Wednesday, May 30, 2018

சகோதரிகள்(நெடுங்கதை) - முதல் பகுதிசகோதரிகள்  
                                                                                           ஓவியம் : அனந்த பத்மநாபன்


1

எவரது பார்வையேனும் தன் மேல் விழுகிறதா? என வீட்டைப் பூட்டும் முன் மீண்டும் ஒரு முறை திலகா பார்த்துக் கொண்டாள். இந்திராணி பைகளைத் தலைக்கொன்றும் இடுப்புகொன்றுமாக தூக்கியபடி திரும்பிப் பார்த்த போதும் அவளுக்குப் பீதி குறைந்திருக்கவில்லை. அடுத்த அடியில் வீடு வந்து விட்டால், அதற்குள் போய் ஒண்டிக் கொண்டுவிட்டால் குளவி போல தன்னைக் கொட்டும் கேள்விகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம் என திலகா நினைத்தாள். கைலாசம் இல்லாத வேளையில் அவளது பொருட்களை எடுப்பதற்குள் சுற்றிலுமிருக்கும் வீட்டுக்காரர்களின் ஓயாத விசாரணைகளால் சோர்வுற்றிருந்தாள். மனதிற்குள் அவனை வதம் செய்தபடியே கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலாமல் பொருட்களை எடுத்துத் திணித்தாள்.  அம்மாவும் மகளும் பேச்சற்று பேருந்துக்காக நிறுத்தத்தில் காத்திருந்தனர். வீசிய காற்றில் கலந்திருந்த ஈரத்தின் குளர்ச்சியால் அவள் நடுங்கினாலும் கூட வந்து நிற்கும் பேருந்தினுள் தெரிந்த முகம் இருப்பதைக் கண்டால் அதில் ஏறச் செல்ல விரும்பாமல் அம்மா அடுத்ததற்காகக் காத்திருந்தாள். திடுமென அம்மாவின் கையை கெட்டியாகப் பிடித்து இழுத்து சற்று தொலைவை நோக்கி திலகா விரலை நீட்டினாள். இந்திராணிக்கும் முகம் வெளிறிவிட்டது.  அது கைலாசமா? எகிறிய மனத்துடிப்பின் அதே வேகத்துடன் ஓரக்கண்ணால் அந்த நபரைக் கண்டனர். மார்பைப் பற்றி நின்ற விரல்கள் ஆசுவாசத்துடன் நிம்மதியடைந்தன. நாணயங்கள் தங்கள் காலடியில் விழுவது போல பெரிய மழைத்துளிகள்  மண்ணை நனைத்துப் புரண்டன. உண்மையாகவே கைலாசம் வந்துவிட்டால் என்ன செய்வது? என்ற அடுத்த யோசனைக்கு நேரம் தராமல் மழையைப் பொருட்படுத்தாது வந்து நின்ற பேருந்தில் ஏறி முன்வரிசைக்குச் சென்றபின்னரே பதட்டம் குறைந்தவர்களாக மூச்சு விட்டனர். இறங்கி நடந்ததும் மழைக்கு தெரு வீடுகள் சாத்தப்பட்டிருப்பதைக் கண்டு அவை திறக்கப்படுவதற்குள் நடையை எட்டிப் போட்டனர்.

தகரக்கொட்டகையின் மேல் பெரிய மழைத்துளிகள் சீரற்ற வேகத்தில் விழுவது போன்ற ஒலி சற்று தொலைவில் இடைவிடாது கேட்டதும் திலகா, அம்மாவின் தோளைப் பற்றி இறுக்கி நிறுத்தினாள். யோசனைகளின் பிடி விலக,  இந்திராணி சேலையின் நுனியை சட்டென இழுத்து முக்காடாகப் போட்டு ஒதுங்கி, அச்சத்தம் நெருங்கி வருவதற்குள் விஷேச நாட்களில் மட்டும் திறக்கப்படும் சிறிய கோவிலின் இருளான பகுதிக்குள் திலகாவைத் தள்ளிக் கொண்டு போனாள். கோவிலுக்கு வெளியே போடப்பட்டிருந்த ட்யூப் லைட்டுகள் தொடர்ந்து களவு போனதைக் கண்டு பூசாரி அவற்றைக் கழட்டி அதன் பட்டிகளையும் வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டிருந்தது அவர்களுக்கு ஏதுவாகப் போயிற்று. சத்தம் நெருங்கியதும் முகத்தை இருவரும் வேறு திசைக்குத் திருப்பி நின்றனர். அந்த பழைய டிவிஎஸ்-50 அவர்களைக் கடந்து சென்ற பின்பே ஆசுவாசமாக மூச்சு விட்டனர்.


பெய்து தீர்த்த மழை, அந்தச் செம்மண் தெருவில் மிகுந்திருந்த குழிகளை, மிகச்சிறிய குட்டைகளாக மாற்றியிருந்தது. அந்த வண்டி நடைபழகும் குழந்தையின் தள்ளாட்டத்துடனும் பாரவண்டியின் நிதானத்துடனும் அக்குட்டைகளின் மீது இறங்கி ஏறியது. தங்கியிருந்த நீர் தளும்பி வழிந்துச் சேற்றுடன் கலந்தது. ஏறக்குறைய செல்வத்தின் முதுகில் மேல் குப்புறப்படுத்தபடி விஸ்வம் பின்னால் அமர்ந்து செல்வதை இந்திராணி பார்த்தாள். பாதி அவிழ்ந்திருந்த அவரது வேட்டி அந்தச் சேற்று நீரின் மேல் அலைந்தபடி வண்டியின் பின்னால் போய்க் கொண்டிருந்தது. மகளைப் பார்த்துக் கசந்தச் சிரிப்பை உதிர்த்துவிட்டு தலைகோதுவது போல கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். திலகா வீட்டின் வாசற்படியையே கண் எடுக்காமல் பார்த்து நின்றாள். ஒன்றிரண்டு மாதங்களில் அப்பாவின் தோற்றத்தில் ஏற்பட்டு விட்டிருந்த மாற்றத்தைக் கதவுத் தட்டப்பட்டதும் வீட்டின் முன் எரிந்த மங்கலான விளக்கு வெளிச்சத்திலேயே கண்டுகொண்டாள். பொருளை இறக்குவது போன்ற லாவகத்துடன் செல்வம் அவரை இரண்டு பக்கமும் பிடித்துக் கீழே விழாமல் நிற்க வைத்தான். ஒரு கையால் வேட்டியைப் பற்றியபடி அவரது கால்கள் நிதானமின்றித் துழாவித் தரையைத் தேடிக் கண்டுபிடிக்க முயன்றன. தேம்பலுடன் இந்திராணி அந்தக் கோவிலின் முன்புறம் வந்து  இருண்ட உட்புறத்தைப் பார்த்து இரு கைகளையும் யாசிப்பது போல ஏந்தியதும் கண்ணீர் அந்நிச்சயாக வழிந்தது. அவர் அடித்துச் செதுக்கி நிறுத்திய தெய்வம் இவ்வளவையும் பார்க்காதது போல அமர்ந்திருந்தது அவளைச் சினங்கொள்ளச் செய்தது. திலகாவை அதற்கு நேரெதிராக இழுத்து நிறுத்தி பராதிகளைச் சொல்லச் சொல்ல வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்கி வெற்றுக் கேவல்கள் மட்டும் எழுந்தன. திலகா வேகத்துடன் கைகளை உதறிவிட்டு அழுத்தித் திணித்த துணிகளால் உப்பி கீழே சாய்ந்து கிடந்த பைகளைத் தூக்கினாள்.


