண்கள் தீப்பிழம்பு போலக் கொதித்துக் கொண்டிருந்தன. “அதுல உட்கார அவனுக்கும் உரிமையிருக்கு” என்றபடியே உள்ளறையிலிருந்து விஜயா வந்தாள். பிறகு தொடங்கியது வசவுகளின் உற்சவம். அது அவர்கள் அன்றுவரை கொண்டிருந்த உறவின் திரையைக் கோரமாக விலக்கியது. இரு மிருகங்கள் ஒன்றையொன்று கடித்துக் குதறிக் கண்களில் குரோதம் கொப்பளிக்க உடலில் வழியும் இரத்தத்தோடு தத்தம் இடங்களுக்குத் திரும்பின. அதற்குப் பிறகும் அவைகளின் ஓலம் ஓயாமல் அவ்விரவு முழுக்கக் கேட்டுக்கொண்டிருந்தது.


அம்மாவுக்கும் விஜயாவுக்கும் உறவு முறிந்து சச்சரவுகள் வெவ்வேறு ரூபங்களில் நடந்துகொண்டேயிருந்தன. அமைதி காத்து அலைகளேதுமின்றிக் கிடந்த கடல் தன் அனைத்து ஆவேசங்களையும் ஒன்று திரட்டிப் பேரலைகளாக எழுந்து வருவது போலல்லவா அன்று அம்மா இருந்தாள்? அம்மா ஓய்ந்து அடங்கியதும் எழுந்த விஜயாவின் புயலைக் கண்டு கணேசனே திகைத்து நின்றுவிட்டானே! அப்போது போய்க் குறுக்கிட்டு விலக்க எண்ணுவது போல மூடத்தனம் வேறெதுவுமில்லை என நாகு உணர்ந்திருந்தான். பெண்கள் சாந்தமும் பொறுமையும் கொண்டவர்கள்தான். ஆனால் அவர்கள் ஏறி நின்றால் கண்ணில் படுவதெல்லாம் சாம்பலாக ஆக்கக்கூடியவர்கள் என அவனுக்குப் புரிந்தது.


ஏறக்குறைய பத்தாண்டு காலம் அப்பா விஜயாவையும் வெங்கியையும் காபந்து செய்திருக்கிறார். அவரது உடல் நிலையின் சீரற்ற தன்மையை உணர்ந்ததுமே, உள்ளுணர்வின் எச்சரிக்கையை ஏற்று இங்குக் கொண்டுவந்து சேர்த்திருக்க வேண்டும். இங்கு வந்த சில மாதங்களிலேயே அவரது நடையில் சிறுதள்ளாட்டத்தையும் மூச்சுவிடுதலில் திணறலையும் கண்டேன். அவரது பணி வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றல்களைக் கொண்டுவந்திருந்தும்கூடக் குடும்பத்தை இங்கேயே வைத்திருந்தார். தாத்தாவின் செல்வாக்கில் அவர் படிப்புக் கேற்ற பணி வங்கியில் கிடைத்ததும் அதை இறுகப் பற்றிக்கொண்டார். என் அம்மா அவர் பணிபுரிந்த ஒரு கிளையில் தான் பெருக்கப் போய்க்கொண்டிருந்தாள். அம்மா இறந்த அதே வருடத்தில் அவராகச் சொந்த ஊருக்கு மாற்றல் கேட்டு வாங்கி என்னையும் இங்கு அழைத்து வந்து சேர்த்திருந்தார். பெரிய பெரிய பேரேடுகளைத் தூக்கி அதன் கூட்டல் கழித்தல்களைச் சரிசெய்து தடித்த கண்ணாடிக்குள் உருளும் பெரிய கண்களைத் துடைத்தபடியே சோர்வுடன் வீடு வந்ததும் வாணி புகார்களை அடுக்குவாள். அதில் எரிச்சலடைந்து நாகுவை மோசமாக அடிப்பார். அப்போது நாகுவிடம் எனக்கு அடுத்த நாள் அதைவிடவும் கூடுதலான அடி கிடைக்கும் என உறுதியாகத் தெரியும்.


அப்பா தனித்த அறையில் பத்து நாட்களாக மெல்லிய வாதம் தாக்கிப் படுத்துக்கிடந்தார். சர்க்கரையின் அளவு சராசரியைவிடவும் இருமடங்கு உயர்ந்து கிடந்ததில் அவரது சவரம் செய்யப்படாத முகம் பொலிவு குன்றிவிட்டிருந்தது. மூப்பின் இயலாமையோடு நோயின் நிழல்களும் அவர்மேல் கவியத் தொடங்கின. அவர் மிக விரும்பி உண்டவைதான் அவரை நரகத்தில் தள்ளிற்று. சர்க்கரையும் உப்பும் அவர் உடலில் தாறுமாறாக எகிறியபோதும் அவர் அவைகளை விட மறுத்தார். சிறு புண்ணிற்காகக் கால் பெருவிரலையே எடுக்க நேர்ந்தபோதுதான் சர்க்கரையின் விபரீதம் அவருக்குப் புரிந்தது. பின் அவர் மருந்துகளின் உலகில் நிரந்தரக் குடியாளனாக மாறினார். அம்மா இல்லாத சமயத்தில் மெல்ல விஜயாவிடம் நெருங்கியபோது உயர்ரக சோப்பின் மணம் காற்றில் கலந்து வந்தது. “நேத்து செகண்ட் ஷோ படம் பார்த்தேன்” என்றேன். அவளிடம் சிறிதும் சலனமில்லை. “ரெண்டு பேர் மட்டும் நடிச்சது. ஆனா கால்மணி நேரத்துல முடிஞ்சிபோச்சு” என்றதும் அவள் சட்டெனத் தலைதூக்கி “டேய் கணேசா” என்று கத்தினாள். “ஆனா, உனக்கு முரட்டுத் தனம் ஜாஸ்தி. நாகுவுக்கு ட்ரெயினிங் பத்தாது” என்றதும் அவள் கண்கள் கூசி என்னை அருவருத்து ஒதுக்குவதை அறிந்தேன். மேலும் தைரியம் பெற்று முதன்முறையாக “சொல்லுடீ குட்டீ” என இழுத்தேன். அவளது முகத்தில் எளிதில் அறியமுடியாத உணர்ச்சிகள் தோன்றி மறைந்தன. “போகப் போகச் செரியாப் போயிடும்” என்றதும் அவள் கண்கள் தாழ்ந்து இறைஞ்சின. அன்றிலிருந்து ஆட்டத்தின் போக்கே மாறியது. காய் நகர்த்தலில் விஜயா காட்டிய சாதுர்யத்தை நேராக நின்று வெட்டி வீழ்த்தினேன். அவள் நாகுவை மீண்டும் மீண்டும் எனக்கெதிராகத் திருப்ப முயலும் தோறும் என் ஒற்றைக் காயான வெங்கியை இறக்கி, நான் உருட்டும் பகடையில் தாயங்களும் பன்னிரெண்டும் தாமாக வந்து விழத்தொடங்கின.


