மீட்சி
காலை எந்தப் பக்கமும் அசைக்க முடியவில்லை. கெண்டைச் சதையில் கொக்கி சொறுகி
இழுத்தது போல வலி எடுத்தது. உறக்கம் கலைந்து புரண்டபோது மூக்கையாவின் முகமும் அவர்
சொன்ன அடையாளங் களும் ஒவ்வொன்றாக - வரிசை மாற்றி - மனதிற்குள் வந்து கொண்டிருந்தன.
போர்த்தியிருந்த கைலியை விலக்கி எழுந்து, கால் கட்டை விரலில் நின்று பெரிய ஊளையோடு சடவு முறித்ததில்
சொடக்குகள் உடம்பிலிருந்து தெறித்தன. இன்னும் தூக்கம் மிச்சமிருந்ததால் கண்கள்
தணலாக எரிந்தன. எதிரே, கணுக்காலை வெள்ளையங்கி மூடி யிருக்க,
தோளில் புரண்ட கேசத்தோடு ஆட்டை அணைத் திருக்கும்
கிருஸ்துவின் படத்தைக் கண்டதும் கண்களை மூடி சிலுவைக் குறியிட்டுக் கொண்டான்.
பசியால் வயிற்றுக்குள் குமிழ்கள் உடைவது போலவும் அது கிர்ரென்று மேலேறி வருவது
போலவும் சத்தம் கேட்டது. இரவு அணைத்து வைத்திருந்த பீடியை மற்றொருமுறை
பற்றவைத்துக் கொண்டான். பசியை ஒத்திப்போட லாரன்ஸ் சொல்லித் தந்த பாடம் இது. கண்கள்
சற்றே தெளிந்தது போல இருந்தது.
ஓடு வேயப்பட்ட இரட்டைச் சார்பு வீடுகளுக்கு மத்தியில் அபூர்வமாகவே காங்கிரீட்
கட்டிடங்கள் தென் பட்டன. இந்தப் பகுதிதானா என்று குழப்பமாகயிருந்தது.
உறுதிப்படுத்திக்கொள்ள மீண்டும் அவ்வழியே நடந்து திரும்பியதில்,
பராமரிப்பின்றி பூட்டிக் கிடக்கும் கோயில்,
அதனையடுத்து இரண்டு வீடுகள் தள்ளியிருந்த சலூன் கடை,
அதற்கெதிரே முடிக்கப்படாத கட்டிடத்தின் உச்சியில் வைக்கோல்
திணித்து பானை கவிழ்க்கப்பட்ட திருஷ்டி கோமாளி என நினைவிலிருந்த அடையாளங்கள்
பொருந்திப் போவது போலப்பட்டது. இருப்பினும் வினாடிகளுக்குள்ளாக நான்கைந்து பேராவது
கடப்பதும், எதிர்ப்படுவதுமாக இருந்தது சிறு சஞ்சலத்தை உண்டாக்கிற்று.
அந்தக் கடையின் வெளியே போடப்பட்டிருந்த நீளமான பெஞ்சில் அன்றைய நாளிதழைக்
கண்ணுக்குள் வைத்து அமர்ந் திருந்தவன் மீது கடையை சுத்தம் செய்பவளின் நிழல்
அசைந்தது. அவளது அக்குளை வியர்வை வட்டமாக நனைத்திருந்தது. கையைக் கீழே சரித்தபோது
அந்த வட்டம் இரண்டாக மடிந்தது. சலூனையொட்டித் திரும்பிய குறுகிய சந்திற்குள்
கண்ணைப் பறிக்கும் நிறத்தினாலான (கறுப்பு வெள்ளையைத் தவிர மூக்கய்யா விற்கு வேறு
நிறங்கள் தெரியாது) பின்கட்டுக் கதவின் உள்ளே இரண்டு குடித்தனங்கள் புழங்கும்
வீடது என்ற ஞாபகத்தின் கயிற்றை நினைவிலிருந்து பிடித்ததும் சந்தோஷத்தில் மூச்சு
முட்டிற்று.
ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்த கதவை மெதுவாகத் தள்ளியதும் திறந்து கொண்டது.