வசந்தியும் செல்வமும் ஆளுக்கொருக் கைபிடித்து அப்பாவைக் கூட்டிச் சென்று படுக்க வைப்பதைக் கண்டதும் தீபா பயந்து போய் அக்காவின் பின்னால் ஒண்டிக் கொண்டாள். மனமின்றி வெளியே போன செல்வம் பல தடவை உதைத்துக் கிளப்ப முயன்று முடியாமல் மற்றொரு முறை வசந்தியைப் பார்க்க முடியும் என்ற நப்பாசையில் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான். அவள் தீபாவை அனுப்பினாள். சற்றுமுன் வசந்தியின் ஒரு பார்வைக்காக அவன் விஸ்வத்தைப் புரட்டுவதும் பாயை இழுத்துச் சரிச் செய்யும் பாவனையிலுமாக நின்றான். அவள் முகத்தைத் தூக்கவேயில்லை. பட்டறையில் பைக்கைக் கிளப்பி நின்றிருந்த வேறொருவனை விலக்கிவிட்டு அவளுக்காகத் தான் செல்வம் வந்திருந்தான். தலையிலும் கை கால்களிலும் படிந்திருந்த பட்டறையின் புழுதியைக் கண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவனை ஒரே தடவை தான் பேண்ட் சட்டையில் பார்த்திருக்கிறாள். பிறகெல்லாம் பட்டறைகளுக்கேயுரிய அழுக்கேறிய கைலியும் பழைய சட்டையுமாக தான் இருந்திருக்கிறான். அவன் ஆனந்தனுக்கு தூரத்து உறவுக்காரப் பையன் என அம்மா ஒரு தடவை சொல்லியிருக்கிறாள்.

அம்மாவிடம் அவனைக் குறித்துச் சொல்லுந்தோறும் கேளாதவள் போல வேறொன்றை நோக்கிப் பேச்சைத் திருப்பி விடுவாள். பள்ளிச் சீருடையை மாற்றாமல் அம்மாவுக்காகவும் அக்காவைக் காணாவும் மாலையிலிருந்து காத்திருந்த தீபா அந்த உடை முழுக்க சேற்றுநீர் தெறிக்க வண்டியைத் தள்ளியபடியே பாதித் தெரு வரை  ஓடினாள். வறட்டு இருமல் போன்ற சத்தத்துடன் கிளம்பிப் புகையைக் கக்கியபடியே சென்றது. வசந்தி அப்பாவின் உளறல்களையும் சவால்களையும் கடந்து சென்று ஜன்னல்களைக்  காற்றுக்குத் திறந்து விட்டு படுத்துக் கொண்டாள். கைலாசத்துடன் புரண்டு சண்டையிட்டப் பின் அவர் இரவில் வீட்டிற்கு வரத் தவறுவதேயில்லை. அவளுக்கு இவையெல்லாம் மரத்து விட்டிருந்தன. கைலாசத்தை அச்சத்துடன் நினைத்தபடியே  மனமின்றி அக்கா அம்மாவுடன் சென்றிருக்கிறாள். அவளுடைய பொருட்களை எந்தப் பிரச்சனையுமின்றி எடுத்து வந்துக் கொண்டிருப்பார்கள். அவனைச் சபித்து நெட்டை முறித்தபடியே முத்துக்குமாரைச் சிரிப்புடன் எண்ணிக் கொண்டாள். முத்து, கைலாசம் போல இல்லை. பெயரை நினைத்ததுமே அவன் முகம் மனதிற்குள் வந்து நின்றது. வெட்கத்துடன் அவனை உள்ளே இழுத்துப் போர்வையை தன்னோடு சேர்த்துப் போர்த்திக் கொண்டு முத்துவுக்கு மட்டும் கேட்கும் குரலில் மெல்லச் சிரித்தாள். போர்வைக்கு மேல் ரீங்காரிடமிட்டு சுற்றி வந்த கொசுக்களை விரட்ட சுருளைப் பற்ற வைக்க தீபாவைக் கூப்பிட்டபடியே எழுந்தமர்ந்தாள். அவளைக் காணாமல் வெளியே வந்த போது, தீபா நடுத்தெருவில் நின்று அந்தக் கோவிலில் இருளில் அசையும் இரண்டு உருவங்களை உற்றுப் பார்த்தபடியே நிற்பதைக் கண்டாள்.


2

அவசரமாக வீட்டை விட்டு வெளியே வந்த வசந்தி, திலகாவுக்காக வெளியே காத்திருந்தாள். அம்மாவின் தூரத்துச் சொந்தமான கதிரேசண்ணன் வந்து வாசலில் வண்டியை நிறுத்தினார். திலகா செருப்பைப் போடும் சாக்கில் அவர் கக்கத்திலிருந்த சிறிய லெதர் பையை பார்ப்பதைக் கண்டதும் சிரித்தபடியே தொட்டுக் காட்டிபையன் உள்ளார தான் இருக்கான் என்றார். வசந்தி அந்த பையை பிடுங்கித் திறந்து எட்டிப்பார்த்து விட்டு திலகாவைப் பார்த்துச் உதட்டைப் பிதுக்கினாள். அவர் கோபத்துடன் பட்டென வீட்டிற்குள் சென்று விட்டார். தெருமுனையில் சுந்தரியின் கையசைப்பு வேகமாக இருப்பதைக் கண்டு பஸ் வந்து கொண்டிருக்கக்கூடும் என யூகித்து ஓட்டத்திற்கும் நடைக்கும் இடைப்பட்ட வேகத்தில் கால்களை எட்டிப் போட்டனர்.

கதிரேசன் அந்தப் பையிலிருந்த மூன்று ஜாதகங்களைத் இந்திராணியிடம் தந்ததும் பொருத்தம் பார்க்க நூறு ரூபாய் வேண்டுமே என அவளுக்குத் திக்கென்றது. அவனை வறண்ட கண்களால் பார்த்து

நல்லாப் பொருந்தற மாரி ஏதாவதொண்ணைக் கொடு..” என்றாள்.
அவன் கண்ணை நிமிர்த்தி வெடுக்கென அவற்றில் ஒன்றை உருவித் தந்து குரலில் வெப்பம் தெறிக்க

இதயும் ஏதாச்சி நொட்டை சொல்லி தட்டிவுட்றாத..புள்ளைக்கு எத்தனை வயசாசுன்னு நெனைப்பிருக்கா.? இல்ல கட்டிக் குடுத்துட்டா புள்ள சம்பாத்திக்கறது கையவுட்டு போயிடும்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா..ஓபனா சொல்லிப்போடு என இறைந்தான்.

