பந்தயம்
நீரில் மிதந்து அசைந்தாடிக் கொண்டிருந்த பிம்பங்களைச் சிதறடித்தபடி மதில் மேலிருந்து ரயில்வண்டிகளின் வரிசையில் பையன்கள் குதித்த சத்தம், பாறைகளுக்கு வெடி வைத்த ஒலியையும் மிஞ்சியிருந்தது. குதித்த பனிரெண்டு பேரில் ஐவரை மட்டும் காணோம். மீதிப்பேர் வெவ்வேறு இடங்களிலிருந்து பாம்புகள் போல தலைநீட்டி தங்களை நொந்தபடியே மெதுவாகப் பக்கவாட்டில் கரைஒதுங்கினர். வெளியே தலையைக் காட்டக்கூடாது . நீரினடியிலே சென்று மறுகரையை அடைய வேண்டும். அப்படி தான் பேசி முடிவு
செய்யப்பட்டிருந்தது. சற்று நீளமான தெப்பக்குளம் அது. வெகுநேரமாக உள்ளே எருமை போலக் கிடந்தவர்களை விஷயத்தைச் சொல்லி சற்றுமுன் கரையேறச் செய்திருந்தனர். படிக்கட்டுகளில் இருந்தவர்கள் அதுவரைக் காணாமலிருந்த மற்ற ஐவரும் நீரினடியில் முன்னேறுவதைக் கண்டு கைகொட்டி உற்சாகக் கூக்குரலிட்டனர். ஓரங்களில் அமர்ந்து
தவளைகள் போல தத்தியபடி புதிதாக நீச்சல் பழக வந்தவர்கள் பயந்து போய் நீர் சூழ்ந்த சிவந்த கண்களுடன் எழுந்து மேலே வந்தனர். ஐயப்பன் தான் முதலில் வருவான் என்று குளப்படிக்கட்டில் பந்தயம் நடந்தது. வெயிலின் ஒளியால் பச்சை வர்ணத்திலிருந்தத் தெப்பக்குளத்து நீரில் சூரியன் பந்து பந்தாகச் சிதறி மின்னித் தளும்பியதைப் பார்த்ததும்
குளமே ஒரு கிண்ணமாக மாறி விட்டது போலிருந்தது. மேலிருந்த மரத்தின் நிழல் விழுந்த படிக்கட்டுகளில் திடீரென்று ஊளை எழுந்தது. அங்கு அமர்ந்திருந்த ராதாகிருஷ்ணனின் கூட்டாளிகளின் முகங்கள் பிரகாசமாயிற்று. அப்படியானால் முருகேசனின் கதி என்ன?
தெப்பக்குளத்திற்கு மேலே சிரைத்துக் கொண்டிருந்த நாவிதர்கள், பாதி மழித்த முகங்களை அப்படியே விட்டு விட்டு கலங்கிக் குழம்பிப் போயிருந்த நீரில் நின்று கொண்டிருந்தவர்களை புருவத்தால் வினவினர். வாய் திறந்தால் அவர்கள் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலையின் சாறு ஒழுகிச் சட்டையை செந்நிறம் ஆக்கிவிடும். நீருக்குள் யார் முந்துகிறார்கள் என அங்கிருந்த ஒருவருக்குமே சரியாக தெரியவில்லை. அவர்களுக்கு நிகராகத் தரையில் ஓடிச் சென்றும் புலப்படவில்லை. சங்கொலி போல ஒரு முழக்கம் மறுபக்கம் கேட்டது. முருகேசனின் கும்பல் கைலியை தலைக்கு மேலே தூக்கிச் சுழற்றினர். யாரும் எதிர்பாராதது
அது. முருகேசன் முதல் ஆளாக கரையைத் தொட்டு மேலே வந்தான். அதற்கு சில வினாடிகளுக்குப்
பின் ஐயப்பன் மேலேறி தன்னருகில் வெற்றிக் களிப்பில் குதித்துக் கொண்டிருந்தவர்களை பார்க்காதவன்
போல தன் சகாக்களிடன் சென்றான். கேலிச் சிரிப்பை தாங்கமுடியாமல் திரும்பி வந்து தன் கால்களை யாரோ பிடித்து இழுத்ததாக ஊளையிட்டுக் கொண்டிருந்தவர்களை நோக்கி எகிறியபடியே போனான். அவனிடமிருந்து வடிந்து அவனைச் சுற்றிலும் தேங்கிய தண்ணீர், இரை விழுங்கிய பெருவயிற்றுப் பாம்பு போல மெல்ல நகர்ந்தது. ஆனால் அதற்கு எந்த பலனும்
