Wednesday, July 8, 2015

மனதின் முடிவுறாக் கோலம்


                   மனதின் முடிவுறாக் கோலம்

        
         .....
      .....
      மெல்லக் கனவிலாழும்
      பெண்களின் கண்களில்
      மினுங்குமப்
      பொன்னொளிர் மிளிர்வுகள்                                 
      ஆடவர் நாம்
      ஒரு போதும் காணவியலாத                                            
      சுவர்க்கத்தின்
      ஒளிநிழலாட்டங்கள்.

                  -க.மோகனரங்கன்
                            (வளர்ப்பு மிருகம்)


                                                        


          
உணர்ச்சித் தத்தளிப்புகளையும் ஆசையின் அலைகழிப்புகளையும் வாழ்க்கையின் சுழிப்புகளையும் கொண்டு எழுதப்பட வேண்டிய நாவலொன்று இக்கவிதையை வாசித்து முடித்ததும் மனதில் எழுகிறது.பித்துபிடிக்க வைக்கும் அந்த ஒளிநிழலாட்டத்தின் வசீகரத்தில் சொக்கிப்போய் சரிந்த ராஜ்யங்களின் வரலாற்றில் சாம்ராட்டுகளின் கிரீடங்கள் அந்த பொன்னொளிர் மிளர்வுக்காகத் தானே தவம் கிடந்தன!மாயப்பிசாசுஎன பெண்களைச் சொன்னவனும் அறியமுடியாமையின் கரையிலிருந்து தான் சொன்னானோ?அல்லது அதனுள் இறங்கி மூழ்கி முக்குளித்தப் பின்னும் அறிய முடியாது போன தன் நிர்கதியை ஏமாற்றத்தைத் தான் அவ்வாறு சொல்லி இருப்பானோ?சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாவுக்குச் சென்றிருந்த போது அதிக ஜன சஞ்சாரம் இல்லாத சிறு உணவகத்தில் வண்டியை ஓரங்கட்டினோம்.இலை போட்டவரின் பனியனிலிருந்த ஓட்டைகளை எண்ணியபடி தம்ளரில் நீரெடுத்து இலை கழுவிய நண்பன் வளையொலி கேட்டு கைமுஷ்டியால் இடித்தான்.அகன்ற விழியில் கச்சிதமாகப் போடப்பட்ட மையுடன் அப்போது தான் குளித்த சந்தன சோப்பின் மணத்துடன் வந்து இட்லிகளை வைத்தாள்.அவன் கண்கள் அவளையும் வாசலில் வெயிலில் காயும் காரையும் மாறிமாறித் தொட்டு மீண்டது.அவள் அவனை அறிந்து கொண்டாள் போலும்.முன்னால் விழுந்து கிடந்த ஜடைப்பின்னலை எடுத்து பின்னால் வீசியபடி கண்மணிகளை அவன் மட்டும் அறியும் வண்ணம் கண்களுக்குள்ளாகவே அசைத்து ஒரு வெட்டு வெட்டினாள்(இதை பின்னொரு நாளில் அவன் செய்து காட்ட பலமுறை முயன்று தோற்றான்).அவ்வளவு தான்.அவன் புத்தி அவளுக்குப் பின்னால் போய்விட்டது.அதன் பின் அவள் முன் சிகரெட்டை மறுத்தான்.புதிதாக நடை பழகினான்.அவள் கல்லாவுக்கு வந்ததும் பெரிய அலட்டலான தோரணையோடு உண்ட கணக்கை நேர் செய்தான்.வேண்டுமென்றே சில்லறை முறித்தான்.வண்டி புறப்பட்டதும் அவன் முதுகில் இல்லாத தூசியை விரட்டுபவனைப் போல அந்த நீலநிறப்புடவைக் கண்ணில் படுமா?என்ற கவலையுடன் திரும்பி திரும்பிப் பார்த்தபடியே வந்தான்.வண்டி குலுங்க அடித்த கிண்டல்கள் அவனை ஏதும் செய்யவில்லை.அவன் மீண்டும் இருமுறை அவளைக் காண வேண்டி அங்கு சென்று வந்ததாக சிறுவிபத்தில் கால் கட்டுடன் கிடக்கும் போது சொன்னான்.பல முறை யோசித்ததுண்டு.ஒரு சொல் கூடப் பகிரப்படாத வெற்றுப் பார்வை அவனை மாநிலம் விட்டு மாநிலம் ஓடச் செய்திருக்கிறது! தவம் கிடக்க வைத்திருக்கிறது!விந்தை போலவும், சரிதான் என்பது போலவும் அவ்வப்போதைய மனநிலைக்கு ஏற்ப எனக்குள்ளாகவே பதில்களைச் சொல்லிப் பார்த்துக் கொண்டதுண்டு.