மாற்றமில்லாத அதே குரலில்விஷயந்தெரிஞ்சவனே ஏதோ தெருவுல போறவன் வர்றவன் மாரி பேசுனா இனி பிறத்தியாரை நொந்து யென்ன பண்றது?” என முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

குரல் தணிந்தவனாகஅங்கியும் இங்கயும் லோல்பட்டு அலஞ்சு கொண்டுட்டு வந்தா..ஒண்ணக் கொடு ஒண்ணேகாலைக் குடுன்னா கோபம் வருமா..வராதா..? வெலீல போய் பாரு.. ஒரு நடை வந்துட்டுப் போனா முன்னூறு ரூபா தரோணும்..தெரியுமா..?” என நீட்டி முழக்கினான்.

அவள் கேட்காதவள் போல உள்ளே போய் ரேஷனுக்கு எடுத்து வைத்திருந்த ஐம்பது ரூபாயை எடுத்து வந்து தந்துசாப்புட்டுட்டு போ..” என்றாள்.

அவன் இளக்காரமாகப் பார்த்துஇதெல்லாம் என்னாத்துக்குப் பத்தும்னு நெனைக்கற..?எந்தலையெழுத்து..” என சலிப்புடன் வாங்கி நோட்டை விரித்து ஓட்டை, ஒட்டு எதுவுமில்லை என உறுதிசெய்த பின்பாத்துட்டுச் சொல்லு என சலித்தபடியே போனான்.

உள்ளே வந்து பெயரையும் ஊரையும் பார்த்ததுமே வேறொருவரின் வழியாக ஏற்கனவே வந்து திகையாமல் போன ஜாதகம் எனத் தெரிந்துவிட்டது. அவனைப்பிடிக்க வெளியே வருவதற்குள் வண்டி பாதித் தெருவைத் தாண்டி விட்டிருந்ததைக் கண்டாள்.

இந்த ஜாதகக்காரனின் வீட்டார் கேட்ட பத்து பவுனைப் பேசி சரிகட்டியதும் எட்டுக்கு வந்து நின்றார்கள். அவளிடம் மூன்று தான் இருந்தது. நான்கு பவுனுக்கான பணத்தையேனும் திரட்டிவிட வேண்டும் என இந்திராணி பசி கொண்ட விலங்கு போல மூர்க்கமாக அலைந்தாள். இவளுக்குப் பின் வசந்திக்குப் பார்த்து முடிக்க வேண்டும். இரவும் பகலும் அவளுக்கு இதே யோசனை தான். தூக்கமே வருவதில்லை. திலகாவிடம் சொல்லி கம்பெனியில் கேட்கச் சொன்னாள். வசந்தியின் நகைச்சீட்டைக் கணக்கிட்டுப் பார்த்தும் போதவில்லை. திலகாவுக்கு இது உறுதியாகிவிடும் என்ற நம்பிக்கைத் துளிர்விட்டது. அவன் பெயரையெல்லாம் கேட்டுத் தெரிந்து வைத்திருந்தாள். சுந்தரி அதைச் சொல்லி சீண்டும் போது செல்லமாக அவளை அடித்தாள். பராரி போல அலைந்து உறவினர் தெரிந்தவர் வீடுகளுக்குச் சென்று ஏதுமின்றி பித்து பிடித்தவள் போல அம்மா வருவதைப் பார்த்ததும் தான் திலகாவுக்கு உண்மை உறைத்தது. குளிக்கும் போது ஒருவருக்கும் தெரியாமல் அழுதுவிட்டு வந்து எதுவும் உண்ணாமல் கிளம்பி நடக்கையில் மீண்டும் குமுறி வந்த அழுகையை கட்டுப்படுத்த வசந்தியின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.


3

கம்பெனிக்குள் நுழைய வேண்டிய நேரம் கடந்து விட்டிருந்ததால் ஓட வேண்டியிருந்தது. வசந்தியை வழியிலேயே அவள் கம்பெனி பையன் வண்டியை நிறுத்தி ஏற்றிக் கொண்டான். இன்னொரு ஆளின் பைக்கை திலகாவுக்காக நிறுத்தி போது தலையாட்டி மறுத்துவிட்டு வேகமாக நடந்தாள்.

திலகா படியேறிக் கம்பெனிக்குள் செல்வதைக் கண்டதும் மணிகண்டன் அவசர அவசரமாக தலைமுடியை ஒதுக்கி சிரித்தபடி பின்னாலேயே போனான். வசந்தி போல தன்னால் பிறரிடம் சகஜமாகப் பழக முடியாமல் ஏன் இவ்வளவு சங்கோஜம் என நொந்தபடி செக்கிங் டேபிளுக்கு சென்றாள். திலகா இந்த ஆறு வருடத்தில் இரண்டு கம்பெனிகள் மட்டுமே மாறி அதே செக்கிங் செக்ஷனில் தான் நின்று கொண்டிருக்கிறாள். மூன்றே வருடத்தில் வசந்தி மாறிய கம்பெனிகளை ஒரு தடவைக் கேட்ட போது அவளாலேயே சொல்ல முடியாமல் சிரித்தாள். இரண்டாம் வருடத்திலேயே சிங்கர் டெய்லரும் ஆகிவிட்டாள். ஆனால் கடைசியாக வேலை பார்க்கும் கம்பெனிக்கு நான்கு மாதங்களுக்கு மேல் போய்க் கொண்டிருக்கிறாள். அவன் பெயரை கண்மூடி ஞாபகத்திற்குள்ளிருந்து துழாவினாள். நேற்று தன்னிடம் மழுப்பலான தொனியில் அவனைப் பற்றி பாதி சொல்வதற்குள் அம்மா வந்து விட்டிருந்தாள். தன்னைப் போல வசந்தி பெண்பார்க்கும் படலத்திற்கென அலங்கரித்துக் கொண்டு வந்து நின்று வணங்கி பிறகு அவர்களின் பதிலுக்காக காத்திருக்க தேவையிருக்காது என நினைத்துக் கொண்டாள்.

பெரிய குரலில் அறை அதிர அதிர பேசுவதையும் சிறிய பிரச்சனைக்குக் கூட முகஞ்சுளிக்கும் கெட்ட வார்த்தைகளைச் சொல்லி திட்டுவதையும் கேட்ட பிறகு மணியுடன் பேசுவதற்கு தயங்கினாள். கம்பெனியில் இது போன்ற வசவுகள் காற்று போல சகல இடங்களிலும் உலவிக் கொண்டிருக்கும். திலகா காதில் விழாதது போன்ற பாவனையுடன் மும்மரமாக வேலை பார்ப்பாள். கட்டிங் மாஸ்டர்களுக்கே உண்டானக் காய்ப்பேறிய விரல்களால் அவன்  டேபிளில் தாளமிட்டுத் தான் நிற்பதை அவளுக்குச் சொல்லும் போதும் அவள் நிமிர்வதில்லை.