வெங்கி ஓயாமல் பேசிக்கொண்டேயிருந்தான். யாராலும் அவனைப் பத்து நிமிடங்களுக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நாகுவைக் கண்டால் மட்டும் அவன் ஊமை போல ஆனான். வெங்கிக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. என்னையே பலமாக அடித்துக் காயமேற்படுத்தியிருக்கிறான். எனினும் அவன் மேல் பிரியம் சுரந்தபடியேதானிருந்தது. வெங்கியில் என்னைக் கண்டேன். தொடக்கத்தில் விஜயாமேல் நான் கொண்டிருந்தது பச்சாதாபத்தையே. இளம் வயதில் தன்னைவிடவும் கால் நூற்றாண்டு மூத்த அரைக் கிழவனுடன் உடன் வந்து பிழைத்தவள். உண்மையில் அப்போது அவளை என் அம்மாவின் இடத்தில் வைத்தே ஒப்பிட்டுக் கொண்டிருந்தேன். வெங்கியை என்னுடனும். ஆனால் அவள் குணத்தை மெதுவாக அறிய நேர்ந்தபோது என் அம்மாவின் நிழலுக்கு அருகில்கூட நிற்கத் தகுதியற்றவள் என உணர்ந்தேன். ஒருவகையில் நாகுவை ஒடுக்க அவளை மிகச் சிறந்த ஆயுதமாக எண்ணியிருந்தபோது அவள் என்னை வெளியேற்ற வலைப் பின்னிக்கொண்டிருந்தாள் என அறியாமல் போனேன். அம்மாவின் ஒரு ஜோடி தங்க வளையல்கள் காணாமற் போனபோது நாகுவின் ஆத்திரத்தையும் அப்பாவின் கடுங் கோபத்தையும் என்னை நோக்கித் திருப்பிவிட்டாள். தோட்டத்தில் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த எனக்குச் சொல்லியனுப்பப்பட்டுத் துவட்டப்படாத தலையுடன் வந்து சேர்ந்தேன். வீட்டிலிருந்த ஒவ்வொருவரின் கேள்விகளும் என் யோக்யதையைக் கிழித்துப் போட்டன. விஜயா உருவாக்கிக் கொண்டிருக்கும் நாடகத்தில் அப்பா எந்தப் பாத்திரத்தை வகிப்பது எனத் திணறிக்கொண்டிருந்தார். நாகு மட்டும் நடுவீட்டில் நின்று ஆடிக்கொண்டிருந்தான். என் தலையின் ஈரம் காய்ந்துவிட்டிருந்தது. விஜயாவின் கண்கள் நாகுவின் மேல் பட்டு மின்னியது. அவள் உதடுகள் புன்னகையோடு சுளித்தன. அம்மா கோபம் நீங்கியவளாக வந்து, “கணேசு இந்தக் காரியத்தப் பண்ணியிருக்க மாட்டானுங்க” என அப்பாவிடம் சொன்னாள். அவர் தன்னைக் கட்டுப்படுத்தியபடியே அந்த நாற்காலியில் சாய்ந்து நாகுவையும் விஜயாவையும் மாறிமாறிப் பார்த்தார்.


விஜயா வெடுக்கென உள்ளறைக்குச் சென்று ஜன்னலருகாக நின்றுகொண்டாள்.
நாகு கோபமாக அம்மா அருகில் போய் “ ஏமிம்மா நுவ்வு செப்பேவு . . . அப்புடு நன்னு தொங்கன்னேவா?” என்றான்.


“அவனுக்குப் பதினைஞ்சு வருஷமா சோறு போடுறேண்டா. எனக்கு அவன் வயித்த பத்தி மட்டும்தான் தெரியும்னு நெனச்சுக்காத” என்றாள்.


