Friday, December 20, 2024

போரும் சமாதானமும்

 

போரும் சமாதானமும் 


1

கோணிப்பைகளுக்கு இருந்திருந்தாற் போல தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. சாக்குகள் இன்றி வேலையே ஓடாது என்பது போல ஆகிவிட்டிருந்தது. அரசர், தளவாய் வேலப்பனுடன் கலந்து பேசி படைகளின் நிலைமைகளை கேட்டறிந்த பின் போரை அறிவித்தார். உடன்விளைவாக குலசேகரனின் முகம் நினைவில் வந்ததும் அவனை நிர்மூலமாக்க வேண்டும் என்கிற வெறி கிளர்ந்தது. ‘எழுந்தா போகிறாய்..?’ பற்களைக் கடித்து கோபத்தை அடக்க முயன்றும் முகம் சிவந்து விட்டது. உடல் முறுக்கேற குருதி கொதித்தது. சினத்துடன் முகத்தைத் திருப்பிப் பணிகளை உடனடியாகத் தொடங்கும்படி கர்ஜித்தார். அவரது உத்தரவுகள் மறுவாரத்திலேயே காட்சிகளாக மாறியாக வேண்டும். ஏனெனில் ஜோதிடர் குறித்துக் கொடுத்த கிழமைக்குச் சொற்ப நாட்கள் தான் இன்னுமுள்ளன. அதற்குப் பின் வெற்றிக்குரிய கிரகநிலைகள் கூடி வர மேலும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டி வரலாம். மேலும் அது மழைப்பருவத்தின் தொடக்கமும் கூட. அந்த தேசத்தின் எல்லையை அடைய இரண்டு மலைகளையும் நான்கு நதிகளையும் மூன்று ஆறுகளையும் வனங்களையும் கடந்து செல்ல வேண்டும். மூன்று இரவுகளும் நான்கு பகல்களும் தேவைப்படக் கூடும். எதிர்பாராமல் விடாது மழை பொழிந்தால் வெள்ளம் ஏறி நதிகளைக் கடலென மாற்றி விடும். வழிகளும் மறைந்து விடும். சேற்றிலும் சகதியிலும் யானைகளும் குதிரைகளும் ஆட்களுமே கூட மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டிவரலாம். அந்த யோசனையூடாக காவலர்களுக்கான சப்பாத்துக்களைத் திரட்டவும் முரட்டுத் தோலில் புதியவற்றை செய்து தரவும் கீழத்தெருவுக்கு ஆட்களை உடனே அனுப்பி விட வேண்டும் என்று தோன்றியது. நெடுந்தொலைவு செல்லவிருப்பதால் அவை மிக முக்கியமாகத் தேவைப்படும். வீரர்களின் காலணிகள் கிழிந்து போனதால் பின் வாங்கிய படைகளின் கதைகளையும் அதை கேள்விப்பட்டு விரட்டி வந்து வென்ற எதிரிகளின் சாதுர்யம் குறித்த விதந்தோதல்களையும் தளபதி கேள்விப்பட்டிருக்கிறார். எனவே இவற்றில் சிறுபிசகு ஏற்பட்டால் கூட சகலமும் வீணென ஆகும். எனவே விசையுடன் பூர்வாங்க வேலைகளில் மூழ்கினர். 




அரசரின் முறையற்ற, கட்டுக்கடங்காத கோபமோ மிகவும் பிரசித்திப் பெற்றது. திருட்டு மாங்காய் பறித்தவனுக்கு கைகளை துண்டிக்கச் சொல்லியும் கூரை பிரித்து இறங்கி நகைகளை களவாடியவனுக்கு கைச்சூடும் போடும்படி உத்தரவிட்டவர் அவர். விஷயம், தன் முன் அந்த மாங்காய் திருடன் நிமிர்ந்து நின்றது தானாம். அது எப்படியோ மகாராணியான அவரது தாயாரின் காதுக்குச் சென்று விட்டது. அவர் சொல்லுக்கு மட்டும் தான் அரசர் கட்டுப்படுவார். தாயாரின் வார்த்தைக்கு இணங்கி அவனை தண்டனையிலிருந்து விடுவித்தது மட்டுமின்றி தளபதியிடம் சொல்லி குதிரை லாயத்தில் பராமரிப்பு வேலையையும் மாதச் சம்பளத்திற்கு ஏற்பாடு செய்து தந்தார்.


அரசரை நன்கு அறிந்திருந்ததால் திட்டம் சிறிது பிசகினாலும் யார் கழுத்தில் தலையிருக்கும் என்பதற்கு உத்திரவாதமேதுமில்லை. எனவே போருக்கான தயாரிப்புகளில் மந்திரிகளும் முதன்மை தளவாயும் படைப்பிரிவுகளின் சேனாதிபதிகளும் அவர்களது உதவியாளர்களும் முடுக்கி விடப்பட்டிருந்தனர். இரு தினங்களுக்கு முன் அரண்மனையையொட்டிய சத்திரத்தில் கூடிச் சில முடிவுகளை விரைவாக அமல்படுத்த ஒரு கூட்டத்திற்கும் ஒழுங்குச் செய்திருந்தார் வேலப்பன். அங்கு காவலர்களுக்கு சில அறிவுறுத்தல்களும் ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டன. அதில் முதன்மையாகச் சில இருந்தன. அவற்றுள் தேவையானப்பொருட்களை மூன்று நாட்களுக்குள் திரட்டிவிட வேண்டும் என்கிற உத்தரவும் அதற்குரிய செயல்திட்டமும் அடக்கம். ஏனெனில் களஞ்சியங்களில் உள்ளவை கிளம்பிய இரு நாட்களிலேயே வழியிலேயே தீர்ந்து விடும் என  காரியதரிசி கூறிவிட்டிருந்ததால் தேவைக்கும் அதிகமான பண்டங்களை சேர்க்கும் பணிகள் தொடங்கின.  ராஜாங்க ஆட்கள் சென்று கொண்டு வந்தவை, குடிகள் தாமாகவே வந்து அளித்து விட்டுச் சென்றவற்றை சாக்குகளில் அள்ளிப் போட்டு குலுக்கி மேலும் திணித்து  மூட்டைகளாக மாற்றும் வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன. அவை போதுமானளவிற்குப் புடைத்த பின், மேற்பார்வையாளன் சுட்டும் கிடக்குகளில் அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அடுக்கப்பட்டன.  சுமைக்கூலிகளின் ஒடிந்து வளைந்த முதுகுகள், சற்று நிமிரக் கூட நேரந்தரப்படவில்லை. அந்தளவிற்கு அவை சாரிசாரியாக வர ஆரம்பித்திருந்தன.


போதிய சாக்குகள் இன்றி தானியங்களும் ஏனைய சமையற்பொருட்களும் காய்கறிகளும் கைவிடப்பட்டவை போல கிடந்தன. பத்திருபது நாட்களுக்கு முன்னர் கூட அவை வியாபாரிகளின் கிடங்குகளில் அநாமதேயமாக எறியப்பட்டிருந்தன. அவற்றைக் கால்மிதிகளாக பயன்படுத்திய நாட்களை நொந்தபடியே ஒவ்வொரு தெருவீடுகளின் இண்டு இடுக்குகளிலெல்லாம் தேடி அரண்மனைச் சேவகர்கள் அலைந்து திரிந்தனர். கேட்பாற்று கிடந்தவை திடீரென கைக்கு எட்டாதவைகளாக மாறி விடும் விநோதத்தை எப்படி புரிந்து கொள்வது? அதில் வியக்க ஒன்றுமில்லை. ஏனெனில் மண்ணில் தோன்றிய வஸ்துகள் அனைத்துக்குமே அதற்குரிய இடங்கள் எப்போதோ வகுக்கப்பட்டு விட்டிருக்கின்றன. என்னவொன்று தனக்கு முன்னால் எப்போதெல்லாம் அதிர்ஷ்டம் வழி மறித்து நிற்கிறதோ அப்போது பார்த்து பலரும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள் அல்லது நெடுநேரம் உறங்கி விடுகிறார்கள் அல்லது  வேறு வழியில் சென்று விடுகிறார்கள். அவ்வளவு தான். பிறகு இப்படி ஆவதே கூட முன்னரே தீர்மானிக்கப்பட்டது தானாம். இந்த பரமபத ஆட்டத்தில் யாருக்கு தாயம் விழுந்து ஏணியில் மேலேறுகிறார்கள், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஏதேனுமொரு சர்ப்பம் தீண்டி பாதாளம் நோக்கி யார் யார் சரிகிறார்கள் என்பதெல்லாமே கூட எழுதி வைக்கப்பட்டிருக்கிறதாம். பின்னர் ஒரு நாள் அவர்களுக்காகத் தோன்றி மனம் விரும்பி கதவு நீக்கினால் சர்வ லட்சணங்களுடன் அங்கு தரித்திரம் பல்லிளித்து வரவேற்கக் காத்திருக்குமாம். கடைவீதிகளில் கல்லாப்பெட்டி மீது வயிற்றைக் கொடுத்து நெற்றியை திருநீறு மறைத்திருக்க துலங்கிய முகத்துடன் அமர்ந்திருக்கும்  வியாபாரியான செட்டியார்,  ஏட்டிலிருந்து பார்வையை உயர்த்திய கணக்கெழுதும் சாம்பசிவம்பிள்ளையிடம் பெருமை பொங்க சொல்கிறார். இல்லையென்றால் அந்தக் கடையை நடத்த முடியாமல் கை மாற்றிச் சென்ற தன் ஒன்று விட்ட அண்ணனுக்கு சென்றிருக்க வேண்டிய இந்த யோகம் ஏன் இப்படித் தனக்கு வந்து சேர வேண்டும் எனவும் புருவம் தூக்கிச் சிரிக்கிறார். அதுவும் அங்காடி தன் கைக்கு வந்த மூன்றாம் நாளிலேயே..! தன்னைப் பற்றி தனக்கு நன்கு தெரிந்ததை பிறர் சொல்லிக் கேட்பதில் சுகம் காணும் தற்பெருமைக்காரர்களை பிள்ளை நிறையவே பார்த்திருக்கிறார். முதலாளியைப் பார்த்துக்  கைத்த சிரிப்பொன்றை உதிர்த்த பின் கொட்டாவியை விழுங்கியபடியே பிள்ளை ஏட்டில் வரவெழுதக் குனிந்தார்.


