Sunday, January 27, 2019

தவளைகளும் மீன்களும்


தவளைகளும் மீன்களும்


புத்தகக் காட்சி 2019 குறித்த பார்வை

பண்டிகைக் காலங்களில் திடீரென முளைக்கும் பர்மா, சைனா பஜார்களின் முன்புறத்திலும், நெருக்கடியான கடைத் தெருக்களில் அடுத்தடுத்து அமைந்திருக்கும் ஹோட்டல்களின் முன்னாலும்  வேலை ஆட்கள் நின்று கொண்டு அந்தப் பக்கமாக போவோரையும் வருவரையும் ’உள்ள வாங்கம்மா, வாங்கய்யா ,வாங்கண்ணா..’ என கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டே நின்றிருப்பதைப் பலரும் கண்டிருக்கலாம். கிட்டத்தட்ட சமீப வருடங்களில் எழுத்தாளன் தன் நூல் சந்தைக்கு வருவதிலிருந்து  ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்டு கடையைச் சாத்தும் இறுதி நாள் வரை மேற்சொன்ன சிப்பந்திகளின்(அந்தச் சிப்பந்திகள் பரிதாபகரமானவர்கள்) வேலையைச் செய்து கொண்டே இருக்கிறான்.  முகநூலெங்கும் இந்த இரைச்சல்களின் சத்தம் நாராசத்தை எட்டுவது கூட  உறைப்பதில்லை.  புத்தகம் பண்டமோ சரக்கோ அல்ல அது எழுத்தாளன் தன் வாழ்வின் ஒரு பகுதியிலிருந்து (ஒரு பகுதி தானா..!) கிழித்தெடுத்து தைத்துக் கொடுத்த பிரதி என்கிற போதம் பலருக்கும் இல்லை. ஆர்வக்கோளாறு அல்லது நரம்பு சம்பந்தமான பதற்றம் தான் அந்த இடைவிடாத கூவல்களுக்குக் காரணமோ என நினைக்க வைக்கிறது. இந்த நரம்பியல் பிரச்சனை மூத்தோர்கள் சிலருக்குக் கூட உண்டு.




இலக்கியம் அறிமுகமான ஆண்டுக்கு பிறகு வந்த சென்னை புத்தகச் சந்தையிலிருந்து(2003) பதின்வயதின் இறுதியிலிருந்து ஒரு வருடம் கூட இடைவிடாது தொடர்ந்து சென்று கொண்டே இருக்கிறேன். வாசகனாக பரவசத்துடன் படைப்பாளிகளைச் சந்தித்துப் பேசியதிலிருந்து என்றும் சொல்லலாம்.  புத்தகச் சந்தைக்கு உள்ளேயும் வெளியேயும் நின்று பேசிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களைக் காண்பது தனி அனுபவமாக இருந்திருக்கிறது. முன்பெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே சட்டென நின்று பேசத் தொடங்கி அது அப்படியே வளர்ந்து செல்வதை ஆர்வத்துடன் குறுக்குக் கேள்விகள் கேட்டு இடைமறித்தது அதை அவர்கள் மதித்தது அனைத்தும் இது போன்ற புத்தகச் சந்தைகளில் தான் நடந்திருக்கின்றன. சில ஆண்டுகளாக அதற்கான இடமே இல்லை.  அதற்கான இடத்தையோ வாய்ப்பையோ பப்பாசி வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கித் தரவேயில்லை.


இந்த ஆண்டு இரண்டு நாட்கள் புத்தகச் சந்தையினுள் இருந்தேன்.  பிற ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதலான ஸ்டால்களால் சந்தை பெரிதாக ஆகியிருந்தது. இதன் பலன் என்னவென்று கேட்டால் கால் வலியால் காலி நாற்காலியைக் கண்கள் தேடிக் கொண்டேயிருந்ததைத் தான் சொல்ல முடியும்.  ஒருவர்  வாங்கிய காப்பியின் சூடு தாங்காமல் நாற்காலி மேல் வைத்தார்.  உடல்வலியால் அதைப் பார்க்காத வேறொருவர் பெருமூச்சோடு உட்காரப் போக பின்புறம் கொதித்து அதே வேகத்தில் எழுந்து ஓடியக் கூத்துகள் கூட நடந்தன. 


எழுத்தாளர்கள் வருடந்தோறும் புத்தகம் (அ) புத்தகங்களை வெளியிடுவதற்கு இரு காரணிகளே இருக்கக் கூடும். சம்பந்தப்பட்ட எழுத்தாளர் படைப்பூக்கக் காலத்தில் இருக்க வேண்டும். இல்லையெனில் அது ஒரு நோய்க்கூறாக மனதில் படிந்திருக்க வேண்டும். இந்த வருடம் சுற்றி வந்ததில் நோயாளிகளையே அதிகம் பார்க்க முடிந்தது. இந்த நோயாளிகளின் பிரச்சனை என்னவென்றால் யாருக்கோ பதில் சொல்ல வருடந்தோறும் நூலை (அ) நூல்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சதவீதத்தில் முதலாமவர்களை விட இவர்களே அதிகம்.


முன்னரெல்லாம் முக்கியமான படைப்பாக ஏதோவொன்றைக் குறித்தப் பேச்சுகள் அல்லது விவாதங்கள் அந்தப் பெரிய வளாகத்தினுள் வளைய வருவதைக் கேட்டிருக்கிறேன்.  கடந்த சில ஆண்டுகளாக தமிழில் எழுதத் தெரிந்த அனைவரும் எழுத்தாளர்களாகத் தங்களை அறிவித்துக் கொண்டதால் அதற்கான சிறுவாய்ப்பு கூட இல்லாமல் போய்விட்டதை உணர்ந்தேன்.


நூல்களின் அதிக விலை குறித்த அதிருப்தி இந்த புத்தகச் சந்தையிலும் எதிரொலித்தது. கிட்டத்தட்ட பக்கத்துக்கு ஒரு ரூபாய்க்கு மிகாமல் விலைகள் இருந்தன.  நான்கு நூல்களுக்கே ஆயிரம் ரூபாய் தேவைப்படும் என்றால் அதிருப்தி எழத்தானே செய்யும். பதிப்பாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களில்  இது முக்கியமானதாகத் தோன்றுகிறது.


நட்சத்திர எழுத்தாளர்கள் எனக் கூறப்படுகிற மூவரின் மீதான பிரம்மையிலிருந்தும் மயக்கத்திலிருந்தும் வாசகர்கள் மட்டுமல்ல, அச்சு, இணைய மற்றும் காட்சி ஊடகங்களும் வெளியேற வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த மும்மூர்த்திகளில் ஒருவர் மட்டுமே  நட்சத்திரம் எனச் சொல்லிக் கொள்ளக்கூடியத் தகுதி கொண்டவர். ‘நட்சத்திர வழிபாடு’ திரைத்துறையோடு ஒழிந்து போகட்டும். பன்முக அடையாளங்களை மறைக்கும் இந்த ஆராதனைகள் எதற்கு? இவர்கள் எழுதவந்த காலத்திலும் அதற்குப் பின்னும் எழுதத் தொடங்கி , படைப்பூக்கத்துடன் தொடர்ந்து எழுத்துலகில் தங்களை நிறுவிக்கொண்டிருக்கும்  இமையம், ஷோபாசக்தி,  ஆ.இரா.வேங்கடாசலபதி, கண்மணி குணசேகரன் போன்றவர்களும் முக்கியமான படைப்பாளிகள் என்பதை உணர்ந்து ஊடகங்கள் பழைய பல்லக்குகளை கைவிட்டால் அது சூழலுக்கு நன்மை பயக்கும். 

