சிறிய மகிழ்ச்சிகளும் பெரிய துயரங்களும்
கே.என்.செந்தில் கதையுலகம்
குணா கந்தசாமி
செந்திலின் கதைகளைக் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்கிறேன். “இரவுக் காட்சி” தொகுப்புக்கு ஒரு சிறிய விமர்சனக் குறிப்பு எழுதினேன். இரண்டாவது தொகுப்பான “அரூப நெருப்பு” குறித்து சென்னையில் நடந்த அறிமுகக் கூட்டத்தில் பேசியதுடன் “நெருப்பில் உருப்பெறும் இருட்சித்திரங்கள்” என்னும் தலைப்பில் காலச்சுவடு இதழில் கட்டுரையாகவும் எழுதினேன். பிறகு ஐந்து நெடுங்கதைகளைக் கொண்ட “அகாலம்” தொகுப்புக்கு பின்னட்டைக் குறிப்பு எழுதப் பணித்தார். இப்போது இதுவரையான கதைகளைத் தொகுக்கும்போது பின்னுரை எழுதக் கூறினார். இப்படியாக செந்திலின் கதையுலகத்தோடு தொடர்ச்சியான உரையாடலில் இருப்பதற்கான வாய்ப்புகள் இயல்பாகவே அமைந்து விடுகின்றன.
செந்திலின் சிறுகதைளைத் தொடக்கத்தில் காலச்சுவடு இதழில் வாசித்தபோது யாரோ ஒரு நடுத்தர வயதுடைய எழுத்தாளர் என்று நினைத்தேன். எழுத்திலிருந்த முதிர்ச்சி அப்படி நினைக்க வைத்தது. பிறிதொரு சூழலில் தான் படித்த கல்லூரியின் பெயரையும் ஆண்டுகளையும் எங்கோ குறிப்பிட்டிருந்தார். இனிய ஒற்றுமையாக அதே கல்லூரியில் அதே ஆண்டுகளில் நானும் படித்திருந்தேன். செந்தில் இளங்கலை வணிக மேலாண்மை, நான் கணினி அறிவியல். முதலாமாண்டில் எங்களுக்கு மொழிப்பாடங்களுக்கான வகுப்புகள் இணைந்து நடக்கும்போது ஏதேச்சையாக முகம் பார்த்துக்கொள்ளுமளவுக்குத்தான் அறிமுகம். அவருடைய நெருக்கமான வகுப்பு நண்பர் கல்லூரி விடுதியில் எனக்குப் பிரியமான அறை நண்பராக இருந்தது மட்டுமே மேலதிகத் தொடர்பு. பிறகு இலக்கியச் சூழலில் அறிமுகமான பின்னர் இந்த முன்கதை இனிய சுவாரசியமாக இருக்கிறது.
இதுவரையான செந்திலின் கதைகளைப் பார்க்கும்போது அவற்றினுள் ஒரு பிரத்யேகக் கதையுலகம் தனித்த கூறுகளுடன் தோன்றி வளர்ந்து முதிர்ந்திருக்கிறது. தமிழக நிலப்பரப்பின் எந்தவொரு சிறுநகரத்தையும் இக்கதைகளின் களமாகக் கொள்ளலாம். இக்கதைகளுக்குள் நடுத்தரவர்க்க மற்றும் விளிம்புநிலையில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கைக் காட்சிகள் இருக்கின்றன. சிறிய மகிழ்ச்சிகளையும் பெரிய துயரங்களையும் கொண்ட குடும்பங்களில் சுயநலத்தின் பொருட்டான சதுரங்க ஆட்டங்களும் உணர்வுரீதியான வன்முறையும் நிகழ்கின்றன. மகிழ்ச்சியற்ற பால்யங்களைக் கொண்ட சிறுவர்களும் வருந்திப் பாரம் சுமக்கும் பெண்களும் கைவிடப்பட்ட உதிரி மனிதர்களும் நிறைந்த இக்கதைகள் ஒரு நோக்கில் சமூகத்தின் இருண்ட ஆன்மாவைச் சித்தரிக்கின்றன.
