Saturday, October 14, 2023

சு.ரா -“இப்போது விடைபெற்றுக் கொள்கிறேன்”

 

“இப்போது விடைபெற்றுக் கொள்கிறேன்”


12.04.04 தேதியிட்டு சுந்தர ராமசாமிக்கு இக்கடிதத்தை எழுதுவதற்கு 15 தினங்களுக்கு முன்னர் தான் நாகர்கோவில் சென்று அவரைச் சந்தித்து வந்திருந்தேன். மூன்றாவதோ நான்காவதோ சந்திப்பு அது. அந்தி சரியும் வரை பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பும் போது அப்போது வெளியாகியிருந்த அவரது உரைகளின் தொகைநூலான “இவை என் உரைகள்” புத்தகத்தை கையெழுத்திட்டு அளித்தார். அதே காலகட்டத்தில் வந்திருந்த அவரது நினைவோடை வரிசையின் முதல் நான்கு நூல்களில் மூன்றை வாசித்திருந்ததால் மொத்தமாக இவற்றை பற்றி என் அபிப்ராயங்களை இப்புதிய நூலுடன் சேர்த்து எழுதிக் கொள்ளலாம் என 23.03.04 தேதியிட்டு வந்து சேர்ந்த கடிதத்திற்கு பதில் எழுதவில்லை. ஆனால் இரு வாரங்களில் கழித்து அவருடமிருந்து அடுத்தக்  கடிதமும் (09.04.04) வந்து சேர்ந்து விட்டது. அவர் என் கடிதத்தை எதிர்பார்க்கிறார் என்கிற விஷயமே பிறகு தான் புரிய வந்தது. வாரந்தவறாமல் கடிதம் எழுதிக்கொண்டிருப்பேன் என்பதால் இருக்கலாம்.  அவ்வளவு விவரம் போதாத வயது. இன்றும் பல விஷயங்களில் அப்படித்தான்.


தாமதிக்காமல் இக்கடிதத்தை எழுதினேன். இதை எழுதும் போது 21 அல்லது 22 வயது இருக்கலாம். அந்த வயதுக்காரனை நடத்திய விதத்தையும் முறையையும் நினைத்துப் பார்த்தால் அவர் எப்போதுமே ஒரு மார்க்சியராகவே இருந்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவருக்கு எழுதிய கடிதங்களில் அவரது மொழியின் பாதிப்பு நேரடியாகவே தெரிகிறது என்பது தான். அது இயல்பானதே. அவருக்கு அது தெரியாமலா இருந்திருக்கும்..! ஆனால் மொழி சார்ந்த கூருணர்வை இக்கடிதங்களை எழுதியதன் வாயிலாகத் தான் பெற்றேன் என்றால் அதில் மிகையேதுமில்லை. பிழையாக எழுதி விடக்கூடாது, எதையும் உளறிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை மணி உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். எனவே சில தடவை எழுதித் திருத்திய பின்பே  அனுப்புவேன்.  போலவே அவரிடம் புதிதாக ஒன்றைச் சொல்லிவிட வேண்டும் என்கிற துடிப்பும் இருந்தது. ஆனால் விலாவரியாக எதையும் விட்டு விடாமல் அவருக்கு எழுதுவேன். அதுவும் அமெரிக்காவிலிருந்து திரும்பி, அத்தகவலை என்னிடம் தெரிவித்து கடிதம் அனுப்பினால் அந்த இடைப்பட்ட ஆறுமாதங்களில் நடந்தவை பற்றி 10 பக்கங்களுக்கு கடிதம் பறக்கும்.


அவரது கடிதங்கள் அளித்த உத்வேகத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இக்கடிதம் எழுதிய பிறகு பிற எழுத்தாளர்கள் பற்றி பிற படைப்புகள் குறித்து ஏதேனும் கருத்துக்களைச் சொன்னால் அதற்கு அவரிடம் மதிப்பிருந்தது. அதுவும் சற்று தாமதமாகத் தான் புரிந்தது. ’மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’ தொகுப்பு வந்ததும் அது பற்றி என் கருத்துக்களை சற்று விரிவாக எழுதியிருந்தேன். அதற்கு எழுதிய பதிலில் அவர் ‘இதை விடவும் சிறப்பாக உங்களால் எழுத முடியும். இன்னொரு முறை படித்துப் பார்த்து விட்டு எழுதுங்கள்’ எனக் கூறியிருந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய வாரம் வரைக்கும் மின்னஞ்சலில் கடிதங்கள் எழுதிக் கொண்டு தான் இருந்தோம்.


