Saturday, March 28, 2015

இசையின் “அந்தக் காலம் மலையேறிப் போனது “ தொகுப்பு குறித்த கட்டுரை


இசையின் ”அந்தக் காலம்                                       மலையேறிப்போனது” 

எண்ணெய்க் கொப்பரைக்குப் போகும் வழி

     
           பின்புறம் காட்டும் கார் கண்ணாடியில்
         சட்டென்று ப்யுவாயி தேவாலயத்தின் பெரும் பகுதியைக்
         கண்டேன்
         பெரிய பொருட்கள் சிறியவற்றில் குடியிருக்கின்றன
         ஒரு நொடிப் பொழுதேனும்
-ஆடம் ஜாகாஜேவ்ஸ்கி
(தமிழில் :சு.ரா)



                  சங்கீதத்தைக் கணக்குகளாக அணுகும் மனங்களுக்கு அது அளிப்பது வெறும் சூத்திரங்களைத்தான். அது போலவேதான் கவிதையும். அதை ஒரு மொழி சார்ந்த விளையாட்டாகத் தன் புத்திசாலித்தனத்தின் களமாகக் காண்பவர்களைக் கவிதை கைவிட்டுவிடுவதை அவர்கள் அறிவதேயில்லை. தன்னைச் சுற்றிப் பின்னிக் கிடந்த தளைகள் தெறித்து விழுந்தபோதுதான் மண்ணில் குப்புற விழுந்தது கவிதை. அதன் திகைப்பு அடங்குவதற்குள் அதைத் தூக்கிவிட நாலாபுறமிருந்தும் வந்த புலவர்களைக் கைநீட்டி அப்படியே நிற்கச் செய்தது. அதன் மனதை உருகவைக்க யாப்பிலும் வெண்பாவிலும் கலிப்பாவிலும் செய்யுள்களைப் பாடியபடி அப் புலவர் கூட்டம் நெருங்கியது. அது சற்றும் தாமதிக்காமல் அவர்கள் கையிலிருந்து நழுவி ஓடிற்று. பின்னால் தங்களது வக்கீல்களோடு துரத்தி வந்து கொண்டிருப்பவர் களை ஒரே முறை திரும்பிப் பார்த்துக் கண் அடித்தபின் தலை தெறிக்கும்படி ஓடியது. அது மூச்சிறைக்க வந்து பெட்டிக்கடையில் நிற்பதை ரிஷிபோல வளர்ந்திருந்த வெண் தாடியை நீவியபடியே ந. பிச்சமூர்த்தி கண்டார். மனிதனோடு இவ்வளவு நெருங்கி வந்தபின் அதன் குன்றா இளமையும் பொலிவும் கூடியிருப்பதைக் கண்டு அவருக்கு வியப்பேற்பட்டிருக்க வேண்டும். அதன் பின் ந.பி. எழுதிய பெட்டிக்கடை நாரணன்’(1959) என்னும் கவிதையே புதுக்கவிதை என்னும் ஜீவவித்து மறுபிறவி எடுத்து வந்த இடமாகக் கருதப்படுகிறது. அது ஒரு பெரும் திறப்பு. அதற்குச் சொத்தை அடகு வைத்து நிலத்தைத் தந்தவர் சி.சு. செல்லப்பா. அதன் ரசனை மட்டத்தை உருவாக்கியவர் க.நா.சு. இன்று வெவ்வேறு வடிவங்களாலும் சொல்முறையாலும் கவிதை பன்முகம் பெற்றிருந்தாலும் இன்று ஒருவன் அதன் முன் வருகையில் அவனை உள்ளிழுப்பது அதன் இளமையும் குறையாத புத்துணர்வும்தான்.




