Tuesday, October 14, 2014

பெருங்கனவைத் தூண்டிய கலைஞன்


சுந்தர ராமசாமி “வாழும் கணங்கள்’                        

பெருங்கனவைத் தூண்டிய கலைஞன்

                  போதிய அளவிற்கு நவீன இலக்கியத்துடனான பரிச்சயம் உள்ளவர்கள் இன்று நுழைந்து வெளியேறும் இடங்கள் பலவும் முன்பு அவ்வளவு எளிதானதாக இல்லை.கடந்த அரை நுற்றாண்டு காலத்தில் உருவான படைப்புகள் வழி நாம் இப்போதிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.தேவையற்று வளர்ந்து நின்ற முட்புதர்களை  அழித்து அவற்றை தன் மொழியின் மூலம் நற்பாதைகளாக ஆக்க முயன்ற முன்னோடிகளின் வெற்றி அல்லது தோல்விகளிலிருந்து கற்றுக் கொண்ட பிறகே,நமது காலடிகளை புதிய திசை நோக்கி வைக்கத் தொடங்குகிறோம்.இந்த பயணத்தின் தொலைவு அவரவர் ஆளுமை சார்ந்தது.அவ்வகையில் சுந்தர ராமசாமியின் ஆளுமை கண்டடைந்த பிரதேசங்களால் நவீன இலக்கியம் அடைந்திருக்கும் செழுமை முன்னுதாரணமற்றது.உச்சி வெய்யிலில் மரத்தைப் பிளக்கும் கோடாரியின் உக்கிரத்தை மொழிக்குத் தந்தவர் அவர்.

              
                          கடந்த மூன்றாண்டுகளில்-மரணத்திற்கு முன்வரை-அவர் எழுதிய பல வடிவங்களில் அமைந்த படைப்புகள் “வாழும் கணங்கள்எனும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.அதனால் இதனை கதம்பம் என்று ஒருவரும் தவறாக எண்ணிவிடக்கூடாது.புனைகதைகளும் புனைவல்லாதவையுமாக அமைந்திருக்கும் இத்தொகுப்பை சு.ரா.தன் இறுதி காலங்களில் எழுதினார் என நம்புவது கடினம்.அந்திமகாலத்தின் நிழல் இந்நூலின் எந்தப் பக்கங்களின் மீதும் கவியவில்லை.அந்தளவிற்கு எந்த சோர்வுமில்லாமல் ஊக்கமாக அவர் செயல்பட்டிருக்கிறார்.


கடந்த முக்கால் நூற்றாண்டில் தமிழில் வெளிவந்துள்ள சிறப்பான படைப்புகளுக்குப் பின்னால் நிற்கும் சூழலை உருவாக்கியிருப்பவன் பாரதி தான்.உலக இலக்கியம்.சிந்தனைகள்,கலாச்சாரம் ஆகியவை பற்றிய அவனுடைய அறிவும் அந்த அறிவுசார்ந்த கற்பனைகளும் தமிழை இருபதாம் நூற்றாண்டை நோக்கித் தள்ள வேண்டும் என்ற பெரும் ஆவேசத்தை அவனிடம் உருவாக்கியிருந்தன.எண்ணெய் வற்றிக் கொண்டிருந்த போதும் திரிபிடித்து 39 வருட  காலம் எரிந்த சுடர் அது.அதற்குமேல் நின்று எரிய அந்த விளக்கில் எண்ணெய் இல்லாமல் போய்விட்டது.



        
    

        சுழலில் சர்ச்சையை உருவாக்கி அந்தளவிலேயே நின்றும் போய்விட்ட ‘பிள்ளை கெடுத்தாள் விளைசிறுகதை மொழியின் நுட்பங்களாலும் உள்ளடகத்திலும் எழுப்பி நின்ற கேள்விகளை பெரும்பாலனவர்கள் போகிறபோக்கிலேயே கண்டு சென்றனர்.அந்தப் பெண்ணின் துயரை சூழல் எதிர்கொண்ட முறை கொடுமையானது.எதிர்வினைகள் அக்கதையை சிறுமைப்படுத்தின. படைப்பாளியின் மனதை பலரும் போதுமான புரிதலின்றியே அணுகினர்.தாயம்மாவின் மெளனத்திற்கு –அது ஒரு வித பிடிவாதம்-அவரவர் விருப்பதிற்கேற்ப அர்த்தப்படுத்திக் கொண்டதன் விளைவு இது.தாமோதரன் ஆசானின் சாயலும் இசக்கியின் சாயலும்(ஒரு புளியமரத்தின் கதை) தங்கக்கண் மீது விழுந்திருப்பது அவன் தாயம்மாவின் கதையைச் சொல்லும் லாவகத்திலிருந்து புரிந்து கொள்ள இயலும்.அவரது யதார்த்தக் கதை பாணியில் முக்கியத்துவம் பெற்ற சிறுகதைகளில் இக்கதைக்கும் பிரத்யேகமான இடமுண்டு.இதிலுள்ள மற்ற இரண்டு சிறுகதைகளும் சு.ராவின் ஆளுமைக்கு பலம் சேர்க்கக் கூடியவையல்ல.புழக்கத்திலிருக்கும் சிறுகதை வடிவத்திலிருந்து விலகி-கதைக்கும் கட்டுரைக்கும் மத்தியிலிருக்கும் வடிவத்தில்-கொசு மூட்டை பேன்கதையில் ஒரு மீறலை நிகழ்த்தியிருக்கிறார்.மீறல் என்ற அளவிலேயே இது கவனிக்கத்தக்கது.அங்கதத்தோடு எழுதப்பட்டிருக்கும் இச்சிறுகதை அதற்கேயிரிய நுட்பமான இடங்களை நோக்க்கி நகரவில்லை.அவர் மறைந்தபிறகு அச்சில் வந்த ‘ஜகதிபரவலான வாசகப்பட்டும் போதிய சலனத்தை உருவாக்கவில்லை.

