Monday, January 3, 2022

விகடன் நேர்காணல்

 

"கதைகளின் மீதுள்ள தீராத விருப்பமும் வியப்புமே அவற்றை எழுதுவதற்கான அடிப்படை”


 சந்திப்பு : நா.கதிர்வேலன்.


தமிழ்ச் சிறுகதை உலகில் எழுத்தாளர் கே.என்.செந்திலுக்கு குறிப்பிடத்தக்க இடம் இருக்கிறது. விட்டுவிடுதலையாகி நிற்கிற மனநிலை அவரது தனி முத்திரை.  உண்மையை ஊருடுவி பாசாங்குகளை தாண்டிப் பார்க்கற கலை கொண்ட சிறுகதைகள் அவருடையது. இந்த புத்தக சந்தைக்கு செந்திலின் 'விருந்து' சிறுகதை தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. அவரது படைப்புகளம் பற்றிய உரையாடல் இது.



எழுத்தில் நிலைபெற வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

கால்நூற்றாண்டுகளேனும் இடையறாது படைப்புத் தொழிலில் தீவிரத்துடன் செயல்பட்டிருப்பவர்களே ‘நிலைபெறுதல்’ என்னும் சொல்லாட்சிக்கு தகுதியுடையவர்கள். அப்போதும்  கூட எழுதுகிற பக்கங்களின் எண்ணிக்கை அல்ல அதன் உள்ளடக்கமே முதன்மையானதாகும். எனவே எழுத வேண்டும் என்கிற எண்ணம் எவ்வாறு ஏற்பட்டதென இக்கேள்வியைச் சற்றே சுருக்கிக் கொள்கிறேன்.  பள்ளி நூல்களுக்கு வெளியே வசீகரித்த , திகட்டாத ஒரே ஒரு உலகமாக சினிமாவே இருந்தது. எவ்விதத்திலும் புத்தகப் பரிச்சயத்திற்கான சூழல் அமையவில்லை. பால்ய வயதில் தினசரி இணைப்புகளில் வெளியாகும் சிறார் நீதிக்கதைகளை ஆவலுடன் தவறாமல் வாசித்தது நினைவிலுள்ளது. ஓர் இனிய விபத்தாக இருபதுகளின் தொடக்கத்தில் சுந்தர ராமசாமியின் (ஜே.ஜே. சில குறிப்புகள், விரிவும் ஆழமும் தேடி) ஆக்கங்களை ‘என்ன இது?’ என்ற குழப்பத்துடனும் திகைப்புடனும் வாசித்தேன். அவருடன் கடிதத் தொடர்பும் நேர் பரிச்சயமும் எழுதுவதன் இன்பத்தை உணர்த்தின. எழுதும் ஆசையை அவரிடமே முதன்முறையாக வெளிப்படுத்தினேன். சிறிய பையன் நான். ஆனால் ஊக்கமூட்டும் சொற்களுடன் திரும்பி வந்தேன். எவ்வளவோ பேரிடம் சொன்ன யோசனைகளையே அவர் என்னிடமும் கூறி இருக்க வேண்டும். ஆனால் அவற்றை நெஞ்சில் ஏந்துகிறவனாக அவர் முன்னும் அவரது படைப்புகளின் முன்பும் அமர்ந்திருந்தேன். சந்தித்த மறுவருடத்திலேயே முதல் கதையை எழுதி(2004) விட்டிருந்தேன். அதுவரை இல்லாத அவனே அறியாத ஒன்றை எழுத்தில் சமைத்துப் பார்த்து ருசி கண்டவன் அதை விட்டு ஒரு போதும் செல்ல மாட்டான். ருசி கண்ட பூனை. பிரபஞ்சத்தின் எந்த மூலையில் அதற்கான இரை ஒளிந்திருந்தாலும் அதை சுவைக்க என்ன செய்ய வேண்டும் என இந்தத் திருட்டு பூனைக்கு நன்றாகவே தெரியும். மேலும் தெரிவுகளுடன் தொடர்ந்து வாசிப்பவரால் இந்த புற்றுக்குள் கை நுழைக்காமல் இருக்கவே முடியாது. அவர்களில் சர்ப்பம் தீண்டியவர்கள் பாக்கியவான்கள்.

