Thursday, February 11, 2016

’அனர்க்க நிமிஷ’ங்கள்* - வைக்கம் முகம்மது பஷீர்


அனர்க்க நிமிஷங்கள்*

கொஞ்சம் பெரிய ஒண்ணான பஷீரின் ஆக்கங்களின் ஊடாக....



ஓவியங்கள் : றஷ்மி.

 

சுய அனுபவங்கள் என்றால் அழுத்தமாகச் சொல்ல முடியும். எனது படைப்புகள் பெருமளவில் சுய அனுபவங்களை முன்னிருத்தியவைதான்...
நான் காதலனாக வாழ்ந்திருக்கிறேன். அரசியல்வாதியாக இருந்திருக்கிறேன். நான் எப்போதுமே சுதந்திரமாக வாழ விரும்புகிறேன். காலனி ஆதிக்கத்திற்கெதிராகப் போராடியிருக்கிறேன். போலீஸ்காரர்களின் அடி உதைகளை ஏற்றியிருக்கிறேன். அசிங்கமான வார்த்தைகளால் வசை வாங்கியிருக்கிறேன். போலீஸ் லாக்கப்புகளில் கிடந்திருக்கிறேன். சிறைவாசம் அனுபவத்திருக்கிறேன். இது போன்ற கதைகளை எழுதியிருக்கிறேன்...

ஏற்கனவே சொன்னதைத் திரும்பவும் சொல்லாமலிருப்பது, எழுதியதையே திருப்பியெழுதாமலிருப்பது. நான் இதில் கவனம் செலுத்த முயற்சி செய்திருக்கிறேன்...
-வைக்கம் முகம்மது பஷீர் (உண்மையும் பொய்யும்-பக்-152,153)
  

எளிதில் கிடைக்காமலும் மறுபதிப்பு வராமலுமிருந்த பஷீரின் ஆக்கங்களை டி.சி.கிழக்கேமுறி மீண்டும் வெளியிட்டு அவை ஒரு பெரும் அலையாக வாசகர்களைச் சென்றடைந்த போது அதில் பஷீர் குறித்து டி.சி எழுதியிருந்த குறிப்புகளை முதன்முறையாக கண்ணுற்ற எவருக்கும் வியப்பில் முகம் விரிந்திருக்கும். அதில் பஷீரின் வாழ்க்கைச் சித்திரத்தை குறுக்குவெட்டாக தீட்டிக் காட்டியிருந்தார் டி.சி. எந்த எழுத்தாளனையும் குறிப்பாக தமிழ் எழுத்தாளனை பொறாமை கொள்ள வைக்கும் குறிப்பு அது. ஏறக்குறைய கிணற்றுத் தவளைவாழ்வில் சிக்கி அரைபடும் ஒருவனுக்கு –விதிவிலக்கு அ.முத்துலிங்கம்- அவ்வாறான பொறாமையுணர்ச்சி தோன்றுவதும் இயல்பானது தான். பஷீர் நடந்து சென்ற திசைகள், திறந்திருந்த உலகின் கதவுகளுக்குள் எவ்வித அசூசையுமின்றி நுழைந்து போகும் மன இயல்பு, கட்டற்ற அலைச்சல்களால் (ஒன்பது பத்து வருடங்கள்-நான் இந்தப் பூமிப் பந்தின் மிகக் குறைவான பிரதேசங்களைச் சுற்றி வந்திருக்கிறேன். அலைந்து திரிந்திருக்கிறேன். இரவுபகலாக ! தனிமையில் !) அவர் விரும்பியும் விரும்பாமலும் ஏற்றுக் கொண்ட பாத்திரங்கள் அதன் வழி கிட்டிய விசாலமான அனுபவத்தின் வீச்சு ஆகியவை அவருடைய படைப்புலகில் வெவ்வேறு தொனிகளில் நிறங்களில் ஊடும்பாவுமாக இழைந்திருக்கின்றன. இதுதான் அவரது ஆக்கங்களில் அடியோட்டமாக கனிவையும் சிறுபுழுவுக்குமானது தான் இவ்வுலகு என்னும் ஒப்பற்ற கருணையையும் மனிதனின் கீழ்மைகள் அனைத்தும் அன்பின் சுடரொளியில் கருகிவிடும் என்னும் நம்பிக்கையையும் அவருக்குள் விதைத்திருக்க வேண்டும்.




ஏனெனில் மங்குஸ்தான் மரத்தினடியில் சாய்வு நாற்காலியில் ‘அப்படியே ஸ்டைலாக’  அமர்வதற்கு-அதாவது உம்மிணி வலிய ஓர் ஆளாக’-இன்னும் பெரிய ஒருவராக- ஆவதற்கு பல காலம் முன்பு சரியாகச் சொல்வதென்றால் எழுதத் தொடங்கிய ஆண்டுகளில் பஷீரைச் சுற்றிலும் வறுமை மட்டும் இருந்தது. பசியும் பட்டினியுமாக கழிந்த கொடுங்காலங்கள். கடன் வாங்கிய மையில் கதைகள் எழுதிய பின் அதை அனுப்பத் திண்டாடும் பஷீர். எழுதியதை அப்போது பத்திரிக்கைக்கு அனுப்பி வைப்பதற்கு நூல் அஞ்சல் செலவுக்கு நாலு பைசா வேண்டும். நாலு பைசா...நாலு பைசா...நாலு பைசா...ஆண்டவனே. இந்த நாலு பைசாவுக்காக நான் எத்தனையெத்தனை பேர்களைத் தேடி ஓடியிருக்கிறேன்.  ஆனால் இவை எதுவும் அவரிடம் கசப்பாகத் திரளவில்லை. மாறாக “சுலைமானியில்(பால் விடாத கடும் காப்பி) எறும்பு விழாதிருக்க குடித்த தம்ளரை கவிழ்த்து வைக்கச் சொல்கிறது. புழுவை இலையிலிருந்து தட்டி விட்டாள் என்பதற்காக தன் பிரிய மகள் ஹாகீனாவுடன் சண்டையிடச் சொல்கிறது. சிறுவயதில் தன் உம்மாவிடம் ஓடிச் சென்று “உம்மே..ஞான் காந்தீயத் தொட்டூ...என கூவும் பஷீரைக் காணும் நாம், தன் பரம்பில் நுழைந்த விட்ட நரியைத் துறத்த மத்திய அரசு அளித்த தாமரப் பட்டயத்தை எடுத்து அதன் மீது வீசும் பஷீரையும் காண்கிறோம். மலர்கள், பூமியின் புன்னகை. இதைச் சொன்னது யார்? நானே தான்...மலராக மாற வேண்டாம். ஊர்ந்து செல்லும் ஒரு உயிரினமாகவோ தவளையாகவோ எலியாகவோ ஈயாகவோ எறும்பாகவோ மாறினால் போதும். அதுகூட வேண்டாம். வெறுமொரு சிலந்திக் கூடாக மாறினால்கூடப் போதும். என்று எழுதிய பஷீரின் விரிந்து கிடக்கும் பேதங்களில்லாத உலகம் தன் அத்தனைக் கரங்களுடனும் நம்மைச் சுருட்டிக் கொள்கிறது. “குழந்தையின் களங்கமற்ற கண்ணோட்டம், ஞானியின் பற்றற்ற பார்வை, சித்தம் கலங்கியவனின் பிதற்றல், புரட்சிக்காரனின் சீற்றம், அங்கதக்காரனின் குத்தல், அராஜகவாதியின் பகிரங்கப்படுத்தல், சமூக விமர்சனம், காதல் உணர்வு என்று பல அடுக்குகளைப் கொண்டது அவருடைய படைப்புத்தளம். அதன் மீது துக்கம் கனத்திருக்கும். ஒரு நகைச்சுவைப் படலம் கவிந்திருக்கும்என்னும் சுகுமாரனின் சொற்கள் இவ்வுலகினை புரிந்து கொள்ளப் பெரிதும் துணைசெய்யக்கூடியவை.