இருக்கவில்லை. ஏனெனில் உள்ளே அப்படி யாரும் இருந்திருக்கவில்லை. அங்கு கால்நீட்டி அமர்ந்திருந்த
மனோகரண்ணன் நினைவு வந்தவராக ’ராதா எங்கடா?’ என அதிர்ச்சியுடன் எழ முயன்றார். ஆனால்
முடியவில்லை. சொல்லி வைத்தாற் போல பலரது தலைகளிலும் குளத்தை நோக்கித் திரும்பின. இன்னும் ராதாவைக் காணோம். நான்கைந்துப் பொந்துகளும் அடியில் சேறும் நிரம்பியிருக்கும் தெப்பக்குளத்தைத் தூர்வாரிச் சரி செய்வதற்குள் வானம் பெயர்த்து பொழிந்தது போல கொட்டிய மழை சுற்றுவட்ட ஊர்களின் கம்மாய்கள், குளங்கள், கிணறுகளில் கை நீட்டி தொடும் அளவுக்கு நீரைக் கொண்டு வந்து நிறைத்திருந்தது. எனவே அவன் உள்ளே எங்கேனும் அகப்பட்டிருப்பானோ? அவர் பதற்றத்துடன் பிறரை கூப்பிட்டு விசாரித்துக் கொண்டிருந்தார். தேவையில்லாமல் சின்ன பையன்கள் சமாச்சாரத்தில் தலையிட்டு விட்டோமோ என்கிற கவலை அவரை நிம்மதியிழக்கச் செய்திருந்தது. கெட்ட வார்த்தைச் சொல்லித் திட்டிச் சுற்றி நின்றவர்களைத்
விரட்டினார். அவன் பெயரை ஏலம் விடுவது போல ஆளாளுக்கு
கூவியபடியே அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தவர்களில் சிலர் அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்கிற பயத்தில்
நீரைக் கத்தியால் கிழித்தது போல குதித்து உள்ளே சென்றார்கள். யாரும் எதிர்பாராதது போல ராதாகிருஷ்ணன் வேறிடத்தில் முளைத்துச் சோர்வுடன் கரையேறினான். பலரும் ஆசுவாசத்துடன் பெருமூச்சொறிந்தனர்.
தண்ணீர் பாம்பு தக்கையாக மிதந்து செல்வதை பார்த்தபடியே குமார் குதித்தவர்கள் எல்லோரும்
மேலேறி விட்டார்களா எனத் தலைகளை எண்ணிக் கணக்கைச் சரிபார்த்தான். உள்ளே ஒருவருமே இல்லை என்பது தீர்மானமாயிற்று. போட்டி முன்னறிவிப்பின்படி ‘சோடாக்கார’ மனோகரன் தன் பாரியான உடம்பை மெதுவாகத் தூக்கி எழுந்து நின்றார். அவருக்குக் கால்கள் மரத்து விட்டிருந்தன. யாரையோ காலில் போட்டு மிதிக்கும் பாவனையில் ’தொம் தொம்..’மென தரையில் அடித்தார். நடந்து பார்த்தார். தேவலாமென்றிருந்தது. அவர் தான் கோவிலின் பிரசாத ஸ்டாலை லீஸுக்கு எடுத்திருந்தார். மதியம் வேலையாளை மாற்றி விட்டு கணக்கையும் பார்த்துச் செல்வது வழக்கம். அப்போது தெப்பக்குளத்தில் ஓயாத சத்தமும் வாக்குவாதமுமாக முழங்குவதைக்
கேட்டார். ரகளைக்கான முஸ்தீபுகள் கனன்று கொண்டிருந்தன. அங்கிருந்த சகலரும் தெரிந்த
வீட்டுப் பையன்கள் தான். எனவே மத்தியஸ்தம் செய்து வைக்க இறங்கி வந்தார். அவர் முன்னால் தான் விதிமுறைகளும் தண்டனைகளும் வகுக்கப்பட்டன. சிலவற்றை வேண்டாமெனச் சொல்லியும் பையன்கள் பிடிவாதமாக இருந்தனர். ஒப்புக் கொண்டார்.