வீட்டில் தன் தந்தைக்கு  தெரியாமல் எழுதிப் பதுக்கி வைத்திருக்கும் கவிதைகளும் உரைகளும் இந்த தேடுதல் வேட்டையில் எங்கேனும் அகப்பட்டு விடுமோ என்கிற தீராத கவலை அவரை வாட்டியது. பயத்தில் நாக்கு வறண்டது.  எச்சிலைக் கூட்டி விழுங்கினார். அப்படிக் கிடைத்து விட்டால் அவற்றை எவ்வித தயக்கமுமின்றி, ஒரு வார்த்தைக் கூட கேட்காமல் எரித்து விடத் தயங்காதவர் அவர். மனைவியும் குழந்தைகளும் உறங்கியபின் எழுதியவை அவை. அதில் மன்னரைப் பற்றிக் கூட அங்கதச்சுவைக் கொண்ட கவிதைகள் உள்ளனவே..! அச்சத்தில் சிறுநீர் ஆடைக்குள் சொட்டுவதை உணர்ந்தார். சொற்களின் பின்னால் செல்பவனுக்கு இவ்வுலகம் காட்டுவது இல் என ஒவ்வொரு முறையும்  தந்தை  கடிந்து சொல்லுந்தோறும் பிள்ளை தன் வழக்கமான மெளனத்திற்குள் சென்று முடங்கிக் கொள்வார். மலைத்தேனை பருகியவனுக்கல்லவா தெரியும் அந்த தித்திப்பின்  அருஞ்சுவை..! ஓராயிரம் தேனீக்கள் ஓராயிரம் மலர்களிலிருந்து கொண்டு வந்து சேர்த்தவை அல்லவா ஒரு துளியாக நாவில் விழுகிறது.! பிறகு தேனுக்கு அத்தகைய அடர்த்தி எப்படி சாத்தியம்..! அவ்வாறு எங்கிருந்தெல்லமோ திரட்டிய பேரறிவுகளும் காப்பியங்களும் பெருங்கவிதைகளும் தன் சொல்லில் ஒரு துளியாக வந்து விழுவதற்கு நிகரான செல்வம் வேறெதுவும் உண்டா என்ன? குதிரையின் கனைப்பொலி அவரை இவ்வுலகிற்கு இழுத்து வந்தது. தன் ஆகிருதியின் முன்னால் பிறரனைவரும் தன் மகள் வைத்து விளையாடும் சிறிய களிமண் பொம்மைகள் போலத் தெரிந்தனர். ஒரு கவிதையின் சில வரிகள் மனதிற்குள் திரண்டு வந்தது. செட்டியார் நாணயங்களை எண்ணிச் சரிபார்ப்பதை ஒரு கண்ணால் நோக்கியபடியே கவிதையின் முதல் ஈறடிகளை கணக்கேட்டின் பின்பக்க மூலையில் குறித்து வைத்தார். அது வளர்ந்து விருட்சமாகும். கர்வத்துடன் ஒரு புன்னகையை உதிர்த்தார். அதிலிருந்த பரவசத்தை அரசரோ செட்டியாரோ ஒரு போதும் அடைய முடியாது என்று நினைத்தார். அவர்களுடையவை தற்காலிகமானவை இது பன்னெடுங்காலம் பலரால் எடுத்துச் செல்லவிருப்பவை. பிள்ளைக்கு இப்போது துளியளவு கூட பயமில்லை. அழிக்குந்தோறும் அதை முறியடிக்கும் மிகச் சிறந்த வேறொன்றை எழுத அவரால் முடியும்.


நேற்று பேசிச் சென்றபடியே அரண்மனையிலிருந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள். அங்குள்ளவற்றை மொத்தமாக கொள்முதல் செய்யவிருக்கிறார்கள்.  செட்டி ஆனந்தத்தில் ‘முருகா..’ எனக் கூவி கோபுரத்தின் திசைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டார். கண் நிறைந்து கிடக்கும் சரக்குகளோடு சாக்குகளையும் நல்ல விலைக்கு தள்ளி விட்டு விடலாம். பிள்ளைக்கு கவிதையின் அடுத்தடுத்த அடிகள் ஊற்றிப்போல பொங்கி வந்தன. கடைச்சிப்பந்திகளை செட்டியார் விரட்டுவதை முடியாத சிரிப்புடன் பார்த்தபடியே ஏட்டின் பின்பக்கத்தைத் திருப்பினார். கடையின் பின்வாசலில் சேர்க்கப்பட்டிருந்த சாக்குகளுக்காகவே முதலாளி ஒரு ஆளைப் போட்டிருந்தார். அந்தளவுக்கு அவை தேவைப்பட்டன. அவற்றில் உணவுகளுக்கான பண்டங்களை நிறைப்பதற்கு தான் முன்னுரிகை தரப்பட்டிருந்தது.  


-2-


ஏனெனில் சென்ற வருடம் மருதயூருக்கு படை திரட்டிச் சென்ற போது,  வீரர்களுக்காக எடுத்துச் சென்ற உணவுப்பொருட்கள் வழியிலேயே தீர்த்து விட்டன. தங்கிச் செல்லும் ஊர்கள் தோறும் படைத்தளபதிகள் குறுநிலக்காரர்களிடம் ஏற்கனவே பெற்றவை போக மீண்டும் கேட்டு நிற்கும் துர்பாக்கியம் ஏற்பட்டு விட்டது. அரசர் உடனடியாகத் தலைமைச் சமையற்பொறுப்பாளனை அழைத்து ஒரு கேள்வியுமின்றி அவரது விரல்களை துண்டிக்கச் சொல்லி உத்தரவிட்டார். சிலமணி நேரங்களுக்குப் பின் அவருக்கு மணமாகாத நான்கு பெண் பிள்ளைகள் இருப்பதை அறிந்து அவர் வசித்த வீட்டை அப்படியே விட்டு விட்டு அவரது மொத்தக்குடும்பம் தன் ஆளுகைக்கு உட்படாத எல்லைக்கு சென்று விட வேண்டும் என ஆணைப் பிறப்பித்தார்.  அவன் கருமியாக இருந்து சேர்த்த வீட்டையும் விவசாய நிலங்களையும் அரசு எடுத்துக் கொண்டு விட்டது. ஆனால் அதில் பாதியை மந்திரி தனக்கென்று மாற்றிக் கொண்டு விட்டார். அதை தன் உளவாளிகள் மூலம் அறிந்த பின்னரும் அரசர் கண்டுகொள்ளாமலே விட்டிருந்தார். ஏனெனில் மந்திரி மனைவியின் மஞ்சம் அவர் துயிலும் சில சொர்க்கங்களில் ஒன்றாக இருந்தது. ஒருமுறை அவளது கூந்தல் உலர சில நிமிடங்கள் காத்திருக்கும்படி ஆகி விட்டது. அதை அவள் அவர் மீதிருக்கும் உரிமையில் தான் சொல்லி அனுப்பினாள். சில நிமிடங்களிலேயே பொறுமையற்று அந்த வீட்டைப் பூட்டச் சொல்லி விட்டு அங்கிருந்து நீங்கி விட்டார். சீற்றத்துடன் அவர் வருதைக் கண்டு ஒரு ஈ கூட அவர் முன்னே பறக்கவில்லை. பற்களைக் கடித்தபடி ஏவலாளை வயிற்றிலிருந்து கத்திக் கூப்பிட்டார். முழக்கம் போன்றிருந்தது அது. அந்த எதிரொலியில் ஓவியச் சட்டகங்களுக்குள்ளிருந்த முந்தைய தலைமுறையினரே மிரண்டிருக்கக்கூடுமென அவரது மனைவிக்குத் தோன்றியது.  சோம பானமும் சில அடிமைகளும் இப்போது அவருக்குத் தேவையென அவள் அறிவாள். சவுக்கால் தன் ஆத்திரம் வடியும் வரை அடிமைகளை மாற்றி மாற்றி விளாசுவார். உதைப்பார்.


இந்நேரம் அந்த தேவடியாள் கூந்தல் உலர்த்தியிருப்பாள், அவளை அப்படியே விட்டுவிட்டு வந்தது எவ்வளவு தவறு என்று தோன்றியது. சிகையை மொத்தமாக மழித்து விடச் சொல்ல வேண்டும். கிடந்து துவண்டு சாகட்டும். அதை அவளிடம் நேரடியாகவே கூறி வதைக்க வேண்டும் என்கிற தினவு ஏற்பட்டது. கிளம்பும் போது மதுவும் சீனத்தட்டுகளில் அவர் மிக விரும்பும் உணவுவகைகளும் அணிவகுத்து வருவதைக் கண்டார். காற்றிலேறி வந்த அவற்றின் மணத்திலேயே உமிழ்நீர் திரண்டு விட்டது. சபலம் தானே மனிதனின் முதல் எதிரி..! ஒரே ஒரு கணம் நின்றார். மாமிசத்தின் ஒரு விள்ளலை எடுக்க கை உயர்த்தினார். அதற்குள் அவருக்கு மிகப்பிடித்தமான மனதை அள்ளும் நறுமணப்புகை உடலில் நிறைவதை உணர்ந்தார். இரண்டில் ஒருபோதும் அடங்காத சம்போகம் எனும் போதையின் பக்கம் அவரது கால்கள் அன்னிச்சையாகத் திரும்பின. வினாடி கூட பொறுக்காமல்  வாசனை அழைக்கும் அந்தப்புரத்தை நோக்கிப் பாய்ந்தார். பரவசத்தில் எதிர்ப்பட்ட சேடிகளில் ஒருத்தியின் வளராத மார்பைப் பற்றி அழுத்திய பின் நகர்ந்தார். நந்தவனத்திலிருந்து பூக்கள் கொய்தபடியே சிறிய தேர் போல அசைந்து வரும் கனகாம்பிகையைப் பார்த்ததும் அவளை அப்படியே தூக்கி நீரில் எறிந்தார்.  நீரிலும் அவருக்குப் பிடித்தமான திரவியம் கலக்கப்பட்டிருப்பதை முகர்ந்ததும் சுவர்களை நடுங்க வைக்கும் அவரது பிரத்யேக வெடிச் சிரிப்புடன் அவளை நெருங்கினார்.  கனகு அவரை முத்தங்களால் கிறங்கடித்தாள். அவளுடன் ஜலக்கீரிடையில் நெடுநேரம் சல்லாபித்திருந்த போது, அதே சேடி பயந்த முகத்துடன் தொழுதபடியே வந்து பணிந்து அங்கு அடைந்த வீட்டினுள்ளிலிருந்து அந்த அம்மாள் அழுது முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற விஷயத்தைத் தயங்கியபடியே குனிந்த தலை நிமிராமல் சொன்னாள். அப்போது தான் அவளை தான் மறந்து விட்டிருந்தது உரைத்தது. அவர் முரட்டுத் தனமாக பிசைந்ததில் சேடியின் இடது பக்க மார்பு கந்தி விட்டிருந்தது. அதே வெடித்த சிரிப்புடன் மறுநொடியே அக்கதவைத் திறந்து விட சொன்னார். அந்தளவுக்கு இன்பத்தின் அலையில் மிதந்து கொண்டிருந்தார். பசி வயிற்றில் அறைந்து சத்தமிட்டது.  நிர்வாணமாக நீரிலிருந்து மேலேறும் போது கனகு அவரது கால் கெண்டைச் சதை ரோமத்தை மயிலிறகால் வருடினாள். குளிர்ந்த காற்று அவரது ஈர உடலைத் தொட்டதும் மொத்தமாகச் சிலிர்த்து மீண்டும் நீரினுள் விழுந்து அவளை பின்பக்கமாக மோகத்துடன் அணுகினார். அவர் மீண்டும் சினங்கொண்டு விடக்கூடாது என்கிற எச்சரிக்கையுணர்வே கனகத்தை புதுபுது யுக்திகளை கையாள வைத்துக் கொண்டிருந்தது.