பெரும் அரசியல் கொந்தளிப்புகளையோ நிலை தடுமாற வைக்கும் சமூக பிரச்சனைகளையோ அதிகமாக கைகொள்ளாத தமிழ் புனைவெழுத்து அதிகபடியாக எழுதிப்பார்த்திருப்பது ஆண்-பெண் உறவுநிலைகளின் வகைபேதமான நிறங்களையும் வசீகரம் குன்றாத அதன் உள்முடிச்சுகளையுமே.குடும்பம்(இந்திய மற்றும்) தமிழ் வாழ்க்கையில் ஒருவன் மேல் செலுத்தும் சாதக பாதக விளைவுகளாலும் அதையொட்டி சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் விழுமியங்களாலும் அவன் மேலதிகமாகவே மன உலைவுக்கு ஆட்படக்கூடும்.அந்தப் புள்ளியை வெவ்வேறு வழித்தடங்களின் வழியாகப் போய் தொட்டவர்கள்,அவ்வப்போது தொட்டுத் திரும்பியவர்கள்,அந்த ருசியிலேயே அமிழ்ந்து மீளமுடியாது போனவர்கள் என பலரும் செயல்பட்ட களம் அது.கு.ப.ராஜகோபாலன் கதைகளில் அதற்கான முதற்சுவடை காணநேர்ந்தாலும் அவரை வழிகாட்டியாக கருதி எழுதிவந்த தி.ஜானகிராமன் சில ஆண்டுகளுக்குள்ளாகவே அவரை லகுவாக கடந்து சென்றிருப்பதை எந்த நுட்பமான வாசகனும் உய்த்துணர்ந்திருக்கக்கூடும்.லா.ச.ராவின் அபிதா,தி.ஜாவின் ‘மோகமுள்’(முதிர்ந்த வாசிப்பில் வேறுவேறான கதவுகளைத் திறந்து செல்லமுடியும்)ளிலிருந்து சமகாலத்திய பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’,யூமா.வாசுகியின்மஞ்சள் வெயில்என நீளும் ஆக்கங்களில் பெண் மீதான ஆணின் விழைவுகளை,மனப்புயலை,பேதலிப்புகளை அந்தந்த படைப்பாளிக்கேயுரிய வாழ்க்கை மற்றும் இலக்கிய நோக்குடன் அணுகியிருப்பதைக் காணலாம்.லூசிப்பெண்ணே..ரோசாப்பூவே..!என நகுலன் நாவல்களில் இடம்பெறும் பெண் சித்திரம் நகுலன்/துரைசாமி/நவீனன் என்போர்களின் மனத்திரிபு நிலைகளே.இவை அனைத்தும் நாவல்கள்.




இரு பெரும் கலைஞர்கள் தங்கள் சிறுகதைகளில் இத்தகு மன அவசங்களை  மனதின் உள்ளோட்டங்களை கையாண்ட நேர்த்தியின் மீதான வியப்பினாலும் (சிறிது பிசகியிருந்தாலும் வாசகநோக்கு சிதறியிருக்கும்)முடிவற்று பெருகிச் செல்லும் மனக்கோலங்களை அவர்களுக்கேயுரிய தனித்தன்மையால் இணைத்திருக்கும் முறையிலிருந்துமே இக்கட்டுரைக்கான முதல் விதை மனதில் விழுந்தது.

