Thursday, May 5, 2016

இரவுக்காட்சி சிறுகதைத் தொகுப்பு - உரையாடல், விவாதம்

நண்பர்களுடன் இணைந்து மதுரையில் ‘சாவடி’ என்னும் அமைப்பைத் தொடங்கி இருப்பதாகவும் அதன் முதல் கூட்டம், என் முதல் சிறுகதைத் தொகுப்பான ’இரவுக்காட்சி’ பற்றியதாக இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் திருச்செந்தாழை அழைத்துக் கேட்டார். உடனே ஒப்புக் கொண்டேன். 30/01/2011 அன்று நிகழ்ந்த கூட்டத்தில் சமயவேல், ந.ஜயபாஸ்கரன், ஸ்ரீசங்கர், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, கார்த்திகை பாண்டியன் , ஹவி மற்றும் அவரது துணைவியார் இந்திரா, செந்தி, புதுகை சஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு தொகுப்பை முன்னிட்டு விவாதிக்கப்பட்டவைகளை கார்த்திகை பாண்டியன் உரையாடல் வகையிலேயே எழுதி எனக்கு அனுப்பி வைத்தார். நினைவிலிருந்து எழுதினேன் என்று கா.பா சொன்னாலும் சரியாக வந்திருந்தது. அதை நெடுநாட்களாகத் தேடிக் கொண்டேயிருந்தேன். அகப்படவேயில்லை. இன்று நினைவு வந்து கா.பாவிடம் கேட்டதும் தன் வலைப்பக்கத்தில் இன்னும் அந்த உரையாடல் இருப்பதாகவும் அனுப்புகிறேன் என்றும் சொன்னார். உடனடியாக அனுப்பி வைத்தார். அந்தக் கூட்டத்தில் நடந்த உரையாடல் மற்றும் விவாதத்தின் பதிவு இது . கார்த்திகை பாண்டியனுக்கு அன்பும் நன்றியும்.

**********************.

மதுரையில் இருக்கக்கூடிய இலக்கிய நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடிசாவடி என்கிற புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள் / றோம். இன்றைய தமிழ்ச்சூழலில் முக்கியமானவர்கள் என்று சொல்லக்கூடிய இளம் படைப்பாளிகளை அடையாளம் கண்டு, அவர்களின் படைப்புலகம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, அவர்கள் மீது பரவலான கவனிப்பை உண்டாக்குவதே இவ்வமைப்பின் நோக்கம். இதன் தொடர்ச்சியாக 30-01-2011 அன்று மதுரை காக்காத்தோப்பில் இருக்கும் மூட்டா ஹாலில்சாவடியின் முதல் அமர்வு நடைபெற்றது. “இரவுக்காட்சி என்கிற தன்னுடைய சிறுகதை தொகுப்பின் மூலம் பரவலான கவனிப்பைப் பெற்றிருக்கும் கே.என்.செந்தில் இந்த நிகழ்வின் முதல் படைப்பாளியாக கலந்து கொண்டார்.

                                           

மதுரையில் இருக்கும் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அவர்கள் - சமயவேல், .ஜயபாஸ்கரன், ஸ்ரீசங்கர், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, ஹவி மற்றும் அவரது துணைவியார் இந்திரா, செந்தி, புதுகை சஞ்சீவி ஆகியோர்.வலைப்பதிவர்களும் கணிசமான எண்ணிக்கையில் வந்திருந்தார்கள். வாசிப்பில் புதிதாக நுழைய விழையும் வாசகர்கள் மற்றும் சில பெயர் தெரியா நண்பர்கள் என பலர் ஒன்று கூடிட நிகழ்வு பதினொரு மணிக்குத் தொடங்கியது. நிகழ்வுகளை என்னுடைய நினைவிலிருந்து மீட்டெடுத்து முடிந்தவரை சரியாக எழுத முற்படுகிறேன். எங்கும் ஏதேனும் தவறு இருந்தால் தொடர்புடையவர்கள் மன்னியுங்கள்.