 

’விருந்து’ சிறுகதைத் தொகுப்பு எதன் மீதான் முக்கியத்துவத்தில் அமைந்திருக்கிறது?

இது தான் என அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால் முந்தைய கதைகளிலிருந்து விலகி வர வேண்டும் என்பதும் ஒன்று போல பிறதொன்றை எழுதிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கையுணர்வையும் கொண்டிருந்தேன். எனவே பத்து கதைகளையேனும் கழித்துக் கட்ட வேண்டியிருந்தது. அச்சுக்கு செல்லும் முன் திருத்தங்களுக்காக ஒரு சேர தொகுப்பை வாசித்த போது சில பொதுவான அம்சங்கள் தென்பட்டன. இம்மனிதர்கள் கையறுநிலையையும் ஆற்றாமையையும் மிகுதியாக சந்திக்கிறார்களோ என்று தோன்றியது. மரணம் தவிர்க்க இயலா நிழல் போல அங்குமிங்குமாகத் தொடர்ந்து வந்ததையும் காண முடிந்தது. வாசிக்கவிருப்பவர்களுக்கு மேலும் பலதும் புலப்படக்கூடும். இவற்றை எழுதிய காலகட்டத்தில் நான் உழன்ற அடிப்படை வினாக்களை, சந்தித்த சிக்கல்களை மட்டுமல்ல சறுக்கிய இடங்களையும் அவர்களால் கண்டு கொள்ள முடியக்கூடும்.


எப்போதும் எளிய மனிதர்களின் மேலான ஈடுபாடு, கவனிப்பு உங்களின் எழுத்துக்களில் இருக்கிறது. அதற்கான பின்புலம் என்ன?


புழங்கும் உலகில் காணும் மனிதர்களிடமிருந்தும் கேட்கும் சம்பவங்களையொட்டியும் தம் பிரத்யேக எழுத்து முறைகளால் ஓர் உலகைச் சமைப்பவர்கள். அறியாத ஒன்றை நோக்கிச் செல்ல விரும்புகிறவர்கள் என ஒரு வசதிக்காக இரு வகையான எழுத்துக்கள் இருக்கிறதென கொள்வோம்.  இன்னொரு வகை கூட உண்டே.  பரிசோதனை முயற்சிகள். துரதிஷ்டவசமாக நவீன தமிழில் இவை கலையாக பரிணாமம் அடையாமல் போனவையாகவும்  மாபெரும் கழுத்தறுப்புகளாகவுமே உள்ளன. விதவிதமாக எழுதிப்பார்ப்பதென்பது வேறு, பரிசோதனைகள் என்பது வேறு.  

