கோமாளி, பலியாடு, விரோதி..
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘நிரந்தரக் கணவன்’.
வெல்ச்சேனினோவ்(Velchaninov) நாவலின் பிரதான இரு பாத்திரங்களில் ஒருவன். அவனை மிகமிக அரிதாகவே என்றேனும் தாக்கும் நெஞ்சுவலி அன்று அவன் தொடர்ச்சியாக சந்தித்த சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் தந்த மனவழுத்தத்தால் மீண்டும் ஏற்பட்டு விடுகிறது. அதற்கு முற்றிலும் காரணமான நபர் இன்னொரு பிரதான பாத்திரமான பாவ்லோவிச் ட்ரூஸோட்ஸ்கி (Pavlovitch Trusotsky). அவர் அவனது அறையிலேயே இருக்கிறார். எனவே உடனடியாக பணிப்பெண் மார்வாவைத் துணைக்கழைத்துக் கொண்டு முதலுதவி செய்கிறார். தனது சொந்த மகனின் உயிரைக் காப்பாற்றவது போல துடிக்கிறார். அவரது முயற்சிகளால் வலி குறைந்து வெல்ச்சேனினோவ் சோர்வுடன் தூக்கத்திற்குள் நழுவுகிறான். அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் யார் உயிரைக் காப்பாற்ற அங்குமிங்கும் ஓடி சிகிச்சை செய்தாரோ அவனைக் கொல்வதற்கு கத்தியுடன் நெருங்குகிறார் பாவ்லோவிச். உண்மையில் இந்தளவு கொடூரராக மாறுவார் என்று சில வினாடிகளுக்க்கு முன்புவரை அவருக்கே தெரிந்திருக்கவில்லை. நாவலின் இன்னொரு இடத்தில் இதே பாவ்லோவிச்சிடம் கடும் கசப்பும் தாங்க முடியாத சினமும் கொண்டு இனி முகத்திலேயே விழிக்கக் கூடாது என நினைக்கும் வெல்ச்சேனினோவ், அகஸ்மாத்தமாக அவரைக் கண்டதும் ஒதுக்கிச் செல்ல முனைகிறான். பின் தொடர்ந்து வந்து ’மாலை வணக்கம்’ என்கிறார். பதில் அளிக்காமல் சென்று விடுவான் என நினைத்தால் திரும்பி வணக்கம் சொல்கிறான். ஏனெனில் அவரை எப்படி எதிர்கொண்டோம் என்கிற வியப்புக்கும் ஏன் அவ்வாறு நடந்து கொண்டோம் என்ற கேள்விக்கும் உண்மையில் அவனுக்கே பதில் தெரியாது.
மனிதர்கள் தங்கள் எண்ணங்களாலும் அதையொட்டிய செயல்களாலும் ஆனவர்கள் தானா என்கிற தவிர்க்கவியலாத வினாவைத் தொடர்ந்து எழுப்பும் நாவல் இது. ஏனெனில் எதுவுமே அவர்களது கட்டுப்பாட்டில் இல்லை. ஏன் இவ்வாறு நடந்து கொண்டோம் என அவர்களுக்கே விளங்க மாட்டேன் என்கிறது. முந்தைய நொடி வரைகூட எண்ணியிருந்தது முற்றிலும் வேறு. பிறகு அவர்களே அதற்குமாறான ஒன்றுக்கு ஆட்படுவதன் நியதி என்ன? இதற்காக விளம்பப்படும் எந்த விரிவுரையும் செல்லாது. ஏனெனில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது தெரியாது. கொஞ்சம் கருணைகாட்ட வேண்டுமென்றால் அதை தஸ்தயேவ்ஸ்கியின் பாஷையில் சொல்லலாம், ’நாசமாய் போக, கடவுளுக்குத் தான் வெளிச்சம்’. வினைபுரிபவனுக்கு அந்த வினைக்கான காரணம் சரிவரத் தெரியாத நிலையிலும் கூட அது அவனுக்கு ஆச்சரியமாக இல்லை. சிலவினாடிக்கு முன் நினைத்திருந்ததற்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒன்றை செய்து விடுகிறார்கள். எனவே தான் முழுமனிதன் என்றோ தனக்குள் இருப்பவனை (அவனுக்கு என்ன வேண்டுமாம்..!?) விஞ்சி முன் செல்பவன் என்றோ ஒருவரும் இல்லை என தாடிக்காரர் ஆணித்தரமாக ஒரு நாவலுக்குள் நிறுவுவது பதற்றத்தையும் அபாரமான புத்துணர்வையும் ஒருங்கே அளிக்கிறது.