முதலாவதாக எஸ்.செந்தில்குமார் பேசினார். “ஆரம்பிக்குமுன், இன்றைக்கு நாம் எதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று பேசுவோம். அகச்சிக்கல்கள், நெருக்கடி என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் விஷயங்களைத்தான் காலம் காலமாக எழுதி வருகிறோம். அப்படிப் பார்க்கும்போது இன்றைய இளம் படைப்பாளிகளுக்கான பெரும் நெருக்கடியாக எது இருக்கிறது? பெரும்பாலும் காமம் சார்ந்த விஷயங்களையே அவர்கள் எழுதி வருவதாக எனக்குப் படுகிறது. அதிலும் குறிப்பாக, தன்னை விட மூத்த பெண் மீது ஒருவன் கொள்ளும் காதல். அப்புறம் இன்னொரு விஷயம், சுய மைதுனம். அதை விடுத்து உடல் சார்ந்து பேச பல விஷயங்கள் இருந்தாலும் நாம் பக்கம் பக்கமாக சுயமைதுனம் செய்து கொண்டிருக்கிறோம். இது சரிதானா? மௌனியில் ஆரம்பித்து தி.ஜாவில் தொடர்ந்து இன்றுவரைக்கும் திரும்ப திரும்ப இது எழுதித் தீராத விஷயமாக இருக்கிறது.. ஏன்? நாம் சார்ந்து இருக்கக் கூடிய சமுதாயத்தில் நமக்கு எவ்விதமான சிக்கலும் இல்லையா? ஏன் அவற்றை எல்லாம் இளம் படைப்பாளிகள் எழுத முன்வருவதில்லை..?”

கே.என்.செந்தில் - "நீங்கள் சொல்லும் விஷயத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. காலம் காலமாக பெண்ணின் மீதான காமம் மட்டுமே பதியப்பட்டு வருவதாக நீங்கள் சொல்வதில் நியாயம் இல்லை. புதுமைப்பித்தனின் எழுத்திலோ இல்லை மௌனியின் எழுத்திலோ நீங்கள் சொல்லும் மூத்த பெண் மீதான காமம் என்பது எதுவும் கிடையாது. தி.ஜாவும் அதன் தொடர்ச்சியாக வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோரின் எழுத்தில் இது போன்ற விஷயங்களைக் காணலாம். என்றாலும், இன்றைக்கு இருக்கக் கூடியவர்களுக்கு தங்களுடைய மிக முக்கியமான பிரச்சினையாக அவர்களுடைய உடல்தான் இருக்கிறது. தன் பிரதான பிரச்சினைகள் என நாம் நம்பக் கூடிய விஷயங்களையே ஒரு எழுத்தாளன் பதிவு செய்கிறான் எனும்போது காமம் சார்ந்து நிறைய பேச வேண்டியதாக இருக்கிறது.."

செந்தி - "இந்த தொகுப்பின் முன்னுரையில் இருக்கும் செந்திலின் சில வார்த்தைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். முக்கியமானது என நான் எண்ணிய சில பாத்திரங்கள் ஒன்றுமில்லாமல் போக திடீரென உருவான சில பாத்திரங்கள் கதையின் மையமாகிப் போன விஷயங்கள் இங்கே நிகழ்ந்து இருக்கின்றன. கதையை நான் எழுதினேன் என்பதை விட கதை தன்னைத்தானே எழுதிக் கொண்டது என்பதுதான் மிகச் சரியாக இருக்கும். இது எனக்கு ரொம்பப் பிடித்து இருக்கிறது. அப்புறம் கதைகளைப் பற்றி, முதல் கதையில் வாரும் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப நெருடலாக இருக்கிறது. கீழ்த்தரமான பழக்கங்களால் அவனுடைய உடலும் மனமும் சிதைந்து போயிருந்தன. இதில் "கீழ்த்தரமான" என்ற வார்த்தையை எப்படிப் பயன்படுத்தலாம்? ஆசிரியர் அதை தீர்மானிப்பது சரிதானா? அதேபோல கதையின் நாயகனின் பின்புலம் லாட்டரி மீது மோகம் கொண்டவன் என்பதாக இருக்கிறது. இதையும் கொஞ்சம் மாற்றி இருக்கலாம். இரண்டாம் கதையான கிளைகளில் இருந்து கூட இதே போல வர்ணனைகளின் மீது மட்டுமே கவனம் கொள்வதாக எனக்குப் படுகிறது. தொகுப்பின் தலைப்புக் கதையான இரவுக்காட்சி எனக்கு ரொம்பப் பிடித்து இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சில நெருடல்கள் தவிர்த்து இது எனக்கு ரொம்பவும் பிடித்த தொகுப்பாக இருக்கிறது"

கே.என்.செந்தில் - "என்னைப் பொறுத்தவரை ஆசிரியர் எதையும் தீர்மானம் செய்வதில்லை. அது அந்த கதாபாத்திரம் உணரக் கூடிய உணர்வு மட்டுமே. பெண்கள், சுயமைதுனம் எனத் தன் உடம்பை அழித்துக் கொண்ட ஒருவன் தன்னைப் பற்றி தானே சொல்லும்போது இருக்கக் கூடிய குற்றவுணர்வை மட்டுமே அங்கே பார்க்க முடியும். மற்றபடி கதைக்குத் தேவையான வர்ணனைகள், சூழலை விளக்க கண்டிப்பாகத் தேவை என நான் நம்புகிறேன்."

