தூரன் குணாவின் ”திரிவேணி”
உலகமெங்கிலும்
கதைகள் உருவான தோற்றுவாய் குறித்த
யூகங்கள் பலவாறாக இருக்கக் கூடும். கதை என்ற மொந்தையான ஒன்றை ஏற்றுக் கொள்ள
முடியாத நுட்பமான மனம் தான் சிறுகதை என்னும் வடிவத்தைப் பற்றி அதில் வகைபேதமான
வாழ்வின் சித்தரங்களை தீட்டிக் காட்டுவது குறித்து யோசித்திருக்க வேண்டும்.அதற்கு
முன் அவை பேசுபொருளாக கொண்டிருந்தது ஆள்வோர்களின் வீரதீர பிரஸ்தாபங்களையும்
அவர்களது பிம்பங்களை மிகைப்படுத்திக் கட்டியெழுப்ப வரலாறு போலத் தோன்றக்கூடிய
புனைவுகளையும் தான்(வாய் மொழி மற்றும் நாட்டார் கதைகள் விதிவிலக்குகள்.) ஆனால் அவை
இங்கு பரிணாமங்கள் பெற்று நிலைகொண்டு ஜனநாயகமானது கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்
தான்.தமிழில் அப்படிப்பட்ட முதல் அடிச்சுவடு புதுமைப்பித்தனாலேயே வைக்கப்பட்டது.
ஆம்!அது
மண்ணில் உழல்பவர்களை அவர்களது வாழ்வின் துயரங்களை மனிதனது சிறுமைகளை ஆற்றலோடும்
நுட்பத்தோடும் தன் சிறுகதைகளில்(அதன் நுட்பம் கூடிய போதும் கூடாத போதும்) வெளிப்படுத்திய
புதுமைப்பித்தன் என்னும் மேதையின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.அவர்
சிறுகதை என்னும் வடிவத்தைக் கைகொண்டது தமிழின் நல்லூழ் என்றே சொல்ல வேண்டும்.அவர்
கோலோச்சி உச்சம் பெற்று விட்டுச் சென்ற சிறுகதையை புதிய தலைமுறையைச் சேர்ந்த
ஒருவன் கையிலெடுக்கையில் அவரும் அவருக்குப் பின் வந்து நின்று நிலைப்பெற்ற
முன்னோடிகளின் ஆக்கங்களும் அவனை நோக்கி கையசைக்கும்.கண் சிமிட்டும்.தன் மடியில்
இருத்திக் கொள்ள அழைக்கும்.அதிலிருந்தெல்லாம் மீண்டு தனித்துவமான படைப்பாளியாக மலர
முயல்வதும் அப்பாதை நோக்கிய பயணத்தில் சுணங்காமல் செல்வதுமே இளம் எழுத்தாளனின்
முதன்மையான நோக்கமாக இருக்கமுடியும்.
அவ்வகையில் கவிஞனாக இரு
தொகுப்புகளை வெளியிட்டு கவனம் பெற்ற தூரன் குணாவின் பதிமூன்று கதைகள் உள்ளடக்கிய
முதல் தொகுப்பு “திரிவேணி”.வாழ்வின் அனுபவங்களைப்
பின்னணியாக கொண்டிருக்கும் குணாவின்
கதையுலகில் இன்று அரிதாகவே தென்படும் கிராமங்களையும் அதன் வகைமாதிரியான
மனிதர்களையும் சில கதைகள் ளன்களாக
கொண்டிருக்கின்றன.கதையை கவிதையிலிருந்து வேறுபடுத்தி புரிந்து கொண்டிருக்கிறார்
என்பதை தொகுப்பின் முதல் கதையிலேயே (கொவ்வை படர்ந்த வேலி) வாசனுக்கு
உணர்த்திவிடுவதன் மூலம் அவனை தொகுப்பிற்குள்
முன்னோக்கிச் செல்ல தூண்டுதலை அளிக்கிறார்.கொங்கு நிலப்பரப்பின் பிரத்யேக
காட்சிகளையும் கதைகளையும் உருவாக்கிய பெருமாள் முருகன்.என்.ஸ்ரீராம் போல குணாவும்
தன் நிலம் பற்றி தன் திறன் கொண்டு கதைகளை எழுதியிருக்கிறார். அதில் உழன்று திரிந்த
ஒருவன் வேலையின் பொருட்டு கணினி மென்பொருளானாக வேற்றூரிலும் வேறு தேசத்திலும்
சந்திக்கும் அடையாளச் சிக்கல்களையும் சொந்த நிலம் சார்ந்த ஏக்கப்
பெருமூச்சுகளையும் குணா தன் கதைகளில் பதிவு செய்யத் தவறவில்லை.
