Monday, May 13, 2024

ஒரு சிறிய விஷயம்


ஒரு சிறிய விஷயம் 


ஷட்டர்கள் இழுத்து மூடப்படும் வேகம் அபாயகரமாக இருந்தது. அது தரையில் அடித்து மோதும் ஓசை சம்மட்டியால் அடித்தது போல நிலம் அதிர்ந்து தூசும் குப்பைகளும் பறந்தன. கலவரம் மூள்வதற்கான மேக மூட்டங்கள் திரண்டு கொண்டிருந்தன. தப்பிச் செல்வதற்கான வழிகள் தோறும் வாகனங்களின் அணிவகுப்பு அனுமன் வால் போல முடிவுறாது நீண்டிருந்தது. கூட்டாக எழுந்த ஹாரன்களின் பேரிரைச்சலிலும் ஓலத்திலும் கர்ப்பம் கலைந்து விடும் என்று தோன்றியதுஇன்னும் ஜனத்திரளிடம் கட்டுப்பாடு ஒட்டிக் கொண்டிருப்பதாலேயே அத்தனை களேபரங்களுக்கிடையிலும் தனிச்சொத்துகளை பொதுச்சொத்தாக கருதும் மனோபாவம் அவர்களிடம்  குடியேறியிருக்கவில்லலை. 




அந்த மடை திறந்து விட்டால் கொள்ளைகளும் சூறையாடல்களும் விழா போல நிகழ ஆரம்பித்து விடும். சிதறடிக்கப்பட்ட ஆட்கள் திறந்திருந்தவற்றிலெல்லாம் தஞ்சம் கோரி அடைந்து கொண்டனர். தடையரணுக்கு போட்டு வைத்திருந்த பேரிகார்டுகள் குப்புறக்கிடந்தன அல்லது ஓரமாக எறியப்பட்டிருந்தன. வேறு வேறு நிறங்களை பூசிக் கொண்ட வதந்தி ஒவ்வொருவர் வாயிலும் அரைபட்டு புதிய ஜோடனைகளுடனும் வக்கனைகளுடனும் இன்னொருவர் காதுக்கு பரிமாறப்பட்டது. அது விபரீதத்தை தணிப்பதற்கு பதிலாக அதன் மீது நெருப்புக் குச்சிகளை வீசியது போலாயிற்று. நடந்தவற்றை துல்லியமாக யாரேனும் விளக்கத் தலைப்பட்டால் அவர்களை அறியாமலேயே அதற்குள் எப்படியோ புனைச்சுருட்டுகளும் சேர்ந்து கொண்டன.

 

பிரச்சாரத்திற்கு வந்த எதிர்கட்சி பிரமுகர் கூறிய அவதூறுக்கு (அது உண்மை என்பதில் உறுதியாக இருந்தார்) மேடையின் கீழேயிருந்து கடும் கோபத்துடன் சான்று கேட்ட ஆளுங்கட்சி புள்ளியால் வந்த வினை இவ்வளவும் என்று சொல்லப்பட்டது. அவர் வழமை போல திருப்பி சவடால் விட்டிருக்கலாம். இவரும் தன் தரப்புக்கு எகிறி இருந்தால் அங்கேயே பைசல் ஆகியிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. உக்கிரமான வெயிலில் திரிந்து கொண்டிருந்த அந்த எதிரணி பிரமுகருக்கு இவரது கோபம் சுருக்கென்று தைத்து விட்டது.  இது ஒரு பதிலடி மட்டுமே. ஏனெனில்  இரண்டு தினங்களுக்கு முன் ஆளுங்கட்சியின் வேட்பாளர் வேனை மறித்து கேள்விகளை அடுக்கி திக்குமுக்காட செய்த எதிர் தரப்பு சிக்குவதற்கு சமயம் பார்த்துக் காத்திருந்தவர்களில் ஒருவனது எதிர்வினை. தன் எரிச்சலாலும் கோபத்தாலும் அந்தச் சான்று கேட்டதோடு நிற்காமல் சம்பந்தப்பட்டவரின் யோக்யதையை ஏலம் விட்டு சிரித்த பிறகு ஒரு வசவையும் சேர்த்து உதிர்த்து விட்டான்.  தன்னுடன் வந்தவர்கள் அதற்கு கைதட்டும்படி செய்தான்.  