எவ்வளவோ சாமிகள் சரணம் சொல்லி கண் துஞ்சாது (சில குருசாமிகளும்) மொழிக்குள் விழுந்து புரண்டு எழுந்தாலும் மலைமுகட்டுக்கு அப்பாலிருப்பதாக அவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் கவிதையின் ஜோதிக்காக இன்னும் காத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களது புலம்பல்களும் எரிச்சல்களும் சூழலை மாசுபடுத்துவதை அவர்கள் அறிவதுமில்லை. போலி வெளிச்சங்களைக் கண்டு பரவசம் அடைந்து அவர்கள் போடும் கூப்பாடு நாராசமாய் ஒலிக்கிறது. அந்த அணையாச் சுடர் தங்களது மனங்களில் தானே இருக்கிறது என்னும் எளிய உண்மை அந்த கோரஸ்காரர்களுக்குத் தெரிவதேயில்லை. அந்தச் சாமிகளுக்குத் தெரியாத பலவும் சில ஆசாமிகளுக்குத் தெரிந்து விடுகிறது. தெரிவது மட்டுமல்ல, அதைத் தரிசனமாக்கிக் காட்டும் மனோலயம் இயல்பிலேயே கூடியும் விடுகிறது. மொழியையும் தேர்ந்துகொள்ளும் வடிவத்தையும் அவர் கள்தான் எப்போதும் புதிதாகவே வைத் திருக்கிறார்கள். கவிதையைக் கடவுளாக உருவகிக்கிறேன் எனத் தயவுசெய்து நினைத்துக் கொள்ளாதீர்கள். ஆனால், கடவுளிடம் (சில சமயம் சாத்தானிடமும்) தனியாக ஆசி வாங்கி வந்தவன் கவிஞன் என்றும், அவனது கவிதையாக்கம் நிகழும்போது அவனைச் சுற்றிலும் வினோதமான நறுமணம் அல்லது சுகந்தம் நிலவுமென்றும் நம்ப ஆசைப்படுகிறேன். இல்லையென்றால் இவ்வளவு பிக்கல்பிடுங்கல்களுக்கு இடையிலும் காலத்தால் அழியா ஒன்றை அவனால் எப்படி உருவாக்கிவிட முடியும் என்னும் கேள்விக்குறியின் பக்கத்தில் ஆச்சரியக்குறியைத்தான் கொண்டுவந்து வைக்க முடியும். அப்படியான பல கவிதைகளை எழுதியிருக்கும் / கொண்டிருக்கும் கவிஞர் இசையின் சமீபத்திய தொகுப்பு அந்தக் காலம் மலையேறிப் போனது.


சென்று தேய்தல்என்னும் மரபுக்கு எதிராக முந்தைய இரு தொகுப்புகளால் பெரும் வாசக கவனம் பெற்ற இசையின் இந்த தொகுப்பு புத்துணர்ச்சியைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் பழைய கவிதைகளிலிருந்து முன்னகர்ந்திருப்பதையும் வாசகனாக அவதானித்தேன். கவிதையின் கவசங்களை அலங்காரங்களைத் துறந்து உரைநடையால் ஆன கவிதைகளின் வழி கவித்துவத்தை எட்டுவதற்கு மனுஷ்யபுத்திரனின் கவிதைகளைத்தான் முன்னோடியாகக் கருத வேண்டியிருக்கிறது. பெருங்கவி(Major Poet) ஆகியிருக்க வேண்டிய, ஆனால், ஆகாமல் போன பிரமிளையும், கவிதையின் இறுக்கத்தைத் தளர்த்திய சுகுமாரனையும், விமர்சனத்தோடு கூடிய அங்கதத்தைக் கவிதையில் கையாண்ட ஞானக்கூத்தனையும், அரசியல் கவிதைகளுக்கு இன்றும் மாற்று இல்லாத ஆத்மாநாமையும், உலகியல் காட்சிகளைக் கவிதை களாக ஆக்கிய கலாப்ரியாவையும், இயற்கையை ஆன்மீகத் தரிசனமாக ஆக்க முயன்ற தேவதேவனையும் ஒரு புதிய தலைமுறைக் கவிஞன் எப்போதும் மறந்து விடக் கூடாது. இதில் ஆச்சரியம் என்னவெனில் இசையின் கவிதைகள் யாரைப் போலவும் (சில இடங்களில் சிலரது சாயல் இருக்கவும் செய்கிறது) இல்லை. அதே சமயம் இவரது கவிதைகளை முந்தைய தலைமுறைக் கவிஞர்கள் யோசித்திருப்பார்களா அல்லது எழுதியிருப்பார்களா எனக் கேட்டுக்கொண்டால் இல்லை என்ற பதிலையே சொல்ல வேண்டியிருக்கும். அதனாலேயே இவரது கவிதைகள் ஈர்ப்பையும் வசீகரத்தையும் ஒருசேரக் கொண்டிருக்கின்றன.