சுந்தரி குடித்த டீ தம்ளர்களை ஓரமாக வைத்த பின் செக்கிங் டேபிளில் லைட்டைப் போட்டுப் பீஸை விரித்தபடி நின்றிருந்த திலகாவிடம்என்ன பதில்னு கேக்கச் சொல்றான். பக்கத்துல வந்தாவே விலகி ஓடீற்றயாம்..’ என அருகில் வந்து நின்று முகத்தைப் பார்த்தாள். ‘கடிச்சு திங்கமாட்டாங்கெடுஎன தோளை இடித்த போதும் கேட்காதவள் போல சிறிய ஓட்டை கொண்ட பீஸைக் குறியிட்டுக் கீழே தள்ளிவிட்டபின் சுந்தரியை உற்று பார்த்தபடியே அடுத்த கட்டுகளில் ஒன்றை உருவி பிரித்துப் போட்டுப் பார்க்கத் தொடங்கினாள். அவள் விலகிச் சென்றாள். கைக்குழந்தையோடு அல்லாடுபவளை விட்டுவிடக்கூடாதென நினைத்தே பழகிக் கொண்டிருக்கிறாள். சுந்தரியை வளைக்க கம்பெனிக்குள் மூன்று நான்கு பேர் சுற்றி வருவது பலருக்கும் தெரியும். அவளும் மூவரிடமும் ஈடுகொடுத்து பேசுவாள். சுந்தரியின் சிரிப்புச் சத்தம் தைக்கும் இடத்திலிருந்து கேட்டது. திலகா பெருமூச்சுடன் நிமிர்ந்து ஒரு கணநேர தயக்கத்துக்கு பின் அடுத்த கட்டை பிரித்து டேபிள் மேல் போட்டுக் கொண்டாள்.   

பண்டிகைக்காலங்களில் மட்டும் கூட்டம் முண்டும் சிறிய ஜவுளிக்கடையில், பிற நாட்களின் பகல்நேரத்துச் சொற்ப வாடிக்கையாளர்களுக்கு புடவை விரித்துக் காட்டி மடித்து வைக்கும் வேலைக்குச் சென்று கொண்டிருந்த சுந்தரியைத் திலகா தான் கம்பெனிப் பக்கமாகக் கூட்டி வந்தவள். பயந்த முகத்தோடு கண்ணெடுக்கும் தூரத்துக்கு நிற்கும் மிஷின்களிலிருந்து எழும் இரைச்சல்களைக் கேட்டு இமை கொட்ட மறந்து நின்ற சுந்தரி, அடுத்த ஆறாவது மாதத்தில் சிங்கர் டெய்லர் பையன் ஒருவனைக் கட்டிக் கொண்டாள். அடுத்த சில வருடங்களிலேயே அவளது இரண்டு வயது குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு மறுபடியும் வேலைக்குத் திரும்பும்படி ஆகிவிட்டது.

அவன் தனியாக கான்ட்ராக்ட் எடுத்துச் செய்யும் இடத்தில் வேறு பெண்ணுடன் பழக்கம் உண்டாகி அவளுடன் சென்று விட்டான். சுந்தரி அந்த பெண்ணின் வீட்டு முன் நின்ற போது ஏற்கனவே அவளுக்கிருந்த குழந்தைகளில் ஒன்று அவன் சட்டையை போட்டபடி வாசலில் நிற்பதைக் கண்டாள். அவன் செருப்பு வெளியே கிடந்ததைக் கண்டதும் சுந்தரியின் குரல் உயர்ந்தது. அந்தக் கத்தலுக்கு பதிலே இல்லாமல் போனதும்

தேவிடியா பின்னால ஏன்டா ஒளிஞ்க்கிட்டுக் கிடக்கற..தொண்டு நாயி என வீட்டின் வெளிச்சுவர் அதிர சத்தம் போட்டாள்.

வப்பானோளிமுண்ட..! யாரத்தேவிடியாங்கற..பிஞ்சு போயிரும்..” என்றபடியே அவள் வெளியே வந்தாள். அதற்குள் சிறு கூட்டம் கூடிவிட்டிருந்தது.

குடியெக் கெடுத்த முண்ட..ஊர் மேயறவனை உன் இதுக்குள்ள கொண்டு போய் வைச்சிருக்கறயா?” என கத்திய சுந்தரி அவள் உருவத்தை அளந்து உள்நோக்கி கழுத்தை நீட்டிஅட..எருமைநக்கி நாயி.. வாடா வெளியிலே எனக் கூப்பாடு போட்டாள்.

அவள் சுந்தரியின் அருகே வந்து சேலையைத் தூக்கிக் காட்டி உதறிபாத்துட்டீயல்லோ..மூடீட்டு எடத்தக் காலி பண்ணு..நின்னைனா அறுத்துக் கைல கொடுத்துருவேன்..” என்றாள்.

சுந்தரி அறுக்கப்பட்ட ஆடு போல உள்ளே துடித்தாள். துடைக்கத் துடைக்க வழியும் கண்ணீரோடு

இந்த மாரி பொம்பளையோடவா குடித்தனம் பண்ற..த்தூ..எச்சக்கல..ஒம் மேலெல்லாம் புழுத்துச் சாவ..” என தூற்றி விட்டு காய்ந்த கன்னத்துடன் திரும்பினாள். சுந்தரி அந்த ஞாயிறுக்கிழமை நேராக திலகாவைப் பார்க்க வந்து இறுகிய முகத்துடன் இதைச் சொன்னாள். அவளுக்கு சோறு போட்டு வைத்து மாலை வரை பேசிச் சமாதானம் சொல்லி அனுப்பி வைத்த பின் ஆண்களைக் கண்டால் திலகா முன்னை விடவும் விலகிச் சென்றாள்.


4

மறதியாலோ அலட்சியத்தாலோ கவனிக்காமல் விட்டிருந்தது இந்திராணிக்குத் தாமதமாகத் தான் உறைத்தது. வசந்தி மாதத்தின் மூன்று நாள் அவதிக்கு துணி கேட்ட போது பகீரென்றது. அவசரமாகக் கிழித்து முகம் பார்க்காமல் கொடுத்து விட்டு உள்ளே சென்ற சில நிமிடங்களுக்குப்பின் கண்களில் மிரட்சியும் அவமானமுமாக சீரக டப்பாவைக் கிளறி பணத்தை எடுத்துக் கொண்டு முதுகு தேய்க்க வசந்தி அழைக்கும் சத்தம் கூட காதில் விழாமல் உதடு நடுங்க அவர்களுக்குப் போட்டு அனுப்ப ஆறவைத்த சோற்றை வேகமாகத் தாண்டிச் சென்றாள். விஷயம் உறுதி எனத் தெரிந்ததும் கலைத்துவிடச் சொல்லி மன்றாடினாள். திட்டித் திருப்பி அனுப்பினர். என்ன செய்வதெனத் தெரியாமல் ஆஸ்பத்திரியின் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருந்தாள். சுற்றிலுமிருப்பவைகள் அணைந்து போக தான் மட்டும் நடந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பில் தனக்குள்ளாகப் பேசியபடி போய்க் கொண்டிருந்தாள்.

