கைவிடப்படுதலின்
தனிமை
.
”மகிழ்ச்சியாக வாழும் எல்லாக்குடும்பங்களும்
பார்ப்பதற்கு அநேகமாக ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றன. ஆனால் துயரத்தில் தத்தளிக்கிற
ஒவ்வொரு குடும்பமும் தனக்குரிய வழியில் துன்பப்படுகின்றன.”
-டால்ஸ்டாய் (‘அன்ன கரீனினா’
நாவலின் தொடக்க வரிகள்).
குடும்ப நாவல் என்றதுமே மனதிற்குள்
உருவாகும் வழமையான சட்டகத்தில் உறவுகளின் நாடகங்களுக்கே மிகுதியான பங்கிருந்திருக்கிறது.
அதனுள் சமூகக் காரணிகள் ஊடாடிக் கிடக்கும் என்றாலுமே கூட பாத்திரங்களின் அகத்திற்குள்
நிகழும் மாறாட்டங்களிலேயே அவை கால் கொண்டிருப்பதை உணர்ந்திருக்கலாம். மிகப் புராதானமான
அமைப்பென்ற போதும் மனிதர்களுக்கு ஓர் உள்ளார்ந்த பாதுகாப்பை அளிக்கும் நிறுவனமான குடும்பத்திற்கு
மாற்றாக இன்றளவும் வேறெதுவும் கண்டடையப்படவில்லை. இருப்பனும் அந்த அமைப்பை மறுத்து
ஏற்பட்ட மாற்று வாழ்க்கை முறை கூட அதன் நிச்சயமின்மையால் விவாதப்புள்ளியிலேயே சுழன்றபடியிருக்கிறதே
அன்றி முதிர்ந்த நிலைக்கு செல்லவில்லை. அப்படி முன்னகர்வு சாத்தியப்பட்டவற்றிலும் கூட
ஐயமும் நம்பிக்கையின்மையுமே நீடிப்பதால் குடும்பத்தின் விதிகளும் கடமைகளும் இறுகி விட்டிருக்கின்றன.
அன்பென்றும் உறவென்றும் அது எழுப்பும் சுவர்களோ தப்ப இயலாத அளவிற்குச் செங்குத்தானவை.
ஒரே சமயத்தில் ஒருவனைக் காக்கும் அரணாகவும் நசுக்கும் இயந்திரமாகவும் குடும்பம் திகழ
முடியும். ஆற்றலின் உறைவிடம் போலும் சிறகுகளை முறிக்கும் கூடம் போலும் தன்னை மாற்றிக்
கொள்ளவும் அதனால் இயலும். உறவுகளின் வழியாக மகிழ்ச்சியின் அலையால் தூக்கப்படும் நபர்
கரையில் என்ன விபரீதம் காத்திருக்கப் போகிறதோ எனத் தவிக்கும் மனநிலையின் கேந்திரமாக
விளங்கவும் குடும்பத்தால் முடியும். அப்படி சிதைந்த ஒரு குடும்ப அங்கத்தினன் ஒருவனது
மன உலைவுகளும் பரிதவிப்புகளும் தனிமையுமே இந்நாவல். ஆனால் ஏற்கனவே இங்குள்ள பல நூறு
குடும்ப நாவல்களைப் போன்றதல்ல இது. ஏனெனில் குடும்ப நாவல் என்னும் பெயர்பலகைக்கு பின்
குவிந்து கிடக்கும் நூல்கள் பீதியூட்டுமளவிற்கு பிரம்மாண்டமானவை. ஆயினும் அவற்றுள்
தீவிர படைப்புகளை அடையாளம் காண்பதொன்றும் அவ்வளவு கடினமுமல்ல. ஏனெனில் அவற்றுள் வாழ்க்கை
கொதித்துக் கிடக்கும் ஆக்கங்களின் வரிசை நினைப்பதற்கு மாறாக குறைவானதே. எனினும்
இச்சிறு எண்ணிக்கைக்குள் சேரக் கூடிய நாவல் தேவிபாரதியினுடையது. கடந்த இருபது
ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த நாவல்கள் எதன் முன்பும் துணிவுடன் நிற்கும் தகுதி கொண்ட
படைப்பு ‘நீர்வழிப்படூஉம்’ ஆகும்.
