Tuesday, September 16, 2014

சுந்தர ராமசாமியின் நானும் என் எழுத்தும் நூலுக்கான முகவுரை




முகவுரை :           

சுந்தர ராமசாமியின்  ”நானும் என் எழுத்தும்” நூலுக்கான முகவுரை

          
            சூழல் மனிதனை உருவாக்குகிறது என்பது அங்கீகரிக்கப்பட்ட பழைய உண்மை.ஆனால் சற்றே மாற்றிப் புரிந்து கொள்ளப்பட்ட உண்மையுங்கூட. அந்த உருவாக்கம் சார்ந்த தொடக்கநிலைகளைத் தாண்டிவிட்டவொருவன் அதில் பொருந்திக்கொள்ள முடியாமல் தத்தளித்து அதன் மீது அதிருப்தி கொண்டு  அதன் சட்டகங்களிலிருந்து திமிறி வெளியேறி அந்த பழைய உண்மைகளை ஆட்டங்காணச் செய்கிறான்.இதில் ஒரு புரட்சியாளனின் இடத்தைக் காட்டிலும் ஒரு படைப்பாளியின் இடம் மகத்தானது.ஏனெனில் தற்காலிக வெற்றி சார்ந்த திட்டங்களும் முன்வரைவுகளும் புரட்சியாளனின் மேசை முன் இறைந்து கிடக்கும் போது மனங்களைப் பற்றியெரிய வைக்கும் கனவுகள் படைப்பாளியின் மனதைக் கொந்தளிக்கச் செய்கின்றன.பேருவகை அளிக்கும் கொந்தளிப்பு அது.மனங்களை அசைக்காமல் எதுவும் சாத்தியமில்லை என்னும் பேருண்மையை அறிந்தவன் படைப்பாளியே.மனங்களை மாற்றிவிட அல்ல,மாறாக அதன் ஊடுபாவுகளை ஊடுருவிச் சென்று அறிந்து வாசகனுக்கு உணர்த்துபவன் அவன்.அடைந்த வெற்றிகளைக் காட்டிலும் இன்னும் தொடவேண்டிய இலக்குகளை நோக்கி ஓயாமல் ஓடும் கலைமனம் அவனுடையது.அந்த மனதை அறிந்து கொள்ள அவன் ஆக்கங்களை பயில்வது தான் ஆகச்சிறந்தது என்ற போதிலும் அவன் பின்னிற்று அவனை இயக்கிய காரணிகளை அப்படைப்பாளியே கூறக் கேட்பது அப்படைப்புமனதை நெருங்கிப் புரிந்து கொள்ள மேலும் துணைசெய்யும்.
                   

        

              
                 வாசிப்பு எவ்வாறு ஒரு அந்தரங்கச் செயல்பாடோ அதே போல ஒரு படைப்பும் ஒரு அந்தரங்கச் செயல்பாடு தான்.ஒரு ஆக்கம் உருவாகி வர அதற்கு முன்னும் பின்னுமான நிகழ்வுகளை அந்த எழுத்தாளனே சொல்வதைக் கேட்பது சுவாரஸ்யமான அனுபவம்.ஆனால் அதிலுள்ள ரகசியங்களை சூட்சமங்களை ஒருபோதும் படைப்பாளி வாசகனிடம் பகிர்ந்து கொள்வதில்லை.ஏனெனில் வாசகன் நுழையும் உலகிற்கு பயண வழிகாட்டி அல்ல அவன்.வாசகன் தன் நுட்பான அறிவால் உய்த்துணர்ந்த பின் அவனது பாராட்டுதல்களையும் கேள்விகளையும் அப்படைப்பாளி உற்சாகமாக எதிர்கொள்வான். மாறாக ஒரு கதாகாலட்சேபக்காரனைப் போல தன் படைப்புலகின் கதையைக் கூறி பந்தி விளம்பும் விமர்சகனுக்கு ஒரு ஒளிநகல் இயந்திரத்திற்கு அளிக்கும் மதிப்பைக்கூட நுட்பமான படைப்பாளி அளிக்க மறுப்பான்.எனவே நவீன தமிழின் முன்னோடியான சுந்தர ராமசாமி தன் வாசிப்பு ,தன் எழுத்து பற்றிக் கொண்டிருந்த அபிப்ராயங்கள்,தன் படைப்பாக்கத்தின் விதை மனதில் முளைத்து வந்த பின்னணி போன்றவற்றை பகிர்ந்துக் கொள்ளும் இத்தொகுப்பு முக்கியத்துவமுடையதாகிறது.
          

