கதவு எண் 13/78
அவனுக்கு மூத்திரம் முட்டிக்கொண்டிருந்தது. அதற்காகத் தொடைகளில் இரத்தம் கட்டுமளவிற்கு நடந்திருந்தான். துளை தேடி அலையும் நாயைப் போல அந்நகரத் தெருக்களில் ஏறியும் இறங்கியும் சலித்திருந்தான். இன்னும் சற்றைக்கெல்லாம் உள்ளாடைக்குள் சொட்ட ஆரம்பித்துவிடும் எனும் பீதி, புடைத்திருந்த அடிவயிற்றி லிருந்து சன்னமாக இறங்கி, கால்களை நடுக்கமுறச் செய்தது. ஆசுவாசப் படுத்திக்கொள்ள நின்ற கட்டிடத்தின் நிழல், எதிர்க் கட்டிடத்தின் முதல் தளம் வரை - ஒரு கிழவி கால் நீட்டியதைப் போல மடிந்து நீண்டு கிடந்தது. அதன் இரண்டாம் தள ஜன்னலுக்கருகில் அமர்ந்திருந் தவளின் கண்கள் இவனையும் கோப்புகளையும் மாறி மாறிப் பார்த்தன. அமர்ந்தபடியே எட்டித் திரும்பிக் கோப்பை ரேக்கில் சொருகியபோது, இடுப்பின் வழ வழப்பில் வெயில் பட்டுக் கண்ணைக் கூசியது. தன்னைத் திடப்படுத்திக்கொண்டு பார்வையை வேறு பக்கம் திருப்பியபோது, ஒரு சந்திலிருந்து எட்டிக் குதித்த கிழவன், கால்களால் குழிபறிப்பவனைப் போல நிலத்தைத் தேய்த்துத் தேய்த்துச் செல்வதைக் கண்டான். அந்த இடத்தை நோக்கி மெதுவாக அடியெடுத்துவைக்காமல் தரையோடு உரசியபடி நடந்தான். அவனுடைய கால்விரல்களின் அச்சுகள் பதிந்து வெளிறிக் கிடந்த செருப்பு, தரையில் உப்புக் காகிதத்தைத் தேய்ப்பது போன்ற ஒலியை எழுப்பியது.
அவ்விடத்தை நெருங்க நெருங்க நாற்றம் ஒரு பழகிய நாயைப் போல வந்து முகர்ந்துவிட்டு மேலேற ஆரம்பித்து விட்டது. அந்த இடமே சொதசொதவென்றிருந்தது. அச்சந்தினூடாக அடுத்த தெருவை அடைய முடியாதபடி நான்கைந்து அடிகளுக்கடுத்துக் காய்ந்த முட்களும் அதற்கடுத்து பெரிய கற்களும் கிடந்தன. சீரின்றி அடுக்கப்பட்டிருந்த அவற்றி லிருந்து சரிந்த இரண்டு கற்கள் ஈரத்தோடு கீழே கிடந்தன. இடுப்பில் கைவைத்து நின்றால் கைமுட்டிகள் சுவரைத் தொடு மளவுக்கு அதன் அகலம் இருந்தது. கால் பெருவிரலால் தரையை அழுத்தமாக ஊன்றிச் சற்று மேடாகவும் சற்று சுத்தமாகவும் -அப்படித்தான் அவன் நம்பினான் - இருந்த இடத்தை நோக்கிக் குதித்துச் சென்றான். அச்சிறு அதிர்வில் ஈக்கள் மாறிக் கலைந்து பறந்து வேறு இடங்களில் அமர்ந்துகொண்டன. அதற்குள்ளாகவே தங்கள் பழைய இடங்களை அவை மறந்து விட்டிருந்தன. இப்போது நாற்றம் அதிகமாக இம்சிக்கத் தொடங் கிற்று. தன் வெறுப்பனைத்தையும் திரட்டி, நாற்றத்தின் மீது காறி உமிழ்ந்தான். பழுப்பும் மஞ்சளும் கலந்த கோழை காலருகில் விழுந்தது. சற்று உற்றுப் பார்த்துவிட்டுத் தன் மூத்திரத்தால் அதைக் கரைக்க ஆரம்பித்தான். உடல் லேசாகிக்கொண்டே வந்தது. அக்கோழை தன்னைப் பல பிசிறுகளாக ஆக்கிக் கொண்டிருந்தது. அப்பிசிறு தன் எண்ணற்ற