நரகத்தின் உள்ளும் புறமும்
எட்டுச் சிறுகதைகள் கொண்ட
இந்த நூல் கே.என். செந்திலின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இந்தத் தகவலுடன்
நூலின் கையெழுத்துப் படியை வாசிக்க ஆரம்பித்தபோது தவிர்க்க இயலாமல் சில
எதிர்பார்ப்புகள் மனதுக்குள் உருவாயின. முதல் புத்தகம் வாயிலாக நம்பிக்கை
ஏற்படுத்திய எந்தப் படைப்பாளியைப் பற்றியும் உருவாகும் எதிர்பார்ப்புகள் அவை.
முன்னர் அளித்த நம்பிக்கையைக் காப்பாற்றுகிறாரா?அறிமுகப் படைப்பிலிருந்து முன் நகர்ந்திருக்கிறாரா?எழுத்து முறை
செழுமையடைந்திருக்கிறதா? அவரது பார்வை மாற்றம்
பெற்றிருக்கிறதா? புதிய நம்பிக்கைகளைப் பேண
இடமளிக்கிறாரா? போன்ற கேள்விகள் வாசிப்பவனிடம்
எழுவது இயல்பு. வண்டிச் சக்கரத்தில் ஒ ட்டிய பல்லியும் சக்கரத்துடன் முன்னேறிச்
செல்கிறது. வலசை போகும் பறவையும் ஆகாயத்தின் திசைகளைக் கடந்து செல்கிறது. இரண்டையும்
பயணம் என்று சொல்லலாம். ஆனால் இரண்டும் ஒன்றல்ல.
நவீனத் தமிழ்ப்
புனைவெழுத்தில் ஆகச் சிறந்த சாதனைகள் நிகழ்ந்தது சிறுகதையில் என்று எண்ணுகிறேன்.
கதையாடலிலும் நடையிலும் உத்தியிலும் வகைவகையான மாற்றங்களைக் கொண்ட சிறுகதைகள் சாதனைகளாகவே
நிலைபெற்றிருக்கின்றன. அசோகமித்திரன் கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத்
தொகுப்புக்கு எழுதிய மதிப்புரையில் மலையாள எழுத்தாளர் சக்கரியா ' மலையாளத்தில் நவீனத்துவம்
என்ற பெயரில் நாங்கள் சிரசாசனம் செய்து உருவாக்கிய படைப்புகளை பின்னுக்குத் தள்ளி
விடக் கூடிய சிறந்த கதைகளை, புதுமைப்பித்தன் முதல்
அசோகமித்திரன் உள்ளிட்ட பல தமிழ்
எழுத்தாளர்கள் பலர் எங்களுக்கு முன்பே அநாயாசமாக எழுதியிருக்கிறார்கள்
என்பதைப் பார்க்கையில் வெட்கமாக
இருக்கிறது’ என்று
குறிப்பிட்டிருந்தார். தமிழ்ச் சிறுகதை வளத்தைப் பார்க்கும் கூரிய வாசகன் இந்தக்
கூற்றை ஆமோதிக்கவே வாய்ப்பு அதிகம்.அந்த
வளத்துக்குக் காரணகர்த்தர்களான கதையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக
இருந்தது. எனினும் புதிய நூற்றாண்டின் ஆரம்பப் பதிற்றாண்டில் எழுதப்பட்ட சிறுகதை களை
இந்த அளவுக்கு வியந்து சொல்ல முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.
அல்லது இருக்கிறது. சென்ற பதிற்றாண்டிலும் சிறுகதைகள் எழுதப் பட்டிருக்கின்றன.
முன்னர் எழுதப் பட்டவற்றிலிருந்து
மாறுபட்ட கதைகளை எழுதும் பலர் அறிமுகமாகி
உள்ளனர். ஆனால் கவிதையிலும் நாவலிலும் சமகாலத்தில் ஏற்பட்ட வீச்சு சிறுகதையில்
நிகழவில்லை என்றே தோன்றுகிறது.
