Friday, October 13, 2023

பற்று


பற்று (சிறுகதை)


சிறிது பிசகும்படிக்கு அமர்ந்தாலும் உடைந்து போய்விடக்கூடிய பிளாஸ்டிக் நாற்காலி வீட்டுக்கு வெளியே ஓரமாகப் போடப்பட்டிருந்தது. மூன்று கால்கள் மட்டுமே தரையில் ஊன்றியிருக்க மூட்டுக் கழன்றவர் கால் போல் நான்காவது அந்தரத்தில் அசையாது நின்றது. கைத்தாங்கலாக பேரனால் காளீஸ்வரி அழைத்து வரப்பட்டு உட்கார வைக்கப்பட்டாள். மகனுடன் பேச்சுவார்த்தை நின்று போய்விட்டிருந்தது. அவள் நடந்து வந்த வழியில் நின்றிருந்தவன் விலகி அப்பால் சென்று விட்டான். நடந்த களைப்பும் இயலாமையுமாக மூச்சு வாங்கும் இடைவெளியில்ஒரு வாய் தண்ணி மோந்துட்டு வா சாமி..’ என பேரனிடம் கெஞ்சினாள். உள்ளே போனவனின் நிழலைக் கூடக் காணோம். தடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று புரிந்தது. வீட்டினுள்ளிருந்து பொருட்கள் அவற்றின் அளவிற்கும் தகுதிக்கும் ஏற்ப கையாளப்பட்டு வண்டியில் ஏற்றப்பட்டன. கழிந்தவை, லாயிக்கற்றவை அவள் காலடியிலும் அதற்கு பின்னாலும் கொண்டு வந்து குவிக்கப்பட்டன. உதவாதவைகளோடு ஒன்றாக நைந்த பழந்துணி போல நட்சத்திரங்கள் மின்னும் வானம் பார்த்து வறண்ட வாய் திறந்து எதையோ யாரிடமோ சொல்லும் பாவனையில் முணுமுணுத்துக் கிடந்தாள். அவள் இயல்பே அது தான். எதையும் உரத்துப் பேசும் வழக்கமில்லாதவள். தேவையென்றால் அன்றி பேச வாயெடுக்காதவள். மகனும் இதே குணம் கொண்டவன் என அவன் நடைபயின்ற போதே காளீஸ்வரி கண்டு கொண்டாள்.




23 ஆண்டுகளாக புழங்கிய வீடு தான் சுரேஷின் வியாபாரச் சரிவுகளுக்குக் காரணம் என உரைத்த ஜோசியக்காரனின் பேச்சைக் கேட்டு உள் அமைப்பை மாற்ற முடிவெடுத்திருந்தான். வாஸ்துக்காரன் குறித்துக் கொடுத்த வரைபடம் கூட காளீஸ்வரியிடம் காட்டப்படவே இல்லை. பக்கத்து ஊருக்குக் கட்டிக் கொடுத்திருந்த மகள் அடுத்த தெருவுக்கு குடிவந்த போதும் கூட முன்னரே அவர்களுக்குள் போக்குவரத்து அற்றுப்போய் விட்டது. தன் கணவர் (முருகேசன்) வாங்கிப் போட்டிருந்த காலி இடத்தின் சரிபாதியை அவளுக்கும் பங்கு பிரித்துத் தரப்பட்டதில் சுரேஷுக்குச் சிறிதும் சம்மதம் இல்லை. முழுவதும் இவனுக்கே வேண்டும் என்பது மட்டுமல்ல அதன் பிறகு அவள் குழந்தைகள் கூட இந்த வீட்டு படியை மிதிக்கக்கூடாது என்றான்.


