அரூப நெருப்பு
ரசத்திற்குள்
சோற்றுப்பருக்கைகள் மிதக்கப் பாதித் தட்டில் நிரம்பியிருந்த அதன் சாறைக் கைகளால் தூர்
வாரி ஒன்று சேர்த்துப் பிழிந்து, கிட்டிய பருக்கைகளை அவளைப் பார்த்தபடியே மென்றேன்.
நாகு, என் தொடையில் பலமாக அடித்துச் “சத்தம் போடாம சாப்புட்றா . . . ஏன்டா பன்னி மாறி
சாப்பிடும்போது சப்சப்னு சவுண்ட் கொடுக்கற” என்றான். அவன் டீயைக் கழுநீர் குடிக்கும்
மாடுபோல உறிஞ்சிக் குடிப்பதை எண்ணிக்கொண்டேன். விஜயா அசையாமல் நின்றுகொண்டிருந்தாள்.
அவள் உதடு மட்டும் எதையோ கணக்கிடுவதுபோலப் பதற்றத்துடன் துடித்தது. உள்ளே அப்பாவின்
அறையிலிருந்து பசிய இலையின் வீச்சம் காற்றுக்கு வேகமாக வந்து தாக்கிற்று. பிருஷ்டத்தில்
சூட்டுக் கொப்புளம் வந்து அவரை மேலும் படுத்திக் கொண்டிருந்தது. அக்கதவை அடைத்துவிட்டு
வேகமாகச் சமையலறைக்குள் சென்று திரும்பிய அலமேலு அம்மா, “ஏன்டீ சிலை மாதிரி நிக்கற?”
என்று அவளைத் தள்ளி விலக்கிவிட்டு வந்து மீன்துண்டுகளை அவர்களுக்கு வைத்தாள். தலைதூக்கிப்
பார்த்ததும் “தீஞ்சு போச்சுடா கணேசு” என்றாள். நாகு பொன்னிறத்தில் முறுகலாகத் தன் தட்டில்
குப்புற விழுந்து கிடக்கும் மீனை லாவகமாகப் பிட்டு கண்ணை மூடிச் சுவைத்தான். பின்னே,
அவள் மகன் அல்லவா! நான் ஒண்ட வந்தவன்தானே? விஜயா நாகுவிடம் எதையோ கூற எண்ணி வாய் திறந்து,
என்னைக் கண்டதும் எச்சில் தட்டுகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி எடுத்துக்கொண்டு வெளியே
போனாள்.
ஈர்க்குச்சியைச்
சிறுதுண்டாக உடைத்துப் பல்லைக் குத்தி நாக்கால் துழாவியபடியே விஜயாவை நோக்கி “யேன்ன்
நாள் தள்ளிப் போயிருச்சா?” என்றேன். அவள் மலைத்து நின்று என்னைப் பார்த்தபோது வேண்டுமென்றே
அவள் கண்களை ஊடுருவுவது போல நோக்கினேன். “கணேசா” என்றாள் தழுதழுத்த குரலில். நான் நன்றாகச்
சாய்ந்து “சொல்லு குட்டீ” என்றேன் உதடுக்குள் புன்னகையைத் தேக்கியபடி. நான் செல்லம்
வைத்து அழைப்பதை அவள் வெறுக்கிறாள் என உணர்ந்ததும் அவளை இம்சிக்கவே குரலில் குழைவுடன்
அவ்வாறு அழைத்தேன். அதில் சீண்டப்பட்டவளாக “ஆமாண்டா, நீ பாடையில போறதுக்கு நாள் தள்ளிப்
போயிடுச்சு” என்றாள். உற்சாகமாய் நிமிர்ந்து “அடிச்சக் கேன்னானாம்! என்னோட கருமாதிக்காவது
நல்லா மீன வறுத்து வைய்டீ” என்றேன். உள்ளே சாமான்கள் விழுந்து புரளும் சத்தம் கேட்டது.
“த்தூ” என வராத எச்சிலைத் துப்ப முயன்றாள். என் மீது அது தெறித்ததில் கோபமுற்று, அதை
வெளிக்காட்டாமல் “குட்டீயோட எச்சிலையும் அமுதமா நெனைக்க நானொன்னும் நாகு இல்ல” என்றேன்.
“விஷம்டா கணேசா, உன் ஒடம்பெல்லாம் விஷம்” என்றாள் கண்களை அகலத் திறந்து. “என்னோட உடம்பப்
பத்தி உனக்கெப்படிடீ தெரியும். அதுக்குத்தான் ஒருத்தன் உனக்கு இருக்கானே” என்றேன் இளக்காரமாக.
அம்மா இருவரையும் நின்று பார்த்துக் கடந்தபோது அவள் கண்மணிகள் பயந்த சுண்டெலி போல அங்குமிங்கும்
அலைந்து, என்னை அங்கிருந்து அகற்ற விளக்குமாறை எடுத்து இல்லாத குப்பையைப் பெருக்கித்
தள்ளினாள். கைலியின் பின்புறம் ஒட்டிய குப்பையைத் தட்டியபடியே மெல்ல எழுந்து அவளை நோக்கிக்
குனிந்து “எப்போ கௌம்பறீங்க?” என்றேன். அவள் சீமாரைக் கீழே போட்டுவிட்டு உள்ளே ஓடினாள்.
விஜயாவை
அப்பா கூட்டிக்கொண்டு வந்து நிறுத்திய பின்மாலையில் மழை பெய்து ஓய்ந்து சொட்டிக்கொண்டிருந்தது.
பெரும் சிரமப்பட்டு அம்மாவிடம் அப்பா விஷயத்தை அவிழ்த்தபோது தன் தலையில் இரு கைகளாலும்
ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டு அம்மா கதறினாள். நாகு, அப்பாவை எரிப்பது போலப் பார்த்தான்.
அவன் அம்மாவிடம் சென்று “இந்தாம்மா” என ரூபாயைத் தந்து “போயி மருந்து வாங்கிட்டு வா.
குடிச்சிட்டு இப்படியே செத்துப் போயிரலாம்” என்றான். அப்பா முடிவுக்கு வந்தவர் போல
விஜயாவை உள்ளறையில் அமரச் செய்துவிட்டு வெளியே வந்து நடுங்கும் தன் கைகளால், அம்மாவின்
கைகளைப் பற்றி மௌனமாகத் தலை கவிழ்ந்து நின்றார். அவள் முகத்தைப் பட்டெனத் திருப்பிக்
கைகளைத் தட்டிவிட்டாள். எனக்குச் செய்தி எட்டி மூச்சு வாங்க நடந்துவந்து சேர்ந்தபோது
வீட்டின் ஜன்னல்களுக்கருகிலும் கதவுகளுக்குப் பக்கத்திலும் பெண்கள் கூட்டமாக நின்று
குசுகுசுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அம்மா சவக்களை படிந்த முகத்துடன் “நீயேன்டா
ராஜா சாகற? அசிங்கத்த மிதிச்சவங்களே அதய வாயிக்குள்ள உட்டுக்கும்போது நமக்கென்னடா?”என்றாள்.
நான் உள்ளே நுழைந்ததும் வீட்டின் தோற்றத்தைக் கண்டு பெரும் நிம்மதியுடன் நாகு அமரும்
நாற்காலியை நோக்கிச் சென்று அமராமல் தூணோடு சேர்ந்து சாய்ந்து அமர்ந்தேன். நாகு சுண்டிய
முகத்துடன் அமர்ந்திருந்ததை ரசிக்கும் இடைவெளியில் குறுக்கிட்ட “கணேசா, உங்கப்பஞ் செஞ்ச
காரியத்தப் பாத்தியாடா” என்ற அம்மாவின் பெருங்குரலுக்குப் பதில் சொல்ல எழுந்தேன். வீட்டிற்கு
வெளியிலிருந்து குரல்களின் சலசலப்பு கேட்டவுடன் தெருவே கேட்கும் குரலில் “இங்கயென்ன
என்னோடத அறுத்து வச்சிருக்குன்னு, அதைய பாக்கறதுக்காடீ தொண்டு முண்டைகளா இப்புடி அலையறீங்க?
அவ அவ பொழப்புக்குள்ள அடிக்கற நாத்தம் எனக்குத் தெரியாதுன்னு நெனைச்சீங்களா?” என்றாள்.
அப்போது பட்டுப்போன மரத்தின் கிளையொன்று முறிவது போன்ற ஒலியுடன் கதவு மெல்லத் திறந்தது.
அவள் குரல் அப்படியே அடங்கி மூச்சிரைப்பு மட்டும் பலமாக வெளிப்பட்டது. ஒரு சிறுவன்
உள்ளிருந்து வந்த அதட்டலுக்கு நிற்காமல் அலமேலு அம்மாவின் அருகில் வந்து “அவ்வா” என்றான்.