நம் மரபையும் பண்பாட்டையும் எந்தளவிற்கு நாம் காப்பாற்றுகிறோமோ அந்த அளவுக்கு நம்மைப் பிறர் மதிப்பார்கள் என்று மத்திய வர்க்கத்தினர் சொல்வார்கள்.கடைத் தெருக்களில் விற்பனையாகும்  பொருட்களில் சில வாழ்க்கையின் வெற்றியை முழக்குபவையாக இருக்கின்றன.அவற்றைத் தம்தம் வீடுகளுக்குள் எப்படி நுழைய வைப்பது என்ற அரிப்புத் தான் மத்தியதர வர்க்கத்தினரின் முதல் பிரச்சனையாக இருக்கிறது.பலசமயம் இந்தக் கொள்முதலைத் தான் மரபு,பண்பாடு என்றெல்லாம் சொல்கிறார்களோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது



         
    
      மொழியில் முன்பிருந்த இறுக்கத்தை கட்டுரைகளில் தளர்த்திக் கொண்டிருக்கிறார்.அவரது புனைவல்லாத ஆக்கங்களில் எப்போதுமிருக்கும் வெகுசனக் கலாச்சாரம் பற்றிய இரக்கமற்ற விமர்சனம் இவற்றிலும் கறாராக ஒலித்திருக்கிறது.தாய்மொழிக்கல்வி போன்ற மைய நீரோட்டப் பிரச்சனைகளிலிருந்து அந்தரங்கமான நெருக்கடிகள் வரை இதில் எழுதியிருக்கிறார்.பேரலைகளின் கைகளால் சிதலமாக்கப்பட்ட சேதுராமன் மற்றும் அவரது குடும்பத்துடனான நட்பு பற்றி தேம்பல்கள் எதுவுமின்றி சு.ரா எழுதியிருப்பதை வாசித்தால் அது கட்டுரையே அல்ல என்று தோன்றும்.அதிலிருக்கும் பெயர்களை மறந்து விடுவோமென்றால் அது சிறுகதையின் நுட்பத்தோடும் முடிச்சோடும் அமைந்திருப்பது விளங்கும்.ஆனால் துயரத்தின் உடையாத குழிழ் ஒன்று இந்த பக்கங்களில் அலைவதையும் கண்டுகொள்ள முடியும்.தற்செயலாக எடுத்த ஒரு முடிவு அவர்கள் அனைவரது உயிர்களையும் அபிலாஷைகளையும் அடித்துக் கொண்டு போய்விட்டது.
              
     

   
                 இந்நூலை வாசிக்கும் ஒருவருக்கு சு.ராவின் எழுத்துக்களில் முன்பரிச்சயம் இருக்ககூடுமெனில் அவரது சிந்தனை வேறொரு தளம் நோக்கிச் சென்றிருப்பதை உணர்ந்திருக்கக் கூடும்.ஒவ்வொரு மனிதனிடமும் சென்று “நீ எப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறாயோ அப்படியே இரு”(ஜே.ஜே.சில குறிப்புகள்) என்று எண்பதுகளின் தொடக்கத்தில் எழுதிய சுந்தர ராமசாமி இறப்பதற்கு சில மாதங்கள் முன்பு எழுதிய கட்டுரையில் “நான் உனக்கு என்ன செய்தால் உன் வாழ்க்கை நிறைவாக இருக்கும் (பக்.115,பெண்கள் எழுதாத புத்தகங்கள்) என்ற இடத்திற்கு வந்து சேர்கிறார்.முன்பு சக மனிதனை நோக்கி பரிவுடன் சுட்டி நின்ற அவரது விரல் இங்கு தன்னையே நோக்கி திரும்பிக் கொள்வதைக் காணலாம்.மிகைப்படுத்தல்களை விரும்பாத ஒருவரால் தான் தன் மகளின் இழப்பைக் கூட விலகி நின்று வாசிப்பவர்களுக்கு மனநெருக்கடியை உருவாக்கும் விதத்தில் எழுத முடியும்.இடதுசாரிகளின் வீழ்ச்சி பற்றி இந்நூலில் சு.ரா வைக்கும் விமர்சனம் மிகக் கடுமையானது.சம காலத்தில் வெளியாகி முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டிய ஆனால் போதுமான கவனிப்பிற்குள்ளாகாத நூல்கள் பற்றி புதிய பாணியில் அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் இவற்றில் உள்ளன.அந்த நூலின் சாரத்தை அதிலிருந்தே தொகுத்து தருவதன் மூலம் அதன் பெறுமானம் சார்ந்து நமக்கிருக்கும் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும் அதே சமயத்தில் அதிலுள்ள குறைகளைச் சுட்டவும் அவர் தவறவில்லை.

