மாபெரும்
பாடகன்
கடந்த காலத்தை அசைபோடாத மனிதர்கள்
எவரேனுமுண்டா? நினைவேக்கத்திலிருந்து(nostalgia) தப்பியவர்கள்? அப்போது அவர்களின் மனதிற்குள்
இவ்வுலகிலிருந்து பெற்றவை சார்ந்த போதாமையும் இழந்தவை குறித்தத் துயரமும் சிற்றாறு
போல ஓடி அடங்குமாக இருக்கலாம். இடைவெட்டாக மின்னல் போல் பளீரென அடித்து மறைகிற, மேகம்
போல நிதானமாக கலைந்து செல்கிற எத்தனை முகங்கள்…எத்தனை நிகழ்ச்சிகள்..! அதற்குள் மூழ்குவது
ஏறக்குறைய போதையே. எத்தகைய வாழ்க்கையை கடந்து வந்திருப்பினும் கூட நிகழ்கணத்திற்குள்
மீளும் போது விழியிடைநீரற்றவர்கள் அபூர்வம். அந்த ஏக்கத்தைக் கிளறி விடுகிற வலிமை திரையிசைப்
பாடல்களுக்கு உண்டு. பேசத் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே மிக இயல்பாக சினிமாவுக்குள்
நுழைந்து விடுகிற தமிழ் சமூகத்தில் பெரும் பாடகன் ஒருவன் பெற்றிருந்த இடத்தை அவனது மரணம்
எவ்வளவு துலக்கமாக நெகிழ்ச்சியுடன் காட்டி விடுகிறது..! மாபெரும் ஜனசமூகத்தின் அன்றாடத்தில்
இடையறாது நாற்பதாண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து மக்களுடன் உறவாடும் கலைஞன் ஓர் கட்டத்தில்
இயல்பாகவே அவர்களுடையவனாகிவிடுகிறான் போலும். அதனால் தான் அவரவர் வாழ்க்கைகளுக்குள்ளிருந்து
சொல்ல ஏதோ ஒன்றை விட்டுச் செல்லும் வெற்றிக்கரமான உவப்பூட்டும் இசைப் பயணம் எஸ்.பி.பிக்கு
வாய்த்ததோ.!. ’மக்கள் இவ்வளவு பிரியத்தை அப்பாவின்
மேல் வைத்திருந்தார்கள் என்பதே இப்போது தான் தெரிகிறது’. என சரண் சொல்வதிலுள்ள வியப்பு
செயற்கையானதல்ல. பாலுவே கூட உணர்ந்திருப்பாரா? எனத் தெரியவில்லை. இறுதிவரை- மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட பிறகும் கூட- மக்களுடன் தொடர்பிலேயே இருந்தார் அவர். ஒளிரும் நட்சத்திரங்களின்
சிறிய விஷயங்கள் கூட கிடைத்தற்கரிய பொக்கிஷமே. எனவே ஊடகங்கள் கிடைத்த வாய்ப்பை இரக்கமின்றி
செவ்வனே பயன்படுத்திக் கொண்டன. சமூக ஊடகங்களின் ‘பொற்காலத்’தில் அதுவும் பெருந்தொற்றால்
முடங்கி பழைய நாட்களுக்குள் வாழ்ந்தபடியே மறுநாளைக் குறித்த அச்சத்துடன் கிடந்த பொழுதொன்றில்
அவர்களின் மகத்தான பாடகனின் மரணச்செய்தி வெளிவந்தது. ஆச்சரியமேற்படுத்தும் இரங்கற்குறிப்புகள், அஞ்சலிகள்
தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டே இருந்தன. ஏனெனில் அவர்களது குருதி கசியும் நாட்களுக்கு
பூச்சொரியும் தருணங்களுக்கு தருநிழலாகவும் தேற்றுப்படுத்துகிறக் கரமாகவும் உற்சாகத்தின்
நடனக் கால்களாகவும் குதூகலத்தின் படகோட்டியாகவும் இருந்த குரல் எஸ்.பி.பி என்கிற ஸ்ரீபதி
பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியத்தினுடையது.
எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற
மாபெரும் இசையமைப்பாளரின் மரணத்தின் போதோ அவருக்கு
முந்தைய தலைமுறையைச் சார்ந்த பாடகர்களுக்கோ (டி.எம். செளந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ்),
மலேசியா வாசுதேவன், சொர்ணலதா போன்ற சமகால பாடர்களின் மறைவின் போதோ ஏற்படாத தேம்புதல்கள்,
எழுதப்படாதக் குறிப்புகள், இசைக்கப்படாத துயர
கீதங்கள் பாலுவுக்காக அவரது கோடிக்கணக்கான
ரசிகர்களால் எழுப்பப் பட்டன. இத்தனைக்கும் அவர் கோலோச்சிய பாடல்களுக்குரிய நடிகர்களின்
காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டிருந்தது. தன் ஐம்பதாவது வயதில் பதினெட்டு
வயது இளைஞனுக்கு (காதலர் தினம்- குணால்) பாடுகிற இளமையை அவரது குரல் பெற்றிருந்தது.