சிறுகதைகளின் ஆகிவந்த
வடிவங்களிலேயே இக்கதைகள் நடைபயின்றிருந்தாலும் கூட வெவ்வேறு வயது மற்றும்
காலங்களின் நினைவை தன் வாழ்க்கைக்குள்ளிலிருந்து கதைசொல்லி மீட்டெடுக்கும் போது
அதில் வெளிப்படும் நம்பகத்தன்மை அக்கதைகளோடு நம்மை ஒன்றச் செய்கின்றன.மேலும்
அணையாத சிகரெட் கங்குடன் இத்தொகுப்பிற்குள் உலவித் திரியும் இளைஞன் ஒருவனைப் பின்தொடர்ந்து
சென்றால் நம்மிடம் நெருப்புக் குச்சி கேட்டு விடுவோனோ என்னும் அளவிற்கு அதன்
நெடியும் சாம்பலும் கதைகளெங்கும் விரவிக் கிடக்கின்றன.குணா காட்டும் கதைகளில் வருபவனது
கூச்சத்திலும் கோபத்திலும் காமத்திலும் இயலாமையிலும் நம்மை அல்லது நம்மில் ஒரு
பகுதியை கண்டுகொண்டதற்கு பின்னே அவனது கதைகளை நோக்கி மேலும் நகர முற்படுகிறோம்.
தொகுப்பில் சிறந்த
கதைகளென மின்மினிகள் எரியும் மூன்றாம் ஜாமம்,சகடம்,இருளில் மறைபவர்கள் ஆகிய கதைகளை
சுட்டலாம்.குறிப்பிடத் தகுந்த கதை சுக்கிலம்.
திருமணமாகாத இரு முதிர்
இளைஞர்களைக் காணச் செல்லும் கதைசொல்லி அவர்கள் முன் பாட்டிலைத் திறந்த பிறகு
சகோதரர்களின் வாழ்க்கைக்குள்ளிலிருந்து(அவர்களில் ஒருவன் ஊமை) துயரமும் கோபங்களும்
சண்டைகளும் அவர்களது ஆற்றாமையும் வெளிப்படும் விதம் கதையில் கூடி
வந்திருக்கிறது.நடப்பவைகள் அனைத்திற்கும் சாட்சியாக சமாதனப்படுத்துவனாக மட்டுமே
கதைசொல்லி இருக்க நேர்கிறது.அந்த துயரை வாசகனின் மனதில் கடத்திவிடும்படி
அக்கதையின் முடிவை இயல்பாக குணா முடித்திருக்கிறான்.