அஞ்சல் அட்டை ஐந்து பைசாவுக்கு
விற்கும் காலத்தில் நடக்கும் இந்நாவலின் கதைசொல்லி(நாவல்சொல்லி?) பதின்பருவத்தை அப்போது
தான் கடந்த பிராயத்தில் இருக்கிறான். நாவலின் நாயகராக எனவே மையமாக விளங்குகிற குடிநாவிதரான
காரு மாமாவின் மரணத்துடன் தொடங்கும் நாவல் அவரை காடு சேர்ப்பதற்குள்ளாகவே தன் பாதையை
வாசகருக்குக் காட்டித் தந்து விடுகிறது. நாயகரொருவர் முக்கியத்துவம் பெறுவதற்கு துணைப்
பாத்திரங்கள் வேண்டுமல்லவா? காரு மாமாவின் ரத்தச் சொந்தங்களாக இடம் பெற்றிருக்கும்
அம்மனிதர்கள் அவரரவர்களுக்கே உரிய தனித்துவத்துடன் மேலெழுகிறார்கள். அது இந்நாவலை மேலும்
சிறப்பிற்குரியதாக மாற்றுகிறது.
ஊர்ப் பண்ணையக்காரர்களை அண்டிப்
பிழைக்கும்படி விதிக்கப்பட்ட சமூகமொன்று ஒரு காலகட்டத்தில் எவ்வாறு தங்கள் வாழ்க்கைகளை
அவர்களின் நிழலையொட்டி எவ்வித கேள்விகளுமின்றி அமைத்துக் கொண்டு வாழ்ந்துத் தீர்த்தன
என்பதன் சான்றாகவும் இந்நூலைக் கருத முடியும். அவர்களிடம் குறுகிப் பணிவிடை செய்தால்
மட்டும் வயிறாற முடியும். அதுவே அன்றைய நிலை. எனவே அது பழைய கதை. ஏனெனில் காரு மாமாவுக்கு
அடுத்தத் தலைமுறையினர் நகரில் பரவுவதன் ஊடாக அந்த மேல்*கீழ் அடுக்குகள் மெதுவாக இல்லாமல்
போவதும் கூட சம்பவங்களால் உணர்த்தப்பட்டு விடுகிறது. அப்படிச் செல்வதால் தான் அந்த
கிராமமே ஒரு கட்டத்தில் கைவிடப்பட்டு புதர்கள் மண்டிய சிதலமடைந்த வீடுகளுடைய வெற்று
நினைவுச்சின்னமாக அங்கு வாழ்ந்தவர்களுக்கு மாறி விடுகிறது. அப்படியான ஒரு காட்சியை
சில பத்தாண்டுகளுக்குப் பின் ஒரு பார்வையாளனாகக் கண்டதன் வழியாகவே இந்நாவல் மனதிற்குள்
எழுந்து வந்ததாக முன்னுரையில் தேவிபாரதி எழுதியிருக்கிறார். இதனை ஆசிரியர் நேரடியாக
அல்லாமல் குறிப்பால் உணர்த்தியிருந்தாலும் கூட இந்நாவல் வேர்கொண்டிருப்பது காருமாமாவிலும்
அவரது தொப்புள் கொடி உறவுகளிலுமே. வாழ்க்கைக்கு பெரிய அர்த்தங்கள் ஏதும் இல்லை எனினும்
எத்தகைய துயருக்கிடையிலும் இவ்வுலகில் எதைக் காட்டிலும் வாழ்க்கை முக்கியத்துவமுடையது
தான் என்கிற அடிக்கோடிட்டப்பட வேண்டிய செய்தி உட்பொதிந்துள்ளது. வீழ்ச்சியுற்றவனின்
கதையால் அதை ஒரு படைப்பின் வழியாக அறிய நேரும் போது அச்செய்தியிலுள்ள உண்மைத்தன்மை
மேலும் துலக்கமாகி விடுகிறது. அதனால் தான் யாருமற்றவராகக் கயிற்றுக் கட்டில் முடங்கிக்
கிடக்கும் காருமாமா அந்த நிலையிலும் கூட தன் பண்ணையக்காரர்களின் நல்லது கெட்டதுகளில்
போய் நின்று ஏவல் வேலைகளைச் செய்யாமல் விட்டதில்லை.