ஐம்பதில் என்ன? சென்றாண்டு உலகெங்கிலும் நடந்த கச்சேரிகளில் ஒலித்த குரலில் அவ்வளவு
இளமை, அவ்வளவு உற்சாகம், சங்கதிகளைக் கையாள்வதில் (பொடிச் சங்கதிகளைக் கூட) குன்றாதத் தேர்ச்சி என பவனி வந்த கலைஞர் அவர்.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு
நேர்காணலில் இளையராஜா ‘தமிழ் சினிமாவின் கடைசி ஆண்குரல் டி.எம்.எஸ்ஸினுடையது தான்’
எனச் சொன்னார். அப்படியான ஒரு குரலை பின்னுக்குத் தள்ளிய வருகை பாலுவினுடையது. மென்மையும்
இனிமையும் தெவிட்டாத வாலிபமும் எஸ்.பி.பியின் குரலிலிருந்து விடைபெறவேயில்லை. அதனால்
தான் அவரது சமகால பாடகர்கள் பலருக்கும் குரல் நடுக்கம் ஏற்பட்டு பிடிவாதமாக மேடைகளில்
பாடி ரசிகர்களின் முகச்சுளிப்பிற்கு ஆளாக நேர்ந்த துர்பாக்கியத்தின் நிழல் பாலுவைத்
தீண்டவேயில்லை. எம்.எஸ்.விஸ்வநாதனிடம் பாடிய போதே குன்றின் மேலிட்ட விளக்காக ஒளிர்ந்தார்
என்பது உண்மை தான். அக்குன்றிலிருந்து வானின் நட்சத்திரமாகப் பிரகாசித்தது இளையராஜா என்கிற
ஒப்புநோக்கற்ற கலைஞரின் இசையமைப்பில் பாடிய பிறகே. எந்த துறையெனினும் அது அமைந்து மேலேறி
வர பயிற்சினால் கூடிய திறமையே முதன்மையானது என்ற போதும் சூழலும் காலமும் அதற்குத் தோதான
ஏணிகளைக் காலடியில் கொண்டு வந்து போடுவதும் தேவை தான் போலிருக்கிறது. ராஜாவுக்கும் டி.எம்.எஸ்ஸுக்குமிடையே
ஏற்பட்ட கசப்புகள், அடுத்தகட்ட நடிகர்களின் வருகை போன்றவற்றையும் கவனத்தில் கொள்ளலாம்.
பெரும் வியக்தியாக இளையராஜாவின் ஆகிருதி தமிழ் சினிமாவையேச் சுருட்டி தன் இசைக் கூடத்தின்
வாயிலில் நிற்க வைத்திருந்த வரலாற்றில் ’ராஜ சபை’யின் பிரதான பாடகன் எஸ்.பி.பி. மட்டுமே.
இந்த இணை அளித்த பரவசமும் மன எழுச்சியும் கொண்ட பாடல்களின் வரிசையொன்றை பட்டியலிட்டால்
எளிதில் முடிவுறாத ஒன்றாக மிகவும் நீண்டு சென்று விடும். நாயகனைப் பாடகனாகச் சித்தரித்து
எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலானவற்றில் பாடல்கள் எஸ்.பி.பியினுடையதே. இதை ரசிகர்கள்
மிக இயல்பாக ஏற்றுக் கொண்டனர். அந்த பிம்பத்திற்கு எஸ்.பி.பி மெனக்கெடவேயில்லை. அது
தானாகவே அமைந்து வந்தது.
வணிகப் படங்களின் விற்றுத்
தீர்ந்த கேசட்டுகளை நினைக்கும் போதே ’சங்கராபரணம்’ போல இசை சார்ந்த படங்களுக்காக அவர்
பெற்ற விருதுகளும் கண் முன் நகர்கின்றன. எஸ்..பி.பியின் காலத்திலேயே பாடிக் கொண்டிருந்த
மலேசியா வாசுதேவனுக்கோ அதற்கும் முந்தைய ஜேசுதாஸுக்கோ கொஞ்சம் பின்னால் வந்து சேர்ந்த
மனோவுக்கோ மக்களின் தினசரிகளிலிருந்து கிடைக்காத பெருமையும் அங்கீகாரமும் பாலுவுக்கு
கிட்டியது. நாராசமான குரல் கொண்டவரிலிருந்து ஆர்க்கெஸ்ட்ராக்களின் மேடைப்பாடகர்கள்
வரைக்கும் போலி செய்ய முயன்ற குரல் பாலுவினுடையதே. ஒன்றிரண்டு வரி ஏன் ஒரே ஒரு வரியை பொது விடத்தில்
பாடத் தொடங்கியதும் ‘பெரிய எஸ்.பி-னு நெனப்பா?’ என பலரை கிண்டலடித்ததை எவ்வளவோ தடவைகள்
கேட்டிருக்கிறேன்.
