Tuesday, August 13, 2024

மண்

 

மண்

 கைக்குழந்தைகளுடன் எதிர்வீட்டுத் திண்ணையில் மீனா வீற்றிருந்தாள். வீடு பூட்டப்பட்டிருந்தது. மகளுக்குப் பிடித்த நிறத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்தது. அவ்வீட்டைக் காணுந்தோறும் உள்ளே கனலும் நெருப்பை எச்சில் கூட்டி விழுங்கித் தணிக்க முயன்றாள். அந்த இடத்திற்கு வந்து சேரவே அவளால் முடிந்திருக்கவில்லை. மகாதேவன் தன் கனவிலும் உலவிய இடம் அது. நடுங்கும் உடம்பைக் கட்டுப்படுத்தியபடியே அங்கு வந்தமர்ந்த போது அவள் மீது கிடந்த வெயில் இப்போது கால்களைத் தாண்டி இரண்டடிக்கு முன் நகர்ந்து விட்டிருந்தது. நேற்றிரவு வழக்கம் போல உறங்காது கிடக்கையில் தான் சட்டென்று நினைவு தட்டியது. சர்பம் போல பாயிலிருந்து நிமிர்ந்தெழுந்து அமர்ந்தாள். ’இப்போதே விடிந்து விட்டால்..’ என மனதில் செய்ய வேண்டியவைகளை ஓட்டிப் பார்த்தாள். திட்டங்கள் திரண்டு வந்தன. நிமிடங்கள் இவ்வளவு நீளமானவையா..! வெளியே இருமல் சத்தம் கேட்டது. பிறகு அமைதி. விளக்கைப் போட்டபடி, கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தால் விடிந்து விடும் எனப் பேதை போல நினைத்துக் கொண்டு அப்படியே உறங்கிப் போனாள். மகள் தான் முதலில் எழுந்து எழுப்பினாள். உத்தேசித்திருந்ததற்கும் கூடுதல் நேரம் ஆகிவிட்டிருந்தது. யாரோ அவளுக்குள் புகுந்து விட்டது போல வேலையில் வேகமும் ஒழுங்கும் எச்சரிக்கையும் வெளிப்பட்டபடியே இருந்தன. பள்ளியுடுப்புடன் வந்த மகளை வேறுடுப்புக்கு மாற்றி அவளும் கிளம்பிப் பேருந்திலிருந்து இறங்கிய போது உலகம் முடுக்கி விடப்படும் நேரத்திற்கு வந்து சேர்ந்திருந்தது.

 

 பூட்டிக் கிடக்கும் வீட்டின் மேல் மீண்டும் அவள் கண்கள் சென்று நிலைத்தன. மாடியில் காயப்போட்டிருக்கும் துணிகளுக்கு இடைப்பட்ட கம்பியில் வந்தமர்ந்த காகம் சிறு ஊஞ்சல் ஆடிய பின், உதறிப் பறந்த வேகத்தில் கம்பியின் மொத்த உடைகளும் அசைந்தன. ஒரு கணம் அந்த மொத்த வீடும் ஆடுவதாக அவளுக்குப் பிரமை ஏற்பட்டது. தலையை உதறிப் பார்வையை மீண்டும் அந்த பூட்டுக்கு கொண்டு வந்தாள். ஈயொன்று பூட்டுத் துவாரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தமர்ந்து எழுந்து கொண்டிருந்தது. அத்துளையினுள் செல்ல முட்டி மோதுவதாகப் பட்டது. இவற்றைக் கண்டதும் தோன்றிய எண்ணங்களால் நடக்கயிருப்பவை குறித்த தீர்மானங்கள் உறுதிப்பட்டன. சீறல் போல எழுந்த மூச்சுக் காற்றுடன் கோபத்தில் முகம் முறம் போல விரிந்தது. அந்தச் சினத்திலும் காரியம் ஈடேறுமென்ற சிரிப்பு அவளை ஆற்றுப்படுத்தியது.