நான் என்று நான் எழுதுவது அனைத்துமே இந்த என்னைத் தான் குறிப்பிடுகிறதுஎன்னும் ஒப்புதல் வாக்குமூலம் அவரது படைப்புகளோடு ஊடாடும் வெளிச்சங்களையும் இருளையும் அறிந்து கொள்ள பேரளவு உதவிச் செய்யக் கூடியதாகும். நம்மை ஏற்றிச் செல்லும் பயணத்தில் ஓட்டுனர் மட்டுமல்ல அவர். அதன் சக்கரமும் சக்கரத்தின் ஆரமும் இன்ன பிறவும் வேறெவரும் அல்லர். குறும்பனும் குசும்பனும் மாறாக் காதலனுமான பஷீரே தான் அது. அதனால் தான் அவர் கதைகளைத் தேடி அலையவேயில்லை. தன் மனக்களஞ்சியத்திலிருந்து எடுத்த அழியாத நினைவுகளை கலையழகுடன் படைப்புகளாக முன் வைத்தார். அந்த வற்றாத நதியிலிருந்து தான் மடையன் முத்தபாவும் எட்டுக்காலியும் சக எழுத்தாளர்களும் வேசைகளும் அமானுஷ்யங்களும் (நீல வெளிச்சம்,நிலவைக் காணும் போது) வாழ்ந்து கெட்டவர்களும் ஆடும் கோழியும் மரங்கள் மட்டுமல்ல, உலகப் புகழ் பெற்ற மூக்கனின் பால்யகாலத்து மனிதர்களும்-கண்டறிய முடியாத புனைவின் சிறுசாயலுடன் – எழுந்து வந்தார்கள்.

பஷீரின் படைப்புலக மொழி எளிமையும் சாதாரணமுமானது. மனதினுள் கூடிக் கலந்து கிடக்கும் நானாவித உணர்வுகளை எளிமை என்ற அந்த மூன்றெழுத்துச் சொல் தான் வேரடிமண்ணோடு வாசகனிடம் கடத்தி விடுகிறது. உண்மையில் அது பலரையும் குப்புறத்தள்ளி, அவர்களை ‘படுக்கூஸ்களாக(முட்டாள்களாக) ஆக்கும் வல்லமை கொண்டது. அந்த எளிமை அசாதாரணமான அழகை அந்த சுல்தானின்எழுத்துக்குத் தந்துவிடுகிறது. அது கைவரப்பெறுவதும் சுலபமானதல்ல. அதற்கு பெரும் பயிற்சி தேவையாகயிருந்திருக்கிறது.

தன்னுடைய திரைக்கதையொன்றை(பார்கவி நிலையம்) ஓணம் பதிப்புக்காக கைப்பற்றி வந்த ‘கெளமுதிபாலகிருஷ்ணனிடம் அதை மீட்க வேறொன்றை எழுத ஒப்புக்கொள்ளும் பஷீர், அவர்களே அமைத்துக் கொடுத்த திருவனந்தபுரம் லாட்ஜில் அமர்ந்து நான்கு நாட்களில் எழுதி எடுக்கப்பட்ட ‘உக்கிர சாதனமே’ ’மதில்கள். அந்த அறையிலேயே அவருடன் இருக்கப் பணிக்கப்பட்டவர்களுள் ஒருவரான பழவிள ரமேசனிடம் எழுதியவைகளை வாசித்துக் காட்டுவது பஷீர் வழக்கம். “ஒரு தடவை போகும் போது எழுதி முடித்தவை பத்துப் பக்கங்களாக இருக்கும். பிறகு அது இருப்பத்தைந்து பக்கங்களாகும். இன்னொரு தடவை இந்த இருபத்தைந்து பக்கங்களும் காணமற் போய் ஏழோ எட்டோ பக்கங்களாகச் சுருங்கியிருக்கும்.எளிமையான அந்த மொழிக்கு பின்னே இருக்கும் இந்த உழைப்பும் வேட்கையும் பிடிவாதமும் வெளியே தெரிவதில்லை. இது ஒரு செதுக்கல். எடியே ! என விளித்ததும் ஓடிவருவதற்கு கலையொன்றும் தன் வீட்டுக்காரி அல்லவென்று பேப்பூர்காரருக்கு நன்கு தெரியும். பின்னே, வாசிப்பதற்கென்றே சிறிதுகாலம் எர்ணாகுளத்தில் புத்தகக்கடை நடத்தியவரல்லவா பஷீர் !

பஷீருக்கு கிட்டிய அனுபவங்களில் ஒன்றே மதில்கள்’. இளைஞனாக இருந்த போது அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகளுள் ஒன்றான திருவனந்தபுரம் ஜெயிலில் ஒரு கைதியாக அழைத்துச் செல்லும் போது சட்டென்று பெண்ணின் மனம் பிடித்து அங்கேயே நிற்கிறான். சில தினங்களுக்குப் பிறகு தன் சக கைதிகள் விடுதலையாகிச் சென்ற பின் தனித்து விடப்படுபவன் அங்கிருந்து தப்பிக்கத்  திட்டம் போட்டதற்கு மறுநாள் பெண்ணின் மணமும் குரலும்(ஆம்.குரலை மட்டும்) கேட்டு பித்தேறியவனாக ஆகி காதலும் மோகமுமாக அவன் உலகம் புரட்டிப் போடப்படுகிறது. நாராயணியின் குரலைக் கேட்டதற்கு முன் அந்த மதிலில் சிறுஓட்டை இருந்திருக்கிறது. காமத்தின் வெள்ளம் அதன்வழியாகச் சுழித்தோடுகிறது. வார்டனுக்கு ஒரு அணா கப்பம் கட்டியபின் தெரிவது பெண்களின் சிறை. ஆண்களின் மகா பிரபஞ்சம். பிறகு அது அடைக்கப்படுகிறது. (ஆனாலும் நான் தலைகுனிந்து சிமெண்டு பூசிய அந்த இடத்தை முகர்ந்து பார்த்தேன். பெண்ணின் மணமிருக்கிறதா?” ) பிற்பாடு அவன் கேட்க நேர்வது  நாராயணியின் குரலை மட்டும். இரு வேறு தனிமைகளுக்குள் இருப்பவர்களிடத்து பிரியம் பீறிடுகிறது. அவளைக் குறும்பாக கள்ளிஎன்கிறான். அவள் கேட்டவுடன் அவன் போட்டிருந்த ரோஜா தோட்டத்திலிருந்து ஒன்றைக் கொண்டுவர ஓடுகிறான். அந்த ரோஜாவின் ஒவ்வொரு பூவையும் ஒவ்வொரு மொட்டையும் ஒவ்வொரு தளிரையும் முத்தமிடுகிறான். மதிலின் அந்தப் பக்கம் அதை வீசிய பிறகு கொண்டையிலே வைக்கப் போறியா? என்ற கேள்விக்கு,

“இல்லே

“பின்னே

“இதயத்துக்குள்ளே...ஜாக்கெட்டுக்குள்ளே...

அதில் என்னுடைய முத்தங்கள் இருக்கின்றன. நான் மதிலில் சாய்ந்து நின்றேன். மதிலை மெதுவாகத் தடவினேன்.

மனநெகிழ்வையும் கண்ணீரையும் உருவாக்கும் சம்பாஷணைகள் இருவருக்குள்ளும் நிகழ்கின்றன. கம்பை அசைப்பதன் மூலம் வருகையை பரஸ்பரம் அறிகிறார்கள். சந்திப்புக்கான திருட்டுத்தனமான ஏற்பாடுகள் செய்த அடுத்த நாள் அவனுக்கு விடுதலை அறிவிப்பு வெளியாகிறது. ஜெயிலின் பெரிய கதவு பயங்கரமான ஓசையுடன் எனக்குப் பின்னால் மூடியது”. ஆம்! அது பயங்கரமான ஓசை தான். அதே போன்ற ஒரு ரோஜாவை வைத்து “பெரும்பாதையில் அசைவில்லாதவனாக நிற்கும்போது நாவலுக்கு சுபம் போடப்படுகிறது. பரவசமும் வலியும் கூடிக் கலந்த இச்சிறு புதினம் மெளத்திற்குள் மனம் கசியத் தள்ளிவிடுகிறது. மண்ணில் ஆறறிவோடு வந்து விழுந்த வளர்ந்த சகலருக்கும் இருக்கிறது அனுபவங்கள். அதை வாசிப்பவனின் மனதில் அரைநூற்றாண்டுக்குப் பிறகும் அழையாத ஆக்கமாக மாற்றும் கலைவித்தை ஒரு சிலருக்கே வாய்க்கும் போலும்.
     
