கண்மணி குணசேகரனின் ”அஞ்சலை”
துயரத்தின்
சாப நிழல்
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே யதார்த்தவாதம் தமிழில் உருவாகி
வளர்ந்திருந்தாலும் நாவல் உலகில் அதுவரை மிகச் சொற்பமாக வந்து
போயிருப்பவர்கள்,படைப்பின் ஓரங்களில் ஒதுக்கப்பட்டிருந்தவர்கள் தொண்ணூறுகளுக்குப்
பின்னான காலங்களிலேயே படைப்பின் ஆக முக்கியமான இடத்திற்கு வந்து சேர முடிந்தது.அதற்கு
மாராட்டியத்திலிருந்தும் வேற்று மொழிகளிலிருந்தும் தமிழுக்கு வந்து சேர்ந்த தலித்
படைப்புகளின் மொழியாக்கங்களின் பங்கு அளப்பரிது.அதன் தாக்கத்தை பிற மொழிகளை
விடவும் தமிழில் அதிகமாகவே காண முடியும்.ஜீவாதாரத்திற்கான அடிப்படைக் காரணிகளக்
கூட எட்ட முடியாமல் வாழ்வு மாறாமல் தலைமுறை மட்டுமே மாறிவந்திருப்பவர்களைப் பற்றிய
படைப்புகள் இக்காலங்களுக்குப் பின்பே ஊக்கத்துடன்
வெளிவரத்துவங்கின.தொய்வடைந்திருந்த யதார்த்தவாதம் மறுமலர்ச்சி கண்டதும் அப்போது
தான்.”அவர்கள் உலகை கண் முன் நிறுத்துவது” அல்லது ”அப்படியே எழுதுவது” அல்ல
படைப்பாளியின் பணி.அப்படி எழுதப்படுவது ஆவணமாகத் தான் இருக்கமுடியுமே தவிர
படைப்பாக அல்ல.அங்கு எஞ்சியிருப்பதும் தொகுப்பாளன் மட்டுமே.வாழ்வின் அறிய முடியாத
ஊடுபாவுகளின் இழைகளால் ஆன அவனது படைப்பில் அவன் தேர்ந்தெடுக்கும் வண்ணங்கள் கொண்டு
நெய்வதின் வழி அவன் காட்டும் உள்ளத்தின் ரகசியங்கள் அதன் நுட்பங்கள் அப்போது
வெளிப்படும் அவனது படைப்பு நோக்கு போன்றவையே அவனது ஆளுமையை தீர்மானிக்கும்
முதன்மையான காரணியாக இருக்கும்.யதார்த்தவாதம் போலவே இயல்புவாத எழுத்தின் ஊடாகவும்
செழுமையடைந்த மொழி நம்முடையது.அவ்வகையில் முந்திரி காடுகள் நிறைந்திருக்கும்
மண்ணிலிருந்து வந்திருக்கும் கண்மணி குணசேகரனின் ’அஞ்சலை’ அம்மனிதர்களின் வாழ்க்கையை தன் எழுத்து ஆளுமையால் நம்மோடு ஒன்றச் செய்கிற
முக்கியமான ஆக்கம். தமிழில் இயல்புவாத எழுத்தின் முக்கியமான படைப்பாளி கண்மணி.
எவ்வளவு வாழ்க்கைப்
பாடுகளுக்கிடையிலும் ஒரு பெண் வாழ நேர்ந்தாலும் அவளது மனதில் விழுந்த ஆண்
உருவத்தின் மீதான-சிவந்த நிறம்,சுருட்டை முடி,கட்டை மீசை- ஈர்ப்பின் சுடர்
ஒருநாளும் அணையாது என்பதை மூர்க்கமாகச் சொல்லியிருக்கும் நாவல் ’அஞ்சலை’.பகிர்ந்து கொள்ள முடியாத அந்தரங்க கனவுகள் போன்றவை
மனதின் ரகசிய ஆசைகள்.அது நிறைவேறாத போதும் கூட ஏதேனும் காரணங்கள் சொல்லி மனம்
சமாதானம் அடையக்கூடும்.ஆனால் அவை கண்முன்னே வேறொன்றாகச் சிதைந்து போவதை அதனால்
ஏற்றுக் கொள்ளவே முடியாது.தன்னைப் பெண் பார்க்க வந்திருக்கும் சேதி கேட்டு
வயற்பரப்பினிடையே ஈரம் சொட்ட அவள் வீட்டிற்கு வருவதிலிருந்து மணம் முடிவது
வரையிலும் ’அஞ்சலை’யை நடத்திச் செல்வது அந்த ஆசைகளே.அஞ்சலையின் அக்காள்
கணவரின் தந்திரங்களின் வழி மனதின் கீழ்மையை நுட்பமாக