அறிந்தவர்களின் அறியாத முகங்களை எழுதிய போதே  வியப்புடன் அமர்ந்திருக்கும் தருணங்கள் வாய்த்தன. ஏனெனில் தெரிந்த உலகு என்றாலும் அதில் தெரியாத பகுதிகள் பல மடங்கு இருக்கின்றன. இதற்கு எளிய உதாரணமாக ஒரு நபரை தெருவில் காண்பதற்கும் வீட்டில் பார்ப்பதற்கும் அவரது குணநலன்களில், தன்மைகளில் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளதைச் சொல்லலாம். அவர் ஒரு பரவசத்தையோ வலி மிகும் சம்பவத்தை எவ்வாறு எதிர்கொள்வார் என்பதை அவரே அறியாத போது வெளித்தோற்றத்தை மட்டுமே கண்டிருப்பவர்கள் எப்படி உணர முடியும்? ஆனால் எழுதி அந்த கதவுகளை மட்டுமல்ல இறுக மூடியிருக்கும் மனதின் சாளரங்களைக் கூட திறந்து விட முடியும் என நினைக்கிறேன். பின்புலங்கள் எளியதாக இருக்கலாம். ஆனால் அவர்களின் குணவியல்புகளோ சொல்லி விட இயலாத சூக்குமங்களும் புதிர்களும் நிரம்பியவை. எந்தளவுக்கு வெளிப்படையாக உணர்ச்சிகளைக் கொட்டுபவர்களாக அந்த எளியவர்கள் இருக்கிறார்களோ அதற்கு நிகராகவே அன்பையும் காட்டுபவர்களாக காணப்படுவார்கள். ஒரு அர்த்தத்தில் மொத்த உலகுமே இந்த எளியவர்களின் புன்னகையிலும் கண்ணீரிலுமே ஒளியையும் இருளையும் அடைகிறதோ என்னவோ..! இவர்களை எழுதும் போதே தினுதினுசான மனிதர்களை உள்ளே கொண்டு வந்து விடமுடிகிறது என்பது நேரடியான காரணம். இதன் வழி எழுதுகிறவன் சிறிதேனும் தன்னை பிளந்து பார்த்துக் கொள்ள முடிகிறது என்பது சொல்ல வேண்டாத மற்றொரு  காரணம். எளியவர்களை எழுதுகிறேன் பேர்வழி என நினைத்து கண்ணீரின் மிகை நாடகங்களுக்குள் தேவையேயின்றி விழுந்து வாசிப்பவரின் உணர்ச்சியைச் சுரண்டிப் பிழைக்காமல் இருந்தால் சரி தான்.

 

இன்றைய சூழலில் படைப்பாளி வகிக்கும் பங்கு என்ன?

எந்தச் சூழலிலும் படைப்பாளியின் பங்கு மீச்சிறு சதவீதமே. ஒவ்வொருவரும் தன்னை பற்றி எண்ணிக் கொள்ளும் கற்பனைகள் வேண்டுமானால் பூதாகரமானதாக இருக்கலாம். அப்படி படைப்பாளியின் பாத்திரம் எங்கேனும் பிரகாசிக்கிறது என நினைத்தால் அது மிகை மதிப்பீடாகவோ தோற்ற மயக்கமாகவோ தான் இருக்க முடியும். பிறகு இந்த சமூக ஊடக பெருக்கக் காலத்தில் தன் இருப்பு சார்ந்து இவ்வளவு பதற்றங்களை வேறெந்த தலைமுறை எழுத்தாளனேனும் கொண்டிருந்திருப்பானா என்றும் தெரியவில்லை. மொழிப்புலத்திலும் ஒரு சமூகத்தின் பண்பாட்டிலும் படைப்பாளியின் பங்கேற்பு கடலடியில் தட்டுகள் நகர்வது போல கண்ணுக்கு தெரியாமல் மாற்றங்களை நிகழ்த்துகிறது என்றே நம்புகிறேன். காலத்தினுடையதும் வரலாற்றினுடையதுமான சாட்சி அவனே. அவனது பங்கு எத்தனை குறைத்து மதிப்பிடப்படுகிறதோ அத்தனைக்கும் அதற்கு மேலும் நேர் எதிர் திசையில் மகத்தானதாகும். தேசப்பிரிவினை கலவரங்களின் போது அந்த இருண்ட நாட்களில் நடந்தவற்றை அறிய வேறு யாரை விடவும் மண்ட்டோ மிகவும் நம்பகமானவர் எனத் தோன்றுவது அதனால் தான்.

 

வாசிப்பு எவ்விதம் உங்களின் படைப்புகளை செழுமை ஆக்க உதவுகிறது?