பா.திருச்செந்தாழை - "இன்றைக்கு எழுதப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் என இரண்டு விஷயங்களை மட்டுமே என்னால் சொல்ல முடியும். அது criminality மற்றும் sexuality. அதிலும் குறிப்பாக பாலுணர்வு சார்ந்து இயங்கும்போது ஒரு மனிதனுக்கு வரக்கூடிய அடிப்படை உணர்வுகளையும், குற்ற மனப்பான்மையும் பதிவு செய்வதுதான் முக்கியம் என நான் நம்புகிறேன். ஏன் என்றால் இவை தவிர்த்து எழுதப்படும் மற்ற விஷயங்கள் எல்லாமே காலாவதியாகி விட்டன. அன்பு, கருணை என்று அதை எல்லாம் மீண்டும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது என்பது வெறும் பாவனையாகவே இருக்கக் கூடும்.."

சமயவேல் - "எதை எழுதுவது என்பது பற்றிய இன்றைய படைப்பாளிகளுக்கு இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சினை முன்னோடிகளின் சாதனைதான். சிறுகதைகளின் அத்தனை சாத்தியங்களையும் அவர்கள் முயற்சி செய்து பார்த்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. எனவே இன்றைக்கு எழுதும்போது எந்த சூழலிலும் அவர்களுடைய சாயல் என்பது வந்து விடக் கூடாது என்பதில் இளம் தலைமுறையினர் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. அதேபோல செந்தாழை சொன்னது ஒரு முக்கியமான விஷயம். குற்றமும் பாலியலும் இன்றைக்கு பெரும்பாலான கவனத்தைப் பெற முடிகிறதென்றால் அதற்குக் காரணம் நம்மால் அத்தோடு நம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது என்பதால்தான்... இதுதான் எழுத வேண்டும் என்று யாராலும் அருதியிட்டுச் சொல்ல முடியாது.."

கே.என்.செந்தில் - "இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டுமானால் மூத்த படைப்பாளிகளை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பதையே நான் தீர்வாக சொல்லுவேன். என்ன எழுதி இருக்கிறார்கள் என்பது தெரிந்தால் மட்டுமே நமக்கான இலக்கு எது என்பதை நாம் தீர்மானம் செய்ய முடியும்.."

ஹவி - "அகச்சிக்கல்கள் பற்றி இங்கே எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதால் இதை நான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு மனிதனுக்கு அவனுடைய உடல் மட்டுமே சிக்கலான ஒன்றாக இருக்குமா என்றால் கண்டிப்பாகக் கிடையாது என்றே நான் சொல்லுவேன். நாம் வாழும் இந்த சமூகத்தில் எத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன? அவற்றோடு இணைந்துதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும்போது அவை எப்படி நம்மை பாதிக்காமல் இருக்க முடியும்? உலகமயமாக்கல், அது சார்ந்த பிரச்சினைகள் என்று நிறைய பேசுகிறோம். நிறைய இழந்து விட்டோம் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் பெருநகரத்தின் இன்னொரு முகத்தை நாம் ஏன் பதிவு செய்ய மறுக்கிறோம். சென்னையில் ஒரு மின்தொடர்வண்டியில் நானும் என் மனைவியும் போய்க் கொண்டிருந்தோம். திடீரென என் மனைவிக்கு அடக்க முடியாத இருமல். எதிரே அமர்ந்து இருந்த மனிதர் சட்டென தன் கையில் இருந்த மினரல் வாட்டர் பாட்டிலைக் கொடுத்து குடிக்கச் சொன்னார். திருப்பிக் கொடுத்தபோது கூட நான் இறங்கி விடுவேன் உங்களுக்கு உதவும் வைத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி இறங்கிப் போய் விட்டார். இப்படியான மனிதர்களும் நகரத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை நாம் ஏன் பேசாமல் புலம்ப மட்டுமே செய்கிறோம்? இப்போது தொகுப்பை முன்வைத்து, கே.ஏன்.செந்திலுடைய கதைகள் நேர்மையாக இருக்கின்றனவா? தனக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் சொல்லிடும் முனைப்பு அவரிடம் இருக்கிறது. ஒரு ஏழு வயது பையனைப் பற்றிக் கதை சொல்லும்போது அங்கே அந்த சிறுவனுடைய மனநிலையில்தான் கதைஸ் சொல்ல வேண்டும். மாறாக எனக்கு அங்கே ஆசிரியரின் கொள்கைகளை எல்லாம் சிறுவனின் மீது அவர் இறக்கி வைப்பதாகப் படுகிறது. ஒருவனைத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள். அப்போது அவன் என்ன மாதிரி எல்லாம் சிந்திக்க முடியும்? போகும் வழியில் செந்தில் உண்டாகும் பிம்பங்களை எல்லாம் என்னால் துல்லியமாக கவனிக்க முடிவதில்லை.. எதற்காக இத்தனை சிதறல்கள்? கேன்வாஸ் பெரிதாக இருக்கிறது என்பதற்காக அத்தனை விஷயங்களையும் உள்ளே கொண்டு வந்து விடவேண்டும் என்பது அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன்.."