டந்த கால பெருமைகளால் ஊர் வாயைப் பிளக்கச் செய்யும் குஞ்ஞாச்சும்மா, வெற்றிலை போடுவதற்கும் தான் பேசுவதைக் கேட்பதற்கும் வரும் பெண்களிடம் மறக்காமல் தன் உப்பாவின் ஆனையைக் கொண்டு வந்து நிறுத்துவாள். அதுவும் சாதாரண ஆனை அல்ல. “ஒரு பெரிய கொம்பானை”.  அவளுடைய மகளான குஞ்ஞுபாத்துமாவும் அந்த பெருமையின் பூரிப்பைக் கொண்டவள். வாப்பா பள்ளிவாசல் காரியக்காரர். அனைத்துப் பெருமிதங்களும் தன்முன் இருப்பதைக் கேட்டபடியே வளர்கிறாள். அவளது உம்மாவின் மிதியடியின் குமிழ்கள் இரண்டும் உப்பப்பாவின் ஆனைக் கொம்பால் செய்யப்பட்டவை ! பின் கேட்பானேன் ?! வேறொரு குழந்தைக்குத் தன் பெயரை இட்டது கூட அவளுக்குள் கோபத்தை மூளச் செய்கிறது. அவளைப் பொருத்தவரை பிரபஞ்சத்தில் ஒரே குஞ்ஞாச்சும்மா, ஒரே வட்டன் அடிமை, ஒரே குஞ்ஞுபாத்துமா மட்டுமே. ஏனெனில் அவள் உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்ததல்லவா? முன்பிருந்தே அவளை விசனப்படுத்தி வந்த விசயத்தை [தன் வெளுத்த அழகிய கன்னத்தில் கறுத்த மரு ஏனோ-அது யோக மரு என்கிறாள் உம்மா.(மதில்கள் நாராயணியின் கன்னத்திலும் இப்படியான கறுத்த மரு உண்டு)] தொட்டு பிற பெண்களிடம் கேட்கிறாள் உம்மா,
“அதுக்கு நிறம் என்ன புள்ளெ?


கறுத்த மச்சத்தின் நிறம் கறுப்பு தானே?

“கறுப்பு

உனக்கு உப்பப்பாவுக்கு ஆனை என்ன நெறம்?

அவள் சொன்னாள்

“கறுப்பு

“வெளுத்த ஒனக்கெக் கன்னத்துல கறுத்த மரு எப்படி வந்தது?

உம்மா சொன்னாள்

“ஒனக்கெ உப்பப்பாவுக்கு ஆனையிருந்தது

“ஒரு பெரிய கொம்பானை

அது பொல்லாத ஆனை. ஆறு பேரைக் குத்திக் கொன்ற “குருத்துவம் கெட்ட ஆனை”.  மேலும் உம்மா சொல்கிறாள். “உனக்கு வாப்பா என்னெக் கலியாணம் கெட்ட வந்தது அந்த ஆனைக்கெ மேலே ஏறியாக்கும்.குஞ்ஞுபாத்துமா தன் வாழ்க்கைப் பற்றி மயக்கும் கற்பனைகளில் ஆழ்கிறாள். அப்படியே ஸ்டைலாகப் போகிறது வாழ்க்கை. ‘இழந்த பின்னும் இருக்கும் உலகம்குறித்த  அவர்களது சுயபுராணங்கள், தற்பெருமைகள், அகம்பாவங்கள் அனைத்தும் பிறகொரு நாள் கேட்க ஆளற்றவர்களாக ஆகி வாழ்ந்து கெட்டவர்கள் என்ற அடைமொழியுடன் ஊருக்கு வெளியே குடியேறுகிறார்கள். அங்கும் அவளது உம்மா அந்த மிதியடியைக் கொண்டு வந்து அதன் மீது நடக்கவும் செய்கிறாள். அவள் உயிரே நாவலின் தலைப்பிலான வரியில் தான் குடியிருக்கிறது. தன் சாம்ராஜ்யம் தகர்ந்து போன நினைவுகளை எண்ணிச் சூன்யத்தை வெறித்து அமர்ந்திருக்கும் போது உம்மாவோ ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறாள். ஐஸ்வர்யம் இழந்து சரிவு ஏற்பட்ட பிறகு அந்த வீட்டுப் பெண்களுக்குள் இருக்கும் தீமையின் முகத்தை பஷீர் தன் எழுத்துவன்மையால் நுட்பமான உணரச் செய்கிறார். இப்போது உம்மாவின் பார்வையில் அந்த கறுத்த மரு, அதிஷ்டம் கெட்டதாக மாறிவிடுகிறது. பெருமைப் பட்டுக்கொண்டிருந்த வட்டன் அடிமைஎன்னும் வாப்பாவின் பெயரை கேலியாக செம்மீன் அடிமைஎன்னும் பட்டப்பெயர் வைத்து வழிப்போக்கர்களும் கேட்டுக்கொள்ளுமாறு சத்தமிட்டுச் சொல்கிறாள். இருவருக்குமான ஓயாத சண்டைகளுக்கு நடுவே மகளுக்கு வெளி உலகத்தின் கதவு திறக்கிறது. பஷீரின் தோட்டத்தில் பூக்கும் மகத்தான மலர்களுள் ஒன்றான காதல் அவள் மனதில் அரும்புகிறது. அந்த வெகுளிப்பெண்ணிற்கு அந்த உணர்ச்சியின் பெயரும் தெரிவதில்லை.(எனக்கெ ஈரக்கொலையிலே வேதனையாட்டு இருக்கு“ “நிஸார் அகமதைப் பார்க்கும் போதெல்லாம் அவளுடைய கன்னங்கள் துடிப்பது போலவும் மார்பகங்கள் கனப்பது போலவும் இருக்கும்)  அதற்குள் ஊடாடும் மனத்தேட்டங்களை அளவான சொற்களால் பஷீர் கையாள்கிறார்.அனைத்திலுமே அழகு அதிகரித்திருப்பது போல்.எல்லாவற்றின் மீதும் அவளுக்கு அழகு அதிகரித்தது. கடித்த ஒரு எறும்பிடம் குஞ்ஞுபாத்துமா சொன்னாள்,என்னெக் கடிச்சது போலே நீ வேற யாரையும் கடிக்காதே”. தான் எழுதிய எல்லாச் சொற்களின் மீதும் கவனமும் அக்கறையும் பஷீருக்கு இருந்திருக்கிறது என எவ்வித தயக்கமுமின்றி ஒப்புக்கொள்வதற்கான சுவடுகள் அவரது ஆக்கங்களில் நிறைந்திருக்கின்றன.


‘சிரிக்கும் மரப்பாச்சிஎன்னும் பஷீரின் சிறுகதையில் வரும் -வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்த-ரம்லத்து பீவியின் குணநலன்கள் சார்ந்த சிறு சாயல் குஞ்ஞுபாத்துமாவிடமும் காணக்கிடைக்கிறது. கை கூடிவிட்ட காதலுக்குப் பின் ஊராருக்குத் தெரிய வரும் உண்மை, “உப்பப்பாவினுடையது கொம்பானை அல்ல,குழியானை. நாவலின் பின்பாதியில் இதனூடாக முஸ்லீம் சமூகத்தில் புரையொடிப் போயிருந்த மூடப் பழக்கங்களை நோக்கி நாவல் பேசியிருப்பது நுட்பமாக அணுகிறவர்களால் கண்டு கொண்டிருந்திருக்க முடியும். வெளிவந்த போது இந்நாவலுக்கு எதிர்ப்புமிருந்திருக்கிறது. இன்று ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட பின்னும் அந்நியமொழியான இந்நாவல் அதன் புத்துணர்வை இழக்காமலிருப்பது வாழ்க்கையினுள்ளிருந்து எழுதப்பட்டதாலன்றி வேறென்ன பிரதானமான காரணமாகயிருக்க முடியும்?.