இவனாவது முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு திரிந்து எப்போதேனும் சுருக்கென்று பேசுவான். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும்படிக்கு இருக்கும். ஆனால் மகள் அருணாவுக்கு தன் மாமியாரின் வாய். வார்த்தைகளாலேயே சூடிழுப்பாள். புண் ஆறுவதற்கே வாரங்கள் ஆகும். அதன் பிறகு தழும்பு பளபளப்புடன் காணப்படும். காளீஸ்வரி மணம் முடித்து வந்த சில நாட்களிலேயே அவள் சொல் அம்பலம் ஏறாது என்று அறிந்து கொண்டாள். தன் மகனை கைக்குள் போட்டு விடுவாள் என்ற பதைபதைப்புடனேயே மாமியார் அவளை கண்காணிப்பு வளையத்திற்குள்ளேயே வைத்திருந்தாள். தனக்கு தராமல் ஏதேனும் சமைத்து சாப்பிடுகிறார்களோ என்ற எண்ணம் விரட்ட அவர்கள் உறங்கிய பின் ஒவ்வொரு பாத்திரத்தையும் திறந்து திறந்து பார்த்து மூடுவாள். அப்போதும் ஒப்புக்கொள்ள மனமின்றி மூக்கருகே கொண்டு சென்று மணம் பிடித்த பிறகே நிம்மதி அடைவாள். பல நாட்கள் எலிகள் தான் இப்படி உருட்டுகின்றன என அச்சத்துடன் புரண்டு படுத்திருக்கிறாள். உக்கிரமாக மழை பெய்த அன்று ஜன்னலை மூட எழுந்து வந்த போது தான் சமையற்கட்டில் நிழல் அசைவதையும் அங்கு பாத்திரங்கள் மாற்றி வைக்கப்படுவதையும் பார்த்தாள். குழந்தைகள் பிறந்த பின் தான் அவளது மூர்க்கங்கள் குறைந்தன. தன் மகனை விடுத்து பேரக்குழந்தைகள் மீது பார்வை திரும்பியது. காளீஸ்வரி கூட அதன் பிறகே எதிர் நின்று பேசும் துணிவை அடைந்தாள். அப்போதும் விஷம் தோய்ந்த கத்தி போல மாமியாரால் வீசப்படும் வார்த்தைகள் காளீஸ்வரியை நிலைகுலைய வைத்திருக்கின்றன. அவை காளீஸ்வரியின் அழகு பற்றிய ஆற்றாமைகள், குமைச்சல்கள், அவதூறுகளால் நிரம்பி இருக்கும். அவளது எளிய அலங்காரங்களே கூட பாதசாரிகளின் முகங்களை நிமிர வைக்கப் போதுமானவையாக இருந்திருக்கின்றன. அவர்கள் கண்களைத் தாழ்த்தினாலும் ஓரப்பார்வைகள் பின் தொடரத்தான் செய்யும். முருகேசனுக்கு அந்த வியப்பு அவளிடம் இல்லை. அதற்கு பதிலாக முருகேசனின் அம்மா வியப்பின் எதிர்நிலையின் மொத்த உருவாக இருந்தாள். குள்ளமான பெண்மணி. சற்றே கூன் விழுந்தவளும் கூட. வயதாகுந்தோறும் சுருங்கிக் கொண்டே சென்றாள். மகள் அருணா அதே தொனியில் தான் எரிந்து விழுவாள்.


மகனுக்கு வங்கியிலுள்ள பணம் வேண்டும். மகளுக்கு அதில் பாதி தரப்பட வேண்டும். காளீஸ்வரி தனக்கு பின்னர் தான் பிறருக்கு என்கிறாள். இந்த மூன்று புள்ளிகளில் நின்று கொண்டு வெளியே வர மறக்கும் மூவராலும் ஒருவர் மற்றொருவருக்கு நரகமாக மாறிக் கொண்டிருந்தனர். ஒரு நல்ல புடவை எடுத்து தர நாதியில்லை அவளுக்கு. தன் பேரில் பணம் இல்லையென்றால் இந்த சோறும் (அதுவும் தவணைமுறையில்) கொடுக்கப்படாது என்பது அவளுக்குத் தெரியும். பசை இல்லாமல் எதுவுமே ஒட்டாது. ரத்தச் சொந்தங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அவள் அந்த பசையை விடத் தயாராக இல்லை.