    

    
              கட்டுரைகள்,உரைகள்,சு.ரா தன் நூலுக்கு எழுதிய என்னுரைகள்,நாட்குறிப்பு போன்ற பிரிவுகளை இந்நூல் கொண்டிருந்தாலும் இவையனைத்தும் அவர் சூழலில் எதிர்பார்த்த விழுமியங்களை மதிப்பீடுகளை அவரது சொந்த எழுத்து வாழ்க்கையிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாது என்பதற்கு மேலும் ஒரு வலுவான ஆவணமாகவே உள்ளது.கட்டுரை உருவத்திற்கு சற்று பின்னால் சு.ரா வந்து சேர்ந்திருந்தாலும் பல கட்டுரைகளிலும் அவர் வெளிப்படுத்தும் மொழி புனைவிலக்கியத்திற்கு நிகரானது.தன் எழுத்து பற்றி பேசும் போதும் பிற படைப்புகளைப் பற்றி எழுதும் போதும் அவர் வற்புறுத்துவதில் முக்கியமானதென புதுமை,அனுபவம்,மொழி, அது காலத்தைக் கடந்து செல்லும் ஆற்றலைக் கொண்டிருப்பது போன்றவற்றைச் சுட்டலாம்.இதற்கு இணையாக தமிழ்ச்சூழலின் அவலம் பற்றியும் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்.எனவேதான் தன் கட்டுரைகளை ஒருசேர தொகுத்த போது “தமிழ்ச்சூழல் தந்த விசேஷமான மூச்சுத்திணறலுக்கு ஒரு படைப்பாளி தர நேர்ந்த ஒழுங்கற்ற எதிர்வினைகள்என்று அதைக் கூறினார்.அவர் அரைநூற்றாண்டுகளுக்கு மேல் செயல்பட்டிருந்தாலும் குறைவாக எழுதியிருப்பதற்குச் சூழலும் ஒரு காரணியாக இருந்திருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.இரண்டு ஆண்டுகளில் சரஸ்வதியில் ஒன்பது கதைகள் வெளிவந்தன.மிகக் குறைவாக எழுதும் என் இயற்கையைப் பார்க்கும் போது இதைப் படைப்பூக்கம் மிகுந்த காலம் என்று தான் சொல்ல வேண்டும்எனக் கூறும் சு.ரா “சரஸ்வதி இதழ் நின்று போன பின் நான் விரும்பும் வகையிலான இதழ் எதுவும் இல்லாமல் போயிற்று எனச் சொல்வதை அவ்வாறு தான் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் சரஸ்வதி காலத்திற்கு இணையாக ,ஏன் அதை மிஞ்சும் வேகத்தில் தன் இறுதிப் பத்தாண்டுகளில் தீவிரமாக கனவுகளுடன் செயலாற்றியதை எண்ணிக் கொண்டால் உயிர்ப்புள்ள களமும் சுதந்திரமான வெளியும் எழுத்தாளனுக்கு கிடைக்கக் கூடுமெனில் அவன் மிகுந்த நம்பிக்கையுடனும் ஆற்றலுடனும் தன்னை வெளிப்படுத்துவான் எனும் எளிய உண்மை நமக்கு புலப்படும்.எனவே தான் அவருக்கு “சராசரி ஒரு வருடத்திற்கு ஒன்றேகால் கதை எனச் சொல்லிக் கொள்ளவும்  “அவ்வளவு மோசமில்லைஎன அதை சமாதானப் படுத்திக் கொள்ளவும் வேண்டியிருந்தது.நவீனத்துவம் தமிழில் உருவாகி வந்த போது அதன் முக்கியமான ஆளுமையாக அதை வளர்த்தெடுத்தவர்களில் ஒருவராக சு.ரா இருந்தார்.ஆனால் தமிழில் பின் நவீனத்துவ முயற்சிகளை அவர் கவனித்து வந்த போதும் அதை ஐயத்துடனே நோக்கி வந்திருக்கிறார்.அதைப் பற்றிப் பேசும் சு.ரா ஒரு சிலருக்கு நான் ஏன் இன்னும் பின் – நவீனத்துவ பஸ்ஸில் ஓடி ஏறவில்லை என்ற கேள்வி இருக்கிறது.வயது ஒரு காரணம் .பஸ்ஸின் வாசலும் எனக்குத் தெரியவில்லைஎன அங்கத தொனியில் அதன் மீதான தன் பார்வையை முன்வைப்பதைக் காணலாம்.
                    
 
                   படைப்பூக்கமும் அதன் வீச்சும் ஒரு படைப்பாளிக்கு அவனது ஓயாத வாசிப்பிலும் எழுத்துக் கனவுகளிலும் வகுக்கும் திட்டங்களிலும் சூழல் அளிக்கும் உந்துதல்களிலுமே அடங்கியிருக்கிறது.சு.ரா வின் நாட்குறிப்புகளைக் காணும் போது அவர் ஆற்றவிருந்த பணிகளின் விரிவு நம்மை உசுப்பக் கூடியவொன்றாகவே இருக்கிறது.அவ்வாறான கனவுகளைக் கொண்ட படைப்பாளி தன் எழுத்து பற்றி அதன் சூழல்கள் குறித்து பகிர்ந்து கொண்டவைகளே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
                         ************************

நானும்  என் எழுத்தும்-சுந்தர ராமசாமி-(தேர்வும் தொகுப்பும் கே.என்.செந்தில்) காலச்சுவடு பதிப்பகம்.
 

No comments:

Post a Comment