முதல் வீடு பூட்டிக் கிடந்தது. சற்றுத் தள்ளி ஓரத்தில் போர்த்தப்பட்டிருந்த
பச்சைப் படுதாவை விலக்கியதும் உறை கிழிக்கப்படாத புதிய பெரிய கறுப்பு பைக்கைக்
கண்டவுடனே அதுவரையிருந்த அத்தனை சோர்வு களும் இருந்த இடம் தெரியாமல் போயிற்று. ஓசை
கேட்காமல் நடந்து கதவைச் சாத்திவிட்டு வந்தான். ஓரங்களில் கிழிந்திருந்த
பாலித்தீன் உறை காற்றுக்குப் படபடத்தது. உள்ளே நுழைந்து சாவியை எடுக்க வேண்டிய
வீட்டுக் கதவின் முன் குழந்தை யொன்று செப்புச் சாமான்களில் மண்ணை நிரப்பி
விளையாடிக் கொண்டிருந்தது. அதன் காலில் ஒரே ஒரு தண்டி மட்டுமே போட்டிருந்தது
அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. உள்ளே நகைகளும் இருப்பதாக மூக்கையா
சொல்லியிருந்தார். எந்தக் குழந்தையும் பழகிய சில கணங்களில் அவனோடு ஒட்டிக்
கொள்ளும்படியான ராசி உடையவன் அவன். அதற்குரிய சேஷ்டைகள் சிறுவயதிலேயே அவனது
இயல்பாக மாறியிருந்தது. அதனருகில் சென்று குனிந்து கைகளைத் தரையில் ஊன்றி யானை
போலத் தவழ்ந்து ஒரு கையை மேலாகத் தூக்கிக் குழைத்தபடியே அதன் தலையில் வைத்தான்.
பால் பற்கள் தெரிய சிரித்தது. எண்ணெயின்றிக் காய்ந்து கிடந்த அவனது முடியைப் பற்றி
இழுத்து முதுகில் ஏற முயன்றது. அருகில் கிடந்த பந்தை வேறு திசையில்
உருட்டிவிட்டான். அதை எடுக்க ஓடிய இடைவெளியில் உள்பக்கமாகப் போடப்பட்டிருந்த தாளை
இரண்டு முறை சத்தம் வராமல் அசைத்து லாவகமாகத் திறந்து பட்டென நுழைந்தான்.
கரிபடிந்து கிடந்த அந்த சமையற்கட்டின் ஓடுகளுக்குக் கீழே சுத்தமாக தேய்த்துக்
கழுவப்பட்ட பாத்திரங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. சிறிய தட்டில் பிசைந்த
பருப்புச் சோறு காய்ந்து கிடந்தது. பசி வேறு குடலைப் புரட்டியது. அதிலிருந்து ஒரு
பிடியை உருட்டியபோது ஓட்டுச் சரிவிற்கும் சுவருக்கும் இடையில் இரு பச்சை நிறக்
கண்கள் உற்றுப் பார்ப்பதைக் கண்டான். கோபம் தலைக்கேற,
சோற்றுருண்டையை அந்தக் கறுப்புப் பூனை மீது வேகமாக
எறிந்தான். இலக்கு தவறி ஓட்டின் மீது பருக்கைகள் பட்டுத் தெறித்தன. அருகிலிருந்த
சிலந்தி வலை மீது ஒன்றிரண்டு சிக்கியதில் வலை அசைந்து நின்றது. பூனை உடலைக்
குறுக்கி நெளித்து வெளியே குதித்தது. சட்டெனக் கதவிற்கு வெளியே ஏதோவொரு சத்தம்
கேட்டதும் கதவிடுக்கின் வழியே ஒற்றைக் கண்ணால் பார்த்தான். அங்கு குழந்தை முதுகைக்
காட்டி நின்று கொண்டிருந்தது. அதே கணத்தில் அடுத்த அறையிலிருந்து குரல்கள்
கிசுகிசுப்பதாகப் பட்டது. யாருமற்ற வீடென்றே மூக்கையா சொல்லியிருந்தார். அகப்படுவதற்குள்
தப்பி விட வேண்டும் என நுழைந்த கதவைப் பிடித்துத் தள்ளினான். அது வெளிப்பக்கமாகத்
தாழிடப்பட் டிருந்தது. அதை நீக்கும் வழியை மூக்கையா சொல்லியிருக்க வில்லை.
பழங்காலப் பலகைகளை இணைத்துச் செய்யப்பட்ட கதவின் துவாரத்தின் வழியாக உள்ளே
நோட்டமிட்டான். பரந்த இறுகிய மயிரடர்ந்த மார்பை மஞ்சள் பூசப்பட்ட விரல்கள் அளைந்து
கொண்டிருப்பதைக் கண்டான். கோணலாக அவன்மீது ஒருத்தி கிடந்தாள். மேலே
மாட்டிப்பட்டிருந்த படத்தில் வேறொருவனுடன் மணக்கோலத்தில் அவளே நிற்பது தெரிந்தது.
படுத்துக் கிடந்தவன் தனது முன் வழுக்கையை மறைக்கப் பின்னால் வளர்ந்திருந்த முடி
அவன் கழுத்தை அசைக்கையில் முன்னால் வந்து விழுந்தது. அவனது புஜங்கள் சற்றுமுன்
கண்ட கட்டிமுடிக்கப்படாத கட்டிடத்தில் படிக்கட்டு களுக்காகப் போடப்பட்டிருந்த
காங்க்ரீட் தளம் போல இறுகிக் கிடந்தது. ஆணியில் மாட்டப்பட்டிருந்த முழுக்கைச்
சட்டையின் கைகள் மின்விசிறியின் காற்றுக்கு அங்குமிங்கும் அசைந்து கொண்டிருந்தது.