நோயின் வலியில் கிடக்கும்
மாமனையும் ஆரோக்கியமும் மிதப்பும் கொண்ட இளைஞனையும் அருகருகாக வைத்து நகரும் கதை
‘சகடம்’.இதற்குள்ளாக உறவுகளின்
சுயநலம் சார்ந்த சிறு ஆட்டத்தையும் கண்டுகொள்ளும்படி கதை இருக்கிறது.அவனது வயது
சார்ந்த குதூகலங்களும் காமத்தின் ஏக்கங்களுமாக நகரும் கதை இறுதி நோக்கிச் செல்ல
செல்ல நோயின் வாதையை மிகையேதுமின்றி சித்தரிப்பதில் கவனம் கொண்டிருக்கிறது.இக்கதைக்குள்ளும்
சரி பிற கதைகளிலும் சரி பிரத்யேகப்
பாத்திரம் தனிமையோடிருக்கிறது அல்லது தனித்து விடப்படுகிறது.அது போலவே
சுயகேள்விகளின் பிடிக்குள் கிடந்து மருளும் ஒருவனையும் அடிக்கடி காண முடிகிறது.புறவெளியின்
காட்சிகளை நுட்பமாக (சில இடங்களில் தேவையில்லாமலும்) குறிப்பெடுத்துச் செல்லும்
குணா அது அகத்தின் ஏதோ ஒரு புள்ளியின் பிரதிபலிப்பாகவே ஆக்குறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
காமத்திற்கான ஏக்கமும் அது
சார்ந்த விழைவும் பெரும்பாலான கதைகளுகளின் அடியில் ஓடிக் கொண்டேயிருக்கிறது.அந்த
விழைவை அனுபவமாக மாற்றிக் கொள்ள முடியாமல் அவனது கூச்சம் குறுக்கே சுவரென
நிற்கிறது.அதன் சாட்சியாக “இருளில் மறைபவர்கள்’ கதையை கூறலாம். அது கைகூடும் போது சற்றும் எதிர்பாராத
ஒன்றை காண நேர்கிற அந்த இளைஞன் தான் கூடித் தனித்திருக்க அழைத்துச் சென்றவளை
,கூட்டிச் சென்றபடியே ஆனால் அதற்குரிய காசைக் கொடுத்து இறக்கிவிட்டுச்
செல்கிறான்.இக்கதையை வாசிக்கும் போது இக்கதைக்கருவுக்கு சம்பந்தம் இல்லையென்றாலும்
இவளை விடவும் உற்சாகம் மிக்க ஒருவளை நண்பர்கள் சூழ்ந்து வெளியிடத்துக்கு கூட்டிச்
செல்லும் ஜெயகாந்தனின் “எங்கோ யாரோ யாருக்காகவோ” நினைவுக்கு வந்தது.அவரது சிறந்த கதைகளுள் ஒன்று அது.
‘சுக்கிலம்’ தொகுப்பின் பிற கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஆனால் நுட்பமான கதை.தன் விந்துவை பரிசோதனைக்கு அனுப்பி அதன் வீர்யத்தை சோதனை செய்ய முடிவெடுத்தவனின் மனநிலையையொட்டி பின்னப்பட்டிருக்கும் கதையில் அதனால் நேரும் கோபங்கள்,எரிச்சல்,ஒரு வித பயம் போன்றவற்றை கதைக்குள் கழிவிரக்கத்தை தூண்டாதபடி இயல்பாகவும் நேர்த்தியாகவும் தூரன் குணாவால் சொல்லப்பட்டிருக்கிறது.குறிப்பாக அதன் சாதகமான முடிவை அறிந்து கொண்ட பின் மனம் இலகுவாகி அவன் சிகரெட் பற்ற வைப்பதும் அத்துடன் கதையை முடித்திருப்பதையும் சொல்லலாம்.இதே போன்றதொரு கருவை அடிப்படையாகக்
கொண்டு ஈழத்துச் சிறுகதையாளர்களில் கவனிக்கப் படவேண்டிய ஆசிரியரான சாந்தனின்
“நீக்கல்கள்” இன்னும் உக்கிரம் கொண்டது.