தமிழகமெங்கும் பரவலாக புத்தகக் கண்காட்சி நடைபெற்றாலுமே  கூட சென்னையே பதிப்பாளர்களுக்குப் போதுமான ஆக்ஸிஜனைத் தரக் கூடியது. இந்த விற்பனையே கூட மிகைப்படுத்திச் சொல்லப்படுவதாக பரவலான புகார்கள் உள்ளது. தீவிர இலக்கிய நூல்களில் க்ளாஸிக்குகள் தான் இன்றும் அதிக வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மகிழ்ச்சியில் சங்கடமும் கலந்திருக்கிறது. அந்த நூல்களின் முதல் பதிப்பு வெளியாகி முப்பதிலிருந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்து விட்டது. சுந்தர ராமசாமியோ அசோகமித்திரனோ ஜானகிராமனோ ஆ.மாதவனோ இந்தப் படைப்புகளை எழுதிய போதே இவ்வளவு கவனிப்பிற்கும் வாசக ஆதரவுக்கும் உரியவர்களாக இருந்திருந்தால்  இந்தச் சமூகத்தின் விழிப்புநிலையை எண்ணி உவகை கொண்டிருக்க முடியும். இடைப்பட்டக் காலங்களில் பலரும் பேசி எழுதி உரையாடி கூட்டங்கள் போட்டு மூடியிருந்த அந்த பெருங்கதவை சிறுகச் சிறுகத் திறந்திருக்கின்றனர். அப்படியாயின் கடந்த சில ஆண்டுகளில்  எழுத வந்திருக்கும் தீவிர இலக்கியக்காரர்கள் தவளைகள் எழுப்பும் ’ட்ரெண்டிங்’  சத்தங்களைக் கடந்து  தன் இடம் எதுவென அறிந்து கொள்ள மேலும் முப்பதாண்டு, நாற்பதாண்டு காலங்கள் காத்திருக்க வேண்டுமோ..! கிழடு தட்டிய வயோதிகத்தில் பார்வைக் குறைபாட்டுடன் இருக்கையில் இந்த அற்புதம்  நிகழ்ந்தால் என்ன? நிகழாமல் போனால் தான் என்ன? சர்ச்சையின் பொருட்டு எழுத்தாளரின் நூல்கள் கவனம் பெற்று கூடுதல் விற்பனை ஆகிறதென்றால் அதிலும் பெருமைப்பட ஏதுமில்லை.


விற்பனைக் குறித்து பதிப்பாளர்களளை விடவும் எழுதுகிறவர்கள் இன்று அதிகக் கவலைகளுடன் இருப்பதாகத் தோன்றுகிறது.  இவ்வளவுக்கிடையே 90 சதவீதம் ‘பல்ப்’ நூல்களை வெளியிட்டுவிட்டு ’என் விற்பனையை இருட்டடிருப்பு செய்தாயே..’ என பத்திரிகையை நோக்கி பிலாக்கணம் வைத்த பதிப்பாளரின்  ’வேடிக்கைப் பதிவு’ம் முகநூலில் அரங்கேறியது.


‘இந்து தமிழ்’ நாளிதழ் புத்தகச் சந்தையையொட்டி தினந்தோறும் ஒரு பக்கத்தை ஒதுக்கிச் சேவை ஆற்றியது. சில நல்ல நேர்காணல்கள் இந்நாட்களில் வெளியாகி அந்த எழுத்தாளனின் முகத்தையும் மனதையும் உலகுக்குக் காட்டின. இவர்களின் தனிப்பட்ட ஆர்வங்களை பத்திரிகையின் குரலாக வெளிப்படுத்தியதில் முதிர்ச்சியின்மை வெளிப்பட்டது.  இந்நாளிதழ் கவனிக்கப் பரிந்துரைத்த பாதி நூல்கள் அந்த பக்கத்தில் நகைச்சுவை இல்லாமலிருந்த குறையைப் போக்கியது.


சிற்றிதழ் வழியாக உருவான நெடுங்கால பரிச்சயத்திற்கு பின் அயல்தேச எழுத்தாளனின் மொழிபெயர்ப்பு நூல் இங்கு வெளியாகி பெரும் சலனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. சில ஆண்டுகளாக தமிழில் வராத என நினைத்திருந்த நூல்களெல்லாம் உரிமை பெற்று வரத்தொடங்கியது சாதகமான அம்சம் என்றால் முதன்முதலாக அந்த மொழியாக்கத்தின் வழி மட்டும் மூல ஆசிரியன் பெயரை அறிந்து கொள்ளும் விபரீத்தை பாதகமானதாகக் கருத வேண்டியிருக்கிறது. வந்து கொட்டப்படுகிறவற்றுள் மொழிபெயத்தவரின் பெயர் அளிக்கும் நன்நம்பிக்கையின் பொருட்டே அந்த நூலை வாங்குவது குறித்து யோசிப்பவனாக இருக்கிறேன்.


எழுத்தாளனின் இறப்பின் வழியாக மட்டுமே அவனது பெயரை அறிந்து கொள்ளும் சமூகமாகவே இன்றும் இருந்து கொண்டிருக்கிறோம். ந.முத்துசாமி, பிரபஞ்சன் போன்றோரை அவ்வாறே தமிழுலகு தெரிந்து கொண்டது. இவர்கள் இருவருக்குமான தனித்த அரங்குகளை பப்பாசி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அப்பளத்தையும் சுண்டலையும் கடிக்கும் இடைவெளியில் மக்களின் காதுக்குள் அவர்கள் நுழைந்திருப்பார்கள். ஆனால் பப்பாசி இன்னும் வி.ஐ.பிக்களையும் லேனா தமிழ்வாணன்களையுமே மேடை ஏற்றிக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு மூடன் ‘பேச வந்திருக்கிறேன். என்னை உற்சாகமூட்ட ஒரு தடவை எல்லோரும் நன்றாக கை தட்டுங்கள்..’ என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்ததை ஒருமுறை பார்க்க நேர்ந்தது.


இந்தப் புத்தகச் சந்தையைச் சுற்றி வந்து கொண்டிருந்த போது ‘நீ எழுதவில்லை என பட்டினி கிடக்கும் வாசகன் யார்?’ என்ற ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ நாவலில் வரும் வரி மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. எவருமில்லையல்லவா..! இது புரிந்தால் தன்னைக் குறித்த மிகைவிளம்பரங்களுக்கும் அதீத கற்பனைகளுக்கும் அவசியமே இல்லாமல் போய்விடும் என்று தோன்றுகிறது. புத்தகம் பேசுவதற்குப் பதிலாக எழுதியவனே அது குறித்து ஓயாமல் பேசிக் கொள்கிறான்.


போலிகளுக்கும் தவளைகளுக்கும் புகழ்மாலைகள் விழும் போது மீன்களின் காதிற்குள் புகைவரத் தான் செய்கிறது. அந்த தவளைகள் இல்லாமல் போகும் நாளிலும் இந்த மீன்கள் நீந்திக் கொண்டிருக்குமல்லவா..! தூண்டிகளுக்கும் வலைகளுக்கும் அகப்படாமல் இருப்பது மீன்களின் சமார்த்தியம். தான் நீருக்கும் இருக்கிறோம் நீந்திக் கொண்டிருக்கிறோம் என்பதே இந்த மீன்களுக்கு போதுமானது. 


ஆம். நீருக்குள் அமைதியாக மீன்கள் நீந்திக் கொண்டிருக்கும்.

