Tuesday, April 28, 2026

அழிவற்றது கவிதை


அழிவற்றது கவிதை

 

என்னால நடக்கத் தான் முடியும். ஓட முடியாது’ மிகக் குறைவாக எழுதுவது பற்றி ஒருமுறை கேலியாக மோகனரங்கனிடம் கேட்ட போது இப்படி சொன்னார். சரி தானென ஒப்புக் கொண்டால் இப்போது அடுத்த பிரச்சினை முளைக்கிறது. நடப்பதற்கு உடம்பைத் தூக்க வேண்டுமே...! கால்களை முன்னெடுத்து வேறு வைக்க வேண்டும்..! எங்கே கிளம்பி எதை அடையவிருக்கிறோம் என்கிற இலக்கு தோராயமாகவேனும் மனதில் இருந்தால் நல்லது. ஏன் எதையேனும் அடைய வேண்டும்? சும்மா அப்படியே காலாற எட்டிப் போடக் கூடாதா என்ன..! இவ்வளவு யோசனைகளுக்குப் பின்னும் நடப்பதற்கு பதிலாக மனதிற்குள்ளேயே அவ்விடத்தைச் சென்று சேர்ந்தாலென்ன? என நினைப்பவர்கள் சிலர் இருக்கக் கூடுமல்லவா..! அவர்களில் ஒருவர் மோகனரங்கன். இதை ’இயல்பான சோம்பல்..’ எனத் தன் நூல்களின் முன்னுரைகளில் வெவ்வேறு விதங்களில் சொல்லிக் கொண்டாலுமே கூட ஈராயிரமாண்டு மரபு கொண்ட மொழியில் புழங்கிக் கொண்டிருக்கிறோம் எனும் போதமும் தன் பங்கு அதில் எத்தனை சிறியது எனும் மன அமைப்புமே முதன்மைக் காரணம் என்று தோன்றுகிறது. மற்றொன்று கூட உண்டு. தன் சொல்லின் மீதுள்ள பொறுப்புணர்வு. எதையேனும் மனம்போன போக்கிலோ கடனைக்கட்டும் விதமாகவோ செயல்பட்டு விடக்கூடாதெனும் ஒருவிதமான பிடிவாதம் தான் இவர் தன் குதிரையை மெதுவாகச் செலுத்த காரணமாக இருக்க வேண்டும்.  பிறகு அவருடனும் அவருக்குப் பின்னரும்  தொடங்கியவர்களில் வெகுவேகமாக ஓடியவர்களுள் எத்தனை பேர் இன்று தென்படுகிறார்கள் எனக் கண்டால் இந்த நிதானத்தின் பின்புலம் புரியலாம். இவ்வளவு ஆண்டுகளில் கைபோனபோக்கில் ஊதாரித்தனமாகவோ அநாகரீகமாகவோ  மோகன் எதையுமே எழுதவில்லை என்பதை காணும் மேலே கூறியதன் தாத்பரியம் எளிதாக விளங்கும்.  ஆனால் இன்னும் கொஞ்சம் தன்னை தளர்த்திக் கொண்டு, சிறுவயதிலிருந்தே பெரிய மனிதனாக வலம் வந்ததற்கு மாறாக சிறிய சேஷ்டைகளேனும் புரிந்திருக்கலாமோ என்கிற ஆதங்கம் அவ்வப்போது எழுவதுண்டு. அவரது ‘அன்பின் ஐந்திணை’ எனும் நூல் சுய அனுபவக்கதைகள் என்ற போதும் அவற்றைப் புனைகதையாக விஸ்தரித்து எழுதத் தவறியதற்கு சோம்பலுக்கு குறிப்பிட்டத்தக்க பங்கு இருக்குமென்றாலும்  மேற்சொன்ன லட்சணங்களும் வினையாற்றியிருக்குமோ என்கிற ஐயம் எனக்குண்டு. 