இரவுக் காட்சி 2009-ஆம் ஆண்டு வெளியாகிறது. ஒரு ஆரம்பகால எழுத்தாளருக்கு வழக்கமாக இருக்கும் கதைகூறுதல் சார்ந்த தடுமாற்றங்கள் இல்லாமல் முதல் கதையிலிருந்தே கூறுமுறையில் தேர்ச்சி வெளிப்பட்டிருக்கிறது. சம்பவங்களைச் சீர்மையோடு அடுக்கிக் காட்சிப்பூர்வமாகச் சொல்லப்பட்ட அந்தக் கதைகள் தம்மளவிலான முதிர்ச்சியைக் கொண்டிருக்கிற அதே தருணத்தில் பிற்காலக் கதைகளோடு ஒப்பிடுகையில் எளிமையானவையாகத் தோற்றமளித்து எழுத்தாளர் அடையும் வளர்சிதை மாற்றங்களுக்குச் சாட்சியமாவது இயல்பானதே.
ஆண்
கதாபாத்திரங்களுக்கு
அவர்களுடைய
இருப்பிடத்துக்கு
வெளியே
நேரிடும்
மகிழ்ச்சியற்ற
வாழ்வியல்
அனுபவங்களை
கதவு எண் 13/78, மீட்சி, இரவுக்காட்சி போன்ற கதைகள் பேசுகின்றன. அந்த ஆண்களுக்கு துயரமிகு பின்கதைகளும் இருக்கின்றன. தெரு, சாலை, சந்தை, உச்சிப்பொழுது, அதிகாலை, இரவு என்று வெளியும் பொழுதும் கதைகளுக்குள் முக்கியமான அலகுகளாகின்றன. சமூகப் படிநிலையில் கீழடுக்கைச் சார்ந்தவர்களாகவும், தணிப்பதற்கு வழியற்ற பாலியல் விழைவுகளை உடையவர்களாகவும் துர்மரணங்களைச் சந்திக்கிறவர்களாகவும் இந்த ஆண்கள் இருக்கிறார்கள்.
செந்திலின்
பிற்காலக் கதைகளில் திரும்பத் திரும்ப வரப்போகிற “மகிழ்ச்சியற்ற பால்யத்தை உடைய சிறுவர்கள்
வீட்டைவிட்டு வெளியேறி வேறெங்கோ தஞ்சமடைவது” என்ற மூலப்
பண்பின் தடயங்கள் ‘மீட்சி’, ‘வாக்குமூலம்’
போன்ற கதைகளில்
இருக்கின்றன. சிறுவர்களுக்கு இடையிலான தோழமையுணர்வு மற்றும் போட்டியுணர்வைச் சித்தரிக்கும் ‘கிளைகளிலிருந்து’ கதையில் சிறுவர்களின் கண்கள் வழியே
பெரியவர்களின் உலகமும் காட்டப்பட்டிருக்கிறது.
இன்னும்
குழந்தைப்பேறு வாய்க்காத பெண்ணொருத்தி தன் அகத்திலும்
புறத்திலும் எதிர்கொள்ளும் போராட்டங்களைச் சித்தரிக்கும் ‘மதில்கள்’, தந்தையின் சடலத்தைப் பாடையில் வைத்துக்கொண்டு சொத்துக்காக பிள்ளைகள் சண்டையிடுவதைச் சொல்லும் ‘காத்திருத்தல்’, சம்பள நாளான சனிக்கிழமைகளில் குடித்துவிட்டு வந்து தன்
மன அவசங்களை வெளிப்படுத்தும் தந்தையின் முன்னிரவுப் பொழுதையும் அதனை
எதிர்கொள்ளும் குடும்பத்தின் உணர்வுகளையும் சித்தரிக்கும் ‘வருகை’,
விளிம்புநிலை மக்கள் தமக்குள்
கொண்டிருக்கும் பரஸ்பர ஆதரவையும்
நெகிழ்வான பாலியல் உறவுகளையும் சொல்லும் ‘மேய்ப்பர்கள்’ என்று ‘இரவுக்
காட்சி’ தொகுப்பில் பிற்பகுதிக் கதைகள் ஆழம்
கூடியவையாக இருக்கின்றன.
‘இரவுக்காட்சி’ தொகுப்பில் சல்லிவேர்களாகத் தெரிந்த செந்திலுடைய கதையுலகம் ‘அரூப நெருப்பு’ தொகுப்பில் ஆழமாக வேர்பிடித்தது. அதிக எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களோடும்
விரிவான விவரணைகளோடும் நேர்கோடற்ற உத்தியில் கதை சொல்வது
நிகழ்ந்தது. பிறகு ‘அகாலம்’
தொகுப்பில் நெடுங்கதைகளின் வழியாக கிளைகளும்
கொப்புகளுமாக விரிவானது. இதுவரை அவர்
எழுதியவற்றில் எனக்கு மிகப்பிடித்தமான
கதை ‘அரூப
நெருப்பு’. இந்தப் பின்னுரைக்காக
கதைகளை மொத்தமாக
மீள்வாசிப்புச் செய்த போதும் அது மாற்றமடையவில்லை.