        அதிக சிலாப்புக்கு ஆளாகாத தி.ஜானகிராமனின் மனநாக்கு(கணையாழி,நவ.69) வண்ண நிலவனின் சிறந்த கதைகளுள் ஒன்றெனப் பெயர்பெற்ற ‘மனைவியின் நண்பர்’(தாய் 1990) ஆகிய இரு கதைகளுக்கும் எழுதப்பட்ட காலம் சார்ந்த இடைவெளி சற்று மிகுந்திருந்தாலும்  இன்றும் இவை இரண்டும் மனம் என்னும் ஆதிகாலப்புதிரின் வெகு சில நுண்ணிய இடங்களை குறிப்பாலுணர்த்தும் வல்லமை கொண்டவை.இவ்விரு கதைகளிலும் காணக்கிடைக்கும் முதல் ஒற்றுமையே மைய ஆண் கதாபாத்திரங்கள் இரண்டுமே ‘பிறர் மனை நோக்கா பேராண்மையாளர்கள் அல்லர் என்பதே.ஆம்!வேறொருவரின் மனைவியோடு, அவர்களுக்கு மிக அருகில் இருந்தபடி ரசமான சம்பாஷனையில் ஈடுபட்டு சிற்றின்பத்தில் லயித்துக் கிடக்க விரும்புவர்கள்.அதை பேரின்பமாக மாற்றிக் கொள்ள தைரியம் அற்று பரிதவித்து தயங்கி அந்தக் கோட்டைத் தாண்டிச் செல்ல முடியாமல் மனநடுக்கத்தோடு திரும்பிச் செல்பவர்கள் அவர்கள்.இதற்கான தூண்டிலை மிக நுட்பமாக அவர்களை நோக்கி வீசுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள்.அப்பெண்களும் அந்த வேட்கை, கரை மீறிச் செல்ல அனுமதிப்பதில்லை.என்றபோதிலும் அதற்கான முதல் அடிவைப்பு ஆண்களுடையதாக இருக்க வேண்டும் என்றும் அதற்கான சமிக்ஞைகளை மட்டும் பெண்கள் அளிப்பார்கள் என்னும் பெண்மனம் குறித்த அவதானிப்பை கதையோட்டத்தின் அடியில் எளிதில் புலப்படாதவாறு உணர்த்திக்காட்டப்பட்டிருக்கிறது.மேற்கண்ட இரு கதைகளின் கருப்பொருளை கையாள்வதென்பதை பழைய பழகிய உவமையில் சொல்வதென்றால் ‘கத்தி மேல் நடப்பது போலஎனலாம்.ஆனால் பளபளப்பும் கூர்மையும் கண்ணைப் பறிக்கும் அழகும் கொண்ட கத்தி.இந்த இரு படைப்பாளிகளும் தங்கள் கலை திறனால் மனங்களின் உள்ளே நொதித்துக்கிடப்பவற்றில் சிலதையேனும் பிளந்து வைக்கிறார்கள்.



அபாரமான அழகுணர்ச்சியும் சொல்லிச் சொல்லி செல்வதில் பெருவிருப்பமும் உடையவர் தி.ஜானகிராமன்.தி.ஜா-வின் மொத்த கதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் லா.ச.ரா இயல்பிலேயே அழகானதை ஆராதனை செய்யும் போது ஜானகிராமன் தன் ஆராதனை வழியாகவே ஒன்றை அழகானதாக ஆக்குகிறார்.என்னும் நுட்பமான அவதானிப்பை முன் வைக்கும் கவிஞர்.சுகுமாரன் அந்த அழகின் ஆழத்தின் மனதின் ஆதார உணர்வுகளின் சிக்கல்களும் மோதல்களும் கிடக்கின்றன.அழகை விரும்பி வாசிப்பவனுக்கு கதை ஜனரஞ்சக சுவாரஸ்யமுள்ளதாகவும்,ஆழத்தை உணர்பவனுக்கு இலக்கிய நுண்மை கொண்டதாகவும் ஆகிறது.என  மேலும் நகர்ந்து செல்லும் போது அவ்வரிகளை மனதிற்குள் தலையசைத்து ஏற்கிறோம்.இந்த மதிப்பீட்டை கவனமாக கருத்தில் கொள்வது தி.ஜானகிராமனின் படைப்புலகை அணுக நமக்கு பேரளவு துணைபுரியும்.அது போலவே பெண்களின் பாத்திரவார்ப்பு குறித்து மிக அதிக பக்கங்கள் எழுதப்பட்டது தி.ஜாவின் பெண்களை பற்றி மட்டுமாகவே இருக்கக்கூடும்.