திட்டம் குலைந்த கொலைகாரனைப் போலப் பெருங் கோபத்தோடு நாகு என்னைப் பார்த்தான். அப்பாவின் அழைப்பிற்குக்கூட நிற்காமல் அங்கிருந்து நகர்ந்து தனிமையில் அமர்ந்து அம்மாவின் மரணத்திற்கு வெகு காலத்திற்குப் பிறகு குரலெடுத்து அழுதேன். இருட்டிய பிறகு வீட்டிற்குள் நுழைந்து போர்த்தாமல் ஒருக்களித்துப் படுத்துறங்கிக்கொண்டிருக்கும் அம்மாவை - அவள் சூடு போட்டதையெல்லாம் மறந்து - நன்றியோடு பார்த்துக் கொண்டிருந்தேன். நாகுவின் தாங்கிக்கொள்ள முடியாத அடிகளுக்கும் வசவுகளுக்கும் நான் இறந்த பின்னும் உயிருடனிருக்கும்படியான அவமதிப்புகளுக்கும்கூட நான் இப்படி அழுததில்லை. அது அவனை உசுப்பேற்றி மேலும் வன்மம் கொள்ளச் செய்யும். அப்பாவின் கைப்பற்றி வரும்போதே அதையெல்லாம் உணர்ந்துவிட்டிருந்தேன். அலமேலு அம்மாவால்தான் துருத்திய எலும்புகளைச் சதைகள் திரண்டு மூடின. வயிற்றை ஆறப்போட்டு உண்பவன் அல்ல நான். அது ஆறத் தொடங்கும்போதே நிரப்பத் தொடங்கிவிடுவேன். அதற்கேற்றாற்போலப் பல கடும் உடல் உழைப்பு வேலைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். முதலில் நான் பலமுறை சோறு கேட்டு உண்டபோது அம்மா விசித்திரமும் ஆச்சரியமுமாகவே உணவிட்டாள். யாருமற்றவன் என அவளிடம் அப்பா என்னைப் பற்றிக் கூறியிருந்தது கேட்டு அவள் கலங்கியிருக்க வேண்டும். அவள் இடும் உணவில் ருசி பார்ப்பதில்லை. வயிற்றில் எரியும் நெருப்பைப் பழையதோ புதியதோ இட்டு அலமேலு அம்மாதான் அணைத்தாள். நாகு ஒருமுறை போட்டியிட்டு அமர்ந்து வீம்பாகப் பல உருண்டைகளை உள்ளே தள்ளி எழ முடியாமல் எழுந்து போய் எக்கி எக்கி வாந்தியெடுக்கும் சத்தம் கேட்டது. அம்மா எட்டிப் பார்த்துவிட்டு நுழைகையில் நான் “மோருக்குச் சோறு போடுங்க” என்றேன். நாகு சொருகிய கண்களோடு அருகில் வந்து “எந்திரிச்சுப் போடா நாயே” என்றான். அம்மா தான் சிரித்தபடியே சோறிட்டாள்.


அம்மாவின் உறக்கம் கலைந்துவிடுமோ என எண்ணி வெளியேறுகையில் உள்ளிருந்து குரல்களின் கிசுகிசுப்பைக் கேட்டுக் கள்ளனோவெனப் பதுங்கி நோக்குகையில் விஜயாவின் முலைகளுக்கு நடுவில் நாகு முகத்தை வைத்து அழுத்துவதைக் கண்டேன். அவன் தலைமுடியை அவளது விரல்கள் ஆவேசமாகக் கோதியபடி அப்படியே இறுக அணைத்தன. அங்கேயே உறைந்துபோய் நின்றபடி பிறகு மெதுவாக வெளியேறினேன். அந்த அதிர்ச்சியிலிருந்து உறக்கமேயில்லாமல் புரண்டு புரண்டு படுத்தெழுந்த காலையில் நடையில் உற்சாகம் கூடியிருந்தது. மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவை எண்ணிப் பார்த்தபடியே புத்துணர்ச்சியுடன் அதன் பலனைக் கேட்க வள்ளுவனின் வீட்டை நோக்கிச் சென்றேன்.


அடுத்த சில நாட்களுக்குப் பின் மதியச் சிறு தூக்கத்திலிருந்து அம்மா எழுந்ததும் வீட்டினுள் காகிதம் சுற்றப்பட்ட பொட்டலமாக அவ்வளையல்கள் கிடைத்தன. நாகு அதை வெறும் தலையசைப்புடன் கடந்துவிட்டது அலமேலுவுக்கு வியப்பாக இருந்தது. அப்பாவோ நேற்றிலிருந்து எழுவதற்கே ஆள் தேவைப்படுபவராக ஆகிப்போனார். இரு நாட்களுக்குள் அவர் அப்படிப் பலகீனராக ஆவார் என ஒருவரும் எண்ணியிருக்கவில்லை. நான் அந்தக் காகிதத்தைக் கண்டவுடன் அதைச் சவரம் செய்ய எறவானத்தில் சொருகி வைத்திருந்த நினைவு எழுந்தது. விஜயாவைத் துழாவினேன். அவள் அகப்படவில்லை. தலையசைத்துக்கொண்டேன். இப்போதெல்லாம் அவள் வெங்கியை என்னிடம் அணுக விடுவதேயில்லை. அது அவ்வளவு சுலபமல்ல என்பதை அவள் அறிய மாட்டாள். என்னை வளர்ப்பது போல நான் வெங்கியை வளர்த்தேன்.


அக்கள்ள உறவை நான் அறிந்துவிட்டதுதான் அவள் என்னை வெளியேற்ற முனைந்த காரணமா? சில தினங்கள் முன் வரைகூட அவளது கண்களில் அந்த வேறுபாட்டை யூகிக்கவே முடியவில்லையே. விஜயாவின் அந்தக் கண்களுக்குத் தான் அப்பா அவளிடம் வசப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றியது. அம்மாவை அக்கண்களால்தான் பலமுறை மிரட்டியிருக்கிறாள். “அவ முறைச்சான்னா எதித்துப் பேச தெம்பு வரமாட்டேங்குது கணேசா” எனக் கூறியிருக்கிறாள். “வெள்ள ரோட்ல ஒரு கருப்பு பாம்பு. அது என்ன?” என வெங்கி என்னிடம் விடுகதை போடும்போது அவள் கண்களைத்தான் நினைத்துக்கொள்வேன். நாகுவிடம் அவள் பேசும்போது அக்கண்களில் தோன்றும் புன்னகைக்கு வேறெதையுமே ஒப்புமைப்படுத்த முடியாது. அது சூழ்ச்சியின் தந்திரத்தைக் கொண்டிருந்ததை அறிந்தவன் நான் மட்டுமே.