                                                                   

                                                                               -3-


அரசர் பெரும்பாலான நேரங்களில் அப்படித் தான். முன்கோபி. தீர்க்கமாக முடிவெடுக்கும் திறனற்றவர். விஷயங்களைச் சீர்த்தூக்கிப் பார்த்து எதிர்கால நலன்களை ஆராயும் ஆற்றல் அவருக்கிருக்கவில்லை. விடலைத்தனம் எப்படியேனும் நடத்தைகளில் வெளிப்பட்டு விடும். பக்குவம் அடையாத வயதில், ஆட்சியின் நெளிவு சுளிவுகளை கற்கும் முன்னரே தந்தையின் வயோதிகத்தினால்  அரியணை ஏறியவர் அவர். ஆனால் வாளின் மீது பிரமாணம் எடுத்து முடிசூடிய பின்னர் நடைபெற்ற போர்கள் எதிலுமே தோல்வி தன் முகத்தை அல்ல சுட்டு விரலைக் கூட காட்டியதில்லை. அவரை ’புத்தி குறைந்த பராக்கிரமசாலி’ என மந்திரியின் மனைவி மெத்தையில் புரண்டபடியே சொல்வதுண்டு. தன் பற்களின் சுத்தத்தைக் காட்டுவது போலச் சிரித்து அவளை அப்படியே தரையில் கிடத்துவார். கூச்சத்தில் அவள் சிரிக்கும் சத்தம் கேட்டு அவள் வளர்க்கும் புறாக்கள் தலையணைத் திண்டுகளுக்கே வந்துவிடுதுண்டு. அவற்றைக் காட்டியபடியே அரசரின் வெட்கமின்மையை பரிகசிப்பாள். மகிழ்ச்சியில் திளைக்கும் மனிதனின் செவி மூடிக் கொண்டு விடும் போலும். கேலிகளையும் அவமதிப்புகளையும் கூட பூச்சொரிவதாகவே நினைத்துக் கொள்வான். ஆனால் மூட்டம் கூடிய சாம்பல் படர்ந்த எரிச்சலான மனநிலையில் உண்மையான புகழ்மாலைகளைக் கூட கிண்டல்களின் எதிரொலியோ என ஐயமுறுவான். அவரும் அதற்கு விதிவிலக்கல்ல.

 

முள் குத்தியவனின் பார்வை சட்டென ஆகாயத்திலிருந்து கீழிறங்கிப் பாதைகளே கண்களென ஆகும் என்பது போல இம்முறை உணவில் பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது என்கிற கடுமையான உத்தரவு முதன்மை தளபதியிடமிருந்து வந்திருந்தது. அரைசதத்திற்கும் மேற்பட்ட  சமையற்காரர்கள் அவர்களுக்குரிய ஏனங்கள் முதலியவை பரப்பி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டால் ராட்சசர்கள் விருந்துண்ண வருவதற்கான தயாரிப்போ எனத் தோன்றி விடும். ஆடுகள், கோழிகள் பட்டிகளிலிருந்து கூட்டி வரப்பட்டு மேய்ப்பர்களுடன் லாயத்திற்கு அப்பாலுள்ள இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.


சமையல் என்றில்லை, சகலரும் முடுக்கி விடப்பட்டிருந்தனர். கொல்லர்களின் பட்டறைகளில் ஆயுதங்கள் கூராக்கப்பட்டுக் கொண்டிருந்தன. கொல்லர் தெரு முழுதுமே தீ ஜுவாலையாக, நெருப்புப் பொறிகளாக காணப்பட்டன. தளவாடங்கள், சக்கரங்கள், வாட்கள், ஈட்டிகள் போன்றவை மும்மரமாகத் தயாராகிக் கொண்டிருந்தன. ஒடுங்கியும் வளைந்தும் முனை மழுங்கியும் போனவை சீர் செய்யப்பட்டன. ஏக காலத்தில் எழுந்த சம்மட்டிகளின் சத்தத்தால் அங்குள்ள மொட்டை மரத்திற்கு வழக்கமாக வந்தமரும் கிளிகளின் ஒன்றைக் கூட காணவில்லை. கொல்லனின் ஒற்றை மகள் வீட்டின் பின்புறம் வளர்த்த மிளகாய்களை பறித்து வந்து காத்திருப்பாள். அவளது பெயரை மிளற்றியபடியே தோளில் அமர்ந்து அவளது உள்ளங்கையிலிருந்து சிவந்த மிளகாய்களை தலையாட்டியபடியே தின்னும். மகள் கிளிகளுக்காக ஒவ்வொரு நாளும் பறித்தவை சில தினங்களாகக் காய்ந்து  குப்பைக்கு செல்கின்றன. அவள் சரியாக உண்பதுமில்லை. கொல்லனின் சம்மட்டி அடி அவ்வளவு வலுவாக இரும்பில் இறங்காததற்கு இதுவும் ஒரு காரணம் தான். பணிகளைச் சோதிக்க வந்த அரண்மனை வேலையாளின் உடுப்பு வியர்வையில் ஊறி நாற்றமெடுக்க ஆரம்பித்து விட்டிருந்தது. வண்ணார்களை நிந்தித்தபடியே தயாராகியிருந்த ஆயுதங்களை எண்ண ஆரம்பித்தான்.


ஏரிகளிலும் குளங்களிலும் கொடிகள், துணிகள், கூடாரத்திற்கான விரிப்புகள்,  காவலர்களின் உடைகள் போன்றவற்றை துவைத்துக் காயப்போடும் வேலை படுவேகமாக நடந்து கொண்டிருந்தது. துவைப்பது, அலசுவது, பிழிவது, காயப்போடுவது என பங்கு போட்டுப் பிரிந்து நின்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்தார்கள்.  அவையனைத்துமே சில தினங்களில் காயந்து விட வேண்டும். அந்த உடைகளை மேட்டிலிருந்து காண்பவர்களுக்குக் குளக்கரையின் பச்சைப்புல் விரிப்பிற்கு வெவ்வேறு வண்ணங்களை யாரோ தீட்டியிருக்கிறார்கள் என்று தோன்றி விடும். படைவீரர்களின் சிவந்த உடைகளின் ஈரத்தை வெயில் உறிஞ்சுவதை தொலைவிலிருந்து பார்த்தால் புற்களுக்கு தீ பிடித்து விட்டதோ என நினைக்கத் தோன்றும். காய்ந்த சட்டைகளின் கைகள் மட்டும் காற்றிற்கு எழுந்து ’வராதே..’ என்பது போன்றும் ’சீக்கிரம் வா..’ என்பதாகவும் ஒன்றுக்கொன்று முரணான பொருள் தருவது போல அசைவது வெளுக்கும் வண்ணார்களுக்கு குதூகலத்தை அளித்தது. ஏக காலத்தில் பல கைகள் எழுந்ததுமே நீருக்குள் நிற்பவர்களின் தலைகள் உயரும். அவை காற்றிற்கு எழுந்து அசையுந்தோறும் உள்ளே இருந்தபடியே பதிலுக்கு கையசைப்பார்கள். காற்று பலமாக வீசினால் சட்டையின் கைகள் அதற்கேற்ப வேகமாக ஆடி கீழே விழும். இங்கும் கை அசைப்பு முடுக்கி விடப்படும்.  பெண்கள் சிரிப்புத் தாளாமல் நீருக்குள் விழுந்து எழுந்தார்கள். சிறுமிகள்  துள்ளிக்குதிக்கபடி களித்துக் கிடந்தார்கள். பையன்கள் மீன்களைப் பிடித்துக் கொண்டு வந்திருந்த பாத்திரத்தில் பாதி நீர் நிரப்பி  எண்ணி எண்ணிப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.  அவர்களில் அம்பட்டனின் மகனும் அமர்ந்திருந்திருந்தான். தன்னுடைய அப்பா எப்போது வீட்டிற்குத் திரும்புவார் எனத் தெரியாததால் கால்போக்கில் நடந்து குளக்கரைக்கு வந்து விட்டிருந்தான்.


அரசாங்கத்தின் தலைமை மருத்துவர் வழிநடத்த வனங்களில் மூலிகைகளைத் தேடி மற்ற வைத்தியர்களும் வைத்தியம் பார்க்கும் அம்பட்டர்களும் கிளம்பிச் சென்றிருக்கின்றனர். அவர்களின் வீடுகளில் வளர்ந்திருந்த மூலிகைகள் ஏற்கனவே பறிக்கப்பட்டு உதவியாளர்களால் அரைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிறியவற்றிலிருந்து கடுமையான காயங்கள் வரைக்குமான மருந்துகள், எதிரிகளால் சேதமுற்ற உறுப்புகளின் வாதைகளைத் தணிக்கும் திரவங்கள் , புண்களை விரைந்து ஆற்றும் சாறுகள் போன்றவற்றை கிளம்புவதற்கு முந்தைய இரவில் பரிசோதிக்க வரும் படைத்தளபதிகளின் உதவியாள் ஒருவனிடம் காட்ட வேண்டும். அவனுக்கு குறைகள் தட்டுப்பட்டு விட்டதென்றால் சேதாரம் எப்படியிருக்குமென ஒருவருக்குமே தெரியாது. மேலும் இதிலுள்ள அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால் அந்த வேலையில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்குமே ஒரே ஒரு தலை தான் இருக்கிறது.