 

தெருவின் இருபக்கத்தையும் கடிகாரத்தின் பெண்டுலம் போல இடவலமாகக் கழுத்தை ஓயாமல் அசைத்து ஆட்டி பார்த்தபடியேயிருந்தாள். எவரையேனும் எதிர்பார்த்து நிற்கும் போது தான் காலம் ஒரு பாறாங்கல் என்பது தெரியவரும் போலும். அது நெடுநேரம் அசையாமல் கிடக்கிறதா? ஆனால் வெயில் எரிந்து, மங்கி, நிழல் படர்ந்து, குளுமை ஓடி மீண்டும் மிதமாகப் படர்ந்து பழையபடிக்கு வெப்பம் சூடேற்றத் தொடங்கிவிட்டிருந்தது. ஏறக்குறைய ஒருமணிநேரத்திற்கும் மேல இந்த ஆட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைகள் அந்த சிறியத் தெருவை தங்கள் சிறிய வீடென எண்ணிக் கொண்டன. மகள் தன் தம்பியை பிடிக்க முயலுந்தோறும் அவன் தறிகெட்டு பிஞ்சுக் கால்களால் ஓடி விழுந்து அக்கா தூக்கி விடும்வரைக்கும் பொய்யாக அழுதான். அவ்விருவரும் தனக்குச் சம்பந்தமில்லாதவர்கள் என்பது போலவும் அக்குறும்புகள்  எங்கேயோ நடக்கின்றன என்பது போலவும் விட்டேற்றியாக ஆனால் கவனத்துடன் எழுந்து சிறுது தூரம் சென்று மீண்டும் திரும்பி வந்து பையில் பொருட்கள் இருக்கிறதா எனச் சரிபார்த்தப் பின் அமர்ந்து கொண்டாள்.  நேரஞ்செல்ல செல்ல மீனா சிலைத்தன்மையை அடைந்து கொண்டிருந்தாள். ஆனால் எதிர்வீட்டையும் தெருமுனைகளையும் ஒரு வினாடி கூட தவற விடாமல் காத்திருந்தாள். அங்கு அவரவர் சோலிகளுக்குச் சென்ற பின் மீந்திருந்தவர்களில் சிலர் வந்து நின்று அவளது உறைந்ததன்மையைக் கண்டு நகர்ந்து விட்டிருந்தனர். பொழுது ஊர்ந்து கொண்டிருந்தது.

 

மணக்கோலத்தில் தன் தங்கையுடன் கேலிப் பேசி அவளை வம்புக்கிழுத்த மகாதேவனின் சிரித்த முகம் அந்த அலையடித்த வெயிலின் கானல்நீரிலுள்ளிலிருந்து துலங்கி வந்தது. நெஞ்சை நொறுக்கும்படி எழுந்த கேவலை முந்தானையால் வாய்ப் பொத்தி அடக்கினாள். தேனீக்கள் போல அவனிடம் ஒட்டிக் கொண்டிருந்த பிள்ளைகள் கேட்க ஆளின்றி இதோ தெருவில் புரள்கின்றன. மகளுக்குத் தெரிந்திருக்கும். நடிக்கிறாள் என்று பட்டது. ஐந்து வயதிலேயே அப்பனுக்கு புத்தி சொன்ன விவரசாலி அது. இரண்டாவது படிப்பவளுக்கு - அதுவும் கற்றுக் கொடுப்பவர்களே மெச்சும்படி படிப்பவளுக்கு - தெரியாமலா இருந்திருக்கும். தம்பிக்காகவும் அம்மாவுக்காகவும் ஏதும் தெரியாதது போல விளையாடிக் கொண்டிருக்கிறதா அது? கண்ணீர் தன்னிச்சையாக வழிந்தது. அதென்ன இந்த வயதில் அத்தனை யோசனை..! செயல்களில் பிசிறில்லாத ஒழுங்கு. பேச்சில் பெரிய மனுஷத்தனம். அது தான் வினையாக வந்து சேர்ந்திருக்க வேண்டும். அதுவரை அடக்கி வைக்கப்பட்ட ஆங்காரங்கள் மகளை நோக்கித் திரும்பின. அடுத்த வீட்டின் நிழலில் தம்பியை மடியில் போட்டு அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்தாள். அம்மாவின் தகிக்கும் முகத்தை நெருக்கத்தில் கண்டதும் 'ம்மா..' என்றாள் பீதியுடன். அவள் தாமதிக்கவே இல்லை.