மனிதனின் போராட்ட குணம் அவன் நம்பும் தத்துவத்தைச் சார்ந்தது.இந்த பலம் தான் ஒரு இளைஞனைத் துப்பாக்கி முன் சட்டையைக் கழற்றி நெஞ்சைக் காட்டச் சொல்கிறது.இடதுசாரிகளால் தொழிலாளி வர்க்கத்திற்குத் தத்துவப் பலத்தை ஊட்ட முடியவில்லை.அதற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கவுமில்லை.தொழிற்சங்கவாதிகளில் பெரும்பாலோர்  மார்க்சீயத்தைக் கற்றுக் கொள்வதில் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கவில்லை.வேலைநிறுத்தம் என்பதே வருமானம் சார்ந்த நோக்கம் மட்டுமே கொண்டது அல்ல.அது புரட்சியை மலரச் செய்வதற்கான பாதையில் ஒரு மைல்கல்.ஆனால் தத்துவப் பின்னணியற்ற இந்தியத் தொழிலாளிகள் வருமானத்தையே இறுதிக் குறிக்கோளாக வைத்துக் கொண்டனர்.உலகத் தொழிலாளி வர்க்கத்துடனான உறவை உரிய நேரத்தில் அவர்கள் கத்திரித்து விட்டுவிட்டனர்.


 

         அவரது எழுத்துக்களின் தொடர்ச்சி தான் உரைகளும்.மொழியின் அழகை விட்டுக் கொடுக்காமலும் தீவிரம் குன்றாமலும் சரளமாக பேசக் கூடியவர் அவர்.குறிப்புகளின் வழி அவர் உரைகளை நிகழ்த்தியிருக்கிறார்.பறவைக்கு கண்கள் எப்படியோ அப்படித்தான் சு.ராவுக்கு குறிப்புகளும்.அந்த குறிப்புகள் காட்டும் திக்குகள் நோக்கி எழுந்து சிறகசைத்துப் பறந்து திரும்பி வரும் போது அவர் சென்று வந்ததன் தொலைவு நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். கவிதை,சிறுகதை,நாவல் என்ற மூன்றைப் பற்றியுமே அவர் பேசியிருப்பது அகஸ்மாத்தமாக நேர்ந்த ஒன்று தான்.ஆனால் இம்மூன்றிலும் வெளிப்படுவது அவரது நவீன மனம்.இப்பகுதியில் அவர் படைப்பின் சுதந்தரம் பற்றி ஓயாமல் வற்புறுத்துகிறார்.நவீன இலக்கியத்திற்குள் நுழைய அதன் வாசலில் காத்து நிற்கும் இளம் வாசகனுக்கு இந்த உரைகள் அவனுக்குரிய கதவுகளை அகலத் திறந்து வைக்கின்றன.
    
       

               கவிதையின் இடத்தைப் பற்றிக் கொள்ள எப்போதுமே உரைநடை முயன்று வந்திருக்கிறது.அதற்கு வெகுவாக பிரயாசைப்பட்ட முதல் படைப்பாளி மெளனி தான்.மனக்கோலங்களை காட்சிப்படுத்த அவர் மொழியை பயன்படுத்திய விதம்,பலராலும் விமர்சனத்திற்குட்படுத்தப்பட்டாலும் அவை வெளியான காலத்தை நினைவில் கொண்டால் அந்த இடைவெளிகளை தவிர்க்க முடியாதவை என்றே தோன்றுகிறது.காலப்போக்கில் மொழி பற்றிய பிரக்ஞை உருவாகி  வேரூன்றி பரவத் தொடங்கி இப்போது பெரிய மரமாக ஆகிவிட்டது.நிமிடங்கள் தோறும் உருமாரும் இயற்கையின் விசித்திர அழகுகளை சிக்கனமாக சொற்களால் கவிமொழியின் அழகுடன் நாட்குறிப்பில் விவரித்திருக்கிறார்.மொழியின் அற்புதமான கணங்களை சு.ரா அந்த நாட்குறிப்பில்-சில மணங்கள்-தொட்டிருக்கிறார்.நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையில் ஊடாடிய ஒரு மனதின் துடிப்புகளை அடுத்தடுத்த நாட்களில் அவர் எழுதிய நாட்குறிப்புகளில் கேட்க முடிகிறது.மீண்டு வரக்கூடிய கட்டத்திற்கு வந்து கொண்டிருக்கும் போது காலம் மரணத்தின் பக்கமாக அவரைத் தள்ளிற்று.அவர் விரும்பியவாறு பெரும் புதையல் போல ஒரு வாழ்க்கை அவருக்குத் திரும்பாமல் போனது துரதிஷ்டவசமானது மட்டுமல்ல.நவீன இலக்கியத்திற்கு நேர்ந்த பெருந்துயரமும் கூட.
                       