பஷீரின் மொத்த எழுத்துக்களுமே தன் வரலாற்றின் அத்தியாயங்கள் தான். அது அதிகமாக வெளிப்பட்ட நாவல் “பால்யகால சகி”. மிக அதிகமாக மாற்றுக்குறைவின்றி எழுதப்பட்ட ஆக்கம் பாத்துமாவின் ஆடு.
      
“நாம் வளர்ந்திருக்கவே கூடாது”  என மஜீதிடம் ‘பால்யகால சகிசுகறா ஓரிடத்தில் சொல்கிறாள். இவ்வாறு தனக்குத் தானே கேட்டுக் கொள்ளாத ஆட்கள் இந்த பொன்னான பூமியில் அரிதினும் அரிதாகவே  இருப்பார்கள். இந்நாவலின் ஆரம்ப பக்கங்களை வாசித்துச் செல்கையில் சட்டென என் பால்யத்தின் கதவொன்று திறப்பதைக் கண்டேன். வீட்டினெதிரே-அதாவது ஒரே சுற்றுச் சுவருக்குள் இரு வீட்டு வாசல்படிகளும் முட்டும்படியாக- குடியிருந்த சுமிதாவின் நினைவு மிதந்து வந்தது. பிரேமாக்காவின் ஒரே மோள் அவள். மணியண்ணனும் சரி அந்தக் அக்காவும் சரி ‘உண்ணிஎன்பதன்றி மாற்றுச் சொல்லில் அவளை விளித்ததில்லை. பரஸ்பரம் தோள் மேல் கை போட்டபடி ஸ்கூலுக்குப் போவோம். கைகோர்த்தபடி தெருவில் நடப்போம். அடிக்கடி கிள்ளி வைத்துக் கொள்வதும் உண்டு. அவளுக்கு நீளமாக முடி முளைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டியிருக்கிறேன். இன்று “இன்னும் பெரிய பூஜ்யமாகஆகி இரு பெண் குழந்தைகளுடன் அவளை அவ்வப்போது காண்பேன். இன்னுமொரு மறக்க முடியாத இளம்பருவத்துத் தோழி உண்டு. சொப்னா. சுகறாவை எழுத்தில் கண்ட போது இவளையே நான் நினைத்துக் கொண்டேன். ஐந்தாவது படிக்கையில் ஒரே வகுப்பென்பதால் நிறைய பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். எங்களிடையே முதல் ரேங்க் எடுக்க கடும் போட்டி எப்போதும் உண்டு. அந்த வருட பிறந்த நாளுக்கு அவள் அணிந்து வந்த கை வைக்காமல் தைக்கப்பட்ட வெள்ளையில் சிவப்புப் புள்ளி போட்ட உடை இன்றும் துல்லியமாக நினைவிலிருக்கிறது. அன்று எனக்கு மட்டும் இரு கைகளிலும் பச்சை ஜிகினா சுற்றப்பட்ட சாக்லேடுகளை அள்ளித் தந்தாள். என் பையிலும் நிறையவே போட்டு வைத்தாள். அதே ஆண்டில் ஏதோ ஒரு சண்டை மூண்டு வகுப்பு முழுக்க இருவரும் கட்டிப் புரண்டு உருண்டதும் நேற்றுப் போல மனக்கண்ணில் தெரிகிறது. இருவரும் எங்களூரிலேயே தான் இன்றும் இருக்கிறார்கள். அவ்வப்போது பார்த்துக் கொள்வோம். சிறு புன்னகை, தலையசைப்பு, சில சமயங்களில் முகத்திருப்பல்கள். அவ்வளவு தான். நடுவில் நிற்கும் நீளமான இருபது வருடங்கள் ! கழிந்து போன மகிழ்ச்சியான நாட்களைத் தான் இழந்த சொர்க்கம் என்கிறார்களோ !

‘பால்யகால சகியில் ஒண்ணும் ஒண்ணும் எத்தனையடா?என்னும் ஆசிரியரின் கேள்விக்கு ஒருநாளும் அழியாத அந்த புகழ்மிக்க பதிலைச்(கொஞ்சம் பெரிய ஒண்ணு) சொன்ன மஜீது பஷீரே தான் என்பதை ‘ஆனைமுடிசிறுகதையில் அவரே ஒப்புக் கொள்ளவும் செய்திருக்கிறார். ஒரே மூச்சில் படித்து விடக்கூடிய சிறிய நாவல் இது. ஆனால் அந்த மூச்சுக்காற்றில் களிப்பின் சாறலையும் துயரத்தின் அனலையும் படரச் செய்யும் ஆக்கமும் இதுவே தான். கை கூடாத காதல்கள் பஷீரின் எழுத்துக்களில் தொடர்ந்து வருகின்றன. அவற்றில் வெந்து நிலைகொள்ளாது தவிக்கும் இரு மனங்களின் கண்ணீர் நம் இதயத்தின் மீது விழும் போது அதற்கு பாறையை விட கனமும்  உறுதியும் அதிகமென்பது அப்போது வெளிப்படும் கசப்பான சிரிப்பில் கண்டுகொள்கிறோம்.  அந்த புகழ்மிக்க பதில் கேலியாக, துன்பத்தை மறைக்கும் திரைச்சீலையாக, கடந்த காலத்தின் ஏக்கமாக நாவலின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறான காலகட்டங்களில் சுகறாவால் சொல்லப்படுகிறது. அவனை படுத்தியெடுத்த உள்ளங்கால் கொப்புளத்தின் வலியால் துடிக்கும் போது அவன் மீது கொண்டிருந்த அளப்பரிய பிரியத்துடன் சுகறா அங்கு முத்தமிடுகிறாள்.முதல் முத்தம்! பின்னாளில் விபத்தில் அவன் இழப்பதும் அவள் முத்தமிட்ட அதே காலைத் தான். திணிக்கப்பட்ட சோகங்களுக்கு மூக்கைச் சீந்துபவர்கள் பஷீரின் எழுத்துக்களைக் கண்டு வியக்கக்கூடும். ஏனெனில் இவ்வுலகில் ஒரு சொல் கூட வாழ்க்கைக்கு அந்நியமானதல்ல. அதனாலேயே வாசிப்பவனை அது உறைந்து போகச் செய்கிறது. இந்த உறைதல் நாவல் எழுப்பிக் காட்டும் எளிதில் விளக்கமுடியாத உணர்ச்சியின் முன் கொண்டு போய் நிறுத்துகிறது. இந்த ரசவாதம் பஷீரின் ஆக்கங்களுக்குள் மிக இயல்பாக நடந்தேறுகிறது.