அப்பா எழ முடியாமல் குமட்டும்படியான நாற்றம் அடிக்கும் அந்த அறைக்குள் அவர் பெய்த சிறுநீர் தேங்கி நிற்பதைக் கண்டு சுத்தப்படுத்தச் சென்றபோது நிரந்தரமாகத் திறந்து கிடக்கும் அவரது வாயிலிருந்து “எனக்குச் செகப்பு சட்டை வாங்கிக் கொடுங்கப்பா. அவளுக்கு மட்டும் வாங்கித் தந்தீங்க” என்றார். பின் கண்மூடி எதை எதையோ உளறியபடி கிடந்தார். நடுவில் என் அம்மாவின் பெயரைக் கூறக் கேட்டேன். அருகில் ஓடிச்சென்று “அப்பா கணேசம்பா” என்றேன். அவர் கேட்காததுபோல “உனக்கு நீளமான தலைமுடி. அலமேலுக்கு எலி வாலு மாதிரிதான் கனகா” எனக் கூறிவிட்டுச் சிரிக்கத் தொடங்கிவிட்டிருந்தார். அப்போது விஜயா நடக்கையில் அவள் பின்புறத்தில் மெல்லத் தட்டியபடி கரும் பாம்புகள் பின்னிக்கிடப்பது போன்ற நீளக் கூந்தல் துல்லியமாக என் நினைவுக்கு வந்தது. அவர் கண்திறந்து மூலையை நோக்கிப் பலமாகச் சத்தமிட்டார். நான் அம்மாவிடம் வந்து கலங்கிய முகத்துடன் கூறியபோது “அவரது நினைவு பல சமயங்களில் அறுந்து ஏதேதோ பேசுகிறார்” என்றாள். அப்போது விஜயா வெங்கியின் நோட்டில் சூரிய காந்திப் படத்தை ஒட்டி அதற்கு வண்ணம் தீட்டித் தந்துகொண்டிருந்தாள். வெங்கியின் பூனை அவனருகாக அமர்ந்து அதை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது.


அப்பாவின் இயலாமை அவர் கண்ணில் படும், நினைவில் எழும் நபர்கள் மீதெல்லாம் விஷத்தைக் கக்கிக்கொண்டிருந்தது. அவருக்கு அபூர்வமாகச் சுயபிரக்ஞை திரும்புகையில் விஜயாவை ஓயாமல் அழைத்தார். அம்மாவிடம் “எங்கடீ உன்னோட சக்களத்தி. அந்த நாயக் கூப்பிடு” என்றார். விஜயா வந்து நின்றதும் “ஏன் நாத்தமடிக்கிதா? இதய மோந்து பாத்துட்டுத்தாண்டீ பின்னாலேயே வந்த” என வேட்டியை விலக்கிக் காட்டினார். அம்மா முகத்தைத் திருப்பியபடி வெளியே ஓடினாள். விஜயா முடிகள் நரைத்துக் கிடக்கும் குறியைக் கண்டு முகம்சுளித்து “மூடிக்கிட்டுக் கிடடா மயிராண்டி” என வாய்ப் பொத்திக் காட்டினாள். அவர் மேலும் பேச முடியாதவாறு அம்மா தந்துவிட்டுப் போன மாத்திரைகள் அவரை உறக்கத்தில் ஆழ்த்தின.


ஊரையொட்டிய வறண்ட குளத்தில் முட்செடிகளுக்குப் பின்னால் அமர்ந்து மலம் கழித்துவிட்டு வரும் வழியில் மேட்டில் வெங்கியின் பூனை இறந்து கிடப்பதைக் கண்டேன். அதன் வாயினுள் சிவந்த எறும்புகள் ஏறிச் சென்றுகொண்டிருந்தன. வேகமாக வீட்டிற்கு வந்ததும் காலையில் தன் காலைச் சுற்றிச் சத்தமிடும் பூனையை அம்மா என்னிடம் கேட்டாள். வாய்த் திறப்பதற்குள் வெங்கி முந்திக்கொண்டு “கணேசா, நேத்து நைட்டு உனக்குக் கொடுக்கச் சொல்லி எங்கம்மா தம்ளர்ல பால் கொடுத்துவுட்டா. உன்னையத் தேடிப் பாத்துட்டு காணம்னு நெனச்சுட்டு நானு அந்தப் பூனைக்கு அதய ஊத்திட்டேன். அப்பறமா அதய நானு பாக்கல” என்றான். “அம்மா” எனத் அலறியபடியே நடுங்கும் கரத்தால் வெங்கியைப் பற்றினேன். “ஏண்டா கணேசா என்னாச்சுடா” என அருகில் வந்தாள். ‘ஒன்றுமில்லை’ எனத் தலையசைத்துவிட்டு மௌனமாகக் கண்களை மூடிக் கொண்டேன்.