தாய்வழிச் சொந்தங்கள் மூலம்
அறிய நேர்ந்த ‘பட்டக் கதைகளே’ இவை எனப் பீடிகை போட்டுத் தொடங்கும் இந்நாவல் கருணையேயற்ற
வாழ்க்கையை மென்று விழுங்கி மாய்ந்து போன காருமாமாவின் செல்லரித்த கொடுங்காலத்தை இரக்கமற்ற
தொனியில் கூர்மையான மொழியால் மீட்டுருவாக்கம் செய்கிறது. சபிக்கப்பட்ட வாழ்க்கை எவருக்கெல்லாம்
விதிக்கப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கு மரணம் விடைபெறல் அல்ல, அது ஓர் விடுதலை. கெட்டித்தட்டிப்போன
அன்றாடங்களிலிருந்து மீட்சி அடைவது எத்தகையதொரு ஆசுவாசம்..! அவ்வாறு சபிக்கப்பட்ட காரு
மாமா வெவ்வேறு காலகட்டங்களில் எப்படியானதொரு வாழ்க்கையை மென்று விழுங்கினார் என்பதை காலத்தை கலைந்த வரிசையில் அடுக்கி, நாவலுக்குள் இடம்பெறும்
ஒரு பாத்திரமே கதையை சொல்லிச் செல்லும் உத்தி மூலம் தேவிபாரதி நாவலை வளர்ந்திச் செல்கிறார். மார்க்கேஸின்
குறுநாவலான ‘முன்கூறப்பட்ட சாவின் சரித்திர’த்தின் வடிவம் ஏனோ நினைவுக்கு வந்து கொண்டே
இருந்தது. இரண்டுமே மரணத்தை முன் வைத்து சம்பவங்களை முன்பின்னாகக் கோர்த்து நகர்கிறது
என்ற ஒற்றுமை உள்ளது என்றபோதும் தேவிபாரதியின் இந்நாவல் தன் பேசுபொருள் சார்ந்து முற்றிலும்
மாறுபட்டது. தனித்துவமானது. அடர்த்தியும் செறிவும் கொண்டிருக்கும் இந்நாவல் தமிழ் நவீனத்துவ
இலக்கியத்தில் தனக்கென பிரத்யேக இடத்தை ஐயத்திற்கு அப்பாற்பட்டு நிறுவிக்கொள்கிறது.
காலத்தால் இரக்கமின்றி கைவிடப்பட்ட
பலநூறு தமிழகக் கிராமங்களில் ஒன்று போல தட்டுப்படுகிற, கொங்கு நிலப்பரப்பின் மிகச்சிறிய
ஊர் உடையாம்பாளையம். அங்கு குடிநாவிதம் செய்து பிழைத்த சில குடும்பங்களுக்குள் நிலவிய
பிணைப்பும் பகையும் அன்பின் ஈரமும் மட்டுமல்ல அம்மனிதர்களது தனிமையின் தீவிரத்தாலும்
ஆன நாவல் இதுவாகும். பெரிய நாவல்கள் குறித்த ஓயாதக் கருத்துருவாக்கங்கள் தீர்க்க முடியாத
நோய் போல பீடித்திருக்கும் வேளையில் இருநூறு பக்கங்களைக் கூட எட்டத் திராணியற்ற இந்நாவல்
அளிக்கும் அனுபவம் வாசகச் சமநிலையில் நிலைகுலைவை உண்டாக்கி விடுகிறது. எடை மிகுந்த
கணங்கள் நாவலுக்குள் தான் வருகின்றனவேயன்றி நுலைத் தூக்கிச் சுமக்கும் கைகளுக்கு இல்லை.
