Monday, August 17, 2026

மூன்று மதிப்புரைகள்

 

மூன்று மதிப்புரைகள்


தி.ஜானகிராமனின் ’அன்பே ஆரமுதே’


மிகவும் முன்னால்- பத்தாண்டுகளுக்கு மேலேயே இருக்கக்கூடும்-இந்நாவலை வாசிக்கத் தொடங்கி நூறு பக்கங்களுக்குள்ளேயே அதிருப்தியடைந்து என்ன இது..!’ என்கிற ஒவ்வாமையால் கைவிட்டு விட்டேன். தி.ஜா-வின் நூற்றாண்டில் அவரை முழுமையாக வாசித்து விட வேண்டும் எனத் தோன்றி நான்கைந்து நாவல்களையும் பல சிறுகதைகளையும் மீளவும் மறுவாசிப்பு செய்தேன். உவப்பூட்டும் அனுபவமாக அமைந்தது மட்டுமல்ல ’நவீன தமிழின் சிறந்த கலைஞர்களுள் ஒருவர்’ எனும் அவரைப் பற்றி முன்பிருந்த மதிப்பீடு வலுப்படவே செய்தது. ஆனாலும் கொசுறாக ஒரு குறை தொக்கி நின்றது. நிலுவையிலுள்ள நாவலை வாசிக்காமல் இவ்வாறான முடிவுக்கு வருவது பிழை என்று தோன்றிற்று. பிழை பொறுக்க மாட்டாமல் தாமதமின்றி ‘அ.ஆ’ வைக் கையிலெடுத்தேன். மேற்சொன்னவற்றுள் ‘கடனே’ எனும் தொனி தென்பட்டாலுமே கூட அது உண்மை இல்லை. ஆனால் முழுமையாக வாசித்து முடித்ததுமே அந்நாவலைப் பற்றி இப்படித் தான் சொல்லத் தோன்றியது.


”தி.ஜானகிராமன் எழுதியிருக்கக் கூடாத/வேண்டாத நாவல்அன்பே ஆரமுதே’ ஆகும்”


நாவலில் ஜானகிராமன் எழுத்தின் பிரத்யேக ஒளியும் உரையாடல்களின் வக்கனைகளும் அங்குமிங்கும் டார்ச்லைட் வெளிச்சம் போல வந்து போகிறதே அன்றி, தோதான இடங்களில் அலைகிறதேயன்றி, அது நின்றெரியும் சுடராக பிரகாசிக்கவில்லை. அந்த டார்ச் லைட்டிலும் விரைவிலேயே பேட்டரி தீர்ந்து போய்விடுகிறது. மிக சுபாவமாக உருவாகும் பாத்திர வார்ப்புக்கு முற்றிலும் மாறாக செயற்கையாக வலிந்துசெய்யப்பட்ட’ உருவங்களை அங்குமிங்கும் நாவலில் பிசைந்து வைத்திருக்கிறார் ஜானகிராமன்.


நாவலின் நாயகரான அனந்தசாமி மட்டும் தான் இயற்கையாக, தன்னியல்பாக உருவான பாத்திரம். சுற்றிலுமிருப்பவர்கள் பலரும் அவரைசாமிஎன்றே அழைக்கின்றனர். கிட்டத்தட்ட தஸ்தயேவ்ஸ்கியின்அசடன்நாயகனான இளவரசன் மிஷ்கின் போன்ற வார்ப்பு. பழகும் மனிதர்களிடமெல்லாம் விளக்கைப் பொருத்தி வைத்தது போல மன இருளை அகற்றும், தங்களுடைய முந்தைய நடவடிக்கைகளை எண்ணி மருக வைக்கும் நபர் அனந்தசாமி. வைத்தியர் அவர். மன வைத்தியமும் அறிந்தவர் என நினைக்கும்படியான நிகழ்ச்சிகள் நாவல் முழுக்க விரவி இருக்கின்றன. வைத்தியரும் இடிந்து போகும் தருணங்கள் உண்டல்லவா! அங்கு கலைஞனின் நிழல் எட்டிப் பார்க்கும் போது தான்அட ஆமாம். படிப்பவரைப் பொருட்படுத்தாத வார இதழ் தொடரல்ல இது, மாறாக தி.ஜாவின் ஆரம்ப கால  படைப்பொன்றையே வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்கின்ற நினைவு வருகிறது.


நாவல் கதையல்ல என்பதால் இப்படைப்பின்கதையைச் சொல்லக் கூச்சமாக இருக்கிறது. எனவே தவிர்த்திருக்கிறேன். யூ-ட்யூப் கதைசொல்லிகள் சிறுகதைகளையும் நாவல்களையும் வெறும் ‘கதை’யாக மாற்றி வெட்கமின்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இது வாசகருக்கும் சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கும் இழைக்கும் அநீதியாகும். வேடிக்கையென்னவெனில் அதையும் தப்புந்தவறுமாக மனம் போனபோக்கில் இட்டுக்கட்டி அவிழ்த்துவிடுகிறார்கள். அற்பப்புகழுக்கும் ஆதாயத்துக்கும் இலக்கியத்தைச் சந்தைப் பொருளாகப் பாவித்து விற்கும் இந்த ஆட்கள் ஜானகிராமனையும் விட்டுவைக்கவில்லை. தி.ஜாவின் படைப்பை குற்றுயிரும் குலையுறுமாகச் சிதைத்திருக்கிறார்கள் என்பதாலேயே இங்கு விரிவாகச் சொல்லும்படி ஆயிற்று. எனவே இவ்விமர்சனத்தில் படைப்பின் மைய இழைகளையும் ஆதாரமானக் கூறுகளையும் மட்டுமே சுட்டிக் காட்டுவதன் வழியாக நாவலை மதிப்பிட முயன்றிருக்கிறேன்.