(மின்னம்பலம் இணைய இதழ் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்டக் கட்டுரையின் முழு வடிவம்)





Wednesday, May 30, 2018

சகோதரிகள் (நெடுங்கதை) - இரண்டாம் பகுதி

சகோதரிகள் - இரண்டாம் பகுதி


ஓவியம் : அனந்த பத்மநாபன்

7

குடியை மறக்கடிக்க விஸ்வத்தை மருந்து குடிக்க வெவ்வேறு ஊர்களுக்கு கூட்டிக் கொண்டு அலைந்திருக்கிறாள். முரண்டு பிடிக்கும் அவரை சம்மதிக்க வைப்பதற்குள் மயங்கும் நிலைக்கு வந்துவிடுவாள். மருந்து குடித்த அந்தச் சமயங்களில் மட்டும் சில பத்து நாட்கள் காய்ந்த உதடுகளோடு எங்கும் போகாமல் வீட்டிலேயே கிடப்பார். அந்த மருந்தின் வலு ஓயந்த பிறகு நிதானமிழந்து சரியும் வரை குடித்தபடியே இருப்பார். அவரை அவராலேயே கட்டுப்படுத்த முடியாமல் போனதும் இந்திராணி வீட்டின் கதவு நீக்கி விடுவது தவிர அவருக்கு வேறெதுவும் செய்யவில்லை. 


அவர் கைவேலையை மெச்சி முன்பணம் தந்து பட்டறை வைக்க ஆட்கள் சொன்ன போது எதுவும் பேசாது எழுந்து போய்விட்டார்.   விஸ்வம் செதுக்கி பிரதிஷ்டை செய்த அம்மனின் கீர்த்தி உச்சத்துக்கு போனதும் ஆட்கள் வீடு நோக்கி வந்து கொண்டே இருந்தனர். தட்டுமுழுக்க கனிகளும் பூக்களுக்குக்குமிடையே பணத்தை வைத்து ஆர்டர் தர எழுந்த ஆட்களைக் கண்டுவந்த லச்சுமியை வேணாங்காதே..’ என கையெடுத்துத் தொழுது இந்திராணி சொன்னபோது காதில் விழாதவர் போல அவர்களை ஆனந்தனிடமே கூட்டிப் போனார். வந்த ஆட்கள் திரும்பச் சென்ற பின் அதிலிருந்து ஒரு கத்தையை எடுத்து அவன் விஸ்வத்திடம் தந்தான். அவ்வளவு பணத்தைக் கண்டதும் சிறிய பையன் ஊதிய பலூன் போல விஸ்வத்தின் வயிறு பெருத்துச் சுருங்கியது. அதை அவர் எண்ணிக் கூடப் பார்க்காமல் சொற்பத்தை மட்டும் இந்திராணியிடம் தந்து விட்டு நேராகக் கடைக்கு போனார். ஓயாத குடியால் அவரது கைகள் நடுங்கத் தொடங்கியிருந்தன. பீடி பற்ற வைக்கவே மூன்றுக்கும் மேற்பட்ட குச்சிகளை உரசவேண்டிய அளவிற்கு அந்நடுக்கம் இருந்தது. கடந்த சில நாட்களாக உளியை அவர் தன் வசத்திற்குப் பிடித்து நிறுத்தி அடிக்கும் முன் விலகிப் போயிற்று. வெறும் கல்லின் மேல் சுத்தியலை அடித்தார். நேற்று ரோசத்தோடு மீண்டும் கோபமாக சுத்தியலை உளியின் மேல் அடித்ததும் இடக்கைப் பெருவிரல் நகம் தெறித்து விழுந்தது. எந்தக் கட்டும் போட சம்மதிக்காமல்வென குழந்தையைப் போல அழுதார். அது கைவிரல் காயத்துக்காக அல்ல என அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்திருந்தது. அதை நினைத்து பாக்கெட்டை புடைக்கச் செய்திருக்கும் பணம் வற்றும் வரை குடிப்பதும் சுற்றுவதும் மீண்டும் குடிப்பதுமாக அலைந்தார்.


மூன்று நாட்களும் ஓயாமல் போகிறவர் வருகிறவர்களுக்கெல்லாம் வாங்கித் தந்து கொண்டிருந்தார். கேள்விப்பட்டு கடையின் முன்னால் இந்திராணி கூப்பாடு போட்டு அவரை இழுத்துவர முயன்றாள். அவளை எட்டி உதைத்து பாரில் நாய்களை விரட்ட வைத்திருக்கும் தடித்தக் கம்பை எடுத்து அடித்தார். அவள் வலியால் துடித்த போதும் பிறர் விலக்கிவிட முயன்றபோதும் மூர்க்கமாகிக் கொண்டே போனார். அவள் கழியை பற்றியபடியே எழுந்து சட்டைப்பையை பிடித்தாள். ‘திருட்டு முண்ட என ஓங்கி அறைந்து வானத்தை நோக்கி வெடித்து சிரித்தபடி பட்டனைகள் கழன்று திறந்திருந்த சட்டையை கழட்டி வெற்றுடம்புடன் பாக்கெட்டிலிருந்த நோட்டுகளை பறக்க விட்டார். மீதியை கடைக்காரனின் டேபிளில் எறிந்துஇங்கிருக்கிறவனுகளுக்கெல்லாம் சரக்கு கொடு..இன்னைக்கு என் சப்ளை..ங்கோத்தா..’ என வாயில் ஊறிக் கிடந்த எச்சியை காறித் துப்பினார். அவள் முகத்தை மறைத்துக் கிடந்த முடியை கூட ஒதுக்காமல் பேச்சற்று வெளியே போனாள்.


மறுநாள் திலகாவை இந்திராணி பள்ளியை விட்டே நிறுத்தி கம்பெனிக்குச் சரசாவுடன் அனுப்பி வைத்தாள். போக மறுத்து அடம்பிடித்து எதுவும் சாப்பிடாமல் கிடந்தவளை கையில் கிடைத்தவற்றைக் கொண்டு அடித்தாள். தடுக்க வந்தவர்கள் அவளது ஒரு முறைப்பிற்கே பின்வாங்கினர். மறுநாள் செய்வதறியாது சோறு போட்டு வைத்திருந்த டிபன்பாக்ஸைத் தூக்கிக் கொண்டு பஸ்ஸைப் பிடிக்க சரசாவுடன் ஓடினாள்.


8

தீபா நோட்டின் மேல் விழுந்து எழுதுவதை அதை அழித்து மீண்டும் தொடர்வதை நைட் ஷிப்ட் முடித்து வந்து மாலை வரை தூங்கி எழுந்த வசந்தி கொட்டாவியோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அக்கா கம்பெனியிலிருந்து வர இன்னும் நேரமிருப்பதை கடிகாரத்தைப் பார்த்ததும் தெரிந்தது. மணமான சில மாதங்களிலிலேயே கைலாசத்தின் போக்கு வேறு மாதிரியாக இருப்பதை திலகா திகைப்புடன் கண்டாள். குடும்பச் செலவுக்கு ஏதும் தராமல் வேலைக்கும் போகாமல் அவன் செயலாளராக இருக்கும் ரசிகர் மன்றத்திலேயே கேரம் ஆடிக் கொண்டும் பாக்குமென்று கொண்டும் கிடந்தான். கைச்செலவுக்கு அவள் பையில் துழாவி எடுத்துச் செல்வான். திலகா அவனுக்கு புளித்துப் போனபின் வீட்டிற்கு வருவதே வெகுவாக குறைந்து விட்டது. வந்தாலும் வசந்தி பற்றியே கேட்டுக் கொண்டிருப்பான். அவளும் அடிக்குப் பயந்து அக்கறையின்றி பட்டும்படாமல் பதில் சொல்வாள். மூன்றாம் நாளே திலகா சொன்ன பதிலால் கொதித்தெழுந்து அறைந்தான். அந்த அதிர்ச்சி சில தினங்களில் வழக்கமானதாக ஆனதும் அடிப் பழகிப் போய்விட்டது. சில தடவைகள் அவளைப் பார்க்க அம்மா வந்து சென்ற போது மூச்சுவிடவில்லை. கன்னத்தின் சிறிய கீறலையும் உதடு வீக்கத்தையும் தொட்டு அவள் கேட்ட போதும் மழுப்பலாக பதில் சொல்லி அவளை விரைந்து அனுப்பி வைத்தாள். வசந்தியை வழியில் காணுந்தோறும் நெருங்கி வந்து பேசுவதும் கடைவாயில் புகையிலை ஒதுக்கிய வாய்திறந்து சிரிப்பதையும் வசந்தி கடுமையாக வெறுத்தாள்.


