ஊசல்
பனிரெண்டு நாட்கள் நீளும் திருவிழாவில் ஐந்தாம் நாளுக்காகவே அந்த மாதத்தின் நாட்களை எண்ணிக் கொண்டு காத்திருந்தவர்களுக்கு ஒன்று மட்டும் புரியவேயில்லை. இப்போது
நகராது பொதிமாடு போல கிடக்கும் நிமிடங்கள், பிற நாட்களில்
அடுப்பில் ஏதாவது வைத்து சில வினாடி அப்பால் நகர்ந்தால் மட்டும் ஏன் இறக்கை கட்டிக் கொண்டு விடுகிறது? எதையேனும் எதிர்ப்பார்த்திருக்கும் போது மனதின் வேகத்திற்கு காலம் ஓடுவதில்லை போலும். இந்த நிமிடங்களின் காலில் சக்கரத்தைக் கட்டி விட முடியாதா? எப்போது தான் காத்திருக்கும்
வேளையை நோக்கி கடிகார முள் நகரும்? ஆனால் உறக்கம் கலையும் இரவுகளில் மட்டும் ஏன் காலம் உறைந்து போய்விடுகிறது? எப்படி எதை யோசித்துப் புரண்டெழுந்து நீர் குடித்து மீண்டும் கண் மூடினாலும் வினாடிக் கழிய ஒரு நாழிகை நேரம் ஆனது போல தோன்றி விடுகிறதே? அது ஏன்? அன்று
முதல் சேவல் ஒலி கேட்பதற்குள்ளோ கோனார் ஓட்டிச் செல்லும் மாட்டின் மணியோசை காதில் விழுவதற்குள்ளோ பல நாட்கள் வாழ்ந்து விட்டது போன்ற சோர்வு ஆட்கொண்டு விடுகிறதே.
கோதை
கண்ணாடியின் முன் நின்று ஒருமுறை சுழன்று தன்னைப் பார்த்துக் கொண்டாள். இன்னும் நேரமிருக்கிறது. அவள் பெயர் தாங்கிய அம்மனின் ஊர்வலத்தில் அவள் தான் பேசுபொருளாக இருந்தாக வேண்டும். அம்மனுக்கு எந்த நிறத்தில் புடவை சார்த்தியிருபார்கள்? ஐந்தாண்டுகளின் வண்ணங்கள் மனதில் தோன்றின. வாடாமல்லி, கனகாம்பரம், கொன்றை, செம்பருத்தி. அவளுக்கு நிறங்களை பூக்களுடன் தான் சொல்ல முடியும். யோசனையுடன் தலைதூக்கினாள். சிறிய ஜன்னலில்
துண்டு
நீல வானம் தெரிந்தது. மறுகணம் அதில் மிதந்து பறந்து திரும்பி வந்தாள். உடனே முடிவெடுத்து விட்டாள். ஆகாச நிறம். அந்த நிறத்தில் சிறிய வர்ண வேறுபாடுகளுடனிருந்த நான்கு பட்டுப் புடவைகளை எடுத்து வெளியே வைத்தாள். இப்போதிருக்கும் மேகமூட்டத்திற்கு அடர்நீலம் தான் அபாரமாகத் துலங்கும் என்று பட்டது. ஒருமுறை அவனது கண்களை நினைவு கூர்ந்தாள். அவனுக்கு அவள் பெண்ணை விட நான்கைந்து வயது கூடுதலாக இருக்கலாம். ஆனால் அவன் கண்கள் அவளைத் தாபத்துடன் தொடும்போதெல்லாம் தன் மீது யாரோ குளிர்ந்த நீரை தெளிப்பது போல உடம்பு சிலிர்த்து அடங்கும். அவன் பேச முயல நெருங்தோறும் அவள் கண்டிப்பான பெண்மணியாக முகத்தைத் தூக்கி முறைத்திருக்கிறாள். அவன் பேதை போல குழம்பி அப்படியே நின்று விடுவான். ஒருமுறை கடைவீதியில் பார்வையால் அவனுக்கு சலுகை காட்டியபோது அவள் காதோரம் அவன் வந்து மெல்ல முணுமுணுத்து விட்டு போனது ஒரு ரீங்காரம் போல அவளுக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. அப்போது கடுமை காட்டாமல் புன்னகைத்தது ஏன்? பல வினாக்கள் வினாக்களாகவே
இருந்து விடுவது தான் நல்லது. பதில் தேடிச் சென்றால் அங்கு என்ன காத்திருக்குமென்று
யார் அறிவார்? அவன் மேலே உரசுவது போல வந்தான். நல்லவேளை ஒதுங்கி கொண்டு விட்டாள். கொஞ்சம் மேலே பட்டிருந்தால்
கூட அவனை ஒதுக்கி விட்டிருப்பாள். ஏனெனில் அவள் தான் அதை அனுமதிக்க வேண்டும். அவனாக
எடுத்துக் கொண்டு விடக்கூடாது.