நாவலின் மையம் கட்டுப்பெட்டித்தனமானது. மிகவும் பழையது எனும் பொருளில் சொல்கிறேன்.  எதிலும் பற்றில்லாத அனந்தசாமி  பெண் பார்க்கச் சென்ற வீட்டிலிருந்து சிறிது நேரத்திற்குள்ளேயே கிளம்பி எவரிடமும் கூறாமல் ஓடிப் போய் விடுகிறார். துறவறம். காசி, இலங்கை எனச் சுற்றி காஷாயம் தரித்து கூடவே வைத்தியமும் கற்றுக் கொள்கிறார். கற்ற வித்தையுடன் அம்மாவைக் காண ஊருக்குத் திரும்புகிறார்(அம்மா இறந்தப் பின் அனந்தசாமி தனியனாக ஆகும் இடத்திலிருந்து தான் நாவலே தொடங்குகிறது). பிறகு சென்னையின் குறிப்பிட்டப்  பகுதிகளில் வசிக்கும்(எங்குமே நடந்து செல்வதே அவர் வழக்கம்), தெரிந்த சில குடும்பங்களுக்கு நோய் தீர்க்கும் நிவாரணியாக விளங்குகிறார் அனந்தசாமி. உறவின் சங்கிலி அவரை அங்கு பிணைக்கத் தொடங்குகிறது. 




அனந்தசாமியின் தற்போதைய தோற்றத்திற்கு முன், இளைஞனாக அவர் பெண் பார்க்கும் படலம் தொடங்கும் முன்பே ஓடிப் போனாரில்லையா, அந்த ருக்மணியை மருத்துவம் பார்க்கும் வீட்டில் அகஸ்மாத்தமாகச் சந்திக்க நேர்கிறது. ஆனால் அச்சந்திப்பு அவ்வீட்டுக்காரியும் ருக்மணியின் நெருங்கிய சினேகிதியுமான நாகத்தின் திட்டமிட்ட ஏற்பாடாகும். ருக்மணி மணமே புரிந்து கொள்ளாமல் வேறு எவரையுமே நினைக்காமல் (ஒன்றிரண்டு முறை சிலரிடம் தோன்றும் சபலம் கூட இரண்டே நாட்களிலேயே அணைந்து விடுகிறது) அனந்தசாமியை மட்டுமே மனதில் ஏந்தி கோபமும் ஆற்றாமையுமாக தினமும் பத்து முறையேனும் மானசீகமாக அவரைக் கேள்வி கேட்டபடி டெல்லியில் பேராசிரியையாகப் பணியாற்றுகிறாள்.  தி.ஜா விரும்பியவாறே ஒரு கட்டத்தில் இருவரும் பார்த்துக் கொள்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு நேரும் இச்சந்திப்புக்குப் பின், தன்னை விட்டு ஓடிப்போனவன் மீது அதுவரை ருக்மணியிடமிருந்த குற்றங்குறைகள் மெல்ல மறைக்கின்றன. அவரை தினமும் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என நினைக்கும்படி ருக்மணியின் மனம் முழுக்க அனந்தசாமியே நிறைந்து போகிறார். அவருக்காக ஜாகையை சென்னைக்கு மாற்றிக் கொண்டு அவரை தன் வீட்டு மாடியில் குடியிருக்க வைக்கிறாள். அவருக்கு தன் கையால் உணவிட வேண்டும் என்கிற விருப்பத்தை நிறைவேற்றியும் கொள்கிறாள். அவமானத்திற்கும் தலைகுனிவிற்கும் ஆளாக்கிய நபரை ஒருத்தி இந்தளவுக்கு ஏற்பாளா? இவற்றைப் புறமொதுக்கியபடியே ஒருவர் மீதான ஆழமான பிணைப்பும் நேசமும் இந்தளவுக்கு இருக்க முடியுமா? என்கிற கேள்விக்கு தி.ஜா போதிய நியாயம் செய்யவில்லை. மாளாத நேசத்தைக் காட்டத் தெரியாமல் தான் அதுவரைக் கோபத்தின் திரையில் ஒளிந்து கொண்டாளோ ருக்மணி? இது போன்ற இடங்களில் வாசிப்பவர் மனதை கரைக்கக் கூடிய கலைஞன் தான் அவர். இங்கு ஏனோ அவ்வளவாகச் சுகப்படவில்லை. இருவருக்குமான உரையாடல்கள், தன்மொழிகள் எல்லாம் உள்ளன. ஆனால் புண்ணைக் கிழித்துக் கட்டுப்போடாமல் எப்படி ஆறும்? இருவரும் அவ்வப்போது கீறிப் பார்த்துக் கொள்கிறார்கள். சமாதானம் அடைந்து விடுகிறார்கள். அவ்வளவு தான். ஆனால்  நகம் கூடத் தொடாமலும் படாமலும் புழங்கினாலும் கூட இருவரிடமும் பரஸ்பரம் சொல்லில் உள்ள அன்யோன்யத்தைச் சொல்லால் எழுப்பிக் காட்டுகிறார் தி.ஜா. அனந்தசாமி விலகி நிற்க முயன்றாலும் கூட ருக்மணி அவரை அன்பின் கயிற்றால் தன் வசம் இழுக்கிறாள். 


தி.ஜா-வின் படைப்பம்சங்களில் ஒன்றான பெண்களுக்குள் உள்ள உறவின் இசைமை இந்நாவலிலும் உள்ளது. ‘உயிர்த்தேன்நாவலில் மிக இயல்பாகவும் அபாரமாகவும் அமைந்திருந்த இவ்வம்சம் இந்நாவலில்அப்படியா..!’ என்கிற ரீதியிலேயே இருக்கிறது.