மூவருமே அக்கணத்தில் உறைந்து போனோம். எனக்குள்ளேயே “மனவாடா!” எனக் கூறிக்கொண்டபோது
அம்மாவும் அதையே உச்சரித்திருக்கக்கூடும் என உதடுகளின் அசைவு காட்டியது. அம்மா முகத்தைத்
திருப்பித் தெலுங்கில் கூசும்படியான வசவொன்றை எங்கள் மூவருக்கும் கேட்கும் குரலில்
சொன்னாள்.
அப்பா,
அம்மாவை நோக்கிப் பலமாக ஒரு எட்டு வைத்து அம்மாவின் கண்களிலிருந்த கனலைக் கண்டு அப்படியே
தன் குரலை இறக்கி “அலமேலு . . . அலமேலு” என மன்னிப்புக்காக இறைஞ்சி நின்றார். அவர்
பக்கம் திரும்பாமலேயே “பையன் தலையெடுத்து நிக்கிறான். இந்தாளுக்கு கூத்தியா கேட்குதா?”
என்றாள் என்னை நோக்கி. உள்ளிருந்து விஜயா சூறைக் காற்று போல நொடியில் அம்மாவின் எதிரில்
வந்து நின்று பேச வாயெடுப்பதற்குள் “போடீ உள்ள” என அப்பா விஜயாவைப் பார்த்துக் கத்தினார்.
அவள் அச்சிறுவனை இழுத்துச் சென்று பலமாக அடித்தாள். அவன் அவளிடமிருந்து விடுபட்டு அழுது
வீங்கிய முகத்துடன், அலமேலு அம்மாவின் பக்கமாகச் சென்று வயிற்றைப் பிடித்துச் சோர்வாக,
“ஆயிலிகனி” என்றான். அம்மா நிலைதடுமாறி நாகுவின் முகத்தைப் பார்த்தாள். நாகு ஏற்றுக்கொள்வானோ?
என ஒருகணம் அஞ்சினேன். “பட்டினியில சாகட்டும்” என்று கறுவினான். நாகு, அப்பாவின் முன்னால்
தலையைக் கூடத் தூக்கத் துணிவற்றவன். அவர் முன்னாலேயே இப்படித் துள்ளுகிறான். அளவற்ற
மனநிறைவுடன் அச்சிறுவனை நோக்கி “இக்கட ராரா” என்றேன். காத்திருந்தவன் போல, நாகுவின்
கூரிய பார்வையை அலட்சியம் செய்தவனாக வந்து என் மடியில் அமர்ந்துகொண்டு மீண்டும் அதையே
சொன்னான். அந்நொடியில் பால்ய நினைவுகளின் சுழலில் சிக்கித் தவித்துக் கரையேறி அங்கு
வந்து சேர்ந்தேன். ரேக்கின் தடுப்புக் கண்ணாடியை நகர்த்தி இரண்டு பழங்களை அவனுக்குத்
தந்து “நீ பேரேமிரா?” என்றபடியே அவனை மடியில் நன்றாக இருத்திக்கொண்டேன். “வெங்கடகிருஷ்ணன்
மாமா” எனக் கூறியதும் அவளது அம்மா இருந்த அறையை அச்சத்துடன் பார்த்துவிட்டு “வெங்கி
மாமா, வெங்கி மாமா” என்றான். அது அப்பாவின் அப்பாவுடைய பெயராயிற்றே? அம்மாவின் உடல்
கோபத்தால் நடுங்கியது. அங்கு நிற்கக் கூசியவளாக உள்ளே வேகமாகப் போனாள். “சரி . . .
சரி அதி அவ்வா காதுரா . . . நீ பெத்தம்மா” என்றேன் நாகுவுக்குக் கேட்கும்படியாக. அவன்
எனக்கருகாக வந்து “இப்போ இந்தத் தாயோலியக் கொன்னாலும் என்னோட ஆத்திரம் அடங்காதுடா”
என்று தமிழில் கத்தினான். அந்தப் பையனை இறுக அணைத்தபடி “ஒரு மயிரும் புடுங்க முடியாது
போடா” என்றேன். நாகு அந்தப் பதிலடியை ஒரு அடிமையிடமிருந்து எதிர்பார்த்திருக்கவேயில்லை
என்பதை அவன் முகத்தில் வெடிக்கும் நெருப்பில் அறிந்தேன். அவன் விடுவிடுவென வெளியே சென்றான்.
“ஐயோ . . . ஐயோ” என அப்பா இப்போது தலையிலடித்துக் கொண்டு அழுதார். அம்மா அங்குப் பார்க்காமல்
தன்னருகே வரும் பூனையின் மேல் கைக்குக் கிட்டிய எச்சில் தம்ளரை எடுத்து வீசினாள். அது
பயந்து கண்களை ஒருமுறை அகலத் திறந்து சிமிட்டிய பிறகு வெளியே குதித்து ஓடிற்று. அப்பா
கலைந்த தலைமுடியை ஒதுக்காமல் வெளியே போனார். அப்போது தன் முதுகுக்குப் பின்னே தெருவே
திரண்டு கேலி செய்வதாக எண்ணிக் கொண்டார். அவர் தலை தாழ்ந்து தன் காலடிகளுக்குச் சற்றுத்
தள்ளி விழும் தன் நிழலைப் பார்த்துக் காறித் துப்பினார்.
வெங்கி
இரண்டாவது பழத்தையும் சாப்பிடுவதற்குள் “இந்த வூட்ல நிம்மதிய கெடுத்துட்டியேடி பாவி
முண்ட” என விஜயாவின் அறையை நோக்கி ஆங்காரமாகக் கத்தி இரத்தக் கொதிப்பு உச்சத்திற்குச்
சென்று அம்மா மயங்கி விழுந்தாள். மாத்திரைகள் தந்து படுக்கச் செய்த பிறகுகூட உள் அறையில்
எந்தச் சலனமும் ஏற்படாதது கண்டு விஜயாவை எண்ணி அஞ்சினேன். நாகுவை ஒடுக்க இவளைப் போன்றவள்
தான் வேண்டும் என நினைத்தபடியே வெங்கியைத் தூக்கித் தோள்மேல் போட்டுக் கொண்டு சந்தோஷத்தில்
குதித்துக் குதித்து அவனுக்குச் சிரிப்பு மூட்டினேன்.
அம்மாவுக்கும்
விஜயாவுக்கும் மௌன யுத்தமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அவளது புடவைகளை வீட்டின் பின்புறமாக
அலசி உலர்த்தியது கண்டு அவைகளின் விலை பற்றிய ஐயத்தை ரசம் வாங்க வந்த புவனாவிடம் கேட்டு
அம்மா மலைத்துவிட்டாள். அப்பா ஒருநாளும் அம்மாவிற்கு அது போன்ற வாழ்வை அளித்தவரல்ல.
அம்மாவின் கத்தல்கள் எதையுமே கேளாதவள் போல உள்ளறையில் மொறு மொறுப்பாகக் காய்ந்துபோன
அப்புடவைகளை விஜயா மடித்துக்கொண்டிருந்தாள். விஜயாவின் மௌனம் உடைந்த அன்று அம்மாவுக்கு
மேலும் கூடுதல் சத்துள்ள இரத்தக் கொதிப்பு மாத்திரைகளை வாங்க வேண்டியிருந்தது. அவர்கள்
இருவரும் ஜாடைப் பேச்சுகளில் அப்பாவையும் அவரவர்களின் அந்தரங்கத்தையும் நிர்வாணமாக
உரித்து வதம் செய்தனர். காத்திருந்த காதுகள் அவைகளில் மேலும் சில சங்கதிகளைச் சேர்த்துப்
பொடி தூவித் தெருவெங்கும் உலவவிட்டன. அதற்குப் பயந்து நாகு குறுக்கு வழியில் வீட்டிற்கு
வந்து செல்லத் துவங்கினான். அவன் தொட்ட தொழில்கள் எல்லாம் அவனைக் கைவிட்டன. அந்த எரிச்சலில்
ஒருநாள் அம்மாவை நாகு அதட்டி அடக்கினான். பின் ஆச்சரியமாக விஜயாவும் அமைதியாகிவிட்டாள்.