-4-

மாகாணத்தின் வாயில்களில் பாளையக்காரர்கள் கொடுத்தனுப்பிய  தானிய மூட்டைகள், காய்கறிகள், தளவாடங்கள் போன்றவற்றை ஏற்றி வந்த வண்டிகள் சிற்றாறு போல நீண்டு கிடந்தன. குதிரைகளும் வீரர்களும் அந்த சிற்றாறின் கரை வழியாக சென்று காவலாளி உரத்துச் சொன்ன எண்ணெய்ச் செட்டி வீதியைக் கடந்ததும் குதிரைகளின் வீச்சமும் செழித்தப் புற்களின் வாசமும் கலந்த விநோத மணம் நாசியைத் தாக்கிற்று. யானைகளின் கொட்டில்களிலிருந்து அவை பிளறும் சத்தங்களைக் கேட்டு குதிரைகள் விரைத்து நின்று பிறகு நடந்தன.   பரந்து விரிந்திருந்த குதிரை லாயத்தில் காப்பாளர் குதிரைகளின் வாய்க்குள் கையை விட்டு அவற்றின் ஆரோக்கியத்தை பரிசோதித்ததும்  கை நீட்டிய திக்கில் மெல்ல சென்று தேங்கி நின்றன. கனைப்புகளும் உறுமல்களும் முனகல்களும் செறுமல்களுமாக அவை ஒன்றுடன் ஒன்று உரையாடின. அவற்றில் தலைவனாக விளங்கிய  செம்பான் , புற்களை முகர்ந்து (அதன் வெப்ப மூச்சில் தூசிகளும் குப்பைகளும் பறந்தன) பற்றி இழுத்து எறிந்து மீண்டும் ஒரு கத்தையை கவ்வியதும் கழுத்தை ஆட்டி ஆமோதித்து சுவைக்கத் தொடங்கியது.  மற்றவை காத்திருந்தது போல புற்களை தன் உடம்பின் மேல் சந்தோஷத்துடன் விசிறிக் கொண்டே உண்ணத் தொடங்கின. 


உள்ளூர் ஆட்களின் பொதி வண்டிகளும் அந்த வரிசையில் கலந்து விட்டிருந்ததால் காவலாளிகளால் அவற்றைத் தனியாகப் பிரித்தறிவது சிரமமாகவே இருந்தது. அப்பொதிகளுக்கான வரிகளை செலுத்துமிடத்தில் பாக்கித் தரப்பட்ட   நாணயங்களில் சில செல்லாதவைகளாக இருந்ததாலும் மீதித் தொகையை தர தாமதித்தாலும் உண்டான இரைச்சல்கள் கடைவீதிக் களேபரங்களை நினைவூட்டின. அவர்கள் விரைவாகச் சென்று தங்கள் இல்லங்களின் பங்களிப்பாக அவர்கள் மேற்கொண்டிருக்கும் தொழிலுக்கும் வருவாய்க்குமேற்ப கொண்டு வந்து தர வேண்டும் என்கிற உத்தரவு சில தினங்களுக்கு முன்னர் தான் ஒரு தெருவும் மிச்சமில்லாமல் ஒலித்திருந்தது.


ஒவ்வொரு பாளையத்தின் காரியதரிசியிடம் கொடுத்தனுப்பிய ஓலையும் கப்பமும் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட வேறொரு வழியில் அரண்மனைக்குச் சென்று சேர்ந்து விட்டன. முத்திரைகள் அளித்து ஓலையில் கணக்கெழுதிக் கொடுத்து விட்டால் அந்த உறைந்திருந்த  ஆற்றில் சிறு சலனமாவாது ஏற்படும். காளைகள் நுகத்தடியின் சுமை தாளாது கால் மாற்றி நின்று மூத்திரம் பொய்தன. ஈக்கள் அவற்றின் மூக்கிலிருந்து நேராக படைவீரனொருவனின் வாய்க்குள் சென்று சுற்றிப்பார்த்து விட்டுத் திரும்பி வந்தது. விளைச்சலுக்கு இத்தனை மூட்டைகள் என அவர்கள் கொடுத்தக் கணக்கில் குளறுபடிகள் உள்ளதோ என்கிற ஐயம் தான் வண்டிகளை நிதானமாக ஆராய வைத்தன. இத்தனைக்கும் ஏக காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட அரண்மனை சேகவர்கள்  குளவி போல வண்டிகளை சுற்றி வந்து சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலைகள் தீரத்தீர பெருகிக் கொண்டே இருப்பதாகப் பட்டது. இன்றிலிருந்து எண்ணி மூன்றாம் நாள் படை கிளம்பி விடும்.


குதிரைகள் புற்களை மேயும் ஆவேசத்தைக் கண்டதும்,  குடல்களுக்குள் குமிழ்கள் நகர்ந்து வெடிக்கும் ஓசை கேட்குமளவிற்கு வீரர்களுக்கு பசி எடுத்தது. லாயக்காப்பாளன் அடையாள வில்லைகளை வழங்கி இடத்தை சுட்டி போகச் சொன்னான். பெரிய சத்திரத்தில் விழாக்கால களேபரத்துடன் பந்தி காலியாகிக் கொண்டிருப்பது தெரிந்தது. வெவ்வேறு பாளையங்களிலிருந்து வந்தவர்கள் முகப்பரிச்சயத்துக்குப் பின் சகஜமாகப் பேசத் தொடங்கி விட்டிருந்தனர். அபாரமான சுவையுடைய விருந்து போடப்பட்டிருந்தது. தலைமை சமையற்காரர் குறுக்கும் நெடுக்குமான நடந்தபடியே இருந்தார். இலைகளில் வெறுங்கையுடன் எவரும் அமர்ந்திருக்கக்கூடாது. இன்னும் இரு தினங்கள் உள்ளன என்றபோதும் அவர்கள் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்துமிருந்தனர். இடப்பற்றாக்குறை ஏற்பட்டால் எவர் வீட்டுத் திண்ணைகளிலும் தலை சாய்த்துக் கொள்ள முடியும். போதியளவிற்கு பரிசோதித்தப் பின்பே அனுமதித்திருப்பதால் அச்சவுணர்வு எவருக்குமே ஏற்படவில்லை. ஒரு சமயத்தில் சில வீரர்களுக்கு மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு வந்திருக்கிறோமா என்கிற ஐயம் ஏற்பட்டு விட்டிருந்தது.


புதிய இடத்தில் உறக்கம் வராது புரண்டவன் கண்களை மூடியபடியே ‘எதுக்கு படையெடுத்துப் போறோம்னு தெரியுமா?’ என்று கேட்டான்.


அது காற்றிடம் கேட்கப்பட்டதோ என்பது போல மெளனம். ஏனெனில் பதில் யாருக்கும் தெரியவில்லை.


பெரிய கொட்டாவி சத்தத்திற்கு நடுவே ஒருவன் ‘இதுவரைக்கும் நமக்கு யாராவது சொல்லி இருக்காங்களா? ராஜா உத்தரவு போடுவாரு. குதிரைக்கு தீவனம் போட்டுக்கிட்டு இருப்பேன். அரண்மனை ஆளுக திரண்டு நிப்பாங்க. ஒன்னு ரெண்டு நாள்ல அவரு சொல்ற இடத்துக்கு அவர் கூட போவோம். தளபதி ‘தாக்கு’னு சொன்னா வேல் கம்போடு முன்னால ஓடுவோம். அவ்வளவு தான். ஜெயிச்சு வந்த பிறகு தான் ஏன் எதுக்குனு காரணம் தெரியும். அதுவும் உண்மையா பொய்யானு யாருகிட்ட கேட்கிறது? எனக் கேள்வி எழுப்பினான்.


அதற்கு இன்னொரு ஆசாமி ‘உரிமைப் பிரச்சினை, கெளரவப் பிரச்சினை ஏதாவதா தான் இருக்கும். இல்லைனா இவ்ளோ ஆளுகள வரவழைச்சிருப்பாங்களா? ஒரு தடவை பேச்சுவாக்குல எங்க ராஜாவோட மூக்கை கிண்டல் பண்ணிட்டாங்கனு அவனுகள எதுத்து படை கொண்டு போயீ மண்டி போட வைச்சோம். பாவம் புதுசா கண்ணாலம் ஆன பையன் ஒருத்தன் போற வழியிலேயே தவறி பாறையில விழுந்து மண்டை பிளந்து போய் சேர்ந்துட்டான். பத்து பதினைஞ்சு பேருக்கு கையும் காலும் ஊனம். அந்தப் பக்கமும் இழப்பு இருந்திருக்கும். கடைசியில பார்த்தா ஒரு நாள் அந்த மூக்கனுக்குத் தான் எங்க ராஜாவோட தங்கச்சியை கட்டிக் கொடுத்தாங்க.’


சிரிப்பு வந்தும் பலரும் சிரிப்பை அடக்குவது, சீறும் நீர் போல எழுந்த ஓசையால் தெரிந்தது. ‘யாரூ எவருன்னே தெரியாத ஒருத்தர் கூட பக்கத்துல படுத்துட்டு நாயம் பேசுவேன், வெத்திலை வாங்கிப் போடுவேன்னு போன வாரம் யாராவது சொல்லியிருந்தா கூட நம்பீருக்க மாட்டேன்.” என்றது புதிய குரலொன்று.


வயிறு புடைக்கச் சாப்பிட்டிருந்தவன் ‘ஏம்ப்பா.. தொணதொணன்னு பேசீட்டே கிடக்கறீங்க.. சித்த தூங்க வுடுங்கப்பா..’ என்ற பின் தன் மேல் கால் போட்டிருந்தவனை எட்டி உதைத்து நன்றாக நீட்டி படுத்தான்.


‘இதுல எவ்வளவு பேர் திரும்பி வரப்போறோம். வந்த மாதிரியே போகப்போறோம் ஏதாவது உத்திரவாதம் இருக்குதாண்ணா.. அதான் பேசியாவது மனசை ஆத்திக்கலாம்னு..’ புதிதாக படையில் சேர்ந்தவன் புலம்பல் போன சொன்னான்.


“என்ன கொடுமைனா எதிருல ஈட்டியோட வர்றவனை நமக்கு தெரியாது. அவனென்ன பரம்பரை பகையாளியா? அவனைக் கொல்ல வேலோடு ஓடுற நம்மையும் அவனுக்கு தெரியாது. மேலே இருக்கறவங்க எடுக்கற முடிவுக்காகவே பொறந்தவங்க நாம..” சலிப்புடன் மத்திம வயதுடையவன் பேசியபடியே புரண்டு படுத்தான்.


அது ஏற்கனவே பலருக்கும் நன்கு தெரிந்த உண்மை தான். என்ற போதும் அது அப்பட்டமாகச் சொல்லப்பட்டதன் அதிர்ச்சியை அந்த இருளிலும் பலரிடமும் உணர முடிந்தது.  