எப்படிப் பார்த்தாலும் பாடல்கள்
கேட்டு வளரும் சூழல் எனக்கிருக்கவில்லை. இரவுகளில் அப்பா பாடும் போது தான் பாட்டுகளே
அறிமுகம். இப்படியெல்லாம் உண்டா என்றும் தோன்றும். அவர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். அவரும்
அவர் காலத்தியவர்களுடையதையுமே சுவர்கள் எதிரொலிக்கும். எனவே டி.எம்.எஸ் தான் வீட்டுக்குள்
உலவுவார். ஒரு வழியாக பத்தாவது வயதில் வானொலி வீட்டுக்கு வந்தது. அதுவரை தெருவிலுள்ள
வீடுகளின் டிவிக்களிலும் கடைகளிலும் பேருந்துகளிலும் காதில் விழுந்திருந்த பாடல்களை
அதன் காதைத் திருகுவதன் மூலமே கேட்க முடியும் என்பதில் எங்களை விடவும் அப்பாவுக்கு
தான் ஆர்வம் அதிகமிருந்தது. வேலை முடிந்து
திரும்பியதும் அவர் செய்யும் வேலைகள் இரண்டு. சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டுவது.
படுத்தபடியே முடிகள் மண்டிய வெற்று மார்பின் மேல் ரேடியோவை வைத்துத் திருகி அலைவரிசையை பிடித்து வெற்றிப்
புன்னகை பூப்பது. அன்று தெருவில் தங்கநகைப் பட்டறைகள் கிட்டத்தட்ட பத்தாவது இருந்திருக்கும்.
பொற்கொல்லர்களின் வெறுமையான பகல்களுக்கு ஆசுவாச
மருந்து தேனீரும் பாடல்களுமே. அங்கு போய் அமர்ந்து அந்த மூத்த அண்ணன்களுடன் பழகிய பின்பே
வேறொரு உலகமும் அந்த உலகத்திற்குள் ஒருவராக எஸ்.பி.பியும் அறிமுகமாயினர். அவர்களுக்குச்
சுருக்கமாக எஸ்.பி. அன்றிலிருந்தே சமவயதுக்காரர்களை விடவும் மூத்தோர்களிடமே அதிகமும்
நெருக்கமாக இருந்து வந்திருக்கிறேன். ஏனெனில் அப்பொழுது ரஹ்மானே பெரும்பாலனவர்களின்
வாயில் அசைபடும் பெயராக இருந்தார். ஆனால் பட்டறைகளில் ஒலிப்பது ராஜாவின் பாடல்களே,
அப்படித் தான் ஒருமுறை சாதாரணமாகத் தொடங்கி சண்டைக்கு அச்சாரம் ஆகி பிறகு அழுகையாக
முடிந்த சம்பவமும் நடந்தது.
’பாட்டுக்கு நடுவுல இப்படி
சிரிச்சு சிரிச்சு வைக்கறாரே..அதுவும் இவ்வளவு அழகா இருக்கே.. எப்படிணா..?’ பனிரெண்டாம்
வகுப்பு தேர்வு விடுமுறையில் அந்த அண்ணகளில் ஒருவரைக் கேட்டேன்.
‘ஆமாமா..’குருவாயூரப்பா..’பாட்டு
முடியும் போது கடைசியில சிரிப்பான் பாரு..நான் ரிவெண்ட் பண்ணி பண்ணி கேட்பேன்’
அதை கேட்டு பக்கத்தில் இருந்தவர்
‘சிறிய பறவை சிறகைவிரித்து’ல சிரிக்கறதை விடவா அது அழகா இருக்கு..?’ என கொக்கி போட்டார்.
அப்படிப்பார்த்தா ’பட்டுக்கண்ணம்
தொட்டுக் கொள்ள..’ பாட்டுல வர்ற சிரிப்பை எங்க வைக்கறது? இருவரும் முறைத்தனர்.
’அண்ணா..ரெண்டு பேரும் சண்டை
போடாம ஏதாவதொரு பாட்டை போடுங்க..வூட்ல டேப் ரிக்கார்டர் இல்லைனு பாட்டு கேட்க இங்க
வந்தா இப்படி பண்றீங்க?’
’சின்ன புறா ஒன்று..என்ன
கனாவினில்..’ ஒலித்தது.
என்ன இது..! சோகப்பாட்டு
போலிருக்கிறதே..! என தலைதூக்கிப் பார்த்தால் அந்த இன்னொரு அண்ணன் எங்கோ பார்த்துக்
கொண்டிருந்தார்.