 



கவிதையின் தீராக் காதலர்களென வெகுசிலரையே இவ்விலக்கிய உலகில் காண முடிகிறது. வெவ்வேறு வடிவங்களுக்குள் அலைந்து திரிந்தாலும் சொந்த வீட்டில் இருப்பது போன்ற பாதுகாப்புணர்வையும் மலர்ச்சியையும் இவர்கள் கவிதைக்குத் திரும்பும் போது மட்டுமே அடைகிறார்கள். அவர்களுள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர் மோகனரங்கன். மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், விமர்சகர் போன்ற கூடுகளுக்கு அவ்வப்போது பாய்ந்தாலும் இலக்கியத்தில் மோகனின் சொந்த உடல் கவிதையாகவே இருந்து வந்திருக்கிறது. பருவமெய்தியதும் அதற்குரிய வேதியியல் மாற்றங்கள் உடலில் நிகழும் போது அக்கூறுகளில் ஒன்றாக கவியாக மலர்வதும் இருக்குமோ எனச் சந்தேக்கிற அளவுக்கு காணும் இடங்கள்தோறும் முளைத்து நிற்கும் கவிகளும் அவர்தம் கவிதைகளும் நிறைந்திருக்கும் சூழலில் கவிதையைத் தன் பிரதானமான ஊடகமாக கொள்வதற்கு ஒருவருக்கு அதன் மீது ஆழமான பிணைப்பும் தீராத மோகமும் இருக்க வேண்டும். ஏனெனில் விமர்சக அவதாரம் தரிக்கும் போதும் கவிதையின் வக்கீலாக நின்று கொண்டு பிற வடிவங்களை விட கவிதை எவ்வகையில் உயர்ந்தது அது எவ்வாறு காலதீதத்தில் நிலைபெற்று விளங்குகிறது என்பதை உரிய உதாரணங்களைச் சுட்டி எழுதியிருக்கிறார் மோகன். நவீன இலக்கிய விமர்சன உலகிற்கு முக்கியமான வரவாக விளங்கிய முந்தைய நூலான ‘சொல் பொருள் மெளன’த்தில் தொழிற்பட்ட இவ்வம்சங்களை அந்நூலுக்குப் பின் வெளிவந்திருக்கும் ‘மைபொதி விளக்கு’ நூலிலும் ஏகதேசமாகக்  காண்கிறோம். இத்தொகுதியில் ஒப்புநோக்க பிற இலக்கிய வடிவங்களை விட கவிதைகள் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள், மதிப்புரைகள், விமர்சனங்களே மிகுதியாக இருக்கின்றன. இவற்றில் கவிதை ஏன் அழிவற்றது , காலத்தின் முன் எப்போதும் அது ஏன் புத்தம் புதியதாகவே உள்ளது என்பதை தன் தனித்துவ உரைநடையால் வாய்ப்பு ஏற்படுந்தோறும் தொட்டுக் காட்டுகிறார் மோகன்.  

 