அந்த சத்திரத்தில் மூன்று அரசாங்க பணியாளர்கள் உடன் படுத்திருந்தனர். விடியும் முன்பே விஷயம் அரசர் காதுக்கு சென்றது. மறுநாள் காலை தண்டோரா சத்தம் கேட்டு பலரும் எழுந்தனர். ”வெற்றியுடன் திரும்பி வந்தால் அதற்குரிய பரிசுகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்” என அறிவித்தபடியே தண்டோராக்காரன் நகர்ந்து கொண்டிருந்தான். அது நிலங்களாகவோ ஆபரணங்களாகவோ பதவியாகவோ இருக்கக்கூடும். நேற்றிரவு அவர்கள் பேச்சில் படிந்திருந்த சோர்வு போன இடம் தெரியவில்லை. ஒவ்வொருவனும் எவ்வளவு பேரை கொல்லவிருக்கிறேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் அளவிற்கு ஆசை தூண்டப்பட்டு விட்டிருந்தது.


 



-5-

 

தாயாரின் ஆசி வாங்கியப் பின் அரசர் நெடுநேரம் பூஜையிலிருந்தார். அதற்கு முன் அந்திவேளையில் அமைச்சர்களுடன் கிளம்பி ஒவ்வொரு படையணிகளையும் பார்த்ததும்  சம்பந்தப்பட்ட தளபதிகளிடம் சில வினாக்களையும் சந்தேகங்களையும் கேட்டுத் தெளிந்தார். தன்னைக் கண்டதுமே பரவத்தில் விரியும் வீரர்களின் முகங்களைப் பார்த்து அருகில் அழைத்து சம்பிரதாயமாக விசாரித்தார். அதுவே அந்த ஆட்களை நிலத்தில் கால் பாவாமல் நடக்கச் செய்தது. தேஜஸ் மிகுந்த அவரது முகத்தில் மாலை நேர மஞ்சள் வெளிச்சம் கூடுதல் சோபையை அளித்திருந்தது. திடீரென்று எழுந்த அவரது கீர்த்தியைப் பறைசாற்றும் முழக்கங்களால் மரத்திலிருந்த பட்சிகள் விண்ணேகி மறைந்தன. அணிகளுக்கிடையில் வலுவானக் கட்டமைப்பைக் கண்டதும் அரசரிடமிருந்து திருப்தியான புன்னகை மலர்ந்தது. அதைப் பார்த்த  பிறகு தான் சேனாதிபதிகளுக்கு அதுவரை தொலைவில் பதுங்கி இருந்த அவரகளது உயிர் திரும்பவும் அவர்களிடத்தில் வந்து சேர்ந்தது. குலசேகரனை வீழ்த்த இந்தளவுக்கே தேவையேயில்லை என்பது அரசருக்கே தெரியும். இது மற்றவரகளுக்கு விடுக்கட்டும் ஒரு எச்சரிக்கை மணி. அபாயச் சங்கு. அங்கு வெற்றிக்கொடி நாட்டிய பின் சுற்றிலுமிருக்கும் மாகாணங்களையும் வென்று வரும் ரகசியத் திட்டமும் அரசருக்கு உள்ளது. இதை முதன்மை தளவாய் தவிர பிறரெவரும் அறிய மாட்டர்கள்.   


போருக்கான முஸ்தீபுகள் தொடங்கியவுடனேயே குலசேகரன் அதை எப்படியோ மோப்பம் பிடித்து தூதுவனை அனுப்பி இருந்தான். முதல் தடவை அவன் வந்த போது பார்க்காமலேயே அமைச்சரிடம் கூறி திரும்பி போகச் செய்தார். பின்னும் வேறொருவன் –  அன்று குலசேகரனிடம் பேசிக் கொண்டிருந்த போது அருகிலிருந்த அவனது மெய்காப்பாளன் – வந்து சேர்ந்தேன். உள்ளே அழைத்து உட்கார இருக்கை தராமல் முகம் நோக்கியும் பேசாமல் விருந்தினனுக்கும் தூதுவனுக்கும் அளிக்கப்படும் எவ்வித மரியாதையையும் கொடுக்காமல் அவமதித்து கிளம்ப வைத்தார். அவமானம் என்றால் என்னவென்று சேகரன் உணரட்டும். அதற்கு அவன் தன் தேசத்தையே அல்லவா விலையாகத் தரவிருக்கிறான். அவனுக்கு தன் சொந்த சகோதரர்களுடன் மூண்டிருக்கும் வாரிசுச் சண்டையில் விஷயங்கள் சுலபமாக முடியப்போகின்றன.


பிரம்ம முகூர்தத்தில் எழுந்து நீராடி ஆலயத்திற்கு சென்று வணங்கி வந்தார். பசும்பால் மட்டும் இரு குவளைகள் குடித்தப் பின் அவரது குதிரையை கொண்டு வரக் கட்டளையிட்டார். அது ஏற்கனவே தயாராக நின்று இருந்தது. அரசர் அரண்மனையின் மேலிருந்து பார்த்த போது செந்நிற ஆறு கடுங்குளிரில் உறைந்திருப்பது போல படைகள் தேங்கி நிற்பது தெரிந்தது. 37 வைத்தியர்களும் அவர்களது 73 சிஷ்யர்களும் மருத்துகளும் 61 சமையற்காரர்களும் 86 உதவியாளர்களும் காலாட்படைக்கு பின் நிற்கும் வண்டிகளில் அமர்ந்திருந்தனர். சங்கு எப்போதும் முழங்குமென்ற பந்தயங்கள் அவர்களுக்குள் நடந்து கொண்டிருந்தன. அவர்களுக்கும் அப்பால் கூண்டு வண்டிகளில் ஏற்றப்பட்டிருந்த ஐந்தறவு மாக்களின் சத்தம் காதடைக்கச் செய்தது.


விண் பிளக்கும் கோஷத்தில் அரசர் படையணிகளைக் கடந்து சென்று கொண்டிருந்தார். கூடாரத்திலிருந்து அவரது மனைவியும்  பிள்ளைகளும் வெளியே வந்து நிறைந்த கண்களுடன் நிற்பதைக் கண்டார். கோவிலிருந்து பூசை செய்யப்பட்டு கொணர்ந்த மலர்மாலைகளை பூசகர் அணிவித்ததும் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். அவருக்கு பாடங்கள் கற்பித்த ஆசிரியர் அவர். தன் மாணவனை நெஞ்சோடு அணைத்து வாழ்த்துப் பண் பாடி நகர்ந்தார். ஜோதிடரின் கண் அசைவுக்குப் பின் வனச்சாதியினர் மேளம் முழங்க ஆடியபடியே கொழுத்த எருமையொன்றை இழுத்து வந்தனர். ரத்தப்பலிக்கு பின்னரே படை கிளம்ப வேண்டும். அது அவர்களது கையில் பிடித்திருக்கும் ஆயுதத்தைக் கண்டு முரண்டுப்பிடித்து நகர மறுத்து அங்கேயே நிற்கப் போராடியது. தரையோடு கால்கள் அழுந்த இழுத்து வந்தான். அதற்கு மாலை அணிவித்து பூசைகள் தொடங்கின. அது ஒவ்வொரு முறை கண்களை மூடித்திறக்குந்தோறும் அந்த பெரும்படை மறைந்து தோன்றியது.


வானெங்கும் சிறு மேகம் கூட இல்லை. நீலக் கடலாக விரிந்து கிடந்தது. அந்த நீலத்திற்குள் மஞ்சள் பொட்டு ஒன்று அடிவானத்திலிருந்து மிதந்து வருவது போல தளவாய்க்குத் தோன்றியது. அரசரிடம் பணிந்து விஷயத்தைச் சொன்னார். அது ஒரு உடையின் நிறமாகத் துலங்கி வந்தது. அரசர் கை தூக்கியதும் பூசைகள் நிறுத்தப்பட்டன. அவனுக்குப் பின்னும் சிலர் வந்து கொண்டிருப்பதும் கண்ணில் பட்டது. வீரர்கள் தயாராகினர்.  புரவியில் வெள்ளைக் கொடி ஏந்தியபடி ஒருவன் முன்னேறிவதைக் கண்டு அரசர் திரும்பிப் பார்த்தார். வீரர்களின் கைகள் தணிந்தன.


குதிரையை மிக முன்னாலேயே கட்டுறுத்தி நிறுத்தி கையில் ஏந்தப்பட்ட வெண்கொடியுடன் அவரைத் தொழுவது போல குனிந்தபடியே வந்து நின்றான். அதுவரை பார்த்தக் காட்சிகள் அளித்த மன எழுச்சியில் தந்த பூரிப்புடனிருந்த அரசர் அவனை தன்னிடம் அழைத்தார். கையில் சுருட்டி வைத்திருந்த மடலை அவரிடம் தாழ்ந்து அளித்து விட்டு அவருக்கு முதுகு காட்டாமல் அப்படியே பின்னால் நடந்து ஓரமாக நின்றான். அமைச்சரிடம் தந்து வாசிக்கச் சொல்லலாமா என ஒரு கணம் யோசனை ஓடியது. அடுத்த நொடியே முடிவு மாறியது.


மடலை விரித்ததுமே தன்னைப் பற்றிய பூமாலைகளால் தொடக்க வரிகள் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.  அரசரை நன்கு அறிந்திருந்த ஒருவனின் கைங்கரியம் அது. எதைச் சொன்னால் அவர் உளம் பூரிப்பார் எதை எடுத்து இயம்பினால் அருளாளராக மாறுவார் எந்தப் பகுதியைத் தொட்டார் குளிர்ந்து போவார் போன்றவற்றை தெரிந்து கொண்டு அவ்வரிகள் சமைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே நிறைந்த மனதுடனிருந்தவரை அது மேலும் கனியச் செய்தது. பிறகு நேரடியாக குலசேகரன் விஷயத்திற்கு வந்திருந்தான்.


“நம் தந்தையர் இருவரும் எத்துணை காலத்து நண்பர்கள் என்பதை இப்புவி அறியும். சிறுவனாக அங்கு வந்திருந்த சமயங்களிளெள்ளாம் உமது தாயார் என்னை தன் வயிற்றுப் பிள்ளையாகவே சீராட்டியிருப்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு தாய் பெறாத பிள்ளைகள் இங்ஙனமிருக்க என் உதிர வழி உடன்பிறப்புகள் அரியணை வேண்டி சதிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அறியாதது அல்ல. உடன் பிறந்த அண்ணாவைப் போல கருதும் உம்மை நான் மதிப்புக் குறைவாக நடத்துவேனா? உண்மையைக் கூற அனுப்பிய ரத்னசாமியின் வாய் திறக்கவாவது நீங்கள் அனுமதித்திருக்கலாம் அண்ணா. (இந்த இடத்தில் அரசர் தன்னையே நொந்து கொண்டார், ’என்னவென்று கேட்டிருக்கலாமோ..!’)