சாவியின் மீதுதான் அது மாட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகத்
தெரிந்ததும்கூட அங்கிருந்து தப்புவதிலேயே அவனது கவனம் இருந்தது. வேறு வழியின்றி
அடுப்புத் திட்டு மேல் கால் வைத்து எம்பி நூலாம்படைகள் தொங்கிக் கொண்டிருந்த
விட்டதைப் பிடித்துத் தொங்கினான். விரல்கள் மீது கனமாக ஏதோ ஊர்வது போலிருந்தது.
கையை உதறியதில் அது சுவரில் விழுந்தது. கைகள் பிடி நழுவித் தளர்ந்து பொதி மூட்டை
போல தொப்பென்று விழுந்தான். எதிர்சுவரில் மரப்பல்லி வேகமாக ஓடி மறைந்தது. ஆவேசமாகத்
கதவு திறக்கப்பட்டதும் சுதாரித்து எழுவதற்குள் அகலமான அழுக்கடைந்த உள்ளங்கால்
அவனது கழுத்தை நசுக்கியது. தலையில் சிமெண்ட் நிறத்தில் தொப்பியணிந்து நின்று கொண்
டிருந்தவனின் மார்பு படபடப்பில் ஏறுக்குமாறாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.
பின்புறத்தைக் குடைந்து கொள்ளும்போது முகம் விகாரமாவது போல அவனது முகம் இருந்தது.
“தாயோலி . . . பொணமாத்தாண்டா வெளியிலே போவ.”
சிறிது கழுத்தைத் தூக்கிச் சாய்த்து காலைக் கடித்தான். வெடுக்கென்று காலை
இழுத்துக் கொண்டதும் நொடியில் எழுந்து தொப்பிக்காரனைத் தள்ளிவிட்டு ஓட முயன்றான்.
இரண்டு அடிகளுக்குள்ளாகவே தொப்பிக்காரன் குப்புற விழுந்து அவன் காலை வாரிவிட்டு
அப்படியே ஊர்ந்து அவனது வயிற்றின் மேல் ஏறியமர்ந்து வெறி தீர ஓங்கிப் பலமாகக்
குத்தினான். கதவைத் திறந்த வேகத்தில் அடித்துக் கொள்ளத் துவங்கிய நாதங்கியின் ஓசை
நின்றுவிட்டிருந்தது. அவசரமாக ஓடி வந்தவளின் பின்னாலிருந்த ஆட்கள் இவனைக் கண்டதும்
காற்றாக நுழைந்து அடித்துப் புரட்டினார்கள். நரம்பினாலான ஒருவன் அடிப்பதை விடவும்
கத்திக் கொண்டிருந்தான். அவன் வாயைத் திறக்கும்போதெல்லாம் பான்மசாலாவின் மணம்
அடித்தது.
“ங்ஙோத்தாலாக்கா. . . ங்ஙொம்மாலோக்க... உன்னயெல்லாம் நிக்க
வச்சு தோலுரிக்கணுன்டா பரதேசித் தாயோலி. . . பேரென்னடா புண்டலாக்கா. . .”
அவனுக்கு எந்த வசவும் ஒரு பொருட்டாகத் தோன்ற வில்லை. லாரன்ஸ் செகஸ்டனாக ஆகும்
முன்னர் இருவரும் சேர்ந்து பொதுக் கழிப்பிட உட்சுவர்களில் கரித்துண்டுகளால்
புணர்ச்சியின் பல்வேறு நிலைகளை ஆபாசமாக வரைந்துவிட்டு அதற்குக் கீழே எழுதி வைத்த
குறிப்புகளை நினைத்துக் கொண்ட போது இவையெல்லாம் ஒரு சிறிய கறுப்பு எறும்பு ஊர்வது
போலக் குறுகுறுப்பாக இருந்தது. அவ்வளவுதான். ஆள் மாற்றி ஆள் அடித்து சட்டையையும்
கைலியையும் கிழித்து வீசிவிட்டு அவனை அரைநிஜாரோடு இழுத்துக்கொண்டு தெருவின்
மத்தியிலிருக்கும் விளக்குக் கம்பத்திற்குக் கொண்டு சென்றார்கள். வீங்கிய கண்களோடு
கெஞ்சிக்கொண்டிருந்தவனை மேலும் பல அடிகள் கொடுத்து அந்தக் கம்பத்தில் இருத்தி சணல்
கயிற்றால் வாழைக் கம்பத்தைக் கட்டுவது போல கையைப் பின்னுக்கு வைத்துக்
கட்டினார்கள். வலி தாங்காது “ஐயோ. . .” என்றான். படபடவெனப் பல அடிகள் விழுந்தன.
வழிப்போக்கர்களும் தெருவாசிகளும் அவனைச் சூழத் தொடங்கினர். சற்று முன்
வந்தவர்களுக்கு அவனைப் பிடித்த சாகசத்தை அந்தத் தொப்பிக்காரன் சொல்லத்
தொடங்கினான். முன்பிருந்தே அவனுடன் இருந்து கொண்டிருப்பவர்களுக்கு அது சலிப்பாக
இருந்தது.