இரண்டே பாத்திரங்கள். அவர்களுக்கிடையிலான நம்பிக்கைகள், துரோகங்கள், அவமானத்திற்கான பழிதீர்த்தல்கள், கனலும் கோபங்கள், கசப்பு மறைந்திருக்கும் புன்னகைகள், வஞ்சம் தீர்ப்பதற்கான பதுங்கல்கள் என இந்நாவலின் உலகை தோராயமாகத் தொட்டுக் காட்டலாம். அனல் அடிக்கும் பீட்டர்ஸ்பெர்க்கில் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கும் வழக்கை முடித்து விட அலைந்து கொண்டிருப்பவன் வெல்ச்சேனினோவ். தூக்கமின்மையாலும் கற்பனை நோயாலும் அவதிப்படுபவன். இரண்டாவது அத்தியாயத்திலேயே அவனது எதிரிடையானவனும் ‘நிரந்தரக் கணவனுமான’ பாவ்லோவிச் வந்து சேர்ந்து விடுகிறார். இவர்களுக்கிடையே சிறுமி லிசா. இவளது பிறப்பு சார்ந்த ரகசியம். அவ்வளவே. இம்மூன்று புள்ளிகளே இக்குறுநாவலின் மிக முக்கியமான காரணிகள். இவர்களுக்குள் நிகழும் நாடகீயத்தருணங்களை தேர்ந்த உளவியலாளனையும் விஞ்சிய மேதமையுடன் (புத்திசாலித்தனம் அல்ல) இருளையும் வெளிச்சத்தையும் மாற்றி மாற்றி காட்டிச் செல்லும் படைப்பு இதுவாகும்.
தஸ்தயேஸ்வ்ஸ்கியின் பாத்திரங்கள் தங்களுக்குள் போராடுபவர்கள். மூழ்குபவனுக்கு மேல்மடத்தில் நடப்பவை பற்றி பெரிய பராதிகள் இருப்பதில்லை. அவனது வினாக்களும் கூட வட்டத்திற்குள் ஒரு வட்டம் அதற்குள் மேலுமொன்று என உள்நோக்கிச் சுழல்பவை. முரண்நகையாக தங்களுக்குள் போராடுபவர்கள் ஒரு உந்துதலில் மூழ்குபவனுக்கு அருகில் வந்து சென்று விட முடியும். அவன் பெரும்பாடு பட்டு சென்ற வளையங்களை இவன் வேறொரு வழியில் சென்று தொட்டு விடவும் முடியும். விஷயம் அந்த போராட்டம் எந்த வகைப்பட்டது என்பதில் அடங்கியுள்ளது. திமித்ரி (கரம்சோவ் சகோதரர்கள்) தனக்குள் போராடுகிற முரடன் எனக் கொண்டால் தன் கனவில் பசியால் அழும் குழந்தைக்கு ஏதோ ஒரு விதத்தில் தானும் கூட காரணம் என நினைக்கும் மனம் அவனுக்கு எப்படி வாய்க்கிறது? தந்தையைக் கொலை செய்ய அல்ல, அப்படி ஒரு எண்ணம் தோன்றியதே..! அதற்காகக் கூட இந்த தண்டனை தேவை தான் என ஏற்கும் மனம் எப்படி சாத்தியம்.! மனிதர்கள் அனைவருக்குமே குழந்தைகளின் மனதை வேண்டும் மிஷ்கினை (அசடன்) வந்து சந்தித்து கைகுலுக்கி அவனே நிமிர்ந்து பார்க்கும் ஆளாக திமித்ரி மாறுகிறானா இல்லையா..!?
இந்தக் குறுநாவலும் கூட அகத்திற்குள் அடைந்து கிடப்பது என்ன? அதன் லகான் ஏன் உரிமையாளனின் கைக்கு அகப்படவே மாட்டேன் என்கிறது போன்ற வினாக்களை எழுப்பக் கூடியதே. நாவலில் பாவ்லோவிச்சின் மனைவியான நதாலியாவுக்கு மணவுறவைக் கடந்து சில தொடர்புகள் உருவாகின்றன. அது கணவருக்கும் தெரிந்தே இருக்கிறது. ஆனால் அவர் மனைவியின் கட்டுப்பாட்டில் அவளை மீறி ஏதும் செய்ய இயலாதவர். அவள் அத்தகைய குணக்கேடு உடைய பிற பெண்களைக் கடிந்து கொள்ளக் கூட செய்கிறாள். நாவலுக்குள் சில பக்கங்களுக்குள் வருகிற இப்பகுதியே கூட, தாடிக்காரர் எத்தகையதொரு நாவலாசிரியர் என்பதைக் காட்ட போதுமானதாகும். பையன் இல்யூஷாவினுடையது (கரமசோவ்) போல இல்லையென்றாலுமே கூட சிறுமி லிசாவின் மரணத்தைக் கடப்பது சிரமமாகத் தான் இருந்தது.