உலகத்தை மதிப்பிடுகிறதே என்பதற்காகக் கவிதையை உலகம் மதிப்பிட்டுவிட முடியாதுஎன்னும் தேவதேவனின் கூற்றைப் புரிந்துகொண்டவன்தான் உண்மையான கவிதையின் வாசகன். இந்த உற்சாகப்புலியின் கவிதைகள் அங்கதமும் பகடியும் எள்ளலும் கொண்டு மிளிர்பவை.ஆனால் இவை மட்டும் கவிதையாக ஆகிவிடாதல்லவா?அதற்குள் சரடாக ஓடுவது கையறுநிலையின் கண்ணீர். அந்தக் கண்ணீரை இந்த இலக்கிய சிவாஜிகணேசன்குய்யோமுய்யோ என அலறி பிறர் கண்கூசும்படி செய்வதில்லை. அவர் தன் கவிதையின் ஆதார இயல்பாக இருக்கிற அபூர்வமான நகையுணர்வால் சட்டெனக் கடந்து சென்று விடுகிறார்.ஆனால் அடிவயிற்றிலிருந்து அரூபமான கை எழுந்து வந்து மனதைப் பிசைவதைப் போன்ற வரிகளைக் கொண்ட கவிதைகளை எழுதுவதன் மூலம் அந்த வலியை இன்னும் உக்கிரம் கொண்டதாக ஆக்கிவிடுகிறார். இவரது கவிதைகளைச் சாதாரணத்திலிருந்து அசாதாரணமான இடங்களை நோக்கிச் செல்லும் குணம் கொண்டவை எனப் பொதுவாகச் சொல்லலாம். ஏனெனில் இசை சமைப்பது எளியவர்களால் ஆன கவியுலகம். அவர்கள் எளியவர்கள் என்பதாலேயே கவனிக்கப்பட வேண்டியவர்கள். இசை, நடிகர் வடிவேலுவின் ரசிகராக இருப்பதை நினைவுபடுத்திக் கொள்வோம் என்றால் அது கவிதைக்கு மேலதிகமான அர்த்தங்களை நமக்கு நல்கும். இவர்கள் இருவருமே சுயபகடியின் கண்ணீரால் ஒன்றிணைபவர்கள். இக்கவிதைகளின் அடியில் அன்றாடத் தனங்களின் சலிப்பும் (வானம் - நீலம்) துயரமும் (துயரத்தின் கழுத்துச் சதை மார்பில் தொங்குகிறது) சிற்றாறுபோல ஓடிக்கொண்டே
இருக்கிறது. அவ்வளவு துயருக்கிடையிலும் அது அபூர்வமான காட்சியைக் கண்டுகொள்ளவும் கவிதை ஆக்கவும் (நளினக் கிளி) தயங்காததைப் போலவே பச்சாதாபத்தின் கேவல்களைக் கண்டு அது நகைக்கவும் செய்கிறது. டெஸ்ட் ரிசல்ட்கள் வந்து மருத்துவரின் ஆலோசனைகளைக் கேட்ட பின்பு,

நான் காதியில்
நீலக்கலர் சால்வை வாங்கிப்
போர்த்திக் கொண்டேன்’  (ரிசல்ட்)

என எழுதமுடிவது அதனால்தான். 

வாழ்க்கை பற்றிப் பேசுகையில்,
நகர்கிறதுஎன்று முதன்முதலாய் சொன்ன
அந்த வித்யாபதியைக் காண விரும்புகிறேன் (வாழ்க்கையை நகர்த்துவது)

என்னும் இசையின் சிலாகிப்புக்குப் பின் இருப்பதும் சலிப்பைக் கேலியாக மாற்றும் கவிதையாக்கமே.