“தூங்கீட்டு இருந்துருக்குது. இவென் மெதுவா உள்ள போயிட்டான்.
ஏதோ உருள்ற மாதிரி சத்தம் கேட்டவுடனே பட்டுன்னு எந்திரிச்சு கதவெ தொறந்தொப்போ
இந்தத் தொண்டு பய - பேச்சை நிறுத்திவிட்டு ஓடி வந்து உதைத்தான். கம்பம் அதிர்ந்தது.
கத்தக்கூட திராணியற்றவனாகியிருந்தான் - நிக்கிறதப் பாத்தொன்னியமும்
குய்யோமுய்யோன்னு இது கத்திரிச்சு. அந்த சந்துல சோலியாப் போயிட்டிருந்தேன். என்னமோ
ஏதோன்னு பதறியடிச்சு ஓடுனன். தாயோலி ஓடப் பாத்தான். உடுவனா நானு!”
பற்களைக் கடித்தான்.
அறைகளும் அடிகளும் நம்ப முடியாதளவிற்கு மீண்டும் விழத் தொடங்கின. கூட்டமாக
செம்மறியாடுகள் சரிவில் இறங்குவது போல வெவ்வேறு கைகள் குழப்பமாக - முகத்தைப்
பார்க்க முடியாதவாறு - உடம்பில் விழுந்தன. உடலெங்கும் எரிந்தது. அதில்
மோதிரவிரலொன்று அவன் கன்னச் சதையைக் கிழித்தது. வெயிலுக்கு கொல்லனின் பட்டறை
இரும்பு போல விளக்குக் கம்பம் நெருப்பாகச்சுட்டது. முதுகை முன்னுக்கு நகர்த்த
முடியாதவாறு அவன் கம்பத்தோடு இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தான். பிரயத்தனப்பட்டு
தலை தூக்கினான். அடையாளம் தெரியாத ஆட்களால் உருவான அரைவட்டத் தின் சுற்றளவு
நிமிடத்துக்கு நிமிடம் பெரிதாகிக் கொண்டே யிருந்தது. அவரவர் உடல் வலுவை அவனிடம்
பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். அவள் தட்டுப்படுகிறாளா என்று பார்த் தான்.
உள்ளங்கைக்குள் மோவாய் புதைந்து கிடக்க, விரல் களால் வாயைப் பொத்தியிருந்த கிழவியைத் தவிர அங்கு
பெண்களேயில்லை. அப்படியே கண்கள் கூட்டத்தை அளைந்தன. ஏழெட்டு பேர்களுக்குப்
பின்னால் ராஜாமணி நின்று கொண்டிருந்தான். அவனோடு சேர்ந்துதான் வண்டியை விற்கும்படி
மூக்கையா சொல்லியிருந்தார். இவனை நோக்கி வர இயலாதவாறு முன்னாலிருந்த தோள்கள்
இடைவெளி இல்லாமலும் நெகிழ்ந்து கொடுக்காமலும் அமைந்திருந்தன. அதிலிருந்து பிதுங்கி
வந்த அவன் வயதையொத்தவன், “பேரென்னடா. . . எத்தன பேர்ரா நீங்க . . . கேக்கறமல்லடா
பதில் சொல்லு . . . நிக்கறவனயெல்லாம் கேனக்கூதின்னு நெனச்சயாடாத் தாயோலி . . .”
என்றான்.
2
சாதாரண வயிற்றுப் போக்காகத் தொடங்கிய சுகக்கேடு அவனை விஷக் காய்ச்சலில் கிடத்தியிருந்தது.
அந்தப் படுக்கையைக் கண்டவர்கள் அவனை இரண்டுவார கால நோயாளி என்று நம்ப
மறுப்பார்கள். அந்த அளவிற்கு அது அழுக்கும் நெடியுமாக மாறிவிட்டிருந்தது. பூனை
முகர்ந்ததும் முகத்தைச் சுளித்து நகரும் காய்ந்த கருவாடு போலிருந்தான். எழ முயன்று
திணறியதில் தலை சுற்றிற்று. நகரத் தெம்பில் லாமல் அப்படியே சிறுநீர் கழித்தான்.
அது கைலியை நனைத்து கால்களில் வழிந்து தரையில் ஓடி சிறு குழியில் தேங்கிற்று.