அன்று மீண்டும் விஜயாவின் பின்னால் போய் எதையும் காட்டிக்கொள்ளாமல் “என்ன? இப்பவெல்லாம் நைட் ஷோ கிடையாதா? ஓ! பகல் காட்சியே நடக்கும் போலிருக்கு! நாகுவுக்கு அங்க மச்சம் இருக்குதா?” என இழுத்தேன். அவள் காதைப் பொத்திக்கொண்டு முறைத்தபடியே சென்றாள். விஜயாவுக்குக் கேட்கும் குரலில் “கழுத்த அறுத்துடுவன்டீ நாயே” என்று கத்தினேன். அந்த இறந்துபோன பூனையின் முகத்தை நினைவிலிருந்து என்னால் அகற்றவே முடியவில்லை. அன்றைய இரவில் நாகு என் சட்டையைப் பற்றி இழுத்துத் “தாயோலி . . . ஆம்பளயாயிருந்தா! மூடிட்டு வெளியில போடா . . . எங்கப்பன் ஊர்ல இருக்கற அனாதைகளையெல்லாம் கூட்டிட்டு வருவான் . . . நானு அந்த எச்சக்கலைகளுக்குச் சோறு போடணுமா?” என்றான். நான் அவன் கையைத் தட்டிவிட்டு “யாரீயச் சொல்ற? விஜயாவையா?” என்றேன் சிரித்தபடி. மடமடவென்று அடிகள் புறங்கன்னத்தில் விழுந்தன. பின்னால் கிடந்த குளவிக்கல்லை ஒற்றைக் கையால் தூக்கி “மூஞ்சிய பேத்துருவன்” என்றவாறே செயற்கையான சிரிப்புடன் “விஜயா . . . விஜயா . . . உன்னைய நாகு கூப்பிடுறான்” என்றேன். அந்த நொடியே உள்ளே தொலைக்காட்சியின் ஒலி அதிகப்படுத்தப்பட்டு வார்த்தைகள் உள்சென்று நுழையாதவாறு விஜயாவால் தடுக்கப்பட்டன. அம்மாவின் நிழல் கண்டு நாகு அப்படியே வெளியேறிச் சென்றான். கீறல்களில் இரத்தம் கசிவது கண்டு என்னை நோக்கி விஜயாவின் உதடுகள் கேலியாகப் புன்னகைப்பது தெரிந்தது.



அப்பாவின் நிலை அலமேலு அம்மாவிற்கு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஆழமாக உருவாக்கிவிட்டிருந்தது. ஓங்குத்தாங்காக அவர் வந்து கையாட்டியவாறு பேசும் சித்திரம் அவளிடமிருந்து அகல மறுத்தது. நாகு மூச்சுத் திணறலிலிருந்து விடுபட்டவன்போல ஆசுவாசமடைந்தான். தன்னிடம் விஜயா கூறியவற்றை அச்சத்துடன் நாகு நினைவுக்குக் கொண்டு வந்தான். அவனுக்கு உள்ளுற அம்மா இவ்வுறவை அறிவாளோ? என்ற ஐயம் இருந்தது. விஜயாவை எவ்வளவு வற்புறுத்தியும் அக்கருவைக் கலைக்கச் சம்மதிக்க வைக்க முடியவில்லை. கணேசனை எண்ணியதும் ஆத்திரமும் பயமும் தோன்றியது. அவனை வெளியேற்ற போட்ட திட்டமும் கைகூடாமல் போயிற்று. இந்தக் கிழவனும் போய்ச்சேராமல் கிடக்கிறான். வயிறு மேடிடத் தொடங்கும் முன்னர் ஏதாவது செய்யச் சொல்லி விஜயா நச்சியபடியிருக்கிறாள். இந்த வெங்கியையும் கணேசனோடு ஓட்டிவிட வேண்டும். அவனும் விஜயாவோடு ஒட்டாமல்தான் அலைகிறான். விஜயாவும் இதற்குச் சம்மதித்துவிட்டிருந்தாள். அம்மாவுக்குப் பின் தனக்கு வந்து சேரும் சொத்துக்களுக்காக எவ்வளவு வருடம் காத்திருக்க முடியும்? சில தினங்களுக்குள் விஜயாவின் திட்டப்படி அவளைக் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டாலென்ன எனத் தோன்றியது. வேறு வழியேயில்லை! இந்த அரிப்பெடுத்த கிழவன் போய்ச் சேர்ந்த பின் வந்து ஒட்டிக்கொண்டுவிடலாம் என நாகு முடிவெடுத்தவனைப் போல விஜயாவைக் காணச் சென்றான்.


விஜயாவின் முகத்தில் ஒருவித மினுமினுப்பு கூடி உடம்பும் பூசினாற்போல ஆனதும் அம்மாவுக்குச் சந்தேகம் தட்டியது. உணவு கசந்து அவள் எக்கியெடுத்த வாந்தியை அம்மா குறுக்கு விசாரணை செய்தாள். நாகு உள்ளே புகுந்து அவர்களின் பேச்சை நிறுத்தி அம்மாவை வேறெங்கோ கூட்டிப் போனான். விஜயா பெரும் நிம்மதியோடு கண்களை மூடிக்கொண்டாள். அன்று வெங்கியை விஜயா அழைத்து முத்தங்கள் தந்தபடியேயிருந்தாள். மறுநாள் இரவு இரண்டாம் ஜாமம் முடியும் தறுவாயில் அவர்கள் இருவரும் வெளியேறி விட்டிருந்தனர். சூன்யம் மட்டுமே மிஞ்சிய இடம்போல வீடு ஆனது. அலமேலு அம்மா தன் நிர்கதியையும் குடும்பத்தின் அவமானத்தையும் எண்ணி எண்ணி மறுகிக் கிடந்தாள். புரியாமல் நிற்கும் வெங்கியை நீண்ட நாட்களுக்குப் பிறகு கட்டிக்கொண்டு அழுதாள். நாகுவை அவள் சபித்தபோது பெரும் ஆனந்தத்தை மறைத்தபடி அம்மாவைத் தேற்றினேன். “எங்கய்யும் போய்த் தேடாதடா கணேசா” என்றாள் உறுதியான குரலில். சொந்த வீட்டில் அவன் எடுத்துப்போன பணத்தையும் அம்மாவின் நகைகளையும் மனதிற்குள் கணக்கிட்டபோது அது அவர்களுக்குப் பல மாதங்களைக் கழிக்கப் போதுமானதாகயிருக்கும் என எண்ணினேன். தெருவெல்லாம் பேசி ஓய்ந்தபோது கூட அம்மா அப்பாவின் அறையைப் பார்த்தபடியே கூனிக் குறுகிப் படுத்துக்கிடந்தாள். வெங்கி “என்ன கணேசா?” என விசாரித்தபோது “ஒண்ணுமில்லை” என்ற பதிலிலேயே சமாதானமடைந்து விட்டிருந்தான்.