இருவரும் காலம் அளித்த துரதிஷ்டமான பரிசுகளோடு பின்னொரு நாளில் சந்திக்க நேர்கிறது. நொடிந்து போன குடும்பத்தை நிலைநிறுத்த இயலாதவனாக மஜீத்தும் வேறொருவனுக்குக் கட்டி வைக்கப்பட்டு நல்வாழ்க்கை அமையாது போய் பேரழகை இழந்து ‘கன்னங்கள் ஒட்டி கை விரல்கள் எலும்புகள்  துருத்தி,நகங்கள் தேய்ந்து, வெளிறிப் போய் காதுகளில் கிடந்த கறுப்பு நூலை தலைமுடியால் மறைத்தவளாக சுகறாவும். கடும் அதிர்ச்சியுடன் மஜீத் ‘ஏன் இப்படி?என கேட்கையில் ‘மனவெசனந்தான்என்கிறாள். அந்த இடத்திலேயே மனம் சண்டிக்குதிரைப் போல படுத்துக் கொண்டுவிட்டது.  பின் பெருஞ்சுவர் போல அச்சொல் எழுந்து நிற்பதைக் கண்டேன். அதைத் தாவி ஏறிக் குதிக்க வேண்டும். நிச்சயமாக முடியாது என்று பட்டது. திரும்பி வந்து அந்தச் சொல்லின் காலடியில் விழுந்தேன்.  அதுநாள் வரை அவள் உயிரைக் கையில் பிடித்திருப்பதும் ‘ஒரே ஒரு தடவையாவது கண்ணால பாத்துட்டு மரிச்சிடணும்என்பதற்காகத் தான். பொருள் தேடி அவன் வெளிநாடு பயணத்திற்கு ஆயத்தமாகும் போது அவனது ‘ராஜகுமாரிஏதோ சொல்ல வருகிறாள். வண்டி வந்து விடுகிறது. கனவுகள் உடைய கால் உடைந்து எச்சில் தட்டுகளை கழுவுபவனாக நாட்களை ஓட்டும் போது சுகறாவின் மரணச்செய்தியை ஏந்தியபடி உம்மாவிடமிருந்து கடிதம் வருகிறது. நாவல் முழுதும் மஜீதின் மீது ஈடில்லா அன்பைப் பொழியும் உம்மாவின் பாத்திரத்தைத் தனித்துச் சொல்ல வேண்டும். இறப்பதற்கு முன் அவனது வருகையை எதிர்நோக்கிக் கேட்டுக் கொண்டேயிருந்த சுகறா அன்று அவன் விடைபெறும் போது சொல்ல வந்தது என்னவாகயிருக்கும்?! யாரிவார்? ஆனால் ஒன்றைச் சொல்ல முடியும். அது இந்நாவலை இதுநாள் வரை வாசித்த இலட்சக்கணக்கான வாசகர்கள் இது குறித்துச் செய்திருக்கக் கூடிய யூகங்களையும் கற்பனைகளையும் விஞ்சக் கூடிய ஒன்றாக அவையனைத்தையும் விட ‘கொஞ்சம் பெரிய ஒன்றாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

"இது ஒரு தமாஷ் கதை”  என்று பாத்துமாவின் ஆடு நாவலைப் பற்றிச் சொல்லும் பஷீர் அடுத்த வரியாக ‘இருந்தாலும் எழுதும் போது நான் மனதிற்குள் வெந்து சாம்பலாகிக் கொண்டிருந்தேன்என்கிறார். நல்ல தமாஷ்! அவரது ஆக்கங்களிலேயே ஆகச் சிறப்பானது இந்நாவலே. இதற்குள் தமாஷ் இருக்கிறது தான். ஆனால் அதை விடவும் வேறுபட்ட கூறுகள் நேரடியாகவும் உட்பொதிந்தும் கிடக்கும் நாவலாகும். சுத்தமான தெளிவான பைத்திய நிலையில் இருந்த போது எழுதப்பட்டது என்கிறார் பஷீர். அது எப்படிப்பட்ட பைத்தியம் என்றால் ஒரு பன்னிரண்டு யானைகளுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகக் கற்பனைசெய்து கொள்ளுங்கள். ஒரு யானையின் தலையில் எண்ணெயைத் தப்பளம் வைத்தால் பன்னிரண்டுமே தூங்கிவிடுமென்று சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒன்றை என் தலையில் வைக்கிறார்கள்“. அவ்வாறான காலத்தில் எழுதி எடுக்கப்பட்ட சுயவரலாற்றுத்தனம் நிரம்பிய நாவல் ‘பாத்துமாவின் ஆடு’. இதற்கு பஷீர் எழுதியிருக்கும் முன்னுரை பலவிதங்களிலும் முக்கியத்துவமுடையது. எதை எழுதினாலும் அதன் இறுதி விளைவாக அதை மிளரச் செய்யும் ஒன்றாக இருக்க வேண்டியது கலைத்தன்மையே என்பதை அடியோட்டமாகக் கூறும் முன்னுரை அது. மேலும் எழுத்தாளனுக்கு தன் வாழ்க்கையிலிருந்து மறைக்க ரகசியம் என ஏதும் இருக்க வேண்டியதில்லை என்பதை முகத்திற்கு நேராகச் சொல்லும் முன்னுரையும் கூட. ஏனெனில் சுந்தர ராமசாமி சொல்வது போல் “பஷீருக்கு வாழ்க்கையின் மென்மையும் கடுமையும் ஆழமாகத் தெரியும். மென்மையை உறுதிப்படுத்த,கடுமையை ஒரு போதும் மறைக்காதவர் அவர். அவருடைய எழுத்தில் மிகக் கீழானவற்றிற்கு வெகு சமீபத்தில் இருக்கின்றன மிக மேலானவையும்”.

இந்நாவலில் வரும் உம்மா அவரது பிற படைப்புகளில் காணக்கிடைக்கும் உம்மாவிலிருந்து வேறுபட்டவள். “உம்மா எனும் பிரம்மாண்டமான கதாபாத்திரம். அக்கம் பக்கம் பார்த்துவிட்டு செவிக்குச் செவி கேட்காமல் ரூபாய் மட்டும் தந்தால் போதுமென்று சொல்லும் உம்மா. எவ்வளவு அற்புதமான வெளிப்படையான எளிமையான அப்பட்டமான யதார்த்தம். ஆனால் எவ்வளவு மனிதாபிமான மிக்க அக உணர்வு. சென்ட்ரல் ஜெயிலிலிருக்கும் தன் மகன் பசியுடன் வந்துவிடுவானோ என்று ஒவ்வொரு இரவும் தகர விளக்கைப் பற்ற வைத்துச் சோறுடன் காத்திருக்கும் அதே உம்மா தான் இந்த உம்மாவும்.என்று எம்.டி.வாசுதேவன் நாயரின் கூற்றை பஷீரின் வாசகன் மறுப்பேதுமின்றி ஆமோதிக்கவே செய்வான். இஸ்லாம் வாழ்க்கையைப் பின்புலமாக இவரது எழுத்துக்கள் கொண்டிருப்பினும் அவர் முன்னர் மேற்கொண்ட நாடோடி வாழ்க்கை கற்றுத் தந்திருந்த பலநூறு பாடங்கள் அந்த சொந்த அனுபவங்களுக்கு நுட்பத்தைக் கூட்டுகிறது. அதுவே  படைப்புலகிற்கு ஆழத்தையும் விரிவையும்  அளிக்கிறது. அவருக்கு பின் எழுத வந்த அவரோடு நெருங்கிய நட்புக் கொண்டிருந்த எம்.டி.யின் எழுத்துகளில் [பஷீருக்கு இஸ்லாம் வாழ்க்கை என்றால் எம்.டி-க்கு நாயர் சமூக வாழ்க்கை(விதிவிலக்கு இரண்டாம் இடம்)] இது நிகழவில்லை. மேலும் பஷீருடையதை வசதிக்காகவே நாவல் என்று சுட்டுகிறோம். நாவல் என்னும் வடிவத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு அதில் இஸ்லாம் வாழ்க்கை நுட்பமாகச் சொன்னவர் நவீனத்துவரான புனத்தில் குஞ்ஞப்துல்லா. 