இன்னும் சற்று முன்னால் 18,19 வயதிலேயே அவரைச் சந்தித்திருக்கலாம் என்றோ அல்லது இன்னும் கூடுதல் ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்கலாம் என்றோ அவ்வப்போது தோன்றும்.


தோன்றுவதற்கெல்லாம் என்ன செய்ய முடியும்…!




 

 

                                                                                                                                     12.04.04

அன்புள்ள சுந்தர ராமசாமிக்கு


வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? 23.03.04 கடிதம் கிடைத்தது. வெகுவாக உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியது. எந்த விஷயங்களைப் பற்றியும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளத் தயங்கியதில்லை. அந்த இடைவெளியை எப்போதும் ஏற்படுத்திக் கொள்ள மாட்டேன் என்றே நினைக்கிறேன். இவ்வளவு தாமதமாக எழுதுவது பற்றிய சங்கடங்கள் வாட்டத் தொடங்கிய போது அடுத்த 09.04.04 கடிதம் கிடைத்தது.


அடுத்தடுத்து, க.நா.சு பற்றியும் , ஜீவா பற்றியுமான ‘நினைவோடை’யை சில வார இடைவெளிக்குள் வாசித்த போது, இருவருக்குமான பொதுவான குணங்களையும் வேறுபட்டு நிற்கும் எதிர் எதிர் குணங்களையும் கணக்கில் கொண்டு பேச முற்பட்டால், அவர்கள் தேர்ந்து கொண்ட எளிமையான வாழ்வையும் எதன் மீதும் பிடிப்பின்றி மேற்கொண்ட நாடோடித்தனமான பயணங்களையும் பொதுவானதாகக் கொள்ளலாம். க.நா.சுவிற்கு இலக்கியம் குறித்து ஆழமான பார்வையும் பிடிப்பும் இருக்கும் போது, மனிதர்களிடம் கூச்சத்தோடு ஒதுங்கிக் கொள்வதையும் , ஜீவா, மனிதர்களையும் அவர்களின் தன்மை பற்றியும் ஆழமான பார்வை கொண்டிருந்தும் , பாரதிக்குப் பிந்தைய தீவிர இலக்கியங்களோடு அவருக்கிருந்த இடைவெளியையும் சுட்டினால் இவை இருவர்களின் வேறுபட்ட , எதிர் எதிர் குணங்கள் எனலாம். மூன்று பதிவுகளிலும் (நம்பியினுடையதையும் சேர்த்து) வெகு அற்புதமாக கூடி வந்திருப்பது உங்கள் ஊர் பற்றிய சித்திரம். நம்பியின் பதிவில் இடம்பெறும் பாதைகள், தெருக்கள் குறுக்குச்சந்துகள் என்று தொடரும் அச்சித்திரம், மற்ற இருவருடைய பதிவிலும் வேறு விதங்களில் தொடர்ந்திருக்கிறது. மூன்றிலும் சிறப்பானது நம்பியினுடையது தான். குடும்பம் மீதும் லெளகீக பொறுப்புகள் மீதும் இருக்கிற அலட்சியம் தான், மறைமுகமாக ஊரின் மீது ஆசையைத் தூண்டுகிறது என்று நினைக்கிறேன். க.நா.சு பற்றிய பதிவில், சந்திப்புகள் நிகழ்ந்த காலம் சார்ந்த இடைவெளி சற்று வெளிப்படையாகவே தெரிகிறது. பதிவு தயாரான பிறகு , மீண்டும் அதில் சில வேலைகள் செய்வது அவ்விடைவெளியைக் குறைத்து செழுமைப்படுத்தும்  என்றே தோன்றுகிறது. இலக்கியம் பற்றியும் அதன் ஆழங்கள் பற்றியும் க.நா.சுவிடமிருந்தும் மனிதர்களை பற்றியும் அவர்களின் தன்மை பற்றியும் ஜீவாவிடமிருந்தும் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லலாம். ‘பலவீனங்களை’ப் பற்றிய குரல் (சி.மகேந்திரன்)* எவ்வளவு செயற்கையானது என்பதும், அதனை அப்பத்திரிகை வெளியிட்டிருக்கும் விதம், அதன் தலைமைப் பத்திரிகையின் எச்சங்களை , தன்னுள் கொண்டிருக்கிறது என்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது.