(பிப்ரவரி 2006-ல் இம்மதிப்புரை எழுதப்பட்டது.எங்கும் பிரசுரமாகாதது.)

[பெட்டிகளில் இடம்பெற்றிருப்பவை வாழும் கணங்கள் நூலிலிருந்து தேர்ந்தெடுத்தவை]

நன்றி : புதுவை இளவேனில்(சு.ரா.புகைப்படங்கள்)

வாழும் கணங்கள் சு.ரா படைப்புகள்: 2003-2005 –சுந்தர ராமசாமி –காலச்சுவடு பதிப்பகம்(டிசம்பர் 2005)  

Monday, September 29, 2014

ரேமண்ட் கார்வர் “ஒரு பெரிய நல்ல காரியம்”





ரேமண்ட் கார்வரின் “வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு


ஒரு பெரிய ,நல்ல காரியம்..


                              முக்கியமாக நாங்கள் கண்டுணர்ந்தது,வாசிப்பு எவ்வளவு மேலோட்டமானது என்பதை,யதார்த்தவாதம் எவ்வளவு வீரியமான கதை சொல்லல்முறை என்பதை,நன்றாக எழுதப்பட்டால்,சிறுகதை எத்தனை அபாரமான வடிவம் என்பதை.
                                  -நூலின் முன்னுரையிலிருந்து...



             ஏற்கனவே இருந்துகொண்டிருக்கும் ஆக்கங்களின் உள்ளடக்கப் போதாமையை, அவை காலத்தின் முதுகிலேறி அமர முடியாமல் படும் சிரமங்களைக் கண்ட மனம் தான் முதலில் மொழிபெயர்ப்பு என்னும் கூடு பாயும்வித்தையை நிகழ்த்தியிருக்க வேண்டும். நம் படைப்புச் செயல்பாட்டின் மீதான அதிருப்தி அதை முன்னெடுத்து செல்வதற்கான முனைப்பு என்றும் இதைக் கருதலாம்.நாவலை எவ்வாறு மேற்கிலிருந்து பெற்றோமோ அதே போலத் தான் சிறுகதையும்.அதன் வடிவம்,மொழி,கூறுமுறை,உத்தி போன்றவை ஒரு சிறுகதைக்கு அளிக்கும் பங்கு அளப்பரியது.ஆனால் அதற்குள் அனுபவங்களைச் சொல்வதிலுள்ள நுட்பம்,வாழ்க்கை மீதான் தனித்த நோக்கு போன்றவற்றை எவரிடமிருந்தும் கடன் பெற்று விட முடியாது. என்ற போதிலும்  அதில் நம் இலக்கிய முன்னோடிகளின் சாயல் ஏதோ ஒரு விதத்தில் விழுந்திருப்பதைப் போலவே வேற்று மொழி ஆக்கங்களின் மீதான வாசிப்பு சார்ந்த பிரதிபலிப்பிலிருந்தும் தப்ப முடியாது.ஆச்சர்யமாக இங்கு இருவேறு தேசத்து இலக்கியங்களே கோலோச்சியிருக்கின்றன.பிற தேசத்து இலக்கியங்களின் பெயர்ப்புகள் உண்டென்றாலும் ரஷ்ய,இலத்தீன் அமெரிக்க இலக்கிய மொழியாக்கங்கள் போல அவை பெரும் வீச்சாக பரவவில்லை(விதிவிலக்குகள் காம்யூவின் அந்நியன்மற்றும் காஃப்கா வின் விசாரணை’). ரஷ்ய,இலத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் தமிழ் வாழ்க்கையோடு கொண்டிருந்த ஒரு விதமான நெருக்கத்தையே அதற்கு காரணமாக கூறத் தோன்றுகிறது.


ஐரோப்பிய மொழியிலிருந்து க.நா.சு மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்த படைப்புகளை நோக்கினால அவரது கவனம் விழுந்ததும் இந்தக் கூறின் மீது தான் என்பது தெரியவரும்.வாசகனுக்கு மனவிலகலையோ,இது தனக்கானது அல்ல என்னும் அன்னியத்தன்மையையோ,ஒவ்வாமையையோ ஏற்படுத்தாத மொழிபெயப்புகளே தமிழில் நிலைபெற்றிருக்கின்றன.போதுமான புகழும் போதிய ஆதாயமும் கிடைக்காத இத்துறைக்கு தங்கள் இதயத்தையும் நேரத்தையும் அளித்து இலக்கியத்தின் நுரையீரலுக்கு புதிய காற்றைக் கொண்டு வந்து சேர்க்கும் இவர்களை ‘அர்பணிப்பாளர்கள்என்னும் சொல்லால் அழைக்கவே விரும்புகிறேன்.பொறுப்புணர்ச்சி அற்றவர்களையும் தன் மேதமையைக் காட்ட இந்த உலக்த்திற்குள் நுழைந்து உலவித் திரிபவர்களையும் நாம் மறந்து விடுவோம்.ஏனெனில் பெயக்கப்படும் ஆக்கத்திற்கு அதன் மொழிபெயர்ப்பாளன் , அவனாகவே எடுத்துக் கொண்ட சிறிதளவு சுதந்திரத்துடன் எவ்வளவு விசுவாசமாக இருக்கிறானோ அதை விடவும் அந்த மொழிபெயப்பு நிகழ்ந்த மொழியின் வாசகன் அவனுக்கு அதைவிடவும்  நன்றி உடையவனாக இருப்பான்.அந்த வகையில் கார்வரோடு இணைந்து இந்த நான்கு மொழிபெயப்பாளர்களும் உருவாக்கியிருக்கும் இந்த ‘கதீட்ரல்வாசகனை மனச்சலனங்களுக்கு உட்படுத்தும் அதே வேளையில் அவன் மனதிலிருக்கும் யதார்த்தம் பற்றிய இளப்பான பார்வையை மறுபரிசீலனை செய்யத் தூண்டகின்றன.   
           


