Monday, December 1, 2014

நவீன சக்கரத்தால் உருளும் பழம்தேர்


      நவீன சக்கரத்தால் உருளும் பழம்தேர்


சி.மணியின் கவிதையுலகம் 

                                                            
   

               ”எண்ணம்        
               வெளியீடு
               கேட்டல்
              இம்மூன்றும் எப்போதும்
              ஒன்றல்ல;ஒன்றென்றால்
              மூன்றான காலம்போல் ஒன்று
                                                     -இடையீடு (எழுத்து ஆகஸ்ட் 62)

                                        ‘சொல்ல விரும்பிய தெல்லாம்/சொல்லில் வருவதில்லைஎன்று தொடங்கும் சி.மணியின் மேற்குறித்த கவிதை அவருக்கு மட்டுமல்ல,ஒட்டுமொத்த கவிதையியலுக்கே பொருந்தும் சாளரங்களையுடையது. இதில் ‘கேட்டல்என்பதை மட்டும் மனதிற்குள் சென்று ஒலித்தல் என அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வரிக்கு முழுமையாக இல்லையென்றாலும் வேறொரு விதத்தில் ஒப்புநேக்கத் தக்க பிரமிளின் “சொல்லோ சொப்பனம்/சொல்லிரண்டின் இடுக்கில்/சொப்பனத்தின் கண விழிப்புஎன்னும் வரியையும் சேர்த்துக் கொள்ளலாம். பழனிச்சாமி,சி.மணி என்ற கவிஞராக ஆனதற்குப் பின்புலமாக இருந்தது அவரது பழந்தமிழிக்கியத்தின் மீதான புலமையும் மரபின் மேல் கொண்டிருந்த ஆழமான ஈடுபாடும். ஆனால் இவை மட்டும் ஒரு கவிஞன் உருவாக காரணியாக இருக்க முடியாதல்லவா?பாரதிக்கு முன்னும் பாரதி காலத்துக்கு பின்னரும் வந்த சில கவிஞர்களுக்கு வேண்டுமெனில் அவை பொருந்தகூடும். ஆனால் புதுக்கவிதை தமிழில் எழுதப்பட்ட பின்னர் அந்தப் பார்வை காலத்திற்கு முரணானதாக, ஒவ்வாததாகவே கருதப்பட்டது. ஏனெனில் மரபில் பெரிய பயிற்சி கொண்ட ஆயிரக்கணக்கான தழிழாசிரியர்களிடமிருந்தும் கல்லூரிப் பேராசிரியர்களிடமிருந்தும் (விதிவிலக்குகள் நீங்கலாக) சொந்த மொழியும் வீச்சும் கொண்ட கவிஞன் ஏன் உருவாகிவரவில்லைஏனெனில் இவற்றையெல்லம் கடந்த “ஏதோ ஒன்றால் உசுப்பப்பட்டு தான் கவிஞன் வருகிறான். மேலும் கவிதை வாழ்க்கையின் நுட்பமான தளங்களை சில வரிகளில் சென்று தொடும் வல்லமை கொண்ட வினோத வஸ்து என அவன் அறிந்துமிருக்கிறான். வானம் நோக்கி மனதை எழச் செய்யும் கவிஞன் தான், அடுத்த சில கவிதைகளில் கண்ணீரீன் தடத்திற்கும் கூட்டிச் செல்கிறான். மரபை மட்டும் சி.மணி கைகொண்டிருந்தால் அவரால் மேலெழுந்திருக்க முடியாது. மரபான மனதால் கவிதைகளுக்குள் சோதனை முயற்சியையும் நவீன கவிதையையும் எழுதியிருக்கவும் முடியாது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகமெங்கும் நவீனத்துவத்தின் அலையால் ஆகர்ஷிக்கப்பட்ட போது அதற்கு நிகராக அதன் சுவடு தமிழிலும் ஆழமாகவே பலரிடமும் பதிந்தது. அவர்களுள் ஒருவர் சி.மணி. மரபும் நவீனத்துவமும் இணையும் புள்ளியில் இரண்டையும் அங்கதமும் பகடியுமான மொழியில் எள்ளல் தொனியில் எழுதியவர் செல்வம் (எ) வே.மாலி (எ) ஓலூலூ (எ) ப.சாமி (எ) தாண்டவ நாயகம் (எ) சி.மணி.   



                    தமிழில் எனக்கு யாரும் முன்மாதிரி கிடையாதுஎன்று கூறும் சி.மணியை புரிந்து கொள்ள எழுத்துவில் அவருடனும் அவருக்குப்பின்னும் எழுத வந்த பிற கவிஞர்களோடு அவரை ஒப்பிட்டுப் பார்ப்பது சற்றேனும் உதவுக்கூடும். இரண்டாம் பிறவி எடுத்தது போலபுதுக்கவிதைகளை எழுதிய ந.பிச்சமூர்த்தி, மயன்என்னும் பெயரில் கற்பனை கலவாத யோசித்து அறிந்த மொழியில் எழுதிய க.நா.சு, அடர்த்தியான படிமங்களும் உருவகங்களும் சொல்வன்மையும் கொண்ட பிரமிள், பெட்டிக்கடை நாரணால் தூண்டப்பட்டு நவீனக் குரலுடன் உள்ளே வந்த பசுவய்யா, தனதேயான உலகை எழுதிய நகுலன், குறிப்பிடத்தகுந்த கவிதைகளை எழுதிய எஸ்.வைத்தீஸ்வரன், ந.பிச்சமூர்த்தி கவிதைகளின் மற்றொரு மாதிரியான தி.சோ.வேணுகோபாலன் போன்றவரது கவிதைகள் யாப்பை பக்கமாக அல்ல தூரமாக நின்று கூட எட்டிப்பார்க்கவில்லை. ஆனால் சி.மணி யாப்பிலும் பழைய பா வகைகள் கொண்ட செய்யுள்களாலும் உவமைகளாலும் ஆன புதுக்கவிதைகளை எழுத்துவில் தொடர்ந்து எழுதியிருக்கிறார். யாப்பின் துடுப்பின்றி அவரது கவிதை படகிற்குள் நம்மால் செல்ல முடியாது. இன்னும் கூறுவதென்றால் அந்தப் படகின் பலகைகள் கூட செய்யுள்களின் வடிவத்தால் ஆனவையே. எனினும் இது வாசகனை தொந்தரவாகவோ உள்நுழைய தடையாகவோ இருக்கவில்லை. ஏனெனில் அதற்குள் அமர்ந்திருப்பவன் நவீன வாழ்க்கைக்குள் சுற்றும் மனிதன்.அவனைச் சுற்றித் தான் அவரது கவிதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. யாப்பும் கவிதையும்என்ற சி.மணியின் ஆய்வு நூல் அவரது கவிதையியலைப் பற்றிய புரிதல்களுக்கு மேலும் பயன்படக்கூடியது.