இசையின் கவிதைக்குள் இடம்பெறும் வஸ்துகள் நம் கண்ணில் சதாபட்டுக் கொண்டேயிருப்பவை. உருளைக் கிழங்கு போண்டா, ஜிலேபி, சமோசா, முட்டை பரோட்டா, ரிமோட்கள், ஸ்கூட்டிகள் இன்ன பிற... இசையின் கூர்ந்த அவதானிப்பு, எதைத் தொடுத்து எதை விடுப்பது என்னும் நுட்பம்,கவிதையை அவர் கையாளும் நேர்த்தி, அதற்குள் செயல்படும் கவிமனம் போன்றவைதான் அவர் கவிதைகளுக்குக் கூடுதல் அழகையும் நித்தியத்துவத்தையும் நல்குகின்றன.

எளியவர்களின் மீதான நேசம் சில கவிதைகளை வேறொரு தளத்திற்கு நகர்த்திவிடுகின்றன. பைத்தியம் வாங்கிப்போகும் டீயில்

இந்த டீ
சூடாறாதிருக்கட்டும்
சுவை குன்றாதிருக்கட்டும்
பருகப்பருக பல்கிப்பெருகட்டும்... (பைத்தியத்தின் டீ)

என ஆசி வழங்கும் இசை, ல்யூகோடெர்மா பரவிய கன்னியின் விநாயகத் துதியைக் கண்டு

இத்தெய்வம் தன் துதிக்கையில் ஏந்தியிருக்கும்
கனிந்த பழம் நீதானா?
 (ல்யூகோடெர்மா கன்னியின் விநாயகர்)

என முடிக்கும்போது அதன் வலி மனதைச் சுண்டி விடுகிறது. ஏனெனில் தன் கண்ணீரை அது வரிகளுக்கிடையே பொத்தி (நினைவில் வீடுள்ள மனிதன்) வைத்திருக்கிறது. அது பிறகு மேலெல்லாம் புண்ணான பூனையைத் தூக்கிவந்து செல்லம் கொஞ்சுகிறது (நம் பூனைக்குட்டியைப் பார்த்தேன்). ஆனால் அது பூனைக் குட்டியை மட்டும் சுட்டி எழுதப்படவில்லை என்று தோன்றுகிறது. ஒரு கழிவிரக்கக் கவிதையைப் போய்க் கட்டிக் கொள்கிறது (ஒரு கழிவிரக்கக் கவிதை). இவ்வளவு மனிதர்கள் சூழ்ந்த உலகில் தன்னை நோக்கி நீளாத நேசத்தின் கரத்திற்காகக் காத்திருப்பவை இந்தக் கவிதைகளும் கவிஞனும். ஆனால் இவருக்கு இந்த உலகின் மீது வெறுப்பேதுமில்லை. எல்லாக் கோணல்களையும்(?!) எட்டி நின்று பார்த்து அபிப்ராயத்தை உதிர்க்கவில்லை. அதன் ஒரு பிரதிதானே நானும் நீங்களும் என்னும் முதிர்ச்சி இயல்பிலேயே இவருக்குக் குடி வந்திருக்கிறது. கவிதைகளுக்கு உள்ளேயே இசையின் மனமும் உடலும் பதுங்கியிருப்பதாகவே நினைத்துக்கொள்கிறேன். அது தான் வாசகனிடம் தன் வாழ்வில் ஒரு பகுதியைக் காட்டும் கவிஞன் இவன் என எண்ணச் செய்கிறது போலும்.