ஏனெனில் வீட்டிலேயே அவர் அப்படித் தான். ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லிப் பார்ப்பார்.
பிறகு அவர்கள் போக்கிலேயே விட்டு விடுவார்.
இப்போது போட்டி முடிந்து போன நிலையில் முடிவை அறிவித்தார்.
முருகேசனையும் அவனது ஏழு ஆட்களையும் ராதா, ஐயப்பனின்
சோட்டாளிகள் தோளில் தூக்கியபடி குளத்தைச் சுற்றி வர வேண்டும். இன்னும் ஒரு வார காலத்திற்கு அவ்விருவரும் அவர்கள் சார்பாகக் கலந்து கொண்டவர்களும் மதில் மேலிருந்தோ இரு நூற்றாண்டுகளாக அமர்ந்திருக்கும் நந்தியின் தலை மீதிருந்தோ குதிக்கக் கூடாது. இன்றைக்கும் நாளைக்குமான செலவுகளை இருவருமே பகிர்ந்து கொண்டு வென்றவர்கள் என்ன கேட்டாலும் வாங்கித் தர வேண்டும். மிக முக்கியமான ஒன்றை அவர் மறந்தது போல நடித்தார். பாவனை செய்தார். உண்மையில் அவர் முருகேசன் வாகை சூடுவான் எனச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அவர் மட்டுமல்ல யாருமே அப்படி யோசித்திருக்கவில்லை.
’செரி நாங்க லைனா நிக்கறோம். ஒழுங்கா கால்ல வுழுந்து எந்திருச்சுட்டு அப்பறம் போங்கடா…’ என்றான் முருகேசனின் சித்தப்பா மகனான குமார்.
அந்த இடமே ஸ்தம்பித்துவிட்டது. மேலே இருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்த சேகரண்ணன் வெற்றிலைக் குதப்பலைத் துப்பிட்டு வந்து ‘தெரியாம சொல்லிட்டான். பேசாம போங்க கண்ணு.. ஒண்ணா மண்ணா பழகிட்டு..’ என்றபடி முகம் மழித்த நீரைச் செடியோரம் விசிறி விட்டு அவனை முறைத்தார்.
மனோகரன் பெருமிதத்துடன் அவரைப் பார்த்து ‘டேய் சின்னான்..உன்ற பசங்கள சித்த கூட்டிட்டு அந்தப்பக்கமா போடா..’ என சேகரண்ணனை வம்படியாக அழைத்தார். அவருக்கு ஏதேனும் விபரீதம் ஆகிவிடுமோ என்கிற அச்சம்.
ராதாவும் ஐயப்பனும் பஞ்சாகக் காய்ந்தத் தலைகளுடன் வெயிலில் நின்று கொண்டிருந்தனர். நீரில் கிடந்து எழுந்ததால் அங்கிருந்தவர்கள் முகங்கள் வெளுத்துப் போயிருந்தன.