ஓங்கரித்து வாந்தி எடுத்தான். இரண்டு பெரிய வெள்ளை மாத்திரைகள் அதில் கிடப்பது
அவனுக்கு நான்காகத் தெரிந்தது. அப்படியே படுக்கையில் விழுந்தான். தலையணையில்
மூக்கு மோதி வலியால் விடைத்துச் சுருங்கிற்று. லாரன்ஸ் என்ற பெயரை எவ்வளவு
முயன்றும் அது நாவிற்குள்ளேயே முடங் கிற்று. ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில்
அப்பாவின் உள்பாக் கெட்டிலிருந்த அத்தனை ரூபாய்களையும் எடுத்துக் கொண்டு,
வந்து நின்ற முதல் பேருந்தில் ஏறி அறியாத ஊர் நோக்கி
அமர்ந்ததும் பதட்டமாக உணர்ந்தான். தேடி அலையப் போகும் அப்பாவை நினைத்ததும்
உள்ளுக்குள் சந்தோஷம் பொங்கிற்று. அந்த பாதி நாளை சுற்றித் தீர்த்துவிட்டு
சில்லரைகள் மட்டுமே மீதமிருக்கும் அளவிற்கு செலவுகள் செய்து,
அசதியால் அருகில் மூடப்பட்டிருந்த கடையின் படிக்கட்டில்
படுத்துக் கொண்டான். விடிகாலையில் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தவனைக்
கீழ்ப்படிக்கட்டில் படுத்திருந்த லாரன்ஸ்தான் அவனது குடிசைக்கு அழைத்து வந்தான்.
சட்டென அம்மாவின் முகம் ஞாபகத்தில் எழ கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது.
வெள்ளை அங்கியோடு ஒரு உருவமும் அதனை யொட்டி மற்றொருவரும் நுழைவதைக் கண்டவுடன் அவன்
நினைவு கலைந்தது. பின்னாலிருப்பது லாரன்ஸ் என அறிந்ததும் அவனது கண்ணீர் நின்றது. “கதவைத் திற, லாரன்ஸ்” என்ற குரல் கேட்டது. குடிசையின் தடுக்கை சற்றே தள்ளி
வைத்தான். வெளிச்சம் வந்ததும் பளிங்கில் விரிசில் விழுந்தது போன்ற அந்த முகத்தைக்
கண்டான். தலை நிற்காமல் ஆடிக் கொண் டிருந்ததில் தளர்ந்து தொங்கிய கழுத்துச் சதை
மெதுவாக அசைந்தது. உதடுகள் முணுமுணுக்க, ஜெபமாலையின் முத்துக் களை அவரது கட்டை விரல் கீழே
இறக்கியபடியேயிருந்தது. வயிற்றைக் குமட்டும் அந்த நெடியில் லாரன்ஸ் மூச்சை
அடக்கியிருப்பது விறைப்பாக நின்ற அவனது உடல் மூலம் தெரிந்தது. “வாரப் பிரார்த்தனைக் கூட்டத்தில் உனக்காகவும் ஆண்டவரிடம்
ஜெபிக்கிறேன்” என்றவாறே அவனது முகத் தருகே குனிந்து புருவங்களைத் தொட்டுக்
கொண்டிருந்த வறண்ட முடியை ஒதுக்கிவிட்டார். அந்தக் கண்கள் நீரோடை யின் தெளிவைக்
கொண்டிருப்பதாகப்பட்டது. லாரன்ஸின் தோள்களைப் பிடித்தபடியே அவர் வெளியேறியபோது
அவனது காதில் அவர் ஏதோவொன்றைச் சொல்ல, அவன் பவ்யமாகத் தலையசைத்தான். தடுக்கையையொட்டி நின்றிருந்த
குழந்தை யொன்று அவரிடம் கையை நீட்டியது. அங்கியின் ஜேப்பியி லிருந்த இனிப்பை
எடுத்துத் தந்தார். மற்றொரு வெற்றுக்கையைக் காட்டியது. சிரித்துக்கொண்டே அதற்கும்
தந்துவிட்டு அதன் கன்னத்தைத் தட்டினார். அந்தச் சந்து முனையைக் கடப்பதற்கு
முன்பாகவே அவரது முழங்கால்களைச் சுற்றிக் கைகளை ஏந்தியவாறு குழந்தைகள் வளைத்துக்
கொண்டார்கள் என்றும் இருந்தவற்றையெல்லாம் தந்த பிறகும் எஞ்சிய குழந்தைகளுக்கு
இனிப்புகள் வாங்கித் தரும்படி தன்னிடம் பணம் தந்ததாகவும் அவரை விட்டுவிட்டு வந்த
லாரன்ஸ் அவனிடம் பணத்தை எடுத்துக் காட்டினான்.
மறுநாள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு காலத்தில் இருந்து,
தற்போது பேருந்து நிறுத்தம் வரும் அளவிற்கு வளர்ந்து
விட்டிருக்கிற இடத்திலிருக்கும் தேவாலயத்தின் காம்பௌண் டுக்குள் லாரன்ஸ் அழைத்துச்
சென்றான். நுழைந்து இடது பாதையில் திரும்பி சிறிது தூரம் நடந்ததும் அது
மருத்துவமனை யின் முன்பகுதி என்று அவனுக்குப் புரிந்தது. அங்கு ஏற்கனவே ஃபாதரின்
உத்தரவின் பேரில் அவனுக்குப் படுக்கை ஒதுக்கப் பட்டிருந்தது. ஏளனங்கள்,
அசூசைகள் எதுவுமின்றி அங்கிருந் தவர்கள் அவனை
நடத்தினார்கள். லாரன்சுக்கு செகஸ்டன் வேலையை ஃபாதர் போட்டுக் கொடுத்திருந்தார்.