கா.பா - நான் கே.என்.செந்திலுடைய மூன்று கதைகளை மட்டுமே வாசித்து இருக்கிறேன். கதவு எண், கிளைகளில் இருந்து, மேய்ப்பர்கள்.. இவற்றை முன்வைத்தே உரையாட விரும்புகிறேன். கதைகள் சொல்லும் கதைகள் உண்டு, அதே போல கதை சொல்லாத கதைகளும் உண்டு. இதில் கே.என்.செந்தில் இரண்டாம் வகையைச் சார்ந்து கதையல்லாத கதைகளைப் பேசுவதாகவே நான் நம்புகிறேன். கதை சொல்லி என்று சொல்லுவதை விட அவரை ஒரு தேர்ந்த சித்திரக்காரர் எனச் சொல்லலாம். சூழலையும் மனிதர்களையும் வர்ணித்துப் போகும் இடங்களில் அவர் அருமையான நேரனுபவத்தைத் தரக்கூடிய சித்திரங்களை உருவாக்குகிறார். முதல் கதையான கதவு எண்ணில் ஒரு மனிதன் மூத்திர சந்தின் உள்நுழைந்து போகிறான். இதை வாசிக்கும்போது நான் என்னமோ அந்தத் தெருவுக்குள் நடந்து போவதைப் போன்ற ஒரு அருவெருப்பையும் அசூயையும் என்னால் உணர முடிந்தது. அதுவே அந்த எழுத்துகளின் வெற்றி. ஹவி சொன்ன சில விஷயங்களில் எனக்குக் கருத்து வேறுபாடும் உண்டு. ஒரே கேன்வாசுக்குள் பல விஷயங்களை சொல்லித்தான் ஆக வேண்டுமா? கண்டிப்பாக... ஏன் என்றால் அங்கேதான் வாசகன் சிந்திப்பதற்கான ஒரு வெளி உண்டாகிறது. இதை நீங்கள் கிளைகளில் இருந்து கதையில் நன்கு உணரலாம். சில மனிதர்கள், அவர்களைப் பற்றிய சில தகவல்கள் என சொல்லிக் கொண்டே கதை வேறு இடங்களுக்கு நகர்ந்து போய் விடுகிறது. அதன் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்? அதை வாசகர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறான் கதை சொல்லி. கடைசி கதையான மேய்ப்பர்கள் விளிம்பு நிலை மனிதர்களின் யதார்த்த வாழ்க்கையை பேசிப் போகிறது. குற்றவுணர்வை ஏற்படுத்தாத காமம் இந்தக் கதையில் கொண்டாட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது. ஆக எனக்கு செந்தில் கதையுலகம் ரொம்பவே பிடித்து இருக்கிறது.

ஹவி: நண்பர் சொன்ன விஷயத்தை என்னால் சற்றும் ஒத்துக் கொள்ள முடியாது. கதை சொல்லாத கதைகள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வர்ணனைகள், சித்திரங்கள் எனப் பேசுவதெல்லாம் சரிதான். ஆனால் நாம் எதற்காக சிறுகதைகள் எழுதுகிறோம்? ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்வதற்காக.. அதைச் செய்யவில்லை என்றால் மற்ற எல்லாம் வீணாகிப் போய் விடும். ஆக கதை என்கிற அடிநாதம் ரொம்ப முக்கியமானது. கண்டிப்பாக எழுத்தாளனுக்கு என ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய எல்லா விஷயங்களையும் நம்மை பாதிக்கிற சங்கடங்களையும் நாம் கண்டிப்பாக பதிவு செய்யும்போது அதற்கு நேர்மையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இன்றைய கண்காணிக்கப்படும் சூழலிலும் இதை நாம் தீவிரமாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதை விடுத்து வெறும் தகவகழி மட்டும் சொல்லிப் போவது சரி கிடையாது என்றே நம்புகிறேன்.