பெட்டிக்கடை நாரணன்’ என்னைப் பாதிக்கவில்லை.எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லைஎன சி.மணி சொல்வதை இந்தத் தளத்தில் வைத்தே பார்க்க வேண்டும்.



                  சி.மணி, டி.எஸ்.எலியட்டின் தாக்கத்தால் ‘முக்கோணம்என்னும் தன் முதல் கவிதையை(1959) ‘எழுத்துவில் எழுதினார். எலியட்டால் இவ்வளவு தீவிரமான பாதிப்பிற்குள்ளான முதலாவது தமிழ் கவிஞன் இவராகவே இருக்கலாம். ஏறக்குறைய கடைசியாவது கவிஞனும் மணியென்றே தோன்றுகிறது. டி.எஸ்.எலியட் நூற்றாண்டையொட்டி பிரம்மராஜன் தேர்ந்து தொகுத்து மீட்சி (Dhanya & Bramma  Publishers ,Ooty  1998) வெளியீடாக வந்த சிறுகட்டுரை நூலை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எலியட்டின் “பாழ்நிலம்(Waste  Land) கவிதையால் தூண்டப்பட்டு மணியால் எழுதப்பட்ட “நரகம் நெடுங்கவிதை அவரை நினைவுக்கூறுந்தோறும் அவர் பெயரோடு ஒட்டிக் கொள்ளும்படியான புகழையும் பலரது சிலாகிப்பையும் பெற்ற கவிதைகளுள் ஒன்று. அவரது பெரும்பலான கவிதைகளுக்குள்  இருந்து கொண்டிருந்த நுண்ணுணர்வும் மொழித் தேர்ச்சியும் இக்கவிதையின் இருப்பை சாஸ்வதம் ஆக்கியிருக்கிறது.



                 
                   அங்கதத்தை நவீன தமிழ்க் கவிதைகளுக்குள் ஒலிக்க வைத்த முன்னோடிக் கவிஞன் சி.மணி தான்.அது போலவே  வாழ்க்கையின் அபத்ததையும் சலிப்பையும் பகடியாக எள்ளலோடு  புதுக்கவிதைக்குள் முன்வைத்தவரும் இவரே. பழைய கவிதை வடிவங்களில் புதிய காலத்தின் பிரச்சனைகளைச் சொல்லும் போது அது தன்னிச்சையாகவே அங்கதமாக மாறிவிடுகிறதுஎன்னும் எலியட்டின் கூற்று உடனடியாக நினைவில் வந்து அமர்கிறது. சி.மணியைப் பின்தொடர்ந்தவர்களாக ஞானக்கூத்தனையும் ஆத்மாநாமையும் சொல்லலாம். அந்த அங்கதம் ஞானக்கூத்தனிடம் மேலும் கூர்மை கொள்ளும் போது ஆத்மாநாமிடம் நேரடித்தன்மையிலான அபத்த கவிதைகளாகவும்  அரசியல் கவிதைகளாகவும் பரிணாமம் பெறுகின்றன. குறிப்பாக ஓய்விலாப் புலன்வழிச் சோதனை/வாழ்க்கை.புதுச்சுவை அறிய/சிகரெட் பிடிக்கலாம் முதலில்(பச்சையம்) என்னும் வரி ஆத்மாநாமிடம் வேறொன்றாக தொடர்வதைக் கவனிக்கலாம்.மினியுகம்என்னும் சி.மணியின் கவிதை அவரது அரசியல் கவிதையாகக்  கருதத்தக்கது.

                   சி.மணியின் அழியாத கவிதைகளுள் ஒன்றான “என்ன செய்வ திந்தக் கையை எனத் தொடங்கும் நுட்பமான கவிதைக்குள்

        ”........................இந்தக் கைகள்
        வெறுந்தோள் முனைத் தொங் கல்,தாங் காத
        உறுத்தல் வடிவத் தொல்லை (தீர்வு-கசடதபற மே 71)

                          என்னும் வரிகள்  இடைகலக்கும் போது அது அபத்தமும் சலிப்புமான ஒன்றாக ஆகிவிடுவதையும் இவ்வாறான கவிதைகளில் நவீனத்துவத்தின் ஒரு முகத்தை  சி.மணி அடங்கிய தொனியில் வெளிப்படுத்துவதையும் உணரலாம். ஒன்றுக்கும் உதவாது வெறுமனே தொங்கும் கையை காலாக் கென்றேன்என்னும் முடிப்பில் தொக்கி நிற்கும் கிண்டல், திண்ணை இருட்டில் தலையை எங்கே வைப்பதெனக் கேட்டவருக்கு “களவு போகாமல் இருக்க கையருகே வைஎன்ற ஞானக்கூத்தன் கவிதையில் சற்றும் குறையாமல் வெளிப்படுவதை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.