நாவலில் ஜோதிர்ரூபமாக விளங்கும் பெண்களைக் கண்டு திகைத்து அவளுக்கு தகுதியானவன் அல்லன் என ஆண்கள் ஓடி விடுகிறார்கள். ‘ருக்மணியைக் கண்டு அனந்தசாமி. ‘சந்திராவைப் பார்த்து ரங்கன்.


நாவலில் பெண்கள் இரு வகையினர். ஒன்று அழகானவர்கள். இரண்டாவது மிக மிக அழகானவர்கள். இப்பேரழகிகள்  வடிவத்தில் சிற்சில மாற்றங்களைக் கொண்டிருந்தாலும்  ஆவலைத் தூண்டக் கூடியவர்கள்.


அனந்தசாமியைத் தவிர பிற ஆண்கள் வலிந்து புனையப்பட்டவர்கள் போலத் திரிகிறார்கள். நாவலின் முடிவெல்லாம்ராணிவாரந்தரத் தொடர்கதை தோற்றுப் போகும்படி, ‘ஜானகிராமா..!’ என மனதிற்குள் அலறும்படி இருக்கிறது.  உடலுக்கும் மனதிற்கும் துயர் நேரும்போதெல்லாம்ராமா..ராமா..’ என மந்திரம் போல நோயாளிகளிடம் சொல்லச் சொல்கிறார் வைத்தியர் அனந்தசாமி. அவருமே சொல்லிக் கொள்கிறார். ஒரு விதத்தில் நாவலில் முடிவைக் கண்டுராமா..ராமா..’ எனச் சொல்ல வேண்டுமென்று தோன்றியது.


நாவலில் இறுதி முத்தாய்ப்பாக மணம் புரியாத தம்பதிகளாக அனந்தசாமியும் ருக்மணியும் திகழ, அவர்களது பெறாத பெண் பிள்ளையாகடொக்கி’ அமைவது இனிமையாகவும் ஈர்ப்பதாகவும் இருக்கிறது. ஆனால் அதற்கு ஜானகிராமன் அமைத்திருக்கும் வழித்தடம் உவப்பாக இல்லை. 'ரங்கன்செத்துப் போவதெல்லாம் கொடுமை.  இதழ் ஆசிரியர் தொடரைச் சீக்கிரம் முடித்துக் கொள்ளச் சொல்லி விட்டார் போலிருக்கிறது.  


இந்நாவல் வெகுஜன இதழொன்றில் தொடராக வெளிவந்தது என்பதால் அதற்குரிய கோளாறுகளுடனேயே இருக்கிறது. தொடரை மூன்று வாரங்களுக்கு முன் படித்தவர்கள் சம்பவங்களை மறந்து போயிருப்பார்கள் என நினைத்து வெகு அக்கறையுடன் நடந்ததையே  திரும்பத் திரும்ப வண்டி வண்டியாகச் சொல்கிறார்கள். பெரும்பாலும் அந்த தண்டனை அனந்தசாமிக்கு தான். ’மோகமுள்நாவலும் தொடர்கதையாக எழுதப்பட்டது தான் என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். தி.ஜா-வின் பாத்திரங்கள் பேசிக் கொள்ளும் போது மனம் அதில் தோய்ந்துஇன்னும் சித்த நாழி பேசிங்கோங்களேன்..’ எனத் தோன்றுமில்லயா..! இதில் சில உரையாடல்கள் நீங்கலாக மற்றவையெல்லாம்போதும் சித்த நிறுத்தறேளா…’ வகையறா.


’மலர் மஞ்சம்(1961) நாவலுக்கும்மோகமுள் (1964) ளுக்கும் இடையே எழுதப்பட்ட நாவல்அன்பே ஆரமுதே (1963). இந்த ஒரு தகுதியைத் தவிர வேறெந்த பெயரையும் தி.ஜாவுக்கு இந்நாவல் ஈட்டித் தராது. நாவலில் ஓரிடத்தில் வெற்றிலைக் குதப்பிக் கொண்டு சுப்புசாமி, தன்னிடம் கேட்பதற்கெல்லாம்ம்க்கும்..’ ’ம்க்கும்என பதில் சொல்வார்.


இந்நாவலைப் பற்றிக் கேட்டாலும் அதே தான் பதில்


ம்க்கும்.


************************


எஸ்.எல். பைரப்பாவின்ஒரு குடும்பம் சிதைகிறது


மகிழ்ச்சியாக வாழும் எல்லாக் குடும்பங்களும் பார்ப்பதற்கு அநேகமாக ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றன. ஆனால் துயரத்தில் தத்தளிக்கிற ஒவ்வொரு குடும்பமும் தனக்குரிய வழியில் துன்பப்படுகின்றன

-         - டால்ஸ்டாய் (”அன்ன கரீனினாநாவலின் தொடக்க வரிகள்)

குடும்பத்தை மைய அலகாகக் கொண்டு சுழலும் ஆக்கங்கள் பெரும்பாலானவற்றிற்கு மேற்குறிப்பிட்டுள்ள வரிகள் மாற்றுக் குறைவின்றி பொருந்தக்கூடியவை. மகத்தான வரிகள் அவை. எனவே இன்றும் காலத்தின் நூலாம்படை இவ்வரிகள் மீது படரவேயில்லை. இன்னும் துல்லியமாகச் சொல்லவேண்டுமெனில் துயரார்ந்த (சோகம் அல்ல. சோகம் மெலோ-ட்ராமாவிற்குரியது) குடும்பங்களைப் பின்புலமாகக் கொண்ட படைப்புகளுக்கு ஏற்றவை.