அந்தப் பகல்பொழுதாகத் தான் இருக்க வேண்டும். போதையோடு அவளை இழுத்துச் சாய்த்த விஸ்வத்தின் பிடியை விலக்க போதிய பலம் இருக்கவில்லை. பட்டறைக்கு நீண்ட நாள் கழித்து வந்திருந்த பழைய ஆள் ஒருவன் விஸ்வத்தை கள் குடிக்கக் கூட்டிப் போனான். அவன் பேசிய ஏதோவொன்றால் உசுப்பப்பட்டு நேராக வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினார். 

அன்று  அமைதியாகச் சிறு எதிர்ப்பிற்கு பின் நெகிழ்ந்து கொடுத்தது நினைவில் எழுந்தது.  குளித்து வந்ததும் அதே படுக்கையில் வேட்டி விலகக் குறட்டையிட்டுக் கொண்டிருந்த விஸ்வத்தை எழுப்பிச் சோறிட்டாள். அவளுக்கு துளியும் மிச்சம் வைக்காமல் அவரே தின்று அப்படியே பின்னால் சாய்ந்து மீண்டும் தூங்கிப் போனார். சுற்றி வந்தமர்ந்தக் கொசுக்களை விரட்டி விட்டு விலகிக் கிடந்த வேட்டியை வெட்கத்துடன் சரிசெய்து போர்த்தி விட்டாள்.

தன்னை நினைத்து இந்திராணி வெறுத்துத் துப்பினாள். தெருவுக்குள் நுழைந்ததும் அதை நினைக்ககூடாதென்பது போல சேலைத் தலைப்பில் முகத்தை அழுந்தத் துடைத்தாள். தெருவில் நின்றிருக்கும் ஆட்களைக் கவனிக்காதவள் போல அவளுக்கு தண்ணீர் பிடிக்க லைன் வந்து விட்டதைச் சொல்லிக் கூப்பிட்டதைக் கேட்டு நீர் பிடிக்காமல் வெறுங்குடத்தைத் தூக்கிச் செல்வதை வியப்பு அகலாத கண்களுடன் பிறர் பார்ப்பதையும் கண்டுகொள்ளாமல் உள்ளே வந்து தாழிட்டதும் கண்களை மூடி ஆசுவாசமாக மூச்சு விட்டாள்.

வேலை முடிந்து சோர்ந்த முகத்துடன் அசதியாக வந்த திலகாவைப் பார்த்ததும் தீயை மிதித்தவள் போல ஆனாள். அவள் உடைமாற்றும் முன்பே,
எங்கெங்கையோ சுத்தீட்டு வந்துட்டு எப்படி மாடு மாரித் தூங்குதுன்னு பாரு. எலவு..! இதையெல்லாம் வூட்டுக்குள்ளயே வுடக்கூடாது..த்தூ..” என வெறுப்புடன் பேசியபடியே போய் அவர் விழித்து விடக்கூடாதே என பதைபதைப்பில் ஓரக்கண்ணால் பார்த்தாள்.


சமாதானம் கூறும் குரல்களின் அடியில் ஒளிந்திருக்கும் கேலியை எப்படி செறித்துக் கொள்வதென்ற யோசனையுடன் அமர்ந்திருந்தாள். அழுகையும் ஆத்திரமும் மாறி மாறி வந்து போயின. பல நூறு விதங்களில் தன் மகள்களிடம் இதைச் சொல்வது போலவும் அவர்கள் நடந்து கொள்ளச் சாத்தியமான முறைகளையும் ஒத்திகை பார்த்தபடியே இருந்தாள். ஆனால் அவர்களின் முகத்தைப் பார்க்க நேரும் அந்த ஒற்றைத் தருணத்திற்கு தெய்வங்களைத் துணைக்கழைத்துக் கொண்டிருந்தாள்.

5

இருண்ட வீட்டினுள் நுழைந்து விளக்கிட்டதும் வெறுந்தரையில் கையைத் தலைக்கு அண்டக்கொடுத்து சுருண்டு படுத்திருக்கும் அம்மாவை வசந்தி பதறியபடியே எழுப்பினாள். திலகா அவள் கழுத்தையும் நெற்றியையும் தொட்டுப் பார்த்தபின் தொங்கிக் கிடந்த தலையை நிமிர்த்தினாள். அக்கறையற்றவளாக அம்மா முதுகைக் காட்டியபடி சுருண்டுகொண்டாள். அவர்களாகவே சோறிட்டு பாத்திரத்தைக் கவிழ்த்த போது விஷயத்தைச் சொல்லும் தெம்பின்றி மகள்களின் பையைத் திறந்து டிபன்பாக்ஸ்களை விளக்கி வைத்து விட்டு ஒரு சொம்பு நீரை வாயெடுக்காமல் குடித்து படுத்துக் கொண்டாள். பத்து மணிக்கு கதவு தட்டப்பட்ட போது சர்பம் போலச் சீறி எழுந்துஅவன உள்ள விடாதே.. அப்படியே தொரத்தி வுடு என ஆங்காரமாக கத்தினாள். விஸ்வத்திற்கு பதிலாக வெளியே க்ளினிக்கிலிருந்து வந்த பெண் நின்று கொண்டிருந்தாள்.

மறந்து போய் பணங்கொடுக்காம வந்துட்டீங்கக்கா..இப்ப தான் ஷிப்ட் முடிஞ்சுதா..அதான் வாங்கீட்டு போலாம்னு வந்தேன்..” என வசந்தியை பார்த்து சிரித்தபடியே இந்திராணியிடம் சொன்னாள். வசந்தியோடு படித்தவள் அவள். அம்மா உறைந்து செய்வதறியாது நிற்பது வினோதமாக திலகாவுக்குத் தோன்றியது.