’இவனை
பழி வாங்க இது தான் வழி.. கொஞ்ச நேரத்துல இவன் அழுவான் பாரு..’ சில கண அமைதி. ஆனால்
இப்போது இரண்டு அண்ணன்களுமே மூக்கை உறிஞ்சினர்.
‘அந்த
மயிரானே தான் இதையும் பாடி இருக்கான்..’ என்றபடியே தொடர்ந்து கேட்கச் சக்தியில்லாதவர்
போல டேப்பை ஆஃப் செய்து விட்டார்.
இதற்கும் சில ஆண்டுகளுக்கு
முன் இவ்வாறான பேச்சிடையே தான் ஆர்க்கெஸ்ட்ராக்களின் மீதான மோகத்தையும் தூண்டிவிட்டார்கள்.
இயல்பிலேயே பாடல்களின் மேல் கொண்டிருந்த தீராத விருப்பத்தை அக்கச்சேரிகள் எண்ணெயூற்றி
வளர்த்தன. தியேட்டரில் படம் ஓடும் போது கேட்கும்
பின்னணி இசையை திரைக்குப் பின்னால் நின்று கொண்டு வாசிப்பார்களா? என்ற ‘அப்பாவி’யின்
கேள்விக்கு அப்பாவிடம் கிடைத்த ஏச்சுக்கள் மனதில் ஒலிக்கின்றன. எனவே கண் முன்னே ஆட்கள்
வாசித்து பாடுவதைக் கேட்பதென்பது உற்சாக அனுபவமாக இருந்தது. அது அவர்களின் பொற்காலம்.
உச்ச நட்சத்திரங்களின் பாடல்களுக்கு குக்கூரல்களும் விசில்களும் பறக்கும். அனைத்துக்
கச்சேரிகளிலும் நிச்சயமாக பாலுவை போலி செய்யக்கூடிய (அதை கெளரவமாகவே கருதுவார்கள்)
பாடகர் இருவரேனும் இருப்பார்கள். கோவில் ஆர்க்கெஸ்ட்ரா ஒன்றில் தங்கள் குழுவின் எஸ்.பி.பி
என அறிமுகப்படுத்தப்பட்டு சில பாடல்களும் பாடிய பிறகு குறிப்பிட்ட பாடல் முடிந்ததும்
கீழிருந்து ஒருவர் ஆவேசமாக மேலே சென்று ‘எஸ்.பி மாதிரி ஏன் சிரிக்கல’ ‘ஏன் பாடும் போது
நழுவற?’ என கேள்விகளால் துளைத்தார். வியர்வையை ஒற்றித் துடைத்த பாடகர் கேட்டவரின் பெயரை
மைக்கில் அறிவித்தபடியே ‘ஏன் அவராட்டம் பாடலனு அண்ணன் என்னை கோவிச்சிருக்கறாரு.. ஏன்னா…”
என சிறிது நேரம் நிறுத்தி நிரம்பிய கூட்டத்தின் மேல் கண்களை ஓட்டிய பிறகு ’நான் எஸ்.பி.பி இல்லை’ என மைக்கை கீழே வைத்தார்.
அதிலிருந்த வருத்தமும் இயலாமையும் ஏக்கமும் ஏதோ நேற்று கேட்டது போல காதில் ஒலிக்கிறது.
நான்கைந்து பாடல்கள் முடியும் வரை அவர் மேடைக்கே செல்லவில்லை. அவ்வளவு ஏன் ராஜாவுடன்
அடிக்கடி நடக்கும் சண்டை ஒன்றிற்குப் பிறகு தான் மனோவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கினார்
எனச் சொல்லப்படுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பாலுவுக்கு மாற்று எனச் சொல்லப்பட்டவர்
பாலுவின் குரலின் ஒலியையே நகலெடுக்க வேண்டியிருந்தது. இருவரையும் அருகிலேயே வைக்க முடியாது.
’ஓ..ப்ரியா..ப்ரியா..’ (இதயத்தை திருடாதே) பாடலை தமிழில் மனோவும் தெலுங்கில் எஸ்.பி.பியும்
பாடி இருக்கின்றனர். இரண்டையும் அடுத்தடுத்துக் கேட்டால் உண்மை எளிதாக விளங்கிவிடும்.
தெலுங்கிலும் எஸ்.பி.பி தனக்கு முந்தைய தலைமுறைப் பாடகர்களை ஓரங்கட்டினார் எனக் கூறப்படுகிறது.
கன்னடத்திலும் பாடல்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை. அவர் சோபிக்க முடியாத மொழி மலையாளமே.
அங்கு மலையாளிகளின் நனவிலியிலும் நினைவிலியிலும் கோலோச்சும் ஒரே குரல் ஜேசுதாசுடையது
மட்டுமே. அவரது நகல்களின் வரிசை ஜெயச்சந்திரனில் தொடங்கி உன்னி மேனன், மது பாலகிருஷ்ணன்,
அவரது மகனான விஜய் ஜேசுதாஸ் வரை நீள்கிறது. பெருங்கலைஞர்கள் தங்கள் தொடர்ச்சியை துறை
சார்ந்த செயல்பாடுகளாலேயே உருவாக்கி விடுவார்கள் போலிருக்கிறது.