 

மைக்கைப் பிடித்து நின்ற பிரமுகருக்கு அது சரியாக காதில் விழவில்லை. வாகன ஒட்டுனரை குனிந்து கேட்டார். அவனுக்கும் கேட்டிருக்கவில்லை. போகட்டும் என தன் குறிப்பில் அடுத்திருப்பதை பேச வாயெடுப்பதற்குள் வேனை கவிழ்த்து விடும் ஆக்ரோஷத்துடன் அவரிடம் ஏதோவொன்றை சொல்ல உலுக்கியபடி ஒருவன் துடித்துக் கொணடிருந்தான். கட்சித் துண்டு போட்டிருந்ததால் மேலே வரச் சொன்னார். ஒரே தெருவைச் சேர்ந்த அந்த புள்ளி மீதிருந்த பகையைத் தீர்த்துக் கொள்ள கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிட தயாரில்லை. அவர் காதிற்குள் சில வினாடிகள் வாயை விட்டு எடுத்தான். முகம் இருண்டது. அவர் பிறப்பை சந்தேகிக்கும் வசவு அது. கண் ஜாடை காட்டினார். அந்த ஆளுங்கட்சிக்காரர் சுற்றி வளைக்கப்பட்டார். ஒரு சந்திற்குள் இழுத்துச் செல்லப்படும் போது வேன் மீது ஒரு பிய்ந்த செருப்பு வந்து விழுந்தது. மறுநிமிடமே இழுத்துச் செல்லப்படுபவன் மீது இன்னொரு செருப்பு.  

சற்றுமுன் கூட நிதானமாக பறந்து திரிந்த அந்த இடம் ஒரே நிமிடத்தில் யானை புகுந்த கடையென ஆயிற்று. இரண்டே காவலர்கள் செய்வதறியாது திகைத்து நின்று களத்தில் இறங்குவதற்குள் ஒவ்வொருவனுக்குள் நான்கு பேர் புகுந்தது போல பலம் வந்து விட்டிருந்தது. நெருப்பு பற்றிய வீட்டில் எங்கு போய் பதுங்குவது? இருவரும் சில நிமிடங்கள் எறிந்து கொண்ட கற்களால் சில வாகனங்களும்  கடைக்கண்ணாடிகளும் நொறுங்கும் ஒலி கேட்டதும் ஜனங்களுக்குள் பீதி பரவியது. கற்களொடு தான் அலைகிறார்களா? அதற்குள் எப்படி இத்தனை கற்களும் ஆயுதங்களும் வந்தன..! 


ஜனங்கள்  கால்களில் றெக்கை முளைத்தது போல பறந்தாலும் ஒதுங்க போக்கிடம் வேண்டுமே..! ஒரு சாதாரண செய்தி எப்படி திரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது என்பதை அவர்கள் கண்டார்கள். பத்தே நிமிடத்தில் அந்த செருப்பு கத்தியாக மாற்றப்பட்டு விட்டது. வெறுமனே இழுத்து செல்லப்பட்டவரின் மண்டை உடைந்து அபரிமிதமாக ரத்தம் வெளியேறியதாக உருமாறியது. அரைமணி நேரத்திலேயே அந்த கத்தியால் எதிர்கட்சி பிரமுகரின்  கழுத்துப் பகுதி கீறப்பட்டதாகவும் அதற்குள் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது என்றும் ஒருவர் நேரில் பார்த்தவரே தோற்கும் தொனியில் விளக்கிக் கொண்டிருந்தார். அவர் நிறுத்தியதும் மற்றொருவர் , அந்த கல்லடி பட்டவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார், பிழைப்பது கடினம் என உறுதியாகச் சொன்னார். காக்கிகள் பேதம் பார்க்காமல் லத்திகளின் பலத்தை கிடைக்கும் ஆட்கள் மீதெல்லாம் காட்டினர்.