தென்னிந்திய நாவல்களில் மிக முக்கியமான படைப்புகளுள் ஒன்றான எஸ்.எல். பைரப்பாவின்ஒரு குடும்பம் சிதைகிறதுகன்னட நாவலின் (தமிழாக்கம் : எச்.வி. சுப்ரமணியம்) தலையில் அல்ல இதயத்தில் எழுத வேண்டிய வாசகங்கள் அவை.


பொறுப்பற்ற குடும்பத் தலைவர்களால் அவ்வீட்டினர் சீரழிவது பழையதுமல்ல, புதியதுமல்ல. ஆனால் பொறுப்பின்மையுடன் முழு மூடர்களாகவும் அவ்வீட்டு ஆண்கள் இருக்கக் கூடுமெனில் கூரையினடியிலிருந்து பெயர்ந்து அக்குடும்பம் ஆகாயத்தின் கீழ் வந்து விடுமல்லவா..! அதாவது தெருவுக்கு. அப்படிப்பட்ட பிராமணக் குடும்பமொன்றின் வீழ்ச்சியை விரிவாகக் கூறும் நாவலேஒரு குடும்பம் சிதைகிறது’.


1920களில் மைசூர் சமஸ்தானத்தில் தும்கூர் ஜில்லாவில் ராமஸந்திர கிராமத்தில் 1940-வரையிலான காலகட்டத்திற்குள் கால் கொண்டுள்ளது இந்நாவல். தன் மொத்த வாழ்க்கையையும் வயிற்றுக்கு பத்திரம் எழுதிக் கொடுத்தவன் மூத்தமகனான சென்னிகராயன். மூடத்தனத்தில் இவனுக்கு நிகரானவன் என்றாலும் கொஞ்சம் இங்கிதமும் ஒரு கட்டத்திற்குப் பின், பிறர் நற்சொல் கேட்டு பணிந்து நடக்கும் இயல்பும் கொண்டவன் தம்பி அப்பண்ணய்யா. இவர்களைப் பெற்றவளான கங்கம்மா மூர்க்க குணமும் துர்புத்தியும் உடையவள். வசவுகள் இம்மூவருக்கும் நீர் குடிப்பதைப் போல. ‘தேவிடியா..’எனும் சொல் மற்றொரு குடும்ப உறுப்பினர் போல அவர்களுடனேயே வாசம் செய்கிறது.


சென்னிகராயர் போன்ற பாத்திர வார்ப்பை இதுவரை எந்த நாவல்களிலும் சிறுகதைகளிலும் கண்டதேயில்லை. உயிர் போகும் வேளையில் யமன் வந்து நின்றால் கூடசாப்பிட்டு விட்டு வருகிறேன்..’ என சமையற்கட்டுக்குள் தலையை நுழைப்பவன் அவன். தன் சொந்தப் பிள்ளை இறந்து, தாழ் பணிந்து வணங்கும்படியான மனைவி இறந்து சூன்யம் சூழ்ந்திருக்கும் வேளையிலும் உணவுக்காக மறுமணம் செய்து கொள்ள கிளம்பிச் செல்பவன் அவன். முன்னர் பலதடவை தன் குடும்பம் பசியால் வாடி வதங்கித் துவளும் போது கூட, பிள்ளைகளுக்கென்று அங்குமிங்கும் கடன்பெற்று சமைத்து வைத்ததை முதல் ஆளாக அமர்ந்து தின்று விட்டு ஏப்பத்துடன் எழுந்து செல்லும் பிறவி. அவன் பார்க்கும்  கணக்குப்பிள்ளைச் சம்பளத்தை முன்னரே சென்று வாங்கி, டவுனுக்குச் சென்று பத்து பதினைந்து நாட்கள் ஹோட்டலில் மணமாற வயிறாற உண்பவன் அவன். அக்குடும்பத்தை ஓட்டுவதற்கான அச்சாணியே அந்த சம்பளம் தான். வீட்டினரின் காய்ந்த வயிறுகளைக் குறித்த நினைவோ அது சம்பந்தமான சிறு குற்றஉணர்வோ அறவே இல்லாத மாணிக்கம் சென்னிகராயன். இது போன்ற இவனது வீரதீர சாகசங்கள் நாவலெங்கும் காணக்கிடைக்கின்றன.


காவிய நாயகி போல திகழும் நஞ்சம்மா மணம் முடித்து அவ்வீட்டிற்கு நுழைந்த பிறகு இருளடைந்த அவ்வீட்டை புணருதாரணம் செய்து மீட்க முயன்று கொண்டே இருக்கிறாள். அதற்கான அவளது போராட்டங்கள், பிடிவாதங்கள் மட்டுமல்ல சிறுமைகளையும் அவமானங்களையும் துச்சமாகக் கருதி மறுநாளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்  குணங்கள் எதுவுமே அக்குடும்பத்தை மீட்பதில்லை. அவளால் சிதைவை சற்றே ஒத்திப் போட முடிகிறது. அவ்வளவு தான். கணவனின் கணக்குப் பிள்ளை வேலையைச் செய்வதும் நஞ்சம்மா தான். அவன் தான் மூடனாயிற்றே..!


வெளிச்சத்தின் பாதைகளை எண்ணி எதிர்கால நம்பிக்கைகளையும் கனவுகளையும் தன் மகன்களின் வழியாக வளர்த்துக் கொள்ளும் நஞ்சம்மா நேர்கொள்வது அப்பாதைகளில் விஷ ஜந்துக்களையும் படுகுழிகளையுமே.