அம்மா
குளிர்க்காய்ச்சலில் விழுந்து வீடு அலங்கோலமாக மாறிக்கொண்டிருந்த வேளையில் விஜயா உள்ளறையிலிருந்து
தனது எல்லைகளை மெல்ல மெல்ல விரிவாக்கி வீடு முழுக்கக் கையில் எடுத்துக்கொண்டாள். வெளியே
உண்டபடியே சில நாட்கள் நீடித்த நாகுவின் ரோஷம் வயிற்றைப் புரட்டிய இரவோடு முடிவுக்கு
வந்தது. நான் அம்மாவுக்கு மாத்திரைகள் வாங்கி வீட்டினுள் நுழைந்த சமயத்தில் விஜயாவால்
சமைக்கப்பட்டு மூடிவைக்கப்பட்ட தட்டுகளை விலக்கி நாகு உண்பதைக் கண்டு, அவன் என்னைப்
பார்ப்பதற்குள் அகன்றுவிட்டேன். நாகுவின் நாக்கு அறிந்திராத ருசியுடன் விஜயாவின் கைவண்ணம்
இருந்தது. அம்மாவின் மறதி அவளது சமையலைப் பசிக்கானதாக மட்டும் ஆக்கியிருந்தது. வெளியே
கூறாமல் நாகு தனக்குள்ளாக அச்சமையலைச் சிலாகித்தபடியிருந்தான். வெங்கியைக் கண்டுவிட்டால்
மட்டும் நாகு சீறினான். அது ஏன் என அவனுக்கே குழப்பமாகயிருந்தது. பின்னர் அறிந்தான்.
நேற்றுவரை தன்னுடையவையாகயிருந்த அனைத்திற்கும் கூறுபோட்டு இரண்டாக்க, திடீரென முளைத்தவன்
அவனென. “தேவிடியாப்பையா” என முனகினான். அக்கணமே விஜயாவின் சமையலில் முடி விழுந்துகிடந்தது
துல்லியமாக நினைவில் எழுந்தது. “த்தூ” என்றான். அம்மா எப்போதும் சுத்தக்காரி. இந்த
இரு நாய்களையும் உடனே விரட்டவேண்டும் என யோசிக்கத் தொடங்கினான். அவன் உள்மனதிற்குத்
தெரியும். அதைத் தான் செய்யப் போவதில்லை என்பதும், அவளது புன்னகைக்காகக் காத்திருப்பவன்
தானே நான் என்றும். நோயிலிருந்து மீண்டு அம்மா வந்த பிறகு அம்மாவுக்கும் விஜயாவுக்குமிடையே
இருந்த சினமும் மௌனமும் தயக்கமும் மெல்ல அழிவதைக் கண்டேன். கழுத்து மூடிய கோட்டுடன்
தலைப்பாகை வைத்து நிற்கும் தாத்தாவின் புகைப்படத்துக்குக் கீழே தன் பெயர் இருப்பது
கண்டு வெங்கி துள்ளித் திண்ணையிலிருந்து கீழே குதித்துக் கால் சுளுக்கி அழுதது கேட்டு
அம்மா பதறியபடியே ஓடிவந்து அவனைத் தூக்கித் தன்மேல் போட்டுக்கொண்டாள். விஜயா எவ்விதக்
கூச்சமுமின்றிச் சிரித்தவாறே வந்து அம்மாவின் கையிலிருந்த கரண்டியைக் “கொடுங்கக்கா.
நா பாத்துக்கிறேன்” என வாங்கி சமையற்கட்டினுள் நுழைந்தபோது ஒரு அதிகாரம் நுட்பமாகக்
கைமாறிவிட்டிருந்ததை உணர்ந்து திடுக்கிட்டு நின்றேன். அவளது ஜாதியும் குலமும் அறிந்து
கொண்டபிறகு அம்மாவோடு பூஜையறை வரை சென்று வரத் தொடங்கினாள்.
அம்மா
இல்லாத வேளைகளில் நாகு விஜயாவோடு சிரித்தபடி பேசுவதும் அவள் அருகிலுள்ளபோது இருவருமே
தரை நோக்கிக் கண்களைத் தாழ்த்திக் கொள்வதுமாக இருந்தனர். விஜயா என்னை ஒரு பொருட்டாகவே
மதிக்கவில்லை. அம்மாவே சொல்லக்கூசும் வேலைகளுக்கு அனுப்பினாள். அவள் தைக்கத் தந்திருந்த
ஜாக்கெட்டுக்கு அளவு ஜாக்கெட்டாகச் சாயம் போகத் தொடங்கிய ஒன்றைக் கொடுத்து “முதுகுல
கொஞ்சம் கீழிறக்கச் சொல்லு. பட்டன் வேண்டாம், ஊக்குப் போதும். கையக் கொஞ்சம் மேல ஏத்தி
டைட்டா தைக்கச் சொல்லு” என்றாள். கோபத்துடன் தலைதூக்கியதும் அவள் அங்கிருந்து எப்போதோ
சென்றுவிட்டிருப்பதை உணர்ந்தேன். “தேவிடியா முண்ட” என மனதிற்குள் திட்டியபடியே வெளியே
ஆளற்ற இடத்தில் அதை விரித்து நோக்கினேன். அதற்குள் நெரியும் முலைகள் மனக்கண்ணில் வந்து
நின்றன. அவளது இளமையும் அழகும் அவள் சிற்றன்னை என்பதை மறக்கச் செய்திருந்ததை உணர்ந்தேன்.
அப்போது நாகுவின் தங்கை வாணியின் ஞாபகம் மேலெழுந்து வந்தது. சூட்டுக் காலோடு நகர முடியாமல்
கிடக்கையில் நாகுவின் மிரட்டலையும் மீறி மருந்திட்டவள் அவள். பதின்பருவத்தில் நான்
அவளை மோகித்து அலைந்தபோது நெடுநாள் காத்திருப்புக்குப் பின் உப்புச் சுவையூறிய உமிழ்நீரை
அவள் வாயினுள் இருந்து உறிஞ்சி முத்தங்கள் பரிமாற அனுமதித்தாள். அப்போது வாணியின் விரைத்த
மார்பகங்களைத் தழுவித் தழுவி மேலும் சூடேற்றினேன். பின் தொடுகைகளும் முத்தங்களும் அணைப்புகளுமாக
அது தொடர்ந்தது. அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்ல அவள் அனுமதிக்கவில்லை. வாணி மணமாகி
வழியனுப்பப்பட்ட அன்று அழுது சிவந்த கண்களோடு நின்றிருந்த என்னை நோக்கிப் “பொட்டியத்
தூக்கி டிக்கீல வையி” என்றாள் சாதாரணமாக. நான் கற்பனையில் அவள் மேல் காறி உமிழ்ந்து
மிதித்துக்கொண்டிருந்தேன். அப்பாவின் குரலுக்கு மீண்டு அந்தப் பைகளை வைத்துவிட்டுப்
பலவீனமானவனாக நின்று கொண்டேன். வாணி அவள் கணவனுடன் வெளிநாடு செல்லக் காரினுள் அமர்ந்து
அனைவருக்கும் தலையாட்டிப் புன்னகையுடன் விடைபெறும்போதுகூட என் பக்கமே அவள் தலையைத்
திருப்பவில்லை. அந்த வடு தீக்காயம் போல அழியாமல் பளிச்சென என் மனதில் கிடக்கிறது. விஜயா
கொடுத்த அந்த மஞ்சள் ஜாக்கெட்டை கண்ணை மூடி அழுத்தியபோது வாணியின் “ஸ்ஸ் . . . ம்மா
. . . மெதுவாடா” என்ற கிறங்கிய குரல் என்னுள் ஒலித்தது.
அப்பா
- அப்படித்தான் எனைப்பெற்ற அம்மா சொன்னாள் - உள்ளே நுழைந்ததும் அவர் வாங்கி வந்திருந்த
பொட்டலங்களை என்னிடம் பிரியத்துடன் கொடுப்பார். அப்போது அவரின் வயிற்றின் மேல் என்
நெற்றி முட்டும் அளவு நெருங்கி, முளைக்கத் தொடங்கிய அரை பல் காட்டிச் சிரிப்பேன். அவரும்
புரிந்துகொண்டு தரும் சில்லறைகளை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்து வெளித்திண்ணையில்
கிடப்பேன். அவர் வந்தபின்தான் பூனை உறங்கிய அடுப்படி புழக்கத்திற்கு வந்தது. மேல்ச்சட்டையின்றித்
திரிந்து பையன்களின் கேலியையும் அடியையும் சட்டை செய்யாமல் தின் பண்டங்களுக்காக அவர்களின்
வாய் பார்த்து நின்ற நாட்கள் முடிவுக்கு வந்தன. என் கிழிந்த அரை நிஜாருக்குப் பின்னால்
தபால் போடக் கத்தியபடியே ஓடி வருபவர்கள் இல்லாமல் ஆயினர். அம்மா என்னை அடித்துத் துன்புறுத்தும்
குணத்தைக் கைவிட்டாள். இந்த அப்பா வீட்டிற்குள் நுழைந்ததும் தரித்திரம் பின்வாசல் வழியாக
ஓட்டமெடுத்துவிட்டிருந்தது. ஆனால் அவர் வந்தாலே அம்மா என்னை வெளியேற்றிவிடுகிறாள்.