தனிமையில் இருக்கும் போது அவன் கூறியவற்றை மடியில் போட்டு நீவிக் கொடுப்பாள். அது அவள் முன்னே வளர்ந்து அவளையே
விழுங்கத் துடித்துக் கொண்டிருக்கும். உடம்பே சிவந்து போய்விடும். எழுந்து நின்றதும் கழுத்திலிருந்து முதுகு நரம்பு வழியாக மின்சாரம் ஓடி பிருஷ்டத்தை விரிய வைத்தது.
சில சமயங்களில் அவன் கண்களே பெரிய வாயாக மாறி அவளை விழுங்கும். அவனைக் காணாதது போல கடந்து செல்வாள். அன்று
என்ன சொன்னான்? ’உன்ன அப்படியே..’ என்று இழுத்து நிறுத்தி விட்டானே..! ஒருமையில் அழைக்கும் உரிமையை அவனாக எடுத்துக் கொண்டது அவளுக்கு பிடிக்கவேயில்லை. ஆனால் அவள் உலகம் அந்த ‘அப்படியே..’ வில் கவிழ்ந்து விட்டது. எத்தனை அர்த்தங்களை, பொருள் விளக்கங்களை அள்ளி அள்ளிக் கொட்டினாலும் அந்த சொல்லின் கிணற்றை அவளால் மூட முடியவில்லை. பின்னர் அவள் அக்கிணற்றில் மூழ்கித் திளைத்தாள். இன்று அவன் கண்ணில் மட்டும் பட்டுவிடக்கூடாது. எசகுபிசகாக ஏதாவது சொல்லி விட்டானென்றால் எப்படி பிறர் முகத்தில் விழிப்பது? அவமானம் போல உயிரை வதைப்பது ஏதேனும் உண்டா என்ன? அடுத்த நொடியே அவன் வழக்கமாக நிற்கும் இடங்களை அவள் மனம் பட்டியலிடத் தொடங்கியது. நேற்று முன்தினம் தார்பாச்சிக் கட்டி வழுக்கு மரம் ஏறி உச்சியிலிருந்த பணப்பையை பறித்தெடுத்த போது கூட்டத்தில் ஒளிந்து நிற்பவளை எப்படி அடையாளம் கண்டு கைகளை வீசிக் காட்டினான்..! உள்ளங்கால் கூசிற்று. இளம் பெண்கள் கைதட்டி ஆராவாரித்த போது அவன் கவனம் முழுதும் தன்னை அல்லவா மையமிட்டு சுற்றி வந்தது. வெட்கத்துடன் வீடு திரும்பி தன்னை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டாள். பூரிப்பில் அவள் கன்னங்கள் மலர்ந்து விரிந்தன. அந்த கண்களில் தெரிந்த சந்தோஷத்தை
பொக்கிஷம் போல பாதுகாத்தாள். பிறகு எப்போது வேண்டுமானாலும் அத்தருணத்தை நினைத்தபடியே
மீண்டும் மின்னலை அக்கண்களில் அவளால் கொண்டு வரமுடியும். எண்ணெய் மினுங்கும் அவனது உறுதிமிக்க மார்புகள். உருவி எடுத்தது போன்ற வலுவேறின கை கால்கள். நடக்கும் போது மண் அதிர்ந்து அடங்கும் கம்பீரம். இவ்வளவு தூரம் அவனைக் கவனித்திருக்கிறோமா? வியப்பில் அன்றிரவு சிரித்தபடியே கூடுதல் கவளங்களை உள்ளே தள்ளினாள்.
கட்டிலின் மேல் பரப்பப்பட்டிருந்த பெட்டிகளிலிருந்த ஆபரணங்களை சிறிய நடனத்துடன் அணிய ஆரம்பித்தாள். அட்டிகை, தோடு, வைர மூக்குத்தி,
சற்று தடித்த கை மேல் எவ்வளவு ஏற்றி விட்டாலும் அவனது பார்வை போல கீழ் நோக்கியே ஓடி வரும் வளையல்கள். மை தீட்ட மட்டும் இடுப்பு வலிக்கும் வரை நின்றிருந்தாள். அங்கவஸ்திரத்தைச் சுற்றிக் கொண்டு ராகவன் உள்ளே வந்தான். அவளது அலங்காரத்தை மெச்சி ஏதேனும் சொல்லக் கூடுமென ஒளியுடன் திரும்பினாள். ஒரு முறை கணைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து வெளியே போய்க்கொண்டிருக்கும் அவனது நிழலைத் தான் அவளால் பார்க்க முடிந்தது.