சில வாரங்களுக்குப் பின் அப்பாவை வீட்டிற்கேக் கூட்டி வந்து அவருக்குச் சாராயம் ஊற்றிக் கொடுத்து வசந்தியைத் தனக்குத் தருமாறு கெஞ்சிக் கொண்டிருந்ததைக் கடைக்குக் கிளம்பி பாதி தூரத்தில் பணமெடுக்க மறந்து போய் விட்டதை நினைத்து திரும்ப வந்து வீடேறுகையில் திலகா கேட்டாள்.  அவர் போதையில் எழுந்து அவன் முகத்தைச் சுவற்றோடு சேர்த்து வைத்து மிதித்தார். அவன் எலி போலக் கீறிச்சீட்டு தொண்டையில் சத்தமேதும் வராமல் அப்பாவின் காலைப்பிடித்து தள்ளிவிட்டு அவளைக் காணாதவன் போல வெளியே போனான். நரக வாழ்க்கையாக தன் மகளுக்கு அமைந்துவிட்டதே என முகத்தை மறைத்தபடி தேம்பினார். அவள் காலைப் பிடித்து நகரவிடாமல் அப்பா தன் தலையால் அவள் பாதத்தில் மோதி மன்னிக்கும்படி கதறி அவிழ்ந்து போயிருந்த வேட்டியைக் கூட சரியாக கட்டாமல் அப்படியே சுற்றிக் கொண்டு சென்றார்.


9


வெகு நேரம் கழித்து அவன் உள்ளே வந்து தாழிடுவதைக் கண்டு அவள் சுவற்றோடு மேலும் ஒண்டிக் கொண்டாள். எதையும் பார்க்காதவன் போல அவன் எதிர்ச்சுவற்றில் தூக்கி காலை வைத்தபடி வார இதழை விட்ட இடத்திலிருந்து திருப்பிக் கொண்டிருந்தான். திலகாவின் தேம்புதல் நின்றதும் அவளைப் புரட்டி இணங்க அழைத்தான். அவள் கால்களை இறுக்கமாகப் பின்னிக் கொண்டு அவளைத் தள்ளினாள். அவளது தொடைகளை விரிக்க அவனால் முடியவேயில்லை. மூச்சு வாங்க எழுந்து முழங்காலில் தன் கட்டைவிரலில் வளர்த்திருந்த நீளமான நகத்தால் கீறினான். ஊசியால் கிழித்தது போல அலறினாள். கால்களை இழுத்த போதும் அவனால் நுழைய முடியவில்லை. பயமும் கோபமும் கொண்டு பதட்டத்துடன் திலகா நடுங்கியபடி இருந்தாள். அது பூட்டிக் கொண்டது போல அவனை அனுமதிக்க மறுத்து வெளியேற்றியது. அவன் மூர்க்கமாகி அவளை அந்தச் சுவற்றோடு சேர்த்து அழுத்தி உதைத்து அவள் அழுவது கேட்காமல் போய் படுத்து கேட்கக்கூசும் வசுவுகளை பொழிந்து கொண்டே இருந்தான்.


மறுநாள் திலகா தப்பி வந்து அம்மாவிடம் நடுங்கும் குரலில் நடந்தவைகளைப் பயத்துடன் திணறித் திணறிச் சொன்னாள். அவளை பத்திருபது நாள் வைத்திருந்து விட்டு ஆனந்தனை வைத்து பஞ்சாயத்து பேசி கைலாசத்திடம் எழுதி வாங்கியபின் அவளிடம் கொஞ்சம் பணம் தந்து அனுப்பினாள். அதற்கு பலனே இருக்கவில்லை. சில வாரங்களுக்குப்பின் வீட்டிற்கு முகம் தெரியாத ஆட்கள் வந்து போகத் தொடங்கினர். போஸ்டர்களும் காய்ச்சிய பசை நிரம்பிய ஈய பக்கெட்டும் அந்த குறுகிய வீட்டின் முக்கால் பாகத்தை அடைந்துக் கொண்டிருந்தன. அவனும் வீடு தங்காமல் கண்டபடி சுற்றியலைந்து கொண்டிருந்தான். இரு வருடங்களுக்குப்பின் அவனது தலைவனின் படம் வெளியாவதாக உற்சாகமாகப் பேசினான். கொஞ்சம் பிரியமும் அதிலிருப்பதாகப்பட்டது. அவன் அப்படிப் பேசிய நாட்களின் நினைவு அவளுக்குள் மங்கிவிட்டது. கம்பெனியில் வைத்து, தனக்கு யாருமேயில்லை என அவளிடம் அழும் நிலையில் பேசி மனதைக் கரைத்த நாள் பட்டென ஞாபத்தில் எழுந்தது. தினமும் அவளுக்கு ஏதாவதொன்றை வாங்கி வருவான். அவன் வாங்கி தந்த ரப்பர் வளையல்களிலும் ஜடைவில்லைகளிலும் தயங்கியபடி அவளருகில் வைத்து விட்டுப்போன புடவையிலும் அவன் அழைத்துச் சென்ற சொற்ப சினிமாக்களிலும் திலகா அவனையே கண்டாள். பணி முடித்து திரும்பும் வேளையில் சில சமயங்களில் அந்தப் பட போஸ்டர்கள் கண்ணில் படும். நேற்று அவற்றில் ஒன்றானகாதல் தேசம் படச் சுவரொட்டியைக் கண்டதும் சிரிப்பு வந்தது. அந்தப் படப் பாடல்கள் கம்பெனிக்குள் ஒலித்தால் அவள் கால்கள் மெல்ல தாளமிடும். மறுகணமே அவனது தற்போதைய குணம் நினைவில் எழும். கடும் கசப்புடன் தன்னையே சபித்தபடி அதைக் கடந்து செல்வாள். நகரை விழாக்கோலம் பூணச்செய்ய மும்மரமாக அலைந்தான். அவளிடம் கெஞ்சியபடியே வந்து பற்றாக்குறைக்கு பணம் வேண்டும் என்றான். அவள் எதுவும் கூறாமல் கேள்விக்குறியோடு நின்று புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்தாள். நெற்றி மீது கலைந்து விழுந்து கிடந்த அவள் முடியை காதோரத்திற்கு ஒதுக்கி விட்டு கன்னத்தை பிடித்து செல்லமாகக் கிள்ளினான். அவள் பார்வை மேலும் கூர்மையாவதைக் கண்டு அவளுக்குப் பின்னால் இருந்த வர்ணம் வெளிறிப் போயிருந்த சுவரைப் பார்த்தபடி அவள் தாலிக் கயிற்றில் பின்னூசிக்களுக்கிடையே கறுத்துக் கிடக்கும் குண்டுமணித் தங்கத்தைக் கேட்டான்.