தலைநகர் டெல்லியில் நிகழும் கதைமனநாக்கு’.தலைப்பிலேயே கதையின் உட்பொருளை உணர்த்திவிடுகிறார்.ஆம்.மனம் தான் ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கிறது.மோகித்துக் கிடக்கிறது.சமத்காரமான(அல்லது இயல்பிலேயே அமைந்து விட்ட) மொழியால் பாத்திரங்களின் உரையாடல்கள் வழி நம் கண் முன் நிகழ்ந்து கொண்டிருப்பதாக எண்ணச்செய்யும் அளவிற்கு காட்சிகளை உருவாக்குபவர் தி.ஜா.அவள் (மாலி) மீதான மனக்கூவலை மென்று விழுங்கி   மோகத்தின் அலையில் கை அல்ல கால் கூட நனைக்க முடியாமல் ஆற்றாமையுடன் தன் ஸ்திதி பற்றிய சுயபச்சாதாபத்தால் நொந்து திரும்புகிறவனின் கதை இது.சிணுங்கலும் பொய்கோபமுமாக தொலைபேசி உரையாடலில் தொடங்குகிறது கதை.மாலி பேசுகிறாள்,குறித்த நேரத்திற்குள் வருவதில்லை என்ற செல்ல சண்டையுடன்.ஆறரைக்குச் சரியாக வருவேன்என்ற உறுதியை அவனிடம் வாங்கிய பின்பும் அவள் அவனை சோதிப்பதற்காக அவன் வருகையை நிச்சயம் செய்ய அவன் மீதான தன் ஆளுமையை பரிசோதிக்க நேரம் தவறினால்,ஆறு மாசம் போனைத் தொடமாட்டேன்என்ற பிறகு திருப்தியில்லாமல் ‘டயத்துக்கு வரது நிச்சயமில்லன்னா பரத நாட்டியத்துக்கு சினேகிதி கூப்பிட்டிருக்காஎன்கிறாள்.பிறகென்ன?வருகிறேன் என்கிறான்.மானசீகமாக நெடுஞ்சாண்கிடையாக விழுந்தாகி விட்டது.(அப்போதே அவன் கை கால்கள் எல்லாம் பரபரவென்று பரக்கத் தொடங்கிவிட்டது).பிறகு தான் அது வரை மறைத்து வைத்த அஸ்திரத்தை வெளியே எடுக்கிறாள் மாலி.

“அவரும் ஊரிலே இல்லயா..

அப்படியா

ஆமா?

எங்கே

“நாக்பூருக்குப் போயிருக்கார்.நாளன்னிக்குக் காலமே தான் வறார்.சித்த ஆர அமரப் பேசலாம்ன்னு தான் சுருக்க வரச் சொல்றேன்.

நாளை மறுநாள் வரப்போகிற செய்தியைச் சொல்லிவிட்டு சீக்கிரமாக வரவும் ஒப்புதல் பெற்று விட்டு,இத்தனையும் ஆற அமர பேசுவதற்கு என்கிறாள் மாலி.

பேசுவதற்காம்?!பேதைகளாக்கி அலைய வைத்தது போதாதா?ஒரு வேளை உண்மையாக இருக்கக் கூடுமோ?பார்த்தாலே பசி தீரும் என்கிறார்களே!சரி தான்.எந்தப் பசி?தி.ஜா.வைக் கேட்டால் அவரது காணக்கிடைக்கும் ஒன்றிரண்டு புகைப்படங்களில் சிரிப்பதை விடவும் மென்மையாகச் சிரிக்கக்கூடும்.



அந்த அழைப்பினால் அவன் எலும்புக்குள்ளும் தசைக்குள்ளும் மண்டைக்குள்ளும் தளதளவென்று குதிக்கத் தொடங்கிய பொங்கல் அடங்கவில்லை”“யாம்.ஏனெனில் எட்டுவருஷக் காத்திருப்புக்குப் பின் கிட்டிய ‘தோற்றமாக இல்லாமல் பிரமையாக இல்லாமல்-நாளைக்குநடந்து விடக்கூடும் என எண்ணுமளவிற்கான பொன்னாள்.சட்டென்று இரண்டு கிளைக்கதைகள்  நோக்கிச் செல்கிறார் ஜானகிராமன்.எங்கும் சற்றே நிதானமாக நின்று உலாவிச் செல்வது அவரது வழக்கம்.அது வாசகனுக்கு சலிப்பை ஏற்படுத்துவதுமில்லை.முதலாவது அவரது சொந்த மண்ணான தஞ்சாவூரில் அவனதுஇண்டர் மீடியர் பரீட்சைமுடிந்த சமயத்தில் நடக்கிறது.இங்கு(டெல்லி) நிகழ்ந்து கொண்டிருப்பது போலவே பெண் மீதான மோகத்தில் அலைந்து ஒரு கட்டத்தில் பயந்து போய் பின்வாங்குகிறான்.மாலியைப் பார்க்கப்போகிற மன அவதியில் ஆட்டோ கிடைக்காமல் சீக்கியன் உதவ அவனது ஆட்டோவில் தொற்றி ஏறிச் செல்லும் போது நிகழ்வது மற்றொன்று.ஆச்சரியமான விஷயம் என்னவெனில் பெண்களின் வடிவை  கச்சிதமான வர்ணனை மற்றும் விவரணையால் வாசக மனதில் துல்லியமாக எழுப்பிக் காட்டும் தி.ஜா இக்கதையில் மாலியின் அழகை வடிவத்தை குறிப்பிடுவதில்லை.மாறாக கிளைக்கதையில் வரும் பெண்களின் சித்திரத்தை நறுக்குத் தெறித்தாற் போலக் காட்டுகிறார்.தஞ்சாவூர் பெண்ணைகொஞ்சம் உயரத்தோடு ஒரு துளி புருஷக்களை-முகத்திலும்,தோள் முதுகு அகலத்திலும் இந்த புருஷக்களைப் பொம்மனாட்டிகளுக்கு எவ்வளவு கவர்ச்சி!என்றும் சீக்கியனின் மனைவி பற்றிதலையில் முக்காடு.மாநிறம்.நல்ல பாஞ்சாலக்கட்டு உடல்.வலுவும் ஆவேசமும் இளமையும் பதுங்கித் தெறிக்கும் கட்டுஎன பாத்திரங்களின் மயிர்க்காலைக் கூட அழகியலோடு அணுகும் தி.ஜா அவனை வதைக்கும் மாலியின் உடல் பற்றி எந்தக் குறிப்பையும் எழுதியிருக்கவில்லை.