கைகளின் மூலம் அங்கிருந்து நீந்தி வெளியேற முயற்சித்துப் பிறகு முடி யாமல் பொங்கிய நுரையில் திணறிக் கரைந்தது. சட்டென் அவனை நிலைகுலைய இடித்துத் தள்ளிக்கொண்டு வாயின் ஓரம் கங்கு எரிய ஒருவன் நுழைந்தான். சுவரைப் பிடித்து அமர்ந்தவன், தொடைகளில் மூத்திரம் தெறிக்கும் பிரக்ஞை யின்றிப் புகைவிடுவதில் லயித்திருந்தான். அது நெளிந்து மேலேறிச் சுவரொட்டியை மங்கலாக மறைத்துத் தாண்டிக் கலைந்தது. மீண்டும் அச்சுவரொட்டியை ஆவலோடும் குறுகுறுப் போடும் கள்ளத்தனமாகப் பார்த்தான். தன் வயதோடு அதன் சரிபாதியையும் சேர்த்துக் கடந்த, சராசரிக்கும் சற்று பருத் திருந்த ஒருத்தி குளித்துக்கொண்டிருக்க, அவளைப் பின்புற மிருந்து ஒருவன் நெருங்கிக்கொண்டிருந்தான். அக்குளியலில் நனைந்துபோயிருந்த வெள்ளாடையில் தெரிந்த அவள் முலை களின்மீது ஒட்டப்பட்டிருந்த காகிதத்தில் திரையரங்கின் பெயரும் காட்சிகளுக்கான நேரங்களும் ஒட்டப்பட்டிருந்தன.
2
கதவின் முன் நின்றுகொண்டு தன் ஆள்காட்டி விரலைக் கொக்கிபோல மடித்துத் தட்டினான். அது தகரக்கூரைமீது மழைத்துளி விழும் சத்தத்தை ஒத்திருந்தது. எப்பதிலும் கிடைக்கப் பெறாதவன், விசையோடு தள்ளித் திறந்து நுழைந்தான். அடி பட்ட மிருகம் வலியால் சுத்துவதுபோல அது ஓசை எழுப் பிற்று. பின் அதுவாகவே சுருதி பிசகிய கணத்தில் தந்திக் கருவியிலிருந்து எழும் சப்தத்தின் சாயலோடு தன்னைச் சாத்திக் கொண்டது. அறையெங்கும் நிரம்பியிருந்த இருள், வழிந்து பாதத்தைத் தொட்டது. நீர் இறைக்கும் சத்தம் மட்டும் விட்டு விட்டுக் கேட்டபடியிருந்தது. அவ்விருளை முடிந்த மட்டும் ஊடுருவிப் பார்த்தான். பிறகு கண்களைக் கால்களுக்கு நகர்த்தி, சுவரின் மீதோ எப்பொருளின் மீதோ மோதாமல் தரையை உரசியவாறே, அடுத்த அடியை மனத்தில் தீர்மானித்து வெகு நிதானமாகக் கால்களால் ஊர்ந்தபடியே அவ்வறையைக் கடந்தபோது, பரந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான். கண்ணாடி ஓட்டிலிருந்து இறங்கிய ஒளி சிறு இடத்தை மட்டும் வெளிச்ச மாக்கியிருந்தது. அதற்கருகில் அதற்கருகி அமர்ந்து மதுரம் குளித்துக்கொண் டிருந்தாள். சதை போட்டிருந்த உடலில் முன்பைவிடவும் வனப்பும் மெருகும் கூடியிருந்தன. துவைத்து முறுக்கிப் பிழிந்து வைக்கப்பட்ட துணிகள் பாத்திரத்தில் அடுக்கப்பட்டிருந்தன. கைகளில் நுரைக்க ஆரம்பித்த சோப்பை வைக்கத் திரும்பிய போது, இவன் நிற்பதைப் பார்த்துச் சிரித்தபடியே முகம் முழுக்கத் தேய்த்துக்கொண்டாள். வாசனை நாசியில் ஏறி, உடலில் பரவ, கண்களை மூடி அவ்வாசனையையும் அவள் உடலையும் பிரித்துவிட முடியுமா என்று யோசித்தபடியே