தன்னை ஒளித்துக் கொள்வதன்
மூலம் வெகுமக்களிடம் எதிர்பார்ப்பிற்குரியவராக இருப்பதற்கு முற்றிலும் மாறாக அண்டை
வீட்டுக்காரனை போல எளிதாகக் காணும் முகமாக அவரிருந்தார். பாடல் நிகழ்ச்சிகளின் நடுவராக
பலருக்கும் ஊக்கமூட்டும் முன்னிலை அவர். மழலையிலிருந்து தேர்ந்த பாடகன் வரை அவர் மதிப்பிட்டுப்
பேசியக் கானொளிகள் இணையத்தில் போதும் என்கிற அளவிற்குக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றில்
கூட எவரையும் கடிந்து பேசியிராத குறைகளைக் கூட மென்மையாக எடுத்துக் கூறுபவராகவே இருக்கிறார்.
அவர்களிடம் கூட பணிவுடன் பேசும் பாலுவின் இயல்பு உண்மையானது தானா? அல்லது வெறும் தோற்றமா?
என விவாதங்கள் நிகழ்ந்தன.
உச்ச நட்சத்திலிருந்து நேற்று
முளைத்த, இவ்வளவு ஏன் இளையராஜா என்றதுமே உருகும் கோடிக்கணக்கானவர்கள் வரை பொதுவெளியில்
புரியும் பிழைகளைக் கண்டு அவர்களது சிலைகளை அதே ரசிகர்கள் சமூக ஊடகத்தில் இரக்கமின்றி
உடைத்து வீசி இருக்கின்றனர். கடுஞ்சொற்களால் தூஷித்திருக்கின்றனர். ஆனால் இவை எதுவும்
ஒரு முறை கூட எஸ்.பி.பிக்கு ஏற்படவேயில்லை
என்பதை நினைவு கூர்ந்தால் அவர் மறைவையொட்டிக் கொட்டப்பட்ட அஞ்சலிக் குறிப்புகளைப் புரிந்து
கொள்ள முடியும்.
திரைத்துறையில் 'வெர்சடாலிட்டி சிங்கர்' என்பதற்கு முதலும் கடைசியுமான உதாரணம் எஸ்.பி.பி. மட்டுமே. டி.எம்.எஸ் தன் காலத்தில் இரு உச்ச நட்சத்திரங்களுக்கு பல்வேறு உணர்ச்சிகளுக்கு பாடியவர். ஆனால் பாலு எவ்வளவு நடிகர்களுக்கு எத்தனை விதமான உணர்ச்சிகளை, 'பா'வங்களை தன் குரலால் கொடுத்திருக்கிறார்...! ஐம்பதைத் தாண்டிவிடும். பக்கத்து மாநிலத்தையும் எடுத்துக் கொண்டால் கணக்கு இன்னும் நீளும். இளையராஜாவுக்கு பாடும் போது அவர் சொல்லிக் கொடுத்தது தாண்டி எதையும் செய்ய முடியாது. மீறினால் திருத்தி விடுவார். அதையெல்லாம் ஒட்டுமொத்தமாக கட்டி வைத்து பிறருக்கு பாடும் போது இறக்கி விடுவார் போலிருக்கிறது. 'மலரே மெளனமா..' வுக்கு வித்யாசாகருக்கு பாடிய போது ஜானகியும் இவரும் எடுத்துக் கொண்ட சுதந்திரம் தான் பிறருக்கு பாடியதில் முக்கியமான பாடலாக அதை மாற்றியது. ரஹ்மான் நிறைய அனுமதித்து வேண்டியதை எடுத்துக் கொள்வார். 'தங்கதாமரை மலரே..' பாடலில் பாத்திரத்தின் தாபத்தையும் ஏக்கத்தையும் குழைந்து கொண்டு வந்தது அதனாலும் இருக்கலாம். பாலபாரதியின்
பெயரை இன்றளவும் சொல்லிக் கொண்டிருக்கும் ‘அமராவதி’ பாடல்களில் பாலு தன்னளவில் மேலெடுத்துச்
சென்றவையும் அடக்கம். தேவாவை சொல்லவே வேண்டாம். எப்படி வேண்டுமானால் பாடலுக்குள் போய் வர விட்டுவிடுவார். 'நலம் நலமறிய ஆவல்..' பாடலை மெச்சும் போதே இன்னொன்று நினைவுக்கு வருகிறது. 'இந்து' வில் 'ஏ..ஞானம்..எப்பா ஞானம்..' பாடலைக் கேட்டால் தானே தெரியும்..! என்ன மாதிரியான சேட்டைக்காரன் இந்த குண்டுபையன் என்று. வேறு யாராவது இதை பாடியிருந்தால் பத்தோடு பதினொன்றாக போயிருக்கும்.