அன்று வருமானத்துக்கு அவர் வாங்கித் தந்திருந்த பசுமாடுகளை நனைந்தபடியே மேய்த்துவிட்டு
வந்து முளையில் கட்டி வீட்டினுள் நுழைந்ததும் அம்மா அவருடன் கிடந்த கோலத்தைக் கண்டு
உலுக்கப்பட்டு, எதுவும் பேசாமல் பேய் மழையில் வந்து சத்தமிடாமல் நின்றேன். இறந்துபோன
என் அப்பாவுக்காகத் தேம்பித் தேம்பி அழுதேன். அது மழைநீரில் விழுந்து கரைந்து ஓடிற்று.
அம்மாவைப் புரிந்துகொள்ளத் துவங்கினேன். வயதுக்கு மீறிச் சென்ற யோசனைகளை எண்ணி ஒருகணம்
நானே வியந்து போனேன். பிறகு எப்போதும் அப்பா சென்ற பிறகே வீட்டினுள் நுழைவதை வழக்கமாக்கிக்
கொண்டேன். அவள் என்னைக் கட்டிக்கொண்டு அழுவாள். அப்போது அவள் குளித்துவிட்டு வந்திருப்பதை
அறிந்து அவளை விலக்கி விட்டு அப்பா வாங்கிவந்திருந்த பொட்டலங்களைப் பிரித்து நொறுக்கித்
தள்ளுவேன். அவளுக்குக்கூட அதில் மிச்சம் வைக்க எண்ணியதில்லை. உறங்கும்முன் இருளில்
என் முகத்தைத் துழாவி இரு கைகளால் ஏந்தி, “பத்திரமா பொழச்சுக்க சாமி . . . யாரோட நிழலையும்
நம்பாம பொழச்சுக்க கண்ணு” என அவளோடு சேர்த்து அணைத்துக்கொள்வாள். அவள் என் முதுகைத்
தட்டிவிட்டபடி ஏதேதோ கூறத் தொடங்குவாள். நான் எப்போதோ உறங்கிவிட்டிருப்பேன்.
நடுக்கூடத்தில்
அமர்ந்து அலமேலு அம்மா சொல்லும் அடுத்த வீட்டுக் கதைகளுக்கு வெங்காயத்தைத் தொலித்தபடி
விஜயா “ம்” கொட்டிக்கொண்டிருந்த முன்மதியத்தில் கோவிந்தன் வாசலில் நிற்பது கண்டு இருவரும்
எழுந்தனர். விஜயாவை அவர் நேர் கொண்டு நோக்காமல் அலமேலுவிடம் பிரயாணப் பையைத் தந்துவிட்டு
அவள் உள்ளே போனதும் விஜயாவின் கன்னத்தைத் தட்டியபடியே சட்டையைக் கழற்றித் தந்தார்.
வெங்கியை விஜயாவிடம் கேட்டபடியே அந்த நாற்காலியில் அமர்ந்து கண் மூடினார். சர்க்கரை
அவரது சக்தியை உறிஞ்சி விட்டிருந்தது. வீட்டில் விஜயாவை விட்டுவிட்டு வடக்கே சென்று
சுற்றியலைந்து இருவாரம் கழித்து அப்பா மொட்டைத் தலையோடு திரும்பியிருந்தார். மேலிருந்து
நான் கீழே போடும் இளநீர், அதிர விழுந்து உருள்வது கண்டு கைத்தட்டிச் சிரித்துக் கொண்டிருந்த
வெங்கி அப்பாவைக் காண ஓடினான். பின் தொடர்ந்து சென்று, உடலில் வழியும் நீரைத் துடைத்தபடியே
“உங்க மேலதான் உசிரா இருக்கான்” என்றவாறே விஜயாவை மெல்ல நோக்கினேன். அவர் ஆமோதிப்பது
போலத் தலையசைத்தார். அவள் வெடுக்கென மறைந்தாள். வெங்கி அவரிடம் “கணேசன் ரொம்ப நல்லவம்பா”
என்றான் அவரின் கழுத்தைக் கட்டியபடி.
“டேய்,
அவன் உங்கண்ணன்டா வெங்கி” என்றார்.
“கொழந்த
தானுங்க அப்பா” என்றேன். பூரிப்புடன் என்னை நோக்கி “கணேசன் அப்பாவிடா வெங்கி” என அவனை
முத்தினார். அப்போது உள்ளே பாத்திரங்கள் மடமடவென விழுந்து உருண்டு அடங்கிற்று. கிணற்றடியில்
நீர்வாளி இறைத்துக் கால் கழுவும் சத்தம் கேட்டதும் வெங்கி அவர் மடியிலிருந்து நழுவி
என் நிழலுக்கடியில் ஒதுங்கினான். கோவிந்தனைப் போலவே நாகுவும் நல்ல உயரம். முன் தாழ்வாரத்தில்
அவனால் தலை மோதிக்கொள்ளாமல் நுழைவது சிரமம். அலமேலு அம்மாவின் நிறம் அவனுக்கு. நான்
கறுப்பிலும் களையாக இருப்பதாக வாணி சொல்வாள். சுருள் சுருளான முடிகளை எண்ணெய் போட்டு
வாரி ஒதுக்கியிருந்ததில் அது நாகுவின் முகத்திற்கு மினுமினுப்பை ஏற்றியிருந்தது. அவனைக்
காண அப்பா அருகில் சென்று நின்றதும் அவன் உடல் கோபத்தால் துடிப்பதைக் கண்டு அவன் கையைத்
தொட்டார். அவர் அப்படிச் செய்யக்கூடியவரே அல்ல. நீண்ட பல நாட்களுக்குப் பிறகான அவரது
ஸ்பரிசம் சூட்டுக்கோலை நீரில் முக்கி எடுத்ததுபோல அவனைக் குளிர்வித்தது. இருவருமே எதுவும்
பேசிக்கொள்ளவில்லை. மௌனம் எவ்வளவு ஆழமும் குரூரமும் கொண்டது என உணர்ந்தனர். ஆறாத வசவுச்
சொல்லை விடவும் மௌனம் வஞ்சகம் நிரம்பியது எனக் கோவிந்தன் உணர்ந்த தருணம் இது. ஈயக்குண்டு
போலக் கனத்து வந்த அந்த நிமிடங்களை உடைத்து அவர் “நாகு” என்றார் தழுதழுத்த குரலில்.
முதன்முறையாக அவரை நேருக்குநேர் நோக்கினான். அவர் தலைகவிழ்ந்து நின்றார். அவர் ஏதோ
சொல்ல வாயெடுப்பதற்குள் கதவைப் படீரென அறைந்து விட்டுச் சென்றான். அப்படியே வெகுநேரம்
சுயபோதமற்றுக் கோவிந்தன் நின்றுகொண்டிருந்தார். பின் அவர்கள் ஒரு சொல்கூட எப்போதும்
பேசிக்கொண்டதில்லை.
நாகு
அன்று வீட்டிலேயே கிடந்தான். அவன் தொடங்கிய கெமிக்கல் வியாபாரம் அவனைக் கைவிட்டுவிடும்
நிலையில் இருந்தது. அனுபவமின்மையா? அல்லது வணிகத்தில் சூழ்ச்சி போதவில்லையா? என யோசித்துக்
கிடந்தான். அப்போது வெங்கி அவனைக் கடந்து நிற்காமல் ஓடினான். தோட்டத்திற்குப் போகக்கூடும்.
