Monday, July 28, 2014

”இரவுக்காட்சி” சிறுகதைத் தொகுப்புக்கு க.மோகனரங்கன் எழுதிய முன்னுரை


முன்னுரை


கதை முடிந்த பின்னும் தொடரும் வாழ்வு






                                                தமிழ்ச் சிறுகதை தனது வரலாற்றுப் போக்கில், பல்வேறு தசாப்தங்களிலும் வெவ்வேறு வடிவ பரி சோதனைகளையும் எடுத்துரைப்பு வகைமைகளையும் கோட்பாட்டுப் பரிசீலனைகளையும், உள்வாங்கியும் ஒதுக்கியும் கடந்தும் வளர்ந்தும் வந்திருக்கிறது. அவ்வகையில் இரண்டாயிரத்திற்குப் பிறகு எழுதப்படும் கதைகளை நோக்கினால், அவை பெரிதும் புனைவுத்தன்மை கொண்டதாகவும் உணர்வுச் சுழிப்புகளின் கவித்துவ தருணங்களை விவரிக்க முயல்பவையாகவும் எழுத் தாளனது மன அலைவு நீளத்திற்கேற்ப வடிவம்கொள்ளும் ஒரு விரிந்த சொற்பரப்பாகவுமே காணப்படுகின்றன.




                                     தற்போது நிகழ்ந்துவரும் சந்தைப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக உலகம் ஒற்றைக் கூரைக்குள் சுருங்கத் தொடங்கிவிட்டது. இதன் விளைவாக முன் னெப்போதுமில்லாத வகையில் நம் பண்பாட்டு அடையாளங்களைத் துரிதமாக இழந்துவருகிறோம். இதன் எதிர் வினையாக நிலம், இனம், மொழி, ஜாதி, மதம் இவற்றின் அடிப்படையிலான வேர்களைத் தேடும் ஒருவகையானஅடையாள மீட்புஎன்பது சமீபத்திய படைப்புகளில் ஒரு முக்கியக் கூறாக வெளிப்படுவதைக் காணலாம். ஆகவே உள்ளடக்க ரீதியாக மரபுடன் தொடர்ச்சியையும் இணக்கத்தையும் பேணும் அதே சமயத்தில் தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்ற நேர்க்கோட்டு வகையிலான கதை கூறல் முறையைத் தவிர்க்கவே தற்காலக் கதைகள் முற்படுகின்றன.



                                   
                                நவீனம் என்பதை விவரிப்பு ரீதியிலான ஒரு புதுமை என்ற அளவில் மட்டுமே மேலெழுந்தவாரியாகப் புரிந்து கொண்டிருக்கும் சில இளம் எழுத்தாளர்களுக்கு மத்தியில் அவர்களுக்கு முதுகைக் காட்டியபடி திரும்பி நிற்கும் செந்தில், அழுத்தமான மொழிப் பிரயோகத்துடன் எதார்த்தவாத விவரிப்பினூடாகத் தன் கதைகளை இயல்பாக நகர்த்திச்செல்கிறார். படைப்பு என்பதை மோஸ்தர் சார்ந்த ஒன்றாக அல்லாமல் வாழ்விற்கு இணையானதொரு தீவிரமான காரியமாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதை இக்கதைகளை வாசிக்கும் போது உணரமுடிகிறது.



                          விதிவிலக்குகளைத் தவிர்த்துவிட்டால் இன்றைய கதை எழுத்து என்பது ஆற்றொழுக்கான நடையுடன், சரளமும் சகஜத் தன்மையும் கூடிய ஒன்றாகவே பெரும்பாலும் காணப்படுகிறது. மொழியின் புதிர்கள் முன் வாசகனைத் தயங்கி நிற்கச் செய்வதைக்காட்டிலும் புனைவின் வசியத்தால் அவனுடைய வாசிப்புத் தர்க்கத்தை கட்டியிழுப்பதையே தமது படைப்பு உத்தியாகப் பலரும் கைக்கொள்கிறார்கள். இதற்கு மாறாக செந்தில், தன் கதைகளில் அடர்த்தியான காட்சிகளை மொழி யின் தீவிரத்துடன் சித்தரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார். காகிதம் முழுவதும் இடைவெளியின்றி கோடுகளால் நிரம்பியிருக்கும் ஒரு சித்திரத்தைப் போல இவரது கதைகள் நெடுகிலும் காட்சிகள் நெருக்கியடித்துக்கொண்டு நிறைந்திருக்கின்றன. இக்காட்சிகளின் துல்லியத்திற்காக இவர் அடுக்கும் தகவல்களின் அடர்த்தியால் இவரது மொழி இறுக்கமும் முடிச்சுகளும் கொண்ட ஒன்றாக மாறிவிடுகிறது. இது சரளமான வாசிப்புக்குப் பதிலாக, இடைவெளிகளைக் கோரும் நிதானமான வாசிப்பிற்கு வாசகனை உட்படுத்துகிறது.

