Saturday, May 24, 2014

இராமலிங்க சுவாமிகளும் காரல் மார்க்ஸூம் சமகாலத்தவர்கள்


           இராமலிங்க சுவாமிகளும் காரல் மார்க்ஸூம் சமகாலத்தவர்கள்
                                                          - சுந்தர ராமசாமி

                                     

அனுபவத்தைப் படைப்பாக மாற்ற வேண்டிய ஒரு சவால் படைப்பாளிக்கு இருந்துகொண்டிருக்கிறது.என்ன நிகழ்கிறது என்றால்,அனுபவத்தின் சாராம்சங்கள் தொகுக்கப்பட்டு மொழி சார்ந்து,உத்தி சார்ந்து,இன்னும் பல்வேறுபட்ட கூறுகள் அதனுடன் இணைந்து படைப்பாக முன்வைக்கப்படுகின்றன.
அனுபவம் படைப்பாகாது.ஆனால் படைப்புக்கு அனுபவம் முக்கியமான விஷயம்.அதுதான் வடிவத்தை தீர்மானிக்கிறது.மொழி கூர்மையாக இருக்க வேண்டும்.படைப்பு,மனத்தைப் பாதிப்பது தான் படைப்பின் வெற்றி.அப்படி மனதைப் பாதித்து ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு அது கடந்து செல்கிறது.காலத்தின் வழியாகப் படைப்பு கொள்ளும் பயணம்.பொருள்,வடிவம்,உத்தி இந்த மூன்றும் இணைந்ததுதான் படைப்பு என்பது பொதுவான நம்பிக்கை.

பாரதி,படைப்பின் உருவத்தைத் தொட்டுப் பேசும்போது,எனக்கு சிறுகதை எழுத எழுதத்தெரியவில்லை.என்னுடைய பிரச்சாரபுத்தி நடுவிலே வந்து புகுந்துவிடுகிறதுஎனற பொருளில் கூறியிருக்கிறார்.வடிவம் சம்பந்தமான பிரக்ஞை இருந்தால்தான் இந்த வார்த்தைகளைச் சொல்ல முடியும்.மிகச் சிறந்த சிறுகதைகளை உருவாக்க ஆசைப்பட்டவர்.அந்தக் காலத்திலேயே தாகூருடைய சிறுகதைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர் பாரதி.தான் தாகூருக்கு நிகரான கவிஞன் என்ற சுய நம்பிக்கையும் மதிப்பீடும் கொண்டவர்.தாகூருக்குக் கிடைத்த அங்கீகாரம் தனக்குக் கிடைக்கவில்லை.தமிழ்ச் சூழல் போதுமான அளவிற்குத் தன்னைப் போற்றவில்லை என்ற குறை இருக்கும்போதே தாகூருக்கு நிகரான சிறுகதைகள் தன்னால் எழுதமுடியவில்லை என்று ஒத்துக்கொள்வதானது வடிவத்தின் மீது அவருக்கு இருக்கக்கூடிய அக்கறையைக் காட்டக்கூடியதாகும்.


எழுதுவதிலிருந்து ராமகிருஷண பரமஹம்சர் தப்பித்துக் கொள்கிறார்.நான் தனிமனிதன்.நான் இந்துவாக இருப்பேன்.முஸ்லீமாக இருப்பேன்.கிறித்துவனாக இருப்பேன்.எல்லா வாழ்க்கையையும் மேற்கொள்வேன்என்கிறார்.இதெல்லாம் அதற்கு முன்னர் இந்தியாவில் நடந்தது கிடையாது.ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கவிஞர்.அவர் எழுதியிருப்பது எல்லாமே ஆன்மீகம் சார்ந்தது.ஆன்மீகம் சார்ந்து சொல்லிருப்பது எல்லாமே ஒரு கவிஞனுக்குக்குரிய வார்த்தைகள்.எப்படி இயேசு ஒரு கவிஞரோ அது போல் ராமகிருஷ்ணரும் ஒரு கவிஞர்.வங்காளச் சூழலில் இருந்து தான் அவர் அன்று தோன்றியிருக்க முடியும்.வேறு சூழலிலிருந்து தோன்றியிருக்கமுடியாது.அதற்கு அடுத்தபடியாக விவேகானந்தருடைய தோற்றமும் மேற்கத்திய பாதிப்பின் விளைவு தான்.
        
அப்படிப் பார்க்கும்போது சிறுகதையின் வடிவம்,நாவலின் வடிவம்,நாவலின் தோற்றம் உரைநடை எல்லாமே நூறுவருடங்கள் நூற்றைம்பது வருடங்களுக்குள் மேற்கத்தியப் பாதிப்பால் ஏற்பட்டவைதான்.ஆங்கிலேயர்கள் தங்களிடமிருந்து உலகத்திற்குத் தர வேண்டியதை தந்துவிட்டார்கள் என்று கூடச் சொல்லலாம்.நாம் தொடர்ந்து ஜெர்மன் மொழியிலிருந்து பாதிப்புப் பெற்றிருக்கலாம்.பிரெஞ்சிலிருந்து பாதிப்பு பெற்றிருக்கலாம்.இது போல பிற சமூகத்தின் பாதிப்புகளைப் பெற்று வருகிறோமே தவிர நாம் எந்தச் சமூகத்தையும் பாதிக்கவேயில்லை.இது ஒரு முக்கியமான விஷயம்.இராமலிங்க சுவாமிகளும் கார்ல் மார்க்ஸும் சம காலத்தவர்கள். இராமலிங்க சுவாமிகள் பிறக்கிறபோது கார்ல் மார்க்ஸுக்கு 5 வயது.இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலம் 51 வருடங்கள்.மார்க்ஸும் உலகத்தைப் பாதித்திருக்கிறார்.எந்த வகையில் பாதித்திருக்கிறார்,அதன் வீச்சு என்ன,விரிவென்ன,ஆழமென்ன?ராமலிங்க சுவாமிகளும் தமிழைப் பாதித்திருக்கிறார். அதனுடைய விரிவென்ன,வீச்சு என்ன எனபதையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.இது கவிஞனுடையது,ஆகவே இது வேறுவிதமானது : அது தத்துவவாதியின் பாதிப்பு அது வேறு விதமானது என்று சொல்லிக் கொண்டிருக்கலாம்.அப்படித்தான் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சமத்துவம் எனபது அல்லது சமத்துவத்தைப் பார்த்துப் போகும் பயணம் உங்களது நோக்கமாக இருக்குமென்றால் கார்ல் மார்க்ஸ் உலகத்தைப் பாதித்த விதத்திற்கும் ராமலிங்க சுவாமிகள் உலகைப் பாதித்த விதத்திற்கும் உள்ள வித்தியாசத்தை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.உலகத்தை நம்மால்  பாதிக்கவே முடிவதில்லை.

(பேராசிரியர் ஜேசுதாசன் இல்லம்,புலிப்புனத்தில் 08.05.1997 அன்று “தொண்ணூறுகளில் தமிழ் இலக்கியம்என்னும் தலைப்பில் சுந்தர ராமசாமி ஆற்றிய உரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்)

நன்றி : இவை என் உரைகள்- சுந்தர ராமசாமி (சு.ரா ஆற்றிய உரைகளின் தொகுப்பு)

No comments:

Post a Comment