நானும் வெங்கியும் தோட்டத்திலிருந்து வந்ததும் அந்த நாற்காலியில் போய்க் கம்பீரமாக அமர்ந்து கால் மேல் கால்போட்டு வெங்கியை என் மடியில் இருத்தி “உடம்பெல்லாம் கசகசங்குது! கொஞ்சம் தண்ணிய காயவெய்மா குளிக்கறதுக்கு” என்றேன். அம்மா உள்ளிருந்து வந்து நாங்கள் அமர்ந்திருப்பது கண்டு ஒருகணம் திடுக்கிட்டு உடம்பெல்லாம் நடுக்கமுற நின்றாள். பின் எதுவும் பேசாமல் பின்வாசலுக்குச் சென்றாள். அங்குத் திகுதிகுவென வெந்நீருக்காக அடுப்பு எரியத் தொடங்கியது. நான் அதையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.


( உயிர்மை டிசம்பர் 2010)

  (என் இரண்டாவது தொகுப்பான ‘அரூப நெருப்பு’ தொகுப்பிலுள்ள கதை )


Sunday, January 27, 2019

தவளைகளும் மீன்களும்


தவளைகளும் மீன்களும்


புத்தகக் காட்சி 2019 குறித்த பார்வை

பண்டிகைக் காலங்களில் திடீரென முளைக்கும் பர்மா, சைனா பஜார்களின் முன்புறத்திலும், நெருக்கடியான கடைத் தெருக்களில் அடுத்தடுத்து அமைந்திருக்கும் ஹோட்டல்களின் முன்னாலும்  வேலை ஆட்கள் நின்று கொண்டு அந்தப் பக்கமாக போவோரையும் வருவரையும் ’உள்ள வாங்கம்மா, வாங்கய்யா ,வாங்கண்ணா..’ என கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டே நின்றிருப்பதைப் பலரும் கண்டிருக்கலாம். கிட்டத்தட்ட சமீப வருடங்களில் எழுத்தாளன் தன் நூல் சந்தைக்கு வருவதிலிருந்து  ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்டு கடையைச் சாத்தும் இறுதி நாள் வரை மேற்சொன்ன சிப்பந்திகளின்(அந்தச் சிப்பந்திகள் பரிதாபகரமானவர்கள்) வேலையைச் செய்து கொண்டே இருக்கிறான்.  முகநூலெங்கும் இந்த இரைச்சல்களின் சத்தம் நாராசத்தை எட்டுவது கூட  உறைப்பதில்லை.  புத்தகம் பண்டமோ சரக்கோ அல்ல அது எழுத்தாளன் தன் வாழ்வின் ஒரு பகுதியிலிருந்து (ஒரு பகுதி தானா..!) கிழித்தெடுத்து தைத்துக் கொடுத்த பிரதி என்கிற போதம் பலருக்கும் இல்லை. ஆர்வக்கோளாறு அல்லது நரம்பு சம்பந்தமான பதற்றம் தான் அந்த இடைவிடாத கூவல்களுக்குக் காரணமோ என நினைக்க வைக்கிறது. இந்த நரம்பியல் பிரச்சனை மூத்தோர்கள் சிலருக்குக் கூட உண்டு.




இலக்கியம் அறிமுகமான ஆண்டுக்கு பிறகு வந்த சென்னை புத்தகச் சந்தையிலிருந்து(2003) பதின்வயதின் இறுதியிலிருந்து ஒரு வருடம் கூட இடைவிடாது தொடர்ந்து சென்று கொண்டே இருக்கிறேன். வாசகனாக பரவசத்துடன் படைப்பாளிகளைச் சந்தித்துப் பேசியதிலிருந்து என்றும் சொல்லலாம்.  புத்தகச் சந்தைக்கு உள்ளேயும் வெளியேயும் நின்று பேசிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களைக் காண்பது தனி அனுபவமாக இருந்திருக்கிறது. முன்பெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே சட்டென நின்று பேசத் தொடங்கி அது அப்படியே வளர்ந்து செல்வதை ஆர்வத்துடன் குறுக்குக் கேள்விகள் கேட்டு இடைமறித்தது அதை அவர்கள் மதித்தது அனைத்தும் இது போன்ற புத்தகச் சந்தைகளில் தான் நடந்திருக்கின்றன. சில ஆண்டுகளாக அதற்கான இடமே இல்லை.  அதற்கான இடத்தையோ வாய்ப்பையோ பப்பாசி வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கித் தரவேயில்லை.


இந்த ஆண்டு இரண்டு நாட்கள் புத்தகச் சந்தையினுள் இருந்தேன்.  பிற ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதலான ஸ்டால்களால் சந்தை பெரிதாக ஆகியிருந்தது. இதன் பலன் என்னவென்று கேட்டால் கால் வலியால் காலி நாற்காலியைக் கண்கள் தேடிக் கொண்டேயிருந்ததைத் தான் சொல்ல முடியும்.  ஒருவர்  வாங்கிய காப்பியின் சூடு தாங்காமல் நாற்காலி மேல் வைத்தார்.  உடல்வலியால் அதைப் பார்க்காத வேறொருவர் பெருமூச்சோடு உட்காரப் போக பின்புறம் கொதித்து அதே வேகத்தில் எழுந்து ஓடியக் கூத்துகள் கூட நடந்தன. 