இவரது கவிதையின் வரிகளுக்குள் இருக்கும் ஒருவித ஒழுங்கு வாசகனைக் (கருணையின் ராஜா, நைஸ், இராவில் கல்லுடைப்பவர்கள்) கவிதைக்குள் இழுக்கும் தூண்டில்போல. அதைச் சிறப்பாகச் செய்வது இசையின் கவியுலகம். அதுபோலவே பெண்களின் பிரியத்திற்கான ஏக்கமும், அது ஆணின் மனதில் (வருக என் வாணி ஸ்ரீ) கிளர்த்தும் பரவசமும் துடிப்பும் சமீபகாலத்தில் இவரளவிற்குக் கவிதைக்குள் வெற்றிகரமாகக் கொண்டுவந்தவர்கள் மிகச்சிலரே. நகுலனின் சுசீலாவும் கலாப்ரியாவின் சசியும் எப்படி படிமங்களாக ஆனார்களோ அதுபோலவே இசையின் வாணியும் பின்னாளில் ஆகக்கூடும். பத்து பதினைந்து காதல்கள் இருந்திருந்தால்...என முன்னுரையில் அங்கலாய்க்கிறார் இசை. அதில் ஏன் கஞ்சத்தனம்? இன்னும் கொஞ்சம் கூடக்குறைய இருந்தால் அவரது கவிதைகளுக்கு நல்லதுதானே? அவருக்கு நல்லதா என அவர்தான் சொல்ல வேண்டும். கட்டியணைத்து முத்தமிடவா முடியும் / காப்பி சாப்பிடலாம்எனக் காதலியை அழைத்த தேவதேவனிடமிருந்து வெகுதூரம் வந்துவிட்டிருந்தாலும் குழற்கட்டு அவிழ்ந்து காற்றில் அலையாமல் பார்த்துக் கொள்ள முடியுமா?’ என்றும், ‘லூஸ்ஹேருக்கு மயங்குபவனாகவும் இருக்கிறான் இக்காலக்கவி. இதற்கிடையே எம்.கே.டி. தன் பட்டுஜரிகை வேட்டியைத் தூக்கிக்கொண்டு மூத்திரச் சந்தினுள் ஓட, யாக்ஞவல்கியர் பெட்டிக்கடைக்குப் பின் ஒளிந்துகொள்ளும் கூத்தும் நடக்கத்தான் செய்கிறது (போலீஸ் நம்மை வீட்டிற்கு அனுப்புகிறது). அதுபோலவே இவரது பெரும்பாலான கவிதைகள் முடிவில்தான் திறப்பையும் கலை வெற்றியையும் அடைகின்றன.


ஆனாலும் அழுது கொண்டிருக்கும் ஆனந்தனைக் கூட்டிப்போய் முட்டைப் பரோட்டாவுக்குள்(ஆனந்தன் என்கிற அனாதை) இவர் தள்ளி விட்டிருக்க வேண்டாமா என நினைத்துக்கொண்டிருக்கும்போதே சில பக்கங்களுக்குப் பின் அவனே தெளிவாக எழுந்து வந்து உங்களுக்கும் நைஸ்தான் வேண்டுமா?’(நைஸ்) என்று கேட்கிறான். வந்த கோபத்தில் இசையின் பாஷையில் சொல்வதென்றால் அவனை எண்ணெய்க் கொப்பரைக்குவழி சொல்லி அனுப்பினேன்.




தனித்த கவிமொழியைக் கொண்டிருக்கும் இசையின் இத்தொகுப்பின் அரசியல் கவிதைகளாகக் கருதத்தக்கவை கூடங்குளத்தில் கொக்கு பறக்குதடி பாப்பா’. அதிலும் நம் அறவுணர்ச்சிக்கு ஒரே குஷிகவிதையைத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தொகுப்பின் மொத்த இயல்பிலிருந்து விலகியிருக்கும் கவிதை வானம் நீலம்’. பிறவற்றுடன் ஒப்பிடும்போது இதன் தரம் கீழேயே இருப்பதாக நினைக்கிறேன். தாளத்தின் கணக்கைச் சொற்களுக்குள் நகர்த்திய வித்தியாசமான ஆனால் மேலெழாத கவிதை பீடி மணக்கும் உன் உதட்டிற்கு ஒரு முத்தம்’. அது போலவே உன்னை அடைவதுஎன்னும் கவிதை, பாதசாரியின் முத்தம்கவிதையை நினைவுக்குக் கொண்டுவந்தது. இக்கவிதைகளை எழுதிய அப்போது செயல்பட்ட மனநிலைகளுக்கு அப்பாலிருப்பவைகளை நோக்கி இசை, இனி செல்ல வேண்டும். ஏனெனில் இது ஒரு வினோதமான பொறி. அதற்குள் சிக்கிக் கொள்வது ஆபத்தானது.