ஆனால் அவனது மனநாக்கு மட்டும் ஓயாமல் அவளைப் பற்றிப் பேசுகிறது.ஓரிடத்தில் மட்டும் சிறு குறிப்பு வருகிறது.என் அங்கவஸ்திரத்தின் மீது உன் தந்தக் காலை வைத்திருக்கிறாயே..என் மேல் போடுவதாகத் தானே பாவனை.இதை வைத்து அவரது –ஒரு சிலர் தவிர்த்து-பெரும்பாலான பெண்களைப் போலவே மாலியும் வெண்நிறத்தவள் தான் என யூகிக்கலாம்.மனிதனை நோக்கி அவனது காருண்யத்தை நோக்கி செல்லும் இடத்திலிருந்து அவன் முந்தைய மன அவசங்கள் தற்காலிகமாக நீங்கியவனாக ஆகிறான். அவனுக்காகவே திரும்பி வந்து டாக்சியில் ஏற்றிக் கொள்ளும் யாரென்றே அறியாத அந்த சர்தார்ஜி “உங்களுக்காகத் தான் வந்தேன்.எத்தனை நேரமாக நிற்கிறீர்கள்?என்கிறான்.அதை நினைத்து அவன் மாய்ந்து போகிறான்.நெஞ்சு குதுகுதுவென்கிறது.மனிதன் – மனிதன் – கடவுள் – மனிதன் – கடவுள் .இரண்டு வார்த்தைகள் முணுமுணுவென்று மார்பின் உள்ளுக்குள் திரும்ப திரும்பக் கேட்கின்றன.




இவ்வாறு சட்டென மனிதத்தை நோக்கி அவன் சொல்வது தான் ஜானகிராமன் கதையுலகின் ஆதார ஸ்ருதியாக இருக்கிறது.சிலிர்ப்பில் தன் குழந்தையை அவ்வளவு பிரியத்துடன் கட்டிக் கொள்ளும் தந்தையைப் போலவே இவனும் மனதிற்குள் சர்தார்ஜியைக் கட்டிக் கொள்கிறான்.உடம்பிலிருந்து மனதை நோக்கி நடந்தவர்என்னும் தி.ஜா பற்றிய பிரபஞ்சனின் வரியை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.ஆனால் ‘கடன் தீர்ந்ததுபோன்ற ஒரு கதை –அத்தகைய மனிதர்கள் காலாவதியாகிப் போன-இந்தக் காலகட்டத்தில் எவ்வாறு பார்க்கப்படும் என்பது வினாவாகவே எஞ்சக்கூடும்.தன் மனதெல்லாம் மாலியாக மாலியின் உடம்பாக அவளது வீட்டிற்குக் கிளம்பியவனை அந்தச் சீக்கியன் ஏதோ செய்து விடுகிறான்.அவனை வியந்து வியந்து தீராமல் ஆகும் போது “கேட்டின் கொக்கியைத் தூக்கித் திறந்து உள்ளே போகையில் உடம்பு பழத்திலிருந்து சாறெல்லாம் வற்றி விட்டார் போலிருந்ததுஎன்கிறான்.அவளைக் கண்டதும் மீண்டும் மன மோதல்கள்,அதைரியம்.வெறுமனே பேச்சை வளர்த்தி விட்டு எழும் போது “முள்ளா” என்னும் கேள்விக்கு “இல்லைஎனப் பொய் சொல்லிவிட்டு எழுகிறான்.இத்தனைக்கும் நடுவே மின்விசிறி குறித்து சிறு சம்பவம் கதையினுள் ஓடுகிறது.நெருங்கி வருவதற்கு மாலிக்கும் உள்ள விழைவை பட்டவர்த்தனமாக தொட்டுக் காட்டும் குறிப்பு அது.அப்போதும் அவனது மனநாக்கு தான் அசைகிறது.அவளைப் பற்றிய வியப்பும் தன் நிலை குறித்த கழிவிரக்கமும் மனதில் படர அதை மறக்கும் முயற்சியில் சம்பந்தமேதுமில்லாத புற உலகின் காட்சி ஒன்றை காண்பதோடு அக்கணத்தில் தற்காலிகமாக கதை முடிவை எட்டுகிறது.ஆனால் மாலியை அவன் அதே மனப்பரபரப்பில் ஆவலுடன் போய் பார்த்திருக்கக்கூடும்.இந்த எட்டு ஆண்டுகளும் பதினெட்டு ஆண்டுகளாக ஆன பின்பும் மனமே பேசிக்கொண்டிருந்திருக்கவும் கூடும்.அல்லது அடுத்த சந்திப்பிலேயே பரஸ்பரம் இருவரும் மனத்தடைகளற்று நெருங்கியிருக்கவும் கூடும்.யாரறிவார்?அது தி.ஜா வே அறிய விரும்பும் ரகசியங்களில் ஒன்றாக இருந்திருக்கக்கூடும்.