அங்குதானே கணேசன் இருப்பான் என எண்ணிக்கொண்டான். வாலை அசைப்பதைத் தவிர வேறெதுவும் தெரியாத
வீட்டு நாய் அன்று எவ்வளவு துள்ளியது? அப்பாவின் கைப்பற்றி அவரின் நிழலில் ஒதுங்கி
ஒண்ட வெட்டிய தலைமுடியுடன் கணேசன் வந்தது துல்லியமாக நினைவிலிருக்கிறது. அப்பாவின்
அடிகளால் மனம் வெதும்பி உடல் வலியால் அழுத நாட்களில் அவனை வதைப்பதன் மூலமே நாகு சமநிலையை
அடைவான். கணேசன், தான் போட்டுக் கிழித்த துணிகளுக்கும் ஒதுக்கி வைத்த உணவுக்கும் சிக்கிய
ஆளென்ற எண்ணம் நாகுவிற்கு இருந்தது. வாணியோடு அவன் பேசுவதே நாகுவுக்குப் பிடிக்காமல்
ஆயிற்று. நாகு தன் தாத்தாவின் இயல்பைக் கொண்டு பிறந்திருந்தான். அந்தச் சாய்வான நாற்காலியில்
அமர்ந்து வெற்றிலைப் பணிக்கத்தைத் தன் காலடியில் வைத்தபடியே தாத்தா முடித்து வைத்த
பஞ்சாயத்துக்களை அவரின் மடிமேல் அமர்ந்து கேட்டு வளர்ந்தவன் அவன். அந்த நாற்காலியின்
வழுவழுப்பேறிய கைப்பிடியைத் தொட்டு அமர்ந்தபோது காலம் குழம்பி நாகுவைத் தாக்கிற்று.
அப்பாவின்
சோம்பல் தாத்தாவிற்குச் சற்றும் பிடித்திருக்கவில்லை. லௌகீகக் காரியங்களில் அவர் காட்டிய
அலட்சியத்தையும் ஷோக்குகளில் கொண்டிருந்த ஆர்வத்தையும் தாத்தாவால் ஏற்கவே முடியவில்லை.
ஒன்றுக்குமாகாத நண்பர்களுடன் தெருமுனையில் யானைக்கால் பேண்ட் அணிந்து நின்று சார்மினார்
புகைக்கும் மகனை அவர் தந்திரமாக வழிக்குக் கொண்டு வந்தார். தன் தங்கை மகளையே மருமகளாக்கிக்
கொண்டதும் கோவிந்தன் அலமேலுவைப் பிரிய மனமின்றி வீட்டையே வளைய வரத் தொடங்கினார். தாத்தா
போய்ச் சேர்ந்த பிறகு அவரின் அந்த நாற்காலி புனித வஸ்துவாக மாறிற்று. அம்மா அதைத் தொட்டு
வணங்காத நாட்கள் மிகக்குறைவு. நாகு அதில் அமர்ந்தே அம்மாவின் கதைகளுக்கு “ம்” கொட்டி
உறங்கிப் போயிருக்கிறான். கணேசன் இங்கு வந்த புதிதில் அதன்மேல் ஏறியமர்ந்து கீழே குதித்து
மீண்டும் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான். நாகு குஷியுடன் அம்மாவிடம் போய்ச் சொன்னான்.
அவள் வந்து பார்த்து “போக்கத்தப்பயலுக்கு நெனப்பப் பாத்தியா” என்றவாறே சூட்டுக்கோலைப்
பழுக்கக் காய்ச்சினாள். கணேசன் விளையாடிக் கொண்டேயிருந்தான். நாகுவிடம் அலமேலு “பெட்றா
வான்னீ . . .” என்றாள். நாகு அவனைப் பிடித்தான். கணேசன் திமிற முயன்றபோது அம்மா அவனை
ஓங்கி ஓங்கி அடித்தாள். நாகுவும் குத்தினான். வாணி மட்டும் “வேண்டாம்மா . . . வேண்டாம்மா”
என்று கெஞ்சியபடி நின்றாள். அப்பா எழுதும் பேனாவின் நீளத்திற்குக் கணேசனின் கெண்டைக்காலில்
அம்மா சூடிழுத்தாள். வலி தாங்காமல் பின்திண்ணையில் அவன் அழுதபடி படுத்திருந்தபோது வாணிதான்
மருந்திட்டாள்.
கணேசன்
இல்லாமல் திரும்பி வந்த வெங்கி அதில் அறியாமல் ஏறி அமர்ந்தது கண்டு அம்மா “கீழே இறங்குடா
மொதல்ல” என்றாள் உரத்த குரலில். அவளது கண்கள் தீப்பிழம்பு போலக் கொதித்துக் கொண்டிருந்தன.
“அதுல உட்கார அவனுக்கும் உரிமையிருக்கு” என்றபடியே உள்ளறையிலிருந்து விஜயா வந்தாள்.
பிறகு தொடங்கியது வசவுகளின் உற்சவம். அது அவர்கள் அன்றுவரை கொண்டிருந்த உறவின் திரையைக்
கோரமாக விலக்கியது. இரு மிருகங்கள் ஒன்றையொன்று கடித்துக் குதறிக் கண்களில் குரோதம்
கொப்பளிக்க உடலில் வழியும் இரத்தத்தோடு தத்தம் இடங்களுக்குத் திரும்பின. அதற்குப் பிறகும்
அவைகளின் ஓலம் ஓயாமல் அவ்விரவு முழுக்கக் கேட்டுக்கொண்டிருந்தது.
அம்மாவுக்கும்
விஜயாவுக்கும் உறவு முறிந்து சச்சரவுகள் வெவ்வேறு ரூபங்களில் நடந்துகொண்டேயிருந்தன.
அமைதி காத்து அலைகளேதுமின்றிக் கிடந்த கடல் தன் அனைத்து ஆவேசங்களையும் ஒன்று திரட்டிப்
பேரலைகளாக எழுந்து வருவது போலல்லவா அன்று அம்மா இருந்தாள்? அம்மா ஓய்ந்து அடங்கியதும்
எழுந்த விஜயாவின் புயலைக் கண்டு கணேசனே திகைத்து நின்றுவிட்டானே! அப்போது போய்க் குறுக்கிட்டு
விலக்க எண்ணுவது போல மூடத்தனம் வேறெதுவுமில்லை என நாகு உணர்ந்திருந்தான். பெண்கள் சாந்தமும்
பொறுமையும் கொண்டவர்கள்தான். ஆனால் அவர்கள் ஏறி நின்றால் கண்ணில் படுவதெல்லாம் சாம்பலாக
ஆக்கக்கூடியவர்கள் என அவனுக்குப் புரிந்தது.
ஏறக்குறைய
பத்தாண்டு காலம் அப்பா விஜயாவையும் வெங்கியையும் காபந்து செய்திருக்கிறார். அவரது உடல்
நிலையின் சீரற்ற தன்மையை உணர்ந்ததுமே, உள்ளுணர்வின் எச்சரிக்கையை ஏற்று இங்குக் கொண்டுவந்து
சேர்த்திருக்க வேண்டும். இங்கு வந்த சில மாதங்களிலேயே அவரது நடையில் சிறுதள்ளாட்டத்தையும்
மூச்சுவிடுதலில் திணறலையும் கண்டேன். அவரது பணி வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றல்களைக் கொண்டுவந்திருந்தும்கூடக்
குடும்பத்தை இங்கேயே வைத்திருந்தார். தாத்தாவின் செல்வாக்கில் அவர் படிப்புக் கேற்ற
பணி வங்கியில் கிடைத்ததும் அதை இறுகப் பற்றிக்கொண்டார். என் அம்மா அவர் பணிபுரிந்த
ஒரு கிளையில் தான் பெருக்கப் போய்க்கொண்டிருந்தாள். அம்மா இறந்த அதே வருடத்தில் அவராகச்
சொந்த ஊருக்கு மாற்றல் கேட்டு வாங்கி என்னையும் இங்கு அழைத்து வந்து சேர்த்திருந்தார்.
பெரிய பெரிய பேரேடுகளைத் தூக்கி அதன் கூட்டல் கழித்தல்களைச் சரிசெய்து தடித்த கண்ணாடிக்குள்
உருளும் பெரிய கண்களைத் துடைத்தபடியே சோர்வுடன் வீடு வந்ததும் வாணி புகார்களை அடுக்குவாள்.
அதில் எரிச்சலடைந்து நாகுவை மோசமாக அடிப்பார். அப்போது நாகுவிடம் எனக்கு அடுத்த நாள்
அதைவிடவும் கூடுதலான அடி கிடைக்கும் என உறுதியாகத் தெரியும்.
அப்பா
தனித்த அறையில் பத்து நாட்களாக மெல்லிய வாதம் தாக்கிப் படுத்துக்கிடந்தார். சர்க்கரையின்
அளவு சராசரியைவிடவும் இருமடங்கு உயர்ந்து கிடந்ததில் அவரது சவரம் செய்யப்படாத முகம்
பொலிவு குன்றிவிட்டிருந்தது. மூப்பின் இயலாமையோடு நோயின் நிழல்களும் அவர்மேல் கவியத்
தொடங்கின. அவர் மிக விரும்பி உண்டவைதான் அவரை நரகத்தில் தள்ளிற்று. சர்க்கரையும் உப்பும்
அவர் உடலில் தாறுமாறாக எகிறியபோதும் அவர் அவைகளை விட மறுத்தார். சிறு புண்ணிற்காகக்
கால் பெருவிரலையே எடுக்க நேர்ந்தபோதுதான் சர்க்கரையின் விபரீதம் அவருக்குப் புரிந்தது.