வந்த பெண்ணை வெளியே கூட்டிப்போய் நிறுத்தி பேசியபிறகு திரும்பிய வசந்தி சற்று முன் இந்திராணி துலக்கி வைத்த பாத்திரத்தை சுவற்றோடு வீசி அடித்தாள். அவள் காலடியில் விழுந்தது. எட்டி உதைத்ததும் எகிறி விழுந்து உருண்டு அடங்கியது. திலகா அவள் பின்னாலேயே போய்யென்னடீ..யென்னனு சொல்லீட்டுக் குதி..” என்றதும்ரெண்டு பேரும் கெளவி ஆகறவரைக்கும் சம்பாரிச்சுப் போடலாம். புதுப்பொண்ணும் மாப்பிள்ளையும் லூட்டி அடிக்கெட்டும்..” என மூச்சு வாங்கினாள். “ரெட்டக் கொழந்தையா பெத்துப் போடு..ஆளுக்கொண்ணை வளத்தறோம்..” எனச் சொல்லச் சொல்ல சுவரில் தொங்கிய கண்ணாடியில் திலகாவின் பிம்பத்தைக் கண்டு வசந்திக்கு அழுகை முட்டியது. சென்ற வாரம் தான் திலகாவுக்கு பொருத்தற்கென முதல் ஜாதகம் வந்திருந்தது. மேலும் மூர்க்கமாகி

அதைச் சாப்பிடுறேன்..இதைச் சாப்பிடுறேன்..தொங்கறேன்னு ஏதாவது ட்ராமாக்கீது போட்டீன்னா..” என சிவந்திருந்த கண்களை மேலும் பெரிதாக்கி மிரட்டியபிறகு வசந்தி எதுவும் பேசாமல் போர்வையை முகத்துக்கும் இழுத்து விட்டு படுத்துக் கொண்டாள். சில நாட்களிலேயே செய்தி அறிந்து சிரிப்போடு கூடிய அறிவுரைகளை இருவர் காதுக்கும் கேட்கும்படி சுற்றியிருந்தோரால் சொல்லப்பட்டது. இந்திராணி வெளியிலேயே வரவில்லை. திலகாவின் கோபமனைத்தும் அம்மா அவள் காலில் விழுந்து கதறி அழுததும் காணாமல் போயிற்று.

விஷயம் கேள்விப்பட்டு வந்து வெளியே நின்று கத்தி பேசிய கதிரேசண்ணன் இதென்னடா கூத்தா இருக்கு! வளைகாப்பு எப்போ..? அரைக்கிழவி ஆன புள்ளைக வெடச்சுக்கிட்டு நிக்கும் போது கெரகம். இதெல்லாம் ஒரு குடும்பம்..! ச்சீய்..?” என பலருக்கும் கேட்கும்படி சத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

அப்படித்தான்..மூடீட்டு போ..” என வசந்தியின் பதிலைக் கேட்டு அவனை விடவும் இந்திராணி தான் ஆச்சரியத்துடன் கண் விரிய நின்றாள். அப்பாவை வீட்டுப்பக்கமே வரக்கூடாது என பட்டறை ஆட்களிடம் வசந்தி சொல்லி அனுப்பினாள். மகள்கள் இல்லாத பகல்வேளையில் பார்க்க வந்திருந்த இந்திராணியின் உறவுக்காரியொருத்தி

இதுவாவது பையனாப் பொறந்து வுழுந்துகிடக்கிற குடும்பத்தை தூக்கி நிறுத்தப் போகுதோ என்னவோ..அது தான் அந்த ஆண்டவன் இத்தன வருசங்கலிச்சு இப்படியொன்னை பண்ணியிருக்கறானோ..’ என விரலிடுக்கிலிருந்த சுண்ணாம்பை வெற்றிலை மேல் தேய்த்தபடியே அவளைப் பார்த்தாள்.

இந்திராணியின் மனதிற்குள் இருந்ததைப் படித்துச் சொன்னது போல இருந்தது. க்ளினிக்கிலிருந்து எங்காவது ஒழிந்து போய் விடலாம் என அலைந்த போது சட்டென தோன்றிய இந்த எண்ணம் தான் அவளை வீட்டிற்கு இழுத்து வந்திருந்தது. இருவரிடமும் ஏச்சும் பேச்சும் பெற்று வாங்கித் தின்று கிடப்பதை மகன் வந்து மாற்றுவான் என எண்ணுமளவிற்குக் கற்பனையை வளர்த்திருந்தாள். உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் மகனைப் பேணுவதற்கு அவர்களுக்குத் தெரியாமல் கடன் வாங்கினாள். தன் ஜாதகப்படி மகன் பிறந்தால் மீண்டு விடுவேன், யோகம் தொடங்கிவிடும் என விஸ்வம் குடியில் உளறிக் கூக்குரலிட்டுச் சிரித்ததாக இந்திராணிக்குத் தெரிய வந்தது. காட்டிக் கொள்ள முடியாத சந்தோஷம் அவள் கண்களில் வெளிப்பட்டு மறைந்தது. பல நாட்கள் தொடர்ச்சியாக வசந்தி இந்திராணியிடம் கடுமையாக நடந்த கொண்ட போது திலகா அவளைக் கூட்டிப்போய் அம்மா இல்லாதிருந்தால் என்னவாகியிருப்போம் என கம்மிய குரலில் கேட்டாள். பிறகு வசந்தியிடம் எந்த எதிர்ப்பேச்சும் எழவில்லை. அவர்களிருவரும் வீட்டிலிருந்த ஞாயிறுக்கிழமைஎஞ் சாமி...” என திலகாவை அழைத்தபடியே அப்பா சாராயவாடையுடன் நுழைவதைக் கண்டு வசந்தி ஒன்றும் சொல்லாமல் அலுமினிய பக்கெட்டில் ஊறப்போட்டிருந்த அந்த வாரத்துத் துணிகளை ஒருபக்கமாகச் சாய்ந்து தூக்கியபடி துவைக்க எடுத்துப்போனாள்.

அம்மா வலியெடுத்த பின்பும் ஆஸ்பத்திரிக்கு வர மறுத்து பிடிவாதத்துடன் ஆர்பாட்டம் செய்வதைக் கண்டு ஏனென்று புரியாமல் வசந்தி பேதலித்த முகத்துடன் ஓடினாள். சமிக்ஞைகள் எதுவும் இந்திராணிக்கு நம்பிக்கையை அளித்திருக்கவில்லை. அவள் வயிறு வழக்கத்துக்கும் அதிகமாகவே மேடிட்டிருந்தது. அது பெண் குழந்தை என்பதற்கான அறிகுறியென பார்க்க வந்திருந்தவர்களில் ஒருத்தி சொல்லி விட்டுப் போனாள். டாக்டரிடம் கேட்டு அது பொய் என அறிந்ததும் மனதின் வேறொரு பகுதி அது உண்மையாக இருந்து விட்டால் என்ன செய்வது? என குழப்பி விட்டிருந்தது. குறித்த நாளுக்கும் அதிகமாக நாள் கடந்த போதும் வலியேதுமின்றி வெறித்து அமர்ந்திருந்தாள். திலகாவும் வசந்தியும் குறித்த நாளுக்கு பின்னர் பிறந்தவர்கள். எனவே ஒரு வேளை அந்த அம்மா சொன்னது உண்மையாக இருக்குமோ என அஞ்சி பதட்டமடைந்தாள். கனக்கும் இரு சுமைகளைத் தாங்க முடியாமல் தள்ளாடுகையில் மேலுமொரு சுமையா என திகைத்து விட்டாள்.