 

'அப்பன தின்னுபோட்டு எப்படிடீ வெளாட்டு காட்டிக்கிட்டு இருக்கற? அந்தாளை முழுங்கப் போறது பத்தாதா..இவனையும் தூக்கிக் கொடுக்கப் போறயா.. பாழாப்போன முண்டை' என்றபடி கன்னங்களிலும் உடம்பிலும் மாறி மாறி அடித்தாள். உடம்பு குலுங்கி அதிர 'அம்மா..அம்மா..' என வீறிட்டுக் கத்தினாள். ஆனால் மீனா பிடியை நழுவ விடவேயில்லை. அவன் குடித்து விட்டு வந்து அவளை அடித்து தள்ளும் போது செய்வது போல மகன் சுவற்றோடு பயத்தில் ஒட்டிக் கொண்டு விட்டான். மகள் வந்து குறுக்கே நின்றால் தான் மகாதேவன் ஓய்ந்து நிறுத்துவான். தன்னை உயிருக்கும் மேலாக வளர்த்த தன் அம்மா தான், மறைந்த பின் மகளாக பிறந்திருக்கிறாள் என்கிற  நினைப்பு அவனை அமைதிப்படுத்திவிடும். குடி தன்னை இப்படிச் சீரழிக்கிறதே என மனம் வெதும்பி உறங்கும் மகளின் கால்களைக் கட்டிக் கொண்டு சில நாட்கள் அழுவான். அதே குடி மிகப் பிரியமானவனாக அவனை ஆக்கும் போது கனவுகளை விவரிப்பான். மீனா கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பாள். அந்த மெத்தையில் அவன் தலைமுடியை பிடித்து ஆட்டியபடி மகன் சேட்டை செய்ய, தனக்கு விசிறியபடியேஉம்..’ கொட்டும் மகளை பார்த்து கண்ணீர் மிதக்கும் கண்களுடன்எங்கேயோ பொறக்க வேண்டிய தெய்வம்..' என்பான். மீனாவை முத்த எட்டும் போது அவள் அவனுக்காக பிசைந்து வைத்திருக்கும் சோற்றை ஊட்டுவாள். மறுப்பது போல தலையசைப்பான். ஜாடை காட்டியதும் மகள் ஒரு அதட்டு அதட்டுவாள். அவன் பணிந்து வாய் திறப்பான். மாறி மாறி ஊட்டிக் கொண்டு உண்டு விட்டு அப்படியே உறங்கிப் போய்விடுவார்கள். நடுநிசியில் எழுந்து விளக்கை அணைத்து விட்டு குழந்தைகளை சரி செய்து பாவம் போல தூங்குபவனை எண்ணி சற்று முன் முகம் மின்ன விவரித்தவற்றில் பாதியையாவது ஈடேற்றுக் கொடு என கண்ணீருடன் கடவுளர்களை வேண்டிக் கொண்டு படுக்கையில் சாய்வாள்.

 

தொழிலில் அவனை வெல்லவே முடியாது. ஆனாலும் ஏதும் பிரயோஜனப்படவில்லை. அவள் ஜோதிடம் பார்த்து பூஜைகள் செய்ததற்கு அடுத்த வாரத்தில் ஒரு பெரிய கான்ட்ராக்ட் முடிவாகி இருப்பதாகவும் தொகை லட்சங்களில் வரும் என்றபடி வாசலிலிருந்தே கூவிக் கொண்டு வந்தான். மீனா அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவளுக்குச் சொல்லே எழவில்லை. அவன் சென்ற பிறகும் தேம்புவது நிற்க  நீண்ட நேரம் ஆயிற்று. திடீரென சக்தி பெற்றவனைப் போல வேலைகள் செய்தான். குடி நான்காம் பட்சம் ஆகியது.  இருபதுக்கும் அதிகமான ஆட்களைப் பணிக்கு எடுத்து வேலைகளைப் பிரித்துக் கொடுத்தான்.