பின் அவர் மருந்துகளின் உலகில் நிரந்தரக் குடியாளனாக மாறினார். அம்மா இல்லாத சமயத்தில்
மெல்ல விஜயாவிடம் நெருங்கியபோது உயர்ரக சோப்பின் மணம் காற்றில் கலந்து வந்தது. “நேத்து
செகண்ட் ஷோ படம் பார்த்தேன்” என்றேன். அவளிடம் சிறிதும் சலனமில்லை. “ரெண்டு பேர் மட்டும்
நடிச்சது. ஆனா கால்மணி நேரத்துல முடிஞ்சிபோச்சு” என்றதும் அவள் சட்டெனத் தலைதூக்கி
“டேய் கணேசா” என்று கத்தினாள். “ஆனா, உனக்கு முரட்டுத் தனம் ஜாஸ்தி. நாகுவுக்கு ட்ரெயினிங்
பத்தாது” என்றதும் அவள் கண்கள் கூசி என்னை அருவருத்து ஒதுக்குவதை அறிந்தேன். மேலும்
தைரியம் பெற்று முதன்முறையாக “சொல்லுடீ குட்டீ” என இழுத்தேன். அவளது முகத்தில் எளிதில்
அறியமுடியாத உணர்ச்சிகள் தோன்றி மறைந்தன. “போகப் போகச் செரியாப் போயிடும்” என்றதும்
அவள் கண்கள் தாழ்ந்து இறைஞ்சின. அன்றிலிருந்து ஆட்டத்தின் போக்கே மாறியது. காய் நகர்த்தலில்
விஜயா காட்டிய சாதுர்யத்தை நேராக நின்று வெட்டி வீழ்த்தினேன். அவள் நாகுவை மீண்டும்
மீண்டும் எனக்கெதிராகத் திருப்ப முயலும் தோறும் என் ஒற்றைக் காயான வெங்கியை இறக்கி,
நான் உருட்டும் பகடையில் தாயங்களும் பன்னிரெண்டும் தாமாக வந்து விழத்தொடங்கின.
வெங்கி
ஓயாமல் பேசிக்கொண்டேயிருந்தான். யாராலும் அவனைப் பத்து நிமிடங்களுக்கு மேல் பொறுத்துக்கொள்ள
முடியவில்லை. நாகுவைக் கண்டால் மட்டும் அவன் ஊமை போல ஆனான். வெங்கிக்குக் கோபம் கட்டுக்கடங்காமல்
வந்தது. என்னையே பலமாக அடித்துக் காயமேற்படுத்தியிருக்கிறான். எனினும் அவன் மேல் பிரியம்
சுரந்தபடியேதானிருந்தது. வெங்கியில் என்னைக் கண்டேன். தொடக்கத்தில் விஜயாமேல் நான்
கொண்டிருந்தது பச்சாதாபத்தையே. இளம் வயதில் தன்னைவிடவும் கால் நூற்றாண்டு மூத்த அரைக்
கிழவனுடன் உடன் வந்து பிழைத்தவள். உண்மையில் அப்போது அவளை என் அம்மாவின் இடத்தில் வைத்தே
ஒப்பிட்டுக் கொண்டிருந்தேன். வெங்கியை என்னுடனும். ஆனால் அவள் குணத்தை மெதுவாக அறிய
நேர்ந்தபோது என் அம்மாவின் நிழலுக்கு அருகில்கூட நிற்கத் தகுதியற்றவள் என உணர்ந்தேன்.
ஒருவகையில் நாகுவை ஒடுக்க அவளை மிகச் சிறந்த ஆயுதமாக எண்ணியிருந்தபோது அவள் என்னை வெளியேற்ற
வலைப் பின்னிக்கொண்டிருந்தாள் என அறியாமல் போனேன். அம்மாவின் ஒரு ஜோடி தங்க வளையல்கள்
காணாமற் போனபோது நாகுவின் ஆத்திரத்தையும் அப்பாவின் கடுங் கோபத்தையும் என்னை நோக்கித்
திருப்பிவிட்டாள். தோட்டத்தில் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த எனக்குச் சொல்லியனுப்பப்பட்டுத்
துவட்டப்படாத தலையுடன் வந்து சேர்ந்தேன். வீட்டிலிருந்த ஒவ்வொருவரின் கேள்விகளும் என்
யோக்யதையைக் கிழித்துப் போட்டன. விஜயா உருவாக்கிக் கொண்டிருக்கும் நாடகத்தில் அப்பா
எந்தப் பாத்திரத்தை வகிப்பது எனத் திணறிக்கொண்டிருந்தார். நாகு மட்டும் நடுவீட்டில்
நின்று ஆடிக்கொண்டிருந்தான். என் தலையின் ஈரம் காய்ந்துவிட்டிருந்தது. விஜயாவின் கண்கள்
நாகுவின் மேல் பட்டு மின்னியது. அவள் உதடுகள் புன்னகையோடு சுளித்தன. அம்மா கோபம் நீங்கியவளாக
வந்து, “கணேசு இந்தக் காரியத்தப் பண்ணியிருக்க மாட்டானுங்க” என அப்பாவிடம் சொன்னாள்.
அவர் தன்னைக் கட்டுப்படுத்தியபடியே அந்த நாற்காலியில் சாய்ந்து நாகுவையும் விஜயாவையும்
மாறிமாறிப் பார்த்தார்.
விஜயா
வெடுக்கென உள்ளறைக்குச் சென்று ஜன்னலருகாக நின்றுகொண்டாள்.
நாகு
கோபமாக அம்மா அருகில் போய் “ ஏமிம்மா நுவ்வு செப்பேவு . . . அப்புடு நன்னு தொங்கன்னேவா?”
என்றான்.
“அவனுக்குப்
பதினைஞ்சு வருஷமா சோறு போடுறேண்டா. எனக்கு அவன் வயித்த பத்தி மட்டும்தான் தெரியும்னு
நெனச்சுக்காத” என்றாள்.
திட்டம்
குலைந்த கொலைகாரனைப் போலப் பெருங் கோபத்தோடு நாகு என்னைப் பார்த்தான். அப்பாவின் அழைப்பிற்குக்கூட
நிற்காமல் அங்கிருந்து நகர்ந்து தனிமையில் அமர்ந்து அம்மாவின் மரணத்திற்கு வெகு காலத்திற்குப்
பிறகு குரலெடுத்து அழுதேன். இருட்டிய பிறகு வீட்டிற்குள் நுழைந்து போர்த்தாமல் ஒருக்களித்துப்
படுத்துறங்கிக்கொண்டிருக்கும் அம்மாவை - அவள் சூடு போட்டதையெல்லாம் மறந்து - நன்றியோடு
பார்த்துக் கொண்டிருந்தேன். நாகுவின் தாங்கிக்கொள்ள முடியாத அடிகளுக்கும் வசவுகளுக்கும்
நான் இறந்த பின்னும் உயிருடனிருக்கும்படியான அவமதிப்புகளுக்கும்கூட நான் இப்படி அழுததில்லை.
அது அவனை உசுப்பேற்றி மேலும் வன்மம் கொள்ளச் செய்யும். அப்பாவின் கைப்பற்றி வரும்போதே
அதையெல்லாம் உணர்ந்துவிட்டிருந்தேன். அலமேலு அம்மாவால்தான் துருத்திய எலும்புகளைச்
சதைகள் திரண்டு மூடின. வயிற்றை ஆறப்போட்டு உண்பவன் அல்ல நான். அது ஆறத் தொடங்கும்போதே
நிரப்பத் தொடங்கிவிடுவேன். அதற்கேற்றாற்போலப் பல கடும் உடல் உழைப்பு வேலைகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.
முதலில் நான் பலமுறை சோறு கேட்டு உண்டபோது அம்மா விசித்திரமும் ஆச்சரியமுமாகவே உணவிட்டாள்.
யாருமற்றவன் என அவளிடம் அப்பா என்னைப் பற்றிக் கூறியிருந்தது கேட்டு அவள் கலங்கியிருக்க
வேண்டும். அவள் இடும் உணவில் ருசி பார்ப்பதில்லை. வயிற்றில் எரியும் நெருப்பைப் பழையதோ
புதியதோ இட்டு அலமேலு அம்மாதான் அணைத்தாள். நாகு ஒருமுறை போட்டியிட்டு அமர்ந்து வீம்பாகப்
பல உருண்டைகளை உள்ளே தள்ளி எழ முடியாமல் எழுந்து போய் எக்கி எக்கி வாந்தியெடுக்கும்
சத்தம் கேட்டது. அம்மா எட்டிப் பார்த்துவிட்டு நுழைகையில் நான் “மோருக்குச் சோறு போடுங்க”
என்றேன். நாகு சொருகிய கண்களோடு அருகில் வந்து “எந்திரிச்சுப் போடா நாயே” என்றான்.