நண்பர்
நஞ்சுண்டன் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் தரங்கம்பாடியில் நடத்திய சிறுகதை செம்மையாக்கப் பட்டறையில் கலந்து
கொண்டேன். அதையொட்டி, தொண்ணூறுகளுக்குப் பிறகு அதுவரை தமிழில் வெளி வந்திருந்த கிட்டத்தட்ட எல்லாச்
சிறுகதைத் தொகுதிகளையும் கவனமாக வாசித்தேன். சந்தேகம் வலுவானதே தவிர தீரவில்லை. அதை ஆதங்கமாக எழுதியபோது வந்த ஒரே எதிர்வினை கே.என்
செந்திலுடையது. என் ஐயம், முந்தைய தலைமுறை வாசகன் புதிய தலைமுறையை அணுகுவதிலுள்ள
தயக்கம் என்ற தொனியில் அவரது மறுப்பு
அமைந்திருந்தது. அவரையும் என்னையுமே ஒப்புக் கொள்ள வைக்கும் தரவுகளுக்காகக் காத்திருந்தேன்.
புதிய எழுத்தாளர்களின் கதைகள்குறிப்பிடத் தகுந்தவையாக இருப்பினும் வாசகனுடன்
தொடர்ந்து பயணம் செய்யும் படைப்புகளாக
இல்லை. ஒரு தொகுப்பில் குறிப்பிடத் தகுந்த கதைகளை முன்வைப்பதுடன் திருப்தியுடன் விலகிக் கொள்கிறார்கள்; ’புதிய கதையாடல் என்பது விவரிப்புரீதியிலான
புதுமை’ என்று மட்டுமே புரிந்து
கொள்கிறார்கள்; ( நன்றி: க.மோகனரங்கன், இரவுக் காட்சி தொகுப்பின் முன்னுரை). அதி புனைவையே
சிறுகதையின் இயல்பு என்று நம்புகிறார்கள் என்ற கருத்துகள் தொடந்து உருவாகிக்
கொண்டிருந்தன. அதை உறுதிப்படுத்தும்
விதமாகப் பலரின் இரண்டாவது தொகுப்புகள் பழைய சக்கரத்தின் பல்லி வாழ்க்கை யையே
சித்திரித்தன. சிலர் முதலாவது தொகுப்பிலிருந்து
மீண்டு வரவே இல்லை.
எண்பதுகளின் இறுதியில்
வெளியான அமெரிக்கச் சிறுகதைத் தொகுப்பான 'சடன் பிக்ஷ' ( Sudden fiction ) னை வாசித்துக்
கொண்டிருந்தபோது இந்தக் கருத்துகள் அலைக்கழித்தன.
தமிழ்ச் சிறுகதையுடன் ஒப்பிட்டு யோசிக்கச்
செய்தன. நீண்ட கதைகள் வாசகர்களிடம் செல்லுபடியாவதில்லை. அவசரமும் வேகமுமான
சூழலில் கதைகள் சுருக்கமாக இருப்பதே
இலக்கியத் தேவை என்ற கண்ணோட்டத்தில் தொகுக்கப்பட்ட, அரைப் பக்கம் முதல் மூன்று பக்கம்
மட்டுமே நீளும் கதைகளின் தொகுப்பு அது. அதன் முன்னுரையில் தொகுப்பாளர்களின்
ஒருவரான ராபர்ட் ஷாப்பர்ட் ஒரு கருத்தை முன்வைக்கிறார். 'மிகவும் செறிவூட்டப்பட்ட, மிகவும் புதுமையான,
மிகவும் உத்திரீதியான, மிகவும் புனைவுத்தன்மை கொண்ட
கதைகளா னாலும் அமெரிக்க எழுத்தாளர்களான நாம் அடிப்படையான ஓர் அம்சத்தைக் கதைகளில்
முன்னிருத்துகிறோம். அது வாழ்க்கை'. இந்த வாக்குமூலத்தை எட்டியதும் என் சந்தேகம்
நிவர்த்தியானது. புதிய எழுத்தாளர்களின் கதைகளில் தென்படத் தவறிய கூறாக நான் கண்டது
வாழ்வின் ஸ்பரிச மின்மையை; அல்லது வாழ்வின் கணங்களைப்
புனைவு பின்னுக்குத் தள்ளி விடும் நிலையை. அவற்றிலிருந்து விலகிய மனப்பாங்குடன்
எழுதப் பட்ட, நான் யோசித்து உணர்ந்த உண்மையின்
சான்றுகளாகக் கருதத் தகுந்த சிறுகதைகள்
கே.என். செந்திலின் இரண்டாவது தொகுப்பிலும் உள்ளன. புதிய திசையில் பயணம்
செய்திருக்கிறார் என்பதன் நிரூபணம் இந்த எட்டுக் கதைகளும்.