ஒரு அர்த்தத்தில் நாவல் இப்போதுள்ள
தீவிரத்தை அடைய கதைசொல்லியின் பெரியம்மா(காரு மாமாவின் அக்கா) பாத்திரமே முதன்மைப்
பங்கை வகிக்கிறது. இன்னும் கூறினால் இவர் தான் நிகழும் அனைத்திற்கும் காரணியாக விளங்குகிறாரோ
என்ற ஐயமும் எழாமலில்லை. இரண்டு வயது கைக்குழந்தையை விட்டுவிட்டு மரித்துப் போகும்
அவளது கணவனின் ஊரே உடையாம்பாளையம். இந்தச் சூழ்நிலையிலும் கூட, தாய் அழைத்தும் அவ்வூரை
விட்டுச் செல்ல அவள் சம்மதிப்பதில்லை (அவ்வூரில் பெரியம்மா பிரசவம் பார்த்த பெண்களுக்கே
குழந்தை பிறந்து அவளது முன்பாகவே அப்பெண் வரும் காட்சி உவப்பூட்டக்கூடிய ஒன்று). எனவே
அவ்வூர் பண்ணையக்காரர்களுக்கு நாவிதம் செய்து வந்த கணவனின் இடத்திற்கு ஆளைச் சேர்த்தாக
வேண்டும். ஊர்க்காரர்களோடு அவளும் அலைகிறாள். பிறகு ஊருக்கருகிலேயே முத்தையன் வலசிலிருந்து
உறவினனைக் கூட்டி வந்து குடி அமர்த்துகிறாள். அவரது மனைவி கோபம் கொண்டு அவரை விட்டுச்
சென்றதும் எங்கெங்கோ தேடியலைந்து இரண்டாம் தாரமாக சவுந்திராவைக் கட்டி வைப்பவளும் பெரியம்மாவே.
அதற்குரிய நன்றியுடன் சில காலம் கழிந்தாலும், அப்படியே சுமுகமாக சென்று விட்டால் காலம்
கருணைமிக்கது என நம்பத்தலைப்பட்டு விடுவோமில்லயா..! அவ்வளவு நல்லுணர்ச்சிக் கொண்டவர்களால்
ஆனதல்லவே இவ்வுலகம். எனவே நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த புகைச்சலும் வன்மமும்
மெல்ல பெருகி ஓர் நாளில் எல்லை மீறுகிறது. சந்தேகத்தின் நஞ்சை விழுங்க முடியாத சவுந்திரா
வெள்ளைச்சேலைக்காரியான பெரியம்மாவை அவமானப்படுத்தி தூற்றி வசவுகளைப் பொழிகிறாள். முகதாட்சண்யமே
அற்று விடுகிறது. பிறகு அவ்வூருக்கு, ரங்கபாளையத்தில் தங்கைகளோடு சிரமஜீவிதம் நடத்தி
வரும் தம்பியான காருவை கொண்டு வந்து சேர்க்கிறாள் பெரியம்மா. காரு மாமாவின் பிள்ளைகள்
இடுப்பிற்கு மேல் வளர்ந்த வயதில், அரசல்புரசலாக அவ்வூரில் உலவிய வதந்தி ஒரு நாள் ஊர்ஜிதம்
ஆகிறது. மாமாவின் மனைவியான ராசம்மா அத்தை செட்டியுடன் ஓடிப்போகிறாள், இக்கெடு சம்பவத்தால்
காரு மாமா என்ன ஆனார் என்பதை உறவுகளின் பின்புலங்களைத் திரைச்சீலையாக அமைத்து கதைசொல்லி
வாசகர் முன் எழுப்பிக்காட்டும் –சீரற்ற ஆனால் உள்ளார்ந்த தொடர்ப்பைக் கொண்டிருக்கும்-
வாழ்க்கையின் தொகுப்பே ‘நீர்வழிப்படூஉம்’. அத்தை நீங்கிச் சென்றதைக் கூட உணர்ச்சியற்று
எதிர்கொள்ளும் காருமாமா தன் குழந்தைகளையும் இழுத்துக் கொண்டு சென்று விட்டாள் என்பதை
அறிந்ததும் தன் பலமனைத்தையும் அங்கேயே இழந்து முதல் வலிப்பு நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகிறார்.