வெப்பத்துடன் வந்த பெருமூச்சு படிந்திருந்த அவள் வியர்வையைக் காய வைத்தது. அவளுடைய பெண் கலைந்த தலைமுடியுடன் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்.
அம்மாவை அவளுக்கு தெரியுமென்பதால் எரிச்சலை மறைத்துக் கொண்ட சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள். அவளுடைய பெண்ணல்ல, பேத்தி தான் அவளை உரித்து வைத்திருந்தாள். மாப்பிள்ளை அதைச் சொன்ன போது கோதைக்கு உடம்பு கூசியது. சாப்பிடும் போது இலையில் சில பட்சணங்களை அவனுக்கு கூடுதலாக வைத்தாள். எவ்வளவு முயன்றும் அவனது விரிந்த மார்பை அவளால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அகஸ்மாத்தமாக அவனது விரல் அவளது விரல் மேல் பட்ட போது பற்களைக் கடித்துக் கொண்டாள். அன்று கொல்லையில் பறித்த பூக்களைக் கோர்த்து ஈஸ்வரனுக்கு படைத்த போது கண்களில் நீர் கோர்த்தது. தன் செயலை எண்ணி நாணி குமுறி அழுதாள். அருகில் கணவன் சிறிய குறட்டையொலி எழுப்பியபடி உறங்கிக் கிடந்தான். பிறகு, தன்னுடைய பெண் புக்ககம் கிளம்பும்வரை தன் நிழலைக் கூட அவள் வெளியே நீட்ட வில்லை.
உள்ளாடையையும் நீலத்திலேயே அணிய வேண்டுமா? தேடிய போது கிடைக்கவில்லை. பதற்றத்தில் வீட்டையே உலுக்கி விடுவாள் என்று தோன்றியது. சட்டென்று அதே நிறத்தில் இரண்டு அகப்பட்டன. அவளது சற்றே தொய்ந்த மார்பை நிமிர்த்திக் காட்டும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாள். அணிந்த பின் ஒருமுறை மார்பை எக்கி கைகளால் முலைகளை மேலே தூக்கினாள். அது அவள் சொல் கேட்டு நிமிர்ந்து நிற்பதில் திருப்தி அடைந்தாள். முதுகை கீழிறக்கி தைக்கச்
சொன்னது வீண் போகவில்லை. திரும்பி நின்று பார்த்தபோது அது கூடுதல் அழகைக் கொடுத்திருந்தது.
சரியாக கூந்தலைச் சுருட்டி அதன் நுனியிலிருந்து ஜாக்கெட்டைத் தொடங்குவது போல சீவி சரிசெய்தாள்.
இடுப்புச் சதையை ஒருமுறை பிசைந்து அழுத்தினாள். கைகளுக்குள் நிற்காமல் வெளியே பிதுங்கிற்று. உணவைக் குறைத்தப்பின்னும் ஊளைச்சதையை குறைக்கமுடியவில்லை. அது
மடிப்புகளைக் கூட்டியது. புடவையை மேலே ஏற்றி விட்டுக் கொண்டாள். மைதிலியும் செண்பகமும் எப்படி வருவார்கள்? தன்னை விடவும் மிளிர்வார்களா? மைதிலி சற்று சுமாராக தான்
இருப்பாள். செண்பகத்தின் கழுத்திலிருக்கும் காசு மாலை நினைவுக்கு வந்தது. ஒரு நிமிடம் பேச்சற்று கட்டிலில் அமர்ந்தாள். அருகில் வாசனைப்புட்டி இருப்பது கண்ணில் பட்டது. கையிலெடுத்தாள். தெளித்த வாசனைத் திரவியத்தின் சுகந்தம் அந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்தியது. தொலைவிலிருந்து
நாதஸ்வரமும் தவிலும் காற்றில் மிதந்து வருவதை கேட்டாள். மாமியாரின் கண்ணில் மட்டும் பட்டுவிடக்கூடாது என கொலுசுமணிகள் ஒலிக்காதவாறு கால்களை பூனை போல பதுங்கி வைத்து வெளியே வந்தாள்.