கே.என்.செந்தில் - பொதுவாக என்னுடைய கதைகள் ஒரு நேரடி அனுபவத்தைத் தருவதாக நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதையேதான் இந்த நண்பரும் சொன்னார். ஆனால் ஹவி சொன்னதுபோல நான் எந்த இடத்திலும் என்னுடைய கொள்கைகளை என் பாத்திரங்களின் மீது திணிக்க முயற்சிப்பதில்லை. அதைப் போலவே தான் தகவல்கள் அதிகம் என்பது பற்றிய குற்றச்சாட்டும். இது கதைக்குத் தேவை என நான் நம்புவதை மட்டுமே எழுதி வருகிறேன்.

இந்திரா - எனக்கு உங்களுடைய இரவுக்காட்சி கதை ரொம்பப் பிடித்து இருந்தது. ஆனால் ஒரு சில இடங்களில் காமம் சார்ந்து எழுதும்போது சில நெருடல்கள் இருக்கின்றன. நண்பர் ஒருவர் சொன்னார் காமம் கொண்டாட்டமாக வெளிப்படுகிறது என்று. அவன் ஒரு கூலித் தொழிலாளி. மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள். இந்த மாதிரியான நேரத்தில் அவனால் எப்படி எந்த மனக்கிலேசமும் இல்லாமல் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது? மிருகங்கள் மட்டுமே அதுமாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடும். இது எல்லாம் தவிர்த்து மொத்தமாக உங்களின் தொகுப்பு எனக்கு பிடித்து இருக்கிறது.

கே.என்.செந்தில் - நான் முன்னரே சொன்னதுபோல கதைக்குத் தேவையானதையே நான் எழுதுகிறேன். காமம் என்பதை வலிந்து எழுத முயற்சிப்பதில்லை. அந்தக் கதாப்பாத்திரம் அந்த சூழலில் அவ்வாறே நண்டந்து கொள்ளும் எனக் கதைதான் தீர்மானிக்கிறது.

கதைகளில் இன்று உரையாடல்களைத் (dialogue) தவிர்த்து வர்ணனைகளின் மூலமாகக் கதை சொல்வது என்பது அதிகரித்து வருகிறது. இது சரிதானா என்ற கேள்வி கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. கதை சொல்லும் உத்தி என்னவாக இருந்தாலும் கதையை முன்னகர்த்தி செல்லவும் அடர்த்தியைக் கூட்டவும் உதவுமெனின் கண்டிப்பாக வர்ணனைகள் தேவையே என்பதை எல்லா படைப்பாளிகம் ஆமோதித்தனர். இதன் பின்பான உரையாடல் மற்றொரு கேள்வியை முன்வைத்து ஆரம்பித்தது.

பா.திருச்செந்தாழை - எல்லாரும் எழுதிய உலகத்தையே நாம் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறோம். இதை விடுத்து நாம் ஏன் இன்னொரு தளத்துக்கு நகரக் கூடாது? நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களின் மேல் நாம் ஏன் கவனம் கொள்வதில்லை? அவையும் நம் வாழ்வில் முக்கியப் பங்கு ஆற்றத்தானே செய்கின்றன? எளிதாகச் சொல்ல வேண்டுமானால், நமக்குப் பிடித்தமான ஒரு சட்டையைப் போட்டுக் கொள்ளும்போது அன்றைய நாள் முழுதும் சந்தோஷமாக உணருகிறோம். இது போல நிறைய.. ஆக பொருட்கள் நமக்கு ஏதோ ஒரு வகையில் சில உணர்வுகளை உண்டாக்கிப் போகின்றன அல்லவா.. ஏன் அவற்றைப் பற்றி நாம் பேசக் கூடாது?