                    
                பளபளப்பும் நம்ப வைக்கும் தந்திரமும் கொண்ட விளம்பரப் போலி நபர்களை மிக நுட்பமாக பகடி செய்யும் இந்த சி.மணியின் கவிதை அவர்களிடம் ஏமாறுவோரையும் குறுக்கில் குத்துகிறது. முக்கியமாக தலைப்போடு இக்கவிதையை சேர்ந்து வாசிக்கும் ஒருவர் இக்கவிதையின் எள்ளலை ரசிக்காமல் இருக்க முடியாது.

தலைவிதி

முற்றி லுமுன்தன் விதியினைப் புதிதாய்
மாற்றி எழுதும் நேரம் வந்து
நிற்கி றது,வா ஓடிவா எனவும்,

ஓட்டமாய் ஓடிப் போயென் தலையைக்
காட்டினேன்; காட்டவும் இடக்கை  நீட்டி

எட்டினார்; எட்டிக் கூந்தலைச்
சட்டெனப் பிடித்ததும் அடித்தார் மொட்டை.

இதிலுள்ள “ஓடி வாஎன்ற அழைப்பும் ஓட்டமாய் ஓடிப் போய்நிற்கும் நிலையும் “சட்டெனஎன்பதில் வெளிப்படும் வேகமும்  கவிதையை மேலும் ஒளிபெறச் செய்கிறது. இதே ரீதியில் வைத்துக் கணிக்கப்பட வேண்டிய மற்றொரு கவிதை பாராட்டு”.எழுத்துலகில் போதுமான பரிச்சயம் உள்ளவர்கள் இக்கவிதையின் உள்ளே அமர்ந்திருக்கும் நகைப்பொலியை கேட்டு விடமுடியும்.

பாராட்டு

கைப்பையை மாம்பழங்கள் நலுங்காமல்
வைத்தபடி இதைக்கேளடா ஒரு பயலும்
இதுமாதிரி,சிரசாசனம் இருந்தாலும்
எழுதுவதற் குமுடியாதென ஒருமுன்னுரை
கொடுத்துவிட்டுப் பரபரப்புடன் விளக்கினேன்விளக்
கினேன்சுமார் அரைமணி; அவன்முகத் தையேநோக்
கினேன்,எப்படி என்றுகேட்டு நிறுத்தியபின்

‘ஆஹா

என்ன அருமை இந்த வாடை.
குண்டு தானே? என்று கேட்டான்.

இந்த குண்டு தானே?என்பதில் தொற்றிக் கொண்டிருக்கும் கிண்டல் அபாரமானது.சி.மணிக்கே உரியது.



                    அது வரை கவிதைக்குள் இருந்த ஒரு வித புனித (அ) இவைப் பேசப்படலாம் மற்றது கூடாது என்ற நியதியை எல்லைகளை கடுமையாக மீறியவர் சி.மணி. கவிதைக்குள் இடக்கரடக்கலுக்கு என்ன சோலி?என்ற வினாவை தன் கவிதைகளின் வழியாக முன் வைத்தார். வழமையிலிருந்து விலகி தள்ளி வைக்கப்பட்டதையும் மூடி வைக்கப்பட்டதையும் இவரே கவிதைக்குள் கொணர்ந்தார். வேறு கவிஞர்கள் இந்த இட்த்திலிருந்து ஆன்மீகத் தளம் நோக்கி நகர்ந்து விடும் போது சி.மணி அதே லெளகீக உலகினுள் இருந்தபடியே இது போன்ற கவிதைகளை தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்.

       “எனக்கென்று வட்டமிட் டண்ணாந்து
                விம்மி யிருக்குமுன்றன்
        தனக்குன்றி லேறி விழுவேன்நின்
                அல்குற் றடாகத்திலே”.


என்னும் பலபட்டடை சொக்கநாத புலவரின் தனிப்பாடல் திரட்டிலிருக்கும் பாடலொன்றை (புலவர் அரைசதத்துக்கும் ஒன்றிரண்டு அதிகமான கவிதைகள் எழுதியிருப்பினும் இதுவே அவரது ஆகச்சிறந்த கவிதை எனச் சொல்லப்படுகிறது) தன் நெடுங்கவிதையொன்றுடன் (பச்சையம்) இடைகலந்து எடுத்தியம்பும் சி.மணியின் இந்த நுட்பமான தேர்ந்தெடுப்பு அவரது சொந்தவரி கவிதைகளுக்கு விளக்கமுடியாத அழகைத் தருகின்றன. அதற்கு

     “முன்நோக்கும் இருமுலைகள்
      கண்காம்பு முகம்தூக்கி
      வான்நோக்கி அகம்மலர
      மீன்வார்ப்பில் சிறுகச்சு “

மேற்குறிப்பிட்ட இரண்டிலுமே சீர் பிரித்து எழுதப்பட்டிருப்பினும் கூட கவிதையில் பெண் உடல் மீதான ஆணின் மோகத்தை தீவிரமாகச் சொல்லும் வரிகளுக்கிடையே காமம் மட்டுமல்ல, அளவற்ற காதலும் கலந்துகிடக்கிறது. இன்று இயல்பாக தோன்றக்கூடிய இக்கவிதைகள் அன்று அளித்திருகக்க் கூடிய அதிர்ச்சியை யூகிக்க முடிகிறது.நா.வானமாமலை போன்ற இட்துசாரிகள் புதுக்கவிதைக்கு போட்ட முட்டுக்கட்டைகளில் முதலாவது கட்டை அது ஆபாசமானது என்பதே. அவருக்கும் அவரைப் போன்றோரையும் நோக்கி எழுத்திலே பச்சை எழுத்தாளன்/மனதிலே பச்சையென் றாகுமா?“ என்று கேட்கும் சி.மணியின் கவிதை இவ்வாறு தொடங்குகிறது.