அன்று வயிற்று உபாதையில் தவித்துக் கொண்டிருந்தேன். வைத்தியரின் கஷாயங்கள் பலன் அளித்திருக்கவில்லை. அதனால் தான் நீங்கள் சுவாரஸ்யமாக நகைச்சுவை ததும்பப் பேசிக் கொண்டிருந்த போது இரு தடவைகள் எழுந்து சென்று விட்டேன். நீங்கள் அதில் காயமுற்றீர்கள் என்பதே தாமதமாகத் தான் தெரியும் அண்ணா. நீங்கள் மிகவும் ஆழமானவர். கொஞ்சம் என் முகத்தை ஊன்றி கவனித்திருந்தால் அதைக் கண்டுபிடித்திருக்கலாம். பேச்சின் புரவியில் ஏறிவிட்டால் உங்களுக்குத் தான் மற்றவை துச்சமாகி விடுமே..! சில தினங்களாகத் தான் வயிற்றுப் போக்கு நின்றிருக்கிறது. கொஞ்சம் தேறி வருகிறேன். ஆகவே தம்பியின் வேண்டுகோளை ஏற்று முடிவைக் கைவிடும்படி கோருகிறேன். என் அண்ணா ஒரு பகையாளியாக எல்லைக்குள் நுழைவதை கற்பனையிலும் காண வலுவற்றவனாக இருக்கிறேன்.”

பிறகு சம்பிரதாயமாக சொற்களுடன் மடல் முடிந்தது.

அரசர் திகைத்து நின்றார். இது பற்றி பிறரிடம் ஆலோசிப்பதே தவறெனப்பட்டது. இருப்பினும் யோசிப்பது போல சில நிமிடங்கள் நின்றார். பிறகு முதன்மை தளவாயை அழைத்து ’படையைத் திருப்புங்கள்..’ என்றார். இப்போது அரசரை விட பல மடங்கு அதிகமாக தளவாய் திகைத்து நின்றார். ‘பாளையக்காரர்களை கிளம்பச் சொல்லுங்கள். நம் வீரர்களை இல்லத்திற்கு போக உத்தரவிட்டு விடுங்கள். மற்றவற்றை அரண்மனைக்கு வாருஙகள். பேசிக் கொள்வோம்..; என்ற பின் குதிரையின் விலாவில் சப்பாத்துகளால் இடித்தார். அது காற்றைக் கிழித்து பறக்கத் தொடங்கியது.


படைவீரன் ஒருவனை அழைத்து தகவலைக் கூறி பிறருக்கு தெரிவித்து விட்டு வரப் பணித்த போது அவன் முகத்தில் மகிழ்ச்சியுடன் கேலி கலந்த சிரிப்பும் வெளிப்பட்டதோ என ஐயமுற்றுத் திரும்பிக் கொண்டார். அரசரின் வருகைக்காக சூரியோதயத்திலிருந்தே படைவீரர்கள் காத்திருந்தனர். அவர்களில் குதிரைப்படையினர் முன்னும் பின்னும் ஒன்றிரண்டிகள் நகர்ந்தபடி சலிப்பை தற்காலிகமாக ஒத்தி வைக்க முயன்றனர். செய்தி பேரலையென கூட்டத்திற்குள் பரவிற்று. ஆயினும் அதை நம்ப மறுத்தவர்கள் தான் அதிகமும் இருந்தனர். அரசரின் புரவி அரண்மனை நோக்கிச் செல்வதைக் கண்ட பின் உண்மையோ எனக் குழம்பினர். பரந்து விரிந்து நின்றிருக்கும் அவ்வளவும் ஒன்றுமற்று கரைய வேண்டும் என்பதை அவர்களால் எளிதில் ஏற்கமுடியவில்லை. தளபதியின் வலது கை போலிருப்பவன் இன்னும் சிலரை அழைத்துக் கொண்டு வரிசைகளை குறுக்கறுத்தபடி பாய்ந்து வந்தான். தகவல் ஊர்ஜிதம் ஆயிற்று. கூத்துப் பார்த்து கலைந்து செல்வது போல ஆட்கள் சலசலவெனப் பேசியபடி நிற்பதா செல்வதா என தடுமாறிக் கொண்டிருந்தனர்.


விஷயத்திற்கு அதற்குள் கை கால்கள் முளைத்து வெவ்வேறு அர்த்தங்களில் திரிக்கப்பட்டு விட்டிருந்தது. இரவுணவு ஒத்துக் கொள்ளாமல் அரசர் வாந்தி எடுத்து மயங்கியது தான் காரணம் என ஒருவன் கூவிக் கொண்டிருந்தான். இன்னொருவன் அரசருக்கு தாயார் கவலைக்கிடமான செய்தி எட்டியதால் தான் நிலைமை இப்படி ஆயிற்று என்றான். பிறகு மெய்யான காரணம் முன் வரிசையிலிருந்தவர்கள் வந்து கூறிய பிறகு தான் அவர்களுக்கு தெரியவந்தது.


கேட்டதுமே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. அது ஒரு தொற்று வியாதி ஆயிற்று. சிரிப்பின் அலை பரவி அடங்கிற்று. இரு நாழிகைகளாக நின்றபடியேயிருந்தவர்கள் சற்று அமர்ந்து கால் நீட்டிக் கொண்டனர். அதிலொருவன் ஊளை போல ஒலி எழுப்பிக் கொட்டாவி விட்டான். அதுவும் கூட தொற்று வியாதி தானே..! ஆளாளுக்கு  வாய் பிளக்க ஆரம்பித்தனர்.


சிறுநீர் முட்டிக் கொண்டிருந்த ஒருவன் ஈட்டியை மற்றவனிடன் தந்து விட்டு ஓரமாகச் சென்றான். அவனும் எவ்வளவு நேரம் தான் பொறுத்திருப்பான். அவனைப் பார்த்ததும் தான் பலருக்கும் ஞாபகம் வந்தது. அங்கங்கேயே ஈட்டிகளையும் வேல்கம்புகளையும் வாள்களையும் போட்டு விட்டு சிறுநீர் கழிக்கக் கிளம்பினர்.


பின்னால் திரும்பி பார்த்தால் ஆயுதங்கள் அனாதைகளாகக் கிடந்தன. வீரர்களில் கால் வாசிப் பேர் தான் அந்த பரந்த இடத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் சமையல் ஆள் ஒருவன் உணவுக்கானப் பண்டங்கள் நிரம்பிய வண்டிகளை அமைச்சர் தன் வீட்டிற்கு ஓட்டிச் சென்று விட்டார் என புலம்பியபடியே சென்று கொண்டிருந்தான்.


ஒன்றுக்குப் போகும் போது அடக்கி வைக்கப்பட்ட சிறுநீர் பிரியும் இன்பத்தில் சிப்பாயொருவன் முகமுயர்த்தி வான் நோக்கினான். நீல வானத்தில் இப்போது சில சிறிய வெண்பொதிகள் நகர்ந்து கொண்டிருந்தன.


பார்வையைக் கீழிறக்கிய போது கழுத்தில் மாலை சூடப்பட்ட எருமையின் கொம்பில் காகம் ஒன்று அரசனைப் போல அமர்ந்து ஆடி அசைந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டான்.


அவனுக்குச் சிரிப்பு வந்தது. அதைப் பார்த்ததும் எதற்கென்று தெரியாமல்  தூண்டப்பட்டது போல அவர்களைக் கடந்து சென்றவர்களும் நின்று சிரிக்க ஆரம்பித்தனர். அந்த இடமே சிரிப்பின் கோலாகலமாக மாறியது.

 

(லியோ டால்ஸ்டாய்-க்கு அன்புடன்…)

ஓவியங்கள் நன்றி ; ஆதிமூலம். (இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை)

இச்சிறுகதை முற்றிலும் புனைவாகும். இது ஆசிரியரின்  கற்பனையேயன்றி வேறில்லை.


Tuesday, December 3, 2024

பந்தயம்

 

பந்தயம்


நீரில் மிதந்து அசைந்தாடிக் கொண்டிருந்த பிம்பங்களைச் சிதறடித்தபடி மதில் மேலிருந்து ரயில்வண்டிகளின் வரிசையில் பையன்கள் குதித்த சத்தம், பாறைகளுக்கு வெடி வைத்த ஒலியையும் மிஞ்சியிருந்தது. குதித்த பனிரெண்டு பேரில் ஐவரை மட்டும் காணோம். மீதிப்பேர் வெவ்வேறு இடங்களிலிருந்து பாம்புகள் போல தலைநீட்டி தங்களை நொந்தபடியே மெதுவாகப் பக்கவாட்டில் கரைஒதுங்கினர். வெளியே தலையைக் காட்டக்கூடாது . நீரினடியிலே சென்று மறுகரையை அடைய வேண்டும். அப்படி தான் பேசி முடிவு செய்யப்பட்டிருந்தது. சற்று நீளமான தெப்பக்குளம் அது. வெகுநேரமாக உள்ளே எருமை போலக் கிடந்தவர்களை விஷயத்தைச் சொல்லி சற்றுமுன் கரையேறச் செய்திருந்தனர். படிக்கட்டுகளில் இருந்தவர்கள் அதுவரைக் காணாமலிருந்த மற்ற ஐவரும் நீரினடியில் முன்னேறுவதைக் கண்டு கைகொட்டி உற்சாகக் கூக்குரலிட்டனர். ஓரங்களில் அமர்ந்து  தவளைகள் போல தத்தியபடி புதிதாக நீச்சல் பழக வந்தவர்கள் பயந்து போய் நீர் சூழ்ந்த சிவந்த கண்களுடன் எழுந்து மேலே வந்தனர். ஐயப்பன் தான் முதலில் வருவான் என்று குளப்படிக்கட்டில் பந்தயம் நடந்தது. வெயிலின் ஒளியால் பச்சை வர்ணத்திலிருந்தத் தெப்பக்குளத்து நீரில் சூரியன் பந்து பந்தாகச் சிதறி மின்னித் தளும்பியதைப் பார்த்ததும் குளமே ஒரு கிண்ணமாக மாறி விட்டது போலிருந்தது. மேலிருந்த மரத்தின் நிழல் விழுந்த படிக்கட்டுகளில் திடீரென்று ஊளை எழுந்தது. அங்கு அமர்ந்திருந்த ராதாகிருஷ்ணனின் கூட்டாளிகளின் முகங்கள் பிரகாசமாயிற்று. அப்படியானால் முருகேசனின் கதி என்ன?