சகோதரிகள், அகாலம் போன்ற
கதைகளையும் இந்த வரிசையில்
வைக்கலாம். ஆனால் இது
ஒவ்வொருவருக்கும் அவரவர் ரசனையின்படி
மாறுபடக்கூடிய வரிசைதான்.
குடும்ப
உறவுகளுக்குள் நிலவும் முரண்களைச் சித்தரிப்பதில் செந்தில் கைதேர்ந்தவர். வருகை, காத்திருத்தல்,
அரூப நெருப்பு,
வாசனை, மாறாட்டம்,
நிலை, அகாலம்,
சகோதரிகள், இல்லாமல் போவது ஆகிய
கதைகளைச் சிறந்த உதாரணங்களாகச்
சொல்லலாம். இக்கதைகளுக்குள் உறவுகளின் போராட்டங்கள் முடிவுறாமல் நடக்கின்றன. ஆணாகவோ பெண்ணாகவோ
ஒரு வெளிமனிதர்
குடும்பத்துக்குள் நுழையும்போது அந்தக் குடும்பம்
அடையும் சமன்குலைவை செந்திலின் கதையுலகத்தில் இன்னொரு முக்கியமான மூலப்பண்பாகச் சொல்லலாம்.
![]() |
| குணா கந்தசாமி |
தந்தைமை
குறித்து பல கதைகளில்
வலுவாக விசாரிக்கப்பட்டிருக்கிறது.
குடிகாரர்கள், சமூக ஏற்பற்ற
பாலியல் உறவுகளில் இருப்பவர்கள், பிள்ளைகள் வீட்டைவிட்டு ஓடுவதற்குக் காரணமாகிறவர்கள் என்று பலவிதமான
தந்தைகள் கதைகளுக்குள் இருக்கிறார்கள். வருகை, காத்திருத்தல்,
அரூப நெருப்பு,
அகாலம், சகோதரிகள்,
மகவு போன்ற
கதைகளில் தந்தைகள் குடும்பத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாகிறார்கள். மாறாக நிலை,
தங்கச் சிலுவை,
தொடுகை போன்ற
கதைகளில் மென்மையான உணர்வுகளைக் காட்டும் தந்தைமை குறித்த நேர்மறைச் சித்திரம் இருக்கிறது. செந்திலின் கதைகளில் தந்தைமையை இன்னொரு கோணத்திலும் காண்கிறோம். திருமணம் இல்லாத ஆண்கள்,
குடும்பப் பெண்களுடன் சமூக ஏற்பற்ற
காதல் அல்லது
பாலியல் உறவில் இணையும்போது
அப்பெண்களுடைய பிள்ளைகளை தம்முடையவாக வரித்துக்கொண்டு அன்பும் பித்தும் கொண்டிருப்பதை அகாலம், போக்கிடம்,
இல்லாமல் போவது போன்ற
கதைகளில் காணலாம்.
ஆணுக்கும்
பெண்ணுக்கும் இடையிலான விருப்பும் வெறுப்பும் கதைகளின் இன்னொரு முக்கிய இழையாக இருக்கின்றன.
உறவின் அந்தரங்கமான
தருணங்களில் குழந்தைகளாக இருக்கிறவர்கள் விரிசலும் வெறுப்பும் ஏற்படுகையில் மூர்க்கங்கொண்டு நிறம் மாறிவிடுகிறார்கள்.
அரூப நெருப்பில்
கோவிந்தன்- விஜயா- நாகு,
மாறாட்டம் கதையில் பரமு-புவனா-ராஜேஷ், அகாலம்
கதையில் சதாசிவம்-கீதா-சந்திரன்,
வாசனை கதையில்
தாஸ்-பச்சை,
போக்கிடம் கதையில் சசி-வளர்மதி,
இல்லாமல் போவது கதையில்
ரத்தினம்-கெளசல்யா ஆகிய உறவுகளில்
நிகழும் பரமபத விளையாட்டுக்கள்
நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
மேற்சொன்ன பல உறவுக்கோணங்களில்
துரோகமும் பழியுணர்ச்சியும் உறவின் தவிர்க்கமுடியாத
மறைகுணங்களாக இருக்கின்றன. உறவுகள் மகிழ்ச்சியானவையாக முகிழ்த்து துயரமானவையாக முடிகின்றன.