  சொல்கிறார்கள்
 எழுத்திலே கூடாதாம்;
 பாலுணர்ச்சி கூடினால்
 பச்சையாம்
    
 வாலை இளநீரை வாய்விழியால்
 வாரிப் பருகும் இவர்கள்
 இளமை கொடுக்கும் துணிவில்
 இடித்துக் களிக்கும் இவர்கள்
 வயது வழங்கிய வாய்ப்பில்
 அமர்ந்து சிலிர்க்கும் இவர்கள்
 இருவரைக் கட்டிலேற்ற ஊதி
 முழக்கியூர் கூட்டும் இவர்கள்
 இருளில் ரகசியமாய் வெட்கி
 மருவி மயங்கும் இவர்கள்
 பிறகு தவழவிட்டு ஊரெல்லாம்
 பெருமை உரைக்கும் இவர்கள்
 எல்லாம் இவர்கள்தான் - வேறு யார்
 சொல்வார்கள்? கூடாதாம்; பச்சையாம்

என தொடர்ந்து  போகும் இந்த நெடுங்கவிதை மணியின் நுட்பமான மொழி பயன்பாடு வெளிப்படும் கவிதைகளுள் ஒன்று. அதிலும்   வெகு சிக்கமானமொழியில்

இருவரைக் கட்டிலேற்ற ஊதி
முழக்கியூர் கூட்டும் இவர்கள்

எனும் போது அதற்குள் காணக்கிடைக்கும் மெல்லிய அங்கதமும் விமர்சனமும் “தனி ஊசல் போல “ மனதிற்குள் இடவலமாய் அசையும். மணி இது போன்ற கவிதைகளின் வழி தான் தனித்துவதோடு எழுந்து நிற்கிறார் என்று தோன்றுகிறது. பெண்ணின் அவயங்கள் ஆணிடம் கிளர்த்தும் இச்சையை நளினமாக

 “தவளைக்குப் பாம்பின் வாய்விரிப்பாய்
 அவள் வியப்பின் விழிவியப்பைக்
 கடைக்கண்ணில் களித்து 

என்கிறது ஒரு நெடுங்கவிதையின் இடையே.மேலும்

இட்ட அடிக்கும் எடுத்த அடிக்கும்
 இசைந்தே ஆடும் சடையழகை
 நெளிந்தே குலையும் பின்னழகை

இந்த பின்னழகின் வர்ணனைகள் மணியின் கவிதைகளில் பல இடங்களில் வருகின்றன. குறிப்பாக


பார்த்தேன் வெள்ளைப் பூவேலை
வார்த்த சோளி முதுகை;
தெரிந்தது முகமே.

                        எனும் போது அக்காட்சியைக் கற்பனையில் கண்டு அசைபோடும் மனம் மெல்லிய நகைப்புக்கு தயாராவதை உணரமுடியும்.


             

         அது போலவே அழகும் தன்னியல்பும் கொண்ட காதல் கவிதைகளில் சி.மணி தன் நுட்பமான அவதானிப்புகளை நோக்கி வாசகனை நகர்த்திவிடுகிறார்.

என்னை
நீரா யணைத்தா யணைத்து
விட்டதும் கரியானேன் ஆனதும்
இருவிழிப் பொறியால் தீமூட்டித்
திரும்ப நெருப்பாக்கி

நீரால் அணைத்து கரியாக்கியவளே மீண்டும் நெருப்பாக்கும் காதல் மிகக்கொண்ட பார்வையைத் தீட்டிக் காட்டும் இக்கவிதை இரு இணைகளுக்கு இடையிலான ஊடலையும் கூடலையும் வெகு நுட்பமாகச் சொல்கிறது.இக்கவிதையுடன்

“மெய்யோடு உயிரென
 மெய்யுறப் புணர்ந்ததும்
 என்னினம் துறந்துநான்
 உன்னினம் திரிந்தேன்

என்ற கவிதையையும் சேர்த்தே வாசிக்கலாம். தலைவன் தலைவி பிரிவாற்றாமையில் நோகும் நெஞ்சத்தை  சங்க கவிதை  இயற்கையோடு இயைந்த அபூர்வமான காட்சிகளால் வர்ணிப்பது போல சி.மணியும்



நீர்காணா ஏரிபோல் நெஞ்சு பிளக்க
தூறலிடைக் காடாக மாநிலம் மங்க
குளவியின் துளையொலி செவியில் சுழல.. (பிரிவு)

என அடுக்கும் போது மனதில் ஓடும் துயரை மேலும் ஒருபடி கூட்டிவிடுகிறார். சொல்லிணைவுகளிலும் சொற்தேர்வுகளிலும் அவர் கொண்டிருக்கும் பிரக்ஞை பூர்வமான ஈடுபாடு தான் அந்த திரும்பச் சொல்லுதலின் சலிப்பிலிருந்து வாசகனை விடுவித்து அந்த அனுபவத்தை நோக்கி நகரச் செய்கிறது.


                                  பல பத்தாண்டுகள்  வேலை நிமித்தம் ஆசிரியராக இருந்த போதும் கூட அதையொட்டிய ஆக்கங்கள் அவரது கவியுலகினுள் காணக்கிடைக்கவில்லை. மாறாக நகரத்தை அதன் புறவெளியை வெவ்வேறு காட்சிகளை செறிவான (சீர் பிரித்த) மொழி நடையில் அவர் லவாகமாக கையாண்டிக்கிறார். பாரி போன்ற கவிதையில் வெளிப்படுவது அந்தக் கூறுதான். எழுத்து காலக் கட்டக்கவிதைகளில் வைத்தீஸ்வரனிடமும் இந்நகரச் சித்தரிப்புகளை காண இயலும். சி.மணியுன் புகழ்பெற்ற கவிதைகளுள் ஒன்றான வரும் போகு“மில் அவர் காட்டும் காட்சிகள் அனைத்தையும்  அபத்தமான ஒன்றாக ஆக்கும்படி நாடகத்தில் வரும் கட்டியக்காரனைப் போல சி.மணி அவ்வப்போது உள்ளே நுழைந்து

“காதடைக்கும் இரைச்சலுடன்
 டவுன்பஸ்கள் வரும் போகும்

               என சொல்வது அக்கவிதையின் தளத்தையே புரட்டி போட்டுவிடுகிறது.