அவனது பணியை முடித்த பின்னர் தினமும் ஒரு மணி நேரம் வேதா கமத்தை உடனிருந்து
படித்துக்காட்ட வேண்டும் என்று உத்தரவும் இட்டிருந்தார்.
ஃபாதர் ஆண்ட்ரூசின் பிரசங்கங்களை அவன் படுத்திருந்த படியே கேட்டுக்
கொண்டிருப்பான். சில சமயங்களில் சிலுவையி லறையப்பட்ட யேசுவின் முன் உருகியெரியும்
மெழுகு வர்த்தியைக் கண்டதும் அவன் தலையணையில் கண்ணீரின் சொட்டுகள் விழும். அன்று
நெடுநேரம் கூடவே கழித்துவிட்டுச் சென்ற லாரன்ஸ் வைத்த வேதாகமத்தை உடல் உதற எழுந்து
பிரித்தபோது அதிலிருந்த ஒரு வரி அவன் கண்ணில்பட்டது. “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியா திருந்தால்,
உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியா திருப்பார்.”
3
ஃபாதர் ஆண்ட்ரூசுக்கு சொல்லியனுப்பிவிட்டு பழைய தெம்போடு காத்திருந்தான்.
லாரன்ஸ் வீடு திரும்ப சைக்கிளை எடுத்து வரச் சென்றிருந்தான். அவர் வரும்வரை
சர்ச்சுக்குள் காற்றுக்கு அணைந்து போயிருந்த மெழுகுவர்த்திகளை ஒவ் வொன்றாக ஏற்றத்
தொடங்கினான். அன்னையின் மடியில் மாறாத புன்னகையோடு குழந்தை யேசு அமர்ந்திருக்க,
பின்புறச் சுவர் சுடர்களால் செந்நிறமாக ஜொலித்தது.
அங்கியின் சரசரப்பு கேட்டவுடன் அவனது கவனம் கலைந்தது. வரும் வழியிலேயே அவரை
நிறுத்தி காலடியில் விழுந்து “இந்த உதவியை . . .”
என்று தொடங்கும் முன்னரே “விசுவாசிகளை கர்த்தர் ஒருபோதும் புறக்கணிப்பதில்லை”
என்று முடித்தார். அவனிடம் ஒரு அட்டையைத் தந்து “போய்ப் பார்” என்றார். கடவுளின் பெயரால் பெற்றுத் தரப்பட்ட அந்தப்
பணியில் சேர்ந்த மறுவாரம் அவனது பூரண சம்மதத் துடன் அவனுக்கு ஞானஸ்நானம்
செய்யப்பட்டது. அவனது தலையில் செல்லமாகக் கை வைத்து,
“இனி நீ மாரிச்சாமி அல்ல.
தேவனின் அருளால் இப்போதிருந்து ஆசீர்வாதம் என அழைக்கப்படுவாய்”
என்றார்.
4
தொங்கிக் கிடந்த முகத்தை லேசாக நிமிர்த்தியபோது,
அவனுக்கு நேரெதிராக அவள் நின்றாள். ஆட்கள் பாதிக்கும் மேல்
காணாமல் போயிருந்தார்கள். அவளை விசாரிக்க நெருங்குபவர்களைக் கண்டதும் முகத்தை
வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள். தொப்பிக்காரன் சமிக்ஞையால் அவளை ஊமை
யாக்கியிருந்தான். அவள் இடுப்பிலிருந்த குழந்தை இறங்க அடம்பிடித்தது. அதைக் கீழே
இறக்கி ஒரு உலுக்கு உலுக்கி விட்டு அதன் தொடையை நிமிண்டினாள். அது வீறிட்டு அலறத்
தொடங்கிற்று. வேறு வழியின்றி அவர்கள் தொப்பிக் காரனிடம் நகரத் தொடங்கினார்கள். ஏதோ
நினைவு மறிக்கத் தேடினான். அங்கு ராஜாமணியைக் காணோம். “கைவிடப் பட்டவர்கள் கர்த்தரின் குழந்தைகள்”
என்ற ஃபாதரின் பிரசங்க வரியொன்றை நினைத்துக் கொண்டான்.