வீடு புணருதாரணம் செய்யப்படுகிறது என்பது அருணாவுக்குத் தெரியும் என்றாலும் அது எப்போதென அறிந்திருக்கவில்லை. இரவில், அதுவும் அவள் ஊரில் இல்லாத போது காலி செய்யப்படும் தகவல் அவளது உளவாளியான அவளுடன் படித்த தெருவாசியால் அவளுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது. வண்டி கிளம்புவதற்குக் கால்மணி நேரம் இருக்கும் போது தலையை முடிந்தபடியே உக்கிரமான சாமியாடி போல ஆவேசமாக வந்தாள். வீடேறி வந்தவளைக் கண்டு சுரேஷ் பின் வாங்கி விடுவான் என நினைத்ததற்கு மாறாக அவளை அறைந்து கீழே தள்ளி இழுத்து தெருவில் விட்டு விட்டு கைலியை உதறிக் கட்டினான். காளீஸ்வரி செய்வதறியாது திகைத்து எழுவதற்கும் பலம் இன்றி பேசுவதற்கும் தெம்பின்றி வெறும் காற்றை மட்டும் ஊதிக் கொண்டிருந்தாள். இன்னும் அவளுக்கு தண்ணீர் தரப்பட்டிருக்கவில்லை.


அந்த ஆங்காரம் அருணாவுக்கு தன் அம்மா மீது திரும்பியது. காளீஸ்வரியின் முடியைப் பிடித்து  இழுத்து ஆட்டி அடித்தாள்.


பணத்தைக் கட்டிட்டு அழுடி முண்டை. இந்த நாதாரி நாய்கிட்டயெல்லாம் அடி வாங்கற மாதிரி பண்ணியிருக்கற..!’ பேசப் பேச நினைவு வந்தவளாக தன் அம்மாவுக்கருகில் போடப்பட்டிருந்த பழைய செருப்புகளில் ஒன்றை எடுத்து தன் அண்ணன் மீது எறிந்தாள். அது மாறி விழுந்தது. பிய்ந்து கிடந்த மற்றொன்றை வீசினாள். அவன் ஒதுங்கவில்லை என்றால் இலக்கு தவறி இருக்காது. முன்னிலும் வேகமாக அவன் ஓடி வந்ததைக் கண்டு பொருட்களை ஏற்ற வந்தவர்கள் அவனை இழுத்துப் போயினர். தன் மருமகள் தன்னைப் போலவே எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் அதிர்ந்து பேசாமல் கண்களை மட்டும் உருட்டுபவள். அவளே பக்கத்து வீடுகளிலிருந்து வந்தவர்களிடம் நியாயம் கேட்டுக் கொண்டிருந்தாள்.


என்னைய மட்டும் ஏமாத்தணும்னு ஆத்தாளும் மகனும் நினைச்சீங்கன்னா அப்பறம் அத்தன தான்நான் யாருனு ஊரு உலகத்துக்குக் காட்டிப் போடுவேன்..’


என்றபடியே அவளுக்கு பின்னால் சாராய வாடையுடன் நின்று கொண்டிருந்த அவள் கணவன் பின் தொடர நடந்து சென்றாள். முசுமுசுவென அழுது கொண்டிருந்த காளீஸ்வரியை அந்த தெருக்காரர்கள் தான் தேற்றினர். அவர்களில் ஒருவர் தான் நீர் கொண்டு வந்தும் கொடுத்தார். அதைக் கண்டதும்ஒரு வாய் தண்ணிக்கு வக்கிலாம போனேனே…’ என்ற ஒப்பாரி அழுகையில் முடிந்தது. தண்ணீர் நிறைந்திருந்த சொம்பு முழுவதும் காலி செய்து விட்டு அப்படியே கண்களை மூடிக் கொண்டாள்.