 

'வீடு ஒன்னு விலைக்கு வந்திருக்கு..' மதியம் சாப்பிட வந்தவன் கழுவிய முகத்தைத் துடைத்தபடியே சொல்லி முடிப்பதற்குள் பொங்கும் மகிழ்ச்சியை அவனுக்குக் காட்டியபடி கையில் சர்க்கரையுடன் நின்று கொண்டிருந்தாள். நடுவீட்டில் அவனை அமரவைத்து சுற்றிப் போட்டாள். அவளும் போய் வீட்டைப் பார்த்து வந்தாள். மேலும் சில லட்சங்கள் வேண்டும் போலப்பட்டது. நகைகளை அடகு வைத்தும் தன் தம்பியிடமும் வீட்டிடமும் சொல்லி பெற்று வந்து தந்தாள். அவன் மனதிற்குள் வெறெதுவுமே இல்லை என ஆயிற்று. சொந்த வீட்டில் கால் நீட்டி அமரப் போகிறேன் என்றான் ஓட்டுக்கூரையை நோக்கி மிதப்பாகச் சிரித்தபடி. அப்போஊஞ்சல்..’ என்றிழுத்தாள். 'வானத்துல கட்டி வீட்டுல ஊஞ்சலை இறக்குவோம்டி' என முத்தினான். அந்த முத்தத்திற்கு  அம்மாவின் செல்லச் சிணுங்கலைக் கண்டு மகள் தம்பியைத் தூக்கிக் கொண்டு வெளியே போனாள். அடுத்த மாதமே கிரயம் ஆயிற்று.

 

அவன் மராமத்து வேலைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அதற்குள் மூழ்கினான். அதுவரை அவள் அந்தப் பக்கமே வரக் கூடாது என்று விட்டான். ஒவ்வொரு நாளும் வந்து முடிந்த வேலைகளைச் சிரிப்பும் கும்மாளமுமாக சொல்வான். அந்தப் பூரிப்பு அவனை மீண்டும் குடியின் பக்கம் திருப்பி விட்டிருந்தது. அளவும் முன்பை விட கூடுதலாக மாறி அவனிடம் முன்னர் வேலை பார்த்தவர்கள் கை தாங்கலாக வந்து விட்டுச் செல்லும்படி ஆனது. அங்கு குடியேறியதும் இதெற்கெல்லாம் முடிவு கட்டி விடலாம் என மீனா அவன் போக்கிலேயே சென்றாள். குடித்திருக்கும் போது இங்கிருந்து ஆறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் வீடு அவன் கைக்குள் வந்து விடும். உள்ளங்கையை பார்த்தபடியே ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பான். அவனது புதிய சகவாசம் தான் அவனை குடியினுள் மூழ்கடித்திருக்கிறது என மெதுவாகப் புரிந்தது. வீடு கட்டும் இடத்தின் பக்கத்து வீட்டுக்காரன். அந்த மராமத்துக்கும் வேலைபாடுகளுக்கும் கேட்குந்தோறும் பணத்தை கொடுத்தான். மகாதேவன் தன் மனைவியையும் குழந்தைகளையும் மனக்கண்ணில் நினைத்தபடியே செதுக்கிக் கொண்டே இருந்தான். அவளை கூட்டிச் செல்வதுமில்லை.  அவள் கடிந்து கேட்டதும்

 

'அடுத்த வாரம் பொரட்டாசி பொறக்குது, அதுல வேணாம்டி. ஐப்பசியில நல்ல நாளா பார்த்துப் போவோம்' என்றபின் தன் மகளை அருகில் அழைத்து கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருந்தான். சட்டென்று காலில் விழுந்து எழுந்தான். அவன் தன் தாயிடம் ஆசி பெற்றாகி விட்டது.

 

மறுநாள் வழமை போல நடந்து கொண்டிருக்கும் வீட்டு வேலைகளை காணச் சென்றான். இன்னும் சில தினங்களில் முழுமையடைந்துவிடும். கொஞ்ச தூரம் போய் தள்ளி நின்று தன் வீட்டை பார்த்தான். உலகமே சிறுத்து தெரிந்தது.   அவனை அழைத்த பக்கத்து வீட்டுக்காரர் காபியை கொடுத்தபின் அதுவரை அவன் வாங்கிய பணத்திற்கான கணக்கை காட்டியபோது திகைத்து விட்டான். கணக்குகளை இவன் குறித்துக் கொள்ளவேயில்லை. ஆனால் தொகை இரு மடங்காக எழுதப்பட்டிருந்தது  தெரிந்தது. குடிமிகும் வேளையில் மட்டும் தன்னிடம் கையெழுத்துப் பெற்றது ஞாபத்திற்கு வந்தது. அவனால் எதுவுமே பேச முடியவில்லை. ஆட்களைக் கூட்டிக் கொண்டு போய் நியாயம் கேட்டான். பிறகு தான் அந்த வீட்டைடே அவர் பெயருக்கு எழுதிக் கொடுத்திருப்பது தெரிந்தது. உடன் சென்றவர்கள் மகாதேவனை திட்டித் தீர்த்தபடி திரும்பி வந்தனர். அவரது இரு மகன்களில் ஒருவனுக்கு ஏற்கனவே வீடிருக்க, இளையவனுக்காக அருகிலேயே வீடு என்கிற விருப்பத்தில் மகாதேவனிடம் கூடுதலாகச் சில லட்சங்கள் தருவதாக கேட்டிருந்தார். ஆள் மசியவில்லை. ஆனால் கொஞ்சம் அன்பைக் காட்டினாலே விழுந்து விடக் கூடியவன் என்பது சில தினங்களிலேயே தெரிந்து விட்டது. அவன் அங்கிருக்கும் போதெல்லாம் அவர் வீட்டிலிருந்து தான் உணவு போகும். புதிய புதிய யோசனைகள் சொல்வார். அவரது சொல் அவனை மயக்கியது. குடித்து சில மாதங்களுக்கு ஆன நிலையில் ஒரு நாள் உற்சாகமிகுதியில் அவருடன் குடியில் அமர்ந்தான். பிறகு மீளவேயில்லை.