நின்றிருந்தான். நீரின் சலசலப்பில் கவனம் திரும்பியபோது, அவள் முகத்தைக் கழுவிக் கொண்டிருந்தாள். அது உடலி லிருந்து வழிந்து பாதத்தின் அடியில் போய்த் தேங்கிற்று. வெகுநேரம் அலைந்து இப்புதிய வீட்டைக் கண்டுபிடித்து வந்திருப்பதன் ஆச்சர்யத்தைச் சொல்லிக்கொண்டிருந்தபோது, கயிற்றுக் கட்டிலில் முனகும் ஒலி கேட்டது. பார்வையை அப்பக்கமாகத் திருப்பியவுடன் கட்டிலில் உடல் மெதுவாக அசைந்தது. அவனை நெருங்கி அடையாளம் கண்டு சட்டையைப் பற்றித் தூக்கியபோது திமிறி விடுவித்துக்கொண்டு ஓடினான். இவன் மிகுந்த கவனத்துடன் வந்த இடங்களையும் முனைகளையும் அனிரயாசமாகக் கடந்து எப்பொருளின் மீதும் மோதாமல் கதவை ஓசையோடு அறைந்துவிட்டு ஓடினான். அவளை நோக்கி மூச்சிறைத்தபடியே வந்தபோது பயந்து நின்றிருந்தவளின் உடலிலிருந்து ஈரம் காய்ந்துகொண்டே வந்தது. அவள், மழை முடிந்து அடிக்கும் வெயில்போலப் பளிச்சென்றிருந்தது அவன் மூச்சுக் காற்றில் சூட்டைக் கிளப் பியது. இவனுடைய இம்சைகளும் கேலியும் அதிகமென்றும், சமயங்களில் மிரட்டிப் பணம் பறித்துவிடுகிறான் என்றும் புகாரை அடுக்கினாள். ஈரம் உலர்ந்து குளிர்ச்சியோடிருந்த அவள் கையின் மீது தன் கையை இதமாக வைத்து, கண்களை மெதுவாக மூடித் தலையை வலத்திலிருந்து இடப்பக்கம் லேசாக வெட்டி அசைத்தான். அவன் பார்வை ஒட்டிக்கிடந்த ஆடையை வெறித்துக்கொண்டிருந்தது. மௌனத்தின் காரணம் கேட்ட போது, அவன் சிரிக்க முயன்றது சுன்னத்தின் நரம்பொன்று தவறாக இழுத்துக்கொண்டதுபோல இருந்தது. சட்டென, அவள் அவனுடைய கையைப் பற்றி உள்ளறைகளுக்குள் இழுத்துப் போனபோது ஒட்டிக்கிடந்த ஆடையினூடாகப் பின்புறம் அசைவதைக் கண்டான். ஆடையிலிருந்து சொட்டுச் சொட்டாக ஒழுகும் நீரைப் பார்த்தபடியே அதன் பின்னே உள்ளறைகளை நோக்கிப் போய்க்கொண்டேயிருந்தான்.
3
வெடித்த சிரிப்பிலிருந்து எழுந்த புகை, சுவரொட்டியை மறைக்க, பதற்றம் தொற்றக் கவனம் திரும்பியபோது, உள்ளே நுழைந்தவன் இன்னும் வெளியேறாமல் நின்றுகொண்டிருப் பதைக் கண்டான். அவன் சுவரொட்டியையும் குறியையும் மாறி மாறி - முகத்தில் ஒருவிதக் கேலி தொனிக்கப் பார்த்தபடி யிருந்தான். ஒன்றுக்கு நின்றுபோயிருந்த பிரக்ஞையின்றிக் குறியைப் பிடித்திருந்த விரல்களின் இடைவெளி அதிகமாகி யிருப்பதை உணர்ந்து, சட்டென உதறி உள்ளே திணித்துக் கொண்டு வெளியே குதித்தான். ஈக்கள் தூசிகள்போல மேலெழுந்து இறங்கின. இனி, இவன் கண்ணில்பட்டுவிடவே கூடாதென முடிவெடுத்துச் சாலையை அடுத்த கணத்தில் தொட்டு நுழைந்துவிட வேண்டும் எனும் வெறி தலைக்கு ஏற, கைகளை வழக்கத்திற்கு மாறாகக் காற்றில் வீசியடித்து அவனுடைய நிழலை அவனே மிதித்து துவம்சம் செய்தவாறு நடையில் வேகத்தைக் கூட்டிக்கொண்டே சென்றான்."