கே.என.செந்தில் - பொருட்களை முன்னிறுத்தி கதைகள் எழுதுவதில் தவறில்லை. ஆனால் அவை உயிரற்றவை. அவை மனிதனால் பயனபடுத்தபடுகின்றன. ஆக சார்புநிலை என்று வரும்போது அங்கும் நாம் மனிதர்களைப் பற்றித்தான் பேச வேண்டி இருக்கிறது.

பா.திருச்செந்தாழை - நான் சொல்ல வருவதை இன்னும் கொஞ்சம் தெளிவாக்க முயலுகிறேன். வண்ணநிலவனின் மிருகம் எனக்கு ரொம்பப் பிடித்த கதை. நிறைய திறப்புகள் (opening) கொண்ட கதை சூழல். ஒரு மனிதன் அடுக்களைக்குள் நுழையும்போது எங்கும் சாம்பல் மணம் வீசியது என்கிற ஒரு வரி வரும். திறந்து கிடக்கும் வீட்டுக்கள் இருந்த புகைப்படங்கள் எல்லாமே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன என்கிற ஒரு இடமும் உண்டு. இங்கே உயிரற்ற அந்தப் பொருட்கள் நமக்குள் ஏற்படுத்தக் கூடிய அதிர்வுகளை நாம் கவனிக்க வேண்டும். அப்புறம் இன்னொரு கதை.. சமீபமாக எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது. ஆணி என்று நினைக்கிறேன். ஒரு சுவரில் இருக்கும் ஆணையைப் பற்றிய அவருடைய சிந்தனைகள். அவ்வளவேதான். இந்தக் கதையை எழுதும்போது, தன்னுடைய பொது எழுத்துலகை விட்டு வெளியேறி, வேறொரு தளத்தில் இயங்குவதன் மூலம் அவர் மிகுந்த ஆசுவாசத்தை உணர்ந்திருக்கக் கூடும் என நம்புகிறேன். எனவேதான் பொருட்களின் மீது இயங்கக் கூடிய இன்னொரு வெளியைப் பற்றி ஏன் யோசிக்கக் கூடாது என கேட்கிறேன்.

கே.என்.செந்தில் - நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் முப்பது வருடங்களுக்கு முன்பு வண்ணநிலவன் இந்தக் கதையை எழுதும்போது இந்த விஷயங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருப்பாரா என்றால் இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும். எழுதும் விஷயங்கள் பிற்காலத்தில் வாசகர்களாலேயே இன்னதென்று தீர்மானிக்கபடுகிறது. எனவே பொருட்கள் சார்ந்து எழுதுவதென்பது திட்டம் போட்டு செய்ய முடியாததாகவே இருக்கும். கதைக்குத் தேவையெனில் நாம் அந்த உத்தியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கா.பா- பொருட்கள் சார்ந்த கதை எனச் சொல்லும்போது எனக்கு ஜி.முருகனின் காண்டாமிருகம் ஞாபகத்துக்கு வருகிறது. அது ஒரு உண்டியல். திடீர் தித்தர் என காணாமல் போய் மீண்டும் கிடைக்கிறது. கிட்டத்தட்ட வாசகனோடு ஒரு விளையாட்டாக இந்தக் கதையை அவர் எழுதி இருக்கிறார். உயிரற்ற அந்த பொருள் மொத்தக் கதையயும் தாங்கிப் பிடிக்கிறது என்பதை நாம் கண்டுகொள்ளலாம். ஆகவே கதையின் தேவை குறித்தே பொருட்களின் மீதான கவனம் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

அதன் பிறகும் அங்கங்கே அலைந்து திரிந்து இறுதியாக உரையாடல் முடிவுக்கு வந்தது. ஆக மொத்தத்தில் அருமையானதொரு நிகழ்வு. பா.திருச்செந்தாழை ஒருவர் மட்டுமே செந்திலின் கதையுலகம் பற்றிய கட்டுரை எழுதி வந்து வாசித்தார் என்பது ஒரு சிறு குறை. இன்னும் மூன்று நான்கு கட்டுரைகளாவது வாசிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதையே கே.என்.செந்திலும் தன் நன்றியுரையில் குறிப்பிட்டார். அதே போல நிறைய விஷயங்கள் பொதுவாக பேசப்பட்டன. அப்படி இல்லாது படைப்பாளியின் படைப்புலகை முன்னிறுத்தி பேசுவது இன்னும் இந்த சந்திப்புகள் காத்திரமாக அமைய உதவக்கூடும். நிகழ்வை சாத்தியமாக்கிய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

நன்றி: கார்த்திகை பாண்டியன், திருச்செந்தாழை, ஸ்ரீசங்கர்.