முருகேசன் தன் சேமிப்பான பனிரெண்டு லட்ச ரூபாயை வங்கியில் தன் பெயரில் போட்டு வைத்திருந்தார். தனக்கு முடியாமல் இருப்பதை உணர்ந்ததும் தான் இறப்பதற்கு ஒரு மாதம் முன்னர் அவளை அழைத்துச் சென்று பெயரை மாற்றிக் கொடுத்து வந்திருந்தான். அப்பா காலமான நான்காம் நாள்  இறப்புச் சான்றிதழுடன் சுரேஷ் போய் நின்ற போது தான் விஷயம் வெளியே வந்தது. மோப்பம் பிடித்து விட்டிருந்த அருணா அதில் பாதி வேண்டும் என நடுவீட்டில் வந்து அமர்ந்து கொண்டாள். சுற்றங்கள் சமாதானப்படுத்திய பிறகே கிளம்பிச் சென்றாள். அதற்காகவே சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு அடுத்தத் தெருவில் குடிவந்தாள்.  உரிமைகள் முழுவதும் அம்மா பெயரில் இருப்பதால் இருவருமே தொடக்கத்தில் பாந்தமாக விரல் நக அழுக்கைக் கூட எடுத்து விடச் சித்தமாக இருக்கிற பாசத்துடன் நடந்து கொண்டனர். அருணா வந்தாலே சுரேஷ் கிளம்பி விடுவான். இருவரும் பேசிக் கொள்வது என்னவென்று மனைவி அவனுக்குச் சொல்ல வேண்டும். காளீஸ்வரி எதற்குமே பிடி கொடுக்காமல் நடந்து கொண்டாள். உயிருடன் இருக்கும் போது சொத்தையும் ரொக்கத்தையும் மாற்றி எழுதி வைத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது அவளுக்குத் தெரியும்.


ஒரு முழு வருடமும் போன பிறகும் சிறிது கூட எதுவும் நகரவில்லை. அன்பின் திரை விலகினால் பிறகு கோரம் தானே..! போர்வைக்குள் பதுங்கி இருந்தவை வெளி வந்து தானே ஆக வேண்டும். முதலில் கசப்பு. அது கடுமையாக ஆவதற்குள் காளீஸ்வரி ஏதேனும் செய்திருக்கலாம். ஆனால் அவளுக்கோ தன் பிடியை விட்டு விடக்கூடாது என்கிற ஆதங்கம். அக்கசப்பு விரைவிலேயே வெறுப்பாக மாறி விட்டது. வட்டியும் அசலிலேயே சேர்ந்து கொள்ள வேண்டும். முதிர்ந்த பிறகோ தேவைப்படும் போதோ எடுத்துக் கொள்ளலாம் என்பது போல டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. அந்த வட்டியாவது எடுத்துத் தரச் சொல்லி முறையிட்டாள். சுரேஷ் தாஜா செய்து கூட பார்த்தான். ஒன்றுக்கும் அவள்  மசியவில்லை.


அருணா தன் மகளுக்கு சீர் செய்ய வந்த நின்ற போது காளீஸ்வரி தான் வைத்திருந்த பணத்தைக் கொடுத்தது சுரேஷுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அவளுக்கோ தன் அம்மா பேத்திக்கு நகை செய்து போடவில்லை என்கிற கோபம். தாய் மாமன் வெறும் 1001 ரூபாயை வைத்து விட்டு நகர்ந்ததும் அருணா அந்த பந்தலிலேயே அவனை அவமானப்படுத்தினாள். இடத்தில்  அவளுக்குப் பாதி போய்விட்டதே என்ற பொறாமையுணர்ச்சியிலிருந்து அவனால் மீளவே முடியவில்லை. அத்தோடு போக்குவரத்தும் நின்று விட்டது.


வீட்டை மாற்றிக் கட்ட அம்மாவிடம் பணம் கேட்ட போது அதே பல்லவி. அம்மா எங்கே தந்து விடுவாளோ என்கிற அச்சம் அவளுக்கு. அருணா போவதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு எழ முயன்றாள். முடியவில்லை. கீழே சில ப்ரேம் உடைந்த போட்டோக்கள், பழைய உடைகள், நசுங்கிய பாத்திரங்கள், நிறைய பேப்பர்கள் கிடந்தன. அவளது சேலைகளில் சிலதைக் கூட, யார் முதலில் பாட்டியைத் தொடுகிறார்கள் எனப் போட்டி போட்டு ஓடியோடி அவள் மடியில் வந்து போட்டு விட்டு போயிருந்தனர் பேரனும் பேத்தியும்.