பல
கதைகளில் பால்யம் ஒரு பகுதியாக
இருப்பதோடு கிளைகளிலிருந்து, வருகை, திரும்புதல்,
இரண்டாமிடம், அழைப்பு, வேண்டுதல் போன்ற கதைகளில்
சிறுவர்களின் மனவுலகமும் அதன் வழியாக
வளர்ந்தவர்களின் வாழ்க்கையும் பேசப்பட்டிருக்கிறது. வீட்டைவிட்டு ஓடிவந்து உணவகத்தில் வேலை செய்யும்
இரு சிறுவர்களின்
இளைப்பாறுதலான பொழுதிலிருந்து தொடங்குகிறது ‘திரும்புதல்’ கதை. வாழ்க்கையின்
குரூரத்தை எதிர்கொள்ளும் சிறுவர்கள் பிஞ்சிலே வெம்புவதையும் வயதுக்கு மீறிய அவர்களுடைய
நடத்தைகளையும் சிறுவர்களின் மீதான மூத்தவர்களின்
வன்முறையையும் சுரண்டலையும் சொல்லும் முக்கியமான கதையாக ‘திரும்புதல்’
இருக்கிறது. ஆனால் செந்திலின்
புதிய கதைகளில்
சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் உலகத்தை மையமாகக் கொண்ட கதைகள்
ஏனோ எனக்கு
பெரிய ஈர்ப்பை
ஏற்படுத்தவில்லை.
வீட்டிலிருந்து
வெளியேறிய மகிழ்ச்சியற்ற பால்யங்களைக் கொண்ட சிறுவர்கள்
பெரியவர்களாகும்போது ரவுடிகளிடமோ அரசியல்வாதிகளிடமோ தஞ்சமடைவதே இயல்பான புகலிடமாக இருக்கிறது. காமமும் வன்முறையும் இருட்டும் நிரம்பிய வாழ்க்கைகளை மீட்சி, வாக்குமூலம்,
வெஞ்சினம், போக்கிடம் போன்ற கதைகளில்
கவனிக்கலாம். இது போன்ற
இருட்டு உலகத்தில் இருக்கும் அதிகாரப் படிநிலைகள், சூதுவாதுகள், பழியுணர்ச்சி, ஏற்ற இறக்கங்கள்
போன்றவை குறித்த விவரிப்புகள் சுவாரசியமாக இருக்கின்றன.
பெருந்தொற்றுக்
காலத்தில் செந்தில் எழுதிய குறுங்கதைகள்
“விருந்து” என்ற தலைப்பில்
வெளியானது. அதற்குப் பிறகான சிறுகதைகள்
இந்தத் தொகுப்பில்
உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
அகாலம் தொகுப்பு
வரையான கதைகளோடு
ஒப்பிடும்போது புதிய கதைகளில்
வடிவமும் கூறுமுறையும் இளக்கமும் உடைவும் கண்டிருக்கின்றன. நேர்கோடற்ற தன்மையில் நீண்ட
விவரணைகளோடும் கதை சொல்லும்
பாணி மாற்றமடைந்திருக்கிறது.
இந்த மாற்றத்தை
நிகழ்த்தியது அவருடைய குறுங்கதைகள் என்று யூகிக்கிறேன்.
வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பினும் கதைகளின் உள்ளடக்கம் ஒரு குறிப்பிட்ட
சதவீதம் அவருடைய கதையுலகத்தின் நீட்சியாகத்தான் அமைந்திருக்கிறது.
முந்தைய
கதைகள் உறவுகளின்
நாடகீயத்தை நுண்விவரணைகளோடும் கால வியாபகத்தோடும்
அணுகியவை. அவ்விதமான அணுகல் இளகி
புதிய கதைகளில்
ஒரு குறிப்பிட்ட
மனவுணர்ச்சியின் கதியில் மனம் கொள்ளும்
கோலங்களாகவும் கதைகள் பரிணமித்திருக்கின்றன.