4
சாலையெங்கும் ஜனத்திரள் கலைந்தும் பின்னிக்கொண்டும் அலைந்துகொண்டிருந்தது. ஓரக்கடைகளின் சதுரங்களைத் தாண்டித் தொங்கிக் கொண்டிருந்த பத்திரிகைகள் அருகிலிருந்த பழக் குலைகளுக்குத் தம் நிழலைத் தந்துகொண்டிருந்தன. அரக்கத்தனமாக அடித்துக்கொண்டிருந்த வெயிலில் மூச்சிறைக்க வந்தபோது, அது சாலையை உருக்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.
அன்று மிதமான வெயில் அடிப்பதை அந்தச் சிறிய வீட்டின் பெரிய ஜன்னலின் வழியே பார்க்க முடிந்தது. முன்னிரவில் பெய்த பெருமழையில் சுவர்கள் ஓதத்தால் ஈரம் காயாமல் விழுந்துவிடும் பலவீனத்தோடு நின்றுகொண் டிருந்தன. வீட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மறுமூலைக்குக் குறுக்குமறுக்காக ஓடிய இரும்புக் கம்பியில் துணிகள் உலரப் போடப்பட்டிருந்தன. அவற்றைச் சற்றே விலக்கியபோது, யசோதா சோர்ந்து கண்களைத் திறந்து மல்லாந்து படுத்துக் கிடந்தாள். பூஞ்சையான ஒடுங்கிய உடம்பின் வெள்ளை நிறம் மஞ்சளாக வெளிறிப்போயிருந்தது. ஈர மணலில் பறித்த குழிபோல, கழுத்து எலும்புகள் பளிச்சென்று துருத்திக்கொண்டிருந்தன. முன்பு காதலித்துத் திரிந்த நாள்கள் கண்களுக்குள் ஓடி மறைந்தன. அவனைப் பயம் தொற்றிக்கொண்டது. விலகிக் கிடந்த ஆடையி னூடாக வயிற்றைக் கூர்ந்து பார்த்தபோது, அது விலா எலும்பிற் கடியிலிருந்து மெதுவாக சற்று மேலேறிவந்து பட்டென்று உள்ளொடுங்கிக் கொண்டது. மூச்சு விடுவதை உறுதிப்படுத்திக் கொண்டது சற்றேனும் அவனுக்குத் தெம்பளித்தது. அந்த உடம்பு மற்றொரு உயிரைச் சுமந்திருப்பதும் அதை இன்னும் எட்டு மாதத்தில் பெற்றெடுக்கப் போவதையும் நினைத்தபோது, அச்சம் மனத்தைக் கவ்வியது. அவளுக்காக வாங்கி வைத்திருந்த இட்லிப் பொட்டலத்தை ஈக்களும் எறும்புகளும் மொய்த்துக் கொண்டிருந்தன. தன்னைத் திரும்பிப் பார்ப்பதற்குள் அங்கிருந்து சென்றுவிட விரும்பினான். ஏனென்றால் அவனுடைய வாழ்வைத் தலைகீழாக்கும் என்று நம்பியிருக்கிற லாட்டரிக் கட்டுகளின் முடிவுகள் அவனுக்காகக் காத்துக்கொண்டிருக் கின்றன.