அங்கு சிக்கிக் கொண்ட அதிகப்படியான ஜனங்களுக்குள் அதற்குள் சில குழுக்கள் உருவாகி வெவ்வேறு இடங்களில் பதுங்குவதும் தப்பித்து ஓடுவதுமாக திரிந்தனர். அதில் முக்கால்வாசிப்பேர் பணங்கொடுத்து கூட்டிக் கொண்டு வரப்பட்டவர்கள். இந்தக் கூட்டத்தை முடித்து விட்டு ஆளுங்கட்சியின் மாலை நேர பொதுக் கூட்டத்துக்கு செல்லும் திட்டத்துடன் வந்திறங்கி இருந்தனர். தலைக்கு இவ்வளவு என பேசியாகி விட்டது. இன்னும் கால்மணியில் பேச்சு முடிந்திருக்கும். பேசியதில் கூட்டி வந்த கட்சி ஆளுக்கு கமிஷன் போக கைக்கு வந்திருக்கும். அதற்குள் சகலமும் அலங்கோலமாகி விட்டது. தூரத்தில் சில கடைகள் கொழுந்து விட்டு எறிவதை இங்கிருந்தே பார்த்த பிறகு தான் நிலைமை அசாத்தியமாக மாறிவிட்டது கைமீறிச் சென்று விட்டது என்பதே அவர்களுக்கு உறைத்தது. கலவரக்காரர்களில் கட்சிக் குண்டர்களும் கலந்து விடப்பட்டிருந்தார்கள். கம்பித் தடுப்பு போட்ட வாகனத்தில் வந்திறங்கிய காவலர்கள்படை ரகளையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி கண்ணில் சிக்குவோரையெல்லாம் துவம்சம் செய்தது.  மேலிடத்திலிருந்து சரியான உத்தரவு இன்னும் வந்திருக்கவில்லை. சில பெண் காவலர்களிடம் குண்டர்களும் புல்லுருவிகளும் அத்துமீறுகிறார்கள் என்றும் சிலர் காக்கிகளை தாக்கி விட்டார்கள் என்றும் உயரதிகாரிக்கு தகவல் பறந்தது. பின்னர் தான் அடிகளின் கோலாகலம் ஆரம்பித்தது. அங்கு பால்பேதமே இல்லை. பயந்து, செல்லும் வழி தெரியாமல் நின்ற பெண்ணை மூர்க்கமாக அடித்தார். அவளது அலறல் ஊக்குவிக்கும் விதமாகவே கேட்டது, இன்னொரு பலத்த அடியில் அவளது முழங்கால் தனியாக ஆடிக் கொண்டிருந்தது. எழ முடியாது கிடந்தவளின் மீது சுமைமாடுகளை அடிப்பது போல விளாசினார். உயிர் போக எழுப்பிய ஓலம் கேட்பாறின்றி காற்றில் கலந்தது. அதைக் கண்டு ஓடும் சாக்கடைக்குள் பலரும் இறங்கி பதுங்கி அமர்ந்து கொண்டனர். குப்பை ட்ரம்களை கீழே கவிழ்த்துக் கொட்டி அதற்குள் இறங்கியும் சிலர் நடுங்கியபடி இருந்தனர். கடைகளை துல்லியமாக குறித்து வைக்கப்பட்டுக் கொண்டு தாக்குகிறார்கள் என்று தோன்றியது. யாரோ யாரையோ தரதரவென இழுத்துக் கொண்டு போவார்கள். பிறகு மயான அமைதி நிலவும். ஒவ்வொருவருக்குள்ளும் அடங்கிக்கிடந்த வெறிக்கும்  ஆவேசத்திற்கும் பகைக்கும் வடிகாலாக அந்த கலவரம் இருந்திருக்க வேண்டும். அரைமணிக்கு முன் தேனீர்கடையில் மிக சாதாரணமாக நின்று கொண்டிருந்த ஒருவன் ஒரு மரச்சாமான் கடைக்குள் புகுந்து ஆடிய தாண்டவம் அவனுக்குள் பிசாசு குடிகொண்டது போலிருந்தது. அவன் சட்டையெங்கும் ரத்தத் திட்டுகள். ஒரு பெண்மணி தன் கட்டைப்பைகள்  முழுக்கவும் காய்கறிகளை திணித்துக் கொண்டு முந்தாணையாலும் சுருட்டி எடுத்து சந்து சந்தாக புகுந்து போய்க் கொண்டிருந்தாள். சில துணிக்கடைகளின் ஆடைகள் சாலையில் எறியப்பட்டிருந்தன. இன்னும் சிலவற்றில் தீ எரிந்து புகைந்து கொண்டிருந்தது. நான்கு மணிநேரத்திற்கு பிறகு காவலர்களின் அணிவகுப்பு நடைபெற்ற போது தான் மறைந்தும் பதுங்கியும் இருந்தவர்கள் மெதுவாக வெளியே வந்தார்கள். மெதுவாக ஒவ்வொன்றாகக் கட்டுக்குள் வந்தது

 

நாளிதழ்கள் ஆறுகாலத்தில் செய்திகளை வெளியிட்டன.   அந்தத் தொகுதியில் இரு கட்சிகளுமே செல்வாக்கு இழந்த நிலையில் இந்தக் கலவரமே திட்டமிடப்பட்டது தான் என மாற்றுக்கட்சிகள் குற்றஞ்சாட்டின. எதிர்கட்சியின் தேர்தல் நாடகம் இது என ஆளும்தரப்பும் தங்களை களத்தில் சந்திக்க முடியாத கோழைகளின் சதி என எதிர்கட்சியும் அறிக்கைகள் வெளியிட்டன. தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அந்தக் கலவரத்தில் உயிரிழந்த மூன்று குடும்பத்திற்கும் அரசு தலா இரண்டு லட்சம் அறிவித்தது. காயமடைந்தவர்களுக்குரிய நிவாரணம் போதாது என முறையீடு எழுந்தது.