இந்தப் பிற்பகுதிக்
கதைகளில் மகவு, அந்தி,
ஊசல், தொடுகை,
மோட்சம் ஆகிய ஐந்து
கதைகள் எனக்குப்
பிடித்தமானவை.
ஆண்பிள்ளை
வேண்டும் என்பது பழமைவாதமான
பார்வை என்றாலும்
அவ்விதமான எதிர்பார்ப்பை கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம்
இருக்கிறது. இரண்டு பெண்
குழந்தைகளுக்குப் பிறகு தனக்கு
மூன்றாவதாகப் பிறக்கப் போகிற மகவு
ஆண் குழந்தையேதான்
என்ற நம்பிக்கை
ஆழமாக வேரூன்றிவிட்ட
ஒரு தந்தையின்
ஆசையும் நம்பிக்கையும் பொய்க்கும் போது நேரிடுகிற மனவீழச்சியைச் சொல்கிறது ‘மகவு’. மனிதர்கள்
கோழைத்தனமாக நடந்துகொண்டாலும் வாழ்க்கை எதன்பொருட்டும் தேங்கிவிடுவதில்லை என்ற உண்மையையும்
இக்கதை நிறுவுகிறது.
தந்தையின் மனவோட்டங்களை விவரிக்கும் ஆரம்பப் பகுதிகளில் மென்னுணர்வுகளைச் சித்தரிப்பதில் தமிழ்ச் சிறுகதையில் ஒரு புதிய
பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் செந்தில். அந்தி, ஊசல்,
தொடுகை, மோட்சம்
ஆகிய கதைகளிலும்
இந்தப் பாய்ச்சல்
வெவ்வேறு விதமாக நிகழ்ந்திருக்கிறது.
செந்திலின்
கதைகளில் வரும் குடிகாரர்கள்
பலர் எம்.ஜி.ஆர்
ரசிகர்களாக இருக்கிறார்கள். சம்பள நாளின்
அந்திப்பொழுதில் குடித்துவிட்டு பாடல்களாலும் நடனத்தாலும் ஏகவசனங்களாலும் போக்குவரத்து மிகுந்த சாலையில் ரசமான காட்சிகளை
அரங்கேற்றும் குடிமகனையும் அவனோடு போராடும்
மனைவியையும் வாகனதாரிகளின் எண்ணப்போக்குகளையும் சித்தரிக்கும் ‘அந்தி’ கதை
புன்னகையோடான வாசிப்பைக் கொடுக்கிறது. மேலோட்டமானதாகப் பாவனை காட்டினாலும்
வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டதாக இக்கதை இருக்கிறது.
தன்
அழகின் மீது
பெருமிதமும் அதனை ரசிக்கும்
ஆண்களின் மேல் மனச்சாய்வுவையும்
உடையவளாய் இருக்கிறாள் பேத்தி எடுத்துவிட்ட
பேரிளம் பெண்ணொருத்தி. அவளுடைய மனோரதியங்களையும் மோகம் கொள்ளும்
இளைஞனுடன் அவளின் பரிபாஷை
விளையாட்டையும் காட்டும் ‘ஊசல்’ கதை
இறுதியில் சட்டென்று நிறம் மாறி மனிதமனம் ஆழத்தில் மறைத்திருக்கும் ரகசிய சுயரூபங்களைக்
காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. ‘மோட்சம்’ கதையிலும் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான பரிபாஷை மொழி நுட்பமாக
வரைந்து காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், கையிலேந்தி
சில கணங்களுக்கு
உள்ளங்குளிர்ந்து அனுபவித்த அற்புதமொன்று கைநழுவி இழப்பதின் மன நடுக்கத்தை
அளிக்கிறது மோட்சம் கதை.
‘தொடுகை’
கதையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான சின்ன மருதுவுக்கு
வாழ்க்கையின் பிற்பகுதியில் கிடைக்கும் பெறுமதியான பரிசு அவரை
வேறொரு மனிதராக
மாற்றுகிறது. பார்வையற்றவராக இருந்தாலும் சின்ன மருது
வாழ்க்கையின் மீது எப்போதும்
அவநம்பிக்கை கொண்டவராக இருப்பதில்லை. ஒருவிதமான தீர்க்கத்தையும் இறுக்கத்தையும் உடையவராக இருந்தவர் தனக்கான பரிசைக் கையிலேந்தியவுடன் உயிர் குழைந்துவிடுவதன்
காரணம் அந்தரங்கமானது.