தொகுப்புக் கதைகளுக்குள்
பெரும்பாலானவற்றில் ஆச்சர்யமான ஒன்றை உணர முடிந்தது.அது கதையை கொண்டு செலுத்துபவன்
அல்லது ஆதாரப் புள்ளியாக இருப்பவனது பெயரே இல்லை.”அவன்”,””இவன்” என்றோ
தன்னிலையாகவோ தான் எழுதப்பட்டிருக்கிறது.இதற்கு முன்னோடியாக மெளனியைச் சொல்லலாம்
என்றாலும் அவரது கதைகளின் பொதுப்பெயராக “சேகரன்” ஆங்காங்கே தலைக் காட்டும்.இதில் அதுவும் இல்லை.
தொகுப்பில் சில
கதைகள் முடிவுகளின் பலவீனம் காரணமாக அது சென்று அடைந்திருக்க வேண்டிய இடங்களை
இழந்திருக்கின்றன.”திரிவேணி”யை அப்படியாக முடித்திருப்பது கதையை எங்கும் கொண்டு
சேர்க்கவில்லை.அது போலவே “கர்ண மகாராசா”.இயல்பாக சென்று கொண்டிருக்கும் கதையின்
நடுவே அக்கதைக்கு சம்பந்தமேதுமில்லாத புதிய டெக்னிக்கை பிரயோகித்து முடித்திருக்க
வேண்டியதில்லை.இன்னும் சற்று முயன்றிருந்தால் இப்போதிருப்பதை விடவும் நன்றாக
வந்திருக்க வேண்டிய கதை”கைக்கிளைச் சிலுவை”.எவ்வளவு முயன்றும் “குளம்படி நிலம்” என்னும் கதைக்குள்
புகவே முடியவில்லை. செயற்கையாக உருவாக்கப்பட்ட அல்லது திருகப்பட்ட மொழிநடையில்
எழுதப்பட்ட கதையாகவே தோன்றுகிறது.இது என் தனிப்பட்ட வாசிப்பு சார்ந்த முடிவு
தான்.வேறு ஒருவருக்கு முக்கியமான கதையாக படக்கூடும்.கோணங்கியின் பாதிப்பையும்
இக்கதைக்குள் கண்டேன்.”மின்மினிகள் எரியும் மூன்றாம் ஜாமம்” என்னும் கதையின் தலைப்பு கோணங்கி தன் கதைக்கு வைக்கும் தலைப்பு போல இருக்கிறது.”கள்ளம்,கார்ப்ரெட்” ஆகிய கதைகள்
வலுவானதாக இல்லை.
யதார்த்த கதை
சொல்லல் முறையை தூரன் குணா பெரும்பாலான கதைகளில் நன்றாக கை கொண்டிருந்தாலும் அதில்
செறிவும் ஆழமும் இன்னும் கூடும் போது அவரது கதைகளுக்கான இடம் மேலும் முக்கியத்துவம்
பெறும்.அவ்வாறான கதையை அவர் எழுதக்கூடும் என்பதற்கான சுவடுகளை அதிகமாகவே தன் முதல்
தொகுப்பில் தூரன் குணா வாசகனுக்கு உணர்த்தியிருக்கிறார்.
புத்தகத்தின்
சாரத்தை நவீன மொழியில் உணர்த்தும் பின் அட்டைக் குறிப்புகள் எழுதப்படும் காலத்தில்
அவ்வாறான குறிப்பிற்கு பதில் கதையின் தலைப்புகளை அச்சிட்டிருப்பது ஏமாற்றத்தை
அளித்தது.நூலிற்குள் கதைகளுக்கான பொருளடக்கமோ ஆசிரியரின் குறிப்புகளோ
இல்லை.இவ்வாறான பிழைகள் எளிதாக களைந்திருக்க கூடியவை தான்.தொகுப்பை ”பாதரசம்” பிழையின்றி வெளியிட்டுள்ளது.
(31.08.2014 கோவை இலக்கிய
சந்திப்பு நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
நன்றி : மணல் வீடு
(மு.ஹரிகிருஷ்ணன்)
No comments:
Post a Comment