அந்தச் சிறு சந்திலிருந்து விலகி இரண்டு தெருக்கள் தாண்டி வந்த அவனுடைய கால்கள் அங்கிருந்த தேநீர்க் கடைக்குள் நுழைந்து உள்ளுக்குள் இருந்த இரும்பு நாற்காலியை 'வர்'ரென்று இழுத்துப் போட்டு அமர்ந்தன. கசங்கிய நாளிதழைத் தேடியெடுத்து எண்களை நிதானமாகத் தேட ஆரம்பித்தான். ஒவ்வொரு மாநிலமும் அவனைக் கைவிட்டுக்கொண்டிருந்தது. மிகப்பெரிய தொகையை மிகச்சிறிய எண்களின் இடைவெளி யில் இழந்திருக்கிறான். இவ்வளவு வருட அனுபவத்தில் இலக்கங் களைக் கணித்து எண்களைச் சலித்துத் தேர்ந்தெடுத்து உருவத் தெரிந்துகொண்டிருந்தான். அது எண்களின் இடைவெளியைக் குறைத்து தொகையின் அளவை அதிகப்படுத்தியபடியே இருந்தது. இன்று மிகக் குறைந்த எண்களுக்குள் மிகப் பெரிய தொகை கைநழுவிப் போயிருப்பதைக் கண்டான். உடம்பு முழுக்க வேர்க்க ஆரம்பித்தது. கையிலிருந்து உடலில் பரவிய நடுக்கத்தைக் குறைப்பதற்காக எழுந்து வெளியே வந்து தேநீருக்குச் சைகை செய்துவிட்டுத் தெருவை நோட்டம் விட்டான். அவ்வளவாகப் பழக்கமில்லாத அடுத்த வீட்டுக்காரன் அக்கடையை நோக்கி அந்தச் சேறு நிரம்பிய தெருவில், தன் மீது சேறு தெறிப்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் வழுக்கியும் விழாமல் ஓடிவந்து கொண்டிருப்பதைக் கண்டு திகைத்து நின்றான். அவனோ, கைகளைப் பிடித்து அவன் மீது பாதி சாய்ந்து வலது தோளுக் கருகில் முகத்தை வைத்து மூச்சுக் காற்றைச் சத்தத்தோடு வேகமாகக் கசகசவென்று வெளியேற்றியபடியே இவனுடைய மனைவி மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாகக் கதறினான். பெரும் அலறலுக்குப் பின்னான வினாடித் துளியில் நிகழ்ந்த சாவு. பீதி, முகத்தில் பரவ அப்படியே ஸ்தம்பித்து நின்றான், டீக்கடையின் அகலத்தை முழுவதுமாக மறைத்து முடிந்துவிட்ட சா நின்றவர்கள் வேட்டியை மடித்துப் பிடித்துக்கொண்டு அவன் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருப்பதையும் அவனைப் பிடிக்க முடியாமல் பின்தங்கி விரட்டிக்கொண்டோடிய பக்கத்து வீட்டுக்காரனையும் உறைந்துபோய்ப் பார்த்துக்கொண்டிருந் தார்கள்.
வீட்டின் உள்ளேயும் வெளியேயும் நின்ற சிலைகள் அவ னுடைய பாத ஒலி கேட்டு உயிர் பெற்றுப் பரபரக்க ஆரம் பித்தன. தாமதமாகத் தனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதை ஐந்து மைலுக்கு அப்பாலிருந்த அவளுடைய அம்மாலை அங்கு கண்டவுடன் உணர்ந்துகொண்டான். சுற்றியிருப்பவர். களை விலக்கியபோது, துணி உலரப் போட்டிருந்த இரும்புக் கம்பியை இரு கைகளாலும் இறுக்கமாகப் பிடித்தபடியே யசோதா சுருண்டு இறந்து கிடப்பதைக் கண்டான். வெடித்துக் குமுறிக் குரலெடுத்து அழுதது கேட்டு வெளியில் நின்றிருந் தவர்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழையவும், முடியாதவர்கள் எட்டிப் பார்க்கவும் முயன்று வாசற்படியில் நெருக்கியடித்துக் கொண்டிருந்தார்கள். கைகளைக் கம்பியிலிருந்து எடுத்து நன்றாகத் தரையில் கிடத்தினான். பின்மண்டையின் முடியைப் பற்றி இழுத்து எறிந்த அவளுடைய அம்மா, "புள்ளயத் தொடா தடா! எப்பிடி உருக்கொலஞ்சு கிடக்கறான்னு பார்ரா... பாவி..." என்று ஓலமிட்டவாறு சட்டையைப் பிடித்து உலுக்கி னாள். அவனது சட்டைப் பொத்தான்கள் இருவரது காலடியிலும் தெறித்து விழுந்தன. நிலைகுத்தி நின்ற அத்தனை பார்வை களுக்கும் பயந்து ஒடுங்கிப்போய் மூலையில் சுருண்டுகொண் டான். காரியங்கள் துரிதமாக நடைபெறுவதை எல்லோராலும் புரிந்துகொள்ள முடிந்தது. அக்கம்பியைத் தொட்ட கணத்தில் வலிப்பு நோயின் உச்சபட்ச உதறலில் உடல் துடித்துச் சன்னமாக அடங்குவதுபோல அவள் உயிரும் பிரிந்திருக்கக்கூடும். அப்படி யென்றால் அந்தச் சிசு . உடனடியாக அவற்றை மறந்து அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றான்.