வாழ்வின் தீவிர நிலைகளுக்கு இணையான நிலைகளையே செந்தில்
கதைகளில் உருவாக்க எத்தனிக்கிறார். மோஸ்தர்களின் ஊர்வலத்தில் அல்ல; வாழ்வைப் பற்றிய தனித்த
சஞ்சாரத்தின் மூலமே எழுத்தை உருவாக்க விரும்புகிறார். இந்த எட்டுக் கதைகளை எழுதத்
தூண்டியவை என்ன என்று அவரிடம் விசாரித்தால் தான் கண்ட கேட்ட நிஜ
வாழ்க்கைச்சம்பவங்களையே ஒருவேளை அவர் முன்வைக்கக் கூடும். அந்த அடிப்படையில் அவர்
எழுத்தை எதார்த்தமானது என்று வகைப்படுத்தலாம். எதார்த்தவாத எழுத்தைச் சார்ந்து நின்றே அதி
நவீனராகவும் அடையாளம் காணப்படும் சாத்தியமும் இந்தக் கதைகளில் தென்படுகிறது.
உருவம் சார்ந்தும் கதைப் பொருள் சார்ந்தும்.
மேற்சொன்ன 'திடீர்ப் புனைவு' க்கு எதிராக எழுதப்பட்ட
கதைகளே புதிய நவீனத்துவக் கதைகள். சிறுகதையின் ஆரம்ப காலத்தில் எழுதப்பட்டவை
பத்துப் பக்கங்களுக்கு மிகாத சிறுகதைகள்
எனில் இந்தக் கால அளவில் எழுதப்படுபவை இருபது பக்கங்களுக்குக் குறையாத கதைகள்.
இந்தப் போக்கு உலகம் முழுவதும் நடைமுறையாகி இருப்பது. அமெரிக்க எழுத்தாளர்களான
ரேமண்ட் கார்வர், டோபியாஸ் உல்ப், ஜப்பானிய எழுத்தாளரான ஹாருகி முரகாமி உட்படப் பலரும் எழுதுவது நீண்ட சிறுகதைகளையே.
தமிழிலும் அறிந்தும் அறியாமலும் இந்தப் போக்கு வலுப் பெற்றிருக்கிறது. புதிய
தலைமுறை எழுத்தாளர்களில் நம்பிக்கையளிப்பவர்கள் என்று நான் கருதும் ஜே.பி.
சாணக்கியா, எஸ். செந்தில்குமார், மு.குலசேகரன், முதிர்ந்த இளைஞரான
தேவிபாரதி ஆகியவர்களின் கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். இந்த வரையறையை வைத்து
இவர்களை நவீனமானவர்கள் என்று சொல்லலாம். இந்த வரிசையில் முன்பதிவு செய்யத்
தேவையின்றி கே.என் செந்திலும் இடம் பிடிக்கிறார் என்பதை இந்த எட்டுக் கதைகளும்
உறுதிப் படுத்துகின்றன.
இன்று
எழுதப்படும் கதைகள் முந்தைய கதைகளுக்கு நேர் மாறானவை. ஆரம்பம், வளர்ச்சி, உச்சம் என்று கிரமப்படிச்
சொல்லப்படுபவை அல்ல. சிதறுண்டவை. சில சித்திரங்களை, சில உணர்வுநிலைகளைச் சிதறலாக முன்வைத்து அதைக் கோர்த்துப்
புரிந்து கொள்ளும் பொறுப்பை வாசகனிடம் அளித்து விடுகின்றன. கே.என். செந்திலின்
கதைகள் இந்த வகையில் அமைந்தவை. 'நான் - லீனியர்' என்று வலிந்து
எழுதப்பட்டவையாக இல்லாமல் சிதைவே இயல்பாக உருவானவை. 'தங்கச் சிலுவை' கதை வெவ்வேறு
பாத்திரங்களை மையமாகக் கொண்ட சிதறிய
சித்திரங்களின் தொகுப்பு. விரிவான பொருளில் சமகால வாழ்வுடன் பொருந்தும் படைப்பாக்க
முறை இது என்று தோன்றுகிறது. முந்தைய தலைமுறை வாழ்ந்த நேர் கோட்டு வாழ்க்கையையா
இன்று வாழ்கிறோம்? வளைவும் வெட்டலும் கிறுக்கலுமான வாழ்க்கையைத்தானே என்று இந்தக் கதைகள்
காட்டுகின்றன என்று எடுத்துக் கொள்ள முடியும்.