ஒன்றரைப் பர்லாங் தூரத்திலிருக்கும் பஷீரின் சகோதரியான பாத்துமா எழுந்ததும் செய்யும் முதல் வேலை தன் ஆட்டை அவிழ்த்து விடுவது. அது அப்படியே ‘ஸ்டைலாகநடந்து வந்து வீட்டினுள் நுழைந்து குழந்தைகளின் மீது நடந்து அவர்களை எழுப்பிவிட்டு பலாமர இலைகளைத் தின்னத் தொடங்கும். பிறகு ‘பால்யகால சகி’ ’சப்தங்களை ஒரு கை (வாய்!) பார்த்து விட்டு போர்வையை தின்ன ஆரம்பிக்கிறது. ஏனெனில் பாத்துமா ஆட்டிடம் ‘அந்த பலாவிலையை எல்லாம் அவளுங்க கூட்டித் தூர எறிவதற்கு முன்பே நீ போய் வயிறு நிறையத் தின்னு எந்தங்கமே!எனச் சொல்லி அனுப்புகிறாள். அந்த அவளுங்கஅவளது உம்மாவும் நாத்தனார்களும் சகோதரியும். சாவகாசமாக ஓய்வெடுத்தபடி எழுத பல நாட்களுக்குப் பின் வீடு திரும்பும் பஷிருக்கு இவைகளெல்லாம் கண்ணில் படுகின்றன. குழந்தைகளின் உலகம், பெண்களின் உள் உலகம், மனிதனின் சுயநலம் மிக்க அகவெளிப்பாடுகள், பிற உயிர்களிடம் அவ்வளவு வறுமையிலும் அவர்கள் கொண்டிருக்கும் நேசம் போன்றவை இந்நாவலுக்கு மேலதிக அழகை அளிக்கின்றன. இந்நாவலின் பிரதானமான அம்சம் இதுதான் எனக் கூறமுடியாதவாறு ஒன்றையொன்று மேவிக் கலையழகுடன் கூடிக் கலந்து கிடப்பது தான் இப்போதும் அந்நாவல் சோபை இழக்காது கூடுதல் ஒளியுடன் மிளர்வதற்கு மிக முக்கியமான காரணம்.
   
வீட்டின் பெரிய காக்கா(அண்ணன்)விடம் உடன்பிறந்தோர்க்கும் அவர்களைச் சார்ந்தோர்க்கும் உம்மாவுக்கும் இன்னும் சிலருக்கும் ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. அது வேறொன்றுமில்லை. பணம். அதைக் கேட்பவர்கள் மறக்காமல் அவரிடம் சொல்வது “இதைப் பிறர் அறிய வேண்டாம்”. ஒற்றைக்கு ஒற்றையாக ஐந்து ரூபாய் மட்டும் இருப்பதாகச் சொல்லும் போது உம்மா சொல்கிறாள், “ அதை எங்கிட்ட தா”. இன்னொரு தம்பிக்கு தனியே அறை கட்டிக்கொள்ள காசு வேண்டும். மற்றுமொரு கருமிதம்பிக்கு தன் தோட்டத்தை பல மடங்கு விலைக்கு அவரிடம் தள்ளிவிட பேராசை. பாத்துமாவுக்கு அவள் செல்லமகள் கதீஜாவுக்கு தங்கத்தில் கம்மல். தம்பி மனைவிகளுக்கு அது போலவோ அதற்கு ஈடாகவோ பண்டபாத்திரங்கள். சிறுவயதில் முலைப்பால் குடித்ததாக கூறி ஊர்பெண்கள் வந்து வாங்கிப் போவது தனி. அவர் மொழியில் சொல்வதெனில் அப்படியே க்ளீன்’.! அவருடைய ரெக்கார்டர்,புது சைக்கிள் அனைத்தும் அவர்களுக்கே. கதை சொல்லி அன்பானவர் என்றாலும் புத்திசாலி என்பதை அறியாதவர்கள் அல்லது அறியாதது போல பாவனை செய்யும் குடும்ப அங்கத்தினர்கள். வீடென்னும் அந்த உலகின் சுயநலன் அவர் தலைக்குள் புகையைக் கிளப்பியிருக்க வேண்டும். அதனால் “மனதிற்குள் சாம்பலாகிக் கொண்டிருந்தேன்” (முன்னுரையில்) என எழுத நேர்ந்திருக்கும்.

அரிசிச்சோற்றை ஆண்களுக்குப் போட்டுவிட்டு மரச்சீனிக்கிழங்கைத் தின்று காலந்தள்ளும் பெண்களுக்குள்ளான பொறாமைகள் தற்காலிகச் சச்சரவுகள் அதற்கேயுரிய இயல்பான அழகுடன் நிகழ்கின்றன. இத்தனையையும் செவியுற்று அமர்ந்திருக்கும் கதைசொல்லிக்கு  வரும் மணியார்டரின் சேதி அவருக்கு எட்டுவதற்குள் அதே ரத்த உறவுகளால் பாகம் பிரிக்கப்பட்டுவிடுகிறது. இவ்வளவுக்கும் நடுவில் சம்பங்காய்களுக்காக வந்த பெண்களை தன் ரசிகைகள் என நம்பி ஏமாந்த அன்பான கதைசொல்லி அம்மாவிடம் கடன் பெற்று பீடி வாங்கி ஆற்று மணலில் அமர்ந்து அவர்களை நினைத்து புகைவிடுகிறார். ஃப்பூ.!. ஆமாம், ஃப்பூ! அவ்வளவு தான். ஃப்பூ! தன்னைச் சுற்றி ஓடும் உலகின் மனக்கிலேசம் அவரை அழுத்தும் போது கூட இவ்வாறான ஒரு தருணம் நாவலுக்குள்ளிலிருந்து எழுந்து வருகிறது.  ஃப்பூ! அதனால் தான் சு.ரா சொல்கிறார் போலும், “பஷீருடன் ஒப்பிட்டுப் பேச நம் மொழியில் எவரும் இல்லை’! அப்படிக் கூற இன்னும் பல கிளைக்காரணங்களும் இருக்கின்றன என்பதை அவரது எழுத்துப் பிரபஞ்சத்துக்குச் சென்றுத் திரும்பியவர்கள் எளிதாகவே கண்டுகொள்ள முடியும்.

குழந்தைகளுக்கும் பிராணிகளுக்கும் பஷீரின் உலகில் தனித்துவமான இடம் உண்டு, அவர்களுக்கேற்ற வண்ணங்களுடனும் வாசனைகளுடனும். பார்சலில் வரும் புத்தகக் கட்டுகளை விற்று அதற்கு கமிஷன் எடுத்துக் கொள்ளும் தம்பி , அந்தப் பணத்தைக் கேட்டும் உம்மா! அப்போது வரும் பாத்துமாவின் ஆட்டுக்கு தன் உலகppப் புகழ்பெற்ற மூக்குநூலைத் தின்னத் தரும் பஷீர்.! வியப்புடன் கூவத் தோன்றுகிறது, ஓ..!...பஷீர்..!!
நாவலை அசைப் போட்டபடியே நடக்கையில் மீண்டும் மீண்டும் மனதிற்குள் மிதந்து அசைந்து வரும் காட்சி ஒன்று உண்டு. மண்ணைக் குழைத்து பனையோலை வேய்ந்த பூட்டு இல்லாத கயிற்றில் கட்டப்பட்ட கதவுள்ள வீட்டை நோக்கி தன் கணவன் கொச்சுண்ணியுடன் பாத்துமா செல்லும் சித்திரம் அது. “ தீப்பந்தம் பற்ற வைத்து கொச்சுண்ணி முன்னால் செல்வான். அந்த வெளிச்சத்தில்  பின்னால் பாத்துமா. பாத்துமாவையொட்டி வால் போல் பத்து வயதான கதீஜா. கதீஜாவின் பின்னால் ஆடு.

பிறகு,ஆட்டுப் பாலுக்கு அங்கு நடக்கும் தகிடுதித்தங்கள்! நாவலை வாசித்து மூடிவைத்த பின் பெரிய எழுத்துக்காரர்களை நோக்கி நாம் எப்போதும் உச்சரிக்கும் அரதபழசான சொல்லிச்சொல்லி அச்சொல்லின் ரசம் தேய்ந்து பாலீஸ் மங்கிப் போன ஒரு சொல் தான் முன்னால் வந்து நின்றது. மகா கலைஞன் ! பஷீர் இதைக் கேட்டிருப்பாரெனில் சட்டென சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து பீடி பற்ற வைத்த பிறகு “ம்ம்ம்...என பொய்யாக உறுமி மீண்டும் சாய்ந்து  என்னை உற்று நோக்கி சொல்லியிருப்பாராகயிருக்கும். டுங்கு! டுங்கு!