இளமையில் மிக விரும்பிய நூல்களை, பருவங்கள் முதிர்ந்தப் பின் மீண்டும் கையிலெடுத்தால் குறைந்த பக்கங்களுக்குள்ளாகவே ஏமாற்றமடைவதை பலரும் உணர்ந்திருக்கலாம். ஏன் அவை அந்தளவுக்கு அன்று ஆட்கொண்டன எனும் வியப்பை அளிக்கும்படி சாதாரணமானதாக மாறி விட்டிருக்கும். இதற்கு முற்றிலும் மாறாக செவ்வியல் படைப்புகள் வெவ்வேறு காலகட்டங்களில் வாசிக்குதோறும் புதிய அர்த்தங்களுடனும் ஆழமான வினாக்களுடனும் எழுந்து வரும்(இதாலோ கால்வினோவின் ‘ஏன் கிளாஸிக்குகளை வாசிக்க வேண்டும்’ எனும் அபாரமான கட்டுரை நினைவுக்கு வருகிறது). வயது கூடக் கூட மனதின் கண்பட்டைகள்  ஒவ்வொன்றாக விலகுகின்றன போலும். இவ்விடத்தை வாசகர் அடைய வாழ்க்கை அளிக்கும் ’பரிசு’களும் ஒருவகையில் காரணம் தான். ஏனெனில் அதற்கு முன்னரும்  அவை அங்கு தான் இருந்தன.  நவீன இலக்கியத்தின் முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவரான தி.ஜானகிராமனை போல இக்கூற்றுக்குப் பொருந்துபவர்கள் குறைவாகவே இருப்பார்கள்.  அதனால் தான் இளமையில் பாபு- யமுனா இருவரது (உலகினர் மொழியின் சொன்னால் பொருந்தாக் காதல்) உலகின் மீதே மையமிட்டு மகிழ்ச்சியுடன் பறந்து திரியும் ஒருவர், பிந்தைய காலத்தில் குரு ரங்கண்ணாவும் தந்தை வைத்தியும் ஏன் நண்பன் ராஜமும் கூட நாவலுக்குள் எத்தகைய பங்கை வகிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல பாபு முழுமையடைந்தவனாக மலர ஒவ்வொருவரும் அவனுக்கு நீராக இருந்ததைக் கண்டு உளம் பூரிப்பவராக மாறுவதைக் காணலாம். ஆம். யமுனா தான் அவனது ஆணிவேர் சல்லி வேர் அனைத்தும். ஆனால் தாவரம் செழித்து மரமாக வளர பச்சையமும் காற்றும் ஏன் சிறு பூச்சிகளும் கூட தேவையாக இருக்கின்றனவே. அப்படி துணைப்பாத்திரங்கள், ஒருவரியில் தோன்றிமறையும் பாத்திரம் கூட(சென்னையில் அறையில் தங்கியிருக்கும் போது தெருவில் பட்டாணியைக் கூவி விற்றுச் செல்லும் வியாபாரியின் கார்வையான குரலைக் கேட்டு மனதை இழக்கிறான் பாபு. அவன் இசை கற்க வடக்கே பயணம் செய்ய ஏதோ விதத்தில் சிறு சதவீதமேனும் அவரும் காரணமாக இருந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?) சும்மா வந்து செல்லவில்லை. இவ்வளவு அர்த்த அடுக்குகளைக் கொண்ட செவ்வியல் ஆக்கமான ‘மோகமுள்’ளை மதிப்பிட்டு மோகனரங்கன் எழுதியிருக்கும் கட்டுரையை அந்நாவலுக்கு இதுவரை அளிக்கபட்ட சிறந்த வாசிப்புகளுள் ஒன்றென தயக்கமின்றிக் கூறலாம். நாவலில் சாதாரணமாக  கடந்து சென்ற இடங்களிளெல்லாம் மோகன் நின்று ஒளிபொருத்திக் காண்பிக்கையில் ஏன் இந்த இணைப்புகளையும் இவ்வாறான பொருளையும் (Meaning) காணத்தவறினோம் எனத் தோன்றிவிடுகிறது. அதற்காக ஒரு படைப்பிற்குள் இல்லாத ஒன்றை தானாக கற்பித்து புதிய பொருளில் விளக்கும் அசட்டுத்தனமேதும் இவரிடமில்லை. போலவே தன்னிடம் உள்ள வாசிப்பிற்கேற்ப ஒரு படைப்பை வளைக்கும் அந்த ஆக்கத்தை பரிதாபகரமான நிலைக்கு தள்ளும் தான்தோன்றித்தனத்தையும் எங்குமே காணமுடிவதில்லை.