’அதெப்படி சொன்னா சொன்னபடி நடக்கோணும்..’ என்றார் குளிக்க வந்து வேடிக்கைப் பார்த்து நின்ற கைலாசம். அவர் கோவில் பூக்கடையை காலி செய்யச் சொல்லி ஐயப்பனின் அப்பா கொடுத்து வந்த தொந்தரவுகளின் மீது, நீரில் குதித்து மூழ்கி கொஞ்ச தூரம் சென்றதும் காறித் துப்பினார்.
தகித்துக் கொண்டிருந்த வெயிலில் சூடு மேலும் ஏறிக் கொண்டிருந்தது. ‘கெளம்பிப் போங்கடா..பொழுதோட பேசிக்கலாம்..’ என்றார் மனோகரன்.
ஒருவரும் நகர்வதாகத் தெரியவில்லை. முருகேசன் ஆட்கள் மற்றவர்களை வளையம் போல சூழ்ந்து தப்பிச் செல்லாதபடி மறித்து நின்றனர்.
’இதே கொளத்துல நாங்க எங்கிருந்து வேணும்னாலும் குதிச்சு ஆடுவோம். எந்த பலசாதிக்கு பொறந்த மயிரான் வந்து கேக்கறான்னு பாப்போம்..’ ராதாவின் குரல் மூர்க்கத்துடன் ஒலித்தது. முருகேசனின் பாட்டி தன் புறவாசல் வழியாக வந்து வீட்டு அழுக்கு உடுப்புக்களைத் துவைத்து கொடுத்து அரிசி பருப்புக்களை வாங்கிப் போகும் காட்சியில் அவன் மனம் சென்று நிலைத்தது.
ஐயப்பனின் அக்கா வேற்று சாதிக்காரனுடன் சென்று விட்ட பிறகு ராதா போல இறங்கி பேச வலுவற்றவனாகச் செயலற்று நின்றான். இப்படி தன்னை உறைந்து போக வைத்த அவளை தேடிப் போய் கண்டுபிடித்து வெவ்வேறு விதங்களில் சித்ரவதை செய்வதாகக் கற்பனை செய்தபடியே நின்று கொண்டிருந்தான்.
முருகேசன் வாயைத் திறக்க வேண்டும். அவன் சொல்லெல்லாம் மறந்தவனாக தன் மீது வெயில் ஏறி நிற்பதைப் பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தான். வகுப்புகளில் அவனுக்கு நடக்கும் இழிவுகளுக்கும் அவமானங்களுக்கும் இவ்விருவரே காரணமாகவும் தூண்டுபவர்களாகவும் இருந்தனர். அவ்வளவு பேர் மத்தியில் அவன் டிபன்பாக்ஸை திறந்து வாயைக் குமட்டுவது போல காட்டி மூடிமூடி திறப்பதும் அவனது அப்பாவைப் போல ஒருபக்கமாக சாய்ந்து நடந்து காட்டுவதும் பலரும் பதில் தெரியாது எழுந்து நிற்கும் போது இவன் மட்டும் மடமடவெனச் சொல்லும் போது முகத்தைச் சிரைப்பது போல ஜாடை காட்டுவதுமாக அவனை மனரீதியாகத் துன்புறுத்திச் சிரிப்பதையே வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். எந்த பெண் அவனிடம் பேசினாலும் சில நாட்களுக்கு அவளை இவன் பேர் சொல்லியே அழைத்து அண்டவிடாமல் செய்வதும் ஐயப்பன் தான். ஏழாவது முடியும் வரை அவனை மதிப்பெண்ணில் தாண்டவே இருவருக்கும் முடிந்திருக்கவில்லை. இருவரின் வீடுகளிலும் முருகேசனுடன் ஒப்பிட்டு பேசிப் பேசியே நோகடித்ததின் விளைவு.