                       நகரின் புறத்தே வாழும் அடித்தள மக்களின் அன்றாட வாழ்வுப் பாடுகளே செந்திலின் பிரதானக் கதைக்களம். மீட் பற்றத் துயரமும் கையாலாகாத கோபமும் மனக்கோணலும் ஊமைக் காமமும் குரூரமும் என எல்லாமும் கூடிய தீராத அவலத்திற்கு நடுவிலும் அவ்வாழ்வைக் கொண்டு செலுத்துவதற்கான சக்தியை எங்கிருந்து, எவ்விதமாக அவர்கள் பெறுகிறார்கள் என்ற விசாரமும் அதையொட்டிய அவதானிப்புகளுமே பெரும்பாலான கதைகளின் மையமாக அமைகின்றன.



                              கதைகளுக்குப் பாத்திரங்களின் வார்ப்பிலோ, நிகழ்வுகளின் கோவையாலோ, பக்கங்களின் எண்ணிக்கை அடிப்படையிலோ ஏற்படும் ஒரு முடிவு உண்டு. ஆனால் வாழ்க்கைக்கு அப்படிப்பட்ட முடிவு என்று ஏதுமில்லை. ஒரு நதியைப் போல அது தொடர்ந்து நகர்ந்தபடியே இருக்கிறது. வாழ்வின் ஆதாரமான உந்துவிசை அந்த இயக்கம்தான். அவ்வாறான இயக்கம் மிகுந்த சில தருணங்களையே உறையச்செய்து சிறுகதைகளென முன்வைக்கிறார் செந்தில். அதனாலேயே சம்பிரதாயமான முடிவு என்று எதுவும் இக்கதைகளில் கூடிவந்திருக்கவில்லை.

                             முதல் தொகுப்பு என்றபோதிலும் முன்னோடிகளின் சாயல் எதுவும் தென்படாமலிருப்பது இக்கதைகளின் பலம். இவருடைய பல கதைகளிலும் இயல்பாக விவரிக்கப்படும் நிகழ்வுகளின் ஆழத்தில் கொந்தளிப்பான உணர்ச்சிகளின் சுழல் ஒன்று அடி யோட்டமாக ஓடிக்கொண்டிருப்பதை உற்று கவனித்தால் உணரலாம்.

                                 


                                 எதார்த்த சித்தரிப்பு என்றே வைத்துக்கொண்டாலும் கதை யெழுத்து என்பது முழுக்கவும் வாழ்வின் நகலெடுப்பு அல்ல. வாழ்வின் எதார்த்தத்திலிருந்து கதையின் எதார்த்தம் வேறுபட்டது. நம் வாழ்வில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளுக்குள் எவ்விதமான காரண காரியத் தொடர்புகளும் இல்லாமலிருக்கலாம். அவை செய்தி முக்கியத்துவமோ, சுவாரஸ்யமோ அற்றவையாகக்கூட இருக்கலாம். ஆனால் கதையின் எதார்த்தம் அவ்வாறானது அல்ல. அதில் இடம்பெறும் ஒவ்வொரு தகவலும் நிகழ்வும் ஒரு குறியீடாகவோ, படிமமாகவோ மாறி, கதையின் தொனிப்பொருளுக்கு உள்ளார்ந்த காரணமாகி நிற்கும். இவர்களுக்கு, இவ்வளவில், இவ்வாறாகவே இந்த வாழ்க்கை விதிக்கப்பட்டிருக்கிறது என்று நமக்குக் காட்டிவிட்டு நகர்ந்துவிடும் செந்திலின் கதைகளில் அவரது வாழ்க்கை நோக்கு சார்ந்த குறிப்பமைதி எதுவும் துலக்கமாக வெளிப்பட வில்லை. அத்தகைய குறிப்புணர்த்தலையும் தொனிப் பொருளையும் பற்றிய கவனம் இவர் கதைகளில் கூடிவரும்போது, தனது உழைப்புக்குத் தகுதியான இடத்தை இவர் அடைவார். அதற்கான எல்லா அறிகுறிகளையும் இக்கதைகள் கொண்டுள்ளன என்ற அழுத்தமான நம்பிக்கையையே இத்தொகுப்பு நம்மோடு பகிர்ந்துகொள்கிறது.


. மோகனரங்கன்

(எனது முதல் தொகுப்பான ”இரவுக்காட்சி” சிறுகதைத் தொகுப்புக்கு க.மோகனரங்கன் எழுதிய முன்னுரை)


இரவுக்காட்சி - கே.என்.செந்தில்-காலச்சுவடு பதிப்பகம்