அவளது நம்பாத முகக்குறியைக் கண்டுஅடகு தானே வைக்கறேன். கலெக்ஷன் ஆனதும் மீட்டுக்கலாம் என்றபின் மேலும் நெருங்கி வந்து கால் மாற்றி நின்றுகால் பவுன் சேத்தியே செஞ்சுட்டாப் போச்சு..’ என சுவற்றிலிருந்த பார்வையை அவள் முகத்துக்கு கொண்டு வந்தான்.


அவள் ஆத்திரம் கொப்பளிக்கஎந்தத் தேவிடியாப் பைய்யன் நடிச்சா எனக்கென்ன? அவங்ஙம்மாவோடதைப் போய் கேளு..இல்லீன்னா அவம் பொண்டாட்டிய எவனுக்காவது கூட்டிக் கொடுக்கச் சொல்லு என்றபின் இதைச் சொன்னது தானல்ல என வெறித்து பார்த்து விட்டுத் தலைகவிழ்ந்து குமுறினாள். 

தன்னைப் பெயர் சொல்லி அழைத்து பக்கத்தில் இருத்தி விசாரித்த தலைவரையா சொல்கிறாள்? எழுந்ததும் தன் பர்ஸில் வைத்திருக்கும் அவர் படத்தில் தானே கண் விழிப்பதும்..! அக் கண்களில் உக்கிரம் ஏற கைலாசம் சுற்றிலும் துழாவினான். அருகில் ஏதுமில்லை எனக் கண்டு

மூடுடீ வாயை என எகிறி குதித்து அடித்தான். வலியை அலட்சியம் செய்தவளாகஅப்படித்தாண்டா சொல்லுவன்..அவனொரு திருட்டு முண்ட மவன்.. நீயொரு வக்கத்தப் புடுங்கி என கையை வேகமாக தட்டி விட்டாள். அவள் கரைகள் உடைந்திருந்தன.

அவன் மூர்க்கமாகி கீழே தள்ளினான். அவள் துடித்துக் கிடந்த போது அந்தக் குண்டுமணித் தங்கத்தை வெட்டியெடுத்துக் கொண்டு போனான்.

அவன் மேலும் இருநாட்கள் கழித்து இரவில் வந்தான். கூடவே வேறொருத்தியும் இருந்தாள். அவள் மிகையான அலங்காரங்களுடன் பூக்களின் மட்டுமீறிய வாசனையுடன் நுழைந்தாள். சிரித்தபடியே இருந்தாள். வெளியே மழை பெய்ய ஆரம்பித்தது. திலகா  உள்ளே சிறு அறையில் கண்களை இறுகமூடிக் கிடந்தாள். முடிவு செய்தவளாக எழுந்து பருத்த தொடைகளைத் தாண்டி வெளியே வந்தாள். சட்டென அவள் அவனைத் தள்ளி எழுந்து அமர்வதைத் தன் முதுகுக்கு பின்னால் உணர்ந்தாள். இனி திரும்பவே கூடாது என்பது போல திலகாவின் வேகம் கூடியிருந்தது.



10

சுந்தரி வேகமாக வந்துஉன்ற அக்காவைப் புடுச்சு அவென் அடிச்சிக்கிட்டு இருக்கான்டீ..’ என மூச்சு விடும் இடைவெளியில் சொன்னாள். தலைவிரி கோலமாக முகமெல்லாம் காயங்களுடன் திலகா அமர்ந்திருப்பது வசந்திக்கு பாதி தூரத்திலேயே தெரிந்தது. கம்பெனி ஆட்கள் அவனைத் துவைத்துவிட்டிருந்தனர். சட்டை கிழிந்து குப்புறப் படுத்தபடி கத்திக் கொண்டிருந்தான். போதை அவனை எழவிடாமல் செய்திருந்தது. திலகா அவனை விட்டுச் சென்றதும் என்றோ மறந்து விட்டிருந்த குடியில் விழுந்திருந்தான். ஆட்கள் குடிக்க வைத்திருந்த குடத்தைத் தூக்கி வசந்தி அவன் தலையில் ஊற்றி அந்தக் காலிக் குடத்தால் அவனை சரமாரியாக அடித்தாள். குழறல் அவளை ஆவேசங்கொள்ளச் செய்தது. குடம் ஒடுங்கியப் பின்னும் அவள் நிறுத்தவில்லை. செக்கிங் பெண்கள் தான் இழுத்துப் போயினர். அவனது நீளமான கிருதாவைக் கண்டு முகத்தில்ச்சீய் எனத் துப்பினாள். அவளுக்கு கோபத்தை அடக்கவே முடியவில்லை. அவள் அக்காவிடம் விரைந்து போய் முடியைப் பிடித்து இழுத்துஏன்டீ..நாயே..! ஒனக்கு வேறெவனுமே கண்ணுல படலையா..போயும் போயும் இந்த தெல்லவாரியை புடுச்ச பாரு..’ என பல்லைக் கடித்தாள். டீயும் பன்னும் தந்து கம்பெனியில் சொல்லி விட்டு திலகாவைக் கூட்டிச் சென்றாள். திலகா பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளது காயங்கள் மெதுவாக ஆறிக் கொண்டிருந்தன. அந்த வாரம் முழுக்க திலகாவை வீட்டிலேயே இருக்கச் செய்து விட்டு வசந்தி மட்டும் கம்பெனிக்குச் சென்றாள். அன்று இரவோடு இரவாக அம்மாவுடன் போய் அவளது பொருட்களையெல்லாம் பைகளில் போட்டு அள்ளி வந்த கோபம் தான் அவன் மதியநேரத்தில் அவள் வேலை பார்க்கும் இடத்தில் குடித்து விட்டு ரகளை செய்யக் காரணம் என சுந்தரி அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்த போது சொன்னாள்.


திலகாவின் போக்கு வசந்தியை பயங்கொள்ளச் செய்தது. உண்ணும் போதும் பேசிக் கொண்டிருக்கையிலும் திடீரென மெளனமாகி வெறித்தபடி எங்கோ பார்க்க ஆரம்பித்து விடுவாள். கைலாசம் இரண்டாவது மணம் செய்ய போகிற செய்தி கேட்டதிலிருந்து அவள் உள்ளூர உடைந்து விட்டிருந்தாள். அம்மா தனக்குத் தெரிந்த போலீஸ்காரனைப் பார்த்து பேசுவதாகச் சொன்ன போதும் திலகா மறுத்துவிட்டாள். இச்செய்தி அப்பாவின் காதுக்கு எப்படியோ எட்டி விட்டது. அன்றைய மாலையில் அப்பா அவன் வீடேறிச் சென்று வெளியே இழுத்து வந்து தெருவில் தள்ளினார். இருவரும் கட்டிப் புரண்ட போதும் விலக்கிவிட ஒருவரும் வராமல் வேடிக்கை பார்த்தபடி நின்றனர். அப்பா அரைநிர்வாணியாக எழுந்து கீழே கிடந்த காலி பாட்டிலை உடைத்து அவனைக் குத்தப் போன போது பிடித்து இழுத்து வந்ததாக அவரை வீட்டில் விட்டுச் சென்ற பாலு சொன்னான். தீபா அப்பாவிடம் போகவே அஞ்சினாள். அவர் அன்றிரவெல்லாம் போட்ட கூச்சல் கேட்டு பயந்து வசந்தியின் சூடான வயிற்றை இறுக்கிக் கட்டியபடி படுத்துக் கொண்டாள். அதன் பின் அப்பா எங்கே சுற்றினாலும் இரவானதும் வீட்டிற்கு வந்து விடுவதை வழக்கமாக்கி கொண்டதை திலகா கூறித் தான் வசந்தி உணர்ந்தாள்.