அலுவல் முடித்து “மனைக்கேககாத்திருக்கும் இடைவெளியில் பஸ் நிறுத்ததில் நிகழும் கூத்துக்களை அனாயசமாக ஆனால் அதே சீர் பிரித்த செய்யுள் நடையில் சிக்கனமும் பரிகாசமுமாக எழுதப்பட்ட கவிதை இது.

“கோடிவரை யோட்டிக் கள்ளவிழி சுழற்றி
 நோக்கி நேர்நோக்கி எதிர்நோக்கி நோக்கிப்..

எனும் போதிலோ “டிக்கட்ஸ்எனும் நடத்துனரின் குரலிலோ அதற்குள்ளாக நிகழ்ந்து கொண்டிருக்கும் மனிதனின் நடவடிக்கைகளை கார்ட்டூனாக அதன் கேலியுடன் மணி கவிதையை நடத்திச் செல்கிறார்.அவரது கவிதைகளின் பல இடங்கள் வாசகனின் கற்பனைக்கான வெளியாக சட்டென நெருங்கமுடியா வண்ணம் இருமை சூழ்ந்ததாக இருப்பதையும் இங்கு குறிப்பிட்டுக் கூறத் தோன்றுகிறது. பாழ்நிலத்தைவாசிக்க எவ்வளவு வாசிப்பு விரிவு வேண்டுமோ அதே அளவிற்கு “நரகத்தைபடிக்கவும் நமக்கு பயிற்சி வேண்டும். கவிதையுடன் இடைகலந்து வரும் கம்பராமாயணத்தோடும்  சீவக சிந்தாமணியோடும் நமக்கு பரிச்சியமும் பயிற்சியும்  இருக்கக்கூடுமெனில் அக்கவிதைக்குள் மேலும் இறங்கிச் செல்ல முடியும். அத்தகைய மரபான இலக்கியங்களின் மேல் புலமை உடையவர் இவர். இதன் பிறகும் சி.மணியை நவீன கவிஞனாக நிறுத்துவது “அறை-வெளிபோன்ற கவிதைகள் தான். வெட்ட வெளியாக நினைத்து மனம் துள்ள நடக்க துவங்கும் போது நான்கு திசையிலும் சுவர் இடிக்கிறது. இருக்கும் ஒரு வழியாக மேலே எம்பிக் குதிக்கவும் அங்கும் “இடித்தது கூரை”. மேற்குலகின் கவிதைகளோடு வாசிப்பில்லாத ஒருவரால் இத்தகைய வரியை எழுத முடியாதென்பது திண்ணம். நவீன வாழ்க்கையின் நெருக்கடியை அபத்தத்தை தீவிரமும் அங்கதமும் கலந்து சொன்ன சிறப்பான தமிழ்க் கவிதைகளுள் ஒன்று இது. அது போலவே இவருக்கு முன்பே ந.பிச்சமூர்த்தி போன்றோரிடம் நெடுங்கவிதை (காட்டுவாத்து இன்னும் சில...) உண்டென்றாலும் சி.மணியின் நெடுங்கவிதைகள் ஞாபகத்தில் நிலைத்திருக்கக் கூடியவை. பிச்சமூர்த்தியின் நெடுங்கவிதைகள் ஒரு கதையை சொல்பவை, அதுவும் நேரடியாக. ஆனால் சி.மணியின் நெடுங்கவிதைகளைத் தான் கவிதைகளாக சொல்லமுடியும். ஒரு வகையில் கலாப்ரியாவின் ‘சுயம்வரம்போன்ற (குறுங்காவியம்) நெடுங்கவிதைகளுக்கு- உள்ளடக்க ரீதியாக அல்ல- இவரது கவிதைகளின் பங்கும் மறைமுகமாகவேனும்  இருக்கக்கூடும்.



                   
        சி.மணியிடம் காணக்கிடைக்கும் மரபார்ந்த பயிற்சி தன் கவிதைகளையும் அது போலவே சீர்பிரிக்கிறது. ஒரு சொல்லை ஒட்ட வைத்து அடுத்த சொல்லை அதற்கடுத்த ஒன்றோடு இணைத்து விடுகிறது. நகுலனும் இதைச் செய்திருக்கிறார் என்றாலும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது இது. யாப்புக்கு ஏற்ப அந்தந்த பா வகைகளின் இலக்கணத்திற்கு (கலிப்பா,ஆசிரியப்பா,கலிவெண்பா)ஏற்ப கவிதைகள் அமைக்கப் பட்டுள்ளது. அது ஒரு வித இசைத்தன்மையை சந்தத்தை கவிதைகளுக்கு அளிக்கிறது என்ற போதிலும் வாசகனை அவரது கவிதைகளிலிருந்து அன்னியப்படுத்துவதும் இதே செயல்பாடு தான்.

“என்னை நீதப் பாகப் புரிந்து
 கொண்டு விட்ட தாக வருந்து
 கின்றாய்.என்ன தான்நெ ருங்கிய
 நண்பன் என்றா லும்கு கைக்குவெ
 ளிப்பு றம்தான்....       
  