ஃபாதர் மட்டும் இறந்து போகாமலிருந்திருந்தால் மூக்கையாவைப் பார்த் திருக்கவே
தேவையிருந்திருக்காது. அவர் இறந்து சில வாரங் களுக்குப் பின் கூடிய பாஸ்ட்ரேட்
கமிட்டி கூட்டத்தில் அவருக்கு விசுவாசமாக இருந்த லாரன்ஸ் செக்ஸ்டன் பொறுப்பி
லிருந்து நீக்கப்பட்டான். தகவல் அறிந்ததும் அடுத்த ஞாயிறு சர்ச்சுக்கு
வந்தவர்களிடம் இவன், லாரன்ஸ் நீக்கப்பட்ட மர்மம் குறித்த நோட்டீசுகளைத் தரத்
தொடங்கினான். அந்த சர்ச்சிலிருந்து சென்ற ஒரு தொலைபேசி அழைப்பால் அவனது வேலை
பறிக்கப்பட்டது, அவனுக்கு அடுத்த நாள் பணிக்குச் சென்றபோதுதான் தெரிந்தது.
கால்களால் பூமியைப் பின்னுக்குத் தள்ளி விட்டு விடும் ஆவேசத்துடன் ஒருவன் ஓடி
வந்தான். குழந்தை பயந்து அழுகையை நிறுத்திய சில நிமிடங்களில் பிற முகங்களைப்
பார்த்தபடியே தேம்பத் தொடங்கியது. தொப்பியை கூட் டத்தில் துழாவி அவனிடம்,
“வேற கேசப் பார்க்க
போயிருக்கி றாங்களாமா வந்தொன்ன அனுப்பறேன்னாங்க”
என்றான். அக்கறையோடு கேட்டுக் கொண்டிருந்தவனின் கண்கள்
சுருங்கிய மறு நிமிடத்தில் முகம் மலர்ந்தது. சற்றுத் தொலைவி லிருந்து கையில்
சூட்கேசுடன் சோர்வோடு கறுப்புக் கண்ணாடி போட்டிருந்த ஒருவன் நடந்து வந்து
கொண்டிருந்தான். தேம்பிக் கொண்டிருந்த குழந்தை அவனை நோக்கி ஓடியது. அவளைக்
கைகாட்டி ஏதோ சொல்லிற்று. அவன் தூக்கித் தோளில் போட்டதும் தேம்பலை நிறுத்தியது.
நடுக்கத்தை மறைந்துக் கொண்டே அவள் அவனிடம் சென்றாள்.
கழுத்துப் பட்டையைத் தளர்த்தியபடியே குழந்தையை அவளிடம் தந்தான். அந்தக்
கண்ணாடி அவனுக்குக் கச்சித மாகப் பொருந்தி இருந்தது. மழிக்கப்பட்டிருந்த முகத்தில்
காற்றுக்கு கரித்துகள்கள் வந்து ஒட்டிக் கொண்டது போல மூன்று நாளத்திய ரோமங்கள்
அரும்பியிருந்தன. பேசிக் கொண் டிருக்கும்போதே அவனது உடல் மென் காற்றுக்குத் திரைச்
சீலையொன்று நெகிழ்ந்து அடங்குவதுபோலக் குழைந்தது. அவனது செய்கைகள் ஏதோவொரு
விதத்தில் பெண்மையின் நளினத்தைக் கொண்டிருப்பதாகப்பட்டது. தொப்பிக்காரனோடு தான்
அவன் முழுக்க பேசினான். கட்டப்பட்டுக் கிடந்தவனின் தொடையின் மீதும் அரை நிஜாரின்
மீதும் அவனது பார்வை வளர்ந்தது. “ஸ்டேசன்ல சொல்லீட்டீங்களா”
என்று கீச்சுக் குரலில் கேட்டான்.
இவனது உதடுகள் வறண்டு காய்ந்து போயிருந்தன. எதையுமே கேட்க முடியாதவாறு
பசிக்குக் காதுகள் அடைத்துக் கொண்டன. எதுவுமே முடிவுக்கு வராமலிருப்பது பெரிய
இம்சையாக இருந்தது. கழுத்துப் பட்டையைக் கழற்றி மணிக் கட்டு மேல் போட்டுக்
கொண்டிருந்தவனுக்கு அருகில் நாயொன்று நெருங்கி வந்து அவிழ்ந்து கிடந்த ‘ஷு’வின் கயிற்றை முகர்ந்தது. தொப்பிக்காரன் கோபமாக அதன்
வயிற்றின் மீது ஓங்கி உதைத்தான். கோணிப் பையை எறிந்தது போல அந்த செம்பட்டை நாய்
நிதானம் தவறி சாக்கடைக்குள் விழுந்தது. உடனே மேலேறி வந்து ஓயாமல் குரைத்தது. அது
உடம்பை உதறியதில் அதைச் சுற்றித் துகள்களாகச் சாக்கடை நீர் சிதறிற்று. சிறிது
தூரம் போய் நின்று, நீண்ட ஊளை யொன்றை எழுப்பியது. செருப்புக் கால்களால் தரையில்
இரண்டு பெரிய சத்தமான அடிகளைத் தொப்பிக்காரன் வைத்ததும் அங்கிருந்து பாய்ந்தது.