கண்டிப்பும் மூர்க்கக்குணமும் கொண்ட அவளது தந்தை கண்டி ஜோதிடர் செழிப்புடன் திகழ்பவர். செழுமையான வீட்டில் பிறந்த  தாயில்லாத நஞ்சம்மா பாட்டியிடம் செல்லமாக வளர்ந்தவள். தந்தையின் அந்த மூர்க்கப்புத்தி தான் அவளை இவ்வீட்டில் கொண்டு வந்து தள்ளிவிடுகிறது. அவளது அண்ணணுக்கும் கண்டி ஜோதிடர் பார்த்து மணமுடித்து வைக்கும் பெண், நரகத்தை வீட்டிற்குக் கொண்டு வரக்கூடிய விஷேசகுணம் படைத்தவள். இந்நாவலில் நிகழும் திருமணங்கள் ஒன்று கூட மகிழ்ச்சியானவையாக இருப்பதில்லை. 


பிராமண ஜாதியின் போலித்தனங்கள், பொய்வேடங்கள், பசப்புகள், பாவனைகளெல்லாம் நாவலின் போக்கில் அவ்வப்போது உணர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதன் முகங்களாக அன்னா ஜோதிடர், அய்யா சாஸ்திரிகளும் உள்ளனர். இவ்வளவு ஏன் சென்னிகராயரே கூட பூஜைபுனஸ்காரர்களில் ஈடுபாடு உடையவர் தான். ஆனால் மனைவியை ஒரு உயிரியாகக் கூட கருதாதச் சமர்த்துப்பிள்ளை.  குழந்தைப் பெற்றுக் கொள்வதற்காக, அவளுடன் படுப்பதற்காக நஞ்சம்மாவின் அருகில் அவன் வருவான். வற்புறுத்துவான். சோறுண்பதற்காக வீட்டிற்கு வருவான். இரண்டுமே குறைவின்றி நிறைவேறும் யோகசாலி அவன். எத்தனைப் பேருக்குக் கிடைக்கும் இந்தப் பேறு..!



நாவல் முழுதும் துயரங்களின் அணிவகுப்பு போல காணப்பட்டாலும் எந்த உணர்ச்சியிலுமே நின்று பேசாமல் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருக்கிறார் பைரப்பா. எவர் மீதும் எதன் மீதும் கருணையற்ற இந்த தன்மையால் தான் இந்நாவல் மேன்மையை அடைகிறது என நினைக்கிறேன். அதனால் தானோ என்னவோ செயற்கையான ஒரு சம்பவமோ இட்டுக்கட்டப்பட்ட நிகழ்ச்சியோ நாவலில் இல்லை. அந்தச் சிறு கிராமத்து மனிதர்கள் ஒவ்வொருவரையும் இயல்பாகத் தனித்தனியாகத் தீட்டிக் காட்டியிருக்கும் திறனையும் மிகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.


நாவலில் மகிழ்ச்சியின் நீராடல்களே இல்லையா என்று கேட்கத் தோன்றலாம். நஞ்சம்மாவும் அவள் பெறும் மூன்று பிள்ளைகளும் விடியலுக்காக அந்த வாழ்க்கையுடன் மல்லுக்கட்டும் பகுதிகளைத் தான் அதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். துரதிஷ்டம். மூத்த மகனையும் மகளையும் பிளேக் நோய்க்கு தூக்கிக் கொடுத்து விட்டு காரிருளுக்குள் சென்று முடங்கினால் விடியல் எனும் சொல் கூட வெகு தூரம் போய் ஒளிந்து விடுமல்லவா..!


நாவலில் நஞ்சம்மா போல நன்மையின் இரு வேறு முகங்களில், பிறரிடம் இரந்துண்டு கோவிலில் வசிக்கும் மாதவய்யா முதலாமவர். இவர் நஞ்சம்மாவுக்கு தந்தை போல அவளது துயர்கள் அனைத்திலும் தோளுக்கு தோளாகவும் மனதிற்கு மனமாகவும் நின்று அவளைத் தாங்கிப் பிடிப்பவர். தன் மாமனாருடன் ரகசிய உறவென்று குற்றஞ்சாட்டப்பட்டு தனித்து வாழும் நரசம்மா இரண்டாமவள்.


மூன்றாவது மகனான விசுவனுக்காக உயிரைப் பிடித்துக் கொண்டு வாழும் நஞ்சம்மாவையும் பிளேக்  நோய் கொண்டு போய்விடுகிறது. நஞ்சம்மாவின் இறப்பிற்கு நிச்சயமாக பைரப்பா கலங்கியிருப்பார் என எழுதுபவனாக என்னால் துணிந்து சொல்ல முடியும்.


அனாதை போல மாமா வீட்டில் சித்திரவதை அனுபவிக்கும்  விசுவனைக் கூட்டிக் கொண்டு மாதவய்யா ஊரை விட்டுச் செல்வதுடன் நாவல் நிறைகிறது.


சகோதரர்களின் மூடத்தனத்தின் உச்சத்தால் தான் இவ்வளவும் நடக்கிறது எனச் சொன்னால் நம்பச் சிரமமாத் தான் இருக்கும். நாவலின் தொடக்கத்தில் கங்கம்மா, மகன்களைப் படிக்கச் சொல்லி வற்புறுத்தப் போக மூவருக்குள்ளும் வசவுகளுடன் வாக்குவாதம் முற்றுகிறது. கோபத்தில் வீட்டு ஓடுகளை மகன்கள் இருவரும் உடைக்கின்றனர். பிறகு பயந்து கொண்டு தோட்டத்தில் ஒளியும் போது புகைக்கும் பீடிக் கங்கால் மொத்தமும் பற்றி எரிகிறது. தண்டத் தொகையாக வீடு,  வாசல், நிலபுலன்களை சிவகவுடா எழுதி வாங்குகிறார்.