‘தொடுகை’ கதையை ‘மகவு’
கதையோடு இணைத்து வாசித்தால் நமக்கு புதிய
அர்த்தங்கள் கிடைக்கும்.
மேற்சொன்னவற்றைத்
தவிர புதிய
கதைகளில் பந்தயம் மற்றும் சுடர் ஆகியவையும்
குறிப்பிடத்தக்கவை. கூறுமுறையிலும் பார்வையிலும் புதிய மாற்றம்
நிகழ்ந்திருந்தாலும் முந்தைய கதைகளின் சாயைகள் ஆங்காங்கே இருக்கின்றன. எழுத்தாளருக்கென்று பிரத்யேக கதையுலகம் உருவாகிவிட்டால் இது இயல்பாகவே
நேருமென்றாலும் புதியன தேடுவதும்
முக்கியமானது. குறுநாவலாகச் சொல்லத்தக்க ’இல்லாமல் போவது’ நெடுங்கதையில்
ஒரு பகுதியின்
மறுவடிவமாக ‘பற்று’ கதை
தோன்றுகிறது. உறவிலோ தொழிலிலோ
தோல்வியடையும் ஆண்கள் மீண்டெழுவதைவிட
மரணத்தைச் சந்திப்பதும் செந்திலின் கதைகளில் திரும்பத் திரும்ப நிகழ்கிறது.
‘அகாலம்’
தொகுப்புக்குப் பிறகு எழுதப்பட்டவற்றில்
முற்குறிப்பிட்ட ஏழைத் தவிர
பிற புதிய
கதைகள் வாசிக்கச்
சுவாரசியமாக இருந்தாலும் அவற்றில் சிறுகதை கொண்டிருக்கவேண்டிய ஏதோவொன்று குறைகிறது என்று தோன்றுகிறது.
இந்தப் பின்னுரைக்காக
கதைகளை வாசித்தபோது
ஏனையவற்றோடு ஒப்பிடுகையில் கதையுலகத்தோடு ஒட்டாதவையாகவும் ஏதோவொன்று குறைவதாகவும் தோன்றிய சில கதைகளை
அவரிடம் சுட்டினேன். அவற்றுள் பெரும்பான்மையானவையை தொகுப்பிலிருந்து விலக்கிவிட்டார். தொகுப்பின் தரம் குறித்த
அவருடைய சமரசமற்ற நோக்கிற்கு இது சான்றாக
இருக்கிறது.
இருபதாண்டுகளாக
எழுதிக்கொண்டிருந்தாலும் செந்தில் பெரும்பாலும் சிறுகதை வடிவத்திலேயே இயங்குகிறார். அவர் குறுங்கதைகளை
எழுதியது வடிவம் மற்றும்
உள்ளடக்க ரீதியாக புதிய பிரதேசத்துக்குள்
செல்ல உதவியிருந்தாலும்
அகாலம் வரையான
கதைகளில்தான் செந்திலின் தனித்த முத்திரை
இருப்பதாக எனக்கு தனிப்பட்ட
விதத்தில் தோன்றுகிறது. அதே நேரத்தில்
மகவு, அந்தி,
ஊசல், தொடுகை,
மோட்சம், பந்தயம், சுடர் போன்றவை
தி.ஜானகிராமனுடைய
செவ்வியல் கதைகளின் ஆன்மாவை எனக்கு ஏதோவொரு
விதத்தில் நினைவூட்டுகின்றன.
செறிவான
கதையுலகத்தை முழுமையான வியாபகத்தோடு வாசகர்களுக்கு வழங்கும் இப்பெருந்தொகுப்பு செந்திலின் கதைகள் குறித்த
உரையாடல்களை விரிவாக்குவதுடன் அவருடைய படைப்பியக்கத்தின் எதிர்காலத் திசைவழிகளை அவருக்கு நிர்ணயித்துத் தரும் என்றும்
நம்புகிறேன்.
கே.என்.செந்தில்
இலக்கியத்தில் என் சகபயணி.
அவருக்கு என் வாழ்த்துகள்.
***
(’கே.என்.செந்தில் கதைகள்’ நூலுக்கு குணா கந்தசாமி எழுதியுள்ள பின்னுரை)
எதிர் பதிப்ப்கம, பொள்ளாச்சி.
.jpg)


No comments:
Post a Comment