நிறைந்திருந்த சாமான்களால் ஊதப்பட்ட பலூன் போல் வண்டி பெருத்திருந்தது. இன்னொரு சவாரி வந்தாலும் போதாது என்று பட்டது. தூறல் விழத் தொடங்கியிருந்ததால் சுரேஷ் தன் மனைவியை அழைத்து ஏதோ சொன்னான். தன் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு காளீஸவரியின் அருகே வந்தவள்அடுத்த நடை வரும் போது ஏத்திக்கறோம் அத்தை. அதுவரைக்கும் ராசமக்கா வூட்டுல இருங்க..’ என எழுந்து நிற்பதற்குக் கையைப் பிடிக்கப் போனாள். பட்டென தட்டி விட்டாள். தன் பேரன் பேத்திகளின் கையைப் பிடித்து எழ முயன்றாள். கோபத்துடன் அங்கிருந்து அகன்றவள் சுரேஷிடம் ஏதோ சொல்வது போலத் தோன்றியது. அவன் அலட்சியமாக அடுத்த பொருளைத் தூக்கிக் கொண்டு முன்னே சென்றான்.


ராசமக்கா எவ்வளவு சொல்லியும் வீட்டிற்குள் காளீஸ்வரி போகவில்லை. திண்ணையிலேயே அமர்ந்து கொண்டாள். அவர்கள் கொடுத்த இரண்டு தோசைகளில் அரைவாசியை தன் காலருகில் நிற்கும் நாய்க்குப் போட்டபடி சாப்பிட்டு முடித்தாள்.


அதுவரைக்கும் போக்குக்காட்டிக் கொண்டிருந்த மழை கொட்டித் தீர்த்தது. காற்றில்லை. மின்னலில்லை. ஆனால் வானம் கிழந்தது போல வெள்ளம் புரண்டு ஓடியது. அழைத்தும் வராததால் ராசமக்கா வீட்டு விளக்கு அணைக்கப்பட்டு விட்டது. வண்டி வரும் வழி தெரியவில்லை. தேங்கி நிற்கும் நீரிலும் சகதியிலும் வராது என்று தோன்றியது. தன்னோடு கட்டிக் கொண்டு வந்த சிறிய மூட்டையைத் தூக்கியபடி மெதுவாக எழுந்து நின்றாள். கால்கள் கிடுகிடுவென ஆடின. சற்று நேரத்தில் பழையநிலைக்கு வந்தன. எப்படி தன்னால் இப்படி நடக்க முடிகிறது என்ற ஆச்சர்யத்துடனேயே காளீஸ்வரி நடந்து கொண்டிருந்தாள். எங்கும் வழுக்காமல் இடறி விழாமல் மிக நிதானத்துடன் கால்களைத் தூக்கி வைத்தாள். நாய்கள் அவளைச் சூழ்ந்த போது அரை தோசை தின்ற நாய் மெதுவாக உறுமி அடங்கியது. பிற நாய்கள் வழிவிட்டு ஒதுங்கின. அவற்றில் ஒன்று அவள் போகும் திசை பார்த்து நின்று பெரிய ஊளையொன்றை எழுப்பியது.


சுரேஷும் தகவல் கேட்டு வந்த அருணாவும் எங்கெங்கு தேடியும் அம்மாவைக் காணாது தவித்தனர். அருணா உடைந்து போனாள். மாறி மாறித் தூற்றிக் கொள்வதை பிறர் பார்க்கின்றனர் என்கிற நினைப்பே அவர்களிடம் இல்லை. அலைந்து திரிந்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. சரியாக 11 மணிக்கு அருணாவின் கணவன் தான் தகவல் ஒன்றைக் கொண்டு வந்தான். ஆனால் அதற்காக நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான். என்றாலும் சென்று பார்த்து விடுவது என  தீர்மானித்ததும் மனம் நடுங்குவதை உணர்ந்தனர்.


ஆட்டோவில் சென்று இறங்குவதற்குள் சுரேஷ் காரை எடுத்துக் கொண்டு பின்னாலேயே வந்து விட்டான். காவலர்கள் சுற்றிலும் நின்றிருந்தனர். அருணாவின் கணவன் மிக பவ்யமாகப் போய் அவர்களிடம் விஷயத்தைச் சொன்னான். அவர்களில் ஒருவர் சோர்வாகவாங்க இந்த பக்கமா வாங்க…’ என மேட்டில் நின்றவர்களை அழைத்தனர்.