             பதிமூன்று கதைகளை உள்ளடக்கியிருக்கும் ரேமண்ட் கார்வரின் இக்கதைகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரது புனைகதைகள் அடைந்த மாற்றங்களையும் செறிவையும் குறுக்குவெட்டாக இல்லாமல் நேரடியாகவே காட்டும் மொழியாக்கத் தொகுப்பு இது.அதற்கேற்ற சிறுகதைகளை தேர்ந்தெடுத்திருப்பது போலவே அவை காலவரிசைப்படியும்  அமைக்கப்பட்டிருக்கின்றன.வாசகனை மருட்டும் அல்லது நெற்றி நரம்புகள் புடைக்கச் செய்யும் மொழிநடை அல்ல கார்வருடையது.வர்ணணைகளையும் விட்டு விலகி நிற்பது.எனவே எளிமையானது.ஆனால் ஆழம் மிக்கது.உட்பொருட்களையும் ரகசிய கதவுகளையும் தன்னகத்தே வைத்திருப்பது.பழகிப் போன ஒரு சொல்லை எங்கு எவ்வாறு பயன்படுத்தினால் அது எப்படி ஒளிரும் என்பதை நுட்பமாக அறிந்து வைத்திருப்பவர் இவர்.ஒரு வாக்கியத்தில் அல்லது வெறும் சிறு உரையாடலில் கார்வர் இட்டுச் செல்லும் வழித்தடங்கள் நம் மனதைக் கிளறக் கூடியவை.சொற்களை விரயமாக்காமல் சிக்கனமும் செட்டான சித்திரிப்பு மொழிநடையும் கொண்டவை கார்வரின் கதையுலகம்.அதனால் தான் அவரால் நாவல் எழுத முடிந்திருக்கவில்லையோ?என நினைக்க வைக்கிறது.



ஏனெனில் எளிமையாகத் தோன்றக்கூடிய இந்த யதார்த்தக் கதைகளைத் தான் கார்வர் இருபது முறை திருத்தி எழுதியதாக செங்கதிரின் முன்னுரையில் ஒரு வரி வருகிறது.இருபது முறை என்பது திருத்தம் அல்ல செதுக்கல்.தமிழில் இன்னும் தன் எழுத்தை திருத்துவது இருந்து கொண்டிருக்கிறது.ஆனால் இப்போது செதுக்கல் அனேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.
        

             சிறிய கதைகளும்(இரு பக்கங்கள்) சிறுகதைகளும் நெடுங்கதைகளுமாக விரவிக் கிடக்கும் இத்தொகுப்பை கவனமாக படித்தால் 1980-க்கு பிறகு கார்வர் எழுதிய கதைகள் தான் அவரது ஆளுமையை நமக்கு உணர்த்துகின்றன என்பது புரியவருகிறது.அதற்கு அக்கதைகளில் கூடியிருக்கும் செறிவும் சொல்முறை சார்ந்த கவனமும் சாட்சிகளாக இருக்கின்றன.தன் முந்தைய கதைகளிலேயே அவர் காட்டியிருக்கும் உலகை அதன் பிறகு இன்னும் அருகாகப் போய் மனங்களின் புரிபடாத்தன்மையை அதன் நிழலாட்டத்தை வெவ்வேறு புள்ளிகளில் தொட்டுக்காட்டும் கார்வர் அதில் தன் சொந்த வாழ்க்கையின் சில பக்கங்களை புனைகதைகளுக்கே உரித்தான வெளிபாட்டு அமைதியுடன் முன்வைக்கிறார்.அந்தப் புள்ளிகளை தன் வாசிப்பின் வழியே இணைத்துப் புரிந்து கொள்ளும் நுட்பமான மனம் சில தருணங்களில் மனநகர்வுக்கு ஆட்படுவதை தவிர்க்க முடியாது என்றே படுகிறது.
          