நீச்சலில் இவனை தோற்கடித்துவிட்டால் இந்த பக்கமே தலைகாட்டாமல் செய்து விட முடியும் என நினைத்தே போட்டிக்கு அழைத்தனர். ஆரம்பத்தில் அவன் மறுத்தான். ராதா தான் தன் ஜட்டியை கீழிறக்கிக் காட்டி ‘பேடிப்பயலே வாடா..சிரைச்சு விடு..இதுக்கு தான் லாயிக்கு ’ எனக் கொக்கரித்தான். முருகேசன் கொஞ்சம் கூட தாமதிக்காமல் ஓங்கி அறைந்தான். பெரிய கைகலப்பு ஏற்பட்டு உடனேயே அடங்கியும் விட்டது. ஐயப்பன் அவனை பிடித்துக் கொள்ள ராதா ஒன்றுக்கு மூன்றாகக் கொடுத்தான். அதைக் கண்ட பிறகு தான் முருகேசனுக்கும் ஆட்கள் திரண்டனர். போட்டி வலுப்பெற்றது.
ராதா கடுகடுப்பான முகத்துடன் எரிப்பதைப் போல அவனைப் பார்த்த பின் தனது நடுவிரலை வாய்க்குள் வைத்து ‘ஊம்புடா தாயோளி..யாரைக் குளிக்ககூடாது எவன்டா நொட்டறது..’ என்றான். ஐயப்பன் அவன் தோளைத் தட்டிக் கொடுத்துச் சிரித்தான். மனோகரன் ஏதும் கேட்காதவர் போல கைலாசத்துடன் வாயாடிக் கொண்டிருந்தார். முருகேசன் தன் காலடியில் கிடந்த செருப்பைத் தூக்கி ராதாவை நோக்கி எறிந்து ’போயி உங்க மாமாவை போய் ஊ.ம்புடா. உங்கப்பன் ஊர் மேய்ஞ்சுத் திரியறாரு. மாமன் போடுற சோத்துல தான்டா பொழக்கறீங்க.. மானக்கெட்டவிங்களா..’ எனக் கத்தினான். காதில் விழுந்ததும் மனோகரனின் உடம்பு ஒருமுறை ஆடி அடங்கிற்று. தன் அக்காவுடன் கூட அந்த ஆளைச் சேர்த்து வைத்துக் கிசுகிசுத்திருக்கிறார்கள். கைலாசம் சிரிக்கிறானா? இல்லை அப்படித் தோன்றுகிறதா? இப்போது எழுந்து சென்றால் வினையாகப் போய்விடும். எனவே செவிட்டூமை பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார்.
ராதா, அந்த பலத்த அடியை எதிர்பார்த்திருக்கவில்லை. சூறைக் காற்று போல பாய்ந்து சென்றான். யார் யாரைத் தாக்குகிறார்கள் என்பதே தெரியவில்லை. மனோகரன் அங்குமிங்கும் மூச்சுவாங்க ஓடியோடி தடுக்க முயலுந்தோறும் சண்டை உக்கிரம் பெற்றது. வெளியே இருந்து ஆட்கள் ஓடி வருவதைத் தடுக்கும்படிக்கு குமார் தெப்பக்குளத்தின் இரும்புக் கதவை தாளிட்டு பூட்டி விட்டிருந்தான். சாவியை சேகரண்ணனிடம் வாங்கித் திறந்து மீண்டும் கொடுத்து விட்டுச் செல்வதே தினசரி வழக்கம். முருகேசனின் ஆட்கள் தோற்றவர்களின் உடைகளை எடுத்து கையில் வைத்துக் கொண்டனர். ஜட்டியுடன் நான்கு தெருவை நடந்து கடந்து சென்றால் தான் அவர்களின் வீடுகள் வரும். மாற்றுச் சாவி கொண்டு வந்து ஆட்கள் புகுந்து பையன்களை விலக்கி விடுவதற்குள் நகங்களால் சிராய்த்தும் தாக்கியும் ரத்தக் காயங்களுடனிருந்தனர். உள்ளே புகுந்தவர்களில் பாதி பேர் முருகேசனை விலக்கத் தான் ஓடினர். ஏனெனில் உள்ளே கிடந்த வெறியனைத்தும் திரண்டு எழுந்தவன் போல சுழன்று கொண்டிருந்தான்.