இப்போது சாலையில் கூட்டம் குறைந்து போயிருந்தது. பக்கத்துக் கட்டிடத்திலிருந்து பெருத்த சரீரி ஒருவர் ரப்பர் செருப்பு படிக்கட்டில் ஓசை எழுப்ப இறங்கிவந்தார். அச்சத்தம் அவளுடைய அப்பா குழிமேட்டில் அவனுக்கு நேரங்கொடுக் காமல் கையோயும் வரை அறைந்து கீழே தள்ளியதை நினைவுறுத்தியது.
அவளுடைய துர்மரணத்திற்குப் பிறகு அவனைச் சூழ்ந் திருந்த வெறுமைக்கு ஈடுகொடுப்பது அவ்வளவு சுலபமாயிருக்க வில்லை. அதுவரை கால்கள் தொடக் கூசிய தெருவின் மணலில் அவனுடைய பாதங்களின் தடங்கள் நிறைந்திருந்தன. பெண்களிடம் பேசுவதற்கே தயங்கிய அவன்தான் அவர்களோடு வலிந்து போய் உறவை ஏற்படுத்திக்கொண்டான். பிறகு அவ் வுறவை விலக்க முடியாதவாறு அது அவனை உள்ளிழுத்துக் கொண்டது. கீழ்த்தரமான பழக்கங்களால் உடம்பு குச்சிபோல ஆகியிருந்தது.
சட்டென, சட்டையைப் பிடித்திழுத்த வண்டியொன்றி லிருந்து அதனைக் கிழியாமல் வெளியே எடுத்தபோது அதன் எண்ணைக் கண்டான். அங்கு நீண்ட வரிசையில் ஒழுங்கற்று வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றுக்குள் நுழைந்து செல்வதினூடாக முந்தைய மனநிலையிலிருந்து வெளிவரவும் அம்முகவரியை அடைந்துவிட முடியும் என்றும் நம்பினான். ஒவ்வொரு வண்டியைக் கடக்கும்போதும் அதன் நான்கு இலக்க எண்களைக் கூட்டி அதனை அக் கணிதச் சூத்திரத்தில் கணித்துக் கிட்டிய ஒற்றை இலக்க எண்ணின் பலாபலன்களைப் பற்றி தீவிரமாக யோசனை செய்தபடியே சென்றது சற்றேனும் அவன் மனத்தைச் சாந்தப்படுத்திற்று. அந்த யோசனையினூடாக நான்கு சக்கர நவீன வாகனங்கள் நின்றிருந்த பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தான். புழுதி நிரம்பிய பின்புறக் கார் கண்ணாடி யொன்றில் வரைந்திருந்த இதயத்தைத் துளைத்துச் சென்ற அம்புகளின் இரு முனைகளிலும் எழுதப்பட்டிருந்த பெயர்களி லொன்று இவன் பெயரைக் கொண்டிருந்தது மேலும் மகிழ்ச் சியைக் கொடுத்தது. அப்போது பார்வை திறந்திருந்த மற்றொரு கார் ஜன்னலில் விழுந்தது. அடுத்த அடிக்குத் தயங்கியவனாக நின்றுகொண்டான். பின் இருக்கையில் ஆடைகள் கலைந்து கிடக்க ஒருத்தி தூங்கிக்கொண்டிருந்தாள். இதுவரை பார்க்கக் கிடைத்த மார்பகங்களில் வடிவத்தில் நேர்த்தியையும் அளவில் கச்சிதத்தையும் அது கொண்டிருந்தன. யாரேனும் கவனிக்கக் கூடும் எனும் பயத்தில் அங்கிருந்து நகராமல் சில்லறையைச் சரி பார்ப்பவன்போல் பாவனை செய்து ஜேபியில் விரலை நுழைத்துத் துழாவினான். சட்டை நூல்களின் பிசிறுகள் நகங் களுக்குள் சிக்கிக்கொண்டன. தன்னை நோட்டமிடும் கண்களிட மிருந்து தப்பிக்க - உண்மையில் அவனை யாரும் பொருட்படுத்த வில்லை கடிக்காத செருப்பைச் சரிசெய்பவனாக மாறினான். குனிந்து வாரைப் பற்றி இழுத்துக்கொண்டே உள்ளே பார்வை யைத் திருப்பியபோது, அடித்த காற்றில் ஆடை மேலும் நெகிழ்ந்திருந்தது. அப்போது திறந்திருந்த வலது சாளரத்தினூடாக நடைமேடையையொட்டி இருந்த கடையைக் கண்டான். பாதுகாப்புக் கருதி அவ்வாகனத்தைக் குறுக்காகக் சுடந்து அங்கு சென்றான். வரிசையாக அடுக்கப்பட்டிருந்த பாட்டில் களின் தகர மூடிமீது தன் பைசாவை ஓங்கி வைத்தான். சில கணங்களுக்குப் பிறகு படுதாவை விலக்கியபடி நீண்ட, நடுங்கும் கையை அடுத்து வயோதிக உருவம் வந்து நின்றது.
