Thursday, November 6, 2014

செல்ல வேண்டிய தூரம்


செல்ல வேண்டிய தூரம்   

                                      
                    
                  “உண்மையின் சிறுகீற்றுகூட பரவசம் ஊட்டக் கூடியதுஎன்று எழுதிய படைப்பாளி சுந்தர ராமசாமி. அடிப்படையில் இளைய தலைமுறை என்பது வயதை அடிப்படையாகக் கொண்டதா அல்லது எழுதவந்த காலத்தைப் பின்னணியாகக் கொண்டதா? ஜோசே சரமாகு பற்றிய அஞ்சலிக் கட்டுரையை (காலச்சுவடு இதழ் - 128, ஆகஸ்டு 2010) படித்தபின் தோன்றிய குழப்பம் இது. சரமாகு தன் 23ஆம் வயதில் முதல் நாவலை எழுதினார். ஆனால் அப்பயணம் தொடரவில்லை. வெவ்வேறு பணிகளைச் செய்தபின் தன் 57ஆம் வயதில் முழுநேர எழுத்தாளராகி உலகப்புகழ் பெற்றார். அப்படியெனில் அவர் இளைய தலைமுறையா? காசியபனின் அசடுஅவரது ஐம்பதையொட்டிய வயதில் வெளியாயிற்று. பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றைஇப்போதுதான் வந்தது. நாவல் உலகில் இவர்களை இளைய தலைமுறை என அழைக்கலாமா? 23 வயது சரமாகுவுக்கும் 57 வயது சரமாகுவுக்கும் இடையேயுள்ள அனுபவத்தின் இடைவெளி, வாசிப்பு சார்ந்த இடைவெளி மிக நீண்டது. அனுபவத்தைச் சூட்சுமமாக அணுகும் முறையில், நுட்பத்தில் வித்தியாசம் இருக்கிறது. எனவே வயதை அடிப்படையாகக் கொண்ட இந்த அமர்வைத் தொடரலாம். சுரா என் ஆசான் (ஆசான் என்ற பதத்தை அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றாலும்) என் நண்பர். இலக்கியத்திற்கும் எனக்கும் உள்ள உறவும் ஜே. ஜேக்கும் எனக்கும் உள்ள உறவும் வெவ்வேறானவை அல்ல. அது அளித்த கேள்விகளிலிருந்து, அது தொடங்கி வைத்த புள்ளியிலிருந்து ஒரு கோடு இழுக்கக் கூடுமானால் அது இம் மேடையில் நான் வந்துநிற்பதில் முடியும். இந்த அமர்வைப் பகிர்ந்துகொள்ளும் நண்பர்களுக்கு இல்லாத கூடுதல் தகுதி எனக்குள்ளது. சுராவிடம் நேர் பரிச்சயமும் கடிதத் தொடர்பும் கொண்ட அவரது இளம் வயது நண்பன் நான்.

                                             சு.ரா, ஜே. ஜேவின் பாஷையை சவரக்கத்தி என்று சொல்வார். சுராவின் பாஷைக்கும் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய உவமை அது. ஒரு காலகட்டத்தின் ரசனையை உருவாக்கிய ஆளுமை சுராவினுடையது. அப்போது இலக்கியம் சார்ந்து எழுந்த விவாதங்களிலும் தனிப்பட்ட தன் எழுத்திலும் தன் வாசிப்பு சார்ந்து கூறிய சொற்களின் ஊடே அந்த ரசனை இங்கு உருவாகி உறுதிப்பட்டது. அந்த ரசனையை அவர் கோட்பாடுகள் சார்ந்து அணுகவில்லை. மேற்கிலிருந்து கடன்பெற்று, மேற்குச் சிந்தனையாளர்களின் வாக்கியங்களைப் பயன்படுத்தி அதை அவர் விளக்கவும் இல்லை. அதற்கு உதாரணமாக மொழியில் அழகுணர்ச்சியின் சுடரை ஏற்றிவைத்துக் கவித்துவச் சொல்லாட்சிகள்கொண்டு எழுதப்பட்ட ந. பிச்சமூர்த்தி பற்றிய விமர்சன நூல் உடனடியாக நினைவுக்கு வருகிறது. இது இளம் தலைமுறைக்கு அவர் சூசகமாக உணர்த்திச் சென்றிருக்கும் செய்தி என்றே கருதுகிறேன்.