ஏன் இப்படி சுற்றிவளைத்தல் என்று தோன்றினாலும்  இதுவும் கூட கவிதைக்கு ஒரு வித அங்கத தொனியையை உண்டாக்கத் தானோ? என்றும் நினைக்க வைக்கிறது.  இருப்பினும் இந்த பிரிப்பு தொடர்ந்து நிகழும் போது அது ஒரு வித விலகலையே வாசகனுக்கு அளிக்கும்.ஆனால்

“சாதா
 ரணவாழ்வு வாழும்சரா சரிமனிதன் இவன்

என்று அதே பிரிப்பு நிகழும் போது ஏதோ ஒரு வகையில் எளிய சொல் கூட புதிய அர்த்தங்களை நல்கும் என அவர் நம்பியதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதை மொழி விளையாட்டாக அல்லாமல் சோதனை முயற்சியாகவே  கையாள்கிறார். அது அவரது கவிதையாக்கத்தின் ஒரு பகுதியும் கூட. ஏனெனில் அவரது அறிவின் சுடரால் தீண்டப்படாத கவிதைகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அந்தப் பிரித்தல் கூட  வாசக மனதில் எவ்வாறு வினையாற்றும் என்பதையும் அறிந்திருந்தார் என்றே படுகிறது. அதனால் தான் ப்பூ இவ்வளவு தானா?” என சாதாரண வழக்கத்திலிருக்கும் தொடரைக் கூட “பூஉ இவ்வளவு தானா?என அவரது கை மாற்றி விடுகிறது. செய்நேர்த்தியால் மிளிர்ந்தாலும் கூட பிரிப்பு ஒரு கட்டத்தில் சலிப்பையே உருவாக்கும்.
                   
                கவிதையை மட்டுமே படித்து கவிதையைப் பற்றி மட்டுமே பேசி ஒரு கவிஞன் (பிற படைப்புத் துறைச் சார்ந்தோறும்) தன்னை ஒற்றைக் குடைக்குள் சுருக்கிக் கொண்டு விடமாட்டான். அவன் மனம் இயல்பாக நாடிச் செல்லும் ஆளுமைகளின் மீதும் அதையொட்டிய நூல்களின் மேலும் அவன் கொண்டிருக்கும் ஈடுபாடு அவன் கவிதையின் உள்ளடக்கத்தில் அதற்கான இடத்தை எடுத்துக் கொண்டுவிடும். அவ்வாறு பெளத்தம், ஜென், சூஃபி, குர்ட்ஜீஃப், ஜே.கே. என விரியும் மணியின் தேடல்கள் கவிதைக்குள்ளும் சலனங்களை நிகழ்த்தியிருக்கின்றன.

“நீ கவிதை எழுதுவதும்
 அவன் மலம் எடுப்பதும்

 மதிப்பீட்டில் வேறானாலும்
 வகையில் ஒன்றுதான்;

ஒருகோணத்தில் பார்த்தால்
அவனது
உனதைவிடச் சிறந்தது.”       (கோணம்)


“ஒரு உண்மைத்தேடி நச்சரித்தான்:
 ஓ குருவே,
 இறப்புக்குப் பிறகு என்ன?


 குரு சொன்னார்,பார்வையில் குறும்புடன்;
 ஓ அதுவா,
 பிறப்புக்குப் பிறகு என்ன?”         (பதில்)

மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் இந்த இரண்டு கவிதைகளும் அவரது ஜென் மனநிலையிலிருந்து தோன்றியவை என்பதே என் நிலைப்பாடு. ஆனால் ஒரிஜினல் ஜென் கவிதைகள் இதைவிடவும் தீவிரமான  மனநிலையை வாசகனுக்கு அளிக்கவல்லது.

            