எழுத்தாளர்கள் வருடந்தோறும் புத்தகம் (அ) புத்தகங்களை வெளியிடுவதற்கு இரு காரணிகளே இருக்கக் கூடும். சம்பந்தப்பட்ட எழுத்தாளர் படைப்பூக்கக் காலத்தில் இருக்க வேண்டும். இல்லையெனில் அது ஒரு நோய்க்கூறாக மனதில் படிந்திருக்க வேண்டும். இந்த வருடம் சுற்றி வந்ததில் நோயாளிகளையே அதிகம் பார்க்க முடிந்தது. இந்த நோயாளிகளின் பிரச்சனை என்னவென்றால் யாருக்கோ பதில் சொல்ல வருடந்தோறும் நூலை (அ) நூல்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சதவீதத்தில் முதலாமவர்களை விட இவர்களே அதிகம்.


முன்னரெல்லாம் முக்கியமான படைப்பாக ஏதோவொன்றைக் குறித்தப் பேச்சுகள் அல்லது விவாதங்கள் அந்தப் பெரிய வளாகத்தினுள் வளைய வருவதைக் கேட்டிருக்கிறேன்.  கடந்த சில ஆண்டுகளாக தமிழில் எழுதத் தெரிந்த அனைவரும் எழுத்தாளர்களாகத் தங்களை அறிவித்துக் கொண்டதால் அதற்கான சிறுவாய்ப்பு கூட இல்லாமல் போய்விட்டதை உணர்ந்தேன்.


நூல்களின் அதிக விலை குறித்த அதிருப்தி இந்த புத்தகச் சந்தையிலும் எதிரொலித்தது. கிட்டத்தட்ட பக்கத்துக்கு ஒரு ரூபாய்க்கு மிகாமல் விலைகள் இருந்தன.  நான்கு நூல்களுக்கே ஆயிரம் ரூபாய் தேவைப்படும் என்றால் அதிருப்தி எழத்தானே செய்யும். பதிப்பாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களில்  இது முக்கியமானதாகத் தோன்றுகிறது.


நட்சத்திர எழுத்தாளர்கள் எனக் கூறப்படுகிற மூவரின் மீதான பிரம்மையிலிருந்தும் மயக்கத்திலிருந்தும் வாசகர்கள் மட்டுமல்ல, அச்சு, இணைய மற்றும் காட்சி ஊடகங்களும் வெளியேற வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த மும்மூர்த்திகளில் ஒருவர் மட்டுமே  நட்சத்திரம் எனச் சொல்லிக் கொள்ளக்கூடியத் தகுதி கொண்டவர். ‘நட்சத்திர வழிபாடு’ திரைத்துறையோடு ஒழிந்து போகட்டும். பன்முக அடையாளங்களை மறைக்கும் இந்த ஆராதனைகள் எதற்கு? இவர்கள் எழுதவந்த காலத்திலும் அதற்குப் பின்னும் எழுதத் தொடங்கி , படைப்பூக்கத்துடன் தொடர்ந்து எழுத்துலகில் தங்களை நிறுவிக்கொண்டிருக்கும்  இமையம், ஷோபாசக்தி,  ஆ.இரா.வேங்கடாசலபதி, கண்மணி குணசேகரன் போன்றவர்களும் முக்கியமான படைப்பாளிகள் என்பதை உணர்ந்து ஊடகங்கள் பழைய பல்லக்குகளை கைவிட்டால் அது சூழலுக்கு நன்மை பயக்கும். 

தமிழகமெங்கும் பரவலாக புத்தகக் கண்காட்சி நடைபெற்றாலுமே  கூட சென்னையே பதிப்பாளர்களுக்குப் போதுமான ஆக்ஸிஜனைத் தரக் கூடியது. இந்த விற்பனையே கூட மிகைப்படுத்திச் சொல்லப்படுவதாக பரவலான புகார்கள் உள்ளது. தீவிர இலக்கிய நூல்களில் க்ளாஸிக்குகள் தான் இன்றும் அதிக வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மகிழ்ச்சியில் சங்கடமும் கலந்திருக்கிறது. அந்த நூல்களின் முதல் பதிப்பு வெளியாகி முப்பதிலிருந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்து விட்டது. சுந்தர ராமசாமியோ அசோகமித்திரனோ ஜானகிராமனோ ஆ.மாதவனோ இந்தப் படைப்புகளை எழுதிய போதே இவ்வளவு கவனிப்பிற்கும் வாசக ஆதரவுக்கும் உரியவர்களாக இருந்திருந்தால்  இந்தச் சமூகத்தின் விழிப்புநிலையை எண்ணி உவகை கொண்டிருக்க முடியும். இடைப்பட்டக் காலங்களில் பலரும் பேசி எழுதி உரையாடி கூட்டங்கள் போட்டு மூடியிருந்த அந்த பெருங்கதவை சிறுகச் சிறுகத் திறந்திருக்கின்றனர். அப்படியாயின் கடந்த சில ஆண்டுகளில்  எழுத வந்திருக்கும் தீவிர இலக்கியக்காரர்கள் தவளைகள் எழுப்பும் ’ட்ரெண்டிங்’  சத்தங்களைக் கடந்து  தன் இடம் எதுவென அறிந்து கொள்ள மேலும் முப்பதாண்டு, நாற்பதாண்டு காலங்கள் காத்திருக்க வேண்டுமோ..! கிழடு தட்டிய வயோதிகத்தில் பார்வைக் குறைபாட்டுடன் இருக்கையில் இந்த அற்புதம்  நிகழ்ந்தால் என்ன? நிகழாமல் போனால் தான் என்ன? சர்ச்சையின் பொருட்டு எழுத்தாளரின் நூல்கள் கவனம் பெற்று கூடுதல் விற்பனை ஆகிறதென்றால் அதிலும் பெருமைப்பட ஏதுமில்லை.