              
நாடகமொன்றில் பலமுறை நிகழ்த்திக்காட்டப்பட்ட முதல் காட்சி போலத் தொடங்குகிறது வண்ணநிலவனின்மனைவியின் நண்பர்’.புறக்காட்சியை எழுத்தாளன் கதைக்குள் கையாளும் நுட்பத்திலேயே அக்கதைக்குரிய உபபிரதியையோ அடிக்குறிப்புகளையோ உருவாக்கிவிட முடியும் என்பதற்கு மேலுமொரு சாட்சியாக அமைந்த கதை இது.மேற்பரப்பில் காணக்கிடைக்கும் சிற்றலைகளைக் கண்டு அதன் ஆழம் பற்றி தப்பெண்ணம் கொண்டுவிடக்கூடாதல்லவா?விடுபட்ட (அ) புரிந்தும் புரியாதது போல பாவனை கொண்டு விட்ட சொற்களை தன்னுள் எழுதிப்பார்த்துக் கொள்ளும் போது மனம் எத்தகையதொரு விசித்திரமான வஸ்து என்பதை மீண்டும் உணரத் தலைப்படுவோம்.சிறுகதை வடிவத்தை வண்ண நிலவன் போன்ற படைப்பாளி கலை ஒழுங்குடன் கை கொள்ளும் நேர்த்தி அவரது பல கதைகளைப் போலவே இதற்கும் மேலதிக ஒளியைப் பாய்ச்சுகிறது.ரஷ்ய இலக்கியங்களின் தாக்கத்திலிருந்து எழுந்து வந்த வண்ண நிலவன் ஒரு கதையைப் போல பிறிதொன்றை எழுதாதவர் (எஸ்தர், மிருகம்,பலாப்பழம்,அவனுடைய நாட்கள்..)இவரது களங்கள் நெல்லைச்சீமையைக் கொண்டிருப்பினும் கூட அதற்கு அப்பால் சென்னைடவுனையும் கொண்டவை,புதுமைப்பித்தனைப் போல.இவரும் கதையின் உட்கிடக்கையை சூசகமாக உணர்த்தி விடுகிறார்.மனைவியின் நண்பரான ரங்கராஜு சாயந்தரம் ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் மளிகைக்கடையில் வந்து அமர்கிறார்.இதை மட்டும் ஒரு பக்கம் வரை சொல்கிறார் வண்ண நிலவன்.அதில் அவரது செயல்பாடுகள்,நடவடிக்கைகள் கணவனின் கண்வழி குறிப்பெடுக்கப் படுகிறது.ரங்கராஜு மீது அவருக்கிருக்கும் கோபம்,எரிச்சல்,ஆற்றாமை போன்றவை அதனூடாகவே உணர்த்தவும் படுகிறது.ஏனெனில் அவரது மனைவி சிவகாமி,அவர் சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு நிறுத்துகிற சத்தம் கேட்டதுமே,சிவகாமி வீட்டின் எந்த பக்கத்திலிருந்தாலும் வந்து விடுவாள்”.அவன் கண் முன்பே இருவரும் ருசிக்க ருசிக்க பேசிக் கொள்ள வேறு செய்கிறார்கள்.தி.ஜா போல வண்ண நிலவன் எங்கும் நிதாதித்து ரசித்து நிற்பதில்லை.அவர் நகர்ந்து கொண்டேயிருக்கிறார்.நகர்ந்தபடியே அவர் வைத்துச் செல்லும் புள்ளிகளைப் பின்னர் இணைத்துக் காணும் வாசகன், மனம் முடிவென்பதில்லாது நீளும் பிரம்மாண்டமும் சூக்குமமும் கொண்ட கோலம் என அறிகிறான்.