              இயல்பும் யதார்த்தமும் கொண்ட ஆனால் நுண்ணிய அவதானிப்புகளால் நேர்த்தியான மொழியில் உருவாக்கப்பட்டிருக்கும் கதீட்ரல்,ஒரு சிறிய,நல்ல காரியம்,ஜுரம் ஆகிய கதைகள் ஆகச் சிறப்பான வாசிப்பனுபவத்தைத் தருகின்றன.அதிலும் முதலிரு கதைகள் காய்ந்து போன சருகுகளால் மூடிக்கிடக்கும் மனச்சுனையைத் தூண்டி படைப்புக் கனவை உசுப்பக் கூடியவையாக இருக்கின்றன.தன் மனைவியின் (பார்வையற்ற) நண்பனின் வருகையால் ஒருவனுக்குள் உண்டாகும் எரிச்சலை முதலிரு வாக்கியத்திலேயே கார்வர் நுட்பமாக சுட்டி விடுகிறார்.அவனை குருடன்என அறிமுகப்படுத்துவதிலேயே அந்த எரிச்சல் வெளிப்பட்டுவிடுகிறது.பின்னர் அவர்களுக்குள் மனதளவில் இணக்கமான நட்பு-குறிப்பாக அந்த எரிச்சல் கொண்டிருந்தவனுக்கு-மெல்ல வளர்ந்த பின்னர் அவனை பார்வையற்றவன்என்ற சொல் கொண்டே சுட்டுகிறான்.குருடன் என்னும் கடுஞ்சொல் பின்னர்  மிதமான சொல்லாக ஆகிவிடுவதை வைத்தே அவர்களுக்குள்ளிருக்கும் உறவின் இடைவெளி வெகுவாக குறைந்து விட்டிருப்பதை கார்வர் உணர்த்தி விடுகிறார்.இதன் மூலம் ஒரு சொல்லுக்குப் பின்னிருக்கும் அர்த்தங்களுக்கு அவர் அளித்திருக்கும் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது.அதைக் கச்சிதமாக தமிழில் பிடித்து இக்கதைக்குள் கொண்டு வந்திருக்கும் செங்கதிர் அதன் மூலம் கதையுடனான நம் பயணத்தின் தொலைவைக் கூட்டி விடுகிறார்.அவ்விருவருக்குமான சிறு சிறு உரையாடல் மூலம் மேலும் அவர்கள் நெருக்கமாகி எழுப்பும் கதீட்ரலை  காணும் வாசகன் சில கணநேர மெளனத்திற்குப் பின் தன் மனதிற்குள்ளாக எழுப்பும் கதீட்ரல் அதற்கு நிகராக மேலெழுவதை அவனே வியப்புடன் உணரக் கூடும்.
            

                     தன் மகனது பிறந்த தினத்துக்கு கேக் ஆர்டர் செய்வதிலிருந்து எளிமையாக தொடங்கும் “ஒரு சிறிய, நல்ல காரியம்அதை உள்ளூர உணர்ச்சிகளை அடக்கி கட்டுக்குள் வைத்திருக்கும் தம்பதியினரின் துயரை (அந்த மருத்துவரும் கூட அதைக் காட்டிக் கொள்வதில்லை)அவர்களது  மனதின் திரிபுநிலையில் கூட அடங்கிய தொனியில் ஆனால் வாசிப்பவனுக்கு ஆழமான மனவலியை ஏற்படுத்தி விடுமளவிற்கு கார்வரால்  சொல்லப் பட்டிருக்கிறது.புற உலகின் காட்சிகளை வெகு துல்லியத்துடன் ஆனால் அளவெடுத்த சொற்களால் அவர் தீட்டுவதைக் கண்டு  இந்த கதையை கார்வர் எவ்வளவு முறை திருத்தி எழுதியிருப்பார் என்ற எண்ணமே முதலில் வந்தது.அந்தளவிற்கு கட்டுக்கோப்பான நடையைக் கொண்ட கதை இது.மிகை உணர்ச்சிக்கு அதிகளவில் இடமிருக்கும் ஒரு கதையில் அதற்கு இடந்தராமலும் அதை வைத்து கண்ணீரால் பக்கங்களை நனைக்காமலும்  கார்வர் நகர்த்திச் சென்றாலும் கூட இக்கதை தரும் பாதிப்பு வலுவானது தான்.அவளது மொத்தக் கோபமும் இயலாமையும் அந்த தொலைபேசித் தொல்லையாளனான ரொட்டிக்கடைக்காரனிடம் ஒற்றை வசவுச் சொல்லால்(தேவிடியாப் பையா!)வெடிப்பதில் சமநிலையோ அல்லது போலியான சமாதானமோ அடைகிறது.சம்பரதாயமாக இல்லாத இந்தக் கதையின் முடிவுக்கு அருகே கதையின் தலைப்பைக் கொண்டு வந்து வைத்ததும் அந்த துயரின் அளவு மேலும் உயர்ந்து விடுவதைக் கண்டேன். இக்கதையை எம்.கோபாலகிருஷ்ணன் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.
       