அதற்குப் பயந்து தொலைவில் இரண்டு பேர் மிரண்டு பதுங்கினார்கள். அருகில் வரும்போது
அது போலீஸ்காரர்கள் எனத் தெரிந்தது. அதில் வயதானவனின் உடல் வியர்வையில் தொப்பலாக
நனைந்திருக்க, ஓயாமல் விசில் ஊதி கன்னம் ஒடுங்கிப் போயிருந்தவனின் தோளைப்
பிடித்தபடியே வந்து சேர்ந்தான். ஏறக்குறைய மயக்கத்தில் தொங்கிப்போயிருந்த இவனது
முகத்தை இடது தோள் தாங்கியிருந்தது. எங்கும் எந்தப் பேச்சும் இல்லை. சிறு சல
சலப்பு உண்டாகி, உண்டான சுவடு தெரியாமல் மறைந்தது.
“எந்த ஊர்ரா நீயி. மூஞ்சி புதுசாயிருக்கு?”
வயதானவன் கேட்டான்.
முன்பே அவனை அறிந்திருந்தவர்கள்கூட அப்போது அவனிருந்த கோலத்தைக் கண்டதும் இதே
கேள்வியையே கேட்டிருக்கக்கூடும். அந்த அளவிற்கு அடியால் உருமாறியிருந் தான். சிறு
மூக்கு உடைந்து ரத்தம் மோவாயில் ஒழுகிக் காய்ந்து போயிருந்தது. எண்ணற்ற
நகக்கீறல்களும் விரல்களின் அச்சுகளும் பதிந்து போயிருந்த முகம் வீக்கத்தில்
விகாரமாகி யிருந்தது.
போலீஸ்காரர்களிடம் தொப்பிக்காரன் மிகச் சுருக்கமாக ஏதோ சொன்னான். கட்டை
அவிழ்த்து விடச் சொன்னார்கள். அவன் வந்து அவிழ்த்ததும் கைகள் சரேலென வந்து தொடை
யில்பட்டன. அப்போது தோள்பட்டையிலிருந்து ‘சலக்’கென்ற சத்தம் கேட்டது.
“நட்ரா தாயோலி . . . தாலியறுக்கறதுக்கின்னே எங்கிருந்து தான்
வர்றானுங்களோ தெரியல . . .” என்று கன்னம் ஒட்டிக் கிடந்தவன் அவனை முறைத்தான்.
இருவருக்கும் நடுவில் அரை நிஜாரோடு நடக்க முடியாமல் நடக்கத் தொடங்கினான்.
அதில் வயதானவன் திரும்பி, தொப்பிக்காரனைப் பார்த்து,
“வந்து எழுதிக்
கொடுத்திடுங்க” என்றான். இவனும் திரும்பியபோது,
தொப்பிக்காரன் தனது கைலியை அவிழ்த்து நன்றாகக் கட்டிக்
கொண்டிருந்தான். அந்தக் குழந்தை அங்கிருந்து பூட்டப்பட்ட சைக்கிளின் பெடலை
பின்பக்கமாகச் சுற்றிக் கொண்டிருந்தது. இவனைக் கண்டதும் உள்ளங்கைக்கு முத்தம்
தந்து அதை மூடி அவனிடம் நீட்டியது. பார்க்க முடியாமல் முகத்தைத் திருப்பியதில்
வயதானவனின் இடது கால் பெருவிரல் இல்லாமலிருப்பதைக் கண்டான். மனம் சந்தோஷத்தில் ஒரு
நிமிடம் துள்ளிற்று. அவனுக்கு சற்றே எங்கேனும் அமர்ந்து கொஞ்சம் தண்ணீர்
குடித்தால் போதுமென்றிருந்தது. ஸ்டேஷனிருக்கும் தெருவைத் தொட்டதும்
ஸ்டேஷனிலிருந்து பயங்கரமான அலறல் கேட்டது. யாரோ யாரையோ மிருகத்தனமாக அடித்துக்
கொண்டிருக்கிறார்கள் என்றுபட்டது. அவனது கால்கள் பயத்தால் அங்கேயே நின்று விட்டன.
அவர்கள் எவ்வளவு தள்ளியும் அவனை நகர்த்த முடியவில்லை. கோபத்தில் அவனை அந்த
வயதானவன் ஒரு எக்கு எக்கினான். நெடுநாள் கவனிப்பாரற்றுக் கிடக்கும் துணி
கொடியிலிருந்து நழுவுவதுபோல மயக்கத்தில் உடல் தளர்ந்து அவர்களுக்கிடையில் சரிந்து
விழுந்தான். பெரிய மழை பெய்வதற்கான முஸ்தீபுகளோடு தூறல்கள் சடசடசட வென விழத்
தொடங்கின.
புனைகளம், செப்டம்பர் 2007
(இக்கதை என் முதல் தொகுப்பான ‘இரவுக் காட்சி’யில் இடம்பெற்றிருக்கிறது.)
ஓவியங்கள் : நன்றி : P.R.ராஜன்.