அவரது வருகையை அவனால் தடுக்கவும் முடிவதில்லை.ஏனெனில் அவ்வப்போது கடைக்கு பணமுடை ஏற்படும் போது லேவாதேவிக்காரரான ரங்கராஜு தான் உதவுகிறார்.அவளுக்குச் செல்லப் பேச்சுகள் அலுத்துவிட்டது என்றாலும்சிவகாமியும் அவருடன் சரிக்கு சரி நின்று இனிக்க இனிக்க பேசுவதும் ஒரு காரணமாக இருக்கும் போது அவரை மட்டும் குற்றம் சொல்ல அவன் தயங்குகிறான்.சிவகாமி முன்பு அவனை ரங்கராஜு ‘அவர்என்று தான் அழைக்கிறார்.இது போல அவர் கடைபிடிக்கும் கண்ணியங்களை அவன் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் முன்பே கணவனின் மூக்கைச் செல்லமாக இழுத்து விட்டு போகிறாள்.[அவள் மிகுந்த சந்தோஷத்தோடு இருக்கிற போது இப்படிச்செல்வது வழக்கம்].ஆனால் இந்த மூன்று மனங்களுக்குள்ளும் ஓடிக்கொண்டிருப்பவைகள் வேறானவை.மேல் மட்டத்தில் நடக்கும் இந்த சம்பாஷனைகள் மற்றும் விவரணைகளின் வழியாகவே அந்த மறைக்கப்பட்ட திரையை விலக்கி நுட்பமான வாசகன் கண்டுகொண்டு விடுவான்.அதை பட்டவர்தனமாக அல்லாமல் சூசகமாக சொல்வதனாலேயே  கதையின் வெளிப்பாட்டு அமைதி கூடுகிறது.மேலும் ரங்கராஜு உடனடியாக வீட்டினுள் நுழைவதில்லை.அதை இயல்பான ஒன்றாக ஆக்க அவனோடு பேச்சுக் கொடுக்கிறார்.அவன் பதிலில் சீண்டப்பட்டும் கூட அவர் எதிர்வினைபுரிவதில்லை.(ஏனெனில் சிவகாமி,”....உள்ளே வாங்களேன்..  என்று கண்களை ஒரு வெட்டுவெட்டிப் போனாள்“).

அவளது அழகு தான் அவரை ஓயாமல் அங்கு இழுத்துக் கொண்டிமிருக்கிறது.அவர் உள்ளே சென்று கொண்டிருக்கும் போது தான் அந்த வீட்டின் அமைப்பை வண்ண நிலவன் கச்சிதமாகச் சொல்கிறார்.அப்போது தான் சிவகாமிக்கு பெண்பிள்ளை இருப்பதையே ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார்.(இதை முன்பே செய்திருந்தால் ரங்கராஜுவின் அல்லாடல்கள் சிவகாமியின் கணவனை மட்டும் கொண்டிருந்திருக்காது.சிவகாமியும் அவரோடு பாந்தமாக பேசிக் கொண்டிருந்திருக்க முடியாது.மேலும் கணவின் இருப்பு போல் அல்ல வயது வந்த பெண்பிள்ளையின் இருப்பு.அந்தக் குற்ற உணர்வு கதையின் மையத்தை சிதைத்து விட்டிருக்கும்.)சிவகாமிஎன பிரியமாகக் கூப்பிடத் தோன்றியும் சரோஜா இருப்பதால் விழுங்கிவிடுகிறார்.அப்போது காப்பியை கொடுத்தபடியே அவர் அருகில் வந்து(உடம்போடு உடம்பு படுகிற மாதிரி”) அமர்ந்து கொள்கிறாள்.கண்களை ஆழ நோக்குகிறாள்.அது அவருக்கு தாங்கொண்ணா ஆனந்தத்தை அளிக்கிறது.சிவகாமியின் ‘சமைஞ்ச பொண்ணுரங்கராஜுவிற்கு நினைவிற்கு வரவே அமைதியாகிறார்.அவருக்கு அந்த உறவு எல்லைக்கப்பால் சென்று விடுமோ?! என்ற கிலி வேறு. சூக்குமமான தருணங்களின் அடக்கப்பட்ட பெருமூச்சுக்களையும் அதைரியத்தால் திறக்கப்படாத ஏக்கத்தின் கதவுகளையும் தன்னுள்ளேயே இக்கதை கொண்டிருக்கிறது. சிவகாமியும் அவ்வாறான அச்சவுணர்வை அந்த கணத்திலேயே வெளிப்படுத்தவும் செய்கிறாள்.அது என்ன என்ற அவரது தூண்டுதலுக்கு அவள் பதில் அளிக்காமல் அவரை வீட்டினுள்ளேயே விட்டுவிட்டு வந்து கணவனுடன் மளிகைக்கடையின் நின்று கொள்கிறாள்.பின் எதுவுமே நடக்காதது போல எதையும் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் விடைபெற்றுச் செல்கிறார் ரங்கராஜு.அவர் இனி வரமாட்டார் என சிவகாமி கூறுவதுடன் இங்கும் கதை தற்காலிகமாகவே முடிவுக்கு வருகிறது.