அப்பாவின் பிராந்தி பாட்டிலின் மூடியில் துளையிட்டுச் செய்திருந்த மண்ணெண்ணை விளக்கின் திரியிலிருந்து வந்த தீய்ந்த மணம் அவ்வீடு முழுக்கச் சுற்றி வந்தது. திலகா மெல்ல ரேடியோவைத் திருகி அலைவரிசை பிடிக்க முடியாமல் அணைத்தாள். திலகா தன் மனதை மீறி உடல் செல்வதைக் கட்டுபடுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். ஆணின் துணைக்கு ஏங்குகிறேனா? என கேட்டுக் கொண்டாள். அந்த எண்ணத்தை விரட்டுவது போல தலையை அசைத்து மறுத்தாள். பேருந்தின் நெரிசலில் ஆண்களின் உடல் படும்போதெல்லாம் கடும்சினத்துடன் திரும்பி முறைப்பாள். அருவருப்படைவாள். இன்று இறங்குகையில் தவறுதலாக ஒருவனின் விரல் அவள் புறங்கையில் உரசிய போது தன் உடல் முழுக்க அந்த ஸ்பரித்தின் சுகம் ஊடுருவிச் செல்வதை உணர்ந்து அச்சம் கொண்டாள். அப்போது கைலாசத்தின் நினைவு எழுந்தது. கண்களை இறுகமூடி கால்களைக் குறுக்கி போர்வையால் தலையையும் சேர்த்து மூடிக் கொண்டதும் பக்கத்து படுக்கையில் வசந்தியின் போர்வைக்குள்ளிலிருந்து அவளது சிரிப்புச் சத்தமும் வளையல்களின் ஓசையும் திலகாவுக்குக் கேட்டது.



11

முத்துக்குமார் சிறிய மொபட்டின் மேல் முகத்தை மூடும் அளவு பீஸ்களை அடுக்கி அதன் மேல் ஏறக்குறைய படுத்தபடியே ஓட்டி வந்து, ஓரமாக நின்று பீடி புகைக்கும் சிங்கர் டெய்லர்களைக் கடந்து வருவதைக் கண்டு வசந்தி பாதி மென்ற வடையை விழுங்காமல் அவனையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். புன்முறுவலை அடக்கி நகரும் முத்துவைக் கண்டு நினைவு மீண்டு தன் தையல் மிஷினை நோக்கிச் சென்றாள். மனம் நடுங்க அப்பாவை எண்ணிக் கொண்டாள். அப்பாவைக் கண்டால் முத்துக்குமார் மறுத்துவிடுவானோ என்னும் கிலி படர்ந்தது. வீட்டிலிருப்பவர்களுக்கே தெரியாமல் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறாள். கம்பெனிக்குள் அரசல்புரசலாக முத்துவோடு தன்னைச் சேர்த்துப் பேசும் விஷயம் உறுதியாகிவிட்டால் கையை பிசைந்து நிற்க வேண்டுமே என்ற எண்ணமே அவளை வீட்டினர் அறியாமல் சீட்டு போடத் தூண்டியது. தொழில் கற்கும் முனைப்பில் இரவும் பகலும் கம்பெனிக்குள்ளேயே முத்துக்குமார் பலியாகக் கிடந்தான். வசந்தி மும்மரமாக அடுத்தடுத்த பீஸ்களைத் தைத்துக் கீழே தள்ளிக் கொண்டிருக்கையில் ஒரு நிழல் அவள் முதுகின் மீது விழுவதை உணர்வாள். ஒரு வினாடி கால்கள் தைக்க மறந்து நிற்கும். பின் அது அவன் என அறிந்ததும் முன்னை விட வேகமெடுக்கும். திலகா போல அளந்து பேசுபவளையே இரட்டை அர்த்த வசனங்களுடன் நெருங்க முயல்கிறவர்கள் உள்ள இடத்தில் வசந்தி எதிர்கொள்ள நேர்வது அதைவிட மோசமானவைகளையே. நேர் நின்று அவர்களுக்குச் சமதையாக வாயாடுவாள். கொச்சையாக அவள் காதில் படும்படி ஜாடை பேசுவார்கள். எதிர்த்து நின்றால் பம்மி பதுங்குவார்கள். 


12


கம்பெனி முதலாளியின் மகளை வீட்டிற்கு இழுந்து வந்ததிலிருந்தே முத்துக்குமாரின் முகம் சரியாகயில்லை என்று தோன்றியது. இவள் பேசச் செல்லுந்தோறும் அவனது சோர்ந்த முகத்தையோ காதிலிருந்து தொலைபேசியை எடுக்காமல் பேசிக் கொண்டிருப்பதையோ பார்த்து விட்டு வருவாள். வதந்தி போன்ற ஒன்று அவளை எட்டி இதயத்தைப் பிசைந்தது. யாருமில்லாச் சமயத்தில் வாட்ச்மேன் பெரியவர் தான் அவளிடம் அதைச் சொன்னார். சில வாரங்களுக்கு முன் அவன் அவளுக்காக தன் பைக்கின் மேல் வைத்து விட்டுப் போன ரோஜாவைக் கண்டு மெல்லிய சிரிப்பொலியுடன் தலையாட்டியவர் அவர். அதன் பிறகும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை, பார்வைகளே பாஷையாக இருந்தன. அதை அவ்வப்போது கண்ணுரும் பெரியவரைக் கண்டு வெட்கமும் சந்தோஷமும் கூடிய சிரிப்பு வரும். அவர் அருகில் வந்து அந்த தகவல் உறுதியானதில்லை எனச் சொல்லி பிறரின் நிழல்கள் அருகில் வருவதை உணர்ந்து பேச்சை மாற்றி நகர்ந்தார்.


13

ஓனரைக் கண்டால் முத்து குறுகுவான். அரையடி தள்ளி நின்று பதில் சொல்வதே அவன் வழக்கம். அவரது மனைவியும், இறந்து போய்விட்ட அவரது தம்பியின் மனைவியும் ஆள் மாற்றி ஆள் வந்து கணக்குகளைக் கேட்பார்கள். அவன் அவர்கள் முன் அமர்ந்து பதில் சொன்னதேயில்லை. தம்பி மனைவியின் கண்கள் அவனைத் தொட்டதும் பேண்ட் பாக்கெட்டில் நுழைத்திருந்த கையை விஷப்பூச்சி தீண்டியது போன்ற வேகத்தில் வெடுக்கென எடுத்துக் கொண்டான். தன்னை ஏமாற்றிவிடுவார்களோ என்னும் அச்சவுணர்வு அவள் கண்களை நிலைகொள்ளவிடாமல் தவிக்க வைக்கும். அதை மறைக்கும் விதமாக குரலில் எச்சரிக்கையுடன் அதட்டும் தொனியை கொண்டு வருவாள். ஓனரின் மனைவி இவளுக்கு நேரெதிராக படிப்பு வாசனையே இல்லாதவள். அவரது தம்பி மனைவி கம்பெனியைச் சுற்றி வர வெளியே போன சிறு இடைவெளியில் அவனை மடக்கி ஆறுமணிக்கு மேல் அவர் எங்கே போகிறார் எனக் கேட்டாள். ஏற்றப்பட்டிருந்த விளக்கின் மேல் தயக்கமேயில்லாமல் கையை நீட்டி சத்தியமாகத் தெரியாதென்றான். அடுத்த அறையில் இவையனைத்தையும் கேட்டு நின்ற முதலாளி அவர்களிருவரும் கிளம்பிச் சென்றதும் அவனை அழைத்து -இதே போன்று நான்கைந்து யூனிட்டுகள் அவருக்குண்டு என்றாலும்- இந்த யூனிட்டின் முழு பொறுப்பையும் அவனுக்களித்தார். சொந்த ஜாதிக்காரன் வேறு.