மீண்டும் மீண்டும் இருவர் சந்தித்து மையமான விஷயத்திற்குள் வராமல் பீடிகையுடன் பேச்சை வளர்த்துவது ஒரு கட்டத்தில் நகைச்சுவையாகக் கூட மாறி விடுகிறது. அபத்த நகைச்சுவை. ஏனெனில் இருவருமே ஒருவருக்கொருவர் சம்பந்தமற்ற குணவியல்புகள் கொண்ட பாத்திரங்கள். பாவ்லோவிச் கோமாளித்தனம் உடையவராக இருப்பினும் கூட இன்னொரு முனையில் தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நரியைப் போன்றவரும் தான். மனைவியின் மீது அதீத பிணைப்புடன் இருப்பவரே அவள் மரணத்திற்கு பிறகு துவேசம் மிக்கவராக மாறி விடுகிறார். வெல்ச்சேனினோவ்வைக் கூட இப்படிப்பட்டவர் என வரையறுத்து விட முடியாது. ஏனெனில் தொடக்கத்திலேயே சொன்னது போல அவர்களுக்கே அது ஏனென்று தெரியாது.
’நிலவறைக் குறிப்புகள்’(1864) நாவலுக்கு பிறகு ’குற்றமும் தண்டனையும்’(1866) அதன் பிறகு ’அசடன்’(1868-69). இவ்விரு பெரும் படைப்புக்கு பிறகு எழுதப்பட்ட நாவல் ‘நிரந்தரக் கணவன்’ ( The Eternal Husbend-1870). வாஸ்தவத்தில் அதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் (கோமாளி, பலியாடு, விரோதி, ரசிகன்…) உள்ளதாக முன்னுரையில் கூறுகிறார் இந்நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ரிச்சர்ட் பேவியர். இவையனைத்து வேடங்களுக்குமே பொருந்தி போகும் வார்ப்பு பாவ்லோவிச்சினுடையது ஆகும். எனவே தான் அவர் ’நிரந்தரக் கணவனோ’..!
ரஷ்ய இலக்கியத்தில் ஐம்பதாண்டுகளுக்கும் முந்தைய ராதுகா வெளியீடுகளையே மீண்டும் புதிய பதிப்புகளாக பலரும் வெளியிட்டு வருகிறார்கள். எம்.ஏ. சுசீலா விதிவிலக்கு. இதுவரை தமிழுக்கு வராத தஸ்தயேவ்ஸ்கியின் பெரும் படைப்புகளை இடையறாது மொழிபெயர்த்து வருகிறார். புவியரசு, அரும்பு ஆகியோரின் மொழியாக்கத்தில் ‘கரம்சோவ் சகோதரர்கள்’ வெளிவந்துள்ளது. இரண்டில் மிகச் சிறப்பான பணி புவியரசுவினுடையதே. அவ்வரிசையில் சென்ற ஆண்டு மொழியாக்கக் கதைகளை (சின்ட்ரெல்லா நடனம்- பாதரசம் வெளியீடு) வெளியிட்ட நர்மதா குப்புசாமி, தஸ்தயேவ்ஸ்கியின் முக்கியமான குறுநாவல்களில் ஒன்றான ’நிரந்தர கணவனி’ன் மொழிபெயர்ப்பு தங்குதடையற்ற சீரான ஓட்டத்தில் அமைந்திருக்கிறது. அவரது மெனக்கெடல்கள் நன்றாகவே தெரிகின்றன. உதாரணமாக நோய் பீடித்திருப்பதையும் நோய் தாக்குவதையும் துல்லியமாக வகைபிரித்து அந்தந்த இடங்களில் கையாண்டிருப்பதைச் சொல்லலாம். அவரிடம் இன்னும் எதிர்ப்பார்ப்பதில் தவறில்லை.
நிரந்தரக் கணவன் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி - தமிழில் : நர்மதா குப்புசாமி . பக், 200. விலை . ரூ 250. பாதரசம் வெளியீடு.
No comments:
Post a Comment