அம்மா தான் சிரித்தபடியே சோறிட்டாள்.
அம்மாவின்
உறக்கம் கலைந்துவிடுமோ என எண்ணி வெளியேறுகையில் உள்ளிருந்து குரல்களின் கிசுகிசுப்பைக்
கேட்டுக் கள்ளனோவெனப் பதுங்கி நோக்குகையில் விஜயாவின் முலைகளுக்கு நடுவில் நாகு முகத்தை
வைத்து அழுத்துவதைக் கண்டேன். அவன் தலைமுடியை அவளது விரல்கள் ஆவேசமாகக் கோதியபடி அப்படியே
இறுக அணைத்தன. அங்கேயே உறைந்துபோய் நின்றபடி பிறகு மெதுவாக வெளியேறினேன். அந்த அதிர்ச்சியிலிருந்து
உறக்கமேயில்லாமல் புரண்டு புரண்டு படுத்தெழுந்த காலையில் நடையில் உற்சாகம் கூடியிருந்தது.
மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவை எண்ணிப் பார்த்தபடியே புத்துணர்ச்சியுடன் அதன் பலனைக்
கேட்க வள்ளுவனின் வீட்டை நோக்கிச் சென்றேன்.
அடுத்த
சில நாட்களுக்குப் பின் மதியச் சிறு தூக்கத்திலிருந்து அம்மா எழுந்ததும் வீட்டினுள்
காகிதம் சுற்றப்பட்ட பொட்டலமாக அவ்வளையல்கள் கிடைத்தன. நாகு அதை வெறும் தலையசைப்புடன்
கடந்துவிட்டது அலமேலுவுக்கு வியப்பாக இருந்தது. அப்பாவோ நேற்றிலிருந்து எழுவதற்கே ஆள்
தேவைப்படுபவராக ஆகிப்போனார். இரு நாட்களுக்குள் அவர் அப்படிப் பலகீனராக ஆவார் என ஒருவரும்
எண்ணியிருக்கவில்லை. நான் அந்தக் காகிதத்தைக் கண்டவுடன் அதைச் சவரம் செய்ய எறவானத்தில்
சொருகி வைத்திருந்த நினைவு எழுந்தது. விஜயாவைத் துழாவினேன். அவள் அகப்படவில்லை. தலையசைத்துக்கொண்டேன்.
இப்போதெல்லாம் அவள் வெங்கியை என்னிடம் அணுக விடுவதேயில்லை. அது அவ்வளவு சுலபமல்ல என்பதை
அவள் அறிய மாட்டாள். என்னை வளர்ப்பது போல நான் வெங்கியை வளர்த்தேன்.
அக்கள்ள
உறவை நான் அறிந்துவிட்டதுதான் அவள் என்னை வெளியேற்ற முனைந்த காரணமா? சில தினங்கள் முன்
வரைகூட அவளது கண்களில் அந்த வேறுபாட்டை யூகிக்கவே முடியவில்லையே. விஜயாவின் அந்தக்
கண்களுக்குத் தான் அப்பா அவளிடம் வசப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றியது. அம்மாவை
அக்கண்களால்தான் பலமுறை மிரட்டியிருக்கிறாள். “அவ முறைச்சான்னா எதித்துப் பேச தெம்பு
வரமாட்டேங்குது கணேசா” எனக் கூறியிருக்கிறாள். “வெள்ள ரோட்ல ஒரு கருப்பு பாம்பு. அது
என்ன?” என வெங்கி என்னிடம் விடுகதை போடும்போது அவள் கண்களைத்தான் நினைத்துக்கொள்வேன்.
நாகுவிடம் அவள் பேசும்போது அக்கண்களில் தோன்றும் புன்னகைக்கு வேறெதையுமே ஒப்புமைப்படுத்த
முடியாது. அது சூழ்ச்சியின் தந்திரத்தைக் கொண்டிருந்ததை அறிந்தவன் நான் மட்டுமே.
அப்பா
எழ முடியாமல் குமட்டும்படியான நாற்றம் அடிக்கும் அந்த அறைக்குள் அவர் பெய்த சிறுநீர்
தேங்கி நிற்பதைக் கண்டு சுத்தப்படுத்தச் சென்றபோது நிரந்தரமாகத் திறந்து கிடக்கும்
அவரது வாயிலிருந்து “எனக்குச் செகப்பு சட்டை வாங்கிக் கொடுங்கப்பா. அவளுக்கு மட்டும்
வாங்கித் தந்தீங்க” என்றார். பின் கண்மூடி எதை எதையோ உளறியபடி கிடந்தார். நடுவில் என்
அம்மாவின் பெயரைக் கூறக் கேட்டேன். அருகில் ஓடிச்சென்று “அப்பா கணேசம்பா” என்றேன்.
அவர் கேட்காததுபோல “உனக்கு நீளமான தலைமுடி. அலமேலுக்கு எலி வாலு மாதிரிதான் கனகா” எனக்
கூறிவிட்டுச் சிரிக்கத் தொடங்கிவிட்டிருந்தார். அப்போது விஜயா நடக்கையில் அவள் பின்புறத்தில்
மெல்லத் தட்டியபடி கரும் பாம்புகள் பின்னிக்கிடப்பது போன்ற நீளக் கூந்தல் துல்லியமாக
என் நினைவுக்கு வந்தது. அவர் கண்திறந்து மூலையை நோக்கிப் பலமாகச் சத்தமிட்டார். நான்
அம்மாவிடம் வந்து கலங்கிய முகத்துடன் கூறியபோது “அவரது நினைவு பல சமயங்களில் அறுந்து
ஏதேதோ பேசுகிறார்” என்றாள். அப்போது விஜயா வெங்கியின் நோட்டில் சூரிய காந்திப் படத்தை
ஒட்டி அதற்கு வண்ணம் தீட்டித் தந்துகொண்டிருந்தாள். வெங்கியின் பூனை அவனருகாக அமர்ந்து
அதை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது.
அப்பாவின்
இயலாமை அவர் கண்ணில் படும், நினைவில் எழும் நபர்கள் மீதெல்லாம் விஷத்தைக் கக்கிக்கொண்டிருந்தது.
அவருக்கு அபூர்வமாகச் சுயபிரக்ஞை திரும்புகையில் விஜயாவை ஓயாமல் அழைத்தார். அம்மாவிடம்
“எங்கடீ உன்னோட சக்களத்தி. அந்த நாயக் கூப்பிடு” என்றார். விஜயா வந்து நின்றதும் “ஏன்
நாத்தமடிக்கிதா? இதய மோந்து பாத்துட்டுத்தாண்டீ பின்னாலேயே வந்த” என வேட்டியை விலக்கிக்
காட்டினார். அம்மா முகத்தைத் திருப்பியபடி வெளியே ஓடினாள். விஜயா முடிகள் நரைத்துக்
கிடக்கும் குறியைக் கண்டு முகம்சுளித்து “மூடிக்கிட்டுக் கிடடா மயிராண்டி” என வாய்ப்
பொத்திக் காட்டினாள். அவர் மேலும் பேச முடியாதவாறு அம்மா தந்துவிட்டுப் போன மாத்திரைகள்
அவரை உறக்கத்தில் ஆழ்த்தின.
ஊரையொட்டிய
வறண்ட குளத்தில் முட்செடிகளுக்குப் பின்னால் அமர்ந்து மலம் கழித்துவிட்டு வரும் வழியில்
மேட்டில் வெங்கியின் பூனை இறந்து கிடப்பதைக் கண்டேன். அதன் வாயினுள் சிவந்த எறும்புகள்
ஏறிச் சென்றுகொண்டிருந்தன. வேகமாக வீட்டிற்கு வந்ததும் காலையில் தன் காலைச் சுற்றிச்
சத்தமிடும் பூனையை அம்மா என்னிடம் கேட்டாள். வாய்த் திறப்பதற்குள் வெங்கி முந்திக்கொண்டு
“கணேசா, நேத்து நைட்டு உனக்குக் கொடுக்கச் சொல்லி எங்கம்மா தம்ளர்ல பால் கொடுத்துவுட்டா.
உன்னையத் தேடிப் பாத்துட்டு காணம்னு நெனச்சுட்டு நானு அந்தப் பூனைக்கு அதய ஊத்திட்டேன்.