வாழைமட்டையுடனும் சொரப்புரடையுடனும் தகரடின்னுடன் நீச்சல் பழக வந்திருந்த சிறுவர்கள் தங்களை அழைத்து வந்திருந்த அண்ணன்கள் ஏன் இப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்பது தெரியாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தனர். கீழ்படியில் படிந்திருந்த பாசி வழுக்கி ஒருவன் குப்புற விழுந்தான். களேபரத்தில் அதை யாரும் பார்க்கக்கூட இல்லை. கால்மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பையன்களை ஆளுக்கொரு பக்கமாக இழுத்துச் சென்று அமர வைத்தனர். ஆனாலும் சண்டையின் சூடு கொஞ்சம் கூட ஆறியிருக்கவில்லை. இது வேறு எங்கேனும் தொடரவும் கூடும் என்பது போல தான் நிலைமை கொதித்துக் கொண்டிருந்தது.
ராதாவின் அக்காள் மகனான சஞ்சயைக் காணோம் என அவனுடன் வந்த சித்து தேம்பியபடியே சொன்னான். சில நிமிடங்களில் விஷயத்திற்கு தீப் பற்றிக் கொண்டு விட்டது. சல்லடையாகத் துழாவிய பின்னும் தட்டுப்படவில்லை. முருகேசனும் அவனது ஆட்களுமே கூட இறங்கி மூழ்கிச் சென்று வெறுங்கையுடன் திரும்பி வந்தனர். ஓயாமல் அழுது கொண்டிருந்த ராதாவுக்கு ஆறுதல் கூறியபடியே அருகில் நின்றனர். அவனது அக்காள் மயக்கமுற்று இன்னும் போதம் தெளியாமல் கிடந்தாள். ஊர்க்காரர்களின் ஏச்சுக்களும் பேச்சுகளும் சலசலப்புமாக அந்த இடமே சந்தைக்கடை இரைச்சலாக ஆனது.
கொஞ்ச நேரத்தில் ஒப்பாரியும் ஓலமுமாக தெப்பக்குளம் மாறிற்று. தீயணைப்பு வண்டி வந்து கயிறு கட்டி ஆட்கள் நாலா திசைகளுக்குள்ளும் மூழ்கிச் சென்றனர். ஒரு மணி நேரத்திற்கு பின் வங்கு போன்ற ஓரிடத்தில் தலை சிக்கக்கிடக்க உயிரற்ற உடலாக அவனை மேலே தூக்கி வந்தனர். அந்த குளமே வாய் முளைத்து அழுவது போல எங்கும் கண்ணீரும் அழுகையொலியுமாக மாறியது. மேலே எங்கும் தலைகளாகக் காணப்பட்டன.
அன்றே கோவில் இரண்டு மணிநேரம் மூடப்பட்டு தகுந்த பூஜைகளும் பரிகாரங்களும் செய்தபின் மீண்டும் திறக்கப்பட்டது. சில தினங்களுக்குப் பின் மனோகரனின் ஸ்டால் உரிமம் ரத்து செய்யப்பட்டது. சேகரண்ணனுக்கு பதிலாக அவரது மனைவியின் தம்பி அங்கு நாவிதம் செய்ய வரவழைக்கப்பட்டார். அந்த தெப்பக்குளம் அதற்கடுத்து வந்த பல ஆண்டுகளில் நிறைவதும் வற்றுவதுமாக மாறி மாறிக் காணப்பட்டது. ஆனால் பூட்டப்பட்ட குளத்தின் கதவு ஒருபோதும் திறக்கப்படவேயில்லை. வெளியூர்வாசிகள் யாரேனும் நின்று கொஞ்ச நேரம் பார்த்தால் ஏதேனும் பறவையொன்று நிறைத்திருந்த நீருக்குள் செங்குத்தாக இறங்கி மீனை லாவகமாகப் பற்றி விண்ணேறிச் செல்வதைக் காணமுடியும். அவ்வளவு தான்.
******************
No comments:
Post a Comment