கார் தயாராக இருந்தது. ஏறியதும் ராகவன் மறந்து போன செலவுக் கணக்கொன்றை அவளிடம் கேட்டான். கிட்டத்தட்ட விசாரணை செய்வது போல இருந்தது அது. எரிச்சலை ஒதுக்கி விட்டு
காது கேட்காதவள் போல தனக்கு பிடித்த பாட்டை முணுமுணுத்தாள். அவள் ஆசையுடன் சூடியிருந்த மல்லிகையைப் பற்றிய பாடல் அது. அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. கிளப்பினான். கோவிலின் அறங்காவலர்களில் ஒருவன் அவன். அம்மன் பவனியின் போது அவனுக்கு அளிக்கப்படும் மரியாதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சிறிய மேடையில் நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. குனிந்தபடியே மெல்ல நடந்தாள். திரண்டிருந்தவர்கள் தன்னையே உற்று நோக்குவது போல பட்டது. தரையிலிருந்து இரண்டடி உயர்ந்து காற்றில் மிதந்து சென்றாள். செண்பகம் அவளது மகளுடன் வந்திருந்தாள். இருவருமே ஒருவரை ஒருவர் விஞ்சுவது போல அமர்ந்திருந்தினர். தனக்கு முன்னால் ஒரு உலகம் உள்ளது என்பதையே அப்போது தான் உணர்ந்தவள் போல பார்வையால் கூட்டத்தை வருடினாள். மீண்டும் வலமிருந்து இடமாக பார்வை மெல்ல சுழன்றது. அவனைக் கண்டு விட்டாள். சட்டென குனிந்து கொண்டாள். என்ன செய்வது? இளமங்கை போல வயிற்றுக்குள் மீன்கள் துள்ளி குதிப்பதை உணர்ந்தாள். தன் புடவையை அவனுக்கு உணர்த்த ஒருமுறை உடம்பை நீவி விட்டுக் கொண்டாள். இல்லாத பிசிறை எடுக்க முயன்றாள். காற்றில் அவள்
முடி பறந்து அடங்கியது விளக்க முடியாத அழகை அவளுக்கு தந்திருந்தது. அவனுக்கும் அப்பால் எதையோ பார்ப்பது போல முகத்தைத் தூக்கி இமைகளைச் சரித்தாள். அம்பு போல அவன் கண்கள் தன்னையே துளைப்பதை உணர்ந்ததும் வெட்கத்துடன் புன்னகை தவழ்ந்தது. அவள் மார்புகள் நிமிர்ந்து நிறைவது போல உணர்ந்தாள். காம்புகள் விறைத்தன. முகம் சிவக்க அம்மனின் ஊர்வலம் வரும் திசையை நோக்கி பார்வையைத் திருப்பினாள். சில நிமிடங்கள் அவனைக் கண்டு கொள்ளவேயில்லை. அப்படி ஒருவன் இருப்பதையே மறந்தவன் போல மும்மரமாக அருகிலிருப்பவளிடம் பேச ஆரம்பித்தாள். நன்றாகத் துடிக்கட்டும். ஆனால் அவள் மனமெங்கும் அவனே காணப்பட்டான். மாராப்பைச் சரிசெய்தபடி சிறிய மன ஊசலாட்டத்திற்குப் பிறகு மனமிறங்கினாள். ஆனால் அந்த இடத்தில் அவனைக் காணோம். எங்கே போகப்போகிறான்? என்கிற இறுமாப்புடன் ஆடி வந்து கொண்டிருந்த கரகாட்டக்காரர்களின் அசையாத கரகம் மீது பார்வையை நிலைத்து அமர்ந்தாள்.