தொகுப்பின் ஆகச் சிறப்பான கவிதைகள் என மன்னவன் வந்தானடி தோழி’, ‘உனக்கு நீயேதான்’, ‘நைஸ்’, ‘எண்ணெய் கொப்பரைக்குப் போகும் வழி’, ‘போலீஸ் நம்மை வீட்டிற்கு அனுப்புகிறதுஆகிய கவிதைகளைச் சுட்டுவேன். அதிலும் முக்கியமாக எண்ணெய் கொப்பரைக்குப் போகும் வழி’.

எண்ணெய் கொப்பரைக்குப் போகும் வழி

ஒரு பொட்டுத் தெறித்தாலே
உடல்கொப்புளமாய் பொந்திப் போகையில்
எண்ணெய் கொப்பரைக்குப் போகும் வழியில்
மனிதர்கள் ஏன் இப்படி நெருக்கியடித்து நிற்கிறார்கள்
ஒருவரை ஒருவர் முந்தவும் பார்க்கிறார்கள்
நன்மார்க்கத்தின் வழியில்
காற்று விளையாடிக் கொண்டிருக்கிறது.
அங்கு ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும்
ஒரு சிலரும்
ஏன் இங்கேயே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
தவிரவும், அடிக்கடி ஏன் அவர்கள் சளவாய்
வடிக்கிறார்கள்.
வாணியிடம் ஆசிபெற்ற கையோடு
உற்சாகமாய் வந்து
இந்த நெரிசலில் கலக்கிறான் ஒரு கவி.
அவன் தொப்பி எதுவும் அணிந்திருக்கவில்லை
மேலும்
அனைவரையும் தொப்பியைக் கழற்றிவிடும்படியும்
கேட்டுக் கொள்கிறான்
எட்டுமுழ வேட்டியைத் தலைக்குப் போர்த்தியிருக்கும்
சிவனாண்டியைப் பார்க்கையில்
நமக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வருகிறது.
உளுந்து வடைகள்
எண்ணெய்க் கொதிக்கு மருளுமோ தாயே

ஓஷோவின் உரையொன்றில் ஒரு கதை வரும். அதில் இருப்பவர்களும் நரகத்திற்குப் போவதற்குத் தான் துடிப்பார்களேயொழிய சொர்க்கம் காற்று வீசிக் கிடக்கும். நுட்பமும் வலியும் கூடிய அற்புதமான கவிதை இது. இந்த எண்ணெய்க் கொப்பரைக்குப் போகும் வழியில் இந்த தள்ளுமுள்ளும் கூட்டமும் எனக்கும்தான் புரியமாட்டேன் என்கிறது. தொப்பி அணியாத கவிஞனுக்குப் பின்னால்தான் உளுந்துவடைகளோடு புதிய உளுந்துவடையாக நானும் நிற்கிறேன். கவிஞனுக்கேனும் வாணியின் ஆசி உண்டு. நான் தனித்து நிற்கிறேன். சற்று உயரமான ஆறடி உளுந்துவடை. எண்ணெய்க்குள் போடவிருக்கும் அம்மாவைப் பார்த்து இந்த ஆறடி உளுந்துவடையும் கேட்கிறது.

உளுந்து வடைகள்
 எண்ணெய்க் கொதிக்கு மருளுமோ தாயே

கலைவெற்றி பெற்ற இவ்வளவு கவிதைகளை ஒரு தொகுப்பில் வாசிக்க நேர்வது அபூர்வம். தற்காலக் கவிகளில் முக்கியமான முதல் வரிசைக் கவிஞன் இசை என்பதில் ஐயமேதுமில்லை.


(30.08.2014 அன்று மதுரையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கலாப்ரியாவிடமிருந்து முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டபின் வாசித்த கட்டுரை)

நன்றி : காலச்சுவடு மார்ச் 2015