"வில்ஸ் ஒண்ணு" என்றான்.
அவர் நடுங்கியபடியே எடுத்துக் கொடுத்து மூலையைச் சுட்டினார். அங்கு பாம்பைப் போலத் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றின் நுனியில் கங்கு விட்டு விட்டு எரிந்துகொண்டிருந்தது. அங்கு நகர்ந்து அதற்கு உயிர் கொடுத்து மெதுவாக இழுத்தான்.
உள்ளே சென்று உடல் முழுக்கப் பரவிய புகையைத் திரும்பியபடியே மெதுவாக விட்டபோது, அப்புகையினூடாக ஓர் உருவம் அசைந்து அவனைக் கடந்தது. காரின் பின்னிருக்கை காலியாகக் கிடந்தது. இவன் திரும்பிப் பார்த்தபோது, பிருஷ்டம் தனித்து அசையாமல் உடலோடு இயைந்து அசைய அவள் சென்றுகொண்டிருந்தது மனத்தில் கிளர்ச்சியைத் தூண்டியது. அவசரத்தில் பாக்கிச் சில்லறை கைமாறியபோது அது தவறி பாட்டில்களின் இடையே விழுந்து பலகைகளின் இடைவெளி யில் கீழே விழுவது கேட்டது. அவர் நிரண்டிக்கொண்டே துழாவ ஆரம்பித்தார். அச்சமயத்தில் இவன் வயதையொத்த பெண் ஒருத்தி மொணமொணத்துச் சிரித்து அவளோடு சேர்ந்து கொண்டாள். அவளது ஆடையே இரண்டாவது தோலாக மாறிவிட்டதைப் போல உடலை இறுக்கி நெரித்துக்கொண் டிருந்தது. அவர்கள் இருவரும் சில்லறையைப் பெற்றுக்கொள்ளும் இடைப்பட்ட நேரத்தில் இவனைக் கடந்து சென்றுவிட்டிருந் தனர். காரின் கதவுகள் அறைந்து சாத்தப்படும் ஒலியையும் இரண்டாவது முயற்சியில் கிளம்பத் தயாரான காரின் மெல்லிய ஒலியையும் கேட்டுத் திரும்பினான். அது அலட்சியமாக இவன்மீது கரிய புகையை அலையெனப் பரப்பவிட்டு நகர்ந்து மறைந்தது. அதற்குள்ளாகத் தீர்ந்துவிட்டிருந்த சிகரெட்டை மண்டிய எரிச்சலோடு வீசிக் காலால் அழுத்தி இழுத்தான். அது சிறிய கரிய கோடாயிற்று. அக்கோட்டிலிருந்து உடலைப் பின்னுக்குச் சற்றே வளைந்து எதிரே உற்றுப்பார்த்தபோது இவ்வளவு நேரமும் தேடிக்கொண்டிருந்த கதவிலக்கம் வெயில் பட்டுப் பளபளப்பதையும் அதன் இரண்டாம் இலக்கம் தேய்ந்து போய் இருப்பதையும் நெளியும் கானல் நீரினூடாகக் கண்டு குழம்பினான். இருப்பினும் அவனுடைய கால்கள் தன்னிச்சை யாக அவ்வீட்டின் திசையை நோக்கித் திரும்பின.