ஏதாவது திட்டுனீங்களா? என்ன கொடுமை பண்ணீங்க..? பெத்த தாயை பாத்துக்காம அப்படியென்னத்த நொட்டிப் பொழக்கறீங்க மயிறு..’ என சற்றே வயதானவர் சராமாரியாக பேசிக் கொண்டே போனார். ’பாடி ஒன்றரை மைலுக்கு அந்த பக்கம் ஒதுங்கி இருக்கு. வெள்ளம் வடிஞ்ச பிறகு தான் எறங்கணும். ஆள் போயிருக்காங்க..’ என்ற பிறகுயோவ் பாலு..அந்த மூட்டையைக் காட்டுயா..இங்க தான் வைச்சுட்டு இறங்கி இருக்கும் போலிருக்கு..’ என்ற பிறகுபாலு.. அந்த ஆள்கிட்ட செலவுக்கு வாங்கிக்க..’ என ஒன்றிருக்கிருக்க மறைவிடம் தேடிச் சென்றார்.


சுரேஷ் பேச்சற்றவனாக ஏதோ சுழலுக்குள் நிற்பவனைப் போல நிர்கதியுடன் நின்று கொண்டிருந்தான். அருணா தான் துணிவுடன் கீழிறங்கிச் சென்றாள். இறங்க இறங்க அவள் முகம் முறம் போல விரிந்து கடுமையாக மாறிற்று. ஒவ்வொரு அடியிலும் வெவ்வேறு கடவுளர்களை வேண்டியபடிமன்னிச்சுரும்மாமன்னிச்சுரும்மா..’ என இறைஞ்சியவாறு நெருங்கினாள்.


மூட்டையை அவிழ்த்ததுமே புரிந்து விட்டது. தன் மகள் சீருக்கு தான் எடுத்துத் தந்த சேலை , அம்மா தனியாக எடுத்துக் கொண்ட மிக அழகான சட்டங்கள் உடைந்த புகைப்படம், பேரன் பேத்திகளின் உடைகள், ஈரத்தோடு கிடந்தன. அதற்குள் ஏதோவொன்று நெருடுவதாகப் பட்டது. சற்றே ஒடுங்கிய மூன்று தம்ளர்கள். அவளை யாரோ சுருட்டி எங்கோ வீசுவதாகத் தோன்றியது. அவற்றில் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அருணா சிறுமியாக இருக்கும் போது வாங்கப்பட்டவை. அதில் இரண்டிலும் உறிஞ்சு குழாய்கள் இருக்கும். டீ, காபியெல்லாம் அப்படி உறிஞ்சி தான் குடிப்பார்கள். சிலமுறை தம்ளர்கள் மாறி அண்ணனுடன் கத்திக் கூப்பாடு போட்டு சண்டையிட்டதைப் பார்த்து அம்மா தான் மூன்றையும் தூக்கிப் போய் பெயர் பொறித்து வந்தாள். அவளுக்கு நாவிலிருந்து  ஒரு சொல்லும் எழவில்லை.


பாவம் போல திரும்பி சுரேஷைப் பார்த்தாள். அவ்வளவையும் அவன் புரிந்து கொண்டான். சரிவில் விழுந்து ஓடி வந்தான். அருணா கூப்பாடு போட்டு தலையில் ஆவேசமாக அடித்தபடி ஓலமிட்டுக் கதறி வேறு வார்த்தைகளே இல்லாதது போலஐய்யோஐய்யோ..ஐய்யோ..’ என வெடித்து அழுதாள். எதையோ நினைத்துக் கொண்டவள் போல ஓடிக் கொண்டிருந்த ஆற்றை நோக்கிம்மா…’ என அலறியபடியே பாய்ந்தாள். ஆட்கள் அவளை பிடித்துக் கொண்டனர்.


குப்பைக்கூளங்கள், அழுக்குகள், கச்சாடாக்களென சகலத்தையும் அடித்துக் கொண்டு மழையின் புது வெள்ளத்தால் ஆறு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.


No comments:

Post a Comment