நெஞ்சு விரிய கேவி அழுவதைக் கண்டு திலகா அம்மாவை தன் மடியில் போட்டு தலையைக் கோதி துடைத்தபடி எதற்கழுகிறாள் எனத் தெரியாமல் முகத்தில் படர்ந்திருந்த வியர்வை துடைத்து விசிறி விட்டாள். அப்படியே இறந்து போய்விட்டால் என்ற எண்ணம் எழுந்ததுமே இந்திராணி நிம்மதியாகக் கண்களைத் திறந்தாள். கையைப் பற்றி இழுத்த போதும் வலியால் துடித்தபடியே வர முரண்டு பிடித்தாள்.

வசந்தி மருத்துவச்சியைக் கூட்டி வருகையில் வீட்டின் முன் ஆட்கள் கூடி நிற்பதைக் கண்டு அவளை விட்டுவிட்டு வேகமாக முன்னே சென்றாள். இந்திராணி வாசல்படியைத் தாண்டும் முன்பே பிறந்து விட்டிருந்த குழந்தையை ஏந்தியவாறு திலகா சிரிப்பும் கண்களை மறைத்த நீருமாக நிற்பதைப் பார்த்தாள்.  வசந்தி குனிவதைக் கண்டுதங்கச்சி பொறந்திருக்கா..’ என்ற குரல் வெளியேயிருந்து கேட்டது. பின் அது நீண்ட சிரிப்பாக மாறியது. மருத்துவச்சித் தொப்புளை வெட்டிச் சுத்தம் செய்து கிளம்பும்வரை அம்மா ஏன் வராமல் முரண்டுபிடித்தழுதாள் என திலகா தன்னுள் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் கிளம்பும் போது கண் விழித்துக் கிடந்த  அம்மாவின் வாடிய முகத்தைப் பார்த்துகண்டவனோட படுத்தா பெத்திருக்கற.. கட்டுன புருஷங்கூடத்தானே..பின்னயெதுக்கு கூலுகூலுன்னு அழுதுக்கிட்டிருக்கற..ச்சீ.. வாய மூடு..” என அதட்டியபிறகு அடங்கினாள். பிறந்த குழந்தையை முகஞ்சுளுக்கி ஒதுக்கிய அம்மாவைக் கடிந்து வழிக்கு கொண்டு வந்ததும் அதற்குப் பெயர் இட்டதும் திலகா தான். அவள் தான் பலமாதங்கள் காபந்து செய்தாள். அவள் சிறிது வளர்ந்த பின் திலகாவின் வருகைக்காக வாசலில் அமர்ந்து ஓயாமல் எட்டிப் பார்த்து விட்டு வந்து அம்மாவிடம் சொல்வது வழக்கமாயிற்று. மூத்த இருவரை விடவும் தீபா அழகுடன் இருப்பதைக் கண்டு அவர்கள் இல்லாத போது இந்திராணி ஓயாமல் முத்துவாள். கிழவியின் நெற்றிப்பொட்டு போல அகலமான கருஞ்சாந்தை திருஷ்டிக்கு கன்னத்தில் வைத்த பின்பே வெளியே எடுத்து வருவாள். தீபாவுடன் விளையாடும் மூத்த மகள்களைக் கண்டு இந்திராணி பொய்யாக குழந்தையை அதட்டுவாள். மூவரையும் வட்டமிட்டு அமரச்செய்து வரிசையாக தீபா முத்தியபடியே இருந்ததைக் கண்டு இந்தச் சிரிப்புச் சத்தமும் சந்தோஷமும் அப்படியே நிலைத்து இங்கேயே தங்கிவிடக்கூடாதா என அவளுக்குத் தோன்றும். ஒவ்வொருவரையும் போல அவள் நடித்துக் காட்டுவாள். அடிக்கத் துரத்துவார்கள். அகப்பட்டதுமே அவர்களுக்கு முத்தம் தந்து சரிசெய்வதை உணர்ந்து இருவரும் பூரிப்புடன் முன்னிலும் வேகமாக அவளைத் துரத்துவார்கள்.

6

கைலாசம் நிற்கும் இடங்களிலெல்லாம் சிரிப்பொலி கேட்கும். அவ்வப்போது ஏறிட்டுப் பார்ப்பாள். அவன் தலை தூக்கியதுமே திலகா வேகமாக நகர்ந்து விடுவாள். உள்ளூர அவனைப் பிடித்தானிருந்தது. சுந்தரி வந்து மீண்டும் ஒரு தடவை கேட்ட போதும் தட்டிக் கழித்து விட்டிருந்தாள். தீபா பிறந்து நான்கு வருடங்கள் ஓடி விட்டிருந்தன. கன்னத்தில் விழும் மங்கு மறைக்க திலகா முன்னை விடவும் கூடுதலாக மஞ்சள் பூசிக் குளிக்க வேண்டியிருந்தது. வசந்திக்கு வீட்டின் மீதிருந்த பயம் கூட இப்போது இல்லாமல் போய்விட்டது. ஒரு மதியம் திலகாவை அழைத்துப் போய் முத்துக்குமாரை அவனுக்குத் தெரியாமல் காட்டினாள். கைலாசத்தைப் பற்றி அவளிடம் சொல்லலாமா என ஒரு கணம் தோன்றியது. ஆறு மாதங்களுக்கு முன் வசந்தியின் கம்பெனியில் அயர்ன் செய்து கொண்டிருந்தவன் அவன். எந்நேரமும் மானிக்செந்தும் பான்பராக்கும் மென்று நடக்கும் வழியெங்கும் துப்பி வைப்பவனைப் பற்றி அவள் ஒரு முறை எரிச்சலுடன் சொன்னாள். இவனாகத் தான் இருக்கும். வசந்தி அவனைப் பற்றி குற்றங்குறையாக ஏதேனும் சொல்லிவிட்டால் தாங்க முடியாதென முத்துவை பற்றி மட்டும் கொஞ்சமாக விசாரித்து விட்டு வந்து விட்டாள். திரும்பி வருகையில் கடைவாயில் அதக்கிய பாக்குடன் பேப்பரை விரித்துப் பிடித்தபடி அவளையே பார்த்துக் கொண்டு நின்றதைக் கண்டாள். மணிகண்டனைப் போல இவனும் கைநழுவிப் போய் விடுவானோ? என்ற பதட்டம் அவள் நடையில் இருந்தது. யாரிடமோ சொல்வது போலபாக்கு போடறவங்க உள்ள வரக்கூடாது என்றபடி திரும்பி பார்த்துவிட்டு வேகமாக உள்ளே போனாள். தன்னிடமா? என நம்பமுடியாதவனாக கைலாசம் அவள் பின்னாலேயே சென்றான்.