பிறகு அவர் மனதாலும் உடலாலும் சிதைந்து போவதே நாவலாக இருக்கிறது. ராசம்மா அத்தையின்
அந்த அந்நிய உறவு சார்ந்த தகவல் சில வரிகளில் மட்டுமே இடம் பெறுகிறது. வேறெங்குமே அது
விவரிக்கப்படுவதில்லை.
கதைசொல்லியின் அம்மாவான முத்துவுக்கும்
காருமாமாவிற்கும்(முத்துவின் அண்ணன்) இடையே
ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ளதைப் போன்ற அசாத்திய அன்பு நிலவுகிறது. சிறுவயதிலேயே
நிர்கதியாக விட்டுப் போன அப்பாவின் ஸ்தானத்தில் காருமாமா தான், சிறகில் மூடி அவர்களை
வளர்க்கிறார். அதனால் தான் ‘பாசமலர்’ திரைப்படத்தை வெறும் சினிமாவாக அவளால் பார்க்க
முடிந்ததேயில்லை. அது அவள் யாரிடம் எவ்வாறு வளர்ந்தளோ அதன் காட்சி வடிவம். அந்தப்
படத்தை பல தடவை அவள் பார்த்திருந்த போதும் அதன் பாடல்களை ஒவ்வொரு முறைக் கேட்கும் போதும்
முதல் தடவை கேட்பவள் போல உணர்ச்சிவயப்படுவளாகக் கண்ணீருடன் பரவசப்படுபவளாக மாறுகிறாள்.
அந்த சினிமாவின் முதன்மைப் பாத்திரங்களாக தன் அண்ணனையும் தன்னையும் வைத்துக் கொள்வதோடு
நிற்கவில்லை, உச்சமாக அந்த நாயகனின் பெயரை தான் கதைசொல்லிக்கு வைத்திருக்கிறாள் என்கிற
தகவல் திகைக்க வைத்து விடுகிறது. ‘மலர்ந்தும் மலராத…’ பாடலைக் கேட்டதும் அவள் ஆற்றும்
இரு செயல்களில் முதலாவது வீட்டைப் பூட்டுவது இரண்டாவது அண்ணனின் வீட்டு வாசலில் சென்று
நிற்பது. சினிமாவை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருதும் அந்த மனநிலையை ஏளனமாகவோ கிண்டலாகவோ
காண வேண்டியதில்லை. ஏனெனில் அவளது அண்ணன் அவளுக்கு மணமுடித்து வைக்க எங்கெங்கு திரிந்து
எவரெவர் காலில் விழுந்து கரையேற்றினான் என்பது மனதை உலுக்குபடி நாவலில் காட்டப்படுகிறது.
பிறகு அவனைக் கண்ணீரின்றி வேறெப்படி அவளால் நினைவுக்கூரமுடியும்? அதே காருமாமா எவரும்
அற்றவளாக நோயில் விழுந்து தனிமையில் புழுங்கி வெற்றுக் கூடாக மாறுகிறார். ஒரே ஒரு முறை
சிறுவெளிச்சம் அவர் வாழ்க்கையில் எட்டிப் பார்க்கிறது. பழனிமலை அடிவாரத்தில் முடி எடிப்பவர்களுக்கு
எடிபிடி வேலை செய்பவளாக ராசம்மாவைக் கண்டதாக ஊரார் வந்து சொல்லக் கேட்டு கிளம்பிப்
போகிறார். மனப்பிறழ்வின் முதல் அடி அங்கு விழுகிறது. தனியாக ஊர்த் திரும்பும் போதே
கிட்டத்தட்ட அவர் கதையின் அடுத்த அத்தியாயங்கள் எழுதப்பட்டு விடுகின்றன.