பல்கலைக்கழக மாணவர்களுக்கு கையேடு போல விளங்குகிற கவிதை பற்றிய கட்டுரைகளில் நவீன வாசகனுக்கும் பெற்றுக் கொள்ள தானியங்கள் இருக்கின்றன. கவிதையின் ஆதார அழகியல், அது எவ்வாறு கவிதையாக மலர்கிறது, அதை அடைவதற்கான வழிகள் போன்றவற்றை தன் பிரத்யேக ரசனையின் மூலம் தேர்ந்த கவிதையின் முகத்தைத் துல்லியமாக அல்ல தோராயமாக வரைந்துக் காட்டும் கட்டுரைகள் அவை. ஏனெனில் துல்லியம் எப்போதும் ஒருபடித்தானது. அதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை உரைப்பது. ஆனால் கவிதை அப்படியல்லவே..! காலந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் சொற்களால் அள்ளியெடுத்து காட்டிய பின்னரும் இன்னும் கூற பாக்கியாக ஏதோவொன்று குறைகிறதேவெனும் போதாமையை உணரச்செய்வது. அதனால் தான்   அன்றலர்ந்த மலர் போல புன்னகையுடன் கவிதை எப்போதுமே ஒளிவீசிக் கொண்டிருக்கிறது போலும். மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதையாக உருமாறி நவீனமாக விகசித்த கவிதையின் வரலாற்றை (மோகனின் உரைநடை மரபும் நவீனமும் கலந்தது. இவரது கவிமொழிக்கும் இது பொருந்தும்) கூறும் கட்டுரையை, பிறர் எழுதிய, இதையே பேசுபொருளாகக் கொண்ட கட்டுரைகளுடன் பத்தோடு பதினொன்றாக வைக்க முடியாததற்கு காரணியாக மோகனின் செழுமையான மொழிப்பயன்பாட்டையும்,  அவர் வந்தமரும் முடிவுக்கு முன்வைக்கும்  ரசனைரீதியிலான மதிப்பீட்டையுமே காரணமாகக் கூறலாம்.

 

சொற்களை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து எழுதும் ஆனந்தின் கவிதையிலிருந்து கட்டற்ற பாய்ச்சலாக வெளிப்படும் ப்ரான்சிஸ் க்ருபாவின் பித்தேறிய கவிமொழி வரைக்கும் இந்நூலில் மதிப்பிடும் மோகன் ஒவ்வொருவரும் எங்கிருந்து தொடங்குகிறார்கள் அவர்களை அணுகும் பாதைகளை சமைப்பது எப்படி எனத் தன் ஆலாபனைகளின் வாயிலாக வாசகரை தயார்படுத்துகிறார். இவரது மன அலைவரிசைக்கு நெருக்கமானது தேவதேவனின் கவிதைகளாவே இருக்கலாம். சிறிய பெட்டியில்  நான்கைந்து துண்டுச் சீட்டுகளைப் போட்டு இவர்களது உலகம் இவ்வளவே எனக் காட்டும் சிறுமைகள் ஏதும் மோகனிடம் கிடையாது. உதாரணமாக ஆனந்த் என்றால் காலம்-வெளி, தேவதேவன் எனில் இயற்கையின் ஏகாந்தங்கள் என குறுக்கும் பார்வை இவரிடம் இல்லை. மேற்சொன்னவை அக்கவிஞர்களின்  முக்கியமான பண்பு என்றாலும் அது எவ்வாறு கவிதையில் தொழிற்படுகிறது எனக் காட்டுவதாலேயே பிறரிடமிருந்து விலகி நிற்கின்றன மோகனின் விமர்சனங்கள். சங்கக் கவிதைகளின் மீது பற்றும் மதிப்பும் கொண்டவர் மோகன் என்பதற்கு அவரது கவிதைகளும் கவிதைகள் பற்றிய விமர்சனங்களுமே சான்றாக திகழ்கின்றன. அதற்கு இந்நூலும் விதிவிலக்கல்ல.

 

வேறு எங்கும் காணக்கிடைக்காத ஆபிதீன் கதைகளைப் பற்றிய நுட்பமான பார்வையை இந்நூலில் காணலாம். நவீன புனைகதைகளில் அரிதான நகையுணர்வை பொதிந்து வைத்திருக்கும் ஆபிதீன் சீராக எழுதாமல் போனது துரதிஷ்டம் தான். பலகீனமான கதைகள் அவரிடம் உண்டு என்ற போதும் எழுத்தில் அவரை விட தரங்குறைந்தவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் கூட அவரை நெருங்கவில்லை. கவி. சுகுமாரனின் அபுனைவுகளை மதிப்பிட்டு எழுதும் மோகனின் மனம் சென்று தோய்வது சுகுமாரனின் அடக்கத்திலும் கூறும் விஷயங்களை முன் வைக்கும் முறையிலும் உரத்து பேசாத தன்னுணர்விலுமே என்று தோன்றுகிறது. ஒரு வாசகன் அடையும் வளர்சிதை மாற்றங்கள் ஒரு படைப்பாளியை அணுகும் விதத்தைல் எத்தகைய படிநிலைகளை உருவாக்குகிறது என்பதற்கு உதாரணமாக நாஞ்சில் நாடனின் கதையுலகுக்கு எழுதிய முன்னுரையில் காணலாம். இரு ஈழக் கவிஞர்களின் தொகுப்புக்கும் சுந்தர ராமசாமியின் கவிதைகளைப் பற்றியும் எழுதிய முன்னுரைகளும் மதிப்புரைகளும் இவ்விமர்சன நூலில் உள்ளன என்பதற்கு மேல் அது பற்றி கூற ஏதுமில்லை. 