விற்பனைக் குறித்து பதிப்பாளர்களளை விடவும் எழுதுகிறவர்கள் இன்று அதிகக் கவலைகளுடன் இருப்பதாகத் தோன்றுகிறது.  இவ்வளவுக்கிடையே 90 சதவீதம் ‘பல்ப்’ நூல்களை வெளியிட்டுவிட்டு ’என் விற்பனையை இருட்டடிருப்பு செய்தாயே..’ என பத்திரிகையை நோக்கி பிலாக்கணம் வைத்த பதிப்பாளரின்  ’வேடிக்கைப் பதிவு’ம் முகநூலில் அரங்கேறியது.


‘இந்து தமிழ்’ நாளிதழ் புத்தகச் சந்தையையொட்டி தினந்தோறும் ஒரு பக்கத்தை ஒதுக்கிச் சேவை ஆற்றியது. சில நல்ல நேர்காணல்கள் இந்நாட்களில் வெளியாகி அந்த எழுத்தாளனின் முகத்தையும் மனதையும் உலகுக்குக் காட்டின. இவர்களின் தனிப்பட்ட ஆர்வங்களை பத்திரிகையின் குரலாக வெளிப்படுத்தியதில் முதிர்ச்சியின்மை வெளிப்பட்டது.  இந்நாளிதழ் கவனிக்கப் பரிந்துரைத்த பாதி நூல்கள் அந்த பக்கத்தில் நகைச்சுவை இல்லாமலிருந்த குறையைப் போக்கியது.


சிற்றிதழ் வழியாக உருவான நெடுங்கால பரிச்சயத்திற்கு பின் அயல்தேச எழுத்தாளனின் மொழிபெயர்ப்பு நூல் இங்கு வெளியாகி பெரும் சலனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. சில ஆண்டுகளாக தமிழில் வராத என நினைத்திருந்த நூல்களெல்லாம் உரிமை பெற்று வரத்தொடங்கியது சாதகமான அம்சம் என்றால் முதன்முதலாக அந்த மொழியாக்கத்தின் வழி மட்டும் மூல ஆசிரியன் பெயரை அறிந்து கொள்ளும் விபரீத்தை பாதகமானதாகக் கருத வேண்டியிருக்கிறது. வந்து கொட்டப்படுகிறவற்றுள் மொழிபெயத்தவரின் பெயர் அளிக்கும் நன்நம்பிக்கையின் பொருட்டே அந்த நூலை வாங்குவது குறித்து யோசிப்பவனாக இருக்கிறேன்.


எழுத்தாளனின் இறப்பின் வழியாக மட்டுமே அவனது பெயரை அறிந்து கொள்ளும் சமூகமாகவே இன்றும் இருந்து கொண்டிருக்கிறோம். ந.முத்துசாமி, பிரபஞ்சன் போன்றோரை அவ்வாறே தமிழுலகு தெரிந்து கொண்டது. இவர்கள் இருவருக்குமான தனித்த அரங்குகளை பப்பாசி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அப்பளத்தையும் சுண்டலையும் கடிக்கும் இடைவெளியில் மக்களின் காதுக்குள் அவர்கள் நுழைந்திருப்பார்கள். ஆனால் பப்பாசி இன்னும் வி.ஐ.பிக்களையும் லேனா தமிழ்வாணன்களையுமே மேடை ஏற்றிக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு மூடன் ‘பேச வந்திருக்கிறேன். என்னை உற்சாகமூட்ட ஒரு தடவை எல்லோரும் நன்றாக கை தட்டுங்கள்..’ என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்ததை ஒருமுறை பார்க்க நேர்ந்தது.


இந்தப் புத்தகச் சந்தையைச் சுற்றி வந்து கொண்டிருந்த போது ‘நீ எழுதவில்லை என பட்டினி கிடக்கும் வாசகன் யார்?’ என்ற ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ நாவலில் வரும் வரி மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. எவருமில்லையல்லவா..! இது புரிந்தால் தன்னைக் குறித்த மிகைவிளம்பரங்களுக்கும் அதீத கற்பனைகளுக்கும் அவசியமே இல்லாமல் போய்விடும் என்று தோன்றுகிறது. புத்தகம் பேசுவதற்குப் பதிலாக எழுதியவனே அது குறித்து ஓயாமல் பேசிக் கொள்கிறான்.


போலிகளுக்கும் தவளைகளுக்கும் புகழ்மாலைகள் விழும் போது மீன்களின் காதிற்குள் புகைவரத் தான் செய்கிறது. அந்த தவளைகள் இல்லாமல் போகும் நாளிலும் இந்த மீன்கள் நீந்திக் கொண்டிருக்குமல்லவா..! தூண்டிகளுக்கும் வலைகளுக்கும் அகப்படாமல் இருப்பது மீன்களின் சமார்த்தியம். தான் நீருக்கும் இருக்கிறோம் நீந்திக் கொண்டிருக்கிறோம் என்பதே இந்த மீன்களுக்கு போதுமானது. 


ஆம். நீருக்குள் அமைதியாக மீன்கள் நீந்திக் கொண்டிருக்கும்.

(மின்னம்பலம் இணைய இதழ் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்டக் கட்டுரையின் முழு வடிவம்)