எழுதுகிறவனாக எங்கே நின்றிருக்கிறேன் எனும் போதத்தை அளிப்பவை வாசிப்புதான். இப்படி ஒரு உதவாக்கரைக் கதையை எழுதி விட்டிருக்கிறேனே என அங்கலாயித்துக்  கிழித்தெறியச் செய்வதும் வாசிப்பின் நற்கொடையே. ஒருவரது படைப்பாக்கத்தில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதற்கு வாசிப்பிற்கே பெரும் பங்கு உள்ளதெனத் தயங்காமல் கூறலாம். என் பொருட்டு கிட்டும் வாசக எதிர்வினைகள் அனைத்தையும் அந்த நூல்களின் உலகிற்கே சமர்ப்பிக்க விரும்புவேன். சொல்லிக் கொள்ளும் பின்னணி இல்லாத ஒருவனுக்கு அவை அளித்தவை மிக அதிகம். எனவே தான் அதற்கு கைமாறாக மேலும்  மேலும் எழுதிப் பழிதீர்த்துக்கொள்கிறேனோ என்னவோ..!

 

சிறுகதையின் மையம் எவ்விதம் அமைய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

மையம் என ஒன்று அமையலாம், அமையாமலும் இருக்கலாம். அமைந்தாக வேண்டும் என்கிற எந்த விதியும் இல்லை.  எப்படிப்பட்டதாகவும் அக்கதை இருந்தாலும் வாசகரிடத்து அதன் இறுதி விளைவு என்ன என்பதே மிக அவசியமானதும் பிரதானமானதுமான  கேள்வியாகும்.

 


உங்கள் புனைவுகளின் அடிப்படை காரணி என்ன? அதன் மூலம் நீங்கள் பெறுவது என்ன?

கதைகளின் மீதுள்ள தீராத விருப்பமும் வியப்பமுமே அவற்றை எழுதுவதற்கான அடிப்படை. அது தான் ஒற்றை வாழ்க்கைக்குள் சுருங்கிப் போய்விடாமல் எண்ணற்ற வாழ்க்கைகளை வாழ்ந்து பார்க்கச் செய்கிறது. காரணி நிலையானதல்ல. ஏனெனில் எழுதுகிற காலகட்டங்கள் சார்ந்து அது மாறிக் கொண்டே இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் கவனத்திலேயே பதிந்திராத சம்பவமொன்று இன்று தீவிரமான அலைகழிப்புக்கு உள்ளாக்கலாம். ஆழ்மனதில் என்னவுள்ளதென்று எழுதும் கணம் வரை தெரியாத போது இப்படித்தான் இது தான் எனத் துல்லியமாக வரையறுத்துச் சொல்லிவிட முடியாது என நினைக்கிறேன். பெறவும் கற்கவுமான செயல்பாடே எழுத்து.  அதனால் தான் இதை நான் தானா எழுதினேனா என விலகி நின்று ஆச்சரியங்கொள்ளும் நிமிடங்கள் அமைகின்றன. அந்த வியப்பு நீங்கினால் எழுதுவது ஓர் சடங்காக ஆகும். என்ன செய்தால் என்ன வரும் என்பது தெரிந்த பிறகு சொல்வதற்கென்ன இருக்கிறது? இந்த ‘விருந்து’ தொகுப்பிலுள்ள ‘நிமித்தம்’ என்னும் கதை எழுத்தாளனுக்கும் அவனது பாத்திரம் ஒன்றுக்கும் இடையே நிகழும் சம்பாஷணையை அடிப்படையாகக் கொண்டது. அவ்விருவரின் உரையாடலில் இடம்பெறும் வரியை இங்கே சுட்டுவது பொருத்தமாக இருக்கும், ”என் பாவைகளாக மனிதர்களைச் சிருஷ்டிக்க ஒரு போதும் முனைந்ததில்லை. எனக்கு கற்று தரும் முன்னிலைகளாகவே உங்களை கண்டு வந்திருக்கிறேன்”.


நன்றி : விகடன் இணைய தளம் - 27.12.2021

No comments:

Post a Comment