நாவலில் பெண்களுக்கிடையே
அதாவது ஒரு வயிற்றில் பிறந்த அக்காள் தங்கைகளுக்கிடையே நிலவும் அன்னியோன்யமும் நேசமும்
அவர்களுக்கு ஒன்று விட்ட சகோதரிகளுக்குள்ளும் அவ்வூருக்கு மணம் முடித்து வந்த நெருங்கிய
உறவுகளுக்குள்ளும் ஏற்படுவதில்லை. வன்மமும் சாபமும் பழிதூற்றலுமாக அவ்வுறவு ஒவ்வொன்றும்
முறிந்து போகின்றது. சவுந்திராவுடன் உண்டான பூசலின் காரணமாகக் காருவை வரவழைத்து குடியமர்ந்தும்
பெரியம்மா பாதிக் குடிகளை அவருக்கு வழங்கும்படி செய்கிறார். கெடுவிதி போல அந்த சவுந்திரா
வயிறு வீங்கி படுக்கையில் கிடந்து அது புற்றுநோயோ என அஞ்சி உழல அவ்வீட்டை இருள் சூழ்கிறது.
எனவே அவர்களது குடிகளும் மெல்ல காரு மாமாவிடம் செல்கின்றன. ஆவேசமும் உக்கிரமுமாக சவுந்திரா,
காரு மாமாவின் குடும்பம் மண்மூடிப் போகும்படிக்கு சபிக்கிறாள். அவளது எரிந்த சொல் நின்று
பேசி விட்டதோ எனும்படிக்கு காரு மாமாவுக்கு தாங்க இயலாத அவமானமும் இறுதிவரை எழவே முடியாத வீழ்ச்சியும் நடந்தேறுகின்றன.
ராசம்மா அத்தையின் செயலைக் கேள்விப்பட்ட சவுந்திரா பலமேயற்று எழ முடியாத நிலையிலும்
கூட தட்டுத் தடுமாறி எழுந்து சென்று, காருவின் குடும்பம் ஒன்றுமற்றுப் போனதற்கு கோவிலில்
விழுந்து வணங்கிச் சிரிக்கிறாள். அந்த மூர்க்கம் திகைக்க வைக்கிறது. ஒரு காலத்தில்
பெரியம்மாவின் உடன்பிறந்தவளை விடவும் ஒருபடி மேலாக பாசத்தோடு கிடந்த சுந்தராண்டி வலசு
பெரியம்மாவுடனும் சண்டை மூண்டு விடுகிறது. அவள் இறப்பிற்கு கூட போக முடியாத அளவிற்கு
அது வீர்யம்மிக்கதாக இருக்கிறது. ஆனால் அந்த வெப்பம் மிகுந்த சண்டைக்கானக் காரணத்தை
கதைசொல்லியே அறிய முடியாது போய்விடுவதால் வாசகரும் அதை ஒரு தகவல் போல மட்டுமே தெரிந்து
கொள்ள முடிகிறது. ஓடிப்போன ராசம்மா அத்தை, காருவின் உடன்பிறந்தவர்களால் வசவுகளாலும்
தூஷணைகளாலுமே நினைவு கூரப்படுகிறாள். எவ்வளவு பாடுகளுக்கிடையிலும் இணைப்பிரியாது விட்டுக்
கொடுத்தபடியே சொந்த சகோதரிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்வை எதிர்கொள்கிறார்கள்.
அவர்களுக்குள் வெளிப்படையான பிணக்கே கிடையாது. இது அழகையும் வியப்பையும் ஒருங்கே கொண்டிருக்கிறது.