 

                   தமிழ் வாசகனுக்கு அன்னியமாகத் தோன்றக்கூடிய ஒரு வாழ்க்கை முறையையொட்டி  எழுதப்பட்டுள்ள ஜுரம்வாசகனுக்கு மனத்தொந்தரவை தோற்றுவிக்கும் கூறுகள் நிரம்பிய கதை.குழந்தைகளை விட்டுவிட்டு வேறொருவருடன் வாழச் சென்று விட்ட மனைவி அவளது முந்தைய கணவனோடு சுமூக உறவை மேற்கொள்ளும் பொருட்டு தொலைபேசியில் பேசுவது வாசகனுக்கு அசூசையையும் என்ன இது?என்ற கோபத்தையும் உருவாக்கிவிடுகிறது.இது போன்ற ஒரு கதையோ அதற்குள் செயல்படும் மனமோ தமிழில் இந்தளவிற்குச் சாத்தியமில்லை.ஆனால் கார்வர் அவருக்கேயுரிய கதை சொல்லும் பாணியில் அந்த ஜுரத்தை படிப்பவனுக்கும்கடத்தி விடுகிறார்.மொழிபெயப்பாளர் விஜய ராகவன் சரளமாக இக்கதையை மொழிபெயர்த்திருக்கிறார்.
            

                       ”எங்கிருந்து அழைக்கிறேன் நான்?மற்றும் பெட்டிகள் ஆகியவை தொகுப்பின் சிறந்த கதைகள்.விஸ்தாரமான தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் வேறு தொனியில் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட கதை போல “அவர்கள் யாரும் உன்னுடைய கணவர்கள் இல்லைசிறுகதை இருக்கிறது.ஆனால் வேறொரு முறையில் வேறொரு அர்த்தத்தில் தமிழுக்கு இக்கதை அவசியமானது.சற்றே பெரிய விஷயமொன்றை சிறிய உடலுக்குள் அடக்கிக் கொண்டிருக்கும் கதை “அற்ப விஷயங்கள்.”Little things” என்னும் ஆங்கிலத் தலைப்பை “அற்ப விஷயங்கள்என மோகனரங்கன் தமிழ்ப் படுத்தியிருப்பது இந்த மொழிபெயர்ப்பாளர்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.


தொகுப்பின் ஒட்டுமொத்த தொனிக்கும் பொருந்தாத சிறுகதை செக்காவின் இறுதிநாட்களை அடிப்படையாக் கொண்டு கார்வர் எழுதியிருக்கும் “சின்னஞ் சிறு வேலை”.செக்காவின் மீதான கார்வரின் மதிப்பைக் காட்டும் இக்கதை அவரது இறுதிக் கதையாக அமைந்துவிட்டிருக்கிறது.அதே போல கார்வரின் மீது கதை தேர்வாளர் செங்கதிர் கொண்டிருக்கும் மரியாதை தான் இக்கதை  தேர்வு செய்யப் பட்ட்தற்கான சேர்க்கப்பட்டிருப்பதற்கான காரணமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

            
         மதுவும் புகையும் ரேமண்ட் கார்வரின் கதையுலகில் நிறைந்திருக்கின்றன.எளிமையானவர்களால் சூழப்பட்டிருக்கும் இக்கதையுலகம் அவர்களை நெருங்கிச் சென்று காட்ட முயல்கிறது.எனவே தான் குடிநோயாளிகளும் புகைபோக்கியைத் துப்புரவு செய்பவர்களும் (எங்கிருந்து அழைக்கிறேன் நான்?) மதுவை வெகு இயல்பாக தண்ணீர் போல உபயோகிப்பவர்களும் (கதீட்ரல்), விடுமுறை தினத்தில் மீன்பிடிப்பவர்களும்(வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு) விற்பனைப் பிரதிநிதிகளும் சிற்றுண்டி விடுதி பணியாளர்களும்(“அவர்கள் யாரும் உன்னுடைய கணவர்கள் இல்லை” )ரொட்டிக்கடைகாரர்களும்(ஒரு சிறிய, நல்ல காரியம்)சகஜமாக புழங்குகிறார்கள்.இவர்கள் நிம்மதியற்றவர்கள்.மணவாழ்க்கையின் மீது கசப்பும் ஒரு வித விலகல் தன்மையும் இவர்களுக்கு இருந்து கொண்டிருக்கிறது.அதனால் தான் வேறொரு துணையைத் தேடி இணைந்து கொள்கிறார்கள்.பெரும்பாலான கதாபாத்திரங்கள் இளம்வயதிலேயே காதல் கொண்டு மணம்புரிந்து கொள்கிறார்கள்.(கார்வரின் முதல் திருமணம் அவரது 18வது வயதில் நடந்ததை இங்கு நினைவு படுத்திக் கொள்ளலாம்.)பின்னர் சச்சரவிட்டு தற்காலிகமாக சமாதானமும் அடைந்து விடுகிறார்கள். 

         
             குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய மற்றொன்று இந்தத் தொகுதியில் வரும் கார்வரின் பாத்திரங்கள் உள்ளூர பதட்டங்களால் சூழப்பட்டவர்கள்.குறிப்பாக பெண்கள்.பெட்டிகள்கதையில் வரும் வீட்டை மாற்றிக் கொண்டேயிருக்கும் அந்த வயதான அம்மாவும், ஒரு சிறிய, நல்ல காரியத்தில் அவர்கள் ரொட்டிக்காரனோடு பேசத் தொடங்குவதும்,படுக்கையில் தம்பதிகள் ஓயாமல் பேசியபடியே(இந்தப் படுக்கையை உபயோகிக்கும் யாரும்)இருப்பதும்,அந்த ஜுரம் அவனுக்கு விடாமல் அடித்துக் கொண்டேயிருப்பதும் அந்த பதட்டத்தின் வெளிப்பாடுகள் தான். வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்புநெடுங்கதையில் அதை நேரடியாகவே அந்தப் பெண்ணின் மூலம் நம்மால் காணமுடியும்.