 

“இராமலிங்க சுவாமிகள் பிறக்கிறபோது மார்க்ஸுக்கு 5 வயது.  இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலம் 51 வருடங்கள். மார்க்ஸ் உலகத்தைப் பாதித்திருக்கிறார். எந்த வகையில் பாதித்திருக்கிறார், அதன் வீச்சு என்ன, விரிவென்ன? ஆழமென்ன? ராமலிங்க சுவாமிகளும் தமிழைப் பாதித்திருக்கிறார். அதன் விரிவென்ன? வீச்சு என்ன? (பக்.119)

 

இது தான் ‘இவை என் உரைகள்’ நூலின் சாரம் என நினைக்கிறேன். இதை விவாதத்திற்குட்படுத்தி, பரவலான விஷயங்களுக்குள் போக முற்பட்டால், நூலில் அலசப்பட்டிருக்கும் பல கருத்துக்களை நோக்கி நகர முடியும். நூலின் சாரத்தைத திரட்டும் போது சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. அதன் ஆழத்தை தவறவிட்டுவிட்டு சாரத்தைத் திரட்டத் தொடங்குகிறோமா? அல்லது அதன் ஆழத்தின் வலுவில் நின்று தான் சாரத்தை திரட்டுகிறோமா?


இதன் பக்கங்கள் தோறும் ஒரு குரல் – ஐம்பது வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் குரல்- சற்று வலுவாக குறைகளின் பின்னணி பற்றியும் அதற்கு ஆதாரமான விஷயங்களைத் திரட்டிக் கொண்டும் ஒலிக்கும் குரல், கால கதியில் தன்னை கூர்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது. வணிகத்திற்கெதிராகவும் , தீவிரச் சிந்தனையையும் மனோபாவத்தையும் நோக்கி ஒலிக்கும் குரல் அது. இதில் எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்குமான இடைவெளி வெகுவாக குறைந்திருக்கிறது. இவ்வுரைகளில் மிக முக்கியமானதாகக் கருதுவது ’கலையும் படைப்பு மனமும்’ , நாவலும் யதார்த்தமும்.  கலை, படைப்பு, வாசிப்பு இம்மூன்று பற்றிய சில சூட்சமங்களையும் ஆழத்தையும் பேசியிருப்பது முக்கியமானது. முற்போக்கு எழுத்தாளர்கள் முன் ‘நாவலும் யதார்த்தமும்’ பற்றி பேச துணிவு வேண்டும். அதில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் – அவர்களின் எதிர்வினையின் போக்கு தெரிந்திருந்தும் – முக்கியமான இடங்களைத் தொட்டுப் பேசியிருப்பது உங்கள் தைரியத்தைக் காட்டுகிறது. இதன் ஒளிநகலை ஒவ்வொரு முற்போக்காளர் வீட்டிற்கும் அனுப்புவது குறித்து கற்பனை செய்து பார்த்துக் கொண்டேன். மற்றொரு குறிப்பிடத்தக்க உரை , ‘சிறுகதை – அதன் அகமும் புறமும்’. குதூகலத்தை ஏற்படுத்தும் உரையென்று ‘மெளனி’ பற்றியதைச் சொல்லலாம். ‘கைக்குழந்தை’, ‘ஒன்றும் புரியவில்லை’  ஆகிய சிறுகதைகளில் அடையும் குதூகலத்தை இதிலும் அடைய முடியும். அத்தோடு அவர் பற்றிய விமர்சனங்களையும் முன் வைத்திருப்பது முக்கியமானது.