                   
            கொஞ்சம் முன்னுக்குப் பின்னாக இருக்கிற போது தான் எதுவும் பிறக்கும். வழக்கமாக வாழ்கிற வாழ்வை நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது எதுவும் பிறப்பிக்க முடியாது. அது கவிதையாக இருக்கட்டும். கதையாக இருக்கட்டும் என்று கூறும் சி.மணியின் அநேக கவிதைகள் எழுத்துஇதழில் பிரசுரமாகியிருக்கின்றன. அதற்குப்பின் நண்பர்களோடு இணைத்து பத்தாண்டுகள் கொண்டுவந்த ‘நடையில் வே.மாலி (வே.மாலி,சாமி,பெரியசாமி போன்ற பெயர்களெல்லாம் கவிதைகளுக்குள் மணி எடுக்கும் அவதாரங்கள்) என்ற பெயரில் எழுதிய கவிதைகளை வாசிக்கையில் அதனுள் தென்படும் மாற்றங்களை இனங்காண முடிகிறது. 1976-க்குப் பிறகு அதிகமாக அவர் ஏதும் எழுதியிருக்கவில்லை. தினமும் டஜன் கணக்கில் கவிதைக்குட்டி போடும் சாகசக்காரர்களுக்கு மணி ஆச்சரியமான ஒருவராகவே தென்படக் கூடும். எழுத்துவின் வழி எழுத்துக் கவிஞர்களுள் ஒருவராக புதுக்கவிதை முன்னோடியாகக் கருதப்பட்டாலும் கூட அந்தப் பட்டியலில் மணிக்கு பின்வரிசையே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவரது கவிதையை முன்னெடுத்து பின்தொடர்வது சுலபமானதல்ல. மேலும் நவீனக் கவிதை அவரைக் கடந்து சென்று விட்டிருந்ததை அவர் அறிந்திருந்தாரா என்பதும் தெரியவில்லை (இரண்டாயிரம் ஆண்டுகளாகயிருக்கிற கவிதை தெரியும். அண்மையில் வந்தது எதுவும் தெரியாது”-1998 ல் அளித்த நேர்காணலில் சி.மணி). காலந்தோறும் புதிதாக தன்னை புணருதாரணம் செய்து கொண்டு வந்திருக்கும் நவீன கவிதை பழமையிலும் மரபிலுமே அவரை  அடையாளங்காணுகிறது போலும். அவர் தன் கவிமொழியை மாற்றியிருக்கிறார் என்றபோதும் புதிதானதாக ஆக்கியிருக்கிறாரா? என்னும் கேள்வியை இங்கு எழுப்புவது உசிதமானதாக இருக்கும். ஆயினும் சி.மணி பலராலும் படிக்கபட்டிருக்க வேண்டிய/ படிக்கப்பட வேண்டிய கவிஞர். இருப்பினும் கூட அவருக்கு கிட்டியிருக்கிற வெளிச்சம் போதுமானதல்ல. சி.மணி பலராலும் படிக்கபட்டிருக்க வேண்டிய/ படிக்கப்பட வேண்டிய கவிஞர். அவர் அதிகமாக எழுதாததோ அல்லது ஒரு கட்டத்திற்குப்பிறகு எழுதுவதை நிறுத்திவிட்டதோ அதற்கு காரணமாக கூறமுடியாது. ஏனெனில் 23 கதைகளை மட்டுமே எழுதியிருக்கும் மெளனி இன்னும் -ஏன் அதிகப்படியாகவே- வாசகச் செல்வாக்கோடு இருந்து கொண்டிருக்கிறார். அதற்கு அவர் அழியாத சாஸ்வதம் கொண்ட காதலை அதன் உணர்ச்சியின் பிடியிலிருந்தபடியே மன உலகினுள் இறங்கிச் சென்றது காரணமாக இருக்கக்கூடும். ஆனால் சி.மணி மரபின் சாதக அமசங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே நடைபயில்வதையும் இதனுடன் சேர்த்துப் பார்க்கலாம். அது போலவே மரபான வடிவங்களில் கவிஞனுக்கு இருக்கும் சுதந்திரம் குறித்து யோசிக்கும் வேளையில் நவீன கவிஞனின் சுதந்திரம் குறித்தும் சந்தேகமே ஏற்படுகிறது. மேலும் மணி பயன்படுத்தும் எதுகை மோனைகள் கவியரங்கச் சாமர்த்தியங்களாகி விட்டன. புதுக்கவிதை, நவீன கவிதையாக மாற்றம் பெற்று அது உரைநடையில் கவித்துவத்தை எட்ட முயலும் இடத்திலிருந்து நோக்கும் போது மணி காலத்தை கடந்து வர முடியாதவராகவே தோன்றுகிறார் (நான் எழுதியதை நிறுத்திய பிறகு இப்போது என்ன நடக்கிறது என்றும் தெரியாது-சி.மணி) அவரது கவிதைகள் பிரக்ஞையின் உளியால் செதுக்கப்பட்டவை. அதில் பயின்று வரும் மொழி புதிய கவிஞனுக்கு இன்றும் தேவைப்படும் ஒன்று தான். அவரிடம் அபோத மனநிலையோ உள்நோக்கிச் செல்லும் கவிதைகளையோ –நகுலன் போல-காண முடியாது. எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்என்னும்  பசுவய்யாவின் விசாரமும் மணியிடம் இல்லை. மேலும்  மொழி சார்ந்த ஒரு வித சிக்கல் தான் வாசகனை அவருடன் நெருங்க வைக்க முடியவில்லையோ! என்ற எண்ணமும் ஏற்படுகிறது. தன் கவிதையை தனக்கு அருகில் வைத்துக் கொள்வது அல்ல. தனக்கு முன்னால் நிறுத்துவது தான் ஒரு கவிஞனை மேம்படச் செய்யும். தன்னோடு வந்து கொண்டிருப்பவைகளில் அதன் இடம் என்ன என்ற வினாவை அவனுக்குள் அது எழுப்பிவிடும். அதுவே அவனை சமகாலத்தவனாக ஆக்கும்.   


                       
            1976க்கு பிறகு ஆத்மாநாமுக்காக (கவிதையில் மூழ்கியமாதிரி/கிணற்றில் குதித்து மூழ்கினாய்) 84ல் ஒரு கவிதையை எழுதியதற்குப் பின் அடுத்து 1990ல் தான் கவிதை வெளிவந்திருக்கிறது. அதற்குப் பின்னும் அவர் வேகம் காட்டவில்லை. வருடத்திற்கு மூன்றோ நான்கோ எழுதியதுடன் (1994 வரை) நிறுத்திக் கொண்டுவிடுகிறார். எனினும் தமிழின் மேஜர் போயட் எனத் தன்னை சொல்லிக் கொள்ளும் சி.மணி அதற்கு முன்வைக்கும் தர்க்கங்கள் ஏற்கக் கூடியனவாக இல்லை. பெருங்கவிக்கான கனவும் ஏக்கமும் கவிதையோடு உறவு பூண்டிருக்கிறவர்களுக்கு இருப்பது போலவே கவிதைக்கும் இருக்கக் கூடுமல்லவா? ஆனால் அதன் எதிர்பார்ப்போ வானுயர்ந்தது. கடல் பரந்தது.பிச்சமூர்த்தியை மகாகவிஞனாக ஊன்றிவிட சி.சு.செல்லப்பா ‘ஊதுவத்திப்புல்என்னும் தனிநூலையே எழுதினார். ஆனால் அது அவரது ஆசையின் கரையைத் தாண்டவில்லை. பெருங்கவியாக தமிழில் ஆகியிருக்க வேண்டிய ஒருவர் உண்டென்றால் அது பிரமிள் தான்.