 

வீட்டிற்குள்ளேயே வளைய வந்துகொண்டிருக்கும் மகாதேவனை பார்த்ததும் அவன் விரும்பி உண்பவைகளை சமைத்து உற்சாகமூட்ட எண்ணினாள். எங்கோ கவனம் நிலைத்தவனாக அமர்ந்து கொறித்துவிட்டு எழுந்தான். படுக்கையில் கூடுவதற்கான சமிக்ஞைகளை அவளாக விடுத்தாள். பிறகு நேரடியாகவே இறங்கினாள். பாதி முயக்கத்தில் அவள் முனகியபடியே கால்களை மேலும் வசதி செய்து விரித்துக் கொடுத்த சமயத்தில் எதனாலோ தாக்கப்பட்டவன் போல ஊளை எழுப்பியபடி பக்கவாட்டில் விழுந்தான். எந்தக் கேள்விக்கும் அவன் பதில் சொல்லவில்லை. சொம்பு நிறைய நீரை விழுங்கியபின் உறங்கிப்போனான். சோதித்த மருத்தவர் ரத்த அழுத்தத்தின் அளவு எசகுபிசகாக எகிறிவிட்டிருக்கிறது எனச் சொல்லி கை நிறைய மாத்திரைகளை தந்து அனுப்பினார். வீட்டிலும் ஒரு பேச்சும் இல்லை. அந்த வீட்டைப் பற்றி ஒரு வார்த்தையும் வரவில்லை. பத்து நாட்களுக்கு பின் பக்கவாதத்தில் மாறுகால் மாறுகை செயலிழக்க படுக்கையில் விழுந்தான். பிறகு தான் அவளுக்கு விஷயங்கள் ஒவ்வொன்றாக தெரிய வந்தன. ஒரே மாதத்தில் மகாதேவன் தேற முடியாத இடத்திற்குச் சென்று விட்டிருந்தான். பிறகு இதயத்தில் முதல் தாக்குதலை எதிர் கொண்டான். பிழைப்பது அரிது என ஆனது. பரிசோதனைக்குச் சென்ற போது அனைத்தும் முடிந்த பின்அவர் ஆசைப்பட்டு கேக்கறதை செஞ்சு கொடுங்க..’ என்றார். அந்த மருத்துவமனையே பிளந்து விடும் என்பது போல மீனா கூக்குரல் எழுப்பி அழுது மயங்கி விழுந்தாள்.

 

உயிர் தொக்கிக் கொண்டிருக்கிறது. ஆறு நாட்கள் ஆயிற்று. பிடித்தவற்றைக் கரைத்து ஊற்றி ஆகிவிட்டது. மீனாவுக்கு வீட்டின் நினைப்பும் என்ன செய்வது என்கிற பீதியும் ஒருங்கே எழுந்தது. தன் தம்பிக்கும் மகாதேவனின் நண்பர்களையும் அழைத்து சொன்ன பின் இங்கு வந்து காத்திருக்கிறாள். நான்கு பைக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக பார்த்ததும் உயிர் பெற்று மெல்ல எழுந்து நின்றாள்.