தெப்பக்குளத்திற்கு மேலே சிரைத்துக் கொண்டிருந்த நாவிதர்கள், பாதி மழித்த முகங்களை அப்படியே விட்டு விட்டு கலங்கிக் குழம்பிப் போயிருந்த நீரில் நின்று கொண்டிருந்தவர்களை புருவத்தால் வினவினர். வாய் திறந்தால் அவர்கள் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலையின் சாறு ஒழுகிச் சட்டையை செந்நிறம் ஆக்கிவிடும். நீருக்குள் யார் முந்துகிறார்கள் என அங்கிருந்த ஒருவருக்குமே சரியாக தெரியவில்லை. அவர்களுக்கு நிகராகத் தரையில் ஓடிச் சென்றும் புலப்படவில்லை. சங்கொலி போல ஒரு முழக்கம் மறுபக்கம் கேட்டது. முருகேசனின் கும்பல் கைலியை தலைக்கு மேலே தூக்கிச் சுழற்றினர். யாரும் எதிர்பாராதது அது. முருகேசன் முதல் ஆளாக கரையைத் தொட்டு மேலே வந்தான். அதற்கு சில வினாடிகளுக்குப் பின் ஐயப்பன் மேலேறி தன்னருகில் வெற்றிக் களிப்பில் குதித்துக் கொண்டிருந்தவர்களை பார்க்காதவன் போல தன் சகாக்களிடன் சென்றான். கேலிச் சிரிப்பை தாங்கமுடியாமல் திரும்பி வந்து  தன் கால்களை யாரோ பிடித்து இழுத்ததாக ஊளையிட்டுக் கொண்டிருந்தவர்களை நோக்கி எகிறியபடியே போனான். அவனிடமிருந்து வடிந்து அவனைச் சுற்றிலும் தேங்கிய தண்ணீர், இரை விழுங்கிய பெருவயிற்றுப் பாம்பு போல மெல்ல நகர்ந்தது. ஆனால் அதற்கு எந்த பலனும் இருக்கவில்லை. ஏனெனில் உள்ளே அப்படி யாரும் இருந்திருக்கவில்லை. அங்கு கால்நீட்டி அமர்ந்திருந்த மனோகரண்ணன் நினைவு வந்தவராக ’ராதா எங்கடா?’ என அதிர்ச்சியுடன் எழ முயன்றார். ஆனால் முடியவில்லை. சொல்லி வைத்தாற் போல பலரது தலைகளிலும் குளத்தை நோக்கித் திரும்பின. இன்னும் ராதாவைக் காணோம். நான்கைந்துப் பொந்துகளும் அடியில் சேறும் நிரம்பியிருக்கும் தெப்பக்குளத்தைத் தூர்வாரிச் சரி செய்வதற்குள் வானம் பெயர்த்து பொழிந்தது போல கொட்டிய மழை சுற்றுவட்ட ஊர்களின் கம்மாய்கள், குளங்கள், கிணறுகளில் கை நீட்டி தொடும் அளவுக்கு நீரைக் கொண்டு வந்து நிறைத்திருந்தது. எனவே அவன் உள்ளே எங்கேனும் அகப்பட்டிருப்பானோ? அவர் பதற்றத்துடன் பிறரை கூப்பிட்டு விசாரித்துக் கொண்டிருந்தார். தேவையில்லாமல் சின்ன பையன்கள் சமாச்சாரத்தில் தலையிட்டு விட்டோமோ என்கிற கவலை அவரை நிம்மதியிழக்கச் செய்திருந்தது. கெட்ட வார்த்தைச் சொல்லித் திட்டிச் சுற்றி நின்றவர்களைத்  விரட்டினார். அவன் பெயரை ஏலம் விடுவது போல ஆளாளுக்கு  கூவியபடியே அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தவர்களில் சிலர் அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்கிற பயத்தில்  நீரைக் கத்தியால் கிழித்தது போல குதித்து உள்ளே சென்றார்கள். யாரும் எதிர்பாராதது போல ராதாகிருஷ்ணன் வேறிடத்தில் முளைத்துச் சோர்வுடன் கரையேறினான். பலரும் ஆசுவாசத்துடன் பெருமூச்சொறிந்தனர். 

தண்ணீர் பாம்பு தக்கையாக மிதந்து செல்வதை பார்த்தபடியே குமார் குதித்தவர்கள் எல்லோரும் மேலேறி விட்டார்களா எனத் தலைகளை எண்ணிக் கணக்கைச் சரிபார்த்தான். உள்ளே ஒருவருமே இல்லை என்பது தீர்மானமாயிற்று. போட்டி முன்னறிவிப்பின்படிசோடாக்காரமனோகரன் தன் பாரியான உடம்பை மெதுவாகத் தூக்கி எழுந்து நின்றார். அவருக்குக் கால்கள் மரத்து விட்டிருந்தன. யாரையோ காலில் போட்டு மிதிக்கும் பாவனையில்தொம் தொம்..’மென தரையில் அடித்தார். நடந்து பார்த்தார். தேவலாமென்றிருந்தது. அவர் தான் கோவிலின் பிரசாத ஸ்டாலை லீஸுக்கு எடுத்திருந்தார். மதியம் வேலையாளை மாற்றி விட்டு கணக்கையும் பார்த்துச் செல்வது வழக்கம். அப்போது தெப்பக்குளத்தில் ஓயாத சத்தமும் வாக்குவாதமுமாக முழங்குவதைக்  கேட்டார். ரகளைக்கான முஸ்தீபுகள் கனன்று கொண்டிருந்தன. அங்கிருந்த சகலரும் தெரிந்த வீட்டுப் பையன்கள் தான். எனவே மத்தியஸ்தம் செய்து வைக்க இறங்கி வந்தார். அவர் முன்னால் தான் விதிமுறைகளும் தண்டனைகளும் வகுக்கப்பட்டன. சிலவற்றை வேண்டாமெனச் சொல்லியும் பையன்கள் பிடிவாதமாக இருந்தனர். ஒப்புக் கொண்டார். ஏனெனில் வீட்டிலேயே அவர் அப்படித் தான். ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லிப் பார்ப்பார். பிறகு அவர்கள் போக்கிலேயே விட்டு விடுவார்.


இப்போது போட்டி முடிந்து போன நிலையில் முடிவை அறிவித்தார்.  முருகேசனையும் அவனது ஏழு ஆட்களையும் ராதா, ஐயப்பனின்  சோட்டாளிகள் தோளில் தூக்கியபடி குளத்தைச் சுற்றி வர வேண்டும். இன்னும் ஒரு வார காலத்திற்கு அவ்விருவரும் அவர்கள் சார்பாகக் கலந்து கொண்டவர்களும் மதில் மேலிருந்தோ இரு நூற்றாண்டுகளாக அமர்ந்திருக்கும் நந்தியின் தலை மீதிருந்தோ குதிக்கக் கூடாது. இன்றைக்கும் நாளைக்குமான செலவுகளை இருவருமே பகிர்ந்து கொண்டு வென்றவர்கள் என்ன கேட்டாலும் வாங்கித் தர வேண்டும். மிக முக்கியமான ஒன்றை அவர் மறந்தது போல நடித்தார். பாவனை செய்தார். உண்மையில் அவர் முருகேசன் வாகை சூடுவான் எனச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அவர் மட்டுமல்ல யாருமே அப்படி யோசித்திருக்கவில்லை.



முருகேசனும்
கூட அவர் மறந்த ஒன்றை தானும் மறந்தவன் போல அமர்ந்திருந்தான். தலையிலிருந்து இறங்கிய நீர் அவன் முதுகிலும் நெஞ்சிலும் சரம்சரமான சிறிய பாம்புக்குட்டிகள் போல இறங்கி அவன் உள்ளாடைக்குள் சென்று மறைந்தன. துடுப்பு போல நீண்டிருந்த அவன் கைகளும் தக்கை போல சதையற்று கிடந்த உடம்பும் செதில்கள் முளைக்காத மீனென அவனை நினைக்க வைத்தன. மேட்டு மரங்களின் குளிர்ச்சியில் லயித்து  சிலிர்த்தபடி  எழுந்தான்.

’செரி நாங்க லைனா நிக்கறோம். ஒழுங்கா கால்ல வுழுந்து எந்திருச்சுட்டு அப்பறம் போங்கடா…என்றான் முருகேசனின் சித்தப்பா மகனான குமார்.

அந்த இடமே ஸ்தம்பித்துவிட்டது. மேலே இருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்த சேகரண்ணன் வெற்றிலைக் குதப்பலைத் துப்பிட்டு வந்துதெரியாம சொல்லிட்டான். பேசாம போங்க கண்ணு.. ஒண்ணா மண்ணா பழகிட்டு..’ என்றபடி முகம் மழித்த நீரைச் செடியோரம் விசிறி விட்டு அவனை முறைத்தார்.

மனோகரன் பெருமிதத்துடன் அவரைப் பார்த்துடேய் சின்னான்..உன்ற பசங்கள சித்த கூட்டிட்டு அந்தப்பக்கமா போடா..’ என சேகரண்ணனை வம்படியாக அழைத்தார். அவருக்கு ஏதேனும் விபரீதம் ஆகிவிடுமோ என்கிற அச்சம்.

ராதாவும் ஐயப்பனும் பஞ்சாகக் காய்ந்தத்  தலைகளுடன் வெயிலில் நின்று கொண்டிருந்தனர். நீரில் கிடந்து எழுந்ததால் அங்கிருந்தவர்கள் முகங்கள் வெளுத்துப் போயிருந்தன.

’அதெப்படி சொன்னா சொன்னபடி நடக்கோணும்..’ என்றார் குளிக்க வந்து வேடிக்கைப் பார்த்து நின்ற கைலாசம். அவர் கோவில் பூக்கடையை காலி செய்யச் சொல்லி ஐயப்பனின் அப்பா கொடுத்து வந்த தொந்தரவுகளின் மீது, நீரில் குதித்து மூழ்கி கொஞ்ச தூரம் சென்றதும் காறித் துப்பினார்.

தகித்துக் கொண்டிருந்த வெயிலில் சூடு மேலும் ஏறிக் கொண்டிருந்தது. ‘கெளம்பிப் போங்கடா..பொழுதோட பேசிக்கலாம்..’ என்றார் மனோகரன்.

ஒருவரும் நகர்வதாகத் தெரியவில்லை. முருகேசன் ஆட்கள் மற்றவர்களை வளையம் போல சூழ்ந்து தப்பிச் செல்லாதபடி மறித்து நின்றனர்.