அவரது நாவல்கள் அளவுக்கே சிறப்பித்துக் கூறத்தக்கவை அவரது நெடுங்கதைகளும் சிறுகதைகளும். ஊரில் யார் கர்ப்பமானாலும் அதற்கு நான் தான் காரணமெனச் சொல்லித் திரியும் எட்டுக்காலி மம்மூஞ்ஞு, மூணு சீட்டு விளையாட்டுக்காரனான ஒத்தைக் கண்ணன் பாக்கர், அவருடைய மகளான அதிரூப சுந்தரி ஸைனபா, அவளுடைய காதலனும் லேசான மாறுகண்ணனும் திக்கு வாயனும் சுத்தக் கறுப்பனுமான மடையன் முத்தபா ,காதலி விட்ட பர்ர்ர்..ரால் கலைந்து போகும் காதல் (பர்ர்..!), டாக்டர் வந்து பின்பே பிரசவிப்பேன் என ஓலமிடும் ஐசமா(ஐசுக்குட்டி), படுக்கையில் மூத்திரம் பெய்ததற்காக ஆனையின் காலடியில் புகுந்து(ஆனையை கடித்தும் வைக்கும்) வரும் பஷீர்(ஆனைமுடி) இவர்கள் மட்டுமல்ல ,வேறொரு விளம்பு நிலையின் இருண்ட உலகத்தைச் பேசும் சப்தங்கள் நிரம்பிய உலகத்தை வாசிக்கும் போது அது வாசகனை அகம் சார்ந்த சில நுட்பமான இடங்களுக்கு நகர்த்தியபடியே குதூகலத்தைத் (சப்தங்கள் தவிர) தொற்றச் செய்துவிடுகிறது. அழகியான ஸைனபா போயும் போயும் ஏன் மடையனான முத்தபாவைக் காதலித்தாள்?(மூணுசீட்டு விளையாட்டுக்காரனின் மகள்) , தங்கச் சிலுவைத் திருடிய தோமாவிடம் (ஆனைவாரியும் பொன்குரிசும்) ஏன் ஏட்டு மகள் கொச்சு திரேஸ்யாவுக்கு காதல் உண்டானது? அவனது சாகசம் கண்டா? அல்லது திருடனின் நல்லியல்பு மேல் கொண்ட பிரேமமா? சீட்டுக்களில் ரகசிய முத்திரை போட வைத்து முத்தபாவை வெல்லச் செய்வது காதலுக்காகத் தானே? மடையனுக்கும் தோன்றுவதால் இதை மகத்தான காதல் என்று கருத வேண்டியதில்லையா?! தூய மனங்களிலிருந்து முளைத்தெழும் அனைத்திற்கும் மகத்தானவையாக ஆகும் ஆற்றல் உண்டல்லவா! மேலும் இதற்கு தெளிவான இறுதியான விடைகள் இன்றுவரை கண்டுபிடிக்கவுமில்லையே. அது தானே வாழ்வின் அழகும்! அதைத் தரிசனமாக ஆக்கிக் கொள்ளாமல் ஆராய்ச்சி செய்ய புறப்படுவது சுத்த ‘படுக்கூஸ்த்தனமான வேலையாகத் தானே இருக்கும்.

உக்கிரமான காதலின் நிமிடங்களால் ஆன ‘அனுராகத்தின் தினங்கள்பிறவற்றிலிருந்து மாறுபட்டு உணர்ச்சியின் கொந்தளிப்புகளால் ஆனது. பஷீரின் தோல்வியடைந்த காதல் கதை இது. தேவியினுடனான காதலும் அந்தக் காதலின் தருணங்களையும் குறிப்பாக எழுதி வைத்து மறந்து போகிறார் பஷீர். பின்னாளில் பிரசுரமாகாது கிடந்த ‘குப்பைகளைஎல்லாம் எரிக்கச் சொல்லி ஃபாபியிடம் ஒப்படைத்த கட்டுகளில் இருந்ததை எம்.டி.வாசுதேவன் நாயரிடம் அளிக்கிறார் ஃபாபி. அச்சுக் கோர்ப்பு முடிந்த பின்பே பஷீருக்குத் தகவல் தெரியவருகிறது. தலைப்பிட்டது கூட எம்.டி.தான். அந்த தேவியை ‘டாட்டா’(பஷீர்)வால் இறுதிவரை மறக்க முடியாமல் இருந்தது என நினைவு கூறுகிறார் ஃபாபி.

சந்தேக கேஸில் உள்ளே போகும் தோமா மழைபெய்யும் இரவில் ஏட்டின் சோகக்கதையைக் கேட்ட பிறகு அவனுக்கு வேண்டி தங்கச்சிலுவைத் திருடி சில பல விசாரணைக்குப் பின் அதை ஒப்புக் கொண்டு “கர்த்தாவான ஏசு  கிறிஸ்துவை அறைஞ்சது மரச் சிலுவையிலே தானே? தேவாலயத்துக்கு எதுக்கு தங்கச் சிலுவை?என கேட்கும் போது ஒலிப்பது தோமாவின் குரலா? பஷீரின் குரலா? அப்படியாக தோமா பொன்குரிசு தோமாவாக பட்டம் பெற்று அப்படியே ஸ்டைலாகஊருக்குள் நுழையும் போது பஷீரின் நடையில் உற்சாகம் துள்ளுகிறது. எதை நோக்கியதாக எதன் குரலாக இலக்கியம் இருக்க வேண்டும் என எண்ணினாரோ அதைச் செய்து காட்டியவனுக்கு அந்த கெளரவத்தைக் கூட அளிக்க மாட்டாராயென்ன? இதே போன்றதொரு உணர்ச்சி தான் எலிகளுக்கும் நரிகளுக்கும் பாம்புகளுக்கும் வவ்வால்களுக்கும் பூச்சிகளுக்கும் இன்னபிறவற்றுக்கும் இந்த பூமியில் ஒரே மதிப்பு தான் (பூமியின் வாரிசுதாரர்கள்) என அவரை எழுதச் செய்கிறது போலும்.

வெவ்வேறு தளத்தில் நின்று எழுதப்பட்ட கதைகளான ‘பூவன் பழம்’, ‘மூடர்களின் சொர்க்கம்’,’சிரிக்கும் மரப்பாச்சிபோன்றவை தேவியின் காதலுக்கு பக்கத்திலேயே வேறு கோணத்தில் நோக்கத் தக்கவை.இதில் ஒரு அர்த்தத்தில் தங்கம் போன்ற கதையையும் சேர்க்கலாம். பஷீரின் சில கதைகள் இன்று  அதற்குரிய ஒளியை இழந்து பின் தங்கி விட்டதையும் சொல்லத்தான் வேண்டும். பெரிய மூக்கை ஆட்கள் பார்க்க வந்து பிரபல்யமாகி கட்டணம் வசூலிக்கிற வரை அது செல்வதை (உலகப் புகழ் பெற்ற மூக்கு) படித்த போது மார்க்கேஸின்  ‘மிகப்பெரும் சிறகுகளையுடைய வயோதிகன்என்னும் சிறுகதை நினைவுக்கு வந்தது. அதிலும் இது போன்ற வசூல்வேட்டை நடக்கும். ஆனால் உடனடியாக அதிலிருந்து மீண்டேன். ஏனெனில் எப்போதும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தைச் சுட்டியே ஒப்பிட்டுப் பேச வேண்டியதில்லை. இங்கிருந்தும் இம்மண்ணிலிருந்தும் அவ்வாறான கதைகள் எழுதப்படலாமல்லவா?!