வசந்தியை முன்னே செல்லவிட்டு சில நாட்கள் கைலாசத்தோடு பேசியபடி திலகா நடந்து செல்வாள். அவனுக்காக திலகா விடிகாலையிலேயே எழுந்து சமைத்து எடுத்து வருவாள். அம்மா காணாதவள் போல வேலைகளைப் பார்ப்பாள். கூட்டம் குறைவாகவுள்ள சினிமாவுக்கு வசந்திக்கும் சேர்த்து மூன்று டிக்கெட்டுகளோடு வந்து அழைத்தான். முறைத்த கண்களை அவனை விட்டு விலக்காமலேயே மூன்றையும் கிழிக்கப் போய் அவன் கெஞ்சலுக்குப் பின் ஒன்றை மட்டும் கசக்கி எறிந்தாள். திரையரங்கின் சிறிய வெளிச்சத்தில் அவனை அளவாக அத்துமீற அனுமதித்தாள். பின்னர் வசந்தியை அவனுடன் நடக்க அவள் விடவேயில்லை.

திலகா அரைமணி தாமதமாக வீடு திரும்புவதைக் கூட இந்திராணி கண்டுகொள்ளவில்லை. கைலாசம் அவளுடன் பேசியபடி வந்து தெருமுனையில் விட்டுச் செல்வதை பார்த்தபின்பும் அதைக் கேட்க பயந்தாள். அவனைப் பார்த்ததுமே இந்திராணிக்கு பிடிக்கவில்லை.  சுந்தரியிடம் திலகாவுக்குத் தெரியாமல் கேட்டுப் பார்த்தாள். வேறு பக்கம் யோசிக்கவிடாமல் அவளை மற்றொன்று தடுத்தது. திலகாவுக்கு ஜாதகங்கள் வருவது நின்று போய் இரண்டு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. திலகா மணமாகாமல் இருக்கையிலேயே வசந்தியைக் கேட்டு வந்தவர்களை பிறிதொரு காதுக்கு விஷயம் எட்டாதவாறு மென்மையாகப் பேசித் திருப்பி அனுப்பினாள்.

சில தினங்களுக்குப் பின் கைலாசம் வீட்டு வாசலிலேயே அவளை இறக்கி விட்டுப் போனான். மறுநாள் காலையில் ஹாரனை உரக்க ஒலிக்கவிட்டபின்னும் பதில் இல்லாததால் பைக்கில் அமர்ந்தபடியே திலகாவை பெயர் சொல்லி அழைத்து கண்ணாடியில் தலைமுடியை சரிசெய்வதை இந்திராணி பார்த்து உள்ளே அழைத்து டீ கொடுத்து சம்பிரதாயமாக விசாரித்தாள். அவன் இந்திராணிக்கு பின்னால் நின்று கொண்டிருந்த திலகாவையும் அவள் குனியும் போது வசந்தியையும் மாறி மாறி பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தான். அடுத்த வாரம் இந்திராணி, குறித்த கிழமையில் சொன்ன நேரத்திற்கு கைலாசம் கிளம்பி வந்திருந்தான். அம்மா குரலில் எவ்வித கெஞ்சலும் குழைவும் இன்றி புறப்பட்டு உள்ளே நின்றிருந்த திலகாவை கூப்பிட்டு கையிலிருந்த நான்கு பவுன் செயினை அவள் கழுத்தில் மாட்டிவிட்டு கொஞ்சம் பணத்தையும் தந்து அவனை நோக்கி

ஏதாச்சும் கோயிலுக்குப் போயி இவ கழுத்துல கயித்தைக் கட்டிக் கூட்டிக்கிட்டு எங்கயாச்சும் போய் பொழுச்சுக்குங்க. ரெண்டு பேத்துக்கிட்டயும் தான் தொழில் இருக்குதே..பெறகென்ன..மகராசரா இருக்குங்க என சொல்லச் சொல்ல அவள் குரல் தழுதழுத்தது. சேலைத் தலைப்பை எடுத்து வாயைப் பொத்திக் கொண்டாள். திலகா விடுவிடுவென வந்து அவனை இழுத்து அம்மாவின் காலில் விழ முயன்றாள். அவன் உள்ளே காயும் உள்ளாடைகளைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.


கண்ணீர் உலராமல் அம்மா எடுத்து வைத்திருந்த புதுச்சேலையை கட்டிக் கொண்டு திலகா சென்றபிறகு பாறை போன்ற இறுக்கமான முகத்துடன் அம்மா எதுவும் நடக்காது போல குடத்தைத் தூக்கிக் கொண்டு குழாயடிக்குச் சென்றாள். திரும்பி வந்த போது தீபா நோட்டுப்புத்தகங்களை பையினுள் அடுக்குவது கண்டு அவற்றை ஆவேசமாகப்பிடுங்கி வீசினாள். அவள் புரண்டு கால்களை தரையில் உதைத்தபடி அழுதாள். குச்சியை ஒடித்து வந்து அந்த கால்களின் மேல் வீசினாள். வசந்தி உள்ளே புகுந்து தடுத்து சிதறிக்கிடந்த புத்தங்களை அடுக்கியபடியே தீபாவை அணைத்துக் கொண்டாள். அப்பாவிற்கு அத்தகவல் தாமதமாகத் தான் போய் சேர்ந்தது. ஏதேனும் பட்டறைகளில் உண்டு குடித்து உறங்கிக் கிடப்பவரை அவள் கணக்கிலேயே எடுக்கவில்லை. அவர் விஷயம் அறிந்து வந்து சத்தமிட்டவாறே சுவரில் தன் தலையை மோதிக்கொண்டு விசும்பினார். இந்திராணி எதுவும் பேசாமல் தீபாவைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டு திலகா போன பாதையையே வெறித்து பார்த்தபடி அமர்ந்தாள்.

இரண்டாம் பகுதியின் இணைப்பு: 
                                                                  http://knsenthil.blogspot.com/2018/05/blog-post_11.html

4 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. அடுத்தடுத்து அரைநிறுத்தப்புள்ளிகளை இட்டுக்கொண்டு நீண்ட நீண்ட வசனங்களாக எழுதாமல் வசனங்களைக் குறைத்துக்கொண்டு சின்னச்சின்ன வசனங்களில் சிறுகதையாகவே எழுதியிருக்கலாம். உங்கள் சொல்லல் முறையில் அளவுக்கதிகமான பாத்திரங்கள், ஒவ்வொரு பாத்திரங்களும் யார் யார் அவர்களுக்கான உறவுமுறைகள் என்ன என்பதை வாசகன் திரும்பவாசித்தோ - நிதானித்தோதான் தெரிந்துகொள்ள முடிகிறது. நல்ல கருத்தான், ஆனாலும் உங்கள் சொல்லல்முறை ‘நளினமாக இருக்கிறது’ ‘வாசனைக்கட்டிப்போடுகிறது’ என்றெல்லாம் பொய் சொல்லமுடியவில்லை. (சுளிப்பு அல்ல சுழிப்பு.) அனந்த பதமநாபனின் கோட்டோவியங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. இந்தக்கதையைச் சொல்ல இத்தனை பாத்திரங்கள் வேண்டியதில்லை.

   Delete