இப்படி நாவல் தொடங்கிய பத்துப் பக்கங்களுக்குள்ளாகவே வீழ்ச்சி ஆரம்பித்து விடுகிறது. இந்தளவு மூடர்களாக இல்லாமல் அவர்கள் இருந்திருக்கலாம். அவளும் கம்பி காய்ச்சி சூடிழுக்க முயற்சிக்காமல் இருந்திருக்கலாம். அதற்குப் பயந்து ஓடி ஒளியாமலும் இருந்திருக்கலாம். அவர்கள் குடித்த பீடி சகலத்தையும் எரிக்காமலும் இருந்திருக்கலாம். ஒன்று நடந்து அது மோசமான பலனை அளித்தப் பிறகு அப்படி நடந்திருக்கலாம் இப்படி ஆகியிருக்கலாம் என ஆற்றாமையில் புலம்பி என்ன பயன்? அப்படியெல்லாம் நடந்தால் தானே வாழ்க்கை..! அந்த வாழ்க்கையிலிருந்து தானே சிறந்த படைப்பு.

 *************************


 யு.ஆர். அனந்தமூர்த்தியின்சூரியனின் குதிரை


களங்கமின்மையின் தூதுவர்கள்

குழந்தைகளுக்கும் பேதைகளுக்கும் கிறுக்கர்களுக்கும் இடையில் வேறு மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிக் கூறியதும் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக, விடலைத்தனமான மொழியில் சொல்ல வேண்டுமெபெரிய குழந்தைகள்எனலாம். உலகியலின் கணக்குகளுக்கு அப்பாற்பட்ட ஆத்மாக்கள். இவ்வுலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் குறுக்குவழிகளில் (புத்திசாலிகளின் வழி அது)அர்த்தப்படுத்திக் கொள்ளத் தெரியாமல், நேரடியாகப் பொருள் கொண்டு விடுகிற அபலைகள். லெளகீகத்திற்கு எதிர்திசையில் நின்று சிரிப்பவர்கள் என்பதால் இவ்வுலகினரால் கேலிக்கும் கிண்டலுக்கு எளிய இலக்காக விளங்குபவர்கள். சகமனிதர்களின் நாவின் விஷம் தீண்டும் போது கூடச் சட்டெனப் புரியாமல் அது நஞ்செனத் தெரிந்தப் பின், அடுத்த நாளை முந்தைய நாள் போலவே வியப்புடனும் சிறுவனின் குதூகலத்துடனும் எதிர்கொள்பவர்கள். இந்த மனிதர்கள் இவ்வுலகின் அந்நியர்களா? இல்லை விலக்கப்பட்டவர்களா? மனிதனை அவனது உண்மையான குணம் நோக்கி இட்டுச் செல்ல வந்தவர்களா? ஆறாவது விரல் போல பயனில்லாதவர்களா? இக்கேள்விகளுக்கும் மேலும் திரளும் உபகேள்விகளுக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப ஆம் என்றோ இல்லை என்றோ பதில் கூற வேண்டியதிருக்கும். இதில் முதன்மையும் சுவாரஸ்யமுமான விஷயம் என்னவென்றால் கேள்வி எழுப்புபவரும் பதில் அளிப்பவரும் நின்று கொண்டிருக்கும் உலகம் ஒரே மாதிரியானது. நெளிவு சுளிவுகள், தந்திரங்கள், ஏமாற்றுகள், துரோகங்கள், பழிவாங்கல்கள் இன்னபிறவற்றை அடியோட்டமாகக் கொண்டது. இவற்றிற்கு அப்பால் துளியும் சம்பந்தமற்ற உலகின் பிரதிநிதிகளாக உலவுபவர்கள் கபடற்ற அம்மனிதர்கள். அவமானங்களோ கடினமான சூழ்நிலைகளோ இவர்களை ஒன்றுமே செய்வதில்லை. அலட்சியத்தால் இவர்களை ஒதுக்கும் போதோ துச்சமாக நடத்தும் போதோ கூட அதை கிரகித்துக் கொள்ளத் தெம்பின்றி அப்படி நடத்துபவர்களிடமே அன்புடன் சென்று நிற்பார்கள். ஒருவரது உணர்ச்சிச்சுழிப்புகளுக்கேற்ப இம்மனிதர்களை உபயோகப்படுத்திக் கொள்ள முடியும். இவர்களைப் போன்றவர்களே இம்மண்ணிற்கு நீராகிறார்கள். ஒளியாகத் திகழ்கிறார்கள்.