 



கவிதையின் தீராத ஆராதகர் மோகன் என்பதாலும் மொழியின் உச்சபட்ச சாத்தியம் கவிதையே என்பதாலும் பிற இலக்கிய வடிவங்களை சில மாற்றுகள் குறைத்தே மதிப்பிடுகிறார். ஆனால் அதற்கு அவர் அளிக்கும் விளக்கங்கள் சில இடங்களில் ஏற்கத்தக்கவையாகவும் பிற இடங்களில் விவாதிக்கத் தூண்டுவதாகவுமே அமைந்துள்ளன. புனைவிலக்கியக்கியங்கள் பத்தாண்டுகளுக்குப் பின் ஒளியை இழந்து ஆவணமாக மாறும் என்றும் உரைநடைப் படைப்பை எவ்வளவு தடவை மீள வாசித்தாலும் முதல் முறையின் பரவசத்தை அடைய முடிவதில்லை (’கவிதையும் கவிதை இயலும்’) எனவும்  சொல்கிறார் மோகன். ஆனால் ’மோகமுள்’ நாவலை ஒவ்வொரு முறை வாசிக்குந்தோறும் புதிய அர்த்த அடுக்குகளை கொண்டிருப்பதாகவும் கவனிக்காத புள்ளிகளை கண்டுகொள்ளும் போது பரவசம் அளிப்பதாகவும் அவரே எழுதுகிறார். இந்த முரண்பாட்டை சிரிப்புடன் கடந்து சென்றேன். கவிதையே மொழியின் சாதனை. அதற்காக உரைநடையை இப்படி பொத்தென்று கீழே போட்டு உடைக்க வேண்டியதில்லை.

 

மோகனரங்கனின் சுபாவத்துக்கு எதையுமே கறாராக கூறுவது ஒத்து வருவதில்லை போலிருக்கிறது. இதற்கு விதிவிலக்காக மனுஷ்யபுத்திரனின் ‘மணலின் கதை’ தொகுப்புக்கு எழுதிய மதிப்புரையைக் கூறலாம். இம்மதிப்புரையை வாசிப்பவர்கள்  மோகனின்  கவிதைப் பார்வையை ஏகதேசமாகப் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன். இவ்வளவுக்குப் பிறகும் நல்ல பேர் எடுக்க வேண்டும் என்கிற எந்த கட்டாயமும் மோகனுக்கு இல்லை. மனதில் பட்டதை நாசூக்காகவேனும்  சொல்ல மோகனரங்கன் முயலலாம்.  ஒரு நூலுக்குச் சிறந்த வாசிப்பை அளிப்பதும் மேலுமொரு சிறந்த வாசிப்புக்கு வழிசெய்து தருவதுமே விமர்சகரின் பணி என்றாலும் ’சொத்தையை சொத்தை’ என்று சொல்வதும் கண்முன் நிகழும் தவறை தவறென்று காட்டுவதும் அதே விமர்சகரின் பணி தான். இன்றைய சூழலில் ஒப்புநோக்கப் பிந்தையதே  அவசியமானதும் தேவையானதுமாகும்.

 

பி.ச. குப்புசாமி விருது பெறும் மோகனரங்கனுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துகள்.


மைபொதி விளக்கு – க. மோகனரங்கன் – தமிழினி பதிப்பகம் – முதல் பதிப்பு – 2012. விலை. ரூ. 120.00 

குறிப்பு : இக்கட்டுரை மோகனரங்கன் விருது பெற்றதையொட்டி பி.கே.சிவகுமார் ஒருங்கிணைத்துத் தயாரித்த நூலுக்காக எழுதப்பட்டதாகும்.