இந்தக் கோணல் வாழ்க்கை
இன்னொன்றையும் வெளிப்படுத்துகிறது. நேரான நகர்வுகள் கொண்ட வாழ்க்கையில்தான்
விழுமியம் சார்ந்த தருணங்கள் அழுத்தமாக வலிறுத்த ப்படுகின்றன. சிதறுண்ட வாழ்க்கையில் மதிப்பீடுகள்
தன்னிச்சையாக உருவாகின்றன. அவை சில சமயம் எள்ளி நகையாடப் படுகின்றன. சில சமயம்
பொருட்படுத்தப்படாமல் போகின்றன. அபூர்வமான தருணங்களில் மட்டுமே அவை
மதிப்புக்குரியவையாகின்றன. 'வெஞ்சினம்' கதையில் இருண்ட பகடியாகிறது. சிறுவன் ஓட்டலிருந்து
தப்பியோடும் 'திரும்புதல்' கதையில் அவன் திரும்பிச்
செல்வது தனது பழைய வாழ்க்கைக்கே என்று உணரும் போது அந்தத் தலைப்பே குரூர நகைச் சுவையாகிறது.’ தங்கச் சிலுவை' கதையில்
தேவாலயத்திலிருந்து சிலுவை யைக் களவாடிய ஆபிரகாம் அதைத் திரும்பப் பாதிரியாரிடம்
கொடுப்பது மதிப்புக்குரியதாக உயர்கிறது.
இந்தக்
கதைகளின் மனிதர்கள் எவரும் அறச் சீற்றத்துடன் பொங்குபவர்களோ அதைப் பரப்புரை செய்து
திரிபவர்களோ அல்லர். பெரும்பான்மையான பாத்திரங்கள் நகரம் சார்ந்த அடித்தள வாழ்க்கை வாழ்பவர்கள். புறக் காரணங் களாலும் அகக்
காரணங்களாலும் தாமே உருவாக்கிக் கொண்ட நரகத்தில் உழல்பவர்கள். மீட்பைப் பற்றி
யோசிப்பதை விட இருப்பைப் பற்றிக் கவலைப்
படுபவர்கள். பசியாலும் காமத்தாலும் பழி உணர்வாலும் தந்திரத்தாலும் உன்மத்தத்தாலும்
மரணத்தாலும் வதைப்பவர்கள். வதைபடுபவர்களும் கூட. இந்த இருண்ட உலகை எந்த மனச்
சாய்வுமின்றி 'அராஜகமாக' சித்திரிக்கிறார் கே.என். செந்தில். அதில் அவர் பெற்றிருக்கும் வெற்றிக்கு
இந்தக் கதைகளும் எனது வாசக வியப்பும் சான்று.
ஓர் உரையாடலின் போது '
அது ஏன் எல்லா
மகத்தான படைப்புகளும் அவலச் சுவை கொண்டதாகவும் துன்பியல் தன்மை கொண்டதாகவும்
இருக்கின்றன? என்று கேட்டார் கே.என். செந்தில். எனக்கே அவ்வளவாக நிறைவு தராத பதிலைச்
சொன்னேன் என்று ஞாபகம். இந்த எட்டுக் கதைகளையும் வாசித்துக் கொண்டிருக்கும்போது
அந்தக் கேள்வி எனக்குள்ளே மீண்டும்
எழுந்தது. கே.என். செந்திலைக் கேட்டால் என்ன சொல்லுவார்? ஒருவேளை 'தங்கச் சிலுவை' கதையில் வரும் விவிலிய வாசகத்தை மேற்கோள் காட்டுவா
ராக இருக்கலாம்.ஒருவேளை 'நீதியின் நிமித்தம்
துன்பப்படுபவர்கள் பாக்கியவான்கள்' என்று சொல்லலாம். ஏனெனில் அவர் எழுதியிருப்பது இருப்பியல்
நீதியின் நிமித்தம் துன்பப்படுவர்களின்
கதையை. துன்புறுத்துபவர்களின் கதையையும்.
சுகுமாரன்
No comments:
Post a Comment