5
அவ்வீட்டை அடைவதற்குச் சாலையைக் கடக்க முயன்று திணறிக்கொண்டிருந்தான். அச்சாலையில் ஒவ்வொரு வாகன மும் மற்றொன்றிற்கு மறைமுகமான சவாலை விடுத்தபடியே போட்டியிட்டுக்கொண்டிருந்தது. இவனுடைய மந்தத்தனத் திற்கு நேரெதிரான சுறுசுறுப்பை அது கொண்டிருந்தது. சுற்றிலும் எழுந்த சலசலப்புகளும் கூச்சல்களும் அதிகமாகத் தொந்தரவு செய்தன. சாலையைக் கடந்து அவ் வீட்டிற்குச் செல்வதுதான் ஒரே வழி. அப்போது அசைக்க முடியாதபடி கால்கள் மரத்துப் போயிருந்தன. அவற்றைப் பழைய நிலைக்குத் திருப்பத் தரையில் ஓங்கி ஓங்கி அடித்தான். அவனை அறைந்து தள்ளியதற்குப் பிறகு பெரிய கல்லைத் தூக்கிக்கொண்டு அக்காடு முழுக்கத் துரத்திய அவளுடைய அப்பாவைக் காலடியில் போட்டு மிதிக்கிறோம் என்னும் போதத்தில் இடது முட்டி அளவிற்கு வலது காலை உயரத் தூக்கித் தரையில் அறைந்தான். கடந்து சென்றவர்களின் மிரட்சியான முகங்களிலிருந்த கேள்வியும்: வினோதமும் சில நொடிகளுக்குள் ஒரு கேலிப் புன்னகையில் இயல்பிற்குத் திரும்பின.
அந்த இருவழிச் சாலையில் வாகனங்கள் ஒழுங்கற்றும் கும்பலாகவும் விலகி வழிவிட்டுச் சென்றுகொண்டிருந்தன. ஒரு அசட்டுத் தைரியத்தில் வலப்புறம் கையைக் குறுக்காக நீட்டி, சாலையின் பாதிவரை கடந்துவிட்டிருந்தான். இவன் குறிப்பை ஏற்று வாகனமும் தன் வேகத்தை மந்தப்படுத்தியபடி வந்துகொண்டிருந்தது. இக்குறுகிய நேரத்தைப் பயன்படுத்திப் பின்னே முட்டியபடியே வந்துகொண்டிருந்த மற்றொரு வாகனம் தன் பாதையிலிருந்து ஒடித்து விலகி அதனைக் கடந்துவிட மிதமிஞ்சிய வேகத்தில் வரத் தொடங்கியது. இதைச் சற்றும் எதிர்பாராதவன், அதன் வேகத்தையும் விசையையும் கண்டு பீதியுற்றுக் கால்கள் நடுங்கப் பின்வாங்க நினைத்தான். அதற்குள் அருகில் வந்துவிட்டிருந்த அவ்வாகனத்திடமிருந்து, யானையின் பிளிறலைப்போல எழுந்த ஹாரன் ஒலி சாலையைப் பிளக்க, அது தன்னை நிறுத்த அழுத்திய பிரேக்கின் ஒலியோ பிரம்மாண்டமான 'கிறீச்' என்னும் ஒலியை எழுப்பி, நடுவில் நின்றிருந்தவனைத் தன் பின் சக்கரத்தில் புரட்டித் தூர வீசியது. என்ன நேர்ந்தது என்பதுகூடத் தெரியாமல் தூரப்போய் விழுந்தான். அவன் இரத்தத்தின் மீது அவன் கிடந்தான். உடலிலிருந்து பெருகிய இரத்தம் அவனைச் சுற்றிலும் பரவத் தொடங்கியது. மெதுவாக தலைதூக்கிப் பார்த்தபோது, சாலை யின் திருப்பத்திற்கு முன்பே மறிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட அந்த வாகனத்தை நோக்கிச் சிலரும் இவனை நோக்கிச் சிலரும் ஓடி வருவது தெரிந்தது. கலைந்து ஓடும் உடல்களின் இடை வெளியில் மங்கலாகத் தெரிந்த அவ்வாகனத்தின் எண்ணை மனத்தில் கூட்டிப் பொறிகளில் பதிவு செய்துகொண்டிருந்த போது அவன் கண்கள் மெதுவாக மூடிக்கொண்டன.
(காலச்சுவடு, ஆகஸ்ட் 2005)
ஓவியங்கள் : நன்றி : பி.ஆர்.ராஜன்.
No comments:
Post a Comment