கண்மணி தொட்டுக் காட்டி விடுகிறார். அவள் மனதிலிருக்கும் ஆணின் படிமத்திற்கு
சற்றும் சம்பந்தமில்லாத நேரெதிரானவனோடு அஞசலைக்கு மணம் முடிகிறது.பின் அது
அவளுக்கு எப்போதும் ஏமாற்றத்தின் சுவரிலேயே முட்டிக் கொள்ளும்படியாக ஆகிவிடுகிறது.இரண்டாவது முறையும் தனது சின்ன
அக்காளின் காரணமாக ஏமாற்றப்பட்டு திரும்பும் போது விசித்திரமான மனப்புதிர்கள்
வெளிச்சத்திற்கு வருகின்றன.மணமாகி விட்ட போது கூட கூத்தின் போது மேளம் அடிக்கும்
தன் கணவனின் அண்ணனுக்காக ஏக்கம் கொண்டு தவிக்கும் அஞ்சலை தான் ,தனது இரண்டாவது
கணவனுக்கு தன் அக்காளோடு தொடர்பிருப்பதை அறிந்து வெடித்து அழுது ஓலமிடுகிறாள்.அஞ்சலைக்கும்
அவ்வாறான வாய்ப்புக் கிடைத்திருக்குமெனில் அதை பயன்படுத்திக் கொண்டிருப்பாள்
என்பதற்கான குறிப்புகள் நாவலிலேயே இருக்கின்றன.
பெண்ணின் மனம் தடாகம் என்றால்,அவளது மனதை தைத்த ஆணின் பிம்பம் ஆகாயம்
போல.அது எவ்வளவு சலனமுற்றாலும் கலங்கினாலும் நீருள்ள வரை தடாகத்தில் ஆகாயம்
மிதந்து கொண்டே தான் இருக்கும்.நுட்பமான உள்விரிவுகள் கொண்ட பாரத்தில் ஒரு காட்சி
உண்டு.அம்புபடுக்கையில் பீஷ்மர் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறார்.வாழ்வு
முழுவதுமே ஓயாது துரத்தும் சந்தேகங்களை பலரும் அவரிடம் கேட்டுத்
தெளிகின்றனர்.பிறகு பஞ்சபூதங்களின் நேரம்.அவற்றிலொன்றான நெருப்பு அவரை கேட்கிறது.
“எப்போதும் நான் காற்றால் அலைகழிக்கப்படுகிறேன்.எனக்கென்று சுயபற்றுதல்கள்
இல்லை.என் திசைகளை காற்று தான் தீர்மானிக்கிறது.”
பீஷ்மர் நிதானமான
மெல்லிய குரலில்
“ஒரு பெண்ணின் மனதில்
ஆசையின் சுடராக மாறிவிடு.பின் உனக்கு சலனமில்லை.அழிவுமில்லை”என்கிறார்.
பீஷ்மர் ஒரு பிரம்மச்சாரி என்பதையும் அதற்கு காரணமான பின்புலத்தையும் நாம்
அறிவோமென்றால் இவ்வாக்கியத்தை சொல்லத் தகுந்தவர் அவர் தான் என்பதை எவ்வித
மறுப்புமின்றி ஏற்றுக் கொள்வோம்.இதை இடைச்செருகல் என்னும் விமர்சகர்களின் கருத்தை
ஆராய்ச்சியாளர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.நாம் கவித்துவமான அந்த உணமையான நோக்கி
நகர்வோம்.
அஞ்சலை எனும் பெண்ணின் வாழ்வையே இந்நாவல் மையப்படுத்தி அதனைச்சுற்றியே தன்
இழைகளைப் பின்னியிருப்பினுங்கூட அவற்றினூடாக கண்மணி குணசேகரன் சமூகத்தின் கடைநிலை
மக்களின் வகைபேதமானதும் கண்ணீரின் துவர்ப்பைக் கொண்டதுமான வாழ்வை அவர்களது நிலப்பின்னணி
சார்ந்து கூர்மையான அவதானிப்புகளூடாக உருவாக்கியிருக்கிறார்.நாவலில் அஞ்சலையின்
பாடுகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல அவளது அம்மாவின் துயரங்கள்.நாவல் முழுதும்
அவளுக்கேற்ப அமையும் உறவு வள்ளி மூலம் மட்டுமே.அது போலவே தன் மூத்த மகள்
நிலாவுடனும் அஞ்சலைக்கு சந்தோஷ கணங்கள் அமைகின்றன.
சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களின் திசையில் அஞ்சலையின் வாழ்வு
இல்லை.நிலைகொள்ளாது அலைந்து குழம்பிமறியும் பயணம் அவளுடையது.அவமானங்களும்
ஏச்சுக்களும் நிரம்பிய பாதை அது.மனதின் அழைப்புகளுக்கு அவளது கால்கள் தாமாகவே
எவ்வித தயக்கமுமின்றி நகர்கின்றன.அதற்காக நாம் அவள் மீது கோபமோ வெறுப்போ
கொள்வதில்லை.மாறாகச் சூழலைப் புரிந்து கொள்ள முயல்கிறோம்.இப்புள்ளியிலிருந்தே
படைப்புக்கும் நமக்குமான உறவு தொடங்கி விடுகிறது.
எப்போதும் மெளனத்தின் திரைக்குப் பின்னே அஞ்சலை ஒளிந்து கொள்வதில்லை.தன்
மீதான பழிச் சொற்களுக்குக்கெதிராக ஆங்காரத்துடன் அம்மண்ணின் வசைச் சொற்களுடன்
பதில் சொல்கிறாள்.இருப்பினுங்கூட தன் ஸ்திதி பற்றி அவளுக்கே ஒருவித குற்றவுணர்வு
இருந்து கொண்டே இருக்கிறது.முதற்கருவைச் சுமக்கும் காலத்தில் அக்குழந்தை தன்னை
இக்கட்டுகளிலிருந்து மீட்கும் கனவைக் காணும் சில நொடிகளுக்குள்ளாகவே,தன் நிலைபற்றி
அறிந்து அது என்ன நினைக்குமோ?என அவளது மனம் தாவுவது அக்குற்றவுணர்வின்
வெளிப்பாடே.அவளுக்கும் சந்தோஷமான காலங்கள் உண்டென்றாலும் அதுவும் சொற்பக் காலமே.
உறவுகளின் சதியால் சீரழியும் அஞ்சலையின் வாழ்வில் மூத்த மகளின் எதிர்காலம்
பற்றிக் கொண்டிருக்கும் ஆசைகளே அவளை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.அதுவும் சிதறும்
போது காலத்தின் மீதான மனிதனின் கணக்குகள் பற்றியும் அவற்றின் புதிரான
வலைப்பின்னல்கள் குறித்தும் வியப்பே ஏற்பட்டது.
மொழியின் சிடுக்கோ சொற்களின் நெருக்குதலோ கொண்டு எழுதப்பட்டதல்ல
இந்நாவல்.மாறாக மண்ணிலிருந்து அம்மண்ணின் மொழியின் மூலமே
வெளிவந்திருப்பது.வயற்பரப்புகளும் முந்திரி காடுகளும் உள்ள மண் அது.மண்ணின் உழல்பவர்களைப் பற்றி
பேசியிருக்கும் இந்நாவலில் மேல்சாதியின் ஒடுக்குதல்கள் மிகக்குறைவாகவே
வெளிப்பட்டிருக்கின்றன.நாவலின் களத்தை கவனத்தில் கொள்கையில் இதை ஒரு குறையாகவே தோன்றுகிறது.சார்ந்திருப்பதன்
மூலமே பெண்களின் மேல் அதிகாரம் செலுத்தப்படுவதும் அதன் மூலம் அவர்கள் சுயமான
குரலற்று இருப்பதும் நேர்கிறது.இதிலிருந்து விதிவிலக்குப் பெற்றவர்கள் மண்ணில் உழைக்கும்
பெண்கள்.அவர்களது பொருளாதார விடுதலையே அவர்களின் மனோதைரியத்திற்கு வேராக இருக்க
முடியும்.விவசாயப் பின்னணி கொண்ட இந்நாவலில்,வரும் பெண்களில் முக்கால் வீதம் உடல்
உழைப்பாளர்கள்.அங்குமிருக்கும் பாலியல் சீண்டல்களை சங்கேத அழைப்புகளை நுட்பமாக
கண்மணி மண்ணின் மொழியிலேயே சித்தரித்திருக்கிறார்.மண்ணிலிருந்து எழும் நாவல்கள்
அம்மண்ணின் மொழியையே கொண்டிருப்பது இயல்பு.”அஞ்சலை”யின் மண்ணைப் பற்றி அதன் வழக்குச் சொற்கள்
பற்றிய பொருளைப் பின்னிணைப்பாக கொடுத்திருக்கலாம்.அம்மண்
குறித்து போதுமான அறிதல்கள் இல்லாதவர்களுக்கு அது கூடுதலாகவே உதவி
புரிந்திருக்கும்.
இந்நாவலை “யுனைடைட் ரைட்டர்ஸ்” சிறப்பாக வெளியிட்டிருக்கிறது.
குறிப்பு :இந்த நூல் விமர்சனம் 2006 இறுதியிலோ
அல்லது 2007 தொடக்கத்திலோ எழுதப்பட்டது.
No comments:
Post a Comment