சென்னை புத்தகச் சந்தையில் ‘ஒரு புளியமரத்தின் கதை’ உடைய சமீப பதிப்பை பார்க்க முடிந்தது. அதன் பின் அட்டையில் இடம்பெற்றிருந்த புகைப்படம் இதில் இடம் பெற்றிருந்தால் மிகக் கச்சிதமாக இருந்திருக்கும்.


எழுத நினைத்த சிறுகதையின் வடிவம் குறித்து தெளிவு ஏற்பட்டுள்ளதால் ஒரு மாதத்திற்குள் முடித்து விட முடியும் என்றே நம்புகிறேன்.


பிரிவு பற்றிய உங்கள் வருத்தத்தை விட அதிகமான வருத்தத்தையே நான் கொண்டிருக்கிறேன். பொறுப்புகள் சார்ந்து மேற்கொள்ளும் பயணம் நிறைவுடனும் நினைத்த வண்ணமும் அமையும்.


வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள். அங்கு உங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் என் அன்பை தெரிவியுங்கள்.


என்றும் அன்புடன்

ந. செந்தில்நாதன்.


குறிப்பு : 

*ஜீவா நினைவோடையில் இடம்பெற்றிருந்த அவரது பலவீனங்களைப் பற்றி பதிவுக்கு எதிர்வினையாக தீராநதி இதழில் தோழர்.மகேந்திரன் எழுதிய கட்டுரை. தலைமைப் பத்திரிகை என்பது குமுதத்தைக் குறிக்கிறது.

*அன்று வெளியாகி இருந்த கிருஷ்ணன் நம்பி, க.நா.சு, செல்லப்பா, ஜீவா ஆகிய நான்கு நினைவோடை நூல்களில் செல்லப்பா தவிர்த்த மூவர் குறித்த நூலின் கருத்துக்களே என் கடிதத்தில் இடம்பெற்றிருக்கின்றன.  






---------------------

                                                                                                                17.04.04

அன்புள்ள செந்தில்நாதன்


வணக்கம். உங்கள் 12.04.04 கடிதம் கிடைத்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.


உங்களுக்கும் எனக்குமான தோழமை இடைவெளியின்றி இருக்கும் என்று நீங்கள் எழுதியிருப்பது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது.


நீங்கள் நினைவோடைகள் பற்றி எழுதியிருக்கும் வரிகளை ஒன்றுக்கு இரண்டு தடவை படித்தேன். ஆழ்ந்து படித்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. புத்தகங்கள் உங்களுக்குப் பிடித்திருப்பது எனக்கு ஊக்கத்தைத் தருகிறது.


இவை என் உரைகளைப் பற்றி நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் முக்கியமானவை. நான் எந்தச் சூழலைத் தொடர்ந்து விமர்சித்துக்கொண்டு வருகிறேன் என்பதை நீங்கள் மிக ஆரோக்கியமாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.



நீங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டு வரவேண்டும். வாசிப்பில் உங்களுக்கு நிறைய ஆசையும் கவனமும் இருக்கின்றன. எழுத்துப் பயிற்சியை நிறைவான மனதுடன் செய்யவும் வேண்டும். நீங்கள் எழுதுவதில் உங்களுக்குத் திருப்தியாக இருப்பவற்றை சிற்றிதழ்களுக்கு அனுப்புங்கள். அத்துடன் சிற்றிதழ்களை முழுமையாகப் படித்துவிட்டு அவர்களுக்கு விமர்சனக் கடிதங்களையும் எழுதுங்கள். உங்கள் எழுத்தாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ள இதுபோன்ற பயிற்சிகள் உதவும்.


நீங்கள் ஏதிர்காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளராக வரவேண்டும் என்ற ஆசை எனக்கு மிகுதியாக உள்ளது.


பயணத்திற்கான ஏற்பாடுகளை இன்னும் செய்யவில்லை. அதனால் இக்கடிதத்தை சுருக்கமாக எழுதுகிறேன்.


நான் ஊர் திரும்பியதும் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்.


இப்போது விடைபெற்றுக் கொள்கிறேன்.


என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்

சு.ரா.

(அக்டோபர் 15 சு.ரா நினைவுத்தினத்தையொட்டி இக்கடிதங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன)


No comments:

Post a Comment