ஜேசுதாஸ் சாஸ்திரிய சங்கீதம் கற்றவர். பாடல்களை அதன் தெய்வீகம் மாறாமல் பாடுகிறவர். ஆனால் அவர் சில குறிப்பிட்ட வகைமை சார்ந்த பாடல்களில் விற்பன்னர் அல்லர். அவர் 'வச்சுக்கவா..'வை நன்றாக பாடினார் தான். ஆனால் அது எஸ்.பி.பி-யோ மலேசியாவோ தானே பாடியிருக்க வேண்டும் எனத் தோன்றும். 'மாசி மாசம் ஆளானப் பொண்ணு' பாடலின் எஸ்.பி.பி. பாடிய தெலுங்கு வடிவத்தை (முழுப் பொருளும் தெரியாது என்றாலும்) கேட்ட பிறகே தமிழில் ஜேசுதாஸ் தவறவிட்டது என்னவென்று புரிந்தது. 'என்னம்மா கண்ணு..'(இளையராஜா) பாடலில் எஸ்.பி.பியும் மலேசியாவும் ஜமாய்த்திருப்பார்கள் தான். ஆனால் இருவருக்கும் சுதந்திரம் கொடுத்து தன் போக்கில் விட்டுவிட்டால் ஒரு பாடலில் என்னென்ன செய்வார்கள் என்பதற்கு 'பட்டுக்கோட்டை அம்மாளு..'
(சங்கர் கணேஷ்) தான் சாட்சி.
தம் சக பாடகர்களின் மீதோ
தனக்கு பின் வந்தவர்கள் மீதோ அவருக்கு குறைகள் இருந்திருக்கலாம். அதை எங்கும் வெளிப்படுத்தியதில்லை.
நாற்பதாயிரத்துக்கு மேல் பாடியவருக்கு எப்படி பிறரின் மீது விமர்சனங்கள் இல்லாது போயிருக்கும்?
ரஹ்மானின் வருகை நான்கைந்து பாடகர்கள் மட்டுமே கொண்டதல்ல தமிழ் திரையிசையுலகம் என்பதை
அறிவித்தது. புத்தம் புதிய குரல்கள் வாய்ப்பு மறுக்கப்பட்ட/ போதிய அளவுக்குத் தரப்படாத
குரல்கள் அதன் பிறகே இசைத்தட்டுகளுக்குள் பதியப்பட்டன. மெதுவாக எஸ்.பி.பி என்கிற பேரலையின்
வீச்சு மட்டுப்பட்டது. ஆனால் ஓயவுமில்லை, ஒதுக்கி விடவுமில்லை. கொஞ்சலுக்கும் குழைவுக்கும்
காதலின் மண்டியிடலுக்கும் ஆக்ரோஷத்திற்கும் முதல் விருப்பமாக பாலுவே இருந்தார். பால்காரனும்
ஆட்டோக்காரனும் எஜமானும் சேவகனும் தோன்றுகிற முதல் காட்சிப் பாடலுக்கு அவர் தான் ஒரே
தேர்வு. ஆண்குரலில் திறமை சார்ந்து ஹரிஹரனும் சங்கர் மகாதேவனும் தவிர்த்து வேறெவரும்
அவருக்கருகில் நிற்க முடியவில்லை. ‘அழகூரில் பூத்தவளே..’(திருமலை) என கொஞ்சிய கையோடு
‘ கண்ணைக் கசக்கும் சூரியனோ..’(ரெட்) என முழங்கவும் முடிந்த பாடகர் அவர்.
ஏன் அவரது பாடல்கள் இந்தளவுக்கு
நினைவுக்கூரபடுகிறதென்றால் அவற்றிற்கு தன் குரலால் அவர் எழுதிய திரைக்கதைகளே. பாடல்
வரிகளை மட்டுமே கேட்டு பாத்திரத்தின் மன இயல்புகளை சூழ்நிலையின் நல்லது கெட்டதுகளை
உணர்ந்து விடமுடிகிற அளவிற்கான தேர்ச்சி மிக்கவர். ‘பா’வங்களை அதற்கேற்ப வெளிப்படுத்துபவர்.
மொழியின் மீது அவர் குவித்திருந்த கவனத்தை மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
தாய்மொழியல்லாத ஒன்றில் அவர் சொற்களுக்கு அளித்த ஒளி பாடல்களுக்குப் பிரகாசமளித்தது.
எனவே பிறரது தவறான உச்சரிப்புகளைத் தயங்காமல் சுட்டிக் காட்டினார். ற, ர,ன,ண,ள்,ழ்
போன்றவற்றை அதன் நயம் கெடாமல் உச்சரித்தவர் என்பதால் பிழைகளைச் சகிக்க அவரால் முடியவில்லை
போலும்.