மங்குஸ்தான் மரத்தினடியில் ரெக்கார்டு பிளேயரில் அபாரமான இசையை ஓடவிட்டு  தேவியை எண்ணியபடி அமர்ந்திருக்கும் பஷிர்..!  அதே  மரத்தினடிக்கு ‘புனித யாத்திரைபோல தன் மொத்த வாழ்க்கையையும் இலக்கியமாக ஆக்கிய ஒருவரைச் சந்திக்க நாள் தோறும் பேப்பூர் போய் இறங்கியவர்களுக்குள் சமூக அடுக்கு சார்ந்த வித்தியாசம் இருந்தது. பஷீர் அப்படி அவர்களைப் பார்க்கவில்லை.  இலக்கியக்காரர்களும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் அமர்ந்து பேசிய இடத்திலேயே மூன்று கொலைகள் செய்தவனும் பேச முடிகிறது. அதனால் தான் சிறையில் அவரை வாசித்திருந்த திருடன் மணியன் பிள்ளைக்கும் அவரைக் காண வேண்டும் என்று தோன்றிவிடுகிறது. காணாமலேயே கண்டு வந்ததாக போலீஸிடம் பொய் சொல்லும் போது அவர் பெயரைச் சொன்னதற்காகவே அந்தப் போலீஸ்காரர்கள் போகிற லாரியை மடக்கி பிள்ளையை அதிலேற்றி அனுப்பி வைக்கிறார்கள். ஏனெனில் அவர் சகலருக்குமான பிரிய பஷீர். அதனால் தான் வாசகர்களால் எவ்வித அச்சமும் கூச்சமுமின்றி அவரது வழுக்கைத் தலையை ஏகத்துக்கும் கிண்டல் செய்து கேள்வி கேட்க முடிகிறது. சந்தனக்கல் தொலைந்து விட்டது உங்கள் தலையை அதற்குப் பதிலாகத் தர முடியுமா? என்று ஒருவன் கேட்க பட்டாசு மருந்து அரைத்துக் கொள்ளவா? என்கிறான் மற்றொருவன். இன்னும் ஒருபடி மேலே போய் மரச்சீனிக் கிழங்கைப் பயிர் செய்து கொள்ளட்டுமா? என்கிறான் வேறொருவன். இந்த வழுக்கை தனி தினுசு. இது பஷிர் பிரெண்ட் என்று சொல்வது யார் எனக் கேட்கிறீர்களா?பஷீரேதான்.“வழுக்கைத் தலையர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று டாட்டா சொன்னதாக ஃபாபி பிரியத்துடன் நினைவு கூர்கிறார். எந்த ஃபாபிசிறு வயதிலேயே அவரை வாசித்திருந்த நிலையில் தன்னைப் பெண் பார்க்க-ஐம்பது வயதில்- பஷீர் வந்திருக்கும் சேதியை கேள்விப்பட்டு “ஆளு இன்னும் உசுரோடயிருக்காரா? என்று கேட்ட அதே ஃபாபி.

தன்னை ஒண்ணாம் நம்பர் முஸ்லீம் சாதாரண முஸல்மான்எனச் சொல்லிக் கொண்ட பஷீரின் எழுத்துக்களை சு.ராவின் மொழியில் சொல்வதென்றால் “மொழிபெயர்க்க மிகக் கடுமையானது அவருடைய எழுத்து. தான் பேசிய கொச்சையையே தன் மொழியாக எழுத்தில் அனுசரித்தவர் அவர். முஸ்லீம் குடும்பங்களுக்குள் புழங்கும் கொச்சைச் சொற்கள். அந்தரங்கமான குறியீடுகள், பொருளற்ற ஓசையின் பதிவுகள். இவற்றின் ரசவாதக் கலவை.”  அதை வெகு ஈடுபாட்டுடன் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் குளச்சல் மு.யூசுப். மொழியாக்கத்தை வாசிக்கையில் பஷீரின் பாத்திரங்கள் அனைத்தும் குமரி மாவட்டத்துக்கு குடிமாற்றி வந்துவிட்டார்களோ?என நினைக்கவைக்கிறது. பல இடங்களில் குமரி வட்டாரத்துக்காரர் எழுதிய படைப்பு போல் இருக்கிறது. இது மிகப்பெரும் சறுக்கல். ஜெயமோகன் சொல்வது போல் “மாம்பழம் ‘படுக்கேந்துவிழுகிறது. உம்மா ‘ஆஹாஷமாகவருகிறாள். கான் ஸிம்ப்ளனாகநிற்கிறான். இவ்வாறு தான் பஷீரின் நடை உருவாகி வருகிறது. உம்மா “றப்பே—ன்னே கொந்தே ஓடிவாயோ...என்று பெரியவாயில் கதறினாள். இம்மொழியைப் பிடிக்க முடியவில்லையெனில் அப்படியே அச்சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம். தமிழிலிருந்து சு.ராவின் ஜே.ஜே.சில குறிப்புகளையும் ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளேயும் மலையாளத்தில் மொழிபெயர்த்த ஆற்றூர் ரவிவர்மா பல தமிழ்ச் சொற்களை அங்கு அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். ஜே.ஜே-வின் மொழிபெயர்ப்பு மூலம்  மலையாளத்தில் நிகழ்ந்த சலனங்களையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும் கவிஞர்.கல்பற்றா நாராயணன் பதிவு செய்திருக்கிறார். அது போன்றதொரு சலனம் ஏன் இங்கும் நிகழக்கூடாது? மேலும் மலையாளம் அறிந்த தமிழ்ப் படைப்பாளிகள் பலரும் மேற்கோள் காட்டியிருக்கும் “என் தாத்தாவுக்கு ஒரு  யானையிருந்ததுஎன்னும் நாவலை யூசுப் “எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது என்று தமிழ்ப் படுத்தினாரல்லவா?!  அது அந்த நாவலின் இஸ்லாம் பின்புலத்தை அது உணர்த்த விரும்புவதை மிக நெருக்கமாக வாசகன் அறிந்து கொள்ள துணை செய்கிறதல்லவா? இதே பிரக்ஞை விரிவாக மொத்த மொழிபெயர்ப்பிலும் செயலாற்றியிருக்குமெனில் அது தமிழின் முக்கியமான பணியாக இருந்திருக்கும். யூசுப்பின் உழைப்பை மெச்சியபடியே தான் இந்தக்  விமர்சனத்தையும் முன் வைக்கிறேன்.  
பஷீர் தன் எழுத்துக்கு எந்த பெயரையும் இட்டுக் கொள்ளவில்லை. நவீனத்துவத்தையும் பின் நவீனத்துவத்தையும் கேலியாகவே கண்டார். ஏனெனில் அவருடையது அப்படியான வகைப்பாட்டுக்குள் அடங்காத, அவரே சொல்லிக் கொண்ட பஷீரியம்.

வரலாற்றாசிரியனாக தன்னைச் சொல்லிக் கொண்ட பஷீரின் படைப்புலகு பற்றிய இந்தக் கட்டுரை அப்படியே ஸ்டைலாக இங்கு நிறைவுறுகிறது.


மங்களம்!

சுபம்!

அனர்க்க நிமிஷம்* – விலை மதிக்கமுடியாத தருணம்

இக்கட்டுரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பஷீரின் ஆக்கங்களை முன்வைத்து எழுதப்பட்டது.காலச்சுவடு பதிப்பக வெளியீடாக சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வந்த பஷீரின் ‘மதில்கள்ஃபாபி பஷீரின் எடியே..’ நீங்கலாக பிற அனைத்தும்  குளச்சல் மு.யூசுப் மொழிபெயர்ப்பில் வந்துள்ள புனைவுகளையும் புனைவல்லாததுமான (உண்மையும் பொய்யும்) நூல்களை அடிப்படையாகக் கொண்டது. இக்கட்டுரையில் வரும் பிற மலையாள எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த அவதானிப்பும் தமிழ் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டதே.

உதவிய பிற ஆக்கங்கள் :

1.      பஷீர் : முற்போக்கு இலக்கியத்தின் அசல் –சுந்தர ராமசாமி – கட்டுரை

2.      பஷீர் : பூமியின் உரிமையாளர் – சுகுமாரன் – கட்டுரை

3.      பஷீர்  : மொழியின் புன்னகை- ஜெயமோகன் – கட்டுரை


4.    இந்திய இலக்கியச் சிற்பிகள்- வைக்கம் முகம்மது பஷீர் –எம்.என்.காரச்சேரி- சாகித்ய அகாதமி வெளியீடு.  

(கபாடபுரம்.காம். இதழ்-2)
www.kapaadapuram.com