சில உயிரற்ற வஸ்துகள் மனிதர்களுக்கு
அளிக்கும் ஆறுதல்களையும் ஆசுவாசத்தையும் இந்நாவல் மிக நுட்பமாக அணுகியிருக்கிறது. அஞ்சல்
அட்டை ஒரு உயிரின் வடிவமாகக் கைகளுக்குள் புழங்குகிறது என்றால் தனிமையில் வீழ்ந்து
கிடக்கும் காருமாமாவுக்கு டிராஸ்சிஸ்டர் சக மனிதனைப் போலத் தேற்றுப்படுத்தும் கரமாக
மாறிப்போகிறது. சவுந்திராவின் கணவரான முத்தையன் வலசு பெரியப்பா அதன் அலைவரிசையைப் பிடித்து
பாடல்களையும் ஒலிச்சித்திரங்களையும் ஒலிக்க விடுகையில் அதன் மீதேறி மிதந்து பழைய காலத்திற்குள்
உலவுகிறார் காருமாமா. சட்டென்று பேட்டரி தீர்ந்து நின்று விடுகிறது. உயிரையே பிடுங்கி
விட்டார் போன்ற பதைபதைப்புடன் மல்லுக்கு நிற்கிறார், பிறகு விஷயம் அறிந்து அந்த பேட்டரி
செல்களை வாங்க பல மைல்கள் நடந்தே செல்கிறார். எங்கெங்கோ திரிந்து வாங்கி இரவெல்லாம்
நடந்து ஊர் வந்து சேர்ந்து வெற்றிப் பெருமிதத்துடன் ‘இப்ப போடுங்க கேக்கலாம்’ என்கிறார்.
அந்த இடம் வாசகனாக என்னை உலுக்கியது. ஒன்றுமற்றவனாக ஒருவன் ஆகும் போது அவன் மனதிற்குள்
நிகழ்வதென்ன என்கிற புதிரை நோக்கி படைப்பாளி இறங்கி செல்லும் இது போன்ற இடங்கள் மிகவும்
முக்கியம் என்று தோன்றுகிறது. இவ்வாறான தீவிரமான கணங்களே ஒரு படைப்பின் தரத்தை மேலதிகமாக
தூக்கி நிறுத்துகிறது. போலவே அந்த காருமாமா இறந்த பின் பனிரெண்டு வருட அயல்வாசத்திற்குப்
பிறகு தாலி அறுக்க, உடைந்து நொறுங்கிப் போனவளாக ஏதுமற்று வந்து நிற்கிறாள் ராசம்மா
அத்தை. அத்தனை வருடக் குமைச்சல்களையும் உள்ளக்குமறல்களையும் பேசித் தீர்த்த பின் காருமாமாவின்
ட்ரங்க் பெட்டியிலிருந்து தாயக்கட்டைகள் கிடைக்கின்றன. கோடிழுத்து விளையாட ஆரம்பிக்கிறார்கள்.
அந்த ஆட்டம் நாவலின் உச்சம் போல நிகழ்கிறது. தாயக்கட்டை அந்த சூழலில் ஆற்றும் வினையையும்
விளைவையும் கண்டு திடுக்கிட்டுப் போனேன். கட்டங்களும் காய்களும் வெற்றித் தோல்விகளுமாக
மாறி மாறி நடந்து கொண்டிருக்க ராசம்மா அத்தையையும் அவளது மகளையும் அந்த ஆட்டத்தின்
மூலமே மீண்டும் குடும்ப அங்கத்தினர்களாக மாறும் மாயம் கண்முன்னேயே நடக்கிறது.
நாவலில் கரிய நகைச்சுவை ஆங்காங்கே
தட்டுப்படுகின்றன. அது புன்னகையையும் வெடிச்சிரிப்பையும் வரவழைப்பவையாக உள்ளன. பெரியம்மாவுக்கும்
முத்தய்யன் வலசு பெரியப்பாவின் மூத்த தாரத்துக்கும் சென்னிமலையின் ஊர் நடுவே வாய்ச்சண்டை
மூள்கிறது. சகிக்க முடியாத வசவுகளின் ஊர்வலம். அதை ஓரளவு விஸ்தாரமாக எழுதியிருக்கலாம்
என்கிற அங்கலாய்ப்பு எனக்குண்டு. அப்போது அவர்களை விலக்கும் கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர்,
இருவரையும் ‘தோழர்’ என விளித்து நடந்து கொள்ளும் முறையை உதாரணமாகச் சொல்லலாம்.