இவர்களை இலக்கியம் எப்படி கையாண்டிருக்கிறது? தஸ்தயேவ்ஸ்கியின் உலகம் இந்த வெகுளிகளை கடவுளுக்கருகில் கொண்டு போய் வைக்கிறது. அவரதுஇடியட்நாவலின் நாயகனான பிரின்ஸ் மிஷ்கின்அன்றலர்ந்த மலர்’ போன்ற ஒருவன். இங்குள்ள நியதிகள் என்னவென்றே அறியாதவன். பழகுபவர்களிடமெல்லாம் குறிப்பிடத்தக்கப் பாதிப்பை உருவாக்குபவன். ஒவ்வொருவரது இருப்பின் இழிநிலையையோ சுயநல வாழ்க்கையையோ திறந்து காட்டி விட்டு குற்ற உணர்வை தோற்றுவிப்பவன். ‘கரம்ஸோவ் சகோதர்கள்நாவலின் அல்யோஷா கூட கடவுளின் குழந்தை போன்றவன் தான். பாவம் செய்பவள் எனப் பிறரால் தூஷிக்கப்படும்குற்றமும் தண்டனையும்சோனியா இந்த வகைக்குள் வர மாட்டாள் என்றாலும் பிறர்க்காக தன்னை இழக்கும், வதைத்துக் கொள்ளும் உயரிய மானுட நிலையால் விகசிப்பவள். அடுத்தடுத்த உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். தமிழில் இவ்வாறு எழுதப்பட்ட பாத்திரம் என்று ஜெயகாந்தனின்ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்நாவலின் ஹென்றியையேச் சுட்ட முடியும். புதிராகவும் அன்னியமாகவும் விளங்கும் அவனது நடவடிக்கைகள் சிறுகச் சிறுக சுற்றிலுமிருப்பவர்களை எப்படி மாற்றி அவர்தம் அகத்தில் நல்விளைவை உண்டாக்குகிறது என்பது நாவலின் ஆதார ஸ்ருதி எனலாம். ஹென்றி அந்நியன் என்பதாலேயே அவனுடன் மிக நெருங்கி ஒட்டிக் கொண்டு விட முடியாது. ஆனால் ஹென்றிசோப்பெங்கப்பா’ என மெய்மறந்து உற்சாகம் தொற்ற ஆடும் போது தேவராஜன் போல உடன் சேர்ந்து ஆடி, அவ்வுலகை சிறிது நேரம் எட்டிப் பார்த்து விட்டு வரலாம். அவ்வளவு தான்.


கன்னட இலக்கியத்தின் நவீனத்துவ முகங்களில் மிக முக்கியமானவரான யு.ஆர். அனந்தமூர்த்தியின்சூரியனின் குதிரைஎனும் கதை மேற்சொன்னவற்றிற்கு உதாரணமாகத் திகழ்கிறது. மிகச் சிறந்த கதையும் கூட. ஏறக்குறைய நாற்பத்துச் சொச்சம் பக்கம் நீளும் இக்கதையை நெடுங்கதை எனச் சொல்வதே பொருத்தமானது. கிளைக்கதைகளுக்குள் பயணித்திருந்தால் குறுநாவல் என்றிருப்பேன்.


ஹடேவெங்கடனை பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஊரில் பார்க்கிறார் அனந்து. கிட்டத்தட்ட சுயவாழ்க்கையின் அத்தியாயம் போலிருப்பதால் அனந்துவே கதையை விவரிப்பவராக உள்ளார். உடனே கதைசொல்லி என நினைத்து விட வேண்டாம். தமிழில் அதிகமாக, தவறாகப் பயன்படுத்தப்பட்ட சொல் அது. வெங்கடன், அனந்துவை விட 5 வருடங்களுக்கு மூத்தவன் என்றாலும் பால்யகால நண்பன்.  வெகுளியும் உலகம் மொத்தமுமேபால் போன்றதுஎனவும் நம்பும் பேதை வெங்கடன். எளிதாக அவனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒருவர் தன்னை பயன்படுத்துகிறார் என்பதுவும் அவனுக்குத் தெரியவும் தெரியாது. ஜோதிடர் என அழைக்கப்படும் வெங்கடனுக்கு ஊரில் நன்மதிப்பேதும் இல்லை. சொல்லிக் கொள்ளும்படி வேலையும் இல்லை. எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விடுவதில் கை தேர்ந்தவன் அவன். அவன் கைபடாத பெருந்’தலை’களே சுற்று வட்டத்தில் இல்லை எனச் சொல்லி விடலாம்.  பென்ஷன் கிடைக்கும் என்கிற நப்பாசையோ கானல் நீர். சிறுவயதிலேயே, பள்ளி செல்லும் போதே மணம் முடித்து வைக்கப்பட்டவனுக்கு ஒரு மகனும் மூன்று பெண்பிள்ளைகளும். தந்தைக்கு முற்றிலும் எதிரானவன் மகன். ரவுடித்தனங்களுடன் அடங்காமல் திரியும் சுப்பன் தந்தையையே அடிக்க பாய்பவன். அது பற்றி வெங்கடனுக்கு அந்த நிமிட அச்சமும் வருத்தமும் இருந்தாலும் கூட உடனே மீண்டு விடுகிறான். சுப்பன் தன் நடத்தை வழியாக ஊராருக்கு விடுப்பது ஒருவித எச்சரிக்கை. அப்பாவை போல இல்லை நான். உங்கள் பாட்சா என்னிடம் பலிக்காது என்பது போல. நற்குணவானுக்கு ஊதாரித்தனத்துடன் செல்வங்களை அழிக்கும் மகன் பிறப்பதில்லையா? அது போல. வீட்டின் நல்லியல்புகள் கசந்து அதற்கெதிராகக் களங்கத்தின் சேறு மீது சுப்பன் போன்றவர்களுக்கு உவகை ஏற்படுகிறதோ என்னவோ..! அனந்து இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒருவிதத் தாக்கத்தை அனந்து மீது உருவாக்குகிறான் வெங்கடன். கள்ளமற்ற சுபாவம், உடனிருப்பவனை (லோகாதாய அறிவும் கற்ற கல்வியின் படிப்புமிருந்தாலும்) அசைப்பது நியாயம் தானே..!


வீடு பிக்கல் பிடுங்கல்களுடன் கிடந்தாலும் வெங்கடனுக்கு அதெல்லாம் மனதிற்குள் செல்வதேயில்லை. மனைவியின் கடுஞ்சொல் கூட அன்பின் இன்னொரு வடிவம் என்றே கருதுகிறான். அது உண்மையும் கூட. ஏதுமறியா தெய்வத்தை கோபத்தால் நிந்திப்பது கூட ஆராதிப்பதன் மற்றுமொரு உரிமை பாராட்டல் அன்றி வேறென்ன..!