  

                                               எழுத்தாளன் புனைவுவெளிகளிலிருந்து சமூக விமர்சனத்துக்கு வந்துசேர வேண்டும் என்று சுரா விரும்பினார். எழுதுவதோடு தன்பணி முடிந்தது எனும் எண்ணமின்றி பல்வேறு தளங்களை நோக்கி அவரது அக்கறைகள் விரிந்தன. பொதுவெளியில் நிகழும் அவலங்களுக்கும் கொடுமைகளுக்கும் படைப்பாளி எதிர்வினை புரியவேண்டும் என்றும் அதற்கெதிராகக் குரல் எழுப்ப வேண்டும் என்றும் அக்குரலைச் செவிமடுக்கும் ஆரோக்கியமான சூழல் நிலவ வேண்டும் என்றும் எழுதியும் பேசியும் வந்திருக்கிறார். மகாமகப் படுகொலைக்கு எதிரான அவரது குரலையும் தூக்குத் தண்டனைக்கு எதிரான அவரது சிந்தனையையும் தமிழகக் கல்வி பற்றிய நூலையும் இந்தத் தளத்தில் வைத்தே பார்க்கிறேன். அவ்வாறு நோக்கும்போது சமீபத்தில் ஈழத்தில் நிகழ்ந்த பேரழிவிற்கு எழுத்தாளர்கள் ஆற்றிய எதிர்வினையை நாம் நினைவுபடுத்திக் கொள்ளும்போது ஒரு சங்கடமான மௌனத்திற்குள் சென்று நாம் தாழிட்டுக் கொள்ள வேண்டி வரும். மேலும் தமிழ்ச் சூழலில் மாற்றங்கள் நிகழவிடாமல் தடுக்கும் அரசியல், சினிமா, வணிக இலக்கியம், ஊடகங்கள், பொறுப்பற்ற ஆசிரிய வர்க்கம் போன்றவற்றை அவர் இறுதிவரை கடுமையாக விமர்சித்து வந்தார். இன்றோ இவை அனைத்திலும் சிற்றிதழாளர்கள், படைப்பாளிகள் பங்களித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை இளம் எழுத்தாளர்களான நாங்கள் மிக நேர்மையாக அணுக வேண்டும் என்று கூறிக்கொள்கிறேன். சுராவின் மதிப்பீடுகளை ஒருவர் ஏற்பதோ மறுப்பதோ அவரவரது தனிப்பட்ட தேர்வு சார்ந்தது. ஆனால் இதைப் பரிசீலனை செய்தேனும் பார்க்க வேண்டும்.


                                                    நெருக்கடியும் தத்தளிப்பும் கொண்டவனுக்கே படைப்புத் தொழிலில் நீண்டபயணம் உள்ளதாக சுரா கூறிவந்திருக்கிறார். அவரது படைப்புலகம் நமக்கு உணர்த்துவதும் இதைத்தான்.உள்ளுணர்வின் தூண்டுதல் இன்றி அவர் ஒருவரியைக்கூட எழுதவில்லை. அதுபோலவே அவர் தன் வாழ்நாளின் அனுபவங்களை உட்செரித்து வெளிப்படும் படைப்புகளையே முன்னிலைப் படுத்தி வந்திருக்கிறார். படைப்பில் அனுபவங்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்திற்கு அது தமிழ் வாழ்க்கை சார்ந்த விமர்சனத்திற்குக் கூர்மையை அளிக்கும் எனக் கருதியது காரணமாக இருக்கக் கூடும். இப்பின்னணியில் வைத்தே இமயத்தின் கோவேறு கழுதைகள்நாவலையும், யூமா. வாசுகியின் ரத்த உறவுநாவலையும் அவர் முக்கியமான ஆக்கம் என்று எழுதினார் என நினைக்கிறேன். மேலும் சுரா கொண்டிருந்த தீவிரமான பல தளங்களிலான வாசிப்பு அவர் படைப்புசார்ந்து கொண்டிருந்த கனவு போன்றவை எந்தத் தலைமுறையைச் சார்ந்த எழுத்தாளனையும் உசுப்பக் கூடியவை.