நாவல் முழுக்கவுமே விவரணை
மொழியாலேயே அமைந்திருக்கிறது. எனவே சில சொற்கள் மீண்டும் மீண்டும் ஆசிரியரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட நாவலில் பெரும்பான்மையின்ர் ஏதோ ஒரு சமத்தில் ‘திகைத்து’ப் போனவர்களாக
‘திடுக்கிட்ட’வர்களாகவே உள்ளனர். உரையாடல்கள் மிகவும் குறைவு. அந்தப் பேச்சுகள் கூட
கதைசொல்லி அனுமதிக்கும் எல்லை வரை மட்டுமே. அவர்கள் அச்சூழலில் கைவீசியபடி சாவகாசமாக
என்னென்ன அளவளாவியிருப்பார்கள் என்பது நாவலின் வடிவம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதோ
எனத் தோன்றுகிறது. காரு மாமாவின் இறப்பிற்கு அவளது தங்கை லிங்க நாவிதனிடம் படித்த ஒப்பாரி
பாடலை பாடும் பகுதி நாவலுக்குள் வருகிறது. அங்கு சுற்றி நின்றவர்களில் ஒருவராக வாசகரைக்
கருதவைக்கும்படியான பகுதி அது. ஆனால் அந்த ஒப்பாரிப் பாடலிலிருந்து சில வரிகள் கூட
நாவலில் தரப்படவில்லை. அது குறை தான். குறைந்த
சொற்களில் தீட்டிக்காட்டப்படும் லிங்க நாவிதனின் சித்திரம் உயிர்ப்புடன் முன்னால் நிற்கிறது.
யதார்த்தவாத வகைமையைச் சார்ந்தது எனினும் கூட
அதை மீறிச் செல்லும் இரு தருணங்கள் நாவலுக்குள் இருக்கின்றன. லிங்க நாவிதன் மரணம் அடைந்த
சேதி கேட்டு அவனிடம் பாடம் படித்த ஊர்ப்பெண்கள் எழுப்பும் ஒலியை இறந்து கிடக்கும் லிங்க
நாவிதனின் காதில் விழுந்து சட்டென கண் திறந்து பார்த்ததாக சூழ நின்றவர்களுக்குத் தோன்றும்
இடமும் தாயக்கட்டையின் வழியாக தன் மனைவி மக்களை அந்த வீட்டோடு இணைத்து விடுவதற்கு பின்னால்
காரு மாமாவின் கைங்கர்யம் இருக்குமோ என்கிற சந்தேகம் கொள்ள வைக்கும் இடமும் அத்தகையதே.
ஏனெனில் இறந்த காரு மாமாவின் ட்ரங்க் பெட்டியிலிருந்து தான் அந்த கட்டைகள் எடுக்கப்படுகின்றன.
தன் மகளுக்காக அவர் இறுதிவரை சேர்த்து வைத்த தங்க நகைகளை அப்போது தான் பெரியம்மா உரியவர்களிடம்
ஒப்படைக்கிறாள்.
முந்தைய இரு நாவல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு எழுதப்பட்டிருக்கும் ‘நீர்வழிப்படூஉம்’ மில் தேவிபாரதியின் படைப்பூக்கம் மிளிரும் தருணங்கள் நாவலெங்கும் விரவிக் கிடக்கின்றன. வாசகர் எங்கேனும் பராக்கு பார்க்கவும் கற்பனையில் ஆழவும் அனுமதிக்காத படைப்பு இது. கைவிடப்பட்டவர்களின் கண்ணீரால் ஆன கதையை எவ்வித நெக்குருகலும் இன்றி ‘ஐய்யோ..’ என ஓலம் எழுப்பாமல் வாசிப்பவரை தொந்தரவுக்குட்படுத்தும் படைப்பு. இந்நாவலை பெண்களால் எழுதப்பட்ட ஆண்களின் கதை என்று சொல்லலாம். குறைகளாகப்பட்டவற்றைச் சுட்டிக்காட்டி இருப்பினும் கூட ஆசிரியரின் மிகச்சிறந்த படைப்பு இதுவே. இந்நாவல் குறைந்தபட்சம் தென்னிந்திய மொழிகளிலேனும் மொழிப்பெயர்க்கப்பட வேண்டும்.
நீர்வழிப்படூஉம் (நாவல்) -தேவிபாரதி. தன்னறம் வெளியீடு. விலை. ரூ. 220.00.
(தமிழ்வெளி ஜனவரி 2023 இதழ்).
No comments:
Post a Comment