திடீரெனப் பாறையால் மோதியது போன்ற அதிர்ச்சிக்கு ஆளானாள். அவன் அவளைக் கண்டு கொள்ளவில்லை. அது உண்மை தானா? இப்போது அவள் சில படிகள் கீழிறங்க வேண்டியதாகிவிட்டது. அவனை அவள் விடாமல் பார்க்க ஆரம்பித்தாள். அவன் கண்கள் செண்பகத்தையும் அவள் மகளையும் மாறி மாறி மேய்ந்து கொண்டிருந்தன. சட்டென்று இவள் பக்கம் தாவிய போது இவளது எரிக்கும் முகத்தை அவன் கண்டான். அவன் சற்று பயந்தது போல பட்டது. ஆனால் அது கொஞ்ச நேரத்துக்கு தான். மீண்டும் அவன் பார்வை அவ்விருவர் பக்கமே நகர்ந்தது. தன்னை விட அவர்கள் எதில் உசத்தி என ஆராய்ந்தாள். வடிவமா? நிறமா? அழகா? திடீரென்று தன் வீட்டிலுள்ள நிலைக்கண்ணாடி முன் தான் நிற்பது போலவும் அது தன்னைக் கேலி பேசி சிரிப்பது போலவும் அவளுக்கு தோன்றியது. நழுவியிருக்கும் உடையை சரிசெய்து கொள்ளும்படி சொல்லியும் அவர்கள் கேட்டதாகத் தெரியவில்லை. மகளை அருகில் வைத்துக் கொண்டே என்னவொரு சல்லாபம்? இவள் இரை போடவில்லை என்றால் அவன் ஏன் இப்படி அலையப்போகிறான்? ச்சீய். இந்த அலங்கார பந்தல் அப்படியே பற்றி எரிந்தால் தான் என்ன? ஊர்மேயும் ஒருவனுக்காகவா மாதக்கணக்கில் இந்த நாளுக்காக காத்திருந்து அலங்கரித்து வந்தோம்? அவனை நினைத்தபடி கிடந்தா
பல இரவுகளை விடிய வைத்தேன்? ஆனால் அவள் அவனையே விடாமல் பார்க்க ஆரம்பித்தாள். அவனுக்கருகில் இருப்பவர்கள் கூட அவனை இடித்தும் கிண்டல் செய்தும் பேசும் அளவுக்கு லஜ்ஜையின்றி அவனையே வட்டமிட்டாள். இன்னும் ஐந்து நிமிடங்கள் அவனுக்கு கொடுப்பாள். அதற்குள் தன் தவறை உணர்ந்து அவளிடம் திரும்பி அவன் வந்தாக வேண்டும். அவளுக்கு கண்களில் நீர் முட்டி நின்றது. அழுகிறாளா? கைக்குட்டையால் முகத்தை ஒற்றுவது போல நீரைத் துடைத்தாள். மாலைகளாலும் நகைகளாலும் சூழப்பட்டிருந்தால் அம்மனின் புடவை நிறத்தைப் பார்க்க முடியவில்லை. பல்லக்கு அருகில் வந்தாகிவிட்டது.
பந்தலிலிருந்து இறங்கி வந்தார்கள். தேங்காய், பழங்கள், அர்ச்சனைகள் என பல்லக்கு சிறிது நேரம் அவர்களுக்காக மட்டுமே நின்றது. அவர்கள் உரிய மரியாதையை ஏற்றுக் கொண்ட பின் அது மீண்டும் புறப்பட்டு கோவிலை அடையும். அதற்குள் கூட்டம் திருநீற்றை வாங்க திமிறியபடியே முன்னே வந்தது. ஒரு கண் வீச்சில் அவன் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். தட்டை கண்களை ஒற்றி வாங்கிய பின் பெரிதாகக் கூச்சலிட்டாள். என்ன ஆனது எனத் தெரிவதற்குள், கூசியவளாக தன் கணவனிடம் சென்று நின்று கொண்டு மெல்ல தேம்பினாள். சலசலப்புடன் கூட்டம் விலகியது. சற்று தள்ளி அழைத்துப் போய் மெதுவாகக் கேட்டான். கூட்டத்திற்குள் புகுந்து வந்து தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக அவனை நோக்கி கைகாட்டினாள். என்னவென்று தெரியாமலும் ஏனென்று புரியாமல் தன்னை உதைக்கும் காவலர்களிடம் அதற்கான காரணத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். அதற்கு பதில் மேலும் அடிகளாக இருந்தன. போலீஸ் வண்டிக்குள் அவன் ஏற்றப்படுவதை கண்டபின் செண்பகத்தையும் அவள் மகளையும் தேடினாள். அவர்களைக் காணோம்.
இப்போது அம்மனுக்கு மிக அருகில் வந்து விட்டிருந்தாள். புடவை ஏறக்குறைய அவளுடையதைப் போன்றே தான் இருந்தது. கோதைநாயகிஅம்மனின் முகத்தைப் பார்த்தாள். சாந்தத்துடனும் அழகுடனும் வீற்றிருப்பது போலப்பட்டது. அதன் இதழ்களில் புன்னகை மலர்ந்திருந்தது. அது தன்னை பார்த்துத் தான்
சிரிக்கிறதோ? என்கிற ஐயமேற்பட்டது. மீளவும் ஒருமுறை அந்த முகத்தைப் பார்க்க முயன்றாள். அந்த சிரிப்பு அப்படியே இருந்தது. கண்களை விலக்கியபடி அவசர அவசரமாக அங்கிருந்து விலகிச் சென்றாள்.
*******