மேடைக் கச்சேரிகளையே அவர்
தன்னுடைய ஆடுகளம் என்று கருதினார். ஏனெனில் திரைப்பாடல்கள் பலவற்றையும் ‘அப்படியே’
பாடாமல் தன் சுபாவத்திற்கு தக்க உள்ளேயும் வெளியேயும் சென்று உலவி மூச்சு விட அங்கு
அவரால் முடிந்தது. சங்கதிகளை அவர் வெளிப்படுத்தும் அழகு பார்த்துத் தீராதது. இணை பெண்
பாடகிகளிடம் காட்டும் கொஞ்சும் உடல்மொழியை செய்யும் குறும்புகளைப் பார்க்கையில் அவர்
எவ்வளவு பெரிய காதலன் என்பது தெரிந்து விடும். காதல் பாடல்களில் ஏன் அவர் துள்ளவும்
துடிக்கவும் பரவசம் கொள்ளவும் வெடித்து அழவும் வைக்கிறார் என்பதற்கான பதிலாகவும் அதை
பார்க்கலாம். தன்னை காதலிப்பவன் எப்படி தனக்காக உருகவும் கசியவும் வேண்டும் என்பதை
பாலுவே குரலால் பெண்களுக்குக் காட்டினார்.
பெண்கள் அவர் மீது கொண்டிருந்த அளப்பரிய பிரியத்திற்கு இதுவும் காரணமாக இருக்கக்கூடும்.
மேடையில் தன் இணை நன்றாக பாடினால் மனம் திறந்து அதை அறிவித்து பாராட்டக் கூடிய பெருந்தன்மையாளர்.
நேர்காணல் ஒன்றில் முகம்மது
ரஃபியை விதந்தோதிவிட்டு ரஃபியின் பாடும்முறையை வியந்து பாடிக் காட்டும் தருணத்தை மறக்கவே
முடியவில்லை. எஸ்.ஜானகியை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். பயில வேண்டும் என்பதே
அவர் பாட வந்த புதியவர்களுக்கும் பாடிக் கொண்டிருந்தவர்களுக்கும் கூறும் அறிவுரையாக
இருந்தது.
குறை என்று கொண்டால் அவரது பணிவு சார்ந்து மாற்று அப்பிராயங்கள்
கொண்ட நண்பர்கள் உள்ளனர். அவர்கள் நேரடியாகவே பார்த்த சில விஷயங்களால் அவர்களுக்கு
அவரது பணிவு அவ்வளவு உண்மையானதல்ல என்றே எண்ணமே உள்ளது. இதனாலொன்றும் எஸ்.பி.பியின்
பெருமைக்கு ஊறு நேர்ந்து விடாது.
பல பாடகர்களுக்கும் மூப்பின் காரணமாக குரல் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனையில் சேர்வதற்கு முன் வரை கூட எஸ்.பி.பியின் குரலில் பிசுறு அளவுக்குக் கூட நடுக்கம் ஏற்படவில்லை. தன் மனதில் நினைத்ததை குரலில் கொண்டு வரும் கொடுப்பினையை இறுதிவரை பெற்றிருந்த கலைஞன் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். எந்த அபகீர்த்தியும் தன் பாடும்கலைக்கு நேர்வதை அவர் காணவேவில்லை. இன்னும் வாழ்ந்திருந்தாலும் அவர் கலைக்கு எந்த பங்கமும் வந்திருக்காது. தன் கலைவாழ்வில் கொடுத்து வைத்த பிறப்பு சிலருக்கு தான் வாய்க்கும். அவர்களில் எஸ்.பி.பி என்கிற மாபெரும் பாடகன் முன்வரிசைக்காரர்.
அற்புதமான அஞ்சலி. கண்கள் கசிவதைத் தவிர்க்க இயலவில்லை.
ReplyDeleteஅபாரமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் நீங்களல என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஉணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறீர்கள் செந்தில். மனம் கலங்கி அழுது விட்டேன்.
ReplyDeleteநெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் ஓர் கலைஞனுக்கு எழுத்தாளன் தன் மையினால் தீட்டிய ஓவியமே இந்த அஞ்சலி! அருமையான எழுத்து நடை❤️
ReplyDeleteஎஸ்பிபி போல வெர்சடைல் பாடகன் அவருக்கு இணையாக இல்லை. அவர் தனக்கான இடம் என்ன என்பதை அறிந்து அதை நிறுவி அதன் மேல் படிகளுக்கு சென்று கொண்டே இருந்தார். உணர்ச்சி/பாவங்களின் முதல் பாதை டி எம் எஸ். அதனை வெவ்வேறு கோணங்களில் விரித்தவர் எஸ்பிபி. குரல்வளம் ஒரு இன்றியமையாத அம்சம். ஆனால் அவர் இசையை பக்தி பூர்வமாக வைக்காமல் நெருங்கி காதலித்தார். நாம் இது எல்லாவற்றையும் திரை இசையின் பின்னணியில்தான் பேசுகிறோம் என்பது முக்கியம். ஏனென்றால் அதற்கான இடத்தை திரைப்படங்கள் தந்தன. இப்போதுதான் கைபேசி முதல் பல வழிகளில் இசையை ரசிக்க முடிகிறது. ஆனால் முன்பெல்லாம் சினிமாவின் காட்சி, அதை தொடர்ந்து வானொலி, இசைத்தட்டு என்று இசை தனது ஓடையின் பாதையை துவங்கும். பாட்டை கேட்கும்போது காட்சி மனதில் விரியும் தன்மை அன்றைய திரையிசையின் நுட்பமான அம்சம். இந்த குதிரையில் மேலேறி அபாரமாக சவாரி செய்தது டிஎம்எஸ் என்றால் அதில் க்கேலப்ப்பின் செய்தவர் எஸ்பிபி. புதிய பரிமாணங்களை கொண்டு வந்தார். நீங்கள் சொல்வது போல தனக்கான சுதந்திரம் உள்ள இசையமைப்பாளர்களிடம் அதை பயன்படுத்தி கொள்வார். உதாரணமாக அவர் தொலைக்காட்சியில் ஒரு பாடலைப் போடும்போது கொஞ்சம் மாற்றி கமகங்களை சுழித்து பாடினார். பிறகு இதெல்லாம் என்னோட அதிகப் பிரசங்கம் என்று அறிவித்தார். இந்த கலை சுதந்திரம்தான், க்ரியேடிவிடிதான் அவரது இசை நாடி.
ReplyDeleteஇதுக்கு போயி அலட்டிக்கலாமா என்ற பாடலின் அர்த்தத்தை குரலில் காட்டியதும், பொன்னாரம் பூவாரம் பாடலில் ஒரு புது குரலை உருவாக்கி காட்டியதும், மாமன் வூடு மச்சி வூடு பாடலில் செய்த அட்டகாசமும், அதனால்தான். மேலும் பாடலில் துள்ளும் மன நிலையை கொண்டாடும் பல விஷயங்களை செய்தார். இதயத்தை திருடாதேவில் தகிட தக தகதிமி .. சிங்காரவேலன் காக காகீகு..என்று பல. மணியோசை கேட்டு எழுந்து பாடலை வேறு யாரும் பதிவிட முடியுமா ?
பாடும்போது பாவங்களை உருவாக்குவதற்கு அவர் ரபியை முன்னோடியாக கொண்டிருந்தார். அவரது டைரிகளில் பாடல் வரிகள் பக்கத்தில் பல இடங்களில் ரபி என்று குறித்திருப்பாராம். தமிழ் நேயர்களுக்கு ரபியை கொண்டு வந்தது ஒரு சூட்சுமம் கூட.
இதற்கெல்லாம் மேலாக எஸ்பிபி க்குள் ஒரு நடிகன் இருந்தான். அதனால் அவன் ராக பாவங்களை அனாயசமாக நெருங்க முடிந்தது. இதை அறிந்த மேதை விஸ்வநாத். சங்கராபரணம் பாடல்களுக்கு யேசுதாசை விட்டு, எஸ்பிபி யை தேர்ந்தெடுத்தது சாதாரண மூளை அல்ல. சாஸ்த்ரீய சங்கீதத்தை அச்சு பிசகாமல் பாடுவது பெரிய விஷயம் அல்ல. ஆனால் பாவங்களை உணர்சிகளை ரசிகனுக்கும் பார்வையாளனுக்கும் கடத்துவதற்கு எஸ்பிபி யை விட்டால் ஆளில்லை. ஆனால் இந்த விஷப் பரிட்சையில் இறங்க எஸ்பிபி தயங்கினார். அதில் ஞாயமுண்டு. அதனால்தான் விஸ்வநாத் எஸ்பிபியை அவரது சித்தப்பா மூலம் நெருக்கி சம்மதிக்க வைத்தார். பாடகனுக்கு உள்ளே இருந்த நடிகன்தான் பாடலை பிரபலமாக்கினான். பட்டி தொட்டிகளில் எல்லாம் கர்நாடக இசை ஒலித்தது அது கர்நாடகம் என்று அறியாமலேயே. சங்கரா நாத சரீராபரா பாடலில் என அவர் தொட்ட உச்சக் குரல், சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலில் மரணம் கேட்டேன் என்ற உச்சத்தில் உரசிப்போவதை உணர முடியும்.
எனக்கு ஒரு சங்கதியை என்றைக்கு பாட முடியாமல் போகிறது என்று தோன்றுகிறதோ, அன்று பாடுவதை நிறுத்தி விடுவேன் என்றார். மரணத்தின் சதி என்றாலும், மறைவுக்குப் பின்னும் கூட அவர் பாடிக்கொண்டிருக்கிறார்.