கண்ணாடித் தடுப்பின் பின்னே டீ தம்ளர்கள் ஏந்திய தட்டுடன் வசந்தி நிற்பதைக் கண்டு ஓடிப்போய் சிரித்தபடியே வாங்கி வந்து அவர்களுக்குத் தந்து அனுப்பி வைத்தான். அது முதல் சமிக்ஞையாக அவளுக்குப் பட்டது. அந்த நிமிடத்தை பல தடவைகள் மனதில் ஓட்டிப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள். திலகாவிடம் கவிழ்ந்த தலையுடன் இந்தக் காட்சியை சொன்னதும் அவள் ஏதும் சொல்லாமல் கீரையையே ஆய்ந்தபடியே செல்வத்தின் அம்மா மாலையில் வந்து பேச்சின் இடையே அவளை பெண் கேட்டுச் சென்றதைத் தயங்கிய குரலில் சொன்னாள். வசந்தி எதையோ சொல்ல நினைத்து பின் ஆவேசமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். திலகாவின் குனிந்த தலை நிமிரவேயில்லை.


இரண்டு மூன்று நாட்களாக கம்பெனி பரபரப்புடன் கிடந்தது. பொத்தி வைக்கப்பட்டிருந்த ரகசியம் முதல் நாள் மதியத்திலேயே பகிரங்கமாகிவிட்டிருந்தது. விசையுடன் கார்கள் வந்து நிற்பதும் கதவை சாத்தக்கூட பொறுமையின்றி ஆட்கள் வெளியே குதித்து அந்தக் கண்ணாடி தடுப்பிற்குள் சத்தமிட்டு பேசியபின் வந்த வேகத்தைவிடவும் அவசரத்துடன் செல்வதுமாக இருந்தார்கள். முந்தைய நாள் மாலை முதலாளி மகள் வீட்டுக் கார் டிரைவரோடு வெளியே சென்றவள் திரும்பி வந்திருக்கவில்லை. பீரோவை திறந்து பார்த்ததும் துணிகளும் நகைகளும் இன்றி துடைத்து வைத்தது போன்ற சுத்தத்துடன் இருப்பதைக் கண்டனர். அவள் அம்மா மூர்ச்சையாகி விழுந்து தெளிந்ததும் முதலாளி விஷயம் அறிந்து வந்து அவளை உக்கிரமாக அடித்து மிதித்தார். வீடே அமளியாகி இரவெல்லாம் அணைக்கபடாத விளக்குகளுடன் கண்ணீரும் வன்முமாக விழித்துக் கிடந்தது. முத்துக்குமார் வீட்டிற்கும் கம்பெனிக்கும் ஓயாது அலைந்தபடி இருந்தான். நான்காம் நாள் மதியம் உறங்காமல் வீங்கிச் சிவந்த கண்களோடு அலைந்து கொண்டிருந்த ஆட்களிடன் அகப்பட்டு விட்டிருந்தனர். சூரியோதயத்தை நோக்கி கைக்கூப்பி நின்றிருந்த ஆட்களுக்குள் துழாவி விட்டு சாலைக்கு வந்த போது கறுப்பு துப்பட்டாவை முக்காடாக போட்டபடி நடந்து சென்று கொண்டிருந்தவளை முதலாளியின் சித்தப்பா மகன் பார்த்து விட்டிருந்தார். பின்னாலேயே பதுங்கி அவள் ஏறிச் சென்ற உயர்தர லாட்ஜின் அறைக் கதவை அவளுக்கு முன்னாலேயே அவர்கள் தட்டிக் காத்திருந்தனர். தூறல் நின்றிருந்த அந்தக் குளிர்ந்த காலையிலேயே அந்த அறை ஏசியால் மேலும் ஜில்லிட்டிருந்தது. விசில் அடித்தபடியே வந்து கதவைத் திறந்தவன் பெர்முடாஸ் மட்டும் போட்டிருந்தான். அவன் கையிலிருந்த ரிமோட்டை ஒருவன் பிடுங்கி டிவியை உச்சபட்ச அலறலில் ஒலிக்கவிட்டான். அவன் போட்டிருந்ததையும் உருவி எறிந்த விட்டு வாயில் துணியை திணித்து மயங்கிச் சரியும் வரை அடித்தனர். அவனைத் தூக்கி காரின் பின்பக்கம் போட்டுவிட்டு கிளம்பிய போது அவளை முன்னரே ஏற்றிப் புறப்பட்டிருந்த கார் அந்த ஊரின் எல்லையை கடந்து விட்டிருந்தது.


அவனோடு இரண்டு இரவுகள் அவள் தங்கிவிட்டிருந்த செய்தியை அமுக்க முயன்ற போதும் கசிந்து விட்டது. அவன் கட்டிய தாலிக்கயிறை அவள் அம்மா ஆவேசத்தோடு பிடுங்கி எடுத்து வீட்டின் பின்பக்கம் வறண்டு போய் கிடந்த கிணற்றில் வீசிவிட்டு வந்தாள். அவள் பிரம்மை பிடித்தவள் போல எதுவும் பேசாது உறைந்து போய் அமர்ந்திருந்தாள். அவ்வளவு சொத்துக்கும் ஒற்றை மகள். ஒரே வாரத்திற்குள் அவள் அதிலிருந்து மீள்வது போல அவளுடன் படித்த ஒருத்தியை வரவழைத்து உடன் இருக்கச் செய்திருந்தனர். தீவிரமாக அவளுக்கு மாப்பிள்ளைத் தேட வேண்டிய தேவையே இருக்கவில்லை. விஷயம் அறிந்திருந்த உறவுகளுக்குள்ளேயே ஒருவரை மற்றவர் பின் தள்ளி முன் செல்ல போட்டி இருந்தது. அதை முதலாளியும் அறிந்தே இருந்தார். அழைப்பு மணிச் சத்தம் கேட்டாலே அவர் வேறொரு அறைக்கு நகர்ந்து விடுவார். தைரியம் சொல்ல வருகிறேன் என பொல்லாதவைகளைக் கொட்டிவிட்டு போகும் ஆட்களின் முகங்களைக் கூட பார்க்க அவர் விரும்பவில்லை. அப்போது முத்துக்குமார் இருந்த இடத்திலேயே அல்லாடிக் கொண்டிருப்பதைக் கண்ணாடி ஜன்னலின் வழி பார்த்தார். சம்பளம் தர செக்கில் கையெழுத்துக்காக உட்கார்ந்திருந்தான். அவர் கையொப்பம் இடும் போது ஓரக்கண்ணால் பார்த்தபடியே மெல்லக் கனைத்தார். காத்திருந்தவன் போல அந்தத் தொகைக்குரிய கணக்கை ஒப்பித்தான். தலையசைத்து அவனைப் போகச் சொல்லிவிட்டு மனதிற்குள்ளாக பேசியபடி தன் மனைவியைப் பார்க்கச் சென்றார்.