 

அதில் ஒரு வார பத்திரிகை இறந்தவர்களின் குடும்பத்தை பேட்டி கண்டு வெளியிட்டிருந்தது. தன் மகளுக்கு திருமண பத்திரிகை கொடுக்க வந்தவர் (குடும்பத்தில் ஒரே வருவாய் இவர் தான்), கல்லூரிக்கு விண்ணப்பித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த மாணவன், பிறந்த நாளுக்கு உடை எடுக்க வந்த ஒரு பெண். இம்மூவரின் பின்னணிகளை விளக்கி விரிவான அட்டைப்படக் கட்டுரையை மற்றொரு இதழ் கொண்டு வந்தது. அந்த இரு கட்சிகளின் ஆட்களும் தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தனர். ஆன போதும் சில அமைப்புகள் அவற்றின் தீவிரத்தை மழுங்கடிக்காமல் போராட்டத்தை அறிவித்தன. மக்களிடம் கொந்தளிப்பு உருவாகியது. எங்கும் அநீதிக்கு எதிரான விவாதங்கள், பேச்சுகள் பரவின. அந்த குடும்ப அங்கத்தினர்களுக்கு கட்சி முத்திரை குத்தும் அசிங்கங்கள் மக்களிடம் எடுபடவில்லை. இரு தரப்புமே போட்டி போட்டு குற்றஞ்சாட்டிக் கொண்டாலும் அவற்றை நம்ப எவரும் தயாராக இருக்கவில்லை.

நான்காவது நாள் உளவுத்துறை சினிமாவில் புகழ்பெற்ற ஒருவரின் அந்தரங்கக் கிசுகிசுவை அவிழ்த்து விட்டது. அதையொட்டி சில கானொலிகள் பரப்பட்டன. உடல்களின் கொண்டாட்டம். மாநிலமே அந்தக் கிசுகிசுவை கொண்டாடியும் உமிழ்ந்தும் பரபரப்பாகி விட்டது. இக்கானொலிகள் அந்த கலவர நேரத்தில் பரவிய வதந்தியை விட முனைப்புடனும் அதிவேகத்துடனும் பரவின. ’ச்சீய்..ச்சீய்..’ என்றபடியே குதூகலம் பொங்க மொத்த உடலும் கண்களாக அவற்றை பார்த்து தீர்த்தனர்.

அங்கு தேர்தல் தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டது. இன்னொரு திருவிழாவுக்கு மக்கள் பூரிப்புடன் தயாராகினர். முன்னர் கொடுத்த பணம் போக இந்த முறையும் பணம் தரப்படும் என்ற செய்தி அவர்களை தரையில் நடக்க விடவில்லை. இந்த முறையும் ஏதாவது நடந்து தள்ளிப்போய்விட்டால் எப்படி இருக்கும் என ஆவலுடன் பேருந்தில் ஒருவன் சந்தோஷக்கூக்குரலுடன் கேட்ட போது அவனுக்கு ஏகோபித்த ஆதரவு போல புன்னகைகளும் ஆமோதிப்புகளும் கிடைத்தன. ஒரு அம்மா அந்த பேருந்து முழுக்கவுமே ஒவ்வொரு ஆட்களின் முகங்களையும் யாரயோ தேடுவது போல மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே  இருந்தாள். ஒரு சொல்லும் பேசவில்லை. பிறந்த நாளுக்கு ஆடை எடுக்க சென்று பாதி எரிந்த நிலையில் போராடி இரண்டாம் நாள் மரித்துப்போனவளின் அம்மா அவள். கைகளுக்குள் கசங்கி அழுக்கேறிய மகளின் புகைப்படம் இருந்தது. அன்று தான் மகளுக்கு பிறந்த நாள்.  அடக்க முடியாமல் முன் சீட்டில் குனிந்து தேம்பி உடைந்து அழுதாள். அவளுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. பேருந்தை நிறுத்தச் சொன்னாள். எக்கி எக்கி வாந்தி எடுத்தாள். உள்ளே இருந்தவர்கள் நீர் தந்த போது காறி உமிழ்ந்தாள். கண்களில் ஈரம் வற்றவேயில்லை. கொண்டு வந்த அவளுக்கு பிடித்தமான பூக்கள் இருக்கிறதா என பையைத் திறந்து பார்த்துக் கொண்டாள்.  

பிறகு வெயிலுக்குள் இறங்கி தன் மகளின் கல்லறை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.


No comments:

Post a Comment