இந்த வீம்பு காலத்தால் கரைந்து போகாதது என்றே படுகிறது.ஆனாலும் அந்த கண்களின் “ஒளிநிழலாட்டத்தைரங்கராஜுவால் மண்ணிற்குள் இறங்குகிறவரை மறக்க முடியாது என்றே படுகிறது.கலை நுட்பத்தால் மிளிரும் இக்கதை உள்ளூர கிடக்கும் இடைவெளிகளின் அர்த்தங்களை  மெளனங்களை நோக்கி வாசகனைச் செலுத்தும் ஆற்றல் கொண்டது.இதே பொறாமையுணர்ச்சி,விளங்காத உறவு பற்றிய அச்சம்,கோபம்,எரிச்சல் போன்றவற்றோடு எழுதப்பட்ட கார்வரின் ‘கதீட்ரல்சிறுகதை வேறொரு தளத்தில் (காமம் சார்ந்து அல்ல) இக்கதையுடன் ஒப்புநோக்கத் தக்கது.


              வெளிப்படையாக அல்லாமல் அந்தரங்கமாக இயங்கும் இத்தகைய மனங்களை இலக்கியம் மூலம் மட்டுமே நெருங்கிச் சென்று சிறிதளவேனும் புரிந்து கொள்ள முடியும்.இந்த வசீகரமான ரகசியவெளியில் மனதிற்குள்ளாகவே பம்மி பதுங்கியபடி நடமாடுபவர்களிடம் கவிஞர்.இசையின் ஒரு கவிதையை(நைஸ்) வாசித்து அவர்களின் பதில்களைப் பெற ஆசையாக இருக்கிறது.இவர்களைத் தனியே அழைத்துச் சென்று

“............
..............
இந்த நைஸிற்குத் தான் மணிமுடிகள் சரிந்தனவா?
முனிகள் பிறழ்ந்தனரா?
இதற்காகத் தான் இப்படி
தேம்பி தேம்பி அழுகிறார்களா?
இதற்காகத் தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா?
...........
இது மட்டும் போதுமென்று தான்
கண்காணாத இடத்திற்குப் போய்விடுகிறார்களா?

எனக் கேட்கையில் வெட்கமும் வேதனையும் வியப்பும் முகத்தில் மின்னி மறைய அவர்கள் நிமிர்ந்து நோக்கும் போது அங்கிருக்க மாட்டேன். தங்கள்  கண்களில் படரும் ஈரத்தை  மறைக்கப்பட்ட வலியுடன் புறங்கையால் துடைத்துக்கொண்டிருக்கும் அதே கணத்தில் அவர்களிடம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டிருப்பேன்.

உதவிய நூல்கள்
=================
1.மீகாமம் - க.மோகனரங்கன் - கவிதைத் தொகுப்பு - தமிழினி பதிப்பகம்.
2.தி.ஜானகிராமன் சிறுகதைகள் - பதிப்பாசிரியர்-சுகுமாரன் - காலச்சுவடு பதிப்பகம்.
3.வண்ணநிலவன் கதைகள் - சந்தியா பதிப்பகம்.
4.அந்தக் காலம் மலையேறிப் போனது - இசை - கவிதைத் தொகுப்பு - காலச்சுவடு பதிப்பகம்.

(நன்றி :கணையாழி ஜுலை 2015)


1 comment:

  1. சா.ரு.மணிவில்லன்.March 3, 2024 at 7:21 AM

    அருமையான கட்டுரை. இந்த கட்டுரையை நீங்கள் முகனூலில் பகிர்ந்ததினால் எனக்கு அறிமுகமானது. இதனால் தி,ஜா மற்றும் வண்ணநிலவன் ஆகியோரின் கதைகளை தேடியும் படித்தேன். இதில் மறைமுகமாக ஒரு சிறுகதை எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கான குறிப்புகளும் இருப்பதாக உணர்கிறேன். நன்றி. பாராட்டுகள்.

    ReplyDelete