அப்பறமா அதய நானு பாக்கல” என்றான். “அம்மா” எனத் அலறியபடியே நடுங்கும் கரத்தால் வெங்கியைப்
பற்றினேன். “ஏண்டா கணேசா என்னாச்சுடா” என அருகில் வந்தாள். ‘ஒன்றுமில்லை’ எனத் தலையசைத்துவிட்டு
மௌனமாகக் கண்களை மூடிக் கொண்டேன்.
அன்று
மீண்டும் விஜயாவின் பின்னால் போய் எதையும் காட்டிக்கொள்ளாமல் “என்ன? இப்பவெல்லாம் நைட்
ஷோ கிடையாதா? ஓ! பகல் காட்சியே நடக்கும் போலிருக்கு! நாகுவுக்கு அங்க மச்சம் இருக்குதா?”
என இழுத்தேன். அவள் காதைப் பொத்திக்கொண்டு முறைத்தபடியே சென்றாள். விஜயாவுக்குக் கேட்கும்
குரலில் “கழுத்த அறுத்துடுவன்டீ நாயே” என்று கத்தினேன். அந்த இறந்துபோன பூனையின் முகத்தை
நினைவிலிருந்து என்னால் அகற்றவே முடியவில்லை. அன்றைய இரவில் நாகு என் சட்டையைப் பற்றி
இழுத்துத் “தாயோலி . . . ஆம்பளயாயிருந்தா! மூடிட்டு வெளியில போடா . . . எங்கப்பன் ஊர்ல
இருக்கற அனாதைகளையெல்லாம் கூட்டிட்டு வருவான் . . . நானு அந்த எச்சக்கலைகளுக்குச் சோறு
போடணுமா?” என்றான். நான் அவன் கையைத் தட்டிவிட்டு “யாரீயச் சொல்ற? விஜயாவையா?” என்றேன்
சிரித்தபடி. மடமடவென்று அடிகள் புறங்கன்னத்தில் விழுந்தன. பின்னால் கிடந்த குளவிக்கல்லை
ஒற்றைக் கையால் தூக்கி “மூஞ்சிய பேத்துருவன்” என்றவாறே செயற்கையான சிரிப்புடன் “விஜயா
. . . விஜயா . . . உன்னைய நாகு கூப்பிடுறான்” என்றேன். அந்த நொடியே உள்ளே தொலைக்காட்சியின்
ஒலி அதிகப்படுத்தப்பட்டு வார்த்தைகள் உள்சென்று நுழையாதவாறு விஜயாவால் தடுக்கப்பட்டன.
அம்மாவின் நிழல் கண்டு நாகு அப்படியே வெளியேறிச் சென்றான். கீறல்களில் இரத்தம் கசிவது
கண்டு என்னை நோக்கி விஜயாவின் உதடுகள் கேலியாகப் புன்னகைப்பது தெரிந்தது.
அப்பாவின்
நிலை அலமேலு அம்மாவிற்கு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஆழமாக உருவாக்கிவிட்டிருந்தது.
ஓங்குத்தாங்காக அவர் வந்து கையாட்டியவாறு பேசும் சித்திரம் அவளிடமிருந்து அகல மறுத்தது.
நாகு மூச்சுத் திணறலிலிருந்து விடுபட்டவன்போல ஆசுவாசமடைந்தான். தன்னிடம் விஜயா கூறியவற்றை
அச்சத்துடன் நாகு நினைவுக்குக் கொண்டு வந்தான். அவனுக்கு உள்ளுற அம்மா இவ்வுறவை அறிவாளோ?
என்ற ஐயம் இருந்தது. விஜயாவை எவ்வளவு வற்புறுத்தியும் அக்கருவைக் கலைக்கச் சம்மதிக்க
வைக்க முடியவில்லை. கணேசனை எண்ணியதும் ஆத்திரமும் பயமும் தோன்றியது. அவனை வெளியேற்ற
போட்ட திட்டமும் கைகூடாமல் போயிற்று. இந்தக் கிழவனும் போய்ச்சேராமல் கிடக்கிறான். வயிறு
மேடிடத் தொடங்கும் முன்னர் ஏதாவது செய்யச் சொல்லி விஜயா நச்சியபடியிருக்கிறாள். இந்த
வெங்கியையும் கணேசனோடு ஓட்டிவிட வேண்டும். அவனும் விஜயாவோடு ஒட்டாமல்தான் அலைகிறான்.
விஜயாவும் இதற்குச் சம்மதித்துவிட்டிருந்தாள். அம்மாவுக்குப் பின் தனக்கு வந்து சேரும்
சொத்துக்களுக்காக எவ்வளவு வருடம் காத்திருக்க முடியும்? சில தினங்களுக்குள் விஜயாவின்
திட்டப்படி அவளைக் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டாலென்ன எனத் தோன்றியது. வேறு வழியேயில்லை!
இந்த அரிப்பெடுத்த கிழவன் போய்ச் சேர்ந்த பின் வந்து ஒட்டிக்கொண்டுவிடலாம் என நாகு
முடிவெடுத்தவனைப் போல விஜயாவைக் காணச் சென்றான்.
விஜயாவின்
முகத்தில் ஒருவித மினுமினுப்பு கூடி உடம்பும் பூசினாற்போல ஆனதும் அம்மாவுக்குச் சந்தேகம்
தட்டியது. உணவு கசந்து அவள் எக்கியெடுத்த வாந்தியை அம்மா குறுக்கு விசாரணை செய்தாள்.
நாகு உள்ளே புகுந்து அவர்களின் பேச்சை நிறுத்தி அம்மாவை வேறெங்கோ கூட்டிப் போனான்.
விஜயா பெரும் நிம்மதியோடு கண்களை மூடிக்கொண்டாள். அன்று வெங்கியை விஜயா அழைத்து முத்தங்கள்
தந்தபடியேயிருந்தாள். மறுநாள் இரவு இரண்டாம் ஜாமம் முடியும் தறுவாயில் அவர்கள் இருவரும்
வெளியேறி விட்டிருந்தனர். சூன்யம் மட்டுமே மிஞ்சிய இடம்போல வீடு ஆனது. அலமேலு அம்மா
தன் நிர்கதியையும் குடும்பத்தின் அவமானத்தையும் எண்ணி எண்ணி மறுகிக் கிடந்தாள். புரியாமல்
நிற்கும் வெங்கியை நீண்ட நாட்களுக்குப் பிறகு கட்டிக்கொண்டு அழுதாள். நாகுவை அவள் சபித்தபோது
பெரும் ஆனந்தத்தை மறைத்தபடி அம்மாவைத் தேற்றினேன். “எங்கய்யும் போய்த் தேடாதடா கணேசா”
என்றாள் உறுதியான குரலில். சொந்த வீட்டில் அவன் எடுத்துப்போன பணத்தையும் அம்மாவின்
நகைகளையும் மனதிற்குள் கணக்கிட்டபோது அது அவர்களுக்குப் பல மாதங்களைக் கழிக்கப் போதுமானதாகயிருக்கும்
என எண்ணினேன். தெருவெல்லாம் பேசி ஓய்ந்தபோது கூட அம்மா அப்பாவின் அறையைப் பார்த்தபடியே
கூனிக் குறுகிப் படுத்துக்கிடந்தாள். வெங்கி “என்ன கணேசா?” என விசாரித்தபோது “ஒண்ணுமில்லை”
என்ற பதிலிலேயே சமாதானமடைந்து விட்டிருந்தான்.
நானும்
வெங்கியும் தோட்டத்திலிருந்து வந்ததும் அந்த நாற்காலியில் போய்க் கம்பீரமாக அமர்ந்து
கால் மேல் கால்போட்டு வெங்கியை என் மடியில் இருத்தி “உடம்பெல்லாம் கசகசங்குது! கொஞ்சம்
தண்ணிய காயவெய்மா குளிக்கறதுக்கு” என்றேன். அம்மா உள்ளிருந்து வந்து நாங்கள் அமர்ந்திருப்பது
கண்டு ஒருகணம் திடுக்கிட்டு உடம்பெல்லாம் நடுக்கமுற நின்றாள். பின் எதுவும் பேசாமல்
பின்வாசலுக்குச் சென்றாள். அங்குத் திகுதிகுவென வெந்நீருக்காக அடுப்பு எரியத் தொடங்கியது.
நான் அதையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
( உயிர்மை டிசம்பர் 2010)
(என் இரண்டாவது தொகுப்பான ‘அரூப நெருப்பு’ தொகுப்பிலுள்ள கதை )
No comments:
Post a Comment