அனந்துவைக் கண்டதும் வெங்கடன் மனைவி அமைதியாகி விடுகிறாள். வீட்டிற்கு அழைத்து வரும் போதே அது வெங்கடனுக்கு தெரியவும் செய்கிறது. வரும் வழியில் இருவருக்குள்ளும் நிகழும் உரையாடல்களில் இருவேறு உலகத்தின் பிரதிநிதிகளைக் காண முடியும். அனந்துவுக்கு சொற்களிலுள்ள உறுதி வெங்கடனிடம் இல்லை. ஆனால் தன்னையுமறியாமல் அனந்து வெங்கடனிடன் பக்கம் செல்கிறான். அவ்வழியில் தான் வெங்கடன் மெய்மறந்து நின்று ஒன்றைக் காட்டித் தருகிறான், ‘சூரியனின் குதிரை. (வெட்டுக்கிளிக்கு கன்னடத்தில் வழங்கும் பெயர்). வெட்டுக்கிளியின் முதுகு மேல் சூரியனின் கதிர்.  வெங்கடனுக்கு இவ்வுலகு அற்பம் போலவும் அக்காட்சி நிகரற்றது போலவும் தோன்றுகிறது. வெங்கடனை எண்ணி அனந்துவுக்கு சங்கடமாகவும் ஒரு விதத்தில் தன்னை விட உயர்ந்தவன் என்றும் தோன்றுகிறது.


சொற்ப வருமானத்தில் அனந்துவுக்கு சிறந்த விருந்துபசாரம் நடக்கிறது. இரவில் எண்ணெய் குளியல். ஆடம்பரமான வகையில் (அவ்வீட்டு நிலைமைக்கு) வெங்கடன் அனந்துவை குளிப்பாட்டுகிறான். இதற்கு நடுவில் சுப்பனின் அட்டகாசங்கள். பெண் பிள்ளைகள் உயிர் போல காத்து வரும் தோட்டத்தை நாசம் செய்கிறான் சுப்பன். பெண்களுக்கென்று வைத்திருந்த வெள்ளி சாமான்களை திருடி விற்றுத் திரிகிறான். இவையெல்லாம் ஓரிரவில் தெரிய வருகிறது. அது அனந்து அங்கு தங்கும் இரவு. வெங்கடனது மனைவியின் தீராத கண்ணீர், மகள்களின் இருண்ட முகங்கள், மகனின் மிரட்டல்கள்.


மறுநாளின் அன்றாடம் ஏனோதானோவென்று தொடங்குகிறது. எவரிடமும் சுரத்தேயில்லை. இவற்றால் வெங்கடன் பாதிக்கப்பட்டிருப்பான் என அனந்துவுக்குத் தோன்றுகிறது. ஆனால் தோட்டத்தையொட்டிய வேலிக்கருகில் அசையாமல் நிற்கும் வெங்கடனைப் பார்க்கிறான் அனந்து. சூழ்நிலை மறந்து உறைந்து போய் எத்தனை நேரமாக என்பது தெரியாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறான் வெங்கடன். அங்கு அசையாது அமர்ந்திருக்கிறது, ‘சூரியனின் குதிரை’. அனந்தனுக்கு வியப்பு. இத்தனை களேபரங்களும் வெங்கடனை ஒன்றுமே செய்யவில்லையா..! வெட்டுக்கிளிக்கு மனதைப் பறிகொடுத்து நிற்கிறானே இந்த வெகுளி..!  சிறிது நேரத்துக்குப் பின் குதிந்தெழுந்து செல்கிறது அக்குதிரை. அப்பாவித்தனமான சிரிப்புடன்சூரியனின் குதிரைஎன்கிறான் வெங்கடன். அவன் கண்களில் அனந்துவின் கண்களும் கலக்கின்றன. அச்சொல்லை வாங்கி திரும்பி அனந்து சொல்கிறான் ,


..சூரியனின் குதிரை..’


ஒருபோதும் பிறரால் வெங்கடனாக மாறமுடியாது. ஆனால் சற்று நேரம் அப்படி வாழ முடியும். ’இடியட்மிஷ்கினோ அல்யோஷாவோ ஹென்றியோ வெங்கடனோ சிறுகச் சிறுக ஒரு மனிதனுக்குள் மெல்ல கரைய முடியும். அப்படி முடியாவிட்டாலும் அவர்களது உலகின் பாதை நோக்கி சில எட்டுகளேனும் வைக்க முடியும். எவ்வளவு வாசித்தாலும் தன் அடிப்படை குணத்திலிருந்து மாறாத இலக்கியக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இலக்கியம் லெளகீக வெற்றிக்கானத் துருப்புச் சீட்டு. அவர்களை விடுங்கள். மாறாக இது போன்ற இலக்கியங்களை வாசிப்பது தன்னை மேம்படுத்தவும் தான் நிற்கும் நிலையை உணர வைக்கவும் உதவும் என நம்புகிறவர்கள் இருப்பார்கள் இல்லையா..! அவர்களுக்காகத் தான் இலக்கியம் படைக்கப்படுகிறது. அவர்களே வெங்கடனுடன் நடந்து செல்லவும் எண்ணெய் குளியலில் தன் தலையைக் கொடுக்கவும் முன்வருபவர்கள். எனவே பாக்கியசாலிகள்.  கொடுத்து வைத்தவர்களும் கூட.


(சூரியனுடைய குதிரையு. ஆர். அனந்தமூர்த்தி- தமிழில் : டி.மணியன் : இருபது கன்னடச் சிறுகதைகள்: சாகித்ய அகாதமி. முதல் பதிப்பு : 2002.)


சமீபத்தில் கே.நல்லதம்பியின் மொழியாக்கத்தில் இந்நெடுங்கதை வெளிவந்திருக்கிறது.