துடித்து
அன்று விழுந்தபகலை
மீண்டும்
மிதித்து நடப்பவளே
கொலுசுசூழாத
நிசப்தத்தில் நின்
வெண்பாதச்சதைகள்
மெத்திட்ட
புல்தரையை...   (முதல் முத்தத்தின் தங்கைக்கு)

என்றெல்லாம் எழுதிவிட்டு ஒரு கட்டத்திற்கு பிறகு தன்முனைப்பின் சூறையில் சிக்குண்டு

“எங்கிட்டு பாக்கறே
 வெங்கிட்டு விமர்சகா

                என கவிதையை வசவுக்கான வாகனமாக ஆக்கினார்.தெற்கு வாசல்போன்ற தமிழின் ஆகச் சிற்ப்பான கவிதைகளுள் ஒன்றை எழுதிவர் பிரமிள். முழுமதியாகவோ ஒளி பாய்ச்சும் சூரியனாவோ ஆகியிருக்க வேண்டிய அந்த நட்சத்திரம் தன்முனைப்பினால் எரிகல்லாக வீழ்ந்தது. இன்றும் பெருங்கவியின் வருகைக்காக கவிதை தன் ஓராயிரம் கண்களை கொட்ட கொட்ட விழித்தபடி காத்துக் கொண்டுதான் இருக்கிறது.

                      கவிதை எழுதுவதை 1994க்கு பின் சி.மணி நிறுத்திவிட்ட போதும் அவரது மொழிபெயர்ப்பில் கிடைத்திருக்கும் “தாவோ தே ஜிங்கொடையாக பலராலும் கருதப்படுகிறது. ஃபிராய்டு, பெளத்தம், புத்தர்  போன்ற நூல்களை பெயர்க்க உளவியல் மற்றும் ஆன்மிகத்தளம் சார்ந்த அவரது ஈடுபாடே காரணமாக இருந்திருக்க வேண்டும். கூட்டிக் கழித்தலோ கடன் வாங்கி கழித்தலோ, தாவோ வைக் கண்டு காததூரம் ஓடும்படியான மிரட்டலோ இல்லாத, கவித்துவத்தை விட்டுத் தராத நுட்பமான மொழிபெயர்ப்பு சி.மணியுடையது. மைதிலி மொழிக் கவிஞரான உதய் நாராயண் சிங்கின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்றும் வெளிவந்திருக்கிறது. ஜப்பானிய ஹைக்கூக்களின் மீதும் சி.மணிக்கு விருப்பம் இருந்திருக்கிறது.பலராலும் எடுத்தாளப்படும்

“படகுக்கு மேலே
 காட்டுவாத்துகளின்
 வயிறுகள்   

என்னும் வரிகள் கிளர்த்தும் காட்சி அலாதியானது.


                   
சி.மணி தான் வாழும் காலத்திலேயே குறிப்பிடத்தக்க விருதுகளால் (குமரன் ஆசான் விருது, விளக்கு விருது) கெளரவிக்கப்பட்டிருக்கிறார். எனினும் கூட சிற்றிதழ் சூழலிலேயே அவரைப் பின்தொடரும் வாசகர்கள் குறைவாகவே இருக்கக்கூடும். மேலும் கவிதைகளைப் பற்றி எழுதப்படும் கட்டுரைகளில் பலரும் (மோகனரங்கன் மற்றும் சிலர் தவிர) அவரது கவிதையைத் தொட்டுக்காட்டவோ எடுத்தியம்பவோ செய்வதில்லை. சி.மணியின் கவிதைகளை தனித்த நோக்கில் அணுகும் கட்டுரைகள் அபூர்வம். குவளைக்கண்ணனின் கட்டுரை அவரது கவிதையை நெருங்கிச் சென்று நுட்பமாக எழுதப்பட்டுள்ளதையும் ஞானக்கூத்தன் தன் பத்தியொன்றில் அவர் கவிதை (என்ன வந்தது) பற்றி சிலாகித்திருந்ததையும் ,சாகிப்கிரானால் எழுதப்பட்ட சி.மணி கவிதைகள் குறித்த கட்டுரைகளையும் ,மணியின் மொழியாக்கம் பற்றி அசதா எழுதிய கட்டுரையொன்றையும் முக்கியதுவம் கொடுத்து சுட்டத் தோன்றுகிறது. அவரை பெரும்பாலான வாசகர்கள் அவரது மறைவுக்குப் பிறகு எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரையின் வழியாகவே அறிந்தார்கள். இந்த அவலம் தமிழுக்கு புதிதா என்ன?பொருமியும் புலம்பியும் கடப்பது தவிர வேறென்ன வழி?

                    சி.மணியின் ஒட்டுமொத்த கவிதைகளை உள்ளடக்கிய இதுவரை(க்ரியா,1996) நூலின் முதல் பதிப்பிற்கு பின் அதற்கு மறுபதிப்பு ஏதும் வந்ததாக தெரியவில்லை. இருக்கும் நூல்களும் வாசகனின் கைக்கு எட்டும் அண்மையில் இல்லை. அத்தொகுப்புக்கு பிறகு சொல்புதிதுஇதழில் வந்த கவிதைகளையும் அவரது மறைவுக்கு பின் உயிர் எழுத்து இதழில் வெளியான பிரசுரமாகத சில கவிதைகளையும் சேர்த்து சி.மணியின் ஆளுமையை வெளிக்காட்டும்படியாக தேர்ந்தெடுத்த கவிதைகளை கொண்டு வருவதே அந்த புதுக்கவிதை முன்னோடிக்கு நாம் அளிக்கும் கெளரவமாகவும் மெய்யான அஞ்சலியாகவும் இருக்க முடியும்.

குறிப்பு : இக்கட்டுரையில் சி.மணியின் கூற்றாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் உயிர் எழுத்து மே 2009 இதழில் சி.மணியின் மறைவுக்கு பின் வெளியான 1998ல் சிபிச்செல்வன்   எடுத்த நேர்காணலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

(பனுவல் புத்தக விற்பனை நிலையம் ஒழுங்கு செய்திருந்த புதுக்கவிதை முன்னோடிகள் பற்றிய தொடர் நிகழ்வுகளில் ஒன்றான சி.மணி கவிதைகள் பற்றிய அரங்கில் 23.11.2014 அன்று வாசித்த கட்டுரை)


நன்றி : பனுவல் புத்தக விற்பனை நிலையம், பரிசல் சிவ.செந்தில்நாதன். 

No comments:

Post a Comment