’இதே கொளத்துல நாங்க எங்கிருந்து வேணும்னாலும் குதிச்சு ஆடுவோம். எந்த பலசாதிக்கு பொறந்த மயிரான் வந்து கேக்கறான்னு பாப்போம்..’ ராதாவின் குரல் மூர்க்கத்துடன் ஒலித்ததுமுருகேசனின் பாட்டி தன் புறவாசல் வழியாக வந்து வீட்டு அழுக்கு உடுப்புக்களைத் துவைத்து கொடுத்து அரிசி பருப்புக்களை வாங்கிப் போகும் காட்சியில் அவன் மனம் சென்று நிலைத்தது.

ஐயப்பனின் அக்கா வேற்று சாதிக்காரனுடன் சென்று விட்ட பிறகு ராதா போல இறங்கி பேச வலுவற்றவனாகச் செயலற்று நின்றான். இப்படி தன்னை உறைந்து போக வைத்த அவளை தேடிப் போய் கண்டுபிடித்து வெவ்வேறு விதங்களில் சித்ரவதை செய்வதாகக் கற்பனை செய்தபடியே நின்று கொண்டிருந்தான்.

முருகேசன் வாயைத் திறக்க வேண்டும். அவன் சொல்லெல்லாம் மறந்தவனாக தன் மீது வெயில் ஏறி நிற்பதைப் பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தான். வகுப்புகளில் அவனுக்கு நடக்கும் இழிவுகளுக்கும் அவமானங்களுக்கும் இவ்விருவரே காரணமாகவும் தூண்டுபவர்களாகவும் இருந்தனர். அவ்வளவு பேர் மத்தியில் அவன் டிபன்பாக்ஸை திறந்து வாயைக் குமட்டுவது போல காட்டி மூடிமூடி திறப்பதும் அவனது அப்பாவைப் போல ஒருபக்கமாக சாய்ந்து நடந்து காட்டுவதும் பலரும் பதில் தெரியாது எழுந்து நிற்கும் போது இவன் மட்டும் மடமடவெனச் சொல்லும் போது முகத்தைச் சிரைப்பது போல ஜாடை காட்டுவதுமாக அவனை மனரீதியாகத் துன்புறுத்திச் சிரிப்பதையே வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். எந்த பெண் அவனிடம் பேசினாலும் சில நாட்களுக்கு அவளை இவன் பேர் சொல்லியே அழைத்து அண்டவிடாமல் செய்வதும் ஐயப்பன் தான். ஏழாவது முடியும் வரை அவனை மதிப்பெண்ணில் தாண்டவே இருவருக்கும் முடிந்திருக்கவில்லை. இருவரின் வீடுகளிலும் முருகேசனுடன் ஒப்பிட்டு பேசிப் பேசியே நோகடித்ததின் விளைவு.

நீச்சலில் இவனை தோற்கடித்துவிட்டால் இந்த பக்கமே தலைகாட்டாமல் செய்து விட முடியும் என நினைத்தே போட்டிக்கு அழைத்தனர். ஆரம்பத்தில் அவன் மறுத்தான். ராதா தான் தன் ஜட்டியை கீழிறக்கிக் காட்டிபேடிப்பயலே வாடா..சிரைச்சு விடு..இதுக்கு தான் லாயிக்குஎனக் கொக்கரித்தான். முருகேசன் கொஞ்சம் கூட தாமதிக்காமல் ஓங்கி அறைந்தான். பெரிய கைகலப்பு ஏற்பட்டு உடனேயே அடங்கியும் விட்டது. ஐயப்பன் அவனை பிடித்துக் கொள்ள ராதா ஒன்றுக்கு மூன்றாகக் கொடுத்தான். அதைக் கண்ட பிறகு தான் முருகேசனுக்கும் ஆட்கள் திரண்டனர். போட்டி வலுப்பெற்றது.

ராதா கடுகடுப்பான முகத்துடன் எரிப்பதைப் போல அவனைப் பார்த்த பின் தனது நடுவிரலை வாய்க்குள் வைத்துஊம்புடா தாயோளி..யாரைக் குளிக்ககூடாது எவன்டா நொட்டறது..என்றான். ஐயப்பன் அவன் தோளைத் தட்டிக் கொடுத்துச் சிரித்தான். மனோகரன் ஏதும் கேட்காதவர் போல கைலாசத்துடன் வாயாடிக் கொண்டிருந்தார். முருகேசன் தன் காலடியில் கிடந்த செருப்பைத் தூக்கி ராதாவை நோக்கி எறிந்துபோயி உங்க மாமாவை போய் .ம்புடா. உங்கப்பன் ஊர் மேய்ஞ்சுத் திரியறாரு. மாமன் போடுற சோத்துல தான்டா பொழக்கறீங்க.. மானக்கெட்டவிங்களா..’ எனக் கத்தினான். காதில் விழுந்ததும் மனோகரனின் உடம்பு ஒருமுறை ஆடி அடங்கிற்று.  தன் அக்காவுடன் கூட அந்த ஆளைச் சேர்த்து வைத்துக் கிசுகிசுத்திருக்கிறார்கள். கைலாசம் சிரிக்கிறானா? இல்லை அப்படித் தோன்றுகிறதா? இப்போது எழுந்து சென்றால் வினையாகப் போய்விடும். எனவே செவிட்டூமை பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார். 

ராதா, அந்த பலத்த அடியை எதிர்பார்த்திருக்கவில்லை. சூறைக் காற்று போல பாய்ந்து சென்றான். யார் யாரைத் தாக்குகிறார்கள் என்பதே தெரியவில்லை. மனோகரன் அங்குமிங்கும் மூச்சுவாங்க ஓடியோடி  தடுக்க முயலுந்தோறும் சண்டை உக்கிரம் பெற்றது. வெளியே இருந்து ஆட்கள் ஓடி வருவதைத் தடுக்கும்படிக்கு குமார் தெப்பக்குளத்தின் இரும்புக் கதவை தாளிட்டு பூட்டி விட்டிருந்தான். சாவியை சேகரண்ணனிடம் வாங்கித் திறந்து மீண்டும் கொடுத்து விட்டுச் செல்வதே தினசரி வழக்கம். முருகேசனின் ஆட்கள் தோற்றவர்களின் உடைகளை எடுத்து கையில் வைத்துக் கொண்டனர். ஜட்டியுடன் நான்கு தெருவை நடந்து கடந்து சென்றால் தான் அவர்களின் வீடுகள் வரும். மாற்றுச் சாவி கொண்டு வந்து ஆட்கள் புகுந்து பையன்களை விலக்கி விடுவதற்குள் நகங்களால் சிராய்த்தும் தாக்கியும் ரத்தக் காயங்களுடனிருந்தனர். உள்ளே புகுந்தவர்களில் பாதி பேர் முருகேசனை விலக்கத் தான் ஓடினர். ஏனெனில்  ள்ளே கிடந்த வெறியனைத்தும் திரண்டு எழுந்தவன் போல சுழன்று கொண்டிருந்தான்.

வாழைமட்டையுடனும் சொரப்புரடையுடனும் தகரடின்னுடன்  நீச்சல் பழக வந்திருந்த சிறுவர்கள் தங்களை அழைத்து வந்திருந்த அண்ணன்கள் ஏன் இப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்பது தெரியாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தனர். கீழ்படியில் படிந்திருந்த பாசி வழுக்கி ஒருவன் குப்புற விழுந்தான். களேபரத்தில் அதை யாரும் பார்க்கக்கூட இல்லை. கால்மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பையன்களை ஆளுக்கொரு பக்கமாக இழுத்துச் சென்று அமர வைத்தனர். ஆனாலும் சண்டையின் சூடு கொஞ்சம் கூட ஆறியிருக்கவில்லை. இது வேறு எங்கேனும் தொடரவும் கூடும் என்பது போல தான் நிலைமை கொதித்துக் கொண்டிருந்தது

ராதாவின் அக்காள் மகனான சஞ்சயைக் காணோம் என அவனுடன் வந்த சித்து தேம்பியபடியே சொன்னான். சில நிமிடங்களில் விஷயத்திற்கு தீப் பற்றிக் கொண்டு விட்டது. சல்லடையாகத் துழாவிய பின்னும் தட்டுப்படவில்லை. முருகேசனும் அவனது ஆட்களுமே கூட இறங்கி மூழ்கிச் சென்று வெறுங்கையுடன் திரும்பி வந்தனர். ஓயாமல் அழுது கொண்டிருந்த ராதாவுக்கு ஆறுதல் கூறியபடியே அருகில் நின்றனர். அவனது அக்காள் மயக்கமுற்று இன்னும் போதம் தெளியாமல் கிடந்தாள்ஊர்க்காரர்களின் ஏச்சுக்களும் பேச்சுகளும் சலசலப்புமாக அந்த இடமே சந்தைக்கடை இரைச்சலாக ஆனது.

கொஞ்ச நேரத்தில் ஒப்பாரியும் ஓலமுமாக தெப்பக்குளம் மாறிற்று. தீயணைப்பு வண்டி வந்து கயிறு கட்டி ஆட்கள் நாலா திசைகளுக்குள்ளும்  மூழ்கிச் சென்றனர். ஒரு மணி நேரத்திற்கு பின் வங்கு போன்ற ஓரிடத்தில் தலை சிக்கக்கிடக்க உயிரற்ற உடலாக அவனை மேலே தூக்கி வந்தனர். அந்த குளமே வாய் முளைத்து அழுவது போல எங்கும் கண்ணீரும் அழுகையொலியுமாக மாறியது. மேலே எங்கும் தலைகளாகக் காணப்பட்டன.

அன்றே கோவில் இரண்டு மணிநேரம் மூடப்பட்டு தகுந்த பூஜைகளும் பரிகாரங்களும்  செய்தபின் மீண்டும் திறக்கப்பட்டது. சில தினங்களுக்குப் பின்  மனோகரனின் ஸ்டால் உரிமம் ரத்து செய்யப்பட்டது. சேகரண்ணனுக்கு பதிலாக அவரது மனைவியின் தம்பி அங்கு நாவிதம் செய்ய வரவழைக்கப்பட்டார். அந்த தெப்பக்குளம் அதற்கடுத்து வந்த பல ஆண்டுகளில் நிறைவதும் வற்றுவதுமாக மாறி மாறிக் காணப்பட்டது. ஆனால் பூட்டப்பட்ட குளத்தின் கதவு ஒருபோதும்  திறக்கப்படவேயில்லை. வெளியூர்வாசிகள் யாரேனும் நின்று கொஞ்ச நேரம் பார்த்தால் ஏதேனும் பறவையொன்று நிறைத்திருந்த நீருக்குள் செங்குத்தாக இறங்கி மீனை லாவகமாகப் பற்றி விண்ணேறிச் செல்வதைக் காணமுடியும். அவ்வளவு தான்.

******************