   

                                                         மொழியை அவரளவிற்கு நவீனப்படுத்திய படைப்பாளர்கள் குறைவு. எனவேதான் படைப்பில் புதிய இடங்களை நோக்கிச் செல்லவேண்டும் எனும் முனைப்பை எப்போதும் கொண்டிருந்தார். சுரா தன் இறுதிப் பத்தாண்டுகளில் படைப்பாக்கத்தில் காட்டிய வேகம், அவரது உழைப்பு முன்னு தாரணம் அற்றது. முழுநேர எழுத்தாளனாக வேண்டும் என எழுதத் தொடங்கிய வயதில் இருந்தே கொண்டிருந்த ஆசையை தன் அறுபதுகளின் மத்தியில்தான் அவரால் அடைய முடிந்திருக்கிறது. எனவேதான் கனவையும் பணியையும் முடுக்கிவிட்டிருந்திருக்கிறார். சி.சு. செல்லப்பாவை இவ்வாறு கூறலாம் என்றாலும், அவர் சுராவைப் போல விமர்சனப் போர்வையில் வந்த தார்மீகமற்ற அவதூறுகளையும் காழ்ப்புகளையும் சந்தித்தவரல்ல. ஆனால் சுரா தன்மீது கூறப்பட்ட எந்த உள்நோக்கம் கொண்ட விமர் சனங்களுக்கும் பதில் சொல்லவில்லை; மாறாக வாசித்துக் கொண்டி ருந்தார். படைப்புசார்ந்து தன் கனவை வளர்த்துக் கொண்டிருந்தார். பிள்ளை கெடுத்தாள் விளைசிறுகதையை யொட்டி இங்கு வெளியான பல்வேறு விமர்சனங்களுக்கு அவர் பதில் கூறாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவிலிருந்த அவருக்கு மின்னஞ்சலில் கடிதம் எழுதினேன். ‘‘கதை அதன் உள்பலத்தில் நிற்க வேண்டும். ஜே. ஜேக்கு இதுபோல ஐம்பதுக்கும் மேற்பட்ட வசைகள் வந்தும் எதற்கும் நான் பதில் கூறவில்லைஎன்று எழுதினார்.


              

                     புதிய எழுத்தாளர்களை அவரளவிற்கு ஊக்குவித்த படைப்பாளிகள் வெகுசிலரே. அவர் காது உடையவர். ஒரு ஆரம்பகட்ட வாசகன் அவரைச் சந்தித்து - அவரைப் படிப்பவர்கள் அனைவருக்குமே அவரைச் சந்திக்க வேண்டும் எனத் தோன்றிவிடும் - உரையாடும்போது அவனைப் பயமுறுத்தாமல் மிக இங்கிதமாகக் குறுக்கிட்டு அவனைத் தன் நேசத்தினால் அணைத்துக் கொள்பவர் அவர். இது ஒரு படைப்பாளிக்கு இருக்கவேண்டிய அடிப்படைக் குணம் என்று நினைக்கிறேன். அவரது உரையொன்றில் வரும் வாசகங்கள் இளம் தலைமுறைக்கானது என்றே நம்புகிறேன். ‘‘மீற விரும்புகிறாயா? மீறு! தாண்டிச் செல்ல விரும்புகிறாயா? தாண்டிச் செல்! பழைய பொருட்களை அழிக்க விரும்புகிறாயா? அழி! புதிய பொருளை புகுத்த விரும்புகிறாயா? புகுத்து!’’ படைப்பில் புதுமையை எப்போதும் விரும்பும் மனதால் மட்டுமே இவ்வாறு பேசமுடியும்.

                                 ‘ஜே.ஜேயில் சம்பத் காணும் கனவை இங்கு நினைவுறுத்த விரும்புகிறேன். ‘‘நான்தான் அழிந்து இருக்கிறேனே தவிர என் கனவுகள் அழியவில்லை. அவை ஒருநாளும் அழியா. மற்றொரு ஜீவன் இதே கனவுகளைச் சூலுற்றுப் பேணி வளர்த்து அவற்றை இந்த மண்ணில் அர்ப்பணித்து அவற் றைச் செம்மைப்படுத்தி தன்னையும் விகசித்துக் கொள்ளும்.

                             அக்கனவை மேலெடுத்துச் சென்றுகாரியங்கள்ஆற்று வோம் எனும் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்கிறேன்.


(கன்னியாகுமரியில் 03.06.2011 அன்று நடந்த சுரா-80 நிகழ்வில் இளம் படைப்பாளிகள் அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

(நன்றி : காலச்சுவடு அக்டோபர் 2014)