        
           இந்தக் கதைகளுக்கு கார்வர் வைத்திருக்கும் தலைப்புகள் அதன் கருப்பொருளுடன் இணக்கமான உறவைக் கொண்டிருப்பது கதைக்கு வலு சேர்க்கிறது. எங்கிருந்து அழைக்கிறேன் நான்?என்னும் தலைப்பு கவிதையொன்றின் அழகிய வரி போல ஓசைநயத்துடன் மனதில் பதிகிறது.அது போலவே கதையின் முடிவுகள் கூடுதல் அழுத்தத்தை கதைகளுக்கு தருக்கின்றன.
        
     
             தமிழ்த்தனமாக மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும் என்பதற்காக “சாப்பாட்டு ராமன் என்னும் சொல்லை பயன்படுத்துவதில் தவறில்லை தான்.ஆனால் பாரதி தன் காதலியை “கண்ணம்மாஎன அழைத்தது போலவே  அமெரிக்கா காதலனும் தன் காதலியை அழைப்பது ஒரு வகையில் ரசமாகத் தான் இருக்கிறது.ஆனால் வாசிக்கையில் நெருடுகிறது.கண்ணே..என வேறு இடத்தில் உபயோகப்படுத்தியிருக்கும் இதே மொழிபெயர்ப்பாளர் இங்கு ஏன் கவனிக்காமல் விட்டார் எனத் தெரியவில்லை.அதே போல சில கதைகளில் அமெரிக்கத் தம்பதிகள் கொங்கு தமிழில் உரையாடிக் கொள்வது கதைக்குள் ஒட்டாமல் விலகியே நிற்கிறது.அங்கு பொதுத் தமிழை பயன்படுத்தியிருக்கலாம்.மேலும் முன்னுரையில் செங்கதிர் காய்ச்சல் எனச் சுட்டி எழுதும் கதை, தொகுப்பிற்குள்  ஜுரம்எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது.
                 
       தமிழில் எளிமையான கதைகளுக்கு உதாரணமாக  ஜானகிராமன்,கு.அழகிரிசாமி,அசோகமித்திரன் ஆகிய மூவரும் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள்.ஆனால்  தமிழில் கார்வரோடு ஒப்புநோக்கத்தக்க  படைப்பாளி என அசோகமித்திரனைத் தான் சொல்ல முடியும்.எளிமையும் நுட்பமும்  ஆழமும் கொண்ட ஆக்கங்களை அதே அளவு தரத்துடன் எழுதியவர் அவர்.  
        







ரேமண்ட் கார்வரின் படைப்பாளுமையை காட்டும் வகையில் அவருக்கென்று தனியாகத் தொகுப்பு தமிழில் வந்திருப்பது இதுவே முதன் முறை.இதற்கு முன் கார்வரின் கதைகளை உதிரியாக மொழிபெயத்தவர்களின் பெயர்களை முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் ஒழுக்கம் மெச்சத்தகுந்தது.இந்நூலின் கதைகளை தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கும் செங்கதிர் அதற்கு எழுதியிருக்கும் முன்னுரை விமர்சன ஆய்வு போல அமைந்திருக்கிறது. அதில் வாசகனுக்கு கார்வரைப் பற்றியும் அவரது கதைகளைப் பற்றியும் தொகுக்கப்பட்ட கதைகளின் பின்னிருக்கும் ரசனை பற்றியும் செங்கதிர் பேசியிருப்பது கதைகளுக்குள் நுழைவதற்கு மிக நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது. யதார்த்தவாதம் உறுதிப்பட்டுவிட்ட இப்போதைய காலக்கட்டத்தில் இந்நூல் வெளிவந்திருப்பது ஒரு வகையில் நல்லது தான்.இன்னும் அவை நுட்பமும் செறிவும் அழகும் கொண்டு கார்வரால் எழுதப்பட்டிருக்கும் இக்கதைகள் உதவக்கூடும்.இந்த நான்கு மொழிபெயர்ப்பாளர்களும் கார்வரின் உலகை தமிழுக்கு சிறப்பாக கொண்டுவந்திருக்கிறார்கள்.அழகிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும் இன்னும் நூலை காலச்சுவடு பதிப்பகம் நன்றாக  வெளியிட்டிருக்கிறது.

(13.09.2014 அன்று ஈரோட்டில் இலக்கிய சுற்றமும் காலச்சுவடும் இணைந்து நடத்திய மொழிபெயர்ப்பு அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நன்றி : மலைகள் இணைய இதழ்

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு-ரேமண்ட் கார்வர்-தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பு-காலச்சுவடு பதிப்பகம்.

***************