முதலாளியின் சித்தப்பா பையன் முத்துக்குமாரை விலை உயர்ந்த காரில் அமரவைத்து ஆளில்லா இடத்திற்கு கூட்டிப் போய் நிறுத்திச் சிகரெட்டை நீட்டினார்.  டிரைவரைச் சாக்கு மூட்டையில் போட்டுக் கட்டி வேனுக்குள் தூக்கி எறிவதைக் கண்ட பிறகு அவன் என்ன ஆனான் என்பதே ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அந்த கிலியுடனே அவர் முகத்தை பார்த்து, பழக்கமில்லை என மறுத்தான். அவர் பாதி சிகரெட்டை காலில் போட்டு மிதித்தபடிநம்ம பாப்பாக்கு மருந்துக் கொடுத்துக் கூட்டிட்டுப் போயிட்டான் அந்த பலசாதிக்கு பொறந்த நாயி..” தொண்டையின் கமறலை சரிசெய்ய கனைத்து இறுமி சளியைத் துப்பியபடி அவனைக் கூர்மையாகப் பார்த்தார். அவர் கண்களைப் பார்க்காமல் பளபளப்பான அந்த கரரின் மீது காகம் இட்டு காய்ந்து போயிருந்த எச்சத்தையே முத்து பார்த்துக் கொண்டிருந்தான். ‘அட எலவு..இப்படீன்னா சுத்தமாயிட்டு போகுது என்றவாறே தன் மொடமொடக்கும் கதர் வேட்டியில் துடைத்த பிறகு அவனைப் பார்த்துச் சிரித்தார். மேலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தபடியேம்ம்ம்ன்னு சொன்னவுன்னீமு பாப்பாக்கு நீயு..நானுன்னு ஆளாப் பறக்கறானுங்கஆனா பாரு..அண்ணனுக்கு உம் மேல தான் அபிப்ராயம்..’ என மேலும் சகஜபாவத்துடன் கையை பற்றிநீயும் நம்ம பையந்தான்னாலுமு கொடுக்கற மருவாதையைக் கொடுத்து தான பேசோணும்..” என நிறுத்தினார்.  அப்போது அவன் மனதில் ஒரு வினாடி கூட வசந்தியின் முகம் வரவேயில்லை. அவர் திருப்பிக் காரை எடுக்கையில் முத்துக்குமார் முன்சீட்டில் அமர்ந்து அவர் அறியாத போது தொடையில் விரல்களால் மனதிற்குள் போட்டுக் கொண்டிருந்த கணக்கை நினைத்துத் தாளமிட்டான். பிறகு வீடு சேரும் வரை அவன் முன்னால் அவர் சிகரெட்டைப் பற்ற வைக்கவேயில்லை. நேராக முதலாளியின் வீட்டு வாசலின் முன் கார் நின்றது. அவன் இறங்கியதும் முதலாளியின் மகளை பார்க்க அவனைக் கூட்டிக் கொண்டு போனார்.


14


நான்கு நாட்களாக முத்துக்குமாரைக் காணாமல் யாரிடம் கேட்பதென்றும் தெரியாமல் வசந்தி தவித்துக் கொண்டிருந்தாள். வாட்ச்மேன் அய்யா நைட் ஷிப்ட் என அறிந்து சுடுநீரை காலில் கொட்டிக் கொண்டவள் போல மனதிற்குள் வந்தமர்ந்த அந்தப் பழைய வதந்தியை விரட்டியவாறு பரபரவென அங்குமிங்கும் நடந்தாள். தூசு படிந்து நிற்கும் அவன் பைக்கின் கண்ணாடியை துடைத்து அதில் தன் முகத்தைப் பார்த்தாள். அவன் கண்களுக்குள் தன்னைப் பார்ப்பது போல இருந்தது. வேலை முடிந்து பெய்து கொண்டிருந்த மழையில் நனைந்தபடியே போய் தலைகூடத் துவட்ட மறந்து எதுவும் உண்ணாமல் படுத்து விட்டிருந்தாள். கொதிக்கும் காய்ச்சலுடன் இரண்டு நாட்கள் மல்லுக்கட்டிவிட்டு அடுத்த நாள் சோர்ந்த முகத்துடனும் இன்று முத்துவைப் பார்த்துவிட முடியும் என்ற ஆவலுடன் நடையை எட்டிப் போட்டாள். கம்பெனி இருக்கும் தெருவை அடைந்ததும் வாசலின் முன் நான்கைந்து டெம்போ டிராவலர் வண்டிகளும் ஒரு பஸ்ஸும் நின்றது விநோதமாக இருந்தது. வண்டிகளை நெருங்கியதும் அதன் கண்ணாடிகளில் ரோஜாப்பூக்களிடையே முத்துவின் புகைப்படமும் முதலாளி மகளின் புகைப்படமும் ஒட்டிய அழைப்பிதழைக் கண்டாள். பேச்சற்று நின்றாள். அவளை வண்டியில் ஏறச் சொல்லி நக்கலாக சிரித்தவர்களைக் கூக்குரல் இட்டவர்களை அதே நிலையில் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு கண்முன் நிகழ்பவை எல்லாம் கனவுக்குள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் இவையெல்லாம்  வெற்று பிரம்மை என்றும் பட்டது. ஹாரன்களின் இடைவிடாத ஒலியைக் கேட்டதும் தான் நிஜ உலகிற்கு மீண்டு கால்கள் போன பக்கமாக நடந்தாள்.


பேருந்துகளைத் தவற விட்டுக் கொண்டே நின்றிருந்தாள். அவற்றின் குறுக்கே போய் விழக்கூட ஒரு முறை காலெடுத்து வைத்து விட்டாள். வெயில் தாளாமல் பஸ்ஸில் ஏறி ஊரில் இறங்கியதும் வீட்டை நோக்கி கால்கள் செல்லாமல் அங்கேயே நிலைத்தன. அவள் வேறு பாதையில் வீட்டுக்குச் சுற்றிக் கொண்டு போனாள். அந்த மொபட்டின் கடகடத்தச் சத்தம் அவள் நடையை தாமதப்படுத்தியது. டிவிஎஸ்-50ல் செல்வம் வேறு பட்டறையிலிருந்து செதுக்க எடுத்த கல்லை கிழிந்த சாக்கின் மீது வைத்து எதிரே வந்து கொண்டிருந்தான். இவளைப் பார்த்ததும் வேகம் மட்டுபட்டது. உடனே ஆஃப் ஆகிவிட்டது. வசந்தி செல்வத்தைப் பார்த்து மெதுவாகச் சிரித்தாள். அதைக் கண்டு அவன் பைக்கை கல்லோடு கீழே போட இருந்து சுதாகரித்துத் திணறி நம்ப முடியாமல் நின்றான். அவன் கைலியைக் கீழே இறக்கி விட்டு வண்டியைத் திருப்பி பெயரைச் சொல்லி ஆசையாக அழைத்தபடி அவள் பின்னால் பைக்கை முக்கி முணகித் தள்ளிக் கொண்டு வந்தான். அவள் மேலும் உரக்கச் சிரித்தபடி வேகமாக வீடு நோக்கிப் போனாள். அவளைக் கடந்து சென்றதும் செல்வம் தூரமாகப் போய் நின்று கொண்டு வசந்தி நடந்து வருவதையே பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென வீட்டிற்குள் நுழைந்த வசந்தியின் சிரித்த முகத்தைக் கண்டு திலகாவின் மடியில் இருந்த தீபா குதித்து வந்து அவள் கால்களைக் கட்டிக் கொண்டாள். விஷயம் தெரிந்து கம்பெனியில் போய் தேடி விட்டு அவளுக்கு முன்னாலேயே திலகா வீடு வந்திருந்தாள். தீபாவைத் தூக்கி முத்தியபடி இறக்கிவிட்டு திலகாவைப் பார்த்து கைப்புடன் மீண்டும் சிரித்தாள். துளிர்த்து நின்ற நீரைக் கடந்து ஒரு கணம் இருவரது கண்களும் தொட்டு அறிந்து மீண்டன. சட்டென வசந்தி வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள். அதற்குள்ளாகவே அக்கண்களில் இருந்ததை திலகா படித்து விட்டிருந்தாள். தாமதிக்காமல் எழுந்து போய் வசந்தியின் அருகில் அமர்ந்து எதுவும் பேசாமல் அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.  

(ஜுன் 2018)