 

பூட்டிய வீட்டைக் கண்டு அவர்களும் செய்வதறியாது நின்றனர். பிறகு உள்ளே எரிந்த விளக்கு திடீரென அணைக்கப்படுவதை அவள் தம்பி இங்கிருந்தே பார்த்து விட்டிருந்தான். கதவை உடைப்பது போல தட்டினான். மற்றவர்களும் வெளியே இருந்து சத்தமிடத் தொடங்கினர். அதுவரை ஒருவருமற்றிருந்த தெருவில் ஆட்கள் எங்கிருந்தோ முளைத்து வந்தனர். அவர்களுக்குள் தள்ளுமுள்ளும் கைகலப்பும் ஏற்பட்டு விட்டது. மீனா மூர்க்கத்துடன் அருகில் கிடந்த கல்லை எடுத்துச் சென்று பூட்டை அடித்தாள். அதைக் கண்டு கூட்டம் ஸ்தம்பித்து விட்டது. அவளை தடுப்பதும் தள்ளுவதுமாக இருந்தும் தன் இலக்கில் அவள் தவறவேயில்லை. வீட்டின் முன் புரண்டெழுந்து மேலும் உக்கிரமாகி பூட்டில் ஒரு போடு போட்டாள். தாள் தெறித்து சிதறி விழுந்தது. அந்த வீடு அவளுக்கு நன்கு தெரியும். விடுவிடுவென பின் பக்கம் சென்றாள். அவன் வளர்த்து வைத்த தோட்டத்தில் பூக்கள் மலர்ந்து நிற்பதைக் கண்டாள். அழுகை பொத்துக் கொண்டு வந்தது. ஆவேசமாக இரு கைகளிலும் மண்ணை அள்ளி எடுத்தபடி விடுவிடுவென வெளியே வந்தாள். அதற்குள் கூட்டம் கூடி விட்டிருந்தது. அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து சாபம் இட்டு வலது கையிலிருந்த மண்ணை தூற்றி எறிந்தாள். அது ஆகாயத்தை மறைத்தபடியே காற்றில் பரவி வீட்டின் முன் விழுந்தது. ஒவ்வொருவனையும் காறி உமிழ்ந்து கொண்டே அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.

 

மகாதேவனின் மார்பு மெதுவாக ஏறி இறங்கிக் கொண்டே இருந்தது. அவன் எப்போதும் உண்ணும் வட்டலில் அந்த மண்ணைக் கரைத்து வாயில் ஊற்றினாள். ஒரு சொட்டு நீரும் சிந்தவில்லை. பத்தாவது நிமிடத்தில் நெஞ்சு எகிற அடிக்க தொடங்கியது. சில நிமிடங்களிலேயே அந்த இழுவையும் கார்வையும் அப்படியே அடங்கியது. சுற்றிலும் பிலாக்கணம் எழுந்தது. அவள் கால்களைச் சுற்றிலும் குழந்தைகள் நிற்பது கூட அவளுக்கு உறைக்கவில்லை. மகளின் வீறிடல் எட்டாத தொலைவில் அவளிருந்தாள். அவள் அந்த தோட்டத்தில் புதைத்து வைத்து விட்டு வந்த மந்திரித்தத் தகடுகளும் தாயத்துகளும் வயிறெரிந்த சாபமும் அவர்களை நிர்மூலம் செய்து விடும் என வீடிருந்த திசையைப் பார்த்தாள். மகள் அவள் கைகளைப் பற்றினாள். அவள் உடைத்த பூட்டும் சாவியும் போக இன்னொரு புதிய பூட்டு சாவியுடன் பைக்குள்ளிருந்து எடுத்துத் தந்தாள்.

 

ம்மா..அந்த வீட்டுல இருக்கிற பூட்டு சாவியையெல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன். நீ போய் பூட்டு போட்டுட்டு வாம்மா..அப்படின்னா வீடு நம்மளோடது தானேம்மாஅப்பாகிட்ட சொல்லும்மா..ப்ளீஸ்மா…’ என வழியும் கண்ணீருடன் காலைப் பிடித்து உலுக்கிக் கெஞ்சினாள். மகன் தன் அக்காவை பார்த்து அதே போல அழத் தொடங்கியிருந்தான். மீனா இருவரையும் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு மயங்கி விழுந்தாள்.

-----------

No comments:

Post a Comment